சுயத்தின் அதிகாரம் – விவேக் சுப்ரமணியன்
(ஐன் ரேண்ட்)

1
நீதிமன்ற அறை ஒரு மயான அமைதியில் உறைந்திருந்தது. அங்கிருந்த அனைவரும் ஒரு குற்றவாளியின் மன்னிப்புக் கோரலுக்காக அல்லது ஒரு பலவீனமான தற்காப்பு வாதத்திற்காகக் காத்திருந்தனர். ஆனால், ஹோவர்ட் ரோர்க் அங்கு நின்றது தன் செயலுக்காக வருந்த அல்ல மாறாக, மனித நாகரிகத்தின் அஸ்திவாரத்தையே கேள்வி கேட்க. அவர் நீதிபதிகளைப் பார்த்து, ஒரு தீர்க்கதரிசியின் உறுதியோடு பேசத் தொடங்குகிறார்
“நூற்றாண்டுகளுக்கு முன்பாக, ஒரு மனிதன் முதன்முதலில் நெருப்பைக் கண்டறிந்தான். அவன் தன் சக மனிதர்களால் ஒரு தீயவனாகக் கருதப்பட்டு எரிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அவன் அந்த நெருப்பை மனிதகுலத்திற்குத் தந்தான். வரலாற்றின் ஒவ்வொரு மாபெரும் சாதனையும், ‘இதைச் செய்ய முடியாது’ அல்லது ‘இதைச் செய்யக் கூடாது’ என்று உலகம் தடுத்தபோது, அதை எதிர்த்து நின்ற ஒரு தனிமனிதனின் மூளையிலிருந்துதான் பிறந்தது.
படைப்பாளி என்பவன் எதனையும் தானாகவே உருவாக்குகிறான்; அவன் தனது சொந்தப் பார்வையின்படி உண்மையை நாடுகிறான். ஆனால் இரண்டாம் தர மனிதன் என்பவன் மற்றவர்களின் கண்களின் வழியாக உலகைப் பார்க்கிறான். படைப்பாளி தனது உழைப்பிற்காகவும், தனது ஆன்மாவின் திருப்திக்காகவும் வாழ்கிறான். அவன் மற்றவர்களுக்குப் பணிபுரிவதற்காகப் பிறக்கவில்லை. ஒரு மனிதன் செய்யக்கூடிய மிக உயரிய அறம் ‘சுயநலம்’. அது பேராசை அல்ல, அது தனது நேர்மையையும் , தனது அறிவையும் எதற்கும் விலைபேசாமல் பாதுகாப்பதாகும். கோர்ட்லாண்ட் வீடுகளை நான் வெடிவைத்துத் தகர்த்தேன். ஏனெனில், எனது படைப்பை ஒரு கூட்டுக் குழு சிதைக்க நான் அனுமதிக்க முடியாது. எனது உழைப்பின் பலனைச் சமூகம் ஒரு பிச்சையாகக் கேட்கலாம், ஆனால் அதை ஒரு உரிமையாகக் கோர முடியாது. நான் ஒரு சுதந்திரமான மனிதன்”
மேலே உள்ள அந்த ஆக்ரோஷமான உரைகள் நாவலில் இடம்பெறும் உரையாடல் தான், பின்பு அவை ஐன் ரேண்ட் கட்டமைத்த புறநிலைவாதம் என்ற தத்துவத்தின் உயிர்நாடியாக அமையபோகிறது என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்தத் தத்துவத்தின் வேர்களைத் தேடினால், நாம் பிரெடெரிக் நீட்சேயின் நிழலைக் காணலாம். நீட்சே தனது Thus Spoke Zarathustra நூலில் அதிமனிதன் பற்றிப் பேசினார். பாரம்பரிய மதங்களும் சமூகங்களும் போதிக்கும் அடிமை அறநெறிகளை உடைத்துவிட்டு, தனக்கான விழுமியங்களைத் தானே உருவாக்கிப் பயணிக்கும் ஒரு வீரனை நீட்சே முன்வைத்தார். ரேண்டின் ஹோவர்ட் ரோர்க் அந்த நீட்சே வகை மனிதனின் நவீன வடிவம் தான் . ரேண்டின் ரோர்க்கோ மற்றவர்களிடமிருந்து முற்றிலும் விலகி, தனது சொந்தப் படைப்புலகில் சுதந்திரமாக இருக்கத் துடிப்பான்.
இருபதாம் நூற்றாண்டின் அறிவுஜீவி உலகில் ஐயன் ரேண்ட் தனித்துவமான ஆளுமை. “சுயநலம் ஒரு நற்பண்பு” (Selfishness is a Virtue) என்று அவர் பிரகடனம் செய்தபோது, அதுவரை உலகம் போற்றி வந்த தியாகம் மற்றும் கருணை சார்ந்த அறநெறிகள் கோட்பாடுகள் எல்லாமே கேள்விக்குட்பட்டன. ரேண்டின் தத்துவத் தாக்கம் இன்றும் கலிஃபோர்னியாவின் சிலிக்கான் வேலி முதல் சர்வதேச அரசியல் வரை நீடிக்கிறது. ஜான் கால்ட் மற்றும் ஹோவர்ட் ரோர்க் போன்ற அவரது கதாபாத்திரங்கள் கற்பனை பாத்திரங்களாக இருந்தாலும், அவை தனிமனித ஆற்றலின் உச்சங்களாகச் சித்தரிக்கப்பட்டன. சோவியத் ரஷ்யாவில் தனது குடும்பம் எதிர்கொண்ட கம்யூனிச அடக்குமுறைகளும், சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் ரேண்டின் மனதில் ஆழமான வடுக்களை ஏற்படுத்தின. இதுவே அவரை அரசு தலையீடு இல்லாத முதலாளித்துவத்தின் தீவிர ஆதரவாளராக மாற்றியது. தனிமனிதன் தன் அறிவைப் பயன்படுத்தி அடையும் வெற்றியே மிக உயர்ந்தது என்றும், அதை மற்றவர்களுக்காகத் தியாகம் செய்யக் கோருவது ஒரு தார்மீகக் குற்றம் என்றும் அவர் வாதிட்டார்.
தி ஃபவுண்டன்ஹெட் மற்றும் அட்லஸ் ஷ்ரக் ஆகிய நாவல்களை புனைவு நாவல்களாக அல்லாமல் தன்னுடைய தத்துவத்தை பற்றிய தொகுப்பாகவே ரேண்ட் முன்வைத்தார். அந்நாவல் குறித்த விவாதங்கள், விமர்சனங்கள் என அனைத்துமே அவரின் புறநிலவாதத்தை எடுத்து செல்லும் ஊடகமாகவே அமைந்தது. நாவலின் முதன்மை பாத்திரமான ஹோவர்ட் ரோர்க் எனும் கட்டிடக் கலைஞர் மூலம், ஒரு படைப்பாளி தனது சுயமரியாதையையும் கலையையும் சமூகக் கருத்துக்களுக்காக ஒருபோதும் விட்டுக் கொடுக்கக்கூடாது என்பதை அவர் வலியுறுத்தினார். “உலகின் சக்கரங்கள் சுழல்வதை நிறுத்தும் போது என்னவாகும்?” என்ற கேள்வியின் மூலம், திறமையுள்ள தனிமனிதர்கள் புறக்கணிக்கப்படும்போது ஒரு சமூகம் எவ்வாறு வீழ்ச்சியடையும் என்பதை அவர் மிக நுணுக்கமாகச் சித்தரித்தார்.
இன்றைய நவீன உலகில், ஸ்டார்ட்-அப் கலாச்சாரம் மற்றும் தொழில்முனைவோர் மத்தியில் ஐன் ரேண்ட் ஒரு வழிகாட்டியாகவே பார்க்கப்படுகிறார். எதற்கும் அஞ்சாத, எதற்காகவும் தனது லட்சியத்தைக் கைவிடாத ‘சூப்பர் மேன்’ என்ற அவரது கருத்தாக்கம் இன்றும் பலரைத் தூண்டுகிறது. முரண்பாடுகளும் விவாதங்களும் நிறைந்ததாக இருந்தாலும், “உனக்காக நீ வாழ்; உனது மகிழ்ச்சியை நீயே தீர்மானி” என்ற அவரது மையக்கருத்து, காலங்களைக் கடந்து தனிமனித சுதந்திரத்தின் குரலாக ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
இளம் தொழில்முனைவோராக இருந்த டெட் டர்னர், ஐன் ரேண்டின் தத்துவத்தால் ஈர்க்கப்பட்டு, அமெரிக்காவின் தெற்குப் பகுதி முழுவதும் 200-க்கும் மேற்பட்ட ராட்சத விளம்பரப் பலகைகளை நிறுவினார். அந்தப் பலகைகளில் வேறு எந்த விவரமும் இன்றி, “ஜான் கால்ட் யார்?” என்ற ஒற்றைக் கேள்வி மட்டும் பெரிய எழுத்துகளில் இடம் பெற்றிருந்தது. ‘அட்லஸ் ஷ்ரக்’ நாவலின் மையக்கருவான இந்த வாசகம், பொதுமக்களிடையே பெரும் அதிர்வையும் தேடலையும் உண்டாக்கியது. ஒரு நாவலில் வரும் கற்பனைக் கதாபாத்திரத்தின் பெயரை வைத்து, சமூகத்தில் நிலவும் மந்தநிலை குறித்தும் தனிமனித ஆற்றல் குறித்தும் மக்களைச் சிந்திக்கத் தூண்டிய டெட் டர்னரின் இந்தச் செயல், நவீன விளம்பர வரலாற்றில் ஒரு துணிச்சலான முயற்சியாகக் கருதப்படுகிறது.

இந்த விளம்பரப் பலகைகள் வெறும் வணிக நோக்கத்திற்காக அமைக்கப்பட்டவை அல்ல, மாறாக, அன்றைய அமெரிக்கச் சமூகத்தில் நிலவிய அரசியல் மற்றும் பொருளாதாரக் குழப்பங்களுக்கு ஒரு தார்மீகச் சவாலாகவே அவை பார்க்கப்பட்டன. “உலகத்தை இயக்கும் அறிவுஜீவிகள் வேலைநிறுத்தம் செய்தால் என்னவாகும்?” என்ற நாவலின் அடிப்படை வினாவை இந்த வாசகம் அனைவர் மனதிலும் விதைத்தது. டெட் டர்னர் தனது ஆரம்பக்காலத் தொழில் வாழ்க்கையிலேயே இத்தகைய புரட்சிகரமான சிந்தனைகளை வெளிப்படுத்தியதும், ஐன் ரேண்டின் தனிமனிதவாதக் கொள்கைகளை ஒரு பொதுவெளி விவாதமாக மாற்றியதும் அவரது ஆளுமையின் வீச்சை உணர்த்துகிறது. அந்த விளம்பரப் பலகைகள் ஜான் கால்ட் எனும் பிம்பத்தை ஒரு சாதாரண நாவல் கதாபாத்திரத்திலிருந்து, சுதந்திரத்தின் அடையாளமாக மாற்றின.
ஐன் ரேண்டின் தத்துவக் கோட்பாடுளுக்கு அவரது வாழ்க்கை அனுபவங்களும் அவர் வளர்ந்த சமூக-அரசியல் சூழலுமே அடிப்படையானது. அவரது தத்துவம் என்பது ஏதோ குளிர்சாதன அறையில் அமர்ந்து செய்த அறிவுசார் பயிற்சியின் விளைவு அல்ல; மாறாக, வரலாற்றின் மிகக் கொடூரமான சமூகப் பரிசோதனைகளில் ஒன்றை நேருக்கு நேர் சந்தித்த ஆளுமையின் எதிர்வினை. பிப்ரவரி 2, 1905-ல் ரஷ்யாவின் வரலாற்றுப் புகழ்பெற்ற நகரான புனித பீட்டர்ஸ்பர்க்கில் அலீசா ஜினோவ்யேவ்னா ரோசன்பாம் பிறந்தார். இவரே பின்னாளில் உலகப் புகழ்பெற்ற சிந்தனையாளர் ‘ஐன் ரேண்ட்’ என அறியப்பட்டார். ஒரு நடுத்தர வர்க்க யூதக் குடும்பத்தில் பிறந்த அலீசாவின் தந்தை ஜினோவி ஜகாரோவிச் ரோசன்பாம் வெற்றிகரமான மருந்தகம் நடத்தி வந்தார். கல்விக்கும் வசதிக்கும் குறைவில்லாத ஒரு சூழலிலேயே அவரது ஆரம்பகால வாழ்வு அமைந்தது. 1917-ஆம் ஆண்டு வெடித்த போல்ஷிவிக் புரட்சி அலீசாவின் வாழ்வில் ஒரு ஆறாத வடுவை ஏற்படுத்தியது. லெனின் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசாங்கம், எவ்வித முன்னறிவிப்புமின்றி அவரது தந்தையின் மருந்தகத்தைக் கையகப்படுத்தியது. இது வெறும் சொத்து இழப்பு மட்டுமல்ல, ஒரு குடும்பத்தின் பல தலைமுறை உழைப்பு, அவர்களின் பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் எதிர்காலக் கனவுகள் அனைத்தும் ஒரே இரவில் அபகரிக்கப்பட்டன. பொதுநலன், சமத்துவம் போன்ற உன்னத முழக்கங்களின் நிழலில், தனிநபர் உரிமைகள் எவ்வாறு நசுக்கப்படுகின்றன என்பதை 12 வயது சிறுமியாக அலீசா நேரில் கண்டார்.
லெனின்கிராட் நகரின் பனிப்பொழிவிலிருந்து தப்பித்து, சுதந்திரத்தின் நிலமான அமெரிக்காவை நோக்கிய ஐன் ரேண்டின் பயணம் ஒரு தந்திரமான திட்டத்துடன் தொடங்கியது. 1925-ஆம் ஆண்டின் இறுதியில், சிகாகோவில் இருந்த தனது உறவினர்களைச் சந்திக்கச் செல்வதாகவும், அங்கு திரைப்படத் துறையைப் பயின்றுவிட்டு சோவியத் ரஷ்யாவின் சினிமா வளர்ச்சிக்கு உதவப் போவதாகவும் கூறி விசா பெற்றார். ஒருபோதும் திரும்பப் போவதில்லை என்ற ரகசிய முடிவோடு அவர் மேற்கொண்ட பயணம் இது. 1926 பிப்ரவரியில் நியூயார்க் வந்தடைந்த அவர், சில மாதங்கள் சிகாகோவில் தங்கி ஆங்கில மொழியைக் கற்கத் தொடங்கினார். ஆனால், வெறும் மொழியறிவு மட்டும் போதாது, தனது லட்சியங்களை உலகிற்கு உரக்கச் சொல்ல ஒரு தளம் தேவை என்பதை உணர்ந்த அவர், அமெரிக்கக் கனவின் தலைநகரான ஹாலிவுட்டை நோக்கிப் பயணமானார்.
ஹாலிவுட்டில் அவரது ஆரம்பகால வாழ்க்கை சினிமாத் திரைக்கதையைப் போலவே வியக்கத்தக்கத் திருப்பங்களுடன் தொடங்கியது. அங்கு வந்த இரண்டாம் நாளே, புகழ்பெற்ற இயக்குநர் சிசில் பி. டிமிலியை தற்செயலாகச் சந்தித்தது அவருக்கு ஒரு கூடுதல் நடிகையாக பணியாற்றும் வாய்ப்பைத் தேடித்தந்தது. அந்தப் படப்பிடிப்புத் தளத்தில்தான் தனது வாழ்நாள் துணையான பிராங்க் ஓ’கானரை அவர் சந்தித்தார். இருப்பினும், நடிகையாக நீடிப்பது அவரது நோக்கமல்ல; அவர் ஒரு படைப்பாளியாகவும் திரைக்கதை எழுத்தாளராகவும் அங்கீகரிக்கப்பட விரும்பினார். இதற்காக அவர் சந்தித்த போராட்டங்கள் மிகக் கடுமையானவை. பல ஆண்டுகள் RKO ஸ்டூடியோவின் ஆடைத் துறையில் ஒரு சாதாரண எழுத்தராகப் பணியாற்றி வறுமையுடன் போராடினார். பகலில் கடுமையான உழைப்பு, இரவில் தனது தத்துவார்த்த நாவல்களுக்கான எழுத்துப் பணி என ஒரு இயந்திரத்தைப் போல அவர் உழைக்க வேண்டியிருந்தது.

1930-களில் அமெரிக்காவின் பொருளாதார மந்தநிலை காலத்தில் ரேண்டின் வாழ்க்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. அவரது கணவருக்குப் பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், ரேண்டின் மிகக்குறைந்த வருமானமே அவர்களது வாழ்வாதாரமாக இருந்தது. ஹாலிவுட்டின் போராட்டக் களத்தில் ஐன் ரேண்ட் சந்தித்த சவால்கள் அவரது மன உறுதியை மேலும் வலுப்படுத்தின. அங்குதான் அவர் தனது இணையான பிராங்க் ஓ’கானரைச் சந்தித்து 1929-ல் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணம் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தந்ததோடு மட்டுமல்லாமல், சட்டப்பூர்வமாக அவர் அமெரிக்காவில் தங்குவதற்கும் வழிவகை செய்தது. 1931-ல் அவர் அதிகாரப்பூர்வமாக அமெரிக்கக் குடியுரிமை பெற்றார்; அந்தத் தருணத்தை “உலகின் மிக உன்னதமானது” என்று அவர் போற்றினார். அதே காலகட்டத்தில், சோவியத் ரஷ்யாவின் கொடுமைகளைத் தனது முதல் நாவலான We the Living மூலம் உலகிற்குச் சொல்ல முயன்றார். பல பதிப்பாளர்கள் இந்த நாவலை நிராகரித்தனர். 1936-ல் இது வெளியானபோது, ஒரு தனிமனிதனின் ஒடுக்குமுறை அரசாங்கத்தால் எப்படிச் சிதைக்கப்படுகிறது என்பதை மிகத் துல்லியமாக வெளிப்படுத்தியது. அவர் எழுதிய பிற கதைகளையும் “அமெரிக்கர்களுக்குப் புரியாது” அல்லது ” மிக மோசமாகச் சித்தரிக்கிறது” என்று கூறி பதிப்பாளர்கள் வரிசையாக நிராகரித்தனர்.
ஐன் ரேண்டின் முதல் நாவலான We the Living அவரது தத்துவப் பயணத்தின் தொடக்கப்புள்ளியாகவும், சோவியத் ரஷ்யாவில் அவர் அனுபவித்த கொடுமைகளின் நேரடிப் பதிவாகவும் திகழ்கிறது. 1920-களின் ரஷ்யப் புரட்சிக்குப் பிந்தைய காலக்கட்டத்தைப் பின்னணியாகக் கொண்ட இக்கதை, கிரா நாயர் எனும் இளம்பெண் தனது கனவுகளையும், காதலையும் ஒரு அடக்குமுறை அரசாங்கத்திடம் இழப்பதைப் படம்பிடித்துக் காட்டுகிறது. “அரசுக்காகவே மக்கள்” என்ற கொள்கை நிலவும் ஒரு சமூகத்தில், ஒரு தனிமனிதனின் ஆன்மாவும் அவனது திறமைகளும் எவ்வாறு திட்டமிட்டு நசுக்கப்படுகின்றன என்பதை ரேண்ட் இதில் மிக ஆக்ரோஷமாக விவரித்திருப்பார். இது வெறும் அரசியல் நாவல் மட்டுமல்ல; “உன்னால் சிந்திக்க முடிந்தால், உன்னால் உணர முடிந்தால், நீ இந்த அமைப்பிற்கு ஆபத்தானவன்” என்ற தத்துவார்த்த எச்சரிக்கையை இது முன்வைக்கிறது. தான் வாழ்ந்த கசப்பான அனுபவங்களை ஒரு புனைவாக மாற்றிய ரேண்ட், இந்நாடகத்தின் மூலம் தனிமனித உரிமை என்பது எதற்கும் அடகு வைக்கப்படக்கூடாத உன்னதம் என்பதை உலகுக்கு உரக்கச் சொன்னார். We the Living நாவலின் ஆன்மா அதன் முதன்மைக் கதாபாத்திரங்களான கிரா, லியோ மற்றும் ஆண்ட்ரி ஆகியோருக்கு இடையே நிகழும் தார்மீக மற்றும் உணர்ச்சிகரமான மோதல்களிலேயே அடங்கியிருக்கிறது.
கிரா நாயர் ஒரு பொறியாளராக வேண்டும் என்ற லட்சியம் கொண்டவள்; எதார்த்தத்தில் அவள் ஒரு தனிமனிதவாதத்தின் சின்னம். அவளது காதலன் லியோ, ஒரு பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவன். கம்யூனிச அரசு அவனது குடும்பத்தின் கௌரவத்தையும் சொத்தையும் பறித்ததோடு மட்டுமல்லாமல், அவனது வாழும் விருப்பத்தையும் சிதைத்துவிடுகிறது. லியோவின் உடல்நிலையைக் காப்பாற்ற கிரா போராடும்போது, அந்தச் சமூகம் அவளைத் தார்மீக ரீதியாக எப்படிக் கீழே தள்ளுகிறது என்பதை ரேண்ட் வலியுடன் விவரிக்கிறார். இன்னொரு புறம், ஆண்ட்ரி எனும் கம்யூனிஸ்ட் அதிகாரி, தனது லட்சியத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவன். ஆனால், கிராவிடம் அவன் கொள்ளும் காதல், அவன் நம்பும் கூட்டுச் சமூகம் என்ற தத்துவம் தனிமனித உணர்வுகளுக்கு முன்னால் எவ்வளவு பலவீனமானது என்பதை அவனுக்கு உணர்த்துகிறது. இறுதியில், லியோவின் விரக்தி, ஆண்ட்ரியின் தற்கொலை மற்றும் கிராவின் மரணத்தின் வாயிலாக, ஒரு அடக்குமுறை அரசு மனிதப் பண்புகளை எவ்வாறு முழுமையாக அழித்துவிடுகிறது என்பதை ரேண்ட் நிரூபிக்கிறார்.
1940-களின் முற்பகுதியில், ஹாலிவுட்டை விட்டு வெளியேறி ஐன் ரேண்ட் நியூயார்க் நகருக்கு இடம்பெயர்ந்தார். நியூயார்க் அப்போது உலகின் அறிவுசார் மையமாக விளங்கியது; ஆனால் அங்கு நிலவிய அறிவுச் சூழல் ரேண்டிற்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. சோவியத் ரஷ்யாவிலிருந்து அவர் எவற்றைத் தப்பித்து வந்தாரோ, அதே சோசலிச மற்றும் கூட்டுவாத (Collectivism) சிந்தனைகள் நியூயார்க்கின் அறிவுஜீவிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. அமெரிக்காவின் கல்வி நிலையங்கள், பத்திரிகைகள் மற்றும் கலைத்துறையினர் அனைவரும் “சமூக நலம்” என்ற பெயரில் தனிமனிதச் சுதந்திரத்தைத் தியாகம் செய்வதை ஒரு முற்போக்கான செயலாகக் கருதினர். இந்தச் சூழலை ரேண்ட் தொற்று என்று கருதினார். நியூயார்க்கின் மேல்தட்டு வர்க்கத்தினர் கம்யூனிசத்தையும் சோசலிசத்தையும் ஒரு நாகரிகமான சிந்தனையாகப் போற்றியது. ரஷ்யாவில் அதன் கோர முகத்தைக் கண்ட ரேண்டிற்கு ஆத்திரத்தை உண்டாக்கியது.
இந்த அறிவுசார் போருக்குப் பதிலடியாகவே அவர் தனது வாழ்நாளின் மிகச் சிறந்த படைப்புகளை உருவாக்கினார். நியூயார்க்கின் மையப்பகுதியில் அமர்ந்து கொண்டு, அங்கு நிலவிய சோசலிச அலைக்கு எதிராகத் தனித்து நின்று அவர் தத்துவப் விவாதங்களை நடத்தினார். The Fountainhead நாவலின் மாபெரும் வெற்றி அவருக்கு ஒரு மிகப்பெரிய அங்கீகாரத்தைத் தந்தது. அதனைத் தொடர்ந்து, நியூயார்க்கில் அவர் உருவாக்கிய Nathaniel Branden Institute மூலம் தனது புறநிலைவாதம் தத்துவத்தைப் பரப்பினார். நியூயார்க்கின் வானளாவிய கட்டிடங்களைக் கண்டு அவர் வியந்தார், அவை தனிமனிதனின் அறிவுத்திறனுக்கும் உழைப்பிற்கும் சான்றாக இருப்பதாக அவர் நம்பினார். அங்கு நிலவிய கம்யூனிசச் சார்பு சிந்தனையாளர்களைத் தனது மேடைப் பேச்சுகள் மற்றும் கூர்மையான கட்டுரைகள் மூலம் இடைவிடாது சாடினார். ரேண்டிற்கு நியூயார்க் என்பது ஒரு நகரம் மட்டுமல்ல, அது தனிமனித சுதந்திரத்திற்கும் கூட்டுவாத அடிமைத்தனத்திற்கும் இடையே நடக்கும் மாபெரும் தத்துவப் போர்க்களமாகவே இருந்தது.
ஜெனிஃபர் பர்ன்ஸ் (Jennifer Burns) எழுதிய அவருடைய சுயசரிதை புத்தகத்தில் கூட ஐன் ரேண்டி குறித்த தகவல்களில் அவரின் சிந்தனையை உருவாக்கிய முக்கிய தத்துவவாதி பிரெடெரிக் நீட்சே என்று குறிப்பிடப்பட்டுள்ளார். ஐன் ரேண்டின் சிந்தனை மரபை நாம் ஆழமாகப் பரிசோதித்தால், பிரெடெரிக் நீட்சேயின் தத்துவங்கள் அவரது ஆரம்பகால எழுத்துக்களின் அடிப்படையாகத் திகழ்ந்ததை உணர முடியும். நீட்சே முன்வைத்த “அதிமனிதன்” (Übermensch) என்ற கோட்பாடு, ரேண்டின் இளமைக்கால மனதில் மாபெரும் கிளர்ச்சியை உருவாக்கியது. சோவியத் ரஷ்யாவின் ஒடுக்குமுறையிலிருந்து தப்பித்து வந்த ஒரு இளம் பெண்ணிற்கு, நீட்சேயின் சமரசமற்ற தனிமனிதவாதம் பெரும் அரணாகத் தெரிந்தது. நீட்சே தனது தத்துவத்தில் மந்தை மனப்பான்மை கொண்ட சாமானிய மக்களையும், அவர்களை வழிநடத்தும் அடிமை அறநெறிகளையும் கடுமையாக விமர்சித்தார். பலவீனமானவர்கள் ஒன்றுகூடி, பலமானவர்களைக் கட்டுப்படுத்த உருவாக்கிய ஒரு கருவியே ‘மதம்’ மற்றும் ‘பரிவு’ என்பது நீட்சேயின் வாதம். ரேண்ட் இதனை அப்படியே ஏற்றுக்கொண்டார். அவரது ஆரம்பகாலக் குறிப்புகளில், “சராசரி மனிதர்களுக்காகத் திறமையானவர்கள் தங்களைத் தியாகம் செய்துகொள்வது ஒரு குற்றம்” என்று அவர் எழுதியிருப்பது நீட்சேயின் தாக்கத்தின் நேரடி எதிரொலியே.
நீட்சே “கடவுள் இறந்துவிட்டார்” என்று பிரகடனம் செய்ததன் மூலம், தெய்வீகக் கட்டளைகளுக்குப் பதில் மனிதனே தனக்கான விழுமியங்களைத் தானே உருவாக்க வேண்டும் என்று கூறினார். ரேண்ட் இதனை ஒரு படி மேலே கொண்டு சென்று, ‘தியாகம்’ என்பதை ஒரு தீமையாகவே வரையறுத்தார். நீட்சேயின் அதிமனிதன் எப்படித் தனது சொந்த மகிழ்ச்சிக்காகவும் மேன்மைக்காகவும் வாழ்கிறானோ, அதேபோலவே ரேண்டின் நாயகர்களும் குறிப்பாக ‘தி ஃபவுண்டன்ஹெட்’ நாவலின் ஹோவர்ட் ரோர்க் சமூகத்தின் எதிர்பார்ப்புகளைத் தூக்கியெறிந்துவிட்டுத் தங்கள் இலட்சியத்திற்காக மட்டுமே வாழ்பவர்களாகச் சித்தரிக்கப்பட்டனர். இருப்பினும், நீட்சே தனது அதிமனிதனை பெரும்பாலும் ஒரு போர்வீரன் அல்லது ஒரு மாபெரும் அரசியல் தலைவனைப் போலச் சித்தரித்தார். ஆனால் ரேண்ட் அந்த அதிமனிதனை ஒரு படைப்பாளியாக உருமாற்றினார். ஒரு கட்டடக்கலைஞன், ஒரு கண்டுபிடிப்பாளன் அல்லது ஒரு சிந்தனையாளன் இவர்களே ரேண்டின் பார்வையில் நீட்சே சொன்ன அதிமனிதர்கள். இவர்கள் உலகை ஆள விரும்புவதில்லை. மாறாக, உலகுக்குத் தங்களைப் பணிய வைக்க விடாமல் தங்களைத் தாங்களே ஆள்பவர்கள்.
ரேண்ட் நீட்சேயிடமிருந்து பிரிந்த இடம் மிக முக்கியமானது; அதுவே புறநிலைவாதம் எனும் அவரது சொந்த தத்துவத்தின் பிறப்பிடமாக அமைந்தது. நீட்சே மனிதனின் “அதிகார வேட்கை” (Will to Power) மற்றும் உள்ளுணர்வால் உந்தப்படும் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்தார். ஆனால் ரேண்ட், உணர்ச்சிகளை விட “பகுத்தறிவு” மட்டுமே ஒரு அதிமனிதனை வழிநடத்த வேண்டும் என்று கூறினார். “ஒருவன் மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்துவது நீட்சேயின் கொள்கை; ஆனால் ஒருவன் மற்றவர்களிடமிருந்து சுதந்திரமாகத் தனது அறிவைப் பயன்படுத்துவது எனது கொள்கை” என்று ரேண்ட் விளக்கினார். இதனால் பிற்காலத்தில் அவர் நீட்சேயை ஒரு “மறைபொருளாளர்” என்று கூறி விமர்சித்தார். நீட்சேயின் அதிமனிதன் அதிகாரத்தின் மூலம் மற்றவர்களை அடக்க நினைக்கலாம், ஆனால் ரேண்டின் அதிமனிதன் எவருக்கும் எஜமானனாக இருக்க விரும்புவதில்லை, அதே சமயம் எவருக்கும் அடிமையாகவும் இருக்க மாட்டான்.

ரேண்டின் முதல் நாவலான ‘We the living’ மற்றும் ‘The Fountain Head’ ஆகியவற்றின் ஆரம்பப் பிரதிகளை வாசித்தால், அதில் நீட்சேயின் கவித்துவமான ஆக்ரோஷத்தை இன்றும் காண முடியும். அவரது நாயகன் ஹோவர்ட் ரோர்க் நீதிமன்றத்தில் ஆற்றும் உரையில் தென்படும் அந்தச் சமரசமற்ற உறுதி, நீட்சேயின் ‘ஸரதுஸ்ட்ரா’ பேசும் மொழியைப் போன்றே இருக்கும். “மனிதன் ஒரு பாலம், அவன் ஒரு இலக்கல்ல” என்ற நீட்சேயின் வரிகளுக்கு உயிர் கொடுப்பது போலவே ரேண்டின் கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஐன் ரேண்டின் தத்துவக் கோட்பாடு பகுத்தறிவு என்ற கற்களால் கட்டப்பட்டது என்றாலும், அதன் அஸ்திவாரத்தில் நீட்சேவின் ‘தனிமனித மேன்மை’ எனும் அஸ்திவாரம் இன்றும் வலுவாக உள்ளது. நீட்சே ஒரு மாபெரும் கலகக்காரனாகத் தனிமனிதனைச் சுட்டிக்காட்டினார், ரேண்ட் அந்தத் தனிமனிதனை பொருளாதாரச் சக்தியாக உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
இவ்வாறு நீட்சேயின் தத்துவத்தால் உந்தப்பட்டு, பின்னர் அதிலிருந்து விலகித் தனக்கான ‘பகுத்தறிவுச் சுயநலம்’ எனும் பாதையை வகுத்துக் கொண்ட ரேண்ட், நவீன உலகிற்கு ஒரு புதிய ஒழுங்கை முன்வைத்தார். தனிமனிதனின் அறிவுத்திறனும் உழைப்பும் எவருக்கும் அடகு வைக்கப்படக் கூடாது என்ற அவரது பிடிவாதம், நீட்சேயின் அதிமனிதக் கோட்பாட்டை ஒரு நடைமுறைப் பொருளாதார மற்றும் அறவியல் கோட்பாடாக மாற்றியது. இன்று நாம் காணும் தனிமனித சுதந்திரப் போராட்டங்களின் பின்னணியில், நீட்சே விதைத்த கலகமும் ரேண்ட் கட்டமைத்த பகுத்தறிவும் இணைந்தே பயணிக்கின்றன.
ஒரு மனிதன் தனது உழைப்பின் பலனை அனுபவிக்க முடியாவிட்டால், அங்கு மனித மாண்பிற்கு இடமில்லை. இதனை அவர் பின்வரும் தர்க்கங்களின் அடிப்படையில் விளக்கினார்:
- மனிதன் தனது அறிவு, படைப்பாற்றல் மற்றும் உடல் உழைப்பைச் செலுத்தி ஒன்றை உருவாக்கும்போது, அதன் பலன் அவருக்கே சொந்தம் என்பது அடிப்படை அறம்.
- அரசாங்கமோ அல்லது சமூகமோ அந்த உழைப்பின் பலனை வலுக்கட்டாயமாகப் பறித்தால், அது அந்த மனிதனை ஒரு அடிமையாக நடத்துவதாகும். அவனது வாழ்வின் நேரமும் உழைப்பும் அவனுக்காக அல்லாமல் மற்றவர்களுக்காகப் பயன்படுத்தப்படுவது குற்றம்.
- மனிதன் தனது வாழ்விற்குத் தானே எஜமானனாக இருப்பதில்தான் மாண்பு அடங்கியிருக்கிறது. தனது இலக்குகளையும் தேர்வுகளையும் சுதந்திரமாக முடிவு செய்வதே உண்மையான விடுதலை.
- ஒருவனது முடிவுகளுக்கான பொறுப்பும், அதன் பலன்களும் பிரிக்க முடியாதவை. படைப்பாளியை அவனது படைப்பின் பலனிலிருந்து பிரிப்பது மனிதத் தன்மையையே மறுப்பதாகும்.
இவ்வாறு, சோவியத் ரஷ்யாவில் ஒரு இளம் பெண் சந்தித்த அநீதி, பிற்காலத்தில் அமெரிக்காவின் தத்துவக் கொள்கையாக உருவெடுத்தது. தனிமனித உரிமைகள், சுதந்திரச் சந்தை முதலாளித்துவம் மற்றும் பகுத்தறிவு சார்ந்த சுயநலம் ஆகியவற்றை உள்ளடக்கிய அவரது புறநிலைவாத தத்துவம் பிறந்தது. ஐன் ரேண்ட் தனது தத்துவத்தை ஒரு முழுமையான வாழ்க்கை முறையாகக் கட்டமைத்தார். இதனை அவர் “பூமியில் வாழ்வதற்கான தத்துவம்” என்று அழைத்தார். மேற்கத்திய தத்துவத்தின் முக்கியமான நான்கு தூண்களும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டவை, ஒன்றின் தர்க்க ரீதியான முடிவே அடுத்ததாக அமைகிறது.
- ரேண்டின் மெய்யியல் பார்வையில், எதார்த்தம் என்பது ஒரு புறநிலை உண்மை. நாம் எதனை விரும்புகிறோம் அல்லது எதனைப் பற்றிப் பயப்படுகிறோம் என்பது முக்கியமல்ல, எதார்த்தம் என்பது அதுவாகவே இருக்கிறது. இதனை அவர் “இருப்பு என்பது இருப்பதே” (Existence exists) மற்றும் A is A என்ற அரிஸ்டாட்டிலின் தர்க்க விதியின் மூலம் விளக்கினார். உலகம் என்பது நமது உணர்வுகளால் மாற்றப்பட முடியாத ஒன்று, உண்மைகள் என்பவை நம் விருப்பங்களுக்கு அப்பாற்பட்டவை. இயற்கையை நாம் அதன் விதிகளுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் மட்டுமே வெல்ல முடியும். எனவே, ஒருவன் உண்மையை உணர வேண்டுமானால், அவன் உலகை அது இருக்கும் வண்ணமே பார்க்க வேண்டும், மாயையிலோ அல்லது கற்பனையிலோ வாழக் கூடாது.
- அறிவாராய்ச்சியியல் என்பது அறிவைப் பெறும் முறையைப் பற்றியது. உலகம் புறநிலையானது என்றால், அந்த உண்மையை நாம் எப்படி அறிவது? பகுத்தறிவு மட்டுமே அதற்கான ஒரே வழி என்கிறார் ரேண்ட். அறிவு என்பது உணர்ச்சிகளால் அல்லது உள்ளுணர்வால் வருவதல்ல; மாறாக, நமது புலன்கள் வழங்கும் தரவுகளைப் பகுத்தறிவின் மூலம் ஒருங்கிணைப்பதன் மூலம் கிடைப்பதே அறிவு. உணர்ச்சிகள் என்பவை அறிவாற்றலுக்கான கருவிகள் அல்ல; அவை நமது மதிப்பீடுகளின் விளைவுகள் மட்டுமே. பகுத்தறிவை ஒருவன் கைவிடும்போது, அவன் எதார்த்தத்துடனான தொடர்பை இழக்கிறான். எனவே, புறவயவாதத்தின் படி, மனிதனின் அடிப்படை வாழ்வாதாரக் கருவியே அவனது பகுத்தறிவுதான்.
- அறவியல் என்பது பகுத்தறிவு சார்ந்த சுயநலத்தை முன்னிறுத்துகிறது. மனிதன் தனது சொந்த வாழ்க்கையையே தனது உயர்ந்த தார்மீக இலக்காகக் கொள்ள வேண்டும். ஒருவன் மற்றவர்களுக்காகத் தன்னைத் தியாகம் செய்ய வேண்டிய அவசியமில்லை, அதே சமயம் மற்றவர்களைத் தனக்காகத் தியாகம் செய்யுமாறு கோரவும் கூடாது. “சுயநலம்” என்பதை ரேண்ட் ஒரு நற்பண்பாகவே பார்த்தார்; ஆனால் அது பிறரைச் சுரண்டும் பேராசை அல்ல, மாறாகத் தனது சொந்த மகிழ்ச்சியையும் மேன்மையையும் அடைவதற்கான தார்மீக உரிமை. ஒவ்வொரு மனிதனும் தனக்குள்ளேயே ஒரு முடிவாக இருக்க வேண்டும்; அவன் மற்றவர்களின் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் கருவியாக இருக்கக் கூடாது.
- அரசியல் என்பது இந்தத் கொள்கைகளின் சமூகப் பயன்பாடாகும். தனிமனித உரிமைகளை, குறிப்பாகச் சொத்து உரிமைகளை முழுமையாக மதிக்கும் ஒரு சமூக அமைப்பையே ரேண்ட் ஆதரித்தார். இதுவே “கட்டுப்பாடற்ற முதலாளித்துவம்” (Laissez-faire Capitalism). இந்த அமைப்பில், அரசாங்கத்தின் ஒரே பணி தனிமனிதர்களை வன்முறையிலிருந்து பாதுகாப்பது மட்டுமே. அரசாங்கம் பொருளாதாரத்திலோ அல்லது தனிமனித விருப்பங்களிலோ தலையிடக் கூடாது. மனிதர்களுக்கிடையிலான அனைத்து உறவுகளும் “சுயவிருப்பத்தின் அடிப்படையிலான வர்த்தகமாக” இருக்க வேண்டும். இதில் ஒருவன் தனது மதிப்பிற்கு ஈடாக மற்றொரு மதிப்பை வழங்குகிறான். இத்தகைய சுதந்திரச் சந்தையே மனிதனின் பகுத்தறிவுக்கும் உழைப்பிற்கும் மதிப்பளிக்கும் ஒரே தார்மீக அமைப்பாகும்.
இந்த நான்கு தூண்களும் இணைந்து ஒரு முழுமையான தத்துவத்தை உருவாக்குகின்றன. உலகம் உண்மையானது (மெய்யியல்), அதை நாம் அறிவால் புரிந்துகொள்கிறோம் (அறிவாராய்ச்சியியல்), அந்த அறிவின்படி நமது வளர்ச்சிக்காக வாழ்கிறோம் (அறவியல்), அத்தகைய வாழ்க்கையைச் சுதந்திரமாக வாழ அனுமதிக்கும் சமூகத்தை உருவாக்குகிறோம் (அரசியல்). இந்தச் சங்கிலித் தொடரே ஐன் ரேண்டின் புறவயவாதத்தின் சாரமாகும்.
2
ஐன் ரேண்டின் பெண்ணியம் என்பது மரபுரீதியான பெண்ணியக் கோட்பாடுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. அவர் தனது வாழ்நாளில் அதிகாரப்பூர்வ “பெண்ணிய இயக்கங்களை” கடுமையாக எதிர்த்தார். அதற்குக் காரணம், அத்தகைய இயக்கங்கள் பெண்களை ஒரு தனிப்பட்ட சக்தியாகப் பார்க்காமல், “கூட்டு அடையாளமாக” அல்லது பாதிக்கப்பட்டவர்களின் குழுவாகச் சித்தரிக்கின்றன என்று அவர் கருதினார். ரேண்டின் பார்வையில் ஒரு பெண்ணின் அடிப்படை அடையாளம் அவள் பெண் என்பதில் இல்லை, மாறாக அவள் ஒரு ‘தனிமனிதன்’ என்பதிலேயே இருக்கிறது. அவரது நாவல்களில் வரும் பெண் கதாபாத்திரங்கள் எவருக்கும் சளைத்தவர்கள் அல்ல, அவர்கள் ஆண்களுக்கு இணையான அறிவுத்திறனும், அதைவிடக் கூடுதலான மன உறுதியும் கொண்டவர்களாகச் சித்தரிக்கப்பட்டனர். அவர்கள் ஆண்களைச் சார்ந்து இருப்பதில்லை; மாறாக, தங்கள் சொந்தத் தகுதியினாலும் உழைப்பினாலும் உலகை எதிர்கொள்கின்றனர்.

அவரது கதாநாயகிகள் குறிப்பாக ‘தி ஃபவுண்டன்ஹெட்‘ நாவலின் டொமினிக் பிரான்கான் மற்றும் ‘அட்லஸ் ஷ்ரக்‘ நாவலின் டாக்னி டேகர்ட் தங்கள் உடலின் மீதும் மனதின் மீதும் முழுமையான அதிகாரம் கொண்டவர்கள். ஒரு பெண் தனது லட்சியத்திற்காகவோ அல்லது வெற்றிக்காகவோ எதையும் தியாகம் செய்யத் தேவையில்லை என்ற அவரது கருத்து, அந்தக்கால அமெரிக்கச் சமூகக் கட்டமைப்பையே கேள்விக்குளாகியது. குடும்பம், குழந்தைகள் அல்லது இல்லறம் மட்டுமே ஒரு பெண்ணின் உலகம் என்ற பிம்பத்தை அவர் உடைத்தெறிந்தார். டாக்னி டேகர்ட் போன்ற கதாபாத்திரங்கள் மாபெரும் ரயில்வே நிறுவனத்தை வழிநடத்தும் திறமை படைத்தவர்களாகவும், உணர்ச்சிகளை விடத் தர்க்கத்திற்கும் செயல்திறனுக்கும் முக்கியத்துவம் அளிப்பவர்களாகவும் காட்டப்பட்டனர். அவர்கள் காதலிக்கும்போது கூட, ஒரு அடிமையாகவோ அல்லது பலவீனமானவராகவோ இல்லாமல், தங்களுக்கு இணையான அறிவுத்திறன் கொண்ட ஒரு அறிவுஜீவியை மட்டுமே தேர்ந்தெடுக்கின்றனர்.
ரேண்டின் பெண்ணியம் என்பது “பாலின அடையாளத்தைத் தாண்டிய தனிமனித அடையாளம்” ஆகும். ஒரு பெண்ணின் மதிப்பு அவள் மற்றவர்களுக்குச் செய்யும் தியாகத்திலோ அல்லது அவளது மென்மையிலோ இல்லை; மாறாக அவளது அறிவுத்திறன் மற்றும் உற்பத்தித் திறனிலேயே இருக்கிறது என்று அவர் வாதிட்டார். “பெண்களுக்கு உரிமைகள் தேவையில்லை, மனிதர்களுக்குத்தான் உரிமைகள் தேவை” என்பது அவரது நிலைப்பாடு. ஒரு பெண் தன்னை ஒரு பலவீனமானவளாகக் கருதிச் சலுகைகளைக் கோருவதை ரேண்ட் வெறுத்தார். அதற்குப் பதிலாக, ஒரு பெண் தனது மேன்மையின் மூலம் உலகை வெல்ல வேண்டும் என்று அவர் வாதிட்டார். சமூகம் பெண்களுக்கு விதித்திருந்த தார்மீகக் கட்டுப்பாடுகளை நிராகரித்து, ஒரு பெண் தனது சுயவிருப்பத்தின்படி தன் வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்ளும் சுதந்திரத்தை அவர் கொண்டாடினார்.
இந்த தத்துவத்தின் ஆழமான பகுதி என்னவென்றால், ரேண்ட் பெண்ணியத்தைப் பொருளாதாரச் சுதந்திரத்துடன் இணைத்துப் பார்த்தார். தனது சொந்த உழைப்பில் ஈட்டும் வருமானம் ஒரு பெண்ணுக்கு அளிக்கும் வலுவை அவர் வலியுறுத்தினார். அவரின் we the living நாவலுக்காக அவர் $1300 காப்புரிமையை வாங்கியது அவரை பொருளாதாரரீதியாக சுதந்திரமாகவே செயல்படவைத்தது. அவரது நாவல்களில் பெண்கள் அலுவலகங்களில், தொழிற்சாலைகளில் மற்றும் மேலாண்மைப் பொறுப்புகளில் ஆண்களுக்குச் சவால் விடுபவர்களாகவே வலம் வந்தனர். இது வெறும் கற்பனையல்ல. ரேண்ட் தனது சொந்த வாழ்க்கையிலும் ஒரு குடியேறிய பெண்ணாக ஹாலிவுட் முதல் நியூயார்க் வரை போராடி வென்றதன் எதிரொலியே. ஆம் ரேண்டின் பெண்ணியம் என்பது ஒரு பெண் ஆணுக்கு எதிராகப் போராடுவதல்ல, மாறாகத் தான் ஒரு முழுமையான மனிதர் என்பதைத் தனது சாதனைகள் மூலம் உலகுக்கு மெய்ப்பிப்பதாகும்.
ரேண்டின் பெண்ணியம் என்பது ஒரு பெண் ஆணுக்கு எதிராகப் போராடுவதல்ல, மாறாகத் தான் ஒரு முழுமையான மனிதர் என்பதைத் தனது சாதனைகள் மூலம் உலகுக்கு மெய்ப்பிப்பதாகும்.
3
எந்தவொரு தத்துவத்தையும் போலவே, ஐன் ரேண்டின் கோட்பாடுகளும் தீவிரமான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன. முதலாவது ‘இருப்பதை’, ‘இருக்க வேண்டியதாக’ மாற்றுதல் (The Is-Ought Problem) என்பதாகும். புகழ்பெற்ற தத்துவஞானி டேவிட் ஹியூம் முன்வைத்த இந்த வாதத்தின்படி, ஒரு உயிரியல் அல்லது எதார்த்த உண்மையை (Is), ஒரு விதியாக (Ought) நேரடியாக மாற்ற முடியாது. மனிதன் இயற்கையிலேயே உயிர்வாழத் துடிக்கிறான் என்பது ஒரு யதார்த்தமான உண்மை. ஆனால், அந்த உண்மையிலிருந்து “அவன் சுயநலமாகத்தான் இருக்க வேண்டும்” அல்லது “சுயநலமே அறம்” என்ற கட்டளையை உருவாக்குவது தருக்க ரீதியாகத் தவறு. மனிதன் உயிர்வாழ விரும்புகிறான் என்பதற்கும், அவன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது. இந்த இடைவெளியை ரேண்ட் தனது தர்க்கத்தில் சரியாக நிரப்பவில்லை என்பதே விமர்சகர்களின் முதன்மை வாதம்.

அடுத்ததாக, சமூகம் என்ற கட்டமைப்பை ரேண்ட் முற்றிலுமாக மறுத்தது ஒரு பெரிய தத்துவப் பிழையாகப் பார்க்கப்படுகிறது. ரேண்ட் “சமூகம்” என்ற ஒன்று இல்லவே இல்லை, தனிமனிதர்கள் மட்டும்தான் உள்ளனர் என்று வாதிட்டார். ஆனால், மனித நாகரிகத்தின் வளர்ச்சியே பரஸ்பர உதவி மற்றும் மொழியால் உருவானது என்பதை அவர் புறக்கணித்தார். ஒரு மனிதன் தனித்துச் சிந்திக்கும் ஆற்றலைப் பெறுவதற்கே அவனது வளர்ப்புச் சூழலும் சமூகமும் அத்தியாவசியமானது. ஒரு குழந்தை பிறந்தவுடன் தானாகவே சிந்திப்பதில்லை; அது சமூகத்தால் வழங்கப்பட்ட மொழி மற்றும் அறிவின் மூலமே உலகைப் புரிந்துகொள்கிறது. மனிதர்களுக்கிடையிலான இந்த ஆழமான சார்பு நிலையை ரேண்ட் தனது தத்துவத்தில் கருத்தில் கொள்ளவில்லை. நாம் பயன்படுத்தும் சாலைகள், கண்டுபிடிப்புகள், மருத்துவ முறைகள் என அனைத்தும் பல தலைமுறை மனிதர்களின் கூட்டு உழைப்பால் உருவானவை. இவற்றைத் தனிமனிதச் சாதனையாக மட்டுமே பார்ப்பது எதார்த்தத்திற்குப் புறம்பானது.
மிக முக்கியமான விமர்சனம் கருணை மற்றும் அறச்சிக்கல் (The Problem of Altruism and Vulnerability) சார்ந்தது. ரேண்டின் தத்துவத்தில் நோயுற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மற்றும் ஏழைகளுக்குப் பெரிய இடமில்லை. அவரது தத்துவம் திறமையானவர்களை மட்டுமே கொண்டாடுகிறது. ஒருவன் திறமையற்றவன் அல்லது உற்பத்தி செய்ய முடியாதவன் என்றால் அவனது தார்மீக நிலை என்ன? அவன் அழிந்துதான் போக வேண்டுமா? என்ற கேள்விக்கு ரேண்டிடம் திருப்திகரமான பதிலில்லை. ஒரு நாகரிகச் சமூகம் என்பது பலவீனமானவர்களை எப்படிக் கையாள்கிறது என்பதில்தான் அதன் மேன்மை அடங்கியிருக்கிறது. ஆனால் ரேண்டின் பார்வையில், பலவீனமானவர்களுக்கு உதவும் சமூகப் பாதுகாப்பு என்பது திறமையானவர்களைச் சுரண்டும் ஒரு செயலாகவே பார்க்கப்பட்டது. இது மனிதநேயமற்ற அணுகுமுறை என்று பல தத்துவவாதிகள் வாதிடுகின்றனர்.
இறுதியாக, ரேண்ட் அதிகார ஏற்றத்தாழ்வுகளைப் புறக்கணித்தமை. அவர் முதலாளித்துவத்தைச் சுதந்திரச் சந்தையாகப் பார்த்தார். ஆனால் அந்தச் சந்தையில் ஏற்கனவே பலமான நிலையில் இருப்பவர்கள் பலவீனமானவர்களைச் சுரண்டுவதைப் பற்றி அவர் பேசவில்லை. “சுயவிருப்பத்தின் அடிப்படையிலான வர்த்தகம்” என்பது சமமான அதிகாரம் கொண்டவர்களுக்கு இடையே மட்டுமே சாத்தியம். தொழிலாளியும், கோடிக்கணக்கில் சொத்து வைத்திருக்கும் ஒரு முதலாளியும் சமமான நிலையில் நின்று வர்த்தகம் செய்ய முடியாது. இத்தகைய அதிகார அநீதிகளை ரேண்ட் சுதந்திரம் என்ற போர்வையில் மறைத்துவிட்டார் என்ற விமர்சனம் இன்றும் வலுவாக உள்ளது. அவரது தத்துவம் ஒரு லட்சியவாத உலகிற்குப் பொருந்தலாம், ஆனால் சிக்கலான எதார்த்த உலகிற்கு அது முழுமையாகப் பொருந்தவில்லை.
அட்லஸ் ஷ்ரேக்டு நாவலில் ஜான் கால்ட் பின்வரும் உரையை ஆற்றுகிறான். “உங்களிடம் அறிவு இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள், ஆனால் உங்களைச் சுற்றியுள்ள அழிவு உங்கள் அறிவின்மையால் அல்ல, உங்கள் தார்மீகத் தேர்வால் உருவானது. மனிதனின் அடிப்படை வாழ்வாதாரக் கருவியே அவனது பகுத்தறிவு அதனை மறுக்கும் எந்தவொரு தார்மீகமும் மரணத்தை நோக்கிய பயணமே என்றும் அவன் வாதிடுகிறான். தியாகம் என்பது ஒரு நற்பண்பு அல்ல, அது திறமையைச் சாகடிக்கும் ஒரு ஆயுதம் என்றும், ஒரு மனிதன் மற்றவர்களின் தேவைகளுக்காகத் தன்னை அழித்துக் கொள்வதை நிறுத்தும் வரை இந்த உலகம் சீர்படாது. எனது வாழ்வின் மீதும் அதன் மீதான எனது காதலின் மீதும் நான் ஆணையிட்டுச் சொல்கிறேன், நான் ஒருபோதும் மற்றவர்களுக்காக வாழமாட்டேன், மற்றவர்களை எனக்காக வாழுமாறு கோரவும் மாட்டேன்” என்ற அவனது உறுதிமொழி, தனிமனிதச் சுதந்திரத்தின் குரலாகவே ஒலிக்கிறது.
இந்த உரையின் இரண்டாம் பகுதியில், ஜான் கால்ட் ஒரு புதிய பகுத்தறிவுச் சமூகம் உருவாவதற்கான அறைகூவலை விடுக்கிறான். அதிகாரம் மற்றும் கட்டாயத்தின் மூலம் மற்றவர்களைப் பணிய வைக்கும் ஒட்டுண்ணி முறையைத் தூக்கியெறிந்துவிட்டு, திறமைக்கும் மதிப்பிற்கும் மதிப்பளிக்கும் ஒரு அமைப்பைக் கோருகிறான். யாரையும் பலவந்தப்படுத்தாதீர்கள், எவரிடமிருந்தும் எதனையும் தானமாகப் பெறாதீர்கள்; உங்கள் உழைப்பிற்கு ஈடாக மட்டுமே எதனையும் பெற்றுக்கொள்ளுங்கள் என்பது அவனது பொருளாதார விதியாக இருக்கிறது. மனிதனின் மனமே அவனது மிகப்பெரிய சொத்து என்றும், அந்த மனதைச் சங்கிலிகளால் பிணைக்கும் அரசாங்கமும் மதங்களும் மனித நாகரிகத்தின் எதிரிகள் என்றும் அவன் பிரகடனம் செய்கிறான். இறுதியாக, உலகத்தை அதன் அச்சிலிருந்து கழற்றாதீர்கள், மாறாக உங்களைச் சுற்றியுள்ள பொய்யான தியாகத் திரைகளை விலக்கிவிட்டு உங்கள் சுயத்தின் ஒளியில் வாழுங்கள் என்று கூறி, ஒரு தனிமனிதனின் அகங்காரமே இந்த உலகத்தைத் தாங்கிப் பிடிக்கும் ‘அட்லஸ்’ என்பதை உறுதிப்படுத்துகிறான்.
அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகளாவிய ஆதிக்கம் ஆகியவற்றில் ஐன் ரேண்டின் தத்துவங்கள் ஆற்றிய பங்கு மிக முக்கியமானது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய அமெரிக்காவில், தனிமனித உரிமைகள் மற்றும் சொத்துரிமை மீதான அதீத நம்பிக்கை ஏற்படுவதற்கு ரேண்டின் புறநிலைவாதம் தூண்டுகோலாக அமைந்தது. அமெரிக்கா ஒரு தொழில்முறை வல்லரசாக உருவெடுத்த காலத்தில், ரேண்ட் முன்வைத்த பகுத்தறிவுச் சுயநலம் என்ற கொள்கை, தொழிலதிபர்களை வெறும் செல்வந்தர்களாகப் பார்க்காமல், சமூகத்தை முன்னோக்கி நகர்த்தும் படைப்பாளிகளாக அடையாளப்படுத்தியது. இது கண்டுபிடிப்பாளர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் ஒரு புதிய உத்வேகத்தை அளித்தது. குறிப்பாக, எவ்வித அரசாங்கத் தலையீடும் இல்லாத சுதந்திரச் சந்தை (Laissez-faire Capitalism) மட்டுமே மனிதனின் அறிவுத்திறனை முழுமையாக வெளிக்கொணரும் என்ற அவரது வாதம், அமெரிக்காவின் வரிவிதிப்பு மற்றும் தொழில் கொள்கைகளில் பெரும் செல்வாக்கு செலுத்தியது. அலன் கிரீன்ஸ்பான் போன்ற அமெரிக்காவின் மிக உயரிய நிதித்துறைப் பொறுப்புகளில் இருந்தவர்கள் ரேண்டின் நெருங்கிய சீடர்களாக இருந்தது, அமெரிக்கப் பொருளாதாரத்தை அவரது தத்துவப் பாதையில் கொண்டு செல்ல உதவியது.

தனிமனிதன் தன் உழைப்பால் ஈட்டும் லாபம் அவனுக்கே சொந்தம் என்பதும், “American Dream” தத்துவார்த்த அடிப்படையாக மாறியது. புதிய கண்டுபிடிப்புகள் மீதான முதலீட்டை அதிகரித்ததுடன், உலகிலேயே தொழில் தொடங்குவதற்கு மிகவும் உகந்த நாடாக அமெரிக்காவை மாற்றியது. சிலிக்கான் வேலியின் எழுச்சிக்கு விதை போட்ட ஸ்டீவ் ஜாப்ஸ் முதல் எலான் மஸ்க் வரை, பல ஆளுமைகளின் தொழில் முனைவு வேகத்திற்குப் பின்னால் “தனிமனிதன் ஒரு அரசன்” என்ற ரேண்டின் சிந்தனை அடித்தளமிட்டது. சிலிக்கான் வேலியின் தொழிலதிபர்கள் தங்களை உலகைப் படைக்கும் சிற்பிகளாகவும், அரசாங்கத்தைத் தடையாகக் கருதுவதற்கும் ரேண்டின் கருத்துக்களே முதன்மைக் காரணம். இருப்பினும், 2008 பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு, “கட்டுப்பாடற்ற முதலாளித்துவம்” ஒரு தேசத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்தானது என்ற விமர்சனம் எழுந்தபோது, ரேண்டின் தத்துவமும் கடுமையான விவாதத்திற்குள்ளானது. சந்தை தன்னைத்தானே சரிசெய்துகொள்ளும் என்ற அவரது அசைக்க முடியாத நம்பிக்கை, நிதி நெருக்கடியின் போது கேள்விக்குறியானாலும், தனிமனித சுதந்திரம் மற்றும் தொழில் முனைவு என்று வரும்போது இன்றும் ஐன் ரேண்டே அமெரிக்காவின் முதன்மையான தத்துவ வழிகாட்டியாகத் திகழ்கிறார்.
*
விவேக் சுப்ரமணியன்: எழுத்தாளர். நீலியில் இவர் எழுதும் முதல் கட்டுரை. அமெரிக்காவின் Spillwords தளத்தில் இவரின் நான்கு கதைகள் பிரசுரமாகியுள்ளன; தமிழிலும் ஆங்கிலத்திலும் அறிவியல் கதைகளும் கட்டுரைகளும் தொடர்ந்து எழுதி வருகிறார். அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் பொறியாளராகப் பணியாற்றுகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு நாவல் வரிசை வழியாகத் தன் இலக்கியப் பார்வையை விரித்துக் கொண்டார். ஐரோப்பிய-அமெரிக்க இலக்கிய வாசிப்பும், கீழை-மேலை இரண்டு தத்துவ மரபுகளும் தனது சிந்தனைத் தளத்தை வடிவமைப்பவை என்கிறார். பீத்தோவன், சூபர்ட், ஷுமன், பாக் ஆகியோரின் இசைக்கோவைகளிலும், ஆல்பபெர்ட் டூரரின் ஓவிய நுட்பங்களின் மீதும் ஆர்வம் கொண்டவர். மறுமலர்ச்சிக் காலக் கலைகளின் வரலாற்றுச் செழுமையைத் தேடிப் பயணிப்பதையும், சமகால அறிவுசார் மரபுகளுடன் உரையாடுவதையும் தேவையாகக் கருதுபவர்.
*
மேற்கோள் நூல்கள்:
- Goddess of Market by Jennifer Burns
- Atlas Shrugged
- The Fountainhead
- The Ayan Rand Philosophy Who Needs It – Vol 1
- Peikoff, L. Objectivism: The Philosophy of Ayn Rand
*
மேலதிக வாசிப்புக்கு:
