பத்மா விஸ்வநாதனுடன் ஒரு உரையாடல்

“I am better at examining Questions than solving them. Better at making fun of ideas than coming up with greater social solutions”

பத்மா விஸ்வநாதன்

*

ஏப்ரல் 3, 4 ஆகிய தேதிகளில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ’நியூயார்க் ஃபவுண்டேஷன் ஆஃப் அகாடமி’ வளாகத்தில் வாழும் தமிழ் விழா எழுத்தாளர் ஜெயமோகன், அவரின் வாசகர்களால் உருவாக்கப்பட்ட விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமெரிக்கா கிளையின் முன்னெடுப்பில் நிகழ்ந்தது. அதில் ஒரு விருந்தினராக பத்மா விஸ்வநாதன் கலந்து கொண்டார். நிகழ்வின் முதல் நாள் அவரை சந்தித்து அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவருடைய அமர்வு முதல் நாள் நிகழ்ந்தது. “Through her lens“ என்ற தலைப்பில் சஹானா குமாரின் மட்டுறுத்தலில் பத்மா விஸ்வநாதனுடன், அ.வெண்ணிலா, சந்திரா தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வு முடிந்ததும் அவரிடம் நேர்காணல் எடுக்கும் எண்ணத்தைப் பகிர்ந்து கொண்டபோது உடனே ஒப்புக் கொண்டார். ஆனால் அவருக்குத் தோதான நேரத்தைக் கண்டறிவதில் சிக்கல் இருந்தது. இருவருமே அமர்வுகளில் கலந்து கொள்வதிலும் பிற எழுத்தாளர்களுடன் உரையாடுவதில் விருப்பமுள்ளவர்களாய் இருந்தோம். இரண்டாம் நாள் சந்தித்துக் கொண்டபோதெல்லாம் எந்த நேரம் சரியாக இருக்கும் என்று ஆய்வதில் சில நிமிடங்கள் செலவிட்டு பிரிபவர்களாக இருந்தோம். இரண்டாம் நாள் அவர் டாமியன் சியர்ல்ஸுடன் மொழியாக்கம் சார்ந்து உரையாடிக் கொண்டிருந்தபோது அதை அருகில் நின்று கவனித்துக் கொண்டிருந்தேன். சற்று நேரத்தில் அவரிடம் விடைபெற்று நேர்காணல் சார்ந்து இந்த இரண்டாம் நாளின் இறுதியில் இரவுணவிற்கு முன் ஒரு மணி நேரம் உரையாடலாம் என்று முடிவு செய்து கொண்டு விடைபெற்றோம். பத்மா இரண்டு நாளும் இந்திய பாணியிலான உடையுடன் ஒரு ஸ்டோல் என்று சொல்லக்கூடிய ஒரு மெல்லிய வண்ண நிறமுள்ள சால்வையை கழுத்தைச் சுற்றி அணிந்திருந்தார். மென்மையான குரலும், அதே மெல்லிய தோற்றமும் கொண்டிருந்தார். சற்று தொட்டால் உடைந்துவிடும் மென்மை போல. அவருடைய கணவர் ஜெஃப்ரி (Geoffrey Brock) மிக நெடிய மனிதர். பத்மாவுக்கு எதிர்த்திசையில் சற்று கரடான தோற்றமும் இயல்பாக பகடித்தன்மையுடன் கூடிய திறந்த உரையாடலைக் கொண்டிருந்தார். மஞ்சள் நிற பூப்போட்ட சட்டை அவர் சிரிக்கும்போது அந்த கரடுத்தன்மையை குறைத்தபடி இருந்தது. அவரிடம் பத்மா என்னை அறிமுகப்படுத்தினார். நேர்காணலுக்கு சென்று விட்டு வருவதாகவும், அது முடிந்தபின் இரவுணவு மேசையில் வந்து மீள சந்திப்பதாகச் சொல்லி விடைபெற்றார். அவர் ஆச்சர்யமாக புருவத்தை உயர்த்தியபடி வழி அனுப்பினார். அதன்பின் ஜெஃப்ரி அவருடன் ஏற்கனவே பேசிக் கொண்டிருந்தவர்களிடன் உரையாடலைத் தொடர்ந்தார். நாங்கள் அருகிலேயே யாருமில்லாத ஒரு இடத்தைத் தெரிவு செய்யும்பொருட்டு அறைகளை ஆராய்ந்தபடி அலைந்தோம்.

அந்தக்கட்டிடத்தின் மார்பில் தரைகளின் வகைமைகளும், திடமான மர வேலைப்பாடுகளும் உயர்ந்த ஜன்னல் கொண்ட அறைகளும் மயக்குவனவாக் இருந்தன. 177 வருடங்களுக்கு முற்பட்ட கட்டிடம் அது. புராதனக் கட்டிடங்களில் ஆன்மாக்கள் (நல்ல)உலவுவதாக எனக்கு எண்ணம் உண்டு. குறிப்பாக யாருமற்ற அறைகளில்.க. நா.சு அரங்குக்கு அருகிலிருந்த ஒரு யாரும் இல்லாத பெரிய அறை ஒன்றில் ஜன்னலுக்கு அருகில் அமர்ந்து கொண்டோம். அந்த அறையிலும் சீராக அடுக்கப்பட்ட ஒரே நிறத்திலான பைண்டிங் அட்டை கொண்ட புத்தக அலமாரிகளின் ஒரு வரிசை இருந்தது. பிராய்டின் புத்தகங்கள் அந்த வளாகத்தில் இருப்பதாக இணையத்தில் வாசித்திருந்தேன். அறைக்கு வெளியில் அமர்வுக்கு வந்தவர்களின் குரல் மேற்கத்திய இசையின் ஓலம் போல சீராக மெல்ல ஒலித்துக் கொண்டிருந்தது. தொந்தரவாக இல்லை. ஜன்னலின் மாலை மங்கிய வெளிச்சம் பத்மாவின் ஒரு புறம் படிந்திருந்தது. நான் என் தொலைபேசியை எடுத்து குரல் ஒலிப்பதிவை ஆன் செய்தேன்.

இந்த உரையாடல் சமகால அமெரிக்க இலக்கியச் சூழலை இதே காலகட்டத்தைச் சேர்ந்த ஒரு முக்கியமான எழுத்தாளராக கருதப்படும் ஒருவர் வழியாக அறிந்து கொள்ளும் நோக்கம் கொண்டது.

-ரம்யா

*

பத்மா விஸ்வநாதன்

கேள்வி: வாழும் தமிழ் விழாவிற்காக உங்களையும் ஜனிகா ஓசாவின் எழுத்துக்களையும் வாசித்தேன். 21ஆம் நூற்றாண்டு அமெரிக்க/ மேற்கு எழுத்தைப் பொறுத்து புலம்பெயர் எழுத்து, குயர் எழுத்து, சிறுபான்மை எழுத்து முக்கிய இடம் வகிப்பதைப் பார்க்க முடிகிறது. பெரும்பாலும் இவை தன் வரலாற்று நினைவுப்பதிவு (memoir) நாவலாக உள்ளது. உங்கள் “Toss of a Lemon” நாவலும் அத்தகைய தன்மையானது எனலாம். இதற்கு இணையாக நேடிவ் அமெரிக்கன் எழுத்தும் உள்ளது. நீங்கள் இந்தச் சூழலை எப்படி அவதானிக்கிறீர்கள்?

பத்மா விஸ்வநாதன்: Toss of a Lemon நாவல் எங்களுடைய குடும்பம் இங்கு புலம்பெயர்ந்ததற்கு முன்னால் நிகழ்ந்த வாழ்க்கையைச் சொல்வது. என்னுடைய எண்ணம் 1960-களில் நிகழ்ந்த அந்த reverse discrimination-ஆல் நிகழ்ந்த பெரும் புலம்பெயர்வு பற்றிய விசாரணையை உள்ளடக்கியது எனலாம். நீங்கள் சொல்வது போல என்னுடைய வேரை நோக்கிய தேடலை ஒட்டியது தான். ஜனிகா ஓசாவின் நாவலைப் போல. பாரதி முகர்ஜியைப் (Bharati Mukherjee) போல எங்களுக்கு முன் ஒரு தலைமுறை உள்ளது. இந்திய-அமெரிக்க எழுத்து என அதைச் சொல்லலாம். இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்தவர். அவருடைய எழுத்து எனக்கு ஆதர்சம் என்றாலும் அவருடைய அனுபவம் என்னுடைய அனுபவம் அல்ல. நான் அமெரிக்காவில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்தவள். எனவே, என்னுடைய கேள்விகள் வேறாக இருந்தன. இப்போதூ ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன். நன்றாக முடித்துவிடுவேன் என்று நினைக்கிறேன் (சிரிக்கிறார்). அது தமிழ்நாட்டில் பிறக்கும் இரட்டையர்களைப் பற்றிய கதை. ஒரு குழந்தை கனடா நாட்டில் தத்தெடுக்கப்படுகிறது. இன்னொரு குழந்தை தமிழ்நாட்டில் தங்கிவிடுகிறது. அவர்கள் பல ஆண்டுகளுக்குப் பின் சந்தித்துக் கொள்ளும்போது என்ன நிகழ்கிறது என்பதைப் பற்றியது. என்னுடைய உறவினர்களைப் (cousins) பார்க்கிறேன். அவர்கள் சில வருடங்கள் அமெரிக்காவில், கனடாவில் வேலை செய்கிறார்கள். பின்னர் இந்தியா திரும்புகிறார்கள். பின்னர் மீண்டும் வேலை. இப்படி அவர்களால் முன் – பின் இயல்பாக நகர்ந்துவிட முடிகிறது. ஆனால் என்னுடைய தந்தையை எடுத்துக் கொண்டால், அவர் அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்தார். திருமணமாகி கனடா சென்று அங்கேயே தங்கிவிட்டார். இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள முற்படுகிறேன். என் பாட்டி காலத்தில் இந்தியாவை விட்டு வெளியேறுவதன் மேல் எதிர்க்குரல் இருந்தது. இப்போது இளைஞர்கள் அமெரிக்க கம்பெனியில் ஐந்து வருடங்கள் வேலை பார்க்கிறார்கள். திரும்ப இந்தியா செல்கிறார்கள். உலகளாவிய பரவலும், இயக்கமும் (Global Mobility) அதிகரித்துள்ளது. இலக்கியத்திலும் இதன் தாக்கம் உள்ளதைப் பார்க்கிறேன். அதன் வெளிப்பாடகத்தான் இந்த வகைமை எழுத்தைப் பார்க்கிறேன்.

நீங்கள் 1999-ல் House of Sacred Cows நாடகத்திற்கான திரைக்கதை எழுதினீர்கள். 2000-ல் ’By Air, By Water, By Wood’ என்ற நாடக நூலின் ஆசிரியர். எப்படி நாடகத்தின் மீது ஆர்வம் வந்தது. எனக்கும் நாடகத்துறையின் மீது ஆர்வம் உள்ளது. தமிழில் நாடகத்திற்கென பெரிய மரபும் உள்ளது. அமெரிக்க நாடகத்துறை சார்ந்து உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ப.வி: அருமையான கேள்வி (உற்சாகமாகிவிட்டார்..). நான் நாடகத்துறைக்கு வந்தது ஒரு நகைச்சுவையான வழி என்று தான் சொல்ல வேண்டும். நான் சமூகவியல் துறை மாணவி. நான் ஒரு சமூக சேவையாளராக ஆகி சமூக மாற்றத்தில் ஒரு அங்காமாக இருக்க வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் அதில் மிக திருப்திகரமாக என்னால் செயல்பட இயலவில்லை. நான் கனடா நாட்டின் எட்மாண்டன் (Edmonton) நகரத்திற்கு அருகில் தான் வளர்ந்தேன். அந்த நகரம் நிறைய நாடகத்திற்கான தியேட்டர்களைக் கொண்டது. மிகத்தீவிரமாக இயங்கக் கூடிய தியேட்டர்கள். இந்தக் கண்டத்தின் மிக முக்கியமான நாடகத்திருவிழாக்கள் நடக்கும் இடமும் கூட. கனடிய நகரங்களில் மிக அதிகமான ’தியேட்டர் per capita” கொண்ட நகரம். அப்படியென்றால் என்ன என்று சரியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் நான் நாடகத்துறையில் ஈடுபட்டேன். முதலில் சமூக நடவடிக்கைகள் (social action) சார்ந்த நாடகத்தில், அது சார்ந்த நாடகக் கம்பெனிகளுடன் இணைந்து பணியாற்றினேன். அங்கிருந்த ஆர்ட் டைரக்டர் என்னை நாடகத்தின் எல்லாவற்றிலும் ஈடுபடச் செய்தார். அதன் வழியாக நான் என்னவாக விரும்புகிறேன் என்பதைக் கண்டறியலாம் என்று நினைத்தேன். அப்படித்தான் நான் நாடக ஆசிரியருக்கான எழுத்துப் பயிற்சியில் சேர்ந்தேன். ஆறு வார பயிற்சி வகுப்பின் இறுதியில் நான் எழுதியது தான் என் முதல் நாடகமானது. ஒரு இருபது நிமிட மெல்லிய பகடி நாடகம் அது. அந்தத் தருணத்தில் என்னுடைய எல்லா சந்தேகங்களும் அகன்றது. நான் என்ன ஆக வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன். நான் எழுத்தாளராக விரும்புகிறேன். அவ்வளவுதான். அந்தப் பயிற்சி வகுப்பில் எழுதப்பட்ட நாடகங்கள் அனைத்துமே நாடகமாக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டதை என்னுடைய அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். அப்போது அதில் அனுபவம் வாய்ந்த தொழில்முறை நாடக நடிகர்கள் நடித்தார்கள். புதிய நாடக இயக்குனர் ஒருவர் வந்தார். அவருக்கு என்னுடைய நாடகம் பிடித்திருந்தது. என்னுடைய சின்ன காட்சிகள் கொண்ட நாடகத்தை முழுக்காட்சியாக மாற்றி அரங்காற்றுகை செய்ய ஏற்றுக் கொண்டார். இரண்டு வருடங்கள் அவருடன் பயணித்தேன். எனக்கு அவர் ஆசிரியராக, பயிற்றுனராக இருந்தார். பல இடங்களில் அவருடன் பயிற்சி வகுப்புகளில் இருந்தேன். அப்படியாக நான் எழுதிய நாடகமான House of Sacred Cows -ஐ அவர் அரங்கேற்றினார். அப்படி நான் ஓவர்நைட்டில் ஒரு பயிற்றப்பட்ட தொழில்முறை நாடக ஆசிரியராக ஆனேன். வட அமெரிக்க ஆங்கிலத்தைப் பொறுத்து ”Sacred Cows” என்பதற்கான அர்த்தம் ’மீறக்கூடாத ஒரு கருத்து, கொள்கை’ ஆகியவற்றைக் குறிப்பது. அமெரிக்காவில் எல்லோரும் இணைந்து வாழக்கூடிய (cooperative living) ஒரு குடியிருப்பு வசதி உண்டு. வேறு நாட்டிலிருந்து வந்து முனைவர் பட்ட ஆய்வு செய்யும் மாணவர்கள், தங்கள் ஆய்வுக்காலம் முடிந்தும் அதை முடிக்க இயலாமல் இருப்பவர்கள் அந்த மாதிரியான இடங்களில் தங்குவார்கள். அது போன்று தங்கிப்படிக்கும் ஒரு இந்திய மாணவரிடம் அவரின் பெற்றோர்கள் ஆவியாக வந்து இந்தியாவில் அவருக்காக காத்துக் கொண்டிருப்பவர்களையும், கல்யாணமாகாத தங்கை பற்றியும் சொல்லி வருத்தப்படுவது போல காட்சி அமைத்திருந்தேன். மேற்கு, கிழக்கு இரண்டு இடங்களிலும் உள்ள நம்பிக்கைகளைப் பகடி செய்வதான நாடகமது.

கேள்வி: அது தான் உங்களுடைய கேள்வி இல்லையா?

ப.வி: ஆம். மிகச்சரி. என்னுடைய கேள்விகள் தான். ”I am better at examining Questions than solving them. Better at making fun of ideas than coming up with greater social solutions”. அது தான் இந்த உலகத்தில் என்னுடைய பங்களிப்பு என்று கருதுகிறேன். அப்படித்தான் நாடகத்தில் நுழைந்தேன். நான் சிறுவயதிலிருந்தே புத்தகம் வாசிப்பவளாக இருந்தேன். நான் நடனக் கலைஞரும் கூட. ஆனால் இயல்பாக நாடகத்திற்குள் நுழைய முடிந்தது. இரண்டு நீள் நாடகங்களும், இரண்டு சிறிய நாடகங்களும் எழுதியுள்ளேன். ஒரு மாரியம்மன் கதை அதில் அடங்கும். என் அம்மாவின் பூர்விகம் மதுரை சோழவந்தான் பகுதியைச் சார்ந்தது. அதை ஒட்டி எழுதினேன்.

கேள்வி: எத்தனை வருடங்கள் நாடகத்துறையில் பங்களிப்பாற்றினீர்கள்?

ப.வி: மூன்று நான்கு வருடங்கள் இருக்கும். என்னுடைய நாவலின் ஒரு கதாப்பாத்திரம் கூட ஒரு நாடக நடிகை தான். என்னுடைய இரண்டு சிறந்த நண்பர்கள் நாடகத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் நாடக நடிகை, பாகிஸ்தானிய கனேடியர். என்னுடைய மிகச் சிறந்த நண்பர்கள், நினைவுகள் அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தவை. இப்போது நான் நாடகத்திற்கான திரைக்கதை எழுதுவதில்லை. ஆனால் என்னுடைய எழுத்தில் நாடகம், நடிகர்கள், அந்த மனிதர்கள் முக்கிய அங்கம் வகிப்பதைப் பார்க்க முடிகிறது. நாடகத்திலிருந்து நான் நாவல் எழுதுவதற்கு அப்படியே நகர்ந்துவிட்டேன். அது தான் என்னுடைய முழு வெளிப்பாட்டு வடிவம் என்று கண்டு கொண்டேன்.

உங்கள் முதல் நாவல் அனுபவத்தைப் பற்றி சொல்லுங்கள்?

ப.வி: என்னுடைய பாட்டி கனடாவிலிருந்து இந்தியா திரும்பிச் செல்வதாகச் சொன்னார்கள். எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. அவர்களைப் பிரிவது எனக்கு வருத்தமாக இருந்தது. அப்போது தான் அவர்களின் கதையைக் கேட்க வேண்டும் என்று தோன்றியது. அந்தக் கதையில் என் பாட்டி தன் பாட்டியைப் பற்றி சொன்னார். அவரின் வளர்ப்பு பற்றி, பன்னிரெண்டு வயதிற்குப் பின் பள்ளிக்குச் செல்ல முடியாததைப் பற்றி. அவர் எழுத்தாளராக விரும்பியதாகவும் சொன்னார். அவர் ஒரு அருமையான கதைசொல்லி. அத்தனை நினைவாற்றல் உள்ளவர். அவரிடமிருந்து என் குடும்பக் கதையை அறிந்து கொண்டேன். அதன் பின் இரு ஆண்டுகள் 1890-க்கும் 1965-க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் நடந்த அரசியல் மற்றும் புவிசார் அரசியல் மாற்றங்களைப் பற்றிய சித்திரத்தை வரைவதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டேன். பயணம் செய்தேன். அதையொட்டிய கேள்விகளையும் விரித்துக் கொண்டேன். என் நோக்கம் அவருடைய கதைகளை அப்படியே எழுதுவது அல்ல. மாறாக, வேகமாக மாறிவரும் ஒரு சமூக அரசியல் பின்னணியில் ஒரு குடும்பத்தின் பயணத்தைப் பதிவு செய்வதே. அதுவே இறுதியில் எனது முதல் நாவலாக உருவானது.

உங்கள் பாட்டி தான் டாஸ் ஆஃப் லெமன் நாவலின் நடுநாயகம். அந்தப் பெண்களின் துணிச்சலை, உணர்வுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்.

ப.வி: அது மிகவும் ஆழமானது. இதைப் புரிந்துகொள்ள, என் நாவலின் முக்கியக் கதாபாத்திரமான ‘சிவகாமியைப்’ பற்றி சொல்ல வேண்டும். சிவகாமி, என் பாட்டியின் பாட்டியுடைய தன்மையை ஒத்தவர். நிஜ வாழ்க்கையில், என் கொள்ளுப் பாட்டிக்கு ஒரு மகளும், அவரை விட்டுப் பிரிந்து சென்ற ஒரு மகனும் இருந்தனர். அவருடைய மகளுக்கு நிறைய குழந்தைகள் பிறந்தனர், ஆனால் அவர் தனது முப்பதுகளின் பிற்பகுதியில் பிரசவத்தின்போது துயரமான முறையில் இறந்துவிட்டார். அதனால்தான் என் பாட்டியை அவருடைய பாட்டி (என் கொள்ளுப் பாட்டி) வளர்த்தார். மேலும், என் பாட்டியின் தந்தை நிதி விஷயங்களில் மிகவும் பொறுப்பற்றவராக இருந்தார்.

நான் சில நேரங்களில் என் குடும்ப வரலாற்றையும் கற்பனையையும் ஒன்றாக்கிக் குழப்பிக்கொள்வேன், அதனால் நான் கொஞ்சம் நிதானமாகச் சொல்ல வேண்டும்! (சிரிக்கிறார்…)

பொறுமையாகச் சொல்லுங்கள். பிரச்சனையில்லை…

நாவலில், என் கதாபாத்திரமான சிவகாமிக்கு பதினெட்டு வயதாக இருக்கும்போது, ஜோதிடரான அவளுடைய கணவர் தனது சொந்த மரணத்தைக் கணித்த சிறிது நேரத்திலேயே இறந்துவிடுகிறார். இதனால் அவள் சிறு வயதிலேயே இரண்டு குழந்தைகளுடன் விதவையாகிறாள். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த ஒரு பிராமண விதவை என்பதால், அவள் தன் தலையை மொட்டையடித்துக்கொண்டு, வெள்ளை உடை மட்டுமே அணிய வேண்டும் என்று சமூக விதிகள் கட்டாயப்படுத்தின. எல்லாவற்றையும் விட நெஞ்சை உலுக்கும் விஷயம் என்னவென்றால், அவள் தன் சொந்தக் குழந்தைகளைத் தொடுவதற்குக் கூட அனுமதிக்கப்படவில்லை.

19, 20ஆம் நூற்றாண்டு பிராமணக் கைம்பெண்களின் நிலையைப் பற்றி வாசித்திருக்கிறேன். நீங்கள் சொல்வது கேட்பதற்கே மிகவும் கடினமாக இருக்கிறது.

உண்மைதான். என் நாவலில், ஒரு இரண்டு வயதுச் சிறுவன் இருக்கிறான். அவனால் அவனது தாயைக் அணைத்துக் கொள்ள முடியாது, அவளும் அவனைத் திரும்பிக் அணைத்துக் கொள்ள முடியாது. அது அந்தப் பையனின் உள்ளத்தில் கடுமையான உணர்வுச் சிதைவை ஏற்படுத்துகிறது. ஆனால் வளர்ந்து பெரியவனானதும், தன் சகோதரியின் குழந்தைகளை மிகுந்த அக்கறையுடன் பார்த்துக்கொள்ளும் ஒரு பொறுப்பான மனிதனாக மாறுகிறான். ஆனால், அவனுள் ஒரு ஆழமான, நீங்காத உணர்ச்சி வறட்சியும் இறுக்கமும் எஞ்சிவிடுகிறது, குறிப்பாக அவனது தாயிடம்.

இப்போது உங்களிடம் பேசும்போது உண்மையாகவே நடந்தவற்றைப் பற்றி சொல்கிறேனா என்னுடைய நாவலில் நான் எழுதியதைச் சொல்கிறேனா என்று சந்தேகம் வருகிறது. எனவே அதை விட்டு விடலாம். நாவல் எதைப்பற்றியது என்பதைச் சொல்வதற்காக உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

பத்மா விஸ்வநாதன்

சரி. நீங்கள் போர்த்துகீசிய, ஸ்பானிஷ் மொழிகளிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்திருக்கிறீர்கள் என்று தெரிந்து கொண்டபோது ஆச்சர்யமாக இருந்தது. அது பற்றி சொல்லுங்கள்.

ப.வி: (சிரிக்கிறார்..) என்னுடைய இந்த “toss of lemon” நாவலுக்காக வேலை செய்து கொண்டிருக்கும்போது நான் “system of syncretic overlay” (இரு வேறு கலாச்சாரம், பண்பாடு, மதம், தத்துவம் ஆகியவற்றின் ஒன்றிணைவு) என்பதன் மேல் ஈர்க்கப்பட்டேன். உதாரணமாக ஒரு ஆதிக்க கலாச்சாரத்தின் கடவுளர்கள், அதிக்கம் செலுத்த விழையும் கலாச்சாரத்தின் கடவுளர்களை அதற்கு கீழே சிறிய கடவுளர்களாக மாற்றிக் கொள்ளும். ராமர், பார்வதி, விஷ்ணு ஆகியவர்கள் மேல் அடுக்கிலும், மாரியம்மாள், காளியம்மாள் ஆகியோர் கீழ் அடுக்கிலும் ஆவது இவ்வாறு தான். இது அதிகார அடுக்கு சம்பந்தமானதும் கூட. பிரேசிலில் இதை மிகத் திட்டமாகப் பார்க்கலாம். நம் தமிழ்க் கலாச்சாரத்திற்கு நெருக்கமாக அவர்கள் இருந்தார்கள். பிரேசிலிலுள்ள ஆப்பிரிக்கர்கள் தங்கள் கலாச்சாரத்திற்கு சம்பந்தம் இல்லாத கத்தோலிக்கக் கடவுளர்களை கும்பிட்டனார். ஆனால் ஒவ்வொரு கத்தோலிக்கக் கடவுளுக்கு இணையாக தங்கள் கடவுளர்களை அதற்குக் கீழாக வைத்துக் கொண்டார்கள். உதாரணமாக கன்னி மரியாளை வழிபட்டார்கள். அவருக்குக் கீழாக தங்களின் கடல் தேவதையான யமான்யா (yemanja/yemaya) -வை வழிபட்டார்கள். இதன்மேல் ஈடுபாடு வந்தது. பிரேசிலிய இசை மற்றும் பிரேசிலிய கலாச்சாரத்தினாலும் ஈர்க்கப்பட்டேன். அம்னெஸ்டி இண்டர்னேஷனல் ஆர்டிஸ்ட் நெட்வொர்க்கில் இருந்தேன். ஒரு அர்ஜெண்டீனிய கொடுங்கோல் அரசால் பாதிக்கப்பட்ட அர்ஜெண்டீனிய நண்பர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அதையொட்டிய நாடகம் ஒன்றை எழுதிக் கொடுத்தேன். அது வெற்றிகரமான நாடகம் இல்லை. ஆனால் அதற்காக நான் போர்த்துகீஸிய மொழியைக் கற்றேன். பிரேசில் நாட்டை மக்களை முழுமையாக புரிந்து கொள்ள முற்பட்டேன். என்னுடைய பிரேசிலிய மொழி ஆசிரியர் எனக்கு இப்போதும் நெருங்கிய நண்பர். அவரும் நடனம் ஆடுபவர். பயிற்றுனர். அவருடைய நடனக் கம்பெனி பிரேசிலில் நடன அரங்கேற்றம் செய்ய ஒரு ஒருங்கிணைப்பாளர் தேவைப்பட்டார். அதற்குள் நான் போர்த்துகீசிய மொழியில் தேர்ச்சி பெற்றிருந்தேன். stage management, tour management செய்வதிலும் திறமையாக இருந்தேன். அவர்களுடன் அப்படி சில வருடங்கள் செலவிட்டேன்.

நீங்கள் உண்மையான கலைஞருக்குரிய வாழ்க்கை வாழ்வது போல உள்ளது. அனைத்தையும் நீங்கள் எழுத்துக்காக மட்டுமே மடைமாற்றிக் கொண்டது போலத் தெரிகிறது.

ப.வி: ஆமாம். (சிரிக்கிறார்..). நீங்களும் எழுத்தாளர் தானே. புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். எனக்கு அமெரிக்கா, கனடா, இந்தியாவுடன் உணர்வுப்பூர்வமான தொடர்பு உள்ளது. ஆனால் பிரேசிலுடன் ஒரு சிக்கலற்ற தொடர்பு என்று சொல்லலாம். அதன் இசை, கலை, மொழி சார்ந்த ஈடுபாடு மட்டுமே. அங்குள்ள சிக்கல் என்னுடைய சிக்கல் இல்லை என்று தோன்றும். அதனால் இயல்பாக அதன்மேல் அன்புடன் இருக்க முடியும். தமிழில் என்னால் பேச முடிந்ததே இல்லை. அதை நான் அத்தனை உணர்வுப்பூர்வமாகப் பார்க்கிறேன். பிரேசிலை மிக எளிதாக அணுகுகிறேன். பெரிய வித்தியாசம் உள்ளது.

உலகமயமாக்களுக்குப் பின் தமிழ் எழுத்தாளர்களில் சில எழுத்துக்கள் நிலம் என்பதைப் பொறுத்து நாம் நம்மை குறுக்கிக் கொள்ளத் தேவையில்லை என்ற பார்வையைக் கொண்டுள்ளதைப் பார்க்கிறேன். வேர் என்பது சுமையாகப் பார்க்கப்படும் போக்கு எனலாம். நீங்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எழுத்தாளர். இத்தனை நிலங்களை உங்களுடையது என கருதினாலும் உணர்வுப்பூர்வத் தொடர்பைப் பற்றியும் பேசுகிறீர்கள். நீங்கள் மரபை, வேரைத் தேடுபவரக உங்களைக் கருதுகிறீர்களா அல்லது உலகளாவிய வேரற்ற எழுத்தாளராகக் கருதுகிறீர்களா?

