நின்று எரிதலின் வரலாறு – மதுமிதா

(ஜனிகா ஓஸாவின் ’A History of  Burning’ நூலை முன்வைத்து)

ஜனிகா ஓஸா

வரலாற்று ரீதியாக புலம் பெயர் இலக்கியம் (Diaspora literature) ’கைவிட்டு’ வந்ததன் வலியையும் வன்முறையையும் அடித்தளமாக  கொண்டு கிளைத்து எழுந்தது. அதன் தொடர்ச்சியாக, வந்து நிலைத்த இடத்தில் தலைமுறைகளாக வாழ்ந்த பின்னும் உரிமை கொள்ள தயங்குவதையும் உரிமை கொள்ள இயலா ஏக்கத்தையும்  பெருமளவில் பேசியுள்ளது. இதிலிருந்து தாண்டி இன்று இது தங்கள் வேர்களை ஆராய்ந்து அதன் வலியையும் வலிமையையும் பின்புலத்தையும் விளங்கிக்கொண்டு உலக சரித்திரத்தில் அதன் இடத்தை அடையாளப் படுத்துவதை நோக்கி நகர்ந்துள்ளது. காலனிய நோக்கிலிருந்து மாறுபட்டு இத்தகைய மாற்றங்களுக்கான காரணிகளை தங்கள் சொந்த நோக்கில் ஆவணப்படுத்துவதற்கான முயற்சியாக இதைக் காணமுடிகிறது. வரவேற்க வேண்டிய மாற்றமும் கூட.

A History of  Burning’ நாவல் 1890-களில் தொடங்கி 1990-கள் வரையிலான ஒரு குஜராத்தி குடும்பத்தின் வாழக்கையைச் சொல்கிறது. பதின்ம வயதில் வேலை தருவதாக ஏமாற்றி கென்யாவிற்கு கப்பலில் ஏற்றப்படுகிறான் பிர்பாய். தந்தை இழந்த தன் குடும்பத்தை மூத்த மகன் என்ற முறையில் காப்பாற்றும் பொறுப்பு இருப்பதை உணர்ந்து அதை தனக்கான ஒரு வாய்ப்பாகவே அவன் எடுத்துக் கொள்கிறான். கப்பல் பயணம் முழுக்க சாவை நேரெதிர் கண்டு, மீறி வாழ்ந்து ஆப்ரிக்காவின் உகாண்டா ரயில் தடத்தை உருவாக்கும் மாபெரும் வேலையின் ஒரு சிறு பகுதி ஆகிறான். எண்ணற்ற கொடுமைகளை மீறி தப்பிப் பிழைத்து வாழ்ந்து விடவேண்டும் என்ற ஒற்றை இலக்கை குறிக்கோளாக வைத்துக் கொள்கிறான். எதிர்பாராத விதத்தில் தனது வாழ்க்கைக்கு அஞ்சி அவன் ஒரு குற்றத்தை செய்ய நேர்கிறது, செய்விக்கப் படுகிறான். அதன் விளைவை அவன் தனது வாழ்வில் குற்ற உணர்ச்சியாக அனுபவித்துக் கழிக்கிறான். அவனது குடும்பமோ, வேறு வேறு வகையில் அதன் தாக்கங்களை தங்களது வாழ்வில் கண்டுகொள்கிறார்கள். பிர்பாயின் மனைவியாகிறாள் சோனல், உகாண்டா ரயில் தடம் எட்டும் விக்டோரியா ஸ்டேஷனில் அவர்கள் வாழ்க்கை தொடங்குகிறது.

அவர்களுக்கு மூன்று குழந்தைகள், அதில் வினோத் என்னும் இளைய மகனின் வாழ்க்கை கொண்டு அடுத்த தலைமுறையின் கதை தொடர்கிறது. அவனுக்காக கராச்சியில் ரஜ்னி என்ற பெண்ணை நிச்சயித்து கூட்டி வருகிறார்கள். அது இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நேரம். கராச்சியில் இருக்கும் இந்து குடும்பம் ரஜ்னியுடையது. அவர்கள் இந்த வாய்ப்பை தங்கள் மகளுக்கு மட்டுமாவது நேரக்கூடிய நன்மையாகவே பார்க்கிறார்கள். ரஜ்னி குடும்பத்திலிருந்து துண்டிக்கப்பட்டு இன்னொரு இடத்திற்கு அனுப்பப்படுவதை வெறுக்கிறாள். பிர்பாயிற்கு  சொல்லாமல் விட்டு வர நேர்ந்தது என்றால், சொல்லி விட்டு வர நேர்கிறது ரஜ்னிக்கு. வேறு வேறு விதத்தில் தோன்றும் ஒரே வலி. ஆனால் வாழ்க்கை நிதானமாக, உறுதியாக முன்னேறிச் செல்கிறது. விட்டு வந்த தம்பிகளை மகனாக காண விரும்பும் ரஜ்னி மூன்று பெண்களுக்கு தாயாகிறாள்.

லதிகா, அவர்களது முதல் பெண். தனது குடும்பத்தின் ஒட்டுமொத்த துணிவையும், பிடிவாதத்தையும் ஒருங்கே திரட்டி வந்தவள். சுதந்திரத்தின் ஒரு துளியை காட்டிக்கொடுக்கும் அருணுடன் அவளது வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறாள். அவர்களுக்கு ஒரு மகன், ரஜ்னி ஏங்கிய ஆண் குழந்தை. உகாண்டா இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் பெரும் நோக்கு சூல் கொண்டிருந்த காலம் அது. அதற்காக உழைக்க நினைக்கும் அவளது வேட்கையை, அருண் பின் நின்று அவனது பெயரில் நிறைவேற்றிக் கொள்கிறாள்.  ரகசிய பிரதிகளை அச்சடித்து கல்லூரி நண்பர்களின், விடுதலை போராட்ட நோக்கு கொண்டவர்களின் துணையுடன் விநியோகிக்கிறாள். அருண் கூட ஒரு கட்டத்தில் அறியாத ரகசியம் ஆகிறது அது. அதன் அதிர்வு இந்தக் குடும்பம் கனடாவிற்கு புலம் பெயரும் பிண்ணனியில் விரிகிறது.

இடி அமினின் ஆட்சியில், சுதந்திர உகாண்டாவில், உகாண்டாவை தவிர வேறு இடம் அறியாத வினோத்திற்கு குடியுரிமை மறுக்கப்படுகிறது. உகாண்டா வாழ் ஆசிய பூர்வீக மக்களை இடி அமின் வெளியேற்றிய காலம். கென்யா, கனடா, இங்கிலாந்து, இந்தியா என அவர்கள் தங்களை வேறு நாட்டிற்கு மாற்றிக்கொள்ளும் கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள். லதிகா ஏற்படுத்திய அதிர்வலையின் விளைவினால் தனது குழந்தையை அவள் பெற்றோரிடம் ஒப்படைத்து கண்மறைவாகிறாள். குழந்தை ஹரியுடன் வினோத், ரஜ்னி, அவர்களது இளைய மகள் கியா அனைவரும் கனடாவிற்கு புலம்பெயர்கிறார்கள்.

மயூரி, அவர்களது இரண்டாவது மகள். மருத்ததுவாராக படிக்க பம்பாய் சென்றவள், அவர்களுக்காக அங்கிருந்து கனடா குடிபெயர்ந்து வருகிறாள்.  ஒருபாலீர்ப்பினள், அன்றைய குடும்ப சூழலின் கட்டாயத்தில்  குணாலை மணந்து கொள்கிறாள். தங்கள் பேரன் ஹரியை மகனாக வளர்க்கும் வினோத்-ரஜ்னிக்காக அந்த குழந்தையை வளர்ப்பதற்கு உதவுகிறாள். இந்த நூலின் இன்னொரு முக்கிய கூறு அது மயூரியின் வாழ்வை, தேர்வுகளை காட்டி செல்வதில் உள்ள நம்பகத்தன்மை. அவளது வாழ்வில் சமரசம் இருக்கலாம், ஆனால் அதே அளவு மகிழ்ச்சியும் அறிதலும் நிறைந்தது. 

அவர்களது இளைய மகள் கியா, அவளது அக்கா கைவிடப்பட்டதாகவே கருதுகிறாள். பதின்ம வயதில் அவளுக்கு தெரிந்த அளவில், முடிந்த முறையில் அவளது இயலாமையை ஆத்திரமாக, எதிர்ப்பாக வெளிப்படுத்துகிறாள். அவளது குழந்தையை வளர்க்கும் முடிவில் அவளது அன்னையின், அக்காவின் முடிவுகளை அவளால் புரிந்து கொள்ள முடிகிறது.

