க.நா.சு உரையாடல் – பெருந்தேவி நிகழ்வு
”க.நா.சு உரையாடல்” என்ற இணையவழி கலந்துரையாடல் நிகழ்வை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) ஒருங்கிணைக்கிறது. ஒரு எழுத்தாளரை சிறப்பு விருந்தினராக அழைத்து, அவர்களுடைய படைப்புகளை பற்றி வாசகர்களின் சிற்றுரைகள், அதன்பின் ஒரு மணி நேரம் எழுத்தாளருடனான கலந்துரையாடல் என்பது நிகழ்வின் வடிவம். ஆகஸ்ட் 2022-இல் இருந்து நடத்தப்படும் நிகழ்வில் இதுவரை யுவன் சந்திரசேகர், தாமஸ் ஹிடோஷி புருக்ஷிமா, சுனில் கிருஷ்ணன், பாவண்ணன், தேவதேவன், சுரேஷ்குமார இந்திரஜித் உள்ளிட்ட எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், கவிஞர்கள் உரையாடி இருக்கிறார்கள்.
செப்டம்பர் 14, 2024-ல் எழுத்தாளர் பெருந்தேவி அவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ந்தது. கவிதைகள், கட்டுரைகள், குறுங்கதைகள், மொழியாக்கங்கள் என பெருந்தேவியின் படைப்புலகம் விரிவானது. விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்கள் ஒரு மாதமாகவே பெருந்தேவியின் படைப்புகளை வாசித்து, குழுமத்தில் விவாதித்து அவருடனான கலந்துரையாடலை உற்சாகமாக எதிர்நோக்கி இருந்தோம்.
பாடகி விஷ்ணுபிரியா “யாயும் யாயும் யாராகியரோ” சங்கப்பாடலுடன் நிகழ்வை துவக்கினார். Micro-fiction, flash-fiction, sudden-fiction, short-short-story என குறுங்கதை வடிவங்களை விளக்கி “ஹைன்ஸ்ஹால் கட்டிடத்தில் வாழும் பேய்”, “கோதே என்ன சொன்னால் என்ன” ஆகிய பெருந்தேவியின் குறுங்கதை தொகுப்புகளை முன்வைத்து எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் சிறப்பாக உரையாற்றினார். கழுவேற்றப்பட்டவள், கொசு, ஜானு-ராம், படுக்கையறை, முற்றுப்புள்ளி, பிரதியின் உலகம், உறவு உள்ளிட்ட குறுங்கதைகளை குறிப்பிட்டு தமிழின் முதன்மையான குறுங்கதை எழுத்தாளர் பெருந்தேவிதான் என்றார் சுனில். நண்பர் ஜெயஶ்ரீ “உடல் பால் பொருள்” கட்டுரை தொகுப்பு குறித்து உணர்ச்சிகரமாக பேசினார். “அன்றாடத்தின் மௌனத்தை கலைத்தவர்கள்”, “குட்டி ஸ்டூல்”, கொரொனா வந்த நகரத்தை பற்றிய கவிதை என பெருந்தேவியின் கவிதைகள் குறித்து சிறப்பான அவதானிப்புகளை தன் உரையில் பகிர்ந்துகொண்டார் நண்பர் பழனிஜோதி.
அதன்பின் பெருந்தேவியுடனான கலந்துரையாடல் நிகழந்தது. “சுய அறிமுகம்” என்பதே கடினமான கேள்வி, ஏன் என்றால் தனக்குள் பல “சுயம்” இருக்கிறது – ஒன்று கவிதைகள் எழுதும் சுயம், இன்னொன்று ஶ்ரீவள்ளி கவிதைகளை தொகுக்கும் சுயம், இன்னொன்று கல்லூரி பேராசிரியாரான சுயம் – அதனால் “சுய அறிமுகம்” என தன்னை ஓரிடத்தில் “ஃபிக்ஸ்” செய்வது மிகவும் தொந்தரவு செய்கிறது என்றார். தன் நாடக அனுபவங்கள், தத்துவ பார்வை, எதிர்கவிதை, மொழியாக்கம், மறைந்த தன் பேராசிரியருக்காக செய்யும் நேர்த்திக்கடன் என “Cult of Draupadi” என்ற ஒரு லட்சம் வார்த்தைகள் கொண்ட மூன்று ஆய்வு தொகுதிகளை நிறைவு செய்யும் பணி (இந்த வேலை முடியும்வரை “என்ன இப்ப தூக்கி எழுதுவியா” என தன்னை நோக்கி வரும் தமிழ் கவிதைகளை “கொஞ்சநாள் தொந்தரவு பன்னாம தள்ளிப்போ” என விரட்டிவிடுதல்), தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களின் பற்றாக்குறை என மிக சுவராஸ்யமான உரையாடலாக இருந்தது. ராஜகோபாலன் ஜானகிராமன் தொகுத்து வழங்கினார். ஆஸ்டின் சௌந்தர் நன்றி உரை. பிரகாசமும் நானும் பின்னனி உதவி.
பெருந்தேவி நியூயார்க் சியன்னா கல்லூரியில் துணைபேராசிரியராக இருக்கிறார். பேராசிரியராகவும், உற்சாகமான உரையாடல்காரராகவும், புனைவெழுத்தின் சுவை குன்றாமல் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து செயல்படுவபவராகவும் இருக்கும் ஒருவரை சந்திப்பது அரிதினும் அரிது. இந்த அமர்வில் உரையாடிய ஜெயஸ்ரீ மற்றும் என்னுடைய உரையின் கட்டுரை வடிவம் நீலி இதழின் பெருந்தேவி சிறப்பிதழுக்காக பிரசுரிக்கப்படுகிறது
-விஸ்வநாதன்
(1)
மூச்சே நறுமணமானால் – மொழிபெயர்ப்புகள் ஒரு பார்வை
–விஸ்வநாதன்
“மூச்சே நறுமணமானால்” என்ற கவித்துவமான தலைப்பே முதலில் என்னைக் கவர்ந்தது. சில வருடங்கள் முன்பு இங்கு அமெரிக்காவில் “When Breath Becomes Air” (மூச்சே வெறும் காற்றானால்) என்ற அபுனைவு நூல் புகழ்பெற்றது. இருபது வருடங்கள் கடுமையான கல்வி பயிற்சிக்குபின் நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணராக வாழ்க்கையை துவங்கும் மருத்துவர் புற்றுநோய் தாக்கி இறந்துபோகிறார். “எனக்கு ஏன் இப்படி நடக்கனும்?”, “நான்”, “இருப்பின் துயர்” போன்ற இருத்தியல் கேள்விகள்தான் அந்த நூலின் மையம். ஆனால் இருப்பின் துயர் என்பது நவீன மனிதனுக்கானது மட்டுமா? இருப்பு என்பது உடலா, மனமா, ஆன்மாவா? மூச்சு வெறும் காற்றாகாமல், மூச்சே நறுமணாமானால்?
12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கன்னட வீரசைவ மரபை சேர்ந்த அக்கா மகாதேவியின் வசனகவிதைகளின் மொழிபெயர்ப்பு “மூச்சே நறுமணமானால்”. மொழிபெயர்ப்புகள் மேல் எனக்கு இருக்கும் ஆர்வத்தால் அக்காமகாதேவியின் மற்ற மொழிபெயர்ப்புகளையும் வாசித்தேன்.
ஏ.கே.ராமானுஜன் சிகாகோ பல்கலைகழக பேராசிரியராக இருந்தவர். தமிழ், கன்னடம், ஆங்கிலம் அறிந்தவர். தன் மொழிபெயர்ப்பின் வழியே சங்க இலக்கியத்தை உலகறியச்செய்தவர். குறுந்தொகையில் இருந்து ஆங்கிலத்தில் இவர் மொழியாக்கம் செய்த கவிதைகள் முதலில் அமெரிக்க இலக்கிய இதழ்களிலும், பின்பு “The Interior Landscape Classical Tamil Love Poems” (1967) என்ற தொகுப்பாகவும் வெளிவந்து பரவலான கவனத்தை ஈர்த்தது. வரிக்கு வரி மொழிபெயர்க்காமல் குறுந்தொகையின் கவித்துவ படிமங்களையும், படிமங்களின் அடுக்குகளையும் (“insets” of images) சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார். எனக்கு சங்க இலக்கியத்தை, உரையை வைத்து படித்து பொருள் கொள்வதை விட, இவருடைய ஆங்கில மொழிபெயர்ப்பு சட்டென அந்த காட்சியை கண் முன்னே காட்டியது. ஒரு உதாரணம்:
ஆடமை புரையும் வனப்பிற் பணைத்தோள்
பேரமர்க் கண்ணி யிருந்த ஊரே
நெடுஞ்சேண் ஆரிடை யதுவே நெஞ்சே
ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து
ஓரேர் உழவன் போலப்பெருவிதுப்
புற்றன்றால் நோகோ யானே.
ஓரேழுவனார், குறுந்தொகை 131
(Her arms have the beauty of a gently moving bamboo. Her eyes are full of peace. She is faraway. Her place not easy to reach. My heart is frantic with haste, a plowman, with single ox on land all wet and ready for seed.)
கன்னட வீரசைவ மரபின் வசனகவிதைகளுக்கு ஏற்கனவே ஆங்கில மொழிபெயர்ப்புகள் வந்திருந்தாலும் ஏ.கே.ராமானுஜனின் “Speaking of Shiva“ (1973) நூல்தான் வசனகவிதைகளை ஆங்கிலத்தில் புகழ்பெறச்செய்தது. இந்த நூல் கன்னட வீரசைவ மரபின் நான்கு முதன்மையான கவிஞர்களின் (பசவண்ணர், தேவர தாசிமைய்யா, அக்காமகாதேவி, அல்லம பிரபு) வசனகவிதைகள் அடங்கியது. அந்த நூலிற்கு முப்பது வருடங்களுக்கு பின்பு, அக்காமகாதேவியின் இருநூறு வசனங்களை நாராயண குருகுல மரபில் வந்த வினய சைதன்யா “Songs for Shiva” (2005) என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார்.
என் வாசிப்பில் ஏ.கே.ராமானுஜனின் மொழிபெயர்ப்பில் உடல் அமைந்திருக்கிறது என்றால் வினய சைதன்யாவின் மொழிபெயர்ப்பில் உயிர் அமைந்திருக்கிறது. வினய சைதன்யா இறையனுபவம் என்பதை முன்வைத்துள்ளார்.
Illusion has troubled body as shadow
troubled life as a heart
troubled heart as a memory
troubled memory as awareness.
With stick raised high, Illusion herds the worlds.
Lord white as jasmine
no one can overcome your illusion.
-A.K Ramanujan
Maya has troubled the body as shadow,
Troubled breath as the mind,
Troubled mind as memory,
Troubled memory as awareness,
Troubled awareness as forgetfulness,
With a firm sceptre,
Maya rules the many worlds.
O Channamallikarjuna, jasmine-tender,
Who will overcome the maya
You have spread?
-Vinaya Chaitanya
Illusion என்பதும் Maya என்பதும் வேறு. ஏ.கே ராமானுஜனின் மொழிபெயர்ப்பில் சில வரிகளும் விடுபட்டிருக்கிறது. சென்னமல்லிகார்ஜுனர் என்ற பதத்தின் மொழிபெயர்ப்பு தரும் பொருளும் வேறு. மேலும் ஏ.கே ராமானுஜத்தின் கவிதை காட்சிகளாக விரியும்போது, வினய சைதன்யா இசைத்தன்மையையும் முதன்மைப்படுத்தியிருக்கிறார். உதாரணமாக கீழே இருக்கும் பாடலை சத்தமாக படித்து பார்க்கவும்.
Monkey on monkeyman’s stick
puppet at the end of a string
I’ve played as you’ve played
I’ve spoken as you’ve told me
I’ve been as you’ve let me be
O engineer of the world
lord white as jasmine
I’ve run till you cried halt
-AK Ramanujan
Like the monkey at the tip of a pole,
Like the puppet at the end of a string,
I played as you made me play,
I spoke as you made me speak,
I stayed as you made me stay:
Till Channamallikarjuna, jasmine-tender,
The machinist of the world,
Said ‘Enough’
-Vinaya Chaitanya
“Speaking of Shiva”, “Songs for Shiva” என முந்தைய நூல்களின் தலைப்புகள் இருக்கும்போது, “மூச்சே நறுமணமானால்” என்ற தலைப்பே இது கவிதை நூல் என்று சொல்லிவிடுகிறது.
பெருந்தேவி தன் வகுப்புகளில் ஏ.கே.ராமானுஜனின் “Speaking with Shiva“ நூலை பாடமாக மாணவர்களுக்கு நடத்தியிருந்தாலும், வினய சைதன்யாவின் மொழிப் பயன்பாடும், அவருடைய நூல் தந்த மனஎழுச்சியே தான் மொழிபெயர்க்க காரணம் என்றார். ஒரு வேகத்தில் எழுபது கவிதைகளை மொழிபெயர்த்தபின், வினய சைதன்யாவை தொடர்பு கொண்டு, பின்பு அவருடன் கோவாவில் உடன் அமர்ந்து, அவர் கன்னட மூலத்தை வாசிக்க, அதை கேட்டு பெருந்தேவி செய்த மொழிபெயர்ப்பு இது. கலந்துரையாடலில் கன்னடத்தில் இருந்து தமிழிற்கு செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு என்றே சொல்லவேண்டும் என்றார்.
சங்க இலக்கியம் போன்ற படிமங்கள் நிறைந்த கவிதைகளை (poetic images) மொழிபெயர்ப்பது ஒப்புநோக்க எளிது. ஆனால் இசைத்தன்மை உடைய கவிதைகளை தமிழ்-ஆங்கிலம் போன்ற தொடர்பற்ற மொழிக்குடும்பங்கள் இடையே மொழிபெயர்ப்பது கடினம். கன்னடமும் தமிழும் ஒரே மொழிகுடும்பம் என்பதால் கன்னடத்தில் இசைத்தன்மையுடன் இருக்கும் வசனங்கள் தமிழில் தித்திக்கின்றன.
Over his red, radiant matted locks
Shines the tender white crescent…
[Vinaya Chaitanya]
ஹொலவ கெஞ்செடய மெலெ எலிவெல திங்களு…
[கன்னட மூலம் – கூகிள் transliterate உதவியுடன்]
ஒளிரும் செஞ்சடைகள் மேலே ஒளிரிளம் வெண்திங்கள்
[பெருந்தேவி]
தமிழும் கன்னடமும் ஒரே மொழிக்குடும்பமாக இருந்தாலும், இணையத்தில் நான் தேடியவரை ஏற்கனவே இருக்கும் தமிழ் மொழிபெயர்ப்புகள் எதையும்விட பெருந்தேவியின் மொழிபெயர்ப்பே சிறந்தது. பெருந்தேவியின் சொற்தேர்வும், அவரும் ஒரு கவிஞர், புனைவெழுத்தாளர் என்பதுமே காரணங்கள்.
நிலத்தின் மறைவில் புதையலைப் போல
கனியின் மறைவில் சுவையைப் போல
பாறையின் மறைவில் பொன்னைப் போல
எள்ளின் மறைவில் எண்ணெயைப் போல
மரத்தின் மறைவில் தீயைப் போல
பவத்தின் மறைவில் பரம்பொருளாயிருக்கும்
சென்னமல்லிகார்ச்சுனனின் நிலையை
அறிவார் எவரோ?
–பெருந்தேவி
நிலத மறைய நிதாநதன்தெ
ஃபலத மறைய ருசியன்தெ
ஷிலய மறைய ஹேமதன்தெ
திலஜ மறைய தைலதன்தெ
மரத மறைய தேஜதன்தெ
பாவத மறைய பிரம்மவாகிப்ப
சென்னமல்லிகார்ச்சுன நிலவனாரூ
அறிய பாரது?
(கன்னட மூலம் – கூகிள் transliterate உதவியுடன்)
“வினய சைதன்யாவின் தொகுப்பில் இருநூறு வசனகவிதைகள் இருக்கிறது. உங்களுடைய மொழிபெயர்ப்பில் நூற்றிருபது கவிதைகள் இருக்கிறது. கவிதைகளை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்?” என்று பெருந்தேவியிடம் கேட்டேன். “கவிதைகளை மொழிபெயர்ப்பது கஷ்டம். ‘மொழிபெயர்ப்பாளர்கள் துரோகிகள்’ என அசோகமித்ரன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். துரோகம் தான் பன்றோம். குறைச்சலான துரோகம் பண்ணலாமே. எதை ஓரளவிற்காவது மொழிபெயர்க்க முடியும், எதை கொஞ்சமாகவாவது கொண்டுவர முடியும், அதன் சாயையை காமிக்க முடிஞ்சா பெரிய விஷயம். இன்னுமே பண்ணியிருப்பேன். ஆனா அதிகமா பண்றதெல்லாம் வேலைக்கே ஆகாது என்று தோன்றியது. அதையெல்லாம் தூக்கி வைத்துவிட்டேன். சாயை காட்டக்கூடியது, குறைந்தபட்ச துரோகம் என்பதுதான் கிரைட்டீரியா” என்றார்.
சுரங்க தொழிலில் பிராஸ்பெக்டர் (prospector) என்பவர்தான் ஒரு கணிமத்தின் சுவடுகள் எங்கே இருக்கின்றன என்று முதலில் கண்டுபிடித்து சொல்பவர். சிறந்த மொழிபெயர்ப்பாளர் பிராஸ்பெக்டர் போன்றவர். தன் மொழிபெயர்ப்பின் வழியே, கவிதைகள் தேர்வின் வழியே அயல்மொழியின் பொன்ரேகைகளை நமக்கு காட்டுபவர். அவர் இல்லாமல் நாமாக போய் பார்த்தால் தங்கமே ஆனாலும் கல்லும் மண்ணுமாகத்தான் தெரியும். பிரித்தறியவே முடியாது. பெருந்தேவி அக்காமகாதேவியின் வசனங்களை அகழ்ந்து, தமிழில் புடம் போட்டு, பொன் நகையாக கண் முன்னே காட்டியிருக்கிறார்.
*
விஸ்வநாதன் – எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். “இரு கடல் ஒரு நிலம்” என்ற பயண நூல் சமீபத்தில் வெளிவந்துள்ளது. அமெரிக்காவின் சான் பிராண்சிஸ்கோவில் மென்பொருள்துறையில் பணிபுரிகிறார்.
(2)
பெருந்தேவியின் அபுனைவுகள் வாசிப்பனுபவம்
-ஜெயஸ்ரீ
உடல் பால் பொருள்
2017-ல் எழுந்த Mee too இயக்கத்தின் பின்னணியில் பாலியல் வன்முறை என்னும் சமூக நோய்க்கூற்றின் பல்வேறு பரிணாமங்களைக் கோட்பாட்டுப் பின்புலத்துடன், சமூக யதார்த்தங்களுடன், சில தமிழ் இலக்கியப் பிரதிகளையும் முன்வைத்து ஆராய்கிறார் பெருந்தேவி. இதுதவிர பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல், பால் அடையாளங்களின் உருவாக்கம், காமம் பேரப்பொருளாகவும், இந்த பேரத்தில் பெண் பகடைக்காயாகவும் மாறுதல், மீ-டூ (Me too) இயக்கம் உருவாக்கிய விழிப்புணர்வினால் திறக்கும் புதிய பாதைகள் என நூல் பல தளங்களில் விரிகிறது.
Me Too இயக்கத்தில் புகாரளித்த பெண்களை நோக்கி “நடந்தபோதே எதிர்த்திருக்கலாமே” என்ற கேள்விகள் எழுந்தன; எழுகின்றன. கோகாய் விஷயத்தில் நீதிபதிகளிடமிருந்தே இந்தக் கேள்வி எழுந்தது. பணியிடங்களிலும் பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்த போது எதிர்ப்புத் தெரிவிக்காமை சம்மதமாகவே பொருள் கொள்ளப்படுகிறது. அறிவுச் சமூகத்தில்கூடப் பாலியல் உறவில் பெண்ணின் ’சம்மதம்’ என்கிற இன்றியமையாத அம்சம் இன்று வரை சரியாக அணுகப்படவோ, புரிந்துகொள்ளப்படவோ இல்லை என்பதை சுட்டிக் காட்டி, எதிர்ப்பு இல்லாதபோதும் பாலியல் துன்புறுத்தல் நடைபெற்ற பின்னணியை ஆராயவேண்டிய அவசியத்தை நூல் வலியுறுத்துகிறது. வெளிப்படையாக திட்டவட்டமான ஒப்புதல் அல்லாத எதுவுமே சம்மதத்தைக் குறிக்காது; மௌனம் சம்மதம் அல்ல. ஒப்புநோக்க பாலியல் சுதந்திரம் அதிகம் உள்ள மேற்குலகிலும் கூட இதுபற்றிய புரிதலில் குறைபாடுகள் உண்டு. இதுபற்றிய மிகக் குறைந்த புரிதல் உள்ள, ‘கற்பு’ என்ற கோட்பாடு வலுவாக வேரூன்றியிருக்கும் நம் சமூகம் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய பல விஷயங்கள் இக்கட்டுரைகளில் இடம் பெறுகின்றன.
இலக்கியப் பிரதிகளை வைத்து வல்லுறவு என்னும் சமூகநோய்க்கூற்றை ஆராயும்போது ஆழமான புரிதல்களைக் கண்டடைகிறார் பெருந்தேவி. புதுமைப்பித்தனையும் ஜெயகாந்தனையும் முதன்மை பெண் உளவியல் பார்வையாளர்களாக நமக்கு இந்நூலில் அறிமுகம் செய்கிறார் . நம் சமூகத்தில் வல்லுறவைக் குறிக்க கற்பழிப்பு என்ற சொல்லாடலே மிகச் சமீபம் வர வழங்கி வந்திருக்கிறது. சமூகத்தின் நனவிலி (subconscious) மனத்திலிருந்து வரும் இந்த சொல் சமூகத்தில் வல்லுறவுக்குள்ளான பெண்ணின் இடத்தை, நிலையைச் சொல்லிவிடுகிறது. வல்லுறவுக்கு ஆளான பெண் குற்ற உணர்வையும், வல்லுறவுக்கான அடையாளத்தையும் என்றும் சுமந்தாக வேண்டியிருக்கிறது. சுந்தர ராமசாமியின் ‘திரைகள் ஆயிரம்’ கதையில் மாரியம்மா என்ற பெண் வல்லுறவுக்கு ஆளாகிறாள். சில நாள்கள் கழித்து அந்தப் பெண் இயல்பாக உடை அணிந்து எல்லோரிடமும் சாதாரணமாகப் பேசியதால் சுற்றி உள்ளவர்கள் வல்லுறவு நடக்கவே இல்லை, அது மட்டுமல்ல “அவள் சரியில்லை” என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். அபலையாக, வல்லுறவுக்கான அடையாளத்தை சுமக்காததால் அது நடக்கவே இல்லை என்று ஆகிறது.
பாலுறவில் சம்மதம் என்பது என்ன என்பதை இலக்கியப் பிரதிகளைக் கொண்டு ஆராயும்போது. ஜெயகாந்தனின் ‘அக்னிபிரவேசம்’ சிறுகதையையில் அந்த சிறு பெண்ணுக்கு நிகழ்ந்தது வல்லுறவே என்பதற்குப் பிரதியிலேயே போதிய சான்றும் இடமும் உள்ளது சுட்டிக் காட்டப்படுகிறது. எதிர்க்கவோ, தப்பியோடவோ முனையாததால் அவள் அவனுக்கு வசப்பட்டாள் மற்றும் சூயிங்கம்மை அவள் கடைசி வரை மென்றுகொண்டிருந்த அனிச்சைச் செயல் அவளது உள்மனத்தின் வெளிப்பாடு என்ற பார்வைகளும் உள்ளன. எதிர்த்துப் போராடவோ தப்பியோடவோ முனையவில்லை என்பது அவள் சம்மதித்ததாக ஆகாது. அச்சுறுத்தும் சூழலின் எதிர்வினைகள் flight or fight மட்டுமல்ல, Freeze ஆகவும் இருக்கலாம். அந்தச் சிறு பெண் செயலற்று உறைந்து விடுகிறாள். இங்கு ‘கதறக் கதற’ என்ற பதத்தை ஜெயகாந்தன் தேய்வழக்காக உபயோகிக்கவில்லை. அவள் தாய் தண்ணீரைத் தலையில் கொட்டி துவட்டும்போதும் சூயிங்கம்மை மென்று கொண்டிருப்பதற்கு அதிர்ச்சியில் அதைத் துப்பத் தோன்றவில்லை என்று பொருள் கொள்ளலாம். Sometimes a Cigar is just a Cigar என்பது பெருந்தேவியின் நிலைப்பாடு.
பாலியல் துன்புறுத்தலுக்கோ, சீண்டலுக்கோ உள்ளானவர்கள் குறித்து ‘She/he also would have enjoyed’ என்று போகிறபோக்கில் காதில் விழுந்த நுண்ணுணர்வற்ற (insensitive) பேச்சுகள் பதற்றத்தை அளித்துள்ளன. இந்த நூலில் பாலியல் உறவில் சம்மதம் பற்றிய புரிதலில் உள்ள மிகப்பெரும் பிழையைக் குறுகிய பாலத்தைக் கடக்கும் லாவகத்துடன் தெளிவுபடுத்ததுகிறார் பெருந்தேவி.இது பலருக்கும் மிகப்பெரிய திறப்பாக இருக்கக்கூடும். இந்த நூலின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்று-
“பாலியல் சுகத்தை உணர்தல் வேறு; அதற்கான விருப்பம் வேறு; இணக்கம் வேறு. இந்த மூன்றையுமோ அல்லது மூன்றில் ஏதோ இரண்டையுமோ ஒருங்கிணைத்துவிடுவதுதான் (conflate) பாலியல் உறவில் ஒருவரது ‘சம்மதம்’ பற்றிய நமது புரிதலில் இருக்கும் ஆகப் பெரிய கோளாறு”.
அக்னிப் பிரவேசத்தில் காரில் அருகில் அமர்ந்தபோது அவளுடைய உடல் அவனது அணுக்கத்தை விரும்பியிருக்கவும் கூடும். உடலின் தன்மை அது. அவனால் அவள் ஈர்க்கப்பட்டிருக்கலாம் என எண்ணவும் பிரதியில் இடம் உண்டு. ஆனால் உயிரியல் எதிர்வினையாக பாலியல் சுகத்தை உணர்தல் வேறு; விருப்பம் வேறு; சம்மதம் வேறு. கை கால்களைக் கட்டிப்போட்டு வலுக்கட்டாயமாக ஒருவரது வாயில் திணிக்கப்படும் சர்க்கரை சுவை அரும்புகளின் தன்மையாலும், சர்க்கரையின் தன்மையாலும் இனிக்கலாம். சர்க்கரை இனிப்பதால் அச்செயலும் அத்துமீறலும் சரி என்று ஆகுமா?
தண்ணீரைத் தலையில் கொட்டி “உன்மேல கொட்டினது ஜலமில்லை.நெருப்புன்னு நினைச்சுக்கோ” என்ற அந்தத் தாய் செய்தது புரட்சியா?, மரபு மீறலா? அதையெல்லாம் தாண்டி அவள் அசிங்கத்தை மிதித்த காலைக் கழுவுவதுபோல, வல்லுறவின் ஞாபகத்தை அகற்ற முனைகிறாள். மற்ற விபத்துகளைப் போலல்லாமல், வல்லுறவில் வன்முறையைத் தாண்டி பாலியல் பாதிக்கப்பட்டவரைப் பெருஞ்சுமையாக அழுத்துகிறது. வல்லுறவிலிருந்து அந்த சுமையை, பாலியலை அகற்ற முனையும் பெரும் பாய்ச்சலின் காரணமாக ‘அக்னிப் பிரவேசம்’ சிறுகதையை முதன்மைப் பெண்ணியப் பிரதியாகப் பார்க்கிறார் பெருந்தேவி. மிஷல் பூக்கோ(Michel Foucault) வல்லுறவிலிருந்து பாலியலை அகற்றிவிட வேண்டும் என்று வாதாடியவர். அப்படி அகற்ற முடியுமா என்பது மிகுந்த விவாதத்துக்குரியது. ஆனால் அப்படி அகற்ற முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
இந்தக் கதையின் கதாபாத்திரங்கள் இதற்கு எதிர் திசையில் செல்லும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலிலும் கங்காவின் சிதைவு அவள் வல்லுறவின் அடையாளத்தைச் சுமப்பதால் அல்ல; அவளது காதல் கைகூடாமல் நிராகரிக்கப்படுவதாலேயே. மாறாக பிரபு கங்காவின் இருப்பு தான் புரிந்த வல்லுறவை நினைவுபடுத்துவதாலேயே, அந்த அடையாளத்தைச் சுமக்க விரும்பாததாலேயே கங்காவை நிராகரிக்கிறான்.
இன்றிலிருந்து கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் முன்பு எழுதப்பட்ட ‘விபரீத ஆசை’ சிறுகதையில் புதுமைப்பித்தனின் நவீனப் பார்வை நிகழ்த்துவது இதைவிடப் பெரிய பாய்ச்சல். நண்பன் மரணப் படுக்கையிலே அல்லது அவன் இறந்தே விட்ட நிலையில் அவன் மனைவியுடன், தன்னை அண்ணா என்று அழைக்கும் பெண்ணுடன் கதைசொல்லிக்கு உறவு நிகழ்ந்துவிடுகிறது. அந்தப் பெண்ணிடமிருந்து எதிர்ப்புக்கான சிறு சமிக்ஞையும் இல்லை. அதற்குப்பின் கதைசொல்லி குற்ற உணர்வாலும், பிணத்தைப் புணர்ந்தது போன்ற இழிவுணர்வாலும் மனம் பிறழும் நிலைக்கே செல்கிறான். இந்த நூலைப் படிக்கும் வரை உயிர் நண்பனுக்கு மரணத்தருவாயில் செய்த துரோகத்துக்கான/ சகோதரியாக நினத்த பெண்ணுடன் உறவு கொண்டதற்கான குற்ற உணர்வாகவே என் வாசிப்பில் அதைப் பொருள் கொண்டு “அவள் பிணமாக இருந்தாள்” என்ற தற்கூற்றைத் தவற விட்டிருந்தேன். குற்ற உணர்வு சமூகம் விதிக்கும் ஒழுக்கவியல் விதிகளை மீறியதால் அல்ல. எதிர்ப்புக்கான சிறு அறிகுறி கூட இல்லாததையோ அவளது பிணம் போன்ற செயலற்ற நிலையையோ அவளது சம்மதமாக கொள்ளக்கூடாது என்ற புதுமைப்பித்தனின் நிலைப்பாட்டையும் நிபந்தனையையும் பிரதி முன்வைப்பதால்தான் கதைசொல்லியின் மனம் “அவள் பிணமாக இருந்தாள், நான் மிருகமாக இருந்தேன்” என்று சித்திரவதைப்படுகிறது. வல்லுறவுக்கான முழுப்பொறுப்பும், குற்ற உணர்வும், உளச் சித்திரவதையும் முதன்முறையாக வல்லுறவை நிகழ்த்தியவர் மேல் சுமத்தப்படுகிறது.
பணியிடங்களில் சம்பந்தப்பட்டவரின் நிறுவன அதிகாரம், பதவி, மறுப்பதன் எதிர் விளைவுகள் குறித்த அச்சம் போன்றவை சம்மதம் பெறக் காரணமாக அமையுபோது அதையும் பாலியல் துன்புறுத்தலாகவே கொள்ள வேண்டும். ஆணானாலும், பெண்ணானாலும் துன்புறுத்தலுக்கு இலக்கானவர் எப்படி உணர்கிறார் என்பதை வைத்தே ஒரு செயல்பாடு பாலியல் ரீதியான துன்புறுத்தலா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துவதோடு பாலியல் துன்புறுத்தலாகக் கொள்ளப்படக்கூடிய செயல்களின் நீண்ட பட்டியலையும் அளித்திருக்கிறார் பெருந்தேவி. இந்தத் தலைமுறை ஆண், பெண்கள், அனைவரும் வாசிக்க வேண்டிய மிக முக்கியமான நூல். தமிழில் இத்தனை துல்லியமான, விரிவான தரவுகளுடன் இந்தப் பொருளைப் பேசிய முதல் நூல் ‘உடல் பால் பொருள்’. பெருந்தேவியின் கோட்பாட்டு ரீதியான பார்வையும், தர்க்கரீதியான அணுகுமுறையும் இந்த நூலை முன்னுரையில் அரவிந்தன் குறிப்பிடுவதுபோல சுயசிந்தனை கொண்ட அசலான பெண்ணியப் பிரதியாக்குகின்றன.
கவிதை பொருள் கொள்ளும் கலை
ஒரு கவிதை தரும் அனுபவத்தை அப்படியே உள்வாங்கி ரசிப்பதற்குப் பதிலாக கோட்பாடு என்ற சட்டகத்தில் கவிதையை வலிந்து பொருத்தி நோக்கவேண்டுமா என்ற கேள்வி வரலாம். கவிதை வாசிப்பு/ ரசனையின் முதல் படிநிலையில் இதே கேள்வியுடன் இருந்த எனக்கு நல்ல கவிதைகளை அடையாளம் காணவும், அவற்றை மேலும் நெருக்கமாகப் புரிந்து கொள்ளவும் கோட்பாடுகள் எப்படி உதவும் என உணர்த்தி, வாசிப்பின் சில சாளரங்களைத் திறந்தது பெருந்தேவியின் ‘கவிதை பொருள் கொள்ளும் கலை’. நூலிலுள்ள கட்டுரைகள் தத்துவ சிந்தனைகள், மேற்கத்திய கலை மரபுகள், இந்திய பக்தி மரபுகள் போன்றவற்றின் துணை கொண்டு ஆத்மாநாம், நகுலன், அபி, பிரம்மராஜன், சேரன், மனுஷ்ய புத்திரன், பாரதி, திரிசடை, ஞானக்கூத்தன் ஆகியோரின் சில கவிதைகளை நுணுக்கமாக அணுகுகின்றன. நவீன கவிதைகளை எப்படியெல்லாம் வாசிக்கலாம் என எழுதிப்பார்த்த முயற்சிகள் இவை என்று பெருந்தேவி குறிப்பிடுகிறார்.
மனிதனுக்கும் இயற்கைக்கும் நடுவிலுள்ள பிளவையும், அதைத் தாண்டி இயற்கையோடு ஒன்றாக ‘பிரபஞ்ச நானாக’ மறுவதற்கான ஏக்கம் ஆத்மாநாமின் சில கவிதைகளின் பேசுபொருளாக இருக்கிறது..
“ஏரி காத்துக்கொண்டிருக்கிறது. வானம் முக அலங்காரம் செய்துகொண்டிருக்கிறது, மண் ரயிலை வேடிக்கை பார்க்கிறது, ஏனோ நான் மட்டும் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன்”
இந்த ‘ஏனோ’ வில் இயற்கையுடன் ஒன்ற முடியாத ஏக்கம் தொனிக்கிறது.
‘சூழல்’ என்ற கவிதையில்
“இவ்வேரியின் சலனம் உன்னுடையதோ என்னுடையதோ அல்ல, அது எவ்வேரியின் சலனம்தான், நாம் ஏன் ஏரிகளாய் இருக்கக்கூடாது?’
என்ற வரிகளில் இயற்கை மனிதனின் நுகர்வுக்காக இருக்கிறது என்னும் மனித மையப் பார்வையை மறுத்து மனிதன் இயற்கையின் கூறாக மாற வேண்டுவதற்கான கோரிக்கை தொனிக்கிறது. பரந்து விரிந்த இருப்பில் அனைத்தும் ஐக்கியமாவது பற்றிய குறிப்பும் மற்றொரு கவிதையில் உண்டு.
பெருந்தேவி இந்தக் கவிதைகளை தத்துவ அறிஞர் ஹைடெக்கரின் ‘ ‘hearkening’ என்ற கோட்பாட்டின் மூலம் விளக்குகிறார். ‘Hearken’(to give respectful attention) என்பதற்கு அமைதியாக ’ ‘செவிகொடுத்தல் என்று பொருள். இதன் அடிப்படையில் ஆத்மாநாமின் கவிதைகள் இருத்தலின் ஆதி குரலுக்கு செவிகொடுத்தல், இயற்கைக்கு செவிகொடுத்தலை முன்மொழியும் கவிதைகளாகப் பொருள்தருகின்றன. பூமியிலுள்ள மற்ற உயிரினங்கள், உயிரற்றவை என அனைத்துடனும் இயற்கையை கூட்டுக் கனவாக அனுபவிக்கும் ஆவல் ஆத்மாநாமின் கவிதைகளில் தொனிக்கிறது. இயற்கைக்குச் செவி கொடுக்காமல் இந்தக் கூட்டுக் கனவு சாத்தியமில்லை. செவிகொடுத்தல் என்ற சொல்லாடலுக்குக்குபின் இந்த கவிதையின் பொருள் மேலும் துலக்கம் பெறுகிறது. நீட்சே, ஃபூக்கோ போன்றவர்களும் மற்றமையை,மனிதரல்லாத உயிர்களை அங்கீகரித்து, அவற்றால் அங்கீகரிக்கப்பட்டு வாழ்தலே (intersubjective responsibility) மானுட இனத்தின் மாண்பென வகுக்கின்றனர். ஞானக்கூத்தனின் கவிதைகளிலும் பகடி, நவீனத்துவம் போன்றவை தாண்டி இதேபோன்று கூறுகளைக் கண்டு மனிதமையத்தை மறுத்து,மற்றமையை அங்கீகரிக்கும் பரந்த ஞானமே ஞானக்கூத்தனின் கவிதைகளின் தத்துவ அடிப்படை என வகுக்கிறார்.
நகுலனின் கவிதைகளில் இடம்பெறும் அடையாள மயக்கத்தை தானற்ற நிலையாகக் காண்பதைவிட இருத்தல் குறித்த பொருண்மையான விசாரமாக அடையாளப்படுத்துகிறார்.
சேரனின் ‘அஞர்’ தொகுப்பிலுள்ள கவிதைகள் கால் நூற்றாண்டுக்கால இன விடுதலைப் போராட்டத்தின் எதிர்ப்பையும், எதிர்பார்ப்பையும், தவிப்பையும், கொதிப்பையும், ஆற்றாமையையும், முடிவற்ற ஒரு பெருங்கனவையும் சொல்பவை. இக்கவிதைகளின் உரிப்பொருள் அஞர் (trauma வுக்கு என்ன அழகான தமிழ்ச்சொல்). அஞரை பெருந்தேவி வன்நினைவின் நெருக்கடி என்று பொருள் கொள்கிறார். எந்த ஒரு துன்பியல் நிகழ்வையும், பெருந்துயரையும் நினைவில் மீட்டிக்கொள்வதன் மூலம் சிறிதளவாவது ஆற்றிக்கொள்ளவோ, அர்த்தப்படுத்திக்கொள்ளவோ முடியும். ஆனால் trauma அப்படி அல்ல. ஒரு வன்நிகழ்வை எளிதாக நினைவுபடுத்திக்கொள்ளவோ, வெளிப்படுத்தவோ முடியாத நிலையே அஞர் என்று ஜோஷ்வா ஹர்ஷ் போன்ற அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். வெளிப்படுத்த முடியாததால் அது மறக்கப்படுவதுமில்லை; எதிர்பாராத நேரங்களில் முழு வேகத்துடன் வெளிப்பட்டு நிலைகுலைய வைக்கும் தன்மை அதற்கு உண்டு. இந்தப் பின்னணியில் இனப்படுகொலையும், புலப்பெயர்வும் தந்த அஞரிலிருந்து மீள முடியாமலும் மீள வழிதேடியும் சேரனின் கவிதைகள் அலைவதை சுட்டிக்காட்டுகிறார் பெருந்தேவி. மீள்வதற்காக நினைவை மீட்டிக்கொண்டு இழப்பபை அர்த்தப் படுத்திக்கொள்வதும் எளிதாக இல்லை.
“அகக்காயங்களில் எப்போதும் கனன்று கொண்டிருக்கும்
தீக்கு ஓய்வு வழங்க முடியுமா நம்மால் ?”
இதற்குப்பின் சேரனின் கவிதைகளில் வினைச்சொற்களின் கால மயக்கமும், காலத்தின் தொடர்பற்ற நிலையும், திணை மயக்கங்களும், விடுபடல்களும் இருட்கருவாக, ஆறாத ரணமாக நிற்கும் வன்நினைவாகப் பொருள் தருகின்றன. சேரனின் கவிதைகளின் அஞர் நிலையும், அலைக்கழிப்பும் இப்பொது மனதை உலுக்குகின்றன. பெருந்தேவி சொல்வதுபோல் மௌனமாகத் தலையசைத்தல் தவிர என்ன செய்ய முடியும்?
பள்ளிப்பருவம் தொட்டு இன்றுவரை எனக்கு தேசியப் பாடல்கள்,பாஞ்சாலி சபதம் போன்ற படைப்புகளைவிட பாரதியின் சில தோத்திரப் பாடல்கள் அளிக்கும் மன எழுச்சிக்கான காரணம் புரிந்ததில்லை.’வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்’-எளிய பாடல்தான். சரஸ்வதி பூஜையன்று சகலகலாவல்லி மாலை தொடங்கி கற்ற அத்தனை கலைமகள் துதிகளைவிட இந்தப் பாடலை வாசிக்காமல் கலைமகள் வழிபாடு முழுமை பெறாது எனத் தோன்றும். பாரதி வணங்கும் கலைமகள் கலைஞர்கள், அறிஞர்கள் மனதிலும், இசையிலும், ஓதும் வேதத்திலும் மட்டும் உள் நின்று ஒளிர்பவள் அல்ல. வஞ்சமற்ற தொழில் செய்யும் கொல்லர்,தச்சர், வணிகர் அனைவர்க்கும் தெய்வம், கைவருந்தி உழைப்பவர் தெய்வம்;
“செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்
செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்”
இப்படி சொல்லிக்கொண்டே வந்து கடைசியில் ‘நகர்களெங்கும் பலப்பல பள்ளி’, “ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”, “எதுவும் நல்கி இங்கு எவ்வகையானும் இப்பெருந் தொழில நாட்டுவம் வாரீர்! “ என்று விஷயத்துக்கு வந்து விடுகிறார்.நவீன யுகத்தில் கல்வித் தெய்வம் இப்படித்தானே பொருள்பட வேண்டும்? அன்னிய ஆட்சியில் அறியாமையில், வறுமையில் இந்தப் பாடல் எழுதப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை கல்வியால் இந்த சமூகம் அடைந்திருக்கும் வளர்ச்சியை எண்ணும்போது பாரதியின் நவினப் பார்வை ஆச்சரியமளிக்கிறது.
பெருந்தேவி தமிழ் நவீனத்துவத்தின் செறிவான, வலுவான தொடக்கமாக பாரதியையே முன்வைக்கிறார். தேச விடுதலை, பெண்ணுரிமை, சமூக நீதி, நவீனக் கருத்தாக்கங்கள், ஐரோப்பியக் கல்வி இவற்றுடன் (விவேகானந்தரும் ராமகிருஷ்ணரும் முன்னெடுத்த) நவவேதாந்தத்தின் செல்வாக்கும் இணைந்து பாரதி கட்டமைத்த சுய பொறுப்புடன் கூடிய நவீனத் தன்னிலையை (சுயம் என்ற சொல்லைவிட தன்னிலை என்ற சொல்லையே பொருத்தமானதாகக் கொள்கிறார்) நவீனத் தமிழ் இலக்கியத்துக்கும், சமூகத்துக்கும் பாரதியின் மிகப்பெரிய கொடையாகக் காண்கிறார். வள்ளலார், தாயுமானவர் ஆகியோரின் நீட்சியாக இருந்தபோதும், பாரதியின் பாடல்களில் சுய மீட்சிக்காக மட்டும் கடவுள் நாடப்படுவதில்லை. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியதோடு அல்லாமல் அவை வாடாமல் செழிக்க நவீன உலகின் பிரதிநிதியாக தான் செய்யக் கூடுவது என்ன என்று வினவும் சுய பொறுப்புடன் கூடிய நவீனத் தன்னிலை எல்லா நலனையும் நீ செய் என வேண்டுவதில்லை. எனக்காகவும், சமூகத்துக்காகவும், உலகுக்காகவும் நலன்களை அடையும் செயல்களை நான் செய்கிறேன். நீ செயல்திறனைத் தா எனக் கேட்கிறது. அவருடைய பல தோத்திரக் கவிதைகளில், இறைக்கு முன்னாலும் இந்த ‘நான்’ வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
“வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே”
“கலிசாடும் திறன் எனக்குத் தருவாய்-அடி தாயே உனக்கரியதுண்டோ”
என்னும்போதும் இந்தத் தன்னிலையே வெளிப்படுகிறது. வள்ளலாரிலும், தாயுமானவரிடமும் காணப்படும் ‘நான்’-ஐத் துறப்பதற்கும், நவீன யுகத்திற்குத் தேவையான பாரதியின் இந்தப் பொறுப்புள்ள தன்னிலைக்கும் உள்ள வேறுபாட்டையும் அதில் தாந்திரீக, சாக்த, வைணவ மரபுகளின் தாக்கத்தையும் சுட்டிக்காட்டுகிறார் பெருந்தேவி. இந்தத் தன்னிலை உலக வெற்றி மட்டுமன்றி ஆன்மிக விடுதலையையும் (“யோகத்திருத்திவிடு அல்லாலெந்தன் ஊனைச் சிதைத்துவிடு”, “ தசையினைத் தீச்சுடினும்..”) வேண்டுகிறது.
ஒரு எளிய வாசகியாக, பக்தையாக இத்தனை வருடங்களாக பாரதியின் தோத்திரப் பாடல்கள் எனக்கு அளித்துவரும் மனஎழுச்சி எதன் பொருட்டு என்று இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது புரிந்தது. என் கவிதை வாசிப்பின் அனைத்து போதாமைகளையும் தாண்டி எங்கோ ஓர் ஓரத்தில் அதை நான் உணர்ந்து கொண்டிருந்ததை அறியும்போது மனம் நிறைவு கொண்டது.
*
ஜெயஸ்ரீ: கணித ஆசிரியை. இலக்கிய வாசகர். தமிழ்விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் பங்களிப்பாளர். அமெரிக்காவின் பாஸ்டனில் குடும்பத்துடன் வசிக்கிறார்.
***