நிலா என்றானவள் – எலிஃப் ஷஃபாக்
(தமிழில் மதுமிதா)
(Moon Woman என்ற ஆங்கில கட்டுரையின் தமிழ் மொழியாக்கம்)

1862 ஆம் வருடம் லியோ டால்ஸ்டாய் தன்னை விட பதினாறு வயது இளையவரான சோஃபியா ஆன்ட்ரீவ்னா பெர்ஸ்ஸை மணந்தார். பிற்காலத்தில் படுதோல்வி அடைந்ததாதாக கருதப்பட்டாலும் ஆரம்ப நாட்களில் பெருங்காதலும் உணர்வுச்சங்களும் நிறைந்ததாகவே அவர்களின் ஆரம்ப வாழ்க்கை இருந்தது. அவர்கள் இணையாக ஒன்றாக சிரித்த காலம் என்றும் ஒன்று இருந்தது, கட்டற்ற வேகத்தில் ஓடும் குதிரையை போல டால்ஸ்டாயும், புல்வெளியில் மென்னடையிடும் வடவையென சோஃபியாவும். அவர்களுக்கு பதிமூன்று குழந்தைகளை ஈட்டித் தந்தது அந்த உறவு (சிலர் பத்தொன்பது என்றும் சொல்வது உண்டு). அதில் ஐந்து குழந்தைமையிலேயே இறந்தன. மீதி எட்டு குழந்தைகளையும் (அல்லது பதினான்கு) சோஃபியா வளர்த்தெடுத்தார். அவர் தன் இளமையின் பெரும் பகுதியை கருவிலோ முலையிலோ குழந்தைகளை சுமந்தே கழித்தார்.
விண்மீன் நிறைந்த வானத்தில் ஒளி சிந்தியபடி நிலவென அவர் இருந்தார். அவரது உடல் மாற்றங்கள் கண்டது, ஒவ்வொரு நாளின் துளிகளிலும், வாரங்களிலும், மாதங்களிலும், திரண்டு வளர்ந்து முழு மதியென முழுமை கொண்டது. பின் பிறை நிலவென சுருங்கியது, மீண்டும் முழுமை கொள்ளவே. சோஃபியா நிலா என்றானார்.
அவரது அறையில் டால்ஸ்டாய் எண்ணெய் விளக்கொளியில் எழுதிய போது, சோன்யா (ரஷ்ய முறையில் சோஃபியா என்ற பெயரின் சுருக்கம்) குழந்தைகள் அவரை தொந்தரவு செய்யாதபடி பார்த்து கொண்டார். அவரது நாட்குறிப்பான்கள் அந்த அற்பணிப்பிற்கு சாட்சியாய் நிற்கிறது. எழுதக் கூடாது என்று தன்னை எக்காரணம் கொண்டும் வற்புறுத்தக்கூடாது என்று டால்ஸ்டாய் அவரை கேட்டுக்கொண்ட போது, அது அவருக்கு ஆச்சரியத்தையே ஏற்படுத்தியது, “அப்படி எவ்வாறு நான் கேட்க முடியும்? அவ்வாறு கோர எனக்கு என்ன உரிமை உள்ளது?” என்றே தனது நாட்குறிப்பானில் எழுதுகிறார். இரவு மாற்றி இரவு, வருடம் மாற்றி வருடம், அவரது எழுதும் பணியை அவருக்கு இலகுவாக்கி கொடுக்கவே சோஃபியா கடுமையாக உழைத்தார். குழந்தைகளை பேணும் நேரம் போக மீதி சமயங்களில் அவரது கணவருக்கு திறன் வாய்ந்த உதவியாளராக, மேற்பார்வையாளராக செயல்பட்டுள்ளார். அவரது “போரும் அமைதியும்” நாவலுக்கு வெறும் குறிப்புகள் எழுதுவதோடு நில்லாது, அதை ஏழு முறை முழுதாக மீள மீள எழுதியுள்ளார். ஒரு முறை உடல் நலம் குன்றி அவர் கருவை இழந்த பொழுதும் தனது உடல் நலக்குறைவால் அவரது கணவர் எழுத்து பணிக்கு தடங்கல் ஏற்பட்டு விடக்கூடாது என்றே கவலை கொண்டிருக்கிறார். தனது கணவருக்கு ஊக்கமளித்து, ஈடுபாடு கொண்டு, உதவி புரிந்தார் – பின் நாட்களில் அவர்கள் இருவருக்கும் இடையில் உண்டான வெறுப்பின் ஆழத்தில் நின்று இதை உணர்ந்து கொள்வது எளிதல்ல.
அதன் பின், டால்ஸ்டாய் தனது அற்புதமான அன்னா கரனீனா நாவலை எழுதினார். இலக்கிய உலகில் கணக்கில்லா முறை மீள் சுட்டப்படும் வரிகளுடன் அந்த நாவல் தொடங்குகிறது, “நிறைவான குடும்பங்கள் அனைத்தும் ஒரு போலவே இருக்கின்றன, ஆனால் நிறைவில்லா குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான நிறைவின்மையுடன் இருக்கின்றன.” எந்த அளவிற்கு டால்ஸ்டாயின் தனி வாழ்க்கை அந்த நாவலின் பேசு பொருளை கட்டமைத்தது என்பதே இலக்கிய வரலாற்று ஆய்வாளர்களும், ஆளுமைகளின் சரிதம் எழுதுவோரும் ஆர்வத்துடன் முன் வைக்கும் கேள்வி. எந்த அளவிற்கு டால்ஸ்டாயின் தனி வாழ்க்கையின் மீது, தனது திருமணத்தின் மீது, தனது மனைவியின் மீது அவருக்கு இருந்த அச்சம், ஆன்னா கரனீனாவை சென்று அடைந்தது? ஒரு வேளை வெறும் இருபத்தி எட்டு வயதான தனது மனைவிக்கு ஒரு எச்சரிக்கையாக, வாழ்க்கை பாடமாக, அன்று நாற்பத்தி நான்கு வயதான டால்ஸ்டாய் அதை எழுதி இருக்கலாம். மணம் மீறிய உறவில் ஈடுபடும் பிரபு குல பெண் ஒருத்தியின் அவல விளைவுகளை முன்னிறுத்தி அவர் தனது மனைவிக்கு பாடமாக ஆக்க முயன்றிருக்கலாம்.
ஒரு மணமான பெண்ணின் பிறழ்வை காட்டிலும் கொடுங்குற்றம், அந்த உறவு ஏதோ கண் காணாத மலை முகடுகளின் இடுக்குகளில் நிகழாது, வெட்ட வெளியில் அனைவரும் அறிய நாகரீகம் நிறைந்த பெருநகரின் மத்தியில் நிகழ்வது தான். அன்னா கரனீனா நாவலின் அலக்ஸீ அலக்ஸான்ட்ரோவிட்ச், முதல் முறை தனது மனைவியை எச்சரிக்கையில் இதை வெளிப்படையாகவே சொல்கிறான்: “நான் உனக்கு ஒன்றை மட்டுமே சொல்கிறேன், பின் விளைவுகளை சிந்திக்காது உனது கட்டற்ற போக்கினால் நாளை நீயே உன்னை இந்த சமூகத்திற்கு பேசு பொருளாக ஆக்கிக் கொள்ளப் போகிறாய்.” தனது கணவனை அன்றி இன்னொரு ஆண் மீது கொள்ளும் பற்றுதலால் அல்ல, அந்த உண்மை உலகுக்கு தெரிவதாலேயே அந்த பெண் கை மீறி போனவளாக ஆகிறாள்.
இல்லையெனில், ஒரு வேளை டால்ஸ்டாய் தனது மனைவிக்காக அல்லாமல் தனது வளரும் மகள்களுக்கான நீதிக்கதையாக அந்த நாவலை உருவகித்திருக்கலாம். ஆனால் விந்தையாக, அந்த நாவல் அவரது மனதில் தான் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரை அது ஒரு தீவிர அறக் குழப்பத்தில் கழலுற செய்தது, அதை தொடர்ந்து அவ்வாறான பல குழப்பங்கள். இவை அனைத்தும் அவரை வேறு வகையான இருத்தல் பற்றிய கேள்விகளுக்கு இட்டுச்சென்றன. சொல்லப்போனால் அவ்வகையான இருத்தலியக் கேள்வி ஒன்றே அவரது திருமணத்தின் அடித்தளத்தை தாக்கியது.
கடந்து சென்ற நிகழ்வுகளை எந்த நோக்கில் ஆராய்ந்தாலும் ஒன்று நிச்சயம் உண்மை: நன்றோ தீதோ, சோஃபியா எந்த வகையிலும் நாவலின் கதாநாயகி அன்னாவை பின்பற்ற தகுந்த ஒரு ஆளுமையாக கொள்ளவில்லை. கத்தரிப்பூ வண்ண உடைகள் அணியும், ஆங்கில நாவல்களின் கதாநாயகியாகவே ஆகிவிட எண்ணும், சிறார் நூல்கள் எழுதும், அகிபீனா புகைக்கும் அந்த கதாபாத்திரம், சோஃபியாவின் சில சாயல்களை கொண்டிருந்தாலும், அது சோஃபியா அல்ல. அவரது கணவரின் மனதில் ஊறிய எண்ணிலடங்கா அச்சங்களையும் மீறி, சோஃபியா அவரை கை விடவும் இல்லை, வேறு ஒருவரை காதலிக்கவும் இல்லை. சொல்லப்போனால், அவர் தனது கணவரை சற்று அதிகமாகவே நேசித்தார் என்று சொல்லலாம். அது அவரை கொந்தளிப்புகளின் உச்சிக்கு இட்டுச் சென்றது. ஒவ்வொரு வருடமும் அவருக்கு ஒரு குழந்தையை கொடுத்தது. அந்த குழந்தையுடன் அவருடைய எரிச்சலும் சாலிப்பும் ஒரு படி கூடியது, அப்படியே அவர்களின் மண வாழ்வு ஒரு அடி பின்நகர்ந்தது.
ஒரு தூசுக்கு கூட சமானம் ஆகாத சிறு சிறு குழப்பங்களால் அவர்களின் இருவர் இடையிலும் அனுதினமும் கொடும் சொற்கள் வெடித்து கொப்பளித்தன, அவர்கள் இருவரையும் சோர்வுற செய்தன. அந்த கொப்பளிப்பின் புகையின் ஊடே அவர்கள் பல வருடங்கள் தங்கள் வாழ்வை தொடர்ந்தனர். காமம் இருந்துகொண்டு தான் இருந்தது, மீட்டெடுத்து அவர்களை அவர்களே கண்டு கொள்ள, ஆனால் அதுவும் ஒரு நாள் இல்லாமல் போனது. அதுவும் சோஃபியாவை விட அவருக்கு என்று தான் சொல்ல வேண்டும், அந்த புகை மூட்டம் தெளியத் தெளிய அதில் துலங்கி வந்த மெய்யை டால்ஸ்டாயால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
அவரது மனைவியின் அகத்தை நோக்கிய டால்ஸ்டாய் கண்டுகொண்டதெல்லாம் இளமையும், ஆசையும், விடாயும், அவருக்கு அது ஏமாற்றத்தையே அளித்தது. சோஃபியா அவரது கணவரின் ஆன்மாவில் கண்டது அகங்காரமும், அதன் ஊடே சிதறிய விதைகளென தெரிந்த பரோபகாரமும். அது எந்தத் அளவிற்கு அவர்கள் வாழக்கையை பாதிக்கும் என அவர் அப்போது ஊகிக்கவில்லை. டால்ஸ்டாய் சோஃபியாவை கண்டு வியந்தார், எப்படி ஒரு உயர் குடியில் அனைத்து சுகங்களும் கொண்டு வளர்ந்த ஒருவரால் இன்னும் உலகியல் ஆசைகளை கொண்டிருக்க முடியும்? அதே போல சோஃபியாவும் டால்ஸ்டாயை கண்டு வியந்தார், எப்படி எல்லா விதங்களிலும் அவரது சொற்களே வேதம் என்று கொண்டு எல்லா மதிப்புகளும் கொடுக்க படும் ஒருவரால், அவளை அன்றி வேறு ஒன்றை, அது அவரது எழுத்தோ இல்லை கடவுளோ, எதுவானாலும், அதை எப்படி நேசிக்க முடியும்?
ஃப்ராங்கன்ஸ்டீனை போல தான் உரு கொடுத்து படைத்த ஒன்றை தானே ஒழிக்க முடியாமல், டால்ஸ்டாய் தான் மணந்து வந்த அந்த பெண்ணை எப்போதும் வீண் வாதம் செய்யும், எரிச்சலும் சோகமும் மட்டுமே உருவான ஒரு மனைவியாக மாற்றியிருந்தார்.
சிறிது காலம் பொறுமையாக சகித்துக் கொண்டார், ஆனால் அவரது பொறுமை வடிந்து முடிந்தது. தனது மகள் அலெக்ஸாண்டரா ல்வோவ்னாவுக்கு முறையிட்டு கடிதம் எழுதுகிறார், “எப்பொழுதும் வேவு பார்த்தும், ஒட்டுக்கேட்டுக்கொண்டும், ஓயாது புலம்பியும், என்னை அதிகாரம் செய்து கொண்டும், அவள் எண்ணம் போல.. ” அதே மூச்சில் சோஃபியாவிடம் இருந்து விடுதலை வேண்டும் என சொல்கிறார். சட்டென, வன்மையாக, மீள முடியாத தூரத்தில் அவர் தன்னை தன் மனைவியிடம் இருந்தும், அவளுடனான எல்லா விதமான தொடர்பிலிருந்தும் பிரித்து எடுத்துக் கொண்டார்.
பிறகு ஒரு நாள் அவர் கிளம்பிச் சென்றார். அன்று ஒரு நாள் மதியம், பல நாட்களுக்கு பின் முதல் முறையாக, அவர் விடுதலையை சுவைத்தார். வெறும் அரூபமாக தற்காத்துக்கொள்ள வேண்டிய ஒரு சிந்தனையாக இல்லாமல் உண்மையாக மிக அண்மையில் தொட்டு விடக்கூடிய தூரத்தில் இருக்கும் ஒரு பிரஞ்கையாக. அவர் நடந்தார், குதித்தார், ஓடினார். அன்று வரை யாரும் கேட்டறியாத பாடல்கள் பலவற்றை உச்ச ஸ்தாயியில் பாடினார். அருகிருந்த வயல்வெளிகளில் வேலை செய்து கொண்டிருந்த உழவர்கள் அன்று ரஷ்யாவின் பெருமதிப்பிற்குறிய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் ஒன்றன் பின் ஒன்றாக சிறுபிள்ளைத்தனம் செய்து சுற்றுவதை கண்டனர். அவர்களின் கேள்வி கேட்காத அமைதிக்கு பரிசளிக்க எண்ணியோ என்னவோ அன்று மாலையே தனது அனைத்து சொத்துகளையும் ஏழை, எளியவருக்கு கொடுப்பது என்று முடிவெடுத்தார் டால்ஸ்டாய். அரச குலத்தில் பிறந்து, உலகம் அறியாது வளர்க்கப்பட்ட அந்த மனிதன் தனது பிறப்பின் மூலம் ஈட்டிய அத்தனை சுகங்களையும் விட்டுவிட தயார் ஆனார்.
அதை அந்த வீட்டின் தலைவி சோஃபியா கேட்ட போது அதிர்ந்து போனார். ஒரு முட்டாள் மட்டுமே இதை செய்ய முடியும், அவருக்கு நிச்சயமாக தெரிந்தது, அதுவும் பேணுவதற்கு மனைவியும் பிள்ளைகளும் இல்லாத ஒரு முட்டாள். வெகு சில நாட்களிலேயே, சோஃபியாவின் பெரும் ஏமாற்றத்திற்கு வழி செய்து, டால்ஸ்டாய் தான் உலக வாழ்வில் இருந்து விலகுவதாக வெளிப்படையாக அறிவித்தார். அனைத்தையும் கொடுத்தார், தனது செல்வத்தை, நிலங்களை. அவர் மிகவும் விரும்பிய பெரு விருந்துகளை அடியோடு புறக்கணித்தார், ஊண் உண்பதை விட்டார், வேட்டையாடுவதையும் அது அருந்துவதையும் கைவிட்டார், அவரது கிராமத்தில் கைவேலை செய்பவராக மாறினார்.
சோஃபியா இந்த அனைத்து மாற்றங்களையும் பீதியுடன் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் மணந்த கணவான், அவர் நேசித்த எழுத்தாளர், தனது குழந்தைகளின் தந்தை மறைந்தே போயிருந்தார், இப்போது இருந்தவர் கிடைத்ததை உடுத்திக் கொள்ளும், உடலில் சொறிகள் நிறைந்து நிற்கும் ஒரு நாட்டுப்புறத்தான். அந்த அவமதிப்பு அவரை ஆழமாய் தாக்கியது.
டால்ஸ்டாயின் புதிய பழக்கவழக்கங்களை அவர் தீர்வு காணமுடியாத உடல் நலிவை போல கருதினார், “இருள் நிறைந்தவை” என்று கூறினார். பதட்டத்தில் கடித்து அவரது உதடுகள் புண் ஆகின, இறுக்கிய உதடுகள் முதிர்ந்த தோற்றத்தை தந்தன, மீள மீள நரம்பு அதிர்ச்சியினால் தாக்கப்பட்டார். ஒரு நாள் அவரது மகன் லெவ் அவரிடம் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறாரா என்று கேட்டான். அந்த மிக எளிமையான வெகு குழப்பமான கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் துணுக்குற்று பின் தான் மகிழ்ச்சியாக இருப்பதாக சொன்னார் சோஃபியா. “பிறகு ஏன் நீ பார்க்க ஏதோ பறிகொடுத்தவள் போல இருக்கிறாய்?” என்று கேட்டான் மகன்.
முதிர்ந்து தொகுத்து கொண்ட அவர்களின் தனித்தனி ஆளுமைகளை அவர்களின் இளமைக்கால காதலால், அது மிகவும் ஆழமானது என்ற போதும் கூட, விரிந்து ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் இடையில் இறுதியில் நிலைத்தது ஆறாத ரணம் என்றான பரஸ்பர கோபமும், கசப்பும் மட்டும் தான்.

இறுதியில், 1910 ஆம் ஆண்டு, தனது மனைவியை தனது உயிலில் இருந்து விலக்கி விட்டு, தனது நூல்களின் பதிப்புரிமையை தனது பதிப்பாசிரியருக்கு கொடுத்து விட்டு, டால்ஸ்டாய் நிமோனியா காய்ச்சலில் விழுந்தார். தனது மனைவியின் வாழ்க்கையில் இருந்தும் ஒளிந்தும் மாறி மாறி ஆடி மறைந்ததை போல, நோயின் பிடியில் அவரது சித்தம் நினைவிலும் அது தப்பியும் மாறி மாறி ஆடியது. வீட்டில் இறுதியாய் ஒரு முறை கோபம் கொண்டு சண்டையிட்டு, அவர் தஞ்சம் புகுந்த ஏதோ ஒரு ரயில் நிலையத்தில் டால்ஸ்டாய் உயிர் துறந்தார். உண்மையான மகிழ்ச்சி என்பது தனது குடும்பத்தில் ஒருவருக்கு கிடைப்பதே என்று சொல்லி தனது இலக்கிய பயணத்தை தொடங்கிய ஒரு இலக்கியவாதியின் வாழ்க்கை அவர் அதே குடும்பத்திடம் இருந்து விலகி எங்கோ சென்று இறந்தத்தில் முடிந்தது என்ற முரண் அவர் வாழ்க்கைக்கு தக்க குறியீடு,
சோஃபியாவை வெறும் மனைவியாகவும், அன்னையாகவும் மட்டுமே உலகம் பல காலம் கருதியது. டால்ஸ்டாயின் படைப்புகளுக்கு அவர் செய்த ஈடில்லா பணிகள் புறக்கணிக்கப்பட்டன, சிறுமைபடுத்தப்பட்டன. அண்மையில் தான் அவரை வேறு கண்ணோட்டங்களில் ஆராய முற்படுகிறோம் – நாட்குறிப்பாளராக, அறிவார்ந்தவராக, கூர்மையான நிர்வாகத்திரன் கொண்டவராக. தன்னலம் கருதாத பெண் ஒருவரின் பன்முகங்கள் கொண்ட திறமைகளையும் யதார்த்ததில் அவர் அடைய முடியாமல் போன கனவுகளையும் உணர்ந்து கொள்கிறோம்.
*

சோபியாக்கும் டால்ஸ்டாய்க்குமான உறவும் அதன் விரிசலும் எனக்கு எப்போதுமே வியப்பை தருவது.
“முதிர்ந்து தொகுத்து கொண்ட அவர்களின் தனித்தனி ஆளுமைகளை அவர்களின் இளமைக்கால காதலால், அது மிகவும் ஆழமானது என்ற போதும் கூட, விரிந்து ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் இடையில் இறுதியில் நிலைத்தது ஆறாத ரணம் என்றான பரஸ்பர கோபமும், கசப்பும் மட்டும் தான்.”
மிக ஆழமான காதல் சில நேரம் ஆறாத ரணத்தையும் கொடுத்து விடுகிறது போல.
மதுமிதாவின் மொழிபெயர்ப்பு அருமை.