பேய்க்காடு – கவிநிலவன்

”என்ன பேய் மாதிரி முடிய விரிச்சு போட்டிருக்க?” என்னும் மென்வசை நம் தமிழ்நிலத்தில் பிரபலமான ஒன்று. முடி பின்னப்பட்டு அதன் வடிவழகு எப்படி இருக்கவேண்டும் என்று வழி வழியாகச் சொல்லப்பட்டதோ அப்படி இல்லையேல் அது பேயாகி விடுகின்றது என்ற நம்பிக்கை நம் மரபில் உண்டு.
ஒரு மாலை என் தங்கை வாசல்படியில் அமர்ந்து எதற்கோ அடம்பிடித்து வீர்ர்ர் என பீரிட்டு அழுதுகொண்டிருந்தாள். அவள் அப்படி அழுவாள் என எல்லோரும் அறிந்தபோதிலும் அன்றைய அழுகை சற்றே வழக்கமான அளவைத் தாண்டி சென்றது. அச்சமயம் தெருவில் சென்ற ஒரு பூவிற்கும் பெண்மணி சற்று நேரம் உற்றுப் பார்த்துவிட்டு ஒரு மஸ்ஜித் பெயரைச் சொல்லி ‘அங்க கூட்டிட்டுப் போங்கம்மா. அவங்க துவா ஓதி ஒரு ஊது ஊதுனா இது போய்டும்’ என்றார். அவள் அழுகையை கேட்டே விளையாட பழகியிருந்த நான் அவர் சொன்ன ‘இது’ எனும் வார்த்தையால் அகம் நடுங்கினேன். இதுவா? அப்படியெனில் அவள் அழுகையின் அளவு இது என நாங்கள் வைத்திருந்த அளவுக் கோட்டின்மேல் வந்தமர்ந்து வீறிட்டுக்கொண்டிருக்கும் அது எது?
கவிநிலவனின் குரலில்…
பேய்கள் கட்டுகளை உடைப்பவை, நாம் வைத்திருக்கும் அளவுகோள்கள், நெறிகள், அமைப்பு என எல்லாவற்றையும் உடைத்துக்கொண்டு எழுந்து நகைப்பவை. நாம் காணும் இவ்வுலகின் தலைகீழ் உலகம் ஒன்றில் வாழ்பவை. பேய் விழிகள் மட்டுமே காணும் அவ்வுலகத்தில் இருள் ஊறிக்கொண்டே இருக்கின்றது. மானுடரின் ஒளியுலகில் ஊடும்பாவுமாய் நிழல்போல் அடியில் ஊறி சமயங்களில் எழுந்தாடுகின்றது.
பேய்களின் உலகம் தமிழின் மரபிலக்கியத்தில் ஆங்காங்கே காணக்கிடைக்கின்றன. போர்களில் ஆடும் பேய்களைப் பற்றி பாடும் முறைகளை தொல்காப்பியர் காஞ்சித்திணையில் வகுத்துக் கூறுகிறார். கலிங்கத்துப்பரணி போன்ற சிற்றிலக்கியங்களில் விரிவான பேய்கள் குறித்த வர்ணனை வருவதைக் காணலாம். ஆனால் அவை அனைத்தும் பேய்களின் உலகம் குறித்து மானுடன் ஒருவன் எழுதிய குறிப்புகளாக இருக்கின்றன. பெரும்புலவனாக இருந்தாலும் பேய் உலகத்திற்கு அவன் அந்நியன் தானே! பேய்களின் உலகத்தை கொஞ்சமேனும் உண்மையாக ஒரு பேயால் தானே சொல்ல முடியும்? அப்படி ஒரு பேய் தமிழ்நிலத்தில் சிவாலயம் தோறும் அமர்ந்திருக்கிறாள். அண்டம் நிகழ ஐந்தொழிலை நடமென நிகழ்த்தும் ஆரழகன் தாளமர்ந்து தாளம்கொட்டிப் பாடிக்கொண்டே இருக்கிறாள். அனல் போல் அலையெழும் சடைக்கற்றைகளும், வற்றித் தொங்கிய சுருங்கிய முலைகளும் குழித்துப் படிந்த வயிறும் துருத்திய எலும்பும் படர்ந்த நரம்பும் சதையற்ற சிதையுடலும் கொண்டு ‘அம்மை’ என்னும் பதம் சூடி அழியாக் கதை சொல்லும் மூதாய்ச்சி வடிவில் அமர்ந்திருக்கிறாள் பேயன்னை.

சுந்தரர் இயற்றிய திருத்தொண்டத் தொகை என்னும் பதிகமே சைவ அடியவர்களின் நிரை குறித்த தெளிவான பட்டியல் ஒன்றை நமக்குத் தருகின்றது. சைவ பக்தி இயக்க வரலாற்றின் ஒரு பொற்தருணம் அப்பதிகம் சுந்தரர் நாவில் எழுந்த கணம்! இறைவனே அவர்க்கு அடியெடுத்துக்கொடுத்தான் என்று சைவர்கள் நம்புகின்றனர். அதில் ஒரு அடி ‘பெருமிழலைக் குறும்பற்கும் பேயார்க்கும் அடியேன்’ என்பதாக வருகின்றது. இதில் அம்மை குறித்து வருகின்ற ஒரே பதிவாக ‘பேயார்’ என்னும் சொல் மட்டுமே உள்ளது. பத்தாம் நூற்றாண்டில் வந்த நம்பியாண்டான் நம்பிகள் திருத்தொண்டத்தொகையை சற்றே விரித்து ஒவ்வொரு அடியார்க்கும் ஒவ்வொரு பாடல்வீதம் இயற்றிய திருத்தொண்டர் திருவந்தாதியில் பேயாரைக்குறித்த மேலும் சில தகவல்கள் அறியக் கிடைக்கின்றன.
‘நம்பன் திருமலை நான்மிதி
யேன்’என்று தாள்இரண்டும்
உம்பர் மிசைத்தலை யால்நடந்
தேற உமைநகலும்
செம்பொன் உருவன்’என் அம்மை’
எனப்பெற் றவள் செழுந்தேன்
கொம்பின் உகுகாரைக் காலினில்
மேய குலதனமே.
இறைவன் பொலிகின்ற கயிலை வரம்பினைத் தன் காலால் மிதிக்கமாட்டேன் என்று தலையால் நடந்து செல்ல உமையம்மை வினவ செம்பொன்நிறத்துக் கடவுள் ‘என் அம்மை’ என சொன்ன காரைக்கால் குலச்செல்வம்! என்று இப்பாடல் அம்மை குறித்து செறிந்த சிறிய அறிமுகத்தை நமக்களிக்கின்றது.
மனதை திடுக்கிடச் செய்யும் காட்சி ஒரு உடல் தலை கீழாக நடந்துசெல்லுதல் என்பது. அத்தகைய திகிலூட்டும் காட்சியையே காரைக்கால் அம்மையின் ஒட்டுமொத்த படைப்புலகத்தையும் உள்ளடக்கும் படிமமாகக் கொள்ளலாம். இருள்வழி ஒன்றைத் தேர்ந்து சென்று அடைந்த ஒருவித தலைக்கீழாகப்பட்ட தரிசனம் என்று அவர் படைப்புகளைக் கூறலாம்.
மற்ற திருமுறை பாடல்களில் வரும் இறைவன் குறித்த வர்ணனைகள், இறைவனின் நடனம் போன்றவை ஒளியுலகின்பாற்பட்டவை எனில் காரைக்கால் அம்மையாரின் இறைவன் இருளுலகில் இருந்து எழுந்து ஆடுபவன்.
‘ஆதியன் ஆதிரையன் அனலாடிய ஆரழகன்’
என்னும் ஞானசம்பந்தரின் கூற்றுக்கும்
புந்தி கலங்கி மதிமயங்கி
இறந்தவ ரைப்புறங் காட்டில்இட்டுச்
சந்தியில் வைத்துக் கடமைசெய்து
தக்கவர் இட்டசெந் தீவிளக்கா
முந்தி அமரர் முழவின்ஓசை
திசைகது வச்சிலம் பார்க்கஆர்க்க
அந்தியில் மாநடம் ஆடும்எங்கள்
அப்பன் இடந்திரு ஆலங்காடே.
என்னும் காரைக்கால் அம்மையின் கூற்றுக்குமான வேறுபாடு தெளிவானதே. அனல் ஆடிய ஆரழகன்தான். ஆனால் அவன் ஆடுகின்ற அவ்வனல் மரணத்தின் நிணத்தால் மேலும் மேலும் என எழுந்தாடும் சிதைத்தீ.
காரைக்கால் அம்மையின் காலகட்டம் பொ.யு. நான்கு முதல் ஐந்தாம் நூற்றாண்டு. சித்தாந்த சிந்தனைகளோ, சைவத்திருமுறைகளின் அமைப்போ தோன்றாக் காலகட்டம் அது. அம்மை எழுதிய பாடல்களாக அற்புதத் திருவந்தாதியும் திருவிரட்டை மணிமாலையும் இரண்டு திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்களும் நமக்குக் கிடைக்கின்றன. தேவாரங்களில் கையாளப்பட்ட பண் அமையப் பாடும் பதிகம் என்னும் பாடல்வடிவம் காரைக்கால் அம்மை அளித்த கொடை என்றே கூறலாம். திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் நட்டபாடை என்னும் பண்ணால் அமைத்து அம்மையால் பாடப்பட்டது. அம்மை அமைத்துப் பாடிய அம்மரபை பணிந்து அடியொற்றியே திருஞானசம்பந்தர் தன் முதல் தேவாரமான தோடுடைய செவியன் என்னும் பதிகத்தை நட்டபாடை பண்ணில் அமைத்துப் பாடினார் என்று ஓதுவார்கள் கூறுவர். கம்பீர நாட்டையாக இன்று பயிலப்படும் நட்டபாடை ஒரு காரியத்தின் தொடக்கத்தில் இசைக்கப்படும் ராகமாகும். சைவத்தின் தோத்திரப்பாடல் மரபு அம்மையின் முதுநாவில் எழுந்த நட்டபாடையைத் தன் தொடக்கமாக வரவேற்பு நாதமாகக் கொண்டெழுந்தது என்று கூறலாம்.

இரண்டு திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் கிடைக்கின்றன. இரண்டுமே பேய்களின் உலகில் இறைவன் ஆடுகின்ற காட்சியைப் பற்றிப் பேசுகின்றது. கயிலை மலையை தலையால் நடந்து சென்று இறைவழிபாடு ஆற்றிய அம்மையிடம் வேண்டுவன யாது எனக் கேட்கின்றான் இறைவன். அம்மை, ‘பிறவாமை வேண்டும். அப்படிப் பிறந்தால் உன்னை மறவாது நான் இருக்கவேண்டும். இன்னும் வேண்டும், நான் மகிழ்ந்து பாட நீ ஆடுகையில் உன் காலடியில் நான் இருக்கவேண்டும்’ என்று வேண்டுகின்றார்.
கூடு மாறு அருள் கொடுத்துக்
குலவு தென் திசையில் என்றும்
நீடு வாழ் பழன மூதூர்
நிலவிய ஆலங் காட்டில்
ஆடும் மாநடமும் நீ கண்டு
ஆனந்தம் சேர்ந்து எப்போதும்
பாடுவாய் நம்மை என்றான்
பரவுவார் பற்றாய் நின்றான்.
என்று பெரியபுராணம் அந்நிகழ்வைக் கூறுகின்றது. பழனமூதூரில் உள்ள ஆலங்காட்டில் நீ என் நடம்கண்டு எப்போதும் என்னருகே நின்று ஆனந்தமாய்ப் பாடுக என்று இறைவன் அருளியதற்கேற்ப ஆலங்காட்டிற்கு வருகிறார்.
உலக இயக்கம் ஒரு பெருநடனம் எனக் கண்டது சைவத் தத்துவத்தின் தலையானது. படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளலெனும் ஐந்தொழிலும் இந்நடனத்துக்குள் நிகழ்ந்தபடியே உள்ளன. சைவத்தின் அறிதல்களையெல்லாம் தன்னுள் கொண்ட இறைநடத்திருக்கோலத்தை அம்மையார் ஆலங்காட்டினுள் காண்கிறார். ஆலம் என்ற சொல்லுக்கு விரிந்தது, ஆகாயம், நஞ்சு போன்ற பொருள்கள் உள்ளன. அடிப்படையில் பார்த்தால் ஆலங்காடு பழனமூதூரின்கண்ணுள்ள ஒரு சுடுகாடு என்பது தெளிவாகின்றது. அக்காட்டில் பேய்கள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. இடுகாட்டில் வாழும் இவ்வகை உயிர்களை மணிமேகலை ‘பிணந்திண் மாக்கள்’ என்னும் பெயரால் குறிப்பிடுகின்றது. இவர்கள் பேய்கள் தானா அல்லது பிணம்தின்று சுடுகாட்டிலேயே வாழும் மனிதர்களா என்பது ஆய்விற்குரியது. இந்த பாடல்களில் அம்மை பேய்களின் உலகமென்றே அவற்றை அறிமுகம் செய்கிறார். அக்காட்டில் பேயொடு பேயாய் அம்மையும் சென்று அங்கு இறைவனின் நடனத்தைக் காண்கிறாள்.
கொங்கை திரங்கி நரம்பெழுந்து
குண்டுகண் வெண்பற் குழிவயிற்றுப்
பங்கி சிவந்திரு பற்கள்நீண்டு பரடுயர்
நீள்கணைக் காலோர்பெண்பேய்
தங்கி அலறி உலறுகாட்டில்
தாழ்சடை எட்டுத் திசையும்வீசி
அங்கங் குளிர்ந்தனல் ஆடும்எங்கள்
அப்பன் இடந்திரு ஆலங்காடே.
என்று தொடங்குகிறார் தன் பதிகத்தை. பேய்களின் தோற்றம் அனைத்து விதங்களிலும் எல்லைக்கோடு ஒன்றினை மீறியதாகவே காட்டப்படுகின்றது. அவை அணையா பசிகொண்டதாக இருக்கின்றன. என்னதான் உண்டாலும் அணையா நெருப்பில் வெந்து அவிந்த அதனுடல்களில் கொழுப்பு சற்றும் இன்றி எலும்பின் மேல் நரம்பெழுந்து காணப்படுகின்றன. முலைகள் தொங்க கணைபோல் கால்நீண்ட பெண்பேய் அலறி உலறிக் கொண்டிருக்கின்ற காட்டில் எங்கள் அப்பன் ஆடுகின்றான் என்று பேயார் கூறுகின்றார்.
பேயாக ஒருவர் தன்னை உணர்ந்தாலே ஒழிய காணமுடியாத சில நுட்பமான அவதானிப்புகள் இப்பாடலில் கிடைக்கின்றன. பேயெனில் அழகற்றது என்பது பொதுவாக நாம் நினைப்பது. ஆனால் அம்மை காணும் பேய்களில் ஒன்று மையிட்டு தன்னை அழகுசெய்துகொள்கின்றது. முதலில் அப்பேய் கள்ளிச்செடிக்கு அருகில் தன் காலை நீட்டி அமர்ந்துகொள்கின்றது. முந்தையநாள் எரிந்து அணைந்த சிதைக்கரியை எடுத்து அதில் நீர் விட்டு தன் கண்களுக்கு ‘விள்ள’ எழுதுகின்றது. அழுத்தி நன்றாக எழுதியபின் கண்ணாடி பார்த்து வெடவெடவென்று சத்தமாக சிரிக்கின்றது. அந்நேரம் அணைந்த சிதைக்கரி என நினைத்ததனுள் இருந்த கனலானது அதன் கையை சுட்டுவிடவே ‘என்னையா சுட்ட’ என்று பேய் மண் எடுத்துத் தூற்றி அதை அணைக்கின்றது.
கள்ளிக் கவட்டிடைக் காலைநீட்டிக்
கடைக்கொள்ளி வாங்கி மசித்துமையை
விள்ள எழுதி வெடுவெடென்ன
நக்கு வெருண்டு விலங்குபார்த்துத்
துள்ளிச் சுடலைச் சுடுபிணத்தீச்
சுட்டிட முற்றுஞ் சுளிந்துபூழ்தி
அள்ளி அவிக்கநின் றாடும்எங்கள்
அப்பன் இடந்திரு ஆலங்காடே
மேலும் இப்பேய்கள் கூட்டம் கூட்டமாக பிள்ளைகளோடுதான் வாழ்கின்றன. குட்டிக் குட்டி பேய்கள் ஆங்காங்கே அக்காட்டில் ஓடி விளையாடிக்கொண்டிருக்கின்றன. அம்மை அரியதொரு சித்திரமாய் பேய்களுக்குள் விளங்கும் தாய்ப்பாசத்தினைக் காட்டுகின்றார்.
விழுது நிணத்தை விழுங்கியிட்டு
வெண்தலை மாலை விரவப்பூட்டிக்
கழுதுதன் பிள்ளையைக் காளியென்று
பேரிட்டுச் சீருடைத் தாவளர்த்துப்
புழுதி துடைத்து முலைகொடுத்துப்
போயின தாயை வரவுகாணா
தழுதுறங் கும்புறங் காட்டில்ஆடும்
அப்பன் இடந்திரு ஆலங்காடே.
ஒரு பேய் தன் குழந்தைக்கு சாப்பிட கஷ்டமாக இருக்கக் கூடாதே என அன்பில் பெருகி உண்பதற்கு இலகுவாயுள்ள பிணத்தில் இருந்து வழிகின்ற நிணத்தினை வழித்து எடுத்து ஊட்டி விடுகின்றது. அணிகலன் இல்லாமல் என் பிள்ளை எப்படி இருப்பாள் என்று தாய்ப்பேய் ஆலங்காட்டினுள் கிடக்கும் மண்டையோடுகளையெல்லாம் பொருக்கி அதை மாலையாக்கி தன் பிள்ளைக்கு அணிவிக்கின்றது, தன் பிள்ளைக்கு இறையருள் பரிபூரணமாக வேண்டுமென்று தன் குலதெய்வத்தின் பெயரை எடுத்து ‘காளி’ என்று பெயரிட்டது. முகத்தில் புழுதி விழுந்தாலும் பதறித்துடைத்து முலையூட்டி சீராட்டி வளர்க்கின்றது பேய். வாசிக்கும்போது இறைவாக்காகவே ‘என் அம்மை’ என்னும் சொல் காதில் கேட்கும் பாடல்களுள் ஒன்று இது.

மிக சுவாரஸ்யமான ஒரு பாடல் இப்பதிகங்களுள் இடம்பெற்றுள்ளது. மானுடர்கள் பேய்களைக் கண்டால் அஞ்சுவார்கள் என்பது அறிந்ததே. ஆனால் இங்கே பேய்கள் மானுடரைக் கண்டால் அஞ்சுகின்றன.
செத்த பிணத்தைத் தெளியா
தொருபேய் சென்று விரல்சுட்டிக்
கத்தி உறுமிக் கனல்விட்
டெறிந்து கடக்கப் பாய்ந்துபோய்ப்
பத்தல் வயிற்றைப் பதைக்க
மோதிப் பலபேய் இரிந்தோடப்
பித்த வேடங் கொண்டு
நட்டம் பெருமான் ஆடுமே.
பிணங்கள் அழலில் வெந்துபோகும்போது நரம்புகள் இழுபட எழும்பும். அதை அறியாத பேயொன்று ஆஆ என்று அலறி பதறி தன் கூட்டத்தை கூட்டி கைச்சுட்டி கத்துகின்றது. நெருப்பை விட்டு எறிகின்றது. வயிறு பதைக்க எல்லா பேய்களும் கத்திக்கொண்டே ஓடுகின்றன. பேய் பார்வையில் மானுடர் இத்தனை அச்சத்துக்கும் உரியவர்களாக இருப்பார்கள் என்பதை அம்மை வழியாகவே நம்மால் அறியமுடிகின்றது.
இவ்வாறு இவ்விரு பாடல்களும் இடுகாட்டின் கோர சித்திரத்தை படைத்துக்காட்டுகின்றன. நிகழ்ந்துகொண்டே இருக்கும் மரணவெளிக்குள் இருந்து அம்மை பேசுகிறாள். கணம்தோறும் மடிந்துகொண்டே இருக்கின்றன உலகின் அனைத்தும். நித்ய சைதன்ய யதி ‘மரணத்தை வெல்வது எப்படி?’ என்னும் கட்டுரையின் தொடக்கத்தில் மானுட உடலில் கணம்தோறும் நிகழ்ந்துகொண்டே இருக்கும் மரணங்களைக் குறித்துக் கூறுகின்றார். செல்களின் மரணம், நுண்கிருமிகளின் மரணம், சில நேரங்களில் உறுப்புகளின் மரணம் என உதிரி மரணங்களை கணம்தோறும் கடந்து செல்கின்றது இந்த உடல். உடலின், உயிர்களின் மரணத்தை உதிரி மரணமாகக் கொண்டு இயங்கிக்கொண்டே இருக்கின்றது உலகு. பல உலகங்களின் மரணங்களை உதிரியாகக்கொண்டு இயங்கிக்கொண்டிருக்கின்றன இப்பிரபஞ்சம். இவ்வழிவுகளை அதன் கோரங்களை ஒருங்கே திரட்டி உருவாக்கப்பட்டதே அம்மை காட்டும் ஆலங்காடு.
‘முள்ளி தீந்து முளரி
கருகி மூளை சொரிந்துக்குக்
கள்ளி வற்றி வெள்ளில்
பிறங்கு கடுவெங் காட்டுள்ளே’
என்று அம்மை அக்காட்டின் வெம்மையைக் கூறுகின்றாள், கள்ளி கூட வற்றிப்போகின்ற அளவு உள்ளது அதன் அனல். கோரமுனையின் உச்சம் கொண்டதாய் விளங்கும் வெங்காட்டினுள் ‘ஆகம் குளிர்ந்து அனல் ஆடும்’, ‘அங்கம் குளிர்ந்தனல் ஆடும்’ பரமனைக் குறித்து பேசுகிறாள் அம்மை. இது உருவாக்கும் இருமை முக்கியமானது. காடு வெம்மை கொண்டது. ஆனால் அதன் நடுவே அனல் கையேந்தி ஆடுகின்ற பெருமானின் உடலும் உள்ளமும் குளிர்ந்திருக்கின்றது. கோரங்களின் நடுவே துலங்கும் அகோரம்!

அகோரம்! சைவத்தில் பயிலும் மந்திரங்களில் இறைவனின் பஞ்சப்பிரம்ம மந்திரம் முக்கியமானது. ஈசானம் முதலாகத்தொடங்கும் அதில் மூன்றாவது முகமாக அமைகின்றது அகோரமுகம். ‘அஹோர ஹ்ருதயாய நம:’ என அகோரம் இருதயத்தானத்தில் வைத்து கொள்ளப்படுகின்றது. இச்சொல்லே நுட்பம் கொண்டது. அழகுகொண்டவன் என்னும் பொருள்படும் சுந்தரன் என்பதல்ல. கோரத்தின் இன்மைகொண்டது அது. கோரங்களுள் எழிலாக விளங்குவது அவன் முகம். அவ்வகோர முகம்கொண்டு இறைவன் மரணத்திசையான தென்திசையை நோக்கிக்கொண்டுள்ளான் என சாத்திரங்கள் சொல்கின்றன. இப்புடவி மரணமெனும் இறக்கமற்ற கோரத்தினை எல்லா இடங்களிலும் சூடியிருக்க அவன் இருதயமாகிய மையத்தில் எழில்கொண்டு குளிர்ந்து நின்று ஆடுகிறான் என்னும் தரிசனம் கோரத்தால் தன்னை நிறைத்து பேயாகி நின்ற ஒருத்தியால் மட்டுமே காணமுடிவது அல்லவா!
கவி நிலவனின் குரலில் அம்மை…
அன்னை ஆடல் கண்ட ஆலங்காட்டில் இறைவன் இன்றும் அகோரமூர்த்தி என்னும் திருநாமத்தில் இருந்து ஆடுகின்றான். எடுத்த பாதம் அண்டம் உற ஆடும் அவன் காலின் கீழ் காணாவொன்றைக் கண்ட கரவுடன் கண்கள் மின்ன, கனிவூறும் வாய் திறந்து காலமெனும் வெளியைத் தன் கைத்தாளத்தால் அளந்து பாடிக்கொண்டேயிருக்கிறாள் பேயன்னை.
*
கவி நிலவன்: இலக்கிய வாசகர். சைவ சித்தாந்தம், கர்நாடக இசை மீது ஈடுபாடு கொண்டவர். மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், அபிராமி அந்தாதி போன்ற மரபிலக்கிய வகுப்புகளை எடுத்துவருகிறார். சொந்த ஊர் நாமக்கல். கோவையில் முதுகலை தமிழிலக்கியம் பயின்று வருகிறார். விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட செயல்பாடுகளுடன் இணைந்து செயல்படுகிறார். இக்கட்டுரை கவி நிலவனின் முதல் படைப்பு.
*
காரைக்கால் அம்மையார் – தமிழ்விக்கி
*

அபாரமான படிமங்கள் கொண்ட கட்டுரை. வாழ்த்துக்கள் கவிநிலவன்!
சிறப்பு ….மகிழ்ச்சி… வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்…..
தெய்வீக குரல் கவி நிலவன், மிக மிக அற்புதமான கட்டுரை, காரைக்கால் அம்மையை நிகழ வைத்து காட்டி விட்டீர்கள். உங்களை போன்ற அறிஞர்கள் இன்னும் அதிகமாக எழுத வேண்டும்……
Comment
சிறப்பான ஆழமான புரிதலுடன் இக்கட்டுரை அமைந்துள்ளது. வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
கட்டுரை அருமையாக இருந்தது. இந்தக் காலகட்டத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் செல்லும் போது, நீங்கள் நம் தாய்மொழி தமிழுக்கு ஆற்றும் தொண்டு போற்றத்தக்கது. வாழ்க கவியே! தொடர்க உன் தமிழ்த் தொண்டு! இது உங்கள் முதல் கட்டுரை மட்டுமல்ல… முத்தமிழ் கட்டுரை! தமது இந்தக் கட்டுரைகள் பேய் போன்று பெருகட்டும். அது (பேய்) காக்கும் புதையல் போன்று உங்களது படைப்புகளை அந்தத் தமிழன்னை காக்கட்டும்.