சமநோக்கின் மிடுக்கும் மிளிர்வும் – மதுமிதா
(பெருந்தேவியின் தேசம் சாதி சமயம், உடல் பால் பொருள் ஆகிய கட்டுரை தொகுப்புகளை முன்வைத்து)

தமிழ் பண்பாட்டு பின்புலத்தில் பாலியல், சாதிய வன்முறைகள் பற்றிய தரவுகளும், அதன் அடுக்குகளின் குணங்களும் நிலைகளும் வெறும் விமர்சனங்களாக, உடனுக்குடன் வெளிவரும் பல்நோக்குகளின் தொகுப்பாகவே பெரும்பாலும் கிடைக்கின்றன. குற்றங்கள் மற்றும் அதற்கான தண்டனைகளும் விவாதிக்கப்படும் அதே நேரத்தில் அதன் காரணிகள் உணர்ச்சிகரமாக மட்டுமே அலசப்படுகின்றன. இந்த நிலையில், பண்பாட்டு மற்றும் வரலாற்று சட்டகத்தில், சமூக பரிணாமங்களின் துணை கொண்டு ஆராய்கிறது பெருந்தேவியின் கட்டுரை தொகுப்புகள்: தேசம், சாதி, சமயம் மற்றும் உடல், பால், பொருள். இவற்றின் பேசு பொருட்கள் ஒன்றுடன் ஒன்று ஊடாடுபவையாக உள்ளன. தன்னளவில் நீண்ட கேள்விகளையும், அதற்கான விவாத புள்ளிகளையும் கொண்டிருக்கும் இவ்விரு நூல்களும், அதன் கருப்பொருள்களின் சார ஒற்றுமையால் கூட்டு தொகுப்பாக கருதக்கூடிய வாய்ப்பு கொண்டவை.
தமிழக பண்பாட்டு பின்புலத்தில் தனி மனிதர்கள் முதல், பெரும் தாக்கத்தை செலுத்த கூடிய திரைப்படங்கள் வரை விவாதிக்கும் இந்த நூல்களில், இரு பெரும் விசைகளை இணைக்கிறார் பெருந்தேவி: இலக்கியம், உலகளாவிய பண்பாட்டு பின்புலம். அரசியல் சரிகளை பொருட்படுத்தாத, மனித அறத்தை, அந்த அறத்தின் காரணிகளை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய தேவையை, தரவுகளை கொண்டு முன்னிறுத்தும் செறிந்த கட்டுரைகள் இவை.
தேசம், சாதி, சமயம் முன்வைக்கும் முதல் கூறு, எவ்வாறு ஆண் பெண் என்ற பகுப்பு உயிரியல் சாரந்ததாக அல்லாமல் சமூக பண்பாட்டு கட்டுமானமாக உள்ளது என்பது. இதை உடல், பொருள், பால் தொகுப்பில் எதிர்பார்க்கும் மனம் இந்த தரவு ஏன் இங்கே நிலை கொள்கிறது என்று முதலில் துணுக்குற்றாலும், அதன் நோக்கு ஒவ்வொரு கட்டுரையிலும் துலங்கி வருவதை காண முடிகிறது. சாதி வரையறையை, அதன் நொய்ந்த வடிவை மீறி, சமுதாய அடித்தளமாக நிலைநிறுத்த பெண்மையை, பெண் எனும் சமூக கட்டுமானம் மூலமாகவே பயன்படுத்தி கொள்கிறது என்பதை பல்வேறு கலை வடிவுகளையும், சமூக நிகழ்வுகளையும் தொகுத்து அதன் பொதுமைகளையும் சிறப்புகளையும் காண்பிக்கிறார், பெருந்தேவி.
இந்த தொகுப்பை மூன்று கருத்துகளின் அடைப்படையில் நான் பகுத்து கொண்டேன்:
ஒன்று, ஆண் எனும் உயிரியல் பகுப்பின் மீது வைக்கப்படும் மதிப்பீடுகளும், எதிர்பார்ப்புகளும் கம்பீரம், ஆணவம், ஆட்கொள்ளுதல் என்ற வகைகளுக்கு உட்படுகின்றன என்ற கருத்து.
இந்த பகுப்பில் மாதொருபங்கன், பரியேறும் பெருமாள் ஆகிய இரண்டு கட்டுரைகளையும் தொகுத்து கொள்ள முடியும். நியோகம் என்ற முறைமை மகாபாராதத்தின் மூலமே இந்திய பண்பாட்டு சூழலில் அறிமுகமாகிறது. ஆனால் அங்கீகரிக்கப்பட வேண்டிய தேர்வு அது. தானே தேர்ந்து பெரும் கர்ணனை மகன் என்று அழைக்கும் உரிமை இல்லாதவாளாகிறாள் குந்தி. அதே முறைப்படி பிறக்கும் பிற குழந்தைகள் அந்த ஒப்புதல் அடையாளம் பெறுகிறார்கள். இதற்கு அடிப்படை வேறுபாடு பாண்டுவின் அங்கீகாரம் மட்டுமே. இது இன்னும் நுட்பமாக மாதொருபங்கனில் இன்னும் கூரிய அளவில் சிக்கலாகிறது என்று விரித்தெடுக்கிறார் ஆசிரியர். இதில் காளியின் மனதில் விஸ்வரூபம் எடுக்கும் பயம் பொன்னா ஒரு தீண்டா சாதிக்காரனை தேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதே. அதன் நீட்சியை அந்த கதை எங்கும் காண முடிகிறது. தனது வம்சாவளியை நீட்டிப்பதே ஒரு மனிதனின் ஆதி உணர்வு. அந்த உணர்வுக்கு முன் பிற சமூக விதிகள் காணாமல் போகின்றன. ஆனால் அந்த உணர்வை தாண்டிய பின், அந்த சந்ததிக்கு வழி உருவான பின் அங்கே அந்த ஆணின் ஆண்மை என்றென்றும் கேள்விக்கு உள்ளாக்க படுகிறது – அவனுடைய ஆணவம், அவன் கட்டி காத்து வைக்க வேண்டிய ஒன்றாக, அவன் எந்நிலையிலும் கைவிடக்கூடாத ஒன்றாகவே கருதப்படும் ஆண்மை கூறு அவனிடம் இல்லாமல் போவதாக ஏளனத்திற்கு உள்ளாகிறது. இன்னொரு வகையில் அவனை ஆட்கொள்ளும் சாமர்த்தியம் இல்லாதவனாக அது வரையறை செய்கிறது.
இதன் இன்னொரு புள்ளியாக ஒரு தந்தையிடம் எதிர்பார்க்கப்படும் அடிப்படை வளர்ப்பு முறையாக கண்டிப்பும், அவரிடம் இருக்க வேண்டிய ஒன்றாக கம்பீரமும் இருக்கிறது என்ற சிந்தனை. தந்தை என்பவரிடத்தில் பயம் தேவை என்பதை சொல்லாத வீடு எது? இதை பரியேறும் பெருமாள் திரைப்படம் எப்படி தலை கீழ் ஆக்குகிறது என்ற பெருந்தேவியின் சிந்தனை மிக நுட்பமானது. மரபார்ந்த சட்டகதிற்கு முற்றிலும் தள்ளி இருக்கும் ஒரு ஆண் – பெண் வேடம் பூணும், அந்த காரணத்தினால் மட்டுமே பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகும், மகனை மடியில் கிடத்தி தலை கோதி பேசும் ஒருவர். அதற்கு முன் ஏற்காத பரியன், பின்னர் அவன் ஆவேச வெளிப்பாட்டின் விளைவை எதிர்கொள்ளும் போது அவனது தந்தையை அப்படியே ஏற்கும் தருணம் மிக அழகானது. அவன் தனது தந்தையை கல்லூரி முதல்வரிடம் அறிமுகம் செய்த அடுத்த காட்சியில் அவர் இழிவாக நடத்தப்படுகிறார். ஆனால் அது பொருட்டாவதில்லை, அந்த தந்தை அப்படியே ஏற்க படுகிறார். பொதுவாக அவமானம் காட்டப்படும் சந்தர்பங்களில் அதை நேர் செய்யும் தருணம் காட்டப்படும், அப்படியான ஒரு தருணம் அந்த தந்தைக்கு இல்லை, ஏனெனில் அது தேவை இல்லை. ஏளனம் பிறரிடம் இருந்து வருவதால் அவர் தந்தை என்ற நிலை தாழ்வதில்லை என்ற உண்மை அது. வன்முறை நிகழ்த்த கூடியவன் என்பதை விட, அன்பும் பரிவும் கொண்ட ஒருவன் என்ற அடையாளம் மட்டுமே அவர் தந்தை ஆக போதுமானதாக இருக்கிறது. ஒரு பட்டியலின ஆண் மட்டும் அல்ல, ஒரு தந்தை என்ற ஆழ் படிமத்தின் மீட்டுருவாக்கம் இது.
இரண்டு, பெண் எனும் சமூக கட்டுமானம் விதந்தோத படும் அடித்தளமே அதை கட்டுப்படுத்தி நிற்க வைக்க முடியக்கூடிய ஒன்றாக ஆக்குவதன் இன்னொரு பக்கம் மட்டுமே, என்ற கருத்து.
சாதிய கொலைகளை “கௌரவ கொலைகள்” என்று அழைக்கும் சொல்லாடலில் இருந்து எவ்வளவு எளிதாக இத்தகைய உணர்ச்சி ஆதிக்க சாதியினருக்கு மிக இயல்பான ஒன்றாக முன்வைக்கப்படுகிறது என்று வாதிடுகிறார் பெருந்தேவி. அந்த சொல்லாடல் சமகாலத்தில் மாற்ற பட்டு சாதி ஆணவக்கொலை போன்ற சொல்லாடல்கள் அதிகமாகி வருவதையும் குறிப்பிடுகிறார். இந்த கொலைகளின் பின்னணியை முற்றிலும் இதில் ஒரு முக்கிய தரப்பினாரான பெண்களின் வாக்குமூலங்களை* கொண்டு ஆய்கிறார். ஆதிக்க சாதிகளில் பெண்களின் சுயதேர்வுகள் சரி வருவதில்லை, அது ஒரு கீழான வாழ்க்கை என்று சித்தரித்து வளர்க்கப்படுகிறது. சாதி மீறிய திருமணம் செய்த பெண்களின் கதைகள் தகாத செயல்களாக விவரிக்கப்படுகின்றன, மீள மீள இப்படியெல்லாம் செய்தால் “வெட்டி போட்றுவோம்” என்றும் அறிவுறுத்தல்கள் நிகழ்கின்றன. இவை சாதி மீறாமல் இருக்க செய்ய வேண்டிய வகையில் வந்தாலும், இவை அடிப்படையில் பெண் ஒடுக்கமாகவே நிலை கொள்கிறது. ஏனெனில், எந்த நிலையிலும் திருமணத்திற்கு பின் சொத்தில் பங்கு கேட்க மாட்டேன் என்று பெண்களிடம் கையொப்பம் பெறுகிறார்கள், தன் சாதி என்றாலும். அதாவது ஆண்மைய பார்வையில், ஆணின் ரத்த உறவுகளுக்கு, இதில் “வெளியே” போன பெண் அடக்கம் அல்ல, மட்டுமே அந்த சொத்து நிலை நிறுத்த படவேண்டிய ஒன்றாக இருக்கிறது. “அதை எல்லாம் கேக்கவே முடியாது, கல்யாணம் செஞ்ச கையோட கையெழுத்து வாங்கீருவாங்க”, என்று நிச்சயமாய் சொல்கிறார்கள் பெண்கள். ஆக இது சாதி விட்டு நீங்கி திருமணம் என்பதையும் விட, அதன் காரணி அந்த சொத்து என்பது மிக கண்கூடாக தெரிகிறது, எனில், வெறும் சொத்து மட்டுமே இதன் சிக்கலா என்றால், அப்படி எளிதில் புறம் தள்ளிவிட முடியவில்லை. ஏனெனில், இது பெண் தேர்வை அடிப்படையாக நிராகரிக்கிறது – சொந்த சாதியில் தேர்ந்தாலும் அப்படியே உடன்படுவார்கள் என்று சொல்ல முடியாத நிலை, ஒரு ஆண் பட்டியலின அல்லது பழங்குடியினர் பெண்ணை திருமணம் செய்தால் இருக்கும் விளைவு கொலைகளில் முடிவதில்லை. இது பெண்களை முதிர்ச்சியில்லாத மனப்பக்குவம் உடையவர்களாக காணும் சித்திரத்தின் ஒரு வகை நீட்சி இல்லையா? அவளுக்கு என்ன தெரியும், உலகம் தெரியாது ஏமாந்து போகும் ஒரு சித்திரமே வரையப்படுகிறது. ஆனால் தனது தேர்வை, அதன் விளைவாக கணவனான/காதலித்த ஒருவரின் மரணம் எத்தகைய குரூர விளைவுகளை அந்த பெண்ணின் மனதில் ஏற்படுத்தும் என்பது இன்றும் ஆராயாத ஒரு திசை. சில வருடங்களுக்கு முன்பு தன்னை போலவே வெளியூரில் இருந்து வந்து வேலை பார்க்கும் பெண்கள் தங்கும் ஒரு விடுதியில் அவளது திருமணத்திற்கு அழைத்த ஒரு தோழி, பிறகு தனது சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள மீண்டும் விடுதிக்கு வந்து அங்கிருந்து அப்படியே அவள் காதலித்தவருடன் சிங்கப்பூர் சென்று விட்டாள். எங்களை எல்லாம் அதிர்ச்சி அடைய செய்த அந்த நிகழ்வை, அதன் பின்னால் அவ்வப்போது செய்திகளில் அறிந்து கொள்ளும் கொலைகளைகளின் பின்புலத்தில் புரிந்து கொள்ள முடிந்தது. இத்தகைய ஒரு சூழல் விவாதங்களுக்கு உட்படுத்த வேண்டும் எனில், பெருந்தேவி எடுத்துரைப்பதை போல இவற்றை “பெண் விரோத சாதிய கொலை” அல்லது அதற்கு நிகரான ஒரு சொல்லாடல் தேவையாவதை ஒப்புக்கொள்ள முடிகிறது.
* வாக்குமூலம் என்று சொல்வதற்கான காரணம், இவை பெருந்தேவி திரட்டிய வாக்குமூலங்கள். இதில் சம்மந்தபட்டவர்கள் பேசிய, சொல்லிய கதைகளின், எடுத்துக்காட்டுகளின் திரட்டு இது. இதில் வேறு எந்த வகையிலும் எழுத்தியல் பூர்வமான “ஆதாரங்கள்” கிடைக்க வாய்ப்பில்லை.
இலக்கியம் எனும் பின்புலத்தில் புலம்பெயர்தல், குடிபுகுதல் என்ற சிந்தனைகள் எவ்வாறு வளர்ந்து விரிகின்றன என்பதை மிக ஆழமாய் ஆராயும் அவரது கட்டுரை, வீடு என்ற படிமம் பெண்ணுடன் ஒத்து வருவதாக இருக்கும் சிந்தனை எப்படி பெண் புலம் பெயர்தல் என்பதுடன் ஊடாடுகிறது என்று கொண்டு செல்கிறது. புலம்பெயர்தலை ஆழ்ந்து நோக்கிய இந்த கட்டுரை போலவே, குடிபெயர்ந்த பெண் எழுத்துகளின் தன்மை, அதன் அடித்தள சிந்தனைகள் பற்றிய ஆய்வு நிகழ வேண்டும்.
முற்போக்கு சிந்தனைகளாக வெளிப்படுத்தப்படும், முன்வைக்கப்படும் இலக்கியங்கள் எப்படி மிக எளிதாக மனு தர்மம் முன்வைக்கும் பெண்கள் பற்றிய தேய் வழக்குகளை விதந்தோதுகின்றன என்று பேசும் ஒரு கட்டுரை, தெளிவான சிந்தனைகளும் தரவுகளுடன் எழுப்பப்படும் கேள்விகளும் வெறும் மிகை உணர்ச்சிகளுடன் எழுதப்படும் கருத்துகளை சித்தரடிக்கின்றன என்பதற்கான சான்று.
மூன்று, சுயவிசாரணைகளில், கூரான சுய விமர்சனங்களில் மட்டுமே சாதி குறித்தான சமரசமற்ற நோக்குகள் உருவாக முடியும், என்ற கருத்து.
பெருமாள் முருகனின் சாதியும் நானும் நூலை பற்றிய கட்டுரையில் அதன் சுயவிசாரணை பகுதிகளை மேலெடுத்து அது சாதியின் மீதான கண்ணோட்டத்திற்கு எத்தனை அளப்பரிய மேடையை தருகிறது என்பதை தனது வாழ்வோடும், பல ஆதிக்க சாதி மக்களின் எண்ணங்களோடும் விரிவு படுத்துகிறார், பெருந்தேவி. அதுவும், சுய விசாரணியயே, தனது சாதிக்கு உள்ளிருக்கும் பாரபட்ச தன்மைகளை வெளி கொண்டுவரும் சாத்தியமுடையது என்று முன் வைக்கிறார்.
