அறிவியல் புகாத தமிழ்ச்சமூகத்தின் அழகியல் – சு.வேணுகோபால்

(நிலாக்கள் தூர தூரமாக நாவலை முன்வைத்து)

பாரததேவி

இதுவரை தமிழில் எழுதப்பட்ட தன் வரலாற்று நூலின் வரையறைக்குள் அடங்காதது ‘நிலாக்கள் தூர தூரமாக’. தமிழகத்து அரசியல் பெரியவர்களின் தன் வரலாற்று நூல்கள் நம்மிடம் நிறைய உள்ளன. அவற்றில் நிலக்காட்சிகள் இல்லை. தமிழ்ச்சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் கிராம, நகர கதையாடல்கள் இல்லை. பிரபஞ்சம் தழுவிய பார்வை இல்லை. மேன்மையும் கீழ்மையுமாய் பிரிந்து செல்லும் பண்பாட்டு முறைமைகள் இல்லை. கிட்டத்தட்ட ஒற்றைக் குரலை உயர்த்திப் பிடிக்கும் பயணம் மட்டுமே காணக்கிடக்கும். இதை உலக தன்வரலாற்று நூல்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்கலாம். பாரத தேவி எழுதியிருக்கும் ‘நிலாக்கள் தூர தூரமாக’ நூல் தன் வரலாற்று பிடியிலிருந்து அறுத்துக்கொண்டு – மேலெழுந்து – சமூகத்தின் நாலா பக்கங்களிலும் விரிகிறது. புதினத்தின் எல்லாவித சாத்தியப்பாடுகளையும் அரவணைத்துக்கொள்கிறது. ஒரு படைப்பாளிக்கே உரித்ததான மனித சமூகத்தின் சாராம்சத் தேடலை நோக்கமாகக்கொண்டு பாரததேவி இயங்கவில்லை. ஓயாது தன் வளர்பருவத்தில் வந்து தாக்கிய அனுபவங்களை முன் எடுத்து வைத்திருக்கிறார். அந்த அனுபவங்களிலிருந்து நாம் மனிதர்களின் ஆழ்மனங்களை உணரமுடிகிறது.

பாரததேவியின் இவ்வெழுத்தில் மூன்று நான்கு உலகங்களுக்குள் நாம் சென்று பயணிக்கும்படியாக அமைந்திருக்கிறது. ஒன்று பாரததேவியின் நேரடியான அனுபவங்கள். இரண்டு கேட்டறிந்த அனுபவங்கள். மூன்று தமிழ்ச்சமூகம் உண்டாக்கியிருக்கும் கருத்தியல் புனைவுகள் உண்டாக்கிய அனுபவங்கள். நான்காவதாக நிலவியல் அனுபவங்கள். ஐந்தாவதாக சொல்லக் கூடுமானால் பாரதிதேவியின் கனவுகளும் கற்பனைகளும், முன் சொன்னதுபோல நாவலின் சாத்தியப்பாடுகள், அவை நாவலின் பகுதிகள் என்று உணரப்படாமலேயே வெகு இயல்பாக பின்னிப் பிணைந்து பிறந்திருக்கின்றன. தன் வரலாற்றின் மெல்லிய கீற்றில் கனமான மானுடக்கனிகள் காய்த்துத் தொங்குகின்றன. எனவே இதனை நாவல் என்று குறிப்பிடுவதில் தவறொன்றும் இல்லை எனலாம். தன் வரலாற்று நூலை நாவலாகப் படிக்க அதன் அனுபவம் தருகிறது.

இந்நூலின் மிகப்பெரிய சக்தியாக எனக்குத் தெரிவது தமிழ்ச் சமூகத்தின் அழகியலை மீட்டெடுத்திருப்பதுதான். தமிழ்ப்படைப்புலகிற்கு இவ்வகையான ஓர் அமுதசுரபி இது. உவமைகள், உருவகங்கள், விவரணைகள், காட்சிகள், ஒப்புமைகள், உரையாடல்கள், சொற்கள் என எழுத்துமுறைமைகள் அனைத்தும் தமிழ்மனங்களின் சாராம்சத்திலிருந்து உருவாகி வந்திருக்கின்றன.

ஒவ்வொரு சமூகமும் பல்வேறு அம்சங்களைத் தன்னுள் இணைத்தபடியே இருக்கிறது. இருக்கும். அதே சமயம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒதுக்கி வைக்கப்பட்டவையும் உண்டு. ஒதுக்கி வைக்கப்பட்டவை காலத்தின் நீட்சியில் உள்ளிழுத்துக் கொண்டவையும் உண்டு. தேவையின் பொருட்டு சமூக இணைவுகளை உண்டாக்கிக் கொள்ளும். மார்க்சிய பார்வையில் அது இயங்கியல் தத்துவம். மார்க்ஸ் கண்டுணர்ந்து விளங்க முற்பட்டதற்கு முன் பல நூற்றாண்டுகளாக அவ்வகையான அரவணைப்புகள் நம்மிடம் வலுவாக இருந்திருக்கின்றன. அதே சமயம் சாதி என்ற கருத்தாக்கம் சாதக பாதகங்களையும், ஒடுக்குமுறைகளையும் உண்டாக்கியிருக்கின்றன. இவற்றையெல்லாம் பிணைத்துக் கொண்டே தமிழ்ச் சமூகத்தின் அழகியல் உண்டாகியிருக்கிறது.

பால்குடி மறக்கடிக்கவும் உணவு ஊட்டிப் பழக்கவும் முயலும் போது முதன் முதல் வண்ணாத்தியிடம் சோறுவாங்கி ஊட்டும் பண்பாடு புதினத்தில் மீட்டுணர்த்தப்படுகிறது. ‘ஊர் முழுக்க கஞ்சி வாங்குவதால் எல்லாக் கஞ்சியும் சோறும் ஒன்றாகக் கலந்து இருக்குமாம். அதனால் அவளை ‘இந்தா பேச்சி… எம் புள்ளைக்கு வந்து இம்புட்டு சோறு ஊட்டிட்டுப் போ என்று பச்சைப்பிள்ளைகள் வைத்திருப்பவர்கள் எல்லாம் கூப்பிட அவளுக்கு ஏகக்கிராக்கி. “ஊருக்கு யாராவது புதிதாய் வந்து விட்டால் அவர்களுக்கு ஊர்க்கஞ்சி வேறு, அதோடு யாருமே இல்லாமல் தனிப்பட்டுப்போன உறவுக்காரர்கள் வீட்டிற்கு வந்து கஞ்சி கேட்டு சாப்பிட்டுப் போவார்கள். இதனால் எப்போதும் உரலும் உலக்கையுமாக ஊரில் இடிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும்” மதிப்புமிக்க இவ்வாறான உறவுகள் நாவல் நெடுகிலும் உயிர் பெறுகின்றன. அவ்வுறவுகளுக்கு சில விசமிகள் கசப்பையும் தருவதையும் இங்கு சேர்த்துச் சொல்லிவிட வேண்டும்.

கொத்து, மண்வெட்டி செய்து தர வரும் வேலு சீயான், கிராமத்தில் கடைபோட வந்த இஸ்லாமியருக்கு ஊரே ஒருங்கிணைந்து உதவுதல், பாம்புபிடிப்போனுக்கு, பயத்தை போக்கும் கோடாங்கிக்காரனுக்கு, காலபைரவனுக்கு, இரவுக்குறி சொல்வோனுக்கு, வள்ளுவனுக்கு, மக்கள் தங்கள் கையாலானதை வழங்கிய முறைகளைக் காண்கிறோம். அவர்கள் ஏமாற்றும் வித்தைகளைக் கண்டுபிடித்துத் தண்டனைகளையும் வாங்கித் தருகிறார்கள். பாரததேவி பிரமிப்போடு அணுகி ஏமாற்றத்தோடு மீளும் அனுபவங்களாக இருக்கிறான். இன்று அறிவியல் யுகம் மனிதர்களைத் தனித்தனியாக்கி வெறுமனே நுகர்வோராக மாற்றிவிட்டது. நகரத்தை நோக்கிப் பொருள் வாங்க வருவோராக்கி விட்டது. அன்பை முற்றாகத் துடைத்தெறிந்துவிட்டது. முத்தம் தந்தால்தான் கொத்துக்கணை உடனே செய்துதருவேன் என குழந்தைகளிடம் பிரியத்துடன் கேட்ட வேலு சீயான் இன்று இல்லை. நாவலில் வாழ்கிறார். தாயையோ தகப்பனையோ இழந்த குழந்தைகளை அருகழைத்து அனுதாபத்தோடு தடவிக்கொடுத்த பெரியவர்கள், ‘மயிலுகணக்கா புள்ளைக. ஆனா கடுகு அம்புட்டுக் கூட ராசி இல்லாம கோடி கோடிய அள்ளிட்டு வார அப்பன தொலச்சிட்டு நிக்கீகளே’ என்று கவலைப்படும் பெண்கள். மாங்காய் திருடிய பிள்ளைகளை விரட்டியடிக்கத் தோட்டக் காரனே ‘எவ்வளவு ஆசைப்பட்டீங்களோ’ என்று மறுநாள் அழைத்துத் தரும் தோட்டக்காரன். கோயிலுக்கு வழி தெரியாது நடந்து அலுத்து திகைத்து நின்ற குழந்தைகளை வேற்று ஊர்க்காரர்கள் முகத்தில் பசிக்கலை கண்டு அன்னமிடும் உழைப்பாளிகள், ஓலைச்சுமையைச் சுமக்க முடியாமல் போகும் பெண்ணைக் கண்டு மனசிறங்கி தலைச்சுமை மாற்றி வெகுதூரம் கொண்டு செலுத்திய பிஞ்சு, முகூர்த்த நாட்களில் ஐந்தாறு திருமணங்களை ஒரு சேர நிகழ்த்தி, ஊர் மக்கள் யாரும் சமைக்காதிருக்க செய்து கூடி உண்ட கூட்டம், தைப்பொங்கல் அன்று மருத்துவகுணம் மிக்க இலைதழைகளை பறித்து வந்து பெரிய அண்டாவில் காய்ச்சி (நிலாச்சாறு) ஊர் குழந்தைகளைத் திரட்டி மருந்தூட்டிய கூட்டம்… எல்லாவற்றையும் இன்று தவறவிட்டுவிட்டோம். உறவுகள், ரத்தபந்தங்கள் அந்நியமாகிப் போயின. பணமே உறவுகளைத் தக்கவைக்கும் சக்தியாக ஒடுங்கிப்போய்விட்டது. பேரன்பின் சக்தியைத் தொலைத்து விட்டோம். நரம்புகளாக நம்மிடம் இருந்தவை. மக்கள் உண்டாக்கிய இம் மகத்துவம் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வந்தவை. நவீன மனிதர்களிடம் முற்றாகத் துண்டிக்கப்பட்டு விட்டன. நம் மக்கள் இணைந்து உண்டாக்கிய இம் மகத்துவம் நாவலில் எங்கும் பரவிக்கிடக்கிறது. 

நாட்டுப்புற நம்பிக்கைகளும், சடங்குகளும், அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் புனைவுகளும், தமிழக மக்களுடன் தீராத உறவை பிணைத்து வைத்திருக்கின்றன. தானாடவில்லை யென்றாலும் தன் சதையாடும் என்பது போன்றதொரு ரத்த உறவு அது. பொய் சத்தியங்களுக்கு, திருட்டுக்குக் கடுமையான தண்டனைகள் கிடைக்கும் என்பதாகக் கட்டுக்கதைகளை உருவாக்கி வைத்திருக்கின்றனர். கட்டுக்கதைகளாக நின்றுவிடாமல் அர்த்த மளிக்கும் சக்தியைக் கொண்டிலங்கும்படி செய்திருக்கின்றனர். மனிதனை மேன்மைப்படுத்தவும், தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் உள்ளத்திற்கு ஒரு நெருக்கடியைக் கொடுக்கின்றன. இவ்வகையான புனைவுகள். பகுத்தறிவுக்கு மனநெருக்கடி என்பது இல்லை. வருங்காலத்தில் இப்புனைவுகளுக்கு முக்கியத்துவம் இல்லாமல்தான் போகப்போய்கிறது. ஆனால் மனிதசமூகம் தோன்றியது முதல் இப்புனைவுகள் நேற்றுவரை அர்த்தமளித் திருக்கின்றன. இனி இல்லாது போகும்பட்சத்தில் இப்புனைவுகள் செவ்வியல்தன்மை பெற்று நூல்களில் மட்டும் அடங்கி ஒடுங்கிப்போகும். ஆனால் பணம், அதிகாரம், ஆதிக்கம் இவற்றிற்கு மாற்றாக ஒரு வலுவான எதிர்ப்பினை அளித்து வந்தவை இந்த நம்பிக்கைகளும் புனைவுகள் மட்டுமே. அதனை ஆதிக்கமும் அதிகாரமும் படைத்தவர்கள் தங்களுக்கு சாதகமாக (சாதி ஒடுக்கு முறைக்கு) பயன்படுத்தியிருக்கிறார்கள். இருப்பினும் எளிய மக்களுக்கு உண்மையை மீட்டும் சக்தியாக அவைகளைச் செயலூக்கியாக்கி வெற்றி கண்டிருக்கின்றனர். முக்கியமாகப் பெண்கள் தங்களைச் சாமியாடிகளாக உருவாக்கி ஆணா திக்கத்தைத் தகர்த்திருக்கின்றனர். மண்ணுக்குரிய பெண்ணியத்தை யாரிடமும் இரவல் பெறாமல் பட்டறிவின் துணைகொண்டு உருவாக்கியிருக்கின்றனர். இதனை இந்நாவல் தரவுகளாக முன் வைக்கிறது.

பாரததேவியும் தோழி பாக்கியமும் தையல்கடைக்கு துணி கொடுக்கப் போய்கிறார்கள். அவர் சிடுமூஞ்சிக்காரர். அவரைப் பழிவாங்க நினைக்கின்றனர். அவர் இல்லாத நேரம் பார்த்து கடையில் அடுக்கி வைத்திருந்த இரண்டு துணிகளைத் திருடி ஒளித்து வைக்கின்றனர். இவ்விருவர்கள்தான் திருடியிருக்க முடியும் என்று ஊகித்து சூடம் கொளுத்தி சத்தியம் வாங்குகிறார். பொய்ச் சத்தியம் செய்தால் வயிற்றில் புற்று முளைத்து வாய்வழியே வளர்ந்து கொண்டே வரும் என்று புனைகிறார். குழந்தைகள் நம்பிவிடு கின்றன. பெரும் உளவியல் நெருக்கடிக்கு உள்ளாகின்றனர். அப்போதே வயிறு வலிக்கிற மாதிரி தோன்றுகிறது. ஒருவருக் கொருவர் வயிற்றைத் தடவி கலங்குகின்றனர். இந்த நிகழ்வில் தையற்காரனுக்கு உரிய நியாயம் கிடைக்காமல் தான் போய்கிறது. ஆனால் இம்மாதிரியான வேறு சந்தர்ப்பங்களில் பொய்மை வீழ்ந்து நேர்மைக்கு உரிய மதிப்பு கிடைத்து விட்டிருக்கிறது. தன் நெஞ்சோடு மோதும் நேர்மையை இப்புனைவுகள் உண்டாக்குகின்றன. நல்ல விடை சில சமயம் கிடைக்காமல் போனால்கூட இந்த ஆட்டத்தை பதட்டத்தை உண்டாக்கியது அந்நம்பிக்கையே!

சில சமயம் அப்புனைவுகள் மன மகிழ்ச்சியை மட்டும் தரக்கூடியதாக இருக்கலாம். சுற்றுச்சூழலைக் காப்பாற்ற வேண்டும் என்ற திட்டமிட்ட சிந்தனை இல்லாமலே காக்கக்கூடிய அம்சமாக இருக்கலாம். கற்பனையின் சாத்தியப்பாடுகளை வளர்க்கக்கூடிய தாக இருக்கலாம். கற்பனைகளை உண்மை என நம்பி தேடிப்போய் அடைகிற தோல்விகூட உலகத்தை புரிந்துகொள்ள வைக்கலாம். இந்த அறிவின் செல்வங்களை ஒரு பெண் அப்புனைவின் தருணங்கள் வாய்க்கும் போதெல்லாம் விருப்பத்தோடு நுழைந்து பெறுகிறாள். புத்தகங்களால் அல்லாமல் அனுபவங்களால் புரிந்து தெளிவிடைகிறாள்.

பாம்பு முட்டைகள் என்று தெரியாமல் வீட்டுக்கு எடுத்து வந்ததைக் கண்ட அம்மா, முட்டையின் வாசத்தை முகர்ந்து சாரைப்பாம்பு எடுத்தவர்களின் வீட்டுக்கே வந்துவிடும் என்றதும் திரும்பக்கொண்டுபோய் வைக்கிறாள் சிறுமி. மொட்டை மலையின் உச்சியில் இருக்கும் குகைவழியே சென்றால் அந்தப் பக்கம் வால் முளைத்த மனிதர்கள் இருப்பதாக சொல்லப்பட்ட கதையை நம்பி பயணப்பட்டு தோற்கிறது தோழர் தோழியர்கூட்டம். (குரங்கில் இருந்து மனிதன் பிறந்தான் என்ற டார்வினிய கோட்பாடு அதி தொல்குடி மக்களிடமும் இருந்ததோ என்னவோ) இவ்விடத்தில் இன்னொன்றைச் சொல்லவேண்டும். அறிவியல் யுகம் பாமர ஜனங்களின் கற்பனைத் திறன்களையும் கலைத் திறன்களையும் கருவறுத்துவிட்டது. தொழிற்கூடங்களில் அவை தயாராகின்றன. மகிழ்ச்சியை உண்டாக்கிய, கலைத்திறனை வளர்த்த, சோகத்தைப் பகிர்ந்துகொண்ட, கோவத்தை – ஆதங்கத்தை – பொறாமையை – வஞ்சகத்தைக் கொட்டித்தீர்க்கச் செய்த மனதை சமநிலைபடுத்தி லெகுவாக்கிய கலைகளை அறிவியல் கிள்ளி எடுத்துவிட்டது. விளையாட்டுக்களை பாடல் களை கேலி கிண்டல்களை சினிமா தொலைக்காட்சிகள் உற்பத்தி செய்கின்றன. மண்ணிற்கு உகந்தவை நொறுக்கி ஒதுக்கப்பட்டு மேலைத்தேய அறிவியல் சமூக மனிதர்களின் உற்பத்திகளை ஏற்றுக்கொள்ள நிர்பந்திக்கின்றன. பாமர ஜனங்கள் வாய்ப்பிளந்து நுகர்கிறார்கள். ஜடமாக, உயிரோட்டமான இயக்கத்தைத் தொலைத்துவிட்டு இருக்கிறார்கள்.

சோளத்தட்டையில் ராட்டினம், பனங்காயில்வண்டி, கரம்பை மண்ணில் சொப்புகள் என ஒவ்வொன்றையும் விளைபொருள்களிலிருந்து சாத்தியப்பட்ட கலைகளை உருவாக்கிய குழந்தைகளை நாவலில் காண்கின்றோம். இந்த நாவல் இன்றைய நம் சமூகத்தின் மீதான எதிர்வினைதான். நீங்கள் இழந்துபோன நல்லவை இவை இவை என முன் வைப்பதுபோல் எனக்குப்படுகிறது.

கணையான் சிட்டுக்கு அலைந்த குழந்தைகள் மூன்று நாட்களுக்கு சூரியன் புறப்படாது பூமாதேவி பூமியை கைமாற்றுவதால் என்று சொல்லிய வெளியூர் சாமியாரை நம்பி பயந்திருந்த மக்கள் எப்போதும் போல் மறுநாள் சூரியன் உதிப்பதைக் கண்டு சாமியாரை பழித்தும் இயற்கையைப் புரிந்து கொண்ட மக்கள். திருடுபோன சங்கிலியைப் பெற முச்சந்தியில் சாணி உருண்டை போட வைக்கும் ஊர் மக்கள் வழக்கம். திருடியவன் இன்னார் என்று தெரிந்து தூற்ற வைக்க விரும்பாத சமூகம் உண்டாக்கிய உளவியல் இது. இப்போது காணாமல் போன சங்கிலி வராமல் எப்போதோ காணாமல் போன ஏழை பெண்ணின் கொலுசு கிடைக்கச்செய்த இச்சடங்கு. மூன்றாம் ஜாமத்தில் எழுந்து பக்கத்து ஊருக்கு அறுவடைக்குச் சென்ற பெண்கள் வழிமறித்து சண்டியர்தனம் செய்யும் கள்ளனை ‘அம்புட்டு பேரும் சீலய வரிஞ்சுகட்டுங்க. இடுப்புல அருவா சொருவி இருக்கீககல்ல – எடுங்கடி இவன ஒரு வழி பண்ணுவோம்’ என்று வீரத்தை வரவழைத்தும் தம் கூட்டத்து ஆண்களைத் துணைக்கு அழைக்க முழங்கக் குலவையிட்டு துரத்தும் பெண்கள். களத்தில் நெல் திருடவந்த கள்ளனை காவல் காத்துக் கொண்டிருந்த பாரததேவியின் அத்தை காதில் இருந்த தண்டட்டி, மூக்கு பேசரியைக் கழற்றிக் கொடுத்துவிட்டு ஒதுங்கு கிறாள். கண்முன் திருடு நடக்கிறது. ஆங்காரம் பொங்குகிறது. முனியாண்டி சாமி கோலம் எடுத்து ‘அடேய்… இங்க முழுக்க எங்காவல். இந்த முனியாண்டி காவல்ல கை வச்சவன் ஆயுசு மூணே முக்கா நாழிய தாண்டாது… அதுக்குள்ள நீ ரத்தம் கக்சி சாகலே இந்த முனியாண்டி கையெடுக்காதடா…’ ஆவேசத்தோடு குதிப்பதைக் கண்டு சாக்கைப்போட்டுவிட்டு தலையில் அத்தையின் அடியோடு போன திருடர்கள். தம்பி பெண்டாட்டி மேல் இச்சை கொண்ட அண்ணனை கொழுந்தியாள் சாமிவேசத்தில் கிணற்றில் தூக்கி எறிந்து கொல்லும் வீரப்பெண் என படிக்கிறபோது, சாமியையும், பேயையும் படைத்த மனிதன் மகத்தானவன்தான் என்று தோன்றுகிறது. தீமைக்குப் பயந்து அவனுள் நல்லதனத்தைத் தூண்டிவிடும் ஒளியைப் பல்லாயிரமாண்டு நகர்த்தியிருக்கின்றன. இவ்வகையான புனைவுகள். அப்படிமங்கள் உண்டாக்கிய தீமையின் அம்சங்கள் இருப்பினும்கூட. பாரததேவி தன் வரலாற்றை மட்டும் அல்ல. தான் அறிந்த கிராமத்தின் வரலாற்றை, தான் அறிந்த மனிதர்களின் வரலாற்றை தான் அறிந்த சமூகப் புனைவுகளின் அர்த்தங்களை எவ்வளவு தூரம் எட்டிப்பிடித்து சொல்ல முடியுமோ அவ்வளவு தூரம் எட்டி இழுத்து வருகிறார்.

விறகு பொறுக்கச் சென்ற இடத்தில் மழைக்கான அறிகுறிதென்படுகிறது. அண்ணனும் தங்கையும் வீட்டுக்குத் திரும்ப எத்தனிக்கையில் மழைபிடித்துக்கொள்கிறது. தங்கை மீத அண்ணன் இச்சைகொண்டு துரத்துகிறான், சந்து பொந்து, ஓடை, வீடு என ஒளியும் இடமெல்லாம் துரத்தும் இச்சையின் வேகம் என்பது உளவியல்கொண்டு பார்க்கவேண்டியது. இறுதியில் கடலில் விழுந்து தற்கொலை செய்யும் நிலையிலும் அண்ணன் கடலுக்குள் துரத்தி சாகிறான். பெண் அலைமுன்னால் ஓட ஆண் அலை அதை விரட்டிக்கொண்டிருப்பதற்கான காரணம் இதுதான் என்றொரு புனைவு சிறு கதைப்பாடலாகவும் நாவலில் பதிவாகியிருக்கிறது. ஏற்கெனவே பல கிராமங்களில் உள்ள கதைதான் புனைவுகளின் உள்ளே சிக்கல் நிறைந்த முரண்கள் புதைந்திருக்கின்றன. அங்கீகரிக்கப்படாத ஒழுக்க மீறல்களை, ஒத்துக்கொள்ள முடியாத துரோகங்களை, மீறும் சாதிக்கட்டுக் களை புனைவின் உலகிற்குள் வேறொன்றாக உருவாக்கிக் காட்டுகிற தன்மை நம்மிடம் இருக்கிறது.

நாம் தனித்துவமான சில பண்புகளை விதிவிலக்குகள் என்கிறோம். நாம் வகுக்கின்ற விதிகளுக்கு அடங்காதவைகளை விதி விலக்குகள் என்றும் பெறும்பாலானவற்றைக்கொண்டு விதிகள் என்றும் வகுக்கின்றோம். வாழ்க்கை இக்கோட்பாடை எப்போதும் திரும்பிக்கூட பார்க்காது. சகலத்தின் துடிப்புகளின் பாற்பட்டது. எழுதத் தயங்கும் எழுத்தாளனின் கோளாறே தவிர வேறில்லை. மானுடவியலில் விதி விலக்குகளைத் தொகுத்து வகுத்து தான் இனவரையிலை பிரித்துக்காட்ட முடியும். தமிழ்ச்சமூகத்தில் பல்வேறு சாதி அமைப்புகள் இருக்கின்றன. பொதுக்கூறுகள் இவற்றிடையே அதிகம் இருந்தாலும் தனித்த சில பண்புகள் துடித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு இனத்திலும். அதுவே அவ்வினத்தின் அசலான பகுதி. இதேபோல் தான் மொழி சார்ந்து, தேசம் சார்ந்து, நிறம் சார்ந்து சமூகம் சார்ந்து பிரித்து புரிந்து கொள்ள முடியும். இயற்கையின் நியதிகளைத் தம் நம்பிக்கை களுக்கு ஏற்றபடியும், தம் நம்பிக்கைகளை இயற்கையில் கரைத்தும் தமிழ்ச்சமூகம் வாழ்வியலை உண்டாக்கியிருக்கிறது. இது திராவிட சமூகத்தின் அழகியல். தத்துவ நிலையிலிருந்து சாற்றை எடுத்துக் கொள்ளும் ஆரிய சமூகம் போல் அல்லாமல் மண்ணிலிருந்து நம்பிக்கைகளையும் தத்துவங்களையும் உண்டாக்கியிருக்கிற திராவிடச் சமூகம் வித்தியாசமானது. இதில் அசூசைகளுக்கோ அய்யரவுக்கோ இடமில்லை. பார்ப்பவர்களின் மரபு பிடிப்புத்தான் காரணம். எழுதத் தயங்கியதை எழுதியவர்களை இன்று பின் நவீனத்துவவாதிகள் என்கின்றோம். இன்று இது ஒரு மோஸ்தர். இந்த எழுத்தாளர்கள் கற்பனை செய்து எழுதுவதற்கு முந்தியே உயிரோட்டமாய் இருந்திருக்கிறது. பின் நவீனத்துவ இலக்கியம் என்பது இன்று எழுதுவதனால் மட்டுமே மலர்கிறது என்பதல்ல. எழுதாமல் இருந்திருக்கிறோம் என்பது தவிர வேறில்லை.

வெஞ்சனம் சுவையேறி கிடப்பதற்கு அடித்துத் தொங்கவிட்ட பச்சைப்பாம்புகளை உருவிவிட்ட கைகளில் படிந்திருப்பதாக நம்பி மந்தைகளில் கூடும் பெண்கள்; கஞ்சி நீத்துப் போகாமல் இருக்க அதில் காயவைத்த பண்ணருவாளை குறுக்க மறுக்க கிழிப்பவர்கள், நினைத்தது நடக்க பாம்பு மேல் துணியைப் போட்டு விசம் கக்கி படியச் செய்கிற குழந்தைகள், வாலிபர்கள், பெரியவர்கள்; ஜமீந்தார், கீழ்க்குடியான் முருக்கு மீசை வைத்துக்கொள்வதா என்று நினைத்தோ என்னவோ மீசையை எடுத்திட்டு ஜமீன்காவலுக்கு இரு என்றபோது முதுகுடியான் ‘ஐயா தினம் தினம் பத்து சவுக்கடி கூட வாங்கிக் கொள்கிறேன். மீசையை மட்டும் இழக்க மாட்டேன்’ என்கிற கம்பீரம். கொடூரமாக கொலை செய்யப்பட்ட பண்டாராச்சியின் நினைவாக கல்லில் கண்டதுண்டமாக வெட்டப்பட்டதுபோல் செதுக்கி நடுகல் இட்டு வழிபடுகிற பழக்கம், ஒத்தை வழிகளில் பேய் நெருங்காதிருக்க கைகளில் இரும்புத்துண்டை கொண்டு செல்கிற குமரிகள், பன்றி, சினையாடு, பூனை கறிகளைச் சுவைத்துத் தின்னும் பழக்கம், போன்றவற்றிற்கெல்லாம் சமூக, வரலாற்றுக் காரணங்கள் உண்டு. பண்பாட்டுக் கூறுகளின் தொடர்புகள் உண்டு. இன்று அவை நம்பிக்கைகளாக மட்டும் இருக்கலாம். நேற்றைய மனிதர்கள் உண்டாக்கிய சமரசங்களும், விருப்பங்களும், கனவுகளும் அவற்றில் உறைந்து கிடக்கின்றன.

குடும்பம் என்று அமையாமல் அவ்வப்போது வேலைக்குப் போகும் சோம்பேறி தாசய்யா. திண்ணையிலோ, ஊர் மன்றிலோ படுத்தபடி தெருவில் போவோர் வருவோரை வேடிக்கைப் பார்ப்பார். இருட்டத் தொடங்கினால் ஓடைக்குப்போவது தினப்பழக்கம். வெட்டுசான பாரததேவி, வசந்தா இருட்டிய பின் இருட்டியப்பின் எங்கு போய்கிறார் என்று பார்க்க ஆசை. குழந்தைகளுக்கே உரிய கண்டுபிடிக்கும் ஆவல். பின் ஒளிந்து சென்று பார்த்தால் சுயமைதுனத்தில் ஈடுபடுகிறார். குழந்தைகளுக்கு சிரிப்பு. தாசய்யா குழந்தைகளின் பாட்டியிடம் தன்னைப் பின் தொடர்ந்து கேலி செய்வதாக முறையிடுகிறார் சூசகமாக. கிழவி. ‘அடியேய். அவன் சாட்ட அறுந்த பம்பரமா திரியிறான். பொண்டாட்டி பிள்ள இல்லாதவன். அவன் பாவமில்லையா. அப்பிடி செய்யாதங்கடி. வேற அவன் என்ன செய்வான்’ என்று கூறுகிற பேரன்பிளையும் புரிந்துணர்வினையும் இந்த மரபுதான் அந்த கிழவிக்கு அளித்திருக்கிறது.

அரைகுறையாக எரித்தப் பிணம் மழைநீர் அடித்துவந்து பருத்திக்காட்டில் போட்டிருப்பதை நேரடியாகப் பார்க்க நேர்கிற தருணம். அந்த பயத்தையும், நடுக்கத்தையும் நமக்கு மசக்க எடுத்து மூஞ்சி கைகால்ல இழிகிக்கிட்டா நாமலும் பிணம் மாதிரிதான் என்று ஒரு சிறுமிக்கு ஆறுதல் சொல்கிற (கணேசன்) சிறுவன். மாட்டுத்திருடன் அசதி மேலிட காலில் கயிற்றைப்பிணைத்துத் தூங்குகிறான். பசு மிரண்டு காடு மேடு, குளம் குட்டை, முள்மொடி இழுத்தடித்து ஓட செத்துப்போய்கிறான். பிணத்தோடு விடு வந்து சேர்கிற பசுவும் கன்றும். மகள் வீட்டில் பொய்க்காரணம் சொல்லி உட்கார்ந்து வாய்க்கு ருசியாக தின்ன ஆசைப்படும் கிழவியைப் பக்குவமாகப் பேசி விரட்டும் மருமகன், சாமி இல்லை பூதம் இல்லை வேண்டுமென்றால் அதுகள் மீது மூத்திரம் பெய்கிறேன் என்று சொன்னவர் இரவில் சுமந்து வந்த கூனை, மரத்தில் சிக்கவும் அலறியடித்து வருவதைப் பார்க்க நமக்கே சிரிப்பு வருகிறது. பசியும் பஞ்சமும், வறுமையும் இருப்பவர்கள் சென்றுணர்கிற உலகம் என்பது வேறானது. அரசாங்க ஊழியர்கள் திரட்டி வைத்திருக்கிற உலகம் என்பது வேறானது. இவர்களின் விருப்பங்கள் அங்கு எடுபடாது. பேய் இல்லை என்பதற்கான அத்தனை அனுபவ ஆதாரங்களும் பேய் இருக்கிறது என்ற நம்பிக்கையில் நெருங்கிப் பார்த்துத் தெளியும் (பாரததேவி) சிந்தனையாக மலர்ந்திருக்கிறது. தன் வரலாற்றுப் புதினத்தில் கிளை விட்டிருக்கும் நாவலின் பகுதிகள் இவை.

தமிழினி பதிப்பகம்

நாவலின் அதார பகுதிகள் என்னும் போது நம் சமூகத்தைப் புரிந்துகொள்வதற்கான முரண்களைத் தொட்டுப் பேசுதல் முக்கியமாகும். பொருளியல், உளவியல், மரபியல் காரணங்கள் இருக்கலாம். அத்தோடு காலங்காலமாக நம்மீது படிந்திருக்கும் கருத்தியல் காரணங்கள் இருக்கலாம். முன் சொன்னதுபோல பாரததேவி திட்டமிட்டு தொகுத்து வகுத்து அதின் மீது விமர்சனத்தை வைக்கவில்லை. நிகழ்வுகளாக இருக்கின்றன. அந்நிகழ்வுகளின் வழி திரளும் வாசிப்பு அனுபவம் கோட் பாட்டாளர்கள் அறிந்து வெளியிடும் முரண்கள்தான். கோட்பாட்டாளர்கள் விளக்கும் யந்திரத்தனத்தைவிட ஆழமும் உணர்வும் கொண்டிருக்கின்றன.

ஜமீந்தாரின் மகளான ரத்தினகிளியைக் காதலித்த முதுகுடி வெட்டுண்டு இறக்கிறான். ரத்தினகிளியின் பிடிவாதம் அவளுக்கே கொலையாக முடிகிறது. சாதியின் கொடூரமான விளையாட்டின் நேற்றைய பதிவு. இன்று தொடரும் அம்மாதிரியான சாவு மனிதன் தெய்வமாக முடியாது. முடிகுடி சுற்றுவட்டாரத்திற்கே தெய்வமாகிறான். தாங்கள் இழைத்த தண்டனைகளுக்கு அவர்களே வழங்கிக்கொண்ட நிதி. பாவமன்னிப்பின் வடிவம் அது.

அழகிய பள்ளச்சி மீது காமம்கொண்டு துரத்திய நிலவுடைமையின் பிரதிநிதியான கங்கையாவை புத்துக்கால் கொண்ட பள்ளன் முச்சந்தியில் குத்திக்கிழிக்கிறான். ஒருவகையில் சாதிக்கட்டை – இறுக்கத்தை நேருக்கு நேர் நின்று தகர்க்கும் முயற்சி. மற்றொரு வகையில் அது தன்மானத்தின் உந்திப்பு. அந்த கங்கையா ஒரு ரெளடி. தன் மனைவி வேறொருவனுடன் கள்ளஉறவு வைத்திருப்பதைக் கண்டு மொட்டையடித்து விலங்குமாட்டி நாயைப்போல வருவோர் போவோர் பார்க்கும்படி கட்டிப்போட்டு வஞ்சம் தீர்த்தவன். அவமானப்படுத்துவதில் விருப்பம் கொண்டவன். மகளையே அடித்துக் கொன்றவன். ஒன்றுவிட்ட தங்கையை காலை ஒடித்து (சாதிவிட்டு சாதி காதலித்தற்காக) போட்டவன், மனைவியை அடித்துத் துன்புறுத்தியவன். இந்த சாதிமேட்டிமைக்காரனை பள்ளன் வீழ்த்துகிறான். இந்த ஆணாதிக்கவாதிகள் சாதி இந்துக்களிடமும் தலித்துகளிடமும் இருக்கின்றனர். கணவனே மனைவியை இருமுறை அடமானம் வைத்து குடித்துக் கூத்தடிக்கிற தலித் கங்கையா கொடூரமானவன்தான். ஆணாதிக்கம் என்பது சாதி மதம் பாராதது. தங்கை, குழந்தை, ரத்த பந்தம் என்றும் பாராதது, ஒருவகையான கருத்தியல் ஆதிக்கம்.

தன் இச்சைக்கு உடன்படாத கொழுந்தியாளை கொல்பவனிடம், கணவனோடு வாழ விருப்பமில்லாத பெண்ணை மாலை வேலையில் மருமகன் ஊருக்கு அழைத்துச் செல்லும் தகப்பனிடம், அழகற்ற பெண்ணை (காளி) திருமணம் செய்து கொண்டவனிடம், காதலியை இருட்டுகிற நேரத்திற்குத் தோட்டத்துப்பக்கம் அழைக்கிற பட்டாளத்துக்காரனிடம் ஆணாதிக்கத்தின் பல்வேறு கூறுகள் வெளிப்படுவதைக் காண முடிகிறது. கொழுந்தியாள் தன்னைக் காமத்திற்கு அழைத்து, தான் உடன்பட மறுத்ததால் நடந்த சண்டையில் வெட்டுப்பட்டு இறந்தாள் என்று சொன்னதை நம்பிய சமூகம் நம்முடையது. மாலை வேலையில் கணவனுடன் சேர்த்துவிட்டால் இரவில் மகள் திரும்ப முடியாது மருமகன் கலவியில் வசப்படுத்தட்டும் என்று இருட்டுகிற நேரம் பார்த்துவிட்டு திரும்பம் தகப்பன், அத்தையை அனுபவிக்க அழகற்றவளைக் கட்டி இருவரையும் நிர்மூலமாக்குகிறவன். இப்படி சுயநலம் சார்ந்த, ஆதிக்கமனம் சார்ந்த ஆண்வர்க்கத்தின் வன்முறைகளை நாவல் எடுத்துரைக் கின்றது.

சுதந்திர உணர்வு என்பது மனிதனின் அடிப்படை விருப்பங்களில் ஒன்று. அடிமையாக இருக்க நிர்பந்திக்கப்பட்டு அடிமையாகவே வாழ்கிற மனிதர்களிடமும் சுதந்திரத்திற்கான வேட்கை இருந்தபடிதான் இருக்கும். அதை வெளிப்படுத்த முடியாதபடி லௌகீய கட்டுக்கள் இறுக்கும்.

பாரததேவி போன்ற குழந்தைகள் பெற்றோர்களிடம் சொல்லும் எல்லா பொய்களும் சுதந்திரத்தின் பாற்பட்டவைகளே. அவர்கள் ஒடுக்கும் பெற்றோர்களிடம் அப்படித்தான் வெளிப் படுத்திக்கொள்ள முடியும். காவலுக்குச் சென்று கள்ளனைப் பிடித்த வெள்ளையம்மாள் உரைநடை இலக்கியத்தின் மகற்பாற் வஞ்சி. ஐந்து அண்ணன்மார்கள் பிடிக்க முடியாத கள்வனைத் தனித்து நின்று வீழ்த்தி மாய்கிற வீரம் பெண்ணியத்தின் அசலான முதல்படிக்கட்டு. அச்சம், நாணம், மடம் என ஆண்உலகம் சித்தரித்த படிமத்திற்கு நேர்மாறான பெண் வெள்ளையம்மாள். இரவைத் தனது போர்களத்தின் காலமாக அமைத்துக் கொள்கிறவள் அவள். தன் அம்மாவை (பூமாலை) வசப்படுத்தி பாலியல் வன்முறையைத் தினம்தினம் தொடுக்கிற கணவனின் வயிற்றைக் கிழித்துக் குடலை உருவி தெருவில் போடுகிற காளி ஒரு தன்மானம் மிக்கப் பெண்ணாக பரிணமிக்கிறாள். கணவனின் அத்தனை உதாசீனங்களுக்கும் மொத்தமான விடை அது. காளி – ஒரு பத்திரகாளியாக தனது வல்லமையை ஆண் சமூகத்தின் முன் வடிவெடுத்துக் காட்டுகிறாள். இத் தன் வரலாற்றுப் புதினத்தில் குறுக்கு வெட்டாக எழுதப்பட்ட பகுதிகளில் தமிழ்ச்சமூகத்தின் மனம் பாசாங்கற்று பிசுபிசுப்போடு முன் வைக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டு எழுதியதும் அல்ல. தமிழ்ச்சமூகத்தினை விமர்சிக் கிறேன் என்ற கோட்பாட்டு முறை கொண்டல்ல. வாழ்வின் தகிப்பிலிருந்தும், மனிதர்கள் கதையாடலாக உருவகித்திருக்கும் சாரத்திலிருந்தும் தமிழ் வாழ்வு உருக்கொள்கிறது இந்நாவலில்.

குழந்தைகள் குழந்தைகளாக வளர்ந்து வந்த ஒரு காலம் போய்விட்டது. தொலைக்காட்சி முன்பும், டியூசன் சென்டர் களிலும், கோடைக்கால பயிற்சி வகுப்புகளிலும் முடங்கிப்போய் கிடக்கின்றனர். பேதமை மிக்க குழந்தைகள் இன்று வேண்டாம் என்று நினைக்கிறவர்களாக இருக்கிறோம். பேதமையை இயற்கை யாகப் பெற்றவர்கள் முட்டாள்களாகச் சித்திரிக்கப்படுகின்றனர். பேதமையோடு இருப்பது ஒரு ஆன்மீகநிலை அவ்விதம் இல்லாமல் வருங்கால இளம் விஞ்ஞானிகளாக்க குட்டி விஞ்ஞானிகளாக்கு கிறோம். இறுகிய – ஈரமற்ற கருணையற்ற குழந்தைகளை உண்டாக்கி என்ன பயன்? ஒன்றும் கிடையாது.

‘மாடு ஒக்காந்திருக்கு’, ‘சோற்றுக் கற்றாழையில் சோறு இல்லையே’

என வேறொரு கண்ணோட்டத்தில் எண்ணங்களை வெளிப்படுத்தும் குழந்தைகளிடம் ஈவு இறக்கம் பொங்குகிறது. பேய்களை, கெட்ட செயல்களைப் பார்க்காமல் இருக்க கண்ணை ஒரு புறமாக மறைத்துச் செல்லும் குழந்தைகள் வேறு தேசத்தில் இருக்காது என்றுதான் நினைக்கிறேன். உலகலாவிய சிக்கல்களிலும் தனித்துவத்தைப் பார்க்க முடிகிறது. பால்காரனை ஏமாற்றும் தாய்களுக்குப் படிப்பினைத் தரும் சொந்த குழந்தைகள் நேர்மையின் பக்கம் நிற்கின்றனர். கொடூரம் மிக்கத் தருணங்களில் கருணைமிக்கவர்களாகவும் கருணையின் பக்கம் நிற்க முயன்று கொடூர தருணங்களைச் சந்திக்க நேர்கிற குழந்தைகளாகவும் இருக்கின்றனர். பால் வியாபாரம் ஊருக்குள் நுழைந்ததும் கன்று களுக்கு பால்விடாத பணபித்தர்களாக மாறிப் போய்கின்றனர். கன்றுக்குட்டிகள் வயிறாற உண்டு செழிக்க நினைத்த களங்கமில்லா குழந்தைகள் நடு இரவுகளில் அவிழ்த்து விடுகின்றனர். பால் செரிமனம் ஆகாது இறந்து போய்கின்றன. வீட்டில் மாடுகள் பட்டினியாகக் கிடக்குமே என்று வருத்தப்பட்ட சிறுமி களைத்துப் போட் சோளப்பயிர்களை கட்டுகட்டி வந்து போடுகிறாள் சொக்கி இறந்து போய்கிறது மாடு. இந்த மரணங்களை விட அச்சிறுமிகள் முயன்ற கருணை மகத்தானது. கடவுள் இருப்பாரானால் அக்குழந்தைகளுக்கு முன் யதார்த்தத்தை நிகழ்த்தியிருக்க மாட்டார்.

படிப்பின் மீது இருந்த விருப்பங்கள், உயிரினங்கள் மீது இருந்த பிரியங்கள் குடும்ப தலைமை அங்கத்தினர்களால் சிதறுண்டு போய்கின்றன. பள்ளிக்கூடத்திற்குப் போகவேண்டும் என்பதற்காக பொய்க்கடிதம் எழுதி ஓடப்பார்த்தும் குட்டுவெளிப் பட்ட ஆசை சிதறுகிறது. ஆசையோடு வளர்த்த வாத்தை விற்க விடாமல் தடுக்க எடுத்துக்கொண்ட ஒவ்வொரு முயற்சியும் முறியடிக்கப்படுகிறது. ஆனாலும் களங்கமின்மையின் ஊற்றை அடைத்து யாராலும் நிறுத்த முடியவில்லை. திரும்பத் திரும்ப கொப்பளித்த படியே இருக்கிறது. கன்றுக்குட்டியைக் கூடையில் கட்டி சைக்கிளில் விரைகிறான். பசு தவித்து களைத்துப் படுத்தக் கொள்கிறது. எழவைக்க தீயைப் பொறித்தி வைக்கிறான். குழந்தைகள் கொடூரத்தைக் கண்டு சகிக்க மாட்டாமல் சைக்கிளைப் பஞ்சராக்கி விடுகின்றன. பசு அசைபோட்டபடி பின் செல்கிறது. கொடூரமும் கருணையும் இணைந்த கிராமத்து மனிதர்களை குழந்தையின் பார்வையில் சொல்கிறார் பாரததேவி.

வறியவர்கள் எக்காலத்திற்கு உரியவர் போலும். களத்தடியில் புடைத்தத் திரட்டிய நெல்லை கோழிகள் தின்று விடுகின்றன. கோழிகளின் இரைப்பைகளை அறுத்து நெற்களை எடுத்து காயப்போட்டு சோறாக்கும் கோலம். இரைப்பைகள் தைக்கப்பட்டு பிழைத்துக்கொண்ட கோழிகள் மேயும் காட்சி இரண்டும் மனிதர்களின் ஆதார சக்திகள். இன்றளவும் நாளையும் இவ்விரண்டின் முரண்கள் தொடரும். அளவுகள் மாறலாம். காலங்காலமாக எதிரிடை சக்திகளாக மனிதர்களிடம் இயங்கியபடி இருக்கின்றன. இட்லி, தோசை போடாதவர்களுக்கு வீட்டில் கொண்டுபோய் கொடுத்தவிட்டு வந்த கிராமிய கூட்டு வாழ்க்கை இன்று இல்லை. நெருங்கிய உறவுகளின் சிதலம் சில மேன்மைகளைக் கை கழுவிவிட்டது. நேற்று இருந்தது. இன்று இல்லை. காலம் சில சமயம் நல்லவற்றையும் அழித்தொழித்துவிடுகிறது.

கோபங்கள், வெறுப்புகள், வெறுமைகள், குரூரங்கள், இச்சைகள், விருப்பங்கள், கீழ்மைகள் மனிதர்களிடம் நீக்கமற இருக்கின்றன வெளிப்படையாகவும் பாசாங்குடனும் உலகமெங்கும் இருக்கின்றன. இரட்டை வேடங்களில் மாறி மாறி ஆடுகின்றன.  பட்டாளத்துக் காதலன் இரவுக்குறி காட்டுகிறான். அவன் விருப்பத்தை மதித்து வருகிறாள். சங்ககாலமாக இருந்தால் இவள் உன்னதத்தலைவி. கூப்பிடவுடன் இராத்திரியில் வருவாளென்றால் உத்தமியாக இருக்க முடியாது என நிராகரிக்கிறான். மற்றொரு பட்டாளத்துக்காரன் தனிமையில் மொட்டை மாடியில் இருக்கும் நிச்சயம் செய்த பெண்ணைத் தொட நெருங்குகிறான் பின் நகர்ந்தவள் கைப்பிடிச் சுவர் இல்லாமல் விழுந்து குறுக்கொடிந்து கிடக்கிறாள். அவனுக்கு வேறொரு பெண் மணமகள் ஆகிறாள். உடல் சிதைந்துபோன நிலையிலும் அவனின் வரவு நலம் விசாரிக்கும் பெண்ணின் காதலை வேறு எந்த இலக்கியத்தில் பார்க்க முடியும்? சாக நினைத்த வசந்தா தன் ஓட்டைக்காலனாவை தோழி பாரததேவிக்கு கொடுக்கும் போது ஒரு மனம், சாகத்தெரியாமல் மீண்டு வந்தவள் தன் ஓட்டைக்காலனாவைக் கொடு என்று சண்டைபோடும் போது ஒரு மனம். ஆயிரமாயிர மான மர்மகுகைகள் கையளவு இதயத்திற்குள் பிரிந்து செல்கின்றன. விநோத உணர்வுகளை அதனுள் பதுக்கி வைத்திருக்கின்றன. மேலோட்டமாகப் பார்க்கின்ற போது நிகழ்வுகளாகவும், ஆழத்தில் காரணகாரியங்களும் உளவியல் தன்மைகளையும் கொண்டிருக் கின்றன. தங்கை, தோழி, அத்தை கொழுந்தியாள், அண்ணி, மனைவி, சித்தி மீது இருக்கும் பாசங்களுக்கு வேறொரு பார்வை இருப்பதை அந்நிகழ்வுகள் காட்டுகின்றன. மனிதன் பாலியல் விசயத்தில் விலங்கின் அம்சம் படைத்தவனாகவே இருக்கிறான். மற்ற மற்ற விசயங்களிலும் கொடூரமான வெறுப்பைக்கொண்ட மனத்தின் வெளிப்பாடுகளாக இருக்கின்றன. சமைத்துவைத்த சோற்று உருண்டையைத் தின்ற திருட்டு நாயைப் பிடித்து தூக்கிலிட்டு கொல்ல விரையும் பாட்டி, கள்ளக்காதல் இருப்பதாக சந்தேகப்பட்டு மனைவியை நாய்போலக் கூட்டிப்போட்டு இம்சிக்கும் கணவன், கணவனை இழந்த பெண் குழந்தைகளை (பாரததேவி) யார் வீட்டிற்கும் போகவிடாமல், படிக்கவிடாமல் நொறுக்குவதில் வெறுமையால் முளைத்த ஆங்காரம் வெளிப்படுகிறது. கண்ணியம் கருதி ஒடுக்கினாலும் தன் வெறுமையின் வெளிப்பாடாகத்தான் பார்க்கமுடிகிறது. சுமங்கலியாக தன்னை ஒப்பணை செய்து கொண்டு கிணற்றில் விழுந்து சாகும் இளம்பெண்; மானத்தை வாங்கிவிட்டதாக செத்த சுமங்கலி கோலத்தை சிதைத்து அமங்கிலியாக்கிச் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் சுற்றம், பணத்தைப் பிள்ளைகளுக்குத் தெரியாமல் சேர்த்து வைத்த தாயின் பணத்தை முயன்று கண்டுபிடித்துப் பதுக்கும் குழந்தைகள், பணத்தை இழந்த தாய் இருவருக்கு நிகழும் முரண் வித்தியாசமானது. கடுகடுவென இருந்த பிள்ளைகள் மனைவிமார்களோடு பணத்தைப் பங்கிட்டு கலகலப்பாகின்றனர். கலகலப்போடு இருந்த தாய் பின் சாகும்வரை மௌனியாக இருந்து மறைகிறாள்.

ஒவ்வொரு நிகழ்விலும் உளவியல் பிரச்சனைகள் இருக்கின்றன. சமூகக்கட்டுக்கள் சட்டதிட்டங்கள் உண்டாக்கிய மனநெருக்கடியில் விளைந்தவை கொடூரமாக இருக்கின்றன. தனிமனித அபிலாசைகளின் தோல்வியிலும் வெற்றியிலும் வெளிப் படுபவை விசித்திரம் வாய்ந்தவையாக இருக்கின்றன. சொந்தங் களுக்குள் நிகழும் வெறுப்பும் புறக்கணிப்பும் போர்வன்முறை போன்றது. பாரததேவி டைபாய்ட்டு காய்ச்சலில் கிடக்கிறாள். சுற்றம் பாரததேவி அம்மாவிடம் உன் தங்கை அருளாடிதானே திருநீறு வாங்கிப்போடலாமே என்றதும் எவளும் என் குழந்தைக்கு திருநீறு போட வேண்டாம் என்று கொதிக்கிறாள். கிட்டத்தட்ட புதுமைப் பித்தனின் பால்வண்ணம் பிள்ளைபோல. கிழவி மூலம் சின்னம்மாளுக்கு சேதி வருகிறது. ‘அவளென்ன தின்னீறு போடுறத வேண்டாமங்கிறது நானே போயி போடுறேன்’ என்று வந்து திருநீறிற்று அருள்வாக்கும் சொல்கிறாள். இந்த கோபதாபங் களுக்கெல்லாம் பொருளியல் பிரச்சனைகள் காரணமாகி யிருக்கலாம். நாமே உண்டாக்கிக்கொண்ட எதிர்பார்ப்புகளும் காரணமாக இருக்கலாம். தமிழ்ச்சமூக அமைப்பிற்கு மட்டுமே உள்ள நெருக்கடிகள் ரத்தபந்த எதிர்பார்ப்பினால் உருவானவை. நம் சமூகத்தை இவ்விதமெல்லாம் புரிந்துகொள்ள ‘நிலாக்கள் தூர தூரமாக’ நாவல் செயலாற்றுகிறது.

இந்நாவலின் பேரழகோடு திகழ்பவை உவமைகள், மரபுத் தொடர்கள், முதுமொழிகள், பழமொழிகள், வட்டாரச்சொற்கள், மருத்துவக்குறிப்புகள், மண்ணிற்கே உரிய பெயர்கள், வருணனைகள் இவற்றைக் குறிப்பிடவேண்டும். இவற்றிற்கெல்லாம் சொந்தங்கொண்டவர்கள் கிராமத்து மக்கள். அவைகள் வரலாற்றின் திரட்சியாலும் வாழ்ந்துபட்ட அறிவாலும் உருவானவைகள். எந்த ஒரு முதுமொழியும், உவமையும் எடுத்து சொருகப்பட்டவை அல்ல. நிகழ்ச்சியின் உயிர்த்துவமான சாராக வழியத்தொடங்குகின்றன. நாடகமாக அல்லாமல் நம் பாட்டிகளும் பாட்டன்களும் எதிர்த்த வீட்டுப் பெரியம்மாக்களும் மாமன்களும் நம்மோடு உரையாடுவதுபோல் இருக்கின்றன. மீண்டும் ஒரு முறை நாம் குழந்தைகளாகி புதையுண்ட மனிதர்கள் எழுந்துவந்து நம்மோடு, நகர்வது போல சாயலைப் பெற்றிருக்கிறது இந்நூல். கடந்த காலம் நிகழ்காலமாக நாவலில் உருமாறுகிறது. எவற்றையும் இழக்கவில்லை இதோ நம்மோடு இருக்கிறது என்பது போன்ற உருவங்களாக அலைகின்றன. அறிவுப்பூர்வமாக யோசித்தால் நேற்றை வாழ்வின் ஆவணங்களாகத் துடிக்கின்றன. பாரததேவி மனிதர்களையும் அவர்களின் பேச்சுக்களையும் பதிவு செய்திருக் கிறார். ஒருவகையில் நம் முன்னோர்களின் நடமாட்டத்தை உண்டாக்கிய எழுத்து.

காலங்காலமாக கிராம மக்கள் உருவாக்கிய உருவகங்கள், கனவுகள், கற்பனைகள், விருப்பங்கள் முதுமொழியாகத் திரள்கின்றன. இங்கு வருகின்ற மரபுத்தொடர்கள், பழமொழிகள், உவமைகள் நாவலில் உலவும் மனிதர்கள் உணர்வின் வழி வெளிப்படுத்தியது போல உயிரோட்டமாய் இருக்கின்றன. ‘கொளம் வத்தினாலும் குத்துக்கல்லுக்கு வாட்டமில்ல’ ‘உங்கிறது ஒரு வட்டுல. உறங்கிறது ஒரு கட்டுலு’ என்பது போன்ற மரபுத்தொடர்கள். ‘அடுப்பில வச்ச கொள்ளி எரிஞ்சுதான தீரணும்’ ‘பகையாளிக்குள்ள குடியிருக்கலாம் பாம்பு குடியிருக்கிறதுக்குள்ள குடியிருக்க முடியுமா’ என்பது போன்ற முதுமொழிகள்’ ‘பேய் மழையும் பெருமழையும்’ ‘ஒரு வீட்டுப் பிள்ளைகளாக’ ‘இரண்டு கை வீச்சிலும் நீளமாக’ ‘தூசிக் கோட்டையாக’ ‘ஒரு பாக்குக் கடிக்கிற நேரம்தான்’ என்பது போன்ற மக்கள் கணித்திருக்கும் தொடர்கள் ‘இந்தா ஒரு சோளத்தட்டய எடுத்துட்டு வர்றேன்’ ‘வாய் சலிக்கத் தின்போம்’ பாவனை மொழியால் விசயத்தை உணர்த்துகின்ற நுட்பங்கள்’ ‘வானத்துக்கும் பூமிக்கும் பாவு போட்டது போல் விடாமல் மழை பெய்தது’ ‘காயி சலங்கையா நெருஞ்சிகட்டி கிடந்திச்சி’ போன்ற ஒப்புமைகள், ‘நிலா சோளத் தோசை போல் கிழக்கில் கிளம்பி கறந்த பாலாக வெளிச்சத்தைச் சிந்திக்கொண்டிருந்தது’ ‘தீச்சட்டியாக வெயில் பொசுக்கும் காலம்’ ‘தெருவிளக்கின் வெளிச்சம் தெள்ளுமாவைப் போல தெரிந்தது’ போன்ற உவமைகள் எல்லாம் இயற்கையின் நாநாவிதமான கோலங்களிலிருந்து உண்டாக்கிக் கொண்டவை.

சில விசயங்களை இன்னும் அழுத்திக் கூறலாம் இங்கு. ஏற்கனவே வாழ்ந்து பட்ட முன்னோர்களின் அனுபவங்கள் பழந்தொடர்களாக உருக்கொண்டவை நிகழ்கால நெருக்கடிக்குள் உயிர்பெற்ற படியே இருக்கின்றன. மனிதர்களின் ஆழ்மனதிற்குள் உறைந்து கிடப்பவைத் தக்கத் தருணத்தில் மேலெழுந்து வருகின்றன. எண்ணங்கள் உரையாடலாக வெளிப்படும் போது ஒப்புமைகளால் உணர்த்தப்படுதலை அடிநாதமாகக் கொண்டிருக் கின்றன. இயற்கையின் கோலங்களைத் தொழில் முறைகளின் செயல்களாலும் காட்சிகளாலும் விளக்குவதை தம் அழகியலாகக் கொண்டிருக்கின்றனர்.

வட்டாரச் சொற்களும் நாட்டுப்புறக் கலைச்சொற்களும், அவர்களின் மருத்துவ முறைகளும் இங்கு பொங்கி வழிவது மறைந்துபோன மாபெரும் கலாச்சாரம் உயிர்ப்பெற்று உலவுவதுபோல் இருக்கிறது. ‘பூலான் முள்’ ‘பேய்க்குறளிச்செடி’ ‘தரவுப்புல்’ ‘மரிசல்’ போன்ற வட்டாரத்திற்கு மட்டுமே உரிய காரணப்பெயர்கள், ‘செல்லச்சடவு’ ‘நிலாச்சாறு’ ‘கூட்டாஞ்சோறு’ ‘ஊர்க்கஞ்சி’ ‘கூட்டாங்களை’ ‘பிள்ளைச்சுவர்’ ‘குத்தறுப்பு’ போன்ற கலைச்சொற்கள் தமிழின் செல்வங்களாக விளைந்து கிடக்கின்றன. காரணகாரியத்தோடும் நிலவியல் தன்மையோடும் இவைகளை மக்கள் உருவாக்கியிருக்கின்றனர். முயல் புழுக்கை பல் சொத்தைக்கும் ஈக்கி வெளியேற்ற ஈனாத மாட்டின் சாணி ஒத்தடமும், புழுவெட்டுக்கு பயல் ரத்தமும் கிருமிகளைக் கொல்ல நிலாச்சாரும் பயன்படுத்துவதில் ஒரு நுட்பம் இருக்கிறது. கழிவுகளிலிருந்தும் சேர்கையிலிருந்தும் நமக்குரிய நோயைத் தீர்க்கும் வித்தையைக் கண்டு பிடித்திருக்கின்றனர்.

நிலாக்கள் தூரதூரமாக ஆங்கிலத்தில் (மானசா பதிப்பகம்)

பாரததேவியின் விவரணையில் மூன்று அம்சங்களைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். வாழ்முறையின் தாத்பரியத்தை காலம், இடம், சூழல், மன வார்ப்பிற்கேற்ப காட்சிப்படுத்துதல் 2. கிராம ஜனத்திரளிலிருந்து உருவாகி வந்த விவரணைகளை, பாரததேவி, கதைகேட்ட நினைவிலிருந்து அப்படியே பெயர்த்துச் சொல்வது. பாவனையும், கற்பனையும் படிந்ததொரு கதை சொல்லும் மரபை பதிவு செய்திருத்தல். மூன்று கவித்துவமான படிமங்கள் என அவரின் விவரணைகளை ஆழந்துணரலாம்.

1. ‘பாதையின் இருபுறமும் ஆவாரம் பூக்கள் சில்லெடுத்து மவுந்து போயிருக்கும். எங்களுடன் வரும் எல்லா அக்காக்களும் இந்தப் பூக்களை கவுரும்கப்புமாகப் பறித்து ஒன்றோடு ஒன்று கோர்த்து கழுத்தில் சங்கிலியாக கையில் வளையலாகப் போட்டுக் கொள்வார்கள். காது வளர்த்தவர்கள் ‘பாம்படம்’ போல் தொங்கவிட்டுக் கொள்வார்கள். எங்கள் கழுத்திலும் கையிலும் பூட்டிவிடுவார்கள். கோயிலுக்குப் போகும் நாங்கள் மஞ்சள் பூத்துக்கிடப்போம்.’

2. ‘மல்லிகைப்பூவின் வளைவில் இவ்வளவு நேரமும் பெரிய கொண்டையாக அடங்கியிருந்த அவள் தலைமுடி அவிழ்ந்து முள்மரக்கொப்பில் சிக்கியிருக்கிறது. காலெல்லாம் கருவேல முள்ளு. உடம்பினும் முட்கள் கீறி ரத்தக்கோலம் போட அவள் கத்தியிருக்கிறாள்… மத்தியான கட்ட கட்ட உச்சி நேரமும் சரி, இலைதழை தளும்பாத நடுச்சாமமும் சரி, வெள்ளைச் சேலையோடு ஒரு பெண் கருவேலங்காட்டுக்குள் நடக்கிறாள். மரத்துக்கு மரம் சிக்கிக்கொண்ட முடிகளையெல்லாம் எடுத்து தலையில் வைத்து அழகு பார்க்கிறாள். அந்நேரத்திற்குத் தெரியும் ரத்தக் காலடித்தடங்களைப் பார்த்து பேய்ச்சிரிப்பு சிரிக்கிறாள் என்று நிறைய நிறையச் சொல்லி எங்களைப் பயமுறுத்துவார்கள். அந்த கண்மாய்க்கள் கோடைக்காலங்களில் தலைமுடியில் உச்சி வகுந்ததுபோல் நிறைய வழித்தடங்கள் குறுக்கும் மறுக்குமாக விழுந்திருக்கும்….

3. ‘விலக்கு இல்லாததால் வீட்டிற்குள் இருட்டு கருப்பு பூத்துக்கிடக்கும்’ ‘கதிர் அறுத்த வயல்களினூடே இறை தேடி வெண்பஞ்சுகளாக அலைந்தன கொக்குகள்’ ‘வாய்க்கா வரப்பில் தட்டாம் பயிறு அல்லது பாசிப்பயிறு ஊனவேண்டும். ஆடையாக இருக்கும் செம்மண். ஏர் கலப்பையின் கூர்மை வகிர்ந்ததால் ஆட்டு ஈரலாகத் துவண்டு கிடக்கும்’ ‘மரம் செடி கொடிகலெல்லாம் தங்கள் சுருக்கிக்கிட்டு அதது தூருக்குள்ளேயே அடங்கிக் கிடக்கு’ ‘மிளகாய்செடிகளும் சோளப்பயிரும் வெயிலில் துவண்டு வாட்டத்தோடு தண்ணீர் கேட்டுக் கொண்டிருந்தன’

‘தெருவிளக்கின் வெளிச்சம் தெள்ளுமாவைப் போல் தெரிந்தது’ இப்படி இயற்கையின் நானாவினோதங்களாலே காட்சிப்படுத்துகிற கோலம் அற்புதமாக எழுதப்பட்டிருக்கின்றன. கிராமத்து மனிதர்களின் அனுபவத்தில் ஊரிவந்த கணக்கீடுகள். இந்த பார்வை பாரததேவிக்கு கிராமத்து மக்களின் அனுபவங்களிலிருந்து கையளிக்கப்பட்டவை. உவமைகளும் அசலானைவயாக இருக்கின்றன.

தொல்காப்பியம் வகுத்த மரபோடு மிக நெருக்கமாக இருக்கிறது நிலாக்கள் தூரம் தூரமாக. இந்நூலைப் படித்ததும் நவீன இலக்கியப் பரிச்சயமற்ற ஓரளவு எழுதப் படிக்கத் தெரிந்த கிராமத்து மனிதர்களில் சில அனுபவசாலிகளை எழுதவைக்கவேண்டும் என்று தோன்றியது. இம்மாதிரியான ஆவண இலக்கியம் நம்மிடம் மிக மிக குறைவு. ஒரு நூற்றாண்டு இனி கழிந்தால் இப்போது இருக்கும் முறைமை இருக்காது. பாரததேவி தன் சுயவரலாறாக எழுதாமல் தன்னைச் சுற்றியிருந்த உலகை எழுதியிருக்கிறார். ஒரு குழந்தையின் பார்வையிலிருந்து அவ்வுலகம் விரிகிறது. பாரத தேவி கண்ட கிராமம் இன்று எந்த பெண்குழந்தை கண்ணிலும் தென்படாது. கிராமம் இந்த ஐம்பதாண்டுகளில் எவ்வளவோ மாறிவிட்டது. பாரததேவியின் இந்நூல் 1950க்குப் பின்னான பதினைந்தாண்டு வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

பாரதி தேவி என்ன நடந்ததோ அவற்றைப் பதிவு செய்திருக்கிறார். ஒவ்வொரு சம்பவமும் ஒரு நாவல்தான். அல்லது நாவலாக எழுதப்பட வேண்டியவை.

தரவுக்கும் படைப்பிற்கும் பெரிய வித்தியாசம் உண்டு. தரவு உண்மை மட்டுமே. அது மனதை பாதிக்காது. உள்ளத்தை உருக்காது. தரவு படைப்பாக மாறும்போது மனதை பாதிப்பிற் குள்ளாக்குகிறது. அழுகவோ, சிரிக்கவோ, கோவப்படவோ செய்கிறது. தன்னை ஒரு கணம் செம்மைப்படுத்திக் கொள்ளத் தூண்டுகிறது. படித்த கணத்திலிருந்து கைவிளக்காக சில சமயம் மாறிவிடுவது. படைப்புக்கலையின் ஆற்றல் இது. பாரதிதேவி தன் அனுபவத்திலிருந்து திரட்டியிருக்கும் இச்சம்பவங்கள் படைப்பாக உருமாறியிருந்தால் தமிழின் மகத்தான நாவலாக மாறியிருக்கும். இவைகள் தரவுகள். சில பகுதிகள் படைப்பின் எல்லைகளையும் தொட்டிருக்கின்றன. பாரததேவியால் அல்ல ஏற்கெனவே நிகழ்ந்த நிகழ்வுகளில் இருந்து விலகிய வித்தியாசமான நிகழ்வுகள் என்பதால்.

ஆனால் ஒன்றை அழுத்திச் சொல்ல வேண்டும். பாரதி தேவியின் மொழிநடை நமது செல்வம். எவ்வளவோ அழகிய வார்த்தைகள், சொலவடைகள், வாக்கியங்கள், வர்ணனைகள் பாரததேவியால் நமக்குக்கிடைத்திருக்கின்றன. இவை இனக்குழு மனிதர்கள் உண்டாக்கியவையாக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம் பாரதியின் உள்ளத்தில் சேர்மான மாயிருக்கும் மொழி பொங்கி பிரவகித்திருக்கிறது. வளரும் அறிவியலுக்கே இங்கிருந்து கலைச்சொற்களைத் தேர்ந்தெடுக்கலாம். கவிஞர்கள் தேடும் மொழி பாரத தேவியின் ஆதி மனநிலையிலிருந்து வந்திருக்கின்றன.

தமிழரின் அழகியலில் நிலமும் பொழுதும் மிக முக்கியமானவை. இன்று கோவில்பட்டி பகுதி வறண்ட கரிசல் பூமியாக இருக்கலாம். ஐம்பதாண்டுகளுக்கு முன் மருதநிலத்தின் தன்மையோடு இருந்திருக்கிறது. இந்நிலத்தின் உரிப்பொருள், கருப்பொருள், முதற்பொருள் இவை என படித்தறியாதவர், அவரிடம்தான் இவை அசலாக பதிவாகியிருக்கின்றன.

நாவல் முழுக்க இம்மாதிரி விவரணைகள் கொள்ளை கொள்கின்றன.

சுருசுருப்பு, குறும்பு, சூதுவெணயம் மிக்க பெண்ணின் பார்வையில் தமிழ்ச்சமூகம் மேலெழுந்து வருகிறது. பாரததேவி பெண்ணின் பார்வையில் எல்லா பக்கங்களிலும் அடைத்துக் கொள்ளாமல் மெலிந்த கொடிபோல பற்றிப் படர்கிறாள். அக்கொடிகளில் கனமான கனிகள் காய்த்துத் தொங்குகின்றன. வெவ்வேறான சுவைமிக்க அனுபவக்கனிகள். மையமற்று பன்முகம் கொண்ட கொடிகளாக கிளைவிட்டிருக்கின்றன. பாரததேவி மறைந்து நிலத்து மக்கள் அழுத்தமாக எழுந்து நடமாடுகிறார்கள். ஆதரவற்ற தங்கள் நிலையை வெளியே காட்ட முடியாமல் கௌரவங்களுக்காக சில பொய்களை (மகளிடம் இருந்து சாப்பிட) மக்கள் உண்டாக்கிக் கொள்கின்றனர். இம்சித்தவர்களுக்க பதிலடி (கொல்லம் டிக்கெட்) தந்து பழி தீர்த்துக் கொள்கின்றனர். ஓசியில் கிடைத்தால் எதையும் எதிலும் அள்ள தயாராக (வெள்ளத்தில் மிதந்து வந்த சொரண்டி) இருக்கிறார்கள். இரண்டு புருஷன் வாழ்க்கையில் (கொழுந்தன்) ஏமாற்றுபவருக்கு தண்டனை தர காத்திருக்கிறார்கள்.

பணத்திமிரால் உலவிய மனிதர்களின் சேட்டைகள், வன்கொடுமைகள், பாலியல் பலாத்காரங்கள், தண்டனைகள், போன்ற ஆதிக்க மனோபாவங்கள் எளிய மனிதர்களின் ஆசைகளை அழித்தொழிக்கின்றன. அதேசமயம் ஈவிரக்கமற்ற அதிகார தோரணையையும் – உருகி ஊற்றெடுக்கும் கருணை யையும் இந்நாவலில் ஒரு சேர காண்கின்றோம். சாமியையும் பேயையும் படைத்த மனிதன் மகத்தானவன்தான். தீமைக்கு பயந்து அவனுள் நல்லதனத்தைத் தூண்டிவிடும் ஒளியை பல்லாயிரமாண்டு நகர்த்தியிருக்கிறது. அப்படிமங்கள் உண்டாக்கிய தீமையின் அம்சங்கள் இறுப்பினும் கூட பரபரப்பையோ உணர்ச்சியையோ தூண்டவேண்டும் என்ற குறுக்கு இலக்கிய வித்தைகள் ஏதும் அறியாதவர். இப்படியாக நிகழ்ந்தது என்று முன்வைக்கும் பகுதிக்குள் உள்ளங்களின் சந்து பொந்துகள் பதுங்குகுழிகள் வெளிச்சத்திற்கு வருகின்றன. பாரததேவி அற்புதமான கதை சொல்லியாக இருக்கிறார். நிகழ்வுகளின் அடியாழத்தில் மனித சாராம்சமும், சமூக முரண்களும் கொண்டுள்ள அழகிய நாவல். அழகியல் என்பதற்கு உரிய அத்தனைத் தகுதிகளையும் பெற்ற சிறந்த கிராமிய நாவல் இது.

சு. வேணுகோபால்

ஒரு நாவலைத் திரும்ப படிக்க மலைப்பு ஏற்படும். அதன் கதைத்தன்மை தெரிந்ததும் ஒரு நிறைவு ஏற்படும். பத்து நாட்களுக்கு அந்த நாவலே மனதை ஆக்கிரமிப்பு செய்யும். நாவல் காட்டும் கோணத்தில் மூழ்கி அதற்காக மானசீகமாக வாதாட தோன்றும். கைமாறு செய்யத் தோன்றும். அந்த உலகத்தில் வாழும் சுகம் அற்புதமானது. ஆனால் இவ்வளவு பாதிப்பைக் கொடுத்த படைப்பைத் திரும்ப படிக்கிறபோது முதல் அனுபவம் கிட்டாது. பாதியாக குறைந்துவிடும் காரணம் தெரிந்த சிக்கல். நமக்கு அதன் முடிச்சுகள் எங்கெங்கே அவிழும் என்று தெரிந்திருப்பதால். பாரததேவியின் தன் வரலாற்றுப் புதினம் தகவல் களஞ்சியம். திரும்ப படிக்க வேலையை வைத்திருக்கிறது. நம்பிக்கைகள் தொடர்பான பண்பாட்டு அம்சங்களுக்காக ஒரு முறை படிக்கலாம். பேய்களுக்கும் மனித உறவிற்கும் உள்ள இழையைத் தெரிந்து கொள்ள ஒரு முறை படிக்கலாம். திரும்பத்திரும்ப படிப்பதற்கு இடம் தரும் நூலை தந்த பாரத தேவியை, பாராட்டியேத் தீரவேண்டும். இம்மாதிரியான ஆவணப்படுத்தலை அவர் தொடர்ந்து செய்ய வேண்டும்.

*

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *