கலையும் உணர்வும் – விவேக் சுப்ரமணியன்
(சுசான் லாங்கரின் குறியீட்டுத் தத்துவம்)
மொழிக்கு அப்பால் மனிதன் வாழும் உலகம்:
பீத்தோவனின் 9 ஆவது சிம்பொனியின் இறுதி அசைவு முற்றுப்பெறும்போது, சிலர் உடனடியாக எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள்; சிலர் கண்களை மூடியபடி அமர்ந்திருக்கிறார்கள். சிலர் அறியாமலேயே ஆழ்ந்த மூச்சை இழுக்கிறார்கள். இன்னொருவர் கண்களில் வழியும் கண்ணீரை அமைதியாகத் துடைத்துக்கொள்கிறார். அந்தக் கணத்தில் எந்தத் தத்துவ வாதமும் முன்வைக்கப்படவில்லை. எந்த அறிவியல் கோட்பாடும் நிரூபிக்கப்படவில்லை. எந்த உண்மைத் தகவலும் பரிமாறப்படவில்லை. இருந்தும், அங்கிருந்த ஒவ்வொருவரும் தங்களுக்குள் ஏதோ அடிப்படையான ஒன்று நிகழ்ந்துவிட்டதாக உணர்கிறார்கள்.
இந்த அனுபவத்தை நாம் மிகவும் சாதாரணமாக, “இசை என் உணர்வை தூண்டிவிட்டது’’ என்று விவரிக்கிறோம். ஆனால், இந்த எளிய சொற்றொடருக்குள்ளேயே ஓர் ஆழமான தத்துவ முரண்பாடு ஒளிந்துள்ளது. பேசுவதற்கு மொழி ஒரு கருவி; ஆனால், இசைக்குச் சொல்லகராதி கிடையாது. ஒரு சிம்பொனி, ‘இன்று மழை பெய்கிறது’ என்றோ அல்லது ‘போர் முடிந்துவிட்டது’ என்றோ புற உலக நிகழ்வுகளை நமக்குச் சொல்வதில்லை. அதில் பெயர்ச்சொற்களோ, வினைச்சொற்களோ அல்லது தர்க்க ரீதியான வாக்கியங்களோ இல்லை. இருப்பினும், அந்த இசை நமது அகத்தை உலுக்கி, ஏதோவொரு பேரர்த்தத்தை நமக்குள் விதைக்கிறது. மொழியின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட இந்த இசை, எவ்வாறு அர்த்தமுள்ளதாக மாறுகிறது? இந்த முரண்பாட்டை நாம் எவ்வாறு தத்துவ ரீதியாகப் புரிந்துகொள்வது?
இந்த வினா இசையைத் தாண்டி, மானுட வாழ்வின் ஒட்டுமொத்தப் பரப்பிற்கும் விரிகிறது. நாம் காணும் ஒரு தேசியக் கொடி தேசத்தின் ஆன்மாவையும் வரலாற்றையும் தாங்கி நிற்கும் குறியீடு. பட்டமளிப்பு விழாவில் அணியப்படும் அங்கி, பிறந்தநாள் கேக் இவை அனைத்தின் மதிப்பும் அவற்றின் பொருண்மையில் இல்லை. அந்தப் பொருட்கள் ஒவ்வொன்றின் மீதும் மனிதச் சமூகம் கூட்டாக ஏற்றி வைத்துள்ள உன்னத அர்த்தங்களில் தான் அவற்றின் உண்மையான வலிமை உறைகிறது. சுருக்கமாகச் சொன்னால், நாம் வெறும் பொருட்களால் ஆன உலகில் வாழ்வதில்லை; மாறாக, மனிதர்கள் கட்டமைத்த அர்த்தங்களின் வலைப்பின்னலுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இந்த எளிய கவனிப்பு, மனிதனைப் பற்றிய மிக ஆழமான தத்துவக் கேள்விக்கு வழிவகுக்கிறது. மனிதன் ஏன் மற்ற உயிரினங்களைப் போல உலகிற்கு உடனடி எதிர்வினை அளிப்பதிலேயே நிற்கவில்லை? ஏன் அவன் உலகைச் சின்னங்கள், சடங்குகள், கதைகள், இசை, மதம், சட்டம், அறிவியல், கலை ஆகிய குறியீட்டு வடிவங்களாக மறுசீரமைக்கிறான்? ஒரு கல்லை ஆயுதமாக மட்டுமல்ல, நினைவுச் சின்னமாகவும், சிலையாகவும், கடவுளின் உருவமாகவும் மாற்றும் ஆற்றல் எங்கிருந்து வருகிறது?

மேற்கத்திய தத்துவத்தின் பெரும்பாலான வரலாறு இந்தக் கேள்விக்கான விடையை பகுத்தறிவில் தேடியது. பிளேட்டோ அறிவை உண்மைக்கான உயர்வாகக் கண்டார். அரிஸ்டாட்டில் மனிதனை “பகுத்தறிவுள்ள உயிரி” என்று வரையறுத்தார். டெகார்ட் சிந்தனையை மனித இருப்பின் அடையாளமாகக் கொண்டார். காண்ட் பகுத்தறிவின் தன்னாட்சியை வலியுறுத்தினார். இவர்கள் அனைவரும் மனிதனைப் புரிந்துகொள்வதில் மாபெரும் பங்களிப்புகளைச் செய்திருந்தாலும், மனித வாழ்க்கையின் மற்றொரு அடிப்படை பண்புகளான குறியீட்டு வாழ்க்கையை பற்றி போதிய கவனத்தைப் பெறவில்லை.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்தப் போக்கு மேலும் வலுவடைந்தது. பகுப்பாய்வுத் தத்துவத்தின் எழுச்சியோடு, தத்துவத்தின் மையக் கவனம் மொழி, தர்க்கம் மற்றும் அறிவியல் விளக்கங்களின் மீது குவிந்தது. ஒரு கருத்து அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமெனில், அது மொழியில் தெளிவாகச் சொல்லப்பட வேண்டும்; அதன் உண்மைத் தன்மை தர்க்க ரீதியாகச் சோதிக்கப்பட வேண்டும் என்ற அணுகுமுறை ஆதிக்கம் செலுத்தியது. இந்த அணுகுமுறை அறிவியலுக்கும் கணிதத்திற்கும் பெரும் தெளிவை அளித்தது. ஆனால் இதன் எதிர்பாராத விளைவு என்னவெனில், கலை, இசை, தொன்மம், சடங்கு போன்ற மனித அனுபவத்தின் மையப் பகுதிகள் தத்துவத்தின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டன. ஒரு சிம்பொனியின் உண்மைத்தன்மையை எவ்வாறு சோதிப்பது? ஒரு ஓவியத்தை “சரி” அல்லது “தவறு” என்று எவ்வாறு நிரூபிப்பது? ஒரு நடன வடிவம் எந்தக் கோட்பாட்டை முன்வைக்கிறது? இத்தகைய கேள்விகளுக்கு பகுப்பாய்வுத் தத்துவத்தின் கருவிகள் போதுமானதாக இல்லை. அதன் விளைவாக, மனித வாழ்வின் மிக ஆழமான அனுபவங்கள் அனைத்தும் “அழகியல்” என்ற தனி அறைக்குள் அடைக்கப்பட்டன.

இந்தச் சூழலில்தான் சுசான் கேத்ரினா லாங்கர் என்ற அமெரிக்கத் தத்துவவாதி புதிய பார்வையை முன்வைக்கிறார். அவர் புதிய பதிலை அளிப்பதற்கு முன்பு கேள்வியையே மாற்றினார். மனிதன் மொழியின் வழியாக மட்டுமே உலகைப் புரிந்துகொள்கிறான் என்ற முன்னெண்ணத்தை அவர் கேள்விக்குட்படுத்தினார். மொழி என்பது மனிதனின் ஒரே குறியீட்டு அமைப்பு அல்ல; அது பல குறியீட்டு அமைப்புகளில் ஒன்றே என்று அவர் வாதிட்டார். இசை, ஓவியம், சிற்பம், நடனம், கட்டிடக்கலை, தொன்மம் இவை அனைத்தும் தனித்தனி குறியீட்டு வடிவங்கள். அவை மொழியைப் போல இயங்குவதில்லை; ஆனால் அதனால் அவை அர்த்தமற்றவையாகிவிடுவதில்லை என்றார்.
இந்தக் கருத்து வெளிப்படையாக எளிமையாகத் தோன்றலாம். ஆனால் இதன் விளைவுகள் புரட்சிகரமானவை. மொழி மட்டுமே அர்த்தத்தின் இருப்பிடம் அல்ல என்றால், மனித அறிவாற்றலைப் பற்றிய நமது புரிதலையே மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். கலை வெறும் பொழுதுபோக்காக இருக்க முடியாது. இசை வெறும் உணர்ச்சி கிளர்ச்சியாக இருக்க முடியாது. அவை மனித மனம் உலகை ஒழுங்குபடுத்தும் அடிப்படை அறிவாற்றல் செயல்பாடுகளாக மாறுகின்றன. சூசன் லாங்கரின் இந்தப் புரிதல் தன்னிச்சியாக தோன்றியதல்ல. அதன் பின்னணியில் ஜெர்மன் தத்துவவாதி எர்ன்ஸ்ட் காசிரரின் ஆழமான செல்வாக்கு இருந்தது. மனிதன் “பகுத்தறிவுள்ள உயிரி” என்பதைக் காட்டிலும் “குறியீட்டு உயிரி” (Animal Symbolicum) என்பதே அவனது உண்மையான வரையறை என்று காசிரர் வாதிட்டார். மொழி, மதம், தொன்மம், கலை, அறிவியல், இவை அனைத்தும் மனிதன் உலகிற்கு அர்த்தம் வழங்கும் குறியீட்டு வடிவங்கள் என்று அவர் கருதினார். லாங்கர் இந்த அடித்தளத்தை ஏற்றுக்கொண்டார்; ஆனால் அதில் ஒரு முக்கியமான விரிவாக்கத்தைச் செய்தார். காசிரர் பெரும்பாலும் மனித பண்பாட்டின் குறியீட்டு அமைப்புகளைப் பற்றி பேசினார். லாங்கரோ, குறிப்பாக கலை வடிவங்கள் எவ்வாறு அர்த்தத்தை உருவாக்குகின்றன என்பதையே தனது வாழ்நாள் முழுவதும் ஆராய்ந்தார். இதுவே அவரது தத்துவத்தின் தொடக்கம். “கலை என்றால் என்ன?” என்ற கேள்வியிலிருந்து அவர் தொடங்கவில்லை. “மனிதன் எவ்வாறு அர்த்தத்தை உருவாக்குகிறான்?” என்ற இன்னும் அடிப்படையான கேள்வியிலிருந்தே அவர் தனது பயணத்தைத் தொடங்கினார். அந்தப் பயணம், மொழியின் எல்லைகளைத் தாண்டி, இசை, ஓவியம், இலக்கியம், உணர்வு, அறிவாற்றல், இறுதியில் மனித உணர்வுநிலையின் இயல்பையே புதிய கோணத்தில் அவரை பார்க்கச் செய்தது. அதனால், சுசான் லாங்கரை வெறும் அழகியல் தத்துவவாதி என்று மட்டும் அழைப்பது அவரது பங்களிப்பைச் சுருக்கிவிடும். அவர் கலை பற்றி மட்டுமல்ல, மனிதன் உலகிற்குள் எவ்வாறு வாழ்கிறான் என்பதைப் பற்றியும் எழுதினார். அவரது பார்வையில், மனித வாழ்க்கை என்பது பொருட்களின் உலகில் நிகழ்வதில்லை; குறியீடுகளின் உலகில்தான் நிகழ்கிறது. அந்த உலகை புரிந்துகொள்ளாமல், மனிதனை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது.
காசிரர், குறியீட்டு உயிரி, மற்றும் லாங்கரின் தத்துவப் புரட்சி:
எந்தப் பெரிய சிந்தனையாளரும் வெற்றிடத்தில் தோன்றுவதில்லை. ஒவ்வொருவரும் தமக்கு முந்தைய மரபுகளோடு உரையாடுகிறார்கள், சிலவற்றை ஏற்றுக்கொள்கிறார்கள், சிலவற்றை மறுக்கிறார்கள், சிலவற்றை விரிவாக்குகிறார்கள். லாங்கரின் தத்துவமும் இதற்கு விதிவிலக்கல்ல. அது மூன்று முக்கிய அறிவுசார் ஆளுமைகளின் சந்திப்பில் உருவானது: ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட், எர்ன்ஸ்ட் காசிரர், மற்றும் இருபதாம் நூற்றாண்டின் மொழி மையத் தத்துவச் சூழல்.
1895-ஆம் ஆண்டு நியூயார்க்கில் ஜெர்மன் குடியேறிய குடும்பத்தில் பிறந்த லாங்கர், சிறு வயதிலிருந்தே இரண்டு உலகங்களுக்கிடையே வாழ்ந்தார். வீட்டிற்குள் ஜெர்மன் மொழியும் ஐரோப்பிய இசை மரபும் இருந்தன; வீட்டிற்கு வெளியே ஆங்கிலமும் அமெரிக்கச் சமூகமும் இருந்தன. இந்த இரட்டைச் சூழல் அவருக்கு மிக இளமையிலேயே ஒரு அடிப்படை உண்மையை உணர்த்தியது. ஒரே சிந்தனை வெவ்வேறு மொழிகளில் உயிரோடு வாழ முடியும். மொழி மாறினாலும், அனுபவம் முற்றிலும் அழிந்து போவதில்லை. இந்த அனுபவமே பின்னர் அவரிடம் ஒரு ஆழமான தத்துவக் கேள்வியை எழுப்பியது: மொழி என்பது அர்த்தத்தின் ஒரே இருப்பிடமா, அல்லது அது அர்த்தம் வெளிப்படும் பல வடிவங்களில் ஒன்றா?
அவரது ஆளுமை உருவாக்கத்தில் இசையும் சமமானதொரு பங்கினை ஆற்றியது. வழக்கமான பேச்சு மொழியைப் போல இசை பொருள்களுக்குப் பெயரிடுவதோ, நிகழ்வுகளைப் பட்டியலிடுவதோ இல்லை. மரம் பச்சையாக இருக்கிறது என்றோ, குளிர்காலம் பிறந்துவிட்டது என்றோ, ஒரு பேரரசன் வீழ்ந்துவிட்டான் என்றோ இசை நமக்கு வாக்கியங்கள் வழி உரைப்பதில்லை. ஆயினும், தேச எல்லைகளையும் தலைமுறைகளையும் கடந்து கேட்போரின் அகத்தை உலுக்கும் பேராற்றல் இசைக்கு மட்டுமே உண்டு. நூற்றாண்டுகளுக்கு முன்பு கோர்க்கப்பட்ட ஒரு சிம்பொனி இசைவடிவம், அந்த இசையமைப்பாளரின் மொழியோ வரலாறோ சற்றும் அறியாத இன்றைய நவீன மனிதனின் மனதிலும் ஆராதிக்கத்தக்க வியப்பை ஏற்படுத்த முடிகிறது. ஒரு தத்துவவாதியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, மொழியால் பெயர்க்க முடியாத ஏதோ ஒரு அசைக்க முடியாத நிஜத்தை இசை கடத்துகிறது என்பதை லாங்கர் கண்டறிந்தார். இந்தத் தேடல் அவரது வாழ்நாள் முழுக்கத் தொடர்ந்து, இறுதியில் அவரது தத்துவக் கோட்பாட்டின் முதன்மைத் தூணாகவும் நிலைபெற்றது.
ராட்க்ளிஃப் கல்லூரியில் அவர் பயின்றபோது, ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட்டின் சிந்தனை அவரை ஆழமாகப் பாதித்தது. வொய்ட்ஹெட் அறிவியலையும் தத்துவத்தையும் தனித்தனி கோட்டைகளாகப் பார்க்கவில்லை. கணிதம், இயற்பியல், உயிரியல், மதம், கலை இவை அனைத்தும் மனிதன் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள மேற்கொள்ளும் வெவ்வேறு முயற்சிகள் என்று அவர் கருதினார். இந்த ஒருங்கிணைந்த பார்வை, லாங்கரின் சிந்தனையில் பின்னர் மிக முக்கியமான பண்பாக மாறியது. அவர் அழகியலை, தத்துவத்திலிருந்து விளக்கி அணுகவில்லை; மனித அறிவாற்றலைப் புரிந்துகொள்ள வேண்டிய மையத் துறையாகவே அணுகினார்.

ஆனால் லாங்கரின் வளர்ச்சியில் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர் ஜெர்மன் தத்துவவாதி எர்ன்ஸ்ட் காசிரர். அவருடைய The Philosophy of Symbolic Forms என்ற மாபெரும் படைப்பு, மனிதனைப் பற்றிய பாரம்பரிய வரையறையை மாற்ற முயன்றது. அரிஸ்டாட்டிலிலிருந்து வந்த “மனிதன் பகுத்தறிவுள்ள உயிரி” என்ற வரையறை மனிதனின் ஒரு பரிமாணத்தை மட்டுமே காட்டுகிறது என்று காசிரர் கருதினார். மனிதனை மற்ற உயிரினங்களிலிருந்து உண்மையில் வேறுபடுத்துவது வெறும் பகுத்தறிவு அல்ல; குறியீடுகளை உருவாக்கி அவற்றுக்குள் வாழும் திறன் என்பதே அவரது வாதம்.
இந்தக் கருத்தின் ஆழத்தை நாம் பெரும்பாலும் கவனிப்பதில்லை. ஒரு விலங்கு ஆபத்தைப் பார்த்தால் ஓடுகிறது. பசியெடுத்தால் உணவைத் தேடுகிறது. அதன் எதிர்வினைகள் உடனடி உயிரியல் தேவைகளோடு தொடர்புடையவை. ஆனால் மனிதன் அப்படியல்ல. அவன் இறந்தவர்களுக்குச் சடங்கு செய்கிறான். இன்னும் பிறக்காத தலைமுறைகளுக்காக அரசியலமைப்பை எழுதுகிறான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கவிஞரின் பாடலைப் பாடுகிறான். இன்னும் உருவாகாத எதிர்காலத்தைப் பற்றிய அறிவியல் கோட்பாடுகளை உருவாக்குகிறான். அவன் வாழ்வது நிகழ்காலத்தில் மட்டுமல்ல; நினைவு, கற்பனை, வரலாறு, நம்பிக்கை, மதம், கலை, சட்டம், அறிவியல் ஆகிய குறியீட்டு உலகங்களுக்குள்ளும் ஆகும்.
அதனால்தான் காசிரர் மனிதனை Animal Symbolicum என்று அழைத்தார். இது கவித்துவமான சொற்றொடர் மட்டுமல்ல. மனித நாகரிகத்தைப் புரிந்துகொள்ளும் புதிய அடிப்படையாக அது அமைந்தது. மொழி, மதம், தொன்மம், அறிவியல், கலை இவை அனைத்தும் மனிதன் உலகிற்கு அர்த்தம் வழங்கும் குறியீட்டு அமைப்புகள். உலகம் நமக்கு வெறும் பொருட்களாகத் தோன்றுவதில்லை; குறியீடுகளின் வலையமைப்பாகத் தோன்றுகிறது.
லாங்கர் இந்தப் பார்வையை முழுமையாக ஏற்றுக்கொண்டார். ஆனால் அதே நேரத்தில், காசிரரின் தத்துவத்தில் இன்னும் விரிவாக்கப்பட வேண்டிய முக்கிய இடைவெளியையும் அவர் கண்டார். காசிரர் எல்லா குறியீட்டு வடிவங்களையும் மனித பண்பாட்டின் வெளிப்பாடுகளாக விளக்கியிருந்தாலும், கலை வடிவங்களின் குறித்து அதிகமாக ஆராயவில்லை. இசை எவ்வாறு அர்த்தத்தை உருவாக்குகிறது? ஓவியம் எவ்வாறு மனித அனுபவத்தை வடிவமைக்கிறது? ஒரு சிற்பம் அல்லது நடனம் எந்த வகையான அறிவை வழங்குகிறது? இந்தக் கேள்விகள் அவரது சிந்தனையில் மையமாக அமையவில்லை.அந்த இடைவெளியில்தான் லாங்கரின் தனித்துவமான பங்களிப்பு தொடங்குகிறது.
அவருடைய கவனம் “ஒவ்வொரு குறியீட்டு வடிவமும் எவ்வாறு அர்த்தத்தை உருவாக்குகிறது?“ என்பதில்தான் இருந்தது. மொழி ஒரு குறியீட்டு அமைப்பு என்றால், இசையும் ஒரு குறியீட்டு அமைப்புதான். ஆனால் இரண்டும் ஒரே விதமாக இயங்குவதில்லை. ஒரு அறிவியல் கட்டுரையையும் ஒரு சிம்பொனியையும் ஒரே அளவுகோலால் மதிப்பிட முடியாது. ஒரு ஓவியத்தையும் ஒரு சட்ட ஆவணத்தையும் ஒரே தர்க்க விதிகளால் பகுப்பாய்வு செய்ய முடியாது. ஒவ்வொரு குறியீட்டு வடிவத்திற்கும் அதன் சொந்த கட்டமைப்பு, அதன் சொந்த தர்க்கம், அதன் சொந்த அறிவாற்றல் உள்ளது.
இந்த நுண்ணறிவுதான் லாங்கரை அவரது காலத்தின் பல தத்துவவாதிகளிடமிருந்து வேறுபடுத்தியது. இருபதாம் நூற்றாண்டின் பகுப்பாய்வுத் தத்துவம் மொழியை மிக நுணுக்கமாக ஆராய்ந்து கொண்டிருந்தது. வார்த்தைகளின் பொருள், வாக்கியங்களின் அமைப்பு, தர்க்கத்தின் விதிகள், உண்மை நிபந்தனைகள் இவையே அதன் மையப் பொருள்கள். ஆனால் அதே காலத்தில், உலகம் முழுவதும் மனிதர்கள் இசை அரங்குகளுக்குச் சென்றுகொண்டிருந்தார்கள்; அருங்காட்சியகங்களில் ஓவியங்களின் முன் நின்றுகொண்டிருந்தார்கள்; கோவில்கள், தேவாலயங்கள், நாடக அரங்குகள், திரையரங்குகள் ஆகியவற்றில் ஆழ்ந்த அனுபவங்களைச் பெற்றுக்கொண்டிருந்தார்கள். மனித வாழ்வின் இந்தப் பரந்த அனுபவ உலகம் தத்துவத்தின் முதன்மை விவாதங்களில் போதிய இடம் பெறவில்லை.
லாங்கர் மறந்துபோன உலகத்தை மீண்டும் தத்துவத்தின் மையத்திற்கு அழைத்து வந்தார். அவரது நோக்கம் மொழியின் முக்கியத்துவத்தை மறுப்பதல்ல. மாறாக, மொழி மனித அறிவாற்றலின் ஒரே வடிவம் அல்ல என்பதைச் சுட்டிக்காட்டுவதே. அறிவியல், தர்க்கம், வரலாறு, சட்டம் ஆகியவை மனித நாகரிகத்தின் மாபெரும் சாதனைகள். ஆனால் அவற்றுடன் இணைந்து கலை, இசை, இலக்கியம், தொன்மம், நடனம் ஆகியவையும் மனிதன் உலகிற்கு அர்த்தம் வழங்கும் அடிப்படை வழிமுறைகளாக செயல்படுகின்றன.
அவரது சிந்தனைகள் முதன்முதலில் Philosophy in a New Key – 1942 என்ற நூலின் மூலம் பரந்த வாசகப் பரப்பை எட்டின; இது குறியீட்டுத் தன்மையின் இயல்பையே மறுபரிசீலனை செய்யுமாறு தத்துவ அறிஞர்களுக்கு அவர் முன்வைத்தக் கோரிக்கை.
எர்ன்ஸ்ட் காசிரரின் குறியீட்டு வடிவங்கள் பற்றிய சிந்தனையையும், ஆல்ஃப்ரெட் நோர்த் வொயிட்ஹெட்டின் செயல்முறை தத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டு, மனிதனுக்குத் தன் அனுபவங்களை வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்று இப்புத்தகத்தில் லாங்கர் முன்வைக்கிறார. இந்நூலின் மிக முக்கியமான பிரிவு விளக்கக் குறியீட்டியல் (discursive symbolism) மற்றும் காட்சிக் குறியீட்டியல் (presentational symbolism) என்பவற்றுக்கு இடையிலான வேறுபாடாகும். மொழி, தர்க்கம், கணிதம் போன்றவை விளக்கக் குறியீட்டியல் வகையைச் சேர்ந்தவை; இதில் சொற்கள் ஒன்றன் பின் ஒன்றாக, குறிப்பிட்ட இலக்கண வரிசையில் அடுக்கப்பட்டு நேர்கோட்டு முறையில் பொருளை உருவாக்குகின்றன. இதற்கு மாறாக இசை, ஓவியம், சடங்கு, புராணம் ஆகியவை காட்சிக் குறியீட்டியல் வகையைச் சேர்ந்தவை; இங்கு பொருள் ஒரே நேரத்தில், ஒட்டுமொத்த வடிவமாக (holistic pattern) புலப்படுகிறது, அதை எழுவாய்-பயனிலை (subject-predicate) எனப் பிரித்தால் அதன் சாரமே சிதைந்துவிடும். இந்நூல் அக்காலகட்டத்தில் விவாதமாக இருந்ததற்குக் காரணம், இசையையும் கலையையும் வெறும் உணர்ச்சி வெளிப்பாடாக மட்டும் சுருக்கிவிடாமல், அறிதலின் தனித்துவமான தளமாக லாங்கர் உயர்த்திக் காட்டியதே ஆகும். இசை என்பது “உணர்வுகளின் உருவவியலை” வெளிப்படுத்துகிறது என்று வாதிடும் அவர்; பதற்றம், தீர்வு, வளர்ச்சி, சிதைவு போன்ற உணர்ச்சி வாழ்வின் வடிவங்களை மொழியால் சாத்தியமில்லாத விதத்தில் இசை முன்வைக்கிறது என்கிறார். ஒட்டுமொத்தமாக, அக்காலகட்டத்தில் தர்க்கப் புலனறிவாதம் (logical positivism) ஆதிக்கம் செலுத்திய தத்துவத் தளத்தை, மொழிக்கு அப்பாற்பட்ட, கூற்றுவடிவமற்ற (non-propositional) பொருள்நிலைகளுக்குத் திறந்துவிடுவதே இந்நூலின் பெரும் லட்சியமாக இருந்தது. இதன் மூலம் புராணத்தையும், சடங்கையும், கலையையும் வெறும் ஆதிமனித வெளிப்பாடுகளாக ஒதுக்காமல், உண்மையான அறிதல் சார்ந்த முக்கியத்துவம் கொண்டவையாக லாங்கர் அணுகியுள்ளார்.
பின்னர் வெளிவந்த Feeling and Form – 1953 நூல், நவீன சிந்தனை உலகில் கலைத் தத்துவத்தின் ஆகச்சிறந்த செல்வாக்கு மிக்க ஒரு கோட்பாட்டை உருவாக்கியது; ஒவ்வொரு கலை ஊடகமும் தனக்கென்று ஒரு தனித்துவமான குறியீட்டுத் தர்க்கத்தைக் கொண்டுள்ளது என்று அது வாதிட்டது. அவரது வாழ்வின் இறுதி காலங்களில் , மூன்று பாகங்களாக வெளிவந்த Mind: An Essay on Human Feeling என்ற அவரது லட்சியப் படைப்பு இச்சிந்தனைகளை உணர்வுநிலை, உயிரியல் வாழ்வு மற்றும் குறியீட்டுச் சிந்தனையின் பரிணாம வளர்ச்சி குறித்த ஒரு விரிவான தத்துவமாக அகலப்படுத்தியது. இந்த நூல்கள் நெடுகிலும், லாங்கர் ஒரேயொரு நீடித்த கேள்வியைத் தான் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார்: வார்த்தைகளாகச் சுருக்க முடியாத வடிவங்களில் மனிதர்கள் எவ்வாறு அர்த்தங்களை உருவாக்குகிறார்கள்? இந்தக் கேள்விக்கான விடையைத் தேடியபோதுதான், லாங்கர் தனது புகழ்பெற்ற தத்துவ வேறுபாட்டை உருவாக்கினார் மொழியின் தொடர்முறை குறியீடுகளுக்கும், கலையின் முழுமை வடிவக் குறியீடுகளுக்கும் இடையேயான அடிப்படை வேறுபாடு.
அதுவே அவரது அழகியல் தத்துவத்தின் உண்மையான மையம். அது வெறும் கலை பற்றிய கோட்பாடு அல்ல; மனித மனம் உலகை எவ்வாறு ஒழுங்குபடுத்துகிறது என்பதற்கான புதிய வரைபடமாகும்.
மொழியின் தர்க்கமும் கலையின் தர்க்கமும்:
பல நூற்றாண்டுகளாக மேற்கத்திய தத்துவம் மொழியையே அறிவின் உன்னத வடிவமாகக் கருதியது. அதற்குக் காரணமும் இருந்தது. மொழி மனிதனை நிகழ்காலத்தின் எல்லைகளைத் தாண்டி சிந்திக்கச் செய்தது; ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வுகளைப் பற்றியும், இன்னும் நிகழாத எதிர்காலத்தைப் பற்றியும் நாம் உரையாட முடிவது அதன் மூலமே. அறிவியல், சட்டம், வரலாறு, அரசியல், கணிதம் ஆகிய அனைத்தும் மொழியின் இந்த அபூர்வ ஆற்றலின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த வெற்றி ஒரு மறைமுகமான அனுமானத்தையும் உருவாக்கியது. அர்த்தம் என்றால் அது மொழியின் வழியாகவே வெளிப்பட வேண்டும்; மொழியால் முழுமையாக வெளிப்படுத்த முடியாதவை அறிவின் விளிம்பில்தான் இருக்க முடியும் என்ற எண்ணம் இருபதாம் நூற்றாண்டின் பல தத்துவப் போக்குகளிலும் ஆழமாக வேரூன்றியது. லுட்விக் விட்கென்ஸ்டைன் எழுதிய புகழ்பெற்ற வரியை இங்கு நினைவுக்கூறவேண்டும்: “The limits of my language mean the limits of my world.”
லாங்கர் இந்த அடிப்படை அனுமானத்தையே கேள்விக்குள்ளாக்கினார். மொழி மனிதனின் மிகப் பெரிய குறியீட்டு சாதனைகளில் ஒன்றுதான்; ஆனால் அது ஒரே குறியீட்டு அமைப்பு அல்ல என்று அவர் வாதிட்டார். மொழி எவ்வாறு செயல்படுகிறது என்பதைச் சிந்தித்துப் பார்த்தால், அவரது வாதத்தின் ஆழம் தெளிவாகிறது. ஒரு வாக்கியத்தின் அர்த்தம் அதன் சொற்களின் வரிசையில் அமைந்துள்ளது. ஒரு அறிவியல் நிரூபணத்தில் கடைசி முடிவை முதலில் கூறிவிட்டு பின்னர் காரணங்களைச் சொல்ல முடியாது. ஒரு சட்ட ஆவணத்தின் பிரிவுகளை இடமாற்றினால் அதன் பொருள் மாறிவிடும். மொழி காலத்தின் ஓட்டத்தில் படிப்படியாக விரியும் ஒரு குறியீட்டு அமைப்பு. ஒவ்வொரு சொல்லும் அடுத்த சொல்லை நோக்கிச் செல்கிறது; ஒவ்வொரு வாக்கியமும் அடுத்த கருத்திற்கான பாதையை அமைக்கிறது. இதைத்தான் லாங்கர் Discursive Symbolism என்று அழைத்தார். இந்த அமைப்பின் மிகப் பெரிய பலம் அதன் துல்லியம். உலகைப் பற்றிய குறிப்பிட்ட கூற்றுகளை முன்வைக்கவும், அவற்றை உண்மையா பொய்யா என்று சோதிக்கவும், தர்க்கரீதியாக வாதங்களை உருவாக்கவும் மொழி இன்றியமையாதது. அறிவியலின் வெற்றியும், கணிதத்தின் துல்லியமும், சட்டத்தின் ஒழுங்கும் இந்த குறியீட்டு அமைப்பின் மேல் கட்டப்பட்டுள்ளன.
ஆனால் மனித அனுபவத்தின் எல்லாப் பரிமாணங்களும் இவ்வாறு தொடர்முறையில் அமைந்திருக்கவில்லை. மைக்கலாஞ்சலோவின் பியட்டா சிற்பத்தின் முன் நின்று அதை அனுபவிக்கும் கணத்தில், அதன் அர்த்தம் நம்மை ஒவ்வொரு தகவலாக வந்து சேருவதில்லை. முதலில் ஒரு பெண்ணையும், பின்னர் ஒரு மனிதனையும், அதன் பிறகு துயரத்தையும், கடைசியில் கருணையையும் நாம் உணர்வதில்லை. மாறாக, முழு அனுபவமும் ஒரே கணத்தில் நம்மை வந்தடைகிறது. துயரம், மென்மை, மரணம், அமைதி, தாய்மை, தியாகம் ஆகிய அனைத்தும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாத ஒரு முழுமையான வடிவமாக நம் முன் நிற்கின்றன. இதை உடைத்து தனித்தனி கூறுகளாக மாற்றியவுடன் அதன் உயிர் மறைந்து விடுகிறது. இதே உண்மையை வான் கோவின் The Starry Night ஓவியத்திலும் காணலாம். அதன் ஒவ்வொரு வண்ணத்தையும், ஒவ்வொரு கோட்டையும், ஒவ்வொரு உருவத்தையும் தனித்தனியாக விவரிக்க முடியும். ஆனால் அந்த விவரிப்புகளின் கூட்டுத்தொகை ஓவியத்தின் அனுபவமாகிவிடாது. அதன் அர்த்தம் கூறுகளில் இல்லை; அவற்றின் உறவுகளிலும், அவை உருவாக்கும் ஒட்டுமொத்த வடிவத்திலும் உள்ளது. இந்த வகையான குறியீட்டு அமைப்பையே லாங்கர் Presentational Symbolism என்று பெயரிட்டார்.
இந்த வேறுபாட்டின் தத்துவ முக்கியத்துவம் இலக்கியத்தில் இன்னும் தெளிவாகப் புலப்படுகிறது. டால்ஸ்டாயின் அன்னா கரேனினாவின் கதையை சில பக்கங்களில் சுருக்கிவிடலாம். கதாபாத்திரங்களின் பெயர்களையும், முக்கிய நிகழ்வுகளையும், முடிவையும் சொல்லிவிடலாம். ஆனால் அந்தச் சுருக்கத்தை வாசித்தவர் டால்ஸ்டாயை வாசித்துவிட்டார் என்று யாரும் சொல்லமாட்டார்கள். ஏனெனில், அந்த நாவலின் உயிர் அதன் கதைக் கருவில் மட்டும் இல்லை. அதன் வாக்கியங்களின், கதாபாத்திரங்களின் உளவியல் வளர்ச்சியில், கதாபாத்திரங்களின் அலைச்சலில், காலத்தின் ஓட்டத்தில், மனித உறவுகளின் நுண்ணிய மாற்றங்களை வாசகரின் அனுபவமாக மாற்றும் அதன் கட்டமைப்பில்தான் அது இருக்கிறது. இதனால்தான் பெரிய கலைப்படைப்புகளை முழுமையாக பொழிப்புரை செய்ய முடியாது. அவற்றை விளக்கலாம், விமர்சிக்கலாம், சுருக்கலாம்; ஆனால் அவற்றிற்கு மாற்றாக எதையும் வழங்க முடியாது. ஒரு சிம்பொனியின் இசைக் குறிப்புகளை பட்டியலிட்டாலும் அது இசையாக மாறாது; ஒரு ஆலயத்தின் வரைபடத்தைப் பார்த்தாலும் அதன் ஆன்மிக அனுபவத்தைப் பெற முடியாது; ஒரு நடனத்தின் அசைவுகளை எழுத்துகளாகப் பதிவு செய்தாலும் அதன் உயிர் காகிதத்தில் தங்காது.
இங்கே லாங்கர் மிகப் பெரிய தத்துவ மாற்றத்தை முன்வைக்கிறார். கலை என்பது மொழியால் சொல்ல முடியாததைச் சொல்லும் இரண்டாம் தர ஊடகம் அல்ல; அது முற்றிலும் வேறுவிதமாக அர்த்தத்தை உருவாக்கும் சுயாதீனமான அறிவாற்றல் வடிவம். அறிவியல் நரம்பியல் துயரத்தின் மூளைச் செயல்பாடுகளை விளக்கக்கூடும்; ஆனால் துயரத்தோடு வாழ்வதன் அமைப்பை நமக்கு அனுபவமாகக் காட்டுவது இலக்கியம், ஓவியம் அல்லது இசை மட்டுமே. இவை ஒன்றுக்கொன்று போட்டியிடும் அறிவு வடிவங்கள் அல்ல; மனித அனுபவத்தின் வெவ்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தும் ஒருங்கிணைந்த குறியீட்டு உலகங்கள்.
இந்தப் புரிதலின் உச்சத்தை லாங்கர் இசையில் கண்டார். ஓவியம் இன்னும் புற உலகின் வடிவங்களைப் பயன்படுத்துகிறது; இலக்கியம் இன்னும் மொழியைத் தன் ஊடகமாகக் கொண்டுள்ளது. ஆனால் இசை, வார்த்தைகளோ காட்சிகளோ இல்லாமல் மனித அகத்தை ஆழமாக மாற்றுகிறது. அதற்கு அகராதி இல்லை; மொழிபெயர்ப்பு இல்லை; இருந்தும் அது உலகின் எந்தப் பண்பாட்டைச் சேர்ந்த மனிதனையும் தொடுகிறது. இந்த வெளிப்படையான முரண்பாட்டிற்கான அவரது விளக்கமே இருபதாம் நூற்றாண்டின் அழகியல் தத்துவத்தில் அசல் பங்களிப்பாகக் கருதப்படுகிறது.
இசை: உணர்ச்சியின் மொழியல்ல, உணர்வின் தர்க்க வடிவம்
எல்லாக் கலை வடிவங்களிலும் இசைதான் லாங்கரை மிகவும் ஆழமாக ஈர்த்தது. அதற்குக் காரணம், இசை மற்ற கலைகளைவிட புதிராகவே இருப்பதல்ல; மாறாக, அது மனித புரிதலைப் பற்றிய அடிப்படைத் தத்துவப் புதிரை நமக்கு முன்வைக்கிறது. ஒரு ஓவியம் குறைந்தபட்சம் கண்ணுக்குத் தெரியும் உலகின் வடிவங்களைப் பயன்படுத்துகிறது. ஒரு சிற்பம் மனித உடலின் அமைப்பை நினைவூட்டுகிறது. இலக்கியம் மொழியையே தன் ஊடகமாகக் கொண்டுள்ளது. ஆனால் இசை இவற்றில் எதையும் சார்ந்ததல்ல. அது எந்தப் பொருளுக்கும் பெயரிடுவதில்லை. எந்த நிகழ்வையும் விவரிப்பதில்லை. எந்தக் கோட்பாட்டையும் முன்வைப்பதில்லை. இருந்தும், மனித வரலாற்றில் மிகவும் ஆழமான அனுபவங்களை உருவாக்கிய கலை வடிவங்களில் ஒன்று இசையாகவே தொடர்கிறது. இந்த முரண்பாடே லாங்கரின் ஆராய்ச்சியின் தொடக்கமாக அமைந்தது. மொழியில் ஒரு கதாபாத்திரம் அழுகிறது என்று சொன்னால் அது தகவல்; ஆனால் இசை, அழுகையின் அந்த சொல்லப்படாத உணர்வை நம்மிடம் நேரடியாகப் பிரதிபலிக்கிறது. இதுவே லாங்கர் குறிப்பிடும் Virtual space of feeling.
மொழியில் ‘பக்தி’ அல்லது ‘பிரிவுத் துயர்’ போன்ற சொற்கள் பொதுப்படையானவை. அச்சொற்களால் அந்த உணர்வின் முழு வீச்சையும், அதன் நுட்பமான நிழலாட்டங்களையும் காட்டிவிட முடியாது. ஆனால், சுபபந்துவராளி அல்லது தோடி போன்ற ராகங்களின் ஆலாபனையில், இரண்டு சுரங்களுக்கு இடையே இருக்கும் அந்த மிக நுட்பமான இடைவெளியை ஒரு கலைஞர் மீட்டும் போது, மனித ஆன்மாவின் ஆழமான ஏக்கத்தின், தவிப்பின் ஒரு முழுமையான வடிவமே வெளிப்படும். சொற்கள் ஒரு உணர்வைச் சுட்டிக்காட்ட மட்டுமே செய்கின்றன; ஆனால் இசையின் வடிவம் அந்த உணர்வாகவே மாற்றி , நம் சிந்தனைக்கு அதுவரை தெரியாத ஒரு பொருள்நிலையைத் திறந்துவிடுகிறது.
மனிதன் ஏன் இசைக்கு இவ்வளவு அடிமையாக இருக்கிறான் என்ற கேள்விக்கு, லாங்கர் தரும் விடை இதுதான்: இசை நமது அக உலகின் அகப்படாத, சொல்லப்படாத அனைத்து உணர்வுகளுக்கு ஒரு வடிவத்தை வழங்குகிறது. தர்க்கம் சொல்லத் தயங்கும் உண்மைகளை, இசை மௌனமாகப் பாடிச் செல்கிறது.. ஒரு ஜாஸ் கலைஞர் மேடையில் வாசிக்கும்போது, அவர் முன்கூட்டியே எழுதப்பட்ட குறிப்புகளை வாசிப்பதில்லை; மாறாக, அந்த நிமிடம் அந்த இடத்தின் சூழலையும், தன் சக கலைஞர்களின் இசைத் தூண்டல்களையும் உள்வாங்கி, அந்தத் தருணத்திற்குரிய உணர்வுகளை இசையாக உருவாக்குகிறார். ஜாஸ் இசையில் ஒரு கலைஞர் வாசிக்கும் ஒற்றை இசை வரி , அடுத்த நொடி அவரது மனநிலைக்கேற்ப மாறும்போது, அது ஒரு முழுமையான கதையைச் சொல்லாமலேயே அந்தத் தருணத்தின் முழு உணர்ச்சியையும் நமக்குக் கடத்திவிடுகிறது. லாங்கரின் பார்வையில், இதுவே உணர்வுகளின் தூய வடிவம். எந்தச் சொல்லின் துணையும் இன்றி, நேரடியாக நம் அகத்தில் உரையாடும் குறியீட்டுப் பிரவாகம்.
பல நூற்றாண்டுகளாக இசையை விளக்க பல்வேறு கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சிலர் இசை என்பது உணர்ச்சிகளின் நேரடி வெளிப்பாடு என்றார்கள். இசையமைப்பாளர் தன் மகிழ்ச்சி, துயரம், நம்பிக்கை அல்லது வேதனையை இசைக்குள் உருமாற்றுகிறார்; கேட்பவர் அதையே மீண்டும் அனுபவிக்கிறார் என்ற எளிய விளக்கம் நீண்ட காலம் செல்வாக்கு செலுத்தியது. மற்றவர்கள் இசையை ஒரு வகையான மொழியாகக் கருதினர். ஆனால் அந்த மொழியின் அகராதி எங்கே என்று கேட்டவுடன் அந்தக் கோட்பாடு சிக்கலில் விழுகிறது. ஒரு சி மைனர் சுருதி இயல்பாகவே “துயரத்தை” குறிக்கிறதா? ஒரு மேஜர் சுருதி “மகிழ்ச்சியை” அறிவிக்கிறதா? பீத்தோவன் தனது சிம்பொனிகளுக்கு பின்னால் மறைந்திருக்கும் கருத்துக்களின் பட்டியலை எங்காவது எழுதி வைத்தாரா? அவ்வாறு இல்லை. ஒரே இசைப் படைப்பை வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு வாழ்க்கை அனுபவங்களுடன் கேட்கிறார்கள்; அவர்கள் மனதில் எழும் நினைவுகளும் வேறுபடுகின்றன. இருந்தபோதிலும், அந்த இசை ஆழமான அர்த்தம் கொண்டது என்பதில் பெரும்பாலும் அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். இதனால் இசை ஒரு ரகசிய மொழி என்ற விளக்கமும் போதுமானதாக இருக்கவில்லை.
லாங்கர் இந்த இரு அணுகுமுறைகளையும் நிராகரித்தார். இசை என்பது உணர்ச்சிகளை நேரடியாகக் கடத்தும் பாத்திரமல்ல; அதேபோல் மறைமுக வாக்கியங்களை உள்ளடக்கிய குறியீட்டு மொழியும் அல்ல. அவர் முன்வைத்த கருத்து மிகவும் நுட்பமானது. இசை நமது உணர்ச்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை; மாறாக, அவற்றின் இயக்க வடிவத்தை நமக்குப் புலப்படுத்துகிறது. இதைத்தான் அவர் புகழ்பெற்ற சொற்றொடரான “Logical Form of Feeling” என்று அழைத்தார்.
இங்கே “தர்க்கம்” என்ற சொல்லை நாம் வழக்கமாகப் புரிந்துகொள்ளும் அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளக் கூடாது. லாங்கர் கணித நிரூபணங்களையோ, வாதமுறைகளையோ, அல்லது பகுப்பாய்வுத் தர்க்க விதிகளையோ குறிக்கவில்லை. அவரது “தர்க்கம்” என்பது ஒழுங்கமைப்பு, உள்ளார்ந்த கட்டமைப்பு, காலத்தின் ஓட்டத்தில் நிகழும் உறவுகள் என்பவற்றைக் குறிக்கிறது. மனித உணர்ச்சிகள் நிலையாக நின்றிருக்கும் பொருட்கள் அல்ல. அவை உருவாகின்றன, வளர்கின்றன, தளர்கின்றன, மீண்டும் எழுகின்றன. நம்பிக்கை மெதுவாக உருவாகி ஏமாற்றமாக மாறலாம். அன்பு தயக்கத்திலிருந்து நெருக்கமாகவும், நெருக்கத்திலிருந்து பிரிவாகவும் நகரலாம். துயரம் ஒரே நேர்கோட்டில் செல்லாது; அது நினைவுகளின் அலைபோல் திரும்பத் திரும்ப வந்து சேரும். மனித அக வாழ்வின் இந்த இயக்கத்தை இசை வார்த்தைகளால் விளக்குவதில்லை; அதற்கே ஒத்த ஒரு கட்டமைப்பை உருவாக்குகிறது.
அதனால்தான் ஒரு சிம்பொனியை நாம் கேட்கும்போது, அதன் இசைக் குறிப்புகளை நினைவில் வைத்திருக்காவிட்டாலும் அதன் உள் பயணத்தை மறக்க முடியாது. ஒரு கரு மெதுவாக தோன்றுகிறது; அது விரிகிறது; எதிர்பாராத திசையில் நகர்கிறது; பதற்றம் உருவாகிறது; சிறிது நேரம் தளர்கிறது; பின்னர் இன்னும் ஆழமான தீவிரத்துடன் திரும்பி வருகிறது; இறுதியில் ஒரு தீர்வை அடைகிறது. இந்த இயக்கம் நமது வாழ்க்கை அனுபவத்தை நினைவிலிருந்து மீட்டுகிறது. இசை “இது துயரம்” என்று சொல்லவில்லை; துயரம் எவ்வாறு வாழப்படுகிறது என்பதை வடிவமாக்குகிறது. அது “இது நம்பிக்கை” என்று அறிவிக்கவில்லை; நம்பிக்கை எவ்வாறு உருவாகிறது என்பதை நமக்குள் அனுபவமாக மாற்றுகிறது.
இதனால்தான் வாத்திய இசை மொழியின்றி உலகம் முழுவதும் மனிதர்களைத் தொடுகிறது. உலகெங்கும் உள்ள இசை ரசிகர்கள் பீத்தோவனின் ஒன்பதாவது சிம்பொனியை ஒரே விதமாக புரிந்துகொள்வார்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் வாழ்க்கை நினைவுகள் வேறுபடும்; கலாச்சாரச் சூழல்கள் வேறுபடும்; உணர்ச்சி எதிரொலிகளும் வேறுபடும். ஆனால் அவர்கள் எதிர்கொள்வது வெறும் ஒலிகளின் வரிசை அல்ல என்பதை உடனடியாக உணர்கிறார்கள். அவர்கள் அனுபவிப்பது ஒழுங்கமைக்கப்பட்ட அக உலகம். அதுவே இசையின் அர்த்தம். அது மொழிபெயர்க்கப்பட வேண்டிய வாக்கியம் அல்ல; நேரடியாக அனுபவிக்கப்பட வேண்டிய குறியீட்டு வடிவம். அதனால்தான் லாங்கர் கலைக்கு அறிவாற்றலின் ஒரு தனித்துவமான இடத்தை வழங்கினார்.
இந்தக் கருத்து இருபதாம் நூற்றாண்டின் அழகியல் தத்துவத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஏனெனில், இதற்குப் பிறகு கலை வெறும் அலங்காரப் பொருளாக இருக்கவில்லை. அது மனித உணர்வுநிலையை அறியும் ஒரு அடிப்படை வழிமுறையாக மாறியது. இந்தப் புரிதலின் எதிரொலி இன்று நரம்பியல், அறிவாற்றல் அறிவியல், உணர்வுநிலை பற்றிய சமகால விவாதங்களிலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. அர்த்தம் என்பது தகவல்களின் கூட்டுத்தொகை அல்ல; அது ஒழுங்கமைக்கப்பட்ட அனுபவத்தின் வடிவம் என்ற அவரது சிந்தனை, இருபத்தொன்றாம் நூற்றாண்டின் பல முக்கிய அறிவியல் விவாதங்களோடு ஆச்சரியமான உரையாடலை மேற்கொள்கிறது.
சுசான் கே. லாங்கருக்கு முன்னும் பின்னும்: அழகியலில் ஒரு புரட்சி
பல நூற்றாண்டுகளாக, கலை குறித்த தத்துவ விசாரணைகள் பெரும்பாலும் உறுதியான வரையறையைத் தேடியே வந்தன. “கலை என்றால் என்ன?” என்று கேட்டு, அதன் சாரத்தை அறிய தத்துவவாதிகள் முயன்றனர். பிளேட்டோ கலையை யதார்த்தத்தின் போலியான பிரதிபலிப்பு என்று கருதினார். அரிஸ்டாட்டில் அதை மனத்தூய்மைக்கான வழியாகப் பார்த்தார். இம்மானுவேல் கான்ட், கலை அனுபவத்தை நடைமுறை விடயங்களில் இருந்து விடுபட்ட மதிப்பீடாகக் கருதினார்.லியோ டால்ஸ்டாய் கலையை ஒரு தனித்துவமான உணர்ச்சி பரிமாற்ற ஊடகமாகவே அணுகினார்; கலைஞன் தான் அனுபவித்த உணர்வை மற்றொருவர் உணரும்படிச் செய்வதே கலையின் நோக்கம் என அவர் கருதினார்.. இக்கோட்பாடுகள் ஒவ்வொன்றும் கலை அனுபவத்தின் ஒவ்வொரு பரிமாணத்தை விளக்கினாலும், மற்ற பல அம்சங்களை விளக்கப்படாமலேயே விட்டுவிட்டன. லாங்கர் கலை என்பது போலியான பிரதிபலிப்போ, உணர்ச்சிகளைப் பரப்பும் ஊடகமோ அல்லது அலங்காரப் பொருளோ அல்ல என்று அவர் வாதிட்டார். கலை என்பது ஒரு குறியீட்டு வடிவம்; இதன் மூலமே மனித உணர்வுகளின் கட்டமைப்புகள் புரிந்துகொள்ளக்கூடியதாக மாறுகின்றன. முந்தைய தத்துவவாதிகள் உணர்ச்சியை, கலை பார்வையாளர்கள் மீது ஏற்படுத்தும் விளைவாகவே பார்த்தனர். லாங்கரோ, கலை எவ்வாறு உள்ளுக்குள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது என்பதை ஆராய்ந்தார். ஒரு மெல்லிசையோ, நடனமோ அல்லது கவிதையோ, கேட்பவரின் மனநிலைக்கு அப்பாற்பட்டு எவ்வாறு ஒரு ஒழுங்கைக் கொண்டிருக்கிறது என்று அவர் கேள்வி எழுப்பினார். அழகு என்பது வெறும் சுவை சார்ந்த விஷயமாக இல்லாமல், அது குறியீட்டு ஒழுங்கமைப்பின் (symbolic organization) ஒரு பகுதியாக மாறியது.
அவரது அணுகுமுறை, அறிவு மற்றும் கற்பனை ஆகியவற்றுக்கு இடையே இருந்த பழைய படிநிலை வேறுபாட்டைத் தகர்த்தது. அறிவியல் சிந்தனையும் கலைச் சிந்தனையும் உண்மையை அடைவதற்கான போட்டியாளர்கள் அல்ல. அவை வெவ்வேறு வகையான கேள்விகளுக்கு விடையளிக்கின்றன. அறிவியல் புறஉலகின் நுட்பங்களை விளக்குகிறது; கலை அனுபவங்களின் வடிவங்களை வெளிப்படுத்துகிறது. ஒன்றால் மற்றொன்றைப் பதிலீடு செய்ய முடியாது.
லாங்கரின் மிகச்சிறந்த தத்துவப் பங்களிப்பு இதுவேயாகும். கலை உண்மையானதா அல்லது பொய்யானதா, பயனுள்ளதா அல்லது பயனற்றதா, உணர்ச்சிவசப்பட்டதா அல்லது அறிவுசார்ந்ததா என்ற குறுகிய விவாதத்திலிருந்து அழகியலை அவர் விடுவித்தார். அதற்குப் பதிலாக, கலை என்பது அறிந்துகொள்வதற்கான ஒரு தனித்துவமான வழிமுறை என்பதை அவர் நிரூபித்தார். அதற்கு என சொந்த தர்க்கம், சொந்த இலக்கணம் மற்றும் யதார்த்தத்தை வெளிப்படுத்தும் சொந்த வழிமுறை உண்டு என்பதை அவர் உலகிற்கு உணர்த்தினார்.
லாங்கரின் பார்வையில், ஒவ்வொரு நாகரிகமும் இறுதியில் குறியீடுகளின் நாகரிகமே ஆகும். மனிதர்கள் அறிவியல் கோட்பாடுகளை உருவாக்குவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, அவர்கள் பாடல்களைப் பாடினர், குகைச் சுவர்களில் ஓவியங்களை வரைந்தனர், நெருப்பைச் சுற்றி நடனமாடினர், சிலைகளை வடித்தனர், கதைகளை உருவாக்கினர் மற்றும் சடங்குகளுடன் இறந்தவர்களை அடக்கம் செய்தனர். இவை அறிவியலுக்கு மாற்றான பழமையான விஷயங்கள் அல்ல; வாழ்க்கையின் ஓட்டத்தில் கரைந்து போகக்கூடிய அனுபவங்களுக்கு நீடித்த வடிவம் கொடுக்கும் மனிதனின் ஆரம்பகால முயற்சிகள் இவை. கலை நாகரிகத்திற்குப் பிறகு தோன்றவில்லை; நாகரிகம் உருவாவதற்கே கலையே உதவியது. நமது வாழ்க்கை மாறும்போது, குறியீட்டுப் படைப்புகள் புதிய அர்த்தங்களைத் தருகின்றன. கலைப்படைப்பு மாறாமல் அப்படியே இருந்தாலும், அதை அணுகும் மனிதன் மாறுகிறான். படைப்பின் நிரந்தரத்திற்கும், பார்வையாளரின் மாறிவரும் அனுபவத்திற்கும் இடையிலான இந்த உரையாடலில்தான் கலையின் மர்மம் ஒளிந்திருக்கிறது.
குறியீட்டு வடிவங்களும் மனித உணர்வுநிலையும்: தத்துவார்த்தத் தேடல்
சுசான் கே. லாங்கரின் சிந்தனைப்பாதை, நவீன அறிவியல் விவாதங்களுக்குப் புதியதொரு திசையைக் காட்டுகிறது. “கலை என்பது மானுட உணர்வுகளின் குறியீட்டு வடிவங்களைச் செதுக்கும் ஒரு முயற்சி” என்று அவர் உரைத்ததன் பொருள், அது அழகியல் சார்ந்த ஒரு வரையறை என்பதைத் தாண்டி, மனித உணர்வுநிலை எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது என்பதற்கான தத்துவார்த்தப் பிரகடனமாக நிற்கிறது. உலகிலிருந்து நாம் பெறும் தகவல்களை, அர்த்தமுள்ள குறியீட்டு வடிவங்களாக மாற்றும் மூளையின் நுட்பமான ஆற்றலே, மனித அனுபவத்தின் அடிப்படைக் காரணி என்பதை லாங்கரின் தத்துவம் நிறுவுகிறது.
இங்கே மான்ஃப்ரெட் கிளைன்ஸ் போன்ற ஆய்வாளர்களின் பங்களிப்பைக் கவனத்தில் கொள்வது பொருத்தமானது. இசையின் நுட்பங்களை ஆய்வு செய்த அவர், லாங்கர் முன்வைத்த Logical form of feeling என்ற கோட்பாட்டிற்கு ஓர் அறிவியல் அடித்தளத்தை வழங்க முயன்றார். இசையின் ஒலி அமைப்பே உணர்வுகளின் வெளிப்பாடாக மாறுகிறது என்ற லாங்கரின் வாதத்திற்கு, கிளைன்ஸின் ஆய்வுகள் வலுசேர்க்கின்றன. இருப்பினும், இவை தீர்க்கமான நரம்பியல் நிரூபணங்கள் அல்ல; மாறாக, லாங்கரின் தத்துவக் கோட்பாட்டை மெய்ப்பிக்கும் ஒரு தத்துவார்த்த ஊகங்களாகவே இவை நிலைபெறுகின்றன.
இசை நுணுக்கங்களான கவுண்டர்பாயிண்ட் அல்லது ஹார்மனி போன்றவை, ஏன் ஒருவித ஒழுங்கையும், ஆழ்ந்த உணர்வையும் ஒருங்கே தூண்டுகின்றன என்பதற்கான விடையை லாங்கரின் கோட்பாடு வழங்குகிறது. இசையின் வடிவத்திற்கும், மனித மனதின் உள்ளமைப்பிற்கும் இடையே நிலவும் அந்த நுட்பமான இணக்கத்தை விளக்கும் ஒரு முயற்சியாகவே இதைக் கருத முடியும்.
லாங்கரின் தத்துவம் கலையை, ஏதோவொரு புறநிலைச் செயல்பாடாகப் பார்க்காமல், மனித நாகரிகத்தின் மையச் செயல்பாடாக நிலைநிறுத்துகிறது.

சிம்பனி இசை அரங்கில் இருப்பவர் அனைவருக்கும் ஒரே மாதிரியான அனுபவத்தைத் தந்துவிடுவதில்லை. சிலர் இசை அளிக்கும் ஆழ்ந்த அமைதியின் வழியே தத்துவார்த்த உச்சத்தைத் தொடுகிறார்கள்; சிலர் அதை சாதாரண இடைவெளியாகவே கடந்து செல்கிறார்கள். இருப்பினும், நம் உணர்வுநிலை, தான் தேடிய அந்த வடிவம் தன்னைத்தானே கண்டுகொள்வதற்கு, வாய்ப்பை உருவாக்குகிறது. இந்தக் கணத்தில்தான், கலை நம்மிடமிருந்து பெற்ற தரவுகளை, நாம் வாழும் உலகத்திற்கான அர்த்தங்களாக மாற்றும் குறியீட்டு உருமாற்றத்தை நிகழ்த்துகிறது. அந்தப் பிரம்மாண்டமான உணர்வெளியில்தான் தத்துவத்தின் தொடக்கம் நிகழ்கிறது; அங்கிருந்துதான் மனிதன் தனது அக உலகத்தின் ஆழத்தைத் தேடி, தர்க்கத்தின் எல்லைகளைத் தாண்டிய தனிப்பட்ட பயணத்தைத் தொடங்குகிறான்.
*

விவேக் சுப்ரமணியன்:
எழுத்தாளர். அமெரிக்காவின் Spillwords தளத்தில் இவரின் நான்கு கதைகள் பிரசுரமாகியுள்ளன. தமிழிலும் ஆங்கிலத்திலும் அறிவியல் கதைகளும் கட்டுரைகளும் தொடர்ந்து எழுதி வருகிறார். தற்போது அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் பொறியாளராகப் பணியாற்றுகிறார்.
*
