இயற்பியலின் தலைமகள் – சியன்-ஷியுங் வூ – வெங்கட்ரமணன்

அது 1944-ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதி. அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் புதிதாக உருவாகிவந்த B-உலையில் (B Reactor) வேலை செய்துகொண்டிருந்த இயற்பியலாளர்களும் பொறியியல் வல்லுநர்களும் மாபெரும் சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அது உலகின் முதல் அணுகுண்டைத் தயாரிக்கவும் அதன்மூலம் இரண்டாம் உலகப்போரை முடிவுக்குக் கொண்டுவரவும் அமெரிக்கா மேற்க்கொண்ட ‘மன்ஹாட்டன் திட்டம்’ (Manhattan Project) என்ற் மாபெரும் அறிவியல் சூதாட்டத்தின் ஒரு பகுதி. அங்கே அணுகுண்டுக்குத் தேவையான புளுட்டோனியம் எரிபொருள் கனிமங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. தூய யுரேனியம் அல்லது புளுட்டோனியம் அணுசக்தியைப் பெற மிக முக்கியம். சரியாக, செப்டம்பர் 26, இரவு 10:48-க்கு ரியாக்டர்-பீ என்று அழைக்கப்பட்ட அந்த உலை நிலைமாற்றம் (criticality) பெற்றது. அந்த புளுட்டோனிய உலையைக் கட்டமைத்துக்கொண்டிருந்த முதன்மை இயற்பியலாளர் லியோனா வுட்ஸ் மார்ஷல்-ன் (Leona Woods Marshall) வார்த்தைகளில்:
“எதோ தவறு நடந்துவிட்டது. எரிபொருள் குவியலின் வினைத்தன்மை கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது. தொடர்ச்சியாக 100-மெகாவாட் ச்க்தியைப் பெற நாங்கள் உலையைக் கட்டுப்படுத்த செருகியிருந்த நியூட்ரான் கட்டுப்பாடுக்கழிகளை (control rods) வெளியே உருவ வேண்டியிருந்தது. ஒவ்வொன்றாக எல்லா கட்டுப்பாட்டுக்கழிகளுமே உருவப்பட்டுவிட்டன. அப்படியும் உலையின் சக்தி குறைந்து கொண்டிருந்தது. ஒரு நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக, செயலிழந்து உலை நின்றுபோனது.”
அணு உலை தொடர்ச்சியாகச் செயல்பட அதில் தேவையான அளவு நியூட்ரான் இருந்தாக வேண்டும். அதில் ஒன்றும் சிக்கலில்லை. அணுப் பிளவு வினையில் நியூட்ரான்கள் தொடர்ச்சியாக உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும். அதன் எண்ணிக்கை அளவுக்கு அதிகமானால் வினையைக் கட்டுப்பாடுக்குள் வைக்கமுடியாது. எனவே பல்வேறு உலோகங்களால் ஆன கழிகளை உலைக்குள் செருகியும் அதிலிருந்து உருவியும் நியூட்ரான்களின் அளவைத் தேவைக்குள் வைத்திருப்பார்கள். பீ-உலையின் வடிவமைப்பில் ஏதோ தவறாகிவிட்டது. நியூட்ரான்கள் கட்டுப்பாட்டுக் கழிகளைத் தவிற வேறெங்கோ சென்று மறைகின்றன. மாபெரும் அணுக்கரு மேதைகள் என்ரிக்கோ ஃபெர்மி (Enrico Fermi), ஜான் வீலர் (John Wheeler) போன்றவர்கள் நிலைகுலைந்து போனார்கள். செவ்வாய் இரவு துவக்கப்பட்டு புதனன்று செயலிழந்துபோன உலை வியாழக்கிழமை மீண்டும் துவக்கினார்கள். அடுத்த 12-மணி நேரத்துக்குள்ளாக அது மெல்லமெல்ல அணைந்துபோனது.
பின்னாட்களில் பீ-உலையின் வரலாற்றை எழுதிய லியோனா வுட்ஸ் மார்ஷல் ‘ஸெனான் விஷமாதல்’ (xenon poisoning) என்று சொல்லப்பட்ட அந்த சிக்கலைக் கண்டுபிடித்து பீ-உலையை மீட்டெடுத்தற்கான புகழை ஃபெர்மிக்கும் வீலருக்கும் அர்ப்பணிக்கிறார். அவர்கள் இருவரும் மாமேதைகள்தாம், இருவருமே அணுக்கரு ஆராய்ச்சிக்காக நொபெல் பரிசு பெற்றவர்கள். ஃபெர்மி துவக்கத்திலிருந்தே அங்கேதான் இருந்தார். சிக்கலைத் தீர்ப்பதற்காக வீலர் அங்கே வரவழைக்கப்பட்டார். இருவரும் பல்வேறு கருதுகோள்களை முன்வைத்துக் கணக்கிட்டுப்பார்த்தார்கள். களைத்துப்போன ஃபெர்மி தூங்கப்போனார். வீலர் இரவு முழுவதும் கணக்கிட்டு அங்கே நியூட்ரான்களை விழுங்கிக் கொண்டிருப்பது ஸெனான்-135 (135Xe) என்று நிச்சயப்படுத்தினார். புளுட்டோனியத் தொடர்வினையில் அது ஸெனான்-135 என்ற நிலையற்ற ஐசோடோப்பை உருவாக்கும். அப்படிக் கிடைக்கும் ஸெனான் நிலையற்றது. நியூட்ரான்களைத் தன்னுள் இழுத்துக் கொண்டு நிலையான ஐசோடோப்பாக மாறும்; தொடர்வினை நிலைபெற்று நடக்கத் தேவைக்கும் குறைவான நியூட்ரான்களே உலையில் மிஞ்சும். ஒரு விஷத்தைப் போலத் தொடர்வினை அணுஉலையைச் செயலிழக்கச் செய்வதால் இது ‘ஸெனான் விஷமாதல்’ என்று அழைக்கப்படுகிறது. தொடர்ந்து உலையை இயக்க அதிக அளவில் எரிபொருள்களைச் சேர்ப்பது மட்டுமே உதவும் என்றும் கண்டுபிடிக்கபபட்டது. (பின்னாட்களில் செர்னோபில் அணு உலைக்கூடம் சிதைந்து வெடித்துப்போனதில் இந்த 135Xe-க்கு முக்கிய பங்கு உண்டு.)

ஃபெர்மியும் வீலரும் பீ-உலையின் சிக்கலைத் தீர்க்க முயன்றுகொண்டிருந்தபோது அமெரிக்காவின் மறுகோடியில் நியூயார்க் நகரத்தின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஐந்தடி உயரமே கொண்ட சியன்-ஷியுங் வூ (Chien-Shiung Wu) என்ற இயற்பிலாளர் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். கலிபோர்னியாவின் பெர்க்லி பல்கலைக்கழகத்தில் யுரேனியம் அணுக்கருப் பிளவு குறித்த ஆய்வுக்காக டாக்டர் பட்டம் பெற்றவர். இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தின் 1939-1941-ஆண்டுகளில் அணுப்பிளவில் நியூட்ரான்கள் உற்பத்தியாதலையும் உள்வாங்கப்படுதலையும் குறித்த அவர் ஆய்வுகளை மேற்கொண்டார். அவர் டாக்டர் பட்டம் பெற்றது கலிபோர்னியாவில் பெரும் கவனத்தைப் பெற்றது. பிரபல நாளிதழான ஆக்லன்ட் ட்ரிப்யூன் “குட்டிச் சீனப்பெண்ணின் அணுக்களின் மோதல்கள் குறித்த விளக்கம்” என்று தலைப்பிட்டு அவரைப்பற்றிய சிறு செய்தியை வெளியிட்டிருந்தது. வூ-வின் ஆய்வுகள் அணுக்கரு பிளவில் உருவாகும் ஐயோடைன்-135 ஸெனான்-135 இரண்டும் நியூட்ரான்களை உள்விழுங்கி தொடர்வினையைக் குலைக்கும் என்று விளக்கியிருந்தன. அது தொடர்வினை தொடங்கி 12-24 மணிக்குள் நடக்கும் என்று துல்லியமாக அவர் கணக்கிட்டிருந்தார். நியூட்ரான் குறைவால் அணுக்கரு உலை செயலிழந்து போகக்கூடிய நேரம் குறித்த அவரது கணக்கீடு பீ-அணுக்கரு உலையின் செயலிழப்புடன் மிகச் சரியாகப் பொருந்தியது. இது வீலரும் ஃபெர்மியும் வாஷிங்கடன் மாநிலத்தில் ஸெனான் விஷமாதலைக் ‘கண்டுபிடித்தற்கு’ மூன்று ஆண்டுகளுக்கு முன்னால்.

ஸெனான் விஷமாதல் வரலாறு எழுதப்பட்டபோதும், மான்ஹாட்டன் திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியான பீ-அணுவுலையின் வரலாற்றிலும் சியன்-ஷியுங் வூ-க்கு இடம் ஏதும் அளிக்கப்படவில்லை. இது அறிவுலகில் இடம் மறுக்கப்பட்ட இன்னொரு பெண்ணின் கதையா என்று நீங்கள் சலிப்படையலாம். ஆம், காலந்தோறும் இடம் மறுக்கப்பட்ட பெண் மேதைகளின் வரிசையில் இயற்பிலாளர் வூ-க்கு உயரிய இடம் உண்டு. அவர் பதினாறுமுறை நொபெல் பரிக்குப் பரிந்துரைக்கப்பட்டார். அவரைப் பரிந்துரைத்தவர்களில் பல முன்னணி அறிவியலார்களும் நொபெல் பரிசு பெற்றவர்களும் அடக்கம். ஆனால் அவருக்கு ஒருபோதும் நோபெல் பரிசு கொடுக்கப்படவில்லை.
சியன்-ஷியுங் வூ 1912ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள லியூஹே நகரில் பிறந்தார். கல்வியின் மீது மதிப்பும், பெண்களின் அறிவுசார் வளர்ச்சிக்கு ஆதரவும் கொண்ட குடும்பச் சூழலில் வளர்ந்தார். அவரது தந்தை வூ ஸோங்யீ (Wu Zhongyi), பெண்களுக்குக் கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டவர். கல்வி வாய்ப்புகள் குறைவாக இருந்த காலகட்டத்தில், சீனாவில் பெண்களுக்கான ஒரு பள்ளியை நிறுவுவதற்கு அவர் உதவினார். கல்வி மீதான அவரது தந்தையின் அர்ப்பணிப்பு, மகளின் எதிர்கால இலட்சியங்களை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தது. சியன்-ஷியுங் வூ நான்ஜிங்கில் உள்ள தேசிய மத்திய பல்கலைக்கழகத்தில் (National Central University) 1934ஆம் ஆண்டு இயற்பியலில் பட்டம் பெற்றார். தொடர்ந்து சீனாவில் இயற்பியல் ஆய்வுகளிலும் பயிற்றுவித்தலிலும் அவர் ஈடுபட்டாலும் உயர்தர ஆய்வை மேற்கொள்ள மேலைத் தேசங்களுக்குச் செல்வது முக்கியம் என்று நினைத்தார்.
அவருக்கு அமெரிக்காவின் முதன்மை கல்வி நிறுவனங்களில் ஒன்றான மிச்சின் மாநிலப் பல்கலைக்கழங்கத்தில் இடம் கிடைத்தது. ஆனால், அங்கே பின்வாசல் வழியாகத்தான் பெண்கள் கட்டடங்களுக்குள் நுழையவேண்டும் என்றிருந்த கட்டுப்பாட்டை வெறுத்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பெர்க்லி வளாகத்தைத் தேர்ந்தெடுத்தார் அணுக்கரு இயற்பியலின் முக்கிய ஆராய்ச்சி மையங்களில் ஒன்றாக விளங்கிய பெர்க்லியில், துகள் முடுக்கிகள் (particle accelerators) மூலம் பரிசோதனை இயற்பியலை முன்னெடுத்த எர்னஸ்ட் ஓ. லாரன்ஸ் (Ernest O. Lawrence) அவர்களின் வழிகாட்டுதலில் 1940ஆம் ஆண்டு அணுக்கரு இயற்பியலில் முனைவர் பட்டத்தைப் பெற்றார். அந்தக் காலகட்டத்தில் அணுக்கருக்களின் பண்புகள், கதிரியக்கச் செயல்முறைகள் ஆகியவற்றைப் பற்றிய அறிவியல் புரிதல்கள் வேகமாக விரிவடைந்துகொண்டிருந்தன. அணுக்கரு இயற்பியலில் கோட்பாட்டைப் புரிந்துகொள்வது மாத்திரம் போதாது. நேரடியாகக் காண முடியாத நிகழ்வுகளை உருவாக்கி, தனிமைப்படுத்தி, கண்டறிந்து, அளவிடுதலும் அவசியம். வெற்றிகரமான பரிசோதனைகளுக்குக் கருவிகளைத் திறமையாக வடிவமைத்தல், துல்லியமான அளவீடுகள், உண்மையான இயற்பியல் விளைவுகளைப் பரிசோதனைப் பிழைகளிலிருந்து வேறுபடுத்தும் திறன் ஆகியவை அவசியம். வூ இவற்றில் அபாரமான திறமைகளை வளர்த்துக்கொண்டார். விரைவில் முதல்தர இயற்பிய்லாளர்களிடையே அவரது திறமை அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் அவரது தொழில்முறை முன்னேற்றம் உடனடியாகச் சாத்தியப்படவில்லை அமெரிக்காவில் சீனப் பெண் என்ற முறையில், நிரந்தரப் பணிகள், தொழில்முறைத் தொடர்புகள், ஆராய்ச்சி வாய்ப்புகள் ஆகியவை சமமாகப் பகிர்ந்தளிக்கப்படாத அறிவியல் உலகில் அவர் தனது இடத்தைப் பெறப் போராடியாக வேண்டியிருந்தது.
முனைவர் பட்டத்தைப் பெற்ற பிறகு, வூ சிறிது காலம் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார். பின் மாசசூசெட்ஸில் உள்ள ஸ்மித் கல்லூரியில் (Smith College) ஆசிரியர் பணியை ஏற்றுக்கொண்டார். இந்தப் பணி அவருக்குக் கற்பிக்கும் அனுபவத்தை வழங்கியபோதிலும், அணுக்கரு இயற்பியலில் அவர் விரும்பிய ஆராய்ச்சிகளைத் தொடர்வதற்குத் தேவையான ஆய்வக வசதிகள் அங்கு இருக்கவில்லை. எனவே பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார். அந்த முதன்மைப் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் ஆசிரியர் குழுவில் நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற சிறப்பையும் அவர் பெற்றார். வூவின் வாழ்க்கையில் பிரின்ஸ்டன் முக்கிய இடம் வகித்தது. பின்னர் 1944ஆம் ஆண்டு நியூயார்க்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் (Columbia University) சேர்ந்தார். அங்கு அமெரிக்காவின் போர்க்கால அறிவியல் முயற்சிகளுடன் தொடர்புடைய ஆராய்ச்சிகளில் பங்கேற்றார். அப்பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையில் நிரந்தரப் பேராசிரியர் பதவியைப் பெற்ற முதல் பெண் வூ-தான். அவருடைய நீண்டகால அறிவியல் வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கொலம்பியா பல்கலைக்கழகத்திலேயே கழித்தார்.
1942ஆம் ஆண்டு இயற்பியலாளர் லூக் யுவான் (Luke Yuan) என்பவரை மணந்தார். அவர்களுடைய மகன் வின்சென்ட் 1947ஆம் ஆண்டு பிறந்தார். வின்சென்ட்டும் பின்னர் இயற்பியலாளரானார். இரண்டாம் உலகப் போர் அமெரிக்காவில் அறிவியல் ஆராய்ச்சியின் தன்மையையே மாற்றியது. அணுக்கருப் பிளவு மற்றும் அணு ஆயுதங்களின் உருவாக்கம் போன்ற இராணுவப் பயன்பாடுகளைக் கொண்ட திட்டங்களுக்கு அரசாங்கங்கள் பெருமளவு வளங்களை ஒதுக்கின. மன்ஹாட்டன் திட்டம் இயற்பியலாளர்கள், வேதியியலாளர்கள், பொறியியலாளர்கள் மற்றும் பல்வேறு துறை நிபுணர்களை ஒருங்கிணைத்தது. அவர்களுடைய தனித்தனியான பங்களிப்புகள் ஒரு மிகப்பெரிய அறிவியல் முயற்சியின் பகுதிகளாக அமைந்தன. கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது, வூ இந்தப் போர்க்கால அறிவியல் முயற்சியில் பங்கேற்றார். அவரது ஆராய்ச்சிகளில் யுரேனியம் செழுமையாக்கல் (uranium enrichment) தொடர்பான அணுக்கரு இயற்பியல் பிரச்சினைகளும் இடம்பெற்றன. கதிர்வீச்சைக் கண்டறிவதற்குப் பயன்படுத்தப்படும் கைகர் எண்ணிகள் (Geiger counters) உள்ளிட்ட கருவிகளின் மேம்பாட்டிலும் அவர் பங்களித்தார். அணுக்கருப் பொருட்களைப் புரிந்துகொள்வதற்கும் திட்டத்தின் தொழில்நுட்ப நோக்கங்களுக்கு உதவுவதற்கும் மேற்கொள்ளப்பட்ட விரிவான அறிவியல் பணிகளின் ஒரு பகுதியாக இவை அமைந்தன. மறுபுறம் வூவின் போர்க்காலப் பணி, அவரது பரிசோதனைத் திறன்களின் நடைமுறைப் பயன்பாடுகளையும் சாத்தியப்படுத்தியது. கதிரியக்க நிகழ்வுகளைத் துல்லியமாக அளவிடுவதும் அணுக்கருக்களின் நடத்தையைப் புரிந்துகொள்வதும் இராணுவ ஆராய்ச்சிக்கு மட்டுமல்லாமல், அடிப்படை இயற்பியலின் பரந்த வளர்ச்சிக்கும் முக்கியமானவையாக இருந்தன.
மன்ஹாட்டன் திட்டத்தின் அறநெறியைப் புரிந்துகொள்வது மிகச் சிக்கலானது. அணுகுண்டைத் தயாரித்ததன் மூலம் மானுடம் சந்திதவற்றுள்ளே பேரவலமான ஹிரோஷிமா-நகஸாகி நகரங்களின் அழிவுகளை உண்டாக்கியவர்கள் என்று அறிவியலாளர்களைக் குற்றம்சாட்டிவிட்டு எளிதில் கடந்து செல்வதைக் காணமுடிகிறது. அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் ஒரேசயமத்தில் நடைபெற்ற மிகச் சிக்கலான ஆய்வுகளின் தொகுப்பாகவே அணுகுண்டும் அணுசக்தியும் சாத்தியமாயின. ஆனால் அவற்றின் முழுநோக்கங்களையும் இராணுவ வீச்சுகளையும் தெரிந்துகொள்வது அதில் பங்கேற்ற முதன்மை அறிவியலாளர்களுக்குக்கூடச் சாத்தியமில்லாமல் இருந்தது. அறிவியல் ஆய்வுகளுக்கான மானியங்கள் போர்க்கால இராணுவத் தேவைகளுக்கு ஏற்பவே ஒதுக்கீடு செய்யப்பட்டன. மறுபுறம் குவாண்டம் இயற்பிய்லும், அணுக்கரு இயற்பியலும் அதிவேகத்தில் வளர்ந்து, இயற்கையைக் குறித்த நம் புரிதல்களை மாற்றியமைத்துக் கொண்டும், அதனுடன்கூடவே மேலதிகக் கேள்விகளை எழுப்பிக்கொண்டும் இருந்தன. இந்நிலையில் அறிவியல் பேரார்வத்துக்கு இராணுவ அடிப்படையில் வழங்கப்பட்ட மானியம் மாத்திரமே சாத்தியம் என்ற நிதர்சனத்திலிருந்து மேதைகளுக்குக்கூட விலக்கில்லை. வூ-வின் போர்க்காலப் பங்களிப்புகளையும் இந்தக் கோணத்திலிருந்து மாத்திரமே புரிந்துகொள்ள முடியும்.
போர் முடிந்த பின்னர் வூ கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தனது கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்தார். அணுக்கரு ஆராய்ச்சியில் அவர் பெற்ற அனுபவம், பரிசோதனை இயற்பியலில் அவரது நிபுணத்துவத்தை மேலும் வலுப்படுத்தியது. போர்க்கால ஆராய்ச்சியின் நடைமுறைப் பயன்பாடுகளுடன் தனது பணியை மட்டுப்படுத்திக்கொள்ளாமல், அணுக்கருக்களின் நடத்தையையும் அவற்றின் மாற்றங்களை நிர்வகிக்கும் இயற்பியல் விதிகளையும் பற்றிய அடிப்படைக் கேள்விகளில் அவர் மீண்டும் கவனம் செலுத்தினார். உடனடிப் பயன்பாடுகளைக் கொண்ட சிக்கல்களுக்குத் தனது பரிசோதனை அறிவைப் பயன்படுத்திய அதேவேளையில், அறிவியல் கோட்பாடுகளின் ஆழமான அடிப்படைகளையே சவாலுக்கு உட்படுத்தும் கேள்விகளையும் அவர் ஆராய்ந்தார். அவருடைய மிக முக்கியமான அறிவியல் சாதனை இந்த இரு திறன்களின் இணைப்பிலிருந்தே உருவானது.
வூவின் மிகுந்த செல்வாக்குடைய பங்களிப்பு, எளிமையானதாகத் தோன்றினாலும் பிரபஞ்சம் குறித்த அடிப்படை நம்பிக்கையையே சவாலுக்கு உட்படுத்திய ஒரு கேள்வியிலிருந்து உருவானது: அடிப்படை இயற்பியல் விதிகள் பிரதிபலிப்பால் மாறாதவையா?
இயற்பியல் உலகில் சீர்மை குறித்த கேள்விகள் மிக முக்கியமானவை. உதாரணமாக ஒரு மேசையில் உருண்டுகொண்டிருக்கும் பந்தில் செயல்படும் இயற்பியல் விதிகள் அந்த மேசையை ஒரு மீட்டர் இடம் தள்ளிவைத்தால் மாறுமா என்பது சீர்மை குறித்த கேள்வி. இப்படி தள்ளி வைப்பது விதிகளின் தன்மையை மாற்றுவதில்லை என்பதால் விதிகள் இடப்பெயர்வு சீர்மை (Translational symmetry) கொண்டதாகச் சொல்லப்படும். அதேபோல விதிகள் சுழற்சிச் சீர்மையையும் (Rotational symmetry) கொண்டவை. இயல் வரைவுகள் ஆடியில் எதிரொளிப்பதாலும் மாறுவதில்லை என்பது எதிரொளிப்புச் சீர்மை (Reflection symmetry) என அறியப்படுகிறது. அணுக்களின் உலகில் சீர்மை இயற்பியலின் அடிப்படை விதிகளான ஆற்றல் மற்றும் உந்தம் மாறாக் கோட்பாடுகளுடன் பிணைந்தது என்று எம்மி நூர்த்தர் (Emmy Noether) நிறுவினார். சீர்மைகளுள் முக்கியமான ஒன்று இடவியல் ஆயத்தொலைவுகள் எதிர்க்குறிகளாக மாறுதல். அதாவது, முப்பரிமாணச் சட்டகத்தில் (x, y, z) என்ற இடத்தில் இருப்பது (-x,-y,-z) என்ற இடத்திற்குப் பெயர்தல். இதனை நிகர்மை (parity) என்று அழைப்பார்கள். எளிமைப்படுத்திக்கொள்ள இதை இருபரிமாணத்தில் பார்த்தால், ஒரு பொருள் ஆடியில் எதிரொளித்தலைப் போன்றது. உதாரணமாக, உங்கள் கையின் ஆடிப் பிரதிபலிப்பு பிம்பத்தை ஒன்றன்மேல் ஒன்றாகப் பொருத்த முடியாது. அந்த நிலையிலும் நிகழ்வுகள் ஒரே இயற்பியல் விதிகளாலேயே நிர்வகிக்க்படுகின்றன. மீண்டும் எளிமைப்படுத்திச் சொன்னால் நீங்கள் ஒரு பந்தை மேலே எறியும் நிகழ்வை ஆடியில் பார்க்கும் ஒருவர் மெய்யான நீங்களும் உங்கள் ஆடியில் பிரதிபிம்பமும் ஒரே சமயத்தில் பந்தை மேலே எறிந்தால் இரண்டுமே இயற்பியல் அடிப்படையான புவியீர்ப்பு விசையின் காரணமாகக் ஒரே சமயத்தில் தரையை அடையும். இயற்பியலின் பெரும்பாலான விதிகள் நிகர்மை கொண்டவை. ஆனால், அணுக்கரு உலகில் மென் இடைவினை நிகர்மை கொண்டதல்ல என்று வூ நிரூபித்தார்.
நாம் செயல்முறையில் அறியும் எல்லா இடைவினைகளையும் (interactions) அல்லது விசைகளையும், (fundamental forces) – இயற்பியல், வேதியியல் வினைகள் உட்பட – நான்கு அடிப்படை இடைவினைகளிலேயே அடங்கும். இவை மின்காந்த இடைவினை (electromagnetic interaction), ஈர்ப்பு இடைவினை (gravitational interaction), (அணுக்கருப்) பெரு இடைவினை (strong interaction), (அணுக்கரு) மென் இடைவினை (weakinteraction) என்பன. நமக்குப் பழக்கமான பல இயற்பியல் நிகழ்வுகளில், கண்ணாடிப் பிரதிபலிப்பைப் போன்ற நிகர்மை மாற்றத்திற்குப் பிறகும் அதே இயற்பியல் விதிகள் பொருந்துவதாகத் தோன்றுகிறது. 1950களின் நடுப்பகுதி வரை, எல்லா அடிப்படை இடைவினைகளிலும் இந்தப் நிகர்மை மாறாத் தன்மை நிலவுகிறது என்று இயற்பியலாளர்கள் பொதுவாக நம்பினர். இந்த நம்பிக்கை ஆதாரமற்றதாக இருக்கவில்லை. அப்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட பல பரிசோதனைகள் அதற்கு ஆதரவாகவே தோன்றின. மேலும், சமச்சீர் கொள்கைகள் நவீன இயற்பியலின் கோட்பாட்டு அமைப்பில் மைய இடத்தைப் பெற்றிருந்தன. இருந்தபோதிலும், ஆகப் பொதுவானதாகத் தோன்றும் ஒரு கொள்கையாக இருந்தாலும், அதன் விதிவிலக்குகளை வெளிப்படுத்தக்கூடிய சூழல்களை அடையாளம் கண்டு அவற்றைச் சோதித்துப் பார்ப்பது அவசியம். இயற்பியல் உலகில் நம்பிக்கைகளுக்கு ஒருபோதும் இடமில்லை.
1956ஆம் ஆண்டு கோட்பாட்டு இயற்பியலாளர்களான சுங்-தாவோ லீ (Tsung-Dao Lee) மற்றும் சென்-நிங் யாங் (Chen Ning Yang) ஆகியோர் நிகர்மை மாறாமையை ஆதரிக்கும் பரிசோதனைச் சான்றுகளை மறுபரிசீலனை செய்தார்கள். மென் அணுக்கரு இடைவினைகளில் இந்த மாறாமையை உறுதிப்படுத்தும் அளவுக்கு அப்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் போதுமானதாக இல்லை என்பதைக் கண்டார்கள். சில வகையான கதிரியக்கச் சிதைவுகள் உட்பட, அணுக்கருக்களின் மாற்றங்களுக்குக் காரணமான அடிப்படை இடைவினைகளில் நிகர்மை மாறாமல் இருக்கிறதா என்பது இன்னும் முறையாகச் சோதிக்கப்படவில்லை என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். இந்தக் கருத்தை நேரடியாகச் சோதிக்கக்கூடிய பரிசோதனைகளையும் அவர்கள் முன்மொழிந்தார்கள். . ஆனால், அதை உறுதிப்படுத்துவதற்கும மாற்றுக் கணிப்புகளைத் தெளிவாக வேறுபடுத்திக் காட்டவும் துல்லியமான பரிசோதனை தேவைப்பட்டது. பீட்டா சிதைவு தொடர்பாக வூவுக்கு இருந்த விரிவான அனுபவத்தால் அவருக்கு இயல்பிலேயே இதில் ஆர்வம் உண்டானது. பீட்டா சிதைவு என்பது நிலையற்ற அணுக்கரு மாற்றமடைந்து பீட்டா துகள் ஒன்றை வெளியிடும் நிகழ்வாகும். அத்தகைய துகள்களில் எலக்ட்ரானும் ஒன்றாகும்.

வூ அதிகுறை வெப்பநிலையில் வைக்கப்பட்ட கோபால்ட்-60 அணுக்கருக்களைப் பயன்படுத்தி ஒரு பரிசோதனையை வடிவமைத்தார். காந்தப்புலத்தைப் பயன்படுத்தி அணுக்கருக்களின் சுழற்சி ஒரே திசையில் ஒழுங்குபடுத்தப்பட்டது. பின்னர், கதிரியக்கச் சிதைவின்போது வெளிப்படும் எலக்ட்ரான்கள் அணுக்கருச் சுழற்சியுடன் ஒப்பிடும்போது எந்தத் திசையில் வெளியேறுகின்றன என்பது கவனிக்கப்பட்டது. இந்தப் பரிசோதனையை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு, கோபால்ட்-60 அணுக்களை அதிகுளிர் நிலைக்குக் குளிர்விக்க வேண்டும், அந்நிலையில் அணுக்கள் இயக்கம் குறையும்; அவற்றை ஒரு திசையில் ஒழுங்குபடுத்துவது சாத்தியமாகும். இதற்குத் தேவையான கருவிகளுக்காக அவர் தேசிய தரநிலைகள் பணியகத்தைச் (National Bureau of Standards) சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றினார். நிகர்மை மாறாத் தன்மை இருக்கும்போது கண்ணாடிப் பிரதிபலிப்பைப் போன்ற மாற்றத்திற்குப் பிறகும் இரு அமைப்புகளிலும் சமமான முடிவுகள் கிடைக்க வேண்டும். ஆனால், எலக்ட்ரான்கள் ஒரு குறிப்பிட்ட திசையில் அதிகமாக வெளியேறினால், இயற்கை அந்த இரண்டு அமைப்புகளையும் ஒரே மாதிரியாக நடத்துவதில்லை என்பதற்கான சான்று கிடைக்கும்.

காந்தப் புலத்தைக் கொண்டு சுழற்சி ஒரே திசையில் குவிக்கப்பட்ட கோபால்ட்-60 அணுக்கள். இவற்றில் நிகர்மை மாறாமல் இருந்தால் காந்தப்புலத்தைத் திசைமாற்றும்பொழுது வட, தென் புலங்களில் வெளியேறும் எலெக்ட்ரான்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏதுமிருக்காது. (படம் – a நிகர்மை மாறாமை).
ஆனால் வூ-வின் சோதனையில் காந்தப் புலத்தைத் திசைமாற்றும்போது வட, தென் புலங்களில் வெளியேறும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை மாறியிருப்பதைக் கண்டார். (படம் – b நிகர்மை மீறல்). இது மென் அணுக்கரு இடைவினைகளில் நிகர்மை மீறப்படுவதை (parity violation) சோதனை ரீதியாக உறுதிப்படுத்தியது.
1956ஆம் ஆண்டின் இறுதியில் பெறப்பட்ட பரிசோதனை முடிவுகள், 1957ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டன. கோபால்ட்-60 பீட்டா சிதைவில் நிகர்மை மாறாமை பாதுகாக்கப்படுவதில்லை என்பதை அவை நிரூபித்தன. வெளியேறிய எலக்ட்ரான்களின் திசையில் காணப்பட்ட சமச்சீரற்ற தன்மை, மென் இடைவினைகளில் பிரதிபலிப்புச் சமச்சீர்மை நிலவுகிறது என்ற அப்போதைய நம்பிக்கைக்கு முரணாக இருந்தது. வூ-வின் இந்தச் சோதனை முடிவுகள் இயற்பியல் உலகையே உலுக்கியெடுத்தன. இயற்கையின் அடிப்படை விதிகள் முழுவதும் சீர்மை கொண்டவை என்ற நம்பிக்கை முற்றாகச் சிதைந்தது. சீர்மை அழகுணர்வைத் தருகிறது, எனவே அறிவியல் மனம் சீர்மையை எதிர்பார்க்கிறது. கோட்பாடுகள் அழகுணர்வைக் கடந்து அடிப்படை விதிகளை சோதனைகள் மூலம் அளவிட்டு சான்று பெற்றாக வேண்டும் என்ற உண்மையை இந்தக் கண்டுபிடிப்பு வலியுறுத்திச் சொன்னது.
கோட்பாட்டு இயற்பியலுக்கும் (theoretical physics) பரிசோதனை இயற்பியலுக்கும் (experimental physics) இடையிலான பரஸ்பர உறவையும் இந்தச் சாதனை எடுத்துக்காட்டுகிறது. லீயும் யாங்கும் ஒரு அடிப்படைப் பிரச்சினையை அடையாளம் கண்டு, நிகர்மை மாறாமையைச் சோதிப்பதற்கான கோட்பாட்டு வாதங்களை முன்வைத்தனர். வூ அந்தக் கருத்துகளை ஒரு கடினமான பரிசோதனையாக மாற்றி, அவற்றை உறுதிப்படுத்தும் சான்றுகளைப் பெற்றார். கோட்பாட்டு இயற்பியலாளர்களின் பங்களிப்பும் பரிசோதனை ஆராய்ச்சியாளர்களின் பணியும் இணைந்ததன் மூலம் துகள் இயற்பியலின் புரிதல் திறமடைந்தது.
1957ஆம் ஆண்டு, நிகர்மை விதிகள் தொடர்பான ஆய்வுக்காக லீயும் யாங்கும் இயற்பியலுக்கானோ நொபெல் பரிசைப் பெற்றனர். ஆனால், நிகர்மை மாறாமை மீறப்படுவதைச் சோதனை ரீதியாக உறுதிப்படுத்திய வூ அந்தப் பரிசுப் பட்டியலில் இடம்பெறவில்லை. இந்த விடுதல் பல விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. வூவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்றும், அவரும் நோபல் பரிசைப் பகிர்ந்துகொண்டிருக்க வேண்டும் என்றும் பல விஞ்ஞானிகளும் அறிவியல் வரலாற்றாசிரியர்களும் வாதிட்டுள்ளனர். அவரது பரிசோதனைச் சான்று இல்லாமல், கோட்பாட்டு முன்மொழிவு இவ்வளவு விரைவாகவும் உறுதியாகவும் நிரூபிக்கப்பட்டிருக்காது. வழக்கத்திற்கு மாறான சூழல்களில் சிக்கலான பரிசோதனையை வடிவமைத்து, மிகுந்த துல்லியத்துடன் செயல்படுத்துவதற்கு அவர் அபாரமான தொழில்நுட்பத் திறனையும் அறிவியல் ஆற்றலையும் வெளிப்படுத்தினார். எனவே அவருக்கும் நொபெல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது.
இந்த விவாதம் அறிவியல் ஆய்வுகளில் விருதுகளும் அங்கீகாரங்களும் எப்படிப் பகிர்ந்தளிக்கப்படுகின்றன என்ற முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. புதிய கருத்துகளை உருவாக்குபவர்கள் பெரும்பாலும் அறிவியல் கண்டுபிடிப்புகளின் முக்கிய நபர்களாகக் கருதப்படுகிறார்கள். அதேவேளையில், அந்தக் கருத்துகளைச் சோதிக்கும் பரிசோதனையாளர்கள், பிறர் உருவாக்கிய கணிப்புகளைச் சரிபார்ப்பவர்களாக மட்டுமே பார்க்கப்படலாம். இதனால் பரிசோதனைப் பணியில் அடங்கியிருக்கும் படைப்பாற்றலும் அறிவுசார் உன்னதமும் மறைக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஒன்றுகொன்று முரணான கருதுகோள்களைத் தெளிவாக வேறுபடுத்திக் காட்டக்கூடிய பரிசோதனையை வடிவமைப்பது ஒரு முக்கியமான அறிவியல் சாதனையாகும். அது கோட்பாட்டுச் சிக்கல்களை விடுவித்து இயல் உலகின் உண்மையைத் தெளிவாக்கும்.
Physics World இதழில் மாக்டோல்னா ஹார்கிட்டாய் (Magdolna Hargittai) எழுதிய கட்டுரை, வூ-க்கு நொபெல் பரிசு கிடைக்காமல் போனதைப் பாலினப் பாகுபாட்டின் நேரடியான விளைவாக மட்டுமே கருதுவது சரியா என்ற கேள்வியை எழுப்புகிறது. லீயும் யாங்கும் முக்கியமான கோட்பாட்டுப் பங்களிப்புகளைச் செய்தனர் என்பதையும், நிகர்மை மாறாமை மீறப்படுவதை நிரூபித்த பரிசோதனைகளில் பல விஞ்ஞானிகளும் ஒத்துழைப்பாளர்களும் ஈடுபட்டனர் என்பதையும் ஹார்கிட்டாய் வலியுறுத்துகிறார். வூவின் குழுவைத் தவிர மற்ற ஆராய்ச்சிக் குழுக்களும் இதே பிரச்சினையை ஆராய்ந்துகொண்டிருந்தன. அதே காலகட்டத்தில் சுயாதீனமான பரிசோதனைச் சான்றுகளும் வெளிவந்தன. எனவே, 1957ஆம் ஆண்டு நோபெல் பரிசு வழங்கப்பட்ட சூழல், இரண்டு ஆண் கோட்பாட்டு இயற்பியலாளர்களையும் அங்கீகாரம் பெறாத ஒரு பெண் பரிசோதனை இயற்பியலாளரையும் எளிமையாக ஒப்பிடுவதைக் காட்டிலும் சிக்கலானது.
நொபெல் பரிசுக்கான பரிந்துரைகள், கோட்பாட்டு ஆய்வுகள் வெளியிடப்பட்ட காலம், பரிசோதனை முடிவுகள் வெளிவந்த நேரம் ஆகியவற்றையும் அண்மைக்கால வரலாற்று விவாதங்கள் ஆராய்ந்துள்ளன. லீயும் யாங்கும் 1956ஆம் ஆண்டு வெளியிட்ட கோட்பாட்டு ஆய்வை 1957ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நோபல் பரிசு அங்கீகரித்தது. அதேவேளையில், தீர்மானகரமான பரிசோதனை முடிவுகள் 1957ஆம் ஆண்டில்தான் வெளியிடப்பட்டன. இந்தக் காலவரிசை நோபல் பரிசு வழங்கப்பட்டதைப் புரிந்துகொள்வதற்கு முக்கியமானது. எனினும், அங்கீகாரம் மற்றும் பல்வேறு பங்களிப்புகளின் ஒப்பீட்டு முக்கியத்துவம் குறித்த எல்லாக் கேள்விகளுக்கும் அது விடையளிப்பதில்லை
இங்கு எழும் கேள்வி, வூவின் பங்களிப்பு முக்கியமானதா என்பதல்ல; அதன் முக்கியத்துவம் சந்தேகத்திற்கு இடமின்றி நிறுவப்பட்டுள்ளது. பல்வேறு அறிவுசார் மற்றும் பரிசோதனைப் பணிகளைச் சார்ந்த ஒரு கண்டுபிடிப்பில் அறிவியல் நிறுவனங்கள் எவ்வாறு அங்கீகாரத்தைப் பகிர்ந்தளிக்கின்றன என்பதே விவாதத்தின் மையமாகும்.
இந்த விவாதத்தில் பாலினத்தின் பங்கையும் புறக்கணிக்க முடியாது. வூ பணியாற்றிய கல்விச் சூழலில் பெண்கள் மிகவும் குறைவாகவே இடம்பெற்றிருந்தனர். அவர்களுடைய தொழில்முறைத் திறமைகளை நிரூபிப்பதற்கும், ஆண்களுக்கு வழங்கப்பட்ட அதே அளவிலான அதிகாரத்தையும் மதிப்பையும் பெறுவதற்கும் பெண்கள் கூடுதல் தடைகளை எதிர்கொண்டனர். பாகுபாடு குறித்த வூவின் அனுபவங்களையும் அவரது சொந்தக் கருத்துகளையும் கருத்தில் கொள்ளும்போது, அவருக்குக் கிடைத்த அங்கீகாரத்தைப் பாலினம் பாதித்ததா என்று ஆராய்வது நியாயமானதாகும். இருப்பினும், நொபெல் குழுவின் முடிவுக்கு ஒரே ஒரு காரணம்தான் இருந்தது என்று வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் உறுதியாகக் கூறுவது மிக எளிமைப்படுத்தப்பட்ட முடிவாகிவிடும்.
தன் வாழ்நாளில் வூ பல முக்கியமான விருதுகளைப் பெற்றார். 1978ஆம் ஆண்டு இயற்பியல் உலகின் முதன்மை கௌரவங்களில் ஒன்றான முதல் வுல்ஃப் பரிசு (Wolf Prize in Physics) அவருக்கு வழங்கப்பட்டது. இதற்கு முன்பு, 1964ஆம் ஆண்டு தேசிய அறிவியல் அகாடமியின் காம்ஸ்டாக் இயற்பியல் பரிசையும் (Comstock Prize in Physics), 1975ஆம் ஆண்டு தேசிய அறிவியல் பதக்கத்தையும் பெற்றிருந்தார். 1975ஆம் ஆண்டு அமெரிக்க இயற்பியல் கழகத்தின் (American Physical Society) தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்ணாக கௌரவம் பெற்றார். இந்த விருதுகள் அறிவியல் சமூகத்தில் அவருக்கிருந்த உயர்ந்த மதிப்பை வெளிப்படுத்தின. இருந்தாலும், அவை நொபெல் பரிசு விவாதத்தின் முக்கியத்துவத்தை நீக்கிவிடவில்லை. அறிவியல் சாதனைகள் எவ்வாறு மதிப்பிடப்படுகின்றன, கூட்டு ஆராய்ச்சியின் பங்களிப்புகள் வரலாற்றில் எவ்வாறு பதிவு செய்யப்படுகின்றன, அனைவரின் பங்களிப்புகளுக்கும் நியாயமான அங்கீகாரம் கிடைப்பதை நிறுவனங்கள் எவ்வாறு உறுதிப்படுத்தலாம் என்பன போன்ற கேள்விகளை அவரது வாழ்க்கை இன்றும் எழுப்புகிறது.
வூ அர்ப்பணிப்புள்ள ஆசிரியராகவும் விளங்கினார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அவர் மாணவர்களுக்கும் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கும் பரிசோதனை இயற்பியலைக் கற்பித்தார். முறையான தயாரிப்பு, நுணுக்கமான கவனம், நிறுவப்பட்ட கருத்துகளைக் கேள்விக்குட்படுத்தும் மனப்பான்மை ஆகியவற்றைத் தன் மாணவர்களிடையே வலியுறுத்தினார். மேம்பட்ட கருவிகளின் நம்பகத்தன்மையையும் மிகச் சிறிய விளைவுகளின் துல்லியமான விளக்கத்தையும் சார்ந்திருந்த அணுக்கரு இயற்பியலில் இத்தகைய பண்புகள் மிகவும் முக்கியமானவை. வூ இவற்றைத் தன் மாணவர்களுக்குத் தொடர்ச்சியாகப் போதித்துக் கொண்டிருந்தார். 1981ஆம் ஆண்டு ஓய்வுபெறும் வரை அவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தனது கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்தார். அவருடைய சாதனைகள் அவரைத் தலைமுறையின் தலைசிறந்த பரிசோதனை இயற்பியலாளர்களில் ஒருவராக நிலைநிறுத்தின. அவரது புகழ் அமெரிக்காவைத் தாண்டி உலகம் முழுவதும் பரவியது.
இருபதாம் நூற்றாண்டின் அறிவியல் துறையில் பெண்கள் எதிர்கொண்ட அனுபவங்களைப் புரிந்துகொள்வதற்கு வூவின் வாழ்க்கை முக்கியமான கண்ணோட்டத்தை வழங்குகிறது. அவருடைய மறுக்கமுடியாத திறமைகள் அவருக்குப் புகழ்பெற்ற நிறுவனங்களில் இடங்களைப் பெற்றுத்தந்தபோதும், பெண்கள் குறைவாக இடம்பெற்றிருந்த சூழல்களில் அவர் பணியாற்றினார். அங்கே பெண்களின் அதிகாரமும் தொழில்முறைத் திறமையும் அடிக்கடி கேள்விக்குட்படுத்தப்பட்டன. அவர் தன்னைத் தொடர்ச்சியாக நிரூபித்துக்கொண்டே இருக்கவேண்டியிருந்தது. பிரின்ஸ்டனில் அவர் பெற்ற நியமனமும், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அவர் அடைந்த முன்னேற்றமும் தனித்துவமான, மாபெரும் சாதனைகள் என்பது நிச்சயம்.
வூவின் அனுபவங்கள் பாலினத்தால் மட்டுமல்லாமல், சீன வம்சாவளியைச் சேர்ந்தவராக இருந்ததாலும் வடிவமைக்கப்பட்டன. அவர் தனது அறிவியல் உலகில் தனக்கான இடத்தைப் பெறப் போராடிக்கொண்டிருந்த காலகட்டத்தில், ஆசியர்களுக்கு எதிரான மனப்பான்மைகளும் கட்டுப்பாடுகள் நிறைந்த குடியேற்றக் கொள்கைகளும் சீனக் குடியேறிகளின் வாய்ப்புகளைப் பாதித்தன. 1954ஆம் ஆண்டு வூ அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றார். இருந்தபோதும், சீனாவுடனான அவரது உறவு அவரது தனிப்பட்ட அடையாளத்தில் முக்கிய இடத்தைத் தொடர்ந்து வகித்தது. சீனாவின் அரசியல் மாற்றங்களும் சர்வதேசப் பயணங்களுக்கான கட்டுப்பாடுகளும் குடும்பத்தினருடன் தொடர்பைப் பேணுவதில் சிக்கல்களை ஏற்படுத்தின.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் பெண்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை ஊக்குவிப்பதில் வூ அதிக கவனம் செலுத்தினார். பெண்களும் சிறுமிகளும் அறிவியல் கல்வியைத் தொடர்வதற்கான திட்டங்களை அவர் ஆதரித்தார். அறிவியல் ஆராய்ச்சியில் பெண்களின் பங்கேற்பைக் கட்டுப்படுத்திய தவறான கருத்துகளைப் பற்றியும் அவர் தொடர்ச்சியாகப் பேசினார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்முறை முன்னேற்றம் ஆகியவற்றில் சமத்துவம் ஏற்படுவதற்கு தனிநபரின் திறமை மட்டும் போதாது, சூழலில் மாற்றம் தேவை என்பதை அவர் ஓயாமல் சொல்லிக்கொண்டிருந்தார். மிகச் சிறந்த அறிவியல் வாழ்க்கையையும் பெண்ணுரிமைக் குரலையும் ஒருங்கிணைத்து வூ-வின் தனித்துவமிக்க சாதனை. பெண்களும் விஞ்ஞானிகளாக முடியும் என்று அவர் வாதிட்டது மட்டுமல்ல; சிக்கலான பரிசோதனைகளை வழிநடத்தவும், அடிப்படை அறிவியல் புரிதலை மாற்றவும் பெண்களால் முடியும் என்பதைத் தனது சாதனைகளின் மூலம் நிரூபித்தார்.

சியன்-ஷியுங் வூ 1997ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி நியூயார்க்கில் காலமானார். அதற்குள் அவர் தனது வாழ்காலத்தின் தலைசிறந்த பரிசோதனை இயற்பியலாளர்களில் ஒருவராக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டிருந்தார். அவரது ஆராய்ச்சிகள் இயற்கை விதிகள் குறித்த அடிப்படை நம்பிக்கையை மாற்றியிருந்தன. அணுக்கரு இயற்பியலுக்கான அவரது பங்களிப்புகளுக்காகப் பல விருதுகளையும் பெற்றிருந்தார். அறிவியல் துறையில் அவரது சிறப்பையும் ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய துறையில் முன்னேறிய பெண்ணாக அவரது வரலாற்று முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டும் வகையில் அவர் அடிக்கடி “இயற்பியலின் முதல் பெண்மணி” (First Lady of Physics) என்று அழைக்கப்படுகிறார்.
இறுதியாக, இயற்பியல் உலகில் சியன்-ஷியுங் வூவின் இடம் அவர் பெறாத ஒரு விருதால் வரையறுக்கப்படுவதில்லை. அவர் நிறுவ உதவிய அறிவியல் கோட்பாடுகள், அவர் சாதித்துக்காட்டிய பரிசோதனைத் துல்லியம், அவர் ஊக்கமளித்த அடுத்த தலைமுறை விஞ்ஞானிகள் ஆகியவற்றில்தான் அவரது உண்மையான, நிலையான பெருமை அடங்கியுள்ளது. அறிவியல் முன்னேற்றம் என்பது நிறுவப்பட்ட நம்பிக்கைகளைக் கேள்விக்குட்படுத்துவதிலும், நம்பகமான சான்றுகளை வலியுறுத்துவதிலும், மனித அறிவை விரிவுபடுத்தும் அனைவரின் பங்களிப்புகளையும் அங்கீகரிப்பதிலுமே அடங்கியுள்ளது என்பதை வூ-வின் வாழ்க்கை நமக்குச் சொல்லிக்கொண்டேயிருக்கிறது.
*
மேலதிக வாசிப்புக்கு:
- Chiang, T.-C. (2014). Madame Wu Chien-Shiung: The First Lady of Physics Research (T.-F. Wong, Trans.). World Scientific.
- Hargittai, M. (2012, September 13). Credit where credit’s due? Physics World. https://physicsworld.com/a/credit-where-credits-due/
- Larsson, M., & Wyss, R. (2026, February 3). Twenty-three nominations, yet no Nobel prize: How Chien-Shiung Wu missed out on the top award in physics. Physics World. https://physicsworld.com/a/twenty-three-nominations-yet-no-nobel-prize-how-chien-shiung-wu-missed-out/
*
