நிலத்திடம் திரும்புதல் (சிறுகதை) – லையா ஹூப்ரேஸா
“சமகால பெண் படைப்பாளிகளின் மொழியாக்க சிறுகதைவரிசை” – நரேன்
பகுதி 9: லையா ஹூப்ரேஸா

லையா ஹூப்ரேஸா – Laia Jufresa – மெக்ஸிகோ நகரத்தில் 1983ம் ஆண்டு பிறந்த இளம் ஸ்பானிய எழுத்தாளர். சிறந்த இளம் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரின் முதல் நாவல் ‘உமாமி’ 2016ம் ஆண்டின் சிறந்த ஸ்பானிய அறிமுக நாவல் என்ற விருதை வென்றது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஃப்ரான்ஸின் பல்வேறு நகரங்களில் வாழ்ந்தார். ஒவ்வொருமுறையும் புதியவளாக வெளிப்படும் அனுபவத்தை இந்த இடப்பெயர்வுகள் தனக்கு அளித்ததாகக் கூறும் லையா தன் எழுத்துகளின் பொதுவான மையமும் ஒன்று மற்றொன்றாக உருமாறுவதாகவே அமைக்கிறார். இவரின் பெரும்பாலான சிறுகதைகளிலும் முதல் நாவலிலும் அம்மா-மகள் உறவின் பிணைப்பும் பிணக்குகளும் பிரதானமாக வெளிப்பட்டிருக்கின்றன. லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களுக்கே உரித்தான மாய யதார்த்த அழகியலை இவரும் தன் கதைகளில் கைக்கொள்கிறார். ஆனால் விமர்சகர்கள் இதை ‘அற்புத யதார்த்தம்’ என்ற ஒரு புது வகைமையில் வைக்கிறார்கள். மாயங்களின் பக்கம் அதிகம் சாயாமல் யதார்த்தங்களே அதி அற்புதமாக மாறும் கணங்கள் கொண்டவையாக இவர் கதைகள் அமைகின்றன.
‘நிலத்திடம் திரும்புதல்’ என்ற இச்சிறுகதை மண்ணை நோக்கிச் செல்லும் ஒரு நகரவாசியின் பாடுகள் என்று தோற்றமளித்தாலும் அம்மா-மகள் உறவின் சுழற்சியும் இந்நிலத்தின் மீது அவ்வுறவு கொள்ளும் இடைவிடாத போராட்டத்தின் கதை இது. ஒரு பெண் தொடர்ந்து இந்நிலத்திற்கு தன் ஒரு பகுதியைப் பலி கொடுத்துதான் நிலை நிறுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. மற்றொரு கோணத்தில் இது ஒரு சிறுமியின் பருவமடைதல் கதையும்கூட. மிகக்கடினமானச் சூழலில் தன்னை யாரென்றும், தாயின் இடத்தில் பெருகிய ஆற்றலுடன் தன்னைப் பொருத்திக்கொள்ளும் ஒரு சிறுமியின் கதை. மனிதன் ஒருபோதும் முழுமையாக தனதாக்கிக் கொள்ளமுடியாதவை நிலமும் உறவுகளும்.
ஸ்பானிய மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் சோஃபியா ஹியூஸ்.
– நரேன்
*
நிலத்திடம் திரும்புதல் – லையா ஹூப்ரேஸா (சிறுகதை)
தமிழில் – நரேன்
அம்மா எங்கள் பழைய அடுக்ககத்தை விற்றுவிட்டு, இந்த நிலத்தை வாங்கி, எந்த ஆரவாரமுமின்றி இங்கே குடிபெயர்ந்த மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் அந்தச் சாபத்தைப் பற்றி நாங்கள் அறிந்துகொண்டோம். அந்த நிலத்துடன் எளிமையான அடிப்படை வசதி கொண்ட ஒரு வீடும் ஒவ்வொரு ஆண்டும் பழுத்த கனிகளை எங்களுக்கு நிறைந்து அளிக்கும் முதிர்ந்த மரங்களும், வீட்டின் பின்புறத்தில் ஒரு கழிவறையும், நிலத்தின் வடமூலையில் ஒரு கிணறும் அமைந்திருந்தன. எங்கள் இந்தப் புதிய உலகின் எல்லைகளை முள்வேலிகள் வரையறுத்தன. நாங்கள் சென்று சேர்ந்த உடனேயே வீட்டைப் புதுப்பிப்பதுதான் அம்மாவின் முதல் திட்டமாக இருந்தது. ஆனால் முதல் சில மாதங்கள், வீட்டின் உள்ளும் வெளியும் ஒன்று போலவே இருந்தது என்பதாலோ அல்லது ஊறிப் பெருகும் எங்களின் கற்பனா ரசத்தின் காரணத்தினாலோ வீட்டின் பின்புறத்தில் யாருமற்ற காட்டிடை வெளியில் பெரும்பாலான இரவுகளில் உறங்கினோம்.
புதிய வாழ்க்கைக்குள் நாங்கள் நுழைந்த சிறிது காலத்திலேயே வானவியலைப் பயில வேண்டுமென்ற ஆர்வம் அம்மாவின் தலைக்குள் நுழைந்தது. இரவில் தலையணைகளையும் போர்வைகளும் எடுத்துக்கொண்டு காட்டினுள் திறந்த வெளிக்குச் செல்வோம். அங்கே அவள் நட்சத்திரங்களை உற்று நோக்கி தன் புத்தகங்களில் உள்ள வரைபடங்களுடன் பொருத்திப் பார்க்க முயல்வாள். விண்மீன் தொகுப்புகளின் பெயர்களை தன் மூச்சின் அடியில் பிரார்த்தனையைப் போல முணுமுணுப்பாள். ஹைட்ரா[1] , ஃபார்னக்ஸ்[2], கரீனா[3]: உறங்குவதற்கு முன்னர் எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் கதைகளின் கதாபாத்திரங்களாக அவை மாறின. பின்னர் உறைபனி போர்த்திய விடியல் எங்களை மீண்டும் வீட்டிற்குள் தூண்டித் தள்ளும். பெரும்பாலும் அளவற்ற ஆனந்தத்தில் பொங்கியபடிதான் என்னைப் படுக்கையறைக்குள் அம்மா தூக்கிச் செல்வாள்.
கானக வெளியில் நாங்கள் கழித்த அக்கடைசி இரவின் நடுநிசியில் அம்மா அலறத் தொடங்கினாள். நானும் பதிலுக்கு அலறியபடியே விழித்துக்கொண்டேன். நான் முழுமையாக விழிப்பதற்கு முன்னரே அச்சம் என் மூளையைப் பற்றிக்கொண்டது. அம்மிருகத்தை நான் பார்க்கவில்லை. ஆனால் தான் பார்த்ததாக அம்மா எப்போதும் உறுதியாகக் கூறுவாள். அது ஒரு நரி என்றும் தான் அதைக் கண்டதாகச் சத்தியம் செய்தாள். இந்தப் பகுதிகளில் இதுவரை ஒருவரும் நரியைப் பார்த்ததில்லை என்ற உண்மையை அவள் சற்றும் பொருட்படுத்தவேயில்லை.
ஒற்றை அசைவில் அம்மா தலையணை உறையைக் கழற்றி தன் கையைச் சுற்றிக்கொண்டாள்.
“சாராயம்!” என்றாள் அவள். “இதோ!” நான் வீட்டிற்குள் விரைந்தோடி சாராய புட்டியைக் கண்டுபிடித்ததும் மீண்டும் அவளை நோக்கி ஓடினேன். அன்றிரவு நிலவு எங்களுக்குச் சாதகமாக இருந்தது. அம்மா என்னிடமிருந்து அந்தப் புட்டியைப் பறித்து தன் பற்களால் அதன் மூடியைத் திருகித் திறந்தாள். இரத்தத்தை விடவும், எளிதில் தொற்றக்கூடிய பயத்தையும் வலியையும் விடவும், அவள் தன் பற்களால் புட்டியைத் திறந்து, மூடியைத் துப்பி, காயத்தின் மீது சாராயத்தை சரசரவென ஊற்றியதைப் பார்த்ததுதான் என்னை உண்மையிலேயே திகிலடையச் செய்தது – இப்புதிய, கட்டுமீறிய அவள் அவதாரத்தின் மீதான பயம். ஆனால் அச்சாராயம் துணியின் மீதூறி அவள் தோலைத் தொட்டபோது அம்மா மண்டியிட்டுச் சரிந்தாள். எனக்கோ அவள் மீண்டும் சின்னஞ்சிறிய மனுஷியாக எங்களிடையே திரும்பிவிட்டாள் என்ற உணர்வு நிம்மதியளித்தது. நான் சுற்றித் தொட்டுணர்ந்து எங்கள் காலணிகளை தேடியெடுத்து அணிந்து அம்மாவுக்கும் போட்டுவிட்டேன் – என் ஏழு வயதிற்கும் மேலான முதிர்ச்சியுடன், ஏதோ நான் ஏற்கனவே இதைப் பலமுறை செய்திருப்பதைப் போல. பிறகு அம்மா எழுந்து சாலைக்கு இட்டுச் செல்லும் மண்படிகளை நோக்கி நடக்கத் தொடங்கினாள். நான் பின்தொடர்ந்தேன். எனக்கு கோபம் பெருகி வந்தது, சட்டென அவ்விடத்திலேயே நின்றுவிட்டேன். நான் பின் தங்கிவிட்டிருந்தேன்; செல்லமாக வளர்க்கப்பட்ட சிறுமியான எனக்கு அது சற்றும் அர்த்தமுள்ளதாகப்படவில்லை.
“இது வெறும் கெட்ட கனவுதான்,” நான் அவளிடம் சொன்னேன். “நில், அது தானாகக் கலைந்துவிடும். நடப்பதை நிறுத்து.” என்று நான் விம்மினேன். அந்த இரவு வரை கண்ணீர் என் விருப்பத்தை நிறைவேற்றியே வந்திருந்தது; ஆனால் அம்மா திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.
“நான் திரும்பி வர வரைக்கும் அந்தப் படியிலேயே நில்லு,” கட்டு போட்ட தன் இடது கையை மார்போடு அணைத்துத் தட்டுத் தடுமாறித் தொலைவில் செல்வதற்கு முன் எனக்குக் கட்டளையிட்டாள் அம்மா. நான் சில நிமிடங்கள் அங்கேயே கண்களை இறுக மூடியபடி உறக்கத்திலிருந்து விழிப்பதற்காகக் காத்திருந்தேன். உடனே பதறியடித்து சறுக்கும் படிக்கட்டுகளில் விழுந்தடித்து சாலையை நோக்கி ஓடினேன். சாலையோர விளக்கின் மங்கலான ஒளி எனக்கு சற்று ஆறுதலை அளித்தது. ஆனால் நான் நெருங்கிச் சென்றபோது அதனடியில் அம்மா பருந்தைப் போன்று கைகளையும் கால்களையும் விரித்தபடி வியர்வைச் சொட்டச் சொட்டக் கிடந்ததைப் பார்த்தபோது மொத்தமாகத் தொந்தரவிற்கு ஆளானேன். அவளது முனகல்களும் தேம்பல்களும் சற்று ஓய்ந்திருந்தாலும் முன்பைப் போலவே அச்சுறுதுவனவாக இருந்தன. என்னைப் பார்த்துச் சிரிக்க முயன்றாள் ஆனால் அவள் முகம் உதறல் கொண்டது. இப்போது அவள் மிகுந்த பலவீனமாகக் காணப்பட்டாள். இறக்கைகள் உடைபட்டவை போல, காடுகளில் நான் அடிக்கடி காணும், எப்போதும் என்னுள் குற்றவுணர்ச்சியைச் செலுத்தி காப்பாற்ற தூண்டும் வீழ்ந்துபோன சின்னஞ்சிறு பறவையைப் போல.
நான் பொறுப்பேற்றுக் கொண்டேன். இறுதியாக ஒரு கார் கடந்து சென்றபோது என் கைகளை காற்றில் அசைத்து அதை நிறுத்தினேன். அதன் ஓட்டுனரைப் பற்றி இப்போது எதுவும் எனக்கு நினைவில்லை. அக்காரின் விளக்குகளும், முதல்முறையாக ஒரு பெரியவரிடம் பேசுகிறோம் என்ற உணர்வும்தான் நினைவிலிருக்கிறது. மேலும் இவையனைத்தும் அவ்வளவு அவசரத்துக்கு இடையிலும் எனக்குள் பதிவாகியது என்பதுவும்! நான் என் அம்மாவை இறுகப்பற்றி வழிநெடுக அவளின் தற்காலிக கைக்கட்டைத் தாங்கிக்கொண்டேன். எங்கள் மீட்பரின் கார் இருக்கையை இரத்தக்கரையாக்க எனக்குச் சங்கடமாக இருந்தது. அந்நாட்களிலிருந்து இந்நிலப்பரப்பு இப்போது மிகவும் மாறிவிட்டது – இப்போது சாலையின் இருபுறத்திலும் வீடுகள் வரிசையாக உள்ளன, நகரத்தினுள் நுழைவது வரையிலும் விளக்குகள் வெளிச்சமாக எரிகின்றன. ஆனால் அந்தச் சாலையின் குறிப்பிட்ட ஒரு வளைவு மட்டும் என் நினைவுகளை மீட்டுக் கொண்டுவரும் – உண்மையில் அது ஒரு நினைவுகூட அல்ல, ஒரு உணர்வைப் போல, பின்னங்கழுத்தில் ஒரு சிலிர்ப்பைப் போல் – அந்த இரவும் முதன்முறையாக எனக்குள் அது தோன்றிய அக்கணமும் : ‘அவள் இறக்கப் போகிறாள்’.
அம்மா சாகவில்லை. அந்த மனிதர் எங்களை நகரத்திலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கே மிகவும் கனிவான இப்போது என் மனதில் மங்கலாகவே தங்கியிருக்கும் மனிதர்கள் எங்களைப் பார்த்துக்கொண்டார்கள். அவள் தனது இடது கையின் கணிசமான ஒரு பகுதியை இழந்துவிட்டாள், ஆனால் அந்த இடத்தில், தழும்பிற்கு இணையாக – ஆரோக்கியமற்ற ஒரு பிடிவாதம் முளைத்தெழுந்தது. அவள் போர் தொடுத்தாள். நான் எந்தப் பக்கத்தைத் தேர்ந்தெடுப்பதென்று அறியாமல் போர் அகழியில் நின்று வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தேன். அம்மா அந்த நிலத்தின் மீதான தன் தனிப்பட்ட போரைப் பல ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினாள். நான் இரு தரப்பினருக்காகவும் போராடினேன்.
மெதுவாக ஆனால் உறுதியாக நிலத்திற்குத் திரும்பிப் போக வேண்டும் என்ற அவளது கனவு கசந்து போனது. அவள் வயல்வெளிகளில் தன் சக்தி முழுதும் தீரும் வரை வெயிலில் கடுமையாக உழைத்தாள். இரவில் எண்ணெய் விளக்கடியில் தையல் செய்தாள். அவள் தையல் எவ்வளவு கோணலாகச் சென்றாலும் அவளது இடது கையின் எஞ்சிய விரல்களை ஊசி எத்தனை முறை தைத்தாலும் தான் செய்துகொண்டிருக்கும் தையல் வேலையை முடிக்கும்வரை ஓயமாட்டாள். அவள் இடது கையில் இன்னும் கட்டைவிரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரலின் ஒரு பகுதி மிச்சமிருந்தது. அம்மிருகம் மற்ற விரல்களைக் கடித்துத் துண்டித்த ஒரு வருடத்திற்குப் பிறகு மூன்று இலக்கங்களைக் கொண்டே அனைத்தையும் கணக்கிடவும் செய்யவும் பழகிக்கொண்டாள்! அது அம்மாவிற்கு நிலத்திற்கும் இடையிலான போராட்டம்; அந்நிலமோ ஆயுதங்களைத் தரித்து வென்றுவிடும் தீர்மானத்திலிருந்தது. எங்கள் மீது அத்தனையையும் தொடுத்தது: பெரு வெள்ளங்களும் பூஞ்சைகளும், உறைபனிகளும் எறும்புகளும்… ஆனால் அம்மா அனைத்தையும் தாங்கி எதிர்த்து நின்றாள்.
ஆண்டுகள் கடந்தன, யுத்தம் முடிந்துவிட்டதென நினைக்கத் தோன்றும் அளவு அம்மாவின் மீள்வரும் ஆற்றல் பெருகிவிட்டிருந்தது. ஒரு ஆடு, ஒரு சேவல் மற்றும் ஆறு கோழிகளை வாங்கினாள். நாங்கள் ரொட்டிகள் சுட்டோம், ப்ளம் பழ ஜாம் தயாரித்தோம். அம்மா எனக்கு எழுதப் படிக்கக் கற்றுக்கொடுத்தாள். எங்கள் விளைபொருட்களைச் சந்தையில் தொடர்ந்து விற்கத் தொடங்கினோம். போதுமான அளவிற்கு நிலையான வருமானம் வரத் தொடங்கியதும் மின்சாரமும் குழாய் நீரையும் பொருத்திக்கொள்ள முடிந்தது. ஆனால் அந்த அமைதியான காலங்களில் கூட – பள்ளியிலிருந்து திரும்பியதும் கவிதை எழுதும், எல்லாவற்றின் மீதும் சீஸ் பரப்பும் சாந்தமுற்ற அம்மாவை நான் கண்ட காலங்களில்கூட – அந்தச் சாபம் வெகு நுட்பமான ஆனால் கொடுந்தீய வழிகளில் எங்களைத் தாக்கியது.
முதல் பார்வையில் எங்கள் எலுமிச்சைகள் அற்புதமாகத் தெரிந்தன ஆனால் உள்ளே அவை உலர்ந்துபோயிருந்தன. எலுமிச்சைகள் தங்கள் சாற்றை இறுகப்பற்றிக்கொண்டுதான் இருக்கின்றன, ஆனால் நாங்கள் என்ன செய்தாலும், எங்களில் ஒருவர் அதை வெட்டித் திறக்கும்போது அறியப்படாத ஏதோவொரு சக்தி அவற்றை உறிந்து வற்றச் செய்தன. எப்போதும் அம்மாவிற்கு எலுமிச்சைதான் விருப்பமான பழம். அதனால்தான், எங்கள் நிலத்தில் ஆப்பிள்களும் ப்ளம்களும் செழித்து வளர்ந்திருந்தபோதிலும் இந்த விஷயத்தை அவள் கைவிடுவதாக இல்லை. “தினம் ஒரு எலுமிச்சை சாப்பிட்டால்…”, கிராமப்புற சுகாதாரம் குறித்த ஆரம்பப் பாடங்களின்போது இதை அழுத்தமாக என்னிடம் கூறுவாள், “உன் நோய் எதிர்ப்புச் சக்தி வலுவாக இருக்கும், உன் அக்குள்கள் நன்றாகவும் புத்துணர்வுடனும் இருக்கும்.” ஆனால் நாங்கள் எலுமிச்சைகளை விலை கொடுத்து வாங்க வேண்டியதாக இருந்தது, அது அவளைப் பித்து நிலைக்குத் தள்ளியது.
என் தொடக்கப்பள்ளியின் கடைசி ஆண்டில் இனப்பெருக்கம் செய்வதற்கென இரண்டு ஜோடி முயல்களை வாங்கினோம். ஆனால் அவை இரண்டு குட்டி முயல்களை மட்டுமே ஈன்றன, அவற்றில் ஒன்று இறந்து போனது. அம்மா அந்த முரண்பாட்டை எக்களித்து புறந்தள்ள – அவளின் அச்சிரிப்பு மிக இயல்பாகக் கண்ணீராக உருகொண்டது – நான் இறந்த முயலை கையில் பற்றியபடி எங்கள் சாபத்தை நினைவில் மீட்டினேன். நான் எல்லாம் முடிந்துவிட்டது என்றும் நிலம் எங்களை மன்னித்துவிட்டது என்றும் என்னை நானே ஏமாற்றிக்கொண்டிருந்தேன். ஆனால் அது என் அறியாமை, நான் கைவிடுவேன் எனச் சபதமிட்ட என் நகரத்து மனம் கொண்ட முடிவு அது. நான் இப்போது இந்நிலத்தின் குழந்தை, தெய்வத்துகுகந்த சிறப்புரிமைகள் நிலத்திற்கு உண்டு, கொடூரமானதுதான் ஆனால் அதற்கு நியாயம் சேர்க்கும் தகுதிகொண்டது. அது எங்களை விடப் பெரியது; எங்களுக்கு வெகுகாலத்திற்கு முன்பே அங்கே இருப்பது. நரி, எலுமிச்சைகள், முயல், பின்னர் சேவல் என் எல்லாமே வெறும் வேடிக்கைகள்தான். நாங்கள் நிலத்தின் சேவகர்கள், அதன் விளையாட்டுப் பொருட்கள். அதன் பெரும் சதுரங்க ஆடற்களத்தில் நாங்கள் வெறும் காலாட்காய்கள், வீணாக நாங்கள் அதன் குறுக்கே நகர முற்பட்டோம். இறந்த முயலை புதைத்தேன், இனி ஒருபோதும் நிலத்தின் திரிபடைந்த நகைச்சுவை உணர்வை குறைத்து மதிப்பிடக்கூடாது என்று சபதம் கொண்டேன்.
ஒரு குளிர்காலத்தில், அம்மாவிற்கு நடனமாட வேண்டும் என்ற அடக்கவியலாத ஆசை உண்டானது. தன் சிறுவயதிலிருந்து இந்நிலத்திற்கு நாங்கள் வந்ததுவரை அவள் நடனம் ஆடிக்கொண்டிருந்தவள். நகரத்திலிருந்தபோது நானும்கூட வாராந்திர நடன வகுப்புகளுக்குச் சென்றுகொண்டிருந்தேன். விரைவிலேயே, நாங்கள் நடனத்தைப் பற்றி மட்டுமே பேசத்தொடங்கியிருந்தோம்; எங்கள் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியானதால் எங்களின் கலை வெளிப்பாட்டிற்கான தேவை மீண்டும் உயிர்பெற்றது போலும். எனக்கு அது மிக அர்த்தமுள்ளதாகத் தோன்றியது; எங்கள் பள்ளி ஆசிரியர், மனிதர்கள் எப்படி ஓரிடத்தில் தங்கி வாழும் இனமாக மாறினார்கள் என்பதைத் தெளிவாக விளக்கியிருந்தார்: நாம் வேட்டையாடும் நாடோடி இனமாக இருந்து நில உரிமை கொண்டு வேளாண் கலைஞர்களாக, மாணவர்களான நாங்கள் ஒரு அத்தியாயத்திலிருந்து அடுத்த அத்தியாயத்தைப் புரட்டும் வேகத்தில் மாறியிருக்கிறோம்.
அப்போது எங்களிடம் மின்சாரம், ஒரு பார வண்டியும் வசதியான வீடும் இருந்தது. ஆனால் எங்கள் வாழ்க்கை அப்போதும் திட்டவட்டமான எளிமையுடனே இருந்து. அம்மா ஒரு எண்ணத்தை அவ்வளவு எளிதாகக் கைவிடுபவர் அல்ல, அதனால் வசந்த காலம் வந்ததும் ஒரு நடனப்பயிற்சி கூடத்தை அமைக்கப்போவதாக அறிவித்தார். நான் நிலத்திற்கும் நிலாவிற்கும் குதித்தேன். எனக்கு பதினொன்றோ பன்னிரண்டோதான் ஆகியிருக்கும் ஆனால் நான் இப்போது இருப்பதைப் போல காட்டுத்தனமாக அப்போதே வளர்ந்திருந்தேன், ஆனால் சில சமயங்களில், குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில், என் நெஞ்சில் ஒரு முடிச்சு இறுகும், ஒரே நேரத்தில் உள்ளிருந்தும் வெளியேயிருந்தும் ஏதோவொன்று கடுமையாக அழுத்தி என்னை நெரிக்கும். அர்த்தமற்றவைதான் ஆயினும் என்னை நொறுக்கியுடைக்கும் ஒரு நினைவுத் துயர். என் நினைவில் கூட சரியாகத் தங்கியிராத ஒரு வாழ்க்கையைத் தவறவிட்டுவிட்டேன் – நாங்கள் துறந்து வந்த வாழ்க்கை, சாத்தியங்கள் நிறைந்த ஒரு வாழ்வு – மற்றும் நாங்கள் நிலத்திற்குத் திரும்புவதற்காகத் தியாகம் செய்ய வேண்டியிருந்த அத்தனையும்: அம்மாவின் கை, அவள் குதிகால் செறுப்பு அணிந்து பல்கலைக்கழகத்தில் பாடம் கற்பித்த காலம். மிருகக்காட்சி சாலை, ஸ்கேட் மைதானங்கள் மற்றும்… ஆம், அதை ஏன் விட வேண்டும்.. பாலே வகுப்புகள். என் வயதை ஒத்த நகரத்துச் சிறுவர்கள் தங்கள் ஞாயிற்றுக்கிழமைகளை நிச்சயமாக விரக்தியில் மூழ்கியபடி கழித்திருக்க மாட்டார்கள். அவர்களுக்குத் திரையரங்குகளும் உடன் பிறந்தவர்களும் மிதிவண்டிகள் ஓட்டுவதற்கென செப்பனிடப்பட்ட சாலைகளும் இருக்கும்போது அதற்கான தேவையென்ன?
நடனத்திற்கென முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு காலி இடம் என்ற வாய்ப்பு கடவுளின் கொடையென்றே தோன்றியது. நான் திட்டங்களை வகுத்தேன், அம்மா செலவிற்கான கணக்குகளைப் போட்டாள். அஸ்திவாரம் தோண்டி கட்டிடத்தை எழுப்ப இரண்டு ஆட்களை வேலைக்கு எடுத்தோம். அவர்கள் ஒவ்வொரு காலையும் வேலை செய்தார்கள், நடனக் கூடம் வடிவம் பெறத் தொடங்கியது. ஒவ்வொரு சனிக்கிழமையும் எங்களின் விற்பனைப் பொருட்களைச் சந்தையில் விற்கத் தொடங்கியதும், நாங்கள் மேலும் செங்கற்கள், கம்பிகள் மற்றும் சிமெண்டுகள் வாங்குவோம். அத்தனை கட்டுமான பொருட்களுடனும் வண்டியின் பின்பக்கத்தில் பயணிக்க அம்மா என்னை அனுமதித்தார். நகரின் கொல்லன் எங்களுக்காகக் காய்ச்சி வடித்த இரண்டு நீண்ட இரும்பு நடனப் பட்டைகளை உருவாக்கினார். மரத் தளம் அமைத்தவுடன் எதிரெதிராக இருந்த இரண்டு கண்ணாடிச் சுவர்களில் இந்த இரும்புப் பட்டைகளைப் பொருத்தினோம். மூன்றாவது சுவரில் கதவு இருந்தது, நீல நிறத்தில் வண்ணம் பூசப்பட்டிருந்தது. நான்காவது சுவர் இல்லை. எங்கள் செலவுத் தொகையை இரண்டு சுவர் கண்ணாடிகளுக்கே செலவிட்டுவிட்டோம், அம்மா நடனக்கூடத்தை சுவரிட்டு அடைக்க விரும்பவில்லை – மூன்றாவது கண்ணாடி சுவர் எழுப்ப விரும்பினார். இயற்கையை ரசித்தவாறு நடனமிட விரும்பினார். இறுதியில், வேலை ஆட்கள் வருவது நின்றது, நாங்கள் அக்கூடத்தை பயன்படுத்தத் தொடங்கினோம். மழைக்காலம் வருவதற்குள் கண்ணாடிச் சுவரைப் பொருத்தவேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் பூச்சிகளும் வெளவால்களும் பணத் தேவைகளும் எங்களின் கட்டுக்கடங்காத கலையார்வத்தைத் தடுக்கப் போவதில்லை.
பழைய பொருட்கள் சந்தையில் ரெக்கார்ட் பிளேயர் ஒன்றை வாங்கினோம். ஒரு தனித்த எளிமையான விழாவாக நடனக்கூடத்தின் பெருமைக்குரிய ஒரு மூலையில் அதை வைத்தோம். எங்கள் நடனம் ஒரு சடங்கு போல் ஆனது. வீட்டிலிருந்த தனது சிறிய சேகரிப்பிலிருந்து அம்மா ஒரு ரெக்கார்டை தேர்ந்தெடுப்பார் பிறகு நாங்கள் இருவரும் ஒன்றாக நடனக்கூடத்தை நோக்கி நடப்போம். பொருத்தப்படாத, கண்ணாடிச் சுவர் இருந்திருக்க வேண்டிய இடத்தின் திறப்பு வழியாக உள்ளே நுழைவதற்கு நாங்கள் பழகிக்கொண்டோம். கதவைத் திறந்து உள்ளே சென்றதாக என் நினைவிலில்லை. அம்மா ரெக்கார்டை இயக்குவார், நாங்கள் மூச்சு பிடிக்கக்கூட நில்லாமல் சுதந்திரமாக அறையைச் சுற்றிச் சுழன்றாடுவோம். அது பாலே நடனம் அல்ல; எவ்வகையையும் சேர்ந்தது அல்ல, வெறும் தூய அசைவும் சுதந்திரமும் நம்பிக்கையும்! அந்தச் சிறிய ஊசி வினைல் தட்டைச் சுற்றும் தன் பயணத்தை முடிக்கும் வரை நாங்கள் உருண்டோம், சுழன்றோம், குதித்தோம் வளைந்தோம் பெரு விரல் சுற்றாடினோம். பிறகு சற்று நேரம் அங்கேயே விழுந்து கிடப்போம், முழுக்க வியர்வையில் நனைந்து நம்பிக்கை நிறைந்தவர்களாக!
எனக்கு பதிமூன்று ஆகியிருந்தபோது, ஒரு நாள் மாலை நானும் அம்மாவும் நண்பர்களுடன் அவர்களுடைய தோட்டத்தில் மதிய உணவு முடித்துவிட்டு வீடு திரும்பினோம். நாங்கள் உற்சாகமாக இருந்தோம், வயிறு நிறைந்திருந்தது எங்கள் கூடையும் வீட்டு ரொட்டிகளாலும் எலுமிச்சை பழங்களாலும் நிறைந்திருந்தது. (எங்கள் நண்பர்கள் எப்போதும் தங்களுடைய எலுமிச்சைப் பழங்களில் ஒரு பங்கை எங்களுக்குக் கொடுப்பார்கள், எங்களுடையவை சாபம் பெற்றவை என்பது அவர்களுக்குத் தெரியும்.) நான் வண்டியை நிறுத்தியபோது, ஒரு வருடமாகவே நான்தான் அவ்வண்டியை ஓட்டுகிறேன், அம்மா என் பக்கம் திரும்பி மிகச் சரியான ஆங்கிலத்தில் கேட்டார், “நான் இந்தப் பாடலுக்கு நடனம் ஆடலாமா?”. தன் ஆங்கிலத்தை இந்தக் கேள்விக்காகவும் அடுத்த கேள்விக்காகவுமென ஒதுக்கியிருந்தார். “ஒரு கப் தேநீர் அருந்த விரும்புகிறாயா, என் அன்பே?”
“ஆமாம் செல்லமே! எனக்கும் கொஞ்சம் வேண்டும்” நான் ஆங்கிலம் கற்றிருக்காவிட்டாலும்கூட ஆங்கிலத்தில் பதிலளித்தேன். ஆங்கிலம் விமான நிலையங்களும் நூலகங்களும் கொண்ட நகரத்தின் சிறுவர்களுக்கானது.
கூடையிலிருந்த உணவை எடுத்து ஓரிடத்தில் வைத்தேன். அம்மா ஒரு இசைத்தட்டைத் தேர்ந்தெடுத்தாள். நாங்கள் இருவருமே எங்கள் நடன உடைகளான — இரண்டு பழைய பைஜாமாக்களை — அணிந்துகொண்டோம். இரவு கவிழ்ந்துகொண்டிருந்தது; வீட்டிலிருந்து நடனக்கூடம் வரையிலான அந்த அரை கிலோமீட்டர் தூரம் முழுவதிலும், கொசுக்கள் எங்களைச் சூழ்ந்து தாக்கின.
“நாம் நடனமாடி அவற்றை உதிர்ப்போம்,” அம்மா சொன்னாள். ஆனால், பிறகு எங்களில் ஒருவர் விளக்கைப் போட்டோம், எங்களின் வாழ்க்கை, நாங்கள் அத்தனை பெரும் சிரத்தையுடன் கட்டியெழுப்பியிருந்த அந்த அழகிய வாழ்க்கை முடிவுக்கு வந்திருந்தது. அவ்வளவு சடுதியில்!
எங்கள் சேவல், எங்கள் வயதான அழகிய சேவல், மரத் தரையில் இறந்து கிடந்தது—அல்லது சாகும் தறுவாயில் இருந்தது. அதன் கண்கள் மூடியிருந்தன. அதன் கால் குதி நகங்கள் சிதறியிருந்தன. கால்களில் இருந்த திறந்த வெட்டுக்காயங்களில், பளிச்சிடும் இளஞ்சிவப்பு நிற சதைத்துண்டுகளைக் காண முடிந்தது. கண்ணாடியில் தெரித்திருந்த இரத்தம் பழுப்பு நிறத்தில் காய்ந்திருந்தது. தரையின் மரப் பலகைகளிலும் இரத்தம் தெறித்திருந்தது, ஒரு பயங்கரமான துர்நாற்றமும் வீசியது. அந்தச் சேவல் கூண்டிலிருந்து தப்பி, நடனக்கூடத்தினுள் அலைந்து திரிந்து, கண்ணாடியில் தன் பிம்பத்தைக் கண்டிருக்கிறது. தன் பிம்பத்தை ஒரு போட்டிச் சேவல் என்று நம்பி, அதை மீண்டும் மீண்டும் தாக்கியிருக்கிறது. அதற்கான விளக்கம் எங்களுக்குத் தாமதமாகப் புரிந்தது: அந்த முட்டாள் தன் பிம்பத்தைக் கொத்திச் சாகடித்திருந்தது, கண்மூடித்தனமாகத் தனக்கு எதிராகவே ஒரு போரைத் தொடுத்திருந்தது. இதை உணர்ந்ததும் அம்மா மீது நான் இதுவரை பார்த்திராத ஒரு சாயை படியத் தொடங்கியது, நூல்களில் மட்டுமே பேசப்படும் ஒரு வெளிறிய நிறம் – நோயுற்ற இலக்கியப் பாத்திரங்களை விவரிக்கும் ஒரு வெளிர் பச்சை நிறம். செயலிழந்தவள் போல் தோன்றினாள். அதனால் நான் தான் அச்சேவலின் அருகே சென்று “இது குளிரிந்துவிட்டிருக்கிறது” என்று அறிவிக்க வேண்டியதாயிற்று. அந்தக் காட்சி அம்மாவின் மூளையின் ஆழத்தில் இருந்த சில பற்சக்கரங்களைச் முடுக்கிச் சுழலச் செய்துவிட்டது என்பதை உணர்ந்து, நான், “இது ஒரு விஷயமேயில்லை. இதுபோல நடப்பது சகஜம்தான்,” என்று சொன்னேன். ஆனால், நாங்கள் இருவருமே அதை நம்பவில்லை; அந்தப் பற்சக்கரங்கள் தங்களின் இறுதி, அழிவிற்குரிய சுழற்சியை மேற்கொண்டன.
பணத்தை சேமித்து கண்ணாடியை வாங்கி நடனக்கூடத்தை நிரந்தரமாக மூட அம்மா முடிவெடுத்தாள். தன் பையை எடுத்துக்கொண்டு நகரத்தில் தங்குவதற்கு ஒரு இடம் தேவை என்று அறிவித்துவிட்டுப் புறப்பட்டாள். அதன் பிறகு நான் அவளைப் பார்க்கவில்லை. கடிதம் எழுதுவாள் ஆனால் ஒரு போதும் அவள் திரும்பி வந்ததில்லை. என்னைப் பார்க்கவுமில்லை. அதைப் பற்றி இப்போது எனக்குக் கோபம் கூட இல்லை. பழகிவிட்டது. அதுமட்டுமல்லாமல், இந்த நிலம் நீண்ட காலமாக அம்மாவின் மீது ஒரு வன்மத்தைக் கொண்டிருந்தது என்று நான் நினைக்கிறேன். இந்த நிலம்தான் அவளை அழைத்தது, ஆனால் அது உண்மையில் விரும்பியது என்னைத் தான். நிலம் தன் விசுவாசமான சேவகனை வரச் செய்வதற்கு அம்மா ஒரு தவிர்க்கமுடியாது தொந்தரவு, அவ்வளவுதான். இலக்கை அடைவதற்கான ஒரு கருவி! நான் என் விதியை ஏற்றுக்கொண்டேன் ஆனால் அம்மா இன்னும் என்னிடம் பொய் சொல்லும் அளவிற்குக் குற்ற உணர்ச்சியில் இருக்கிறாள். தன் தாய் வீடு என்று அவள் அழைக்கும் பல்கலைக்கழகத்தில் பாடங்கள் நடத்துவதின் மூலம் பணம் சேமித்து வருவதாக என்னிடம் சொன்னாள். அவள் நகரத்திற்கு வந்தவுடன் எல்லாம் தானாகவே அமைந்துவிட்டது என்றாள். அவள் கூறியதைப் பார்த்தால், அவள் பாடுபட்டு உருமாற்றிய நாங்கள் இன்னும் காட்டுப் பெண்களாக மாறிவிடவில்லை என்பதைப் போலவும் ஏதோ நாங்கள் அத்தனையும் தானாக அமைய வேண்டும் என்று காத்துக்கொண்டு இருந்ததைப் போலவும் தோன்றியது. நாங்கள் இந்நிலத்திற்குச் சுற்றுலாவாசிகளாக வந்தவர்கள் போலவும், நகரத்திலிருந்து வாரயிறுதியில் கிராம களப் பணிக்காக வந்தவர்கள் போலவும், தற்காலிகமாக வழிதவறி வந்த நகரத்துத் தூசிகள் போலவும் இதைச் சொன்னாள். அவள் தன்னை மட்டும் மனதில் வைத்து இப்படி பேசினாள்!
தன்னை வந்து பார்க்க வேண்டும் என்றும் அவள் என்னிடம் எப்போதும் கேட்கிறாள். சில சமயங்களில் அவளைச் சென்று பார்க்க வேண்டும் என்றுதான் நானும் நினைப்பேன். ஆனால் அறுவடைக் காலம் வந்துவிடும். என்னால் நிலத்தை அப்படியே விட்டுவிட்டுப் போகமுடியாது. இப்படியாக நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளாத வருடங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகின்றன. கடிதங்களில், நானும் அவளிடம் பொய் சொன்னேன். நான் தினமும் பள்ளிக்கு வண்டியில் செல்வதாகவும் இந்த வருடம் என் படிப்பை முடித்துவிடுவேன் என்றும் சொன்னேன். ஆனால் நான் பள்ளிக்குச் சென்று பல வருடங்களாகிவிட்டன. என் சோளம், ஆப்பிள்கள், கோழிகள், இவையெல்லாம் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளாது. மேலும், சந்தை நாளன்று என் விளைபொருட்கள் நன்றாக இருக்க வேண்டும். புத்தம் புதியதாகவும் இருக்க வேண்டும். அம்மா எனக்குக் கற்றுக் கொடுத்தது போலவே என் சீஸில் ஒரு புளிப்புச் சுவையும், என் குக்கீகளில் ஒரு மொறுமொறுப்பும் இருக்க வேண்டும். இப்போதெல்லாம் நிறையப் போட்டி இருக்கிறது, இந்தப் பகுதிக்கு நிறைய மக்கள் குடிபெயர்கிறார்கள், காளான்களைப் போலப் புதிய வீடுகள் முளைக்கின்றன, நகரவாசிகள் தங்கள் ஓலமிடும் கார்களுடனும் தங்கள் வீட்டுக் கூரைகளில் பெரிய ஆன்டெனாக்களுடனும் வருகிறார்கள். பிறகு என் வீடும் இருக்கிறது, அது ஒருபோதும் புதுப்பிக்கப்படவில்லை, தொடர்ச்சியான பழுதுபார்ப்புகள் தேவைப்படுகின்றன.
நடனக்கூடத்தில் இன்னமும் ஒரு பக்கச் சுவர் இல்லை. என் ஆற்றல் அத்தனையும் மழை நீரும் விலங்குகளும் உள்ளே நுழைந்திடாமல் தடுப்பதிலேயே செலவாகிறது. என் அத்தனை கடின உழைப்பிற்கும் முற்றிலும் தகுதியுடையதுதான் இந்த அழகிய புனிதமான இடம் என நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இந்தக் கூடத்தை நான் மிகக் கவனமாகப் பராமரித்து வருகிறேன். வெகு காலத்திற்கு முன்பு, அந்த மதிகெட்ட சேவல் அங்கே விட்டுச் சென்றிருந்த அருவருப்பான காட்சிக்கான சுவடு ஏதும் இப்போது அங்கு துளியும் இல்லை. சில சமயங்களில், என் அம்மா இந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என்று நான் ஆசைப்படுவதுண்டு. “கண் கொள்ளாக் காட்சி இது!” என்று அவள் கூறியிருக்கக்கூடும்; அவள் கூற்று உண்மையானதாகவே இருந்திருக்கும்!
இரு கண்ணாடிகளின் மூலைகளிலும், வெண்மையான கறைகள் ஒரு மாயத்தோற்றம் போன்று ஒன்றையொன்று இடைவிடாது பிரதிபலிக்கின்றன. நடனக் கம்பிகளைச் சுற்றி சில செடிகள் முளைத்துள்ளன; துருவின் பின்னணியில் தெரியும் அந்தப் பச்சை, அவ் இடத்திற்கு வியத்தகு நிறமுரணை அளிக்கிறது. ஒருபோதும் பயன்படுத்தப்படாத கதவு உள்ள சுவரில் படிந்திருக்கும் மங்கிய நீல நிறமும் கூட. அந்த இசைத்தட்டு இயந்திரம் இன்னும் இயங்குகிறது. நான் ஒருபோதும் நடனமாடுவதில்லை, ஆனால் சில சமயங்களில் ஒரு பாடலை ஒலிக்கவிடுவேன்; அந்தக் கூடம் இப்போதும்—ஒருவேளை முன்பை விட இன்னும் அதிகமாகவே—ஒரு கோவிலாக இருக்கிறது.

நடனக்கூடத்தின் நடுவில் என் தாய்வீடான நிலத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒரு சிறிய பலிபீடத்தை நிறுவினேன். பல்கலைக்கழகங்களைப் போலவோ தேவாலயங்களைப் போலவோ நிலம் தன்னைப் புறக்கணிப்பவர்களை மன்னிப்பதில்லை அதனால் நான் இந்தப் பலிபீடத்தை மிகக் கவனமாகப் பார்த்துக்கொள்கிறேன். மூன்று நாட்களுக்கு ஒருமுறை அன்றலர்ந்த மலர்களை வைக்கிறேன், ஒவ்வொரு இரவும் மெழுகுவர்த்தி ஏற்றுகிறேன். மேலும் சனிக்கிழமைகளில், ஞாயிறு அதன் புழுக்கமான காற்றுடன் வந்து என் நெஞ்சை அறைந்து ஆன்மாவைத் திருடுவதற்கு முன், நான் யார் நான் ஏன் இங்கிருக்கிறேன் என்பதை எளிதில் மறக்கச் செய்யும் அந்த விதி வசப்பட்ட நேரம் நெருங்குவதற்கு முன், பலிபீடத்தின் மேலுள்ள சிறப்பு ஜாடியைப் பார்ப்பேன். வாரத்திற்கு ஒருமுறை பழைய ஃபார்மால்டிஹைட்[4] அகற்றிவிட்டு, ஒரு லிட்டர் புதிதாக நிரப்புவேன். இது வீண் விரயம் என்று தோன்றலாம், எனக்குத் தெரியும். ஆனால் நான் வேறு என்ன செய்ய? நிலம்தான் ஆட்டத்தின் விதிகளைத் தீர்மானிக்கிறது. அந்தச் சாபத்தைத் தொலைவிலேயே தடுத்த நிறுத்தவேண்டுமென்றால் என் விரல்களை அந்த ஜாடியில் புத்தம்புதியதாக வைத்திருக்க வேண்டும். சுத்தமாகவும் புத்தம்புதியதாகவும்!
***
அடிக்குறிப்புகள்:
[1] Hydra – நீர்ப்பாம்பு
[2] Fornax – உலைத் தொகுதி
[3] Carina – கரீனா வளிமுகிற் படலம்
[4] Formaldehyde
***