ப.வி: எழுத்தாளர்கள் எதைப் பற்றி எழுத வேண்டும் என்பதில் எந்த வரையறையும் இருக்கக்கூடாது என்று நம்புகிறேன். பிரேசிலின் கலாச்சாரம் என்னை மிகவும் ஈர்க்கிறது. ஏன் என்று தெரியவில்லை. அதேசமயம் எனக்கு மேற்கு ஆப்பிரிக்க நடனமும் மிகவும் பிடிக்கும். பாலேவும் ஆடுவேன், பரதநாட்டியமும் ஆடுவேன். பரதநாட்டியத்தை முப்பதியைந்து வருடங்கள் கற்றேன். நீங்கள் முன்னோக்கிச் செல்லும்போது வாழ்க்கையின் பல்வேறு இழைகள் நமக்குத் திறந்து கொடுக்கிறது. அமெரிக்கா ஏன் வந்தேன்! அங்கு தான் என்னுடைய காதலரைக் கண்டுகொண்டேன். நான் ஒரு அமெரிக்கரைத் திருமணம் செய்து கொள்வேன் என்று நினைத்துப் பார்க்கவேயில்லை. என் இரு குழந்தைகளும் அமெரிக்காவில் தான் பிறந்தது. கனடாவில் தான் என் வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். என் தந்தை மீண்டும் புலம்பெயரும் எண்ணமில்லாதிருந்தார். அவரும் இங்கு வந்துவிட்டார். அவருடைய தேர்வும், அவருடைய தேர்வுக்கு உட்படாததும் நடந்திருக்கிறது. ஒரு கலைஞராக நாம் எதைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பது நம் கையில் இல்லை. நான் நிறைய தமிழ் எழுத்தாளர்களின் கதைகளின் மொழியாக்கங்கள் வாசிக்கிறேன். அவர்கள் கிராமத்தை, அங்குள்ள அரசியலை, சாதியை, தங்கள் வேர்களை எழுதுகிறார்கள். ஒருவேளை வேறு தமிழ் எழுத்தாளர் ஒருவர் தான் அதை எழுத வேண்டாம் என்று முடிவெடுத்தால் அதுவும் சரிதான். என்னுடைய முதல் நூல் தமிழ்நாட்டை பின்னனியாகக் கொண்டது. என்னுடைய வேரை நோக்கிய தேடல் தான். என் இரண்டாவது நாவல் இரு கனேடிய குடும்பங்கள் பற்றியது, மூன்றாவது நாவல் ஒரு கனேடிய நபர், அவருடைய மாற்றாந்தாய் வங்கிக் கொள்ளைக்காரர் அது பற்றியது. நான்காவது நாவல் தெற்காசிய கனேடியப் பெண், அர்கான்சாவில் வசிப்பவர் பற்றியது. இதற்கும் என் வேர்களுக்கும் சம்பந்தம் இல்லை.

பத்மா, ஜெஃப்ரி ப்ராக் -உடன்

உங்களுடைய கதைக்களத்தைப் பார்க்கையில் நீங்கள் மிகவும் மனிதர்களைச் சார்ந்த எழுத்தாளராகத் தென்படுகிறீர்கள். மனித உறவுகள் தொடர்பான கேள்விகளுக்கே மையமாக முக்கியத்துவம் அளிக்கிறீர்கள்.

ப.வி: ஆம். அதைத்தான் எழுதுகிறேன். நான் மிகவும் ரியலிஸ்ட்-ம் இல்லை. மாய யதார்த்ததம் சார்ந்த கதைக்களத்தின் மீதும் ஆர்வம் உண்டு. ’பத்மா இன் சார்ட்டர் ஹவுஸ்’ (The Charter House of Padma) நாவல் அப்படியானது தான். ஆனால் நீங்கள் சொல்வதுபோல மானிதர்கள் சார்ந்த கேள்விகள் தான் பிரதானமாக இருக்கிறதென்பதை ஒத்துக்கொள்கிறேன்.

வாழும் தமிழ் விழா நிகழ்வில் கலந்து கொண்ட சமகால அமெரிக்க எழுத்தாளர்களுக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கும் ஒரு வித்தியாசத்தைக் காண முடிந்தது. அதில் முதலாவது அமெரிக்க எழுத்தாளர்கள் அனைவரும்/ பெரும்பானமை படைப்பிலக்கியம் சார்ந்த முதுகலைப்பட்டம் (MFA-creative writing) பெற்றவர்களாக இருந்தனர். மொழியாக்கம் செய்பவர்களும் அது தொடர்பான பட்டப்படிப்பு படித்தவர்கள். பெரும்பான்மையானோர் தத்தம் துறை சார் பேராசிரியர்கள். உங்கள் நாவல் எழுதுவதற்காக உங்களுக்கான ஊக்கத்தொகையும் தங்கும் வசதி கொண்ட நிகழ்வுகளும் இருப்பதைப் பார்க்கிறேன். ஆனால் தமிழில் இப்படியொரு விஷயம் இல்லை. நாங்கள் வெவ்வேறு துறை சார்ந்தவர்கள். கல்விப்புலத்திற்கும் தீவிர இலக்கியத்திற்கும் பெரிய இடைவெளி இங்கு உள்ளது. ஆனால் அமெரிக்காவில் அறியப்பட்ட சமகால இலக்கியவாதிகள் உட்பட அனைவருக்கும் கல்விப்புலத்தில் இடம் தரப்பட்டுள்ளது. இதை எப்படிப்பார்க்கிறீர்கள்.

ப.வி: ஆனால் இங்கு சற்று கடினமும் உள்ளது. இப்படிச் சொல்லலாம் இந்தியாவை விட அமெரிக்காவில் வாழ்வது சுலபம். கள உண்மை அது. ஆனால் அமெரிக்காவை விட கனடாவில் வாழ்வது இன்னும் சுலபம். ஏனெனில் இங்கு (அமெரிக்காவில்) மருத்துவக் காப்பீடு பெரிய செலவு. நீங்கள் நோய்வாய்பட்டுவிட்டால் அதிக செலவு செய்து கடனாளியாக நேரும். இது நிகழாமல் இருக்க நீங்கள் ஏதாவது வேலை செய்ய வேண்டும் அல்லது கல்வி நிகழ்வுகளின் பகுதியாக இருக்க வேண்டும். ஏனெனில் அவையே உங்கள் மருத்துவக்காப்பீட்டைப் பார்த்துக் கொள்ளும். அதனால் தான் எழுத்தாளர்கள் பெரும்பாலும் இதில் இருக்கிறார்கள். உதாரணமாக எங்கள் கல்லூரியை எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் பட்டப்படிப்பு இலவசமாக படித்துக் கொள்ளலாம். மாலை நேர எழுத்து வகுப்புகள் எடுக்க சம்பளமும் தரப்படுகிறது. இதுவும் ஒரு வேலைவாய்ப்பு அமைப்பு தான். சற்று எழுத நேரம் கிடைக்கும் என்று நினைத்து இதையெல்லாம் செய்கிறோம். பட்டப்படிப்பு முடிந்து வேலை தேட வேண்டும். என்னுடைய இருபதுகளில் கனடாவில் இருக்கும்போது நான் சுயாதீன எழுத்தாளராக பல பத்திரிக்கைகளுக்கு எழுதுபவளாக இருந்தேன். பல மாணவர்களுக்கு டியூஷனும் எடுத்தேன். இதெல்லாம் நான் நாவல் எழுதுவதற்கு உதவியாக இருந்தது. ஜெஃப் பரோக்கை சந்தித்தேன். காதலித்து திருமணம் செய்து கொண்டேன். அவருக்கு ஆர்கன்சாவில் வேலை கிடைத்தது. என் சிறிய குழந்தைகளை கவனித்துக் கொள்ள என் பெற்றோர்கள் உடன் வந்து தங்கினர். காலை எழுந்து எழுதுவேன். பிற நேரங்களில் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவேன். என் இரண்டாவது குழந்தையும் ஐந்து வயதாகி பள்ளிக்குச் சென்றபிறகு தான் முழு நேர ஆசிரியப்பணியை எடுத்துக் கொண்டேன். இப்போது அந்தப்பணியில் தான் இருக்கிறேன். அதுவே எனக்கு எழுதுவதற்கான நேரத்தைத் தருகிறது.

இந்தப்பணி உங்கள் விருப்பத்திற்குரிய பணியாக உள்ளதா? அல்லது…

ப.வி: நான் இப்பணியை மிகவும் விரும்புகிறேன். இதில் விரும்பத்தகாத பகுதியென்பது நிர்வாகம் சார்ந்த வேலை தான். அதையும் செய்ய வேண்டும். ஆனால் மாணவர்களுடன் நேரம் செலவிடுவது மிகவும் பிடித்த ஒன்று. அருமையான மாணவர்கள்! இலக்கியம் எனக்கு மிக விருப்பமான ஒன்று. அதை பயிற்றுவிப்பது இன்னும் விருப்பம் தானே. மாணவர்களுடன் சேர்ந்து இலக்கியம் வாசிப்பது இதில் முக்கியமான பகுதி. இப்போது பிரேசிலிய நாவல்களை வாசித்துக் கொண்டிருக்கிறோம். வெவ்வேறு வகையான ஆக்கங்களை வாசிப்பதும் அவர்களுடன் உரையாடுவதும் மிகப் பிடித்த செயல். சில சமயம் தொந்தரவு தரும் மாணவர்களும் வந்து சேர்வார்கள். ஆனால் அதெல்லாம் இதன் ஒரு பகுதி தான்.

உங்கள் டாஸ் ஆஃப் எ லெமன் நாவலுக்கு பென் விருது கிடைத்துள்ளது. எப்படிப் பார்க்கிறீர்கள்.

ப.வி: விருதுகள் நன்மையானவைதானே எப்போதும். அது பெரும்பாலும் அந்தப் படைப்புக்கு கவனத்தை அளிக்கிறது. ஆனால் ஜெஃப் தன்னுடைய உரையில் தன் நண்பரைக் குறிப்பிட்டு ஒன்று சொன்னார். “His ambition was to write somebody’s favourite book” என்ற வரி என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு வாசகர் தனித்து வாசித்து என்னுடைய படைப்பில் ஏதோ ஒரு இடம் அவரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது என்று சொல்வதும், யாரோ ஒருவர் என் புத்தகத்தை எங்கோ மெட்ரோவில் வேலைக்குச் செல்லும் வழியில் அமிழ்ந்து போய் வாசிப்பதை புகைப்படம் எடுத்து அனுப்பும் போது கிடைக்கும் மகிழ்ச்சியும் தான் மிகப் பெரிய விஷயமாக நினைக்கிறேன்.

நீலி இதழுக்காக சமகால் பெண் எழுத்துக்களை, பெண்ணியம் சார்ந்த சமகால உரையாடல்களை தெரிந்து கொள்வதற்காக நாங்கள் paris review, Harper collins, granta போன்ற சில இதழ்களைத் தேர்ந்தெடுப்போம். உங்கள் பார்வையில் தீவிர இலக்கியம் சார்ந்து தனித்த சிற்றிதழ்கள் ஏதும் உள்ளதா? சமகால பெண் எழுத்தாளர்கள் என சில பெயர்களைக் குறிப்பிட்டால் உதவியாக இருக்கும்.

ப.வி: நிறைய ஆங்கில எழுத்தாளர்களைப் பிடிக்கும். கிலே ரெய்ட் (Kiley Reid), ஷோபா ராவ் (Shobha Rao), டோனி ஜென்சன் (Toni Jensen), லூயிஸ் எர்ட்ரிக் (Louise Erdrich), ஜோஅன் சில்பர் (Joan Silber) ஆகியோரை நீங்கள் நீலிக்காக மொழிபெயர்ப்பு செய்ய பரிந்துரைக்கிறேன். ஷோபா, டோனி, ஜோஅன் ஆகியோர் என் நண்பர்கள். நீங்கள் மொழியாக்கம் செய்வதாக இருந்தால் சொல்லுங்கள். அதற்கான ஆவன செய்கிறேன். சிற்றிதழ்கள் பொறுத்து‘New England Review’; ’Southwest Review’ ஆகியவை உள்ளன. ‘Brick’ என்ற சிற்றிதழ் என்னுடைய மிகவும் விருப்பத்திற்குரிய ஒன்று. அதில் புனைவுகள் பிரசுரிக்கப்படுவதில்லை. ஆ! இன்னொரு அற்புதமான இதழ் உள்ளது. அதன் பெயர் ‘McSweeney’s’.

எனக்கு பலவகையான எழுத்தாளர்களைப் பிடிக்கும். வெவ்வேறு வகையான எழுத்துக்களைப் பிடிக்கும். சில சமயம் எல்லா வகைகளையும் எழுதிவிட வேண்டும் என்று ஆர்வமாக இருக்கும். ஜெஃபிடன் கேட்பேன் உனக்கு அப்படித்தோன்றுமா என. அவர் “நோ……” என இழுத்து கோணலாகச் சொல்வார். (சிரிக்கிறார்….)

வட அமெரிக்க எழுத்துக்கென பல நிறங்கள்/ இழைகள் உள்ளன. அதைவிடவும் என்னை பாதித்த மரபு என கனேடிய எழுத்தாளர்களைத்தான் சொல்ல முடியும். எல்லோரும் ஆலிஸ் மன்றோவைப் பற்றி சொல்வார்கள். எனக்கும் பிடிக்கும் தான். ஆனால் அவரின் சமகால எழுத்தாளரான மேவிஸ் கல்லாண்ட்டை (Mavis Gallant) எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய சிறுகதைகள் எனக்கு நெருக்கமானது. இன்னொருவர் ஆன் மேரி மெக்டொனால்ட் (Ann- Marie MacDonald). அவரின் நாவலான “Fall on your Knees” என் இளமைக்காலம் முழுவதும் பெரிய பாதிப்பை செலுத்தியது. மைக்கேல் ஒண்டாச்சி (Michael Ondaatje), Annabel Lyon, wayne jihnston எனப் பல வகை எழுத்தாளர்கள் உள்ளனர். பல வகையான எழுத்துக்கள் எனலாம். ரியலிஸம் தொடங்கி கற்பனாவாத எழுத்துக்கள் என பலதர்ப்பைச் சார்ந்த எழுத்தாளர்கள். இவர்கள் அனைவரிடமிருக்கும் பெரிய ஒற்றுமையென மொழி சார்ந்த சுதந்திரம் , நகைச்சுவையாக கதைகூறும் தன்மை ஆகியவற்றைச் சொல்லலாம். மிகவும் சீரியஸான விஷயத்தை பகடியாகக் கூறுவதும், பகடியான விஷயங்களை சீரியஸாகக் கூறுவதையும் இவர்களின் தனித்தன்மையாகப் பார்க்கிறேன்.

உங்களுடைய இறுதி நூலில் புனைவு, அபுனைவு இரண்டையும் ஒருசேர பிரசுரித்துள்ளீர்கள். அதை ஒரு சோதனை முயற்சி எனலாமா? சமகால அமெரிக்க எழுத்தாளர்கள் சிலர் கட்டுரையை புனைவுத் தன்மையுடன் கதைகூறலாக மொழிவதைப் பார்த்திருக்கிறேன். நீலியில் கூட அதை மொழியாக்கம் செய்திருக்கிறோம் (பதினோராவது சொல் – லூலூ மில்லர்). இது பற்றி சொல்லுங்கள்.

ப.வி: நானும் அபுனைவு நூலை எழுதியிருக்கிறேன். அது தான் இருப்பதிலேயே கடினமான ஒன்று. அதற்காக இரு புனைவுக் கதாப்பாத்திரங்களை உருவாக்கிக் கொண்டேன். ஆய்வு மாணவர்கள், ஆய்வாளர்களாக உருவகித்துக் கொண்டேன். அவர்கள் அபுனைவு எழுதுவது போல செய்தேன். லெமன் மஞ்சள் நிறம் பற்றி இருவரும் எழுதுகிறார்கள். ஒவ்வொருவரும் தங்களின் சூழலால் பாதிக்கப்பட்டு ஒருவருக்கு அந்த நிறம் எவ்வாறு நேர்மறையாகவும், இன்னொருவருக்கு எவ்வாறு எதிர்மறையாகவும் ஒரு நிறம் மாறுகிறது என அந்த நூல் விரிகிறது.

ஒரு வடிவச் சோதனை முயற்சி என்று சொல்லலாமா?

ப.வி: சொல்லலாம்.

தமிழ் இலக்கியத்தில் பெண்ணிய அலையின் ஆரம்பம் என தொண்ணூறுகளைச் சொல்ல இயலும். இங்கு அமெரிக்காவில் நான்கு அலைகள் வரை வாசிப்பளவில் தெரிந்து கொள்ள முடிகிறது. நீங்கள் இங்கு இயங்குபவர். இங்கு மேற்குலகில் பெண்ணியம் எத்தனை தொலைவு இப்போது பொருள்படுகிறது.

ப.வி: இது மிகப்பெரிய கேள்வி. நான் மிகவும் சோர்வாக உள்ளேன். நீண்ட நாள் இல்லயா! (பெருமூச்சு…) நீங்கள் சொல்வது போல பல அலைகள் உள்ளது தான். ஆனால் இப்போது ஒன்றைச் சொல்ல முடியும். இனியும் பெண்கள் பதிப்புலகைப் பொறுத்து குறைந்த பிரதிநிதித்துவம் கொண்டவர்களாக இல்லை. இருபது வருடங்களுக்கு முன் பெண் பதிப்பாளர்கள் பெருமளவு இல்லை. அதனால் அதிகாரப் பரவல் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது மாற்றம் உள்ளது. ஆனாலும் அதிகாரப் படிநிலைகள் தங்களைத் தாங்கள் இனப்பெருக்கம் செய்யும் தன்மையவை இல்லையா? விளிம்பு நிலை, சிறுபான்மை இடத்திலிருந்து அதிகாரப் படிநிலையைக் கைப்பற்றிய பிறகும் கூட முன்பிருந்த அதே மாதிரியான விஷயங்களே பிரதியாக்கம் செய்யப்படுகின்றன. மெல்ல மெல்ல தான் மாற்றம் வரும் என்று நம்புகிறேன். ஒரே இரவில் மாறக்கூடிய மாற்றம் அல்ல இது. மொழியாக்கங்கள் இதற்கு முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவைகளால் தான் ஏற்கனவே இருக்கும் அழகியலை கேள்விக்குள்ளாக்க முடியும். புதிய அழகியலை உருவாக்க முடியும்.

பத்மா விஸ்வநாதன்

அடுத்தடுத்த திட்டங்கள் என்ன?

ப.வி: ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன். அது மிக நீண்டு விட்டது. (சிரிக்கிறார்…) இரு மொழிபெயர்ப்புகள் (மாயா, ஆனபெல் ஆகியோருடையது) ஒப்புக் கொண்டிருக்கிறேன். என் தனிப்பட்ட விருப்பில் இரு பிரேசிலிய செவ்வியல் எழுத்தாளர்களின் மொழிபெயர்ப்புகள் செய்ய வேண்டும். இன்னும் இரு நாவல்கள் சார்ந்த வரைவு வேலைகள் உள்ளன.

உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். சோர்வு என்று சொல்லிவிட்டபிறகு இதற்கு மேல் தொடர்வது நல்லதல்ல. (அவரைப் பார்க்கவும் பாவமாக இருந்தது.)

ப.வி: (சத்தமாக சிரிக்கிறார்…) மிக்க நன்றி. நல்ல உரையாடல். ஜெஃப் எனக்காகக் காத்துக் கொண்டிருப்பார். அவரைப் போய் பார்க்கிறேன்.

சரி. (கை குலுக்கிக் கொண்டோம். கட்டியணைத்தபடி விடைபெற்றார்.)

*

3 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *