தோய்தலின் ஆனந்தம் – ஆர்.காளிப்ரசாத்

2019 ம் ஆண்டு வாசகருடனான ஒரு உரையாடலில் கவிஞர் பெருந்தேவி கலந்து கொண்டார். கவிஞர் அபி விஷ்ணுபுரம் விருது பெறுவதையொட்டி நிகழ்ந்த கவிதை அமர்வுகளில் ஒன்று அது. அந்த மேடையில் வந்து அமர்ந்த போது அவர் ஒரு முகமூடி கொண்டு வந்திருந்தார். தன்னை ஒரு பெண் என்று கருதாமல் கவிஞர் என்று மட்டுமே கருத வேண்டும் ஆகவே முகத்தை பார்க்கவேண்டாம் என முகமூடி கொண்டு வந்த்தாக கூறினார். ஆனால் அவர் அந்த அமர்வில் அதை அணிந்து கொண்டு உரையாடவில்லை. ஆனால் அமர்வு முழுவதும் அதைக் கையில் வைத்திருந்தார். ஒரு முகமூடியை கையில் வைத்திருந்து ஆனால் அதை அணியாமல் அவர் அமர்ந்திருந்ததே ஒரு நல்ல படிமமாக இருந்தது.
பெருந்தேவியின் உரைகளை கவனிக்கும் போது அவர் சமூக இலக்கிய சர்ச்சைகளை தர்க்கத்துடன் எதிர் கொள்வதை உணர முடிந்தது. உரையாடலில் அரசியல் / பாலின சமநிலை கொண்ட வார்த்தைகளை வைத்து உரையாடுவது என்பது சமூகம் பயற்சியில் அடையவேண்டிய ஒன்று. ( அடைந்துவிடக் கூடிய ஒன்றும் கூட ) . அது ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவருக்கு எளிதில் கைவந்துவிடக் கூடிய கலையும் ஆகும். பொது சமூகத்தை அது அடைய சிற்றிதழ்களில் துவங்கி வார இதழ்கள் நாளிதழ்களுக்கு வந்து திரைப்படங்கள் பிற ஊடகங்கள் ஊடாக ஒரு வட்டப்பாதையில் நிகழ்கிறது. ஆகவே ஒரு சிந்தனையாளராகவும் கருத்தியலை வலியுறுத்துபவராகவும் அந்த குறிப்பிட்ட உரையாடல் நிகழ்ந்தது. பெருந்தேவியின் ஒரு கவிதை உள்ளது.
“பெண்களோடு சேர்ந்து
குடிக்கும்போது
அவள்
பெண்ணாகத் தோன்றினால்
நீ இன்னும் குடிக்க வேண்டும்
தேவதையாகத் தோன்றினால்
உடனே அங்கிருந்து நகர வேண்டும்”
பெருந்தேவியின் அபுனைவுகளிலும் கவிதைகளிலும் இருக்கும் அந்த பாலின சரிநிலையை உள்வாங்கி உரையாட வேண்டிய கவனம் உரையாடலில் சேர்ந்துவிடுவதை தவிர்க்க இயலாது. ஒரு கோட்பாட்டாளரோடு அவ்வாறு உரையாட இயலும். ஆனால் கவிஞருடன் / எழுத்தாளருடன் அத்தகைய கவனத்துடன் உரையாடுவதில் தயக்கம் இருக்கிறது. . ஒரு கச்சேரியில் வழக்கறிஞருடனோ அல்லது ஏதோ ஒரு கணினியுடன் உரையாடுவது போலவோ கவிஞரிடம் சொற்களை எண்ணிப் பேச இயலாது. கணினியிடம் துல்லியமாக பேச வேண்டும். அப்போதுதான் அது சரியான தகவலைத் தருகிறது. இது உருவாக்கும் சிக்கல் என்னவெனில் யானையோடு புழங்கும் பாகன் யானையாகவே ஆவது போல மாடு மேய்ப்பவனுக்கு மாட்டின் பாவனை வருவது போல கணினியிடம் பேசுபவருக்கு கணினியின் குணம் வந்துவிடுகிறது. அப்போது சொல்லும் பொருளும் நேரானதாகவே இருக்கின்றன. அங்கே வெற்றிலைக்கு சுண்ணாம்பு தறியா என்ற கேள்வியை தாம்பூலமாக மட்டுமே புரிந்து கொள்ளும் அபாயம் வந்து விடுகிறது. தம்பி கம்பி நீட்டினான் என்றால் அது ஒரு இரும்புக் கம்பி என்றே நம்ப வேண்டியிருக்கிறது. மனிதர்களிடம் அவ்வாறு உரையாட இயலாது. அதிலும் கவிஞர்களிடம் உரையாடும் போது, கவிஞர்கள் பிறரின் தயக்கம், குழப்பம் மற்றும் தெளிவின்மையையும் கருத்தில் கொண்டு உரையாட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக இருக்கிறது. தன் வீட்டு மனிதர்களிடம் நெருங்கிய நட்புகளிடம் யாரும் அரசியல் சமநிலை பாலியல் சமநிலையுடன் பேசுவதில்லை. கவிதை என்பது அத்தகையதொரு உரையாடலாக இருக்க வேண்டியது ஆகிறது. வேடிக்கையான கவிதைகளாக தோன்றும் கவிஞர் மனுஷ்யபுத்திரன் கவிதைகளும் கவிஞர் இசையின் கவிதைகளும் இந்த தளத்தை தன்னுள்ளே வைத்திருக்கின்றன. அன்றைய அமர்வுக்கு, பெருந்தேவியின் வாசகர்களுக்கு இணையாகவே ஸ்ரீவள்ளிக்கு வாசகர்கள் வந்திருந்தனர். அவரைக் காண இயலாது என்பதை எதிர்பார்த்து வந்தவர் போல இருந்தனர். ஸ்ரீவள்ளி ஒரு “ காணாங்குருவி’ எனத் தெரிந்துகொண்டு உவகையும் கொண்டனர். பிளவாளுமை என்பது மீமிகைகற்பனை அல்ல. தற்போது அது யதார்த்தமானது. ஒருவர் வீட்டில் சமூகத்தில் சமூக வலைதளத்தில் காட்டும் வெவ்வேறு ஆளுமைகள் இருக்கின்றன. அதில் எதன் தாக்கம் எதன் மீதும் படியலாம். அவ்வகையில் ஒரு சக கவிஞர்களாக பெருந்தேவியும் ஸ்ரீவள்ளியும் திகழ்கின்றனர்.
அவருடைய சமகால கவிஞர்களோடு ஒப்பிட்டால் ஸ்ரீவள்ளிக்கு தர்க்கம் சார்ந்த கட்டுப்பாடுகளில் நம்பிக்கை இல்லை. தான் கட்டுப்பாடுகளை மீறுவதைக் காட்ட வேண்டிய யத்தனமும் இல்லை.. சமயங்களில் நடைமுறையைப் புரிந்து கொண்டதாகவும் இருக்கிறது. ஸ்ரீவள்ளியின் ஒரு கவிதை,
//மலையில் ஏறிக் கொண்டிருப்பவனை அழைக்காதே
அவன் திரும்பிப் பார்க்கப்போவதில்லை
மலையிலிருந்து இறங்கிவிட்டவனிடம் கேட்காதே
உச்சியில் எதுவுமில்லையெனக்
கைவிரித்து விடுவான்
மலையில் ஏறுவேன் எனக் கூறிவிட்டுப்
போக்குக்காட்டுபவனே சிறப்பு
அவனுடைய ஒரு கண் மலைமீது இருந்தால்
இன்னொரு கண் உன்மீது இருக்கறது
அவனை நீ நேசிக்கலாம்
மேலும் அவனிடம் நீ வாதிடலாம்
ஏறுவேன் என்று சொல்லவில்லை
ஏறுவோம் என்றுதான் சொன்னாய்
என்றால் அவன் தயங்காமல்
ஆமாம் என்பான்//
(தேர்வு செய்யப்பட வேண்டியவன்)
(1)
ஸ்ரீவள்ளியின் கவிதைகள் ஈர்ப்பாக இருக்க அதில் உள்ள ‘ஐயமுள்ள தன்மை’ காரணமாக இருக்கிறது. அதில் உள்ள ‘அடித்துப் பேசும் தன்மை’ காரணமாக இருக்கிறது. அதில் உள்ள ‘கைவிட்டுப் போன’ ஒன்றின் ஏக்கமும் காரணமாக இருக்கிறது. தற்போது கிடைக்கும் ஸ்ரீவள்ளி கவிதைகள் மொத்த தொகுப்பில், அவரது முந்தைய தொகுப்புகளான ‘ பொன்கொன்றை பூக்க வந்த பேய்மழை’ மற்றும் ‘பொல்லாத மைனாக்கள்’ தவிர புதிய தொகுப்பான ‘திருவிருந்து’ தொகுப்பும் உள்ளது. பெரும்பாலும் அகச் சித்தரிப்புகள் கொண்ட கவிதைகள். வரிசைப்படி வாசிக்கையில் ஒரு sign wave போல இருக்கிறது. பொதுவாகப் பேசத் துவங்கி தான் பேசவந்ததைப் பேசி பின் அதிலிருந்து ஒரு பொதுமைக்கு நகர்கிறது. ஒரு விழைவைக் கடத்த அதைச் சுற்றியுள்ள பாசாங்குகளை முதலில் களைய வேண்டியிருக்கிறது. உணர்வுக்கு அறிவு தடையாக இருக்கிறது. வெட்கம் சுயம் தர்க்கம் ஆகியவற்றை பொதுவாகச் சொன்னால் அறிவு என சொல்லலாம். ஆகவே பொதுவாக பேசத் துவங்குகறது. இரண்டாம் தொகுப்பான பொல்லாத மைனாக்கள், முதல் தொகுப்பைவிடவும் அதிகமாக அந்தரங்கத்தை பேசுகிறது. அதன் பிதற்றலைக் கடந்த பின் வரும் திருவிருந்து தொகுதி சரணாகதி என்னும் கவிதையோடு நிறைவடைவது பொருத்தம்.
//காலாவதி நாள் குறித்த பின்னரே
எந்த அன்பின் தொடக்கமும் சித்திக்கிறது// ( எதன்பொருட்டும் இதயத்தை இழக்காதீழ்கள்) என்பதில் தொனிக்கும் விரக்தி
// இந்த சிற்றிலை எப்படியெல்லாம் இழைத்தேன்
என்றெல்லாம் விளக்க மாட்டேன்
.
.
.
உன் இரக்கமின்மையைக் காதலென்று
எண்ணிக்கொள்ள என்னைப் போல
அவர்களுக்கு வாய்ப்பதில்லை
எனக்கு மட்டுமே கையளிக்கப்பட்ட அருள்
என் ஒரே ஆறுதல்//
இவற்றில் நீ நான் ஆகிய இருவர் மட்டுமே உள்ளனர். அந்த ‘நீ’ என்பதை எதுவாகவாகவும்/ யாராகவேனும் கற்பித்துக்கொள்ள வாசகருக்கு இயலும்.
அங்கிருந்து பொல்லாத மைனாக்களின் கவிதைகள் நேரிடையாக பேசுகின்றன
//இதைவிடச் சின்ன ரீங்காரச் சிட்டு
உன் அளவிடும் விரல்களுக்குள் படபடக்க முடியாது
இதைவிடச் சதைப்பற்றுள்ள கனியை
உன் வறண்ட ஆன்மாவுக்கு நீ அளிக்க இயலாது// (க்ளிட்)
பரமபதம் ஆடுவதும் சதுரங்கம் ஆடுவதும் வேறு. சதுரங்கத்தில் சுற்றிவர கவனிக்க வேண்டியிருக்கிறது. அதுவும் எதிராளி இல்லாமல் அதையும் தானே விளையாடும் போது தனக்கான எதிராளி நகர்வையும் எதிராளிக்கான தன் நகர்வையும் யோசித்து நகர்த்தும் போது அந்த ஆடல் இறுதியில் தன்னுடன் தான் ஆடும் ஆட்டமாக ஆகிறது. அதில் தனது பிம்பம் ஜெயித்தால் இன்னும் மகிழ்ச்சிதானே!
// உன் குரல் எனக்கு
நாகலிங்கப் புஷ்பங்களைக் காட்டுகிறது
குன்றின் மீது துலங்கும்
மின்னொளியைக் காட்டுகிறது
.
.
//
//ஆனால் உன் டெக்ஸ்ட்
அவை எதையும் காட்டுவதில்லை//
//அபூர்வமாக அதில் ஒரு எமோஜியோடு
என் முகத்தை வைத்து இழைகிறேன்
பல நாட்களாக
நீர் மாற்றப்படாத மீன் தொட்டியில்
இருக்கும் ஒரே ஒரு மீன்
தொட்டியின் கண்ணாடியோடு
இழைவதைப் போல//
இதில் நாகலிங்கப் புஷ்பம் உவமை கிளர்த்தும் எண்ணங்கள் முக்கியமானவை. சொல்பவருக்கு அப்பொது ஒரு குரல் தேவையாகவும் உள்ளது. கைபேசியில் குரலை அனுப்பவும் இயலும் காலத்திலும் ஏன் எழுத்துருக்கள் வருகின்றன என்பது உபகேள்வியாகவும் எழுத்துருக்கள் வருவது எதைச் சொல்ல வருகிறது என்கிற முதற்கேள்வியும் தோன்றுகிறது. இறுதியில் கண்ணாடி மீனில் நிறைவடையும் போது ஏக்கமும் ஏமாற்றமும் எஞ்சி் நிற்கிறது.
ஆசி என்னும் கவிதை மற்றொரு உதாரணம்.
//மனமோ பிளாஸ்டிக் உறையைக் கவ்வியபடி
சக்கரங்களிலிருந்து தப்பித் திரியும் நாயாக
உன் நினைவைப் பற்றி அலையும் போது//
இதில் வருகின்ற நாய் கைகொண்ட பிளாஸ்டிக் உறை, கண்ணாடி மீன் போன்ற நவீன உருவகங்கள், ஓரிடத்தில் ஒரு கால மாற்றத்தைப் பதிவு செய்கிறது
குறுந்தொகையில் வந்த அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கையும், பெருஞ்சினை இருந்த தோகையும், வன்பறழ்த் தந்தைக் கடுவனும் இல்லாமல் போன நகரமயமாக்கல் வர்ணனை வருகிறது
//நாம் சென்ற இடத்தில்
கருத்த அடி கொண்ட வேங்கை மரங்களுமில்லை
அவற்றின் பூக்களைத் தேடி வரும்
கான மயில்களுமில்லை
நாம் நடந்த கடைத்தெருவோ
நிரம்பிக் கிடந்தது//
.
.
.
//குரங்கு வித்தை நடந்து கொண்டிருந்தது
சங்கிலியால் கால்கள் கட்டப்பட்ட
குரங்குக்குட்டி கையேந்திக் கேட்டபோது//
(நிலத்திலிருந்து சொர்க்கத்திற்கு)
சங்க கவிதையை தொட்டு நிகழ்காலத்தை சுட்டும் கவிதைகள் உள்ளன. முரணை பகடியாக காட்டுதில் பெரும்பாலும் நின்று விடுகின்றன. கவிஞர் மீராவின் வாசுதேவநல்லூர் கவிதை போல. ஸ்ரீவள்ளியிடம் அதைச் சார்ந்த பகடி இல்லை. அந்தக் கவியே அங்கிருந்து இறங்கி வந்து நிற்பது போல இருக்கிறது.
(2)
குறுந்தொகை, ஆண்டாள், காரைக்கால் அம்மையார், மாணிக்கவாசகர் என சங்க இலக்கியங்களில் மூழ்கி எழுந்து வந்த ஸ்ரீவள்ளியைப் பற்றி பின்னட்டைகமுன்னுரைகளிலும் குறிப்புகள் உள்ளன. அவர் கையாளும் உணர்வுகளும் எடுத்தாளும் சொற்களும் அத்தகைய தொடர்ச்சியைக் கொண்டிருக்கின்றன. சமகாலக் கவிஞர்களில் நவீன கவிஞர்களின் அகத்திணை பாடல்களில் இருக்கும் உடலரசியல் என்கிற பேசு பொருளைச் சார்ந்தது. ஆனால் ஸ்ரீவள்ளியின் கவிதைகளின் அரசியல் என்பது கவிதைக்கு வெளியே இருக்கிறது. உடலைத் தாண்டிய ஒன்றாகவும் இருக்கிறது.
//ஏதிலிகளின் வரிசைகள் பெருகிவிட்டன
பழைய செருப்பணிந்த கால்கள்
இடையறாது அப்புறப்படுத்தப் படுகின்றன//
.
.
.
நமக்கே நமக்கென
சில நொடிகளாவது வேண்டியிருக்கிறது
கைகளை மேலே உயர்த்திக் கதற
பற்றிக்கொள்ள
கடவுளின் கைகள் இல்லாவிட்டாலும்
கடவுளே இல்லாவிட்டாலிம்
பிரார்த்தித்தாக வேண்டியிருக்கிறது//
புற வர்ணனைகளில் மாற்றங்கள் நிகழ்ந்தாலும் அடிப்படை உணர்வுகளில் அதே அலைச்சலையும் குழப்பத்தையும் வைத்திருக்கிறது. தோழி கூற்று தலைவி கூற்று அனைத்தும் தன்மையில் வருகின்றன. அவர் சொற்களை தொடுக்கும் விதம் தனக்குள் ஒரு லயத்தை வைக்கிறது. “ஒரு பூக்கூடை நிறைய நிசப்தம்” என வரும் வர்ணனைகள் ஊர்ப்பேச்சை நினைவூட்டுகின்றன. ஆனால் ஒரு ‘வண்டி சோறு’ என்பது போல அல்ல ஒரு பூக்கூடை நிசப்தம் என்பது. ஒரு சொற்கொர்வை அல்லது ஒரு லயம் கொண்ட வரிகள் கவிதைகளை உரக்க வாசிக்கையில் ஒரு சந்தம் கூடி வருகிறது.
//போலச் செய்யப்படுகிற கவிதைகளைப் போல
போலச் செய்யப்படுகிற அன்புகளைப் போல
போலச் செய்யப்படுகிற ரோஜாக்கள் உண்டு
போலச் செய்யப்படுகிற கவிதைகளை
போலச் செய்யப்படுகிற அன்புகளை
போலச் செய்யப்படுகிற ரோஜாக்களை
கண்டுபிடிக்க வழி?
உண்மையில் ஏதுமில்லை
…
…
ஆனால்
போலச் செய்யப்படுகிற ரோஜாக்களை ஏன் கண்டுபிடிக்கவேண்டும்//
பொன்கொன்றையில், கற்றல் என்கிற கவிதை,
கதுப்பை நான் கண்டதில்லை
பூக்கும் பெரும்பாலான மரங்களின் பெயர்கள்
எனக்குத் தெரிவதில்லை
ஆனால் கார் காலம்
என்னைப் போன்றவர்களுக்காக
வருவதை தள்ளிப் போடுவதில்லை
என் வீட்டு வாசலில்
வெட்டி வீழ்த்தப் பட்டிருக்கிறது
பசிய கிளைகளோடு ஒரு மரம்
உலகம் முடிந்துவிட்டது என
அதன் மேல் குதித்து விளையாடுகிறது அணில்
அதன் கனிகளைத் தின்று வளர்ந்தது
அணிலே! உன்னிடமன்றி
மறதியெனும் அருமருந்தை
வேறெங்கு கற்க?
கவிதையின் முதல் ஆறு வரிகள் அங்கேயே சற்று நிற்க வைக்கின்றன. பின் பிந்தைய வரிகள் சேர்ந்து இதை ஒரு தனி் கவிதையாகவே யோசிக்க வைக்கின்றன. முழுக் கவிதையாகப் பார்க்கையிலும் இதில் ஒரு மனவெழுச்சி அளிக்கும் ஆன்மீகம் உள்ளது. படிமத்துக்கு எதிரானவர் என்று சொல்லப்படும் பெருந்தேவியின் கவிதைக்கு மாற்றாக ஒரே கவிதையில் இரு படிமங்களை வைக்கும் கவிதைகளாக ஸ்ரீவள்ளியின் கவிதைகள் உள்ளன.
(3)
தான் தனது கட்டுப்பாட்டிற்குள் இல்லை என்கிற அறிதல் ஆன்மீகத்தின் ஒரு படிநிலை. பொம்மலாட்ட பொம்மை போல நாமும் நம்மை இயக்கும் கயிறாக பிறரை சொல்வதும் கவிதையில் தொடர்ச்சியாக வருபவை. ஸ்ரீவள்ளியின் கவிதையில் அந்த பொம்மை ஒரு மலையேற்றத்தில் நழுவித் தொங்குபவராக வருகிறது. ( பொம்மையின் நூலை ஆட்டாதிரு)
//உன் இதயத்தி்ன் காதுகளை
லேசாகத் திருப்பினால் போதும்
இரைச்சலிடும் காற்றில்
இந்தப் பாறைக்கும் அந்தப் பறக்கும்
மோதிக்கொள்ளாதபடி
என்னை வைத்திருக்கக் கூடாதா//
மீண்டும் வாசிக்கையில் பாறையின் இறுகிய தன்மை வேறொன்றை சுட்டுகிறது.
உனக்காக காத்திருப்பேன் உன் உள்ளங்கையில் இறந்திருப்பேன் போன்ற அடிமை சாசனம் எழுதிக் கொடுப்பதன் வாயிலாக ஒருவர் பெறுவது தான் என்ன.. தாயின் கருவறைக்குள் இருக்கும் சிசு போன்றதொரு பாதுகாப்புணர்வு. அதற்காக குழந்தை தன் பெற்றவர்களிடம் அடிபணிந்து நிற்கிறதா என்பது கேள்வி.. குழந்தைகள் பெற்றோரை ஏவலாளியாகவே நடத்துகின்றன. நேரத்துக்கு உணவிடாவிடில் கத்தி ஊரைக் கூட்டுகின்றன. அந்த அறியாமை ஆணையிடலாகவே நிற்கிறது. தனக்கு விளக்கிப் புரியவைக்கவெல்லாம் வேண்டாம். தனக்கு வேண்டியதை உடனடியாக அளிப்பதே உனக்கு ஆசுவாசம் என சொல்கின்றன.பாரதி கண்ணம்மாவிடம் சரணடையும் போது வேண்டுவது இவ்வாறாக இருக்கிறது
//பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
என்னை கவலைகள் தின்ன தகாதென்று
நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா//
இதில் முன்னிலை பிரதியானவர் இல்லாமற் போகலாம். பொய்த்தும் போகலாம். ஏமாற்றுக் காரர் என அறியப்படலாம். பெருங் கொடுங்கோலராக இருக்கலாம். ஆனால் அவர் பொருட்டு அடியார் / தொண்டர் கொண்ட உணர்வுகள் மாறப்போவதில்லை. ஏனெனில் அது அவருக்குள் நிலை கொண்ட ஒரு பிரபஞ்சம். அதுவே முழுக்க முழுக்க அவரை ஆட்கொண்டிருப்பது. ஒரு கட்டத்தில் அந்த உணர்வுக்குக் கட்டுப்பட்டவராகவும் ஆகிவிடுகிறார்.
சரணாகதியின் பெறுமதி என்பது வைராக்கியம். வைராக்யத்தின் இறுதிநிலை தான் சரணாகதியாகவும் ஆகிறது. அதன் வாயிலாக சுயம் அழிகிறது. ஆனால் கவிஞர் நேர்மாறானாவர். தனது சுயத்தை மீட்டெடுக்கிறார். மற்றோர் தெய்வம் தொழேன் என்பதாக கூறிச் செல்லும் வழியாகவே தன்னை விடுவித்துக் கொள்ள உதவுகிறது. சரணடைவது என்பது பொறுப்புத் துறப்பு அல்ல. அது ஒரு ஆயுதம். அம்பரீசன் கதை போல சரண் அடைந்தவரின் ஆயுதம் என்பது அதைக் கைக்கொள்ளும் இறைக்கும் கட்டுப் பட்டதல்ல. ஸ்ரீவள்ளியின் ஒரு வரி இவ்வாறு பொருள் படுகிறது. நான் உனக்கு அடிமை தான். என்பதால்
எனது உணர்வுகள் உனக்கு கட்டுப்பட்டவை அல்ல (பொருளின் பொருள்)
//உன்னை நேசிக்கிறேன் என்றால்
என் எழுத்தையும் தாதுக்களையும்
எக்கணத்திலிம் நீ அடிமையாகக் கொள்ளக் கூடாது
என்று பொருள்//
இதை உருவமற்ற கவியான ஸ்ரீவள்ளி செய்கையில் இலகுவாக இருக்கிறது. சமூகவலைதளங்களில் மாற்றுப் பெயருடன் காத்திரமான உரையாடல்களைச் செய்பவர்களை பார்க்கிறோம். தமிழில் அதிகம் வாசிக்கப்பட்ட முதல் பத்து கதைகளை எடுத்துக் கொண்டால் அவை மாற்றுப்பெயரில் எழுதப்பட்டதாகவே இருக்கக் கூடும். உருவிலி என்கிற அனுகூலம் வாசகருக்கும் ஏதுவானது.
ஸ்ரீவள்ளிக்கு இணையான தவிப்புகளை எழுதும் கவிஞர்களாக மனுஷ்யபுத்திரன் மற்றும் இசை ஆகியோரைக் குறிப்பிடலாம். ஆனால் அதை ஒரு கட்டத்தில் விளையாட்டாகவோ வேடிக்கையாகவோ கையறு நிலையாகவோ பாவித்து கடக்கவேண்டிய நிலை என்பது ஸ்ரீவள்ளிக்கு தேவையில்லாமல் போகிறது.
தர்க்க மனம் என்பது தனக்கான ஒன்றை வலியுறுத்தல். அங்கு எதிர்வாதம் வரும் போது இன்னொரு உலகம் வருகிறது. அதன் பின்னர் அது இரு வேறு உலகங்களின் உரையாடலாக ஆகிறது. ஒருவரின் உலகத்தில் மற்றவர் நுழைந்து பார்த்தல் என்பது தர்க்கம் கடந்த உறவில் நிகழ்வது. கவிஞருக்கும் வாசகருக்குமான உறவு என்பது அது போன்ற ஒன்று. ஸ்ரீவள்ளியின் கவிதை அதை நிகழ்த்துகிறது. தன் உலகை திறந்து காட்டுகிறது. வெயிலில் வைக்கத் தகாத ஒரு மலர்ப்பந்தாக உள்ளது.
//ஒரு காலத்தில் எத்தனை காலத்தை
பார்க்க முடிகிறது?
அதைப் பொறுத்தே
திறக்கப்படுகன்றன கதவுகள்
பாதைகள் புலப்படுகின்றன
இருத்தலிலிருந்து ஆவதற்கு
ஒருவரிடமிருந்து தொடங்கி
அவரிடமே வந்தடையும் அவற்றில்
இப்போது விளக்குள் ஏற்றப்படுகின்றன// (சரணாகதி)
இந்த தொகுப்பில் சில இடங்களில் வரும் திதலை என்கிற பழந்தமிழ் சொல்.

திதலை என்பது பெண்ணுடலில் பேறு காலத்திற்குப் பின் தோன்றும் வரிகள். திதலை ஒன்று உருவாக கருக்கொள்ள வேண்டும் அதை வளர்த்தெடுக்க வேண்டும். சரணாகதியில் இது ஒரு கொடுக்கல் வாங்கல் போலத்தான். பின்னாளில் கருவாக ஆக வேண்டுமெனில் நாம் முதலில் ஒன்றை கருக்கொள்ளவும் வேண்டியிருக்கறது. நமது ஆழத்தில் அதன் அறிதல் இருந்திருக்க வேண்டியிருக்கிறது.
***