தேவரடியார்கள் – உரிமைகள், பெருமைகள்: வீர. ராஜமாணிக்கம்

தேவரடியார்கள்

அரசியல் பரப்புரை இயக்கங்களின் வழக்கப்படி ஒரு நடைமுறை ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் போது அதில் ஏற்படும் அற வீழ்ச்சி, நடைமுறை சமரசம், அதன் இருண்மை பக்கங்களை மட்டுமே தேர்வு செய்து, கவன ஒளியில் இருத்தி, அந்த ஒட்டு மொத்த நடைமுறையை இழித்து பழிப்பதும், அதை தங்களின் அரசியல் நோக்கங்களுக்காக பண்பாட்டு கலாச்சார அமைப்புகளை எடுத்து கொண்டு அரசியல் செய்வதும் அறிவுடையோர் உணரும் ஒரு ஆபாச செயல்பாடு. அப்படி தமிழகத்தில் இழித்தும் பழித்தும் சொல்லப்பட்ட ஒரு பண்பாட்டு நடைமுறை தேவரடியார் முறை.

’தேவரடியார்கள்’ என்பவர்கள் இறைவனுக்கு தொண்டு செய்வதற்காகவும், இறை காரியங்களில் முதன்மையாக பங்கு பெறவும் மனமுவந்து தங்களை ஒப்புக்கொடுத்தவர்கள். கலை, தவம் மூலம் இறை உணர்வை, ஆன்மீக அனுபவத்தை பெறுவதற்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள். தேவரடியார்கள் வேறு, ’கொண்டி மகளிர்’, ’பரத்தையர்’, உள்ளிட்ட களவு ஒழுக்கம் கொண்டவர்கள் வேறு என்ற அடிப்படையைத் திரித்தும், இழித்தும், பழித்தும் பேசும் பரப்புரைகளுக்கு மாற்றாக வரலாறு நமக்கு கொடுத்திருக்கும் சில ஆதாரங்களை பரிசீலிக்கலாம். தேவரடியார் சமூகம் முதன்மையாக பெற்றிருந்த ஆலயம் சார் உரிமைகளையும், அவர்கள் கொடுத்த நிவந்தக்கொடைகளையும் பார்க்கலாம்.

முதலில் 3 கொங்கு நாட்டு கல்வெட்டுக்கள் மூலம் தேவரடியார்கள் இறைவனின் ஆலயங்களில் பெற்றிருந்த வழிபாட்டு உரிமை, மரியாதைகளைப் பார்க்கலாம்.

கொங்குச்சோழன் வீரராஜேந்திரனின் திருமுருகன் பூண்டி ஆலயம், திரு முருகநாத சுவாமி ஆலயத்தின்  கல்வெட்டில் தேவரடியார்களை தேவகன்மிகள் எனக்குறிப்பிடப்பட்டு அவர்களுக்கான பூசனை உரிமைகள், அவர்கள் பெறும் முதன்மை உரிமைகள் பட்டு மேல்சாத்தும் பரிவட்டமும் பெறும் உரிமைகள், தேவரடியார்களும் அவர்தம் மகள், மருமக்கள், பெயரன் பெயர்த்திகள் பெறும் முதன்மை உரிமைகள், அபிஷேக, அலங்கார உரிமைகளை அளித்துள்ளது பற்றிய கல்வெட்டு. இந்தக் கல்வெட்டு திருமுருகநாத சுவாமி ஆலயம் அம்மன் சன்னதிக்கு வடக்கு புற ஜகதி பகுதியில் பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு வாசகங்கள் …

1.  ஸ்ரீ கோனேரின்மை கொண்டான் ஆளுடையார் திருமுருகன் பூண்டி கோயில் தேவகன்மிகளுக்கு நம் ஓலை குடுத்தபடியாவது இத்தானத்தில் குல

2.  சோழமண்டல கச்சா தேவரடியார்களுடை _ _ _ பெறும் முதன்மை தாநம் ஆளுடையார் திருமுருகன் பூண்டி யாண்டார்க்கு நாலாவது முதல் திருமேற்பூச்சும் குடுத்தோம். இப்படிக்கு

3.  செம்பிலும் சிலையிலும் வெட்டிக் கொள்க. இவை இலாடத்தரையன் எழுத்து. நந்தமாற் படுத்துக் கொள்க. இது பந்மாயேசுரரட்சை.

கோனேரின்மை கொண்டானான கொங்கு சோழன் வீரராஜேந்திரன் ஆட்சி காலத்தில், திருமுருகன் பூண்டி கோவில் இறைப்பணியாளர்களுக்கு நாம் தந்த ஓலை ஆணையானது இந்த ஆலயத்தில் சோழ மண்டல தேவரடியார்கள் பெறும் முதன்மை ஸ்தானம் எது வென்றால் திருமுருகன் பூண்டி இறைவனுக்கு நாலாம் நாள் முதல் திருமேற்பூச்சு (திருஅலங்காரம்) செய்யும் உரிமை கொடுத்தோம். இதை செம்பிலும் கல்லிலும் வெட்டிக்கொள்க… இது லாடத்து அரையன் எழுத்து, இந்த நடைமுறை சிவனடியார்கள் மேற்பார்வையில் அமல்படுத்த உத்தரவிடுகிறது.

இதன்படி திருமுருகநாத சாமிக்கு சந்தன மேற்பூச்சு பூச முதன்மை உரிமை உடையவர்களாக பூர்வீகமான சோழமண்டல தேவதாசிகளுக்கு உரிமைப் பட்டயம் செய்து கொடுக்கப்படுகிறது. இந்த சந்தன பூச்சு அலங்காரம் இன்றும் திருச்செந்தூரில் வேனல் காலங்களில் இறைவன் மனங்குளிர உடல் குளிர சந்தனம் அறைத்து சாத்தும் திருநடைமுறை இருக்கிறது. இந்த நடைமுறையின் முதன்மை உரிமையை இறைவனுக்கு தொண்டு செய்வதை மட்டும் பிறவிப்பெருங்கடனாகக் கொண்டிருக்கும் பூர்வ சோழகுல தேவதாசிகளுக்கு உரிமை கொடுத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதை காப்பவர்களாக பன்மாஹேஸ்வர ரட்சை என்று சிவனடியார்களை இந்த ஆணையை நடைமுறைப்படுத்தி கண்காணித்து காப்பு கொடுக்க நியமிக்கிறார். ஆலய ஸ்தானிகர்களுக்கு நிகரான உரிமை தேவரடியார் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது(1).

திருமுருகன் பூண்டி கல்வெட்டு

திருமுருகன் பூண்டி திருமுருகநாத சுவாமி ஆல்ய வடக்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ள 9 வரிக்கல்வெட்டு

1. தண்டீஸ்வரன் ஓலை சாகரஞ்சூழ் வையகத்துக் கண்டீஸ்வரன் கருமமாரய்க _ _ _  பண்டே அறஞ்செய்தான் அறங்காத்தார் பாதம் திறம்பாமல் சென்னிமேல் வைத்து அவர்களால் சண்டேஸவரன் ஆதேசம் நம்

2. உடையார் திருமுருகன்பூண்டி ஆளுடைய நாயனார் கோயில் தேவரடியாற் ஆடக்கொண்ட நாச்சிமகள் _ _ _ பெருமாளான சவுண்டய நங்கை(க்கு)ம் இவள் தங்கை மக்கள் தோழியான திருவுண்ணாழியர் நங்கைக்கும் இவள்

3. தங்கை காங்கய நாச்சியான ஆலால சுந்தர நங்கைக்கும் நம் ஒலை குடுத்தபடியாவது ஈஸ்வர சம்வத்சர _ _ ராக _ _ _ முதல் இவர்களுக்கு நாம் குடுத்த திருவந்தி காப்புக் குடுக்கையில் இவர்கள் திருவந்திக் காப்பும் எடுத்துப் பணியுமுறை

4. யுஞ் செய்து  உடையார்க்கு பணியாக _ _ _ _ காலந்தோறும் திருநீற்றுக் கா_ _ _ _ திருக் கண்ணா மடை வண்காட _ _ _ லியற் இக்காள _ _ _ _ உள்ளிட்டாரையும் _ _ _  பார்க்கவும் திருநாளுக்கு நடே

5. ஸ்வர நாயனார் எழுந்தருளும் பொழுது முன்னரங்கு ஏறக்கடவார்களாகவும் இவர் திருமுன்பு பிச்சவேஷம் _ _ _ _ கவும் இந்த ஹொதுசவத்துக்கு ஏறியருளும் திருத்தேர் திருநட்டப் பூங்கோயில் திருநடைக்கா

6.  வண முள்ளிட்ட ஆசநங்களேறக் கடவார்களாகவும் திருமார்கழித் திருவாதிரை மூற்றா(வதா)யுள்ள  திருவெம்பாவைக்கு கைநாட்டி  மூன்றாம் அறை முதலாயுள்ள அறையுங் கடக்கக் கடவ

7.  ர்களாகவும் மேற்சாத்தும் பரிவட்டமும் பெறக்கடவார்களாகவும் இந்தத் திருவந்திக் காப்பால் வந்த பிராப்தியங்களான வரிசைகளும் பெறக்கடவார்களாகவும். இப்படிக்கு இவர்கள் மக்கள் மக்கள் சந்திரா

8.  தித்தவரை அனுபவித்து வருவார்களாகவும் .இப்படிக்கு செம்பிலும் சிலையிலும் வெட்டிக் கொள்வார்களாகவும் (நாம் நம்ஓலை) குடுத்தோம். இப்படிக்கு அருளிச்செயல்படிக்கு தேவர்கள் சீர்காழிப் பிள்ளை எழுத்து. பால் வண்ணத் தாண்டான் பெருமாள் எழுத்து. அண்ணாமலையான் எழுத்து. அடிக்கிளத்தை எழுத்து. சத்தி

9. ன் எழுத்து மாடாபத்தியம் காஞ்சிபுரத்து சோமனா தேவன் எழுத்து. கானக் கா _ _ _ எழுத்து. கண்டியதேவன் எழுத்து. ஆனந்தக் கூத்தன் எழுத்து. முத்திக்கு நாயகன் எழுத்து. திருவம்பலப்பட்டி காட்டிய கைய்யன் எழுத்து. ஆனந்தக் கூத்தனார் எழுத்து. இவை அருளால் ஆதிசண்டேஸவரஸ்ரீ கரணத்தன் எழுத்து. 

தண்டீஸ்வரன் ஓலை ஆணை யாதெனில் சாகரங்-கள் சூழ் வையகத்து கண்டீசுவரன் கரும மாரய்க….

பண்டே, அதன்படியே அறஞ்செய்தார், அறம்காப்பார் திருப்பாதங்களை சென்னி சூடி சண்டேசுவரன் ஆதேசம்,

நம் திருமுருகன் பூண்டி ஆளுடைய நாயனார் இறைவனுக்கு ஊழியம் செய்யும் கோவில் தேவரடியார் ஆடக்கொண்டநாச்சி மகள் பெருமா ஆன சவுண்டைய நங்கைக்கும், இவளுடைய தங்கைப்பிள்ளைகளின் தோழியான திருஉண்ணாழியர் நங்கைக்கும், அவளுடைய தங்கை காங்கேய நாச்சியான ஆலால சுந்தரநங்கைக்கும் நான் கொடுத்த ஓலை உரிமை யாதெனில், இவர்களுக்கு நான் அளித்த திருவந்திக்காப்பு உரிமையை பணியும் முறையாக செய்து வர வேண்டியது, அதே போல இறைவனுக்கு திரு நீற்றுக்காப்பும் காலந்தோறும் முறையாக மேற்கொண்டு வர வேண்டும். உற்சவ காலங்களின் போது நடராஜர் எழுந்தருளும் போது முன் அரங்கில் சேவை செய்ய வேண்டும். நடராஜர் திரு உருவம் முன்பு பிச்சை வேஷம் இட வேண்டும். திருத்தேர், திரு நட்டப்பூங்கோவில், திருநடை திறக்கும் போதும், மூடும் பொழுதும், திரு மார்கழித்திருவாதிரையின் போது திருவெம்பாவை பாடப்பெறும் பொழுதும், அதை திருநடனமாக ஆடப்பெறும் பொழுதும் முதன்மையாக வீற்றிருக்க வேண்டும்.

தேவரடியார்கள்

திருவாதிரை திருவிழவின் போது, மைய மண்டபம், முன் மண்டபம், தாண்டி மூன்றாம் அறையான கருவறையின் முன்னால் நின்று பரிவட்டமும், மேற்சாத்து எனும் பட்டு மேல் துணி போர்த்தப்படும் மரியாதையையும் முன்னின்று பெற்றுக்கொள்ள உரிமை அளிக்கிறேன். இந்த திருவந்தி காப்பால் பெறும் மரியாதை வரிசைகளை இவர்களும் இவர் தம் மக்களும் இவர் தம் பெயர் மக்களும் (பேரன் பேத்திகளும்) சந்திர சூரியர் உள்ளவரை பெற்றுக்கொள்ள உரிமை இருக்கிறது. இந்த உரிமையை கல்லிலும், செம்பிலும், பொறித்துக்கொள்ளவும் ஒப்பம் வழங்கப்படுகிறது. இந்த ஓலையை நடைமுறைக்கு கொண்டு வரவும் ஆணை பிறப்பிக்கப்பட்டு அதை ஒப்புக்கொண்ட   சீர்காழிப்பிள்ளை எழுத்து, பால்வண்ண தாண்டான் பெருமாள் எழுத்து, சத்திரியன் எழுத்து, மாடபத்தியம் காஞ்சிபுரம்சோமனாதேவன் எழுத்து, அண்ணாமலையான் எழுத்து, அடிக்கிளத்தியான் எழுத்து, கானக்கா எழுத்து, கண்டியத்தேவன் எழுத்து, ஆனந்தக்கூத்தன்எழுத்து, முத்திக்கு நாயகன் எழுத்து, கண்டீஸ்வரன் எழுத்து, திருவம்பலப்பட்டியன் காட்டிய கையெழுத்து, ஆனந்தக்கூத்தனார் எழுத்து என அதிகாரிகளின் கைச்சாத்தும் இதை எல்லாம் எம்பெருமான் திருமுருகநாத சுவாமியின் தினப்படிகளை கவனித்து குறிக்கும் ஆதி சண்டேஸ்வர நாயனாரின் ஒப்புதலும் இந்த கல்வெட்டிலேயே பொறிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கல்வெட்டு தற்போதைய அன்னூர், மண்ணீஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் கல்வெட்டு. முன்பு சோழ நாட்டின் நாணய அச்சடிப்பு மையமாகவும் பின்னர் கொங்குச்சோழர்களின் நாணய அச்சிடும் மையமாகவும் திகழ்ந்த அன்றைய மன்னியூர், இன்றைய அன்னூர் மண்ணீஸ்வரர் ஆலய வீரராஜேந்திரனின் 21ம் ஆட்சியாண்டின் 270 ஆம் நாள் கொடுக்கப்பட்ட கொங்கு சோழன்  கல்வெட்டு.

மன்னியூர் மன்னீசுவரர் கோயில் வடக்கு சுவரில் பொறித்த 5 வரிக் கல்வெட்டு.

1. கோனேரின்மை கொண்டான் வடபரிசார நாட்டு ஆளுடையார் மன்னியூராண்டார் தேவகன்மிகளுக்கு நம்மோலை குடுத்தபடியாவது இத்தேவர்க்கு நாங்குடுத்தவூர் இராசடியான இயாழவல சோழநரல்லூரென்று தேவதானமாக ஊரேற்றிக்

2. கொள்வார்களாகவும் இவ்வூர்க்கு நான்கெல்லை குழிமங்கலத்(தி) _ _ _ _ (க்கு) வடக்கும் இலுப்பையெல்லைக்கு மேற்கும் வாதிக்கரைக்கு தெற்கும் பாண்டிகுல மாணிக்க (வதிய்) எல்லைக்குக் கிழக்கும் இந்நாந்கெல்லை(க்)கு உள்(ப்)பட்ட நந்செய் புந்செ(ய்)யிலு

3. ள்ள இறை புரவு சிற்றாயமும் எலவை யுகவை _ _ _ _  தெண்டகுற்றம் (எப்)பேர்ப்பட்டனவும் இத்தேவர்க்குத் திருப்பணிக்கும் தேவரடியார், நட்டுவர், காந்தப்பர், திருப்பதியம் பாடுவார், நிமந்தக்காறர்க்கும் இட்டு வருவதாக நமக்கு இருபத்தொன்

4. றாவது முதல் நம்மோலை குடுத்தோம். இவை சோழகுல மாணிக்க மூவேந்த வேளாநெழுத்து. இயாண்டிருபத்தொற்றாவது நாளிரு நூற்றெழுபது இலாடத்தரையறெழுத்து காடுவெட்டி யெழுத்து. குருகுலத்தரைய நெழுத்து. கோசலத்தரைய ரெழுத்து. இது

5. பன்மாஹேசுவரரக்ஷை.

கோனேரின்மை கொண்டான், வட பரிசார நாட்டு ஆளுடையார், மன்னியூராண்டார், தேவ கன்மிகள் எனும் தேவரடியார்களுக்கு இந்த ஓலை ஆணை மூலம் நாம் அளித்த நில விபரங்கள் பின் வருமாறு….

இந்த இறை மகளிர்க்கு நான் கொடுத்த ஊர் ராசனடியான இயாழவல சோழ நல்லூர் என்று பெயரோடு இறையிலி நிலமாக கொள்க… இந்த ஊருக்கான நான்கு எல்லைகளும், குழி மங்கலத்தி——- வடக்கும் இலுப்பை எல்லைக்கும் மேற்கும், வாதி கரைக்கு தெற்கும் பாண்டிய குல மாணிக்க (வதிய) எல்லைக்கு கிழக்கும் உட்பட்ட இந்த நான்கு எல்லைக்கும் உட்பட்ட நன்செய், புன்செய் நிலங்கள், அந்த நிலங்களில் இருந்து பெறப்படும் வரி

நன்செய், புன் செய்யில் திரட்டப்படும் வரி, வயல் வரி, எல்கை வரி, சிறுவரி, உகவை, குற்ற தண்ட வரி என எப்பேற்பட்ட வரியும், இறையிலி ஆக்கப்பட்டு அந்த வருவாய் ஆலயத்திருப்பணியில் இருக்கும் தேவரடியார், நட்டுவனார், காந்தப்பர்,திருப்பதிகம் பாடும் ஓதுவா மூர்த்திகள்,வாகன தண்டு கட்டும், நிமிந்தர் போன்றோர்க்கு சம்பளமாக கொடுக்க வேந்தன் இசைவளிக்க அதை மூவேந்த வேளாண் எழுத்து, லாடத்தரையன்,காடுவெட்டி குரு குலத்து அரையன், கோசலத்து அரையன் போன்றோர் ஒப்புக்கொண்டு நிறைவேற்ற வேண்டியது இந்த உலகை ஆளும் பரமேஸ்வரனின் மீது ஆணையாக கொண்டு காக்க வேண்டியது…..

இந்த மூன்று கொங்கு நாட்டு கல்வெட்டுக்கள் மூலம் தேவரடியார்கள், ஆலயம் சார்ந்த பூசனை, இறை வழிபாட்டு நடைமுறையின் ஒரு பகுதியாகவே அங்கீகரிக்கப்பட்டு அவர்களுக்கான பணிகளும், அந்த பணிகளுக்கான ஊதியம், மரியாதை, உரிமைகளை அரசனே இறைவன் முன் ஒப்புக்கொண்டு அங்கீகரித்து ஆணை பிறப்பித்து அதை ஈஸ்வர சாட்சியாக சிவனடியார்களும், ஆலயப்பணியாளர்களும், அரசு ஊழியர்களும் பாதுகாத்து உரிமையை நடைமுறையில் கைக்கொள்ள உதவ வேண்டும் என்றும் இந்த கல்வெட்டு மூலம் ஆவணப்படுத்தப்படுகிறது.

மா.ஜெகதீசன், கணேசன் எழுதிய கொங்கு நாட்டுக்கல்வெட்டுக்கள் நூலில் இந்த கல்வெட்டுச்செய்தி இடம்பெற்றுள்ளது.

தேவதாசிகள்

சிற்ப ஆதாரமாக திருக்கழுகுன்றத்து பக்தவத்சலேசுவரர் ஆலயத்து முன் மண்டபத்தில் உள்ள தேவகன்னியர் புடைப்பு சிற்பத்தில் இரண்டு தேவரடியார் பெண்கள் திருக்கோவிலின் சாவியை வைத்துக்கொண்டும் ஆலயத்தின் திரு கை விளக்கை கைகளில் ஏந்தியும் இருக்கும் சிற்பத்தின் வாயிலாக தேவரடியார்கள் பெற்றிருந்த ஆலய காப்பு உரிமையும், ஆலய விளக்கெரிக்கும் திருப்பணி உரிமையையும் உணர்ந்து கொள்ளலாம். இதே போல திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் ஆலயத்து முன் மண்டபத்தில் இருக்கும் இரண்டு தேவரடியார் சிற்பங்கள் ஆலயத்தின் திறவுகோலை கையில் முழுத்தணிக்கோலத்தோடு ஏந்தி நிற்கும் சிற்பம். தேவரடியார்கள், இறைவனின் கருவறையை திறக்கும் ஆலய உரிமையை பெற்று முதல் பூசனையை திருக்கண்ணுறும் பேறும் உரிமையும் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கான சிற்பச்சான்றாகவும் இருக்கிறது. தேவரடியார்கள் திருக்கோவிலின் ஒரு கலை அங்கமாகவும், பூசனை நடைமுறைகள், நெறிக்காப்பு முறைகளின் வழிகளை காக்கும் பாதுகாவலர்களாகவும் ஒரு ஆலய வழிபாட்டு நடைமுறையின் ஒரு அலகாகவும் இருந்திருக்கிறார்கள்.

இசை, கூத்து ஆகியவைகளை கலாச்சார மைய நீரோட்டத்தில் இடம் பெறச்செய்ததில் தேவரடியார்களுக்கு முக்கியமான பங்கிருக்கிறது. நாட்டார் வழக்கில் இருந்த இசையையும் கூத்தையும் தங்கள் திறனால், செம்மைப்படுத்தி அதை ஒரு இறை அர்ப்பண கலையாக அங்கீகாரப்படுத்தி அனைத்து சமூகத்தினரும் இசையை, நடனத்தை, கூத்தை, வாய்ப்பாட்டை கலை அனுபவமாக்கியும் அதை இறை அர்ப்பண நைவேத்யமாகவும் ஆக்கி காத்து அதை கற்றும் கொடுத்து கலையை செழுமை செய்த தேவரடியார் சமூகத்தினர் திருக்கோவிலில் பெற்றிருந்த பல்வேறு உரிமைகளில் சிலவற்றை கொங்கு நாட்டு கல்வெட்டுக்கள் மூலமும், சில சிற்பச்சான்றுகள் மூலமும் பார்த்துள்ளோம்.

திருக்கோவிலின் தூய்மைத்தொண்டிலும், இறைவனுக்கு செய்யப்படும் சேவைகளுக்கான பொருட்களை பாதுகாக்கவும் தூய்மையோடு பராமரிக்கவும் உரிமை கொண்ட தேவரடியார்களில் சிலருக்கு மட்டுமே சிறப்பாக கொடுக்கப்பட்ட உரிமைகள் இருக்கிறது. உதாரணத்திற்கு குடமுறை தேவரடியார் என்போர் இறைவனுக்கு பூரண கும்ப தீபாராதனை, தூபாரதனை செய்யும் பூரண கும்ப விளக்கை, ஆரத்தி கும்பத்தை தூய்மை செய்து பேணி பராமரித்து அதை தீபாராதனையின் போது கைங்கர்யத்துக்கு கொடுக்க வேண்டிய முதன்மை உரிமை பெற்றவர்களாக இருந்தனர். மூத்த தேவரடியார்களில் இறைவனுக்கு தன் கலைத்திறனாலும், ஆடல் வல்லமையாலும், இசை வல்லமையாலும், பக்தியாலும் நெறியாலும் சேவை சாதித்து ஒளி கொண்டு விளங்கும் உயரிய தேவரடியார்க்கு சமூகமும் அரசனும் இணைந்து வழங்கும் உயரிய அங்கீகாரம் குடமுறை தேவரடியார் என வழங்கப்படுகிறது.

இதேபோல தேவரடியார்களுக்கு வழங்கப்படும் இறுதி மரியாதை, அரசனுக்கு கூட கிடைக்காத ஒரு உயரிய மரியாதை நடைமுறையாகும். தேவரடியார்கள் இறந்தால் இறைவனே அவர்களுக்கு கருமம் செய்வதாக கூட சில நடைமுறைகள் இருந்திருக்கின்றன. தேவரடியார்கள் இறந்தால் இறைவன் இறைவிக்கு அணிவிக்கப்பட்ட ஆடைகள் தேவரடியார் பூத உடலின் மேல் போர்த்தப்பட்டே காரியங்கள் செய்யப்படும். ’மடிக்கட்டுதல்’ எனும் இந்த நடைமுறைப்படி இறைவிக்கு அணிவிக்கப்பட்ட  சேலை, மஞ்சள், குங்குமம், வளையல், பூ ஆகியவைகளோடு ஒரு தாம்பூலத்தில் வைக்கப்பட்டு, ஆலய ஸ்தானிகர் கையிலேந்தி இறந்த தேவரடியாரின் பூத உடலுக்கு அணிவித்து மரியாதை செய்வார்கள், மடி கட்டுதல் சடங்கு செய்யப்பட்ட தேவ மகளிரின் பூத உடல் ஆலயத்தின் ராஜ கோபுரம் வழியாக எடுத்து செல்லப்படும் பொழுது மூல தெய்வ சன்னதி முன்பு ஒரு நிமிடம் நின்று அனுமதி பெற்று பின்பே எடுத்து செல்லப்படும். அன்று முழுக்க ஆலயத்தின் தினப்படி அனுஷ்டானங்கள் நிறுத்தி வைக்கப்படும். இந்த உயரிய அங்கீகாரம் அவர்களின் இறைப்பணிக்கு இறைவனின் ஆசிர்வாதம், மக்கள் ஏற்பின் ஒரு பகுதி என்பதாகப் பார்க்கலாம்.

சங்க காலத்தில் விறலியரும், பாணரும் போற்றி வளர்த்த இசையையும், கூத்தையும் இறை பக்தியோடு கலந்து அதை திருக்கோவில் வழியாக போற்றிப் பாதுகாத்து வளர்த்தவர்கள் தேவரடியார்கள். இவர்கள் தங்களின் கலை அர்ப்பணிப்பை, தங்களின் படைப்பூக்கம், படைப்பாற்றல் மூலம் செம்மைப்படுத்தி அதற்கு ஒரு செவ்வியல் தன்மையை வழங்கினர். அதோடு இசையும், சதிர் நடனமும், பண்ணிசை மரபும் தொடர்ச்சியாக பல்வேறு புதுமைகள் மூலம் நீடித்த கலை இயக்கத்தை உயிர்ப்போடு வைத்திருந்தார்கள். சைவ ஆலயங்களில் தொண்டு செய்து கொண்டிருந்த தேவரடியார்கள் சூல இலச்சினையையும், வைஷ்ணவ ஆலயங்களில் இருந்த தேவரடியார்கள் சக்கர இலச்சினையையும் தாங்கி தங்கள் வாழ்நாளையே கலை வளர்ச்சிக்கும் இறைசேவைக்கும் முழுமையாக அர்ப்பணித்து வாழ்ந்தார்கள்.

தேவரடியார்கள்

ஆலயங்களை பண்பாட்டு  கலை செயல்பாட்டின் மையமாக மாற்றிய தேவரடியார் சமூகத்தினர், ஆலயங்களில் உழவாரப்பணிகள் துவங்கி, நடனம், நாட்டியம், தேவார திருவாசக பண்களுக்கு நடனமாடுவதும் அந்த பண்களை இசைக்கும் மரபை காத்து நின்றதும் விழாக்காலங்களில் இறைவனுக்கு மலர் தட்டை ஏந்தி வருவது, தெய்வங்களுக்கு கவரி வீசுவதும், சுவாமி புறப்பாடுகளில் நடனம் ஆடியும் பாடியும் இறைத்தொண்டில் இருந்தனர். இதில் சிறப்பாக சொல்ல வேண்டும் என்றால் ’குட முறை தேவரடியார்’ என்ற பெருமை பெற்ற வயதில் மூத்த தேவரடியார் பெண்களுக்கு இறைவனுக்கு காட்டும் பூரண கும்ப தீபாரதனையை தயார் செய்வதும் அதை தூய்மை செய்வதும், இறைவனுக்கு உகந்த நேரத்தில் அந்த தீபாராதனையை தயார் செய்யும் தனி உரிமை மூத்த தேவரடியார்கள் பெற்றிருந்ததை சோழர்கால கல்வெட்டுக்கள் மூலம் அறிகிறோம். ஆலய ஸ்தானீகர்களைப் போல கருவறை வரை சென்று வரும் உரிமை பெற்ற தேவரடியார்களின் உரிமை பற்றி திருச்செந்தூர் ஆலய கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடிகிறது.

அரச குடும்பத்தை சார்ந்த மூத்த பெண்கள் தேவரடியார்களாக இறைத்தொண்டு செய்து வந்திருப்பதை பல்லவர் வரலாற்றை எழுதிய இராசமாணிக்கனார் மேற்கோள் காட்டுகிறார். சோழர்குல சுந்தரி, இரவிகுல மாணிக்கம், வீர சோழி, சோழ சூளாமணி, ராஜ சூளாமணி, குந்தவை, சோழ தேவி, வானவன் மாதேவி போன்ற அரசகுல பட்டப் பெயர்களோடு பல்வேறு தேவரடியார் கொடுத்த நிவந்தக்கல்வெட்டுக்களில் உறையூர் மன்னன் நந்த சோழன் மகள் சோழ வல்லி தானே விரும்பி தேவரடியாராக சூல இலட்சினை தாங்கி இறைத்தொண்டு ஆற்றினார்.

முதலாம் குலோத்துங்க சோழனின் ஆட்சிக்காலத்தில் படைத்தலைவனாக இருந்த ஆச்சப்பிடாரன் கணபதி நம்பி பாலாற்றங்கரையிலுள்ள திருவல்லம் ஆலயத்தில் உழவாரப் பணி செய்வதற்கு தன் குடும்ப பெண்களை தேவரடியார்களாக ஒப்புவித்தது பற்றி திருவல்லம் கல்வெட்டு சொல்கிறது. சுந்தரமூர்த்தி நாயனாரின் காதல் மனைவி பரவை நாச்சியார் ஒரு தளிச்சேரி பெண்டு தான். தேவாரத்தின் பல பாடல்களில் தேவரடியாரின் பெருமை குறித்து உள்ளது.

வீர. ராஜமாணிக்கம்

தேவரடியார் சமூக நடைமுறை என்பது சுமேரியர் காலம் முதல் தொடர்ந்து பல்வேறு நாகரீகங்களில் நடைமுறையில் இருக்கும் ஒரு வழக்கம். கிரேக்க, ரோமானிய வெஸ்டல் வெர்ஜின்கள் ஆகியவையின் பின் தொடர்ச்சியாக தேவரடியார் நடைமுறையைப் பார்க்கலாம். இந்த நடைமுறையின் உச்சமாக தேவரடியார் பெற்றிருந்த உரிமைகள் , பெருமைகள் பற்றி பல்வேறு கல்வெட்டு செப்பேடு சான்றுகள் மூலம் அறிகிறோம். அதன் பிற்காலத்திய சிதைந்த வடிவை கொண்டு முற்காலத்தை அதன் நடைமுறையை இழிவு செய்யும் அற்பத்தனத்தை அறிஞர்கள் செய்வதில்லை.

***

அடிக்குறிப்புகள்:

(1) கொங்கு நாட்டுக்கல்வெட்டுகள், ஜெகதீசன், கணேசன் எழுதிய நூலில் பக்கம் 84, 85-ல் இடம்பெற்றிருக்கும் அரசாணை.

***

One Comment

Leave a Reply to Jamila Cancel reply

Your email address will not be published. Required fields are marked *