ஒளி முள் – நந்தகுமார்

(கவிஞர் உமாமகேஸ்வரியின் ‘இறுதிப்பூ’ கவிதைத் தொகுப்பை முன்வைத்து)

(படம்: ஒற்றை நட்சத்திரம்)

மங்கிய இருள் போர்த்த
பாழ் மண்டபமொன்றில்
ஒரு விண்மீன் ஒளிமுள்
சூரிய இரைச்சல்களின்
மத்தியில்
துடிதுடித்து இருக்கிறது
நினைவின் மறுப்பில்
மிக மௌனமாக
மிகத் திண்மையாக
மிக ரகசியமாக.

துடித்துக் கொண்டே இருக்கும் ஒற்றை விண்மீன் ஒளிமுள், ஆம். திரும்பத் திரும்ப எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். “ஒளி முள், ஒளி முள் என. அது சாம்பல் மூடக் காத்திருக்கும் அந்தியின் நுனிகளில் வந்தமரும் ஒரு சலிப்புற்ற காத்திருப்பை திரும்பத் திரும்ப சொல்லாக்கிவிட்டுத் தணிக்க எண்ணுகிறது. கடல் அலைகள் படர்த்தும் நுரை கரையில் சற்று நேரம் படிந்து பின் காற்றின் அலை வேகத்தில் கரைவதைப் போல வந்தும் போயும் கொண்டிருக்கிறதோ, நினைவுகளிலிருந்து அகல விரும்பா அதன் ஞாபகங்களின் சீரில்லாத தோய்தல்.

அவன் எனும் புகைத்தன்மை உருவாக்கிடும் நிரந்தரமான ஒட்டுதலின்மையை ஒற்றி ஒற்றி ஒரு சகஜ பாவத்தை தனக்குத் தானே வரிக்க முயலும் சொற்குழைவுகள், தீர்க்கமாக தன் இயலாமையின் கனத்திற்குள் அமிழ்கையில் உள்ளும் புறமும் உருவாகிடும் உலோக நெடி. அது மிகத் திண்மையாக, மிக ரகசியமாகவும் அரூபரூபம் கொள்கிறது

காலமற்று ஏங்கும் குரல்வளை, நிரந்தரமாக அறுத்தெரியப்பட்டிருக்கிறதோ என அஞ்சினேன். அது தன் எல்கைகளின் கூட்டிற்குள் அமர்ந்து கொண்டு மேகங்களுக்கும், மலைகளுக்கும் அப்பால் இருக்கும், இருள் வெளியின் நிழல்களைத் தான் என்றும் அவன் என்றும் அரூபங்களால் நிரப்பி சமாதானம் அடைய முயற்சிக்கிறது. ஆனால் அதன் நிழல்கள், இருப்பு கலைவதை உள்ளூர விரும்பும் இன்னொரு ஏக்கமும், குறுகுறுப்பும் ஞாபகத் திரள்களின், அனுபவித்த மூர்க்கங்களின், வன்மங்களின், ஏமாற்றங்களின், மற்றும் நம்பிக்கையின்மைகளினால் எப்பொழுதும் போலத் தன் தனிமையினை மட்டுமே சாக்காக சொல்லிக் கொண்டு, இல்லையேல் தன் உறவுகளின் ஊடான பரஸ்பரத் தன்மையினை வலிந்து மாற்ற எத்தனிக்கும் நிராதரவற்ற பேதைத் தனத்தினைத் தனக்குத் தானே சூடிக் கொண்டு முட்டி நின்று வெறிக்கிறது.

பேழைக்குள் இருக்கும் பட்டுப் புழுவிற்கு கடைசி வரை சிறகுகள் முளைக்கவில்லை. முளைக்கவும் விடவில்லை. அதன் பறத்தலைச் சாத்தியமாக்கும் கனவுகள் சாம்பலை நிலையாகப் பூசி நிற்கின்றன.

அமைதியாக கடல் உறைக்கிறது. சங்கினுள்ளிருந்து வெளியேறி தூரம் கண்டறிய இயலாத் தொலைவிற்கு கோபத்துடன் வெளியேறி விடுகிறது. அது திரும்ப வரும் வழிகளில், ஏனோ அடைப்பட்டத் தன்மை. சகதிகள் சுழிக்கும் அலை நுழைவில் வேண்டுமென்றேத் தன்னை முழுதுமாகக் கட்டிக் கொண்டு, எந்த அசைவும் திமிர்வுமற்று உடல் முழுதும் ஊடுருவும் நீர்மையை, உப்புக்கவிச்சியை ஏற்றுக் கொண்டும், அதிலிருந்து விடுபடும் சாவியைக் கையருகிலேயே வைத்துக் கொண்டு, எடுக்க முடியாத தன் சொந்த சுயத்தை சதா கடிந்து கொள்ளும், அதற்காகவே தன்னை இன்னும் ஆழமாக அணைத்துக் கொள்ளவும் செய்யும் நிறைவே அற்ற தேடலும், காத்திருத்தலும்.

அதனாலேயே அது எந்த சிலாம்புகளையும் எடுக்காமல் புணர்கிறது. தன் உடலை விட்டு அதை யாரும் எடுப்பதையும் அனுமதிக்கவில்லை.

மிக மிகக் குறுகிய உலகில் அகம் சார்ந்து நுண்மையாக உணர்வுகளின் ஊடே நகரும், அலைக்களிப்பையும், கவனிப்பாரற்று கிடக்கும் தன்மையினையும் பெரும்பாலான கவிதைகள் பூடகமாக சொல்லிணைவுகளின் மூலமும், அதன் இசைமையின் மூலமும், படிமங்களின் மூலமும் கடத்த முயலும் வேட்கையே அதிகமாக கவிதையாகியிருக்கிறது. அகம் சார்ந்து, இறுக்கமான உறவுகளின் இடையேயான உணர்வுப் பிளர்வுகள் தேடலும், காத்திருப்புமாய் உறைகிறது.

எந்தக் கவனிப்புமற்ற பகல்நட்சத்திரம் மறைத்திருக்கும் ரகசியங்களின் அச்சம், மழைச் சடவு, நாற்புரம் இடுக்கி நிற்கும் சுவர்கள், எது வேண்டுமென்றாலும் அதன் சமிங்ஜைகளின் பாதைகள் எட்டவே முடியாத தூரத்திற்கு அப்பால் வெறும் ஒளித்துளிகளாக மட்டும் சிமிட்டும் கையாலாகாத தன்மை, இருள் போர்த்துகையில், குரல்களற்ற இயலாமை வெறிக்கும் விளக்கின் அடி நிழல் போல, நிமிண்டி நிமிண்டி அருகே ஊர்ந்து வருகின்றன கவிதைகளும். நம்பிக்கையின்மையின் திரட்சிக்குள் மெல்லப் படர்கிறது இருள். அது பல நூறு கால்கள் கொண்ட மழைப் பூச்சியைப் போல மெல்ல உள் நுழைகிறது. சின்னஞ்சிறிய இருளைத் தொட்டுப் பூசி விடுகிறது. சட்டென அமைதி கலைக்கும் வெளிச்சம். எல்லாம் குலைகின்றன. மடிப்புகள் அனைத்தும் சீராகி ஒழுங்கிற்குள் ஒளிந்து கொள்கின்றன. ஆனால் அந்த சீரானதின் அடியினுள் ஊறும் உணர்வுக் கொந்தளிப்புகள், கவிதையை அணைக்கிறது. எதுவும் படியாத ஆழ் இருளில் அவனது எந்தத் தீண்டுதலும் அங்கு வந்து சேரவே இல்லை.

சுற்றியும் முற்றியும் இறுக்கம் பற்றுகிறது. உறவுகளின் கசப்பு, உசாவல், அகக் கொந்தளிப்புகள், எதிர்பார்ப்புகள், காழ்ப்புகள், ஊடல், கூடல், காத்திருப்பு, தகிப்பு, ஏக்கம் என்று எல்லாப் படி நிலைகளிலும் படிமங்களின் வழி ஊறி நிற்கிறது சொல்லிணைவின் தனிமை. அது சொந்தத்தனிமை. வேறு ஒன்றும் செய்வதற்கில்லை. இக்கவிதைகளைத் தவிர. மிக அமைதியாக, தள்ளவும் முடியாமல் கொள்ளவும் முடியாமல் திண்டாடி மருகுகிறது இந்த வாழ்வை.

இரவில், இரவிற்கு வெளியே உலாத்தும் நினைவுகளில் அலையடிக்கிறது. அது உவர்க்கும் ஒரு குறுகிய அலைவெளியில் தன்னை நிகழ்த்திக் கொள்கிறது. பொருக்குக் காய்ந்த பிறகு உருவாகும் ஊறலைப் போல, சுகமும் காய்ப்பும், காந்தலும் ஒன்று சேர்கிறது.

மேகமதில் விளிம்பில்
தெரிகிறது
நான்
ஒருபோதும் கேட்டிராத
நட்சத்திரத்தின் சங்கீதம்
அதன் அதிற்ச்சரடுகள்
வளைத்திழுக்கின்றன என்னை
விழியோரம் சுழன்றாடும்
ஒளிச்சக்கரங்கள் எறிந்து
என்னைத் துளைக்கும்
கயிறுகள் இறுகும்
எனக்குத் தெரியவே தெரியாது
சிறுமரப் பேழையில்
போட்டு வைத்த
பட்டுப்பபுழு
இறுதியில் என்னாகுமென்று.

“தேவமழை


ஏந்தக் குவிந்த
என் உள்ளங்கைகளில்
உன் நிறம் கொள்கிறது
நான் அறிந்ததெல்லாம்
நிறமற்ற மழை
என்றாய் கறாராக
என் நிற மழையைப்
பார்த்திருக்கிறாயா எப்போதாவது
எனக் கேட்கும் முன்பே.”

“ஒற்றை நட்சத்திரம்
மீண்டும் மீண்டும் முனைகிறது
என்னவோ ஒரு
ரகசியத்தைச் சொல்ல
அதற்குத் தெரியுமாவென்று
தெரியவில்லை
தன் எரியும் தனிமை
அச்சமூட்டுகிறது மிக மிக…”

“செத்தப் பூனையின்
ஒற்றை விழியைக்
கொத்த நடுகிறது
ஒரு காகம்
வாசல் விளக்குக் கம்பத்தின்
உச்சியில்”

நந்தகுமார்

மிக மிக அழகென்றாலும் தரையில் தத்திக் கொண்டிருக்கும் பறவைகள், ஒரே சமயம் வெறுப்பையும், பரிதவிப்பையும் கோரி நிற்கிறது.

*

உமாமகேஸ்வரி: தமிழ்விக்கி

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *