தோற்கடிக்கப்பட்ட அன்னை – ஜெயமோகன்

சங்க இலக்கியங்களைப் படிக்கும்போது ஒரு ஐயம் இன்றைய வாசகனைக் குடையும். அன்றைய பாலியல் ஒழுக்கம் எத்தகையது: அன்று ஆண்பெண் உறவு மிக இறுக்கமற்று இருந்ததாகவே சங்கப்பாடல்கள் காட்டுகின்றன. களவு, உடன்போக்கு, பரத்தைமை என்ற மூன்று கருக்கள் இன்றைய தமிழ் ஒழுக்கச்சூழலில் வைத்துப் புரிந்துகொள்ள மிகவும் சிரமமானவை.
சங்க காலகட்டம் இருமுறை மறுகண்டுபிடிப்புச் செய்யப்பட்டது. பத்தாம் நூற்றாண்டில் சோழர்கால கட்டத்தில் ஒரு முறை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் மறுமுறை. இரு தருணங்களிலும் அது விரிவான உரைகள் மூலம் மறுவாசிப்புக்கு உள்ளாக்கப்பட்டது. நாம் இன்று காணும் புராதன உரைகளான நச்சினார்க்கினியர், பரிமேலழகர் உரைகள் முதல் காலகட்டத்துக்கு உரியவை. இரண்டாம் காலகட்டத்தில் உ.வே.சாமிநாதய்யர் முதல் இன்று வரை நீளும் உரைக்காரர்கள் உள்ளனர். இரு காலகட்டங்களிலும் புதையுண்ட மரபைக் கண்டெடுத்து மறுஆக்கம் செய்யும் தீவிரமான உழைப்பு செயல்பட்டுள்ளது. ஆனால் இவ்விரு தருணங்களிலுமே சங்க காலகட்டத்தின் பாலியல் ஒழுக்கமுறை பெரும் தர்மசங்கடங்களை உருவாக்கியுள்ளது. இரு காலகட்டங்களிலும் உரையாசிரியர்கள் சங்ககாலப் பாலியல் ஒழுக்கமுறையை மழுப்ப, மறுவிளக்கம் அளிக்க, இடைவிடாது முயல்வதைக் காணலாம்.
இவ்வுரைகளை முற்றும் கவனிக்காமல் சங்கப்பாடல்களின் வார்த்தைகளை மட்டும் கவனித்து வாசிக்கும் வாசகன் அடைவது இன்று நாம் கற்பனையே செய்ய முடியாத ஒரு பாலியல் சுதந்திரம் இருந்த காலகட்டத்தை. களவையே எடுத்துக்கொள்வோம். ஆண் தன் பெண்ணை மலைச்சாரலில், விளைநிலத்தில், மேய்ச்சல்வெளியில், கடற்கரையில் எங்கு வேண்டுமானாலும் கண்டுகொள்கிறான். அவனை ஏற்பதா வேண்டாமா என்று முடிவு செய்வது அப்பெண்தான். ஏற்றால் உடனே கூடல்தான். கூடல் சாதாரணமாக எங்கும் நிகழக்கூடியதாக உள்ளது. இரவில் காதலனைச் சந்திக்கச் செல்வதும் அவன் அவள் வீட்டுக்கு வருவதும் சாதாரணமாக நிகழ்கிறது. இது பாலியல் ஒழுக்கத்தின் ஒரு முறையாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
சங்கப் பாடல்களில் தொழில் சார்ந்து சாதிகளாகப் பிரிவுபட்ட சமூகத்தின் சித்திரம் கிடைக்கிறது. ஆனால் களவு அந்த எல்லைகளைப் பேணுவது இல்லை. மருதநிலத்து நிலக்கிழாரின் மகன் மீனவப் பெண்ணை களவுறவுக்குத் தேடி வருவது சாதாரணமாக உள்ளது. ஒரு பாடலில் தேடி வரும் கிழார் மகனை ‘புலவு நாறுதும் செலநின்றீமோ’ என்று கடியும்போது தோழி ‘எம்மனோரில் செம்மலும் உடைத்தே’ என்கிறாள். ஆனால் வாளால் வெட்டப்பட்டதுபோல தேர்ச்சக்கரத்தால் வெட்டப்பட்ட மலர்கள் தரையில் கிடப்பது கண்டு தலைவன் தன்னைத் தேடிவந்திருப்பதை ஊகித்து மகிழும் தலைவியும் காணக் கிடைக்கின்றனர். சங்க காலச்சமூகத்தின் குடும்பம், சாதியமைப்பு போன்ற கட்டுப்பாடுகளுக்கு அடியில் களவுறவு நிலத்தடி நதி போல ஓடிக்கொண்டிருக்கும் காட்சியே சங்க இலக்கியம் நமக்கு அளிக்கிறது.
வீட்டாரை விலக்கி, காதலனுடன் செல்வது சமூகத்தை அதிர்ச்சி கொள்ள வைக்கும் ஒரு மீறல் அல்ல, உடன்போக்கு என்ற பேரில் ஓர் ஒழுக்கமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது அது. இவ்வமைப்பு நமக்குக் கேள்விகளை எழுப்புகிறது. களவும் உடன்போக்கும் இத்தனை சாதாரணமாக இருந்த சமூகம் எப்படி ஒருத்திக்கு ஒருவன் என்ற நெறியை (ஒருவனுக்கு ஒருத்தி என்ற பேச்சே சங்க காலகட்டத்தில் இல்லை) கறாராகப் பேண முடியும்? உடன்போக்கு மூலம் வெளியேறுபவர்கள் தொடர்ந்து சமூகத்தின் கட்டமைப்பை மாற்றியபடியேதானே இருக்க வேண்டும்? நச்சினார்க்கினியரும் சரி, உ.வே.சாமிநாதய்யரும் சரி, எஸ்.வையாபுரிப் பிள்ளையும் சரி இக்கேள்விகளை தலைவிகளின் கற்புநெறி என்ற பதிலை வைத்தே தாண்டிவிடுகிறார்கள்.
சங்க காலத்தைத் தாண்டி வருவோம். காப்பிய காலகட்டத்தில் களவும் உடன்போக்கும் எதுவுமே இல்லை! கண்ணகிக்குப் பன்னிரண்டு வயதுக்குள் மணம் நிகழ்ந்துவிடுகிறது. அவள் ‘வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலாத’ அந்தப்புரப் பெண். கற்பின் செல்வி. அவளது திருமணத்தை மாமுது பார்ப்பான் மறைவழி காட்டி நடத்தி வைக்கிறான். அவள் கோவலனைப் பார்த்தே இருக்கமாட்டாள். திருமணத்துடன்தான் கோவலனுடனான அவளது உறவே துவங்குகிறது. ‘மாசறு பொன்னே வலம்புரி முத்தே’ என்று அவன் நலம் பாராட்டுகையில் ஒரு சொல்கூட பேசாத அளவுக்கு கற்பு இறுகிப்போன பெண் அவள்.
இந்த மாற்றம் எப்படி நடந்தது? உண்மையில் அப்போது, சங்கப்பாடல்கள் எழுதப்பட்ட காலகட்டத்தில் தமிழ்மண்ணில் அப்பாடல்கள் காட்டும் சமூகம் இல்லை என்பதே என் ஊகம். அப்பாடல்கள் அக்கால நிகழ்த்துகலைகளின் ஒரு பகுதியாக விளங்கியவை. அவற்றில் உள்ள சீரான தன்மை அரங்க நெறிமுறைகளை ஒட்டி உருவானதாக இருக்கலாம். ஆகவேதான் குறிஞ்சி நிலத்தில் பிரிவே நிகழவில்லை, பாலையில் கூடலின் மனநிலையே இல்லை. அவை நேரடியான சமூகச் சித்திரங்கள் அல்ல. அவை எழுதப்பட்ட காலத்தில் நினைவாக மாறிவிட்டிருந்த ஒரு காலகட்டத்தைத் தங்கள் புனைவின் களமாகக் கொண்டுள்ளன.
அது கலையின் அடிப்படை இயல்புகளில் ஒன்று. அது இறந்த காலத்தையே அதிகமும் களமாகக் கொள்கிறது. ‘ஒரே ஒரு காலத்திலே’ என்றுதானே எல்லாக் கதைகளும் துவங்குகின்றன. மேலும் இந்நிகழ்த்து கலைகள் பல தலைமுறைகளாகக் கைமாறிச் செல்பவை. இன்றும் நம் பரதநாட்டியம் சென்றுபோன மன்னர் காலநெறிகளைத்தானே அதிகம் காட்டுகிறது. புறநானூறுக்கும் அகத்துறை நூல்களுக்கும் இடையே காணப்படும் பெரும் கலாச்சார வேறுபாட்டை இப்படித்தான் புரிந்துகொள்ள முடியும். புறநானூறு காட்டும் சமூகம் ஆண்களுக்கு மைய இடம் கொண்ட போர்ச்சமூகம். ஏனெனில் அது சமகால வரலாறு. அங்கே பெண்கள் வீரர்களைப் பெறுகிறார்கள், வீரர்களுடன் உடன்கட்டை ஏறுகிறார்கள். ஆனால் அகத்துறை நூல்கள் பெண்களுக்குச் சுதந்திரமும் தனித்துவமும் அனுமதிக்கப்பட்ட சமூகச்சித்திரத்தை அளிக்கின்றன. அவை அப்போது கலையின் நினைவில் மட்டும் எஞ்சிய ஒரு காலகட்டத்தைச் சார்ந்தவை.
அகத்துறை நூல்கள் காட்டும் அந்த முந்தைய சமூகம் ஏன் அத்தனை சுதந்திரத்தைப் பெண்களுக்கு அளித்தது? அதற்கான விடையை முதலில் ஃப்ரெடரிக் எங்கல்ஸில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ‘குடும்பம் தனிச்சொத்து சமூகம்’ என்ற நூலில் எங்கல்ஸ் எல்லா புராதனச் சமூகங்களும் தாய்வழிச் சமூகங்களே என்று சொல்கிறார். அந்நூலிலேயே கேரள (நாயர்) சமூகத்தின் தாய்வழிச் சமூக அமைப்பைப் பற்றிய குறிப்பும் உள்ளது. பல வகையிலும் சங்ககாலத்துக்கு முந்தைய தமிழ்நாட்டு கலாச்சாரத்தை அறிய கேரளம் சிறந்த களமாக அமையும் என்று கேரள வரலாற்றாசிரியரும் நாவலாசிரியருமான மறைந்த பி.கே.பாலகிருஷ்ணன் சொல்வது உண்டு. மலைகள் சூழத்தனித்து விடப்பட்டமையினாலோ என்னவோ தமிழகம் அடைந்த பல வகையான கலாச்சாரப் பரிணாமங்களை அடையாமல் தேங்கி நின்றுவிட்ட ஒரு நிலப்பகுதியாகவே கேரள மண்ணை பாலகிருஷ்ணன் தன் ‘சாதியமைப்பும் கேரள வரலாறும்’ நூலில் சொல்கிறார். ஆதித்தமிழின் சில வகை பழங்குடி வகை பேதங்கள் பிற்பாடு சமஸ்கிருதத்துடன் கலந்து உருவானதே மலையாளம், கேரளத் தாய்வழி சமூக அமைப்பு நம் தொல்பழங்கால சமூக அமைப்பு குறித்து பல வகையான சித்திரங்களை அளிக்கிறது. சில முக்கிய தனித்தன்மைகளைப் பற்றி மட்டும் காணலாம். ஒன்று: தாய்வழிச் சமூக அமைப்பில் நாம் இன்று காணும் பாலியல் ஒழுக்க நெறிகள் இருக்காது. சங்க காலத்தில் மெல்லத் துவங்கி தொல்காப்பியத்தால் பிற்பாடு வரையறுக்கப்பட்டு சிலப்பதிகார காலகட்டத்தில் உறுதிசெய்யப்பட்ட நமது பாலியல் நெறியை ‘கருப்பை மீதான கட்டுப்பாடுகள்’ என்று எளிதாக வரையறை செய்துவிடலாம். தந்தைவழிச்சமூகம் பிறக்கும் குழந்தையின் உதிர அடையாளத்தை நிலைநாட்டும் பொருட்டு உருவாக்கிய நெறிகள் இவை. ஆண்குறிக்கு அன்றும் இன்றும் கடிவாளம் இல்லை. தாய்வழிச் சமூகஅமைப்பு பெண்ணின் வாரிசாகக் குழந்தையைப் பார்ப்பதனால் தந்தை முக்கியமான அடையாளம் அல்ல. ஆகவே பெண் கட்டற்ற பாலியல் சுதந்திரம் கொண்டிருக்கிறாள்.
நூறு வருடம் முன்புகூட கேரளத்தில் கட்டற்ற பாலியல் சுதந்திரம் பெண்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. என் பாட்டிக்குக் குறைந்தது பதினைந்து கணவர்கள். அவர் சமஸ்கிருதத்தில் ஆழ்ந்த புலமை கொண்டிருந்தார். நீதிமன்றங்களுக்கு நேரடியாகச் சென்று வழக்குகளை நிகழ்த்தினார். அன்றைய கேரளத்தில் சுமங்கலியோ விதவையோ வாழாவெட்டியோ இல்லை. நிலம் பெண்ணுக்கு உரியது, குழந்தைகளும் அவளுடையவை. குலப்பெயர் அவளுக்கு உரியது. சமூகத்தின் அடிப்படை அலகே அவள்தான். ஒரு குடும்பம் ‘தாய்வழி’ என்றுதான் சொல்லப்பட்டது. இன்னும் ஆர்வமூட்டும் விஷயங்கள் உண்டு. தமிழகத்தில் தாய், சகோதரி ஆகியோரின் கற்பைத் தொடர்புபடுத்தி புழக்கத்தில் உள்ள மிகப் பெரும்பாலான வசைகள் கேரளத்தில் சென்ற தலைமுறை வரை இல்லை. மேலும் முக்கியமான விஷயம் கேரளப் பெண்கள் சென்ற தலைமுறை வரைகூட வண்ண வண்ண உடைகள் அணிவதோ அலங்காரங்கள் செய்துகொள்வதோ இல்லை. எல்லாருக்குமே வெள்ளை ஆடைதான் (முண்டு).
இரண்டாவது தனித்தன்மை, தாய்வழிச் சமூகஅமைப்பு தாய் தெய்வங்களை, பெண் தெய்வங்களை உருவாக்கியபடியே உள்ளது என்பது. கேரளத்தில் முக்கிய தெய்வங்கள் தாய் தெய்வங்களே. சிவனும் விஷ்ணுவும் பிற்பாடு வேரூன்றினாலும்கூட பெரும்பாலான மக்களுக்கு பக்தி தாய் தெய்வங்கள் மீதுதான். குலதெய்வங்கள் பெண் தெய்வங்கள்தான். எங்கள் குடும்பம் பரம்பரையாக திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாளுக்கு ஊழியம் செய்வது. ஆனால் நாங்கள் வைணவர்களல்ல, சாக்தேயர்கள். எங்கள் தெய்வம் முடிப்புரை நீலியும் மேலாங்கோட்டு அம்மையும்தான்.
சங்க காலத்துக்கு முந்தைய புராதனத் தமிழ்ச்சமூகமும் தாய்வழிச் சமூகமாக இருந்திருக்கலாம். இந்த ஊகத்துக்கு ஆதாரமாக நமக்குக் கிடைப்பவை மேலே சொல்லப்பட்ட இரு தனித்தன்மைகளுக்கு சங்கப்பாடல்களில் தென்படும் தடயங்கள். சங்கப்பாடல்கள் முழுக்க ஏராளமான பெண் தெய்வங்கள் பெயர் சொல்லியும் சொல்லாமலும் முகம் காட்டுகின்றன. பல சமயம் அவை அணங்கு, பாவை என்ற பெயர்களில் சுட்டப்படுகின்றன. இத்தெய்வங்கள் தாய்வழிச் சமூகத்தால் உருவாக்கப்பட்டவை. அச்சமூகம் மறைந்தபோது அவை முக்கியத்துவம் இழந்திருக்கலாம். சான்றோருக்காக எழுதப்பட்ட சங்கப் பாடல்களில் அவை பெயரற்று வர நேர்ந்திருக்கலாம்.
தாய்வழிச் சமூகம் அளித்த பாலியல் சுதந்திரம் மெல்ல மெல்லக் கட்டுப்படுத்தப்பட்டுத்தான் தந்தைவழிச்சமூகம் உருவாகியிருக்கும். வாசல்கள் ஒவ்வொன்றாகத் தாழிடப்பட்டு பெண் இற்செறிப்புக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம். சங்க அகப்பாடல்கள் காட்டும் சமூக அமைப்பில் சில வாசல்கள் திறந்து கிடந்தன, ஆம், புழக்கடையில்தான். ஒரு சலுகையாக. அவைதான் களவும் உடன்போக்கும்.
சங்கப் பாடல்களில் வரும் பரத்தையரை இக்கோணத்தில் அணுக வேண்டும் என்பது என் எண்ணம். முதல் கட்ட சங்கப்படைப்புகளான பதிற்றுப்பத்தில் மன்னனே விறலியுடன் சேர்ந்து ஆடுகிறான். குறுந்தொகையில் பொதுவாக பரத்தை இழித்துரைக்கப்படவில்லை. பிற்கால சங்கப்படைப்பான கலித்தொகையில் பரத்தையின் இடம் கீழிறங்குகிறது. சிலப்பதிகாரத்தில் பரத்தை கிட்டத்தட்ட விபச்சாரிதான். பரத்தை என்ற அமைப்பு எப்படி எங்கிருந்து உருவானது? ஒரு தந்தைவழிச் சமூகத்தில்தான் அவ்வமைப்பின் அவசியம் உள்ளது என்பது ஓர் உண்மை. ஆனால் அதைத் திட்டமிட்டு அச்சமூகம் உருவாக்கியது என்றால் அது சிறிய அளவில் துவங்கி தந்தைவழிச் சமூக அமைப்பு வலுப்பெற வலுப்பெற விரிவடைய வேண்டும். மாறாக அவ்வமைப்பு மெல்லச் சிறுத்துத் தேய்வதையே நம் இலக்கியத்தில் காண்கிறோம். சங்க காலமே பரத்தை வாழ்வின் பொற்காலம்.
பரத்தையர் பல்வேறு சமூகவியல் காரணங்களினால் தந்தைவழிச் சமூக அமைப்பின் பாலியல் நெறிகளுக்குள் வராமல் தாய்வழிச் சமூகம் சார்ந்த தங்கள் பாலியல் சுதந்திரத்தை நிலைநிறுத்திய ஒரு சாதியினர் என்று கொள்வதே பொருத்தம். மேலைநாட்டு ஜிப்ஸிகளைப் போல. சங்கப்பாடல்களில் பரத்தையர் சுயஇழிவுடன் தோற்றமளிப்பது இல்லை. கர்வமும் துணிச்சலும் கொண்ட பரத்தையரையே நாம் காண்கிறோம். சங்க காலம் காட்டும் சமூகமும் பரத்தையரை இழிவு செய்யவில்லை. பரத்தமை வாழ்விலிருந்து வெளியேற விரும்பிய, கற்புடன் வாழ முற்பட்ட பரத்தையரைப் பற்றி சங்கப்பாடல்கள் காட்டவில்லை. அவர்கள் வாழ்க்கை களியாட்டம் மிக்கது, முற்றிலும் மாறுபட்டது. மலராடையணிந்து நதிகளில் புதுப்புனலாடும் பரத்தையரின் சித்திரம் மிக மிக மனம் கவரும் தன்மை கொண்டது.
மேலும் முக்கியமானது பரத்தையருக்கு ஆண்கள் முக்கியமே அல்ல என்பது, பரத்தையர் சமூகத்து ஆண்கள் தலைவர்களாகச் சொல்லப்படுவதே இல்லை. அவர்கள் கலைஞர்களாக உள்ளனர். கலித்தொகை காட்டும் காலகட்டத்தில் அவர்கள் இழிவான பாங்கர்கள் மட்டுமே. ஆனால் சிலப்பதிகாரத்தில் மாதவி எல்லா இழிவையும் அனுபவிக்கிறாள். மகள் மணிமேகலையை அச்சமூக வாழ்க்கையில் இருந்து வெளியே கொண்டுசெல்கிறாள். உவ வனத்துக்கு மலர் கொய்யச்செல்லும் தன்னை வலுக்கட்டாயமாகப் பிடித்துக்கொண்டு சென்று அனுபவிக்க வரும் உதயகுமாரனை அஞ்சி பளிங்கறைக்குள் அபயம் தேடும் மணிமேகலையைத்தான் மணிமேகலா தெய்வம் தூக்கிச் சென்று பௌத்த துறவியாக ஆக்குகிறது. அச்சந்தர்ப்பத்தில் மணிமேகலை சொல்லும் சொற்கள் மிகவும் துயரம் மிக்கவை. நான் கற்புநெறி மீறாதவளாக இருந்தும் நான் பிறந்த குலத்தின் காரணமாகவே என்னை ஒரு பொருள் போல கவர்ந்து செல்ல நினைக்கிறார்களே என்று அவள் தோழியிடம் சொல்கிறாள்.
பரத்தையர் என்ற அமைப்பும் தொல்தமிழகம் தாய்வழி அமைப்பு கொண்டது என்பதற்கு முக்கியமான ஆதாரம். அந்த அமைப்பு அழிய நேரிட்டபோது பரத்தையர் அடைந்த இழிவு முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது. கற்பென்ற பேரில் இருளில் அடைக்கப்பட்ட குலப்பெண்டிர் அடைந்த இழிவும் சற்றும் குறைந்தது அல்ல. விபச்சாரம் செய்யும் ஆண் மகனுக்கு மனைவியாக இருப்பதும் அவனது வேசியாக இருப்பதும் அடிப்படையில் ஒன்றுதான்.

நம் கலாச்சாரம் தாய்வழிச் சமூகத்தை அழித்து உருவான தந்தை வழிச் சமூக விழுமியங்களினால் ஆனது. நாம் காணும் ஒவ்வொரு கருத்திலும், ஒவ்வொரு படிமத்திலும், நம் மொழியின் ஒவ்வொரு அலகிலும் வென்றதும் வெல்லப்பட்டதும் முரண்பட்டு நிற்கின்றன. நம் கலாச்சாரத்தின் ஆழத்தில் கொல்லப்பட்ட பேரன்னை ஒருத்தி புதைக்கப்பட்டிருக்கிறாள். அவள் உடலின் அணுக்கள் விதைகளாக மாறி நம் காலடி மண்ணில் இருந்து முளைத்தெழுந்தபடியே உள்ளன. ஆகவேதான் நாம் மீண்டும் மீண்டும் தோற்கடிக்கப்பட்ட அன்னையரின் கதைகளைச் சொல்லிக்கொண்டே இருக்கிறோம், கண்ணகி, சீதை என. இன்று சிவகாமியின் ‘ஆனந்தாயி’யை, இமையத்தின் ‘கோவேறு கழுதைகளை’ படிக்கும்போது நம் மனதில் உயிர்த்தெழுந்து வருவது அந்தப் பிம்பமே. நமது படைப்பியக்கத்தின் ஆன்மீக சாரத்தைப் பொறுத்தவரை அது ஒரு முக்கியமான முதற்புள்ளி.
-முதல் பிரசுரம்: உயிர்மை, டிசம்பர் 2003
*
எழுத்தாளர் ஜெயமோனின் ஆழ்நதியைத் தேடி என்ற நூல் 2005-ல் உயிர்மை பதிப்பகம் வெளியீடாக வந்தது. 2020-ல் விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் வழியாக இரண்டாவது பதிப்பு வெளியானது. அதில் இடம்பெற்றுள்ள ‘தோற்கடிக்கப்பட்ட அன்னை’ கட்டுரை நீலியின் தேடலை ஒட்டியது. பெண் படைப்புகளுக்கான விமர்சனப் பார்வையை மேலும் கூர்மையாக்கக்கூடியது. இது பற்றிய உரையாடல் மேலும் நிகழ வேண்டும் என்பதால் இருபது வருடங்களுக்குப் பின் இக்கட்டுரையை நீலி நன்றியுடன் மீள் பிரசுரம் செய்கிறது.
-நீலி குழு
*
