“செய்தி என்பது ஒரு நாளையது மட்டுமல்ல”: கிருத்திகா சீனிவாசன்

இதழியலாளர் கிருத்திகா சீனிவாசன்

”ஊடகத்துறை என்பது மக்களாட்சியின் நான்காவது தூண்” என தாமஸ் கார்லைல் கூறினார். சட்டமியற்றல், நிர்வாகம், நீதித்துறை என மூன்று முக்கியமான தூண்களைக் கொண்டிருக்கும் மக்களாட்சியை மக்களுக்கான குரலாக நின்று கேள்வி கேட்டு சமன்வயப்படுத்தும் தூணாக ஊடகத்துறை உள்ளது. அவற்றின் சுதந்திரத்தை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்(ஷரத்து 19 (1)) (a), 19(2), 105) வழியும், பல்வேறு சட்டமியற்றும் (பத்திரிகை ஒழுங்குமுறை சட்டம் 1799, தி கேகிங் சட்டம் 1857, இந்திய பத்திரிகை சட்டம் 1910, பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா சட்டம் 1965) வழிமுறைகளின் மூலமும் காப்பாற்றுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மக்களிடம் தகவல்களை, செய்திகளை கொண்டு சேர்க்க அச்சு ஊடகங்களும், இயந்திர ஊடகங்களும் பயன்படுகின்றன. மக்களின் அரசியல், பொருளாதார, சமூகம் சார்ந்த முடிவுகளில் செல்வாக்கு செலுத்தும் ஒன்றாக அவை வளர்ந்துள்ளன. நீதித்துறையால் தண்டனை பெற்றுத்தர இயலாத பல நேர்வுகளில் ஊடக விசாரணைகள் (Media Trail) தண்டனைகள் பெற்றுத் தந்திருக்கின்றன. ஊடகப் பரப்புரைகளால் (Media Lobbying) அரசியல் மாற்றங்கள் நிகழ்கின்றன.

துண்டு பிரசுரங்கள், வானொலி, செய்தித்தாள், தொலைக்காட்சி, இணையம் என பல வகையான ஊடகங்கள் வழியாக செய்திகள் கடத்தப்படுகின்றன. ஜனவரி 29, 1780-களில் ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி என்பவரால் வெளியிடப்பட்ட ”பெங்கால் கெஜட்” தான் இந்தியாவில் வெளியான முதல் செய்தித்தாள். 1785, 1795-களில் முறையே மெட்ராஸ் குரியர், மெட்ராஸ் கெஜட் ஆகிய செய்தித்தாள்கள் தமிழ்நாட்டிலிருந்து வெளியாகின. இந்தியாவின் சுதந்திரப்போராட்டத்தில் செய்தித்தாள்களின் பங்கு முக்கியமானது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சுதந்திரத்திற்குப் பின் கல்வி கற்றோரின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க செய்தித்தாள்களின் தேவையும் அதிகரித்தது எனலாம்.

1990-களில் தொலைக்காட்சி, இணையம் போன்ற ஊடகங்கள் மூலம் கடத்தப்படும் செய்திகள் அதிகரித்தபின் செய்தித்தாள்களின் விற்பனை குறையும் என்று நம்பப்பட்டது. ஆனால் புதிய தொழில்நுட்பங்களால் செய்தித்தாள்களின் உற்பத்தியும், பரவலும் அதிகரிக்கவே செய்தன. மலிவான விலைகளில் தரமான செய்தித்தாள்கள் தயாரிக்க முடிந்தது இதற்கு முக்கியமான காரணம். அலைபேசியின் வருகைக்குப் பின், இணையம் மிகவும் மலிவாக ஆன இந்த புத்தாயிரம் ஆண்டுகளில் ஒவ்வொரு தனிமனிதரும் தன்னை செய்தி சேகரிப்பாளராக, செய்தி பரப்புனராக நினைத்துக் கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளது.

இத்தனை மாற்றங்களுக்குப் பின்னும் செய்தித்தாளை பெரும்பான்மைச் சமூகம் செய்திக்காக பயன்படுத்தும் போக்கு குறையவில்லை. எடிட்டர், இணை அல்லது உதவி எடிட்டர், சீனியர் சப் எடிட்டர், சப் எடிட்டர், ரிப்போர்ட்டர் ஆகியவை செய்தித்தாள் ஊடகத்தில் இயங்குபவர்களின் படிநிலைகள். இது தவிர விற்பனை, விநியோகப் பிரிவு என்ற தனிப்பிரிவு உள்ளது. ரிப்போர்ட்டர்களிலும் படிநிலைகள் உள்ளன. ரிப்போர்ட்டர்கள்தான் களத்தில் நின்று செய்திகள் சேகரித்து அலுவலகங்களுக்கு அனுப்புகிறார்கள். பொதுவாக ஒரு ரிப்போர்ட்டர் ஒரு குறிப்பிட்ட துறை அல்லது பிரச்சனைகள் சார்ந்து செய்திகளை சேகரிப்பவர்களாக இருப்பார்கள். களப்பணி செய்து செய்திகளை எழுதுதல், துறை சார்ந்த வல்லுனர்கள் ஒரு பிரச்சனைக்கான தீர்வுகளை எழுதுதல், வெளியிலிருந்து தகவல்களை மட்டும் வாங்கி எழுதுதல் போன்ற பல வகைகளில் செய்திகள் வெளியாகின்றன.

இவற்றில் களப்பணி செய்து செய்திகளை எழுதும் பிரிவு முக்கியமான பங்கை வகிக்கிறது. இப்பிரிவில் பெண்களின் பங்கு தொடக்கம் முதல் உடலுழைப்பு, பாதுகாப்பு போன்ற பல்வேறு காரணங்களின் நிமித்தம் எண்ணிக்கை அளவில் குறைவாகவே இருந்து வந்துள்ளது. காலமாற்றத்தில் மெல்ல பெண்களின் பங்கு அதிகரித்து வரும் இத்துறையின் ஒரு முகமாக இதழியலாளரும், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஐந்து வருடங்களாக களத்தில் நின்று செய்திகள் சேகரித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளுக்காக எழுதுபவருமான கிருத்திகா சீனிவாசனுடன் நீலிக்காக ஒரு உரையாடல்.

-ரம்யா

செய்தித்தாள்கள்

உங்கள் குடும்பம், வளர்ந்த சூழல் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்.

அப்பா கோ. சீனிவாசன், அம்மா பொன்னழகு. அப்பா தமிழக அரசு வருவாய்த்துறையில் நாற்பது வருடங்கள் வேலை செய்தவர். அப்பா அரசுப்பணியாளர் என்பதால் நான் புதுக்கோட்டை, தேனி, கோவை, திருநெல்வேலி, நாமக்கல் என பல மாவட்டங்களில் பள்ளிப்படிப்பு பயின்றேன். அப்பா வேலை செய்த திருவாரூர், மதுரை, திருப்பூர், ஊட்டி போன்ற இடங்களில் விடுமுறைக்குச் செல்லும் போது அங்குள்ள மனிதர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு மாவட்டமும் கலாச்சாரம் சார்ந்து தனித்தன்மையானவை என உணர்ந்திருக்கிறேன். ஊருக்கு ஊர் மனிதர்களின் மாறுபாட்டை சிறுவயதிலேயே அவதானிக்கும் வாய்ப்பை இதன் மூலம் பெற்றேன்.  சிறுவயதிலிருந்தே எனக்கென சொந்த ஊர், சொந்த நிலம், எல்லையென எதையும் குறுக்கிக் கொள்ளவில்லை. எல்லைக்கு உட்பட்டு நான் வாழவில்லை. அதேபோல மனிதர்களை எளிதாக அணுகும் குணமும் இதன் வழியாக நான் அடைந்த ஒன்று. எப்படிப்பட்ட மனிதர்களும் எனக்கு புதிதில்லை எனத் தோன்றும். ஏதாவது வகையில் ஏதாவதொரு புள்ளியில் என்னை அவர்களுடன் இணைக்கும் சரடை நான் கண்டு கொள்வேன். அரசு அலுவலகங்களிலும் என்னால் எளிதாக உள் நுழைந்து எல்லாவற்றையும் பார்க்க, எல்லோரிடமும் பேச முடியும். அதேபோல்தான் புதிய ஆசிரியர்கள், புதிய நண்பர்கள், புதிய விதிகள் மேல் எனக்கு பயமில்லாமல் ஆனது. எதையும் கண்டு அதிர்ச்சி அடைய ஒன்றுமில்லை.

சமூகத்துடன் தொடர்பு படுத்தக்கூடிய வேலையைதான் செய்ய வேண்டும் என்ற உந்துதல் என் வாழ்க்கைப் பின்புலத்திலிருந்து வந்ததுதான். கல்லூரியில் இளங்கலை படிக்கும்போது சில ஆசிரியர்கள் என் உருவம் நிறம் சார்ந்து சாதி சார்ந்து அவமரியாதையாக நடத்தியிருக்கின்றனர். இந்த சமூகம் சொல்லக்கூடிய அழகின் கூறுகளான நிறமும் உருவமும் என்னிடம் இல்லை. அதன் காரணமாக சில ஆசிரியர்கள் மட்டும் என்னுடன் பாகுபாட்டுடன் நடந்து கொள்ளும் போக்கை கல்லூரியில் சந்தித்தேன். அது என்னை மனதளவில் பாதிப்புக்குள்ளாக்கியது. அப்போதுதான் நான் என்னை பார்க்க ஆரம்பித்தேன். என்னைப் போன்றவர்களிடம் செல்ல வேண்டும். அவர்களுக்காக நான் செயல் செய்ய வேண்டும் என்ற சிந்தனை உருவானது.

இளங்கலை உயிரியல் தொழில் நுட்பம் படித்துக் கொண்டிருந்தேன். பல வகையில் ஆய்வகங்கள் அதற்கு முக்கியமான இடம். ஆனால் அங்கிருந்துகொண்டு இந்த மனித மனங்களை மாற்ற முடியாது, எனக்கான படிப்பு சமூகம் சார்ந்ததாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. ஒரு அரசு அதிகாரியாக சேவை செய்ய வேண்டும் என்று தோன்றியது. அதன் காரணமாக முதுகலை சமூகவியல் படித்தேன்.

ஒரு வருடம் பள்ளிக் குழந்தைகளுக்கு நாடகம் சொல்லித்தரும் வேலை பார்த்தேன். ஒரு சுவாரசியமான வேலை இது. இதை நான் கலையாக எண்ணி செய்யவில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன். ஒரு கார்பரேட் தன்மையுடன்தான் நடந்தது. எனக்கு ஒதுக்கப்பட்ட நான்கைந்து பள்ளிகளுக்குச் சென்று நாடகம் சார்ந்து வகுப்புகள் எடுப்பேன். லயோலாவில் சோஷியல் வொர்க் சார்ந்த துறையில் சேர்வதற்கான தேர்வில் வெற்றி பெற்றேன். சில சந்தர்ப்ப சூழ்நிலையால் 2015இல் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை சமூகவியலில் சேர்ந்தேன். அங்கிருந்து கொண்டே அடுத்து என் பயணம் எதை நோக்கியதாக இருக்க வேண்டும் என்ற கேள்வியை கேட்டுக் கொண்டே இருந்தேன்.

2017 முதல் ஒரு ஃப்ரிலேன்சராக நிறைய ஆங்கில ஊடகங்களுக்கு கட்டுரைகள் எழுதி அனுப்பிக் கொண்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் வேலைக்குச் சேர்ந்தேன். 2018 முதல் அந்தப் பணியில் உள்ளேன்.

ஃப்ரிலேன்சராக ஊடகங்களுக்கு எழுதும்போது என்ன வகையான தலைப்புகள் சார்ந்து கட்டுரைகள் எழுதினீர்கள்?

சேலம் எட்டு வழி சாலை பிரச்சனையை ஃபர்ஸ்ட் போஸ்ட்-க்கு ரிபோர்ட் செய்தேன். காசிமேட்டில் மீன் வியாபாரம் செய்யக்கூடிய பெண்கள் பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். மதுரையில் துப்புரவுப் பணியாளர்கள் வசிக்கக்கூடிய ஒரு குடியிருப்புப் பகுதி ஒன்று இருந்தது. அங்கிருந்த ஒரு அக்கா அக்குடியிருப்பில் உள்ள பிள்ளைகளுக்கு டியூஷன் எடுத்தார்கள். அந்த அக்காவின் நோக்கம் ஒரு போதும் அடுத்த தலைமுறை பிள்ளைகள் துப்புரவுப் பணிக்கு சென்றுவிடக்கூடாது என்பதாக இருந்தது. அவரை ஒரு நேர்காணல் செய்து “Feature Zone” செய்தேன். மதுரை வாடிப்பட்டியில் பொன்னுத்தாய் என்பவர் தலித் குழந்தைகளுக்காக ஒரு பள்ளியை நடத்திவந்தார். அப்பள்ளியை இரண்டு மூன்று முறை எரித்து உடைத்து அவரை நடத்தவிடாமல் ஊர்க்காரர்கள் செய்தனர். அதை முத்துராசாகுமார் கவர் செய்தார். நான் அதை மொழிபெயர்த்து ஆங்கிலத்தில் வெளியிட்டேன். அதுதான் என் முதல் கட்டுரை. அதைத் தொடர்ந்து Newsminute, Wire, First past Post, PARI போன்ற செய்தித்தாள்களுக்கு எழுதினேன்.

ஃப்ரிலான்சிங் வேலையில் இருக்கும் போதே உங்கள் இயங்குதளம் சார்ந்து சரியாக முடிவெடுத்துவிட்டீர்கள் எனலாம். இல்லையா?

அது நான் முன்னரே தெளிவாக முடிவெடுத்துவிட்டேன் என்று தோன்றுகிறது. நான் எம்.ஏ. சோஷியாலஜி படித்துக் கொண்டிருந்தும் கூட இதழியல் துறைக்கு அடிக்கடி போவேன். அத்துறையின் பேராசிரியர் கோ. ரவீந்திரன் நிறைய செமினார்கள் நடத்துவார். அவர் நடத்துவது வெளியுலகத்தின் அரசியலை பிரதிபலிக்கும் ஒன்றாக இருந்தது. ரவீந்திரன் அவர்களால்தான் இதழியல் துறையை என்னுடைய துறையாக நான் அணுக்கமாக்கிக் கொண்டேன். அங்குதான் என் பயணத்தை நான் தீர்க்கமாக முடிவு செய்தேன்.

ரவீந்திரன் சார் ஒரு உயிர்ப்போடு வகுப்பெடுப்பார். கல்லூரி வராண்டாவில் பாய் விரித்து மாணவர்களை தரையில் அமரச் செய்து உரையாடுவார். “மக்களுக்கான இதழியல்” என்பதை அவர் வழியாகத்தான் நான் அறிந்து கொண்டேன். சென்னை பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையில் கலைக்குழுவாக இருந்த முற்றத்தில் இணைந்து செயல்பட்டேன். அதன் மூலம்தான் மக்களுக்காக எழுத வேண்டும், மக்களுக்காக நிற்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. ரவீந்திரன் சார் மூலமாக எந்த மாதிரியான மக்களுக்காக நிற்க வேண்டும் என்ற உறுதிப்பாடு வந்தது. இதழியல் சாமானியர்களுக்காக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, அடித்தட்டு மக்களுக்காக பேசும் போதுதான் இன்னும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என்ற எண்ணம் வந்தது. இதுதான் இதழியல் என்பதையல்ல, இவர்களுக்காகத்தான் இதழியல் என்பதை அவர்தான் என்னில் விதைத்தார்.

கிருத்திகா சீனிவாசன்

இதழியல்தான் உங்கள் தன்னறம் சார்ந்த துறை என்பதில் இப்போது உங்களுக்கு தீர்க்கமாக நம்பிக்கை உள்ளதா?

ஆம். காட்டாயமாக. ரவீந்திரன் சாரை சந்திக்கும் முன் சமூக சேவை, மனித உரிமை சார்ந்த களச் செயல்பாடுகள், தன்னார்வ அமைப்பு சார்ந்து இயங்குதல் போன்ற சிந்தனை இருந்தது. குடிமைப்பணித்தேர்வுக்கான தயாரிப்பில் கூட இருந்தேன். மக்களுக்காக மக்களுடன் இருந்து இயங்கும் ஒரு வேலை என்பது என் கனவாக இருந்தது. அவை எல்லாவற்றையும் இதழியல் என்ற ஒரு புள்ளியில் குவிப்பதற்கான திருப்புமுனையாக ரவீந்திரன் சார் அமைந்தார். இந்த காலகட்டத்தில் ஒரு மூத்த பத்திரிக்கையாளரின் வழிகாட்டுதலின்படி இதழியலுக்குள் நுழைந்தேன். இப்போது இதுதான் என் துறை என்பதில் நம்பிக்கை உள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் வேலையில் சேர்ந்த ஆரம்ப காலகட்டங்களில் என்ன மாதிரியான வேலை இருந்தது? இப்போது என்னவாக இருக்கிறீர்கள்?

நான் இதழியலில் பட்டம் பெறாததால் முதலில் என்னை பயிற்சி ரிப்போர்ட்டராக அமர்த்தினார்கள். ஒருவேளை இதழியல் படித்திருந்தால் நேரடியாக ரிப்போர்ட்டராக ஆகியிருக்கலாம். இப்போது சீனியர் ஸ்டாஃப் கரஸ்பாண்டண்ட் ஆக உள்ளேன். களப்பணிதான் என் முதல் வேலை. கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் களத்திற்கு சென்று தகவல் சேகரித்து எழுதுவது.

பொதுவாக இதழியல்துறை என்றவுடன் பெரும்பாலும் ஒரு கண்ணாடிப்பெட்டிக்குள் உட்கார்ந்து கொண்டு சிந்தனை ரீதியாக அறிவார்ந்த கட்டுரைகள் எழுதும் ஆட்கள் நிரம்பிய ஒரு வேலை என்றே கற்பனை செய்வார்கள். இதழியலில் களப்பணி சார்ந்த உங்கள் அனுபவம் பற்றி சொல்லுங்கள்.

சென்னை போன்ற பெரு நகரங்கள், தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் இடங்களில் நீங்கள் சொல்வது போன்ற அமைப்புதான் இருக்கும். அங்கு திட்டவட்டமாக அடுத்த நாள் வரவேண்டிய செய்தி, கட்டுரைகள் எழுத வேண்டி இருக்கும். பெரும்பாலும் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால் நான் மாவட்டத்தில் தங்கி களப்பணி செய்யும் வேலை செய்கிறேன். நள்ளிரவில் கூட புதிய சம்பவங்கள் நடக்கும். ஒரு நிச்சயமற்ற தன்மையுடனான ஒன்றுதான். களத்திற்குச் சென்று தகவல் சேகரித்து வீட்டிற்கு வந்து அதைப்பற்றி எழுதி மெயில் அனுப்ப வேண்டியிருக்கும். மற்ற நேரங்களில் நாம் போய் சம்பவங்கள்/கதைகளுக்காக அலைந்து எழுதும் வேலை இருக்கும்.

அரசு, அதன் முன்னெடுப்புகள், மக்களின் தேவைகள், குறைகள் பற்றி நடு நிலைத்தன்மையான செய்திகளைக்  கொண்டு செல்லவே ஊடகங்கள் பயன்படுகின்றன. இன்றைய தகவல் பெருக்கக் காலகட்டத்தில் அவற்றை அளிக்க பலதரப்பட்ட ஊடகங்கள் உள்ளன. இவற்றிற்கிடையில் செய்தித்தாள்களின் தேவை என்ன? இச்சூழலில் அதன் செறிவுத்தன்மையை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளதா?

செய்தித்தாள்களைப் பொறுத்து அதன் செறிவுத்தன்மையை அதிகரிக்க எதை தவிர்க்க வேண்டும், எதை சேர்க்க வேண்டும் என்பது பற்றி சொல்ல விரும்புகிறேன். செய்தித்தாள்களில் சினிமா சார்ந்தவை தவிர்க்கப்பட வேண்டும் என்பது என் கருத்து. பொழுதுபோக்குச் செய்திகளை செய்தித்தாளில்/ ப்ரிண்ட்டில் போட வேண்டும் என்ற அவசியம் இன்றில்லை. இவை யாவும் காட்சி ஊடகங்களில் வந்து பெரும்பான்மையான நேரத்தை உறிஞ்சிக் கொள்கிறது.

எதை சேர்க்க வேண்டும் என்பது இன்னும் முக்கியம். முதல் ஐந்து பக்கங்களில்தான் நம் மாநிலத்தில் உள்ளவை, தலைப்புச் செய்திகள் போன்றவை வரும். 6-ஆவது 7-ஆவது பக்கங்களில் தலையங்கம், பின்னர் தேசிய, உலக, வணிக செய்திகள், இறுதியாக விளையாட்டு என பத்திரிக்கை முடிந்துவிடும். இது எதற்குள்ளும் தனியாக விவசாயத்திற்கென தனிப்பக்கம் அல்லது அரைப்பக்கம் கூட இருப்பதில்லை. ஆனால் ஐ.பி.எல் வந்தால் இரண்டு பக்கத்துக்கு அதற்கு ஒதுக்குவார்கள். நான் விவசாயத்தை மட்டும் சொல்லவில்லை. முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய எல்லா துறைகளுக்கும் தனியாக இடம் ஒதுக்க வேண்டும்.

பத்திரிகை இயங்க விளம்பரம் தேவைதான். ஐ.பி.எல் விளம்பரத்திற்காக இரண்டு பக்கம் ஒதுக்கினால் சற்றே அறத்தோடு இந்தியா போன்ற விவசாய நாட்டில் விவசாயம் சார்ந்த பக்கங்களுக்கு இடம் ஒதுக்குவதையும் மனதில் கொண்டு அது சமன்செய்யப்பட வேண்டும். சமூகம் சார்ந்து, குரலற்றவர்களுக்கென, சாதியம் சார்ந்த – இன்று குறிப்பாக மதம் சார்ந்த – பாகுபாடுகளைக் களையும் நோக்கிலான கட்டுரைகளுக்கென பக்கங்கள் ஒதுக்குவது அவசியம். ஒரு சமூகமாக நம் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கு ஒவ்வொரு நாளும் இது போன்ற தலைப்புகள் சார்ந்த செய்திகளைச் சொல்ல அரைப்பக்கமாவது ஒதுக்கவேண்டும்.

ஒரு லட்சிய செய்தித்தாள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

Guardian போல Telegram போல சில வெளிநாட்டு பத்திரிக்கைகளை எடுத்துக் கொண்டால் அவர்கள் வெளியிடும் செய்திகளை கேள்வி கேட்க முடியாத அளவு நம்பகத்தன்மையுடைதாக இருக்கும். நிறைய விளம்பரங்கள் இருக்காது. இது போன்ற பத்திரிகைகளில் ஒரு பக்கத்திலிருக்கும் பதினைந்து செய்திகளும் கச்சிதமாக எழுதப்பட்டதாக, கூர்மையாக இருக்கும். அங்கும் சில குறைகள் உள்ளனதான். ஆனால் நாம் இன்னும் அந்த இடத்தைக் கூட தொடவில்லை.

ஆங்கிலம், தமிழ் இரண்டு நாளிதழ்களும் இந்த தரத்தை அடையவில்லை என்று நினைக்கிறீர்களா?

ஆம். ஆங்கில நாளிதழ்கள் பரவாயில்லை. தமிழ் நாளிதழ்கள் இன்னும் அது பற்றி சிந்திக்கவே இல்லை எனலாம்.

இங்கு கச்சிதம் என்று நீங்கள் அவதானிப்பது எதை?

ஒரு செய்தியை எடுத்துக் கொண்டால் இன்னார்க்கு இன்ன நடந்தது, போனது, வந்தது என்று மட்டும் இருக்கக் கூடாது. ஒரு சம்பவம் சார்ந்து அந்தத் துறை ரீதியான அதிகாரிகள் என்ன சொல்கிறார், சம்பந்தப்பட்ட விஷயம் சார்ந்து பல்முனை கருத்துக்கள் போன்றவை இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் கவர் செய்தாலும் அந்த சம்பவம் சார்ந்து முழுச்சித்திரம் கிடைக்கும் வரை தொடர்ந்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது போன்று அடுத்தடுத்து செய்திகள் வர வேண்டும். பெரும்பான்மை செய்திகள் அப்படியே காணாமல் போவதையே இங்கு அதிகம் காண முடிகிறது.

ஒரு முழுமையை அடைய முடியாததற்கு காரணம் என்ன?

ஒரு நாளைய செய்தி என்ற எண்ணம்தான். செய்தி என்பது ஒரு நாளையது மட்டுமல்ல. முந்நூற்று அறுபத்தி ஐந்து நாட்களில் வரும் ஒவ்வொரு செய்தியும் இன்னொன்றோடு தொடர்புடையதுதான். ஒரு நெட்வொர்க் மாதிரிதான். ஒவ்வொரு செய்தியின் அடியிலும் சாரம் ஒன்றுள்ளது. ஒவ்வொரு சாரமும் இன்னொரு சாரத்துடன் தொடர்புகொண்டு மிகப்பெரிய சித்திரத்தை அளிக்கவல்லது. அதற்கான முயற்சிகளை சிரத்தையாக எடுக்க வேண்டும். நான் கச்சிதம் என்று சொல்வது இதைத்தான். ஒரு நாள்தானே, ஒரு செய்திதானே என அதன் சாரம் தெரியாத அளவு புறத்தகவல்களாக மட்டும் ஆக்கிவிடக் கூடாது என்பதைத்தான்.

இப்படிச் சொல்லலாமா? – இது ஒரு செய்தி மட்டுமல்ல. ஒட்டுமொத்த வரலாற்றின் ஒரு துளி. அதை முழுமையாக கொடுக்க வேண்டும்.

அவ்வளவு தூரம் போகவேண்டுமென்பதில்லை. குறைந்தபட்சம் “ரெளடிகளால் மர்மநபர் வெட்டிக் கொலை” என்று ஒரு தகவலை மட்டும் போடாமல் இருக்க வேண்டும். ஒரு செய்தி சார்ந்த ஒட்டு மொத்த தகவலையாவது முழுமையாக போட வேண்டும் என்று சொல்கிறேன். “Interpretation of the Incidents” என்பார்கள். அதற்கு இந்த முழுமை அவசியம். ரெளடிகள் வெட்டிக் கொலை என்று வந்தால் அதை அப்படியே விட்டுவிடாமல் காவல்துறை அதிகாரிகளிடம் அதற்கான காரணத்தை கேட்கலாம், அந்த இடத்தின் கல்வியியலாளர்கள், அறிஞர்கள் ஆகியோரிடம் காரணத்தை கேட்கலாம். பாதிக்கப்பட்ட குடும்பங்கள், சூழல் என முழுமையாக கவர் செய்ய வேண்டும். ஆங்கில நாளிதழ்களில் ஸ்பெஷல் ரிப்போர்ட் என்பதை இதுபோல செய்கிறார்கள். என்வரையில் தமிழ் நாளிதழ்களில் அது நிகழ வேண்டும். தமிழ்நாட்டில் வட்டாரம் சார்ந்த மக்கள் தமிழ் நாளிதழ்கள்தான் அதிகம் வாசிக்கிறார்கள். அவர்களுக்கு இது போன்ற முழுமையான தகவல்களை கொண்டு சேர்ப்பதன் வழியாகத்தான் அவர்களின் சிந்தனையை தூண்ட முடியும். மக்கள் தங்களுக்கென ஒரு கண்ணோட்டத்தை உருவாக்கிக் கொள்ள இந்த முழுமையான தகவல்கள் அவசியம்.

அதுவும் இந்த சமூக ஊடக காலகட்டத்தில் எல்லா சம்பவங்களையும் உடனேயே செல்பேசி வழியாக அறிந்து கொள்ள முடிகிறது. அதை மீறி என்ன என்ற தகவலை செய்தித்தாள் சொல்ல வேண்டும். அதற்கான களஆய்வுதான் முக்கியம். உதாரணமாக சாலையில் சென்ற இரு பையன்கள் கால்வாயில் விழுந்து விடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களை பின்தொடர்ந்து சென்ற இன்னொரு பையன் அதை செல்போனில் படம் எடுத்து வைத்திருக்கிறான். அது ஒரு மணி நேரத்தில் சமூக ஊடகத்தில் இன்று வைரல் ஆகலாம். ஆனால் ஒரு களப்பணியாளர் சென்று ஏன் அங்கு அந்தக்கால்வாய் இருந்தது என்று ஆரம்பித்து முழுமையான தகவல்களை ஆய்வு செய்து செய்தி வெளியிட வேண்டும்.

நீங்கள் சொல்லும் விஷயங்கள் எல்லாவற்றையும் இன்று சோஷியல் மீடியா செய்துவிடுகிறதுதானே? செய்தித்தாளின் தேவை மேலதிகமாக என்ன?

அதிகார மட்டத்தில் உள்ளவர்களுடன் உரையாட அதிகார பூர்வமான பத்திரிகையாளர்களுக்குத்தான் அனுமதி உள்ளது. நீங்கள் ஒரு மொபைல் கேமராவையோ அல்லது கையடக்கக் கேமராவையோ எடுத்துக் கொண்டு காவல்துறை அதிகாரிகள் அல்லது பிற உயர்மட்ட அரசு அதிகாரிகள் முன் சென்று “சார் சொல்லுங்க. இது பற்றி என்ன நினைக்கிறீங்க” என்றெல்லாம் கேட்டுவிட முடியாது. நம் சமூகம், அரசமைப்பு சார்ந்து ஒரு கட்டுமானம் உள்ளது. எத்தனை சோஷியல் மீடியா அல்லது தனி நபர்கள் என தனித்து செயல்பட நினைத்தாலும், “Press” என்ற துறையின் Professionalism என்பதோடு ஈடு வைக்க முடியாது. அதனால்தான் இன்று Wire, Newsminute போன்ற Independent Press-கள் உள்ளன. ஏன் அவர்கள் அதை ஒரு முகப்புத்தக பக்கமாக, யுடியூப் சேனலாக செயல்படுத்தியிருக்கலாம் தானே. செய்தி ஊடகமாக தங்களை பதிவு செய்து கொண்டு செயல்படுவதன் காரணம் இது தான். இந்தத் தொழிலுக்கு என தேவையுள்ளது. சமூக அமைப்பின் ஒரு அங்கம் இத்துறை. மிக முக்கியமானதும் கூட.

புத்தாயிரம் ஆண்டுகளில் பாட்டு, படம், நகைச்சுவை என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி சேனல்கள் உருவானது. அதில் ஒன்றாக 24 மணி நேரம் செயல்படும் செய்தி சேனல்கள் உருவாயின. சமீப காலமாக யுடியூபிலேயே தனியாக செய்தி சேனல் தொடங்குமளவு வளர்ந்துவிட்டது. இது போன்ற வளர்ச்சிப்போக்கால் செய்தித்தாளுக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன?

உண்மையாகவே இவையெல்லாம் மக்கள் மனதில் செய்தித்தாள் படித்துதான் செய்திகளை தெரிந்துகொள்ள வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பியது. மொபைலைத் திறந்தால் நோடிஃபிகேஷனிலேயே செய்திகளை தெரிந்து கொள்ளலாம். இதற்காகவெல்லாம் போய் ஒரு செய்தித்தாளை வாங்கி அதற்கு ஒரு இருநூறு ரூபாய் செலவழிக்க வேண்டுமா என சிந்திக்கச் செய்தது. செய்தித்தாள் vs காட்சி ஊடகம் சார்ந்து சொல்ல வேண்டும் என்றால், காட்சி ஊடகம் இன்று உடனுக்குடன் ஒரு தகவலை நமக்கு அளிக்கிறது. உதாரணமாக ஒரிசாவில் ரயில் விபத்து, கொரோனா காலகட்டம், இயற்கைப்பேரிடர் போன்ற நிகழ்வுகளின்போது மனிதர்களுடன் உடனுக்குடன் தொடர்பு கொள்ள வேண்டிய ஊடகத் தேவை உள்ளது. இது மாதிரியான நேரங்களில் ஒரு செய்தியை கண நேரத்தில் கடத்த வேண்டும் எனும்போது காட்சி ஊடகம் பயன்படுகிறது.

அதே நேரத்தில் ஒரிசா ரயில் விபத்து ஏன் நிகழ்ந்தது, அதற்குப் பின்னால் உள்ள அத்தனை தரப்புகளையும் உள்ளடக்கிய செய்திகளை செய்தித்தாள் பல்வேறு கோணங்களுடன் பிரசுரிக்கிறது. அத்துறை சார் வல்லுனர்கள் தலையங்கங்கள் எழுதுவார்கள். மக்களிடம் ஒரு விவாதத்தை உருவாக்குவார்கள். அந்தவகையில் செய்தித்தாள் முக்கியம். செய்தியைத் தெரிந்து கொள்ள செய்தித்தாள் மட்டும்தான் இருந்தது என்ற நிலை எப்போதுமே இல்லை. தொலைக்காட்சிக்கு முன் வானொலி இருந்தது இல்லயா? என் வரையில் இவை யாவும் செய்தியைக் கடத்தும் ஊடகங்கள். ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தேவை இருந்து கொண்டேதான் இருக்கும்.

முகம் சார்ந்த பாகுபாடு பற்றி சொல்லியிருந்தீர்கள். செய்தித்தாளில் அதுவும் இப்படியான களப்பணி செய்து எழுதுபவர்களின் முகம் தெரியப்போவதில்லை. ஆனால். காட்சி ஊடகங்களில் முகம் என்பதும் செய்தி வாசிப்பவரின் ஆளுமையாக உள்ளது. இன்றைக்கு பெண்கள் செய்தி வாசிப்பாளராகவும், யூடியூப் சேனல்களில் செய்தி தொகுப்பாளராகவும் உள்ளனர். அவர்களின் திறனை விட முக அழகிற்கு முக்கியத்துவம் தருகிறார்களோ என்ற ஐயம் எழுகிறது. செய்தி வாசிப்பாளராக ஆகி சீரியல் நடிகை, ஊடக ஒருங்கிணைப்பாளர், பெரிய திரை என்ற கனவுகளுடன்தான் பெண்கள் இருப்பதாக பார்க்கிறேன். அதே போல சினிமா நியூஸ்தான் பிரதானமாக காட்சி ஊடகங்களில் இருக்கிறது. Journalism, Visual media Communication போன்றவற்றை சினிமாவுக்கான வாய்ப்பாகப் பார்ப்பதே பிரதானமாக உள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

(சிரிக்கிறார்..) இதற்கு நான் என்ன சொல்வது? “ஆமாம்” என்று மட்டுமே சொல்வேன். இதில் நான் விவாதிக்க, கருத்து சொல்ல எதுவுமே இல்லை. இப்படித்தான் இருக்கிறது. எதை தேர்வு செய்கிறோம் என்பது அந்தந்த தனிநபர் சார்ந்த விருப்பம். ஒரு துறைக்கு பாதகம் வராமல் எந்தத்துறையையும் எதற்குள் நுழையும் வாய்ப்பாகவும் யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள், போலி ஆளுமைகள் தங்களை விற்றுக் கொள்ளும் ஊடகமாக இன்று இவைகள் மாறியதன் பதட்டம் இருக்கிறது.

நீங்கள் சொல்வது Content Channel-கள். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். யாரை வேண்டுமானாலும் முன்னிறுத்தலாம். அவர்களுக்கு எல்லாவிதமான சுதந்திரமும் உள்ளது. பார்பவர்கள்தான் தங்களை காத்துக் கொள்ளவேண்டும். வேறு வழியில்லை. செய்தி ஊடகத்திற்கும் இதற்கும் பெரிய சம்பந்தம் இல்லை. ஆனால் சில சமயம் ஒரு செய்திக்காகவோ, ஒரு நேர்காணலுக்காகவோ செல்லும் முன் அவர்களைப் பற்றிய தேடலில் இது போன்ற Content Channel-இல் ஏதாவது செய்து வைத்திருப்பார்கள். ஒரு எளிய நபர் பத்திரிகைக்கு சொல்லாத ஒன்றை யுடியூப் சேனலில் சொல்லிவைத்திருப்பார். ஒரு தேடல் மூலமாக இவற்றை அணுகும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் எல்லாமே மிகச்சிறப்பாக இருக்க வேண்டும் என்பதுமில்லை. எல்லாவகைத் தரப்புக்கும் இங்கு இடமுள்ளது. ‘மொக்கையா இருக்கறவங்க’ மத்தியில்தானே ‘நல்லா வேலை செய்றவங்கள’ அடையாளம் காண முடியும்?

ஒட்டுமொத்தமாக ஊடகம் என எடுத்துக் கொண்டால் அதன் முதன்மை நோக்கம் செய்தியை மக்களிடம் கொண்டு செல்வதுதான். ஆனால் இங்கு ஊடகம் என நம்முன் கொட்டிக் கிடப்பவை கடத்தும் பிரதானத் தகவல்கள் சினிமா, கிசுகிசுக்கள், தனி நபர் புகழ்ச்சிகள், போலி அடையாளப்படுத்தல்கள், ஜோடிக்கப்பட்ட செய்திகள். இவற்றிற்கு என்ன தீர்வு?

உங்கள் மனக்குமுறல் புரிகிறது. ஒரு இருபத்தி ஐந்து வருடம் முன்னால் சென்றால் நம்மிடம் ஊடகமென இருந்தது செய்தித்தாள், வானொலி, தூர்தர்ஷன் செய்திகள்தான். வாரப்பத்திரிகைகள், சிறுபத்திரிக்கைகள் இருந்தன. தாலுகா அளவில் பத்து இருபது பேருக்கு செய்திகளைக் கடத்தும் பத்திரிக்கைகள் கூட இருந்தன. அது மோசமானதாக, ஒருசார்புத் தன்மை கொண்டதாக, சாதியம் சார்ந்து கூட இருந்திருக்கலாம். ஆனால் அவர்களும் பத்திரிகையாளர்கள் என்றுதானே சொல்லிக் கொண்டிருந்திருப்பார்கள்? அந்த நபரைப் பொறுத்தவரை அவரும் ஒரு இதழாசிரியர்தான், அதுவும் ஒரு இதழ்தான். அப்படி எல்லா காலகட்டங்களிலும் தான் இன்னது என ஒன்றோடு தொடர்புபடுத்திக் கொள்ளக் கூடியவர்கள் இருப்பார்கள். அதை தரம்பிரித்துப் பார்க்கும் தன்மை மக்களுக்குதான் இருக்க வேண்டும். ஏன் உன்னை நீ அப்படி அடையாளப்படுத்திக் கொள்கிறாய் என யாரிடமும் போய் கேட்க முடியாது. இந்த தொழில்நுட்பங்கள் எல்லாம் வந்து எட்டு வருடங்கள்தான் ஆகிறது. அது சரியான ஒரு போக்கை காலப்போக்கிலேயே அடைய முடியும்.

உங்கள் துறையிலேயே கூட எதை வேண்டுமானாலும் எழுதிவிட்டு எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்ளலாம் தானே. செயற்கை நுண்ணறிவு கொண்டு கூட ஒருவர் புனைவு எழுதிவிட்டு நானும் ஓர் எழுத்தாளன் என தன்னை வரையறுத்துக் கொள்ளலாம். ஆனால் வாசிக்கும் வாசகர்களுக்கு மதிப்பிடத்தெரிந்திருக்க வேண்டும். யாருக்கு தெரியாவிட்டாலும் உங்கள் துறையின் முன்னோடி எழுத்தாளர் அடையாளம் கண்டு கொள்வார் தானே.

மேற்கில் இது மாதிரியான விஷயங்கள் சார்ந்து குறிப்பிடும்போது மிக நுட்பமாக ஒவ்வொரு வேலைக்கும் ஒரு பெயர் வைத்திருப்பார்கள். இன்னும் அது போன்ற சொற்கள் இங்கு உலவ நாட்கள் ஆகும். அதுவரை இந்தக் குழப்பங்கள் நிகழும். செய்தித்தாள்களிலேயே அந்த நுண்ணிய பிரிவுகள் இன்னும் உருவாகவில்லை. அது தேவை. இதழியல் என்பது இன்னும் தீவிரமாக ஆக வேண்டும்.

இதழியல் சார்ந்து இயங்குபவர்கள், குறிப்பாக களப்பணி சார்ந்து இயங்குபவர்களிடம் எதை முக்கியமாகப் பார்க்கிறீர்கள்?

ஒரு ரிப்போர்ட்டர் ஒரு செய்தித்தாளுக்கு ஒரு விஷயம் சார்ந்து பார்ப்பதை ஒரு பீட் (beat) என்பார்கள். கிரைம், அரசியல், கல்வி, சுகாதாரம் என ஒவ்வொருவரும் ஒரு துறை சார்ந்து தகவல் சேகரிப்பார்கள். ”ஒரு துறை சார்ந்த பீட் ரிப்போர்ட்டரால் அனைத்து துறை சார்ந்த பீட்களையும் பார்க்க முடிய வேண்டும்” என்ற புகழ்பெற்ற வரி எங்களுக்குள் புழக்கத்தில் உள்ளது. கிரைம் பீட் எழுதுபவர்கள் தன்னால் கல்வி சார்ந்த பீட் எழுதமுடியாது, பார்க்க முடியாது என்றெல்லாம் சொல்வதை பார்த்திருக்கிறேன். ஒரு சிறந்த ரிப்போர்ட்டர் என்பவர் தன்னை சுருக்கிக் கொள்ளக் கூடாது. முழுமையாக ஈடுபட வேண்டும்.

சமூக நோக்கில் இன்றுள்ளதை “துண்டு மனநிலை” காலகட்டம் எனலாம். எதையுமே யாருக்கும் முழுமையாக தெரிந்து கொள்ள விருப்பமில்லை. நீங்கள் இன்னும் ஒவ்வொரு செய்தியும் நுணுக்கமாக விரிய வேண்டும் என்று சொல்வதற்கு எதிரான மனநிலை இருக்கும் காலகட்டம் இது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

ஆம் அப்படித்தான். தொடர்ந்து சரியாக இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து செய்தி ஊடகங்களிலுமே இது சார்ந்த அழுத்தம் வந்துள்ளது. இத்தனை வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் இந்த சந்தை காலகட்டத்தில் நாம் எப்படி நம் செய்தியை விரைவாக சொல்வது என்ற அழுத்தம் வந்துள்ளது என்பது உண்மைதான்.

பல பிரபல செய்தித்தாள்களும் இன்று இணையத்தில் நோடிஃபிகேஷன்ஸ் வழியாக நொடிக்கொருமுறை விரைவான குறுஞ்செய்திகள் அனுப்பிக் கொண்டிருக்கின்றன. இது முழுமையான செய்தியை அறிய முடியாதபடிக்கு செய்கிறது இல்லயா?

ஆமாம். நான் இணையத்தில் ஒரு செய்தித்தாளின் பக்கத்தை பார்த்தேன். ஒவ்வொரு செய்தியும் நான்கே வரிதான். டிட்பிட்டுகள். எனக்கு இதையெல்லாம் பார்த்தால் சிரிப்பாகத்தான் வரும். அதிலிருந்து என்ன புரியும்? “சென்னை ஹைவேயில் பஸ் போனது. முப்பது பேர் பயணம் செய்தார்கள். பஸ் கவிழ்ந்தது. முப்பதில் இருபது பேர் இறந்தனர்” இவ்வளவுதான் செய்தி. இது மட்டுமே தெரிந்து கொண்டால் போதுமா? இது போல நீங்கள் ஸ்க்ரோல் செய்தால் இருபது செய்திகள் வரும். மூளை சோர்வடையும். என் வரையில் இந்த இருபது துண்டு செய்திகள் படிப்பதைவிட இரண்டு நல்ல கட்டுரைகளை, செய்திகளை வாசிக்க வேண்டும். பத்து ரூபாய்க்கு ஒரு பேப்பரை வாங்கி அன்றைய நாளின் ஒட்டுமொத்தத்தை முழுமையாக வாசிக்க வேண்டும். இப்படி துண்டு செய்திகளை வாசிப்பவர்கள் கேட்பவர்கள் அரைவேக்காட்டு அறிவோடுதான் இருப்பார்கள். எதிலும் முழுமையாக ஒரு கருத்தை நிலைபாட்டை எடுக்க திறனற்றவர்களாக ஆவார்கள். இது தனியாக மட்டுமல்ல. ஒட்டுமொத்த சமூகமாக இது ஒரு தீவிரமான சிக்கலாக மாறும்.

நீங்கள் ஊகிக்கும் சிக்கல்கள் என்ன?

இன்று நாம் பார்க்க வளர்ந்து வரும் தலைமுறை, அதற்கடுத்து வரும் தலைமுறைகளில் ஊருக்கே ஓரிரு இளைஞர்கள் தவிர பெரும்பான்மையானவர்கள் எந்தவொரு விஷயத்தையும் ஆழமாக சிந்திக்க வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாமலாவார்கள். இது என்ன வகையில் பாதிக்கும் என்றால், இந்த இளைஞர்களிடம் நன்மையானாலும், தீமையானாலும் உடனடியாக கொண்டு போய் சேர்த்துவிடலாம் என்ற நிலை உருவாகும். சமூக-அரசியல் சார்ந்து, வணிகம் சார்ந்து இந்த இளைஞர்களை எளிதாக அடிக்ட் ஆகச் செய்யலாம். மூளைச்சலவை செய்ய வேண்டும் என அடுத்திருப்பவர் யோசிப்பதற்குள்ளாகவே இவர்கள் அடிக்ட் ஆகிவிடுவார்கள். ஒரு விஷயம் குறித்து குறைந்தபட்ச அலசலுக்குக் கூட நேரத்தை செலவு செய்யாதவர்களாக இருக்கும் பட்சத்தில் ஒரு முழுமையான அறிதலுள்ள மனிதனாக ஆகாமல் போகும் வாய்ப்புள்ளது. அறிவும், சிந்தனையும், கூர்மையும் தேவைப்படும் இடங்களிலேயே இன்னும் தீர்க்க வேண்டியவை ஆயிரம் உள்ளன. இதில் இந்த அரைவேக்காட்டு இளைஞர்களை வைத்து என்ன செய்ய முடியும்? எளிதாக ஏமாற்றமுடியும். பயன்படுத்திக் கொள்ள முடியும். அவ்வளவுதான்.

தொழில்நுட்பத்தை மட்டுமே பயன்படுத்தி வாழ்க்கையின் பாதியை வாழ்ந்துவிடுகிறார்கள். இன்று யாரையாவது மிஸ் பண்ணினால் வீடியோ கால் செய்தால் போதும். ஒரு பரிசு கொடுக்க வேண்டுமானால் ரீல்ஸ் செய்து கொடுத்தால் போதும். ஒருவரைக் கவர வேண்டுமானாலும் எளிதில் கைக்கெட்டிய தூரத்தில் இருப்பதை வைத்து அனைத்தையும் செய்துவிடலாம். ஒரு சார்ட்டை எடுத்து ஸ்கெட்ச் செய்து அல்லது கைப்பட செய்து கொடுக்கும் ஒரு மனித தொடுகை சார்ந்த விஷயங்கள் யாவும் இன்று இல்லை. ஒரு பெரிய அபோகாலிப்ஸ் ஒன்று நடக்கும் என நினைக்கிறேன். உணர்வுகள் இருக்கின்றன. ஆனால் மனிதத்தன்மை குறைந்து கொண்டே வருகிறது. NCRB தரவுகளை எடுத்துப்பார்த்தால் கடந்த சில வருடங்களாக இளைஞர்களின் தற்கொலை அதிகமாகிக் கொண்டே வருகிறது. நிறைய அடிக்‌ஷன்கள், சிறிய விஷயங்களுக்கு மனம் உடைந்து போதல், வீண் சாகஸங்களால் உயிரிழத்தல் என பல காரணங்கள். இது அதிகரித்துக் கொண்டேதான் செல்லும். நேரடிக் காரணமாக இல்லையானாலும் ஆழமான வாசிப்பின்மை கொண்டு செல்லும் இடம் இது தான்.

தொழில்நுட்பங்கள் வளர வளர மக்கள் பொழுதுபோக்கை எப்படி நுகர்கிறார்கள் என்பது மாறிக்கொண்டே வருகிறது. அதேபோல குறுகிய நோக்கம் கொண்டு அதே தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களை சந்தையாக்கி வளரும் வணிகர்களும் உருவாகிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய தொழில் நுட்பம் வரும்போது அது சார்ந்த சிக்கல்கள் பூதாகாரமாக பேசப்படும். அது சார்ந்த ஒரு விழிப்புணர்வை நாம் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது. ஆனால், மக்களை தொடர்ந்து முட்டாளாகளாகவே வைத்திருக்கவும் முடியாது. எல்லாவற்றுக்கும் ஒரு உடைவுப்புள்ளி ஒன்று உண்டு. பார்ப்போம்.

அறிவார்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஆட்களிலேயே கூட எத்தனை பேர் முக்கியமான தமிழ் ஆங்கில நாளிதழ்களில் வரும் கட்டுரையை படிக்கிறார்கள்?

கிருத்திகா சீனிவாசன்

நீங்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்த களங்களில் பயணம் செய்து செய்தி சேகரிக்கிறீர்கள். விடுதலையடைந்து முக்கால் நூற்றாண்டுக்கு மேலாகியும் சாதியம் சார்ந்த பிரச்சனைகள் இன்னும் உள்ளது என்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

இன்று என்றல்ல, எல்லா காலத்திலும் இது இருந்திருக்கிறது. இனியும் இருக்கும். நான் உயிருடன் இருக்கும் காலகட்டம் வரை இந்த சாதியப்பாகுபாடுகள் இருந்து கொண்டேதான் இருக்கும் என்பதை திட்டவட்டமாக என்னால் சொல்ல இயலும். என் உடல் ஒத்துழைக்கும் வரை இந்த களம் சார்ந்த பணிகளில், இந்த மக்களுக்காகத்தான் இருப்பேன்.

உங்கள் களப்பணி வழியாக என்னென்ன பிரச்சனைகளை எல்லாம் இந்த மக்கள் சந்திக்கிறார்கள், எவற்றையெல்லாம் இன்னும் ஆவணப்படுத்த வேண்டும் என நினைக்கிறீர்கள்?

தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திற்குள் நுழைந்து ஊர்களுக்குள் நீங்கள் பயணம் செய்தாலும் ஒரு அமைப்பை பார்க்கலாம். சாலைகள், வயல்வெளிகள், குடியிருப்புகள், ஊரின் எல்லை, மயானம், மயானத்தைத்தாண்டி சில குடிசைகள் இருக்கும். எந்த கிராமத்தைத் தாண்டினாலும் இத்தகைய அமைப்பு இருக்கும். பொதுவாக நல்ல கட்டுமானமுள்ள வீடுகள், சாலை வசதியுடன் இருக்கக்கூடிய பகுதிகள் பெரும்பாலும் அந்த ஊரின் ஆதிக்க சாதியை சேர்ந்ததாக இருக்கும். வயல்வெளிகள் தாண்டிச் சென்றால் இருக்கும் ஊர்கள் பட்டியல் சாதி மக்களுடையதாக இருக்கும். அதைத்தாண்டி மயானம் அல்லது அதையும் கடந்து சென்றால் பழங்குடி மக்களின் குடியிருப்பு இருக்கும். 2023 -லும் இப்படித்தான் இருக்கிறது.

எதை மாற்ற வேண்டும் என்று கேட்டால், இன்னும் எல்லாமும் அப்படித்தான் இருக்கிறது. 1930-லும் இப்படித்தான் இருந்தது. என்ன ஒரு வித்தியாசம் என்றால் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு நான்கு பேர் சென்னை வந்திருப்பார்கள், பொருளாதார ரீதியில் முன்னேறியிருப்பார்கள். ஊர் அப்படியேதான் இருக்கும். Artificial Intelligence மூலம் ரோபோவே இன்னும் நூறு வருடங்களில் சர்வ சாதரணமாக புழங்க ஆரம்பித்தாலும் அந்த சாதிக்காரனின் ரோபோ எங்க ஊருக்குள்ள வரக்கூடாது என்றுதான் சொல்லி சண்டை செய்து கொண்டிருப்பார்கள். 2023-லும் மின்சாரம் இல்லாத கிராமம் தமிழ்நாட்டில், இந்தியாவில்  உள்ளது. கோயிலுக்குள், பொது இடங்களில் எல்லா மனிதர்களும் சென்று வர முடியவில்லை. இதில் என்னால் மாற்றம் கொண்டு வர முடியும் என்று தோன்றவில்லை. குறைந்தபட்சம் இன்று நிலைமை எப்படி இருக்கிறது என்பதை பதிவு செய்ய வேண்டும் என்பதையே ஒரு இதழியலாளராக என் பயணம் என நினைக்கிறேன்.

இந்தமாதிரியான விஷயங்களை வெளிக்கொணர்வதற்கு இதழியலில் போதுமான சுதந்திரம் இருக்கிறதா?

தமிழ்நாட்டைப் பொறுத்த அளவிலாவது எந்தத் தடையும் இல்லை என உறுதியாகச் சொல்ல முடியும்.

நீதிக் கட்சி தொடங்கி இத்தனை வருடங்களாக நாம் சாதியப் பாகுபாடு, பெண் அடிமைத்தனம் ஆகியவற்றுக்கு எதிராகத்தானே போராடி வருகிறோம்? 2023-லும் இவை இன்னும் இருக்கிறது என்பதற்கான காரணம் என்னவாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?

அந்தக் கேள்விதான் என்னை இந்தத் துறையில் இந்த களப்பணியை நோக்கி உந்தித்தள்ளியது. நானும் தேடிக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் நான் என் வண்டியை ஸ்டார்ட் செய்து வெளியில் செல்லும் போதும் இந்தக் கேள்வியே என்னை முடுக்குகிறது. சமீபத்தில் பட்டியல் இன மக்களை கோவிலுக்குள் அனுமதிக்காத இடத்தில் செய்தி சேகரிப்புக்காக சென்றிருந்தேன். இரு தரப்புமே நல்ல படித்த முன்னேறிய இளைஞர்கள்தான். நகரங்களில் வேலை பார்ப்பவர்கள்தான். ஆனால் கிராமத்திற்கு வரும்போது வேறு ஒரு சாதி என் கோயிலுக்குள் வரக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். ”ஜாதி என்பது Physical ஆக ஒரு entity கிடையாது. It Is a State of mind” என அம்பேத்கர் சொன்னார். ”சாதி மனிதனை சாக்கடையாக்கும்” என பெரியார் சொன்னார். அது உண்மைதான். சாதி என்பது ஒரு கட்டடமாக இருந்தால் இடித்துத் தள்ளிவிடலாம். பொருளாக இருந்தால் எரித்து விடலாம். ஆனால் அது மூளைக்குள் ஒரு புற்றுக்கட்டி மாதிரி ஒளிந்திருக்கிறது. எத்தனை தலைவர்கள், அறிவு ஜீவிகள் வந்தாலும் அவர்களை சாதிய, மத ரீதியாக அடையாளப்படுத்தி அவர்களை அணுகாத வண்ணம் பார்த்துக் கொள்கிறார்கள்.

அம்பேத்கர் கல்வியால், அதிகாரத்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை விடுவித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையை விதைத்தார். இன்று ஐ.ஏ.எஸ் ஆனாலும் அதற்குப் பின்னால் இருக்கும் இந்த சாதி அடையாளம் ஒழிவதில்லையே. ஏன்?

கல்வியும், அதிகாரமும் ஒரு தீர்வு என நானும் நினைத்திருக்கிறேன். ஆனால் இது மட்டும் தீர்வு அல்ல என்பதையே கல்வி மரணங்கள், அதிகார மட்டத்தில் நடக்கும் தற்கொலைகள் சொல்கின்றன. ஒடுக்கப்பட்டவர்கள் அதிகாரத்தால், கல்வியால் முன்னேறி கேள்வி கேட்டால் மட்டும் போதாது. ஒடுக்குபவர்கள் ”இது அசிங்கம்” என உணர வேண்டும். இரண்டு பக்கமும் இது நிகழ வேண்டும். வேங்கைவயல் பிரச்சனையை எடுத்துக் கொள்ளுங்கள். எத்தனை அசிங்கமான பிரச்சனை இது! உலகத்தின் முன் நின்று இதை நம்மால் சொல்ல முடியுமா? நம்மை நாகரிகமான மனிதர்கள் என்று சொல்லிக் கொள்ள இயலுமா?

உங்களுடைய இந்த ஐந்து வருட செய்தி சேகரிப்பு பயணத்தில் உங்களை மீள மீள உந்தித்தள்ளும் சம்பவங்கள் பற்றி சொல்லுங்கள்.

குறவர் மக்களை சில சமயம் போலீஸ் பிடித்துச் சென்று பொய் கேஸ்களை அவர்கள் மீது போட்டு சிறையில் டார்ச்சர் செய்து ஒப்புக் கொள்ளச் செய்வார்கள். அப்படி பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வந்து அவர்களுக்கு மனித உரிமை ஆணையம் மூலமாக மறுவாழ்வு கிடைக்கச் செய்யும் சம்பவங்கள் எல்லாம் நிகழ்ந்துள்ளது. கள்ளக்குறிச்சியில் அப்படி ஒரு சம்பவத்தைக் கேள்விப்பட்டு அந்த இடத்திற்கு விழுப்புரத்திலிருந்து டூவீலரில் சென்றேன்.

சரியான மழைக்காலம் அது. காலை முதல் நீதிமன்றத்தில்தான் இருந்தேன். இரண்டு நபர்களை நீதிமன்றக் காவலில் எடுத்துக் கொண்டு சிறையில் அடைத்து விட்டார்கள். நானும் வீட்டுக்கு வந்துவிட்டேன். மறுநாள் மாலை அந்த சிறையில் அடைக்கப்பட்டவரின் மனைவி தொலைபேசியில் அழைத்து அவருடைய கணவர் ஜெயிலில் இருக்கும்போது நெஞ்செலும்பு முறிந்து மருத்துவனையில் சேர்க்கப்பட்டிருப்பதை கூறினார். நான் ஆறுதல் கூறி அவர்கள் எங்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என விசாரித்து போது விழுப்புரம் அரசுமருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக தகவல் கிடைத்தது. இரவு பதினொரு மணிக்கு அங்கு சென்றேன். ஒரு அசாதாணமான சூழல் அது. போலீஸ் அலட்சியமாக நடந்து கொண்டார்கள். மீடியாவை அனுமதிக்க முடியாது என பிரச்சனையும் செய்து கொண்டிருந்தார்கள்.

அன்றுதான் புயல் கரையை கடக்கிறது. அந்த பாதிக்கப்பட்டவரின் மனைவி என்னிடம் வந்து அவருடைய கணவர் ”நான் உயிருடன் இருப்பேனா இல்லையா என தெரியாது. போலீஸ் அடித்ததில் நெஞ்சு மிகவும் வலிக்கிறது. பிள்ளையை நல்லா படிக்க வை” என்று சொன்னதாகச் சொன்னார். இரவு ஒரு மணிக்கு மேல் ஆகிவிட்டது. இரண்டு நாட்களாக நண்பர்கள் ட்வீட் போடுகிறோம், கவனக் குவிப்பு செய்ய முற்படுகிறோம்… எதுவும் நினைத்தமாதிரி செல்லவில்லை. அந்தப்பெண்ணுக்கு ஒருவாரத்தில் பிரசவத்திற்கான தேதியை குறித்திருந்தார்கள். அதுவும் என்னை மிகவும் பாதித்தது. டாக்டரிடம் விசாரித்தபோது ஒன்றும் பிரச்சனையில்லை என்று சொன்னதால் இரண்டு மணிக்கு மேல் காலையில் வருவதாகச் சொல்லி வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். மழை பிடித்துக் கொண்டது. வண்டிக்கு எதிர்த்திசையில் முள் போல குத்திக் கொண்டிருந்தது. செத்துவிடுவேன் என்றுதான் நினைத்தேன். இரவும் கொடுமழையும் ஒரு மாதிரி பயத்தை கொடுத்தது. எங்கும் ஒதுங்க முடியாதபடிக்கு சாலை இருந்தது. ஒருமணி நேரமாக சென்று கொண்டே இருந்தேன். வீட்டுக்கு வந்து பார்த்தால் ஃபோன் மழையில் நனைந்து அணைந்துவிடும் நிலையில் இருந்தது. அவசர அவசரமாக அதிலுள்ள டேட்டாவை லேப்டாப்பில் ஏற்றினேன். அந்த இரண்டு நாட்களுக்கான தகவல்கள் மட்டும் கிடைத்தால் கூடப் போதும் என்று தோன்றுமளவு பதட்டமாக இருந்தது. ஒருவழியாக காபியாகிவிட்டது. அந்த ஃபோன் அதன்பின் கிராஷ் ஆகிவிட்டது. அந்த டேட்டாதான் மீடியா கண்காணித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கான அத்தாட்சி. அது ஒரு அழுத்தத்தை காவல்துறைக்கு, நீதித்துறைக்கு, அரசுக்கு அளிக்கக்கூடியது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கக்கூடியது.

அதற்கடுத்த வாரம் அந்த அக்காவுக்கு நல்லபடியாக குழந்தை பிறந்தது. அந்த அண்ணா பெயிலில் வெளிவந்துவிட்டார்கள். இந்த ஐந்துவருடத்தில் இந்தச் சம்பவத்தை மட்டும் என்னால் மறக்க முடியாது. ஒரு ஸ்டோரிக்காக எத்தனை தொலைவு செல்ல முடியும் என்பது இருக்கிறதல்லவா? அந்த அக்கா குறவர் இனத்தைச் சேர்ந்தவர். ஒடுக்கப்பட்ட ஒரு சமுதாயம். அவர்களுக்கு எதிராக ஒரு வன்முறையைச் செய்வது அரசின் ஒரு கிளை. ஒற்றை நபரால் அரசு இயந்திரத்திற்கு எதிராக எப்படி போராட முடியும்? இதழியலாளராக என்னால் செய்ய முடிவதும் செய்தியை சேர்க்க முடிவது மட்டுமே. ஒரு எல்லைவரை மட்டுமே செய்ய முடியும். தலைகீழாக எல்லாவற்றையும் என்னால் மாற்றிவிட முடியாது. ஆனால் ஒரு சிறு மாற்றத்தை அதை பதிவு செய்து கொண்டிருப்பதன் வழியாக செய்ய முடியும் என்று தோன்றியது. ஒரு மனிதராக அன்று மிகவும் பெருமைப் பட்டேன்.

ஒரு சவாலான பணிதான் இல்லயா? என்றாவது இதை விட்டுவிட்டு இன்னும் வசதியான, இன்னும் சம்பளம் அதிகம் வரும் ஒரு வேலைக்குச் செல்ல வேண்டும் என்று தோன்றியதுண்டா?

வேலைய விட்டு விடலாம் என்று தோன்றும்போதெல்லாம் நான் சேகரித்துக் கொண்ட இந்தத் தருணங்கள்தான் நினைவுக்கு வரும். ஒரு Content Writing கம்பெனிக்கு செல்லலாம், உட்கார்ந்து வேலை செய்யும் பணிக்கு செல்லலாம், சென்னை செல்லலாம், Freelancing செய்யலாம், துறையையே மாற்றிக் கொண்டு சினிமாவில் எழுதலாம் என நான் நினைக்கும் போதெல்லாம் கள்ளக்குறிச்சி சம்பவம்தான் நினைவுக்கு வரும். இங்கு இந்த உலகம் மதிப்பிட்டு வைத்திருக்கும் வளர்ச்சி என்பது என்ன? அதிக சம்பளம் அவ்வளவுதானே? அது தேவையில்லை. இது போதும் என்று நினைத்தாலே நாம் பிடித்ததில் ஈடுபடலாம். நான் இல்லாமல் ஆனால் கூட நான் இங்கு சொல்லிய கதைகள் இருக்கும் இல்லையா? அதைத்தான் முக்கியமானதாக மதிப்பிடுகிறேன்.

அந்த சம்பவத்தன்று நான் மட்டுமே ஒரு செய்தியாளராக அங்கிருந்தேன். நான் ஒருத்தி இருந்ததாலேயே போலீஸ் தங்கள் இயல்பை விடவும் ஒரு படிக்கு மேல் சென்று அவரை பத்திரமாக பார்த்துக் கொண்டார்கள். நான் செய்தி எழுதுகிறேனோ, கேள்வி கேட்கிறேனோ இதெல்லாவற்றையும் விட என் இருப்பு மேலும் கவனத்தை அவர்களுக்கு அளிக்கும் என்பது உண்மை. அதுதான் Journalism என நான் நினைக்கிறேன். இது மாதிரி நான் உணரக்கூடிய தருணங்களை, விளக்கமுடியாத அந்த ஒன்றை வாழ்நாள் முழுவதும் சேர்த்துக் கொண்டே இருப்பேன்.

இதழியலில் வெறுமே Content Writing செய்வதற்கும், களப்பணி செய்து Content Writing செய்வதற்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது?

நிச்சயம் எழுத்து சார்ந்தே வித்தியாசம் உள்ளது. நான் உணர்வு ரீதியாகவும் அங்கு உடன் இருக்கிறேன். அது இல்லாமலும் கச்சிதமாக வேறு இடத்திலிருந்து செய்தியை மட்டும் வாங்கிக் கொண்டு நேர்த்தியாக எழுதுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால் நான் அந்த இடத்தில் இருப்பதால் அந்தச் சூழலில் ஒரு மாற்றத்தை நிகழ்த்த முடிகிறது இல்லையா? அது எழுதுவதை விட மிக முக்கியம் என நான் நினைக்கிறேன்.

சம்பவம் நடந்த பிறகு போய் சிலர் செய்தி சேகரிப்பார்கள். சம்பவத்தன்று உடனிருக்கும்போது கிடைக்கும் தகவல்களைவிட அதன்பின் சென்று அவர்களிடம் செய்தி சேகரிக்க முற்பட்டால் அவ்வளவு எளிதில் அவர்களை அணுக முடியாது. தொலைபேசியில் அழைத்து மட்டுமே செய்தி சேகரிப்பதிலும் உடன்பாடு இல்லை எனக்கு. சம்பவத்தன்று உடனிருக்கும் போது இதழியல் துறை மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். நமக்கு ஒரு பிரச்சனை என்றால் இவர்கள் வருவார்கள், இவர்களிடம் உண்மையைச் சொல்லலாம் என்ற நம்பிக்கை அப்போதுதான் மக்களுக்கு உருவாகும்.

ஊடகம் சார்ந்து இயங்கும்போது பணம், புகழ் என இரண்டு விஷயங்களை பிரதானமானவையாக அதைக் கைகொள்ளும் பெரும்பான்மையினர் வைத்துள்ளனர். நீங்கள் சொல்லும் மதிப்பீடுகளுடன் இயங்குபவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், நீங்கள் அறிந்தவரை?

நிச்சயமாக இருக்கிறார்கள். என்னுடன் வேலை பார்க்கும் பலரும் இருக்கிறார்கள். மக்களுக்கு வெளியில் தெரியும் முகங்களை விடவும் இது மாதிரியான செயற்பாட்டாளர்கள் அதிகம். அவர்களுக்கு வெளியில் தெரிய வேண்டும் என்ற பிரக்ஞை கூட இருக்காது. சோஷியல் மீடியாவை பார்த்துவிட்டு இவ்வளவுதான் இயங்குதளங்கள் என நினைத்துவிடக் கூடாது. நல்ல செய்தித்தாள் வாசித்தால் அதனுடன் அதற்காக இயங்குபவர்களையும் அறிந்து கொள்ளலாம்.

இந்த மாதிரி களப்பணியாளர்களுக்கு பற்றாக்குறை ஊடகத்துறையில் உள்ளதா?

அது உள்ளது. களப்பணி செய்து அதை ஆய்வுக்கு உட்படுத்தி எழுதுவதற்கு இன்னும் நிறைய பேர் வர வேண்டும். இன்னும் நிறைய செய்யலாம். செய்ய வேண்டியது அதிகம் உள்ளது. நீங்கள் சொல்வது போல் வேறு ஒரு குறிக்கோளுடன் உள்ளே வந்து தங்களுடைய தொடர்பு எல்லையை விரிவு படுத்திக் கொண்ட பின் வெளியேறிவிடுபவர்கள் இருக்கிறார்கள். பெரும்பான்மையும் இப்படித்தான். நான் இதை குறை சொல்ல மாட்டேன். ஆனால் இதை விரும்பிச் செய்யக்கூடிய ஆட்கள் வர வேண்டும்.

பெண்களின் பங்கு இந்தச் செயல்பாட்டில் குறைவாகத்தான் உள்ளதா?

குறைவுதான். ஆனால் என்வரையில் முன்னெப்போதும் விட அதிகம். இன்னும் பத்துவருடங்களில் இன்னும் அதிகம் பேரை எதிர்பார்க்கலாம். முதலில் கை தூக்குவதுதான் பிரச்சனை. அதன்பிறகு அதிகமும் கை தூக்கிவிடுவார்கள். அது ஆரம்பித்துவிட்டது.

ஒடுக்கப்பட்ட மக்கள், சிறுபான்மையினர், பெண்கள், எளியவர்களுக்காக நிற்பதற்கு அங்கிருந்து அதை உணர்ந்த ஒருவர் அதனால் செய்கிறார்கள் என்பதை எப்படிப் பார்க்கிறீர்கள். அதுவல்லாத ஒருவரும் செய்யலாம் தானே.

உண்மையில் அவர்களுக்காக நிற்பதற்கு நாம் அவர்களாக இருக்க வேண்டுமென்பதில்லை. அதற்குத் தேவை “Empathy” தான். அந்தத் தரப்பில் இருக்கும் பலருமே அதில் நாட்டம் இல்லாமல் இருக்கலாம். உணராமலும் இருக்கலாம். பாதிக்கப்பட்டவர்கள் எத்தரப்பினரானாலும் அவர்களின் வலியை உணர்ந்தவர்கள்தான் தேவை. இதழியலின் அடிப்படையே இந்த “Empathy” தான்.

இதழியலாளர்கள் கவிதா முரளிதரன், கிரீஷ்மா குத்தர், ஜெயராணி

உங்கள் முன்னோடிகள் என நீங்கள் கருதுவது யாரை?

வேலூர், மதுரை, திருநெல்வேலி சார்ந்து பல பெண் களப்பணியார்கள் இயங்கியிருக்கிறார்கள். ஜெயராணி, கவிதா முரளிதரன், சாய்நாத், கிரீஷ்மா குத்தர், சுஷ்மிதா, நிருபமா விஸ்வநாதன, ஜெயந்தி பவர், அபர்ணா கார்த்திகேயன் போன்ற பத்திரிகையாளர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். ஜெயந்தி பவர் சென்னையில் பத்து வருடங்களாக கிரைம் செய்திகளை கையாண்டார். அது பயங்கர உந்துதல் எனக்கு. எப்போது விரக்தியில் தளர்ந்தாலும் அம்பேத்கரின் மூக் நாயக்கை நினைத்துக் கொள்வேன். எல்லா பணிகளுக்கு இடையிலும் இதழியலின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்ததால்தான் அவர் பத்திரிக்கையை நடத்தினார். அவரை வாழ்வின் எல்லா பிரச்சனைகளின் போதும் நினைத்துக் கொள்வேன். அதே சமயம் ராமாபாயையும் அவருடைய தியாகத்தையும் முக்கியமானதாக நினைப்பேன்.

உத்தர பிரதேசத்தில் ஒரு பத்து பெண்கள் சேர்ந்து யுடியூபில் ’கபர்லஹரியா’ என்ற செய்தி ஊடகத்தை ஆரம்பித்து இயங்கிவருகிறார்கள். அவர்களது ஊரில் இயங்கிய ஒரு குவாரியை செய்தி ஊடகத்தில் கவனப்படுத்தி நீதிமன்ற தடையாணை பிறப்பிக்கச் செய்தார்கள். அதை நடத்துவது ஒரு இருபத்தி ஐந்து வயதுப் பெண்தான். எந்தப் பின்புலமும் கிடையாது. இந்த அளவுக்குத் தீவிரமான செயல்பாடுகளும் செய்ய இயலும்.

களப்பணி உடல் உழைப்பைக் கோருவது என்பதாலும், பாதுகாப்பு சார்ந்த பிரச்சனைகளாலும் அதிகமும் ஆண்களால் தேர்ந்தெடுக்கப்படும் துறையாகவே உள்ளது. ஒரு பெண்ணாக பல சிக்கல்கள் இருந்தாலும் இக்களப்பணியில் அவர்கள் ஈடுபட வேண்டியதன் முக்கியத்துவம், தேவை என்ன?

கட்டாயம் உடல் சார்ந்த பிரச்சனைகள் ஆணை விட பெண்ணுக்கு அதிகம்தான். அதனால் தான் “உடல் ஒத்துழைக்கும் வரை” களப்பணியில் இருப்பேன் என்று நான் சொன்னேன். இன்றைய காலத்தில் உணவு மாற்றத்தால் அதிக சிக்கலும் உள்ளது. களப்பணியில் இருப்பவர்கள் இன்னும் கொஞ்சம் கவனத்துடன் உடலை பேணிக் கொள்ள வேண்டும். உடலையும், மனதையும் அதற்கேற்ப தயாரித்துக் கொள்ள வேண்டும். இரண்டுமே முக்கியம். ஸ்டோரீஸ் சில சமயம் மிகவும் மனதை பாதித்துவிடும். மிகவும் உணர்ச்சிவசப்பட்டுவிடக் கூடாது. ஒரு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை சந்தித்து வந்த அன்று தூங்க இயலாமல் தவித்திருக்கிறேன். பெண்ணைப் பார்த்து என்பதை விட அவளை இந்த சமூக அமைப்பு நடத்தும் விதத்தை நினைத்து தூக்கம் வரவில்லை. இத்தனையையும் கடந்து மனதை சம நிலையில் வைத்துக் கொண்டால்தான் அடுத்த பணியை நம்மால் ஆரம்பிக்க முடியும்.

பொதுவாக ஆண்களுக்கு உணர்வுகள் சார்ந்து கட்டுப்பாடு இருப்பதாகவும், பெண்கள் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பதாகவும் கருத்து உள்ளது. உணர்வு சார்ந்து ஒரு பெண்ணாக இத்துறையில் செயல்படுவதில் சிக்கல்கள் உள்ளதா?

இந்த இடத்தில் தலைமுறையை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நமக்கு முன் உள்ள தலைமுறை சார்ந்த பெண் இதழாளர்கள் பெரும்பாலும் முதல் தலைமுறை பட்டதாரிகளாக இருந்தார்கள் அல்லது அதிகபட்சம் இரண்டாம் தலைமுறை பட்டதாரிகள். அவர்கள் முதல் முறை இந்த களத்திற்குள் வரும்போது இயல்பில் உணர்ச்சிவசமாக இருந்திருப்பார்கள். “Generational Trauma” என ஒன்றுள்ளது. அது முதல்தலைமுறை பட்டதாரிகளுக்கு இருந்திருக்கும். எல்லா துறையிலும் இதை சொல்லலாம். ஆனால் அதற்கு அடுத்து வரும் தலைமுறையினர் அதைக் கண்டு, உணர்ந்து, கடப்பவர்களாக இருப்பார்கள்.

ஆனால் முதல் தலைமுறையிலேயே உணர்வுச் சமனிலையுடன் அறிவார்ந்து நடந்தவர்கள் இருக்கிறார்கள். அவ்வாறு இருக்கும்போது இன்றைய தலைமுறையில் அது மேலும் முன்னேறியுள்ளது.

நான் இரண்டாம் தலைமுறை பட்டதாரி. நான் இந்த Generational Trauma-வை உணர்ந்திருக்கிறேன். என் வேலையில் பிரதிபலிக்க அதை அனுமதிக்க மாட்டேன். ஆனால் வேலையில் என்னை பெண்ணாக நடத்தினால் எதிர்க்குரல் எடுப்பேன். ஒரு பெண்ணாக விழிப்புணர்வுடன் இருப்பதால் அப்படி பாகுபாடு காட்டப்படும்போது அல்லது உடலாக மட்டும் என்னை பார்க்கும்போது வரும் கோபம் அது. “கல்யாணம் செய்து கொள்ளவில்லையா, தனியா இருக்கீங்களா, பொண்ணுமாதிரி வந்திருக்கீங்க, உடை நல்லாயில்லை, முடி நரைத்திருக்கிறது” போன்ற விமர்சனங்களையெல்லாம் முதல் முறையிலேயே முகத்தில் அறையும்படி விலக்கிவிடுவேன்.

அதே சமயம் ஒரு உணர்ச்சிகரமான ஸ்டோரியை கவர் செய்துவிட்டு வந்து எழுதுவதற்கு முன் தேம்பி அழுதிருக்கிறேன். ஆனால் அழுது கடந்தபின் உணர்வுச் சமனிலையுடன் அந்தச் செய்தியை அணுகி எழுதி அனுப்புவேன். இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது.

கிருத்திகா சீனிவாசன்

உணர்வு சார்ந்து பெண்ணாக இக்களப்பணியில் ஈடுபடுவதால் இத்துறை சார்ந்து கிடைக்கும் நன்மை என்ன?

இதழியல் துறையில் களப்பணி செய்யக்கூடிய பெண்களுக்கு Emotioanl Intelligence தேவை. இது அறிவுத்துறையில் செயல்படும் பெண்கள் அனைவருக்குமே தேவை என்பேன். ஆம் இயல்பிலேயே உணர்வெழுச்சி மிக்கவர்கள்தான் பெண்கள். அதை முதலில் உணர்ந்திருக்கிறேன். ஆனால் அந்த உணர்வுகளை, உணர்வெழுச்சிகளை நேர்மறையாக பயன்படுத்தி ஒரு ஆணால் கேட்க முடியாத கேள்விகளை ஒரு பிரச்சனை சார்ந்து கேட்டு ஒரு செய்தியை என்னால் முழுமையாக கவர் செய்ய முடியும். பத்து ஆண் ரிப்போர்ட்டர்களுக்கு மத்தியில் இருக்கும் ஒரு பெண் ரிப்போர்ட்டர் தான் ஒரு திட்டம் சார்ந்து, பிரச்சனை சார்ந்து ஒவ்வொரு கணமும் பெண்ணாகவும் இருந்து அந்தக் கேள்விகளை கேட்க முடியும். ஒரு பெண்ணுக்கு எதிரான குற்றங்கள் சார்ந்த விஷயங்களில் ஒவ்வொருவரும் பாதிப்புக்கு ஆளாக்கியவரை என்ன செய்தீர்கள் என்ற கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கும்போது ”பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கவுன்சிலிங் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டதா? அந்தக் குடும்ப உறுப்பினர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டதா?” என்ற கேள்விதான் எனக்கு பிரதானமாகப்படுகிறது. அவளுடைய மனமும், உடலும் குணமடைதல்தான் முக்கியமாகப்படுகிறது. அதன் பிறகுதான் குற்றவாளியை பிடித்தார்களா என்ற கேள்வியே எனக்கு வருகிறது.

கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் எத்தனை பேர் உயிருடன் வந்தார்கள், எத்தனை பேர் இறந்தார்கள், இதிலுள்ள உள்ளுறவு, வெளியுறவு சிக்கல்களுக்கு இணையாக அந்த மீனவனைப் பறிகொடுத்த மனைவிகள் மேல் எனக்கு அக்கறை உள்ளது. அவர்களுடைய அன்றாடத்தை அதன் பின் நடத்த அவர்களுக்கான திட்டங்கள் என்னென்ன, அவை சரியாக அளிக்கப்பட்டதா போன்ற கேள்விகளும் முக்கியம்.

இதுதான் அந்த வித்தியாசம். லட்சத்தில் ஒரு ஆண் வேண்டுமானால் பெண்ணாகவும் உணர்ந்து இக்கேள்விகளை பிரதானமாக கேட்கலாம். ஆனால் பெண்ணுக்கான கேள்விகளை பெரும்பாலும் பெண்தான் முதலில் உணர்கிறாள். அதனால் எல்லாத்துறையிலும் அந்த ஒரு பார்வைக் கோணமும் சரிபங்கு அவசியம்.

இன்றிலிருந்து ஒரு பத்து வருடத்தில் இந்தத்துறையில் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள்?

இதழியலாளர்களுக்கு ஓய்வு என்பது இல்லை. ஒரு அறுபது வயதுக்கு மேல் பணி ஓய்வு பெறுவார்கள். ஆனால் அமைப்பிலிருந்து ஓய்வு பெற்றாலும் மனம் இருந்தால் எழுதிக் கொண்டே இருக்கலாம். என்வரையில் என் உடல் ஒத்துழைக்கும் வரை நான் களத்தில் நின்று செய்தி சேகரிக்க விரும்புகிறேன். அதன்பின்னும் எழுதிக் கொண்டிருப்பேன். நான் சொன்னது போல அந்த ஊரும், வயலும், வீடும், மயானமும், அதைத்தாண்டியுள்ள குடிசைகளும், மக்களும் இருந்து கொண்டேதான் இருக்கப்போகிறார்கள். நான் இறக்கும் வரை கட்டாயம் எந்தப் பிரச்சனையும் மாறப்போவதில்லை. அதனால் நான் அதை எழுதிக் கொண்டே இருப்பேன்.

*

5 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *