புதிய கோடாங்கி என்னும் இயக்கம் – ஸ்டாலின் ராஜாங்கம்

(சில குறிப்புகள்)

இதழ் (1995)

1990 களில் தலித் இலக்கியம் என்னும் வகைமை உருவானபோது அவற்றிற்கென இதழ்கள் ஏதும் தோன்றியிருக்கவில்லை. அப்போது தொடங்கப்பட்டிருந்த சில பத்திரிகைகளில் அது குறித்த விவாதங்கள் வெளியானதோடு சரி. நிறப்பிரிகை முக்கியமான இடையீடு என்றாலும் அதனை முழுமையான அளவில் தலித் இலக்கியத்திற்கான இதழ் என்று சொல்ல முடியாது. கிட்டதட்ட அது கோட்பாட்டு விவாதங்களுக்கான இதழாக இருந்தது. இந்நிலையில் தலித் இலக்கியம், அதன் அழகியல், கோட்பாடு போன்றவற்றிற்காக தொடங்கப்பட்ட இரண்டு இதழ்களைக் குறிப்பிட வேண்டும். அவை மனுசங்க, கோடாங்கி.

கோடாங்கி 1995 ஆம் ஆண்டு தலித் இலக்கியக் காலண்டு இதழ் என்ற அறிவிப்போடு வெளியானது. கருத்தம்மா, ஓவியர் சந்ரு, ப்ரதிபா ஜெயச்சந்திரன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். கருத்தம்மா என்பது ப.சிவகாமியின் புனைப்பெயர்களில் ஒன்று. மனுசங்க இதழ் கோடாங்கிக்கு முன்பே தொடங்கப்பட்டு இருந்தாலும் கோடாங்கிக்கும் அதற்குமான வேறுபாடு துலக்கமாக தெரிந்தது. மனுசங்க இலக்கியத்தை விட இடதுசாரி அரசியலின் நீட்சியாக பரிமாணம் பெற்ற தலித் அரசியல் கட்டுரைகளையே அதிகம் வெளியிட்டது. இலக்கியமும் கூட முழுக்க படைப்புகளாகவே இருந்தன. இன்றைக்கு பார்க்கும் போதும் மனுசங்க இதழில் வந்த படைப்புகளை விட அரசியல் கட்டுரைகளுக்கான பெறுமதியே அதிகம் என்று அறுதியிடத் தோன்றுகிறது.

இதழ்களின் பெயர்கள்:

தலித் இலக்கியமும், தலித் பண்பாட்டு அரசியலும் தம் அடையாளமாக புதிய பண்பாட்டை முன்வைத்தன. உள்ளடக்கத்தில் மட்டுமல்லாது வடிவத்திலும் மாற்றங்களை முன்வைத்தன. சாதிய சமூகத்தால் புனிதமானவை என்று சொல்பவற்றை தலைகீழாக்கியும், தலைகீழானது என்று சொல்லியவற்றை மீட்டெடுத்தும் பேசின. அவற்றின் இத்தகைய முன்னெடுப்புகளால் தமிழ்ச் சூழல் சற்றே அசைந்தது. இவற்றில் குறிப்பாக பெயர்களைச் சொல்லலாம். இடதுசாரி அடையாள சொல்லாடல்களான புதிய, விடியல் போன்ற சொல்லாடல்களை விடுத்து அதுவரை கேட்கப்படாதிருந்த தலித்துகளின் குரல்களை உரக்க சொல்லும் விதத்திலான பெயர்கள் முன்னெழுந்தன. அவை மக்களின் அன்றாடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டன. இத்தகைய பெயர்களும் அவை மீட்டெடுக்கப்பட்ட விதமும் தலித் அரசியல் முன்வைக்க விரும்பிய கருத்தியலைக் காட்டின. 1990 ஆம் ஆண்டு பொதியவெற்பன் ஓர் இதழை ஆரம்பித்தார். அதன் பெயர் பறை. ஓரிதழோடு அது நின்று போனாலும் அந்தப் பெயர் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. பறை என்பது இழிவின் குறியீடாகவும் அவற்றை சொல்வது அவமானமாகவும் கருதப்பட்டு நிலையில் அதை எழுச்சியின் குறியீடாக பார்க்கும் போக்கு தலித் சொல்லாடல்களின் அறிமுகத்தால் நடக்கத் தொடங்கியிருந்தது.

இதற்கடுத்து உஞ்சைராசன் ஆரம்பித்த இதழின் பெயர் மனுசங்க. இடதுசாரி அரசியலின் போதாமை, அதன் தொடர்ச்சி என்னும் பின்னணியில் தலித் அரசியலைப் புரிந்திருந்த அவ்விதழ் இன்குலாப் எழுதியிருந்த “மனுசங்கடா நாங்க மனுசங்கடா” எனத் தொடங்கும் பாடலின் தாக்கத்தால் மனுசங்க என்று பேச்சு வழக்கில் பெயரைச் சூட்டியிருந்தது. மனுசங்கடா என்று உக்கிரமாக ஒலிக்கும் முழக்கத்தின் மாற்று வடிவம் தான் அப்பெயர். இதிலிருந்து சிவகாமி தொடங்கிய இதழின் பெயர் கோடாங்கி. கோடாங்கி என்பதென்ன? சாமிக்கு முன்பு துடியாக இயக்கப்படும் இசைக்கருவி. இவ்வாறு 1990 களில் இதழ்களுக்கு சூட்டப்பட்ட பெயர்கள் மாற்று அழகியலை முன்வைத்ததைப் பார்க்கிறோம்.

கோடாங்கி இதழின் தொடக்கம்:

கோடாங்கி இதழின் இரண்டு தனித்துவங்களை இங்கு குறிப்பிடலாம். ஒன்று அது தோன்றிய சூழல், இரண்டு அது முன்வைத்த உள்ளடக்கம். 1995 ஆம் ஆண்டு அதிமுக அரசு தஞ்சையில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியது. அப்போது உருவாகியிருந்த தலித் இலக்கிய எழுச்சியை ஒட்டி தலித் இலக்கிய ஆளுமைகள் கட்டுரைகள் தரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். ஆனால், அவர்களின் கட்டுரைகள் மாநாட்டு மலரில் இடம்பெறவில்லை. தலித் இலக்கியச் சொல்லாடலை பொதுவான இலக்கியச் சூழல் ஏற்பதிலிருந்த ஒவ்வாமையை இது காட்டியது. இவ்வாறு விடப்பட்ட ஓவியர் சந்ரு, ப்ரதிபா ஜெயச்சந்திரன், ரவிக்குமார், ராஜ்கௌதமன் ஆகியோரின் கட்டுரைகளைப் பிரசுரிப்பதற்கு ஓர் இதழ் தொடங்க வேண்டுமென திட்டமிடப்பட்டது. இவ்வாறு எதிர்ப்பிலிருந்து உருவான இதழ் தான் கோடாங்கி. முதல் இதழிலேயே இவர்கள் கட்டுரைகள் இடம்பெற்றன. இதன்படி முதல் இதழே இலக்கிய உலகின் கவனத்தை ஈர்த்திருந்தது. ஐந்து இதழ்கள் வரை காத்திரமாக வெளியாகி நின்றுபோனது.

ப.சிவகாமி (நன்றி: நீலம் இதழ்)

இதழின் உள்ளடக்கம் சிறுகதைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள் என்று அமைந்திருந்தன. இவை நவீன இலக்கிய பண்போடு எழுதப்பட்டிருந்தன. இலக்கியம் மட்டுமல்லாது நவீன ஓவியங்களை அட்டையிலும், உள்ளேயும் கையாண்டனர். இதழில் ஓவியர் சந்ருவின் பங்கெடுப்பு முக்கியமானதாக அமைந்திருந்தது. ப.சிவகாமியே தலித் ஓவியம் பற்றி ஒரு கட்டுரை எழுதினார். இதழ்களில் ப்ரதிபா ஜெயச்சந்திரன், சந்ரு, ராஜ்கௌதமன், ப.சிவகாமி, கே.ஏ.குணசேகரன் ஆகியோர் எழுதினர். ராஜ்கௌதமன் எழுதிய இரண்டு சிறுகதைகள் கோடாங்கியில் தான் வெளியாயின. கன்னட தலித் எழுத்தாளரான மொகள்ளி கணேஷின் சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன. படைப்பாளிகள் மட்டுமல்லாது உஞ்சைராசன், தணிகைச்செல்வன், பா.கல்யாணி, வினோத், அரங்க.குணசேகரன் போன்றோரும் எழுதினர். இவர்கள் தலித் அரசியல் எழுச்சி நடைபெற்று வந்த வேளையில் அதற்கான அரசியல் நிலைபாடு, தத்துவம் போன்றவற்றை அக்கட்டுரைகளில் விவாதித்தனர். அதேபோல தலித் இலக்கியம் தோன்றி வரும் நிலையில் தலித் அழகியல் குறித்து விவாதிக்கும் கட்டுரைகளும் இதழில் எழுதப்பட்டன. உஞ்சைராசனின் கதைகளும் இடம்பெற்றன. அந்த வகையில் முழுமையான பொருளில் முதல் தலித் இலக்கிய இதழென்று கோடாங்கியைக் கூறலாம்.

கோடாங்கி – புதிய கோடாங்கியாக:

கோடாங்கி தொடங்கப்பட்டு சில இதழ்களோடு நின்றுபோனது. அப்போது சிவகாமியின் அலுவல் ஜப்பானுக்கு மாறியிருந்தது. அவர் திரும்பி வந்த பின்னால் கோடாங்கியை 2000 ஆம் ஆண்டு மாத இதழாகத் தொடங்கினார். ஏற்கெனவே நடத்தப்பட்டு விடப்பட்டிருந்த இதழ் திரும்பவும் புதிதாக தொடங்கப்படுகிறது என்கிற முறையிலும், புதியதை அறிவிக்க வரும் கோடங்கி என்கிற முறையிலும் புதிய கோடாங்கி எனும் பெயர் சூட்டப்பட்டது. இன்று வரையில் மாத இதழாக வெளிவந்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தமிழில் நீண்ட காலமாக இடைவிடாமல் வெளியாகிற முதல் தலித் இதழ் என்று புதிய கோடங்கியைக் குறிப்பிடலாம். புதிய கோடாங்கிக்கு இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவு பெற்றிருக்கிறது.

2000 என்பது நான் தனிப்பட்ட முறையில் ஒரு வாசகனாக, செயற்பாட்டாளனாக தலித் இலக்கியத்தோடும், தலித் அரசியலோடும் உணர்வுப்பூர்வமாக ஈடுபாடு கொண்டிருந்த காலம். இலக்கியம் பற்றி பேசுவது, அரசியல் பற்றி பேசுவது, கூட்டங்களுக்குப் போவது, எழுத்துகளை வாசிப்பது – விவாதிப்பது, நண்பர்களைச் சந்திப்பது என்றே அக்காலக்கட்டம் தீவிரம் பெற்றிருந்தது. அப்போது இவற்றையெல்லாம் ஒருங்கே உள்ளடக்கி வெளிவந்த இதழாக புதிய கோடாங்கியே இருந்தது. எனவே, இவற்றையெல்லாம் விவாதிப்பவர்களின் மையமாக புதிய கோடாங்கி மாறியது. பலர் தங்களுடைய கருத்துகளை புதிய கோடாங்கியில் எழுதினர் அல்லது புதிய கோடாங்கியில் எழுதப்பட்டதை விவாதித்தனர். இக்காலக்கட்டத்தில் வெளியான தலித் முரசு, தலித், தாய்மண் ஆகிய மூன்று இதழ்களையும் இங்கு குறிப்பிட வேண்டும். தலித் முரசு முழுக்க ஓர் அரசியல் இதழாக வெளியானது. பல அரசியல் செயற்பாடுகள் அதில் பதிவாயின. விரிவான கட்டுரைகளுக்கோ, விரிவான விவாதங்களுக்கோ அவற்றில் அதிக இடமில்லாமல் இருந்தது. ரவிக்குமார் தலித் இதழை தொடங்கியிருந்தாலும் அது தீவிர சிற்றிதழ் மரபை கொண்டிருந்தது. அது வாசகர்களை சென்றடைவதற்கான முனைப்பைக் கொண்டிருக்கவில்லை. இடையிடையே நின்று நின்று வந்தது. தாய்மண் இதழ் (பின்னால் நமது தமிழ்மண் என்று மாற்றப்பட்டது) விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அதிகாரபூர்வ ஏடு. அவற்றில் தொடக்கத்தில் தலித் இலக்கியவாதிகள் பற்றிய அறிமுகக் குறிப்புகள் வெளியாயின என்றாலும் பின்னாட்களில் அதுவும் இல்லாமல் போனது. இவற்றோடு ஒப்பிடும்போது புதிய கோடாங்கி இதழ் வேறுபட்டது. புதிய கோடாங்கி ஒரே நேரத்தில் அரசியல் பிரதியாகவும், இலக்கிய பிரதியாகவும் விளங்கியது. மாத இதழாக இருந்ததால் எழுதுவதிலும், வெளியாவதிலும் முறையான தொடர்ச்சி இருந்தது. அக்காலக் கட்டத்தில் தமிழில் இயங்கிய பலரும் பங்களித்த இதழாக புதிய கோடாங்கி விளங்கியது.

ப.சிவகாமி

கோடாங்கியிலிருந்து புதிய கோடாங்கியாக மாறிய பின்னால் நடந்த முக்கியமான மாற்றம் என்னவென்றால் புதிய கோடாங்கி இதழாக மட்டுமல்லாமல், இயக்கமாக செயற்பட்டது. ப.சிவகாமி தனித்தும் நண்பர்களோடு சேர்ந்தும் தமிழ்நாடு எங்கும் புதிய கோடாங்கி சார்பான கூட்டங்களில் பங்குபெற்றார். கூட்டங்களை ஒருங்கிணைத்தார். ஓவியர் சந்ரு, கெளதம சன்னா, குடியரசன், ப்ரதிபா ஜெயச்சந்திரன், நிகழ் அய்க்கண் ஆகிய நண்பர்கள் பெரும்பாலான கூட்டங்களில் பங்குபெற்றனர். இதே காலக்கட்டத்தில் தான் தென்னிந்திய தலித் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் பேரவையும் தொடங்கப்பட்டது. இது தனி அமைப்பு என்றாலும் புதிய கோடாங்கியின் இணை அமைப்பு போலவே இயங்கியது. இப்பேரவையின் செயற்பாடுகள் பற்றி புதிய கோடாங்கியில் தான் தொடர்ந்து வெளியாகிவந்தன. புதிய கோடாங்கியின் ஆசிரியர் குழுவில் சிவகாமியின் பெயர் இல்லாவிட்டாலும் அவரின் ஆசிரியத்துவமே அதிலிருந்தது என்று கூற முடியும்.

மூன்று கட்டங்கள்:

புதிய கோடாங்கியின் வாசகனாக, பங்களிப்பு செய்தவனாக இதழின் பங்களிப்பு சார்ந்து அவற்றை ஒரு வசதிக்காக மூன்று கட்டங்களாக பிரித்துக்கொள்ள முடியும் என்றுத் தோன்றுகிறது. ஒன்று 2000 த்திலிருந்து 2003 வரையிலான முதல் நான்காண்டுகள். இக்காலக்கட்டத்தில் தலித் அரசியல் என்று கருதப்பட்டவற்றை, அதன் தோழமை சக்திகள் என்று அறியப்பட்டவற்றை அதன் சட்டகத்திற்குட்படுத்தி வெளிப்படுத்தி வந்தது. இக்காலக்கட்டத்தில் பல முற்போக்கு தரப்பினர் பங்களித்தனர். சாதி வன்முறைகள், இலக்கியம், கலைகள் பற்றிய பதிவுகள் வெளியாயின. மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வந்தது. பாஜகவோடு அதிமுகவும் திமுகவும் அடுத்தடுத்து கூட்டணி வைத்தன. தமிழ்நாட்டில் 1990 களின் தலித் அமைப்புகள் தேர்தல் அரசியலில் பங்கெடுத்திருந்தன. இக்காலக் கட்டத்தில் பசுவதை தடுப்புச் சட்டம், ஜெயலலிதாவின் மதமாற்றத் தடைச்சட்டம் போன்ற நெருக்கடிகள் வலுத்திருந்தன. இவற்றை விமர்சித்து கட்டுரைகள் வெளியாகி வந்தன. அ.மார்க்ஸும் அவர் வழியாக அறிமுகமான நண்பர்களும் அதிகம் எழுதினர். தலித்துகள் குறித்து மத்தியப் பிரதேச அரசு கொணர்ந்திருந்த போபால் பிரகடனம் குறித்த கட்டுரைகள், பதிவுகள் வெளியாயின.

இரண்டாவது கட்டத்தை 2003 தொடங்கி 2010 வரை என்று வைத்துக் கொள்ளலாம். புதிய கோடாங்கியின் முக்கியமான காலம் என்று இக்காலக்கட்டத்தைக் கூறலாம். இந்த காலக்கட்டத்தில் தான் புதிய கோடாங்கி இளைஞர் விழிப்புணர்ச்சி முகாம்கள், தென்னிந்திய தலித் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் பேரவை சார்பாக எழுதுவதற்கான பயிலரங்குகள், பழங்குடியினர் முகாம்கள், பழங்குடியினர் மாநாடுகள், அரவாணிகள் மாநாடு, பெண்கள் மாநாடு போன்றவை நடத்தப்பட்டன. இவையெல்லாம் நடந்தன என்பதற்கான ஆவணமாக திகழ்வது புதிய கோடாங்கி இதழின் பதிவுகள் மட்டுமே. அதாவது தலித் பிரச்சினையை அவர்களை ஒடுக்கி வருகிற பெரும்பான்மை சாதிகளோடு இணைக்கும் ஓட்டரசியல் வாதத்தை மேற்கொள்ளாமல், பிற விளிம்புநிலை குழுக்களோடு இணைக்கும் பணிகளைப் புதிய கோடாங்கி மேற்கொண்டது. தலித் பிரச்சினையிலும் கூட நிலம், அரசு திட்டங்கள் ஆகியவற்றில் கவனம் ஈர்த்தது. சிறப்பு உட்கூறுத் திட்டம் பற்றி தொடர்ந்து எழுதி வந்தது. ப.சிவகாமி முன்னெடுத்த இரண்டு விசயங்கள் முக்கியமானவை. நிலவுரிமைக்காக அவர் முன்னெடுத்த தலித் நிலவுரிமை இயக்கம், அப்னா பஞ்சாயத்து அல்லது தளையறுத்தல் ஆகிய இரண்டே அவை. தலித் நிலவுரிமை இயக்கம் சார்பாக காஞ்சிபுரத்தில் நடத்தப்பட்ட பஞ்சமி நில மீட்பு மாநாட்டின் தாக்கம் காரணமாக விடுதலை சிறுத்தை கட்சி மாமல்லபுரத்தில் பஞ்சமி நில மீட்பு மாநாடு ஒன்றை நடத்தியது.

புதிய கோடாங்கி சார்பில் மாநாடு

இக்காலக்கட்டத்தில் இதழுக்குள் நடந்த முக்கியமான மாற்றம் என்று திராவிட இயக்க அல்லது பெரியார் விமர்சனம் என்பவற்றைக் கூறலாம். இதற்கு முன்னரே இதே விமர்சனத்தை ரவிக்குமார் தொடங்கியிருந்தாலும் தலித் அரசியல் நோக்கிலிருந்து மட்டும் புதிய கோடாங்கி இந்த விமர்சனத்தை முன்னெடுத்திருந்தது. முதல் கட்டத்தில் எழுதிய முற்போக்கு எழுத்தாளர்கள் பலர் இப்போது எழுதுவதை நிறுத்தலாயினர். அ.மார்க்ஸ் போன்றோர் கவிதாசரண் போன்ற இதழ்களில் ஐஏஎஸ் அம்மாவின் அதிகாரம் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சிக்கவும் செய்தார். பின்னாட்களில் பெரியார் விமர்சனத்தை முன்னிறுத்தி தலித் இதழ்களான தாய்மண், புதிய கோடாங்கி முதலிய இதழ்களைப் புறக்கணிக்கக் கோரும்படி தீர்மானமும் அவரால் கொண்டுவர முடிந்தது. ஆனால் விமர்சனத்திற்கு பின்னர், வேறு எழுத்துகள் புதிய கோடாங்கியில் வெளியாகத் தொடங்கின. குறிப்பாக, திராவிட இயக்கம் பற்றிய ஆதிதிராவிடர்களின் வரலாற்று ரீதியான விமர்சனப் பார்வையை பெரியவர் அன்பு பொன்னோவியம் அவர்கள் இதழில் வெளியிட்டார். இதழில் நீண்ட எதிர்வினைகளும் இடம்பெற்றன. குருசாமி மயில்வாகனன், சோதிப் பிரகாசம் ஆகியோரின் கடிதங்களும் தொடர்ந்து இடம்பெற்றன. க.பஞ்சாங்கம், அ.ராமசாமி போன்றோரின் கட்டுரைகள் இடம்பெற்று வந்தன. இக்காலக்கட்டத்தில் இரண்டு பேரின் படைப்புகளை குறிப்பிட வேண்டும். ஒருவர் தேவதேவன். கோடாங்கியின் அரசியலோடு நேரடித் தொடர்பில் இல்லையென்றாலும் அவரின் கவிதைகள் இதழில் தொடர்ந்து இடம்பெற்று வந்தன. அடுத்து கலாமோகனின் சிறுகதைகள். அதேபோல புதிய எழுத்தாளர்களின் களமாகவும் புதிய கோடாங்கி விளங்கியது. குறிப்பாக தலித் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் பேரவை சார்பாக நடைபெற்ற பயிலரங்கில் பவானி(திருப்பதி) எழுதிய கரிசலாங்கண்ணி கதை கவனம் பெற்றது. ஆனால், அவர் தொடர்ந்து எழுதவில்லை. பாரதி நிவேதனின் கதைகள், கவிதைகள், இரா.பழனிச்சாமி கட்டுரைகள், வெங்கனூர் ஏழுமலையின் எழுத்துகள் தொடர்ந்து வெளியாயின. பழங்குடி பயிலரங்குகளில் பதிவு செய்யப்பட்ட கதைகளும், பாடல்களும் இதழில் பிரசுரிக்கப்பட்டன. ம.வேலுச்சாமி, கோ.ரகுபதி, நிகழ் அய்க்கண், ஐ.ஜா.ம.இன்பகுமார் ஆகியோரின் கட்டுரைகள் தொடர்ந்து இடம்பெற்று வந்தன.

இக்காலக்கட்டத்தில் எழுதப்பட்ட தொடர்கள் குறிப்பிடத்தக்கவை. கௌதம சன்னா தலித் தேசியம் என்ற தொடரை எழுதினார். வெவ்வேறு பெயர்களில் (சாக்கியன், சந்திரன்) மாறிமாறி எழுதி வந்த குடியரசனின் இரண்டுத் தொடர்கள் நீண்ட காலம் வெளியாயின. ஒன்று மக்கள் அறியாத அம்பேத்கர், இரண்டு கணிதம் நம் உடைமை என்பவையாகும். இவை தவிர அ.ராமசாமி எழுதிய ‘வரலாறு யாரை விடுதலை செய்யும்?’ என்கிற தொடரும் ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய ‘வரலாற்றை மொழிதல்’ என்கிற தொடரும் வெளியாயின. திராவிட இயக்க விமர்சனத்திற்கு இணைகோடாக தலித்துகளுக்கான வரலாற்றைத் தேடுதல், அவற்றுக்கான விவாதங்களை மேற்கொள்ளுதல் ஆகியவை இவ்விரண்டு தொடர்களில் அதிகம் தொனித்தன. அ.ராமசாமி, ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோரின் தொடர்கள் நூல்களாயின. ஆனால் கெளதம சன்னா, குடியரசனின் தொடர்கள் இன்று வரையிலும் நூல்களாகவில்லை. அவை நூல்களாக மாற வேண்டிய பெறுமதி உடையவை.

