பழையோள் என்னும் மூத்த தேவியின் வழிபாடு – ஜி.எஸ்.எஸ்.வி நவின்

மூத்தோள்

1

இந்து தெய்வ மரபில் ஒரு தெய்வமென்பது தனியொரு பண்பைக் கொண்ட தெய்வமென்றோ, தனித்த அடையாளம் கொண்ட தெய்வமென்றோ வகைப்படுத்த முடியாது. இதே விதி புத்த, சமண தெய்வ உருக்களுக்கும் பொருந்தும். ஒவ்வொரு செயலுக்கும் தனி கடவுள் என்ற பிரிவு உலகெங்கிலும் காணப்பட்டாலும், நம் இந்திய மரபில் தெய்வங்களை தொகுக்கும் தன்மையை முக்கிய அம்சமாக கருத்தில் கொள்ள வேண்டும்.

இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் நமக்கு கிடைக்கும் ஒரு தெய்வமென்பது கிட்டத்தட்ட மூவாயிரம், நான்காயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தொகுக்கப்பட்டு உருவாகி வந்தவை. வேத காலத்திலோ, மகாபாரத காலத்திலோ வழிபடப் பெற்ற பல தெய்வங்கள் வரலாற்றில் வழிபாடு பெறாமல் மறைந்திருப்பதை நாம் அறிவோம். அதே போல் பல தெய்வங்கள் பெருநெறி தெய்வங்கள் உருவாகி வந்த போது அவற்றுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன.

இன்று நாம் வழிபடும் சிவன் அல்லது விஷ்ணுவை ஒற்றை குணச்சித்திரத்தில் விளக்க முடியுமா? சிவன் அனைத்தையும் துறந்து யோகத்தில் அமர்ந்தவன். தன் யோகத்தை கலைக்க வந்த காமனை (மன்மதன்) எரித்து அழித்தவன். அதே நேரத்தில் மோகினியாக விஷ்ணு வந்த போது அவள் மேல் காமம் கொண்டவன். காமத்தின் மோகத்தின் பித்தின் கடவுளும் அவனே. வேத காலத்தில் வழிபாடு பெற்ற முக்கிய தெய்வமான சோமன் என்னும் கடவுளுக்கு இன்று இந்தியாவெங்கும் வழிபாடில்லை. சோமன் இன்று வேத மந்திரங்களில் அன்றி வேறெங்கும் இல்லை. ஆனால் சோமனின் அனைத்து பண்புகளும் சிவனின் மேல் ஏற்றப்பட்டு சோமன் சிவனின் பகுதியாக ஆனதையும் வரலாற்றில் நம்மால் பார்க்க முடிகிறது.

சோமன் என்னும் வேத கால கடவுள் யார்? சோமபானத்தின் அதிபதி, நிலவைக் கொண்டவன், பித்தின் தெய்வமாக அறியப்படுகிறான், சோமன் வழிபாட்டுக்கான பொருள் எருக்கும், வில்வமும். பித்தா பிறைசூடி என அமர்ந்திருக்கும் சிவனையும் இதில் எந்த மாற்றமும் இல்லாமல் பொருத்த முடியும் என்பது நாம் அறிந்ததே.

சிவ மூர்த்தங்களை யோசித்து பார்த்தால் ஒவ்வொன்றும் தனி தெய்வம் என்று கூடத் தோன்றும். அனைத்தும் சோமனைப் போல் வரலாற்றில் எப்போதோ தொகுக்கப்பட்டு சிவன் என நாம் இன்று வழிபடும் ஒற்றை தெய்வமாக மாறியிருக்கலாம். இதே போல் விஷ்ணுவிற்கும், சக்திக்கும் கூட சொல்ல முடியும். உமையும், துர்க்கையும், காளியும் ஒரே பெண் தெய்வம் என்பது வரலாற்றில் நாம் உருவாக்கி எடுத்த ஓர் உண்மை.

அடுத்தெழும் வினா என்பது இந்த தொகுக்கும் தன்மை இந்திய பெருநெறி மதங்களுக்கு மட்டும் உள்ள தனிச்சிறப்பா என்ன? அப்படியில்லை, நம் மரபிலேயே இந்த தொகுக்கும் விசை உள்ளது என சில சான்றுகளுடன் எனக்கு சொல்லத் தோன்றுகிறது. நம் பழங்குடி மரபை புரிந்துக் கொள்ள இன்றைய நாட்டார் மரபை பார்த்தால் புரியுமென நினைக்கிறேன்.

இன்று நாட்டார் மரபில் வழிபாட்டிலுள்ள சுடலைமாடன், இசக்கியம்மன் தனி தெய்வங்களா என்ன? தமிழகத்திலுள்ள எல்லா இசக்கியம்மன் கோவில்களிலும் ஒற்றைப்படையான வழிபாடா நிகழ்கிறது? இல்லை. அகால மரணமடைந்த ஆண்கள் எல்லோருமே மாடன்கள் தான். துர்மரணம் அடைந்த எல்லா பெண்களும் இசக்கியம்மனாகவே வழிபடப்படுகின்றனர். இசக்கியம்மனுள் இருக்கும் இத்தனை தெய்வங்களையும் பிரித்தறிய ஒரே வழியென்பது அத்தெய்வத்திற்குக் கொடுக்கப்படும் படையல் மட்டுமே. இசக்கியம்மனுக்குப் பலி கொடுக்கப்படும் ஆட்டை பலிபீடத்தில் மேல் நேராக நிற்க வைத்து வெட்டுவர். மாறாக, அகால மரணமடைந்து இசக்கியானவர்களுக்கு ஆட்டை படுக்க வைத்து வெட்டுவதே மரபு. பல கோவில்களில் அந்த பெண்ணிற்கு இஷ்டமான படையல் மட்டுமே படைக்கப்படும். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள இசக்கியம்மன் கோவிலில் அம்மனுக்கு பிரசவ காலத்தில் ஆயுர்வேத மருத்துவத்தில் கொடுக்கப்படும் அரிஷ்டமே படையல். அத்தெய்வம் கர்ப்ப காலத்தின் ஒன்பதாவது மாதத்தில் மரணமடைந்தவள். தென்மாவட்ட இசக்கியம்மன்களிலேயே முப்பந்தல் இசக்கியம்மன் போன்ற ஒரு சிலருக்கே காசு வெட்டி வழிபடும் சடங்கு வழக்கில் உள்ளது.

இப்படியொரு தொகுக்கும் தன்மை உருவாகும் போதே இயல்பாக விலக்கும் தன்மையும் உருவாகும். வரலாற்றில் பல தெய்வங்கள் சுவடுகளே இல்லாமல் காணாமல் போனதற்கும் நிறைய உதாரணங்கள் உள்ளன. எனவே நாம் தெய்வத்தை வரலாற்றில் வைத்து ஆராய முற்படும் போது இந்த தொகுக்கும் விலக்கும் தன்மை இயல்பாக அதன் மேல் பொருந்திப் போவதைக் காணலாம்.

நம் இந்திய மரபிலுள்ள இத்தன்மையை கொண்டு ஆய்வாளர் வெ. வேதாசலம் எழுதிய ‘வரலாற்றில் ஜேஸ்டாதேவி மூதேவி வழிபாடு’ நூலை அணுகும் போது மூவாயிரம் ஆண்டு பண்பாட்டு வரலாற்றில் ஜேஸ்டை என்னும் தெய்வத்தின் பரிணாம நிலையை முற்றிலுமாக தொகுத்து அறிய முடிகிறது.

2

வெ. வேதாசலத்தின் இந்நூல் எல்லா விதத்திலும் ஒரு முன்னோடி முயற்சியே. இதற்கு முன் டி.ஏ. கோபிநாத ராவ் எழுதிய ‘இந்து சிற்பவியல் தொகுதி’ இந்து மதத்திலுள்ள எல்லா தெய்வங்களின் சிற்ப அமைப்பு சார்ந்த முழு தகவல் களஞ்சியம். அதிலிருந்து வேதாசலம் முன் செல்வது அவர் ஒரு தெய்வத்தை எடுத்துக் கொண்டு வரலாற்றில் வேத காலம் தொடங்கி மகாபாரத காலம், பேரரசுகளின் காலம் என சமகாலம் வரை இலக்கிய, கல்வெட்டு சான்றுகளுடன் முழு சித்திரத்தை அளிக்கிறார்.

வெ. வேதாசலம் & வே.திருநங்கை எழுதிய நூல்

இதற்காக தமிழ்நாட்டில் கிடைக்கக் கூடிய எல்லா ஜேஸ்டாதேவியின் சிற்பங்களையும் நேரில் சென்று புகைப்படம் எடுத்துள்ளார். எல்லா கல்வெட்டு ஆதாரங்களையும் படித்து நூலில் சான்றாகக் காட்டுகிறார். இலக்கியத்தை வரலாற்று ரீதியாக அடுக்கி அதில் பயின்று வரும் தெய்வ பரிணாமத்தை விளக்குகிறார். இதற்கு முன் தமிழில் இப்படி ஒரு முயற்சி உள்ளதா எனத் தெரியவில்லை.

வேதாசலத்தின் இந்நூல் ஐந்து பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியில் வட இந்தியாவில் ஜேஸ்டாதேவி வழிபாடு எப்படி இருந்தது என ஆராய்கிறார். இரண்டாவது பகுதியில் அதற்கு நிகராக தமிழ்நாட்டில் எப்படி வழிபடப்பட்டது என்பதை முன் வைக்கிறார். மூன்றாவது பகுதியில் அனைத்து ஆகமங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஜேஸ்டாதேவியின் வடிவங்களையும் பட்டியலிடுகிறார். நான்காவது சிற்பக்கலை தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாடுகளிலும் மூதேவி எவ்வண்ணம் வழிபடப்பட்டாள் என்னும் முழு சித்திரத்தையும் வழங்குகிறார்.

இறுதி பகுதியே மிகவும் சுவாரஸ்யமானது இந்தியா, இலங்கையில் கிடைக்கப்பெற்ற அனைத்து ஜேஸ்டாதேவியின் சிற்பங்களையும் பட்டியலிடுகிறார். அவை சாதாரண பெயரளவு பட்டியலாக அமையவில்லை. தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலுள்ளும் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும் உள்ள எந்தெந்த ஊர்களில் எந்த நூற்றாண்டை சேர்ந்த சிற்பம் கிடைத்துள்ளது என்பதான நீண்ட பட்டியல் அது. ஒவ்வொரு ஊர்களிலும் கண்டடையப்பட்ட சிற்ப உருவ அமைப்பு குறித்த தெளிவான விவரணையையும் வழங்குகிறார். இறுதியாக அனைத்து சிற்பத்தின் புகைப்படத்தையும் (அவர் நேரில் சென்று எடுத்தது) இணைத்துள்ளார்.

வேதாசலத்தின் அனைத்து நூல்களைப் போலவும் இந்நூலும் நேர்த்தியும், முழுமையும் கொண்டது. தகவல் ஒன்றையும் தவறவிடக்கூடாது என்னும் ஆசிரியரின் முயற்சி அவர் தொகுத்தளிக்கும் தகவல் மூலம் அறியமுடிகிறது. ஊர்க்காடு என்பது திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிற்றூர். முன்பு ஊர்க்காடு ஜமீனாக இருந்தது, இப்போது மிக சிறிய கிராமம் அங்கே வீதியில் அரசமரத்தடியில் ஜேஸ்டை மாந்தன், மாந்தியுடன் இருக்கும் சிற்பத்தை முதற்கொண்டு தேடி புகைப்படமெடுத்து இணைத்துள்ளார்.

3

பின்னால் உள்ள இந்த அட்டவணையும் படங்களுமே சுவாரஸ்யமானது. வரலாற்று மாணவனோ, கலை, வரலாற்று ஆர்வலரோ இந்த அட்டவணையிலிருந்து மட்டுமே பல முடிவுகளுக்குச் செல்ல முடியும்.

ஒன்று, ஜேஸ்டாதேவியின் சிற்பங்கள் இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே பெருமளவு கிடைத்துள்ளன. தமிழ்நாடு அருகே உள்ள கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் சில சிற்பங்கள் கிடைத்துள்ளன. இலங்கையில் கூட மூதேவியின் சிற்பங்கள் கிடைத்துள்ளன. ஆனால் வடஇந்தியாவில் ஜேஸ்டாதேவியின் சிற்பங்கள் வழிபாட்டிலோ, வழிபாட்டில் இல்லாமலோ கூட கிடைக்கவில்லை. விதிவிலக்கு டில்லி அருங்காட்சியகத்தில் ஆறு சிற்பங்கள் உள்ளன. சுவாரஸ்யமாக அவை ஆறும் தமிழ்நாட்டை சேர்ந்த பொ.யு. 8, 9 ஆம் நூற்றாண்டு சிற்பங்கள்.

இரண்டு, தமிழ்நாட்டில் பட்டியலிடப்பட்டுள்ள 250 க்கும் அதிகமான சிற்பங்கள் பொ.யு. 6 ஆம் நூற்றாண்டு தொடங்கி பொ.யு. 13, 14 ஆம் நூற்றாண்டு வரையுள்ள சிற்பங்கள். விஜய நகர பேரரசு தமிழ்நாட்டில் உருவாகி வந்தபின் ஜேஸ்டாதேவி வழிபாடு அருகிவிட்டத்தைக் காணமுடிகிறது. கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டத்தில் மட்டும் பொ.யு. 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு சிற்பங்கள் கிடைத்துள்ளன.

மூன்றாவது, வேதாசலம் பட்டியலிட்ட 264 சிற்பத்திற்கும் அதன் சிற்ப அமைதியை விளக்கும் அட்டவணை ஒன்றை தயாரித்துள்ளார். அதில் மாந்தன், மாந்தியுடன் (மூதேவியின் அருகே மாட்டுத் தலையுடன் காணப்படும் ஆண், அழகிய பெண் உருவம். இருவரும் மூதேவியின் மகன், மகள் என்பது தொன்மம்) காணப்படும் சிற்பங்கள் எவை, கழுதை வாகனத்தில் அமர்ந்திருக்கும் சிற்பம் எங்குள்ளது, அரிதாக காணப்படும் சிம்ம வாகினியாக எங்கு காணப்படுகிறாள் போன்ற தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் கையில் தாமரை அல்லது நீலோத்பவ (அல்லி) மலரை ஏந்தியபடி உள்ளாள்.

மூதேவி சிற்பத்திலேயே அரிதானது அவள் இரு கைகளிலும் செல்வ கலசத்துடன் இருக்கும் சிற்பம். வேதாசலம் இச்சிற்பங்கள் பல்லவர் காலத்திற்கு முந்தையவை அல்லது ஆரம்ப கால பல்லவர் சிற்பங்கள் என வகைப்படுத்துகிறார். காஞ்சி கைலாசநாதர் கோவிலிலேயே நான்கைந்து இடங்களில் ஜேஸ்டையின் சிற்பம் காணப்படுகின்றன. தமிழகத்தில் வழிபாட்டிலுள்ள கோவில்களில் ஜேஸ்டையின் சிற்பம் அதிகம் காணப்படுவது இந்த கோவிலில் தான் (பொ.யு. 7 ஆம் நூற்றாண்டு).

தமிழகத்தில் சங்க காலம், அதன் பின்னான சங்கம் மருவிய காலம் வரை மூதேவி வழிபாடு பற்றி எந்தவித நேரடி இலக்கிய சான்றுகளும் கிடைக்கவில்லை. ஆனால் மூதேவியின் சிற்ப அமைதிக்கு இணையான பெருத்த வயிறு, அழகிய நீண்ட மூக்கு, கீழுதடு பெருத்து, முலை தொங்கியபடி காணும் சிற்பங்களும், அதற்கு பழையோள் என்று இலக்கிய சான்றுகளும் உள்ளது என வேதாசலம் குறிப்பிடுகிறார். வேதாசலம் இந்த பழையோள் என்னும் தெய்வத்தையும், மூதேவியையும் இணைக்கும் புள்ளி சுவாரஸ்யமானது.

பழையோள் என்று சங்க இலக்கியங்களில் காணப்படும் தெய்வத்தின் பொருளென்பது அனைத்திற்கும் மூத்தவள், மூத்தோள் என்னும் பொருளிலேயே வழிபடப்பட்டுள்ளது. பிற்காலத்தில் வலுவாக உருவாகி வந்த வைதீக மரபின் தாக்கத்தால் மூத்த தேவியாக வழிபடப்பட்டவள், லட்சுமிக்கு மூத்தவள் என்னும் பொருளில் மூதேவியாக மருவிய சித்திரத்தைக் காணமுடிகிறது.

முன்னர் கூறியது போல் பல்லவர் காலத்திற்கு முன்பு உள்ள சிற்பங்களில் காணப்படும் செல்வப் பேழையை கையில் ஏந்திய சிற்பங்கள். அதற்கு ஆதாரம் சேர்க்கும் வகையில் சமகால சடங்கினையும் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் மட்டும் இந்த விசித்திர வழக்கம் பின்பற்ற வந்திருக்கிறது. மூல சந்நிதியில் அம்மனுக்கு வழங்கப்படும் குங்குமத்தை அங்கே நெற்றியில் அணிந்துக் கொள்ளும் வழக்கம் இருக்கவில்லை. மாறாக, பெண்கள் கோவிலின் பின்பக்கம் சென்று வடக்குப்புறமுள்ள ஜேஸ்டையின் தொடையில் அக்குங்குமத்தை இட்டு அதனை நெற்றியில் அணிந்துக் கொள்ளும் மரபு சமகாலம் வரை இருந்திருக்கிறது என தொல்லியல் அறிஞர் கே.ஆர். சீனிவாசன் எழுதிய இவ்வழக்கத்தை சான்றாக ஆசிரியர் நூலில் முன்வைக்கிறார்.

இதன் மூலம், ஒன்று, தமிழ்நாட்டில் மூதேவி வழிபாடு வழக்கமாக இருந்துள்ளது அறிய முடிகிறது.

இரண்டாவதாக, ஜேஸ்டாதேவியின் கோவிலுக்கு அரசர்களும், வணிகர்களும் அளித்த நிவந்தங்கள் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் திருச்சி அருகே உள்ள முற்காலசோழர் சிவன் கோவிலிலும், திருவையாறு ஐயாறப்பன் கோவிலில் உள்ள சிற்றாலயத்தில் ஆதித்த சோழனின் மனைவி நந்தாவிளக்கு எரிப்பதற்குக் கொடுத்த தானமும், பல கோவில்களில் வணிகர்கள் அளித்த தானமும் கொண்டு அறிய முடிகிறது.

4

ஆசிரியரின் ஆய்வு படி வடஇந்தியாவில் ஜேஸ்டையின் சிற்பங்கள் எதுவும் கிடைக்கவில்லை. முரணாக, வடஇந்தியாவில் எழுதப்பட்ட அனைத்து ஆகம நூல்களிலும், இலக்கியங்களிலும் ஜேஸ்டாதேவி பற்றிய குறிப்புகள் நிறைந்து கிடைக்கின்றன. விஷ்ணு புராண நூலான விஷ்ணுதர்மோத்திரம், வைணவ ஆகம நூலான வைகானச ஆகமம் ஆகிய நூல்கள் ஜேஸ்டையை கையில் தாமரை மலர் ஏந்தியவள் என்றும், கருமை நிறம் கொண்டவள் என்றும் குறிப்பிடுகிறது. விஷ்ணுதர்மோத்திரத்தில் இரத்தஜேஸ்டா, நீலஜேஸ்டா என இரு ஜேஸ்டாதேவியின் குறிப்புகள் உள்ளன. இரண்டும் போர் வீரர்கள் வழிபட்ட தெய்வம் எனக் குறிப்புகள் மூலம் அறியமுடிகிறது. சைவ ஆகம நூலான பூர்வகாரணாகமத்தில் கையில் நீலோத்பவ (அல்லி) மலர் ஏந்தியவளாகக் குறிப்பிடப்படுகிறாள்.

ஜேஸ்டை

கீழதிகாரம் போன்ற நூல்கள் ஜேஸ்டாதேவி கோயில் இருக்கும் இடத்தையும் அவளுக்கு கோவில் அமைக்கும் இடத்தையும் பற்றி கூறுகின்றன. மகாபாரதத்தில் வனப்பருவத்தில் அலெட்சுமி அசுரர்களுடன் இருப்பவள் என்ற குறிப்பு உள்ளது. லிங்கபுராணம் போன்ற சைவ புராண நூல்களும், புத்த ஜாதக கதைகளிலும் ஜேஸ்டாதேவி பற்றிய குறிப்புகள் உள்ளன.

இத்தனை இலக்கிய குறிப்புகள் இருந்தும் ஒரு சிற்பம் கூட கிடைக்கப்பெறாததற்கு ஆசிரியர் கூறும் கருத்தென்பது வட இந்தியாவில் ஜேஸ்டாதேவியின் வழிபாடு பெரும்பாலும் ஒரு நாள் சிற்பமாக வடித்து வழிபட்டு அதனை அழித்துவிடும் வழக்கம் கொண்டிருக்கின்றனர். ஆடி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் அல்லது லட்சுமி பூஜை நிகழும் நாட்களில் அலெட்சுமிக்கென்று தனியாக வீட்டிற்கு வெளியே பூஜையை நிகழ்த்துகின்றனர். கார்த்திகை மாதம் தீபாவளியை அடுத்து வரும் நாட்களில் அலெட்சுமி ஊருக்குள் வந்துவிடக்கூடாது என எருமை அல்லது காளையைப் பலி கொடுக்கின்றனர்.

புத்த ஜாதக கதையில் நாட்டின் அமைச்சராக பிறக்கும் போதிசத்வரிடம் அரசன் தன் அரசவையில் ஒரு இருக்கையை உருவாக்கி அதில் அமர தகுதியானவரை கண்டறியும் படி கேட்கிறான். இதனை அறிந்த காளக்கன்னி என்னும் பெயர் கொண்ட அலெட்சுமியும், லட்சுமியும் வருகின்றனர். இருவரின் பண்புகளையும் கேட்டறிந்த போதிசத்வர் லட்சுமியை இருக்கையில் அமரும் படி வேண்டுகிறார்.

வட இந்தியாவில் முற்றாக விலக்கப்பட்ட ஜேஸ்டை தமிழ்நாட்டில் சிறப்பாக வழிபாடு பெற்றிருக்கிறாள் என கல்வெட்டு, இலக்கிய சான்றுகள் முன்வைக்கின்றன. தமிழகத்தில் மூன்று நிலைகளில் ஜேஸ்டாதேவியின் வழிபாடு நிகழ்ந்துள்ளது,

  1. ஜேஸ்டாதேவிக்கு என தனிக் கோவில் அமைக்கும் வழக்கம் எப்போதும் இருந்துள்ளது. இன்று கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் அமைந்த திரசு என்னும் ஊரில் ஜேஸ்டைக்கு தனிக்கோவில் உள்ளது. கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம், சிறுகோபுரம் என அண்மைகாலத்தில் கட்டப்பட்ட இக்கோவிலில் பொ.யு. 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜேஸ்டையின் சிற்பம் கருவறையில் வழிபாட்டில் உள்ளது.
  2. ஜேஸ்டை சிவன் கோவில்களில் எட்டு பரிவார தெய்வங்களில் ஒன்றாக வழிபடப்பட்டுள்ளாள். அதற்கான எச்சங்கள் இன்றும் தமிழகத்தில் பல கோவில்களில் காணக்கிடைக்கின்றன. முன்னர் சொன்னது போல் காஞ்சி கைலாசநாதர் கோவிலில் ஜேஸ்டையின் அழகிய சிற்பங்கள் இன்றும் கோஷ்டத்தில் உள்ளன.
  3. மூன்று, கல்வெட்டு கூறும் ஆதாரமென்பது ஜேஸ்டை என்றும் வழிபடக் கூடாத தெய்வமாக இருந்ததில்லை. அரசராலும், வணிகர்களாலும் நிவந்தம் அளிக்கப்பட்டு வழிப்பாட்டில் இருக்கும் தெய்வமாகவே கல்வெட்டு ஆதாரங்கள் நமக்கு கூறுகின்றன.

சுவரஸ்யமாக, வைணவ கோவில்கள் எதிலும் ஜேஸ்டையின் சிற்பம் காணப்படவில்லை. சைவக் கோவில்களில் மட்டுமே ஜேஸ்டையின் சிற்பம் உள்ளது. வடஇந்திய தொன்மத்தில் பாற்கடலை கடைந்த போது முதலில் அலெட்சுமியே வருகிறாள். இரண்டாவதாக லட்சுமி தோன்றுகிறாள். விஷ்ணு லட்சுமியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார். லட்சுமி மூத்தவள் இருக்கும் போது இளையவள் திருமணம் செய்து கொள்ள முடியாது என அதனை மறுக்கிறாள். விஷ்ணு அலெட்சுமியை முதலில் திருமணம் செய்து கொள்கிறார். பின் விஷ்ணு அலெட்சுமியை வாதாளமுனிவரிடம் இருக்கும்படி சொல்லிவிட்டு லட்சுமியைத் திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு பிறக்கும் குழந்தையே மாந்தன்.

இதற்கு முரணாக தென்னிந்திய வைணவ புராணங்களில் ஜேஸ்டை முற்றிலும் விலக்கப்பட வேண்டியவளாகவே சித்தரிக்கப்படுகிறாள். கம்ப ராமாயணத்தில் கூட சீதையை லட்சுமி என்றும், கைகேயியை அலெட்சுமி என்றும் குறிப்பு வருகிறது. சீதை அயோத்தி நகர் நீங்கிய போது நகரில் லட்சுமி நீங்கி அலெட்சுமி குடிக் கொண்டாள் என்னும் சித்திரத்தை கம்பன் அளிக்கிறார். பிற வைணவ இலக்கியங்களும் செல்வத்தை வேண்டி ஜேஸ்டையிடம் செல்லாமல் பெருமாளை வேண்டுவோம் என்ற குறிப்பையே அளிக்கின்றனர்.

மாறாக சைவ இலக்கியங்களில் மூதேவியை வழிபடப்பட வேண்டியவள் என்றும், நற்பண்புகள் கொண்ட காகத்தைக் கொடியாகக் கொண்டவள் என்றும் குறிப்புகள் உள்ளன (மாணிக்கவாசகரின் திருக்கோவையாரில் இக்குறிப்பு உள்ளது). மூதேவி சேட்டை செய்பவள் என்ற குறிப்பு முதலில் வருவது தேவாரத்தில் தான் என்பது கவனிக்கத்தக்கது.

வெ. வேதாசலம்

இந்த சைவத்தின் ஏற்பும், வைணவத்தின் விலக்கமும் ஒரு விதத்தில் புரிந்து கொள்ள முடிகிறது. தென்னிந்தியாவில் சாக்த மரபு பெரும்பாலும் சைவத்துடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. வைணவத்துடன் மிக குறுகிய இணைப்பே காணக்கிடைக்கிறது. ஜேஸ்டை சிவன் கோவில்களில் மட்டும் பரிவார தெய்வமாக இருப்பதற்கும், வைணவ இலக்கியத்தில் இல்லாத அந்தஸ்து சைவ இலக்கிய நூல்களில் கிடைப்பதற்கும் இதுவும் காரணமாக இருக்கலாம்.

5

இறுதியாக நாட்டார் மரபில் ஜேஸ்டையைப் பற்றிய குறிப்புகளை முழுவதுமாக ஆசிரியர் தொகுத்து அளிக்கிறார். நாட்டார் பழமொழிகளிலும், கதைகளிலும் ஜேஸ்டை அமங்கலத்தின் கடவுளாகவே சித்தரிக்கப்படுகிறாள். சங்கரன்கோவிலில் மழையை வேண்டி நிகழ்த்தும் மழைச் செம்புச் சடங்கில் பெண் ஒருத்தியை ஜேஸ்டையாக்கி அவளை துரத்தி ஊர் எல்லையில் நிறுத்தினால் மழை வரும் என நம்பப்படுகிறது. அதன்படி மழையில்லாத காலங்களில் மூன்று பூப்பெய்தாத சிறுமியர்கள் மழைக்காக மூன்று சொம்புகளை நிறைத்து அதில் நீரில்லாத சொம்பை அப்பெண்ணிடம் கொடுத்து அவளை ஊர் எல்லை வரை துரத்துக்கின்றனர்.

ஆனால், தமிழக மக்கள் வரலாற்றில் எப்போதும் மழை பெய்தால் அசௌகரியம் அடைபவர்களாகவே இருந்துள்ளனர் என்பதற்கு சீதேவி, மூதேவியை வைத்து பழமொழி ஒன்று வழக்கில் உள்ளது.

“பலநாள் மூதேவியைத் தாங்கலாம் ஒருநாள் சீதேவியைத் தாங்க முடியாது”  

என்னும் குறிப்பின் மூலம் ஒரு நாள் மழை வந்தாலும் தாங்க முடியாது என்ற நிலையிலேயே தமிழக மனநிலை இருந்துள்ளது.

இப்படி நாட்டார் மரபிலிருந்த ஜேஸ்டையை விலக்கும் தன்மையை வைதீக மரபு எழுந்து வந்த காலத்தில் தங்கள் மதத்தை பரப்புவதன் பகுதியாக எடுத்தாண்டிருக்கலாம். அவை காலப்போக்கில் வளர்ந்து பொ.யு. 14 ஆம் நூற்றாண்டிற்கு பின் ஜேஸ்டாதேவியின் வழிபாடு அருகியிருக்கலாம். எதுவானாலும், தமிழகத்தில் ஜேஸ்டாதேவியின் வழிபாடு வளமையாக இருந்தது என வேதாசலத்தின் இந்த நூல் காட்டும் தகவல்களின் மூலம் அறியமுடிகிறது.

ஜி.எஸ்.எஸ்.வி. நவின்

பழையோள் என்னும் தெய்வம் பெண் தெய்வ வழிபாட்டில் அனைத்து தெய்வங்களுக்கும் மூத்தவளாக வழிபடப்பெற்று அவளே செல்வத்தை வழங்குபவளாகவும், அவளே அமங்கலத்தின் கடவுளாகவும் இருந்திருக்கலாம். பின் வைதீக மரபின் எழுச்சியால் புராணங்களில் ஜேஸ்டை தனி சிறு தெய்வமாக மாறி பரிவார தெய்வங்களில் ஒன்றாக அமைந்திருக்கலாம். வரலாற்றில் தெய்வத்தின் பரிணாம வளர்ச்சியையோ, வீழ்ச்சியையோ யாராலும் அறுதியிட்டு சொல்லிவிட முடியாது. ஆனால் வரலாற்றின் சரடில் அனைத்து புள்ளியிலும் ஜேஸ்டையை மட்டும் கோர்த்துப் பார்க்கும் நூலாக ‘வரலாற்றில் ஜேஸ்டாதேவி மூதேவி வழிபாடு’ நூல் முன்னோடி முயற்சியே.

***

One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *