வாழ்க்கை வரலாற்று நூல்களில் ராஜம் கிருஷ்ணன் கையாளும் அணுகுமுறை – ஸ்டாலின் ராஜாங்கம்

(டாக்டர் ரங்கச்சாரி, பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி, பாதையில் படிந்த அடிகள் ஆகிய தன்வரலாற்று நூல்களை முன்வைத்து)

ராஜம் கிருஷ்ணன்

ஒரு வகையில் பார்த்தால் நாம் வாசிக்கும் நாவல்கள் பலவும் வாழ்க்கை வரலாறுகள் தாம். ஆனால் வரலாறு என்று சொல்லப்படாமல் நாவல் (புனைவு) என்று சொல்லப்படுவதால் நாம் ‘வரலாறாக’ கருதுவதில்லை. சான்றாக இமையத்தின் செடல் நாவலா? வரலாறா? என்று கேட்டால் அது ஒருவரின் வரலாறாகவும் இருக்கிறது என்பதே உண்மை. ஆனால் அதனை அவர் நாவலாக எழுதியிருக்கிறார். அதனை எழுதுவதற்காக களத்தகவல்கள் சேகரிக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் வரலாறு எழுதுவதற்கும் நாவல் எழுதுவதற்கும் உள்ள வேறுபாடு என்ன? என்கிற கேள்வியை நாம் கேட்டுக்கொள்ளலாம். வரலாறுக்கு வரையறை உண்டு. ஆதாரங்களும் தர்க்கங்களும் கிடைக்கும் வரையில் அதன் நீளம் அமைய முடியும். புனைவு அவ்வாறல்ல, அது எழுதுவதில் சுதந்திரத்தை தரக்கூடியது. படைப்பாளியின் புனையும் திறனே அங்கு முக்கியமாகிறது. வரலாறே என்றாலும் இப்படித் தான் எழுத வேண்டும் என்று தீர்மானிப்பது அதனை எழுதும் எழுத்தாளரின் கண்ணோட்டம் தான். அந்த வகையில் வரலாறும் புதினத்திற்குரிய கூறுகளோடு தான் எழுதப்படுகிறது. வரலாறு என்பது நமக்கு வெளியே இருப்பது மட்டுமல்ல. அது நாம் பார்க்கிற, கலக்கிற, தொல்லைக்கு உள்ளாகிற ஒன்றாகவும் இருக்கிறது. வரலாற்றில் நடந்த சம்பவங்கள் இன்றும் நடப்பது தான், அடுத்த தெருவிலும் நடப்பது தான். அது பழையதோ, முடிந்துவிட்டதோ அல்ல. இந்த புரிதலின்படி பார்த்தால் நாம் பழையதை எழுதினாலும் அதில் சமகாலத்தன்மை வந்து விடுகிறது. முழுக்க வரலாறாக எழுதினால் அந்த காலம் வேறு, இந்த காலம் வேறு என்று சொல்லலாம். அவற்றில் புனைவுத் தன்மை கலக்கும் போது பக்கத்து தெருவில், அண்மையில் நடப்பதாக மாறிவிடுகிறது.வரலாற்றை சமகாலத்தன்மைக்குள் வைத்து யோசிக்க புனைவு உதவுகிறது.

மூன்று வரலாற்று நாவல்கள்:

ராஜம் கிருஷ்ணன்(1925-2014) பல்வேறு நாவல்களை எழுதியுள்ளார். ராஜம் கிருஷ்ணன் என்றாலே கள ஆய்வு மேற்கொண்டு படைப்புகளை ஆக்கியவர் என்ற பார்வை முன்னெழும் அளவுக்கு களஆய்வுகளோடு இணைந்திருந்தவர். படைப்புகள் புனைவே ஆயினும் அதற்காக கள ஆய்வு மேற்கொள்ளும்போது அப்படைப்புகளுக்கு வேறொரு அர்த்தம் வந்து விடுகிறது. அதாவது உண்மைத் தகவல்களை வைத்து புனைவை எழுதினார் என்பதே அந்த அர்த்தம். அதன்படி பார்த்தால் அவர் உண்மைக்கு நெருக்கமாக படைப்புகளை உருவாக்க வேண்டுமென்று கருதினார் என்று கூறலாம். அவர் கள ஆய்வு மேற்கொண்ட தரப்புகள் பழங்குடிகள், மீனவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அதுவரை இலக்கிய பாடுபொருளுக்குள் வராத சமூகத்தின் விளிம்பு நிலையினராக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நவீன இலக்கியத்தின் ‘தகுதி’யாக கூறப்பட்ட ‘தன்னுடையதல்லாத அனுபவத்தை எழுதக்கூடாது’ என்பது அவரின் வரம்பாக இருந்திருக்கவில்லை என்றுத் தெரிகிறது. தன்னுடையல்லாத அனுபவமாயினும் அக்கருப்பொருள் மீது அக்கறை இருக்குமாயின் எழுதலாம் என்று கருதியவராக அவர் இருந்திருக்கிறார்.

இவ்வாறு மக்களின் வாழ்வை கள ஆய்வு வழியாக எழுதிய அவர் சில ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு மூன்று புனைவுகளை எழுதினார். புனைவு வடிவமே ஆயினும் அவற்றில் வரும் நபர், இடம், சம்பவம் ஆகியவை உண்மையேயாகும். யாரைப்பற்றி எழுதப்படுகிறது என்பது வெளிப்படையாக கூறப்பட்டது. அந்த வகையில் டாக்டர் ரங்காச்சாரி (1965), பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி (1983), பாதையில் பதிந்த அடிகள் (1991) ஆகிய மூன்று நூல்கள் இங்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. பாரதியாருக்கு அறிமுகம் தேவையில்லை. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சென்னையில் மக்களுக்காக ‘பறந்து பறந்து’ மருத்துவம் பார்த்தவர் டாக்டர் ரங்காச்சாரி (1882 -1934). அவர் இறந்தபோது மக்கள் வருந்தினர். பாதையில் பதிந்த அடிகள் நூல் தஞ்சை வட்டார இடதுசாரி இயக்கத்தில் விவசாய கூலித் தொழிலாளர்களை ஒருங்கிணைத்த போராளி மணலூர் மணியம்மை பற்றியது. மூவரையும் பார்க்கும் போது தேசியவாத, இடதுசாரி லட்சியவாதங்களின் காலத்தில் வாழ்ந்தவர்களாக இருக்கின்றனர். அந்த மதிப்பீடுகளை மீள நிறுவுவதற்காகவே இந்த ஆளுமைகளின் லட்சிய வாழ்வை ராஜம் கிருஷ்ணன் எழுதினார் என்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது.

இம்மூன்று நூல்களும் புனைவுகளே ஆயினும் வரலாற்றோடும் தொடர்பு கொண்டவை. வரலாறு என்பதற்கு “சான்றுகள் வழியிலான உண்மைகள்” என்று பொருள் கொண்டால்  இப்படைப்புகளை ‘உண்மையும் புனைவும்’ பிணைந்தவை அல்லது வரலாற்றுப் புனைவுகள் என்று அழைக்கலாம். மேலும் இம்மூன்றும் இருபத்தி ஐந்து ஆண்டு கால (1965 – 1991) இடைவெளியில் எழுதப்பட்டிருக்கின்றன. இந்த வகைமையிலான கடைசி நாவல் “பாதையில் பதிந்த அடிகள்” எழுதப்பட்டதைப் பார்த்தால் இன்றைக்கு இருபத்தைந்து ஆண்டுகளாகி விட்டன. தமிழில் இடதுசாரி இலக்கிய நோக்கும், மனிதாய கண்ணோட்டமும் செல்வாக்கோடு இருந்த காலக்கட்டத்தில் இவை எழுதப்பட்டிருக்கின்றன. அந்தவகையில் இந்த இரண்டு கண்ணோட்டமும் நவீனத்துவத்துடையவை.

வரலாறு என்றால் என்ன? அதனை எழுதுபவர் – வாசிப்பவர் – அர்த்தப்படுத்துபவர் ஆகியவை சார்ந்து பல்வேறு கோட்பாடுகள்,விவாதங்கள் தமிழில் 1980 களின் இறுதித் தொடங்கி அறிமுகமாகின.குறிப்பாக விளிம்பு நிலை வரலாறு, வட்டார வரலாறு, நுண் வரலாறு போன்ற வகைமைகள் அறிமுகமாயிருக்கின்றன. குறிப்பாக வரலாறே ஒரு கதையாடல் என்கிற பார்வை கவனத்தை ஈர்த்திருக்கிறது.மார்க்சியத்தின் வரலாறு பற்றி கண்ணோட்டத்தோடு இணைந்தும், விமர்சித்தும் வரலாறு பற்றிய இந்த சொல்லாடல்கள்  அமைந்தன. வரலாறு பற்றிய இந்த பார்வைகள் எல்லாம் தமிழில் அறிமுகமாகும் முன்பே இந்நூல்களை ராஜம் கிருஷ்ணன் எழுதி விட்டிருந்தார். முழுமையான அளவில் அவரொரு நவீனத்துவவாதி.ஆனால் வரலாறு பற்றிய மாற்றுக் கண்ணோட்டங்கள் உருவாகி விட்ட இக்காலத்திலிருந்து முந்தைய வரலாற்றுப் பிரதிகளான இம்மூன்று படைப்புகளையும் பார்க்க வேண்டியிருக்கிறது.ராஜம் கிருஷ்ணன் இந்நூல்களை அப்படியே எழுதி விடவில்லை. இந்த ஆளுமைகள் பற்றி முதன்முறையாக தரவுகளை திரட்டி எழுதினார்.சான்றுகளைத் திரட்டி வாசித்து அவற்றிலிருந்து இந்நூல்களை எழுதினார்.

ஒரு படைப்பாளிக்கு வரலாறு தேவைப்படுவது ஏன்? வரலாற்றை புனைவாக்கியோ, இடைவெளிகளை புனைவு மூலமோ எழுதி பார்க்க விரும்புவது ஏன்? ஏனென்றால் வரலாறு எல்லாவற்றையும் காட்டுவதில்லை.சான்றுகள் இல்லாவிட்டால் ‘நிகழ்ந்தவற்றை’ கூட வரலாறு சொல்லாது. ஆனால் புனைவுக்கு அது அவசியமில்லை. புனைவு என்பதன் பொருள் பொய் அல்ல.மாறாக கிடைத்திராத ஒன்றை பற்றிய அனுமானம்.வரலாற்றில் இடம் பெறுபவர்களே ஆயினும் ‘ஆளுமைகளும்’மனிதர்களே. அவர்களுக்கும் மனிதத் தருணங்கள் உண்டு. வரலாறு மனிதர்களை வளைக்க முடியாத – தொட்டுணர முடியாத இரும்பை போல் அணுகுகிறது. புனைவால் தொடும்போது அவனுக்கு சதை இருப்பது தெரிய வருகிறது.லட்சிய மனிதர்களே ஆயினும் அவர்களின் வாழ்க்கையை ‘நிகழ்கால லட்சியங்களுக்கேற்ப’ நீட்டித்துக் காட்ட புனைவே கைகொடுக்கிறது.

டாக்டர் ரங்காச்சாரி:

சென்னையில் ஐந்து ரூபாய் மருத்துவர் என்று புகழ்பெற்ற ஜெயச்சந்திரன் அண்மையில் காலமானார் என்பதை படித்த போது உடனே நினைவுக்கு வந்தவர் டாக்டர் ரங்காச்சாரி. ஐந்து ரூபாய் டாக்டர் என்பதைப் போல ரங்காச்சாரி பறக்கும் டாக்டர் என அழைக்கப்பட்டார். எளிய மக்களின் மருத்துவர் என்று போற்றப்பட்டவர். சென்னை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் அவருக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது. ராஜம் கிருஷ்ணன் அவருடைய வரலாற்றை நூலாக எழுத விரும்புகிறார்.ரங்கச்சாரி நவீன மதிப்பீடுகளால் உருவான லட்சியவாதத்தால் வழிநடத்தப்பட்டவர். கட்டணம் பெறும் மருத்துவரே ஆயினும் பணம் தரக்கூடிய சக்தி அற்றவராயின் அவர் வைத்தியம் பார்ப்பதை மறுத்ததில்லை. ஏழைகளுக்கு கட்டணமில்லாமல் பணியாற்றியவர்.இவ்வாறு லட்சியவாதத்தால் உந்தப்பட்டவர் பற்றிய லட்சியவாத நாவல் இது.மருத்துவத்தை சேவையாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு எவ்வாறு தோன்றியிருக்கும்? நம்முடைய மரபிலேயே அதற்கு இடமிருக்கிறது என்றாலும் நவீன காலத்தில் அதற்கு பெயர் லட்சியவாதம். ஜெயமோகன் தன்னுடைய அறம் சிறுகதைத் தொகுப்பில் பன்னிரண்டு கதைகள் வாயிலாக பன்னிரண்டு லட்சிய மனிதர்களை காட்டியுள்ளார்.பன்னிரண்டு பேரும் உண்மை மனிதர்கள். இத்தொகுப்பிற்கு முன்னோடி ராஜம் கிருஷ்ணனின் டாக்டர் ரங்கச்சாரி என்று சொல்லலாம்.

என்ன தான் புனைவாக ஒரு நாவல் எழுதப்பட்டாலும் அதனை எழுதும் நாவலாசிரியனின் வாழ்க்கைத் தொடர்பு இல்லாமல் அது எழுதப்படுவதில்லை. தனி மனிதனின் வாழ்க்கை இல்லாமல் நாவலே இல்லை என்பது நவீனத்துவத்தின் கூறு. வேறு ஒருவரை எழுதுவது என்றாலும் அதன் வழியே படைப்பாளன் தன் வாழ்க்கைக் கண்ணோட்டத்தையும், வாழ்வையும் எழுதி பார்க்கிறான்.ராஜம் கிருஷ்ணனும் லட்சியவாதங்களை முன்வைக்க விரும்பியவர். எனவே ரங்கச்சாரி போன்றோரின் வாழ்வை எழுதிக் காட்டுவதன் மூலம் அந்த லட்சியவாதத்தை சமகாலத்திற்கும் இழுத்து நிறுத்த முற்பட்டவர்.இந்த இடத்தில் தான் அவர் கடந்த காலத்தையே எழுதினாலும் அதில் சமகாலத் தன்மை வந்து விடுகிறது என்கிறோம்.

டாக்டர் ரங்கச்சாரி நாவல் 1882 ஆம் ஆண்டு தஞ்சாவூர் அருகிலுள்ள சருக்கையில் பிறப்பதிலிருந்து தொடங்குகிறது. அவருடைய பிறப்பு, பள்ளி என விரிகிறது. முதுமை, நோய், மரணம் ஆகியவை குறித்த கேள்விகளுக்கான உரையாடலிருந்து இவற்றிற்கு மருத்துவமே தீர்வு என்ற முடிவுக்கு வருகிறார்.கிட்டதட்ட புத்தனுக்கு ஞானம் கிடைத்து அறப்பணி ஆற்றியதற்கும் இது போன்ற கேள்விகளே காரணமாக இருந்தன என்று படித்திருக்கிறோம்.ரங்காச்சாரியின் மருத்துவ பணி வாழ்நாள் முழுவதும் அறப்பணியாகவே தொடர்கிறது. இந்த பயணத்தில் புத்தனை போலவே பல மனிதர்களை சந்திக்கிறார். துக்கங்களை நிவர்த்தி செய்கிறார். புதிய மருத்துவ முறை வந்ததும் அதை நோக்கி மக்கள் அலை அலையாக வருகிறார்கள். ஏற்கனவே நோய் தீர்த்தவர்களை கடவுள்களாக வணங்கி வரும் சமூகம் இது.மருத்துவத்தில் நடந்து வந்த மாற்றங்கள் சமூக மாற்றங்களிலும் பிரதிபலித்தன. அவற்றை பின்வருமாறு காணலாம்:

“கொஞ்சம் கண்ணை மூடிக்க… இதோ,இப்ப எல்லாம் போயிடும்…”என்னமோ மருந்து மணக்கிறது. உயர்குலத்தில் பிறந்தோருக்கு அதுநாள் உரித்தாயிருந்த வைத்தியம் அஞ்சலிக்கு நடக்கிறது…ஆஹா! இந்தப் பெருமிதத்தில் அவளுக்கு வலியும் டாக்டர் கிழிப்பதும் கூட தெரியவில்லையே!” (ப.98)

 ”ஆச்சரியமாக இருக்கிறதே! இப்படியும் டாக்டர் இருப்பது உண்டா?ஏழைகளின் வீட்டுக்கு.இங்கிலீஷ் வைத்தியம் செய்யும் டாக்டர்கள்,இப்படியும் அழைக்கும்முன் எங்கே என்று காத்திருப்பது போல் பீசைப் பற்றியே பேசாமல் வருவது வழக்கம் உண்டா?”(ப.112)

“இப்போதெல்லாம் நிறைய மருத்துவத் துறை கண்டுபிடிப்புகள் வந்துவிட்டன. ரங்காச்சாரிக்கு தோஹாத்தி என்கிற ஒரு தாதி இருந்தாள்.அவருடைய செபின் காரில் ஒரு தியேட்டருக்குத் தேவையான அனைத்து உபகரணங்களும் இருக்குமாம்.ஒட்டடைகள் தொங்கும் இடம் நவீன தியேட்டர்கள் மாதிரி மறைக்கப்படுமாம்.ரங்காச்சாரிக்கு கடவுள் நம்பிக்கை அறவே இல்லை. சிகிச்சை அறையில் உதவியாளர் ராமய்யங்கார் பிரார்த்தனை செய்வதை பார்த்துவிட்டு, உடனே என்ன ஆவும் என்று கர்சித்தாராம்”(ப.85காலம்)

டாக்டர் ரங்காச்சாரி மருத்துவர் மட்டுமல்ல அவர் கால நவீன சிந்தனைகளாலும் உந்தப்பட்டவராகவும் இருந்தார் என்பதை “நீ ஒப்புக் கொள்ளாவிட்டால் தோற்றுப் போனேன் என்று சொல். தன் அஞ்ஞானத்தை மறைத்துக் கொள்ள பலவீனத்தை மறைத்துக் கொள்ள நேர்மையிலும் உறுதியிலும் நம்பிக்கை இல்லாத மனிதன் சிருஷ்டி செய்த சரக்குகள், உன் பொய்யான பூஜைகள்: கடவுள்கள்:எல்லாம். தூய்மையால் தன் அறிவைத் துலக்கிக்கொண்டு மனிதன் காலத்தையும் வெல்லும் ஒளி பெற செல்லும்போது தன் கடமையை தவறாது நிறைவேற்றும் போது கடவுள் என்ற தத்துவத்துக்கே இடமில்லை அவ்வளவுதான்” (ப.244) என்று சொல்லுவதன் வழியாகவும், “இப்போதெல்லாம் நிறைய மருத்துவத் துறை கண்டுபிடிப்புகள் வந்துவிட்டன. ரங்காச்சாரிக்கு தோஹாத்தி என்கிற ஒரு தாதி இருந்தாள்.அவருடைய செபின் காரில் ஒரு தியேட்டருக்குத் தேவையான அனைத்து உபகரணங்களும் இருக்குமாம். ஒட்டடைகள் தொங்கும் இடம் நவீன தியேட்டர்கள் மாதிரி மறைக்கப்படுமாம். ரங்காச்சாரிக்கு கடவுள் நம்பிக்கை அறவே இல்லை. சிகிச்சை அறையில் உதவியாளர் ராமய்யங்கார் பிரார்த்தனை செய்வதை பார்த்துவிட்டு, உடனே என்ன ஆவும் என்று கர்சித்தாராம்”(86 காலம்) என்பதன் வழியாகவும் அறிய முடிகிறது. இங்கே அவரின் கடவுள் மறுப்புப் பார்வை தெரிகிறது.விடுதலைப் போராட்ட களங்களும் நாவலில் காட்டப்படுகிறது.

ரங்கச்சாரி பற்றி டாக்டர் ரங்கச்சாரி நாவலில் மட்டுமல்லாது பிற்காலத்தில் எழுதிய பாதையில் பதிந்த அடிகள் நாவலிலும் ஒரு குறிப்பைத் தருகிறார் ராஜம் கிருஷ்ணன். அதாவது ”அந்தக் குழந்தை வாயும் உதடும் பிளந்து பொறந்துடுத்து. அப்பா,சினிமா சினிமான்னு அலைஞ்சிண்டுருந்தார். இந்த பொண் குழந்தையை வச்சுண்டு என்ன பண்ண? பகவானே! பால் குடிக்க முடியாது குழந்தைக்கு. தூக்கிண்டு பைத்தியக்காரி மாதிரி பட்டணத்துக்கு ஓடினேன். ரங்காச்சாரி முன்னே போட்டேன் “டாக்டர் உங்களை எல்லோரும் தெய்வம்போல சொல்றா! நீங்க தான் இந்த குழந்தைக்கு வாயும் வயிறும் ஒண்ணு போல செய்யணும். உங்க பொறுப்பு’ன்னு சொன்னேன். அவா வீட்டுக்கு தான் போவேன்.அந்தம்மா, ரொம்ப நல்ல மாதிரி. ஒண்ணும் பண்றாப்பல இல்லையம்மா? உதடு மட்டும்னா, சரி பண்ணி பார்ப்பேன். அண்ணம் ரொம்ப பிளந்திருக்கேம்மான்னார். தெய்வம் தெய்வம்னு சொல்லாதேம்பார்.தெய்வம்னா அண்ணா அவருக்குப் புடிக்காது.மனுஷாளுக்கு மனோசக்தி,நம்பிக்கை வேணும்பார். நான் இப்படி ஆகனும்னு நினைச்சால்,அந்த சக்தியை அதை சாதிக்கும்னார்.அப்படித்தான் அந்த பச்சை குழந்தைக்கு அவர் வைத்தியம் பண்ணினார்” (ப.130) என்று அந்நாவலில் சொல்லப்படுகிறது.

பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி:

ராஜம் கிருஷ்ணன் பாரதியின் வாழ்க்கையை  பெண்ணிலைவாத நோக்கில் எழுதியிருக்கிறார். “பாரதி செல்லம்மா”என்ற பெயரில் காலச்சுவடு பதிப்பகத்தால் தற்போது வெளியாகியுள்ள இந்நூலுக்கு அவர் சூட்டிய தலைப்பு “பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி”என்பதாகும். பாரதியின் கவிதைகளையும், அவனுடைய புதுமை நோக்கையும் விரும்பாதவர் இருக்க முடியாது. அதிலும் பெண் சமத்துவத்திற்காக மீது கட்டியம் கூறி பாடிய புலவன் அவன்.ராஜம் கிருஷ்ணனுக்கு பால்யத்திலிருந்தே பாரதி பாடல்கள் அறிமுகமாகி விட்டிருந்தன. எனவே பாரதியின் பாடல்களும், வாழ்க்கையும் அவருக்கு ஈர்ப்பு தந்தவையாக இருந்து வந்தன.எழுதவந்த பின்னும் அந்த ஆர்வம் தொடர்ந்தது. “இலக்கிய உலகில் நான் என்னை கண்டு கொண்ட பின், வாழ்க்கை வரலாறு படைக்க வேண்டும் என்ற அவா எழுந்ததும்,என்னுள் வரலாற்றுக்குரிய நாயகராக முதலில் தோன்றியவர் பாரதி தாம்”என்கிறார் ராஜம் கிருஷ்ணன்.ராஜம் கிருஷ்ணன் இந்நாவலை எழுதிய காலத்திற்கு முன்பு பாரதி பற்றிய சிற்சில நூல்களும், கட்டுரைகளும் வெளியாகியிருந்தன. சீனி.விசுவநாதனின் காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புத் தொகுப்புகளும் வெளியாகவில்லை.ஆ.இரா.வேங்கடாசலபதி, ய. மணிகண்டன் ஆகியோரின் பாரதி குறித்த புதிய தரவுகள் கண்டறியப்படவில்லை. அதாவது பாரதியியல் முழுமையாக உருப்பெறாத காலம் அது. இந்த நிலையில் பாரதிக்காகவும் ஆய்வு செய்தார் ராஜம் கிருஷ்ணன் என்றே சொல்ல வேண்டும்.பலரை சந்தித்தல், ஆவணக் காப்பகம் செல்லுதல், ஏற்கனவே எழுதி வெளியாகியிருந்தவை என்று சிதறிக்கிடந்தவற்றையெல்லாம் திரட்டி ஒரு பார்வையை உருவாக்கிக்கொண்டார்.

பாரதியின் வாழ்க்கையை பெண்ணிலைவாத நோக்கிலிருந்து பார்க்கும் போது முக்கியமானவையென்று – புலப்படாதவையென்று-விரித்துபார்க்கப்பட வேண்டியவையென்று கருதிய இரண்டு விசயங்களை மையப்படுத்தி புனைவாக்கியுள்ளார். ஒன்று பாரதியின் பாஞ்சலி சபதம். அதை பாரதியின் பல்வேறு படைப்புகளில் ஒன்றாக மட்டுமே பார்க்க முடியாது என்று கருதியிருக்கிறார். புராண பெண் பாத்திரத்தை புதுயுகத்தில் இருக்க வேண்டிய பெண்களுக்கான குறியீடாக எழுதிய விதத்தில் அந்த நூலை முக்கியமாக பார்த்திருக்கிறார் ராஜம் கிருஷணன்.”ஒரு பாஞ்சாலி சபதம் போன்ற எழுச்சிக் காவியம் எங்கே உண்டு, அவள் சரிதை புனிதமானது”என்று கூறும் ராஜம் கிருஷ்ணன் மகாபாரதத்தில் வஸ்திராபஹரணம் என்ற காட்சியை அரங்கேற்றி விரசமாக காட்டுவார்கள் என்று சாடுகிறார்.சீதை,ருக்மினி, பாமா, பத்மாவதி போன்ற பாத்திரங்களுக்கு மேலோர் தரும் முக்கியத்துவத்தை பாஞ்சாலிக்கு தருவதில்லை. “ஹரிகதை பண்ணுபவர்கள் பாரதத்து பாஞ்சாலியை நாவினால் தீண்டமாட்டார்கள்” என்கிறது நாவல். இந்நிலையில் தான் பாரதி அதற்கு மாற்றாக பாஞ்சாலியை மையப்படுத்தி எழுதியிருப்பதை சிலாகிக்கிறார் ராஜம். ஒரு காவியத்துக்கு தேவையான எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என எதுவும் அதிலில்லை என்கிறார்.அதற்கு முன்பும் பின்பும் நிறைய வேலைகள் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று கருதுகிறார். வரலாற்றிற்குள் யோசிக்க முடியாத அத்தருணங்களை புனைவுக்குள் கொணர முடியும் என்றுக் கருதி பாஞ்சாலி சபதத்தை மையமாக்கியிருக்கிறார்.அதனால் தான் இந்நாவலுக்கு அவர் பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி என்ற தலைப்பு வைத்தார்.’தமிழ்மொழிக்கு அழியாத உயிரும் ஒளியும் இயலுமாறு,இனிப்பிறந்து காவியங்கள் செய்யப் போகிற வரக்கவிகளுக்கும் அவர்களுக்கு தக்கவாறு கைங்கரியங்கள் செய்யப் போகிற பிரபுகளுக்கும் காணிக்கை’யாக அவர் எழுதிய பாஞ்சாலி சபதம் நூலை கேட்காமல்  ஆங்கிலத்தில் அனிபெசன்ட் அம்மையை நையாண்டி செய்து பொன்வால் நரி என்ற தலைப்பிலான ஆங்கிலக் கதை 500 பிரதிகள் வேண்டும் என்று கேட்டு பணம் அனுப்பிய போது “….முட்டாள் பசங்களைப் போகச் சொல்லு? மூளையை கசக்கி நான் பாஞ்சாலி சபதம் எழுதியிருக்கிறேன்.இதைக் கேட்கிறார்களாம்’! என்ன ஜனங்களடா “என்று பாரதி சலித்துக் கொண்டதாக எழுதியிருப்பது இதன்படி தான்.

இரண்டு பாரதியின் மனைவி செல்லம்மாவின் வாழ்க்கை.சொல்லப்போனால் இந்த நாவல் பாரதியின் வரலாறு அல்ல, மாறாக பாரதி – செல்லம்மா உறவின் வரலாறு தான்.லட்சியப் பற்றும், உணர்ச்சி நோக்கும் ஒருங்கே கொண்ட பாரதியின் குடும்ப வாழ்வு நன்கறிந்ததே.சமூகத்திற்கும் கணவனுக்கும் இடையே ஊடாடி செல்லம்மாள் பட்டிருக்கிற கூடிய பாடுகள் யூகிக்கக் கூடியவையே.பாரதி பற்றிய வரலாற்று நூல்களில் இவை லேசாக சொல்லப்பட்டுள்ளன.அவரின் தியாகம் புகழப்பட்டுள்ளது. ஆனால் அவரை மையப்படுத்தி, அவர் பார்வையிலிருந்து சொல்லப்படவில்லை. பின்னாளில் அவரே பாரதியார் சரித்திரம் (1945) என்ற நூலையும் பாரதி பற்றி இரண்டு வானொலி உரைகளையும் (திருச்சி வானொலி, தில்லி வானொலி) வழங்கினார். எனினும் புகழ்பூத்து விட்ட பாரதியின் பிம்பத்திற்கு உள்ளடங்கியதாகவே அவை இருந்தன. அதாவது செல்லம்மாளின் பாடுகள் பாரதியின் பெருமைக்கு மேடமைக்கும் வகையிலேயே அமைந்தன எனலாம். ஆனால்” உணர்ச்சிமயமான ஒரு கவிஞனின் சாதனைகளில் அரசியல், சமூக, இலக்கிய அரங்குகளுக்கப்பால் அன்றாடம் அவன் வாழ்ந்த வாழ்வு, உயிராய்த் தொடர்புகொண்ட மனைவி, குழந்தைகள், குடும்பம் என்ற அங்கங்களின் பாதிப்பு மிக முக்கியமானதென்பது என் கருத்து” என்று கூறியிருப்பது மூலம் ராஜம் கிருஷ்ணனின் நோக்கு என்ன? அவர் இந்நாவலில் எவற்றை எழுத விரும்பினார்? என்பதை தெரிந்துக் கொள்கிறோம்.

ஆனால் பெண்களுக்கு வரலாறு இல்லை என்பது உண்மை.குடும்பத்தில் அல்லாடும் ஒவ்வொரு தருணமும் தரவுகளாய் ஆவதில்லை. எனவே அவர்களின் இருப்பை அனுமானம் இல்லாமல் எழுத முடியாது.இதில் பாரதி போன்று புதுமைப் பெண்களை வேண்டி நின்றவர்களின் சிந்தையிலிருந்த பெண்ணை யோசிக்க புனைவின் சக்தி தேவை. ஒரே நேரத்தில் பாரதியின் பெண் அக்கறையையும் மதித்து அதேவேளையில் அவற்றிலிருந்த எல்லையையும் கணக்கிலெடுத்து எழுத வேண்டும். ராஜம் கிருஷ்ணன் இந்நாவலில் செய்திருப்பது அதனை தான். அதனால் தான் பாரதி பாடிய நூல்களுள் பாஞ்சாலி சபதத்தையும் செல்லம்மா வாழ்க்கையையும் ஒன்று சேர்த்துப் பார்க்க முயன்றிருக்கிறது ராஜம் கிருஷ்ணனின் பிரதி. புனைவாசிரியர் வரலாற்றை எழுதுகிறார் என்பது மட்டுமல்ல, வரலாற்றின் மறைபொருள்களை- வரலாற்றின் இடைவெளிகளை எத்தகைய புனைவுகளை கொண்டு நிரப்புகிறார் என்பது முக்கியம். மேலும் வரலாற்றின் எத்தகைய விசயங்களை புனைவுக்காக எடுத்துக்கொள்கிறார்? எந்தெந்த தருணங்களை இணைக்கிறார் என்று பார்ப்பதும் முக்கியம். அந்த வகையில் தான் ராஜம் கிருஷ்ணனின் படைப்பு செயற்பாடு கவனம் பெறுகிறது.

பாரதி “பாரத நாடு, பழம் பெரும் நாடு… நீரதன் புதல்வர் “ என்று பாடிக்கொண்டிருக்கும் போது உள்ளே செல்லம்மா குழந்தைக்கு உடம்பு சுடுவதையும், சற்றே மூச்சுக்கு சிரமப்படுவதையும் கவலையுடன் பார்க்கிறாள். அதேபோல கணவனோ ஆசாரம் இல்லை என்கிறான், சின்னம்மா சித்தியோ எல்லாம் தீட்டு என்பாள். உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல செல்லம்மாளுக்கு நெருக்கடி என்கிறது நாவல். “நீங்கள் என் சங்கடத்தை ஒரு நாளும் புரிஞ்சுக்கல.உலகம் பூரா ஒரு வழி போனால், நீங்க அதை தப்புன்னு தனிவழி போறேள். என்னையும் கட்டி இழுக்கிறேள். உங்களுக்கு தேசம் தேசம் இதுதான்.எனக்கு அக்கம் பக்கம் ,மக்கா மனுசா,பந்து ,உறவு எல்லாம் இருக்கு” என்று பாரதியை நோக்கி பேசுகிறார் செல்லம்மாள்.”அவள் நோக்கும் போக்கும் மிக சாதாரணமானவை” அன்றாடம் உப்புக்கும் புளிக்கும் துன்பப்படும் நிலை.ஒருமுறை பாரதி செல்லம்மாவை தாக்கி விடுகிறார்.செல்லம்மா பாரதி பேச்சை மீறி மகள் தங்கம்மாவை ஊருக்கு அனுப்பி வைக்கிறார்.செல்லம்மா மூணு ரூபாய்க்கு வண்டி கீரை வாங்குகிறவராக இருக்க,பாரதியோ வீட்டிலிருக்கும் அரிசியை குருவிகளுக்கு போடுகிறவராக இருக்கிறார்.அதற்காக பாரதியோடு செல்லம்மாள் சண்டை போடுகிறாள். மளிகைக்காரன், எண்ணெய்க்காரி,வீட்டுக்காரர் இவாளுக்கெல்லாம் நானா பதில் சொல்வது? என்று கேட்கிறாள்.பார்ப்பார பெண்கள்”பிறந்ததிலிருந்து கல்யாணம் ஒன்றுக்காகவே அவள் பிறவி என்பது போதனையாகிறது”என்று வருந்துகிறாள்.”பாரதி குருமணியாக மதிக்கும் நிவேதிதா தேவியை சந்திக்கும் போது மனைவியை ஏன் அழைத்து வரவில்லை? என்று கேட்பது சட்டென உரைக்கிறது. பாரதியின் போதாமைகளுக்காக அவனை மலினப்படுத்தாமல் செல்லம்மாளின் நிலையும் சொல்லப்பட்டுள்ளது. பாரதியும் சமூகத்திலிருந்து உருவானவன் தான். சமூகம் அவனை மட்டுமல்ல செல்லம்மாளையும் தன் கட்டுபாட்டுக்குள் இருந்த முனைகிறது. பாரதிக்கு இரண்டு மகள்கள்.அவர்களுக்கான திருமண விசயத்தில் ஒரு தகப்பனாக அவர் எதிர் கொண்ட சமூக நிர்பந்தத்தின் வலியையும் நாவல் பதிவு செய்கிறது. சமூக நிலையும், அதன் மீதான விமர்சனமும் மிக இயல்பாக நாவலில் ஊடாடுகிறது.ஒருமுறை ருஷ்யாவில் பெண்கள் விசயத்தில் லெனின் செய்துவரும் சட்டங்களைப் பற்றி சிலாகிப்பதற்காக பாரதி செல்லம்மாளை அழைக்கிறார். அந்த கூப்பாடு செவியில் விழும்போது அவர் சட்டிகளை கழுவிக் கொண்டு இருக்கிறார். அதை போட்டுவிட்டு ஓடி வரும் அவரிடம் பாரதி தான் சொல்ல வந்ததை நிதானமாக சொல்லி முடிக்கிறார். இதை கேட்டு விட்டு மீண்டும் அவள் எங்கு திரும்பி போவாள் என்பது நாமறிந்ததே.

இந்நாவல் எழுதுவதற்கு மற்றொரு காரணமும் இருந்தது. இவ்வளவு புதுமையை பாடிய பாரதியின் மரணத்திற்கு பின் அவரின் மனைவி என்ற முறையில் செல்லம்மா எத்தகைய நிலையை அடைய வேண்டியிருந்தது? வைதீக நம்பிக்கைகளின்படி விதவைக்கோலத்தை ஏற்கவேண்டிய நிர்பந்தத்தை சமூகம் தந்தது. இந்த கேள்வி தான் ராஜம் கிருஷ்ணனை நாவலை எழுத வைத்தது. என்ன நடந்திருக்க முடியும் என்பதை எழுத புனைவு தான் உதவும். அதை தான் ராஜம் கிருஷ்ணன் செய்திருக்கிறார். இந்த காரணத்தால் நாவல் பாரதியின் மரணத்தோடு முடிவடையாமல் செல்லம்மாள் விதவைக்கோலம் ஏற்பதோடு முடிகிறது. செல்லம்மாள் விதவையாக்கப்பட்டு முடக்கப்பட்டதோடு நாவலை நிறைவு செய்த ராஜம் கிருஷ்ணன், செல்லம்மாள் மேற்கொண்டு சென்றிருக்க வழியை யோசித்திருப்பாரேயானால் எப்படி யோசித்திருப்பார்? செல்லம்மாள் வரலாற்றில் அதற்கு இடமில்லை. ஆனால் மற்றொரு வரலாற்றில் அதற்கான இடம் கிடைத்தது என்பதை சொல்வதைப் போல அடுத்தொரு களத்தை எழுதினார். அத்தகைய களத்தை வைத்து அவர் எழுதிய நாவலின் பெயர் தான் பாதையில் பதிந்த அடிகள்.

பாதையில் பதிந்த அடிகள்:

பாதையில் பதிந்த அடிகள் நாவல் மணலூர் மணியம்மை என்பவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. பழைய தஞ்சாவூர் மாவட்டத்தின் மணலூர் என்ற கிராமத்தில் பிறந்தவர்.இயற்பெயர் வாலாம்பாள். தந்தையில்லாத பிராமண குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு இருபது வயது மூத்தவரை திருமணம் செய்து வைத்தது குடும்பம். 10 ஆண்டுகளிலேயே விதவையாகி தாய்வீடு திரும்பினார். அவர் தன் ஆர்வத்தை இந்திய விடுதலைப் போராட்டங்களில் திருப்பிக்கொண்டார். சொந்த பண்ணையிலேயே நிலவிய பண்ணையடிமைத்தனத்தை எதிர்த்ததால் குடும்பத்தினரால் தள்ளி வைக்கப்பட்டார்.பிறகு தேசிய இயக்கத்தைச் சேர்ந்தவர்களாலேயே விவசாயக்கூலிகள் சுரண்டப்படுவதைக் கண்டு அதிலிருந்து விலகி பொதுவுடைமை கருத்துகளால் ஈர்க்கப்பட்டு கட்சியில் சேர்ந்தார். பெண்களில் திருமணமானவர் என்றால் கூந்தல் வளர்த்து சிங்காரிப்பது,விதவை என்றால் மொட்டையிடுதல் என்கிற இரட்டை எதிர்மறையை மறுத்து முடிவளர்த்து கிராப் வைத்துக் கொண்டார்.வேட்டி, ஜிப்பா, மேல் துண்டு ஆகியவற்றையே அணியத் தொடங்கினார். தற்காப்புக் கலைகளை கற்றார்.சைக்கிளில் பயணித்தார்.

பிராமண குடும்பங்களில் பெண்கள், அதிலும் விதவையாகும் பெண்கள் பற்றி “புருஷன் போகும் போது தாலி, தலைமுடி, வண்ண ஆடைகள், வயிர தங்க ஆபரணங்கள், மஞ்சள் குங்குமம் என்ற வரிசைகளை மட்டும் கொண்டு போகவில்லை. சில்லறைச் சாத்திரங்களிலும் மாட்டி விடுகிறான்”என்ற நிலை தான் இருந்தது.மணியம்மை விதவையான பின் கூட்டுக்குள்ளே இருக்கும் புழுவைப் போல் எதிர்ப்புச் சக்தியின் உயிர்ப்பில் உள்ளூர இயங்கிக்கொண்டிருக்கிறாள் என்கிறது நாவல். இந்நிலையில் அவள் ரவிக்கை அணிவது ஒரு மீறலாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு பெண்கள் நிகழ்த்தும் மீறல்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட கருத்து தான் பேய் பிடித்து விட்டது என்பது.உள்ளூரில் கல்வி பெற முடியாத மணியம்மை ஒரு வெள்ளைக்காரியிடம் ஆங்கிலம் பயின்றாள். இந்த விதத்தில் தாய் காட்டாத பரிவை அவள் காட்டினாள் என்கிறது நாவல். பிறகு மணியம்மை கூலி விவசாயி குடும்ப குழந்தைகளுக்கு கல்வி கற்றுத் தருகிறாள். 1930 களில் அவள் காந்திய இயக்கத்தில் சேர்கிறார். அக்காலக்கட்டத்தில் கதர், மதுவிலக்கு, ஹரிஜன சேவை போன்றவை காந்திய இயக்கத்தின் முக்கிய செயல்பாடுகளாய் இருக்க,மணியம்மை அவற்றை நோக்கி செயற்படுகிறார். மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் கள் சட்டிகளை உடைக்கிறாள். ’தெய்வநம்பிக்கை சார்ந்தே காப்பாற்றப்பட்டு வரும்’ தற்காப்புக் கலைகளை கற்றுக் கொள்கிறாள்.

மணியம்மையின் உழைக்கும் தலித் மக்கள் மீதான அக்கறை முக்கியமானது. தேசிய இயக்கத்திலும், கம்யூனிச இயக்கத்திலும் அவரின் பணித்தளம் பெரும்பான்மையும் தலித்துகள் சார்ந்து அமைகிறது. தேசியம் அரிசன் என்றது, கம்யூனிசம் கிசான் என்றது. பிராமண சாதியில் எதை வேண்டுமானாலும் பொறுத்துக்கொள்ள தயாராக இருந்தார்கள். ஆனால் தீண்டாத சாதிகளிடையே அவர் செயற்படுவதை ஒத்துக்கொள்ளவே முடிவதில்லை. ”நீ வேசம் மாறியது யாருக்கும் விரோதம் இல்லை. கீழ்சாதிங்ககிட்ட போயி பிறந்த குடியை தூத்தறது சரியில்ல” என்றார்கள். காங்கிரஸ், கதர் என்றெல்லாம் சொல்ல கவுரமாக இருக்கு, பள்ளு பறை என்று கலந்துக்கிறது தான் அழுக்கு என்பதாக பார்க்கப்பட்டது. மேல்சாதி தெருக்களுக்குள் திராவிடர் கழகம் அழைத்துச் சென்றது, ஆனால் ஆண்டான் அடிமை முறைக்கு முடிவு கட்ட போராடியது கம்யூனிஸ்டுகளே என்கிறது நாவல்.

கீழத்தஞ்சை மாவட்ட விவசாய வாழ்க்கையில் தென்படும் கரவெளி, நடுவாள்,ஏசன்டு போன்ற மரபுகளைக் கூறும் நாவல் விவசாய போராட்ட வரலாற்றின் தடங்களையும் தொட்டுக் காட்டியுள்ளது. தென்பரை விவசாயிகளின் எழுச்சி, அமிர்தலிங்கம், சீனிவாசராவ், ஜானகியம்மாள், ஆயுதப் போராட்டம் சரியா? என்கிற தெலுங்கான தோழிகளின் விவாதம், கீழப்பசலை சிகப்பி, இசுலாமிய சம்பிரதாயங்களை மறுத்து வெளிவந்த ஷாஜாதி, களப்பால் குப்பு, தான்யா என்னும் வீரமங்கை கதை, ருக்மணி, குஞ்சம்மாள் ஆகிய பெயர்களை இந்த வகையில் குறிப்பிடலாம். பொட்டு உடைப்புச் சங்கத்தைச் சேர்ந்த மூவலூர் ராமாமிர்தம், சின்ன குத்தூசி என்று பின்னாட்களில் அறியப்பட்ட தியாகராஜன் போன்றோரும் மணியம்மை தொடர்பில் காட்டப்பட்டுள்ளனர்.

இத்தகைய மணியம்மை மீது கட்சிப்பணத்தை பயன்படுத்திக்கொண்டார் என்ற புகார் கட்சியிலிருந்தே எழுகிறது. வெளியே தெரியாமல் அவரை மெல்ல மெல்ல தனிமைப்படுத்தும் போக்குகள் ஆரம்பிக்கின்றன. அதுதெரிந்தும் அவர் செயற்படுகிறார். தான் என்ற ஆதிக்க சிந்தனையை வளர்த்து வந்திருக்கும் ஆண் வர்க்கம் தான் கட்சிக்குள் பெரும்பான்மை.கட்சி அமைப்பு இயந்திரம் போல இயங்குகிறது. அதற்கு மேல் கட்சிக்குள் செயற்படுபவனுக்கு அறிவு தேவையில்லை என்று கருதப்படுகிறது. ஒரு முரணான சிலும்பலையும் மேலிடம் பொறுக்காது என்கிறது நாவல். கட்சிப் பணிக்காக செல்லுமிடத்தில் ஓடிவரும் மான் மணியம்மையை தன் கொம்பினால் பின்னாலிருந்து குத்திவிடுகிறது. அதனால் அவரை மரணம் தழுவுகிறது. அவரை கட்சிக்குள் தனிமைப்படுத்தி வந்த காலத்தில் தான் மான் பின்னாலிருந்து குத்தி சாகிறார்.குத்தியது மானா? கட்சியா? என்கிற குறியீட்டு அர்த்தம் தொனிப்பதோடு  நாவல் முடிகிறது.