புதிய கோடாங்கியில் எழுதப்பட்டு தொகுக்கப்படாதவை என்று தேடினால் அதிகமாகவே இருக்கும். ப.சிவகாமியின் கட்டுரைகள் அதிகமுண்டு. அவரின் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளும் உண்டு. இக்காலக்கட்டத்தில் அவர் படைப்பிலக்கியத்திலிருந்து பெருமளவு தலித் உரிமைகள் சார்ந்து எழுதுவது, மொழிபெயர்ப்பது என்று மாறியிருந்தார். அவரின் மூன்றுத் தொடர்கள் குறிப்பிடத்தக்கவை. ஒன்று உடல் அரசியல். அப்போது தமிழில் அறிமுகமாகி நடந்து வந்த பெண்கள் படைப்புகள் சார்ந்த விவாதங்களின் பின்புலத்தில் இந்த தொடர் முக்கியத்துவம் பெற்றது. பின்னாட்களில் இத்தொடர் நூலாக வடிவம் பெற்றது. சுயசரிதைத் தன்மையில் உண்மைக்கு முன்னும் பின்னும் நாவல் தொடராக வெளியானது. அதுவும் நூலானது. கட்டுரைகளை பொறுத்தவரையில் பிரச்சினைகள் அடிப்படையில் சில தொகுக்கப்பட்டு நூல்களாயின. அந்த வகையில் அப்னா பஞ்சாயத்து, பழங்குடிகள் நில உரிமை, ஒடுக்கப்பட்டவர்களுக்கு தனி பட்ஜெட், தலித் நில உரிமைப் போராட்டம் போன்ற வெளியீடுகளை கூறலாம். ப.சிவகாமியின் மொழிபெயர்ப்பில் ராமுத் கரியாலி வாழ்க்கை வரலாறு இருபதிற்கும் மேற்பட்ட மாதங்கள் இதழில் வெளியாயின. ஆனால் அது இதுவரையிலும் நூலாகவில்லை. கோடாங்கியில் கருத்தம்மாவாக தோன்றிய சிவகாமி புதிய கோடாங்கியில் முனிமாவாக தோன்றினார். அதில் முனிமா கேள்வி பதில் என்ற பெயரில் வாசகர் கேள்விகளுக்கு பதிலளித்தார். அவருக்கேயுரிய கூர்மை, கேலி, நேரடித்தன்மை அவற்றில் இருந்தன. இரண்டரை லட்சம் பேர் திரண்ட பெண்கள் முன்னணியின் மாநாடு இவர் ஒருங்கிணைப்பில் மதுரையில் நடந்தது. அதற்கான பதிவும் புதிய கோடாங்கியிலேயே கிடைக்கிறது. மூன்றாவது கட்டத்தில் மோகன்ராஜ், ஜூலியட் ஜெனியர், ஆ.ச.சேரிவாணன் உள்ளிட்டோர் பங்களிப்பால் அது செழுமைப்பட்டு வருகிறது.

ஸ்டாலின் ராஜாங்கம்

புதிய கோடாங்கி இதழ் இவ்வளவு காலம் தமிழில் வெளியாகி வந்தாலும் அதன் பங்களிப்பு குறித்து யாரும் பேசியதே இல்லை. விளைவுகளையே ஏற்படுத்தாவிட்டாலும் வெளிச்சம் கிடைக்கும் விசயங்களையே பேசுகிற சூழலே இங்கிருக்கிறது. அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் இதழ் வெளியாகி வருகிறது. இக்கட்டுரையும் கூட ஒரு சுருக்கக் குறிப்பு தான். எதிர்கால ஆய்வாளர்களின் பார்வையில் இது ஒளி பெறும் என்று நினைக்கிறேன்.

***

One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *