நிழலும் வெளிச்சமும் – ச. ஜீவானந்தம்

தேவதாசி மரபு குறித்த வெளிநாட்டுப் பயணிகளின் இருமைப் பார்வை

தேவதாசிகள்

இடைக்கால தென்னாசிய வரலாற்றை ஆராய்வதில் வெளிநாட்டு பயணிகளின் பதிவுகள் முக்கியமான வரலாற்று ஆதாரங்களாகக் கருதப்படுகின்றன. குறிப்பாக 16-ஆம் நூற்றாண்டிலிருந்து 19-ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில், விஜயநகர அரசின் ஆட்சியும் அதைத் தொடர்ந்து நாயக்கர் மற்றும் பிற பிராந்திய ஆட்சியாளர்களின் ஆட்சி முறைகளும் தேவதாசி மரபின் பரிணாம வளர்ச்சியுடன் ஆழமாகச் சம்பந்தப்பட்டிருந்தன. இந்தக் காலகட்டத்தில் இந்தியாவிற்கு வந்த போர்த்துகீசியர், டச்சுக்காரர், இத்தாலியர், பிரெஞ்சுக்காரர், ஜெர்மானியர் போன்ற பல்வேறு ஐரோப்பியப் பயணிகள், வணிகர்கள், மற்றும் மதபோதகர்கள் தங்களது அனுபவங்களையும் பார்வைகளையும் பயணக் குறிப்புகள், மதப்பிரச்சாரப் பதிவுகள், மற்றும் கலாச்சார ஆய்வுகளின் வடிவில் பதிவு செய்துள்ளனர். இவ்வகை ஆவணங்கள் தேவதாசிகள் கோவில்களில் வகித்த பங்கு, அவர்களின் கலைத்திறமைகள், சமூகத்தில் பெற்றிருந்த உயர்ந்த நிலை ஆகியவற்றைச் சுட்டிக்காட்டுவதோடு, பின்னர் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒழுக்கவியல் விமர்சனங்களையும் வெளிப்படுத்துகின்றன. இதனால், ஐரோப்பிய பயணிகளின் எழுத்துகள் இந்தியச் சமூகத்தின் முக்கியமான பண்பாட்டு அம்சமாக விளங்கிய தேவதாசி மரபை புரிந்துகொள்ளக் கூடிய அரிய சான்றுகளாகக் கருதப்படுகின்றன. அந்த வகையில் இந்தக் கட்டுரையானது ஐரோப்பியர்களின் குறிப்புகள் வழியே நவீன காலத்திற்கு முன்னர் உள்ள தேவதாசி முறையின் இயல்பையும், அதன் சமூக–மத அடிப்படையிலான இடத்தையும் அறிய முற்படுகிறது.

பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த டொமிங்கோ பயஸ் (Domingo Paes) மற்றும் பியட்ரோ டெல்லா வால்லே (Pietro Della Valle, 1586-1652), 17-ஆம் நூற்றாண்டில் ஆபிரகாம் ரொஜேரியஸ் (Abraham Rogerius, 1651) மற்றும் பிரான்சுவா பெர்னியர் (Francois Bernier, 1620-1688), 18-ஆம் நூற்றாண்டில் பிரான்சுவா வாலென்டைன் (Francois Valentyn, 1726) மற்றும் பார்தொலோமியஸ் சீகன்பால்க் (Bartholomous Ziegenbalg), மேலும் 19-ஆம் நூற்றாண்டில் ஜேக்கப் ஹாஃப்னர் (Jacob Haafner) ஆகியோர் தேவதாசிகளை நேரடியாகக் கண்டோ, அல்லது அவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டியோ தங்கள் நூல்களில் பதிவு செய்துள்ளனர். இவர்கள் எழுதியுள்ள குறிப்புகள் தேவதாசிகள் பற்றிய வெளிநாட்டு கண்ணோட்டங்களின் பரிணாம வளர்ச்சியையும், ஐரோப்பியர்களின் கலாச்சார மற்றும் மத அடிப்படையிலான பார்வைகளின் தாக்கத்தையும் வெளிப்படுத்துகின்றன.[1]

இந்த வெளிநாட்டு பயணக் குறிப்புகளில் தேவதாசிகள் பெரும்பாலும் அவமதிப்புடனும் குறைத்து மதிப்புடனும் பதிவு செய்யப்பட்டுள்ளனர். போர்த்துகீசியப் பயணியான டொமிங்கோ பயஸ், தேவதாசிகளை baylhadeiras அல்லது bailadeiras என அழைக்கிறார். இச்சொற்கள் போர்த்துகீசியத்தில் “பெண் நடனக் கலைஞர்கள்” எனப் பொருள் தருகின்றன. அவர் விஜயநகரப் பேரரசின் அரண்மனை மற்றும் கோவில் சூழல்களில் தேவதாசிகள் ஆடல், பாடல் நிகழ்த்திய விதம், மேலும் அவர்கள் அரசவையோடு கொண்டிருந்த நெருங்கிய தொடர்புகளை விரிவாக விவரிக்கிறார்.[2] இதனால் தேவதாசிகள் வெறும் கோவில்களின் இசை, நடனச் செயற்பாடுகளுக்கு மட்டுமல்லாமல், அரசியலின் பண்பாட்டு வெளிப்பாடுகளிலும் பங்கு கொண்டிருந்தனர் என்பதை அறிய முடிகிறது.

டச்சு மதபோதகர் பிரான்சுவா வாலென்டைன் தனது புகழ்பெற்ற நூலான Oud en Nieuw Oost-Indien (Old and New East India) இல் முதன்முதலாக “தேவதாசிகள்” என்ற சொல்லைப் பன்மை வடிவில் பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம் தேவதாசிகளை தனிப்பட்டவர்களாக அல்லாது, ஒரு பரந்த சமூக மற்றும் கலாச்சார அமைப்பின் பகுதியாகக் கருதியுள்ளார்.[3] அதேபோல், புராட்டஸ்டன்ட் மதபோதகரான சீகன்பால்க் தேவதாசிகளை Gotterdienerinnen (கடவுளின் பெண் ஊழியர்கள்) எனவும், அதேசமயம் dancing whore (நடனமாடும் பரத்தையர்) எனவும் குறிப்பிடுகிறார். இது அவரின் பார்வையில் மத அடிப்படையிலான மதிப்பீடும், ஐரோப்பிய நெறிமுறைகளின் அடிப்படையில் தேவதாசிகளின் வாழ்க்கை முறையை பற்றிய குறைத்த மதிப்பீடும் கலந்துள்ளதைக் காட்டுகிறது.[4]

வெனீசிய நகைக்கடைக்காரரான காஸ்பரோ பால்பி (Gasparo Balbi, 1590), தேவதாசிகளை “கோவிலின் விபசாரிகள்” (puttane del pagoda) என அவமதிப்புடன் குறிப்பிட்டார்.[5] இதற்கிணங்க, இத்தாலியப் பயணியான பியட்ரோ டெல்லா வால்லே தேவதாசிகளை “பொது நடனக் கலைஞர்கள்” (pubbliche ballatrici) என அழைத்து, அவர்கள் விபசாரச் செயல்களில் ஈடுபட்டதாகவும், அவர்களின் பாடல்கள் மற்றும் நடனங்கள் அசிங்கமானவை எனவும் கடுமையாக குற்றம் சாட்டினார்.[6] இத்தகைய குறிப்புகள், ஐரோப்பியர்களின் பார்வையில் தேவதாசிகள் மதம், கலை, மற்றும் சமூகத்தில் வகித்த பங்குகளை சீர்மறைத்தும், ஒருதலைப்பட்சமான ஒழுக்கவியல் அடிப்படையில் மதிப்பீடு செய்தும் இருந்தன என்பதை தெளிவுபடுத்துகின்றன.

*

பயஸ், விஜயநகர அரசின் காலகட்டத்தில் தேவதாசிகள் கொண்டிருந்த சமூக நிலை மற்றும் செல்வச் செழிப்பைப் பற்றி விரிவாகப் பதிவு செய்கிறார். அவர், கோவில் பெண்கள் அந்நாளில் செழித்து வாழ்ந்ததாகவும், அவர்கள் தம்முடைய பெருமிதத்தை வெளிப்படுத்தும் விதமாக ஆடைகள் மற்றும் அணிகலன்களை அலங்காரமாய் அணிந்து காட்டியதாகவும் குறிப்பிடுகிறார்.[7] தேவதாசிகள், நகரின் முக்கியமான மற்றும் அழகிய தெருக்களில் வசித்தனர்; அந்தத் தெருக்களில் நன்கு கட்டப்பட்ட அழகான வீடுகள் அடுக்கமாக இருந்தன. அவர்கள் தங்களின் வாழ்வியல் முறைகளில் ஆடம்பரத்தையும், உயர்ந்த மரியாதையையும் வெளிப்படுத்துவதில் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தனர். சமுதாயத்தில் மதிக்கப்படும் பெண்களாகவும், கௌரவிக்கப்பட்டவர்களாகவும் அவர்கள் கருதப்பட்டனர். மேலும், அவர்கள் அரசின் படைத்தளபதிகளின் துணைவியர்களாகவும், அதிகாரம் வாய்ந்த ஆண்களின் உறவினர்களாகவும் சமூக நிலையைப் பெற்றிருந்தனர். எந்தவித தயக்கமும் இன்றி, அரசியல் மற்றும் சமூக ரீதியாக மதிப்புமிக்க ஆண்கள், அவர்களது இல்லங்களுக்கு வந்து சென்றதாகவும் பயஸ் வியப்புடன் குறிப்பிட்டுள்ளார்.[8] இதற்கிடையில், தேவதாசிகள் அரண்மனையினுள் பிரவேசித்து, அங்கே தங்கி, அரச வம்சத்தினருடன் வெற்றிலைப் பாக்கு (தாம்பூலம்) சாப்பிடுவதற்கான சிறப்பான உரிமையுடையவர்களாக இருந்ததைப் பார்த்ததும் பயஸ் ஆச்சரியப்பட்டதாகவும் கூறுகிறார்.[9]

சீகன்பால்க் தனது Malabarishes Heidenthum (1711) என்ற பயணக் குறிப்பில், ஆலயங்களில் பணியாற்றிய பதின்மூன்று வகையான ஊழியர்களைப் பற்றி விரிவாக விவரிக்கிறார். அந்தப் பட்டியலில் தேவதாசிகளை பதினொன்றாவது வகையாக இடம்பெற்றிருந்தனர். இவர்களில் தேவதாசிகள் முக்கிய பங்கு வகித்ததாக அவர் குறிப்பிடுகிறார். தேவதாசிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் அழகிய, புத்திசாலித்தனமான இளம் பெண்களாக இருந்தனர். அவர்களது உடல் குற்றமற்றதாக இருக்க வேண்டும் என்பதில் கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.[10] அவர்களுக்கு மனிதர்களுடன் திருமணம் செய்ய அனுமதி கிடையாது என்றும், அவர்கள் எப்போதும் அழகிய ஆடைகளும் நகைகளும் அணிந்து, அலங்கரிக்கப்பட்ட தோற்றத்துடன் வெளியே வந்ததால் எளிதில் அடையாளம் காணப்பட்டனர் என்றும் சீகன்பால்க் சுட்டிக்காட்டுகிறார். பெரிய கோயில்களில் அதிக எண்ணிக்கையிலான தேவதாசிகள் இருந்தனர்; ஆனால் சிறிய கோயில்களில் அவர்களே இல்லாத சூழ்நிலைகளும் இருந்தன.[11] சீகன்பால்க், 1706 ஆம் ஆண்டில் இன்றைய தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடிக்கு வந்த ஒரு புராட்டஸ்டன்ட் பிரசங்கியாராக இருந்தார். அவர் உள்ளூர் மொழியை நன்கு அறிந்திருந்ததால், துல்லியமான மற்றும் உண்மையான தகவல்களைச் சுட்டிக்காட்ட முடிந்தது. அதனால், அவரது குறிப்புகள் தென் இந்திய வரலாற்று ஆய்வுகளில் ஒரு முக்கிய ஆவணமாகக் கருதப்படுகின்றன.

டெல்லா வால்லே, தேவதாசிகள் செய்த கோவில் சேவைகள் குறித்தும் முக்கியமான தகவல்களை வழங்குகிறார். அவர், சில தேவதாசிகள் கடவுளின் சிலைகளை விசிறியால் விசிறுவதாகவும், சிலர் ஆண்கள் வழிநடத்தலில் நடனமாடுவதாகவும் குறிப்பிட்டார். அந்த ஆண்கள் அவர்களது ஆசிரியர்களாகவும், கலைஞர்களாகவும் செயல்பட்டதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.[12] டொமிங்கோ பயஸ், தேவதாசிகள் தினமும் கடவுளுக்கான உணவு நிவேதனத்தின் போது கோவிலில் நடனம் ஆட வேண்டிய கட்டாயம் இருந்ததாகப் பதிவு செய்கிறார்.[13] திருவிழாக்கள் நடைபெற்றபோது, தேவதாசிகள் நீண்ட நேரம் கடவுளின் முன் நடனமாட கட்டளையிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.[14] சீகன்பால்க் தேவதாசிகள் கோவிலுக்குள் தனியான இடத்தில் பாடி நடனம் ஆடுவதையும், அவ்வாறு கலை நிகழ்த்தும் பொறுப்பு அவர்களுக்கிருந்ததையும் விவரிக்கிறார். மேலும், அவர்கள் படித்தறியும் திறனையும் எழுதும் திறனையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். கவிதை வகைகளில் அவர்கள் பெற்றிருந்த திறமையை அவர் பாராட்டுகிறார்.[15]

திருமணச் சடங்குகள் தொடர்பிலும் சீகன்பால்க் விரிவான குறிப்புகளை அளிக்கிறார். தேவதாசிகளின் அர்ப்பணிப்பு நிகழ்வு, ஒரு விழாவாக நடத்தப்பட்டது. அந்த நிகழ்வில் கோயில் அர்ச்சகர் கடவுளின் பிரதிநிதியாக இருந்து செயல்பட்டார். இளம் பெண் கோவிலுக்குக் கொண்டு வரப்பட்டு, அர்ச்சகர் அவருக்கு திருமணத்திற்கான தாலியை அணிவித்து, கடவுளுடன் அவரை இணைத்தார். இவ்வாறு அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு, அந்த இளம் பெண் தேவதாசியாக அறிவிக்கப்பட்டார். புதிய தேவதாசிகள் அனைவரும் தெருக்களில் சிறப்பான ஊர்வலத்துடன் அழைத்துச் செல்லப்பட்டனர். இதன் மூலம், தேவதாசிகளின் அர்ப்பணிப்பு சடங்கு மதபூர்வமாகவும், சமூகபூர்வமாகவும் பொதுமக்கள் முன்னிலையில் கொண்டாடப்பட்டது.[16]

*

பயஸ் தேவதாசிகளைப் பற்றிய தனது குறிப்புகளில் அவர்களின் ஒழுக்கக் குறைபாட்டை எடுத்துரைக்கிறார். அவர், விஜயநகர அரசின் ஆட்சிக் காலத்தில் தேவதாசி முறையின் வீழ்ச்சியும், அதனுடன் இணைந்த ஒழுக்க சிதைவுகளும் எவ்வாறு சமூக பார்வையில் பிரதிபலிக்கப்பட்டன என்பதை சுட்டிக்காட்டுகிறார். அவரது எழுத்துக்கள் தேவதாசி சமூகத்தின் புனிதத் தன்மை குறித்த பாரம்பரியக் கருத்துக்களை சவாலுக்கு உட்படுத்தி, அவற்றின் வாழ்க்கைச் சூழ்நிலைகள் எவ்வாறு விபச்சாரத்தின் அடையாளத்துடன் இணைக்கப்பட்டன என்பதை வெளிப்படுத்துகின்றன.[17]

அதேபோல், சீகன்பால்க் தனது எழுத்துகளில் தேவதாசிகளைப் பற்றிய மிகவும் கடுமையான பார்வையை வெளிப்படுத்துகிறார். அவர், மக்கள் தேவதாசிகளை “விபச்சாரிகள்” எனவே கருதினர் என்று தெளிவாகக் குறிப்பிட்டதோடு, அவர்கள் தங்களது தொழிலைச் செய்வதற்கான “சிறப்பு உரிமை” கொண்டிருந்ததால், ஐரோப்பியர்கள் அவர்களை “dancing whore” என அவமதித்தனர் என்றும் சுட்டிக்காட்டுகிறார்.[18] மேலும், சீகன்பால்கின் கூற்றுப்படி, தேவதாசிகள் விரும்பியவர்களுடன் தாராளமாக விபச்சாரம் செய்தனர், இதனால் அவர்களின் இல்லங்கள் “பொது வீடுகளாக” மாறின. ஐரோப்பியர்கள் தேவதாசிகளின் பாடல்களையும் நடனங்களையும் தெருக்களில் ரசித்தனர்; பலர் நேரடியாக அவர்களின் இல்லங்களுக்கும் சென்றனர். சிகன்பால்கின் பார்வையில், இந்த தேவதாசி முறைமை என்பது கிறிஸ்தவ மதக் கொள்கைக்கு மிகப் பெரிய அவமானமாகவும் பழியாகவும் இருந்தது.[19]

இதற்கிடையில், பதினேழாம் நூற்றாண்டின் டச்சு கால்வினிசவாத (Calvinist) மதபோதகர் ஆபிரகாம் ரொஜேரியஸும் தேவதாசிகளை விபசாரிகள் என்று குற்றம் சாட்டினார். அவரது பயணக்குறிப்புகள் De Open-Deure tot het Verborgen Heydendom (The Doors an Open to the Hidden Heathendom) (1651) இல் குறிப்பாக அந்த பெண்களின் ஒழுக்கக்கேடுகளை வலியுறுத்தினார்.[20] அவர், கோயில்களின் புனிதத் தன்மையை வலியுறுத்திய அதே பார்ப்பனப் பண்டாரிகள் தேவதாசிகளுக்கு பாடவும் ஆடவும் அனுமதி அளித்த அணுகுமுறையை கடுமையாக விமர்சித்தார்.[21] அவரது சொந்த வார்த்தைகளில், இது மிகுந்த விசித்திரமான ஒன்று போல தோன்றியது: பார்ப்பனர்கள் கோவில்களை புனித இடங்களாகக் கருதி, கடவுள் சிலைகளை மிகவும் புனிதமானவை என்று வலியுறுத்தினர். அவற்றைச் சத்திரியர்கள் (Soundraes) கூட தொடக்கூடாது என்று கட்டுப்படுத்தினார்கள்; ஆனால் அதே நேரத்தில், “காமுகிப் பெண்கள்” (lewd women) என அவர் குறிப்பிட்ட தேவதாசிகளை அந்தக் கடவுளுக்கு சேவை செய்ய அனுமதித்தனர். அவர்கள் நடனமாடும் போது ஒழுங்கற்ற உடை அணிந்திருந்தனர், மேலும் அவர்களின் ஒழுக்கக்கேடு பொதுவாக அறியப்பட்ட ஒன்றாக இருந்தது.[22]

இதே பார்வையில், பிரான்சுவா பெர்னியர் தனது குறிப்புகளில், ஜெகநாதர் கோவிலின் பார்ப்பனப் பண்டாரிகள் தேவதாசிகளை “திருமணம் செய்து வைக்கப்பட்ட” மணவாட்டிகளாகக் கருதி, அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டுகிறார். அவர் கூறுவதன்படி, அழகான சிறுமிகளைத் தேர்ந்தெடுத்து, “ஜெகநாதரின் மணவாட்டி” என அறிவித்தனர். பின்னர், அந்தப் பெண், இறைவன் தன்னுடன் சேர்ந்து உறங்குவார் என்ற நம்பிக்கையுடன், கோவிலில் முழு இரவும் தங்க வைக்கப்பட்டார். ஆனால் உண்மையில், ஒரு போலி குருக்கள் பின்புறச் சிறிய கதவின் வழியே உள்ளே நுழைந்து, அந்த அறியாப் பெண்ணுடன் உறவு கொண்டார். அவர், அந்தப் பெண்ணை ஏமாற்றுவதற்காக தேவையான பொய்யான நம்பிக்கைகளை ஊட்டி, மதத்தின் பெயரில் அவளைச் சுரண்டினார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.[23]

டொமிங்கோ பயஸ், பியட்ரோ டெல்லா வால்லே, வாலென்டைன், சீகன்பால்க், ரொஜேரியஸ், பெர்னியர், ஹாஃப்னர் போன்றோரின் எழுத்துகள் தேவதாசி முறைமையின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்துகின்றன. ஒருபுறம், பயஸ் போன்றோர் தேவதாசிகளின் கலை மற்றும் சமூக உயர்வைப் பற்றி பதிவு செய்துள்ள நிலையில், மற்றொருபுறம், சீகன்பால்க், ரொஜேரியஸ், பெர்னியர் போன்றோர் அவர்களை “விபசாரிகள்” எனக் குற்றம்சாட்டி, மதத்தின் பெயரில் ஒழுக்கச் சிதைவின் அடையாளங்களாகக் கருதினர். இத்தகைய பதிவுகள் தேவதாசிகளின் புனிதத் தன்மை மற்றும் சமூகப்பங்கு குறித்த பாரம்பரியக் கருத்துக்களை சவாலுக்கு உட்படுத்தின.

இக்குறிப்புகள், தேவதாசிகள் மத மற்றும் கலாச்சார தளத்தில் ஆற்றிய பங்களிப்புகளை மட்டும் அல்லாமல், அவர்களின் சமூக இடம், கலைத் திறமை, மற்றும் அரசியல், பொருளாதார சூழ்நிலைகளோடு இணைந்த பங்களிப்புகளையும் வெளிச்சமிட்டு காட்டுகின்றன. ஆனால், இவ்விளக்கங்களில் பெரும்பாலானவை ஐரோப்பிய பார்வையிலிருந்து உருவானதனால், அவை தேவதாசி மரபை ஒருதலைப்பட்சமாகவும், பெரும்பாலும் ஒழுக்கவியல் அடிப்படையில் மதிப்பீடு செய்தும் காணப்படுகின்றன. ஐரோப்பியக் கலாச்சாரக் கண்ணோட்டம் எவ்வாறு இந்தியச் சமூகத்தின் குறிப்பிட்ட மரபுகளை மாற்றியடித்தது என்பதை அறிய இவை பயன்படுகின்றன.

–(jeeandm@gmail.com)

*

அடிக்குறிப்புகள்:

[1] Haafner, Jacob. Reize in eenen Palanquim; of Lotgevallen en Merkwaardige Aanteekeningen op eene Reize langs de Kusten Orixa en Chroromandel (in Dutch). Vol. I. Amsterdam: Johannes Allart, 1808: 194-225.

[2] Bor, Joep. “Mamia, Ammani and Other Bayaderes: Europe’s Portrayal of India’s Temple Dancers.” In Davesh Soneji. Ed. Bharathanatyam: A Reader. New Delhi: Oxford University Press, 2010: 15.

[3] Valentyn, Francois. Oud en Nieuw Oost-Indien (in Dutch). Vol. 5. Dordrecht and Amsterdam: Joannes van Braam and Gerard Onder den Linden, 1726: 54.

[4] Caland, W. Ziegenbalg’s Malabarishes Heidenthum. Amsterdam: Koninklijke Akademie van Wetenschappen, 1926: 131-132.

[5] Bor, Joep. 2010. மேற்படி நூல்., 16-17. [6] மேற்படி நூல்., 17. [7] Sewell, Robert. A Forgotten Empire (Vijayanagar). New Delhi: Asian Educational Service, 1982: 274.

[8] மேற்படி நூல்., 242.  [9] Caland, W. 1926. மேற்படி நூல்., 131-132. [10] மேற்படி நூல்., 131-132.[11] Bor, Joep. Op.cit., 2010. மேற்படி நூல்., 17-18.

12] Sewell, Robert. 1982. மேற்படி நூல்., 241. [13] மேற்படி நூல்., 274. [14] Caland, W. 1926. மேற்படி நூல்., 131-132. [15] மேற்படி நூல்., 228-229. [16] Sewell, Robert. 1982. மேற்படி நூல்., 274. [17] Caland, W. 1926. மேற்படி நூல்., 131-132. [18] மேற்படி நூல்., 229.

[19] Rogerius, Abraham. De Open-Deure tot het Verborgen Heydendom (The Doors an Open to the Hidden Heathendom) (in Dutch). Edited by W. Caland. ‘s-Gravenhage: M. Nijhoff, 1651 (Rpt. 1915): 125.

[20] மேற்படி நூல்., [21] மேற்படி நூல்., [22] Bernier, Francois. Travels in the Mogul Empire A.D. 1656-1668. Translated by Archibald Constable and Revised by V.A. Smith. London: Oxford University Press, 1916: 305.

முனைவர் ச. ஜீவானந்தம்

முனைவர் ச. ஜீவானந்தம்: புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் பள்ளியின்கீழ் இயங்கும் மகளிரியல் ஆய்வு மையத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்னர், சிக்கிம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையில் (2015–2023) மற்றும் அசாம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையில் (2015) பணியாற்றியுள்ளார். இந்தியச் சமய மரபுகள், பண்பாட்டு வரலாறு, பாலின உறவுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு ஆய்வுகளை மேற்கொண்டு வரும் இவரது கல்விசார் செயல்பாடுகளும் அறிவுப் பங்களிப்புகளும், இந்தியச் சமூகத்தின் வரலாற்று அனுபவங்களையும் பண்பாட்டு மாற்றங்களையும் அதன் அறிவுசார் மரபுகளையும் ஆழமாகவும் பன்முக நோக்கிலும் புரிந்துகொள்வதற்கான குறிப்பிடத்தக்க பங்களிப்புகளாகத் திகழ்கின்றன.

*

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *