வெளியேறிக் கொண்டேயிருப்பவள் – ரம்யா
(ப.சிவகாமியின் புனைவுலகை முன்வைத்து)

ஓர் உயிர் தன்னை “நான்” என மண்ணில் உணர ஆரம்பித்த இடத்திலிருந்து மெல்ல மெல்ல உறவுகள், குடும்பம், சமூகம், நாடு என பலதரப்பட்ட கட்டமைப்பின் வழியாக அதற்கான வரையறைகளை உணர ஆரம்பிக்கிறது. பகுத்தல் என்ற செயல்முறை வழியாகவே இந்த வரையறைகள் நிகழ்கிறது. அவை பெரும்பாலும் தனி உயிரின் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. அது பிறக்கும் காலத்திற்கு முன் நிகழ்ந்த அத்தனை செயல்களாலும் உயிர் கட்டப்படுகிறது. நினைவறிந்து முதலில் அது சந்திப்பது பால் பாகுபாடாகவே இருக்க முடியும். பின்னர் சாதி, மதம், பணம்/வறுமை, அதிகாரம் என அப்பட்டியலின் நீளம் அதிகம். இந்தப் பாகுபாடுகளினால் பாதிக்கப்பட்டவர்கள், சலுகையை அனுபவிப்பவர்கள் என இரு தரப்புகளாக ஒரு வசதிக்காக அவற்றைப் பிரித்துக் கொள்ளலாம். கலை-இலக்கியத்தில் இத்தகைய சலுகையை அனுபவிக்கும் தரப்புகள் இயல்பாகவே பாகுபாடுகளைக் கடந்து உயிர் முதலில் அறிந்த “நான்” என்பதை, அதற்கும் அப்பாலான தூய கலையை கண்டடைகின்றன. மிகச்சிலர் எத்தகைய பாகுபாட்டினால் உழன்றாலும் அதை மீறிக் கடந்து செல்லும் ஆற்றலை இயற்கையிலேயே கைவரப் பெற்றிருக்கின்றனர். அதை எப்போதும் பெரும் பேறாகவே கருதுகிறேன். கவிஞர்களில் அத்தகைய பேறு கொண்டவர்களைக் காண்கையில் பொறாமைப் பட்டதும் உண்டு. ஒரு முறை கவிஞர் தேவதேவன் தன் இளமைக்கால பாடுகளைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். மிகுந்த பசியில் உணவில்லாமல் இருக்கும்போது கூட கவலைப் பட்டதில்லை, அது வயிற்றில் எழுப்பும் உணர்வை, அனலைப் பார்த்துக் கொண்டிருப்பேன், அது ஒரு அழகிய உணர்வு என்று சொன்னார். இப்போதெல்லாம் தன்னை எல்லோரும் சாப்பிடவைத்துவிடுவதாக கவலை வேறு பட்டுக் கொண்டார். பசிப்பதை, தொலைந்து போவதை விரும்புபவராக இருப்பவர். எல்லாவற்றையும் அனுபவமாக விலகி நின்று பார்க்கும் பார்வையை உடையவர் என்று தோன்றியது.
ஆனால் சிவகாமிக்கு எவ்வகையிலும் இத்தகைய அமைதல் கையளிக்கப்படவில்லை. அவர் எல்லாவற்றிலிருந்தும் வெளியேறிக்கொண்டே இருக்கும் துடிப்பான இளம் ஆன்மாவாகவே நாவலிலும் வாழ்க்கையிலும் இருப்பதைக் காணமுடிகிறது. அகமாகவும் புறமாகவும் பாதிக்கப்பட்ட தரப்பைச் சேர்ந்தவராக மண்ணில் கால் வைத்த கணத்திலிருந்து உணர விதிக்கப்பட்டவர். ஆனால் எந்தவகையிலும் சோர்வுறாமல் தன்னைத் தடுக்கும் விசைகள் அனைத்தையும் கூர்ந்து அவதானிக்கக்கூடிய சிந்தனை கொண்டவராகவும், எதிர்க்கும் துணிவையும் கொண்டவராக தொடர்ச்சியாக முன் சென்றுகொண்டேயிருந்தவர்.
1980-ல் இந்தியாவின் கடினமான தேர்வுகளில் முதன்மையாகக் கருதப்படும் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் வெற்றி பெற்று இருபத்தி மூன்று வயதில் இந்திய ஆட்சிப்பணியாளராக ஆனார். அதற்கு முன்பே எழுத்துலகில் கால்பதித்துவிட்டார் எனினும் இதற்கு பின்னான கலங்களில் தான் தீவிரமான அவரின் எழுத்துப்பணிகள் ஆரம்பித்தது எனலாம். ஏதோவகையில் அவரின் வாழ்வும், களப்பணிகளும், கலைப்பணிகளும், எழுத்தும் ஒன்றை ஒன்று நிரப்புவனவாக உள்ளதால் சிவகாமி ஒட்டுமொத்த ஆளுமையாகவே இலக்கியத்திலும் புரிந்து கொள்ளப்பட வேண்டியவர். அவர் படைப்புகளை அணுக இந்த அணுகுமுறை இன்றியமையாததாகவும் ஆகிறது.
*
பதினேழு வயதில் சிவகாமி தன் முதல் சிறுகதையை எழுதினார். அவர் நாவல்கள் வழியாக சிறுகதைகளை அணுகும் வாசகர்கள் அது ஒரு காதல் கதை என்பதைக் கேள்விப்படும்போது ஆச்சர்யப்படக்கூடும். ஏனெனில் அவரின் முதல் இரு நாவல்களில் அகமும் புறமும் ஒரு சமநிலையைக் கொண்டிருந்தாலும் உண்மைக்கு முன்னும் பின்னும் நாவல் வருகையில் அவர் ஒட்டுமொத்தமாக புறத்திலுள்ள பிரச்சனைகள் அதன் நுணுக்கங்களுக்குள் சென்றுவிடுவதைப் பார்க்க முடியும். மெல்ல அந்த அகமும், அகம் சார்ந்த சிக்கல்களும், காதலும், கற்பனையும் கனவுத்தன்மையும் இல்லாமல் ஆவதை, அதில் உழலும் அவஸ்தைகள் ஏதும் இல்லாமல் வேறு ஒரு தளத்தில் இருக்கும் பிரச்சனைகளுக்குள் கதைமாந்தர்கள் சென்றுவிடுதைப் பார்க்க முடிகிறது. ஆனால் அவரின் சிறுகதைகள் அவரை வேறு ஒரு கோணத்தில் பார்க்க நம்மைப் பணிக்கின்றன.

சிவகாமியின் ஒட்டுமொத்த சிறுகதைத்தொகுப்பு 2014-ல் அடையாளம் பதிப்பகம் வெளியீடாக வந்துள்ளது. இருபத்தியெட்டு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. எந்தக் கதையும் எந்த வருடத்தைச் சார்ந்தது, எந்த இதழில் பிரசுரமானது என்ற குறிப்புகள் அதில் இல்லை என்பதால் காலரீதியில் அவற்றின் பரிணாமத்தை நம்மால் மதிப்பிடமுடியவில்லை. சிவகாமியின் முன்னுரை எங்கோ வானத்தில் தோன்றிய அசரீரியின் குரல் ஒலிப்பது போன்ற ரீதியில் அமைந்துள்ளது. ”வாழ்கின்ற நான் சிவகாமி என்ற நபராகவும்.. செரிக்க முடியாத மரண அடையாளங்களாக அந்தப் புத்தகக் குவியலுக்குள் அடக்கம்” என்ற வரி கொண்ட முன்னுரை அவர் எங்கிருந்து, எந்தத்தொலைவிலிருந்து வாழ்க்கையைப் பார்க்கிறார் என்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. சிறுகதைகளும் அத்தகைய தன்மையுடன் அமைந்துள்ளது.
நேர்காணலின் போது சிவகாமி சாருநிவேதிதாவின் எழுத்துக்களை தன் படைப்புகளுக்கு அணுக்கமாக நினைப்பதாகச் சொன்னார். அவர் சிறுகதைகளை வாசிக்கும்போது ஏன் அப்படிச் சொன்னார் என்பது பிடிபட ஆரம்பிக்கிறது. இந்தத்தொகுப்பிலுள்ள சிறுகதைகளை வடிவம், பேசுபொருள் சார்ந்து இரண்டு வகைகளாகப் பிரித்துக் கொள்ளலாம். சிறுகதைகளில் வடிவம் சார்ந்த சோதனைகளை நிகழ்த்திப் பார்த்திருக்கிறார். அந்த வகையில் முதல் வகைக் கதைகளை பின்நவீனத்துவ பாணிக் கதைகள் என வகைப்படுத்திக் கொள்ளலாம். ‘கடைசி மாந்தர்’; ‘பறவைகள் பறந்தன’; ‘ஒழுங்கு’, ‘அவள் மேகமாகிப்போனாள்’ ஆகிய கதைகளை இவற்றிற்கு உதாரணமாகச் சொல்லலாம். உதாரணமாக ‘ஒழுங்கு’ என்ற கதையில் ஒழுங்கு, ஒழுங்கின்மை இவை இரண்டைப் பற்றிய எண்ண ஓட்டங்களை, விவாதங்களை கதையாக்க முயன்றிருக்கிறார். அதில் கதையுடன் படங்கள் வரையப்பட்டிருக்கின்றன. அவை உரையாடலின் பகுதியாக வருகின்றன. ஆனால் ஒட்டுமொத்தமாக நோக்கினால் இலக்கியத்திற்குள் நுழையும் ஓர் எழுத்தாளர் தன் ஆரம்பகாலகட்டத்திலேயே கடந்து விடும் முற்றுபெறாத ஓர் உரையாடல் மட்டுமே. கதை என்ற அளவில் நிற்கவில்லையெனினும் பரிசோதனை முயற்சியில் முக்கியமானது. பின்நவீனத்துவ பாணியில் இந்த வகைக்கதைகளை எழுதிப்பார்த்த முதல் பெண் எழுத்தாளர் என்ற வகையில் மேலும் முக்கியமானது.
இதே வகைமையில் ‘அவள் மேகமாகிப்போனாள்’ கதை கவித்துவமும், தொன்மமும் கூடியதாக அமைந்துள்ளது. மேகத்தை ஒரு உயிராக பாவித்து அது பார்க்கும் வெவ்வேறு காட்சிகளின் வழியாக கதை நகர்ந்து அதன் இறுதி மேகமாகிப்போன ஒரு பெண்ணாக உருவகமாவது என ஒரு முழுமை பெற்ற முயற்சியாக வந்துள்ளது. பறவையின் வழியாக காதல், உணர்வுகள் என ஒரு ஒட்டுமொத்த வாழ்க்கைப்பயணத்தைச் சொல்லும் கதை ‘பறவைகள் பறந்தன’.
இந்தத்தொகுப்பிலுள்ள இன்னொரு வகைக்கதைகள் மனிதர்களின் வாழ்க்கை பற்றியது. ஒரு தருணம்/ ஒரு முழு வாழ்க்கையையும் மேலிருந்து பார்க்கும் ஒரு பார்வையைக் கொண்டது. பெரும்பாலும் மனிதர்களிடம் கரந்துள்ள எதிர்மறை அம்சத்தைச் சொல்வதாக அமைந்துள்ளது. உதாரணமாக ‘அவர்கள்’ கதை ரேஷன்கடைக்காரராக வேலை பார்க்கும் ஓர் அரசு அலுவலரான கனகசபாபதியின் ஒரு நாளைப் பற்றியது. அதன் வழியாக ‘ஊழல்’ என்ற ஒரு செயலின் பல பரிமாணங்களை பல தரப்புகளில் விசாரணை செய்வது. ’இன்னொரு விழிப்பு’ சிறுகதை அருக்காணியின் மன அவசங்களை சொல்லக்கூடியது. தலித் பின்னணி கொண்டது. மகன் ஆறுமுகம் கோதண்டராமச் செட்டியார் ஆகியோருக்கு இடைப்பட்ட உரசல் வழியாக ஒரு தலித் வாழ்க்கையின் சிக்கலைச் சொல்வது. ‘உன் முகத்திரை’ கதை அமீனா-பானு-சக்தி ஆகிய மூன்று அரசுப்பணியாளர்களின் கதை. அதிகாரப்படிநிலைகள், அதிலுள்ள பாகுபாடுகள் அதன் எதிர்த்திசையில் நம்மால் கணிக்கமுடியாத ஆனால் தருணங்களில் வெளிப்படும் மனிதக் கீழ்மைகளைப் பற்றிச் சொல்வது. ’அம்முக்குட்டி என்றொரு பெண்’ அதே போல தன் வீட்டில் வேலைபார்க்கும் அம்முக்குட்டி என்ற பெண்ணை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கிய டிரைவரை எதிர்த்து நீதி கேட்கும் மிஸஸ் நீலமேகம் பற்றிய கதை. வீட்டு வேலைபார்க்கும் ஒருவரின் வாழ்க்கையை அவர்கள் படும் இன்னல்கள், உடன் இந்த எதிர்பாராத பாலியல் சீண்டல்களினால் படும் இன்னல்களின் சித்திரம் அழகாக கடத்தப்பட்ட கதை. அவளுக்கு நீதி கிடைக்க போராடுபவள் போன்ற பெண்ணியச் சிந்தனைகளை உதிர்ப்பவளான மிஸஸ் நீலமேகம் அவள் ஜன்னல் வழியாக மரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது குத்தலாகப் பேசுவதுடன் கதை முடிகிறது. இந்தக் கதைகளில் பெண்கள், தலித்துகள், விளிம்பு நிலை மக்கள் படும் துன்பங்கள், அவர்களின் மன அவஸ்தைகள் ஆகியவை பேசப்படுகின்றன.
சிறுகதைகள் புதுமையைத்தேடும் வடிவப்பாங்கும், ஓட்டமும், துள்ளலும் கொண்டவை. சுதந்திரமான நடையுடன், தொக்கி நிற்கும் மூன்று புள்ளிகள் கொண்ட முற்று பெறாத வாக்கியங்கள் அதிகம் தென்படும் கதைகளாகவும், மன ஓட்டங்களின் விரைவை வலியிறுத்துகின்றன. அந்த வகையில் சிறுகதைகளைப் பொறுத்து ஒழுங்கு ஒழுங்கின்மை என்ற இரு நிலைகளுக்கிடையிலான தாவல்களை நிகழ்த்தியுள்ளார்.
*
ஒரு படைப்பை கலைஞர்/ எழுத்தாளரிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது என்ற எண்ணத்தை வலுவாகக் கொண்டவர் சிவகாமி. தலித் இலக்கியம், தலித் ஓவியம், தலித் நுண்கலை சார்ந்த அவரின் பார்வை திட்டவட்டமானது. அதைத் தொடர்ச்சியாக சூழலில் உரையாடல் நோக்கி தனக்குக் கிடைத்த மேடைகளிலெல்லாம் முன்னெடுத்தவர். அதையே தன் புனைவுகள், அபுனைவுகள், செயல்பாடுகள் சார்ந்து விரித்துக் கொண்டவர்.
தலித், பெண் என்ற இரு பெரும் ஒடுக்கப்பட்ட தரப்பின் அனைத்து பரிமாணங்களையும் சொல்லும் வகையில் யதார்த்தவாத அழகியல் கொண்ட நாவல்களையே சிவகாமி எழுதினார். சாதிய அரசியலில் வைத்துப் பெண்ணியத்தைப் புரிந்து கொள்ளும்போது தான் அது புதிய பரிமாணத்துக்குப் போகும் என்றும், அனைத்து விஷயங்களையும் பெண்ணியத்தின் பார்வையில் பார்ப்பதன் அணுகுவதன் அவசியத்தையும் வலியுறுத்துபவராக சிவகாமி இருந்தார். தொண்ணூறுகளில் உருவாகி வந்த தலித் அரசியல், தலித் கலை பண்பாட்டு இயக்கம், பெண்ணியம்-உடல் அரசியல் ஆகிய பெரும் உரையாடல்களில் முதன்மைப் பங்காளிப்பாளராக எழுத்து, களச்செயல்பாடு என இரு தளங்களிலும் செயலாற்றியுள்ளார். எழுத்துச் செயல்பாட்டையும் அரசியலாகக் கண்டவர்.
“எனது எழுத்து எனது அனுபவமாகத்தான் ஆரம்பித்தது. எழுதுவது என் இயல்பாகவும் இருந்தது. இப்போது எல்லோரும் சொல்கிறீர்கள் சாதி, மதம் மற்றும் பெண் என்ற எல்லைகளையும் கடந்து அனைவரும் எழுத்தாளர்களாக வரும் காலம் ஒன்று வரும் என்று. நீங்கள் குறிப்பிடுவது போல யாருக்கும் தலித் என்ற அடையாளத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற விருப்பமில்லை. விவாதிக்கவே தயங்கும் விசயம் முடிவுக்கு வந்துவிடும் என்று கூறுவது என்னை இம்மேடயிலிருந்து அப்புறப்படுத்த நீங்கள் காட்டும் அவசரமேயன்றி வேறொன்றுமில்லை. எழுதுவது அரசியல் என்று உணர்ந்த நிலையில் எனது எழுத்துப் பணி தொடர்கிறது” என ஜனவரி, 2005-ல் சாகித்ய அகாதமி தேசிய பெண் எழுத்தாளர் கருத்தரங்கில் சிவகாமி தன் உரையில் குறிப்பிட்டுள்ளார். அவருடைய எழுத்திற்கான நோக்கமும், பேசுபொருளும் பெரும்பாலும் மிகவும் திட்டவட்டமானது.
மொழியைப் பொறுத்து அவர் இரு வகையான மொழிகளை புனைவுகளில் பயன்படுத்தியுள்ளார். தலித் மொழியைப் பயன்படுத்துவதில் பாமா, இமையம் ஆகியோரின் முன்னோடி எனலாம். தலித் மொழி, பெண்மை மொழி சார்ந்த பன்மைத்துவம் இலக்கிய மொழியின் பகுதியாக ஆக வேண்டும் என வலியுறுத்தியவர்.
இலக்கியத்தில் தலித்/ பெண்/ மூன்றாம் பாலினத்தவர்/ பழங்குடியினர் என முன்னொட்டுகளுடன் பிரிக்கப்படும் எழுத்தை எழுதும்/ நம்பும் எழுத்தாளர்கள் பெருமளவு களச்செயல்பாட்டுடன் பிணைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. தத்துவமும், இலக்கியமும், கலைகளும் இந்த பிரிவினைகளுக்கு உட்படுவதை மறுக்கும் ஒரு தரப்பிற்கு எதிராக தொடர்ச்சியாக ஒரு எதிர்த்தரப்பாக ஒவ்வொரு காலகட்டத்திலும் இத்தகைய சிந்தனையாளர்கள் இருந்து கொண்டே இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு முறையும் அவை “கலை கலைக்காகவே”; “ஆசிரியர் இறந்துவிட்டார்” என்னும் கருத்துக்களுடன் தொடர்ச்சியாக தன் உரையாடலை நிகழ்த்தி அதை முற்று பெறாத ஒரு விவாதமாக முன்னெடுப்பதிலும் இந்தத் தரப்பு கலை-இலக்கியத்தில் முக்கியப் பங்கு வகிப்பதைப் பார்க்க முடிகிறது.
”பெண் தன் உடல் விருப்பங்களையும் புணர்ச்சி குறித்த அனுபவங்களையும் சுதந்திரமாக முன்வைப்பதும் உடல் எழுத்தின் ஒரு கூறாக இருக்குமேயன்றி புணர்ச்சி குறித்த எழுத்துக்கள் மட்டுமே உடல் எழுத்து/உடல் மொழி என வரையறுப்பது சரியல்ல” என்று சிவகாமி குறிப்பிட்டுள்ளார். தொண்ணூறுகளில் உடல் அரசியல் என்ற கருத்துவாதம் எழுந்து வந்தபோது அந்த உரையாடலில் பெண்களில் ”உடல் உழைப்பையும்” கருத்தில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியவர். பழையன கழிதலும், ஆனந்தாயி, உயிர் நாவல்களில் மையக் கதாப்பாத்திரமாகத் திகழும் பெண்கள் வழியாக அதைப் பற்றிய போதத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.
புனைவு வழியாகவே ப.சிவகாமியின் ஆழத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. நாவல் என்ற வடிவத்தின் விரிவு அதற்கு துணை புரிகின்றது. பழையன யாவற்றிலிருந்து எதையெல்லாம் கழிக்க வேண்டும் என்ற தனக்கான வரையறையை சிறுவயதிலிருந்தே கொண்டவராக சிவகாமி உள்ளார். குடும்பத்தில் ஆரம்பித்து, சமூகத்தின் மேல் கட்டுமானம் வரை புரையோடியிருக்கும் அதிகாரகக் கட்டமைப்பை தெளிவாகக் காணக் கூடிய பார்வையையும், அனுபவத்தையும் வளர வளர முழுமையாகப் பெற்றுக் கொண்டவர். ‘தலித்’, ‘பெண்’ ஆகிய இரு அடையாளங்களும் ப.சிவகாமியின் எழுத்துக்களில் சுமையாக இல்லை. அதன் நீள அகலங்களை சாத்தியமான அத்தனை கருவிகளையும் கொண்டு அளக்கத் துணிபவராக இருப்பதைப் பார்க்க முடிகிறது.

எங்குமே பொருந்தாமல் சதா எல்லா இடத்திலிருந்து ஓடிக் கொண்டே இருப்பதையும் நாவல்களின் வழி பார்க்க முடிகிறது. நிதர்சனத்தில் எல்லாவற்றின் மேலும் எதிர்மறையாக எதையாவது சொல்லிக் கொண்டே இருப்பவர்கள் மேல் நமக்கு சலிப்பு வருகிறது. ஆனால் அந்த எதிர்மறையான விஷயங்கள் சிவகாமி எழுத்துக்களில் வெறுமே புலம்பல்களாக இல்லை. மாறாக ஒவ்வொன்றையும் நோக்கி எதிர்குரல் எழுப்பிக் கொண்டு, போராடும் குணமுடைய ஒரு கதநாயகி பிம்பம் ஒன்று அவர் எழுத்துக்கள் வழியாக எழுந்து வருகிறது. ஒட்டுமொத்தமாக புனைவில் நீலா என, கெளரி என கதாப்பாத்திரமாகவும், சிந்தனைகளாகவும் ப.சிவகாமி எனும் ஆளுமையே பெரிய பிம்பமாக நமக்கு காட்சிப்படுத்தப்படுகிறது. முழுவதுமாக அவருடைய சிந்தனையோட்டத்துடன் நாம் பிணைத்துக் கொள்ளும்போது அவரின் எழுத்துக்களுக்களுக்குள் எளிதாக உள்நுழைந்துவிட முடிகிறது. அந்த லாவகத்தை பழையன கழிதலும், ஆனந்தாயி ஆகிய இரு நாவல்களும் வழங்குகின்றன. அதுவே அவரின் புனைவுப் பிரபஞ்சம் விரியத் தடையாகவும் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனந்தாயி எனும் செவ்வியல் அம்சமுடைய யதார்த்தவாத நாவல் உருவாகி வருவதற்கெனவே எழுதப்பட்டது போல பழையன கழிதலும் நாவல் அமைந்துள்ளது. உயிர் நாவலும் யதார்த்தவாத நாவலாக இருந்தாலும் அது சொந்த வாழ்க்கையிலிருந்து சற்றே வேறுபட்ட தளத்தில் அமைந்துள்ளது. பணக்கார, உயர் சாதியைச் சார்ந்த சிவமணி, அவர்கள் வீட்டில் வேலை பார்க்கும் லட்சுமி என்ற பெண்ணையும் அவர்களின் வாழ்வையும், முடிவையும் சொல்லும் கதை. சிவமணி பல வகைகளில் வாழ்ந்து கெட்ட குடும்பத்தைச் சேர்ந்தவளாக இருக்கிறாள். அவள் லட்சுமியை அடிப்பதும், உடல் ரீதியாகவும், மனதளவிலும் துன்புறுத்தும் செய்கைகள் அவளே ஏன் என்று அறியமுடியாத வண்ணம் அமைந்துள்ளதை அவளின் புலம்பல்கள் வழியாக அறியமுடிகிறது. அவள் கணவன் லட்சுமிக்கு பாலியல் சீண்டல் செய்தான் என்பது அவளை நிலைகுழைவுக்கு ஆளாக்குகிறது. மெல்ல குடும்பத்தின் பொருளாதாரம் சரியச் சரிய வீட்டில் வேலைக்கு ஆள் வைத்துக் கொள்ள முடியாத நிலைமையில் குழந்தைப்பேறு இல்லாமல் தோல்வி நோக்கிச் செல்வதாக கதை அமைந்துள்ளது. லட்சுமி தன் சாதியிலேயே ஒரு கடைநிலை அரசு ஊழியரைத் திருமணம் செய்து இரு குழந்தைகளுக்குத் தாயாகி வீட்டு வேலைகள் செய்பவளாக மகிழ்ச்சியாக அமைகிறாள். ஒரு உயிரின் மகிழ்வான உயிர்ப்பு என்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கண்டடைதல்களும், ஒவ்வொரு பார்வைக்கோணமும் இருக்கிறது. எந்தப்பின்புலமும் இல்லாமல் வாசித்தால் இது ஒரு வகையில் பிற்போக்குத்தனமாக கதை என்று சொல்லிவிடக்கூடியது. ஆனால் பழையன கழிதல் தொடங்கி புனைவுகள் வழியாக உரையாடிக்கொண்டிருக்கும் சிவகாமி வாழ்க்கையை நோக்கு ஒரு பார்வை என்று மட்டும் எடுத்துக் கொள்வதே சரியாக இருக்க முடியும்.
சிவகாமியின் கதைகளில் இரண்டு காலகட்டத்தைச் சேர்ந்த பெண்கள் வருகிறார்கள். முதலாவது ஆனந்தாயி, தங்கம், லட்சுமி போன்றவர்கள். இரண்டாவது கெளரி, நீலா ஆகிய கதாப்பாத்திரத்தைச் சேர்ந்த இரண்டாம் தலைமுறைப் பெண்கள்.
முதல் தலைமுறைப் பெண்கள் சாதிய ஆதிக்கத்தினால் பாதிக்கப்படுவதைவிடவும் ஆணாதிக்கத்தால் பாதிக்கப்படுபவர்களாகவே இருக்கின்றனர். பழையன கழிதலில் வரும் தங்கம் இந்த இரண்டினாலும் பாதிக்கப்படுபவளாக இருக்கிறாள். செட்டியார் ஒருவரால் பாலியல் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளப்பட்டு நியாயம் கேட்டு வரும் தன் சாதியைச் சேர்ந்த காத்தமுத்துவினாலேயே இறுதியில் வன்புணர்வு செய்யப்படுகிறாள். ஆனந்தாயி, லட்சுமி என முதல் தலைமுறையைச் சேர்ந்த பலரும் பொருளாதார ரீதியில் ஆண்களைச் சார்ந்தவர்களாக இருக்கின்றனர். நாவல்களில் வரும் ஆதிக்க சாதியைச் சார்ந்த பெண்களுக்கும் இதே நிலைமை தான். தலித் பெண்கள் உடல் உழைப்பால் இன்னும் ஒரு படி கூடுதலாக துன்பப்படுகிறார்கள். அத்தனை துன்பங்களுக்கு இடையிலும் வைராக்கியமாக வாழ்க்கையை எதிர்கொள்ளும் ஆனந்தாயி முதல் தலைமுறையைச் சேர்ந்த பெண்களில் கதாநாயகியாக எழுந்து நிற்கிறாள்.
இரண்டாம் தலைமுறைப் பெண்ணான பழையன கழிதலில் வரும் கெளரியின் நீட்சியாக உண்மைக்கு முன்னும் பின்னும் நாவலில் வரும் நீலாவைப் பார்க்கலாம். பல வகைகளில் சிவகாமியின் இருப்பாகவும் அதை எடுத்துக் கொள்ளலாம். சுயசரிதைத்தன்மையுடன் கூடிய கதையாக உண்மைக்கு முன்னும் பின்னும் நாவல் அமைந்திருப்பதால் இதை சுதந்திரமாகச் சொல்ல முடிகிறது. இவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிப் பெண்கள். முதல் தலைமுறையில் அதிகாரத்திற்கு வந்தவர்கள், ஆதிக்கத்திற்கு எதிராக நிற்பவர்கள். சமூகத்தில் உயர்ந்த மட்டத்தில் நிலவும் பல்வேறு பாகுபாடுகளை முதல்முறையாக சந்திப்பவர்கள். லட்சியவாதத்தை நோக்கிய பயணத்தில் செல்வதற்கான சாத்தியத்தைக் கொண்டவர்கள். முதல் தலைமுறைப் பெண்கள் சகித்துக் கொண்டிருந்த சமூகக் கட்டமைப்பை கேள்வி கேட்பதோடு நின்றுவிடாமல் அதைவிட்டு வெளியேறுவதற்கான எத்தனத்தைக் கொண்டவர்கள்.
ப.சிவகாமி அந்த வகையில் வெளியேறும் தலைமுறையைச் சேர்ந்த பெண். கல்வி, ஆட்சிப்பணி, அரசியல் ஆகியவற்றை அம்பேத்கார் தலித் விடுதலைக்கான கருவிகளாக முன்வைத்தார். பெண், மூன்றாம் பலினத்தவர் என விளிம்பு நிலையில் உள்ள அனைத்து மக்களுக்கும் இதையே நம் கண்முன் இருக்கும் அல்லது இன்றைக்கு இருக்கும் இந்த அரசியல்-சமூக கட்டமைப்பில் உயர்ந்த இடத்தை அல்லது சுயத்தை நோக்கி கட்டப்பட்ட தளைகளிலிருந்து அறுத்து விடுவித்துக் கொள்ளும் கருவியாக முன்வைக்கலாம். சிவகாமி இந்த மூன்று கருவிகளையும் தன் கடின உழைப்பால் கை கொண்டவர். ஆனால் அவர் கை கொண்ட லட்சியத்தின் பொருட்டு ஒவ்வொரு வாயிலிருந்தும் வெளியேறியவர். 1989-ல் வெளியான பழையன கழிதலும் அந்த வகையில் கெளரியின் பார்வை வழியாக ஏற்கனவே இருக்கும் சமூக கட்டமைப்பின் மேலான கேள்வியை எழுப்பி வெளியேறுவதற்கு அழைக்கிறது. ஆனந்தாயி நாவலில் ஆணாதிக்கம், சாதிய ஆதிக்கம் மையப் பேசுபொருளாக உள்ளது. இந்த இரு நாவல்களில் மேலும் நுட்பமாகப் பார்த்தால் ஆதிக்க சாதியினர் தலித்துகளுக்கு எதிராக கடைபிடிக்கும் சாதியப் பாகுபாடுகள், தலித் பெண்கள் மேல் கொண்டிருக்கும் பார்வை, ஆதிக்கம்; தலித் சமுதாயத்திற்குள்ளேயே இருக்கும் பாகுபாடுகள், தலித்துகளில் ஆண்கள் பெண்கள் மேல் காட்டும் ஆதிக்கம் ஆகியவையும் பேசுபொருட்களாக உள்ளன. இவை அனைத்துமே வெறும் முழக்கமாக, கருத்தியல் விவாதமாக இல்லாமல் யதார்த்தவாத அழகியலுக்குள் இயல்பான கதையோட்டத்துடன் அதன் எல்லைக்குள் கலைப்பூர்வமாக சொல்லப்பட்டுள்ளது.
2016-ல் வெளியான உண்மைக்கு முன்னும் பின்னும் நாவல் முதல் தலைமுறை விட்டு வைத்த பாரங்களை சுமந்து கொண்டு அடுத்த தலைமுறையிலிருக்கும் பிரச்சனைகளை சமாளிக்கும் நாயகியான நீலாவைப் பற்றியது. அரசியல், அதிகாரம், ஆட்சி ஆகியவற்றுக்குள் செயல்படும் ஆதிக்கம், ஒடுக்குமுறைகளை பல்வகைப் பரிமாணங்களுடன் ஆனால் மிகவும் உண்மையாக கேள்விகளைக் கேட்கும் பெண் என்றளவில் முக்கியமானது. ஆணாதிக்கம், சாதியப்பாகுபாடு அரசு இயந்திரத்தில், அதிகார அமைப்புகளில் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பற்றியது. நீலா அந்த அமைப்பிலிருந்து வெளியேறிச் செல்வதற்கான அத்தனை நியாயங்கள் சார்ந்த விசாரணையும் நாவலில் சொல்லப்படுகிறது.
போலவே சிவகாமி நிகழ் வாழ்க்கையில் தன் லட்சியவாத நோக்கத்தின் பொருட்டு ஆட்சிப்பணியிலிருந்து வெளியேறினார். அவரே நாவலில் குறிப்பிடுவது போல பலதரப்பட்ட ஆட்சிப்பணியாளர்களைப் பார்க்கலாம். பதவி, அதிகாரம், பணம், புகழ் ஆகியவற்றினால் அமைந்துவிட்டவர்கள். அமையாவிட்டாலும் அதில் அதிருப்தியுடனேனும் ஓய்வு பெரும்வரை ஒட்டியிருந்து உதிர்பவர்கள் என இரண்டு வகைகளாக அவர்களைச் சொல்லலாம். லட்சியவாத நோக்கத்துடன் மிகக் கூரிய நோக்கம் கொண்ட ஆட்சிப்பணியாளர் பெரும் தடையாக உணர்வது தங்களுக்கு மேலாக பூதாகரமாக எழுந்து நிற்கும் அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தைத்தான். அங்குள்ள கணக்குகள், அதிகார விளையாட்டுக்களிலிருந்து முற்றிலும் வெளியேறி அந்த கட்டற்ற அதிகாரத்தைக் கைகொண்டு தன் லட்சியப்பாதையில் பயணிக்கும் பொருட்டு அரசியியலில் இறங்குகிறார். 2009 முதல் சிவகாமி முழு நேர அரசியல் பணிகளில் ஈடுபடுபவராக ஆனார். சமூக சமத்துவப்படைக் கட்சியைத் தோற்றுவித்தார். மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி, திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் போட்டியிட்டார். அவர் அதில் வெற்றி பெற முடியவில்லை எனினும், தன்னைத் தான் ஏற்கனவே உருவாக்கி வைத்திருந்த களச்செயல்பாடுகளின் பகுதியாக பிணைத்துக் கொண்டார்.
“பெண்களின் அரசியல் பங்களிப்பு” குறித்து ஒருவருட ஆய்வுப்படிப்பு அமெரிக்காவில் முடித்துள்ளார். பஞ்சமி நில மீட்புக்காக ‘தலித் நில உரிமை இயக்கத்தை’ இரண்டு ஆண்டுகள் நடத்தினார். 2007-ல் ‘பெண்கள் முன்னணி’ என்ற அமைப்பின் மூலம் மதுரையில் ஒரு லட்சம் பெண்களைத் திரட்டி பெண்கள் கலை இரவு நிகழ்ச்சியை நடத்தினார். 2008-ல் இரண்டரை லட்சம் பெண்களைத் திரட்டி ‘பெண்களும் அரசியலும்’ மாநாட்டை நடத்தினார்.
இதழியலாளராகவும், களச் செயல்பாட்டாளராகவும், அரசியல்வாதியாகவும் அவரின் எழுத்துக்கள் அபுனைவு சார்ந்து முக்கியமானவையாக அமைகின்றன. அவற்றை தலித் அரசியல், தலித் கலை-பண்பாடு மீட்பு, தலித் நில உரிமை, சமூக உரிமை, தலித் இலக்கியம் ஆகியவை சார்ந்து தீவிரமாக எழுதப்பட்டவை என வரையறுக்கலாம். 1995-ல் தொடங்கப்பட்ட புதிய கோடாங்கி இதழில் சமூக-அரசியல் கட்டுரைகள் எழுதினார். தனி நபராக இன்றளவிலும் புதியகோடாங்கி காலாண்டு இதழை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எந்த இதழும் உருவாகும் சூழலை கணக்கில் எடுத்துக்கொண்டு அதற்கு முன்-பின்னான மாற்றத்தை ஆராய்ந்தால் அது ஏற்படுத்தியிருக்கும் மாற்றத்தை நாம் உணரலாம். அந்த வகையில் புதிய கோடாங்கி குறிப்பிடத்தக்க பங்களிப்பை சூழலில் நிகழ்த்தியுள்ளதை மறுக்க இயலாது.
*
சிவகாமியின் எழுத்துக்களில் கனவு ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. அது இரண்டு வகையில் வெளிப்படுவதைப் பார்க்க முடிகிறது. முதலாவதாக நாவல்களில் முக்கிய கதாப்பாத்திரங்களுக்கு வரும் கனவுகள் வழியாக வருவதை முன் அறிவிக்கும் அம்சம் கொண்டது. இரண்டாவதாக சிறுகதைகளில் கனவு என்ற நிலையிலிருந்து கற்பனையுடன் விரித்து எழுதிச் செல்லும் தன்மை.
விளங்கிக் கொள்ள முடியாதவைகள் மேலான விஷயங்கள் சார்ந்து எந்த விசாரணையும் நிகழ்த்தாமல் அதை வாழ்வின் ஒரு பகுதியாக பிணைத்துப் பார்க்கும் பார்வையும் அவரின் படைப்புகளில் சிறப்பாக வந்துள்ளது. இரண்டு சம்பவங்களை உதாரணமாகச் சொல்லலாம். முதலாவது ஆனந்தாயி நாவலில் அவளின் பிள்ளைகளில் ஒரு சிறுவன் இரவில் சிறுநீர் கழிக்கச் செல்லும்போது காய்ச்சல் கண்டு இறந்து விடுகிறான். அது ஒரு மர்மமான சாவு. ஏன் எதற்கு என்ற கேள்வி வாசகர்கள் எத்தனை எழுப்பிக் கொண்டாலும் விடைதெரியாத பல முடிச்சுகளை அதற்கு விடையாகச் சொல்லுமளவு அந்த இடம் மனதை சலனப்படுத்துவது. சிறுவன் எதையோ பார்த்து பயந்திருக்கலாம். எதை? என்ற கேள்வி மட்டும் வாசகர் மனதை விட்டு அகல்வதில்லை. அந்த மரணம் அந்த குடும்பத்தாரால் எப்படி எதிர்கொள்ளப்படுகிறது. அப்படியே அந்த நினைவு எச்சமில்லாமல் மறக்கப்படுவது கதையோட்டத்துடன் இயல்பாக அமைந்துள்ளது. இரண்டாவதாக ஆனந்தாயி நாவலில் பெரியண்ணனுக்கும் இரண்டாவது மனைவியான லட்சுமிக்கும் இடையிலான உறவு பற்றிய நீண்ட சித்திரம். லட்சுமி ஆனந்தாயியின் சாதியப் பின்புலத்தைச் சேர்ந்தவள் இல்லை. அவள் சற்று அதை விடவும் உயர்ந்த சாதியைச் சேர்ந்தவள். ஆனால் ஏழை, துன்பப்பட்டவள். அவளின் அழகும், வனப்பும் கதையில் சொல்லப்படுகிறது. பெரியண்ணனால் விட்டுத்தொலைக்கமுடியாதவளாக யட்சியாக நாவலில் எழுந்து வந்து அவரை தண்டிக்க தற்கொலை செய்து கொள்பவளாக அமைகிறாள். கதையோட்டத்தில் நிகழும் இத்தகைய பகுதிகள் நாவலுக்கு மேலும் உயிர்ப்பைச் சேர்க்கின்றன.
*
’அமைதல்’ என்பது செயலின்மையல்ல. எங்கும் நேதி நேதி என வெளியேறிக் கொண்டே இருப்பது சுயத்தின் லட்சியவாத நோக்கை மேலும் மேலும் கூர்மைப் படுத்துவதாகவே உள்ளது. ஒரு வகையில் அமைய வேண்டிய ஒன்று தன்னை நோக்கி முழு விசையுடன் ஈர்ப்பதை சிவகாமி எந்தவிதத் தடங்கலும் இல்லாமல் அனுமதிக்கிறார் என்றும் இதை எடுத்துக் கொள்ளலாம். தனி நபர் தன்னைப் பிணைத்திருக்கும் கட்டுகளிலிருந்து வெளியேறுவது சுலபமான காரியம் தான். ஆனால் சற்றே திரும்பி தன்னைப்போல கட்டுண்டிருக்கும் அனைவரின் தளைகளையும் அறுத்தெரியும் லட்சியம் கொண்டிருப்பவரின் பாதை மிகவும் நீளமானது. சிவகாமி அத்தகைய நீண்ட பாதையைக் கொண்டவர். உண்மைக்கு முன்னும் பின்னும் நாவலுக்கும், உயிர் நாவலுக்கு இடைப்பட்ட தூரத்தின் வழியாக அவரின் அமைதலை நம்மால் உணர முடிகிறது.

ப.சிவகாமி எண்பதுகளில் எழுத ஆரம்பித்திருந்தாலும் நவீனத்துவ அலைக்குப் பின் உருவான பின்நவீனத்துவ உரையாடல்கள் வழியாக எழுந்து வந்த தலித்திய, பெண்ணிய அலையின் முகமாகவே முன்வைக்கப்பட வேண்டியவர். பெண் எழுத்தைப் பொறுத்து அம்பைக்குப் பின் எழுந்து வந்த எழுத்துக்களில் பெரும் பாய்ச்சலை ஆனந்தாயி வழியாகவே நிகழ்த்தியவர். கிருத்திகாவின் நாவல்களின் தொடர்ச்சியாக கருதுவதற்கு இடம் உண்டு என்றாலும் தலித்திய மரபு, பண்பாடு சார்ந்த வேறொரு முகத்தை தமிழ் இலக்கியத்தில் முதலில் எடுத்தியம்புவதாக சிவகாமியின் படைப்புகள் உள்ளன. தலித் பெண் எழுத்தின் முதன்மை முகமாக பாமாவின் கருக்கு சூழலில் சுட்டப்படுகிறது. எத்தனை கோட்பாடுகளால் அவை முன் மொழியப்பட்டாலும் ஆனந்தாயி காலத்தால், வாசக ஏற்பால் அதன் செவ்வியல் அம்சத்தால் தலித் பெண்ணெழுத்தின் முதன்மை முகமாக அறிவுச்சூழலில் வைக்கப்பட வேண்டியது. ஒட்டுமொத்தமாக தொண்ணூறுகளில் எழுத வந்த தலித் எழுத்துக்களின் வரிசையிலும், யதார்த்தவாத அழகியல் சார்ந்த புனைவுகள் வரிசையிலும் சிவகாமி எனும் ஆளுமையும், அவருடைய படைப்புகளும் முன்னோடி ஆளுமைகள் வரிசையில் வைக்கப்பட வேண்டும். அதுவே அக்காலகட்டம் சார்ந்த முழுமையான உரையாடல்களுக்கு வழிவகுப்பதாக இருக்கும்.
***
