முணுமுணுப்பும் ஆங்காரமும் – சுரேஷ் பிரதீப்
(சிவகாமியின் இருபத்தெட்டு கதைகளை முன்வைத்து)

1
நடுவில் கோடு கிழித்தது போல கச்சிதமாக வேறுபடும் இருவகைத் தன்மைகளைக் கொண்ட ஒரு சிறுகதைத் தொகுப்பினை வாசித்த நினைவு எனக்கு இல்லை. புதுமைப்பித்தன் கதைகளை காலவரிசைப்படி வாசிக்கும்போது பிரம்ம ராக்ஷஸ் என்ற கதையிலிருந்து வேறொரு எழுத்தாளரை வாசிக்கிறோமோ என்ற பிரம்மை தட்டும். அந்த அளவுக்கு உருவத்திலும் உள்ளடக்கத்திலும் புதுமைப்பித்தன் கதைகளில் வேறுபாடு உருவாகி இருக்கும்! ஆனால் அது இயல்பானது மற்றும் எதிர்பார்க்கக்கூடியது. ஒரு எழுத்தாளரின் படைப்புலகை திருப்பும் அத்தகைய கதையோ நாவலோ அமைவது புதுமைப்பித்தனுக்குப் பிறகும் பலரிடத்திலும் காணக்கூடிய அம்சம். ஆனால் இருபத்தெட்டு கதைகள் கொண்ட இத்தொகுப்பில் மிகச்சரியாக முதல் பதினான்கு கதைகள் ஒரு வகைமைக்குள்ளும் அடுத்த பதினான்கு கதைகள் இன்னொரு வகைமைக்குள்ளும் வருமளவு துல்லியமாக இத்தொகுப்பு பிரிந்திருக்கிறது! அல்லது அப்படி நான் நினைத்துக் கொள்கிறேனா? இல்லை என்று சொல்லிவிட்டு ஏன் இல்லை என்பதற்கான காரணங்களைச் சொன்னால் இந்தக் கட்டுரை முடிந்துவிடும்!
அதற்கு முன்பு இத்தொகுப்பில் உள்ள ஒரு பெரிய குறையைப் பற்றிச் சொல்ல வேண்டும். தொகுப்பில் எந்தக் கதையிலும் வெளியான ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. 2014க்கு முந்தைய முப்பது அல்லது நாற்பது வருடங்களில் இக்கதைகள் நிகழ்வதாக எடுத்துக் கொள்ளலாம். காலத்தை ஊகித்து வாசிப்பதற்காக அல்ல எழுத்தாளரின் படைப்பு மனம் செயல்பட்டிருக்கும் திசையை அறுதியிடுவதற்கே கதை வெளியான காலம் தேவைப்படுகிறது. அதிலும் மிகத்தெளிவான ‘பகுப்பு’ கொண்டிருக்கும் இந்தத் தொகுப்பில் கதை வெளியான ஆண்டு குறிப்பிடப்படாதது ஒரு மெல்லிய ஏமாற்றம்தான்.
இத்தொகுப்பில் முதலில் இடம்பெற்றிருக்கும் கதைகள் நவீனத்துவ கதைசொல்லல் பாணியின் உச்சத்தில் நின்றிருக்கும் கதைகள் என வரையறுக்கலாம். ஒரு உணர்வை அல்லது தருணத்தைச் சொல்ல மிகக் குறைவான அதேநேரம் கூர்மையான சொற்களை மட்டுமே இக்கதைகள் பயன்படுத்துகின்றன. அதோடு இக்கதைகள் எதிலுமே கதைக்கான செவ்வியல் வடிவம் செயல்படுவதில்லை. நவீனத்துவபாணிக் கதைகளை ‘முணுமுணுக்கும் கதைகள்’ என்று சொல்லலாம். அதாவது நீங்கள் வீதியில் நடந்து போகும்போது உங்கள் செவியை வந்து இக்கதைகள் அறைவதில்லை. வீட்டில் அமர்ந்திருக்கும் உங்களிடமும் இக்கதைகள் முகம் கொடுத்துப் பேசுவதில்லை. இக்கதைகள் முணுமுணுத்தபடி தனியே மூலையில் அமர்ந்திருக்கின்றன. இக்கதைகளின் குரலை நீங்கள் மூலையை கடக்கும்போது கேட்கிறீர்கள். ஆனால் அந்த முணுமுணுப்பில் பிலாக்கணமோ சலம்பலோ இல்லை. மாறாக முழுமையான ஒரு வாக்கியம் உங்கள் காதில் விழுகிறது. தைக்கிறது என்று சொல்லலாமா? மூலைகளிலும் இண்டு இடுக்குகளிலும் கவனம் செலுத்தி இராத நீங்கள் உங்கள் மிதப்பையும் கனவான் தன்மையையும் கைவிட்டு முணுமுணுக்கும் கதைகளை கேட்க அமர்கிறீர்கள். கேட்கத் தொடங்கிய பிறகே அக்கதைகள் முணுமுணுக்கவில்லை அதன் ஸ்தாயியே அதுதான் என உங்களுக்குப் புரியத் தொடங்குகிறது.
வாசகனுடன் ஆழமாக உரையாட விரும்பும் படைப்பாளிகள் வாசக மனம் எதை விரும்புகிறதோ அதைக் கொடுப்பதில்லை. எழுத்தில் வாசகமனதுக்கு ‘பிடித்த’ ஒரு அம்சம் இருக்குமென்றாலும் அதைப் பிடித்துக் கொண்டு அரட்டை அடிக்கவே வாசகர் விரும்புவார். அவரை அரட்டைக்குள் நுழைய விடாமல் வைத்திருக்க ஒவ்வொரு எழுத்தாளரும் போராடுகிறார்கள். அப்படி போராட விரும்பாத படைப்பாளிகளையே நாம் ரஞ்சக எழுத்தாளர்கள் என்கிறோம். வாசகரை ஒவ்வோரு வரியிலும் கவனம் குவிக்கச் செய்து தான் சொல்ல எத்தனித்ததை வாசகரின் சிந்தனைக்கு முழுமையாக மாற்றித் தருவது சிக்கலான காரியம். நவீனத்துவ படைப்பாளிகளிலும் அசோகமித்திரன், கோபிகிருஷ்ணன் (இவரை பின்நவீனத்துவபாணி எழுத்தாளர் என்று சொல்ல வேண்டுமோ) போன்ற ஒரு சிலரே சொற்களில் வாசக கவனத்தை ஆழமாக ஊன்றச் செய்யும் முறையில் எழுதினர். சமகால எழுத்தாளர்களில் கே.என். செந்தில் அவ்வாறு எழுதுகிறவர். இந்த எழுத்து முறையின் தொடக்கம் மௌனியில் உள்ளது. இத்தொகுப்பில் உள்ள முதல் பதினான்கு கதைகளும் இந்த சிக்கலான அதீத கவனம் கோரும் சொல்முறையினை எடுத்துக் கொண்ட கதைகள் என்று வரையறுக்கலாம்.
இக்கதைகளின் முக்கியமான அம்சம் அவற்றின் ‘கதையற்ற’ தன்மைதான். ‘பறவைகள் பறந்தன’, ‘ஒழுங்கு’, ‘மண்ணுக்கானவர்கள்’ போன்ற கதைகள் ஒரு யோசனையை மையமிட்டு நகரும் கதைகள் என்று சொல்ல முடியும். ‘கடைசிக்காடு’, ‘சமணர் படுக்கை’ போன்ற கதைகள் எங்கெங்கோ சுற்றுவது போலத் தெரிந்தாலும் ஒரு வலுவான கதைத்தடம் கதை இறுதியில் நமக்கு புலப்பட்டு விடுகிறது. ஆனால் இவ்வகைக் கதைகளில் சிறப்பானவை என்று சொல்லத்தக்கவை ‘கடைசி மாந்தர்’, ‘பறவைகள் பறந்தன’, ‘ஆட்டம்’ என்ற மூன்று கதைகளும்தான். இந்த நூலில் இக்கதைகள் அடுக்கப்பட்டிருக்கும் விதத்திலும் ஒரு சீர்மையைக் காண முடிகிறது. முதல் கதையான கடைசி மாந்தர் ‘எங்கு’ நடக்கிறது என்றே தெரிவதில்லை. காதலால் தீமூட்டப்பட்ட இரு உள்ளங்கள் நெருங்குவதற்கான விழைவுடனும் கண்ணுக்குத் தெரியாத ஒரு தடையால் நெருங்க முடியாத ஒரு தவிப்புடனும் அல்லலுறுவதை இக்கதை பேசுகிறது. கதையின் இறுதி வரியில் கதை ‘பூமிக்கு’ வந்தாலும் இக்கதையின் விலாசமற்ற தன்மை புறத்தை முற்றாக கரைத்துவிட்டு அகத்திற்குள் வாழ்ந்து மீண்ட ஒரு உணர்வைத் தருகிறது.
பறவைகள் பறந்தன என்ற கதையில் நமக்கு அது எங்கு (ஏரிக்கு அருகில் உள்ள கூடு) நிகழ்கிறது என்று தெளிவாகத் தெரிகிறது. யார் பிரதானப் பாத்திரம் (கூட்டுப் பறவை) என்றும் தெரிகிறது. அதன் பிரச்சினை என்ன என்றும் (அன்பிற்கான பிணைப்பிற்கான ஏக்கம்) தெரிகிறது. ஆனாலும் இக்கதையும் முழுமையாக மண்ணில் காலூன்றுவதில்லை. ஏனெனில் இது ‘பறவையின்’ கதை! அல்லது ஒரு பெண்ணின் கதையா? சரி உங்களுக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் பெண் பறவையின் கதை! மெல்லியல்பினள் என்ற முன்முடிவுடன் பெண் பறவையுடன் ஒப்பிடப்படுவது வழக்கம்தான். ஆனால் சிவகாமி மண்ணில் கால், பால் அறிய முடியாத நிலையற்ற தன்மைக்காவும் துடித்துக் கொண்டே இருப்பதாலும் இக்கதையின் நாயகியான ‘கூட்டுப்பறவை’யை பெண்ணின் அகமென சித்தரிக்கிறார் என்று வாசித்தால் இக்கதை அபாரமான விரிவினைப் பெறுகிறது.
மூன்றாவது கதையான ஆட்டம் மண்ணில்தான் நடக்கிறது. ஆடவிரும்பும் ஆனால் ஆடமுடியாத ஒரு பெண்ணின் தவிப்பை இக்கதை துல்லியமாகச் சொல்கிறது. இக்கதை ஆட்டத்தோடு மட்டும் தொடர்புடையதாக இல்லாமல் தலைமுறை இடைவெளி, அச்சம், விட்டேத்தித்தனம் என பல்வேறு மனநிலைகளுடன் இணைந்துவிடுகிறது.
இப்போது ‘நாளும் தொடரும்’ என்ற பதினைந்தாவது கதையை பார்த்துக் கொண்டிருக்கிறேன். இக்கதையில் ஒரு புறவயமான வேறுபாடு தெரிகிறது. முதன்முறையாக கணேசு என்ற ஆண் பிரதான பாத்திரமாக மாறுகிறான். சாதாரண ஆண் அல்ல தலித் ஆண்! முதல் பதினான்கு கதைகளில் சிலவற்றில் கதாமாந்தர்கள் தலித் என்று சொல்லும் அடையாளத்துடன் வருகின்றனர். ஆனால் கணேசு அளவு அவர்கள் தலித் என்று அழுத்திச் சொல்லப்படுவதில்லை. அதிகாரம் சார்ந்த ஒடுக்குமுறை பேசப்பட்டாலும் கணேசு போல நேரடியாக சாதிய ஒடுக்குமுறையை யாரும் உணர்வதில்லை. ஏன்? இதுவரை கதைகளில் பேசப்பட்ட பிரதான பாத்திரங்கள் பெண்கள் என்பதாலா? அப்படியும் சொல்லிவிடுவதற்கில்லை. ஒரு ரயிலின் நீண்ட பயணம் என்ற கதையில் ஒரு ‘தலித் பெண்’ வருகிறாள். அப்படியெனில் இரண்டாம் பகுதி கதைகளில் வண்ண மாற்றம் என்று நான் எதை குறிப்பிடுகிறேன்?

பதினைந்தாவது கதையில் இருந்து எல்லாக் கதைகளையும் உங்களால் இன்னொருவரிடம் சொல்ல முடியும். இக்கதைகள் பேசும் பிரச்சினைகள் வெவ்வேறு பரிணாமம் கொண்டவை. ஆனால் தெளிவான புறவயத்தன்மை கொண்டவை. ‘ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு அண்ணா…?’, ’அம்முக்குட்டி என்றொரு பெண்’, ’அன்று கரிநாள்’ என்ற மூன்று கதைகளும் பெண்ணின் மீதான சமூக அடக்குமுறையை அல்லது கண்டிஷனிங்கை பேசுகிறவை. ஆனால் இம்மூன்று கதைகளின் இயங்குதளமும் முற்றிலும் வேறானவை. ஒருவேளை மூன்று கதைகளிலும் கண்டிஷனிங் செய்யப்படும் பெண்ணின் வயது அதிகரிப்பது காரணமாக இருக்கலாம். ‘ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு அண்ணா…?’ மிகுந்த நுட்பத்துடன் எழுதப்பட்டிருக்கும் கதை. ஒரு வீட்டில் பெண் குழந்தையும் ஆண் குழந்தையும் நடத்தப்படும் விதத்தில் வேறுபாடு இருக்கும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் காந்தி என்ற சிறுமியின் வழியே எந்தவித வன்முறையும் இல்லாமல் பெண் குழந்தைகள் மீது நிகழும் அன்றாடக் குரூரங்களை துல்லியமாக இக்கதை சித்தரிக்கிறது. ‘அம்முக்குட்டி என்றொரு பெண்’ என்ற கதையை வாசித்த பிறகு பாலியல் அத்துமீறலை என்னதான் செய்ய முடியும் என்ற அங்கலாய்ப்பே தோன்றுகிறது. இக்கதையின் மையப்பாத்திரமான பெண் கடைசிவரை மிஸஸ் நீலமேகம் என்றே அழைக்கப்படுகிறாள். மிஸஸ் நீலமேகம் உண்மையில் அம்முக்குட்டி மீதான அக்கறையில்தான் அம்முக்குட்டிக்காக பேசத் தொடங்குகிறாள். ஆனால் ஒரு கட்டத்தில் அவளுடைய நீதியுணர்வின் எல்லை அவளுக்குத் தெரிகிறது. அதோடு சமூகத்தின் எல்லையும் புரிகிறது. அம்முக்குட்டியின் பிரச்சினையை வைத்து ஒரு சில்லறை மரியாதையை மிஸஸ் நீலமேகம் ஈட்டிக் கொள்கிறாள். பாலியல் அத்துமீறல் பற்றிய ஆழமான விவாதத்தை உருவாக்கும் ஆற்றல் இக்கதைக்கு இருக்கிறது. (ஆனால் நமக்கு இன்னமும் கங்கா பிரபுவின் காரில் ஏறிப்போனதுதான் பிரதான பிரச்சினையாக இருக்கிறது!)
’இடிந்த கோபுரம்’ என்ற கதையில் இரண்டு பெண்கள் நண்பர்களாக இருப்பதில் உள்ள சிக்கல்கள் பேசப்படுகின்றன. சூரன், அழுதபிள்ளை என்ற இரண்டு கதைகளும் அதிகாரத்துக்கு எதிராக துணிந்து நிற்கும் இரண்டு அடித்தட்டு மனிதர்களைப் பற்றிய கதைகள்.
இரண்டாம் வகைக் கதைகளில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது ‘உன் முகத்திரை’ என்ற கதை. அரசு அதிகாரிகளிடம் இருக்கும் ஒரு மெல்லிய மனப்பிறழ்வை இக்கதை சுட்டிக் காட்டுகிறது. உடன் இருப்பவர்கள் மீது கொஞ்சம்கூட காருண்யம் இல்லாதிருப்பதற்கு உளவியலில் ஒரு பெயருண்டு. ஆனால் நடைமுறை வாழ்வில் பலரும் அவ்வாறு நடந்து கொள்வதால் அந்த மனப்பிறழ்வு பெரிதாக விவாதிக்கப்படுவதில்லை. இக்கதை அந்தப் பிறழ்வின் குரூரத்தைப் பேசுகிறது. அரசு அதிகாரிகளின் சுயமையத்தன்மையையும் மனிதர்களை அவர்களின் ‘கிரேட் பே’ அடிப்படையில் மட்டுமே எடைபோடும் முட்டாள்தனத்தையும் பேசியபடி வருவதாகத் தோன்றும் இக்கதை முடிவில் அதிகாரிகளின் மீதான ஆழமான அருவருப்பை வாசக மனதில் உருவாக்கி விடுகிறது என்பதே இக்கதையின் வெற்றி எனலாம்.
2
இக்கட்டுரையை தொடங்கியபோது இத்தொகுப்பில் உள்ள கதைகள் பற்றி பேசும் எண்ணம் எனக்குத் துளியும் இல்லை. கதைகளில் பயின்று வந்திருக்கும் இரண்டு வகையான சொல்முறைகளையும் அதனால் உருவாகும் இருவகையான உணர்வுத்தளங்களையுமே பிரதானப்படுத்தி விவாதிக்க விரும்பினேன்.
கொஞ்சம் பொத்தாம் பொதுவாக மாற்றுகிறேன். இத்தொகுப்பின் முதல் பதினான்கு கதைகளை பெண் தன்மை உடைய கதைகள் என்றும் மீதமுள்ளவற்றை ஆண் தன்மை உடைய கதைகள் என்றும் பிரித்து யோசித்துப் பார்க்கலாம். ஆண் என்றும் பெண் என்றும் தனித்தனியாக பிரித்துப் பார்க்கலாமா என்ற விவாதத்திற்குள் நான் நுழைய விரும்பவில்லை. (ஆண் பெண் என்பதற்கு பதிலான மயில் குயில் என்றுகூட மாற்றி வாசித்துக் கொள்ளலாம்!) இவ்வாறு பிரிப்பதற்கு முக்கியமான காரணம் சிவகாமியின் கதையுலகில் நிலவும் முற்றிலும் எதிரெதிரான தன்மைகளைச் சுட்டவே. ஆண் தன்மை உடைய கதைகள் என்று நான் வகைப்படுத்தும் கதைகள் அனைத்தும் துல்லியமான அறச்சார்பினை கொண்டிருக்கின்றன. தீர்வினை யோசிக்கச் சொல்லி நம்மை கட்டாயப்படுத்துகின்றன. முயன்றால் இக்கதைகள் பேசும் சிக்கல்களை என்றோ ஒருநாள் தீர்த்தும் விடலாம் என்ற நம்பிக்கையை அளிக்கின்றன. ஒரு வகையில் ‘ஆண்மையக்’ கதையுலகின் தன்மை இத்தகையதாகவே இருக்கிறது. அறிவார்ந்த விவாதத்தை நோக்கி நம்மை உந்துவதாக அப்படி விவாதிக்கும்போது என்னவோ முக்கியமான காரியத்தைச் செய்வதான சுயதிருப்தி அளிப்பதாக உள்ளது. நம் இலக்கியத்தின் பெரும்பகுதி இதுதான். நான் இதை குறைத்து மதிப்பிடவில்லை. பெரும்பான்மை அளிக்கும் கதகதப்பு இக்கதைகளில் உள்ளது என்கிறேன்.

கட்டுரையின் தொடக்கத்தில் முணுமுணுக்கும் கதைகள் என்று சொன்னேன் அல்லவா! அவை அரிது. இக்கதைகள் பேசும் சிக்கல்கள் சமூக கட்டுமானத்தில் ஆண்பெண் உறவில் உள்ள ஆதாரமான சிக்கல்கள். ஒருவேளை ஆதாரமானவற்றைப் பேசுவதற்கு ‘பெண்’ தன்மைதான் ஏற்றதோ என்றுகூட இக்கதைகள் யோசிக்க வைக்கின்றன. முணுமுணுக்கும் இக்கதைகளின் உள்ளே ஒரு ஆங்காரத்தை உணர முடிகிறது. ஆங்காரத்துடன் பேசும் கதைகளில் முணுமுணுப்பையும் கேட்க முடிகிறது. இரண்டு எல்லைகளுக்குள்ளும் பயணித்து இருப்பதாலேயே சிவகாமியின் இந்த இருபத்தெட்டு கதைகளின் தொகுப்பு தமிழுக்கு அவசியமானதொன்றாக மாறிவிடுகிறது.
***
