கனவில் ஒரு கால் – சக்திவேல்
(கமலாதாஸின் ’பறவைகளின் வாசனை’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து)

கோவலனுடன் மதுரைக்கு செல்லும் கண்ணகி ஐந்திணைகளையும் கடந்து செல்கிறாள். மருதத்தை கடக்கையில் ஒரு நிலக்கிழாரின் வீட்டில் தங்கி இளைப்பாறி செல்கிறார்கள். கண்ணகி தன் இரவு உறக்கத்தை அவ்வீட்டு மூதன்னை, மருமகள், குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்கிறாள். பேத்தி மூதன்னையின் தாலியை பிடித்திழுத்து இது என்ன ? என்று வினவுகிறாள். மூதன்னை, தாலி என்ற சொல்லின் வேர், தாலம் > தலம். தலம் என்றால் இலை. முன்பு நம் முன்னோர் பொதிகை மலையில் வாழ்ந்த போது அரசிலை ஒன்றை காட்டுக்கொடியில் கோர்த்து ஆண் பெண்ணுக்கு அணிவித்தால் அவ்விருவரும் மணம் கொண்டதாக கொள்வர். அதுவே நம் காலத்தில் பொன்னாலானதாக இருக்கிறது என்கிறாள். அந்த விளக்கத்தை தொடர்ந்து கண்ணகி வினவுகிறாள்,
“வாடும் பொருளிலா தாலி செய்தார்கள் அன்று ?”
அன்னை சற்றுநேரம் அமைதிகொண்டு “அன்பு ஒவ்வொரு நாளும் புதுத்தளிரும் பூவும் விட்டு என்றும் இருக்க முடியுமே அம்மா ?” என்றாள்.
“ஆம், அன்பு இருக்க இயலும்” என்றாள் கண்ணகி “அன்பு மட்டுமே இருக்க இயலும்.”
இருளில் இருந்து மருகியின் குரல் “கற்பு இருக்க இயலாது. பொறை இருக்க இயலாது” என்றது.1
ஆம் அன்பு மட்டுமே இருக்க இயலும் என்று நம்முள்ளும் ஒரு குரல் ஆமோதிக்கிறது. அதை சொல்லும் கண்ணகி நமக்கு பத்தினி பெருந்தெய்வம். ஆனால் கற்பும் பொறையும் இருக்க இயலாது என்று சொன்ன மருகியின் குரலுக்கு செவி சாய்ப்பவர் யாருண்டு ? நூற்றாண்டு காலமாக அக்குரல் இருளில் தனித்து ஒலித்து காற்றில் கரைந்து கொண்டிருந்தது.
அன்பு தினமும் புதுத்தளிரும் பூவும் விட முடியும் என்ற வார்த்தைகளை கேட்கையில் மன எழுச்சி அடைகிறோம். தினமும் புதுத்தளிரும் பூவும் விடுவதில் உள்ள உன்னதம், அதன் பின்னுள்ள நிலையாமையால் அடிக்கோடிடப்பட்டது. இன்று துளிர்த்த தளிரும் பூவும் நாளையும் மலருமா ? அல்லாவிடில் இன்றைய தளிரையும் மலரையுமாவது வாடாமல் பாதுகாத்து கொள்வது எப்படி ? இந்த கேள்விகளுக்கு பின்னுள்ள தவிப்பும் அச்சமும் மனிதனை நாகரீகத்தை உருவாக்கி கொள்ள செய்தன என்று கூறினால் அது மிகையன்று.
எனவே மனிதன் அன்பெனும் மலரை வாடாமல் பாதுகாக்க கற்பு நெறிகளையும் பொறையுடைமை சட்டங்களையும் உருவாக்கி கொண்டான். கற்பும் பொறையும் முதலில் பலி கொண்டது பெண்களின் சுதந்திரத்தை தான். அதன் பின் பல நூற்றாண்டுகள் பெண்ணின் குரல் இருளில் மட்டுமே ஒலிக்க முடியும் என்றானது. கண்ணகி, மணிமேகலை என்று இல்லறம் நீங்கி சென்றாலொழிய பெண்ணின் குரல் கேட்கப்பட்டதில்லை.
பதினெட்டாம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சி மனிதர்களை நிலத்தில் இருந்து விடுவித்தது. விளைவாக இல்லத்து பெண்களின் குரலும் இலக்கியத்தில் ஒலிக்க ஆரம்பித்தது. இருளில் தனித்திருந்து மருகிய மருமகள்களின் ஆசைகளும், நிராசைகளும், கனவுகளும் வெளிச்சத்திற்கு வந்தன. அக்குரல்களின் முகங்களாக அமைந்த முதல் தலைமுறை பெண்ணெழுத்தாளர்களில் ஒரு சாரார் எழுத்துகளில் மரபின் கற்பு, பொறை ஆகியவை குறித்து வலுவான எதிர் கேள்விகள் எழுப்பப்பட்டன.
கமலாதாஸ் என்கிற மாதவிக்குட்டியும் முதல் தலைமுறை பெண்ணெழுத்தாளர்களில் ஒருவர். கமலாதாஸ் என்றவுடன் அவரது புகழ்பெற்ற சுயசரிதையான ‘என் கதை’ பலருக்கு நினைவில் எழக்கூடும். கமலா தன் சுயசரிதையான என் கதையில் பால்ய காலம் தொட்டு தன் வாழ்வனுபனுவங்களை கூறுகிறார். அதன் மூலம் கமலாவின் ஆளுமையும் வாழ்க்கை குறித்த அவரது பார்வைகளும் உருவாகி வந்ததன் பரிணாமத்தை அறிய முடிகிறது.
நிர்மால்யா மொழியாக்கத்தில் வெளிவந்துள்ள பறவையின் வாசனை தொகுப்பின் சிறுகதைகளின் வழியாக கமலாதாஸின் தேடலும் கனவுகளும் வெளிப்படுகின்றன. தொகுப்பில் உள்ள 16 கதைகளையும் கமலாவின் சுயசரிதையான என் கதைக்கு இணையாக வைத்து வாசிக்க முடியும். தேர்ந்த வாசகர்கள் ‘என் கதை’யில் கமலா கூறும் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து அவரது சிறுகதைகள் உருவாகி உள்ள விதத்தை அறிந்து கொள்ள முடியும். அப்படி வாசிக்கையில் கமலாவின் அக வாழ்க்கையின் நீட்சியாக அவரது சிறுகதைகளை காணலாம் என்று தன் முன்னுரையில் நிர்மால்யா குறிப்பிடுகிறார். அது உண்மையும் கூட.
கமலாதாஸின் சிறுகதைளை, அவரது என் கதையுடன் இணைக்காமல் தனித்த படைப்புகளாக வாசித்தால் சில புதிய வெளிச்சங்களை காட்டுகிறது. அவை கண்ணகியின் பக்கத்தில் இருளில் எவருக்கும் தெரியாமல் படுத்திருந்த மருகியின் குரலாக ஒலிக்கின்றன. கமலாதாஸின் சிறுகதைகள் அந்த மருமகளின் குரலுக்கு உருவம் கொடுக்கின்றன. இக்கதைகளில் பெண்ணின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் மரபின் கட்டுமானங்களின் மீது தொடர்ச்சியாக விமர்சனமும் கேள்வியும் வெளிப்படுகின்றன.
பறவையின் வாசனை தொகுப்பின் பெரும்பாலான கதைகள் பெண்களின் பார்வையில் விரிகின்றது. அவர்களின் தேடுதலின் அடிநாதத்தை இரு கேள்விகளாக சுருக்கலாம். அன்பு எனும் மலரின் புதுவாசத்தை சமூகம் உருவாக்கும் கட்டுப்பாடுகள் இல்லாமல் தன்னியல்பாக அனுபவம் கொள்ள இயலாதா ? அன்பு செலுத்துபவரும் பெறுபவரும் தத்தமது சமூக அடையாளங்களை சுமையாக அன்றி சுகமாக தம் விருப்பம் போல் கையாள முடியாதா ? இவ்விரு கேள்விகளும் உறவுகளில் பரிணமிக்கும் விதமே இக்கதைகளின் முதன்மை பேசுபொருளாக உள்ளது.
அடையாளங்கள் முதலில் சமூகத்தால் நமக்கு கொடுக்கப்படுகின்றன. அதை ஏற்று கொள்கையில் சமூகம் கொடுக்கும் பாதுகாப்பை பெறுகிறோம். பின்னர் அந்த அடையாளங்களே நாம் என்று நடிக்க தொடங்குகிறோம். பிறகு சமமான சமூக அந்தஸ்து கொண்டவர்களே தங்களுக்குள் அன்பு செலுத்தி கொள்ள முடியும் என்றாகிறது. ஆனால் வாழ்க்கையில் நம்முடன் வருபவர்கள் எப்போதும் நமக்கு சமமான சமூக அந்தஸ்தில் நீடிப்பதில்லை. அவர்கள் மேலான நம் பிரியமும் சட்டென்று மறைந்து விடுவதில்லை. சமூக அடையாளம் நமக்கு கொடுக்கும் பாதுகாப்பை இழக்காது அன்பு செய்ய முடியுமா ? அப்போது நம் அன்புக்குரியவரின் நினைவுகள் என்னவாகிறது ? இக்கேள்விகளின் பின்னுள்ள தவிப்பை வௌவால்கள் பறக்கும்போது கதை பேசுபொருளாக கொள்கிறது.
குடிப்பழக்கத்தால் கல்லீரல் பழுதடைந்து மனத்தெளிவற்று இறப்பின் விளிம்பில் பொதுமருத்துவமனையில் அனாதையாக கிடக்கும் தம்பி. அவனை சந்திக்கும் அக்காவின் மனநிலையும் தம்பியை பற்றிய அவளது நினைவுகளுமே வௌவால்கள் பறக்கும்போது கதையாக விரிகிறது. வசதியான குடும்பத்தில் வாழும் அக்காவால் தன் சமூக அடையாளத்தை கழற்றிவிட்டு எதிரே கிடக்கும் மனிதனை தம்பி என்று அழைக்க இயலவில்லை. மௌனமாக அழுகிறாள். தம்பியாலும் எதிரே அமர்ந்திருக்கும் பெண்மணி தன் அக்கா என்று அடையாளம் காண முடியவில்லை. ஆனால் இருவரும் தனித்தனியே ஒரே நேரத்தில் இளமையில் தங்கள் வீட்டு தோட்டத்து குளத்தில் பார்த்த தங்க மீன்களை நினைவுகூர்கிறார்கள். கதை நெடுக தம்பிக்கும் தனக்குமான பிரிவு எப்படி நிகழ்ந்தது என்பதை எண்ணி மருகி நினைவுகளை அலசுகிறாள். ஒரு காலத்தில் தங்க மீன்களாக இருந்த தம்பி பற்றிய நினைவுகள், இப்போது இருட்டறையில் இருந்து புறப்பட்டு அச்சுறுத்தும் வௌவால்களாக மாறிவிட்டன.
கதை முடிவில் சொல்லிக்கொள்ளாமல் அவனது கையில் நூறு ரூபாயை திணிக்கிறாள். கோயிலுக்கு பிரார்த்தனை செய்ய கிளம்புகிறாள். எந்த தருணத்தில் நாம் நேசித்தவர் குறித்த இனிய நினைவுகள் வௌவால்களாக மாறி பறக்கின்றன ? நமது அடையாளங்களுக்கு அப்பால் அன்பு செய்யும் சுதந்திரத்தை ஏன் இழந்து விட்டோம் ? என்ற கேள்விகளை எழுப்பி ஆழமான கதையாகிறது.
வௌவால்கள் பறக்கும்போது கதை சமூகத்தில் தனிமனிதர்கள் தங்கள் அடையாளங்களால் சிறைப்பட்டு தவிப்பதை பேசுகிறது. வெளியேற்றம், குளிர், நீர் மாதுளையின் பூக்கள், மாஹிம் வீடு ஆகிய கதைகள் ஆண் – பெண் உறவில் பெண்ணின் தரப்பை பேசுகின்றன. ஆணுடான உறவில் பெண்ணின் நிலை என்ன ? அவளுக்கு சுதந்திரமாக நேசிக்கவும் நேசிக்கப்படுவதற்குமான உரிமை உண்டா ? என்ற வினாக்களை ஆழமாக விவாதித்த கதைகளாக அமைகின்றன.
வெளியேற்றம் கதையின் நாயகி சிற்ப கலைஞர். நடுவயதில் உடல் நோயுற்று பக்கவாதத்திற்கு ஆட்பட்ட கணவரை தன் வருமானத்தில் காப்பாற்றுபவள். ஆனால் அவளது சிற்பத்திற்கான மாடலாக பணிக்கு வந்த பெண்ணுக்கும் கணவனுக்கும் இடையில் இருக்கும் முறைகேடான உறவை அறிந்து வீட்டை விட்டு வெளியேறி செல்கிறாள். தொடக்க காலத்தில் எழுதப்பட்ட கதைகளில் தனக்குரிய ஆணை தேர்வு செய்வதே பெண்ணின் சுதந்திரம் என்ற நிலை வெளியேற்றம் கதையில் மாறுகிறது. பெண்ணுக்கான சுதந்திரம் ஆண்களின் உலகத்தில் இருந்து முற்றாக வெளியேறி செல்வதிலேயே அமைந்துள்ளது என்ற இடத்தை நோக்கி நகருகிறது. ஊதியம் அளிக்கும் தனித்த வேலை மட்டுமல்ல, கலையே நுண்ணுணர்வு மிக்க பெண்ணுக்கு விடுதலையின் வழியாக அமைகிறது. விடுதலை இல்லாத அன்பு ஒரு தளை மாத்திரமே.
குளிர் கதை காதலனுக்கும் கணவருக்கும் இடையில் தத்தளிக்கும் பெண்ணின் மனநிலையை பேசுகிறது. இதே வரிசையில் தான் நீர் மாதுளையின் பூக்கள், மாஹிம் வீடு கதைகளையும் சேர்க்க வேண்டும். திருமணத்திற்கு வெளியில் அமையும் ஆணுடனான உறவின் வெவ்வேறு மாறுபாடுகளை இக்கதைகள் பேசுகின்றன. எளிதில் ஒழுக்க மீறல்களின் அதிர்ச்சியூட்டும் வகையிலான திருப்பங்கள் அல்லது ஒரு தலைபட்சமான சித்தரிப்புகளுக்குள் செல்ல சாத்தியமுள்ள கதைக்கருக்கள். ஆனால் கமலா தன் கதை நாயகிகளின் உள்ளத்தை நேர்மையுடன் சொல்வதால், அப்பெண்களை புரிந்து கொள்ள முடிகிறது. அதையும் தாண்டி, அவர்கள் ஏன் அப்படி செல்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. அது உறவுகளில் அன்பின் இடத்தை நோக்கிய மீள்விசாரணைக்கு அழைத்து செல்கிறது.
நம் இந்திய சூழலில் லட்சுமண ரேகை ஒன்று காமத்திற்கும் அன்பிற்கும் இடையில் ஓடுகிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான அன்பு என்பது ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முயல்வது என்றால், இருவரும் இணைந்து தம் உடல்களின் இன்ப சாத்தியங்களை கண்டுகொள்வதும் அதில் அடக்கம் தானே ? ஆனால் அன்பு என்பது இந்த உடலையும் மரணத்தையும் கடந்த அருவ நிலை கொண்டது என்று சொல்லும் கணவர். இதோ இவ்வுடலின் இன்பம் மட்டுமே மெய், இரண்டு மனங்களின் ஒருமித்த ரசனை என்பதெல்லாம் பொய் என்னும் காதலர். இருவருக்கும் இடையில் குற்றவுணர்வில் சிக்கி தவிப்பவளே குளிர் கதையின் நாயகி. அவளுக்கு உடலின் இன்பமும் ஆன்மாவின் நேசமும் வேண்டும்.
நீர் மாதுளையின் பூக்கள், மாஹிம் வீடு இருகதைகளும் ஆணை தேர்வு செய்யும் உரிமை பெண்ணுக்கு இல்லையா என்ற வழமையான கேள்வியில் இருந்தே துவங்குகின்றன. நீர் மாதுளையின் பூக்கள் கதையில் யதார்த்தமும் கனவும் ஒன்றுடனொன்று கலந்து வெளிப்படுகிறது. கதை நாயகி பழுதடைந்த தனது பூர்வீக வீட்டிற்கு ஆண் நண்பரை அழைக்கிறாள். ஓரிரவு இருவரும் அவ்வீட்டில் தங்குகிறார்கள். இறந்து போன பாட்டியை இருப்பதாக கற்பித்து கொண்டு தன்னுடைய புதிய கணவரை அறிமுகப்படுத்துகிறாள். மாஹிம் வீடு கதையில் எதிர் சேரியில் இருக்கும் பெயர் தெரியாத இளைஞன் மேல் காதல் கொள்கிறாள். வெளிநாட்டுக்கு படிக்க சென்ற கணவர் திரும்பி வரும்வரைக்கும் அந்த காதல் விளையாட்டை தொடர நினைக்கிறாள்.
கமலாவின் கதைகளில் வரும் இந்த பெண்கள் யாருக்கும் பெயர் இல்லை. அவர்களின் குடும்பமும் சூழலும் பின்னணி திரையாக இருக்கின்றன. அத்திரையின் முன் அவர்களின் மனம் கொள்ளும் மாறுபாடுகளை காண்கிறோம். குளிர், நீர் மாதுளையின் பூக்கள், மாஹிம் வீடு கதைகளின் நாயகியருக்கு எதிரே இருக்கும் ஆண் பொருட்டே அல்ல. உதாரணமாக நீர் மாதுளையின் பூக்கள் கதையில் வரும் காதலன் தனது பால்ய காலத்தை சொல்ல தொடங்கியவுடன் நிறுத்து என்கிறாள். நான் இல்லாத ஒரு கடந்த காலம் உனக்கு தேவையில்லை என்கிறாள். கமலா எழுதுவது பெண் விரும்பும் காதலனை அல்ல. காதலனுக்கு தனியாக குணங்கள் உண்டு. ஆண் மனதின் யக்ஷியை போல, இக்கதைகளின் வழி பெண் மனதில் இருக்கும் கந்தர்வனை அறிகிறோம். அந்த கந்தர்வன் அவள் விரும்பும் தோற்றத்தில் வருபவன். அப்போது பெண் தன் அடையாளத்தை மாற்றி கொள்ளாமலேயே ஒரு சுதந்திரமான உறவில் ஈடுபட முடியும்.
தன்னில் விடுதலையுணர்வை அடையாத எவரும் அன்பை செலுத்தவும் பெற்று கொள்ளவும் இயலாதவராகிறார். இதுவரை குறிப்பிட்ட கதைகளை பெண்களின் சுதந்திரத்திற்கான தேடல் என்ற பார்வை கோணத்திலும் வாசிக்கலாம். அந்த கோணத்தில் வாசித்தால் வெளியேற்றம் கதையே இறுதி உச்சமாக அமைகிறது. துரோகம் கதை அதற்கு முந்தைய படிநிலையில் நின்றுவிடுகிறது. ஆனால் ‘துரோகம்’ கதை என்பதற்கப்பால் எந்த கேள்விகளையோ திறப்புகளையோ சென்றடைவதில்லை. சுயம்வரம், கல்யாணி போன்றவை சுதந்திரத்தை மையப்படுத்தி பேசினாலும் உருவக கதைகளாக இருப்பதால் பலவீனமாக உள்ளன.
சுதந்திரத்திற்கான சாத்தியம் இல்லாத போது மரணம் அந்த இடத்தில் தலை காட்டுகிறது. பறவையின் வாசனை தொகுப்பின் சரிபாதை கதைகளில் மரணம் ஒரு பின்னணியாக வந்து செல்கிறது. அவற்றில் மரணம் மனித உருக்கொண்டு பேசும் இரு கதைகள் ‘பறவையின் வாசனை’ மற்றும் ‘மலைச்சரிவுகளில்’. இரு கதைகளும் நனவுக்காட்சிகளுடன் மனித ஆழ்மனம் கனவுகளாக வெளிப்படும் தன்மையை படம்பிடிக்கும் மீ யதார்த்தவாத வடிவில் உள்ளன. மீ யதார்த்த வடிவில் கதை சொல்வதாலேயே நாம் சாதரணமாக உணரும் உண்மைக்கு கீழ் உள்ள பிறிதொரு கோணத்தை துலக்கி காட்டுகிறது. அந்த வகையில் முக்கியமான கதை பறவையின் வாசனை.

நவீன காலத்தில் பெண்கள் வேலைக்கு செல்வது அவர்களது சுதந்திரத்துடன் நேரடியாக தொடர்புடையது. சம்பாதிப்பது தங்கள் விருப்பங்களை நிறைவேற்றி கொள்ளும் சுதந்திரத்தை பெண்களுக்கு அளிக்கிறது. ஆனால் துணிக்கடை வேலையில் சேருவதற்கு விண்ணப்பிக்க செல்லும் பெண், பல்துறை அங்காடியின் அடுக்குமாடி கட்டிடத்தில் மரணத்தை ஒரு மனிதனாக சந்திப்பதே பறவையின் வாசனை கதை. முற்பாதி யதார்த்த சித்தரிப்புகளுடன் பின்பகுதி கனவுக்குரிய தர்க்கத்துடனும் அமைந்த கதை. அதன் வழி, நமது பொது புரிதலுக்கு மாறாக முதல் பார்வைக்கு சுதந்திரத்திற்கான வழியாக தெரியும் வேலைக்கு செல்லுதல் மற்றொரு சிறை தானா ? அதுவும் மரணத்தை பரிசாக தரும் சிறை ? வேலைக்கு செல்லும் பெண் தன் அடிப்படை குணங்கள் எதையாவது இழக்கிறளா ? என்பது போன்ற கேள்விகளை எழுப்பி சிந்திக்க தூண்டுகிறது.
மகிழ்ச்சி ஒரு பொருளற்ற சொல் என்ற வரியுடன் மலைச்சரிவுகளில் கதை முடிவடைகிறது. கதைச்சொல்லியின் வாழ்க்கை அவளது விருப்பப்படி அமைந்தாலும் நிறைவின்மை கொள்கிறாள்.மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து கணவருடன் காரில் வீடு திரும்புகிறாள்.அப்போது கதைச்சொல்லி நினைவு கூரும் நிகழ்வுகளும் காணும் கனவுமே மலைச்சரிவுகளில் என்ற கதையாக விரிகிறது. நமது வாழ்க்கையில் இவையெல்லாம் நன்றாக அமைந்துவிட்டால் மகிழ்ச்சியாக இருப்போம் என்று நினைக்காதவர் யாருமில்லை. அவை அப்படியே அமைந்த பிறகு சூழும் ஒரு வெறுமையை கனவின் வசீகரத்துடன் சொல்வதாலேயே நல்ல கதையாகிறது. மரணம் முன்னும் பின்னும் விரிந்திருக்க இடையில் போராடுகையில் மட்டுமே வாழ்க்கை வெளிச்சம் கொள்கிறது.
இவை தவிர கோடை விடுமுறை, சிவப்பு பாவாடை, பொய்கள் ஆகிய கதைகள் சிறுமியர், சிறுவனின் பார்வையில் விரிகின்றன. நெய்ப்பாயசம், டார்ஜிலிங் கதைகள் மனைவியின் மரணம் கணவனில் ஏற்படுத்தும் உணர்வுகளை சொல்கின்றன. இக்கதைகள் எழுதப்பட்ட காலத்தில் புதுமையாக இருந்திருக்கும். இன்று கமலாவின் எழுத்துலகத்தின் வகைமாதிரிகளை புரிந்து கொள்ள மட்டுமே உதவுகிறது. மேலதிக கேள்விகளுடன் சமகாலத்தை சந்திக்காமல் நின்றுவிடுகின்றன.
கதைகளின் பேசுபோருள் அவை எழுப்பும் கேள்விகள் இரண்டையும் தாண்டி கமலாவின் மொழிக்காகவும் அவரது கதைகளை வாசிக்க முடிகிறது. குறைந்த சொற்களில் உணர்வுகளை வலுவான சித்திரங்களை தீட்டுகிறார். வௌவால்கள் பறக்கும்போது கதையில் தம்பியை பார்த்தவுடன் அக்காவுக்கு தோன்றும் முதல் எண்ணம், “கடந்துபோன குழந்தைப் பருவத்திலிருந்து பாதுகாத்து வைக்கப்பட்ட ஒரு கிழிந்த பாயைப் போன்று மல்லாந்து படுத்திருந்தான்.” என்பதாக அமைகிறது. அதே போல் வெளியேற்றம் கதையில் கதை நாயகி, தன் வீட்டிலிருந்து வெளியேறி கடற்கரையில் நடந்து செல்கிறாள். அவளது உள்ளம், “என் விரல்களின் இறுக்கத்தை அசட்டை செய்து உடுத்திய வெள்ளைப் புடவையின் முந்தானை பாய்மரப் படகின் உப்பிய பாயை போல என் போக்கிற்கெதிரே அகங்காரத்துடன் எழுந்தது. சடசடக்கும் ஆர்ப்பரிப்புடன், ஒரு மேகப் பொதியின் லாவகத்துடன் தனிமையின் மேலங்கி என்னை சூழ்ந்தது” என்ற விவரிப்பின் வழியாக உணர்த்தப்படுகிறது. பறவையின் வாசனை, மலைச்சரிவுகளில், குளிர், நீர் மாதுளையின் பூக்கள் முதலான கதைகளில் மொழி பாவியல்பை அடைகிறது.

அன்பையும் சுதந்திரத்தையும் தன் பேசுபொருளாக கொண்ட கமலாதாஸின் கதைகள் யதார்த்தத்தில் இருந்து கனவை நோக்கி செல்கின்றன. இக்கதைகளில் இடம்பெறும் பெண்கள் சமூகம் அவர்களுக்கு அளித்த அடையாளங்களை இழக்க விரும்புவது இல்லை. அடையாளங்களை தங்கள் விருப்பத்திற்கேற்ப கையாள முயல்கிறார்கள். அதன் வழியாக மேலும் சிறந்தவற்றை மண்ணுக்கு கொண்டு வர கனவு காண்கிறார்கள். அந்த பயணத்தில் தடுமாற்றங்களையும், சிலநேரம் தெளிவுகளையும் அடைகிறார்கள். ஒட்டுமொத்தமாக இக்கதைகளை வாசித்து முடிக்கையில் குறுந்தொகை பாடலொன்று2 நினைவிலெழுந்தது. பிரிவு துயரிலிருக்கும் தலைவி வெள்ளம் வடிந்த சேற்று நிலத்தில் இரை தேடும் நாரையை போல் உள்ளேன் என்கிறாள். இப்பெண்களும் அந்நாரையை போல் தங்கள் கனவுகளை தேடுகிறார்கள். வாடைக்காற்றின் குளிர் நாரையை வருத்துவது போல கடந்த காலமும் சமூக அடையாளங்களும் கமலாவின் பெண்களை குளிராக தாக்குகின்றன. ஒருவரை அறிவது அவரது கனவுகளை அறிவதே. பெண்களின் சில கனவுகளை அறிவதற்கான வாயிலாக உள்ளது கமலாவின் உலகம்.
*
அடிக்குறிப்புகள்:
- கொற்றவை (நாவல்) – ஜெயமோகன் – பக்கம் – 199
- குறுந்தொகை பாடல் எண் – 103
*