வரலாறு என்கிற ‘மதிப்பு’யாருக்கெல்லாம் கிடைக்கிறது என்று பார்த்தால் ஒரு கட்சியில் கீழிருந்து மேலே வரை பல்வேறு நிலைகளில் உழைப்பவர்கள் இருந்தாலும் ‘தலைவராக’ இருப்பவருக்கே பெரும்பாலும் அத்தகுதி தரப்படுகிறது. அதிகாரத்தில் இல்லாத எளிய மக்களின் அன்றாடங்களோடு போராடிக் கொண்டிருக்கிற இயக்கங்களுக்கு வரலாற்று முக்கியத்துவம் தரப்படுவதில்லை. பெண்களுக்கும் தலித்துகளுக்கும் வரலாற்று இடம் தரப்படுவதில்லை. இந்த மூன்று நிலையிலும் மணியம்மை பொருந்துகிறார். மணியம்மை பற்றிய அறிதலும் புரிதலும் தமிழகத்தில் இல்லை.காரணம் அவர் பற்றிய வரலாறு இங்கில்லை. இதனை “ஒரு தேசிய வரலாற்றில் எந்த ஒரு மக்கள் இயக்கமும் பெண்கள் சம்பந்தப்படாததாக இருக்க முடியாது. ஒரு சமுதாயத்தின் இயக்கத்தை அச்சாணியாக நின்று இயக்குபவர்கள் பெண்களே என்றாலும் மிகையில்லை. ஏனெனில் அதன் சாதக, பாதகமான பாதிப்புகளை முழுமையாக தாங்குபவர்களும் அவர்களேதாம். ஆனால் ஒரு தேசிய வரலாற்றையோ கணிப்பவர்களும் பதிவு செய்பவர்களும் பெண்ணின் முக்கியத்துவத்தை அத்துணை உயர்வாக கருதியதில்லை” என்று ராஜம் கிருஷ்ணன் கூறுகிறார்.

மணியம்மை போன்றோரை எழுதப்பட்ட வரலாறு கைவிட்டாலும் எளிய மக்களிடையே செயற்பட்டவர் என்ற முறையில் அம்மக்களின் நினைவுகள் தக்க வைத்து விடுகின்றன.அந்த நினைவுகள் துல்லியமான தகவல்களோடு இருப்பதில்லை. மாறாக அவர்களுக்கு உகந்த முறையில் பாட்டாக – கதையாக – பெயராக இருப்பதுண்டு.1979, 1980, 1981 ஆகிய ஆண்டுகளில் கீழத்தஞ்சை பகுதியில் விவசாயக்கூலிகள் பற்றி தெரிந்துக் கொள்ள சென்ற போது மணியம்மை பற்றி கேள்விப்படுகிறார் ராஜம் கிருஷ்ணன். விவசாயிகளின் வீடுகளில் கேட்க கேட்க மணியம்மை பற்றிய கதைகள் விரியத் தொடங்கின. அவரின் சாகசங்களை கூறும் நடவுப் பாடல்களையும் கேட்டார்.பிறகு அவரைப் பற்றி விவரங்களை தேடி அலைந்தார்.ஆவணங்கள் ஓரளவு கிடைத்தன.ஆனால் பெருமளவு வாய்மொழியாகவே தகவல்கள் திரட்டப்பட்டன. பாரதியும் செல்லம்மாவும் ஏற்கனவே அறியப்பட்டிருந்தார்கள். அவர்கள் எழுதிய, அவர்கள் பற்றி எழுதப்பட்ட நூல்கள் இருந்தன. அவர்களைப் பற்றி தேடும் போது சொல்வதற்கு ஆட்களும், கிடைப்பதற்கு ஆவணங்களும் இருந்தன.மணியம்மைக்கு அந்த வாய்ப்பு இல்லை. மணியம்மை பற்றி கிடைத்த தகவல்களை இணைக்க – புரிந்து கொள்ள சில ஆண்டுகள் பிடித்தன. மேலும்” சான்றுகளைத் தேடி செல்வது ஒரு புறமிருக்க, கிடைத்த சான்றுகளைத் தொடர்புப்படுத்தித் தெளிவு காண்பது மிகக் கடினமான முயற்சியாக இருந்தது” என்கிறார் ராஜம் கிருஷ்ணன். பிறகு தான் மணியம்மை பற்றிய ஒரே பதிவாக பாதையில் பதிந்த அடிகள் உருவானது.களத்தில் பெற்ற வழக்காறுகள் என்ற முறையில் மணியம்மை பற்றிய சான்றுகள் நெகிழ்ந்து கொடுத்தன. வரலாற்றின் பாரம் அழுத்ததால் ஒரே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் பொதுவுடைமை இயக்கங்கள் மீதான விமர்சனங்களையும் இந்நாவலால் சொல்ல முடிந்திருக்கிறது.

*

வரலாறும் புனைவும் எதிரெதிரானது என்பது பொதுவான புரிதல். ஆனால் இரண்டிற்கும் இடைவெளி அதிகமில்லை என்பதை நவீன வாசிப்புக் கோட்பாடுகள் முன்வைத்திருக்கின்றன. இந்த புரிதல் ராஜம் கிருஷ்ணனுக்கு இருந்ததா என்றுத் தெரியவில்லை. ஆனால் அவர், தான் எழுதிய நாவல்களில் பெரும்பாலானவற்றை கள ஆய்வு செய்தே எழுதியிருக்கிறார். இதன் பொருள் என்ன? அவர் எழுதியிருப்பது புனைவே ஆயினும் அதில் உண்மையையே சொல்ல விரும்புகிறார் என்பது தான். அவருடைய பார்வையில் உண்மை என்பது என்ன? இக்கேள்விக்கான பதிலை இம்மூன்று வரலாற்று நாவல்கள் வழியாக அறியலாம். இப்படைப்புகளை வரலாற்றின் சாயலிலிருந்து விலக்க முடியும் என்றாலும் அவர் அவற்றை வரலாற்றிலிருந்து எடுத்தேன் என்பதை மறைக்கவில்லை. தமிழில் பல நாவல்களும் தனிமனிதர்களின் வரலாறுகளே. தனி மனித அனுபவங்களை சமூக அனுபவமாக மாற்றும் விதத்தில் அது முக்கியமானவை ஆகின்றன. ஆனால்  நாவல் என்ற பெயரில் எழுதப்பட்டிருக்கின்றன என்பதால் நாம் வரலாறு என்று அழைப்பதில்லை. ராஜம் கிருஷ்ணன் எழுதிய இம்மூன்று நாவல்களும் தனிமனிதர்களின் வரலாறு என்பதிலிருந்து உயர்ந்து அறியப்பட்ட வரலாற்று ஆளுமைகளின் வரலாறாகவும் இருக்கிறது.

இம்மூன்று நாவல்களில் ‘டாக்டர் ரங்காச்சாரி’, ‘பாதையில் பதிந்த அடிகள்’ ஆகிய இரண்டும் கள ஆய்வு செய்து எழுதப்பட்டவை. அது மட்டுமல்ல, இந்நாவல்கள் தான் ரங்காச்சாரி, மணியம்மை ஆகிய இருவர் பற்றிய முதலில் எழுதப்பட்ட ஆவணமாக இருக்கிறது. அந்த வகையில் இந்த நாவல்கள் தான் அவ்விருவருக்கான வரலாறாகவும் இருக்கின்றன. ரங்காச்சாரி பற்றி கேள்விப்பட்டு விட்டு அவர் பற்றி எழுதப் போகிறேன் என்று கூறிக்கொண்டு தகவல்களை தேடிச்சென்ற போது மருத்துவ அறிவு இல்லாதவர் எப்படி எழுதமுடியும்? என்று கேட்டு ராஜம் கிருஷ்ணனுக்கு போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. ஆனால் மருத்துவ அறிவுள்ளவர் கூட எழுத முடியாத அளவிற்கு அவர் அந்நாவலை எழுதிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் மன்னர்களுக்கு உண்மை வரலாறு என்ற பெயரில் எழுதப்படுபவை பெரும்பாலும் புனைவுகளே அல்லது சிறிதளவு உண்மை கலந்தவையே. இந்நிலையில் ராஜம் கிருஷ்ணன் குறைந்த புனைவுகளுடன் வரலாற்றை நாவல்களாக்கியுள்ளதைப் பார்க்கிறோம்.இவ்விடத்தில் புனைவும் வரலாறும் ஊடும்பாவும் ஆகின்றன. அதேவேளையில் இங்கு வேறொரு விசயத்தையும் குறிப்பிட வேண்டும். ராஜம் கிருஷ்ணன் இந்நாவல்களில் லட்சிய முகங்களாக காட்டும் மூவருமே பிராமண வகுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. மூவரும் சுயவிமர்சனப் பண்பு கொண்டவர்களாகவும் இருந்ததால் தான் லட்சிய மாந்தர்களாய் மாற முடிந்தது. அந்த விசயம் ராஜம் கிருஷ்ணனுக்கு முக்கியமாக தெரிந்திருக்கலாம்.

ராஜம் கிருஷ்ணன் எழுதிய வரலாற்று நாவல்களின் அம்சங்களை பின்வருமாறு தொகுத்துப் புரிந்துக் கொள்ளலாம்: இதுவரை சொல்லப்படாதவர்களின் கதை/ வரலாறு; சொல்லப்பட்டவர்களாக இருந்தாலும் சொல்லப்படாத கோணம்; ஒழுங்கமைக்கப்பட்ட வரிசை; நேர்கோட்டுப் பண்பு. இவற்றில் டாக்டர் ரங்காச்சாரி நாவலும், பாதையில் பதிந்த அடிகள் நாவலும் இருவரின் வாழ்க்கையை நேரடியாக சொல்லுவதாகவே இருக்கின்றன. இவற்றில் ’பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி’ தான் நாவலுக்குரிய அம்சங்களோடு இருக்கிறது. பாரதியின் வரலாற்றிலேயே முரணுக்கான இடம் இருக்கிறது. அது ஒரு படைப்புக்கான அம்சமாகவும் இருக்கிறது. பாரதி ஒரு ஆண், சமூகப் போராளி, படைப்பாளி. அதற்கு மாறாக செல்லம்மாளின் நிலை இருக்கிறது. இவ்விரண்டு நிலைகளுக்கிடையிலான போராட்டமும் முரணும் நாவலை இயக்குகின்றன. இதோடு பாரதியிடம் இருந்த இயல்பான மீறல் பண்புகளும் நாவல் பண்புக்கு வலு சேர்க்கின்றன. இந்நாவல் முதன்மையாக செல்லம்மா பற்றியது என்பதை மேலே பார்த்தோம். செல்லம்மாவின் வரலாற்றை பாரதி இல்லாமல் எழுத முடியாது என்பதால் அது பாரதி பற்றிய நாவலாகவும் இருக்கிறது. அதுவரை பாரதி பற்றி எழுதப்பட்ட வரலாற்றில் செல்லம்மாளின் இடம் என்ன? வரா எழுதிய மகாகவி பாரதியார் (1944) நூலில் அவர் பற்றி சிற்சில தகவல்களே உண்டு. ரா.அ. பத்மநாபன் எழுதிய சித்திரபாரதியில் (1957) திருமணம், பாரதி தம்பதிகள் என்ற இரண்டு தலைப்பில் சொல்லப்பட்டுள்ளார். யதுகிரி அம்மாள் எழுதிய பாரதி நினைவுகள் (1954) நூல், செல்லம்மாளே வழங்கிய இரண்டு வானொலி உரைகள் ஆகியவற்றிலிருந்து பெருமளவு தகவல்கள் நாவலில் இருக்கின்றன. இந்த இடத்தில் தான் அவளின் சொல்லப்படாத உலகத்தை நாவல் எழுதிப்பார்த்திருக்கிறது. இவ்விருவர் சார்ந்த உறவில் எழுந்த கேள்விகளை, எழுந்திருக்கும் என்று நினைத்த கேள்விகளை வைத்து புனைவாக எழுதி பார்த்திருக்கிறார். இந்நாவலுக்காக உரையாடி பெற்ற தகவல்களையும் புனைவுக்கு பயன்படுத்தியிருக்கிறார். விமர்சனமாக எழுதினால் வரலாறு. ஆனால் விமர்சனத்திற்கு சான்றுகள் இல்லாத போது புனைவில் தான் பேசி பார்க்க முடியும். ஒரு வகையில் ராஜம் கிருஷ்ணனின் புனைவுகள் இவ்வாறு நிகழ்ந்து விட்டவற்றின் மீதான விமர்சனம். அதாவது விமர்சனபூர்வமான வரலாற்று வரைவு என்று குறிப்பிடலாம். அவர் புரிதலில் வரலாறு என்பது இது தான்.

ஸ்டாலின் ராஜாங்கம்

ராஜம் கிருஷ்ணன் தொடர்புடையவரின் வாழ்க்கையில் நடவாததைப் பற்றி எழுதுவதில்லை. நடந்திருக்க சாத்தியமுள்ளவற்றை மட்டும் கற்பனை செய்வது, எழும் விமர்சனங்களுக்கேற்ப விடைகளைத் தேடுவது என்பதாக அமைந்திருக்கிறார். வரலாற்றால் விளக்க முடியாத அதனுள் உறைந்திருக்கும் தருணங்களை விளக்கவே புனைவை நாடியிருக்கிறார். வரலாற்று ஆசிரியருக்கு இடைவெளிகளை புரிந்து கொள்ள/ இட்டு நிரப்ப புனைவின் உதவி தேவைப்படுவதைப் போல புனைவாசிரியருக்கும் வரலாறு பற்றிய வாசிப்பு தேவைப்படுகிறது என்பதை இங்கே தெரிந்து கொள்கிறோம். நடந்து முடிந்துவிட்ட வரலாற்றை திருத்த முடியாது. அதேவேளையில் வரலாற்றில் இவ்வாறு நடந்திருக்கக் கூடாது என்ற விமர்சனம் எழும்போது அதை மாற்றி எழுதலாம். மாற்றி எழுத புனைவு கைக்கொடுக்கிறது. ராஜம் கிருஷ்ணனின் பார்வைக்கோணமும், விமர்சனமும் தான் வரலாற்றை சமகாலத்திற்கு கொணருகிறது. அந்த வகையில் ராஜம் கிருஷ்ணனின் புதினத்தன்மை வடிவத்தில் இல்லாமல், அவர் விளக்கும் – முன்வைக்கும் பார்வையிலிருந்து பிறக்கிறது எனலாம்.

*

(செப்டம்பர் 3, 2025 அன்றுசாகித்ய அகாதமியும் மதுரை கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி தமிழ்த்துறையும் இணைந்து நடத்திய ராஜம் கிருஷ்ணன் நூற்றாண்டு விழா கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

*

பயன்பட்ட நூல்கள்:
1) டாக்டர் ரங்காச்சாரி – ராஜம் கிருஷ்ணன்
2) பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி/செல்லம்மா பாரதி- ராஜம் கிருஷ்ணன்
3) பாதையில் பதிந்த அடிகள் – ராஜம் கிருஷ்ணன்
4) காலம் – ராஜம் கிருஷ்ணன்

*

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *