உண்மையைத் தேடிய வேட்டைக்காரி – அருண் சந்திரன்

ஆலிவ் ஷ்ரைனரின் வாழ்க்கையும் எழுத்தும்

ஆலிவ் ஷ்ரைனர்

ஒரு பெரிய ஏரியின் நீரில் ஒரு வெள்ளைப் பறவை பிரதிபலிக்கிறது. அதன் இறக்கைகள் வெள்ளியைப் போல ஒளிர்கின்றன. ஒரு வேட்டைக்காரன் அதைப் பார்க்கிறான். ஆனால் ஒருமுறை பார்த்துவிட்ட பிறகு அவனால் அந்தப் பறவையை மறந்துவிட முடியவில்லை. அதைத் தேடிச் செல்வதே அவனுடைய வாழ்க்கையாகிறது.

ஆலிவ் ஷ்ரைனரின் “வேட்டைக்காரன்” என்ற இந்த உருவகக் கதை அவருடைய வாழ்க்கையையே நினைவுபடுத்துகிறது. ஒருமுறை மனதில் தோன்றிய ஒரு கேள்வியை தொடர்ந்து பின்தொடர்ந்த குரல் அவருடைய எழுத்துகளில் இருக்கிறது.

1855 மார்ச் 24 அன்று, தென்னாப்பிக்க கேப் காலனியில் ஆலிவ் எமிலி ஆல்பர்டினா ஷ்ரைனர் பிறந்தார். பன்னிரண்டு குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தின் ஒன்பதாவது குழந்தை. அவரது குடும்பம் மிஷனரி வாழ்வை பின்னனியாகக் கொண்டது. பிரிட்டிஷ் பேரரசு தனது அதிகாரத்தை விரிவுபடுத்திக் கொண்டிருந்த காலம் அது. தென்னாப்பிரிக்காவில் நிலம், அதிகாரம், அரசியல் ஆதிக்கம் ஆகியவற்றுக்கான மோதல்கள் தீவிரமாகிக் கொண்டிருந்தன. இன வேறுபாடு சமூகத்தின் இயல்பாக இருந்தது. மதம், காலனியம் மற்றும் நிற வேறுபாட்டால் ஆதிக்கம் செலுத்திய தரப்புக்குள்ளேயே பிறந்து வளர்ந்தவர் ஷ்ரைனர். அவரது எழுத்தும், அரசியலும் இங்கிருந்தே தொடங்குகின்றன.

சிறு வயதில் மதம் அவரது வாழ்க்கையின் ஒரு முக்கியமான பகுதியாக இருந்தது. வளர வளர அறிவியல், தத்துவம், அரசியல், இலக்கியம் என்று பரந்து பட்ட வாசிப்பு, அவரை அந்தச் சூழலிருந்து வெளியேற வைத்தது. டார்வின், எமர்சன், ஹெர்பர்ட் ஸ்பென்சர், ஸ்டூவர்ட் மில் ஆகியோரின் சிந்தனைகள் அவரை பாதித்தன. குறிப்பாக இயற்கை, கடவுள், தனிமனிதச் சுதந்திரம் குறித்த கருத்துகள் அவரது சிந்தனையில் ஆழமாகப் பதிந்தன. முறையான உயர்கல்வி கிடைக்காத நிலையிலும், சுயமாகப் படித்தார். புத்தகங்களுக்குள்ளும், அறிவுலகத் தொடர்புகளுக்குள்ளும் தன்னைப் பொருத்திக் கொண்ட ஷ்ரைனர், தன்னைச் சுற்றியிருந்த உலகத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை.

1883-ல் அவரது முதல் நாவல் “ஒரு ஆப்பிரிக்க பண்ணையின் கதை” வெளியானபோது ஆங்கில இலக்கிய உலகம் தென்னாப்பிரிக்க நிலத்திலிருந்து புதிய குரலை எதிர்கொண்டது. ரால்ப் அயர்ன் என்ற ஆண் புனைப்பெயரில்தான் அந்நாவல் முதலில் வெளிவந்தது. தென்னாப்பிரிக்க நிலப்பரப்பை உயிரோட்டமான பின்னணியாக வைத்து, சமூக, இன, பாலின, காலனிய முரண்பாடுகளையும் மனிதர்களின் உள்ளார்ந்த போராட்டங்களையும் ஒன்றோடொன்று இணைத்தது அந்நாவல்.

அந்த நாவலில் லிண்டால் என்ற பெண் கதாபாத்திரத்தின் வழியாக, ஒரு பெண் தனக்கான வாழ்க்கையைத் தானே தேர்ந்தெடுக்க முடியுமா என்ற கேள்வி தீவிரமாக முன்வைக்கப்படுகிறது. லிண்டால் திருமணமே பெண்ணின் இயற்கையான நிறைவு என்ற கருத்தை ஏற்கவில்லை. காதலை விரும்பினாலும் அதற்காகத் தன் சுதந்திரத்தை இழக்க விரும்பவில்லை.

பின்னர் Woman and Labour நூலில் அந்தக் கேள்வி இன்னும் விரிவடைந்தது. பெண்ணின் பிரச்சினையை திருமணம் அல்லது குடும்ப உறவுகளுக்குள் மட்டும் அடைத்துவிட முடியாது என்பதை வலியுறுத்தினார். பெண்களின் உழைப்பு, பொருளாதாரச் சார்பு, திருமணம், தாய்மை ஆகியவை தனித்தனி பிரச்சினைகள் அல்ல. அவை சமூக அமைப்போடு தொடர்புடையவை. பெண் தன்னுடைய வாழ்க்கையைத் தீர்மானிக்க வேண்டுமென்றால், அதற்கான பொருளாதார அடித்தளமும் அவளிடம் இருக்க வேண்டும் என்பதைப் பேசியது அந்நூல்.

அவருடைய சிந்தனையில் இன்னொரு நுட்பமான இடமும் இருந்தது. பெண் சுதந்திரம் என்பது ஆண்களின் சுதந்திரத்திற்கும் எதிரானது அல்ல. பெண்களைச் சார்ந்தவர்களாகவும், ஆண்களை அதிகாரம் செலுத்துபவர்களாகவும் வைத்திருக்கும் சமூக அமைப்பு இருவரையும் குறிப்பிட்ட வேடங்களுக்குள் அடைத்துவிடுகிறது. அந்தக் கட்டுப்பாடுகள் உடையும்போது சுதந்திரம் என்பது ஒரு சலுகையாக இல்லாமல், மனித உறவுகள் புதிதாக மலரும் வெளியைத் திறக்கிறது.

Trooper Peter Halkett of Mashonaland என்ற நாவலில் பேரரசின் விரிவாக்கம் என்ற பெயரில் மனிதர்களின் வாழ்க்கையும் நிலமும் எவ்வாறு கைப்பற்றப்படுகின்றன என்பதை அவர் விமர்சிக்கிறார். காலனிய ஆதிக்கம் “நாகரிகம்” என்ற பெயரில் தன்னை நியாயப்படுத்திக்கொண்டபோது, அதன் பின்னால் இருக்கும் அதிகாரத்தையும் வன்முறையையும் அவர் இலக்கியத்தின் வழியாக வெளிக்கொணர முயன்றார்.

Anglo-Boer War-ஐ எதிர்த்தார். பின்னர் முதல் உலகப்போரின் காலத்திலும் போர் பற்றிய தனது எதிர்ப்பைத் தொடர்ந்து வெளிப்படுத்தினார். அவரது அரசியல் எழுத்தில் காலனித்துவமும் போரும் தனித்தனி பிரச்சினைகளாகத் தோன்றவில்லை.

Cape Women’s Enfranchisement League-ல் இணைந்திருந்த அவர், பெண்களின் வாக்குரிமையை ஆதரித்தார். ஆனால் வெள்ளைப் பெண்களின் வாக்குரிமையை மட்டும் முன்னிறுத்தும் அரசியலுடன் இறுதியில் ஒத்துப்போகவில்லை, அதிலிருந்து வெளியேறினார். பெண்களின் விடுதலையை இனநீதியிலிருந்து பிரிக்க முடியாது என்பதுதான் அவரது நிலைப்பாடு.

1890-ல் வெளியான Dreams, ஷ்ரைனரின் எழுத்தில் ஒரு வேறுபட்ட உலகத்தைத் திறக்கிறது. வழக்கமான சிறுகதைகளைப் போல இல்லாமல், கனவுகள், காட்சிகள், உருவகங்கள் ஆகியவற்றின் வழியாக பெண்ணியம், சுதந்திரம், கலை, மனித உறவுகள், போர் போன்ற பெரிய கருத்துகளை, சிறிய விஷயங்களின் வழி பேசுகிறார்.

“வேட்டைக்காரன்” அந்த உலகத்தின் முக்கியமான உருவகங்களில் ஒன்று. உண்மை என்ற பறவையைத் தேடிச் செல்லும் வேட்டைக்காரன், தன்னுடைய பழைய நம்பிக்கைகளைக் கைவிட்டு, பல்வேறு சோதனைகளை எதிர் கொண்டு, அவன் முழுமையாக அடைய முடியாத உயரத்தை நோக்கி ஏறிக்கொண்டே செல்கிறான்.

ஷ்ரைனரின் கனவுகள் நிஜத்திலிருந்து தப்புவதற்கான வழி அல்ல. நிஜத்தை இன்னும் கூர்மையாகப் பார்க்கும் ஒரு கருவியாக மாறுகிறது.

கலையும், அரசியலும் ஷ்ரைனரிடம் வேறு வேறாக இல்லை. சில நேரங்களில் சிந்தனையாளர் கலைஞனைவிட முன்னுக்கு வருகிறார். சில இடங்களில் இலட்சியவாதம் எழுத்தின் மீது கனமாக அமர்கிறது. பல நேரங்களில் நம்பிக்கையை தனிமையும், துன்பமும் வெல்கின்றன. ஆனாலும் இந்த இழுபறியே அவரது எழுத்தின் சுவாரசியமான ஒரு பகுதியாகிறது.

மனித வாழ்க்கையைப் பற்றி அவரிடம் இருந்த விசாரணை, ஒரு அழகான கதையை மட்டும் எழுதிவிட்டு அமைதியாகிவிட அவரை அனுமதிக்கவில்லை. ஒரு இடத்தில் அவர் கடவுளைத் தேடுகிறார். இன்னொரு இடத்தில் மனிதனை மனிதன் கொல்லும் போரை எதிர்க்கிறார். மற்றொரு இடத்தில் காதலைப் பற்றி பேசுகிறார்.

காந்தியும் ஷ்ரைனரும் ஒருவரையொருவர் அறிந்திருந்தனர். தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் உரிமைக்காக காந்தி நடத்திய போராட்டத்தை ஷ்ரைனர் ஆதரித்தார். லண்டனில் காந்திக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில், அவரை தென்னாப்பிரிக்க இந்திய இயக்கத்தின் “மாஸினி” என்று குறிப்பிட்டதாகப் பதிவுகள் உள்ளன. காந்தியும் ஷ்ரைனரின் மனித நேயத்தையும், தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்கான அவரது ஆதரவையும் தனது எழுத்துகளில் பாராட்டிக் குறிப்பிட்டுள்ளார். முதல் உலகப்போர் தொடங்கியபோது, காந்தி இந்தியர்களைக் கொண்டு போரில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி செய்ய முன்வந்தார். இதை ஷ்ரைனர் ஏற்கவில்லை. காந்திக்கு எழுதிய கடிதத்தில், போருக்கு எந்தவிதத்திலும் துணை நிற்பது குறித்த தனது ஆழ்ந்த எதிர்ப்பைத் தெரிவித்தார்.

விர்ஜினியா வூல்ப் ஷ்ரைனர் பற்றி குறிப்பிடும் போது, “அவர் சில நேரங்களில் இலக்கியத்தை உருவாக்குவதை விட, போதிப்பதிலும், கனவு காண்பதிலும், தீர்க்கதரிசனம் சொல்வதிலுமே அதிக ஆர்வம் கொண்டவர் போலத் தோன்றுகிறார்; இருப்பினும், அவ்வளவு எளிதாகப் புறந்தள்ளிவிட முடியாத அளவுக்கு அவர் ஒரு சமரசமற்ற ஆளுமையாகத் திகழ்கிறார்.”  என்கிறார்.  

ஷ்ரைனர் அவரது காலத்திலிருந்து முழுமையாக வெளியே நின்றவர் அல்ல. அதே நேரத்தில் அந்தக் காலத்தை அப்படியே ஏற்றுக்கொண்டவருமல்ல. அவருடைய எழுத்தின் முக்கியத்துவம், இந்த இரண்டிற்கும் இடையில் அவர் தொடர்ந்து செயலாற்றிய இடத்தில்தான் இருக்கிறது.

மறைவுக்குப் பிறகு தான் அவரது எழுத்தில் பெரும் பகுதி வெளியானது. அவருடைய சில படைப்புகள் முழுமை பெறவில்லை. அவற்றில் Mary Wollstonecraft-இன் A Vindication of the Rights of Woman நூலுக்காக அவர் எழுதத் தொடங்கிய முன்னுரையும் ஒன்று.

ஷ்ரைனரின் “வேட்டைக்காரன்” கதையில் அந்தப் பறவையை தேடிச் சென்ற பயணத்தில், பின்னால் வருபவர்களுக்காக அவன் வெட்டும் படிகள் நேர்த்தியாக அமையவில்லை. அவனே சொல்கிறான் “பின்னால் வருபவர்கள் என்னைத் திட்டுவார்கள்.  சில படிகள் உடைந்து போகலாம், ஆனால் அவற்றின் வழியாக ஏறி அவர்கள் இன்னும் மேலே செல்ல முடியும்.” ஆலிவ் ஷ்ரைனரின்  எழுத்தையும் அப்படித்தான் பார்க்க முடிகிறது.

தற்காலப் பெண்ணியம், நவீனத்துவ வாசிப்புகள், கலைச்சமநிலை. அழகியல் ஆகியவற்றின் அளவுகோல்களால் பார்க்கும்போது, அவரை முழுமையானவராகவோ, இன்றைய சிந்தனைகளுக்கு முற்றிலும் ஒத்தவராகவோ பார்க்க முடியாது.

அவர் ஒரு இலக்கிய எழுத்தாளர் மட்டுமல்ல. அறிவுசார் சிந்தனையாளர், அரசியல் செயற்பாட்டாளர், பெண்ணியவாதி, அமைதிவாதி, காலனிய எதிர்ப்பாளர் எனப் பல தளங்களில் இயங்கியவர். அவர் நம்பியவற்றுக்காக அவர் எடுத்த நிலைப்பாடுகளின் நீட்சியாகவே அவரது எழுத்தும் செயல்பாடும் அமைந்தன.

கதையில் வேட்டைக்காரன் இறுதியில் பறவையைக் பார்க்கவில்லை. இறக்கும் முன் ஒரு இறகை மட்டும் பெறுவான். ஆனால் அவன் அமைத்த படிகளில் ஏறியவர்கள், அவனால் பார்க்க முடியாத தூரங்களையும், ஒருவேளை அந்தப் பறவையையும் கூட பார்த்திருக்கலாம்.

அருண் சந்திரன்

ஆலிவ் ஷ்ரைனருக்குப் பிறகு வந்தவர்கள் அவருடைய கேள்விகளைத் தங்கள் காலத்திற்கேற்ப மீண்டும் கேட்டார்கள், தங்கள் கதைகளில் இன்னும் உயரத்துக்குச் சென்றார்கள். ஒருவேளை, ஒரு மகத்தான வாழ்க்கைக்கு இதைவிடப் பெரிய தொடர்ச்சி வேறு என்ன இருக்க முடியும்?

(seedarun@gmail.com)

*

அருண் சந்திரன்: இலக்கிய வாசகர், மொழிபெயர்ப்பாளர், கல்விச் செயல்பாட்டாளர். மதுரையில் வசிக்கிறார். சீடு என்ற தன்னார்வ அமைப்பில் பணியாற்றி வருகிறார். அண்மையில் எழுதத் தொடங்கியுள்ளார். ஆலிவ் ஷ்ரைனரின் கனவுகளையும் உருவகக் கதைகளையும் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *