தூரத்தில் தெரியும் ஸ்தூபி – ஆலிஃபா ரிஃபாத்
அரபு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் டெனிஸ் ஜான்சன்-டேவிஸ்
ஆங்கிலத்திலிருந்து தமிழில் தி. மரிய தனராஜ்

பாதி மட்டுமே திறந்திருந்த அவளது கண்கள் அவளது கணவனைப் பார்த்தன. வலதுபுறமாகப் படுத்திருந்தவனுடைய உடல் அவளது உடலோடு பின்னிப்பிணைந்து கிடக்க அவனது முகமோ அவளது வலது தோள்பட்டையில் சாய்ந்து கிடந்தது. இந்த மாதிரியான நேரங்களில் அவனது உலகம் அவளது உலகத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாகவே இருந்ததாக வழக்கம்போல அவளுக்குத் தோன்றுவது இப்போதும் தோன்றியது. அவனுடைய அந்த உலகத்தில் அவளுக்கு இடம் இருக்கவே இல்லை. அவனது உடல் இயங்கிக்கொண்டிருந்ததை அறிந்தவளாய் இருந்தாலும், அதிலே மனம் லயிக்காதவளாய் தனது முகத்தைத் திரும்பியவள் விட்டத்தை வெறித்துப்பார்த்தாள். விட்டத்தில் ஒட்டடை படிந்திருப்பதைக் கவனித்தவள் நீண்ட ஒட்டடைக் குச்சியைக்கொண்டு அதைச் சுத்தம் செய்யவேண்டும் என்றும் மனதுக்குள் குறித்துக்கொண்டாள்.
திருமணமான புதிதில் தனக்குள் பற்றி எறிந்த ஆசைகள் அனைத்தையும் எப்படியாவது அவனுக்கு உணர்த்தி அந்த நேரத்தில் அவனது இயக்கத்தை இன்னும் சிறிதுநேரம் நீட்டிக்க வைத்துவிடவேண்டும் என்று எவ்வளவோ முயற்சி செய்தாள். இம்மாதிரியான ஆசைகளை வெளிப்டையாகச் சொல்வதற்கு, பாரம்பரியமான சமூகத்திலே பிறந்து சமூகத்தின் பழக்கவழக்கங்கள் பற்றி மரபான சிந்தனைகள் மட்டுமே கொண்டிருந்த அவளுக்கு கொஞ்சம் சங்கோஜமாகத்தான் இருந்தது. அதன் பின்பு, திருமணமான அவளது தோழிகள் அவர்களுக்குள்ளாக மெதுவான குரலில் அவர்களுடைய அனுபவத்தைப் பேசிக்கொண்டபோது அவர்கள் பகிர்ந்துகொண்ட அனுபவத்தைத் தானும் பெற்றுவிடவேண்டும் என்று எண்ணி தைரியத்தை வரவழைத்தவளாய் அவளுடைய ஆசைகளை வெளிப்படையாகவே அவனிடம் சொல்லிவிட்டாள். அந்த நேரங்களில், அவனுடைய உடல் இன்னும் ஒரே ஒரு முறை இயங்கி நிறுத்திக்கொண்டால் போதும்; அவளுடைய உள்ளத்தின் தாபமும் உடலின் தாகமும் அத்தோடு அடங்கிப்போய்விடும்; அப்படி ஒருமுறை நடந்தேறிவிட்டால் அந்தச் சூட்சுமம் பிடிபட்டுவிடும்; அதன்பின் மறுபடி மறுபடி அவ்வாறு அதே இன்பத்தை அவர்களால் துய்க்க முடியும் என்று அவள் நம்பினாள். ஆனால் வாய்த்த ஒவ்வொரு முறையும் அவள் மூச்சிரைக்க ‘இன்னும் கொஞ்ச நேரம்…இன்னும் கொஞ்ச நேரம்’ என்று வேண்டிக்கேட்கும் அந்த நேரத்தில்தான் அவன் இன்னமும் வேகத்தைக் கூட்டி – அவள் கேட்டது அவளுக்கு கிடைக்கக்கூடாது என்று வேண்டுமென்றே செய்வதுபோல – தடாலென முடித்துக்கொள்வான். சில வேளைகளில் அவனை இன்னமும் சிறிது நேரத்திற்கு சீரான வேகத்தில் இயங்கவைத்துவிடவேண்டும் என்று அவள் முயற்சி செய்தபோதெல்லாம் அவன் அவளைத் தடுத்துவிடுவான். இப்படித்தான் கடைசித் தடவை மிக முக்கியமான அந்தத் தருணத்தில் எப்படியாவது அவனை தனக்குள் இன்னும் கொஞ்சநேரம் இருக்கவைத்துவிடவேண்டும் என்று நினைத்தவள் அவனது முதுகை இறுக்கமாக – அவளது நகங்கள் அவனது முதுகில் பதியுமளவுக்கு – பற்றிப் பிடித்துகொண்டாள். ஆனால் அவனோ அலறியவாறு அவளிடமிருந்து உடனே விலகிக்கொண்டான்.
“பைத்தியமாடி உனக்கு? ஏண்டி என்னயக் கொல்லப்பாக்கிற?”
அவன் அப்படிச் செய்தது அழிக்கமுடியாத அவமான வடுவாக அவளுக்குள்ளே தங்கிப்போனது. அதன்பின்பு அதைப் பற்றி நினைத்தபோதெல்லாம் அவமானத்தில் அவள் முகம் சுருங்கிப்போவதை உணர்ந்தாள். அன்றிலிருந்து உணர்ச்சிகளின்றி சொல்லும் வேலையை ஈடுபாடு எதுவுமின்றி செய்யும் ஒரு ஜடப்பாத்திரமாகவே தன்னை மாற்றிக்கொண்டாள். ஒரு சில நேரம், “இது எனது தவறாகக் கூட இருந்திருக்கலாம். எனது ஆசைகளும் கூட அர்த்தமற்றவைகளாக இருந்திருக்கலாம். ஒருவேளை எனது கணவனின் இயக்கத்திற்கு என்னால்தான் சீராக ஈடுகொடுக்கத் தெரியவில்லை போலும்” என்றும் அவளுக்குள்ளாக எண்ணிக்கொள்வதுண்டு.
திருமணத்திற்கு முன்பு அவனுக்கு வேறு பல பெண்களோடு தொடர்பு இருந்ததை சில குறிப்பிட்ட நேரங்களில் அவன் அவளுக்கு குறிப்பால் உணர்த்தியிருந்தான். திருமணத்திற்கு பின்பு இப்போதும் அவன் பல பெண்களோடு தொடர்பில்தான் இருந்துகொண்டிருக்கிறான் என்றும் அவளுக்குச் சில வேளைகளில் சந்தேகம் வருவதுண்டு. ஆனால் இப்போதெல்லாம் இந்த நினைப்பு அவளுக்கு எரிச்சலைத் தருவதில்லையே என்று அவளுக்கே வியப்பாகத்தான் இருந்தது.
அவனுடைய இயக்கத்தின் வேகம் திடீரென அதிகரித்ததால் இந்தச் சிந்தனைகளிலிருந்து அவள் வெளியே வந்தாள். அவன் பக்கம் திரும்பியவள் கணவன் ஆக்கிரமித்திருந்த அவனது உலகில் அவனாகப் போராடிக்கொண்டிருந்ததைக் கவனித்தாள். கண்கள் இறுக மூடியிருக்க, வாய் ஒரு மாதிரி அசிங்கமாகக் கோணிக்கிடக்க, அவனது கழுத்தில் இருந்த நரம்புகள் புடைத்து நின்றன. அவளது கால் தொடையில் அவனது கை ஊர்வதை உணர்ந்தாள். அவளது தொடையைத் தூக்கியவன் பக்கவாட்டில் இருந்தவாறு இன்னும் வேகமாக வெறித்தனமாக இயங்க ஆரம்பித்தான். விட்டத்தில் இருந்த ஒட்டடை நோக்கி நீட்டியிருந்த தனது கால்பாதத்தைக் கவனித்தவள் விரல்களில் வளர்ந்திருந்த நகங்களை வெட்டி சுத்தம் செய்யவேண்டும் என்று மனதுக்குள் குறித்துக்கொண்டாள்.
பெரும்பாலும் இதே நேரத்தில்தான் சாயங்கால தொழுகைக்கான (அஸர் தொழுகை) பாங்கொலிச் சத்தம் கேட்பதுண்டு. அன்றும் அதேபோல அந்த நேரத்தில் சரியாக பாங்கொலிச் சத்தம் அடைக்கப்பட்டிருந்த ஜன்னல் பலகைகளின் ஊடாக அவள் காதுகளுக்குக் கேட்டது. எண்ணச் சிந்தனைகள் நிறைந்த உலகத்தில் இருந்து முழுமையாக விடுபட்டு நிஜ உலகிற்குத் திரும்பினாள் அவள். அதே நேரம் அவனிடமிருந்து முனகல் சத்தம் வெளியானது. இறுகப் பற்றியிருந்த அவளது தொடையை விடுவித்தவன் தலைமாட்டில் இருந்த சிறிய துண்டை எடுத்து அவனது இடுப்பை சுற்றிக் கட்டிக்கொண்டு அவளுக்கு தனது முதுகைக் காட்டியவாறு தூங்கிப்போனான்.
படுக்கையிலிருந்து எழுந்தவள் தட்டுத்தடுமாறி குளியலறை வந்து அங்கிருந்த மேற்கத்திய டாய்லெட்டின் மேல் அமர்ந்து தன்னையே தண்ணீரால் கழுவி சுத்தம் செய்தாள். திருமணமான புதிதிலெல்லாம் இப்படியாக இந்த நேரத்தில் பாதியில் முடிந்துபோன அவளது ஆசைகளை அவளாக நிறைவு செய்துகொள்வதுண்டு. இப்போதெல்லாம் அப்படி நிறைவு செய்யவேண்டும் என்ற ஆசை அவளுக்குத் தோன்றுவதே இல்லை. பின்பு தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் குழாய் (ஷவர்) அடியில் நின்றவள் முதலில் தனது வலப்பக்க உடலையும் பின்பு இடப்பக்க உடலையும் வெதுவெதுவென வந்த தண்ணீருக்குக் காட்டியவாறு சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். கூடவே அதனோடு சேர்ந்து சொல்லப்படும் மந்திரங்களையும் உச்சரித்தாள்.1 குளித்து முடித்த பின்பு ஒரு துவாலையில் ஈரக்கூந்தலை முடிந்துகொண்டும் மற்றொரு துவாலையால் தனது மேலுடம்பை சுற்றிக்கொண்டும் படுக்கை அறைக்குள் திரும்பிவந்தாள். வீட்டின் உள்ளே மட்டுமே அணிந்துகொள்ளக்கூடிய நீளமான கவுன் போன்ற ஒன்றை அலமாரியில் இருந்து எடுத்து உடையை மாற்றிக்கொண்டாள். பின்பு அலமாரியின் மேலே இருந்த தொழுகை விரிப்பை எடுத்துக்கொண்டு படுக்கையறைக் கதவை சாத்திவிட்டு நடுக்கூடத்திற்கு வந்தாள்.
நடுக்கூடத்தைத் தாண்டிச்சென்றபோது அவளது மகன் முஹம்மது-வின் அறையிலிருந்து பாப் இசை ஒலிப்பதை அவளால் கேட்கமுடிந்தது. பள்ளிப்பாடப்புத்தகம் விரித்துவைக்கப்பட்டுக்கிடக்க அதன் முன்னே கைகால்களை நன்கு நீட்டி விரித்து படுத்துக்கிடந்தவனாக தனது மகனை கற்பனை செய்துகொண்டாள். அந்தக் கற்பனை அவளுக்கு புன்சிரிப்பை வரவழைத்தது. இவ்வளவு இரைச்சலுக்கு இடையிலும் அவனால் கவனம் செலுத்த முடிகிறதே என்று நினைத்தவள் அவனது அந்தத் திறமையை நினைத்து மெச்சிக்கொண்டாள். நடுக்கூடக் கதவை சாத்தியவள் தொழுகை விரிப்பை கீழே விரித்துத் தொழுகையைத் துவங்கினாள். சாயங்காலத் தொழுகைக்கான (அஸர் தொழுகை) நான்கு ரக்காயத்துகளைக் (ரக்-காத்)2 கட்டியபின் விரிப்பின் ஓர் ஓரத்தில் அமர்ந்தவாறு அல்லாஹ்வின் திருநாமங்களை விரலின் மடிப்பு ஒன்றுக்கு மூன்று என்ற வீதத்தில் ஓதியும் முடித்தாள். அது இலையுதிர்காலத்தின் பின்பகுதி என்பதால் அந்தி சாயும் வேளையில் செய்யப்படும் தொழுகைக்கான (மக்ரீப் தொழுகை) நேரமும் விரைவிலேயே வந்துவிடும்; மறுபடியும் தொழுகை செய்யமுடியும் என்ற எண்ணமே அவளுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. ஒவ்வொரு நாளும் செய்யும் ஐவேளைத் தொழுகை மட்டுமே அவளது வாழ்வை சீரான அளவில் பிரித்து அதற்கு நிலையான ஓர் அர்த்தத்தை வழங்குவதாக அவளுக்குத் தோன்றியது. ஒவ்வொரு உணவுப்பதார்த்தமும் அதற்க்கான தனிச்சுவையைக் கொண்டிருப்பதுபோல ஒவ்வொரு தொழுகையும் அதனதற்கான தனிப்பண்புகளைக் கொண்டிருப்பதாகவே அவளுக்குத் தோன்றியது. எழுந்து தொழுகை விரிப்பைச் சுருட்டியவள் அருகே இருந்த சின்ன பால்கனியை நோக்கி நகர்ந்தாள்.
பால்கனியில் போடப்பட்டிருந்த பிரம்பு நாற்காலியில் படிந்திருந்த தூசியைத் தட்டிவிட்டு அதிலே உட்கார்ந்துகொண்டு அங்கிருந்து – ஆறாவது மாடியில் இருந்து – கீழே இருந்த சாலையைக் கவனிக்க ஆரம்பித்தாள். பேருந்துகளின் இரைச்சல் சத்தமும், கார்கள் எழுப்பிய ஹாரன் ஒலிச் சத்தமும், வீதியோரக்கடை வியாபாரிகளின் கூச்சல் சத்தமும், பக்கத்து ஃபிளாட்-களில் இருந்து போட்டிபோட்டுக்கொண்டு அலறிய ரேடியோ சத்தமுமாக எல்லாம் சேர்ந்து அவளைத் தாக்கின. கார்களின் புகைபோக்கிகளின் வழியே வெளியேறிய புகை ஒரு மேகமண்டலம் போல மேலெழுந்து தூரத்தில் அடுக்குமாடிக் கட்டிடங்களுக்கு இடையே தெரிந்த அந்த ஒற்றை ஸ்தூபியை மங்கலாகத் தெரியவைத்தது. முன்பெல்லாம் இங்கிருந்து கெய்ரோ நகரத்தைப் பார்க்கும்போது எண்ணற்ற மசூதிகளையும் ஸ்தூபிக்களையும் கொண்ட அந்த நகரம் முக்கத்தாம் மலை மற்றும் முஹம்மது அலி கோட்டை அரண் பின்னணியில் முழுமையாகத் தெரியும். ஆனால் இன்று இங்கிருந்து பார்க்கும்போது தெரிவது சுல்தான் ஹசன் மசூதியின் இரட்டை ஸ்தூபிகளில் ஒன்றான இந்த ஒற்றை ஸ்தூபியை மட்டும்தான்.
திருமணத்திற்கு முன்பெல்லாம் எல்-மாடி அல்லது ஹெல்வான் போன்ற நகருக்குக் கொஞ்சம் வெளியே இருந்த அமைதியான பகுதி ஒன்றில் சின்ன பூந்தோட்டம் கொண்ட ஒரு வீட்டில் வசிக்கவேண்டும் என்பதுதான் அவளது கனவாக இருந்தது. ஆனால் அங்கிருந்து வேலைக்காக நகரத்தின் மையப்பகுதிக்கு தினந்தோறும் வந்துசெல்வது கணவனுக்கு சிரமமான நெடும்பயணமாக இருக்குமே என்பதனால் இந்த ஃபிளாட்-டுக்கு – இங்கிருந்து பார்த்தால் நகரமே தெரியும் ஆறாவது மாடி ஃபிளாட் – வருவதற்கு தன்னையே தேற்றிக்கொண்டாள். வருடங்கள் உருண்டோட எல்லாப் பக்கமும் எழுந்த கட்டிடங்கள் பரந்து விரிந்து தெரிந்த நகரத்தின் முழுக்காட்சியை ரொம்பவே சுருக்கிவிட்டிருந்தன. இன்னும் கொஞ்சநாள்களில் தனித்துத் தெரியும் இந்த ஒற்றை ஸ்தூபியையும் புதிதாக எழும்பும் ஏதாவது ஒரு கட்டிடம் மறைத்துவிடக்கூடும்.

கதிரவன் மறையும் நேரம் விரைவாக வந்துவிடக்கூடும் என்றும் அந்த நேர தொழுகைக்கான பாங்கொலி விரைவில் ஒலிக்கக்கூடும் எனபதை உணர்ந்தவளாய் பால்கனியை விட்டு சமையல் கட்டுக்குள் விரைந்தவள் கணவனுக்காகக் காஃபி போடத்தயாரானாள். காஃபி போடுவதற்கென பிரத்யேகமாக பயன்படுத்தும் கனாக்கா எனும் பித்தளைக் கெண்டியை3 எடுத்து அதை நீரினால் நிரப்பி அதில் தேவையான அளவு காஃபி தூளையும் சர்க்கரையையும் போட்டு அடுப்பில் வைத்தாள். கொதித்து பொங்கி வரும் நிலையில் அடுப்பிலிருந்து அதை எடுத்தவள் தயாராய் வைத்திருந்த காஃபி அருந்தும் கோப்பையில் அதை ஊற்றாமல் கெண்டியை அப்படியே காஃபி கோப்பை வைக்கப்பட்டிருந்த அதே டிரே-யில் வைத்தாள். அவனுக்கு அவன் பார்க்க காஃபி கோப்பையில் காஃபி-யை ஊற்றவேண்டும். அதுதான் அவனுக்குப் பிடிக்கும். அவன் எழுந்து படுக்கையில் அமர்ந்தவாறே சிகரெட்டைப் புகைத்துக்கொண்டிருப்பான் என்றுதான் அவள் எதிர்பார்த்தாள். ஆனால் முற்றிலும் எதிர்பாராத வகையில் அவனது உடல் கோணலாக மடங்கிக்கிடந்ததைக் கண்டதும் ‘ஏதோ தவறாகத் தெரிகிறதே?’ என்று உடனே அவளுக்குத் தோன்றிவிட்டது. படுக்கையருகே சென்று அவனது கண்களை உற்றுப்பார்த்தாள். அந்தரத்தை வெறித்தவாறு இருந்த அவனது கண்கள் மரணத்தின் வாடை அறையை நிரப்பிக்கொண்டிருப்பதை அவளுக்கு உணர்த்தின.
அந்த அறையிலிருந்து அப்படியே வெளியே வந்தவள் நடுக்கூடத்தில் காஃபி-யும் காஃபி கோப்பையும் இருந்த தட்டை வைத்துவிட்டு தன் மகன் இருக்கும் அறைக்குச் சென்றாள். உள்ளே நுழைந்தவளை படுக்கையிலிருந்தவாறே ஏறிட்டுப் பார்த்தவன் ரேடியோவை அணைத்துவிட்டு படுக்கையிலிருந்து எழுந்தான்.
“என்னமா ஆச்சு?”
“உங்க அப்பாவுக்குத்தான்…”
“மறுபடியும் மாரடைப்பா?”
தலையசைத்து ஆம் என்று ஆமோதித்தவள் அவனிடம், “கீழே உள்ள வீட்டுக்காரங்கட்ட போயி டாக்டர் ரம்ஸி-க்கு போன் பண்ணி அவரை உடனே வரச்சொல்லு” என்று கூறினாள்.
பின்பு நடுக்கூடத்திற்கு திரும்பியவள் எவ்வித பதட்டமுமின்றி காஃபியை கோப்பையில் ஊற்றி அமைதியாக ஆற அமர அதைச் சுவைக்கத் தொடங்கியது அவளுக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது.
–Distant View of a Minaret by Alifa Rifaat (1980s)
*
குறிப்புகள்:
1. இஸ்லாமியர்கள் தொழுகைக்குமுன் செய்யும் உளூ எனும் சமயச் சடங்கை இது ஒத்திருக்கிறது.உளூ என்னும் அறபுச் சொல் தொழுகைக்குமுன் அங்கங்களை தண்ணீரினால் சுத்தம் செய்யும் ஒரு சடங்காகும். தமிழில் இவ்வார்த்தை ஒளூ என்றும் மருவி சொல்லப்பட்டு வருகிறது.
2. ரக்-காத் எனும் அறபுச் சொல் தொழுகையின் போது அனுசரிக்கவேண்டிய ஒரு முறைமையப் பற்றிக் குறிக்கும் சொல் ஆகும். ஒவ்வொரு தொழுகையின் போதும் குறிப்பிட்ட சில உடற்செயல்பாடுகளோடு (நிற்றல், முழங்காலில் வீராசன முறையில் அமர்தல், அவ்வாறு அமர்ந்த நிலையில் குனிந்து தரையில் குப்புறவிழுதல்) குறிப்பிட்ட மந்திரங்களும் ஓதப்படவேண்டும். இவையனைத்தும் இணைந்து ஒரு ரக்-காத் என்று சொல்லப்படுகிறது. தமிழில் ரக்காயத்து கட்டுதல் என்று மருவி இந்தச்சொல் பயன்பாட்டில் இருக்கிறது. ஒவ்வொரு தொழுகைக்கென இத்தனை ரக்-காத்துக்கள் என்று ஒழுங்குபடுத்தப்பட்ட நெறிமுறை உள்ளது. அதன்படி அதிகாலையில் செய்யவேண்டிய ஃபஜிர் தொழுகைக்கு இரண்டு ரக்-காத்துக்கள் போதுமானது. மதியம் செய்யவேண்டிய துஹுர் தொழுகைக்கும், சாயங்காலம் செய்யவேண்டிய அஸர் தொழுகைக்கும், இரவு செய்ய வேண்டிய ஈஷா தொழுகைக்கும் நான்கு ரக்-காத்துக்கள். அந்தி சாய்ந்ததும் செய்யவேண்டிய மக்ரீப் தொழுகைக்கு மூன்று ரக்-காத்துக்கள்.
3. நீண்ட கைப்பிடி கொண்ட காஃபி குண்டான்.
*
ஆலிஃபா ரிஃபாத் (1930 – 1996) எகிப்து நாட்டைச் சார்ந்தவர். இவரது சிறுகதைகள் பெரும்பாலும் பெண்களின் பாலியல் வேட்கைகள் பற்றி வெளிப்டையாகப் பேசியதால் மிகுந்த சர்ச்சைகளுக்குள்ளாகின. தனது ஒன்பது வயதிலேயே எழுதத்தொடங்கிய இவருடைய தொடக்ககால இலக்கிய முயற்சிகளை பாரம்பரியமான இவரது குடும்பம் ஆதரிக்கவில்லை. இருந்தாலும் எழுதும் ஆசையைக் கைவிடவில்லை ஆலிஃபா. பள்ளிப்படிப்பை முடித்தவர் கல்லூரிப்படிப்பை மேற்கொள்ள ஆசைப்பட்டார். ஆனால் இவரது தந்தை இவருக்கு திருமணம் முடித்துவைத்தார். கணவன் அனுமதியோடு 1955 முதல் 1960 வரை கதைகளை எழுதினார். சர்ச்சைக்குரிய கருத்தைத் தாங்கிய தனது சிறுகதைகள் தனது குடும்பத்திற்கு சங்கடம் தந்துவிடக்கூடாது என்று கருதி தனது இயற்பெயரான ஃபாத்திமாவை ஆலிஃபா என்றும் மாற்றிக்கொண்டார். இருந்தாலும் கணவன் தந்த அழுத்தத்தால் எழுதுவதை 14 ஆண்டுகள் நிறுத்திவைத்தவர் அதன்பின்பு 1973-இல்தான் மறுபடி எழுதத்துவங்கினார். இஸ்லாம் மதத்தில் பெண்கள் உரிமை பற்றி தொடர்ந்து பேசியவர் ஆலிஃபா.

டெனிஸ் ஜான்சன்-டேவிஸ்: ஒரு புகழ்பெற்ற அரபு-ஆங்கில இலக்கிய மொழிபெயர்ப்பாளர் ஆவார். இவர், நோபல் பரிசு பெற்ற எகிப்திய எழுத்தாளர் நகுயிப் மஹ்ஃபூஸ், சூடானிய எழுத்தாளர் தயிப் சாலிஹ், பாலஸ்தீனக் கவிஞர் மஹ்மூத் தர்விஷ் மற்றும் சிரிய எழுத்தாளர் ஜகரியா தாமர் ஆகியோரின் பல படைப்புகளை மொழிபெயர்த்துள்ளார்.