சக மனிதர்களை பாகுபாடு இன்றி வீட்டில் நடத்துவோம் என்பதை, தங்களின் பெருந்தன்மையின் வெளிப்பாடாக கருதுபவர்கள், பட்டியலின மக்களின் வீட்டு நிகழ்வுகளில் “பங்கெடுத்து” ஆனால் எதுவும் சாப்பிடாமல் வருவதை பெருமையாக கருதுதல், சாதி மீறிய திருமணம் நிகழ்ந்த வீடுகளில் சம்பந்த முறைகளில் என்றுமே இருக்கும் ஒரு எச்சரிக்கை உணர்வு, இவை எல்லாம் அனைவரும் அறிந்தவை. அந்த இடத்தில் நின்று நான் செய்வது சரியா, அந்த சக மனித உயிருக்கு நிகழ்வது சரியா என்ற தன்விசாரணையை கை விடாமல் வைத்திருப்பதே ஒருவர் செய்ய கூடும் அடிநிலை செயல்.
ஒரு விதத்தில், இதன் நீட்சியாகவே எந்திரன் பற்றிய கட்டுரையை நான் வாசித்தேன். ‘சுயம்’, ‘தான்’ என்ற சொல்லாட்சிகளும், அதன் கட்டுமானத்தில் இருக்கும் மற்றமைகள் அதை வைத்து “நிரூபிக்கப்படும்” ஆதர்ச குடிமகன் எனும் படிமம், இவை சுயத்தை இன்னும் கூர்ந்து நோக்க வைக்கின்றன. தன்னிலையை முன்வைக்கும் அதே அளவுக்கே பிறநிலைகள், அல்லது மற்றமைகள் விலக்கப்படுகின்றன. சிட்டி விளையாட்டு பொம்மையாக அறிமுகமாகும் படைப்பு, அந்த படைப்பின் தீவிரமும், மீறலும் அதிகரிக்க அதிகரிக்க அசுரவடிவுக்கு இணையாக அதை கொண்டு செல்வதன் போக்கு அப்பாத்திரத்தை இயந்திரம் என்ற அடையாளத்தையும் தாண்டி மற்றமைகளின் ஆழத்தில் புதைக்கிறது. புரியாத ஒன்றை, முதல் பார்வையில் விலக்கம் அளிக்கக்கூடிய ஒன்றை மற்றமை என்று புரிந்து கொண்டாலும், அதை விலக்கி நில்லாமல் அதனுடன் விவாதிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.
சாதிய நீட்சியாக தேசியம் ஆவது இந்த பிறன்மையின் தொடர்ச்சியே. தன்னோக்குடன் தொடற்புராத வேறு நிலைகளை மறுக்கும் போது அது நிந்தனையாக (blasphemous) கருதும் போக்கை வளர்த்து வளர்த்து கூட்டுகொலைகளாக (lynching) ஆகக்கூடிய நிலைக்கு கொண்டு செல்லும் பலம் பெறுகிறது. பசுவை உண்பவன் மிலேச்சன் என்ற வேத கால கருதுகோளுக்கு இணையாகவே வேத காலத்திலிருந்து வழக்கில் இருந்து வந்த பசு பலியும் (அவிர் பலி), பசு உணவாக இருந்ததையும் எடுத்துக்காட்டுகிறது இந்த கட்டுரை. அதை தொடர்ந்து, இதன் நேரெதிர் புள்ளியில் பசு துவக்க கால வேத பண்பாட்டிலும், பௌத்த, சமண சமயங்களிலும் தாயாக உருவாகிக்கப்படுகிறது என்பதையும் குறிப்பிடுகிறது. இந்த குறியீடு தொடர்ந்து நிலவி இது இன்று தேசியத்தின் அடையாளமாக அது செல்லும் திசையை நாம் எளிதாக கடந்து செல்ல முடியாததாக மாறியுள்ளது. அதற்காக எழுப்பப்படும் ஓங்கிய குரல்கள் “எங்கள் பசுக்கள், எங்கள் பெண்கள்” என்றே பேசுகின்றன. பசுவுக்கு இணையாக பெண் இங்கே வைக்கப்படுவது எந்த இடத்திலும் தன் துணையை தேரும் உரிமையும், தனது கருப்பையின் உரிமையையும் பசுவை போல இழந்தவர்களாக பாரக்கபடுவதற்கான வாய்புகளே அதிகம் என்ற தரிசனத்தை இந்த கட்டுரை முன்வைக்கிறது.
தேசம், சாதி, சமயம் தொகுப்பில் உள்நோக்கிய விசாரணைகளும் தரவுகளும் எந்த அளவிற்கு கையாள பட்டுள்ளதோ அதற்கு இணையாகவே உலக, நவீன சிந்தனைகளின், நவீன இலக்கியத்தின் கூறுகளும், கருதுகோள்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. ஜூடித் பட்லர், பூக்கோ போன்ற சிந்தனையாளர்களின் பக்கம் நின்று கருதுகோள்களை முன்வைத்துள்ள பெருந்தேவி, அதற்கு இணையாகவே டர்க்ஸ், உமா சக்ரவரத்தி, டி. ஆர். நாகராஜ் போன்ற இந்தியவியல் ஆராய்ச்சியாளர்களையும் (indologists) கைக்கொண்டுள்ளார். கூடவே நூலெங்கும் நிறைந்திருக்கும் புதுமைபித்தனும், இலக்கிய பார்வையும், இன்றைய தமிழ் எழுத்தாளர்களின் விமர்சனங்களும் தொகுப்பை சீர்மையாக்கின்றன.
கருப்பொருளின் தொடர்ச்சியில், கட்டமைப்பின் ஒற்றுமையில் உடல் பால் பொருள், தேசம் சாதி சமயம் தொகுப்பின் தொடர்ச்சி என்று கொள்ளலாம். அதிகார மையம் தன்னளவில் நிலை கொள்ள பெண் என்னும் சமூக கட்டமைப்பை பயன்படுத்தி கொள்வதை இந்த நூலில் இன்னும் தீவிரமாக உணர முடியும். பாலியல் வன்கொடுமைகளுக்கான சட்டங்கள் உலகளாவிய அளவில் மிக தாமதமாக, அல்லது அண்மையாகவே கொண்டு வரப்பட்டுள்ளன. ஏறக்குறைய இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் 1950களில் பாலியல் வன்முறைக்கான முதற்கட்ட சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இவை இன்றும் மீட்டுருவாக்கம் செய்து கொள்ள படுகின்றன. உதாரணமாக வன்தொடர்தல் (stalking) ஒரு குற்றமாக கருதப்படுவது அண்மையில் தான், அதுவும் பல பெண்களின் கொலைகளுக்கு பின்னாலேயே அங்கீகரிக்கப்பட்டது. அந்த வகையில், பாலியல் வன்கொடுமைகள் பேசு பொருளாக எடுத்துக்கொள்ளபட்டதற்கு #MeToo ஒரு முக்கியமான காரணி. இதன் புழங்கு தளத்திலேயே அதிகார மையத்தின் நடுவில் நிகழும் பாலியல் நிகழ்வுகளின் இசைவு (consent) பொருட்படுத்த கூடிய ஒன்றாக இருப்பதில்லை என்ற தர்க்கம் பெரும் அளவில் விவாதிக்க பட்டது, இன்றும் தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது.
சட்டங்கள் ஒரு புறம் இருக்க, அதன் சமூக அங்கீகாரம் இன்னும் சட்டத்தின் அருகில் சேரவில்லை என்பதே உண்மையாக இருக்கிறது. பாலியல் தொல்லைகளை (sexual harassment) பற்றி புகார் கூற, விசாரிக்க ஒவ்வொரு அமைப்பிலும், அலுவலகத்திலும் ஒரு குழு ஒன்று வைக்கப்பட வேண்டும், அதில் ஒரு பெண்ணாவது இருக்க வேண்டும் போன்ற சட்டங்கள் வெறும் காகிதத்தில் மட்டுமே உயிர் கொண்டுள்ள சமூக சூழல் இன்றும் நிலவுகிறது. இதற்கிடையில் பாலியல் துன்புறுத்தல்களை, அல்லது வன்கொடுமைகளை புகார் கொடுக்கும் பெண் முதலில் சந்திக்கும் சிக்கல் நம்பிக்கையின்மை. இதை மிக நீண்ட இந்திய பண்பாட்டு பின்புலத்தில் ஆராய்கிறது கோகோய் வழக்கை பற்றிய கட்டுரை. அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் குறைந்தபட்சம் ஐயங்களை பொது வெளியில் திணித்து பாதிக்கப்பட்டவரை இன்னும் நோகடிக்காமல் இருப்பது நம்மால் இயன்ற ஒன்று, அதையும் செய்ய மறுப்பதே பெரும் தொந்தரவு. அதிலும் நடந்த அக்கணமே ஏன் கூறுவதில்லை என்ற கேள்வி அதிகார மையம் முழுக்க நின்றிருக்கும் ஆண்களின் நடுவில் நின்று கேட்கப்படும் குரூரத்தை இந்த கட்டுரையிலும் #MeToo தொடர்பான கட்டுரையிலும் சிறப்பாக நுட்பமாக தரவுகளுடன், சமநோக்குடன் விளக்கியுள்ளார் பெருந்தேவி.
பாலியல் துன்புறுத்தல்களை சமூகத்தின் பார்வையின் மூலம் விவாதிக்க முயலும் பெருந்தேவி மிக எளிதாக திரைப்படங்களை கொண்டு அதை செய்திருக்க முடியும். சீறி எழ முடியும் தருணங்களை மொத்தமாக விலக்கி அதை இலக்கியத்தில், அதுவும் பெண்ணிய எழுத்தாளர்கள் என்று வகைமை படுத்தக்கூடிய ஆசிரியர்களின் நூல்கள், கதைகள், கட்டுரைகள் கொண்டு அவர் அதை முன்னெடுத்திருப்பது மிக கறாரான செயல். ஏனெனில், தமிழ் திரைப்படங்களில் வன்தொடர்தல் என்பது காதலின் முதல் படியாக காட்டாதவையே குறைவு. அவற்றை மிக எளிதாக விமர்சிக்க முடியும். ஆனால் திரைப்படங்களை அல்ல, இலக்கியத்தையே காலத்தின், மனித மனத்தின் பிரத்யட்சமாகக் கொண்டு இதை ஆராய்கிறார்.
அக்னி பிரவேசம் சிறுகதை, மற்றும் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் பற்றிய கட்டுரைகள் எதேச்சாதிகாரமாக அவற்றை புறம் தள்ளுவாதில்லை. இன்னும் சொல்ல போனால், மூன்று தனி கட்டுரைகளில் ஏன் இவை முக்கியம், அதன் வேறுபாடுகள் என்ன, நாவல் எந்த நிலையில் சிறுகதையில் இருந்து விலகி செல்கிறது, எதனால் ஒன்று மேல் ஏற்றி, இன்னொன்று சற்றே தங்கி விடுகிறது, வன்கொடுமையில் இருந்து பாலியலை பிரித்தெடுக்கும் பூக்கோவின் சிந்தனை, சமூக கட்டமைப்பில் ஒரு விதமான ஏற்பை மட்டுமே வழங்க முடியும் என்ற “உண்மையை” மீள மீள கேட்கும் மனது எடுக்கும் அதற்கு இணையான முடிவு தரும் வெறுமை, இதற்கு ஜெயமோகன் அவர்களின் விமர்சனத்தை எந்த நிலையில் தான் நின்று மறுக்கும் விளக்கங்களை கொடுக்கிறார்.
சிறுகதையில் இருந்து நாவல் விலகி செல்லும் விதமாக பெருந்தேவி விளக்குவதை என்னால் அப்படியே ஏற்றுக்கொள்ள முடிகிறது. சிறுகதை நிலை நிறுத்தும் நம்பிக்கை, அதை கனவென விலக்க முடியும் தன்மையை இல்லாமல் ஆக்குகிறது நாவல். இதில் இன்னொரு முக்கியமான விமர்சனமாக, நான் உடன்பட்ட இன்னொன்று பாலியல் துன்புறுத்தல் பற்றி தீர தீர எழுதும் இந்நாவலின் முக்கால் திட்ட விமர்சனங்கள் இதில் பிரபுவிற்கு பதின் பருவத்தில் நிகழும் பாலியல் துன்புறுத்தலை பேசுவதே இல்லை என்பதை. பிரபு மறந்தே விடும் ஒரு நிகழ்வு, ஏறக்குறைய கங்காவிற்கு நடந்த அதே நிகழ்வு, அவனால் மிக எளிதாக மீறி, மீண்டு வந்த ஒன்றாக உள்ளது. ஆனால் அதை சற்றும் மீறமுடியாமல் வாழ்வின் ஒரு பகுதியாகவே, தன்னுடைய எல்லா முடிவுகளும் அதில் இருந்து தொடங்குவதாகவே உள்ளது கங்காவிற்கு. இந்த கட்டுரைகளுக்கு பின் எந்த வாசகரும் இந்த இரண்டு படைப்புகளையும் மீள் நோக்கி தாங்கள் ஒருமித்தும், விலகியும் நிற்கும் கணங்களை அடைவார்கள்.
இந்த தொகுப்பில் வரும் இன்னொரு கூறு, பாலியல் துன்புறுத்தல்கள், மற்றும் வன்கொடுமைகளில் பாலியலை விளக்கும் கருத்துரு. இதை மேலே இருக்கும் பிரபுவும் கங்காவும் பாலியல் துன்புறுத்தலை அணுகும் முறையின் வேறுபாடு கொண்டு புரிந்து கொள்ளலாம். பிரபுவின் சுயம் பாலியல் தொல்லையில் கரைந்து போவதில்லை, கங்காவிற்கு அது வலியுறுத்த படுகிறது. ஏனென்றால் பாலியல் தன்மை கொண்டு அந்த குற்றத்தை ஆராயும் போது பெண்/பெண்மையை நொய்ந்த வடிவாக, இலையாக, மானாக, தெருவில் வைக்கப்பட்ட பொங்கல் குடமாக மட்டுமே பார்க்க முடிகிறது. இந்நிலையில் குற்றம் செய்யும் ஆணை முள்ளாக, ஓநாயாக, தெருவில் வைக்கப்படும் பொங்கலை நக்கி விடும் நாயாக மிக எளிதில் நிலை நிறுத்துகிறது. இந்த ஒப்புமைகளின் அடிப்படை சிக்கல் அது பெண்மையை வலுவற்ற ஒன்றாக ஆக்கும் அதே நிலையில் அந்த வன்கொடுமையை நிகழ்த்துபவரின் இயல்பு நிலையாக அந்த செயலை ஆக்குகிறது. ஆனால், பாலியல் வன்கொடுமைகள் அவை பாலியல் கொடுமை என்பதிலேயே “சிறப்பு” கவனம் பெறுகின்றன. எனில், அதை நீக்குவது என்பது எவ்வளவு சாத்தியம் என்ற கேள்வி எழுகிறது.

இந்தத் தொகுப்பின் ஆகச் சிறந்த பங்களிப்பு என்பது, பல ஆங்கில சொற்களுக்கு தந்திருக்கும் தமிழ் இணை சொற்கள். சுயாதீனம், பண்பாட்டு அடங்கல் போன்ற சொற்கள் முக்கியமானவை. Stalking என்ற குற்றத்தை விதந்தோதும் திரைப்படங்களை பற்றிய ஒரு கட்டுரையை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்த அனுபவத்தில், stalking என்பதற்கான இணை சொல் இல்லாமல் தேடிய நினைவு இன்றும் உள்ளது. அன்று நீள நீள சொல்லாடல்கள் வைத்து அதை எழுதிய பின்னர் என்னிடம் வந்து சேர்ந்த சொல் “வன்தொடர்தல்”. ஆனால் அந்த இடத்தில் மனதில் தோன்றிய முதல் எண்ணம் இதை எல்லாம் தமிழ்ச்சூழல் ஒரு பொருட்டாகவே எண்ணுவதில்லை என்ற எண்ணம் தான். பாலியல் குற்றங்களைத் தீர ஆராயும், விவாதிக்கும் தளம் வேண்டும் எனில், அதற்கான கலைச் சொற்களும் தமிழில் தேவை. அதை நீட்டி ஒரு பட்டியலாகக் கொடுத்துள்ளார் பெருந்தேவி. புழங்கும் மொழித்தளத்தில் இந்த கேள்விகளை எழுப்புவதும், அதற்கான விவாத களங்களை உருவாக்கி கொள்வதும் நமது கடமை.
***