நினைவுத் தீ – ரம்யா
(கமலா விருத்தாசலத்தின் சிறுகதைகளை முன்வைத்து)

“நான் உயர்ந்த கதைகள் என்று கருதுபவைகளுள் உன்னுடையதும் ஒன்று. அப்படிப்பட்ட ரூபத்தில் அமைந்திருக்கிறது. அமெரிக்காவில் பரிசு பெற்ற கதை அமைப்பின் வாய்ப்பு இதற்கு அமைந்திருக்கிறது. நான் சொல்வதில் உனக்கு நம்பிக்கை இருக்காது. வருஷ மலர் வெளிவந்த பின்பு அதுபற்றி வெளிவரும் மதிப்புரைகளைப் படித்தால் அப்பொழுது உனக்கு நிச்சயமாகும்.” என புதுமைப்பித்தன் கமலா விருத்தாச்சலத்திற்கு எழுதிய கடிதத்தில் (14-6-1938 – கண்மணி கமலாவுக்கு நூல்) குறிப்பிடுகிறார். தினமணி வருஷ மலருக்காக வந்த கதைகளில் கமலாவுடையதும் குமுதினியுடையது மட்டுமே பெண்களுடையது என்றும் குறிப்பில் உள்ளது.
கமலா விருத்தாசலம் என்ற பெயருடன் தவிர்க்க முடியாத பெயராக புதுமைப்பித்தன் உள்ளார். ஆனால் அவர் எழுதிய காலங்களில் அந்த அடையாளத்தை தவிர்க்கும் பொருட்டு எஸ். கமலாம்பாள் என்ற பெயரிலேயே எழுதியுள்ளார். மணிக்கொடியில் முதல் கதை பிரசுரமானபோது பி.எஸ். ராமையா தலையங்கத்தில் “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி சொல்லும் என்பார்களே, அப்படி போலிருக்கிறது” என்ற வாசகத்துடன் மணிக்கொடி எழுத்தாளர் ஒருவரின் சகதர்மினி என்று மட்டும் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். புதுமைப்பித்தன் கமலாவுக்கு எழுதிய கடிதங்களில் அவருடைய கதைகள் பற்றிய பாராட்டுக்களுடன் மேலும் எழுத ஊக்குவித்துக் கொண்டே இருந்துள்ளது தெரிகிறது. கமலாவின் கதைகளுக்கு வெளியில் இருந்தும், எதிர்பாராத இடங்களிலிருந்தும் பாராட்டுக்கள் வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
*
கமலா விருத்தாசலத்தின் முதல் சிறுகதை ‘வீடும் வெளியும்’ ’தினமணி’ பாரதிமலரில் 1935-இல் வெளியானது. 1917-இல் பிறந்த கமலாவுக்கு அப்போது பதினெட்டு வயது. திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகியிருந்தது. புதுமைப்பித்தன் அப்போது தான் தினமணி நாளேட்டில் வேலைக்குச் சேர்ந்திருந்தார். அவரின் மேற்பார்வையில் நான்கு ஆண்டு மலர்கள் வெளியாகியது. நான்குமே இலக்கிய உலகில் கவனம் பெற்ற மலர்கள். புதுமைப்பித்தனின் முதல் சிறுகதை 1933-ல் வெளிவந்தது. எனில் கமலா மூன்றாண்டுகளில் அவருடன் இணைந்து எழுத ஆரம்பித்துவிட்டார் எனலாம். கமலா செல்வ செழிப்பான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை தினகரி அவர்கள் எழுதிய “எந்தையும் தாயும்” என்ற நூல் வழியாக அறிய முடிகிறது. ஆனால் தீவிர இலக்கியம் என்பது புதுமைப்பித்தன் வழியாகவே அவருக்கு அறிமுகமாகியிருக்கலாம். கமலாவுக்கு அவர் எழுதிய கடிதங்களில் கமலாவின் வாசிப்புப் புலமும் வெளிப்படுகிறது. புதுமைப்பித்தன் சென்னையிலிருந்து அவருக்கு உடனுக்குடன் புதிய புத்தகங்கள், மலர்கள் தவறாமல் அனுப்புகிறார். அவருடைய கதைகளை உடனுக்குடன் படிக்கும் வாய்ப்பு கமலாவுக்கு அமைகிறது. கமலாவின் கதைகள் பற்றிய ரசனை விமர்சனங்கள் அவருக்கு புதுமைப்பித்தன் வாயிலாகவே கிடைத்திருக்கிறது. புதுமைப்பித்தனுடன் பேசிக் கொண்டிருப்பது நேரம் போவதே தெரியாது என்கிறார். அவருடன் இரவு இரண்டு மணி வரை கூட இலக்கியம் பேசும் காலங்கள் அவருக்கு வாய்த்திருக்கிறது. இந்த ஆண்டுகளைப் பற்றியே கமலா பின்னாளில் அதிகம் சிலாகித்திருந்ததாகவும், குறுகிய காலமே வாழ்ந்திருந்தாலும் கோடானுகோடி காலம் வாழ்ந்ததைப் போன்ற மன நெகிழ்வு கொண்டிருந்ததாக மகள் தினகரி குறிப்பிடுகிறார்.

மலையாள வாசம் வீசக்கூடிய கமலாவின் தமிழை வளமையாக்கியவர் புதுமைப்பித்தன். ”வெப்ராளம்”, “இளக்கம்” போன்ற சொற்கள் புழங்கி வருவதிலிருந்து அதன் தன்மையை நாம் அறியலாம். இந்த வட்டாரத்தன்மை அவரை மற்ற பெண் எழுத்தாளர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது. அவரின் மொழியும், மொழி நடையும் கதைகளில் அத்தனை சரளமாக உள்ளது. அதை கதைசொல்லிக்கான சரளத்தன்மை எனலாம்.
“கதை இலக்கியத்தில் பெண்களின் பங்கு” என்ற கட்டுரை (எழுத்தாளன் – சிறப்பு மலர் 1961) வழியாக கமலாவின் கதைஇலக்கியம் சார்ந்த சிந்தனையை அறிந்து கொள்ள முடிகிறது. ”கதைகள் என்ற ரூபத்தில் மனித இனத்தின் பண்பாட்டைப் படம்பிடித்துக்காட்ட முன்வந்த முதல்வர்களில் பெண்கள் தான் முதன்மையானவர் என்று சொல்வதில் தவறொன்றுமில்லை என எண்ணுகிறேன்” என்கிறார். அதற்கான ஆதரமாக மேனாடுகளிலிருந்து கதை இலக்கியம் உருவெடுத்து வந்ததை மறுத்து தமிழகத்தில் கதையிலக்கியத்தின் ’மூலம்’ என்பது பாட்டி கதை சொல்லும் போக்கிலிருந்து ஆரம்பிப்பதாகச் சொல்கிறார். ’அளப்பு’, ’கதை அளத்தல்’ ஆகியவை இயல்பாகவே பெண்களின் குணங்கள் என்கிறார்.
இலக்கியம் படித்திருக்க வேண்டும், இலக்கணம் படித்திருக்க வேண்டும் என்ற தகுதி கதைக்கு முதன்மையல்ல என்பது கமலாவின் கருத்தாக உள்ளது. கதைக்கு இருக்க வேண்டிய கட்டுக் கோப்பும், விஷய ஞானமும், அடுத்தது என்ன என்று கேட்கத் தூண்டுவதும், சொல்லும் பாணியும் யாவும் கற்பனை வளத்தினால் வருவது என்பது அவரின் நம்பிக்கை. இந்த கதை சொல்லல் தன்மையிலிருந்து மறுமலர்ச்சி காலகட்ட கதை இலக்கியத்தில் அன்றாட மனித வாழ்விலுள்ள பழக்க வழக்கங்கள், ஆசாபாசங்கள் முதன்மை கதை சித்தரிப்பு பொருட்களாக இருப்பதை அறிந்தே இருக்கிறார். ஆனால் பெண்மையின் சிறப்பும் பெருமையும் அவர்களுக்கென்றே இயற்கையாக அமைந்த கற்பனை சக்தியில் தான் அடங்கியிருக்கிறது எனவும் தாலாட்டு வழியாக கதை, கதை வர்ணிப்பு வழியாக கதை என தன் வாழ்நாளில் ஒரு தாய் பாடுவதும் காவியமே என்ற சிந்தனையே அவரில் மேலோங்கியுள்ளது.
அந்த வகையில் கனவுகளும் கற்பனையும் நிறைந்த கதைகளாக “இரத்த சாந்தி”, “முதலைச் சட்டை” ஆகிய கதைகளைச் சொல்லலாம். முதலைச்சட்டை சிறுகதையில் வேறு எதையும் விட கதை சொல்லல் தன்மையே அதிகமாக உள்ளது. ஆனால் ’இரத்த சாந்தி’ என்ற நீள்கதை கலைப்பூர்வமாக முதலில் வைக்கப்பட வேண்டியது. ஆ.இரா. வேங்கடாசலபதி தொகுத்து காலச்சுவடு பதிப்பகத்தின் வழியாக வெளிவந்த கமலா விருத்தாச்சலத்தின் “நினைவுத்தீ” சிறுகதைத்தொகுப்பில் முதன்மைக் கதையாகவும் இக்கதையைச் சொல்லலாம்.
இரத்த சாந்தி கமலா எழுதிய இரண்டாவது கதை. தினமணி வருஷமலரில் 1936-இல் வெளியானது. உக்கிரமான கதை. சீதாலஷ்மிக்கும் அனந்தகிருஷ்ணன் தம்பிக்குமான காதல் கதை என்று முதலில் மயக்குவது. ஆனால் மெல்ல அதன் வரலாற்றுப் பின்புலம் வழியாக விரிவது. திருவிதாங்கூர் எட்டுவீட்டுக்கும் ராஜாங்கத்திற்கும் இடைப்பட்ட போரில் பந்துக்கள் மறைந்த பின்பு நவாபின் சேனையில் படைத்தலைவனாக இருக்கும் அனந்தகிருஷ்ணன், துரோகம் செய்த அனந்தபத்மநாபனை பழிவாங்கத் துடிக்கும் சீதாலஷ்மி. அனந்தகிருஷ்ணன் தம்பி நடத்தி வந்த நவாப் சைனியமும், கர்னல் ஹீரனின் கும்பினித் துருப்புகளும் வள்ளியூர் கோட்டையை கைப்பற்றுதலும், அற்காட்டு நவாப், வெள்ளையர்கள், திருவிதாங்கூர் அரசு என முப்படைகளின் நோக்கம்மும் என பெரிய வரலாற்றுக் கதையாக விரிகிறது. ”கடல் கள்ளர்களான கும்பினிக்காரர்களும், கரைக்கள்ளர்களான நாயர்களும் சேர்ந்து ஆற்காடு சிம்மாசனத்தை சைத்தானுடைய ஆபாசமான பாதாளத்திற்கு தள்ளத்தான் போகிறார்கள்.” என அபுபக்கர் என்ற முஸ்லீம் படைத்தளபதி சொல்லும் வசனங்கள் சக்திவாய்ந்தவை. அதற்கிடையில் சூல் கொண்டிப்பது சீதாலஷ்மியின் ”வஞ்சம்”.

ஆனால் கதையின் மையமாக சீதா எழுவது ஏழாவது அத்தியாயத்தில் தான். அதுவே மையமாகுமளவு உக்கிரமான உணர்வுகள் சீதாவின் உரையாடல்கள் வசனங்கள் வழியாக கடத்தப்படுகிறது. கதையின் இறுதியில் அனந்தபத்ம நாபனையும் கொன்று, தன் காதலனைக் கொன்ற அபுபக்கரையும் கொன்று காதலன் அனந்தகிருஷ்ண தம்பியை காளியின் பீடத்தில் வைத்து “ஏ பெளருஷம் நசித்த திருவிதாங்கூரே! உனது பாவ சரித்திரம் குடமன் பிள்ளையின் மருமகளுடைய கட்டி ரத்தத்தில் எழுதப்படட்டும்!” என்று வீர வசனம் பேசி தன்னையே மாய்த்துக் கொள்ளும் சீதாலஷ்மியின் வீரக் கதையாக உள்ளது. “இரத்த சாந்தி” என்ற தலைப்பு வரலாற்றுக்கு முன்னும் பின்னும் என பொருந்தி விரித்துக் கொள்ளத்தகது. வஞ்சம் என்னும் உணர்வும் வீரமும் நிறைந்த ஒரு முழுமையான கலைப்பூர்வமான படைப்பு என மதிப்பிட முடிகிறது. நவீன எழுத்தாளர்கள் இத்தகைய ஒரு முழுமையான கதையை எழுதிப்பார்க்கவில்லை என்றே சொல்லலாம். வேணாடும், வேளிமலையும், கள்ளியங்காடும் என விவரித்துச் செல்லும் அழகுடன் இக்கதையை எழுத்தாளர் ஜெயமோகனின் திருவிதாங்கூர் கதைகளின் வரிசையில் முன்னோடிக் கதையாக வைக்கலாம். அத்தனை கனவும் கற்பனையும் ததும்பிய கதை.
*
கமலாவின் இரண்டாவது வகைக் கதைகளை ஆண்-பெண் உறவு சார்ந்த கதைகளாகச் சொல்லலாம். ’அவளும் அவனும்’, ‘திறந்த ஜன்னல்’, ‘வீடும் வெளியும்’, ‘ஆசை’, ‘நினைப்பு நடப்பும்’, ‘வாய்த்துடுக்கு’, ‘சந்தேகம்’, ’புறை ஓடிய ஆசை’, ’நினைவுத்தீ’, ’அவள் விரும்பியது’, ’காற்றினிலே வந்த கீதம்’, ’காதல் பூர்த்தி’, ’காசுமாலை’, ‘ஊமைச்சியின் கலியாணம்’ ஆகிய கதைகளை இந்த வரிசையில் வைக்கலாம். கமலாவின் பெரும்பான்மையான கதைகளை இந்த வரிசையில் வைக்க முடிகிறது. இதனுடன் ‘வார்த்தை விஷம்’ என்ற கதையையும் சேர்த்துக் கொண்டால் ஒட்டுமொத்தமாக ‘குடும்பக்கதைகள்’ என்ற சட்டகத்திற்குள்ளும் அடைக்கலாம். ஆண்-பெண் உறவில் நிகழும் நுட்பமான உணர்வுகள், உறவுச்சிக்கல்கள், மனிதர்களிடமுள்ள நுட்பமான முட்கள், யதார்த்த தளத்தில் உறவுகளுக்கு இடையே இருக்கும் உணர்வுகளிலுள்ள முள் ஆகியவை இக்கதைகளில் மையமாக உள்ளன. இது விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தில் எழுதிய பெரும்பான்மையான பெண் எழுத்தாளர்களின் கதைக்களம். எங்கேனும் ஒரு கதையிலாவது அவற்றைப் பேசாத பெண் எழுத்தாளரைப் பார்க்க இயலாது. ஒப்பு நோக்க பெண்களின் உலகம் புறத்தை விடவும் அகம் சார்ந்ததாக இருந்துள்ளது. ஆனால் அதன் வழியாக அவர்கள் சென்று அடையும் ஆழத்தைப் பொறுத்து அக்கதைகள் முதன்மையாக நிற்கின்றன.
அந்த வகையில் கமலாவின் கதைகளில் முதன்மைக் கதையாக “அவளும் அவனும்” சிறுகதையை வைக்கலாம். ’அவனும் அவளும்’ சிறுகதை சொல்லப்பட்ட முறையில் , கட்டுமானத்தைப் பொறுத்தும் முக்கியமானது. ’அவள்’ என்ற தலைப்பிட்டு அவளின் உணர்வு ஓட்டத்தையும், ’அவன்’ என்ற தலைப்பிட்டு அவனின் உணர்வு ஓட்டத்தையும் இரண்டாகப் பகுத்து எழுதியுள்ளார். இது காலங்காலமாக எழுதப்படும் ஒரு திருமணமான ஆண், ஒரு பெண்ணை காதல் வலையில் விழ வைத்து கைவிட்டுச் செல்லும் கதை தான். ஆனால் கமலா அவளையும் அவனையும் ஆழமாக அவர்களின் உணர்வுகள் சார்ந்து விசாரித்திருக்கிறார். விவேகத்திற்கும் மனசுக்கும் இடையேயான போராட்டமாக நுணுக்கமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. தன் தன்னலத்தை உணரும் ’அவன்’, “லோகத்திலேயே மிகவும் பிரம்மாணடமான தன்னலம் உள்ளவந்தானே யோகியும்! நான் யோகியல்ல. விவேகி. புத்திசாலி… போகமாட்டேன்… போகவே மாட்டேன்…” என்பதாக முடியும் கதை. இருவர் தரப்பிலும் நின்று பரிவுடன் எழுதப்பட்ட கதை.
இந்த கதையின் கட்டுமானத்துடன் ஒப்பு நோக்கத்தக்கதான இன்னொரு கதை ‘திறந்த ஜன்னல்’. இது மனைவியை வைத்துக் கொண்டு அடுத்த வீட்டு ஜன்னலில் இருக்கும் ஒரு பெண்ணைப் பார்க்கும் கணவனின் சபலம் பற்றியது. இறுதியில் அவன் தன் தவறை உணர்வதாக முடிவது. எளிமையாகத் தோன்றினாலும் இதன் கூறு முறை, உத்தியால் உணர்வுபோராட்டம் படிப்படியாக கடத்தப்படுகிறது. கணவனுக்கும் மனைவிக்குமான சம்பாஷனையாக ஒரு மாலையில் ஆரம்பித்து அடுத்த மாலையில் முடியும் கதை. இரவு, அதிகாலை, மத்தியானம், மாலை என தலைப்புகளாக பிரித்து அந்தப் பொழுதுகளில் கணவன் – மனைவிக்கு இடையே நிகழும் நிகழ்வுகள், மனப்போராட்டங்களைச் சொல்லும் கதை. ஒவ்வொன்றிலும் கணவன் மனைவிக்கு இடையேயுள்ள மனப் போராட்டத்தை சித்தரிப்பதாயும் உள்ளது. புதிய கூறுமுறையும் ஆழமும் கதைக்கு வலு சேர்க்கிறது.
‘புறை ஓடிய ஆசை’ பெண்ணுக்குள்ள சபலம் பற்றிய கதை. ஓர் கள்ள உறவு நிகழ்ந்தேறுவது சார்ந்து அடுக்கி சொல்லப்பட்டு வந்து நிகழ்ந்த சுவடே தெரியாமல் மெல்ல குற்றவுணர்வுடன் முடியும் கதை. கதையின் ஆரம்பம் “அன்று அபாயச்சங்கு ஊதும் சத்தம் கேட்டதும் ஊரே நடுங்கிவிட்டது” என்று ஆரம்பிக்கப்பட்ட படிமம் இந்தக் கதைக்கு கச்சிதமான ஆரம்பம்.
’வீடும் வெளியும்’ கதை கணவருடைய உலகத்திற்கும் மனைவியின் உலகத்திற்கும் இடையேயான பாரதூரமான வித்தியாசத்தை அகலத்தைக் கொண்டது. இதன் வழியாக வீட்டில் இருக்கும் மனைவியின் எளிய மனத்தவிப்புகளைச் சொல்லிச் செல்வதாக அமைந்துள்ளது. ஆனால் அது வெறும் புலம்பலாக இல்லாமல் கணவனின் பக்கமும் நின்று யோசிப்பதாக அமைந்துள்ளது. ஆனால் ஒப்பு நோக்க கணவர் புழங்கும் வெளி உலகம் எளிமையாகத் தோன்றுமளவான மனப்போராட்டத்தைக் கொண்டதாக மனைவியின் உலகம் உள்ளது. நமக்கு மட்டுமே காட்சியாகும் இவ்விருவரின் உள்ளமும், செயலும் கணவன் மனைவியின் மனப் போராட்டத்தை ஆசையை எளியதே ஆனாலும் சரியாகப் கவனிக்கவில்லை என்ற ஆதங்கத்தைக் கடத்துவதாக உள்ளது.
’ஆசை’ கதை கணவனிடம் சண்டை போட்டு தாய் வீட்டில் இருக்கும் ஒருவளின் இரவும், கனவும், கனவு கலைதலுமாக அமைந்துள்ளது. தனி அறையில் தான் எப்போதும் படுக்கும் தனக்கான இடத்தில் எப்போதோ வந்திருக்கும் கடிதத்தை வாசிக்கும் ஒருவள். தன்னைக்கூட்டிப் போக கணவர் வருவதாகவும் அவர்களுக்கிடையே உள்ள ஆணவ விளையாட்டுக்கள் சார்ந்தது. ஆனால் இந்தக் கதையே ஒரு கனவு தான் என்பதை வாசகர் இறுதியில் தான் உணர முடியும் என்பதான கதை.
‘நினைப்பு நடப்பும்’ சிறுகதை புதுமைப்பித்தனின் செல்லம்மாள் கதையுடன் இணைத்து வாசிக்கலாம். இரு பாலரின் மனதையும் ஆராயும் ஆழம் கொண்டது. ஆனால் இந்தக் கதையை செல்லம்மாள் சொல்லியிருந்தால் என்னவோ அதுவே கதையாகியுள்ளது. உடல் சுகம், வறுமை, அலைச்சல் யாவற்றுக்கும் இடையில் முகிழ்ந்து கிடக்கும் காதல். ”மனச்சோர்வு வியாதிக்குக் காரணமா? வியாதி மனச்சோர்வுக்குக் காரணமா?” போன்ற அவதானிப்புகள் அடங்கிய ஆழமான கேள்விகளுடனேயே எல்லா கதைகளும் கடத்தப்பட்டுள்ளன.

‘நினைவுத்தீ’ நினைவேக்கமாக சொல்லப்பட்ட கதை. ஒரு தன்புனைவு என்று சொல்லுமளவு அமைந்துள்ளது. உணர்வு வெளிப்பாட்டு ஊடகமாக புறச்சூழலை ஆக்கிக் கொண்டு கதார்ஸிஸ் (Catharsis) நிகழக்கூடியது. மழையின் ஆரம்பத்திலிருந்து மழை பெய்து ஓயும் வரையான எண்ண ஓட்டங்கள் நிறைந்த கதை. மழை உண்மையில் நினைவுகளைக் கிளப்பி துக்கங்களை வெளியேற்றக்கூடியது. அந்த நிகழ்வு முடிந்து அவள் மீளுமாறு கதை அமைந்துள்ளது சிறப்பாக வந்துள்ளது. புதுமைப்பித்தனின் இறப்பிற்குப் பின் எழுதப்பட்ட கதை என்ற அளவில் வாசிக்க முடிகிறது.
’சந்தேகம்’ கதை ’மனைவி- கணவன் – நண்பர் – நண்பரின் மனைவி’ இவர்களுக்கிடையேயான உறவில் எழும் ஒரு சந்தேகத்தை அடிப்படையாகக் கொண்டது. மூன்று பேர் இருக்கும் ஒரு உறவில் ஒருவர் இன்னொருவரை விடுபட்டவர்களாக உணர்வது எப்போதும் நிகழ்வதே. அதில் ஒரு சந்தேகக் கண்ணோடு ஆரப்பித்து அது கணவன் மனைவியின் அன்பு, அன்னியோன்யம் வழியாக சமாதானம் அடைவதாக முடிகிறது.
‘வாய்த்துடுக்கு’ கணவன் மனைவிக்கு இடையேயான வாய்ச்சண்டை மற்றும் அது சமாதானம் ஆகும் தருணமாக அமைந்த எளிய கதை. “பிறர் தொந்தரவு இல்லாத அந்த உள்தான் அவளுக்கு நிம்மதி தந்தது. சந்தோஷமோ துக்கமோ எதுவானாலும் தனியாக இருந்து சமாதனப்பட்டுக்கொள்ள அந்த இடம் தான் அவளுக்கு மோட்சலோகம் மாதிரி தெரியும். அலைமோதும் மனதை சமாதானப்படுத்துவதற்குச் சரியான வழி வீட்டுவேலைகள் செய்வதில் தான் உண்டு” போன்ற பெண்கள் உலகத்தின் ஆழம் கொண்டவை.
’காதல் பூர்த்தி’ ஓர் அழகான நிறைவேறாத காதல் கதை. ஆனால் காதல் பூர்த்தியாகும் ஓர் விதித்தருணத்துடன் கதை முடிகிறது. இக்கதையின் விவரணைகள் மாவேலிக்கரையிலுள்ள குட்டம்பேரூர் பற்றிய சித்திரம் அளப்பரியதாக உள்ளது. ஒரு பணக்கார ஊமைப்பெண்ணைக் கலியாணம் செய்யும் வேலைக்குச் செல்லாத ஏழை ஆண் எப்படி அவளை மனதாலும் உடலாலும் சித்திரவதைக்கு உள்ளாக்கி இறுதியில் அவள் சாகிறாள் எனும் ‘ஊமைச்சியின் கலியாணம்’ கதையும், ஒரு லட்சிய ஆண் கறுப்பான பெண்ணை அவள் பாடலின் நிமித்தம் காதலிக்கும் எளிய கனவுக்கதையாக ’காற்றினிலே வந்த கீதம்’ கதையும், மாமியார் தைக்கும் விஷ வார்த்தையை மையமாகக் கொண்ட ’வார்த்தை விஷம்’ சிறுகதையும், ஆண்களின் மலட்டுத்தன்மை சார்ந்த கதையான ’அவள் விரும்பியது’ கதையும் ஆழம் சார்ந்தும் பேசு பொருள் சார்ந்தும் மிக எளிமையான கதை.
’காசுமாலை’ குறுநாவல் எனுமளவு நீண்டது. இருபது பக்கம் கொண்ட இக்கதையை 1937-இல் மணிக்கொடியில் ஒரே ரீதியில் பிரசுரிக்கப்பட்டது ஆச்சர்யமானது. இதை பிரசுரித்த ஆசிரியர் பி.எஸ்.ராமையா தலையங்கத்தில், “ஸ்ரீமதி எஸ். கமலாம்பாள் எழுதிய ‘காசுமாலை’ இதுவரையில் வந்த தமிழ்க்கதைகளில் முதன்மை ஸ்தானம் பெற்றவைகளுடன் சேர வேண்டியது” என்கிறார். ஆனால் கதை எளிய குடும்பக்கதை தான். சொல்லப்பட்ட விதம், விவரணைகள், உரையாடல்கள் சார்ந்து பெண் எழுத்தாளர்கள் எழுதிய குடும்ப/சமூக நாவல்களில் கச்சிதமானதாகவும், முன்னோடியாகவும் மதிப்பிடலாம். ஆனால் அதை விடவும் நீள் கதை பொறுத்து கலைப்பூர்வமான படைப்பாக முதன்மையாக ‘இரத்த சாந்தி’ கதையே முதன்மையாக வைக்கப்பட வேண்டும்.
*
திருமணமாகி பதினாறு ஆண்டுகள் மட்டுமே புதுமைப்பித்தனுடன் கமலா வாழ்ந்துள்ளார். இந்த காலகட்டத்தில் கமலா எழுதிய கதைகள் ஒப்பு நோக்க அதிகம். தினகரியும், படைப்புகளுமே நான் உனக்காக விட்டுச் செல்பவை என்று சொல்லிய புதுமைப்பித்தன், தான் இறந்த பிறகு வெள்ளைச்சேலை கட்டக் கூடாது என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க வாழ்ந்தவர் கமலா. கடிதங்கள் வழியாகவும் சரி, தான் நோய் வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்த காலத்திலும் சரி தொடர்ந்து கமலாவிடம் அவர் எப்படி வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தவர்.

புதுமைப்பித்தன் இறந்த பின்பு தன் சோதனை காலம் ஆரம்பித்ததாக சொல்கிறார். மிகவும் சுத்தம் பார்க்கும் கமலா மாடு ஒன்று வாங்குகிறார், சாணி அள்ளுகிறார், கைவேலை தெரிந்திருந்ததால் அருகிலுள்ளவர்களுக்கு துணி தைத்துக் கொடுக்கிறார். இரவு கதை எழுதுகிறார்.
முப்பது வயது என்பது இளமையான காலம் எனினும் அக்காலத்தைப் பொறுத்து உடலளவில் பெண்களுக்கு ஒரு பாதி வாழ்க்கை என்று சொல்லக்கூடிய அளவு நீளமான வாழ்க்கை வாழ்ந்து முடிந்துவிட்டிருக்கும். எனினும் முப்பது வயதுக்குப் பிறகு 40+ காலங்கள் வாழ்ந்து தான் மறைந்திருக்கிறார். இந்த காலகட்டங்களில் கமலா தினகரியை வளர்த்து ஆளாக்குவதும், திருமணம் செய்து கொடுப்பதும், புதுமைப்பித்தனின் நூல்களை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதும், புதுமைப்பித்தனுக்காக ஒரு நூலகத்தையும், வீட்டையும் கட்டுவதையும் செய்து முடித்திருக்கிறார். செப்டம்பர் 16, 1954-இல் புதுமைப்பித்தன் நிலையம் என்ற வீட்டை சென்னையில் ராஜா அண்ணாமலைபுரத்தில் கட்டினார். அதை அழைப்பிதழ் அடித்து நினைவஞ்சலிக் கூட்டம் போல் உற்றவர்களை அழைத்து, கல்கியை வைத்து திறப்பு விழா நடத்தினார். 1971-இல் தன் கதைகளைத் தொகுத்து ஸ்டார் பிரசுரம் மூலம் புத்தகமும் வெளியிட்டுள்ளார்.
அதன் பிறகு 2025-இல் தான் கமலாவின் படைப்புகள் ஆ.இரா. வேங்கடாசலபதி தொகுத்து ‘நினைவுத்தீ’ என்ற தொகுப்பாக வெளிவந்துள்ளது. இத்தொகுப்பு வழியாக கமலாவின் படைப்புகள் சார்ந்த ரசனை, விமர்சனப் பார்வை ஒன்று உருவாகி வர வேண்டும். கமலா, புதுமைப்பித்தனுக்கு எழுதிய கடிதங்களை சலபதி அவர்களே தொகுத்து புத்தகமாகக் கொணர்ந்தால் கமலாவின் மேலும் சில பரிமாணங்களை அறிய உதவியாக இருக்கும்.

“உனது புத்தியின் பேரில் எனக்கு அபார நம்பிக்கை இருந்தாலும், உனது உணர்ச்சிகள் சம்பந்தப்பட்டவரை பயந்தான். உணர்ச்சிகள் தான் உனக்கு புத்தி தீட்சண்யத்தைக் கொடுக்கிறது. அதுவே தான் உனக்கு அற்புதமான கதைகளை எழுதும் சக்திகளைக் கொடுக்கிறது என்றாலும் அதுவே வீண் மனப்பிராந்திகளுக்குக் காரணமாக இருக்கிறது.” என்று ஒரு கடிதத்தில் புதுமைப்பித்தன் கமலாவைப் பற்றி எழுதியுள்ளார். அவ்வபோது தன்னை பாவி, நீலி என்று சொல்லி சபித்துக் கொள்ளும் கமலாவுக்கு தைரியமூட்டுவதும், கொஞ்சுவதுமே புதுமைப்பித்தனின் முதல் கடமையாக இருந்திருப்பதை கடிதங்கள் வழியாக அறிய முடிகிறது. கதை வழியாக வெளிப்படும் கமலாவும் அந்த அளவுக்கு உணர்ச்சிப்பூர்வமானவரே. கனவும், கற்பனையும் நிறைந்தவராக அதே அளவு விவேகமானவராக இரு தரப்புகளிலும் நின்று பார்க்கும் பரிவு கொண்டவராக வெளிப்படும் கமலா விருத்தாச்சலம் “இரத்த சாந்தி” கதைக்காக தமிழின் முன்னோடிப் படைப்பாளிகளின் வரிசையில் வைக்கப்பட வேண்டியவர். ’அவளும், அவனும்’, ’திறந்த ஜன்னல்’, ‘புறை ஓடிய ஆசை’ ஆகிய கதைகளின் பொருட்டு நவீன இலக்கிய மரபில் வைக்கத்தகுந்த பெண் எழுத்தாளர் என வகைப்படுத்தலாம்.
*