இன்னொரு புது நிலத்தில், பழகாத குளிரில், சிறுமை செய்யப்படும் சூழல் நிறைந்த இடத்தில்,  எங்குமே முகம் மலர்ந்து வரவேற்க படாத வீடுகளின் நடுவே அவர்கள் தங்களது வாழ்க்கையை மீட்டெடுத்துக் கொள்ள முயல்கிறார்கள்.

நாவல்

1990 களில் கனடாவின் டொரன்டோவில் நடந்த இனவெறிக்கு எதிரான போராட்ட சூழலில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள அவர்கள் முடிவெடுக்கும் போது இந்த நூல் முடிகிறது.

ஆப்பிரிக்க கண்டத்திற்கு புலம் பெயர்ந்த இந்திய மக்களின் வாழ்க்கையை விரிவாக பதிவு செய்கிறது இந்நூல். அங்கே உகாண்டாவிலும் கென்யாவிலும் அன்று நிலவிய சூழல், பிரிவினைக்கு முன் இருந்த இந்தியாவில் இருந்து அங்கு சென்ற இந்தியர்களின் நிலை அந்நிலத்தின் பூர்வீக மக்களை போலவே வேறு வகையில் கட்டுக்குள் வைக்கப்பத்திருக்கிறது. ஆப்பிரிக்கர்களுக்கு வணிகம் செய்யவும், இந்தியர்களுக்கு நிலம் கொள்ளவும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கேயே பிறந்து, அந்த நாட்டை தவிர ஒன்றையும் அறியாத இந்தய குடிமக்கள் இரண்டாம் நிலை பிரஜைகளாகவே பார்க்கப்பட்டுள்ளனர். ஆனால் அதே நேரம் வணிகம் செய்ய உரிமை இருந்ததால் (அதுவும் அது ஆப்பிரிக்கர்களுக்கு மறுக்கப்பட்ட நிலையில்) அவர்களிடம் வறுமை பெருமளவில் இருந்திருக்கவில்லை.

குஜராத்தி வணிக சமூகத்தை சேர்ந்தவர்கள் அங்கே எங்கிருந்தாலும் ஏதாவது ஒரு சிறு தொழில் செய்து பிழைக்க வழி செய்து கொண்டிருக்கிறார்கள். அன்றைய சூழலில் அவர்களின் உழைப்பும் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அடங்கி வாழும் தன்மையும் மட்டுமே அவர்களுக்கான  வாழ்வாதாரத்தையும் சிறிதளவு நிமிர்வையும் கொடுத்துள்ளது. இதை மீள மீள வினோதிற்கு சொல்கிறார் பிர்பாய், “எவ்வளவு உழைக்கிறாயோ அவர்களுக்கு நீ அவ்வளவு தெரிவாய், எவ்வளவு தெரிகிறாயோ அவ்வளவு கவனிக்கப்படாமல் ஆவாய். அவர்கள் உன்னை கவனிப்பதை நிறுத்தும் போது உனக்கு விடுதலை!” இது அந்த குடும்பத்திற்கு மட்டும் அல்ல, ஒட்டுமொத்தமாக அந்த சமூகத்திற்கே ஒரு வித கற்பிக்கப்படாத பாடம் ஆகிறது.

எங்கும் எதையும் பொறுத்துக்கொள்ள, அதை கடந்து வாழ்க்கையை அமைத்துக்கொண்டு பிழைக்க வழி செய்வதே அவர்களுக்கு நோக்கமாக ஆகிறது. இதில் பிறர் நலம் என்பதை பேண நேரமோ, காணும் உள்ளமோ அவர்களுக்கு வாய்ப்பதில்லை. ஆசிய, ஆப்பிரிக்க குழந்தைகள் ஆங்கில குழந்தைகளோடு படிப்பதற்கு மறுக்கப்பட்ட அதே அளவிற்கு, அவர்கள் ஒருவரோடு மற்றொருவர் இணைந்து படிக்கவும் விலக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆங்கிலேயர் ஆப்பிரிக்க மக்களை கீழ் நிலையில் நடத்தியதை போலவே பெருமளவில்  இந்தியர்களும் செய்துள்ளனர். இந்த நூலின் மூன்றாம் தலைமுறை காலகட்டத்தில் இந்த விலக்கம் மாறுபடுகிறது. சட்டத்தில் மாறுதல் வந்தாலும் அது அன்றைய சமூகத்தில் நடக்கவில்லை. பள்ளியில் ஒருவருக்கொருவர் பழகிக்கொள்வதை வீட்டில் அவர்கள் விவாதிப்பதில்லை. கியா தனது நண்பன் அட்ரோவாவை பற்றி தனது பெற்றோர் மட்டும் அல்ல, தனது சகோதரிகளுடன் கூட விவாதிப்பதில்லை. அந்த உறவின் அடியில் ஒரு விளக்கவியலா ஒவ்வாமை குடிகொண்டுள்ளது. இடி அமினின் ஆட்சிக்காலம் வந்து ஆப்பிரிக்கர்கள் வலிமை கூடும் காலத்தில், அதே ஒவ்வாமையை, அதே ஏளனத்தை, அதே அவமதிப்பை கியா அட்ரோவாவிடம் இருந்து திரும்ப பெறுகிறாள். ஆனால் அந்த உறவு அறுபட்டு மாறி உருபெற்று வெறும் நினைவுகளாக எஞ்சும் காலத்தில் அதன் இனிமையை மட்டும் இருவரும் பகிர்ந்து கொள்ளும் ஒரு தருணம் வாய்க்கிறது.

இது இந்த நூலின் முக்கிய இழை. எந்த வித வெறுப்பும் எதிர்மறை எண்ணமும் என்றென்றும் என நிலைத்து விடுவதில்லை. மகிழ்ச்சி நிறைந்து வழிந்து வடிந்து விடுவது போலவே, துன்பமும் செயல்படுகிறது. இருந்து அழவைத்தாலும் தங்கி விடுவதில்லை. எதுவுமே கடந்தவைகளாக மட்டுமே எஞ்சுகின்றன.

உறவுகளும் மனிதர்களும் ஆடியின் பிம்பங்களாக நடமாடுகிறார்கள். பிர்பாய் கட்டாயத்தில் பெற்ற தனிமையை லதிகா மனமுவந்து ஏற்றுக் கொள்கிறாள். தப்பிப்பிழைக்க ஒரு இளையவன் செய்யும் தீராப்பிழையை போலவே அவள் இளமை தாண்டி உலகம் அறிந்து செய்கிறாள். எதிர்ப்பு, துணிவு, லட்சியம், கனவு என்று சொல்லி அவள் செய்வதற்கு அவள் கொடுக்கும் விலை அவள் கற்பனை செய்யாதது. ஆனால் பிர்பாயிர்க்கு கிடைத்த சோனல் துணிவானவள், கனிவு நிறைந்தவள். “அன்பு என்பது முழுதும் அறிந்து நிலைபெறுவதல்ல, அது போதாமைகளில் நிறைவது,” என்று ஒருவருக்கொருவர் வாழ்கிறார்கள். அது அவரை பெருமளவில் நிம்மதியில் அமைய செய்கிறது. மறப்பது ஒரு வரமாகிறது. சோனலின்  அந்த துணிவு லதிகாவின் அருணிடம் இல்லாமல் போகிறது. அவனது துணிவு எழுத்திலும் பேச்சிலும் அன்றி செயலில் நிற்பதல்ல. அதனால் ஒரு விதத்தில் அவளது தனிமை நிலைத்து விடுகிறது.

அதை போலவே ரஜ்னி-லதிகா. அவளது அம்மா அவளை தூரமாய் அனுப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாத ரஜ்னி தனது மகள் லதிகாவை மகள் என்பதற்காகவே மனதளவில் தூரமாய் வைத்தே வளர்க்கிறாள். அதை குழந்தை அறிய மாட்டாள் என்று என்னும்  அவளது பேதைமை லதிகாவால் தகர்க்கப்படும் போது அவளால் அதை எதிர்கொள்ள முடிவதில்லை. லதிகா தனது அன்னை தன்னிடம் காட்டிய அந்த குறைந்தபட்ச அன்பை வெறுத்தவள்  அதையே தனது மகனிடம் காட்டுகிறாள். ரஜ்னியால்  பெற முடியாத மகனை, லதிகா-அருண் பெறுகிறார்கள். அந்த குழந்தையை, ஒரு ஆண் குழந்தையை வளர்க்கும் வாய்ப்பு, அதுவும் அம்மா என்றே வளர்க்கும் வாய்ப்பு ரஜ்னிக்கு கிடைக்கிறது, அதற்காக அவள் கொடுக்கும் விலையும், அதன் விளைவுகளும் அவள் எண்ணியிராதவை.

எல்லாம் தெரிந்ததால் பெருங்கோபம் கொள்ளும் கியா, எதுவும் தெரியாததால் அந்த நிலைக்கு தள்ளப்படும் ஹரிக்கு நேரெதிர் ஒப்பீடு. உண்மையை அறிந்து விழுங்க, ஜீரணிக்க முடியாதவர்கள் இவர்கள் இருவரும். காலமும், குடும்பத்தின் வெளியே நிகழும் புறக்காரணிகளாலும் தங்களது நிலைப்பாட்டை மீட்டெழுதிக் கொள்பவர்கள்.

அருணின் அம்மா, சோனலின் பெற்றோர், அவளது தம்பி, வினோதின் ஆப்பிரிக்க நண்பர்கள் என்று இதில் வரும் எல்லா பாத்திரங்களும்ஒரே ஒரு துளியேனும் கருணை கொண்டவர்களே. வெளியெங்கும் கொட்டிக்கிடக்கும் வன்மத்தின் அடியில் பெருங்கருணை ஆங்காங்கு நிகழ்வதை ஜனிகா காட்டிக்கொண்டே இருக்கிறார்.

மதுமிதா

வாழும் தமிழ் விழாவிற்கு ரம்யா தயாராகிக்கொண்டிருந்த போது, ஜனிகா ஒசாவை சந்திக்க வாய்ப்பு இருப்பதால் நீலிக்காக பேட்டி எடுக்கலாம் என்ற எண்ணம் இருந்தது. இந்த நூலை பற்றி மிக நீண்ட ஒலிப்பதிவு உரையாடல் ஒன்றை செய்தோம். எல்லாவற்றையும் சொல்லி அனுப்பினால் மிச்சம் இல்லாமல் கேள்வி கேட்டு விடலாமே என்ற பேராசை எனக்கும் இருந்தது. அதில் விவாதித்தத்தை போல, இந்த நூலின் ஆகப்பெரும் கேள்வியாக என் மனதில் நின்றது அதன் தலைப்பே. “History of burning” – எச்சமின்றி எரிவதைப் பற்றிய சரித்திரம்? நாவல் நெடுக நெருப்பின் தடங்களும் வலிகளும் நிறைந்தாலும் அவை நூலின் நோக்கம் ஆவதில்லை, பிறகு ஏன் எரிதல் பற்றி, அதுவும் “burning” – எரிந்துகொண்டிருத்தலை பற்றி, நின்று முடிந்து விடும் நெருப்பல்ல, எரிந்துகொண்டே இருப்பது. ஏன்?  இது முற்றழிந்து விடும் ஒரு வாழ்க்கையை விட்டு மீட்டுருவாக்கி கொள்ளும் ஒரு குடும்பத்தின் கதை. ஒன்றும் இல்லாமல் ஆகி, பிறகு சிறிதாக ஆனால் உறுதியாக ஆகிவிடுபவர்களை பற்றிய கதை. உகாண்டாவில் இருந்து வெளியேற்றப்படும் போது ரஜ்னி நினைத்து கொள்கிறாள், “கரப்பான் பூச்சிகள், அமின் அவர்களை அப்படித்தான் அழைத்தான், ரஜ்னி அதை அப்போது கண்டாள், தப்பி பிழைப்பதை தேர்பவர்கள் அவர்கள், முற்றழிக்கப்படுவதை நிராகரிப்பவர்கள்”. நூல் நெடுக அவர்கள் கரப்பான் பூச்சிக்கு மட்டும் அல்ல, எலிகளோடும், புழுக்களோடும் ஒப்பிடப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். பிறகு புரிந்தது, இது முற்று அழிக்கும் நெருப்பை பற்றியல்ல, அணையாமல் எரியும் இச்சையின் நெருப்பு பற்றி, பசியின் நெருப்பு. அடங்காத வைஸ்வாநரன். எப்படியேனும் வாழ்ந்து விடுவதற்கான துடிப்பு கொண்ட அக்னி குஞ்சு. நின்று எரியும் சுடர். அதை உள் அமர்த்தி செல்லும் இடம் எல்லாம் அணையாமல் பேணி தங்களை வளர்த்துக்கொண்டவர்களின் கதை. நின்று எரிபவர்களின் சரிதை.

***

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *