நீலி பதிப்பகம் – இரண்டாவது நூல்

பல கடல்கள் கடந்து

”இமயமலையின் அழகை ரசிக்கும் அதே நேரத்தில் அதன் அடிவாரத்தில் இருக்கும் ஒரு எளிய மலரின் அழகையும் ரசிக்கத் தெரிந்திருக்க வேண்டும்” என்று நரேன் ஒருமுறை சொன்னார். நரேனைப் பற்றிய ஒரு படிமமாக இமையமலை அடிவாரத்தில் இருக்கும் ஒரு எளிய மலர் என்ற படிமம் உளத்தில் பதிந்து போனது. அது அவருடைய அழகியல் தரப்பைச் சொல்லக்கூடிய படிமமும் கூட என இன்று தோன்றுகிறது. இமைய மலையை ரசிக்கும் கண்கொண்டவர் எனினும் எளிய மலரை நோக்கிய சாய்வைக் கொண்டவர் என்றே இத்தனை வருடங்களில் அவதானித்திருக்கிறேன். நீலிக்கான பொறி என்னிலிருந்து ஆரம்பித்ததெனினும் அதற்கான ஒரு வரையறை உருவாகி வந்ததில் நண்பர்களின் தொடர்ச்சியான பங்களிப்பு முக்கியமான காரணம். அந்த வகையில் முக்கியமான ஒரு தொடராக சமகாலப் பெண் படைப்பாளர்களின் சிறுகதை வரிசை அமைந்தது.

நூலைப் பதிப்பிக்க எடுத்துக் கொண்ட போது அதில் நான்கு ஆண்டுகள் நரேனுடனான பயணத்தையும் தொகுத்துக் கொள்வதாக அமைந்தது. நரேனின் நெருக்கடியான காலத்திலும் கூட அவருக்கு மெல்லிய அழுத்தம் என் தரப்பிலிருந்து இருந்து கொண்டே இருக்கும். சண்டை போடுவதும், கோபித்துக் கொள்வதும், பேசாமல் ஆவதும் இயல்பாக நடக்கும். எல்லாமே கதைகளின் நிமித்தமாகவே இருக்கும். மிகச்சிலரிடம் மட்டுமே கடைசி நிமிடத்திலும் கூட வாங்கிப் பிரசுரிப்பேன். அதில் ஒரு நபராக நரேன் இருந்ததற்குக் காரணம் அவரின் தேர்வின் மீதான நம்பிக்கை மற்றும் பிழைகள் இல்லாமல் இருப்பது. ஒரு கதையை மொழியாக்கம் செய்வதற்கு முன் நான்கு ஆங்கிலக் கதைகளை எனக்கு அனுப்புவார். அதற்கு முன்னர் அவர் ஒரு இருபது கதைகளையாவது வாசித்திருப்பார். பெரிய உழைப்பு. இந்தப் பயணத்தில் நான் கற்றுக் கொள்ள அதிகமிருந்தது.

மேற்குறிப்பிட்ட படிமத்தின் எளிமை போலவே இந்தக் கதைகளில் லட்சியவாத அம்சம் குறைவாகத் தோன்றலாம். ஆனால் இதில் தென்படுவது அகம் சார்ந்த ஒரு பிடிவாதத்தன்மை. இக்கதைகளில் எனக்கு முதலில் பிடித்த கதை ”சுரெயில்”. நீலி என பெயர் வைக்கச் சாத்தியமான கதையும் கூட. மரபை தொன்மத்தை இப்பெண்கள் பிடிவாதமாக கையாண்டு கையளிக்கும் தன்மை பல கதைகளில் வெளிப்படுகிறது. இரண்டாவதாகப் பிடித்த மோர்டோவியப் பின்னல் கதையிலும் தென்படுவது அத்தகைய தன்மை தான். வடிவத்திற்காகவோ மொழிக்காகவோ அல்லாமல் கதையின் களம் மற்றும் அதன் தரிசனத்தின் நிமித்தம் எட்டு கதைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.

இந்த வகையான கதைகளைப் பெண்கள் எழுதுவதற்கு நீலி ஊக்குவிக்கிறது என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. மாறாக ஆண் தன்மைய கதைகளுக்கு மத்தியில் பெண்மை, எளிமை ஆகியவற்றில் செவ்வியல் தன்மை அடையச் சாத்தியமான சமகால உலகப் பெண்களின் கதைகளை வாசிப்பதற்கும் அதன் வழியாக பெண் தன்மையிலிருந்து செவ்வியல் தன்மையை நோக்கிய பயணத்திற்கான வாய்ப்பாக இக்கதைகளைக் கொள்ளலாம்.

இந்தக் எட்டு கதைகளும் கடந்த நான்கு வருடங்களில் நரேன் நீலியில் மொழியாக்கம் செய்த சிறுகதைகளின் தொகுப்பு. நீலியின் இரண்டாவது நூலாக இந்த நூல் வந்திருப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். இந்த நூலுக்கான பாதி பதிப்பகச் செலவை நரேனின் அன்புக்கட்டளையின் பேரில் பெற்றுக் கொண்டேன். ஒரு வகையில் மகிழ்ச்சியும் கூட. நீலி தனி நபரின் பதிப்பகம் அல்ல என்று தோன்றச் செய்வது நண்பர்கள் ஒவ்வொரு முறையும் இவ்வாறு அதை அரவணைத்துக் கொள்ளும்போது தான். ஒரு சிறு இயக்கம் சிறிய எண்ணிக்கையிலான வாசகர்களுக்காக இங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நீலி பதிப்பகத்தின் நோக்கம் பெண் எழுத்துக்கான அறிவுச்சேகரம் என்றாலும் கூட நண்பர்கள் வாசிப்பதும் உரையாடுவதும் முக்கியம் என்று நினைக்கிறேன். நம் காலத்தில் இந்த உரையாடல் நமக்குள் நிகழ்வது அதைவிட முக்கியம்.

இந்த நூலைப் பற்றிய நீலி உரையாடல்கள் ஜூலை 26 அன்று நிகழ்ந்தது. அதில் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் கோ. புண்ணியவான், உமா மகேஸ்வரி, எழுத்தாளர் பிரபாகரன் சண்முகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். புண்ணியவான் அவர்கள் நரேனின் மொழிபெயர்ப்புத் திறன் குறித்தும், பிற இருவரும் கதைகள் குறித்தும் உரையாடினர். அதில் இரு உரைகளின் கட்டுரை வடிவம் இந்த இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

-ரம்யா

தொடர்புக்கு: narendiran.m@gmail.com, neeliemagazine@gmail.com

*

பல கடல்கள் கடந்து கலந்துரையாடல் நிகழ்வு

இருவேறு உலகங்கள் – பிரபாகரன் சண்முகநாதன்

ஆண்- பெண் இருவரின் உலகமும் வேறு வேறானவை. மிக அருகில் இயங்கக்கூடிய இருவேறு உலகம். ஒன்றின் வளையத்துக்குள் இன்னொன்று வருமெனினும் அது தொட்டுக் கொள்ளும் இடங்களைத் தாண்டி தொடாத இடங்கள் பரப்பளவில் பெரிது. இருவரும் ஒன்றாக வாழ்கிறபோதும்.

ஒரு நாள், வீட்டுச் சமையலறையில் நான் சமைக்கிற பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். பெரிதாக ஒன்றுமில்லை. தேய்த்து வைத்த சப்பாத்திகளை கல்லில் போட்டு எடுக்க வேண்டும். சப்பாத்தியை கல்லில் போட்டு ஒருபுறம் வெந்த பிறகு மறுபுறம் திருப்ப வேண்டும். முதல் சப்பாத்தியை திருப்புவதற்கு, எங்கிருந்தோ சமையலறைக்குள் வந்த பாரதி (இவள் என் தங்கை) சப்பாத்தியை வெறும் கையால் பிடித்து திருப்பி போட்டாள். இவ்வளவு எளிதானதா இது.

மறுமுறை நான் அவ்வாறே திருப்பிப் போட முயற்சித்ததுதான் தாமதம். கை சுட்டு, சப்பாத்தியை நான் கீழே விட்டு ஒரே களேபரமானது. எனக்கு அந்த சூட்சுமம் புரியவே இல்லை.

பாரதியின் விளக்கத்தில், சப்பாத்தி சுட்டுவிடக் கூடாது என அதன் பரப்பில் குறைந்த இடத்தில் பிடித்து தூக்க முயற்சித்தேன். ஆனால் விஷயம் என்னவெனில் எந்தளவு பரப்பை நாம் தொடுகிறோம் என்பதில் இல்லை, எவ்வளவு வேகத்தில் அதை திருப்பிப் போடுகிறோம் என்பதுதான். அவள் எனக்கு புதிய மனுஷியாக தெரிந்தாள்.

பல கடல்கள் கடந்து கதைகளை ஒட்டுமொத்தமாக யோசித்து பார்க்கையில் எனக்கு இந்த நிகழ்வுதான் நினைவுக்கு வந்தது. இந்தக் கதைகளை திரட்டி நினைவுக் கொள்வதின் வழியாக சில உரையாடல்கள் நிகழ்த்திப் பார்க்க முடிந்தது.

இருவேறு உலகத்தின் எல்லைகள் அத்தனை உறுதியில்லாதவை. அப்படி வரையறுக்கவும் முடியாதது. ஆனால் இந்த ஒவ்வொரு உலகத்தின் மீதும் நிகழ்கிற சந்தர்ப்பங்களுக்கு பதிலளிக்கும்விதத்தில் இரு உலகங்களையும் வேறுபடுத்திக் கொள்ள முடியும்.

இதனை ஒரு ஆட்டக்களம் என எடுத்துக் கொண்டால் பெண்களின் உலகம் ஆண்களைவிட தடுப்பாட்டத்தில் சிறந்தது. அத்தகைய சந்தர்ப்பங்களை அவர்கள் எதிர்கொள்ளும்விதம் வலுவானது. அனுபவத்தினால் உருவாவது.

தொகுப்பில் உள்ள முதல் கதையான சூரெய்ல் தொடங்கி நிலத்திடம் திரும்புதல் வரையிலான எட்டு கதைகளிலும் இந்த முறைமையைப் பார்க்க முடிகிறது.

இந்தச் சூழலுக்குப் பழகுதல் அவர்கள் சிறுமியாக இருக்கும்போதிருந்து கற்றுக் கொள்கிறார்கள். யில்டிஸ் கதையில் வருகிற சிறுமிக்கு பெரிய எழுத்துகள் பிரச்னையாக இருக்கிறது. அவளது வாழ்வில் நடக்கிற நிகழ்வுகள் வழியாக அவள் வளர்கிறாள்.

வளர்ந்தபின், முதுமை தாங்க இயலாததாக இருக்கிறது. சிறுபாதத் தடங்கள் கதையில் வருகிற அஞ்சக்காவை நீங்கள் எந்த நகரத்து வீடுகளில் சலித்துக் கொண்டு வாழும் பெண்களோடும் பொருத்திப் பார்க்கலாம்.

இந்த சூழல் என்பது புறத்தில் இருந்து உருவாவதுபோலவே பெண்களின் உடலிலிருந்தும் உருவாகுபவை. பல கடல்கள் கடந்து கதை, தன்னுள் வளரும் உயிருள்ள உயிரற்ற விஷயங்கள் மீது நிலத்திலிருந்து பிரிந்து வாழும் பெண் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பற்றியது.

இந்த அத்தனை கதைகளிலும், மிக நிச்சயமாக வேறு வேறு நிலங்களில், சூழல்களில் வளர்ந்த பெண்கள் வருகிறபோதும் ஒரு விஷயம் மாறாததாக இருக்கிறது. அது அவர்களின் வலிமை. உடல்ரீதியான வலிமையை பற்றியது அல்ல. மனரீதியான வலிமை.

தான் பெற்ற குழந்தைகளின்முன் அவமானப்படுத்தப்பட்டு குழந்தைகள் கடத்தி வரப்பட்டவையா என காவலர்கள் அவதூறாக பேசுகிறபோது காட்யா எதிர்கொள்கிற சூழல் எந்தவொரு ஆணினாலும் சகித்துக்கொள்ள முடியாதது.

புறச்சூழல் என்பது ஆண்களும் சேர்ந்ததுதானே. சூரெய்ல் கதையில் வருகிற அப்பா வெளிப்புறத்தில் தன்னை ஒரு கனவானாக நிறுவிக்கொள்ள அத்தனை பிரயத்தனங்களையும் செய்யக்கூடியவர். தான் புலம் பெயர்ந்து வந்தபின், தன் நாட்டின் எந்தவொரு எச்சங்களையும் சேர்த்துக்கொள்ள துணியாதவர். தன் மகள்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் வருகிற ஒரு சொல் அவரை துடுக்குற செய்யக்கூடியது. அவர் மனம் இன்னமும் அதே தொன்மங்களின் மீதான நம்பிக்கை கொண்ட மனம்தான்.

ஆனி லாமா கதையில் வருகிற கர்மா என்பவர் ஒரு ஆணுக்கு மிகச் சிறந்த உதாரணம். அவசரப்படக்கூடியவன். தான் பழிக்கு ஆளாவோம் என அஞ்சி அதனை தன்மீது செய்ய வாய்ப்புள்ளவரை காட்டிக் கொடுப்பவன். பின்பு அவசரப்பட்டதற்கு அஞ்சி அங்கிருந்து அகன்றுவிடுபவன்.

ஒரு வீராங்கனையின் தனிமை கதையில் வருகிற ஆண் ஒருபோதும் தன் மனைவியை ஏறெடுத்துக்கூட பார்க்காதவன். தங்கள் நகப்பூச்சு நிறத்தைக்கூட தன் இணையர் கண்டுக்கொள்ள வேண்டும் என விரும்பும் பெண்களில் ஒருத்தி, பூதாகரமாக தன் உடலை மாற்றிக்கொண்டு அதே வீட்டில் வளைய வருகிறாள். ஆனால் அதனை கண்ணெடுத்து காண முடியாதவன். அதே கதையில் இன்னொரு நேர்மறையான ஆண் வருகிறான்.

யில்டிஸ் கதையில் திருமணமான குழந்தைகள் கொண்ட பெண்ணுடன் இணைந்து வாழ்பவன் அவள் திருமணத்திற்கு சம்மதிக்காதபோது அங்கிருந்து ஓடிவிடுகிறான். ஒரு பாம்பு சட்டையை உதிர்ப்பதுபோல.

பல கடல்கள் கடந்து கதையில் வருகிற ஆண் மனைவிக்கு உறுதுணையாக வார்த்தைகளில் இருக்கிறபோதும் அவனால் எந்தவொரு மருத்துவ பரிசோதனைக்கும் அவளுடன் வர இயலவில்லை.

மோர்டோவிய பின்னல் கதையில் காவலர்களாக வருகிற ஆண்கள் அத்தனை முரட்டுத்தனம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

ஒரு கதையில் மட்டும் ஒரு ஆணினால் ஒரு ஆசுவாசம் ஏற்படுகிறது. சிறுபாதத் தடங்கள் கதையில் ஆனால் அவரும் அவளுக்கு உடைமைப்பட்டவர் இல்லை.

பெண்களை புரிந்து கொள்வதில் இருந்து இதனை பார்க்கலாம். ஒரு ஆண் மிகக் குறைந்தபட்சமாக அவனுக்கு ஒரு காதல்முறிவு நிகழ்ந்திருந்தால் ஒட்டுமொத்த பெண்ணினத்தை குறித்தே அத்தனை எதிர்மறை எண்ணங்களையும் அவன் கொள்ள முடியும்.

இந்தக் கதைகளில் பெண்கள் தனிப்பட்ட மனிதர்கள் மீதான வெறுப்பை சூழலுக்குரியதாக மாற்றுகிறார்கள். ஒருவரிடமிருந்து அந்த சிக்கலை நகர்த்தி அதனை பெரிதாக்குகிறார்கள். ஒன்றை பெரிதாக்கும்போது அதனை எதிர்கொள்வது எளிது.

மிக நுட்பமான சித்தரிப்புகள் கதைகள் எங்கிலும் பார்க்க முடிகிறது. ஆனி லாமா கதையில் தனக்கு பிடித்த இளம்துறவியான கர்மா கதைச்சொல்லியிடமிருந்து எழுந்து செல்லும்போது போர்வையின் நுனியை தோளுக்கு மாற்றுகிற செயலில் அந்த அறையின் காற்றையே உலுக்குவதாக சொல்கிறாள். அவளோடு இருக்க முடியாத அவனை குறித்த ஒரு சொற்றொடர்- என்னை நனைக்காமல் சென்ற கோடைமழை என்பது கவித்துவமான ஒப்பீடு.

சூழல் என்பது தொன்மங்களும்தான். இன்றைய புதிய கதைகளில் தொன்மங்கள் குறிப்பிடத்தகுந்த இடம் பெற்றிருப்பவை. பெண்கள் எப்போதைக்கும் சடங்குகள், தொன்மங்களின் குறியீடுகளாகவும் அதனை காப்பவர்களாகவும் கடத்துபவர்களாகவும் இருந்துள்ளனர். ஆனால் அவர்கள் தங்களை சுற்றிய அத்தனை கட்டுகளை உடைத்து வெளியேறும்போது தொன்மத்தை மறுவரையறை செய்கிறார்கள்.

சூரெய்ல் என்பது இங்குள்ள நீலி, பேச்சிக்கு சமமானது. வாழ்வை நிறைவு செய்யாத, குறைகள் கொண்ட வாழ்வை வாழ்ந்த பெண்கள் அரூப வடிவில் அப்படியே தங்கிவிடுவது. சூரெய்ல் ஒரு ஆணை இரண்டு முறை பெயர் சொல்லி அழைத்து அவர்களின் ரத்தத்தை உறிஞ்சிவிடும் என்பது தொன்மம். இங்கும் ஆண்கள் தங்களை பாதிக்கப்பட்டவர்களாக மாற்றிக்கொள்வதை எழுத்தாளர் கேள்விக்குட்படுத்துகிறார். குற்றவாளியே எப்படி பாதிக்கப்பட்டவனாகவும் இருக்க முடியும் என்கிற புதிர் இந்த கதையில் இயங்குகிறது.

ஆனி லாமா கதையில் ஒரு ஆணுள் உறையும் பெண் தெய்வம் எனக் குறிப்பிடப்படுவது அங்குள்ள முதிய துறவி ஒருவர் பெண் போல நடந்துகொள்வதைப் பற்றியது. ஆனி என்பது பெண் மதகுருக்களை குறிக்கும் ‘நன்’ என்பதற்கு சொல். இது ஒரு சீண்டல். பெண் போல நளினமாக நடந்துகொள்ளும் ஒரு ஆணைப் பற்றியது.

பல சந்தர்ப்பங்களில் என்னுடன் இருக்கிற ஆண்களிடம் அதனை நான் கவனித்துள்ளேன். அவர்களுக்கு இதன் மீது அடிமனதில் உள்ள ஒரு அச்சம். தான் பெண் என்கிற கேலிக்கு ஆளாகிவிடுவோம் என்பது அவனின் அத்தனை நளினங்களையும் கொல்லக்கூடியது. அதனையும் மீறி உடலளவில் பேச்சில் பெண்ணின் தன்மைகளை கொண்டிருப்பவர்கள் சுய அறிதல் இல்லாதபட்சத்தில் இந்த சமூகத்தின் கடும்கேலிக்கு ஆளாவார்கள்.

மோர்டோவிய பின்னல் இன்னொரு தொன்மத்தை சார்ந்த கதை. ரஷ்ய பழங்குடிகளில் ஒன்றான மோர்டோவிய நிலத்தின் பாரம்பரியங்களில் ஒன்றான துணிகளின் மீதான பின்னல் சார்ந்தது. அந்தக் கதையின் முடிவில் துணியின் மீதான பின்னல்கள் ரத்தமும் சதையுமான காவலனின் கைகளில் எழுந்து வருவது உச்சபட்ச தருணம்.

நிலம் ஒரு தொன்மம். நிலத்திடம் திரும்புதல் கதையில் நிலம் அதற்கான சாந்தியை கேட்கிறது. நிலத்துடனான போரிடுதல் என்பது பலனளிக்காது. அது இங்கு மிக நீண்டகாலமாக இருப்பது. அதனிடம் சரணடைவதே அதனை எதிர்கொள்ளும் வழி எனத் துணிகிறாள் கதைச்சொல்லி.

துரோகம், கழிவிரக்கம், ஏமாற்றம், வேதனை, பிரிவு என அத்தனை உணர்வுகளின் மீதும் ஒரு பெண் கொள்கிற வெவ்வேறு பரிணாமங்களை இந்தக் கதைகளில் பார்க்க முடிகிறது.

எட்டு கதைகளின் கதை நாயகர்கள் பெண்கள். இங்கு அவர்களை மட்டுமில்லாது அவர்களை எழுதிய பெண் எழுத்தாளர்களையும் காண முடிகிறது. பெண் என்பவளே இடம் பெயர்பவள் எனக் கொண்டால் இந்த எழுத்தாளர்களின் களங்களிலும் புலப்பெயர்வு ஒரு தவிர்க்க முடியாததாகிறது.

உலகத்தை அவர்கள் சிறு கைகளால் பிடித்துக் கொள்கிறார்கள். பல நேரங்களில் ராட்டினமாக மாறுகிற வாழ்வில் அவர்கள் வெவ்வேறு வடிவில் பற்றுதலை பெறுகிறார்கள். தொன்மங்களின் வழியாக, இளம்பருவ நினைவுகளின் வழியாக, ஒன்றுமே இல்லாததன் வழியாக, உடல் வழியாக, உயிராற்றல் வழியாக இந்தப் பிடிமானம் அவர்களுக்குச் சாத்தியமாகிறது.

ஆண்- பெண் என முயங்குகிற இரண்டு உலகங்களிடையேயான கதவுகளை இந்தப் பெண் எழுத்தாளர்கள் திறந்து வைக்கிறார்கள். அவர்களின் கண்களின் வழியாக காணக்கூடிய உலகம் இன்னும் கூடுதல் பரிணாமம் கொண்டதாக அணுக்கமானதாக இருக்கிறது.

இந்தக் கதைகளின் தேர்வு நரேன் அண்ணாவை இன்னும் நெருக்கமாக்குகிறது. அவரை நான் வேறு வேறு வழிகளில் அறிந்திருப்பினும். இதன் ஒரு கதைகூட மொழிப்பெயர்ப்புக்கு தகுதியானது இல்லை எனச் சொல்ல முடியாதது. இதன் ஒரு வரிகூட, புரிந்துகொள்வதற்காக திரும்பி சென்று வாசிக்க வேண்டும் எனக் கோராதது. அவரது முந்தைய தொகுப்புகளில் இருந்து அவர் கடல்கள் கடந்துதான் இந்தத் தொகுப்புக்கு வந்திருக்க முடியும். அதனை பார்க்க முடிகிறது.

இப்போது எழுந்து வருகிற கதைகள் இன்னும் கூர்மையாக இருக்க வேண்டிய தேவை உள்ளது. ஒரு ஆணினால் உருவாக்க முடிகிற உலகைக் காட்டிலும் பெண்களின் உலகம் சிறுசிறு விவரணைகளால் மாபெரும் ஒன்றை சாத்தியமாக்க முடிகிறது.

இன்னொரு விவாதத்துக்குரிய என்னுடைய கணிப்பு. இந்த எந்தக் கதையிலும், ஆண்களின் கதைகளில் வரக்கூடியதுபோலான, கதாபாத்திர விவரிப்பில் உருவம் சார்ந்த அழகு மயக்கங்கள் இல்லை. அது அவர்களுக்குத் தேவையுமில்லை எனப் படுகிறது.

பிரபாகரன் சண்முகநாதன் 

மிக நிச்சயமாக தமிழின் முக்கிய மொழிப்பெயர்ப்பு கதைகளின் தொகுப்பு இது. நல்ல இலக்கியம் சுவாரசியமானதும்கூட என்பது என் அனுபவம். அந்த அனுபவத்தின் வழியாக இந்தக் கதைகள் எழுந்து நிற்கிற இடம் எனக்குப் பிடித்தமானதாகவும் உள்ளது. நீலி இதழின் இந்த முயற்சி முக்கியமானது.

இத்தனைக்கு பிறகு யோசித்து பார்த்தால் இருவேறு உலகங்கள் என்பது ஒன்றோடு ஒன்று கோர்க்கிற உலகங்களாக இல்லாமல் ஒன்றில் ஒன்று உள்ளடங்கிய உலகமாகவும் தோன்றுகிறது. மிக நிச்சயமாக மற்றொன்றை உள்ளடக்கியுள்ள உலகம் பெண்கள் உடையது.

(ஜூலை 26 அன்று ஜூம் கலந்துரையாடல் நிகழ்வில் பிரபாகரன் சண்முகநாதன் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்)

*

உமாமகேஸ்வரி உரை

இந்த வாழ்வையும் அது தரும் மகிழ்வையும் ஏற்க முடியாத உயிர் என்று ஏதும் இந்த உலகில் இல்லை. ஒரு செல் உயிரியாக தோன்றி இன்று வரை ஒரு உயிரின் முதல் கண் விழிப்பு என்பது அதன் பெரும் விழைவில் பிறக்கும் அதன் முதல் தேடல் அல்லவா. அங்கிருந்து தொடங்குகிறது அதன் பெரும் கனவும் கற்பனையும். உண்மையில் எதிர் வரும் ஒவ்வொரு நொடியும் ஒரு புது உலகின் ஆச்சர்யங்களை அள்ளித் தரும் என்பது எவ்வளவு அற்புதமானது. எந்த உயிராலும் மறுக்க முடியாதது அதன் சுய உணர்வும், அது தரும் அனுபவமும். இவ்வுலகில் எந்த உயிரும் அது வாழும் விழைவிற்கு எதிராக எதையும், யாருக்காகவும், எதற்காகவும், எந்நேரத்திலும் விட்டுக் கொடுத்ததில்லை இன்று வரை. ஆனால் மனித உயிரினத்தில் மட்டும் திட்டமிட்டு செயல்படும் புத்தியின் பரிணாம வளர்ச்சியில், அவன் ஜெயித்த முதல் விஷயம் பெண்ணின் கருப்பை என்பதை அவனளவில் பெருமிதமாக சொல்லிக் கொள்ளலாம்.

இந்தக் கதைகள் புத்தகமாக வெளிவரும் முன்பே நீலி இதழ் மூலமாக படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதலில் சில கதைகள் காத்திரமாகவும், சில புரியாத ஏதோ ஒன்றை ஒளித்து எனது தேடும் மெனக்கெடலை கோருவதாகவும் இருந்தன. நான் என்னைப் பற்றி மறந்த, எனக்கே தெரியாத, சில வலிகளையும் வடுக்களையும் ஞாபகப்படுத்தியது என்றே சொல்லலாம். முதலாவதாக சுரெயில் கதையில் வரும் பாகிஸ்தானிய தொன்மக் கடவுள் என்பது கிட்டத்தட்ட நம் நாட்டார் பெண் தெய்வங்களுடன் ஒப்பிடக் கூடிய ஒன்றே. சுரேயில் கோபம் எதன் மீது? பெண் இறந்த பிறகும் பழிவாங்கத் துடிக்கும் ஆணின் மனம் அவளுக்கு எந்த விதத்தில் பொருள்படும். அடங்கா கோபத்தில் அவள் தரும் தண்டனை என்பது அவள் உயிருடன் வாழ்ந்த இந்த சமூகத்தின் மீது அவள் வழங்கும் சாபம் அல்லவா. மிக காத்திரமான இச்சிறுகதை தொகுப்பு இவ்விதம் தொடங்குகிறது.

இத்தொகுப்பில் இரண்டாவதாக, வெக்கையில் வீசும் மென்காற்றாக வரும் கதையே “சிறு பாத தடங்கள்”. இன்றைய ஒரு தலைமுறைக்கு இக்கதையின் ஆழம் சற்றே பிடிபடாததாக இருக்கலாம். ஆனால், உளவியலில் இது மறுக்க முடியாத ஒரு பெண்ணின் மனக் குமுறல். உண்மையில் அஞ்சக்காவிற்கு இருக்கும் எரிச்சலும் கசப்பும், நம்பிக்கை இன்மையும் ஏன்? ஒரு விதத்தில் இங்கு கொற்றவையின் கோபம் சற்றே மின்னிச் செல்கிறது. வாழ்நாள் முழுவதும் நீ தந்த கட்டங்களில், அசையாது வழுவாது வாழ்ந்த அவளுக்கு இறுதியில் மாறா உண்மையெனக் கிடைத்தது, முதுமையும் தனிமையும் மட்டுமே. அதற்கு அவளது சிடுசிடுப்பு என்பது சரியான, சமமான பதிலாக கூட இருக்க முடியாது. அதை அவளது மருமகளும் புரிந்து கொண்டிருப்பாளா?. அவளது அடுத்த நாற்காலி அது என்று தெரியாமல் இருப்பது இக்கதை மவுனமாக சொல்லிச் செல்லும் பெண்ணின் இன்னொரு பேதமையையே. இறுதியாக அஞ்சக்கா ஆசுவாசமாக, தொலைத்த எல்லா காலங்களையும் பின்னோக்கி சென்று, தனது பால்ய கால சிநேகிதனை கண்டு கொள்கிறாள். அவள் தேடுவது தன் மீது வீசப்படும் ஏதுமற்ற பழத்தோலை கூட இயல்பாக எடுத்துக் கொள்ளும் சிநேகிதனை மட்டுமே. இறுதியில் “அட.. அஞ்சுவின் அப்பா” எனும் போது அஞ்சக்காவை பார்த்து நாமும் புன்னகைக்கிறோம்.

ஒவ்வொரு பெண்ணிற்கும் எப்போதும் தனது உடலை மீறிய ஒரு கனவு உண்டு. நம் கனவுகளை ஒரு நாளும் ஏற்க முடியாத இம்சையாக உடல் இருக்கும் ஒரு மனநிலையோடு நான் வாசித்த கதையே, “ஒரு வீராங்கனையின் தனிமை”. மிக மிகக் கூர்மையாக ஒரு பெண் தன் மீது சுமத்தப்பட்ட பாவமான, கருணையான உருவத்தில் இருந்து, சற்றே ஆசுவாசமாக விடுபடும் ஒரு பெண்ணின் மனநிலையில் இருந்து தொடங்குகிறது இக்கதை. இதில் பெரிதும் என்னை பாதித்தது அவள் உடல் மாற்றமோ அதன் மீறலோ அல்ல. அவள் உடல் வலிமை கொள்ளும் அதே நேரத்தில், அவள் மனம் கொள்ளும் பக்குவமும்தான். அவளே இக்கதையில் கூறும் ஒரு வரி உள்ளது. “அறிவார்ந்த ஆண்களைத்தான் எனக்கு பிடிக்கும் என்பது உங்களுக்கே தெரியும். இப்படிக் கூர் உணர்வில்லாத உடல் பருத்த ஜடம் எனக்கு தேவையில்லை.”

இறுதியில் அவள் அடைய நினைப்பது இந்த ஜடத்தை தானா. அதன் பின் கண்முன்னே இறக்கும் யார்க்கிக்காக அவள் போராடவும் இல்லை. அதன் இறப்பு ஒரு சொல்லுக்கு மேல் அவளை பாதிக்கவும் இல்லை என்பதே உண்மை. பெண் பெற வேண்டியது உடல் வலிமையையா? இல்லை எந்த உணர்வாலும் தொட முடியாத தனிமையையா?. அவள் உடல் மீது சென்றடையும் அவள் எதிர்பார்ப்பு என்பது எந்த ஒன்றிற்காக… அவள் வலிமை பெறும் தோறும் அவள் அடைவது அல்லது அடைய விரும்புவது எதை? பெண்ணின் அகத் தனிமையை இச்சிறுகதை மிக நுட்பமாக சொல்லிச் செல்கிறது.

“ஆனிலாமா, பெண் துறவி”. ஒரு ஆண் துறவி தன்னில் இருக்கும் பெண்ணின் தன்மையை உணரும் இக்கதையில், கேட்கும் ஒரு பெரு வினா என்பது பெண்ணென மாறும் ஆண் ஒரு பெண்ணின் பார்வையில் பெருமிதத்திற்கு உரியவன் தானா என்பதே.

அடுத்ததாக இல்டிஸ் கதையில் வரும் சிறிய எழுத்துக்களை மட்டுமே அறியும் சிறுமியும் அவள் எதிர்பார்த்த அந்த கண்டக்டர் சித்தப்பாவும் எதற்காக பிரிய வேண்டும் என்ற கேள்வியை முன்வைத்தே முடிகிறது.

“நிலத்திடம் திரும்புதல்” கதையில் பெண் எவ்வளவோ அதனுடன் சேர்ந்து வாழப் போரிட்டாலும் எதற்காகவோ நிலத்திற்கு அவள் மீது இவ்வளவு வன்மம். இறுதியாக கைவிட்டுச் செல்லும் அந்த தாயின் வெறுப்பும், வேறு வழியே இல்லாமல் அதை காக்கும் மகளும், நிலத்தின் மீது இருக்கும் மறுக்க முடியாத பேரன்பின் ஒரு வித புரிதல்தான். ஒரு வகையில் அந்த பிரிவும் இந்த அக்கறையும் பெண்களிடத்தில் நிலம் எவ்வாறு பொருள் படுகிறது என்பதற்கு சாட்சி, நிலத்தின் அப்பட்டமான எதார்த்தத்தையும் மீறி. நாம் சில கவிதைகள் வாசிக்கும் போது பெருத்த அயர்ச்சியான விவரணைகளை தாண்டி ஏதோ ஒரு வார்த்தையில் அது நம்மை திகைக்கச் செய்யும். அந்த நொடியை தாண்டி வர முடியாத ஒரு கடினமான உண்மையில், உறையும் தருணங்கள் போல ஒரு ஆழ் மன அதிர்ச்சியை உள்ளாக்குகிறது இக்கதை. ஒரு எழுத்தாளராக இப்படி ஒரு கோணத்தில் கதையை அணுக முடியுமா?

கதையின் முடிவை ஊகித்த பின்பு இக்கதையை எழுதத் தொடங்கினாரா, இல்லை இக்கதை, அந்த வலி மிகுந்த சொற்களால் மிக சாதாரணமாக அந்த இடத்தை அடைந்ததா என்பதே என் ஆகப்பெரும் கேள்வியாக இருந்தது. கரு சுமந்த எந்த பெண்ணையும் அசைத்துப் பார்க்கும் அந்த சொல் “திசு”, வெறும் வெற்று சொல் மட்டும் அல்ல.

உமா மகேஸ்வரி

இறுதியாக எனக்கு மிகவும் அணுக்கமான அன்பான காட்யா. இந்த சமூகத்தால், எல்லாவித வேற்றுமைகளையும் கடந்து காக்கும் என்று நம்பப்பட்ட தனது நாட்டால், தான் பிறந்த குலத்தால், வாழும் குடும்பத்தால், ஏன் தான் சுமந்த ஒன்றால் கூட, என எல்லாவற்றாலும் ஏமாற்றப்பட்ட காட்யா, தனது வாழ்வின் அவமானகரமான தருணங்களில் தரும் அந்த மவுனம் என்பது உண்மையில் எதை காட்டுகிறது, அவளது நம்பிக்கை இன்மையையா?. சலிப்பையா? கசப்பையா? அல்லது விரக்தியையா?. ஆனால் ஒன்று எதுவாகிலும் அவள் ஒரு போதும் மோர்டோவியாவின் பின்னலை மட்டும் விட்டுக் கொடுக்க மாட்டாள்.

*

உமா மகேஸ்வரி – இலக்கிய வாசகர். கோவை சொல் முகம் குழுவில் தொடர்ந்து உரையாற்றுகிறார். பயணங்களில் ஈடுபாடுள்ளவர். தமிழ்நாடு அரசின் வணிகவரித்துறையில் பணி புரிகிறார்.

*

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *