சூரெய்ல் (சிறுகதை) – கமீலா ஷம்ஸி
(தமிழில் – நரேன்)

கமீலா ஷம்ஸி (Kamila Shamsie – 13 Aug 1973) – ஆங்கிலத்தில் எழுதி வரும் பாகிஸ்தானிய எழுத்தாளர். பாகிஸ்தானின் கராச்சியில் பிறந்து வளர்ந்தவர். 2007ல் லண்டனிற்கு குடிபெயர்ந்து தற்போது இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ளார். தன்னை ஒரு பாகிஸ்தானி என்றே பொதுவில் குறிப்பிடுகிறார். இதுவரை எட்டு நாவல்கள் எழுதியுள்ளார். அனேகமாக இவரது அத்தனை படைப்புகளுமே ஏதோவொரு விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவையாக உள்ளன. 1999ல் பாகிஸ்தானிய பிரதம மந்திரி விருதை தன் முதல் நாவலுக்காகப் பெற்றார். 2009 இல் இவர் எழுதிய ‘Burnt Shadows’ நாவல் மூலம் உலக இலக்கிய வாசகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இவரது அத்தனை படைப்புகளும் கராச்சியையும் ஒரு முக்கிய களமாகவே கொண்டுள்ளது. தொன்மங்களிலும் புராணங்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட கமீலா, வரலாறு என்பது எப்போதோ சிதிலமடைந்துவிட்ட பழங்காலம் அல்ல. அது இன்றைய உலகை எப்படி வடிவமைக்கிறது என்பதை தன் கதைகளில் மீட்டுப் பார்ப்பதே தனக்கு விருப்பம் என்று சொல்கிறார். கிரேக்க புராணத்தை மீட்டுருவாக்கம் செய்து சமீபத்தில் நவீன படைப்பாக வெளியிட்டிருக்கிறார். மாறும் உலகில் காதலும், அடையாளமும், தன் வேர்களும் ஏன் இறுகப்பற்றிக் கொள்ளப்பட வேண்டியவை என தொடர்ந்து தன் புனைவுகளில் காட்டிக்கொண்டே இருக்கிறார். எளிய உறவுகளின் நுணுக்கமான பின்னல்கள் வாழ்வின் பெரிய முரண்பாடுகளை எதிரொலிக்கும் விதமாக இவரது கதைகளில் அமைகிறது. மிகச் சரளமான மொழியில் இவர் எழுதும் கதைகளில் எந்தத் துருத்தலும் இன்றி உருவகங்களைக் கோர்த்து விடுகிறார். மெல்லிய பகடியையும் எளிதாக இழையோடவிடுகிறார். ‘சூரெய்ல்’ என்ற இந்தச் சிறுகதை பெரும்பாலான இலக்கிய விமர்சகர்களால் சிறந்த கதையாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. நம் நிலத்தின் ‘யட்சி’க்கு இணையான தொன்ம உருவகம் இந்த ‘சூரெய்ல்’. பல தென்கிழக்கு ஆசிய நாடுகளில் விதவிதமான பெயர்களில் ‘சூரெய்ல்’ கதைகள் உலவுகின்றன. இந்தக் கதையின் எளிமையே இது சூடிக்கொள்ளும் முகமூடி. பல வாசிப்புச் சாத்தியங்களை மிக மௌனமாக இது திறந்து வைக்கிறது. இருளிலிருந்து எழுந்து வரும் ஒரு தொன்ம உருவம் நிகழ்காலத்தை நோக்கி கைகளை நீட்டுவது பழிவாங்குவதற்காக மட்டும் அல்லவே. அது தரும் அரவணைப்பும் காலம் கடந்து ஆழ்நில வேரைப் போல துளைத்து ஓடிக்கொண்டிருக்கும்.
-நரேன்

***
சூரெய்ல் (சிறுகதை)
என்னைப் பிரசவித்தபோது இறந்துபோன என் தாயிடமிருந்து எங்களைக் காப்பதற்காக நான் பிறந்து சில வாரங்களிலேயே என்னுடன் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்துவிட்டார் என் அப்பா. எனக்கு ஆறு வயதானபோது இந்த நிகழ்வுகளில் எனக்கு முக்கிய பங்கு இருப்பதாக என் பெரியப்பா பெண் ஜைனப் என்னிடம் தெரிவித்தாள். ஜைனபின் பெற்றோருடன் நாங்கள் வசித்து வந்த மான்செஸ்டரிலிருந்து லண்டனுக்கு குடி பெயர வேண்டியவற்றை என் அப்பா செய்துகொண்டிருந்தார். உண்மையை அறிந்து கொள்வது முக்கியம் என்று என்னிடம் சொன்னாள் ஜைனப். தன் சிறு தங்கையை மீண்டும் எப்போது சந்திப்போம் என்று அறியாத பதினோரு வயதுப் பெண்ணின் ஆர்வத்துடன் இதைச் சொன்னாள். நான் பிறப்பதற்கு முன்பு என் அம்மாவுக்கு நான்கு கருச்சிதைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. இரண்டாம் முறை கரு உருவான போதே மீண்டும் கருவுற வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். என் அம்மா தத்தெடுக்கலாம் என்று கூறியிருக்கிறார். ஆனால் தன் குருதியில் ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்று அப்பாதான் பிடிவாதம் பிடித்திருக்கிறார். இயற்கை தன்னிடம் சொல்ல முற்படுவதைப் புரிந்துகொள்ள மறுக்கும் ஆண்களுக்கு பிரபஞ்சம் எப்படி பதிலளிக்குமோ அப்படியே நடந்தது: அவருக்கு தவறான குழந்தையைக் கொடுத்து அவர் மனைவியைப் பறித்துக்கொண்டது.
அது ஒரு கோடைக்காலம். நாங்கள் ஜைனபின் படுக்கையறையில் கீழே அமர்ந்திருந்தோம். என் பெரியம்மாவின் படுக்கைக்கு அருகில் இருந்த தொட்டிலில் இனி நான் உறங்க வேண்டிய அவசியமில்லாத அளவிற்கு நான் வளர்ந்துவிட்டதால் தன் அறையைப் பகிர்ந்துகொள்ளச் சம்மதித்தாள் ஜைனப். எதிர்பார்த்தபடியே ஜூலை மாத மழை வெளியுலகைச் சூழ்ந்ததால் செரீனா வில்லியம்ஸும் ‘ஒன் டைரக்ஷனும்’ எங்களைக் காத்தார்கள். ஜைனப் என் கையை தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டாள். அடுத்த பகுதிதான் முக்கியமானது என்று சொன்னாள். நான் பிறந்து சில நாட்களே ஆகியிருந்தபோது எங்கள் வீட்டின் எதிரே, தெருவைக் கடந்து, அரசமரத்திலிருந்து ஒரு பெண் குரல் என் பெயரைச் சொல்லி அழைத்ததை என் அப்பா கேட்டிருக்கிறார். முதல் அழைப்பு வந்தபோது அவர் தலையைத் தூக்கி மேலே பார்த்தார். இரண்டாம் அழைப்பில் அவர் கதவை நோக்கி நடந்தார். ஆனால் மூன்றாம் முறை அழைப்பு வராதபோது அவர் இரத்தம் உறைந்து அசையாமல் நின்றார். இதையெல்லாம் என் செவிலித்தாய் பார்த்திருக்கிறாள். அவள்தான் என் அம்மா ‘சூரெய்ல்’ ஆகிவிட்டாள் என்பதைக் கிராமம் முழுதும் பரப்பியிருக்கிறாள்.
பிரசவத்தில் இறந்த பெண்கள் பெரும்பாலும் சூரெய்லாக மாறினர், அவர்களுக்கு அரசமரங்களில் வாழும் விருப்பம் இருப்பதாகவும் தன்னுடைய அடுத்த இரையை மிக இனிமையான குரலில் பெயர் சொல்லி அழைப்பார்கள் என்றும் அறியப்படுகிறது. மூடுபனி சூழ்ந்த கரிய இரவுதான் சூரெய்லால் கவரப்படும் ஆபத்தான நேரம். ஏனெனில் அப்பொழுதுதான் நீங்கள் அவளின் அழகிய முகத்தை மட்டுமே காண இயலும், பின்னோக்கி இருக்கும் அவளின் கால்கள் காட்டும் கதைகளைத் தவறவிடுவீர்கள். அவள் சூரெய்ல் என்பதற்கான மற்றொரு அடையாளம் என்னவென்றால், அவள் தன் இரையை இரண்டு முறை பெயர் சொல்லி அழைப்பாள் – ஒருமுறையோ அல்லது மூன்று இல்லை. அவள் ஆண்களைக் கவர்ந்து தன் மறைவிடத்திற்கு அழைத்துச் சென்று அங்கேயே வைத்துக்கொள்வாள். அவர்களின் உயிர்சக்தி முழுவதுமாக உறிஞ்சப்பட்டு காலங்கள் கடந்து வயதாவது வரை. அவள் அவர்களை மீண்டும் உலகிற்குள் விடுவிக்கும்போது பல தசமங்கள் கடந்துவிட்டதையும் தனக்குத் தெரிந்தவர்கள் எல்லோரும் மறைந்துவிட்டதை அறிந்துகொள்வார்கள். நேசமற்று தனிமையில் தன் வாழ்வை முடித்துகொள்வார்கள்.
அடிப்படையில், ‘ரிப் வான் விங்கிள்’[1] என்பது ‘பாலியல்’ பகுதி மட்டும் தணிக்கை செய்யப்பட்டு சூரெய்லால் கவர்ந்து செல்லப்பட்ட ஓர் ஆணின் கதை என்று தனக்கே உரிய பாணியில் ஜைனப் சொன்னாள். நான் நெளிவதைப் பார்ப்பதற்காகவே கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் ‘செக்ஸ்’ என்ற சொல்லை என் மீது வீசுவாள். பின்னர் அவள் மீண்டும் தீவிரமானாள்: “உன் அப்பா மீண்டும் பாகிஸ்தான் போகாததற்கு அது ஒரு மோசமான இடம் என்று சொல்லும் காரணத்தை நம்பாதே. சூரெய்ல் தனக்காகக் காத்திருக்கிறது என்ற பயத்தினால்தான் அவர் அங்கே திரும்பிச் செல்வதில்லை.”
எனக்கு ஆறு வயதாக இருந்தபோது மான்செஸ்டரிலிருந்து லண்டனுக்கு மாறினோம், எட்டு வயதில் வெம்ப்லியிலிருந்து குயின்ஸ் பார்க்கிற்கும், ஒன்பது வயதில் குயின்ஸ் பார்க்கிலிருந்து கென்சிங்க்டனுக்கும் குடி பெயர்ந்தோம். கென்சிங்க்டனில் ஒரு வீட்டிலிருந்து மற்றொன்றுக்கு மாறிக்கொண்டேயிருந்த சூழலில் எனக்கு பன்னிரண்டு வயதானபோது என் அப்பா தன் வாழ்வின் லட்சியங்களை எட்டினார். பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து ஆறு நிறுத்தங்கள் தள்ளி, லண்டனின் ஏழாவது பெரிய தோட்டத்துடன் கூடிய ஒரு வீட்டை வாங்கினார். நான் இனி இடம்பெயர வேண்டியதில்லை என்று கூறினார். இனி நீ உனக்கான தோழிகளைத் தேடிக்கொள்ளலாம் என்றார். முகவரி மாற்றங்களால்தான் என் பொதுவாழ்விற்கு இடையூறு ஏற்பட்டது போலவும் என் அடிப்படை குணத்தில் உள்ள தடுமாற்றமும் பாதுகாப்பின்மைக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போலச் சொன்னார். என்னை விலை உயர்ந்த பள்ளிக்கு அனுப்பினார், தவறான பெண்களுடன் பழக வேண்டாம் என்றும் சொன்னார். அவர் மற்ற பாகிஸ்தானியர்களைத்தான் குறிப்பிட்டுச் சொல்கிறார் என்பது எனக்குத் தெரியும். இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்து ஒரு ஆங்கிலேயனாக மாறுவதற்கு எந்த விருப்பமுமில்லாத தன் அண்ணன் மீது அவருக்கு வெறுப்பு இருந்தது – நீங்கள் ஒருவர் வீட்டிற்கு விருந்தினராக நுழைந்தால் அவர்களை மகிழ்விப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்வார். ஆங்கிலேயர்களை மகிழ்விப்பதற்கான அவரின் வழிகள் – ஸ்குவாஷ் விளையாட்டைத் தேர்ந்தது, உச்சரிப்பு பயிற்சியாளர் ஒருவரைத் தனக்காக நியமித்துக்கொண்டது, கலைகளுக்குப் புரவலராக மாறியது, மேல்தட்டு ஆண்கள் மட்டுமே புழங்கும் ‘கிளப்’பில் உறுப்பினராகச் சேர்ந்தது. ஆனால் என்னை ஒரு சரிநிறைவான புலம்பெயர்ந்த பெண்ணாக முன்னிறுத்த அவர் எடுத்த முயற்சிகளெல்லாம் தோல்வியில் முடிந்தன: பியானோ ஆசிரியர், டென்னிஸ் பயிற்சியாளர், ப்ரெஞ்ச் தாதிகள்[2] எல்லோரும் என்னைப் பற்றி மிகச் சுமாரான எண்ணத்தையே விட்டுச் சென்றனர், சீக்கிரமே கறைபடிந்தவள் ஆனேன்.
ஒரு நாள் அவர் வீட்டிற்குள் நுழைந்தபோது நான் சமையலறையில் இருந்தேன். நான் அங்கு எந்த வேலையிலும் ஈடுபடவில்லை. சாண்ட்விச் செய்வதற்காக ஃப்ரிட்ஜைத் திறந்து காய்கறிகள் எடுக்க குனிந்திருந்த என்னை பார்த்த உடனே கோபத்தில் கத்தினார்.
“நான் உனக்காக என்ன செய்தாலும் நீ வயலில் வேலை செய்யும் ஒரு கூலியைப் போலத்தான் நடந்துகொள்கிறாய்” என்று சொன்னார்
அதன் பிறகு ஓர் அதிசயம் நடந்தது. எனக்குப் பதினாறு வயதானபோது, பல்கலைக்கழகத்தில் பிரகாசமான வெற்றியடைந்து, முதலீட்டு வங்கியில் வேலையைப் பெற்று லண்டனுக்குக் குடிபெயர்ந்தாள் ஜைனப். என் அப்பா என்னிடம் ஆசைப்பட்ட அத்தனையும் அவள் பெற்றிருந்தாள்: கவர்ச்சியான தோற்றம் கொண்டவள், அற்ப கேலிப் பேச்சுகளில் திறமையானவள், பெரு விருப்பங்கள் கொண்டவள், நகர பெண்கள் கிரிக்கெட் கிளப்பிற்காக தொடக்க ஆட்டக்காரியாக களமிறங்குபவள். எங்கள் வீட்டைத் தனதாகக் கருதும்படி அவளை ஊக்குவித்தார் என் அப்பா. அவள் முன் வாசல் வழியாக நுழைந்த ஒவ்வொருமுறையும் அவர் அகமகிழ்ந்ததாகத் தோன்றியது எனக்கு. அவளுடைய நகைச்சுவைகளுக்குச் சிரித்தார், அவளின் தினசரி செயல்களைப் பற்றி அன்றாடம் விசாரித்தார். அதற்காக நான் அவளை வெறுக்க முடியவில்லை. என் வாழ்வின் ஒளிவீசும் மையம் என்ற தனது பழைய பதவியை அவள் விரைவிலேயே மீண்டும் அடைந்துவிட்டாள். பதிலுக்கு, என்னுடைய துணையினால் அவள் உண்மையிலேயே மகிழ்ந்ததாகத் தெரிந்தது. அது என்னை அமைதியுறச் செய்தது, இதுவரை வேறு யாரிடமும் இல்லாத வகையில் அவளுடன் வெளிப்படையாகப் பேச வைத்தது.
அவள் மீண்டும் என் வாழ்வில் தோன்றியது என் பழைய ஞாபகம் ஒன்றைத் தூண்டிவிட்டது. ஒருநாள் மதியம் நான் அவளிடம் சூரெய்லைப் பற்றிக் கேட்டேன்.
இயல்பிற்கு மாறாக வெப்பமான ஓர் இலையுதிர் நாளில் குடையின் கீழ் என் பக்கத்தில் தோட்ட நாற்காலியில் சாய்ந்தபடி அவள் தன் அலைபேசியில் எதையோ தட்டிக் கொண்டிருந்தாள்.
“கவனி! ஒரு பெண் சூரெய்லாக மாறக்கூடிய சூழ்நிலைகள் இவைதான்:
பிரசவத்தின்போது இறப்பது, அதுதான் முதன்மையானது. கர்ப்ப காலத்தில் இறந்தாலும் கூட.
படுத்துக் கிடக்கும்[3] காலத்தில் இறப்பது. (கிடப்பதென்றால் என்ன என்று தேடிப்பார்க்க வேண்டி இருந்தது, ஞாயிற்றுக்கிழமை காலை சோம்பலாகப் படுத்துக்கொண்டிருப்பது என்பது அதன் அர்த்தம் அல்ல!), படுக்கையில் இறப்பது. மாதவிடாய்க் காலத்தில் இறப்பது. இயற்கைக்கு மாறான அல்லது மிகவும் பரிதாபகரமான முறையில் இறப்பது. தன் வாழ்வின்போது ஓர் ஆணின் கைகளால் கொடுமைகளை அனுபவித்த பின் இறப்பது. தன் வாழ்வின்போது தன் மாமியாரின் கைகளால் கொடுமைகளை அனுபவித்த பின் இறப்பது. காமம் நிறைவுறாத அல்லது நிகழாத வாழ்வின் பின் இறப்பது,” ஜைனப் சொன்னாள்.
நிச்சயமாக இப்போது சூரெய்ல் ஆகிவிட்ட இறந்த பெண்களின் பெயர்களைச் சட்டென சத்தம் போட்டு அழைத்தோம்: மர்லின் மன்றோ (படுக்கையில் இறந்தார்); ஒரு காலத்தில் ஜைனப் பக்கத்து வீட்டிலிருந்த ருபைனா அத்தை (வேறென்ன, காம நிறைவின்மையால்தான்…) ஏமி வைன்ஹவுஸ் (இயற்கைக்கு மாறான மரணம்); கேரி ஃபிஷர் (துயரமான மரணம், இளவரசி லெயா[4] எப்படி இறந்தாலும் அது துயர மரணம்தான்); இளவரசி டயானா (மாமியார்).
அந்நாளின் பிற்பகுதியில், நானும் ஜைனப்பும் எதற்காக அவ்வளவு வெறித்தனமாகச் சிரித்துக்கொண்டிருந்தோம் என்று கேட்டார்; அவர் வாசிப்பறையின் ஜன்னல்களை மூடி வைக்க வேண்டியிருந்தது என்றார். அவர் வீட்டை விட்டு வெளியேறும்போது இதைச் சொன்னார், கையில் முன் கதவின் சாவி இருந்தது. இந்தக் கருத்து கேள்வியாக வெளிப்பட்ட ஒரு கண்டிப்பு என்று எனக்குத் தெரியும். ஆனாலும் நான் அதற்குப் பதிலளிக்க முடிவெடுத்தேன்:
“சூரெய்ல்!”
அவர் தனது சட்டைப் பையில் சாவியைப் போட்டார், ஆனால் அதற்கு முன்பே அவரின் உறுதியான கையில் சாவி சட்டென குலுங்கியதைக் கேட்டேன்.
முட்டாள்தனமான மூடநம்பிக்கை என்று சொன்னார். என்னைத் தனியாக விட்டுவிட்டு கிளம்பிச் சென்றார். எனக்கு பதிமூன்று வயதானபோது என்னைக் கவனித்துக் கொண்ட தாதிகளை அனுப்பிவிட்டோம். இப்போது வீடு முழுதும் காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவர் வெளியே இருக்கும்போது ஏதேனும் துர்நிகழ்வு என்னைக் கொன்றாலோ, முடமாக்கினாலோ அல்லது காயப்படுத்தினாலோ காட்சிகளை மீண்டும் இயக்கிப் பார்க்க முடியும். இது போன்ற அவரின் செயல்களைப் பற்றி நான் அடிக்கடி யோசித்திருக்கிறேன் ஆனால் யாரிடமும் வெளியே சொன்னதில்லை, ஜைனபைத் தவிர.
மறுநாள், ஜைனப் இனி என்னைப் பார்க்கக்கூடாது என்று என் அப்பா தடை விதித்துவிட்டதாக எனக்குக் குறுஞ்செய்தி அனுப்பினாள். நான் அழுதுகொண்டே என் அப்பாவிடம் போய் நின்றபோது அவர் சொன்னார், “உன்னை நான் வாழ்நாள் முழுதும் இப்படியான தீய தொடர்புகளில் இருந்துதான் விலக்கி வைக்க நினைத்திருக்கிறேன்.”
என்னில் ஒரு சிறிய பகுதி நிம்மதியடைந்தது. இனி அவர் ஜைனபைச் சுற்றி வருவதை நான் பார்க்க வேண்டியதில்லை. அவர் நேசிக்கத் தெரியாதவர் அல்ல ஆனால் என்னை மட்டும்தான் நேசிப்பதில்லை என்பதை மீண்டும் மீண்டும் உணர வேண்டியதில்லை.
நாங்கள் புலம் பெயர்ந்த கதையின் பின்னணி என் அப்பாவின் பார்வையில் இதுதான்: என் அம்மா இறந்தபோது மான்செஸ்டரிலிருந்து என் பெரியப்பா அழைத்து தன்னுடைய தொழில் விரிவடைவதாகவும் அப்பாவின் உதவி தேவைப்படுமென்றும் என் பெரியம்மா ஜைனப்புடன் என்னையும் வளர்ப்பார் என்றும் ஜைனபை நான் என் அக்காவாகக் கருதலாம் என்றும் கூறியிருக்கிறார். அதனால்தான் என் அப்பா இங்கிலாந்துக்கு வந்தார், பெரும்பாலும் எனக்காகவே. அவர் இங்கே வந்த பிறகுதான் அவருக்கு இரண்டு விஷயங்கள் தெரிந்தன: அ) அவர் விட்டு வந்த நாடு ஒரு குப்பைக் கிடங்கு, மீண்டும் ஒருபோதும் அங்கே திரும்பப்போவதில்லை. ஆ) அவரால் இங்கே பணக்காரனாக முடியும் ஆனால் தன் சகோதரனின் வாடகை வண்டி வியாபாரத்தில் தொடர்ந்து இணைந்திருந்தால் அது முடியாது. முஸ்லீம் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு அவர் தொடங்கிய திருமணச் செயலி மூலம் அவர் தன் முதல் மில்லியனை எட்டினார். (‘எங்களின் அபிமான வாடிக்கையாளர்களுக்கு இடம், சமையல், வாகன சேவை, ஆடைகள் என அனைத்திலும் தள்ளுபடி உண்டு’). அதற்கு முன்னால் பல தோல்வியுற்ற முயற்சிகள் இருந்தன.
“நீங்க ஏன் மீண்டும் திருமணம் செய்யவில்லை?” அவரிடம் மீண்டும் பேச வாய்ப்பு கிடைத்தபோது இதைக் கேட்டேன். “உங்களுக்கு ஒரு மகன் வேண்டாமா?” அவருடைய வாழ்க்கையில் நிறையக் குறுகியகாலப் பெண் தோழிகள் இருந்ததை நான் அறிவேன். பெண்களுடனான அவருடைய அனேக உறவுகள் எல்லாமே எந்தச் சிக்கலுமற்ற எளிய பரிவர்த்தனைகள் மட்டும்தான் என்று எனக்கு உறுதியாகத் தெரியும்.
“என் பெயரை இங்கே விட்டுச் செல்ல எவ்வளவோ வழிகள் இருக்குன்னு நான் எப்பவோ புரிஞ்சுகிட்டேன்.” எல்லாவற்றிலும் தன்னுடைய பெயரைப் பொறித்துக்கொள்ள விரும்பும் மனிதன் அவர் – பல்கலைக்கழக உதவித் தொகை அன்பளிப்புகள், புதுப்பிக்கப்பட்ட நாடக அரங்கின் அறைகள், அருங்காட்சியகப் பிரிவுகள்.
“அப்போ நான்” என்று கேட்டேன்.
அவர் தொலைக்காட்சியைத் திருகி ‘டான்ஸிங் வித் த ஸ்டார்ஸ்’ பக்கம் கவனத்தைத் திருப்பினார்.
நான் ஜைனபைத் தொடர்ந்து சந்தித்து வந்தேன், ஆனால் ரகசியமாக. அடுத்த கோடைக்காலம் தொடங்கும் வரை அவள் எங்கள் வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கவில்லை. முன் கதவைத் திறந்து நடைவழியில் நுழைந்ததுமே அவள் வந்திருப்பதை என் அப்பாவிடம் அறிவிக்கும்படி என்னிடம் சொன்னாள். என் அப்பாவிடம் அவள் பேச விரும்புவதாகத் தெரிவித்தாள்.
பாகிஸ்தானில் பெரு வெள்ளம் ஏற்பட்ட கோடைக் காலம் அது, முன்னெப்போதும் இல்லாத பேரழிவு. ஜைனப் தனது வங்கிப் பணியை உதறிவிட்டு வெள்ள நிவாரண உதவிகள் செய்ய பாகிஸ்தானுக்குச் செல்லத் தயாராக இருந்தாள். என் அப்பாவிடம் அவரைப் பார்க்க வந்திருப்பதாகச் சொன்னாள், கையில் தொப்பி வைத்திருந்தாள் (அவள் ஒரு ‘ஃபெடோரா’ தொப்பி அணிந்திருந்தாள். அதைக் கழற்றி அவர் பக்கம் திறந்து நீட்டினாள்). தான் இணைந்து சேவை புரிய இருக்கும் தன்னார்வ அமைப்புக்கு நன்கொடை அளிக்குமாறு வேண்டினாள். அவருடைய கிராமம் நீரில் மூழ்கியிருப்பதாகச் சொன்னாள்.
என்னுடைய கிராமங்கள் கென்ஸிங்க்டனும் செல்ஸியும்தான் என்று சொல்லி வெடுக்கென குதிகால்களால் திரும்பிச் சென்றார். தன் இடுப்புச் சுற்றளவு அதிகரித்துவிட்ட போதிலும் திடமாக விரைந்து நடந்தார்.
“உங்கள் குடும்பம் எல்லாவற்றையும் இழந்துவிட்டது” என்று சத்தம் போட்டுச் சொன்னாள் ஜைனப். உங்கள் மாமாக்கள், உங்கள் உறவினர்கள்…”
அவர் நடைவழியில் தன் படிப்பறையை நோக்கி நடந்தபோது எந்தத் தடுமாற்றமும் அடையவில்லை. அவர் உள்ளத்தின் தடுமாற்றத்தை உடல் காட்டிக்கொடுத்ததை நான் ஒரே ஒருமுறை மட்டும் பார்த்த ஞாபகம் இருக்கிறது.
நான் ஜைனபை அழைத்துக்கொண்டு தெருவில் இறங்கி நடந்து அருகாமையிலுள்ள ATM இயந்திரத்துக்குச் சென்றேன். என் வங்கி அட்டையிலிருந்து எவ்வளவு பணம் எடுக்க முடியுமோ அவ்வளவும் கொடுக்க நினைத்தேன். பின்னர் எங்கள் பேச்சு சூரெய்லின் பக்கம் திரும்பியது. நான் பாகிஸ்தானிலிருந்து நாடு கடத்தப்படவும் ஜைனப் என் வீட்டிலிருந்து விரட்டியடிக்கப்படவும் காரணமாக இருந்தவள் அவள்தான்.
“ஆணாதிக்கத்திற்குப் பலியானதால் ஆண்களைப் பழிவாங்குபவள் அல்லவா அவள்? அப்படியென்றால் அவள் ஒரு வகையான பெண்ணியவாதி என்றே நினைக்கிறேன்.”
“ஆனால் அவள் தீயவள்,” ஜைனப் சொன்னாள். “அவள் கவர்ச்சியானவள், எந்தப் பாலியல் கட்டுப்பாடும் இல்லாதவள் என்பதால் அவள் தீயவள்.”
“ஆணாதிக்கத்தின் குற்றத்தின் விளைவால் உருவான ஒருவகை வெளிப்பாடுதானே அது,” என்று சொன்னேன்.
“தவறிழைத்த ஆண்களையும் அவள் பாதிக்கப்பட்டவர்களாகக் காட்ட வழி செய்து விடுகிறாளே,” ஜைனப் சொன்னாள்.
“அவர்கள் பாதிக்கப்பட்டவர்களாகவே இருந்தாலும் கூட தெய்வீக அழகுடைய பெண்ணே ‘போதும் போதும்’ எனும் அளவு ஐம்பதாண்டு விறைப்புத்தன்மை கொண்டு தாங்கள் கலவிக் கடவுளாகவே ஆகிவிடுகிறார்களே!”
ஜைனப் விழுந்து விழுந்து சிரித்தாள்.
“நீ இப்படியே இரு, மாறிடாதே!” என்றாள்.
“ஆனா, நிஜமா தெரிந்துகொள்ளக் கேட்கிறேன்… பால்புதுமை சூரெய்லிகள் உண்டா?
மீண்டும் சிரித்தாள்… “இப்படித்தான்… இப்படியே இரு!”
எனக்குப் பதினெட்டு வயது ஆனதும் நான் எங்கள் பூர்வீகக் கிராமத்தில் உள்ள அம்மாவின் கல்லறையைப் பார்க்கப் போக வேண்டும் என்று ஜைனபிடம் சொல்லியிருந்தேன். ஆனால் அவள் பாகிஸ்தானிலிருந்து திரும்பி வந்ததும் அத்தனை வீடுகளையும் சேர்த்து கல்லறைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட செய்தியைச் சொன்னாள். “அரச மரமும் கூட…” அவள் சொன்னாள். “அதுவும் கூட அழிந்துவிட்டது.” ஆறு அல்லது ஏழு அங்குல நீளமுள்ள பழுப்பும் பச்சையும் கலந்த ஒரு மரக்கிளையை என் கையில் வைத்தாள். அதிலிருந்து இதய வடிவிலான இலைகள் வெளிவந்திருந்தன. “என்னால இதைத்தான் உனக்குக் கொண்டு வர முடிந்தது,” என்றாள். “கால நிலை மாற்றத்தின் அகதியாக இதை நினைத்துக்கொள்.”
“சாதகமற்ற சூழலில் ஒரு காலநிலை அகதி,” என்று சொன்னேன். இங்கிலாந்தில் அரசமரம் வளர முடியாது என்று எனக்குத் தெரியும்.” அவை செழித்து வளர காற்றில் ஈரப்பசையும் வெய்யிலும் அவசியம். ஆனாலும் எங்கள் தோட்டத்தில் அதிக சூரிய ஒளி படும் இடத்தில் ஒரு ஓரமாக அந்தக் கிளையை நட்டேன். இங்கிலாந்தில் இன்னும் கோடைக்காலம் முடியவில்லை, முந்தைய ஆண்டைவிட வெப்பம் அதிகமாகவே இருந்தது. அடுத்த சில வாரங்களில் அந்தச் செடி சில சென்டீமீட்டர்கள் வளர்ந்தது. பின்னர் இலையுதிர்காலம் வந்தது, அதற்கு அடுத்து குளிர்காலமும் வந்தது. அரசமரம் இறக்கவில்லை என்றாலும் அதன் வளர்ச்சி தேக்கமடைந்து, தடித்த குட்டையான செடியாகவே நின்றது. எங்கள் ஶ்ரீலங்கன் சமையல்காரர் அச்செடிக்கு மத முக்கியத்துவம் உள்ளது எனச் சொல்லும்வரை தோட்டக்காரர் அதை வேரோடு பிடுங்க முயன்றுகொண்டிருந்தார். தன் கிராமத்தின் ஒரு துண்டு இந்த இங்கிலாந்து தோட்டத்தில் வளர்வதை அறியாத என் அப்பா, விருந்தினர்கள் வீட்டின் ஜன்னல் வழி பார்த்துப் பாராட்டி ரசிக்கத்தக்க ஒரு அலங்காரமாகவே அதைக் கருதினார்.
அடுத்த வருடம் கோடை வெப்பம் முன்னதாகவே தொடங்கியது, இன்னும் கடுமையாக இருந்தது. ஜூன் மாதத்தில் லண்டனில் குழாயில் தண்ணீர் பாய்ச்சுவது தடை செய்யப்பட்டது, தோட்டத்துப் புற்கள் பொசுங்கிப் போயின, மரங்கள் வாடின. ஒரு வாரயிறுதிக் காலையில் சமையலறை குழாயில் வெறும் சொட்டு சொட்டாகத் தண்ணீர் வந்தது. இது வறட்சியின் காரணமாகத்தான் என்று முதலில் நினைத்தோம் ஆனால் மற்ற அத்தனை குழாய்களிலும் தண்ணீர் பீறிட்டு ஓடியது. குழாய் சரி செய்பவரை அழைத்துப் பார்ப்பதாக அப்பா சொன்னார், பின்னர் அதைப் பற்றி நான் நினைக்கவேயில்லை, சில மாதங்களாக நான் சென்றிடாத தோட்டத்து மூலையில் இருந்து என் அப்பா கர்ஜிக்கும் குரலில் என் பெயரைக் கத்திக் கூப்பிட்டது வரை.
அரசமரம் ஐந்தடி வளர்ந்திருந்தது, அதன் இதய வடிவ இலைகள் தடிமனாகப் பளபளத்து இருந்தன. பிளம்பர் தன் கையில் செல்பேசியை வைத்திருந்தார், தாவரங்களை அடையாளம் காணும் செயலியைத் திறந்தார். அவர் இதை ‘ஊடுறுவி’ என்றார்; இது தண்ணீரைத் தேடி தன் வேர்களை ஆழமாக வெகுதூரம் அனுப்பும் என்றார். இது எங்கள் குழாய்களுக்குள் நுழைந்துவிட்டது. இது இந்நேரம் துளையிட்டு எங்கள் வீட்டின் அஸ்திவாரத்திற்குள் ஊடுறுவி நுழைந்திருக்கலாம்.
“இது இங்கே எப்படி வந்தது,” அப்பா கேட்டார்.
நம்முடைய வீட்டின் எதிரே இருந்த அரசமரத்தின் ஒரு கிளையை ஜைனப் கொண்டு வந்ததாக அப்பாவிடம் சொன்னேன்.
அவருடைய முகம்!! மிக நீண்டகாலமாக, தன் உடலுக்குள் ஆழமாக இறங்கிவிட்ட, உடற் பகுதியை வெட்டி எறியாமல் அதை நீக்க முடியாது எனும்படியான ஒரு நோய் பற்றிய செய்தி அறிந்த மனிதனைப் போல நின்றார்.
நிபுணரை அழைத்து வந்துதான் இதை அகற்ற வேண்டும் என்று செல்பேசி திரையைப் பார்த்தபடி சொன்னார் பிளம்பர். செடியை வெட்டினாலும் வேர்கள் தொடர்ந்து வளரும். இது ஏற்கனவே என்ன சேதத்தை நிகழ்த்தியிருக்கிறது என்று அறிந்துகொள்வது சிரமம்.
அன்று இரவு என் அப்பா மிக அரிதாகப் பயன்படுத்தப்படும் விருந்தினர் அறையில் நின்றுகொண்டு இங்கிலாந்தின் ஏழாவது பெரிய தோட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். வீசும் காற்று உள்ளே வரட்டுமென இரவில் ஜன்னல்களைத் திறந்தே வைத்திருப்போம். ஆனால் அன்று அப்பாவைத் தேடி வீட்டிற்குள் நடந்து சென்றபோது அத்தனை ஜன்னல்களும் சாத்திப் பூட்டப்பட்டிருந்ததைக் கவனித்தேன். நான் அவர் பக்கத்தில் சென்று நின்றுகொண்டேன்.
“உனக்கு அவள் தெரிகிறாளா?” என்றார்.
அது சிறிய, நீண்டொடுங்கிய ஒன்றாக இருந்தது. நான் படங்களில் பார்த்திருந்த அகன்ற தண்டுடைய , வான் நோக்கியெழும் வேர்களும், பெரும் உயரமும் கொண்ட அரச மரங்களைப் போல இதிலொன்றும் சிறப்பாக இல்லை. நாங்கள் அங்கே நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்தோம், அவரது மூச்சு சத்தம் விசித்திரமாகவும், தட்டுத்தடுமாறியும் கேட்டது. நான் அங்கு நின்றுகொண்டிருப்பதையோ, அவர் கேள்விக்கு நான் இன்னும் பதிலளிக்கவில்லை என்பதையோ உணராதவரைப் போலக் காணப்பட்டார். சந்திரன் மேகத்திலிருந்து நழுவி வெளியேறியது; மெல்லிய காற்று கிளைகளையும் இலைகளையும் சலசலத்தது. மிக நீண்டு மெல்லிய கைகால்கள் உடைய உருவம் எங்கள் வீட்டை நோக்கி கைகள் விரித்ததைப் பார்த்தேன். ஒரு குரல் பெயர் ஒன்றை உச்சரிப்பதைக் கேட்டேன், இரண்டு முறை…
என்னுடைய பெயர்.
அப்பா என்னைப் பார்த்தார்.
மிக நிதானமாக, என் வாழ்நாள் முழுவதும் நான் இதற்காகவே காத்திருந்ததைப் போல ஃப்ரெஞ்ச் சாளரங்களின் அருகே சென்று பூட்டைத் திறந்தேன். என் அப்பாவின் கை என் மணிக்கட்டை இறுக்கமாகப் பிடித்திருந்தது.
“நீங்கள் இப்படிச் செய்தால் அவளுக்குப் பிடிக்காது,” என்றேன். ஏதோ என் தோள் நஞ்சுகொண்டது என்பதைப் போல தன் கையை விலக்கி நகர்த்திக்கொண்டார்.
நான் தோட்டத்திற்குள் நுழைந்தேன். என் வெற்றுக் கால்களுக்குக் கீழே இறந்த புற்கள். பொசுங்கிய பரப்பின் மறுபுறத்தில் மரம் காத்திருந்தது. ஒருவேளை, இருளுக்குள் ஒளிந்திருக்கும் ஜைனபை நான் கண்டுபிடிக்கக் கூடும். ஒருவேளை, கதையின் மையமாக தாங்களே இருக்க வேண்டும் என்ற விழைவில் ஆண்கள் அவளைச் சுற்றி உருவாக்கிய தொன்மத்தை விடவும் பழமையான ஒரு உயிரினத்தின், சூரெய்லின் உண்மைக் கதையை நான் அறிந்துகொள்ள நேரலாம்.
முதற் காலடி, பின் அடுத்து, அடுத்து… நான் நின்றேன், புல்லின் மீது அமர்ந்தேன், என் கால்களை என் மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டேன், என் முகம் வானத்தை நோக்கி மேலே திரும்பியது. எந்த அவசரமுமில்லை. நான் இங்கே சிறிது நேரம் அமர்ந்திருப்பேன், அங்கே என் அப்பா நின்று என்னைப் பார்த்துக்கொண்டிருப்பார். சூரெய்லின் குரலின் எதிரொலி அத்தனை அடித்தளங்களையும் அசைத்தபடி அவருள் ஆழப் புதைந்துகொண்டிருக்கும்!
***

அடிக்குறிப்புகள்:
[1] ரிப் வான் விங்கிள் – அமெரிக்க எழுத்தாளர் வாஷிங்டன் இர்விங் தன் சிறுகதையில் படைத்த கதாபாத்திரப் பெயர். இருபது வருடங்கள் காட்டுக்குள்ளேயே உறங்கிவிட்ட ‘ரிப்’ மாறிய உலகத்திற்குள் நுழையும் இக்கதை இன்று அமெரிக்க நாடோடிக் கதையாக எஞ்சுகிறது
[2] French au pairs – கலாச்சாரப் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக ஆங்கில உயர்தட்டு வீடுகளில் இளம் ஃப்ரெஞ்ச் தாதிகள் – பொதுவாக இளம் கணவன் மனைவி – தங்கி குழந்தைகளைப் பராமரித்து, ஆங்கிலம் அல்லது கல்லூரிப் படிப்பைப் பயின்று பின் தன் நாடு திரும்புவார்கள். ஆங்கிலக் குழந்தைகள் ப்ரெஞ்ச் நாகரீகங்களைப் பழகும் ஒரு வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.
[3] மகப்பேற்று கிடத்தல் – மகப்பேற்றுக்குப் பிறகு படுக்கையில் ஓய்வில் கிடக்கும் நாட்கள்.
[4] இளவரசி லெயா – ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தின் பிரபலமான கதாபாத்திரம்
*

புதிய கோணத்தில் பேசும் கதை அற்புதம் மொழிபெயர்ப்பு சிறப்பு,,