நானும் என் எழுத்தும் – ஹெப்ஸிபா ஜேசுதாசன்
ஹெப்ஸிபா ஜேசுதாசன் (1925-2012) தமிழ் நாவல் முன்னோடிகளில் ஒருவர். அவரது ‘புத்தம் வீடு’ தமிழிலக்கிய வரலாற்றில் தவிர்க்கமுடியாததொரு படைப்பு. அந்நாவல் வெளியான காலத்தில் ‘எழுத்து’ பத்திரிகையில் நடந்த விவாதக் கட்டுரைகள் ‘நீலி’ பிப்ரவரி 2024 இதழில் மறுபிரசுரம் செய்யப்பட்டன. 2025இல் ஹெப்சிபா ஜேசுதாசனின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு ‘தீபம்’ இதழில் அவர் எழுதிய கட்டுரையொன்று மறுபிரசுரமாகிறது. இக்கட்டுரையைக் கண்டெடுத்து அனுப்பிய கவிஞர் ராணிதிலக் அவர்களுக்கும் கும்பகோணம் சிவகுருநாதன் செந்தமிழ் நூல்நிலையத்திற்கும் நன்றி.
-ஸ்ரீநிவாச கோபாலன்
*

பத்திராதிபர் தேர்ந்தெடுத்த தலைப்பு மிகப் பொருத்தம் என்று கருதுகிறேன். எழுத்தாளனை, தன் எழுத்திலிருந்து பிரிக்க முடியாது. எழுத்தில், எழுத்தாளன் உள்ளத்தின் ரூபத்தை, அவன் எண்ணங்களின், உணர்ச்சிகளின், அனுபவங்களின், வடிவத்தை உணருகிறோம். ஒன்றிலிருந்து எழுவது மற்றொன்று. எத்தனை பக்குவத்துடனும் கலைத்திறனுடனும் எழுத்தாளன் தன்னை மறைத்துக்கொள்ள முயன்றாலும் அவன் தனித்துவம் அவன் எழுத்தில் வெளிப்பட்டுவிடுகிறது. கற்பனைக்கும் நிஜத்துக்கும் தொடர்பு அற முடிகிறதில்லை. மனிதனுக்கும் அவன் நிழலுக்கும் போல. ஆனால், இதில் ஒரு வேற்றுமை. மனிதனுடன் அவன் நிழலும் மாய்ந்துவிடுகிறது. நல்ல எழுத்தாளனின் எழுத்து அவனுடன் மறையாமல், போட்டோ மாதிரி இலக்கியத்தில் படிந்துவிடுகிறது. சாகாவரம் பெற்ற இலக்கியம் என்று புகழ்பெறுகிறது. புகழுக்கும், இலக்கியத்துக்கும்கூட காலவரம்பில்லாமலில்லை. என்றாலும் சில இலக்கியாசிரியர்கள் பெயர்கள் நூற்றாண்டுக்கணக்காக அடிபடுகின்றன. இந்த இலக்கியங்களின் மதிப்பு அவற்றை அமைத்தவர்களின் ஆளத்துவத்தை தனித்துவத்தைப் பொறுத்திருக்கிறது என்பதை நாம் உணராவிட்டால், அதைச் சரிவரப் புரிந்துகொள்ள நம்மால் இயலாது.
என் எழுத்தின் தரத்தைப் பற்றி விமர்சிக்க எனக்கு ஓரளவுக்குமேல் உரிமை கிடையாது. படைப்புக் கலையும் விமர்சகக் கலையும் உறவினர்களேயானாலும், படைக்கிறவனே தன் படைப்பை எடைபோடுவது குற்றவாளியே நீதிபதியாகிறது போலிருக்கிறது. விமர்சன் எழுத்தாளனைக் குற்றவாளிக் கூண்டில் விட்டு வெளுத்து வாங்கிவிடுகிறதுதான் வழக்கம். ஆனால் நானே என்னை நியாய விசாரணை செய்ய முடியுமா? என் எழுத்தின் தரத்தையிட்டுத் தீர்ப்புக் கூறிக்கொள்வதற்கு எனக்குத் தகுதியில்லை. ஆனால் என் எழுத்துக்கும் எனக்கும், அதாவது என் படைப்புக்கும் என் வாழ்க்கைக்கும் தொடர்பு எத்தகையது என்று ஆராய்வதில் தவறில்லை. அதைச் செய்யவே நான் எத்தனிக்கிறேன்.
சற்றுப் பின்னோக்கிப் பார்க்கிறேன். சில விஷயங்கள், இன்றைய அனுபவத்தின் கண்ணோட்டத்தில், விசித்திரமாகப் படுகின்றன. ஒன்று, சரித்திர ஆசிரியராக இருந்த என் தந்தையாரின் மடியிலிருக்கும்போதே, நான் ஆங்கிலக் கவியாகப் பிறந்தவள் என்ற எண்ணம் என் உள்ளத்தில் நன்றாக ஊறிப்போயிருந்ததுதான். அது இயல்பான ஒன்றாக எனக்கு இப்போது தோன்றவில்லை. எனக்குக் கடவுள் கொடுத்திருக்கும் மூன்று அருமையான குழந்தைகளுக்கே தங்களைப் பற்றி அப்படிப்பட்ட ஒரு எண்ணத்தை நான் ஊட்ட விரும்பவில்லை. வாழ்க்கை கவிதையைவிட, இலக்கியத்தைவிட, ஆழமும் அகலமும் உள்ளது. வாழ்க்கையில் தங்களுக்குரிய இடத்தை அவர்கள் புரிந்துகொண்டு அதன் நற்கனிகளை அனுபவிக்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களையிட்டு எனது ஆசை. எனது தந்தையாருக்கு என்னையிட்டு இப்படியொரு குறிப்பிட்ட எதிர்பார்ப்பு, வாஞ்சை, நம்பிக்கை, எல்லாம் இருந்தது. நான் மட்டும் அந்த நம்பிக்கையில் சளைத்துவிட்டவளா? எட்டாவது வயதில் ஒரு கவிதையை எழுதி என் பள்ளிக்கூட ஆண்டு இதழுக்குத் துணிந்து அனுப்பியும் விட்டேன். கவிதை அப்படியே திரும்பி வந்தது. கவிதையின் சிலசில அம்சங்கள் எனக்கு இப்போதும் ஞாபகமிருக்கிறது. அத்தனையும் வேஷம், பொய், ‘போஸ்’. கவிதை பொய்யா? பொய்தான் கவிதையா? என்றுகூட நினைத்தேன். ஆனால், அன்றுதொட்டு என் பேனா – அதாவது என் பென்ஸில் – விறுவிறுப்பாக வேலை செய்யத் தொடங்கிவிட்டது. நானும் கனவு காணத் தொடங்கிவிட்டேன். ஒரு கனவில், நீலப் பட்டு இறகுகள் உள்ள ஒரு மனிதர் என்னிடம் ஒரு பேனாவைக் கொடுத்தார். அது மாதிரி ஒரு மனிதரை ஜோன்-ஆப்-ஆர்க் படம் ஒன்றில் பார்த்திருந்தேன். ஆனால் என் கனவுகள் பெரும்பாலும் இருண்ட மலைகள், பொங்கி மறியும் கடலலைகள், தீக்கண்களுடைய சிங்கங்கள், இவையாகவே யிருந்தன. ஒன்பது வயதுக்குள் புத்தகப் புழுவாகக் கனவுலகத்துக்குள் புகுந்தும்விட்டேன். அதுவரையிலும் நாள் ஒரே குழந்தையாக இருந்தது, இந்த நிலைமைக்குச் சாதகமாயிற்று. பிறகு வந்த என் தங்கையால் அதை மாற்றவும் இயலவில்லை. காரணம், நாளைக்குப் புலவராகவும் புரொபஸராகவும் போகிறவள் என்கிற தோரணை எனக்கு நன்கு அமைந்துவிட்டது. அதை வெளியில் காட்டிக்கொள்ளாவிட்டாலும் வீட்டிலாவது காட்டிக்கொள்ள வேண்டாமா? வெளியிலோ பர்மாவிலுள்ள எனது அன்புக்குரிய ஆசிரியர்கள்கூட அப்படியே ஒத்துக்கொள்ளத் தயாராயிருந்தார்கள். எனக்கு இடதுகைக்கும் வலதுகைக்கும் வித்தியாசம் தெரியாமலிருந்த காலம் அது.
இந்த நிலையில் கடவுள் நினைவும் நம்பிக்கையும் என்னை வந்து பற்றிக்கொண்டது. அது என் தாயாரின் வழியாக வந்திருக்க வேண்டும். தந்தையாருக்கு ஒரு தடவை கடுத்த குளிர் ஜூரம் வந்தபோது, சிறு குழந்தைகளின் விண்ணப்பம் கடவுளுக்குப் பிரியம் என்று, என் தாயார் என்னை வற்புறுத்தி, வேண்டிக்கொள்ளச் செய்தார்கள். ஆகவே சில வேளைகளில் நான் கடவுளை நோக்கிக் கூப்பிடுவதுண்டு. என்னை பக்தை என்று மட்டும் எண்ணிவிடாதீர்கள். அதெல்லாம் ஆபத்துக் காலத்தில்தான். இதற்கிடையில் என் பர்மா வாசத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. என் வயோதிகப் பாட்டனாருக்கும் பாட்டியாருக்கும் துணையாக என் தாயாரையும் தங்கையையும் இங்கே விட்டுவிட்டு, தந்தையார் மட்டும் தனியாக பர்மாவில் வேலையில் தொடர்ந்தார்கள். என் படிப்போ நாகர்கோவில் டதி போர்டிங்கில் தொடர்ந்தது. இங்கேயும் பர்மாவிலிருந்த நிலைமையேதான். இங்கேயும் என்னை மிக அன்புடன் ஆதரித்து, பாராட்டி என்னை வெகுவாகப் பெருமைகொள்ளச் செய்தார்கள் என் ஆசிரியைகள். நான் கட்டுரை எழுதும்போது, பின்னால் நின்றுகொண்டு ரசித்துத் தலையாட்டும் என் அன்புக்குரிய ஆசிரியை அவர்களைக் கண்டு, அக்கம் பக்கத்திலிருக்கும் மாணவிகள் சிரிக்கிறதை உணர்ந்திருக்கிறேன். சக மாணவிகள், “நீ எப்படி இப்படி எழுதுகிறாய்?” என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு நான் “ஏன், இதில் என்ன இருக்கிறது?” என்றுதான் பதில் கொடுத்திருக்கிறேன். அப்படி எழுத முடியாமலிருக்கவும் கூடும் என்றுணர இன்னும் எத்தனையோ ஆண்டுகள் பிடித்தன. அன்று என் எழுத்தில் ஒரு வேகம் இருந்ததாக ஞாபகம். பேனாவைக் கடுதாசில் வைக்கவேண்டியது; அது உந்தித் தள்ளப்படும். எங்கள் டதி பள்ளிக்கூடம் ஒரு சிறு தனியுலகம். அதில் எனக்குக் கவியின் ஸ்தானத்தைக் கொடுத்திருந்தார்கள். சொந்தக் குழந்தையையிட்டு என் தந்தையார் பெருமிதம் கொண்டது போலவே அங்கே என் ஆசிரியைகளும் என்னையிட்டுப் பெருமை கொண்டார்கள். அத்தனை பாராட்டையும் தாங்கக்கூடிய பலமோ என்னிடம் கிடையாது. என்றாலும் அந்த மூன்று வருஷங்களில், பகத் சிங் ஒரு தடவை நாகர்கோவிலுக்கு வந்துபோயிருந்தது, என்னை நன்றாக உலுக்கியெடுத்துவிட்டது. உலகின் புகழ் எல்லாம் வீண் பேச்சு என்ற தெளிவும், நம் செய்கைகள் ஒவ்வொன்றையும், நெஞ்சின் நினைவுகள் ஒவ்வொன்றையும் கண்காணிக்கும் கடவுள் இருக்கிறார் என்னும் உணர்வும் அத்துடன் ஒரு பயமும் ஏற்பட்டது.
கொஞ்ச நாளைக்குத்தான். பி.ஏ. ஹானர்ஸ் வகுப்பில் ஏறினதும் அதெல்லாம் மறைந்துவிட்டது. சமரச சன்மார்க்கக் கொள்கையும் சுயபலத்தில் நம்பிக்கையும் கடவுள் விஷயத்தில் பொதுவாக அவிசுவாசமும் உதாசீனமும் முளைவிட்டன. அந்த மூன்று வருஷங்களில் நான் சந்தோஷமாக இருந்து எனக்கு ஞாபகமில்லை. நெஞ்சம் நிறைந்து சிரித்ததில்லை. நிம்மதியில்லை. வாழ்க்கையின் பின் திரை ஒரே சூன்யமாகத் தோற்றமளித்தது. என் பேனாவும் அப்போதைக்குப் பறிபோய்விட்டதுதான் அதிலும் அதிசயம். எழுத வர மறுத்தது. என் பழைய ஸ்தானமும் இங்கே வகிக்கக் கூடவில்லை. இறுதியில் நான் முதல் வகுப்பில் தேறத் தவறியது, எனது தோல்வியின் சிகரமாக அமைந்தது. சொல்ல முடியாத கசப்புக்கு ஆளானேன்.
அப்போதுதான் அந்தக் கனவு. ஒரு பறவை. தன்னந்தனியாக, கடலைத் தாண்டிப் போயிருந்தது. திரும்பி வருகிறது, வெண் கொக்காக இருக்கலாம். ஆனால் அது வந்த அழகும், மூன்று தடவை என்னைச் சுற்றிப் பறந்து சிறகடித்த அழகும் துயிலெழும்போது என் தலையணையை நனைத்திருந்த ஆனந்தக் கண்ணீரும் மறப்பதற்கில்லை. வெறும் கனவுதானா, அந்தக் கனவின் ‘ஒரிஜினலோ’ திருவனந்தபுரம் திராலயத்தில் தொங்குகிறது. என்றாலும் அதற்கு என் வாழ்க்கையில் ஏதோ இடம் இருப்பதாக உணர்ந்தேன்; உணருகிறேன். ஆங்கிலக் கவிதையில் அதை ஓர் அனுபவமாக வடித்துமிருக்கிறேன்.
அது எப்படி நிகழ்ந்தது, என்றைக்கு நிகழ்ந்தது என்று அறியேன். அந்தக் கனவு அதன் வருகையின் நிழலாக இருக்க வேண்டும் என்றே கருதுகிறேன். மறைந்து போயிருந்த என் நிம்மதி, அதுவரையில் நான் அறியாமலிருந்த ஒரு சந்தேகம், எங்கிருந்தோ வந்து என்னில் குடிகொண்டது. அதுவரையில் என்னால் நம்பக்கூடாமலிருந்தவை எனக்கு அனுபவமாகிவிட்டது. கடவுளின் சிநேகம் எனும் மாபெரும் உண்மை எனக்கு மெய்யாகிவிட்டது. கிறிஸ்துவைப் பழங்கதையாக எண்ணியிருந்தது போய், “நான் இருக்கிறவராக இருக்கிறேன்” என்ற பொன்வாக்கை நான் அறிந்துகொண்டேன். மனக் குழப்பம் தீர்ந்தது. சிறுகச் சிறுக எனது பேனாவும் இழந்துபோன வலுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. புயலும் போராட்டமும் நோயும் கவலையும் அந்த அனுபவத்தை மீற முடியாது என்ற தைரியமும் ஓரளவு எனக்கு ஏற்பட்டது.
எனது விவாகம் எனது வெளியுலகத்தில் பெரிய மாற்றத்தை உண்டுபண்ணிற்று. அதாவது தமிழ் விரிவுரையாளரின் மனைவியான நான், ஆங்கில இலக்கிய உலகத்திலிருந்து தமிழ் இலக்கிய உலகத்திற்கு வரவேண்டியதாயிற்று. தமிழைப் படிப்பதில் ஆர்வம் பிறந்தது. எழுதுவதற்குக்கூடத்தான். மாணவியாக இருந்த காலத்தில், தமிழில் முப்பத்தைந்து மார்க்கு வாங்குவதுகூட சிரமயிருந்தது! ஆனால் விவாகத்திற்குப் பிறகு, நான் தமிழில் எழுதின ஓரிரு கடிதங்களை வாசித்த கணவர், “உன் எழுத்தில் ஒரு விறுவிறுப்பிருக்கிறது. எழுது, எழுது” என்று உற்சாகப்படுத்தினார்கள். அவ்வளவுதான். நாளடைவில், ‘நானும் ஏன் தமிழில் எழுதக் கூடாது?’ என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன் பயன்தான், ‘புத்தம் வீடு’ என்னும் நாவலும் மற்றும் சிறுகதைகளும்.
இதற்கிடையில் எங்களுக்குச் சில விஷயங்கள் பாடமாகியிருக்கின்றன. ஒன்று, புகழுக்கென்று வாழ்கின்ற எழுத்தாளன் மனம் சுழியில் நன்கு அகப்பட்டுக்கொண்ட ஓடம் போல என்பது. நிம்மதியோ நிலையான சந்தோஷமோ வேண்டும் என்றிருப்பவர்கள், தங்களை மறந்தும் புகழில் மயங்கிவிடக் கூடாது.
‘தோன்றிற் புகழொடு தோன்றுக; அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று’ என்று படித்திருக்கின்றோம். அப்படி எழுதியது யார் என்றும் நன்றாக அறிவோம். என்றாலும் வாழ்க்கையின் பொருள் புகழ் அல்ல என்பதை மட்டும் நன்றாக உணர்ந்துவிட்டோம். புகழ்பெற்ற ஒரு பாகவதரை, தம் வயோதிக காலத்தில் ரேடியோ நிலையத்தில் என் கணவர் ஒருதடவை சந்திக்க நேர்ந்தது. எங்கள் புதிய பாடத்திற்கு ஒரு அத்தாட்சியாக இருந்தது அந்தச் சந்திப்பு. இன்று எனக்குப் புகழாசை அறவே நீங்கிவிட்டது என்று கருத வேண்டாம். ஆனால் அதற்கு நான் அஞ்சுகிறேன். அதையோர் அகண்ட பாதாளமாகக் காண்கிறேன். அதை எனது பெரியதோர் பலவீனமாகவும் உணருகிறேன். அதற்கு ஒதுங்கிப் பிழைக்க ஒளியும் சக்தியும் வேண்டுமெனக் கோருகிறேன்.
விவாகத்தோடு எனது வெளிவாழ்க்கையில் பெரியதோர் மாற்றம் நிகழ்ந்தது என்று கூறினேன். சூழ்நிலை, மொழி, என்னிடம் பிறர் எதிர்பார்ப்பவை, யாவுமே புதிது. இதற்கிடையில் எனக்கு உத்தியோகமும் வாய்த்தது. ஆங்கில விரிவுரையாளராகத்தான். வாழ்க்கையில் நோய்களுடனும் மற்றும் புயல்களுடனும் பலத்த போராட்டங்களும் ஏற்பட்டன. ஆனால் என் அகவாழ்க்கையின் அனுபவம் அசைந்தாலும் குலைந்துவிடாதபடி நான் சேவித்துவரும் கடவுள் காப்பாற்றினார். காப்பாற்றி வருகிறார்! எல்லாவற்றிலும் பெரிய வியப்பிற்குரிய விஷயம், இதுபற்றி என்னிடமிருந்து ஒரு வார்த்தைகூடத் தேவைப்படாமல் இதே பேரின்ப அனுபவத்துக்கு என் கணவரும் ஆளானதுதான். அதனுள் நின்றுகொண்டு ஒரே கண்ணோட்டத்துடன் எதையும் பார்ப்பது இப்போது வெகு சுலபமாகிவிட்டது. இன்று எனக்கு வாழ்க்கையில் உற்சாகத்தின் பொருள் தெரியுமா என்று அறிய வேண்டுமானால், திருவனந்தபுரம் மாதர் கல்லூரியில் படித்த, படித்து வருகிற, குழந்தைகளிடம் விசாரியுங்கள், அவர்கள் கூறுவார்கள். பதினேழு வருஷங்களாக அங்கேதான் நான் ஆங்கிலத்துறையில் வேலை செய்துவருகிறேன்.
இப்போதெல்லாம் நான் எழுதுவது, ஆசைக்குத்தான். எழுத்து சில வேளைகளில் சோம்பலை முறிக்க உதவுகிறது. எப்போதுமே எழுதுகிறபோது நின்று ஆராய்ந்து, தெளிந்து, திருத்தி எழுதுகிற வழக்கம் எனக்கு இல்லை. எழுத்து முதலில் என் மனத்தில் உருப்பெருகிறது. ஆகையால் பேனாவை எடுக்கும்போது தாமதத்துக்குத் தேவையில்லை. உதாரணமாக, ‘புத்தம் வீடு’ ஒரு மாதத்தில் உருவானது. சில சில ஆங்கிலக் கவிதைகள் ஓரிரு நிமிஷ வேலைதான். இந்தக் கட்டுரைகூட ஒரே இருப்பாக இருந்து எழுதினது. சில சிறுகதைகளும் அப்படியே. அப்படி எழுதினால்தான் உருப்படியாக இருக்குமோ என்றுகூட நினைக்கிறேன். எழுதி முடித்த பின்பு ஆங்கில இலக்கிய ஒளியிலேயே எழுத்தின் தரத்தை ஆராய்கிறேன். ஓரளவு திருப்தியிருந்தால் சரி, இல்லாவிட்டால் அது கிழித்தெறியப்படுகிறது. முதலில் நான் எழுதுகிறதைப் பார்வையிடுவது என் கணவர்தான். விமர்சனம், சர்ச்சை, பிழைதிருத்தம், எல்லாம் பிறகுதான் நடக்கும்.
என் எழுத்தைப் பற்றி இன்னும் ஒரேயொரு விஷயம். குழந்தைப் பிராயத்தில் நான் எழுதுவதில் பெரும்பாலும் ஒரு ‘போஸ்’ அல்லது நடிப்பு இருக்கும். இப்போது நான் அதை அறவே வெறுக்கிறேன். கற்பனைக்கு என் எழுத்தில் இடமில்லாமலில்லை. ஆனால் கற்பனை என்ற பெயரால் வரும் சிருஷ்டியில் நான் எனது கிறிஸ்துவ அனுபவத்தைப் புகுத்த என்றுமே துணிந்ததில்லை. உதாரணமாக, ‘புத்தம் வீடு’ என்ற நாவலில் நான் வெறும் பாமரக் கிறிஸ்துவர்களையே, பெயரால் மட்டும் கிறிஸ்துவர்களானவர்களையே சித்திரித்திருக்கிறேன். என் கற்பனையை அதற்கப்பால் போகவிடுகிறது, யதார்த்த மெய்யையும் கற்பனை மெய்யையும் கலப்பதுபோல் என்று எனக்குத் தோன்றினது; தோன்றுகிறது. ஆனாலும் பொதுவாக என் வாழ்க்கைக் கண்ணோட்டம் என் எழுத்தில் அமைந்துதானிருக்கும். அதை ஒப்புக்கொள்ளுகிறேன். எந்த எழுத்தாளனின் எழுத்திலிருந்தும் அவன் வாழ்க்கைக் கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்ளலாம். அதற்கு நான் விதிவிலக்கல்ல. ஆனால் என் சொந்தக் கற்பனையின் மூலம் என்னை ஆட்கொண்டிருக்கும் இந்த ஒரே சத்தியத்தை என் வாழ்க்கைக்கு அஸ்திவாரமாயிருக்கும் ‘அவரை’ அறிவிக்க ஏனோ என் மனம் ஒப்பவில்லை. நேராகச் சொல்லவேண்டியதை இந்தக் கட்டுரை போல நேராகவே சொல்லிவிடுகிறேன். அதன் முன்னிலையில்; கற்பனை எனக்கு ஒரு பொழுதுபோக்கு, விளையாட்டு எனலாம். மணலில் குழந்தை விளையாடுகிறது போல. ஆனால் இந்த உலக வாழ்க்கை எனும் வீட்டின் சாயலை அதில் அமைத்து அழகு பார்க்கிறேன்; அவ்வளவுதான்.
அதற்கு ஒரே ஒரு உதாரணமாக, நான் ‘புத்தம் வீட்’டை எப்படி எழுதினேன் என்பதைக் கூறலாம் என்றென்ணுகிறேன். ‘புத்தம் வீட்’டுக் கதாபாத்திரங்கள் ஒன்றும் வெறும் அந்தரத்தில் நின்று என் கற்பனை உலகிற்குள் குதித்துவிடவில்லை. அவைகள் ஒவ்வொன்றும், அவர்கள் இயங்கும் மேடையாகிய அந்தக் கிராமமும் எல்லாம் என் மனத்தின் அடித்தளத்தில் கிடக்கும் நினைவலைகள் எனலாம். சிறு வயதில் பனையேற்றுத் தொழிலாளர்களை ஊன்றிக் கவனித்திருக்கிறேன். கிராமப் பெண்களின் சிறை வாழ்க்கைக்காகப் பரிதவித்திருக்கிறேன். அந்தச் சிறைக்குள்ளும் அவர்கள் வாழ்க்கை அற்புதமாக மணம் வீசுகிறதாக எனக்குத் தோன்றியிருக்கிறது. பட்டண வாசத்தில், பணவேட்டை, பதவி வேட்டை எனும் நெருக்கடிகளுக்கிடையே, மனிதத் தத்துவத்துக்குக்கூட பொருள் இல்லாமலாகிவிடுகிறதாக எனக்குப் படுகிறது. ஆனால் மண்ணோடு இழைந்து வாழும் கிராம மக்களுக்கிடையில், பூவும் பூண்டும் நெல்லுமாக, வாழ்க்கையில் ஏதோ அதிசயம் இருப்பதாக எனக்கு ஒரு தோற்றம். குத்தும் கொலையும் மதுவும் கிராமத்திலும் இருப்பதாகக் கவனித்திருக்கிறேன். வீண் டம்பங்களும், முரட்டுத்தனங்களும் பிடிவாதங்களும் ஏராளமாக அங்கு இருக்கத்தான் செய்கின்றன. என்றாலும் எல்லாவற்றையுமிணைத்து அற்புதம் என்ற உணர்ச்சியோடு பார்த்திருக்கிறேன். என் வெறும் பிரமையாக இருக்கலாம். என் குழந்தைப் பிராயத்து உணர்ச்சியாக இருக்கலாம். ஆனால், அந்த உணர்ச்சியையே அந்த நாவலாகச் செதுக்கியிருக்கிறேன். அம்மா அப்பா சண்டையைக் கவனித்த குழந்தைகள் அம்மா அப்பாவாக நடித்து விளையாடும்போது இருக்கும் அற்புத உணர்ச்சியைக் கவனித்திருக்கிறீர்களா? அதுபோல என்று வைத்துக்கொள்ளுங்களேன். என் நினைவுக் காடுகளில், நிழல்களாகச் சஞ்சரிக்கும் மனித வர்க்கத்தையே பிடித்து வந்து, எனக்கு ஒரு காலத்தில் இனித்த ஒரு சூழ்நிலையை அமைத்து, அதற்குள் அவர்களை விட்டு, பொம்மலாட்டம் விளையாடினேன். ஆனால் அந்த விளையாட்டிற்குச் சில வரம்புகளே மட்டும் ஏற்றுக்கொண்டேன். தம்தம் இயல்புக்கு, தம்தம் சுபாவத்துக்கேற்றபடியேதான் ஒவ்வொரு பாத்திரமும் அசையலாம். சதுரங்கமாடும்போது மந்திரியும் குதிரையும் அவரவர் விதிகளை மீறக்கூடாதல்லவா? அப்படியே வைத்துச் சதுரங்கம் ஆடினேன். கதையில் வரும் ‘கண்ணப்பச்சி’யை எடுத்துக்கொள்ளுங்கள். எனது பாட்டனார்தான் கண்ணப்பச்சிக்கு மாடல். ஓவியருக்கு மாடல் வேண்டுமல்லவா? எனது பாட்டனாருக்கு அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பம் என்னறிவில் வரவில்லை. ஆனால் வந்திருந்தால், அப்படியேதான் நடந்துகொள்ளுவார். எனது பாட்டனார் அன்று எனக்கு ஒரு அதிசயமாக இருந்தவர். அவர் இறந்த பிறகு நாலைந்து வருடங்கள் வரை அவரை நான் கனவில் காண்கிறகிறதுண்டு. ‘கண்ணப்பச்சி’யில் அவரையே நான் வேறு சூழ்நிலையில் கற்பனை செய்து சதுரங்கமாடியிருக்கிறேன். இலக்கியத்தில் ஜீவனுள்ள எந்தப் பாத்திரத்துக்கும் ‘மாடல்’ எங்காவது இருக்கும் என்பதை உங்களுக்கு இங்கே ஞாபகப்படுத்துகிறேன். என்னுடன் அந்தச் சதுரங்க விளையாட்டில் பங்கெடுத்துக்கொள்ள யாருமில்லாதபடியால், நானே ஆடி, திருப்தியடைந்து, ஐயித்துவிட்ட பெருமிதத்துடன் நாவலுக்கு முற்றுப்புள்ளியும் வைத்துவிட்டேன். என் அருமைக் கற்பனைக் குழந்தையாகிய லிஸிக்குப் போரில் வெற்றி தேடித் தந்தும் விட்டேன். அந்தப் போருக்குச் சுவையிருந்தால்தானே வெற்றிக்குப் பொருளும் இருக்கும்? ஆகவே அந்த ‘இமிடேஷன்’ போருக்கு, நிஜப்போருக்கு வேண்டிய ஆயுதங்களையும் தயாரித்து, அது கிராமத்தில் நிகழக்கூடிய நிஜப் போரைப் போலவே இருக்க வேண்டும் என்று கங்கணமும் கட்டிக்கொண்டேன். அதற்கப்புறம் என்னிடம் கேட்காதீர்கள்! ‘புத்தம் வீடு’ அசல் கிராம வாழ்க்கையாக இருக்கிறது என்று சொல்லக் கேட்கும்போது, நான் விரும்பினதும் அதுதான் என்று மட்டும்தான் கூறுவேன்! ஆனால் இப்போது நீங்களே சொல்லுங்கள், இலக்கிய சிருஷ்டி ஒரு விளையாட்டுத்தானா இல்லையா என்று?
-‘தீபம்’ (ஆகஸ்ட் 1966) இதழில் வெளியானது
***
