சுக்ரா பல்முச்சு – கே.என். மல்லீஸ்வரி

கே.என். மல்லீஸ்வரி

ஜார்கண்ட் மாநிலம் சுக்கன் புரு மலையின் மீது வண்ண வண்ணப் பட்டங்கள் பறந்து கொண்டிருக்கின்றன. 

காற்றின் வேகத்திற்கேற்ப அசையும் வால்களோடு வளைந்து நெளிந்து பறந்து சாகசங்கள் செய்யும் பட்டங்களை, ‘துண்டக் தமக் டோல்’ வாத்தியங்கள் மேலும் உசுப்பேற்றி கொண்டிருக்கின்றன. 

டம்டனக்க டம்டனக்க டம்டனக்க… ஏ ஏ ஏ ஏ தினக்கு தின தின்தினக்கு தின் தித்தினக்க தித்தினக்க. 

மலை மீதிருக்கும் விலங்குகளையும் மரங்களையும் தனது லட்சம் கைகளால் அரவணைத்தபடி, மலையின் ஆன்மாவான ‘புருபொங்கா’ மண்ணிலிருந்து வானுக்கு பெருக்கெடுக்கும்  ஆக்ரோஷத்தோடு நடனமாடுகிறான். 

ஒரு பெண் குனிந்து மொவா மலர்களைப் பொறுக்கிக் கொண்டிருக்கிறாள்.

இரண்டு சிறுவர்கள் விசித்திரமான ஒரு பட்டம் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதன் வால் மிகப் பெரியது. ஆயிரம் சரக்கு பெட்டிகள் கொண்ட ரயில் போல நீண்டிருக்கிறது. அது நீண்டு வந்து உடம்பைச் சுற்றிக் கொண்டது. எவ்வளவு திமிறினாலும் நகர முடியவில்லை. அப்போது நெஞ்சின் மீது  வந்து அமர்ந்தான் புருபொங்கா. கன்னங்கள் புடைக்க ரௌத்திரமாய்- 

‘முன்னோர் ஆன்மாக்கள் உலாவுக்கு ஏன்டா இன்னும் வரல?’ என்று உறுமினான்.

“புரு புருபொங்கா” என்று சத்தமாய் கத்திக்கொண்டே தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்தான் லைன்மேன் சுக்ரா. 

வட ஆந்திரத்தின் கொத்தவலசா ரயில் நிலையத்திற்குச் சற்றுத் தொலைவில் பாழடைந்து கிடந்த அந்த ரயில்வே குவார்ட்டர்ஸ் ஒரு கணம் அதிர்ந்தது. 

சுத்தம் செய்யப்பட்ட கொஞ்ச இடத்தில் பாய்களை விரித்துத் தூங்கிக்கொண்டிருந்த ரயில்வே ஒப்பந்தத் தொழிலாளர்களில் நாலைந்து பேர் திடுக்கிட்டு எழுந்து, சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு, வசைப்பாடிவிட்டு மீண்டும் குளிருக்கு இதமாகச் சுருண்டு படுத்துக்கொண்டார்கள். 

சற்றுத் தள்ளி இருந்த இரும்பு கட்டிலில் படுத்திருந்த சமையல்காரன் எழுந்து உட்கார்ந்து, தலையணைக்கு பதில் தலைக்கடியில் சுற்றி வைத்திருந்த துணியை எடுத்து சுக்ராவின் மீது விட்டெறிந்து, “எவனயும் நிம்மதியாத் தூங்கவுடாதேல கபோதி!” என்று கத்தினான்.

தூக்கக் கலக்கத்தில் குழப்பமாய் பார்த்துவிட்டு, மங்க்கி கேப்பை காதுவரை இழுத்துவிட்டபடி வெளியே வந்தான் சுக்ரா. அவன் பின்னாலேயே எழுந்து வந்தான் ஹெல்பர் தண்டாசி. பனிகொட்டும் டிசம்பர் மாதக் குளிரிலும் வியர்வையில் நனைந்திருந்த சுக்ராவின் முதுகில் செல்லமாகத் தட்டி, “என்னண்ணே ஆச்சு?” என்றான்.

பகலெல்லாம் ரயில் தண்டவாளத்தின் வழியே நடந்து சென்று, மின்கம்பங்களில் ஏறி இறங்கிச் சோர்வடைந்து, இரவில் போட்டதைச் சாப்பிட்டுவிட்டு, யாருக்கும் தெரியாமல் கொஞ்சமாய் கஞ்சா இழுத்துவிட்டுப் போதையில்  மேல்நோக்கி வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பான் சுக்ரா. அவன் சிந்திக்கும் உலகம் மிகச் சிறியது. ஊர், மலை, பொண்டாட்டி புள்ளைங்க, தெய்வ சக்திகள், ரயில் தண்டவாளங்கள், மின்கம்பங்கள் இவைகள் மட்டும்தான் அவன் மனக்கண்ணில் வந்துசெல்பவை. அப்படியிருக்க, இப்போது இவ்வளவு பயங்கரமானக் கனவு! சுக்கன் புரு பண்டிகைக்கு ஊருக்குப் போகாவிட்டால் தெய்வங்கள் சபித்துவிடுமோ, தனக்காகக் காத்துக்கொண்டிருக்கும் பெண்டாட்டி பிள்ளைகளின் ஏமாற்றம் சும்மா விடாதோ என்று முனகிக்கொண்டான்.

இரண்டாண்டுகளுக்கு தொடரவிருக்கும் கொத்தவலசா–விஜயநகரம் இடையிலான ரயில் பாதையை மின்மயமாக்கும் கான்ட்ராக்ட் வேலைக்காக இருபத்தைந்துக்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்களும், மூன்று பொறியாளர்களும் அந்த சைட்டில் இருந்தார்கள். 

அங்கே பலருக்கும் மொழி ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தது. ஒடிசா, சத்தீஸ்கரில் இருந்து வந்த ஆட்கள் இந்தி பேசிச் சமாளித்துவிடுவார்கள். ஆனால் சுக்ரா பேசும் ஜார்கண்ட் ‘முண்டாரி’ பாஷை யாருக்கும் புரியாது. அவ்வப்போது அரைகுறை இந்தி வார்த்தைகளைக் கலந்து பேசினாலும் பெரிய பலனிருக்காது. தண்டாசிக்குத் தெலுங்கு தவிர வேறெதுவும் தெரியாது. ஆனாலும் சுக்ராவின் பேச்சைச் சரியாகப் புரிந்துகொள்ளும் ஆள் அவன் ஒருவன் மட்டும் தான். 

“உள்ள ஓடுற சீழும் ரத்தமும் என்ன சொல்லுதோ, அதச் செய்யுற ஆளுகதேன்யா நாமெல்லாம். அது புரிஞ்சா போதும்ல, அவய்ங்க மொளியோட எனக்கென்னய்யா வேலை?” என்பான் தண்டாசி.

இப்போதும் சுக்ராவின் முனகல் புரிந்ததுபோலச் சிரித்தான். “பாரு, ஏளு மணிக்கு ஒரு மணி நேரம் ‘பிளாக்கு’ கெடைச்சிருக்கு. அத எடுத்துக்க. நான் அவிங்ககிட்ட சொல்லிக்கிடுதேன். ஒரு அஞ்சு போஸ்ட்டு ஏறி எறங்குனா வேல முடிஞ்சிரும். பெறவு வேகமா ஓடிப்போயி லாரியப் புடிச்சிரலாம்.” சைகைகளையும் வார்த்தைகளையும் கலந்து சொன்னான். 

தண்டாசி சொன்னது பிடித்துப்போகவே, விறுவிறுவென்று தயாரானான் சுக்ரா. கிளம்பும் நேரத்திற்கு வயிற்றிலிருந்து குடல்கள் பசியில் விசித்திரமாகச் சத்தங்களை எழுப்பின. சமையல்காரனைத் தேடினான். அவன் கம்பளி போர்த்திக்கொண்டு வராண்டாவில் ஒரு மூலையில் சுருண்டு அமர்ந்து, பீடிப் புகையில் கிறங்கிய கண்களுடன் பனிமூட்டத்தை வெறித்துப் பார்த்தபடியிருந்தான். 

சுக்ரா தன் வயிற்றைக் காண்பித்துப் பசிக்கிறது என்று சைகை செய்தான். அந்தச் சைகை புரிந்தாலும், தான் என்ன பதில் சொன்னாலும்  சுக்ராவுக்குப் புரியாது என்று சமையல்காரனுக்குத் தெரியும். அந்தத் தைரியத்தில் வாய்க்கு வந்ததைப் பேசுவது நல்ல பொழுதுபோக்காய் பட்டது. சிரித்தபடி முகத்தை வைத்துக்கொண்டு இளக்காரமான குரலில்- “எப்பப் பாத்தாலும் தீனிப் பஞ்சாயத்துதேன்ல உனக்கு, காட்டுப்யலே! பாம்ப வயித்த வச்சிட்டு விடியறதுக்கு முன்னமே திங்கறதுக்கு ரெடி ஆயி நிக்கிற. ஆக்கிப் போட்டுகிட்டு இருந்தா, பானை குழம்பயும் வெறும் வாயிலயே ஒட்டகமாட்டு உறிஞ்சிடுறியேடா பஞ்சத்துக்கு பொறந்தவனே!” என்றான்.

சுக்ராவுக்கு எதுவும் புரியவில்லை. “கியா போல்த்தே ஹோ?” என்றான் குழப்பமாக. 

“என்னத்தச் சொல்வேன்ல தடியா, பகாசூரனுக்கு சித்தப்பு கணக்காத் திரியுற. காட்டுபயலே, மூஞ்சியப் பாருல! அப்படியே அனுமான் அவதாரமாமட்டுல்ல இருக்கு!” வாயில் காற்றை நிரப்பி உப்பலாகக் காட்டி நக்கலடித்தான். 

ஓ.ஹெச்.இ உபகரணங்களை தோளில் மாட்டிக்கொண்டு அப்போது அங்கு வந்த தண்டாசி கோபமாக- “என்னல இது! நீ என்ன சொல்றனு அவனுக்குத் தெரியாதுனு உனக்குத் தெரியும்ல, அப்றம் என்னல அவன வச்சி விளையாடுத? ஏழு மணிக்கு பிளாக் ஆனவுடனே இவன் லாரியப் புடிச்சி ஊருக்கு போயிருவான். உன்ட்ட எதாச்சும் இருந்தா வை, இல்லாட்டி கெடையாதுனு சொல்லு” என்றான். 

விருட்டென்று எழுந்தான் சமையல்காரன். அங்கிருந்த பாத்திரக்குவியலிருந்த ஒரு டபராவை எடுத்து விட்டெறிந்து- “பாருலே… எங்கனாச்சும் ஒரு பருக்கை சோறு ஒட்டியிருந்தா என்னை செருப்பாலயே அடிலே… ராட்சசத் தீனில இதுகளுக்கு, ஒரு மூட்ட அரிசிய ஒரே நாள்ல ஊதித் தள்ளிருதாய்ங்க. நா என்னலே செய்வேன்? என்னயப் பிச்சித் தின்னுங்க, இல்லாட்டி அங்கன ஒரு கண்டெய்னர்ல அந்த இஞ்சினியருமாரு தூங்குறாய்ங்க பாத்தியா, அதுங்கள முழுங்கித் தொலைங்கல வயிறாச்சும் நிறையும்!” என்றான்.

“சோறு இருந்தா வைய்யி, இல்லன்னா போயிரு. காலங்காத்தால கடுப்பேத்தாத” என்று சமையல்காரனைச் சலித்துக்கொண்டு, சுக்ராவின் கையைப் பிடித்திழுத்து, “போவோம் வா! பிளாக் முடிஞ்சதும் வந்து தின்னுவோம்” என்று சொல்லி நடந்தான் தண்டாசி.

*** 

விடிந்தாலும் இன்னும் முழு வெளிச்சம் வரவில்லை. பத்து நிமிடம் கொட்டும் பனியில் நடந்த பிறுகு ரயில் பாதை கண்ணில் பட்டது. நேற்று அடையாளம் வைத்துச் சென்ற மின்கம்பங்களை அடைந்தார்கள். இடுப்புப் பெல்ட்டைக் கட்டிக்கொண்டு, நாலஞ்சு கருவிகளை எடுத்துக்கொண்டு கிடுகிடுவென மேலே ஏறினான் சுக்ரா. அரை மணி நேரத்தில் மூன்று கம்பங்கள் ஏறி, கட்டப்பட்டிருந்த மின் கம்பிகளைச் சரிபார்த்து இறங்கினான். 

நான்காவது கம்பத்திற்குப் பெரிய ரிஞ்ச் ஸ்பேனர் தேவைப்பட்டது. கீழே பார்த்து சைகை செய்தான். பையிலிருந்து எடுத்து மேலே வீசினான் தண்டாசி. சுக்ராவின் கைக்கு அது எட்டவில்லை. கீழே விழுந்ததை எடுத்து மீண்டும் குறிபார்த்து வீசினான். சற்றுத் தாழ்வாக வந்ததைப் பிடிப்பதற்காக, கால்களை அந்தரத்தில் உயர்த்தி உடம்பைச் சற்றே கீழே நீட்டினான் சுக்ரா. 

ஏற்கனவே நைந்துபோயிருந்த இடுப்புப் பெல்ட்டின் கயிறுகள் ‘பட் பட்’டென அறுந்துபோயின. கம்பத்தைக் பிடித்துக்கொண்டிருந்த இடது கை பனியின் ஈரத்தில் வழுக்க, உடம்பின் பாரத்தைத் தாங்க முடியாமல் பிடி நழுவியது. 

மீண்டும் கீழே விழுந்த ரிஞ்ச் ஸ்பேனரைப் பார்த்துக்கொண்டிருந்த தண்டாசி, சுக்ராவின் அலறல் கேட்டுத் தலையைத் திருப்பினான். 

சுமார் முப்பது அடி உயரமுள்ள மின்கம்பத்திலிருந்து ‘தொப்’பென்று கீழே விழுந்தான் சுக்ரா. ஜல்லிக் கற்களுக்கு நடுவில்- மரணத்தை உருக்கி வார்த்துப் போட்டது போலிருந்த ரயில் தண்டவாளத்தில் மோதி விசித்திரமான சத்தத்தை எழுப்பியது சுக்ராவின் தலை.

தண்டாசிக்கு உடம்பு வெலவெலத்துப் போனது. நடுங்கியபடியே அருகில் சென்றான். தண்டவாளத்தில் மோதிச் சிதறியிருந்த சுக்ராவின் தலையைப் பார்த்ததும் வாந்தி வருவதாய்ப்பட்டது. உடனே பின்னால் திரும்பி எம்பி குதித்து- “சுக்ரா பய செத்துட்டான்ல சாமீ… நீ என்னலே சாமி கபோதிப் பயலே! நாசமாப் போனவனே, கொன்னுப்புட்டீயேலே! சுக்ரா பய விளுந்துட்டான் ஓடி வாங்க!” என்று ஓட்டம் பிடித்தான்.

ஓட்டமெடுத்ததும் ஏதோ ஒரு யோசனை. இன்னும் இருபது நிமிடங்களில் ‘பிளாக்’ நேரம் முடிந்துவிடும். தண்டவாளத்தில் ரயில் வந்துவிடும். சுக்ராவின் உடல் தண்டவாளத்தின் மீதே கிடக்கிறது. அதை நினைக்கவே வயிற்றில் பாறாங்கல் வீழ்ந்ததுபோல் பாரமானது. திரும்பி வந்து, மூச்சை அடக்கிக்கொண்டு சுக்ராவைத் தண்டவாளத்திற்கு இந்தப் பக்கம் இழுத்துப்போட்டான். அறுந்துபோன இடுப்புப் பெல்ட்டையே இரண்டு நிமிடம் வெறித்துப் பார்த்தான். பிறகு கட்டிங் பிளேயரை எடுத்துப் பைத்தியம் பிடித்தவனைப் போல அந்தப் பெல்ட்டைச் சுக்ராவின் உடம்பிலிருந்து தனியாக வெட்டியெடுத்தான். 

சுக்ராவின் கால்களைப் பிடித்துக்கொண்டு- “அண்ணே என்னய மன்னிச்சிருண்ணே, எனக்காக இல்ல, எல்லாருக்காகவுந்தேன் இப்டி செஞ்சேன், மன்னிச்சிருண்ணே” என்று கெஞ்சுவது போலச் சொல்லிவிட்டு, அந்தப் பெல்ட்டில் ஒரு பெரிய கல்லைக் கட்டி, போகும் வழியிலிருந்த தண்ணீர் குட்டையில் வீசி எறிந்தான்.

***  

ஹேங் ஓவரால் தலை பாரமாகி உடம்பெல்லாம் கனத்தது. கால்களை இழுத்துக் கொண்டே நடந்து ஹாலுக்கு வந்தார் பிரஃபுல்லா சௌதரி. விசாலமான ஹாலுக்கு ஒரு பக்கம் சீ-த்ரூ கண்ணாடிச் சுவர். வில்லாவுக்கு வெளியே நன்கு வளர்க்கப்பட்டு, அழகாக வெட்டப்பட்டிருக்கும் தோட்டத்தின் மீது மெல்லிய பனித்திரை. 

“என்ன, காலங்கார்த்தால மூஞ்சிய இப்டி வெச்சிருக்கீங்க!” என்று மனைவி சிரித்தாள். பேசத் தோன்றவில்லை. உள்ளுக்குள் தீவிரமான யோசனை. 

இரண்டு வருடத்தில் முடிந்துவிடும் என்று நினைத்த கொத்தவலசா- விஜயநகரம் கான்ட்ராக்ட் மூணு வருடம் வரை போகும் போலிருக்கிறது. ஒரு கோடி ரூபாய் மார்ஜின் – இப்பொழுது மூன்றில் ஒரு பங்கு குறைந்துகொண்டே போகிறது. பார்ட் பேமெண்ட்ஸ் இன்னும் சாங்க்ஷன் ஆகவில்லை. இழுத்தடிக்கிறது. வாங்கிய கடனுக்கு வட்டி ஏறிக் கொண்டே போகிறது. தொழிலாளர்கள் சுருசுருப்பாக வேலை செய்யவில்லை. சைட் இன்ஜினியர்கள் வேலையை வேகமாய் முடிக்காமல் தாமதப்படுத்துகிறார்கள். போதாதென்று, வீட்டில் இருபத்தைந்து வயது மகனுடன்  தினமும் சண்டை! ஒரு நல்ல வேலையைத் தேடிக்கிட்டு நிம்மதியான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளச் சொன்னால் அவனோ, ‘சந்தோஷ் சௌதரி ஏ கிளாஸ் ரயில்வே கான்ட்ராக்டர்’ ஆவேன்னு என்று திரிகிறான். அவனை கான்ட்ராக்ட் தொழிலுக்குள் வர விடாமலும், அவனும் ஏதாவது வேலைக்கும் போகாமல் நாட்கள் நகர்கின்றன. 

இத்தனை அழுத்தங்களுக்கு மத்தியில் ஹார்ட் அட்டாக் வந்து இறந்து விட்டால்- ‘எங்கெங்க என்னென்ன இருக்குனு தெரிஞ்சுக்கிட்டுப் பத்திரமா பாத்துக்க’ என்று நேற்று மாலைதான் மனைவியிடம் சொல்லியிருந்தார். அதற்கப்புறமும் நிம்மதியில்லாமல் மூன்று நண்பர்களோடு சரக்கடித்துவிட்டுத் தன் மனக் கவலைகளை எல்லாம் புலம்பித் தீர்த்தார்.

ஹாலில் லேண்ட்லைன் போன் விடாமல் அடித்துக்கொண்டிருக்கிறது. சமையலறையில் ஏதோ வேலை செய்துகொண்டிருந்த மனைவி, “போனப் பாருங்க” என்று கத்தினார். யோசனையிலிருந்து திடுக்கிட்டு எழுந்து போனார். மறுமுனையில் சொன்னதைக் கேட்டு- “யாரு? அந்த சுக்ரா பல்முச்சு பயலா?” என்று நம்பமுடியாமல் கேட்டார். சுருக்கமாய் இரண்டு மூன்று வார்த்தைகளுக்குப் பிறகு போனை வைத்துவிட்டுத் தலையில் கைவைத்து செய்வதறியாது உட்கார்ந்தார். மனைவி வந்து உலுக்கி என்ன ஆனது என்று சத்தமாய் கேட்டாள். 

“சைட்ல எழவெடுத்த காட்டுப் பய ஒருத்தன் செத்து தொலைஞ்சுட்டான்” என்றார் எரிச்சலாக. 

“இருக்குற எழவு போதாதுன்னு எல்லாம் நமக்கே வரணுமா!’ என்று திட்டிக்கொண்டே உள்ளே போனார். 

தேவையில்லாத பொல்லாப்பு ஒன்றொன்றாய் வந்து விழுந்து கொண்டே இருக்கிறதோ என்று நினைத்துப் பார்த்தாலே தாங்கமுடியாதபடி நெஞ்சில் பெரிய கல்லைப் போட்டது போலிருந்தது பிரஃபுல்லாவுக்கு. செய்வதறியாது சுற்றிலும் பார்த்தார். ஹாலில் ரிக்லைனர் சோபாவில் குறுக்குமறுக்காகப் படுத்துத் தூங்கிக்கொண்டிருக்கிறான் சந்தோஷ். சுற்றிலும் விதவிதமான கார்ப்பரேட் பிசினஸ் புத்தகங்கள். ராத்திரி அவன் அம்மா கலந்து கொடுத்த சாப்பாட்டு பவுலின் மூடியைக் கூடத் திறக்கவில்லை. ஒரே வீச்சில் எழுந்து வந்து மகன் தோளை முரட்டுத்தனமாக உலுக்கி, விஷயத்தைச் சொல்லி “டிரைவர் லீவுல இருக்கான், ஸ்டேஷனுக்குப் போகணும் வா” என்றார். 

சந்தோஷின் முகம் மலர்ந்தது. ஐந்தே நிமிடத்தில் தயாராகிவிட்டான். அப்பா தயாராகி வருவதற்குள் கணிப்பொறியில் ஏதோ தகவல்களைத் தேடி குறிப்பெடுத்து வைத்துக்கொண்டான். காரில் உட்கார்ந்ததும்,  அக்கறை தொனிக்கும் குரலில், “டேடி! நீங்க ரிலாக்ஸா இருங்க” என்றான். 

பிரஃபுல்லா காதில் வாங்காதது போல் இருந்தார். உள்ளுக்குள் ஓடும் யோசனைகளால் முகம் இறுகிப்போயிருந்தது. இறந்தவனுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்.  அவர்கள் எவ்வளவு கேட்பார்கள் என்று தெரியாது. சைட்டில் வந்து ரகளை செய்வார்களோ என்னவோ!  இதில் ரயில்வே போலீஸ் மட்டுமல்லாது கிரைம் போலீசும் உள்ளே நுழைந்து பங்கு கேட்பார்கள். எத்தனை பேருக்கு படி அளக்க வேண்டி இருக்குமோ! யாரேனும் பிரஸ்சுக்கு செய்தியை லீக் செய்து விட்டால் அவர்களுக்கும் தீனி போட வேண்டி இருக்கும்.

வீட்டிலும் வங்கியிலும் இருப்பதையெல்லாம் சேர்த்தாலும் இரண்டு லட்சத்திற்கு மேல் தேறாது. அடகு வைக்க மனைவியிடம் நகைகளைக் கேட்டால் கொடுப்பாளா? ஊஹூம்! வாங்கித் தரும்போதுதான் உருகலும், கொஞ்சலும். கணவன் திருப்பிக் கேட்டா கால் கொலுசைக் கூடக் கழட்டிக் கொடுக்கமாட்டாள்.

தலை வெடித்து விடும் போலிருந்தது பிரஃபுல்லாவுக்கு. போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகும்போதே சுகர் டவுன் ஆகி சோர்ந்து போனார். அப்பாவுக்கு டீ, பிஸ்கட் வாங்கிக் கொடுத்து, சீட்டைப் பின்னால் சாய்த்துப் படுக்கச் சொல்லிவிட்டு, பேப்பரில் எழுதிக்கொண்ட பாயிண்ட்ஸைப் பார்த்துக்கொண்டே ஸ்டேஷனுக்குள் போனான் சந்தோஷ். 

ஒரு மணி நேரம் கழித்துக் கொஞ்சம் தெளிவடைந்து பதைபதைப்புடன் பிரஃபுல்லா காரை விட்டு இறங்கப் பார்த்தபோது மகன் வந்துவிட்டான். சுக்ராவின் உடல் கே.ஜி.ஹெச்-க்கு போய்விட்டது. போஸ்ட்மார்ட்டம் முடிந்ததும் அவன் தரப்பு ஆட்கள் வரும் வரை மார்ச்சுரியிலேயே வைத்து, பிறகு சைட்டுக்குக் கொண்டுவருவார்கள். போலீஸ் எஃப்.ஐ.ஆர் போட்டுவிட்டது. விசாரணைகள் பெரிதாக இல்லாமல் காம்ப்ரமைஸ்க்கு ஒத்துழைக்க லட்சம் ரூபாய் கேட்டார்கள், ஐம்பதாயிரத்திற்கு பேரம் பேசி முடித்துவிட்டான் சந்தோஷ்.

விவரமெல்லாம் கேட்டுப் பெருமூச்சு விட்டு, “சுக்ரா பய குடும்பத்துக்கு ரெண்டு லட்சம். அவ்ளோதான்! என்னயப் புரட்டிப் போட்டு அடிச்சாலும் அதுக்கு மேல ஒரு பைசா தரமுடியாது” ஆத்திரமாய் கத்தினார் பிரஃபுல்லா. 

“மூணு லட்சம் வரைக்கும் கேப்பானுங்க…” என்று சந்தோஷ் சொல்லி முடிப்பதற்குள்ளேயே சீறினார் பிரஃபுல்லா. “அவன் கால்ல ஸ்பைக்ஸ் இல்ல, உடம்புல சேஃப்டீ பாடி பெல்ட் இல்ல, தலைக்கு ஹெல்மெட் இல்ல, கொரங்கு கணக்காத் தாவி மரத்துல ஏறுறாப்ல போஸ்ட்ல ஏறுவானுங்க, காட்டுப் பயலுக! அவன் பண்ண தப்புனாலதேன் நடந்துச்சு, காம்ப்ரமைஸ் பேசுறப்ப நாம கெத்தா இருக்கணும்.” 

“அவ்ளோ லேசு இல்ல டேடி! அவன் போட்டிருந்த பெல்ட் அறுந்துபோய் இருந்திருந்தா காண்ட்ராக்ட் பிளாக் லிஸ்ட்ல போயிருக்கும், உங்க டேடி மேல நிறைய பேரு கண்ணு வச்சிருக்காங்கனு போலீஸ்காரங்க சொன்னாங்க.”

சந்தோஷ் சொன்னதைக் காதில் வாங்காதது போல் முகத்தைச் சுளித்துக்கொண்டு, “அந்த லேபர் சப்ளையர் குசராஜு பயல காம்ப்ரமைஸ் டைமுக்கு வரச்சொல்லு” என்றார்.

*** 

அடுத்தநாள் பிரஃபுல்லாவும், சந்தோஷும் சைட்டில் காரை விட்டு இறங்கும்போதே சுக்ராவின் உடல் குவார்ட்டர்ஸுக்கு எதிரே இருந்த மரத்தடியில் கிடத்தப்பட்டிருந்தது. பிரஃபுல்லாவுக்குச் சுர்ரென்று கோபம் ஏறியது, “அனாதைப் பொணமாட்டம் வெளிய கட்டாந்தரையில போட்டுட்டீங்களேடா! இதுக்கு என் தலையிலயே  கொண்டாந்து வச்சிருக்கலாமேடா” என்றார். 

சைட் இன்ஜினியர் ஓடிவந்து, “குவார்ட்டர்ஸ் வராண்டாவுல பிணத்த வச்சா, வேலைய விட்டுப் போயிருவோம்னு தொழிலாளிங்க மிரட்டுறாங்க. பேய் பிசாசு எல்லாம் வரும், அப்புறம் நாங்க குவார்ட்டர்ஸ்லயே தங்கமாட்டோம்னு சொல்றாங்க” என்று காதில் சொன்னான். 

தான் சொன்னதையும் இன்ஜினியர் சொன்னதையும் ஓரம் கட்டிவிட்டு, பிணம் இருக்கும் திசையை நோக்கி நடந்து கொண்டே, ஓரக் கண்ணால் சுற்றிலும் பார்த்தார் பிரஃபுல்லா. 

இன்னொரு மரத்தடியில் பாயின் மீது சுக்ராவின் பெண்டாட்டி தாமி, இடுப்பில் ஒரு பிள்ளையும், கையருகே ஒரு பெண் குழந்தையுமாக அமர்ந்திருந்தாள். பக்கத்திலேயே அவள் அப்பா சமையல்காரன் கொடுத்த டீயில் ரொட்டியை முக்கித் தின்றுகொண்டிருந்தார். ஏதோ ஒரு பண்டிகை கொண்டாட்டத்திலிருந்து அப்படியே வந்துவிட்டது அவளின் கசங்கிய அலங்காரத்தில் தெரிந்தது. அழுதுகொண்டே எல்லாரையும் விசித்திரமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒப்புக்கென்று பிணத்துக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டுத் தீர்க்கமாகப் பார்த்துக்கொண்டு நின்றார் பிரஃபுல்லா. அவர் அருகில் வந்த சமையல்காரன் கைகளைப் பிசைந்துகொண்டு, “கொஞ்சம் இருலே, சோறோ பாயசமோ செஞ்சு போடுறேன் சுக்ரான்னு சொன்னேன்… ஊஹூம் எனக்கு எதுவும் வேணாம்னு போயிட்டான்… இப்போ வாய்க்கரிசி போட வெச்சுட்டான். அவனுக்கு குடுத்துவச்சது இவ்ளோதான்” என்று அழுதுகொண்டே சொன்னான். 

பேயறைந்தது போலத் தரையில் குத்தவைத்து உட்கார்ந்து, பிணத்தைப் பரிதாபமாகப் பார்த்தபடி, “மன்னிச்சிருண்ணே, வேல நின்னிருச்சுன்னா எல்லார் வயித்திலயும் அடிச்ச பாவம் என்னயச் சுத்திக்கும், அதுக்குத்தேண்ணே இப்டி செஞ்சேன்” என்று உள்ளுக்குள்ளேயே முனகிக் கொண்டிருந்தான் தண்டாசி.

மூச்சு முட்டுவது போலிருந்தது பிரஃபுல்லாவுக்கு. ‘சைட்டிலிருந்து இதையெல்லாம் சீக்கிரமா க்ளியர் பண்ணிரணும்’ என்று நினைத்துக்கொண்டே சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். லேபர் சப்ளையர் குசராஜுவும், இன்னொரு நபரும் நின்றுகொண்டிருந்தார்கள். 

பிரஃபுல்லாவின் முகத்திலிருந்த கோபத்தைப் பார்த்து- “இங்க என்னதேன் ஆச்சு? சுக்ரா பய சாதாரண ஆளு இல்ல, நல்லா வேல தெரிஞ்சவன். அவனுக்கு இப்டி ஆனதே ஒரு மாயமாத்தேன் இருக்கு” என்று மிரட்டும் தொனியில் கேட்டான் குசராஜு. 

அவன் எங்கு வருகிறான் என்பது பிரஃபுல்லாவுக்கு புரிந்துவிட்டது. “அறைஞ்சேன்னா செவுளு பிஞ்சிரும். கமிஷனுக்காக கண்டவனுங்களயும் கொண்டாந்து விடுறது இல்லாம, எங்கிட்டயே உன் குள்ளநரிவேலய காட்டுறியா!” என்று சத்தமாய் கத்திவிட்டு, குசராஜு பக்கத்திலிருந்த ஆளைப் பார்த்து, “இவன் யாருலே?” என்று எரிச்சலாய்க் கேட்டார். 

அந்த ஆள் முகம் சிவந்துவிட்டுது. ‘இவன் என்னயப் பாத்து யாருன்னு கேக்குறானா? சட்டைப் பாக்கெட்ல பேனா, கையில நோட்டு, தோள்ல பையி இருந்தாக்கூட மரியாதை குடுக்கத் தெரியல, திமிரு பிடிச்ச நாயி!’ என்று மனதிற்குள் கறுவினான் அந்த லோக்கல் ரிப்போர்ட்டர். 

“அப்பாவி மலைவாழ் மக்களோட உசுரு ஒன்னு இப்படி அநியாயமா…” என்று ஆவேசமாகப் பேச ஆரம்பித்த செய்தியாளனை ஒரு புழுவைப் போலப் பார்த்துவிட்டு கண்டெய்னருக்குள் சென்றுவிட்டார் பிரஃபுல்லா. 

அப்பாவின் கோபத்தைப் பார்த்துச் சிரித்துவிட்டு, “எவ்வளவு?” என்று கேட்டான் சந்தோஷ். 

திடுக்கிட்டான் ரிப்போர்ட்டர். 

உடனே சுதாரித்துக்கொண்டு, அவனுங்களுக்கு இல்லாத வீராப்பும் மானமும் எனக்கெதுக்கு என்று நினைத்து, “மேனேஜ்மென்ட்க்கு தெரிஞ்சா இருபத்தஞ்சி, என்கிட்டயே முடிச்சுக்கிட்டா பத்து” என்றான். 

சந்தோஷ் உடனே பர்ஸிலிருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து உரிமையாக ரிப்போர்ட்டரின் பாக்கெட்டில் திணித்து, “குழந்தைகளுக்குப் பழமும் ஸ்வீட்டும் வாங்கிட்டு போங்க” என்று சொல்லிவிட்டு, குசராஜுவை அழைத்துக்கொண்டு கண்டெய்னருக்குள் போக முற்பட்டான், “அந்தப் பேரீச்சம்பழம் எங்க பையனுக்கு ரொம்பப் பிடிக்கும்,” என்று சந்தோஷ் சாப்பிட்டுக்கொண்டிருந்த பாக்ஸை ஆசையாகப் பார்த்துக்கொண்டே சொன்னான் ரிப்போர்ட்டர்.

*** 

“சுக்ரா பய குடும்பத்துக்கு ரெண்டு லட்சம், அவ்ளோதேன் முடிச்சிரு” என்று குசராஜுவிடம் கண்டிப்புடன் சொன்னான் பிரஃபுல்லா. 

“அவளப் பாத்தீக இல்லா? அந்த தாமி! சண்டைக்காரி பொம்பள. போதாதுக்கு அவங்கப்பன் பெரிய மந்திரவாதியாம், எழவக் கூட்டித் தொலச்சுருவான். சாதாரண ஆளுங்க கெடையாதுங்க!” தவளைக்கும் பாம்புக்கும் நடுவுல மாட்டுன கதையாப் போச்சேடா சாமி என் நெலம என்று மனதிற்குள் புலம்பினான் குசராஜு.

அவ்ளோதான், ரெண்டு லட்சத்தைத் தாண்டி ஒரு பைசா கூடக் கிடையாது என்பது போல் வெளியே வந்து உட்கார்ந்தான் பிரஃபுல்லா. 

குசராஜு கால்களை இழுத்துக் கொண்டு தங்கள் பக்கம் வருவதைப் பார்த்து, முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு இறுகிப்போனாள் தாமி. 

எத்தனையோ விதமாக அவளுக்கு விளக்கி, காம்ப்ரமைஸுக்கு சென்றால் நல்லதென்று சொல்லி எவ்வளவு வேண்டுமோ கேட்கச் சொன்னான். 

தாமியும் அவள் அப்பாவும் தரையில் கணக்குப் போட ஆரம்பித்தார்கள். மணலால் நாலஞ்சு குவியல்கள் செய்தார்கள், அவற்றின் மீது சிறிய கூழாங்கற்களையும் தானியங்களையும் வைத்தார்கள். எடுத்தும், திரும்ப வைத்தும் கணக்கு தொடர்ந்து நடந்துகொண்டிருக்க- ‘இந்த ப்ரோக்கர் பய எவ்வளவுல கொண்டுவந்து நிப்பாட்டுவானோ’ என்று பிரஃபுல்லாவும், ‘இந்த பாழாப்போன கான்ட்ராக்டர்கிட்ட இன்னும் எவ்வளவு வாங்கி கட்டிக்கொள்ள வேண்டுமோ’ என்று குசராஜுவும் தவித்துக் கொண்டிருந்தார்கள். 

ஒரு வழியாக எவ்வளவு கேட்க வேண்டும் என்று தாமியின் காதில் சொன்னார் அவள் அப்பா. பிடிவாதமாகத் தலையாட்டி, கையில் உள்ள பத்து விரல்களையும் ஆட்டிக் காண்பித்து- “தகா தகா மோரென் ஹிசி மோரென் ஹிசி தகா” என்று திரும்பத் திரும்பச் சொன்னாள். 

குசராஜு தலையாட்டிக்கொண்டே “ஆ ஆ! தகா.. காசு… பத்து பத்தாயிரமா? ஆயிரம் பத்து பத்தா? சரியாச் சொல்லு” என்று முக்கி முணங்கி, மணல் குவியல்கள், கூழாங்கற்கள், தானியங்கள், கைவிரல்கள் எல்லாவற்றையும் பெருக்கிக் கணக்குப் போட்டு அவர்கள் எவ்வளவு கேட்கிறார்கள் என்று கண்டுபிடித்தான். திகைத்த குசராஜு திரும்பத் திரும்பக் கேட்டான். 

கடைசியாக காற்றில் மிதப்பது போல் ஓடிவந்து பிரஃபுல்லாவின் காதில் ரகசியமாக, “லட்ச ரூபாய்க்குக் கம்மியா குடுத்தா ஒத்துக்கமாட்டேங்குறாய்ங்க” என்று தன் சாமர்த்தியத்தால் ஒப்புக்கொள்ளச் செய்ததாய் குரலில் வெளிக்காட்டினான் குசராஜு.

நம்பமுடியாதது போல் பெரும் நிம்மதியடைந்தார் பிரஃபுல்லா. அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், “உனக்கென்ன எவ்வளவு வேணாலும் சொல்லுவ, தேயறது எனக்கில்ல?” என்று முனகிக்கொண்டே கண்டெய்னருக்குள் சென்றார்.

‘இவனுக்கு எவ்ளோ பண்ணாலும் திருப்தி இருக்காது போலயே’ என்று பிரஃபுல்லாவை வசைபாடினான் குசராஜு.

அடக்கிக்கொள்ள முடியாமல் ரிப்போர்ட்டர் பக்கத்தில் போய் தாமியின் அப்பாவைக் காண்பித்து- “இவன் பெரிய மந்திரவாதியாம், இவன் அலட்டலப் பாருல! மலைச்சாதி ராசா கூட இவன் முன்னாடி பம்மிட்டு இருப்பானாமா. சிலுப்பிட்டு சண்டக்கோழி கணக்கா நிக்கிறான்! ‘இங்க வாலே, வந்து சிம்மாசனத்துல உக்காருனு’ சௌதரி கூப்புடுறாரு. இவன் என்னலேன்னா… ‘சீ! அசிங்கம், நா ஏறமாட்டேன், தரையிலதேன் உக்காருவேன்னு’ சொல்றான். அதிஷ்டம்னா இதான் போல… அந்த மகாலட்சுமியே உடுப்பக் கழட்டிட்டு வந்து இந்தப் பிரபுல்லா சௌதரிக்குதேன் கண்ணடிக்குது. நீயும நானும்…” என்று கெட்ட வார்த்தையைச் சொல்லாமல் சைகை செய்தான் குசராஜு. 

சத்தமாய்ச் சிரித்துவிட்டு, பாக்ஸிலிருந்து ஒரு பேரீச்சம்பழத்தை எடுத்துக் குசராஜுவுக்குக் கொடுத்தான் ரிப்போர்ட்டர்.

அப்பா வந்து சொன்னதும் தாமிக்குக் கொடுப்பதற்காக பத்து, இருபது ரூபாய் கட்டுகளை வெளியில் எடுத்தான் சந்தோஷ். ‘பேங்குக்கு போய் பணம் எடுத்துட்டு வாடான்னா, எதுக்குடா சில்லறைக் கட்டுகளா தூக்கிட்டு வந்த’ என்று சிடுசிடுக்கப் பார்த்தார் பிரஃபுல்லா. ஆனால் மகன் இரண்டு கைகளாலும் பிடிக்க முடியாத அவ்வளவு பணக்கட்டுகளைப் பிடித்துக் காண்பித்ததும் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டார். 

கையில் கொடுத்தப் பணக் கட்டுகளை ஒன்றுக்குப் பத்து முறையாகப் பார்த்துக் கொண்டார்கள் தாமியும், அவள் அப்பாவும். இதற்குள் சுக்ராவின் பிணத்தை மினி வேனில் ஏற்றியிருந்தார்கள். மறுவார்த்தை பேசாமல் அவர்கள் வேனில் ஏறப் போகும்போது சந்தோஷுக்கு ஏதோ குறையாகப்பட்டது. வேகமாக வந்து அவர்களை நிற்கச் சொன்னான். 

கொடுத்ததைப் பிடுங்கிக் கொள்வார்களோ என்று, பணத்தை முடிந்து வைத்த முந்தானையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் தாமி. எல்லாரும் இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

உள்ளேயிருந்து பத்தாயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுகள் இரண்டை எடுத்துவந்து அப்பாவின் கையில் கொடுத்து அவர்களைக் கூப்பிட்டான். 

‘உனக்குப் பைத்தியம் புடிச்சிருச்சா?’ என்பது போல் அதிர்ச்சியாகிக் கையிலிருந்த பணக்கட்டுகளைப் பார்த்தார் பிரஃபுல்லா. 

குழம்பியபடிப் பார்த்துக்கொண்டே அருகில் வந்தார்கள் தாமி குடும்பத்தார். 

அப்பாவின் கைகளால் சுக்ராவின் குழந்தைகள் இருவர் கையிலும் ஆளுக்கு ஒரு பணக்கட்டை கொடுக்கச் செய்தான் சந்தோஷ். 

எல்லாரும் வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். 

எதிர்பாராத அந்த கருணையைக் கண்டு மலை உருகியது போல் கண்ணீர் சிந்தினாள் தாமி. அப்படியே இரண்டு குழந்தைகளையும் பிரஃபுல்லாவின் பாதங்களில் விழவைத்து வணங்கச் செய்தாள். கைகளை தலைக்கு மேல் கூப்பிப் பலவாறாகக் கும்பிட்டாள். தாமியின் அப்பா பிரஃபுல்லாவின் தலையில் கைவைத்து ராகத்தோடு மந்திரங்களைச் படித்து ஆசிர்வாதம் அளித்தார். 

திருப்பதி உண்டியலே தேவையில்லாமல், புண்ணியம் நேரடியாக வந்து தலையிலிருந்து பாதம் வரை நனைத்தது பிரஃபுல்லாவைத் திக்குமுக்காடச் செய்தது. 

மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்த்தும், கும்பிடு போட்டுக்கொண்டும், நன்றிப் பெருக்கில் நெகிழ்து, நடை தளர்ந்தபடி விடைபெற்றுக்கொண்டுச் சென்றார்கள் அவர்கள். 

சைட்டில் எல்லாரும் சந்தோஷைச் சுற்றிச் சேர்ந்துவிட்டார்கள். மகனைப் பெருமிதத்தோடுப் பார்த்துக்கொண்டிருந்தார் பிரஃபுல்லா. 

அவினேனி பாஸ்கர்

சந்தோஷ், சமையல்காரனின் கையில் ஐயாயிரம் கொடுத்து, “எல்லோருக்கும் சாராயப் பாக்கெட் வாங்கிக் குடு, நல்லா காரசாரமா வஞ்சரம் மீன் கொழம்பு வை, அந்தச் சூட்டுல குவார்ட்டர்ஸ்ல இருக்குற பேயெல்லாம் ஓடிப் போயிறணும் பாத்துக்கோ” என்று சிரித்துக்கொண்டே சொன்னான். மகனின் சாமர்த்தியமானப் பேச்சைக் கேட்டுச் சிரித்துக்கொண்டே அவன் தோள் மீது கைபோட்டுத் தலையாட்டினார் பிரஃபுல்லா. 

எல்லாரும் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டார்கள்.

தண்டாசி மட்டும் மரத்தடியிலிருந்து எழாமல், “அண்ணே என்னய மன்னிச்சிருண்ணே, உனக்கு அநியாயம் பண்ணிட்டேண்ணே, என்னய மன்னிச்சிருண்ணே…” என்று அரற்றிக்கொண்டே இருந்தான்.

(avineny@gmail.com)

-மூலம்: ‘சுக்ர பல்முச்சு’ – 09, ஆகஸ்ட், 2026 ஆந்திர ஜோதி இதழ்.

*

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *