நுழை நட ஓடு பற – ச. முத்துக்குமாரி

ச. முத்துக்குமாரி அவர்களை வேர்ச்சொல் இலக்கியத் திருவிழா 2026-ல் சந்தித்தேன். அவரும் அவரின் நண்பர் முத்துக்கண்ணனும் பங்கேற்ற அமர்வு முதல் நாள் நிகழ்வில் பிடித்தமான அமர்வாக மாறிப்போனது. தமிழ் நாட்டில் சிறார் இலக்கியம் குறித்த ஒரு மாற்றுப் பார்வையை அது அளித்தது. அதன் பின்னர் அவருடனான தொடர் உரையாடல் வழியாக அவருடைய செயல்பாடுகளை அறிந்து கொள்ள முடிந்தது. அவருடைய கனவுகளையும், சிந்தனைகளையும் அறிந்து கொள்ள நீலி வழியாக ஒரு உரையாடல்.

-ரம்யா

ச. முத்துக்குமாரி

*

வேர்ச்சொல் விருது விழாவில் தான் உங்களை அறிமுகப்படுத்திக் கொண்டேன். முத்துக்குமார் மற்றும் உங்கள் இருவரின் பேச்சும் சிறப்பாக இருந்தது. இருவரும் ஒன்றாகப் பணிபுரிகிறீர்கள் இல்லயா?

ஆமா. வாசிப்பு இயக்கத்தில் ஒன்றாக வேலை செய்கிறோம். அதற்கு முன்னரே கொரனா நோயச்ச காலத்தில் “இல்லம் தேடி கல்வி” என்ற அமைப்பில் இருந்தோம். ஒரு பத்து பேர் கொண்ட சின்ன குழு குழந்தைகளை சந்தித்துக் கொண்டிருந்தோம். அதற்கு வீதி வகுப்பறை என்ற பெயர் வைத்திருந்தோம். பாடம் நடத்தமாட்டோம். முதலில் குழந்தைகள் பிரச்சனைகள் இல்லாமல் இருக்கிறார்களா? அவர்களுக்கான உணவு கிடைக்கிறதா? பாதுகாப்பாக இருக்கிறார்களா? என்று பார்ப்போம். ஏனெனில் கொரனா காலகட்டத்தில் வயல் வேலை (விவசாயம்) நிற்கவில்லை. அவர்களை உடல் வேலைகளில் ஈடுபடச்செய்ய விடாமல் அவர்களுக்கான விளையாட்டு, நாடகம், புத்தகம் வாசித்தல், ஆங்கிலம் பேசும்பயிற்சி, செயல்முறைக்கல்வி ஆகியவற்றில் ஈடுபடச் செய்யும் பணியை அதன் வழியாக மேற்கொண்டோம். அந்த சமயத்தில் தான் குழந்தைகளுக்கான ஒரு ஃபண்ட் வந்தது. சுதன் ஐயா டைரக்டராக (கல்வித்துறை) இருந்தார்கள். எஸ்.எம். மாடசாமி ஐயா அவர்களிடம் கற்றல் இடைவெளியை இக்காலகட்டத்தில் நிரப்ப என்ன செய்யலாம் என ஆலோசித்தபோது அவர் எங்களின் வீதி வகுப்பறை பற்றி துறைக்கு பரிந்துரைத்தார். அப்போ சுதன் ஐயா எங்களிடம் நாங்கள் ஏற்கனவே செயதுகொண்டிருக்கும் பணியைப் பற்றிய விவரங்களைக் கேட்டார். அது தான் இல்லம் தேடி கல்விக்கான மாடலாக அமைந்தது. ஆனால் அதிலும் பள்ளிக்கல்வி சார்ந்த பாடப்புத்தகங்களைக் கொண்டு போய் கொடுத்து குழந்தைகளை வாசிக்கச் செய்வதன் மேல் உள்ள ஒவ்வாமையை மாடசாமி ஐயா பகிர்ந்து கொண்டார். அப்போ குழந்தைகளுக்கான பாடப் புத்தகங்களைத் தாண்டிய புத்தகம் தயாரிக்க ஒரு சிறு குழுவை அறிமுகப்படுத்தினார். அதில் தான் நான், முத்துக்கண்ணன் எல்லாம் இருந்தோம். அதற்கு முன்னர் இருந்த குழு NCERT சார்ந்தது. வெவ்வேறு தரப்பினர்கள் அதில் இருந்தார்கள். நாங்கள் அதில் தலையிட்டு அந்தப் புத்தகங்களை இலகுபடுத்திக் கொடுத்தோம். புத்தகங்கள் கொண்டு போனால் மட்டும் பத்தாது. குழந்தைகளை வாசிக்கச் செய்ய வேண்டும் என வாசிப்பு இயக்கத்தையும் ஏற்படுத்தினோம். அதிலும் நானும் முத்துக்கண்ணனும் மேலும் சில நண்பர்களும் இணைந்து பணியாற்றினோம். மூன்று நான்கு வருடங்களாக சிறார் இலக்கியம், குழந்தைகளுக்கான மொழி, வாசிப்பு ஆகிய பொருண்மைகளில் இணைந்து பணியாற்றுகிறோம்.

நீங்கள் பள்ளி ஆசிரியையும் கூட. வீதி வகுப்பறை போன்ற இயக்கப் பணிகளில் ஈடுபடுவதற்கான உந்துத்தல் எங்கிருந்து வந்தது. இதற்கு முன் இது போன்ற சிறார் வாசிப்பு இயக்கப் பணிகளில் செயல்பட்டிருக்கிறீர்களா?

அரசுப்பள்ளி ஆசிரியையாக ஆவதற்கு முன் நான் சென்னையில் செயிண்ட் ஜான்ஸ் பள்ளியில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடம் நடத்திக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் மற்றும் அவரின் நண்பர் மூவர் சேர்ந்து உருவாக்கிய வாழை என்ற அமைப்பில் இணைந்து பணியாற்றினேன். 2012 வாக்கில். விழுப்புரத்தில் அனந்தபுரம் பகுதியை மையமாக வைத்து குழந்தைகளுக்கான கல்வி சார்ந்த பணிகள் செய்தோம். எனக்கு அரசுப்பணி கிடைத்து திருச்சி வந்தபின்னும் மாதம் இரு முறை அங்கு நடக்கும் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்பேன். இதற்காக பள்ளியிலிருந்தும் ஊர்களில் இருந்தும் நேரடியாக தன்னார்வலர்கள் குழந்தைகளை இந்தப் பயிற்சிக்காகத் தேர்ந்தெடுப்பார்கள். நாங்கள் அவர்களுக்கு வாசிப்பு, செயல்முறைக்கல்வி சார்ந்த பயிற்சி அளிப்போம். எதெல்லாம் பள்ளியில் அளிக்கப்படவில்லையோ அதெல்லாம் அவர்களுக்கு அளிப்பதே அந்தப் பயிற்சிப்பட்டறையின் நோக்கமாக இருந்தது. அந்த பயிற்சிப் பட்டறையை அளிப்பது எனக்குப் பெரிய திருப்பு முனையாக இருந்தது. ஏனெனில் ஒரு ஆசிரியராக என் குழந்தை பள்ளியில் எப்படி இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். ஆனால் பள்ளிக்கு வெளியில் குழந்தைகளின் இன்னொரு பரிமாணத்தைப் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. அவர்களைப் பற்றிய என் புரிதல் விசாலமானது. 2017 வரை இந்த அமைப்பில் பணியாற்றினேன். அதன் ஒரு தாக்கம் தான் வீதி வகுப்பறை எனலாம். 2017க்குப் பிறகு எனக்குத் திருமணமாகியது. வாழை அமைப்பின் செயல்பாடுகளும் குறைய ஆரம்பித்தது. கோவிட் காலகட்டத்தில் மொத்தமாக இல்லாமல் ஆனது.

மார்ச் 2021-ல் கோவிட் என்றார்கள். நான் அப்போது அருப்புக்கோட்டை அரசுப்பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஜூன் -ல் சரியாகிவிடும் என்று நினைத்தோம். ஆனால் அப்போதும் திறக்கப்படவில்லை. எப்போது திறப்பார்கள் என்ற தகவலும் சரியாகத் தெரியவில்லை. சத்துணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தைகள் என்ன சாப்பிடுவார்கள்? என்ற எண்ணம் தான் முதலில் வந்தது. நான் ஒரு அரசுப் பணியாளர். எனவே எனக்கு மாதமாதம் சம்பளம் வந்துவிடும். பெரும்பாலானோர்க்கு வேலைக்குப் போனால் தானே சம்பளம். எனவே மாடாசாமி ஐயாவின் தூண்டுதலின் பேரில் முதலில் குழந்தைகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பார்ப்பதற்காகச் சென்றோம். அருப்புக்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதியிலுள்ள கிராமங்களில் உள்ள குழந்தைகளில் எத்தனை பேருக்கு சாப்பாடு சார்ந்த பிரச்சனை இருக்கிறது எனப் பட்டியலிட்டோம். தாசில்தார் மற்றும் என் நண்பர்கள் உதவியுடனும் குழந்தைஅக்ளுக்கான ஒரு மாத உணவுத் தேவையைப் பூர்த்தி செய்தோம். அதற்குள் நீதிமன்ற ஆணை வழியாக அரசு தார்ப்பிலிருந்து டிரை ரேஷன்கள் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். உணவுத்தேவைக்குப் பின் என்ன? என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டோம். நாள் முழுவதும் டிவி பார்க்கும் குழந்தைகளுக்கு வேறு ஒரு வழி செய்ய வேண்டும் என முடிவு செய்தோம். இன்னொரு நூதனமான பிரச்சனை வீட்டில் அதிக நேரம் இருக்கும் குழந்தைகள் வீட்டில் பிரச்சனைகளை சந்திக்க ஆரம்பித்தார்கள். ஒரு பெண் குழந்தை தற்கொலை செய்யும் நிலைக்கு வந்தது. அது பள்ளி இல்லாமல் உருவாகும் வெற்றிடம் தான் காரணம். குழந்தைகளுக்கு கொரனா நோயச்சம் சார்ந்த பாதுகாப்போடு விளையாட்டு, நாடகம், வாசிப்பு ஆகியவற்றை அறிமுகப்படுத்தினோம். குழந்தைகளிடமே அவர்களுக்குத் தேவையான பயிற்சி பற்றி கேட்டறிந்து கையெழுத்துப் பயிற்சி, ஆங்கிலம் பேசும் பயிற்சி ஆகியவை கற்றுக் கொடுத்தோம். நான் ஆசிரியராக இருக்கும்போது நேரம் கிடைக்காததால செய்ய இயலாத பலவற்றை இங்கு குழந்தைகளுக்கு செய்ய முடிந்தது. ஒரு செயற்களம் போல இதை மாற்றிக் கொண்டேன்.

அதன்பிறகு ஒரு நான்கு ஊர்களில் சிறார் நூல்கம் ஆரம்பித்தோம். ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு மாணவரின் வீட்டிலும் இடம் ஏற்படுத்தி அவர்களின் பொறுப்பிலேயே அதை விட்டோம். இந்த நூலக அமைப்பின் வழியாக நூறு புத்தகங்கள் வரை வாசித்த குழந்தைகள் கூட உள்ளது. வாசிக்க முடியாத குழந்தைகள் வழியாக குழந்தைகளின் சிக்கல்களைக் கேட்டறிந்தோம். அதன் பெரும்பகுதி வார்த்தைகள் சிரமமாக உள்ளது என்ற பிரச்சனைதான். அதற்கு முன்னார் சிறார் இலக்கிய நூல்கள் வாசித்துக் கோண்டிருந்தேன். நான் குழந்தையாக இல்லாததால் தன இதை ரசிக்க முடியவில்லை என்ற சமாதானம் அடைந்தேன். ஆனால் அதே சமயம் ஆங்கில சிறார் இலக்கிய நூல்களை என்னால் ரசிக்க முடிந்தது. இந்த முரணை என்னால் விளங்கிக் கொள்ள முடியாமல் இருந்தது. ரஸ்கின் பாண்ட், ரோல்டால் இவர்களையெல்லாம் ரசிக்க முடிகிறதே என்ற எண்ணம் வந்தது. அதன்பிறகு தமிழிலுள்ள சிறார் நூல்களின் பிரச்சனைகளைக் குழந்தைகள் வழியாகவே கேட்டறிந்தோம். அதில் சொல்லப்பட்ட பெரும் பிரச்சனை வார்த்தைப் பிரயோகங்கள், மொழிச்சிக்கல் தான். சிறார் இலக்கிய நூல்களிலுள்ள மொழி குழந்தை உலகத்தின் மொழியுடன் இயைந்து செல்லவில்லை. பேசுபொருளிலும் இதே நிலைமை தான்.

ஆடு மேக்கும் குழந்தை சிறார் இலக்கியத்தில் வரவே இல்லை. ஏனெனில் எழுதும் எழுத்தாளர்களுக்கு கிராமத்துக் குழந்தைகளின் வாழ்க்கை தெரிந்திருக்கவில்லை. அடித்தட்டு வர்க்கக் குழந்தைகளின் உலகம் சார்ந்த சிக்கல்கள் கதைகளில் இல்லாமல் இருந்ததும் குழந்தைகள் அந்த கதைகளுக்குள் புக முடியாமல் இருந்ததற்கான காரணமாக இருந்தது. வாசிப்பு இயக்கத்திற்கும், நான் சிறார் இலக்கியம் எழுத ஆரம்பித்ததற்கு இதுவே முதல் காரணமாக அமைந்தது. ஒன்றரை வருடங்கள் வீதி வகுப்பறை பெரிய அனுபவத்தையும் புரிதலையும் தந்தது. அறிவியல் திருவிழா நடத்தினோம். மக்களே செலவுகளை ஏற்றுக் கொண்டு அதை நடத்திக் கொடுத்தார்கள். அறிவொளி இயக்க ஆட்களையும் இதற்குப் பயன்படுத்திக் கொண்டோம்.

சிறார் இலக்கிய நூல்கள் கல்வித்துறைக்காக எழுதும் இடத்திற்குள் எப்படி வந்தீர்கள்.

மாடசாமி ஐயாவால் தான். அவர் தான் எங்கள் செயல்பாடுகளைப் பார்த்து கல்வித்துறைக்குப் பரிந்துரைத்தார்கள். அதன்பின்னர் ஆசிரியர் பணியிலிருந்து விடைபெற்றுக் கொண்டு அதில் பங்களிக்க ஆரம்பித்தேன்.

ச. மாடசாமி (எஸ்.எம்)

நீங்கள் குழந்தைகள் என்றவுடன் சிறு குழந்தைகள் தான் நினைவுக்கு வருகிறார்கள். ஆனால் நீங்கள் ஆறு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுப்பவர். அந்தக் குழந்தைகளை கையாளும் ஆசிரியர் ஒன்றாம் வகுப்பு மாணவர்களையும் கையாள்வதைப் பார்ப்பது ஆச்சர்யமாக உள்ளது.

ஆரம்பப் பள்ளி மாணவர்களிடம் சென்று பேசுவது முக்கியம். அவர்கள் பெரிய பள்ளிக்கு வரும்போது பயம் இருக்கக்கூடாது. எல்லா வகைக் குழந்தைகளும் வாசிப்பு இயக்கத்தில் பங்கேற்றார்கள். ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு வகையான செயல்முறைக் கல்வி, முதல் வகுப்பு மாணவருக்கு ஒருவகை செயல் கல்வி என வெவ்வேறு வகைகளில் அவர்களை ஈடுபடுத்தினோம். பனை ஓலையில் பொருட்கள் செய்யக் கற்றுக் கொடுக்க சொல்லிக் கொடுத்தோம். அதை சந்தைப் படுத்தலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது தான் இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு என்னை சென்னைக்கு அழைத்தார்கள்.

உங்கள் விருப்பம் என்ன? ஆசிரியப்பணியா? இந்தச் செயல்பாடுகளா?

மிக நிச்சயமாக ஆசிரியப்பணி தான். அது தான் என் விருப்பமான பணி. ஒரு நாள் கூட விடுமுறை எடுக்க மாட்டேன். முதலில் என்னை ஆசிரியப்பணியிலிருந்து விடுவிக்கப் போவதாகச் சொன்னபோது ஒத்துக் கொள்ளவில்லை. நூறு குழந்தைகளைப் பார்க்காதீர்கள். உங்கள் அறிவு இன்னும் மிக அதிகமான குழந்தைகளுக்குப் பயன்படப் போவதாக எடுத்துக் கொள்ளுங்கள் என இளம்பகவத் ஐ.ஏ.எஸ் அறிவுறுத்தினார். ஐ.டி.கே-வில் (இல்லம் தேடிக் கல்வி) இருந்தபோது அதற்கான சிறப்பு அலுவலராக அவர் இருந்தார்.

இளம்பகவத் ஐ.ஏ.எஸ் அவர்கள் என் ஆதர்சமான ஆளுமை.

அருமை. எங்கள் டைரக்டெர் சுதன் அவர்கள் வி.ஆர்.எஸ் வாங்கியபோது மூன்று மாதகாலம் இளம்பகவத் அவர்களின் பொறுப்பில் சென்றது. 2022 வாக்கில். வாசிப்பு இயக்கம் அடுத்தகட்ட நிலைக்குச் செல்வதைக் கண்கூடாகப் பார்த்தேன். நிறைய நிதி ஒதுக்க ஆரம்பித்தார்கள். கறுப்பு வெள்ளைப் படத்தில் போட்ட வாசிப்பு இயக்க புத்தகங்கள் வண்ண நிறங்கள் பெற்றது. நம்ம குழந்தைகள்லாம் கலர்ல எப்பத்தான் படிக்கறது என்று சொல்லி அதைச் செய்ய வைத்தார். இன்று வரை குழந்தைகள் அதை அத்தனை விருப்பத்துடன் படிப்பதற்கு இந்த முன்னெடுப்பு முக்கியமாக அமைந்தது. பட்ஜெட் பத்தி கவலைப்படாம பண்ணுங்க என்று சொல்வார். நிறையா ஐடியாக்கள் பகிர்ந்து கொள்வார். தனித்தனியாக எங்களிடம் பேசுவார். அதெல்லாம் பெரிய விஷயம். துறை ரீதியாக அப்படி யாரும் எங்களுக்கு சம மரியாதை கொடுத்து அப்படி உட்காரவைத்து எங்களின் எண்ணங்களை, கருத்துக்களைக் கேட்பவர்கள் குறைவு அல்லது இல்லை என்று சொல்லலாம். புத்தகங்கள் நல்லா வந்தது அவருக்கு பெரிய மகிழ்ச்சியைத் தந்தது.

இளம்பகவத் ஐ.ஏ.எஸ்

இப்போதும் வாசிப்பு இயக்கம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது இல்லையா?

ஆமாம். இருநூற்றி ஐம்பது புத்தகங்கள் கொண்டு வர திட்டம் இருந்தது. நூற்றி எழுபத்தி நான்கு புத்தகங்கள் கொண்டு வந்துவிட்டோம். இன்னும் எழுபத்தியாறு புத்தகங்கள் மீதமுள்ளன. புதிய அரசாங்கம் வந்ததும் நின்று விடுமோ என்று நினைத்தோம். இந்தத் திட்டத்தை தொடர்ந்து செய்யச் சொல்லிவிட்டார்கள். இன்னும் மூன்று மாதங்களில் முடித்து விடுவோம்.

இதே நூல்களை ஆங்கிலத்தில் கொண்டு வரும் திட்டமும் முதலில் இருந்தது. அந்த சமயத்தில் இளம்பகவத் தூத்துக்குடி ஆட்சியராகும் பொருட்டு சென்று விட்டார். புதிய ஐ.ஏ.எஸ் அதிகாரி வந்ததும் ஆங்கிலத்தில் கொண்டு வரும் திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் ஆசிரியர்கள், பள்ளிகளிலிருந்து தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் கொண்டு வர வேண்டும் என கேட்டுக் கொண்டே இருந்ததால் சென்ற வருடம் அதையும் ஆரம்பித்தோம். எண்பத்தியேழு நூல்கள் ஆங்கிலத்தில் கொணர்ந்துவிட்டோம்.

ஆரம்பத்தில் வாசிப்பு இயக்கத்தில் பெரிய குழு இருந்தது. நீங்க அமைப்புகளில் இருப்பதால் இதை அவதானித்திருப்பீர்கள். உங்களுக்குத் தெரியாதது அல்ல. வேலையே செய்யாதவர்கள் இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு மரியாதையும், பாரட்டும், சம்பளமும் வேண்டும் என்றும் நினைப்பார்கள். தனக்குக் கீழ் எல்லாரும் வேலை செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். எங்களுக்கு முன்னால் ஒரு சீனியர் குழுவிடம் புத்தகப்பணியை அளித்திருந்தார்கள். ஜூலை 2022 தொடங்கி டிசம்பர் வரை அவர்கள் எந்த வேலையையும் செய்யவில்லை. அவர்களையும் குறை சொல்ல முடியவில்லை. ஏனெனில் அவர்களுக்கு சிறார் இலக்கியம் பற்றிய ஐடியாவே இல்லை. என்ன பண்ணனும்னு தெரியல. குழந்தைகளைப் பற்றி அறியாதவர்களாக இருந்தார்கள். டிசம்பர் 2022 அன்று சென்னையில் ஒரு கூட்டம் நடந்தது. நானும் முத்துக் கண்ணனும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு நாங்கள் ஒரு மாதத்தில் ஐம்பது நூல்கள் முடித்துத் தருவதாகச் சொன்னோம். இந்த அதிகாரிகள் சென்று விட்டால் பின் எப்போதும் இந்த விஷயத்தை செய்ய முடியாது என எங்களுக்குத் தோன்றியது. டிசம்பர் 31 முதல் ஜனவரி 15க்குள் ஐம்பது நூல்கள் செய்து முடித்தோம். எஸ்.எம். மாடசாமி ஐயா தான் எங்களை அறிமுகப்படுத்தினார். அவருக்கு எழுபது வயது இருக்கும். நாங்கள் இருவரும் எழுதி அவருக்கு அனுப்புவோம். அவர் கண் பார்வைச் சிக்கலுடன் அதை உடனடியாக வாசித்து திருத்தங்கள் சொல்வார். பதினாறு பக்கங்கள் தான் புத்தகம். சொற்கள் குறைவா இருக்கனும். படங்களும் வரனும். எடிட்டிங் பெரிய வேலை இருந்தது. ஆனாலும் செய்து முடித்தோம். அப்போ தான் இளம்பகவத் அதை ஏற்றுக் கொண்டார். சுதன் சாருக்கும் ரொம்ப பிடித்துப் போனது. நந்தகுமார் சார் தெரியுமா?

ஆம் தெரியும். நந்தகுமார் ஐ.ஆர்.எஸ் தானே.

ஆமா. அவங்க மூனு பேரும் ஒரு நல்ல டீம். அதனால தான் வாசிப்பு இயக்கம் சாத்தியமானது. ஒவ்வொரு புத்தகமும் ஒன்றரை லட்சம் பிரதிகள் அடிக்கறாங்க. எல்லாமும் அரசுப்பள்ளி, அரசாங்க உதவி பெறும் பள்ளிகளிலுள்ள மாணவர்களிடம் சென்று சேர்கிறது.

இந்தக் கதைகள் எப்படி. நீங்களே எழுதறீங்களா? அல்லது வேறு கதைகளை சிறார் கதைகளாக மறு ஆக்கம் செய்கிறீர்களா?

சிறார் இலக்கிய எழுத்தாளர்களிடம் ஏற்கனவே கதைகள் பெற்று வாங்கி வைத்துவிட்டார்கள். நாங்கள் அந்தக் கதையை எடுத்துப் படித்துப் பார்த்தால் அது குழந்தைகளுக்கானதா இல்ல. சில கதைகள் ஆர்வத்தைக் கூட தூண்டாததாக இருந்தது. புத்தகம் கலர் இருந்தா மட்டும் பத்தாது. வாசிக்க எளிமையா இருந்தா மட்டும் பத்தாது. அது அவனுக்கு ஆர்வத்தையும் தூண்டனும். படிக்கப் படிக்க தீராமல் ஆகனும். இன்னும் வேணும்னு கேக்கனும். எல்லாத்தையும் எடுத்து ஓரமா வச்சிட்டு சில எழுத்தாளர்களின் கதைகளை எடுத்து எடிட் செய்து கதையாக்கி வெளியிட்டோம். சில எழுத்தாளர்கள் ராயல் சைஸ் புத்தகத்தில் ஐந்து பக்கங்களுக்கு கதை எழுதி வைத்திருப்பார்கள். அதைச் சுருக்கி 300-350 வார்த்தைகளில் கதையாக்குவோம். கதை பத்தல. ஆங்கிலக் கதைகளை எடுத்து மொழிபெயர்க்க ஆரம்பித்தோம். ஒவ்வொரு வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பு செய்யாமல் தமிழுக்கு ஏற்ற மாதிரி தழுவலாக எழுதொனோம். நாட்டுப்புறக் கதைகள், ஆங்கிலக் கதைகள், ரஷ்ய நாட்டுப்புறக் கதைகள் என எடுத்து வேலை செய்தோம். அப்போவும் கூட கதைகள் பத்தல. அப்போ எதிர்ப்பு வந்தது. சிறார் இலக்கியத்தில் அத்தனை நூல்கள் வந்திருக்கிறது ஏன் நாங்கள் அதை எடுக்கவில்லை என கேள்வி கேட்டார்கள். எங்களால் அதை புரியவைக்கவே முடியவில்லை. நான் ஒரு எழுத்தாளராக இருந்தால் நான் எழுதினதை நீ படிக்கனும் என்று சொல்லிவிட்டுப் போகலாம். நான் ஆசிரியர். குழந்தை வாசிக்க முடியாமல் இருந்தால், தடுமாறினால் தற்குப் பின் அந்தக் குழந்தையால் வாசிப்பை நோக்கிச் செல்லவே முடியாமல் ஆகும். குழந்தைக்கு சோறூட்டுவது போலத்தான். அதற்குப் பிடித்தாற்போல உணவூட்டினால் தான் சாப்பிடும் இல்லயா அது போல.

ச, முத்துக்குமாரி குழந்தைகளுடன்

வாசிப்பு இயக்க நூல்கள் வழியாக சிறார் இலக்கிய நூல்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற புரிதலை தமிழ்நாட்டில் ஏற்படுத்த நினைத்தோம். உள்ளடக்கங்கள், கதைக்களங்கள் வெவ்வேறு மாதிரி இருக்கனும், மொழி எளிமையா இருக்கனும், ஆர்வத்தைத் தூண்டனும். குழந்தைகள் உலகத்தைப் பிரதிபளிக்க வேண்டும். மாடசாமி ஐயா எங்களிடம் கேட்டுக் கொண்டது இது தான். குழந்தையை எவ்வகையிலும் புத்தகத்தை யாரும் வாசிக்கச் சொல்லி வற்புறுத்துபடி இருக்கக் கூடாது. மாறாக புத்தகத்தை எடுத்து வைத்ததும் அதை ஓடி வந்து ஆசையாகப் படிக்கும்படி இருக்க வேண்டும் என்றார். ஒரு மிட்டாயை எடுத்து சாப்பிடக்கூடிய ஆர்வத்தைப் போல இருக்கனும் என்றார். அதனால் தான் தலைப்பிலிருந்து, படம் வரை நகைச்சுவையாக, அதுமட்டுமில்லாமல் னல்ல உள்ளடக்கம் சார்ந்து கலவையாக கொடுக்க ஆரம்பித்தோம். கதைகள் பத்தல என்ற எண்ணம் வந்தபோது ஆசிரியர்களை எழுத ஊக்கப்படுத்தினோம். அதன்பின்னர் தான் குழந்தைகளை எழுத ஊக்கப்படுத்தினோம். ஒரு கேம்ப் போட்டோம். கதைகளை எப்படி எழுத வேண்டும் என்ற பாடத்தை எடுத்தோம். ஆசிரியர், மாணவர் இருவரும் கற்றுக் கொண்டார்கள். சென்ற வருடம் குழந்தைகளின் கதைகளை மட்டுமே பிரசுரிக்கலாம் என்ற திட்டத்தை முன்னெடுத்தோம். பதிமூன்றாயிரம் கதைகள் வந்தன.

இந்த இடம் தான் உங்கள் பயணத்தின் உச்சப்புள்ளி என்று தோன்றுகிறது. குழந்தைகளிடமே குழந்தைகளுக்கான கதைகளைப் பெறுவது.

சிரிக்கிறார். ஆமாம். அது ஒரு படிப்பினையும் கூட. ஆசிரியர்கள் எழுதிக் கொண்டிருந்தபோதே ஒரு இருபத்தியைந்து சிறார்கள் கதையெழுத வந்துவிட்டார்கள். அப்படியே குழந்தைகள் மட்டுமே எழுதும் கதைகளுக்கு வந்தோம். பதிமூனாயிரம் கதைகளிலிருந்து முப்பதியைந்து கதைகள் தேர்ந்தெடுத்தோம். அதன்பின்னர் சற்று முயன்றால் கதை எழுதிவிட முடியும் என்றும் நினைக்கும் மாணவர்களிடம் தொடர்ச்சியாக பேசி எழுத வைத்தோம். சில சமயம் திடீரென ஒரு பள்ளியில் விஸிட் போடுவோம். அங்கு சென்று மாணவர்களுக்கு கதை எழுதும் பயிற்சி நாள் முழுவதும் அளித்து எழுத வைப்போம். அதிலிருந்து கதைகளைத் தேர்ந்தெடுப்போம். அப்படி ஐம்பத்தியாறு கதைகள் கிடைத்தது. இன்னும் ஒரு கேம்ப் போட வேண்டியிருக்கு. மூன்று மாதத்தில் எழுபத்தியாறு கதைகளை கொண்டு சேர்க்கனும்.

இது இயல்பாகவே குழந்தைகளுக்கு ஊக்கத்தை அளிக்கக் கூடியது. இலக்கியத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும். கற்பனை வளத்தைத் தூண்டக்கூடியது.

ஆமா. சில குழந்தைகள் கதைகளைப் படித்துவிட்டு பள்ளிகளில் கதை சொல்பவர்களாக ஆவதை ஆசிரியர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்களுக்கே அந்தக் கதைகள் ஆர்வத்தை தூண்டுவதாகவும் சொல்கிறார்கள். ஆசிரியர்களுக்கும் கதை வாசிக்கும் பழக்கம் அதிகமாயிருக்கிறது. சமீபத்தில் கோயம்புத்தூரிலிருந்து ஒரு குழந்தையிடம் கதை வாங்கியிருந்தோம். திருநெல்வேலியிலுள்ள ஆயன்குளத்திலிருக்கும் ஒரு கிணறைப் பற்றி எழுதியிருந்தாள். தண்ணீரை அதிகம் உள்வாங்கும் திறனுடைய கிணறு அது. அதைப் பற்றி விசாரிக்கையில் அந்தக் குழந்தை அது தன்னுடைய சொந்த ஊர் எனவும், கோயம்புத்தூருக்கு பெற்றோர் வேலை நிமித்தம் இருப்பதாகவும் பகிர்ந்து கொண்டது. மே மாதம் லீவுக்குப் போகும்போது அந்தக் கிணறை அவள் பார்ப்பதாகவும் சொன்னாள். கதைகளில் குழந்தைகள் தான் விட்டு வந்த ஊரை கற்பனை செய்கிறார்கள். அவள் கதையின் முதல் வரி இப்படி ஆரம்பிக்கிறது. “திருநெல்வேலி என்றவுடன் உங்கள் எல்லாருக்கும் அல்வா தான் ஞாபகத்துக்கு வரும். எனக்கு அல்வா ஞாபகத்துக்கு வராது. எங்கள் ஊர் தான் ஞாபகத்துக்கு வரும்..” இப்படி எழுதுகிறாள்.

குழந்தை பெயர் என்ன?

அருஷ்யா பர்வீன். அவளிடம் மேலும் கதைகள் எழுத ஊக்குவித்தோம். அவளுக்கு கற்பனை வளம் அதிகமாக இருந்தது. அவளுடைய கதை நூலை தனியாக பதிப்பகத்தில் போடலாம் என்று முடிவு செய்தோம். இதையெல்லாம் உங்களுக்கு ஒரு உதாரணமாகச் சொல்கிறேன். குழந்தைகளின் கதைகளைத் தேர்வு செய்தவுடன் முதலில் நாங்கள் செய்வது அது அவர்கள் எழுதியது தானா என உறுதி செய்வது. அதற்காக அவர்களிடம் கதை பற்றி பேசுவோம். அதன்பின்னர் நன்கு எழுதும் குழந்தைகளை அடையாளம் கண்ட பின் அவர்களை அதோடு நின்றுவிடாமல் மேலும் எழுதத்தூண்டும் பணியையும் செய்ய வேண்டும். ஒரு வருடத்தில் ஐந்தாறு கதைகளை எழுதுங்கள் என அவர்களிடம் சொல்லிவிடுவோம். அக்கதைகளை பாரதி புத்தகாலயம் உட்பட பதிபகங்களில் போட வைக்கிறோம் என உறுதியளிப்போம். “One story one Writer” ஆக அல்லாமல் குழந்தைகளே குழந்தைகளுக்கான புத்தகங்களை எழுதி அடுக்கட்டும் என இந்தத் திட்டத்தை செயல்படுத்தினோம்.

நூறு வருடங்களாக சிறார் எழுத்தாளர்கள் எழுதாததை இந்தக் குழந்தைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு குழந்தை அதிசயக் குளத்தைப் பற்றி எழுதுகிறதென்றால் இன்னொரு குழந்தை என் வீட்டுக்குப் பின்னாலிருந்த குளத்தைக் காணவில்லை என எழுதுகிறது. நம்ம விருதுநகர் மாவட்டத்திலுள்ள கடலைக்காடுகள் பற்றி உங்களுக்குத் தெரியும். அங்கு புகை போட்டு எலி வேட்டை நடத்தி அதைத் துரத்துவதைப் பற்றி எழுதுகிறான் ஒரு குழந்தை. இன்னொரு குழந்தை லீவுக்கு தன் மாமா குழந்தைகள் வருவதையும் அவர்களின் தொந்தரவுகள் பிரச்சனைகள் பற்றி எழுதுகிறாள். பகடியாக எழுதுகிறாள். இன்னொரு குழந்தை தன் செல்லப் பிராணிகள் பற்றியும், அதைப் பராமரிக்க தான் சிரமப்படுவது பற்றியும் எழுதுகிறான். சிறார் எழுத்தாளர்கள் இந்த மாதிரி ஏரியாவைத் தொடுவதே இல்லை.

இது குழந்தைகளின் இருத்தலியல் சிக்கல் கதைகள் என்று சொல்லலாம் போலிருக்கிறதே. இதே பெரியவர்கள் சிறார் கதைகளை எழுத வைத்தால் இதிலுள்ள இனிமையைப் பற்றித்தான் எழுதுவார்கள்.

சரியாகச் சொன்னீர்கள். இதைத்தான் நாங்கள் புரிய வைக்க முற்படுகிறோம். இந்தக் குழந்தை எழுதும் கதையோடு தான் குழந்தைகள் தங்களை உடனடியாகத் தொடர்பு படுத்திக் கொள்வார்கள். பெரியவர்களே இதை வாசிக்கையில் தான் உணர்வார்கள். இந்தப் பெரியவர்கள் குழந்தைகளின் உலகத்தை சரியாக கவனிப்பதில்லை. குழந்தைப் பருவத்தைத் தாண்டு வந்திருக்கும் பெரியவர்கள் அந்தக் குழந்தைப் பருவத்திற்குச் சென்று எழுத வேண்டும். அதையும் செய்வதில்லை. ஆனால் குழந்தைப் பருவத்திலேயே இருக்கும் குழந்தைகளிடம் நாங்கள் சில ஹிண்ட்ஸ் கொடுக்கிறோம். உங்களுக்கு மறக்க முடியாததை, பகடியாக நீங்கள் நினைப்பதை எழுதுங்கள் என சில வார்த்தைகளும், உந்துதலும் மட்டுமே அவர்களுக்குத் தேவைப்படுகின்றன. பெரும்பாலும் கிராமத்துக் குழந்தைகளை நோக்கிச் செல்கிறோம். அவர்களுடைய உலகம் ஒப்பு நோக்க உயிர்ப்புடன் உள்ளது. கொட்டாங்குச்சியில் மண் ஏற்றி வார்த்து விளையாடுவோம் இல்லயா அது பத்தி ஒரு கதை எழுதியிருக்கிறாள் ஒரு குழந்தை. ஆனால் நகரத்திலுள்ள குழந்தைகள் மண்ணை வைத்துக் கூட விளையாடியதில்லை.

குழந்தைகளிடம் கவனிக்கும் திறன் அதிகம்

ரொம்ப. பயங்கரமா கவனிப்பாங்க. அவங்க உலகம் சிறியது. நாம ஒரு இடத்திற்குப் போனால் கவனிக்காததையெல்லாம் குழந்தைகள் கவனிக்கும்.

குழந்தைகளின் உடலுழைப்பு சார்ந்த கதைகள் ஏதும் எழுதப்பட்டுள்ளதா?

இருக்கிறது. ஆனால் அதை வாசித்துவிட்டு குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என நினைப்போம். கதை எழுதப்பட்டு அதை வடிவமைப்பு செய்தவுடன் உடனே அச்சுக்கு அனுப்ப மாட்டோம். அதை குழந்தைகளிடம் கொடுப்போம். அவர்களின் எதிர்வினையை உணர்வுகளைக் கவனிப்போம். நேர்மறையாக இருக்க வேண்டும். அது சிரமத்தை உணர்கிறதெனில் அந்த இடத்தை மாற்றுவோம்.

ஊளவியல் ரீதியாக தொந்தரவுக்கு உள்ளாகக் கூடாது என நினைக்கிறீர்கள் இல்லயா?

ஆமா. ஏற்கனவே நாம் ஆறுதல் சொல்ல முடியாத உளவியல் சிக்கல்கள் அவர்களுக்கு இருக்கலாம். கதைகளும் அவர்களுக்கு தொந்தரவுக்கு உள்ளாக்கக் கூடாது. உதாரணமாக குழந்தைகளுக்கு உணவு மீதான ஏக்கம் அதிகமாக இருக்கும். அது மாதிரியான கதைகள் அதிகமும் வரும். ஆனால் அந்த மாதிரி கதைகள் வழியாக மறைவாக இருக்கும் அந்த ஏக்கம் இன்னும் அதிகமாகி விடக்கூடாது என நினைப்போம். இதை பெரிய எழுத்தாளர்கள் இலக்கியத்தில் பதிவு செய்வது தவறில்லை. ஆனால் குழந்தைகளுக்கு அவை வழங்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.

இப்போ நீங்கள் சொல்லும் கதைகள் யதார்த்தவாதம், அன்றாட வாழ்வைச் சார்ந்ததாக உள்ளது. கற்பனாவாதக் கதைகள் இதில் இல்லையா?

கண்டிப்பாக உண்டு. அதில்லாமல் கதைகளே இல்லையே. மேஜிக் வைத்து எழுதுவார்கள். நிறைய விலங்குகள் வந்து கொண்டே இருக்கும் குழந்தைகள் உலகில். ஒரு பையன் குடை வச்சு ஒரு கதை எழுதியிருந்தான். ”மந்திரக் குடை” என்பது அதன் தலைப்பு. வழக்கமான மந்திரக்குடை கதையாக இருக்கலாம் என்று நினைத்து தான் படிக்க ஆரம்பித்தான். அதாவது எப்படியும் அவன் கேட்டதெல்லாம் கொடுக்கும் கதையாக இருக்கலாம் என்று நினைத்தேன்.

ஒரு நாள் அம்மா வீட்டில் இல்லை. மழை பெய்துட்டு இருக்கு. தன் பிரண்டு வீட்டுக்கு போகலாம்னு அந்தக் குழந்தை நினைக்கிறான். குடை இருந்தால் போயிடலாம்னு நினைக்கிறான். ஆனால் இல்லை. அப்பறம் அவன் தாத்தாவோட பெட்டில ஒரு குடை இருக்கு. அதை எடுத்துட்டு விரிக்கிறான். ஒரு கப்பல் செய்து விளையாடலாம்னு மனசுல நினைக்கிறான். கப்பல் குடையில் இருந்து விழுது. மனசுல நினைச்சது நடக்குதுன்னு தெரிஞ்சதும் தங்கச்சிட்ட போய் சொல்றான். தங்கச்சி உடனே எனக்கு மிட்டாய் வேணும்னு கேக்கறா குடை மிட்டாயைத் தருது. அப்ப ரெண்டு பேரும் மந்திரக்குடை தான் இதுன்னு கண்டுபிடிச்சு இதை கவனமா பயன்படுத்தனும்னு பத்திரமா வச்சிடறாங்க. அடுத்த நாள் வீட்டுப்பாடம் எழுத சிரமப் படறாங்க. தங்கச்சி மந்திரக்குடை இருக்குதுல்ல அத எழுத சொல்லுவோம்னு சொல்றா. ரெண்டு பேரும் போய் மந்திரக்குடைய ஹோம்வொர்க் எழுதச்சொல்லி கேக்கறாங்க. அது ஓட ஓட அடிக்குது. இது உன் வேலை. நீ தான் செய்யனும்னு அடி பின்னி எடுத்துடுது. உடனே போய் அதை பத்திரமா தாத்தாவோட பெட்டியிலேயே போய் வச்சிடறாங்க. இந்த ட்விஸ்ட நாம் எதிர்பாத்திருக்கவே மாட்டோம். (சிரிக்கிறார்…)

கச்சிதமான வடிவம். அந்தக்குடை தாத்தாவே தான் என்று எடுத்துக்கவும் வாய்ப்பிருக்கு..

ஆமா. வெவ்வேறு கற்பனைச் சாத்தியம் இருக்கு. இதை ஒன்றரைப் பக்கத்தில ஒரு குழந்தை எழுதி முடிச்சிட்டான். குழந்தைகளின் கதைகள் பக்கம் பக்கமா இருக்காது. இதைத்தான் பெரியவர்களிடம் நாங்கள் கேட்கிறோம். அரைப்பக்கம் ஒருபக்கத்துல குழந்தை தான் சொல்ல வருவதைச் சொல்லிவிடுகிறது. குழந்தையை பேச வைக்கும்போது ஒன்னு கவனிக்கலாம். அவர்கள் வந்து பெயரை வேணும்னா சொல்வாங்க. தான் இத்தனாவது படிக்கிறேன். இங்கிருந்து வருகிறேன் இப்படி நீட்டி முழங்காது. நேரடியா விஷயத்துக்கு போய்டும். பெரியவர்கள் வள வளன்னு எழுதிட்டே இருப்பாங்க.

அந்த மந்திரக்குடை கதையிலேயே அந்தக் குழந்தைகளை குடை வீட்டை சுத்தி சுத்தி அடிக்குது. அந்த எல்லா சித்திரத்தையும் அவனால் ஒன்றரை பக்கத்துக்குள் கடத்திவிட முடிகிறது. ஒரு குழந்தை மாரத்தான் அனுபவத்தை எழுதறான். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமா இருக்கும்.

அப்படியானால் சிறார் இலக்கியத்திற்கு சிறார்களுக்கு விருது வழங்குவது தான் சரியா இருக்கும் போலேயே..

(சிரிக்கிறார்..) அமா.

ஒரு ரயில் பயணத்தின்போது சோ. தர்மன் ஐயா சாகித்ய அகாதமியில் சிறார் இலக்கியத்தைத் தேர்ந்தெடுக்கும் நடுவர் குழுவில் இருந்ததாகவும் அப்போது அவர் சிறார்களுக்கு எப்படி கதை எழுதனும்னு இங்க யாருக்குமே தெரியல. ரொம்ப சிரமமாக இருந்தது ஒருவரைத் தேர்ந்தெடுக்க என்று எங்களிடம் பகிர்ந்து கொண்டார். தானே எழுதலாம் என்றிருக்கிறேன் என சொல்லிக் கொண்டிருந்தார். நீங்கள் சொல்கையில் அது தான் நினைவுக்கு வருகிறது. உங்கள் பார்வையிலும் இது உண்மைதானா? அல்லது உங்களால் சொல்ல முடிந்த சிறார் எழுத்தாளர்கள் சிலரைக் குறிப்பிட்டாலும் சரி தான்.

தமிழ்ல என்னால யாரையுமே சொல்ல முடியாது. நான் யாரையும் சொல்லவும் மாட்டேன். கி.ரா எழுதிய ”பிஞ்சுகள்” கதையை வேணுமானா சொல்வேன். அதிலும் வட்டார மொழியை அவர் பயன்படுத்தியிருப்பார். ஒரு ஒன்பதாவது படிக்கிற குழந்தைக்கு அதிலும் நல்லா தமிழ் வாசிக்கத் தெரிந்த குழந்தைக்குக் கொடுத்தால் புரிந்து கொள்ளும். வேற எதுவும் என்னால் சொல்ல முடியாது.

அப்படியானால் சிறார்கள் சிறார்களுக்கு எழுதுவதே சிறந்தது என்ற நிலைப்பாடு தான் உங்களுடையது எனலாமா.

ஆமாம். அதே குழந்தையை நாவல் எழுதச் செய்ய வேண்டும். இப்போது குட்டிக் கதைகளாக எழுதுகிறார்கள். பால சாகித்ய அகாதமி விருது  நாவலுக்குத்தான் தருகிறார்கள். நாவல் அல்லது சிறுகதைகளுக்குத் தருகிறார்கள். கட்டுரைகளுக்குத் தருவதில்லை. ஒரு வருடத்திற்கு நூறு சிறார்களில் இருபத்தியந்து பேரையாவது தொடர்ந்து எழுதச் செய்ய வேண்டும்.

குழந்தைகள் எழுதுவதில் உள்ள சிக்கல்கள் பற்றிச் சொல்லுங்கள்

ஒரு கறுப்பா இருக்கிற குழந்தை தன்னையறியாமல் கறுப்பு நிறத்தைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையை வெளிப்படுத்தலாம். சாதி சார்ந்த பாகுபாட்டை வெளிப்படுத்தலாம். அந்த கரெக்ட்னெஸ் வேணும். பெரியவர்களே அந்த கரெக்ட்னெஸ் இல்லாமல் எழுதி புத்தகங்கள் வெளியிடுவதையும் பார்க்கிறோம். ஆனால் குழந்தைகளிடம் நாங்கள் அந்தத் தன்மையை அழைத்துப் பேசி அதன்பின்னர் சரிசெய்வோம்.

என்ன மாதிரியான சிக்கல் பெரியவர்கள் எழுத்தில் கரெக்ட்னெஸ் செய்யப்பட வேண்டும் என நினைக்கிறீர்கள்.

கறுப்பு நிறம் சார்ந்து, உடல் அமைப்பு சார்ந்து, வலிந்து நான் உனக்கு உதவி செய்துவிட்டேன் என பறைசாற்றும் தன்மை, இயல்பாக இல்லாமல் இருப்பதைச் சொல்கிறேன். ஒருவருடைய புத்தகத் தலைப்பே “ஒல்லியா? குண்டா?” என்று இருக்கிறது. சிறார் இலக்கியத்தில் இப்படி எழுதக்கூடாது என்ற போதமே இல்லை. இன்னும் நிறையா இருக்கு சொல்ல. நாம் அதை சுட்டிக் காட்டினால் காயப்பட்டுவிடுகிறார்கள். முத்துக்கண்ணன் கிண்டலாகச் சொல்வார். நீ இதையெல்லாம் சொல்லனும்னா இன்னும் கொஞ்சம் நரைத்தமுடி வரட்டும் என்பார். இப்போதைக்கு கத்திட்டே இரு. ஒரு ஐம்பத்தியைந்து வயதில் கேட்க வாய்ப்பிருக்குன்னு சொல்லுவார்.

குழந்தைகள் இந்த மாதிரி கதைகளை வாசித்துவிட்டு மனதளவில் காயப்படுவதை உடனிருந்து பார்ப்பதால் இன்னும் இது மேல கோபம் வரும். பெண்கள்னாலே இப்படித்தான் வகைக் கதைகள் கூட இருக்கும். அதை உடைக்கறது எவ்வளவு சிரமம் தெரியுமா. நான் ஒரு சமூக அறிவியல் ஆசிரியை. ஒரு குழந்தை இப்படி பெரியவர்கள் முன் வைக்கும் ஒரு சாய்வான கண்ணோட்டங்களை, சிந்தனைகளை உடைக்க ரொம்ப சிரமப்படறோம்.

முன்னொட்டு எழுத்துக்கள் என்று சொல்லப்படக்கூடிய எல்லா எழுத்துக்களிலும் இந்தச் சிக்கலைப் பார்க்க முடிகிறது. பெண் எழுத்து, தலித் எழுத்து, குயர் எழுத்து என எல்லாவற்றிலும் ஆண்மையச் சிந்தனை கொண்ட பெரும்பான்மை சமூகத்தின் சிந்தனைகளைக் கொண்டே கட்டமைக்கப்படுவதைக் காண்கிறோம்.

ஏற்கனவே இருக்கும் சிறார் எழுத்தாளர்களின் சிந்தனையை மாற்ற இப்போது புதிதாக எழுதிக் காண்பிக்க வேண்டியுள்ளது. ச. தமிழ்ச்செல்வன் வேர்ச்சொல் இலக்கிய விழாவில் சொன்னாரில்லையா கி.ரா ஏன் அங்கிருந்த ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை கதைகளில் பிரதிபளிக்கவில்லையென. அவர் அந்த வீடுகளைத் தாண்டித்தானே தன் வீட்டுக்கு வந்திருக்க முடியும் என்றார். அப்படித்தான் சிறார் எழுத்தாளர்களிடம் நாம்  சிறார் எழுத்தைப் பிரதிபளியுங்கள் என சொல்ல வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு சிறார் உலகம் தெரியாது என்று சொல்ல முடியாது. அவர்களே சிறார்களாக இருந்து பெரியவர்களாக ஆனவர்கள் தானே. அச்சில் இருப்பதெல்லாம் உண்மை என இன்றும் நம்பும் மக்கள் தான் தமிழ்ச்சமூகத்தில் இருக்கிறார்கள். அப்படியானால் இன்னும் நாம் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.

வரலாறும் அப்படித்தானே உள்ளது. வரலாற்றை யார் எழுதுகிறார்கள் என்பதிலிருந்து வரலாற்றுப் பார்வையையே நம்மால் மாற்றியமைக்க முடியும் தானே. உலகப்போர் பற்றிய வரலாற்றுப்பாடத்தில் ஹிட்லரின் ஹோலோகாஸ்ட் பற்றி பக்கம்பக்கமாக இருக்கும். ஆனால் ஜப்பானில் அமெரிக்கா அணுகுண்டு போட்டது பற்றி, அதனால் மக்கள் எத்தனை பாதிப்படைந்தார்கள் என்பது பற்றி விரிவாக இருக்காது. நான் பாடம் நடத்தும்போது அதை மாணவர்களிடம் சொல்வேன். வரலாற்று பாடத்திட்டத்தில் இருக்கும் சாய்வுத்தன்மையைப் பற்றி நான் வகுப்பில் சொல்வேன்.

இந்தப் புரிதலுடன் சிறார் இலக்கியத்தை அணுகும் ஒருவர் முக்கியமான இடத்தில் இருப்பதைப் பார்ப்பது மகிழ்வளிக்கிறது.

நான் குழந்தைகள் முன் என்ன வார்த்தை பயன்படுத்துகிறேன். எப்படி நடந்து கொள்கிறேன் என்பதும் முக்கியம். குழந்தைகளால் ஆசிரியர்களை எளிதாக அவதானித்துவிட முடியும். நாம் சொல்வதைத்தான் செய்ய வேண்டும். செய்வதைத்தான் அவர்களிடம் சொல்ல வேண்டும். சிறார் எழுத்தாளர்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு பெரிய எழுத்தாளர். ஒரு புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டதைப் பற்றி எழுதுகிறார். பெண்ணுக்கு அது எந்த வழிகளிலெல்லாம் பயன்படும் என எழுதுகிறார். குழந்தைக்கு எப்போது தடுப்பூசி போட வேண்டும், சிலிண்டர் எப்போ பதிவு செய்ய வேண்டும் என அது நினைவூட்டும் என்கிறார். நான் முக நூலில் இதற்கு எதிராக எழுதினேன். ஏன் அது அவள் அலுவலகத்தில் ஒரு புராஜெக்ட் முடிக்க வேண்டிய தேதியை நினைவூட்டக் கூடாதா? நான் ஒரு டீச்சராக இருக்கிறேன். ஒரு பேப்பர் கரெக்‌ஷன் பண்ணி முடிக்க வேண்டிய நாளை நினைவூட்டக் கூடாதா? என்று கேட்டேன். இது குழண்டஹிகளிடம் செல்லும் போது பெரியவர்களின் இந்த சாய்வு அவர்களை தொற்றிக் கொள்ளும் இல்லயா? அதை அவர்களிடமிருந்து நீக்குவது கடினமாக ஆகிவிடும்.

ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் நாள் வகுப்பெடுக்கப் போகிறேன். முதல் பாடம் “Human evolution”. நான் சென்றதும் முதல் கேள்வி எல்லோரையும் “உலகைப் படைத்தது யார்” என்று கேட்கிறேன். அத்தனை பேரும் கடவுள் என எழுதுகிறார்கள். கடவுள் என்ற பதில் மதத்திலிருந்து பெற்றுக் கொண்டது இல்லயா. ஆனால் அறிவியல் என்ன சொல்கிறது. பெருவெடிப்புக் கொள்கையைச் சொல்கிறது. ஒன்பதாவது படிக்கும் மாணவர்களில் பெரும்பான்மையானோர் இந்த பதிலைச் சொன்னால் என்ன அறிவியல் சிந்தனையை அவர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியும். ஆனால் நாம் எடுத்ததும் அவர்கள் சொன்னதை மறுக்கவும் கூடாது. நான் அவர்களைக் குழப்புவதற்காக அடுத்த கேள்வியைக் கேட்பேன். அப்படியானால் எந்தக் கடவுள் படைத்தார்? என்று கேட்பேன். நாலாயிரம் மதங்கள் இருக்கிறது. அதில் எந்த மதக் கடவுள் உலகத்தைப் படைத்தது என்று கேட்கும்போது இன்னும் குழம்புவார்கள். அதன்பிறகு பெருவெடிப்பு பற்றி நடத்துவேன். இதுவே ஐரோப்பாவிலிருக்கும் ஒரு குழந்தை எடுத்ததும் கடவுள் தான் உலகத்தைப் படைத்தார் என்று சொல்லுமா? அது ஒரு பார்வைக்கோணம் தான். அறிவு சார்ந்த பாதை ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டியது புத்தகம், பள்ளியின் வேலை தான். பள்ளி செய்யாததை, அதன் பாடத்திட்டத்திலுள்ள நூல்கள் செய்யாததை சிறார் இலக்கிய நூல்கள் இணையாக செய்ய வேண்டும். பாட நூல் அவர்களாகவே படிக்க முடியாதளவு, ஆசிரியர்கள் சொல்லித் தந்தால் தான் படிக்க முடியும் என்ற நிலையில் உள்ளது. சிறார் நூல்கள் அவ்வாறு இருக்க வேண்டாமே என்கிறேன். ஒரு சிறார் நூல் ஆயிரம் பிரதி என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒரு பத்து பேர் யோசித்தால் கூட போதுமே.

சிறார் இலக்கிய மொழி உருவாகி வரவில்லை என்கிறீர்கள் இல்லயா?

ஆமாம். அதைச் சொன்னால் கோபப்படுகிறார்களே தவிர சிந்திக்கமாட்டேன் என்கிறார்கள். ஒரு உரையாடல் உருவாகவில்லை. இது விவாதப்பகுதியாக வேண்டும். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் சங்கம் இருக்கிறது. தா.மு.எ.க.ச சங்கம் உள்ளது. ஆனால் அதிலிருந்து வெளிவரும் நூல்களுக்கான விமர்சனம் ஏன் காட்டமாக இல்லை. ஏன் பூசிப்பூசி விமர்சனம் செய்ய வேண்டும்.

நீங்கள் அதைப் பற்றி விமர்சனம் செய்ததுண்டா?

செய்திருக்கிறேன். தமிழ் இந்து நாளிதழில் என் கட்டுரை வந்துள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல் என் விமர்சனங்கள் வெளிவராமல் ஆனது. அதற்கு பின் உள்ள அரசியலை பின்னர் தான் புரிந்து கொண்டேன். முகநூலில் சிறு சிறு பதிவுகள் போடுவேன். எனக்குக் கிடைத்த பெரிய மேடை எனில் வேர்ச்சொல் மேடை தான்.

ஒரு இதழ் நீங்கள் தொடங்கலாம்?

அந்த எண்ணம் உள்ளது. நீலி இதழ் மாதிரி ஒன்று தொடங்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. உங்களிடம் அங்கேயே அதைப் பற்றி பகிர்ந்து கொண்டேன். நினைவிருக்கிறதா?

ஆம் நினைவில் உள்ளது. நீங்கள் சொல்வதற்கான தீர்வு அது ஒன்று தான். ஒரு பத்து வருடம் அதைத் தொடர்ந்து விமர்சனம் செய்தால் மாற்றம் நம்மையறியாமல் நிகழும்.

உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்கள் “இயல்” என்ற இதழ் நடத்துகிறார். அதிலும் வழக்கமான பேசுபொருள் தான். இணையத்தில் குழந்தைகள் வந்து படிப்பது அரிது. அச்சு இதழாக ஒன்று கொண்டு வர வேண்டும். அப்போது தான் சிறார்களுக்கு அது பயன்படும். இப்போது சிறார் இதழ்கள் நின்று விட்டன. சுட்டி விகடன் உட்பட பல இதழ்கள் நின்றுவிட்டன.

நீங்கள் சொன்னதை செய்ய வேண்டுமானால் வாசிப்பு இயக்கத்தில் இருக்கும் வரை என்னால் செய்ய முடியாது. ஏனெனில் அதை செய்ய ஆரம்பித்தபோது அது எங்கள் மேலான வெறுப்பாக மட்டுமல்லாமல் வாசிப்பு இயக்கத்தின் மீதான வெறுப்பாகவும் மாறி தொந்தரவுக்கு உள்ளானது. மொட்டைக் கடிதாசி எழுதிப் போடுவார்கள். நாங்கள் சொல்லாததையெல்லாம் சொன்னதாக பிரச்சனை ஏற்படுத்துவார்கள். கல்வித்துறை அமைச்சர் வரை எங்களைப் பற்றி புகார் அளித்தது என பல தடங்கல்கள் வந்தது. சிறார் இலக்கியம் பற்றி வந்த பேட்டிகள் எதிலுமே வாசிப்பு இயக்கத்தைப் பற்றி ஒரு வரி கூட பேசமாட்டார்கள். தமிழ் நாட்டிலுள்ள எல்லா குழந்தைகள் கையிலும் வாசிப்பு இயக்கம் சென்று சேரும்படி செய்திருக்கிறோம். ஒரு நூலாவது வாசிக்காத குழந்தை இருக்க முடியாது. சில பள்ளிகள் எங்கள் நூல்களைக் கொடுக்காமல் வைத்திருக்கிறார்கள். அடுத்து அதை ஆய்வு செய்து கொடுக்கச் செய்வதை பணியாக வைத்துள்ளோம். சிறார் எழுத்தாளர்களும் வாசிப்பு இயக்கத்தைப் பற்றி பேசுவதை உங்களல பார்க்க முடியாது. ஏனெனில் இங்கு அவர்களைப் புகழ்ந்தால் அவர்கள் உங்களைப் புகழ்வார்கள் அந்த நடைமுறை தான் உள்ளது. என்ன செய்வது. எங்களால் அவர்களைப் புகழ முடியாதே. மாடசாமி ஐயா தான் இதை முதலில் உணர்ந்தவர் என நினைக்கிறேன். நம் ஆணவங்களையெல்லாம் கழற்றி வைத்துவிட்டு விவாதத்தில் இறங்க வேண்டும். அப்போது தான் சிறார் இலக்கியத்திற்கு நல்லது நடக்கும். வேர்ச்சொல் விழாவில் பேசிவிட்டு வந்தோம். ஒரு எதிர்வினை இல்லை. எதிர்வினை அளித்து பெரியாளாகிவிடுவோம் என்ற எண்ணத்தினாலும் பேசாமல் மறைமுகமாக பேசிக் கொள்வார்கள். நீங்கள் குறிப்பிட்ட விமர்சனப் பணியை நாங்கள் வாசிப்பு இயக்கம் முடித்தபின் தான் கையில் எடுக்க முடியும். விமர்சனம் செய்வதற்கு முன் நாங்கள் உத்தேசிக்கும் சிறார் நூல்கள் முன் இருக்க வேண்டும் இல்லயா? பதினைந்து வருடம் கத்துங்க, அப்பறம் நீங்க நினைப்பது நடக்கும் என மாடசாமி ஐயா எங்களிடம் சொல்வார்.

சிறார் இலக்கியத்தில் கதைகள் தவிர வேறு என்ன உத்தேசிக்கிறீர்கள்.

அபுனைவு அனைத்து வகைமைகளும். வரலாறு, வயது வந்தோருக்கான நூல்கள், பெண் குழந்தைகளின் பிரச்சனைகளைப் பற்றிய நூல்கள். மாதவிடாய் பருவம் அப்ற்றி பெண் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லக் கூடிய நூல்கள் வேண்டும். அந்தப் பருவத்தில் தன் உடலை அருவருக்க ஆரம்பிக்கும் பெண் குழந்தைகளுக்கு அது எத்தனை இயல்பானது எனச் சொல்லும் நூல் தமிழில் இல்லை. “Body Positivity” பற்றி சொல்லக்கூடிய நூல்கள் இல்லை. டீன் ஏஜ் குழந்தைகளின் முதல் பிரச்சனை அது. பெண்ணுக்கு உடல், உணர்வு இரண்டும் தொடர்புடையது. அதைப்பற்றி அவர்களிடம் சொல்ல வேண்டும். ஏதும் பிரச்சனை எனில் ஒரு நம்பிக்கையானவரிடம் பேசு என்று வழிகாட்டக்கூடிய நூல் வேண்டும். இன்னும் நுணுக்கமாக சொல்லிக் கொண்டே போனால் நம்மிடம் புத்தகமே இல்லையோ என்று தோன்றும். “The CATCHER in the RYE” என J.D. Salinger எழுதிய ஒரு ஆங்கில நாவல். அது தடை செய்யப்பட்டது. அது மாதிரி ஒரு நூல் வேண்டும். ஆண் குழந்தைகள் குழந்தைப் பருவத்திலிருந்து டீன் பருவத்திற்கு இடைப்பட்ட பருவத்தில் அவன் அனுபவிக்கும் கொடுமைகளை எழுதியிருப்பார். தமிழில் அப்படி ஒன்று வேண்டும்.

இளையோர் நாவல் என சிறார் இலக்கியத்தில் ஒரு பிரிவு உண்டு. அதை வாசித்தால் அதில் வரும் இளையோர் சுற்றுசூழல், சமூக, வரலாற்றுப் பிரச்சனையைத் தீர்க்கும் முதிர்ச்சியுள்ளவனாக இருக்கிறான்/இருக்கிறாள். எப்போது அவன்/அவள் பிரச்சனையைத் தீர்ப்பது. அவர்களுடைய பிரச்சனையை பெரியவர்கள் பார்ப்பதே இல்லை. அவர்களுக்கு அவர்களின் பிரச்சனையைத் தீர்ப்பது சிரமமாக உள்ளது. வீட்டிலுள்ள பிரச்சனை, பொருளாதாரப் பிரச்சனை, சமூக அழுத்தம் என பல பிரச்சனைகள் இருக்கிறது. அவர்களை சுற்று சூழல் பிரச்சனையைத் தீர்க்கச் சொல்வது என்ன நியாயம். முத்துக்குமாரி செய்ய வேண்டியதை ஒரு குழந்தையை செய்ய வைப்பதல்ல சிறார் இலக்கியம். அவரவர் வீட்டு குழந்தைகளை சற்று நினைத்தால் கூட இந்த மாதிரி கதை எழுத மாட்டோம்.

ரஸ்கின் பாண்ட்-க்கு எத்தனை வயசாகிடுச்சு. ஆனால் அவர் கதைகளில் அந்தக் குழந்தைத்தனம் இருந்து கொண்டே இருக்கும். சின்ன விஷயத்தில் கூட அந்த குழந்தையுள்ளத்தை வெளிப்படுத்திட்டே இருப்பார். சமீபத்தில் கூட ஒரு அவரின் ஒரு கதையை வாசித்தேன். அவர் கையில் ஒரு மண்டையோடு வந்து சேரும். அந்த மண்டையோட்டை என்ன பண்ணரதுன்னு அந்தக் கதைல எழுதிருப்பார். கால்பந்தாக மாற்றி தூக்கிப் போடுவார். என்ன செய்தாலும் திரும்பத்திரும்ப அவரிடமே அது வந்து சேரும். குழந்தை கட்டாயம் இதை என்ஜாய் பண்ணும். ஒரு மெஜீஷியனிடம் குடுத்துட்டு வருவாரு. அதைப் பிரிந்த பின் ரொம்ப வருத்தப்படு மீண்டும் வாங்கி வந்து வைத்துக் கொள்வார். ஆனால் அந்த மண்டையோடு செல்லும் பயணத்தை அத்தனை சுவாரசியமா எழுதியிருப்பார். அவருடைய கற்பனையும், மொழியும் அத்தனை அழகா இருக்கும்.

நம்மிடம் இல்லாமல் இருப்பதும் இந்த கற்பனைத்திறன் தான். மொழி, கதைக்களம் என பலதும் நாம் இன்னும் முன்னேற வேண்டியுள்ளது. அட்வென்சர் நூல்கள் நம்மிடம் இல்லை. ஹாரி பாட்டர் போல, லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் போல நம்மிடம் என்ன தமிழில் சிறார் கதைகள் உள்ளன சொல்லுங்கள்? நம்ம சிறார் கதைகள்ல மேஜிக் செய்து உலகப் பிரச்சனையை அவர்களை தீர்க்க அனுப்புவாங்க. (சிரிக்கிறார்..)

ச. முத்துக்குமாரி குழந்தைகளுடன்

நம் நாட்டார் கதைகள் உள்ளதே. தெனாலிராமன், விக்ரமாதித்யன் – வேதாளம் கதையெல்லாம்?

குழந்தைகளுக்கான கதையாக அதை மாற்றனும். தெனாலி ராமன் கதையை இன்று குழந்தைகளிடம் கொடுத்தால் இதில் என்ன இருக்கு என்பது போல் குழந்தைகள் நம்மைப் பார்க்கும். அவர்களுடைய உலகம் வேறு எங்கோ போய்கிட்டு இருக்கு. ஜென் ஆல்ஃபா குழந்தைகளின் உலகத்திற்குள் நாம் இன்னும் நுழையவே இல்லை. அவர்களுக்கு ஏற்றாற்போல பல புத்தகங்கள் நமக்குத் தேவைப்படுகின்றன. ஜெயித்த குழந்தைகள் பற்றிய கதைகள் தான் அதிகமுள்ளது. தோல்வியடையும் குழந்தைகள் என்ன செய்யும் என்பது பற்றி நூல்கள் வேண்டும். குடும்பப் பிரச்சனைகளிலிருந்து வெளிவருவது போன்றவை வேண்டும்.

அனிமே காலகட்டம்?

ஆமாம். இன்னைக்கு நருட்டோவைத் தெரியாத குழந்தைகளே இல்லை. அவர்கள் வழியாகத்தான் அந்த கதாப்பாத்திரத்தை அறிந்து ஒட்டுமொத்த சீரிஸையும் பார்த்தேன். முன்கோபக்காரனான நருட்டோ தனனி நிரூபிக்கத் துடிப்பவனாக இருக்கிறான். இதெல்லாம் குழந்தைகளிடம் உள்ள குணம் தானே. ஜப்பான் அனிமே தொழில் நுடபத்தை மிகச் சிறப்பாக பயன்படுத்தும் நாடாக உள்ளது.

என்ன பிரச்சனை என நினைக்கிறீர்கள்?

முதலில் எல்லா சிறார் எழுத்தாளர்களும் தான் எழுதியது தான் சிறந்தது என நம்புகிறார்கள். அந்த தன்னம்பிக்கையைப் பார்க்கவே நல்லா இல்லை. அது விருது கூட வாங்கட்டுமே. ஆனாலும் குறைபாடுகளைக் களைய வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்கள் எப்படி சிறப்பாக எழுத முடியும்? அறிவியலையும், கணிதத்தையும் திரும்பத்திரும்ப பாடம் போல கொடுப்பதால் என்ன பயன்? அதுதான் பள்ளியில் சொல்லிக் கொடுக்கப்படுகிறதே. ரொம்பத் திருகலான மொழி, திருகலான கதை சொல்லல் முறை. குழந்தைகளுக்காக எழுத வேண்டும். அப்பறம் சிறார் இலக்கிய நூல்கள் விற்கவில்லை என புலம்பவும் செய்வார்கள். நான் ஆங்கில நூல்களை உதாரணம் காட்டி விமர்சனம் செய்தால் ஆங்கில நூல்களைக் காட்டாதீர்கள். அதற்கு நீண்ட பாரம்பரியம் உள்ளது என்கிறார்கள். தமிழில் குழந்தைகளுக்கு நாம் கதை சொன்னதே இல்லையா? மனிதர்களே கதை சொல்வதன் வழியாக வளர்ந்தவர்கள் தானே. அறிவைக் கடத்தியதெல்லாம் கதை வழியாகத்தானே. எங்களுக்கு கிடைத்த நேரத்தில் எங்கள் உழைப்பையெல்லாம் கொட்டி நாங்கள் சிறார் இலக்கியம் படைக்கிறோம் என ஒரு எழுத்தாளர் எழுதுகிறார். அப்படி யாரும் இங்க சிரமப்பட வேண்டாம் என்கிறேன். பெரியவர்களுக்கான நூல்களை எழுதுபவர்கள் இந்த வார்த்தையைச் சொல்ல முடியுமா? ஒரு பண்ணையார்த்தனம் சிறார் இலக்கியச் சூழலில் உள்ளது. என் அறிவுக்கு எட்டியே சிக்கல் தெரியும் ஒரு புத்தகத்தை நான் எப்படிப் பாராட்டுவது. இந்த மாற்றி மாற்றி புகழ்ந்து கொள்ளும் சூழலாம் நம்மால் வளரவே முடியாது.

*

மாடசாமி (எஸ்.எம்) ஐயா பற்றி சொல்லுங்கள். அவரை எப்படி தெரிந்து கொண்டீர்கள்?

அவரிடைய நூல்கள் வழியாகத்தான் அறிமுகம். எனக்குத் தெரிந்து தமிழகத்தில் கல்வியாளர்களின் எண்ணிக்கை குறைவு. அதுவும் அடித்தட்டு வர்க்க குழந்தைகளுக்காக பேசுபவர்கள் இன்னும் குறைவு. இவருடைய நூல்கள் மாணவர்களின் பிரச்சனைகளைப் பேசும். முகநூலில் நான் எழுதும் பதிவுகளைப் பார்த்திருக்கிறார். ஒரு கல்வி சார்ந்த கூடுகை ஒன்றில் அவரை சந்திக்கும் வாய்ப்பமைந்தது. அதில் அவர் என்னை என் பதிவுகள் வழியாக பார்த்திருப்பதாகச் சொல்லி அறிமுகம் செய்து கொண்டார். அதன் பிறகும் பெரிய தொடர்பு இல்லை. ஆனால் அவர் என்னை கவனித்துக் கொண்டே இருந்திருக்கிறார். வீதி வகுப்பறை வழியாக நான் செய்த செயல்பாடுகளைப் பார்த்து இல்லம் தேடிக் கல்வி திட்டத்திற்கு என்னை பரிந்துரைத்தார். அவர் புத்தகங்களின் மையம் ஆசிரியர்கள் மாணவர்களை அணுக வேண்டிய விதத்தை சொல்வதாக இருக்கும். அது எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் தான் என்னை விடாமல் பிடித்துக் கொண்டார் என்று நினைக்கிறேன். அருப்புக்கோட்டை எஸ்.பி கல்லூரியில் பேராசியராக இருந்து ஓய்வு பெற்றவர். அதற்குப் பின் சென்னை சென்று விட்டார்.

1991-ல் அறிவொளி இயக்கம் நிகழ்ந்தது. அப்போது விருதுநகர் மாவட்டத்தின் பொறுப்பாளராக இருந்தார். தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் அறிவொளி இயக்கம் நிகழ்ந்தாலும் விருதுநகர் மாவட்டம் மட்டும் வித்தியாசமாக இருந்தது. எழுத்து சொல்லிக் கொடுத்தபின் அடுத்து என்ன என்று இருக்கும்போது ஐயா நூறு புத்தகங்கள் அறிவொளி இயக்கத்திற்காக கொண்டு வந்தார். அந்தப் புத்தகங்கள் இன்றளவிலும் ஆரம்பகட்ட வாசகர்களுக்கு அளிக்கலாம். மேலாண்மை பொன்னுசாமி எழுதிய எட்டரை மணி வண்டி, கி.ரா-வின் பிஞ்சுகள் எல்லாமும் ஆரம்ப கட்ட வாசகர்கள், பெண்கள் என எல்லாருக்கும் எளிமையாக வாசிக்கும்படி எழுதி வெளியிட்டார். பெண்களின் சொலவடைகளைத்  தொகுத்து நூலாக்கினார். கிராமங்களுக்கெல்லாம் பயணப்பட்டு பெண்களை வாசிக்க வைத்ததில் முக்கியப் பங்கு வகித்தார். கல்லூரி பேராசிரியராக இருந்தவர் இந்த இயக்கத்தின் வழியாக கல்வியாளராக ஆனார். பாடநூல்களில் அவருடைய பெயரைப் பார்க்கலாம். இல்லம் தேடி கல்வியை எங்களிடம் ஒப்படைத்தார். அப்போது அவருக்கு உடல் நலச்சிக்கலும் இருந்தது.

தனக்குப் பின்னால் செய்ய வேண்டியவர்கள் சார்ந்த தேடல் கொண்டவர் என்று சொல்லலாமா?

ஆம். அது தான் ஆச்சர்யமாக் இருந்தது. அதை செய்பவர்கள் குறைவு. சரியான ஆட்களை சரியான வழியில் தூண்டி விடுவார். எதையும் வலிந்து செய்யச் சொல்ல மாட்டார். அதற்கான பயணத்தில் இருப்பவர்களிடம் இதை நீங்கள் செய்யலாம் என்பார். அதுவே பெரிய உந்துதலாக இருக்கும். அவர் வளர்த்துவிட்டு இங்கு கல்வி நூல்கள் எழுதுபவர்கள் அதிகம். நிறைய ஆசிரியர்கள் அவர்களின் வகுப்பறை அனுபவங்களை புத்தகமாக பிரசுரித்ததற்கு மாடசாமி ஐயா முக்கியக் காரணம். அறிவொளி இயக்கம் சார்ந்த அனுபவம் சிறார் இலக்கியப் பணிகளில் அவருக்கு உதவியது. பெண்கள் குழந்தைகளிடம் வாசிப்பை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டுக் கொண்டே இருப்பவர்.

இல்லம் தேடி கல்வியில் முதலில் அச்சடித்தது அறிவொளி இயக்க கால நூல்களைத்தான். ஆனால் நாங்கள் தலையிட்டு சிறார்களுக்காக தனியாக செய்யலாம் என்று சொன்னதும் ஒத்துக் கொண்டார். எங்களை எழுத ஊக்குவித்தார். வழிகாட்டினார். வாசிப்பு இயக்கத்துக்கான பெரிய குழுவை அவர் தான் உருவாக்கினார். கதை சொல்லிகள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரை வாசிப்பு இயக்கத்திற்கென ஒருங்கிணைத்தார்.

இன்னும் என்ன வேணும்னு நினைக்கிறீங்க?

பள்ளிகளில் நல்ல நூலகம் வேண்டும். நூலக ஆசிரியர்கள் தனியாக வேண்டும். நிறைய என்ணிக்கையில் நூல்கள் வேண்டும். நிறைய பொருண்மைகளில் நூல்கள் தேவைப்படுகிறது.

கதைகளை இணையத்திலும் பிரசுரிப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?

திருப்பி திருப்பி கேட்ஜட்ஸ்க்கு நாம போக வேணாமே. புத்தகங்களாக கதைகள் வாசிக்கப்படனும். நம்ம கல்வித்துறைக்கென தனி இணையம், சேனல் உள்ளது. அதில் போடச் சொல்ல வேண்டும் தான். அது துறை தான் முடிவெடுக்கனும். எங்கள் நூல்களையெல்லாம் கன்னிமரா, அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகியவற்றில் ஒரு செட் வைத்திருக்கிறோம். புத்தகக் கண்காட்சிகளில் அரங்கு அமைக்கிறோம். அதற்கே தனியார் பள்ளிகளிலிருந்து எங்களுக்கு என்கொயரி வருகிறது. தமிழ் வாசிக்கத் தெரியாத தனியார் பள்ளி மாணவர்களுக்கு இந்த நூல்களின் தேவை உள்ளது. துறைக்கு இந்த நூல்களை விற்பனைக்கு வைக்கச் சொல்கிறோம். அதை அவர்கள் செய்தால் நன்றாக இருக்கும்.

தும்பி நூல்களை வாசித்திருக்கிறீர்களா? அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அதை நண்பர்கள் பரிந்துரையில் வாங்கி வாசித்திருக்கிறேன். புத்தக வடிவமைப்பு, ஓவியம் எல்லாமே அருமை. அவர்களிடமும் கதை மொழி சிறாருக்கானதாக இல்லாமல் இருப்பதை அவர்களிடமே குறிப்பிட்டுள்ளேன்.

வேறு தனியார் அமைப்புகள் அவர்களின் முயற்சிகள் எப்படி உள்ளது?

பாரதி புத்தகாலயம், சுட்டி யானை போன்ற பதிப்பகங்கள் உள்ளன. அங்கும் அதே மொழிச்சிக்கல் தான். தனியார் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் முதன்மை மொழியாக இல்லை. அரசுப்பள்ளி மாணவர்களில் மொழித்திறன் குறைவாக உள்ளது. அப்படியானால் இருவருக்குமே மொழிச்சிக்கல் உள்ளது. அவர்களின் மொழித்திறன் மேம்படும் வரை எளிமையாக எழுத வேண்டிய கட்டாயம் உள்ளது.

மொழிச்சிக்கல் பற்றி குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா?

உதாரணமாக டிக்கெட் என ஒரு வார்த்தை. அதை டிக்கெட் என்றே தமிழில் எழுதலாம். பயணச்சீட்டு என்று எழுத வேண்டிய அவசியமில்லை. டிக்கெட் என்ற வார்த்தையை அவர்கள் வாசிக்கவே சிரமப்படுவார்கள். அது பரவாயில்லை. ஏனெனில் வாசித்து முடிக்கையில் அது அவர்களுக்கு தெரிந்த ஒன்றாக இருக்கும். குழந்தைகளின் உலகில் உள்ள மொழியை தமிழில் எழுதலாம். இப்படிச் சொன்னால் தமிழ் ஆர்வாலர்கள் சண்டைக்கு வருவார்கள். ஆசிரியர் என்று எழுத வேண்டாம். டீச்சர் என்று எழுதலாம். தமிழ் வழியில் படிக்கும் அரசுப்பள்ளி குழந்தைகள் டீச்சர்னு தானே கூப்பிடறாங்க. அது தானே அவங்க உலக்த்துல இருக்கு. அதுக்கும் சண்டைக்கு வருவாங்கள். தமிழ்ப்பற்று முக்கியம் தான். தமிழே வாசிக்கத் தெரியாம பற்று எப்படி வரும்? குழந்தை உணர்வு ரீதியாக எந்த மொழி தொடர்பில் இருக்கிறதோ அந்த மொழியில் எழுத வேண்டும். முதலில் உள்ள வரட்டுமே. வந்தபிறகு ஆசிரியர் என்ற சொல்லை அறிமுகப்படுத்தலாம். டீச்சர் என்றால் ஆசிரியர் என அவர்களுக்கு தெரியாமலா கோய்விடும். முதலில் அதற்கு அவர்கள் வாசிக்க வேண்டும். “Known to Unknown” என ஒரு தியரி உண்டு கல்விப்புலத்தில் . தெரிந்ததிலிருந்து தெரியாததற்கு என அதைச் சொல்லலாம். பாடம் நடத்தும்போது இந்த உத்தியத்தான் நான் கடைபிடிப்பேன். முதலில் குழந்தைக்கு ஒரு தெரிந்த விஷயத்தைச் சொல்லி பாடத்திற்குள் அழைத்துச் செல்லல். அது தான் சிறார் இலக்கியத்திற்கும். நான் சொல்லும் இந்த விஷயத்தை இன்னொரு ஆசிரியரால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் வகுப்பறைக்கு வெளியே இருந்து சிறார் இலக்கியம் எழுதுபவர்களால் புரிந்து கொள்ள முடியாது. நாங்களும் தமிழை வளர்க்கிறோம் என்பது தமிழ் ஆர்வலர்களுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை.

குழந்தை தன் மொழியை கதைகளில் பார்த்ததும் எத்தனை பரவசமடையும் என்பதை அவர்களின் கைகளில் புத்தகத்தைக் கொடுத்துவிட்டு பார்த்தால் தான் புரியும். நான் சொல்வதெல்லாமே குழந்தைகளை அவதானித்துச் சொல்லும் விமர்சனம் தான்.

இலக்கியத்தில் வாசிப்புக்கென ஒரு படிநிலை உண்டு. அதை வணிக எழுத்து என்பதிலிருந்து தீவிர இலக்கியம் நோக்கிய படிநிலை எனலாம். அப்படி சிறார் இலக்கியத்தில் உண்டா? முதல் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு மாதிரியும், ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு என மாதிரியும் இருக்குமா? எத்தனை படிநிலைகள் சிறார் இலக்கியத்தில் உள்ளன?

நான்கு படிநிலைகள் இருக்கிறது. நுழை, நட, ஓடு, பற என அந்தப் படி நிலைகளைச் சொல்லலாம். இது வயதின் அடிப்படையிலேயோ, வகுப்பின் அடிப்படையிலேயோ வைக்கவில்லை. ஆனால் சிறார் இலக்கிய நூல்களில் வயது குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கலாம். வயதுக்கேற்ற வாசிப்பு அல்லது மொழித்திறன் என்பது இங்கு இன்னும் வரவில்லை. நுழை, நட, ஓடு, பற என்பது வாசிப்புத்திறன் அடிப்படையில் மாணவர்களைப் பிரிப்பது. இது மாடசாமி ஐயா வைத்த பெயர் தான். நுழை என்ற படிநிலையில் ஒரு வரி ஒரு படம் இருக்கும். நட என்பதில் இரண்டு வரி, இரண்டு படம் இருக்கும். ஓடு 250-300 சொற்கள் கொண்ட கதை. பற 500 வார்த்தைகள் கொண்டது. பெரும்பாலும் பற என்ற படிநிலைக்கு வரும் குழந்தைகள் பதின்ம வயதை அடைந்திருக்கும். அதற்கேற்ற பேசுபொருளும் அதில் இருக்க வேண்டும். 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் பற படி நிலைக்கு வருவார்கள்.

எனக்கு பத்தாம் வகுப்பு ஆங்கில பாடத்தில் சுந்தர ராமசாமியின் கதை இருந்தது. பற என்ற படிநிலைக்குப் பிறகு இலக்கியத்தை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு அமைகிறதா?

இல்லை. அத ஒரு பெரிய பிரச்சனை தான். நாங்கள் போட்ட புத்தகங்களை வாசித்து முடித்த குழந்தைகள் அடுத்து என்ன என்று நிற்கிறார்கள்.

அவர்களுக்கு நீங்கள் பரிந்துரைக்கும் இலக்கிய சிறார் நூல்கள் என்ன?

அங்கு தான் மொழிச்சிக்கலும், கண்டெக்ஸ்ட் சிக்கலும் உள்ளதே. அதற்கான ஆவன செய்வது தான் அடுத்த சிக்கல். ”பற” என்பதற்குப் பிறகு என்ன? என்ற கேள்வி தான் இப்போது எங்கள் முன் உள்ள கேள்வியும் கூட. கு. அழகிரிசாமியின் ”ராஜா வந்திருக்கிறார்” கதையில் குழந்தைகள் இருக்கிறார்கள் என்பதற்காக அது சிறார் இலக்கியமாக ஆகிவிடாது. அது ஆழமான கதை. அதை குழந்தைகளுக்கு ஏற்றார்போல எழுதி அவர்களுக்கு அளிக்க வேண்டும்.

நீங்க சுந்தர ராமசாமி கதை இருந்ததாகச் சொன்னீர்கள். நான் பள்ளியில் படிக்கும்போது புதுமைப்பித்தனின் பால்வண்ணம்பிள்ளை கதை இருந்தது. அதை வாசித்து எழுதி தான் தமிழில் முதல் மதிப்பெண் வாங்கினேன். ஆனால் அந்தக் கதை எதைப் பேசியது என்று புரிந்து கொண்டது மிகப் பின்னால் தான். செங்கமலமும் சோப்பும் என்ற சுந்தரராமசாமி கதையும் பள்ளி காலத்தில் எனக்கு இருந்தது. நிஜமாவே எனக்குப் புரியல அப்போ. யாரும் சொல்லியும் தரல. சொன்னாலும் புரிந்திருக்குமான்னு தெரியல. இத்தனைக்கும் சிறு வயதிலிருந்தே வாசிக்க ஆரம்பித்திருந்த குழந்தை தான். ஆலிஸ் இன் வொண்டர்லாண்ட் கதையை ஆங்கிலத்தில் குழந்தைஅக்ளுக்கு அபப்டியே வாசிக்கக் கொடுக்க மாட்டார்கள். அதன் இலகுவான வடிவத்தை தான் அளிப்பார்கள். அப்போது தான் குழந்தைகளுக்குப் புரியும். அதன் ஒரிஜினல் வெர்ஷன் பெரியவர்களுக்கே கூட புரியாது. தமிழில் உள்ள தீவிர இலக்கியவாதிகளின் நல்ல கதைகளை அதன் சாரம் மாறாமல் இலகுவான மொழியில் சிறார் இலக்கியத்தில் பற என்ற நிலைக்குப் பின்னர் படிக்கக் கிடைக்கச் செய்யலாம்.

உங்கள் “நோ சொல்லுங்க” நூலைப் பற்றி சொல்லுங்கள்

நானும் முத்துக்கண்ணன் அவர்களும் சேர்ந்து அந்த நூலை எழுதினோம். ஒரு அபுனைவு நூல். ஒரு சின்ன நோ பல பிரச்சனையை குழந்தைகளுக்கு இல்லாமல் ஆகச் செய்யும். பாதுகாக்கும். தவறான பாதை, தவறான நண்பர்கள் என பலவற்றுக்கும் நோ சொல்வது. நோ சொல்லும்போது வரும் சிக்கல். வரலாற்றில் நோ சொன்ன முக்கியமான தலைவர்கள். புத்தகத்தின் இறுதியில் ”நீ நோ சொல்லிப் பழகினால் தான் பாலியல் துன்புறுத்தல் (Sexual abuse) நடக்கும்போது உன்னால் நோ சொல்ல முடியும்” என எழுதியிருப்போம். இது நேரடியாக பாலியல் துன்புறுத்தல் சார்ந்த விழிப்புணர்வு நூல் அல்ல. மாறாக அதன் மூல காரணத்தை அணுகும் நோக்கம் கொண்டது. தொந்தரவுக்கு உள்ளாக்கும் பலவற்றுக்கு நோ சொல்லிப் பழகினால் தான் குழந்தையால் பாலியல் துன்புறுத்தல் நடக்கும்போது நோ சொல்ல முடியும்.

முத்துக்கண்ணன்

அருமை. நோ சொன்னால் கெட்ட பிள்ளை என்ற சமூக அழுத்தம் நமக்கு இருக்கிறது.

ஆமா. முதல்ல எடுத்தவுடனேயே அந்த புத்தகத்தில் வரும் வரி “நோ சொல்வது தவறில்லை, அவமரியாதையில்லை. தைரியமா நோ சொல்லு” என்ற வரிதான். ஒரு கட்டுப்படுத்தப்பட்ட அமைப்புக்குள் குழந்தை இருக்கிறது. குடும்பம், பள்ளி என எல்லாமே. குழந்தையின் கருத்தும் முக்கியம் என்பதை முதலில் அவர்களிடம் சொல்ல வேண்டும்.

திருநெல்வேலி புத்தகத் திருவிழாவின் போது ஆசிரியர்கள் பலரும் இந்த நூலைப் பற்றி அதன் மொழிக்காக பாராட்டினார்கள். டீன் ஏஜ் குழந்தைகளுக்கான நூல் ஆனால் எந்தக் குழந்தையும் எடுத்து வாசிக்க ஏதுவான இலகுவான மொழி இருப்பதைக் குறிப்பிட்டார்கள். பற -க்குப் பிறகு என்ன என்று கேட்டீர்கள் இல்லயா. அதற்குப் பிறகு என்ன என்று யோசித்து உருவாகக் வேண்டிய தேவையும் இங்கு உள்ளது. தன்வரலாற்று நூல்கள், பயண நூல்கள், சாகசக் கதைகள் என பல நூல்களின் தேவை இந்த அளவு இலகுவான மொழியில் தேவையுள்ளது. தமிழில் வாசிக்கும் குழந்தைக்கும் ஆங்கிலம் வாசிக்கத் தெரிந்த குழந்தை அளவுக்கு தரமான நூல்களை வாசிக்கக் கிடைக்கச் செய்ய வேண்டும். என் ஆதங்கமே அது தான். ஆங்கில நூல்களை வாசிக்கும்போதெல்லாம் இந்த ஆதங்கம் அதிகமாக வரும். கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்குப் போங்கள். அங்கு சிறார் பிரிவில் இரண்டு ரேக்கில் மட்டுமே தமிழ் நூல்கள் இருக்கும். மீதி எல்லாமே ஆங்கில நூல்கள் தான்.

சமூகத்தில் எதாவது பிரச்சனை வந்தால் பாடப்புத்தகத்தில் வைக்கனும் என்பார்கள். ஆனால் சிறார் இலக்கியத்தில் வைக்க வேண்டியவை அவை. எவ்வளவு தான் பாடத்திட்டத்தில் வைப்பீர்கள். ஜங்கிள் புக் வழியாகத்தான் குழந்தை காட்டுக்கு போகும். பாடப்புத்தகம் வழியாக அல்ல. வெளிவாசிப்பு வழியாக மட்டுமே நம் வாழ்க்கையை புரட்டிப் போட முடியும்.

தமிழில் சிறார் நூல்களுக்கான பதிப்பகங்கள் பற்றி சொல்ல முடியுமா?

வானம் கொஞ்சம் பரவாயில்லை. குட்டி யானை, எதிர் வெளியீடு ஆகியோரும் கொண்டு வர்றாங்க.

குட்டி இளவரசன் நூலை ஏன் சிறார் இலக்கியத்தில் திரும்பத்திரும்ப கொண்டு போய் வைக்கிறார்கள் என்பதே எனக்கு புரியாமல் இருக்கிறது. அது உண்மையாகவே ஒரு சிறாரின் உலகத்தைப் பேசக்கூடிய நூல் அல்ல. அது ஒரு தத்துவார்த்தமான தேடலை உள்ளடக்கியது. அதையெல்லாம் கொடுத்து நாம் குழந்தைகளை குழப்புகிறோம். அந்தக் கதையில் குழந்தை இருக்கிறான். ஆனால் அது நேரடியாக் குழந்தை இல்லை. அதில் தென்படுவது முதிர்ச்சியான தேடல் கொண்ட ஆசிரியர். அன்புனா என்ன யதார்த்தம்னா என்ன தனிமைனா என்ன என்று குழந்தை யோசிக்குமா? பார்ப்பதையெல்லாம் அள்ளிப் பற்றிக் கொள்ளத் துடிக்கும் குழந்தை தனிமையை எப்படி புரிந்து கொள்ளும். ஆனால் பாருங்க சிறார் இலக்கியத்தில் முக்கியமான இடத்தை குட்டி இளவரசனுக்கு அளிப்பார்கள். அது சிறார் இலக்கிய நூல் அல்ல என்ற விவாதமே உருவாகவில்லை. இதைச் சொன்னால் குழந்தைகளை நான் எளிமையாக மதிப்பிடுவதாகச் சொல்லி கடிந்து கொள்வார்கள். எது சிறார் இலக்கியம் என்பது பற்றிய விவாதமே இங்கு உருவாகவில்லை.

கல்விப்புலம், ஆய்வு, தீவிர இலக்கியம் இவையாவும் இயைந்து இருக்க வேண்டியவை. ஆனால் இங்கு நிலைமை அப்படி இல்லை. சமூகத்தில் தீவிர இலக்கியம் சார்ந்த செவ்வியல் எழுத்தாளர்களையும், அதற்கு இணையாக ஆய்வாளர்களையும், அதற்கு ஒரு படி மேலாக தூய அறிவை முன்னிறுத்தும் ஆன்மிக சிந்தனையாளர்களையும் சமூகத்திற்கான ஒட்டுமொத்த சிந்தனைகளை உருவாக்கும் நபர்களாகக் காண்கிறேன். ஆனால் குடிமைப்பணித்தேர்வில் இன்றும் தமிழ் இலக்கியத்தில் நாவல் வகைமையில் அகிலனின் சித்திரப்பாவையும், நாடகத்தில் சோ-வின் யாருக்கும் வெட்கமில்லை இருப்பதும் அரசியல் அன்றி வேறு என்ன? கல்விப்புலத்தில் பாடத்திட்டத்தில் இந்த அரசியல் இருப்பதை ஒத்துக் கொள்கிறீர்களா?

ஒரு டீச்சராக அரசியல் இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும். ஏற்கனவே சொன்னது போல வரலாறு உட்பட அனைத்தும் இங்கு அதிகாரத்தில் இருப்பவர்களின், ஜெயித்தவர்களின் பார்வையில் தான் எழுதப்படுகிறது. வரிசையாக நாம் வாசிப்பது என்ன? யார் யாருடன் சண்டை போட்டார்கள், யார் ஜெயித்தார்கள் என்று தானே இருக்கும். வரலாற்றில் வேறு எதுவுமே நிகழவில்லை என்று தானே குழந்தை நினைக்கும். எங்குமே போர் தவறில்லை என்று நாம் சொல்வதில்லையே. பாடபுத்தகம் யாருக்காக உருவாக்குகிறீர்கள், என்ன நோக்கம் என்ற கேள்வியை நாங்களும் எழுதிக் கொண்டே தான் இருக்கிறோம். அறிவு மட்டும் கொடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. உணர்வு அளிக்கப்படுவதில்லை. மன ரீதியாக போர் எத்தனை பாதிப்பளிக்கக் கூடியது என்பதை நாம் ஏன் புரியவைக்க முற்படுவதில்லை. அவர்களிடம் போர் தேவையா? போரை தவிர்த்திருக்கலாமா? என்ற கேள்வியையும் கேட்பதில்லை. வரலாறே இந்த நிலைமைனா நீங்க தீவிர இலக்கியம் பற்றி கேட்கிறீங்க. எஸ்.ரா அவர்களுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்திருக்கிறது. ஒரு தமிழ் ஆசிரியர் என்னிடம் நம்ம மாவட்டத்தில யாருக்கோ விருது கிடைத்திருக்கிறதே… யாருன்னு கேட்கிறார்கள். ஆசிரியர்களின் வாசிப்பும் இந்த நிலைமையில் தான் உள்ளது. இரண்டாம் உலக்ப் போர் பாடம் நடத்தும்போது ஆனி ஃப்ராங்கின் டைரியை நான் வாசித்திருந்தால் தான் அவர்களுக்கு நான் அறிமுகப்படுத்தமுடியும் இல்ல. ஆசிரியர்கள் மாதத்திற்கு இரண்டு நூல்களாவது வாசிக்க வேண்டும் என்று விதி வைத்தால் கூட நன்றாக இருக்கும்.

சோர்வாக இருக்கிறதா? உங்கள் எல்லைக்குட்பட்டு நீங்கள் செய்ய முடிவது சிறிது தான் என்று நினைத்துக் கொள்வதுண்டா?

ஆமா. ரொம்பவும் சோர்வா இருக்கும். தனியா ஓடறோம் வைக்கறோம்னு அயர்ச்சியா இருக்கும். ஆனா என்ன பண்ணறது எனக்கு இப்படி ஒன்னு தோணுதே. இதை வைச்சு என்ன பண்ணலாம். என்ன பண்ண முடியும்னு யோசிப்பேன்.

தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டே இருந்தால் போதும் என்று ஓடிக் கொண்டிருக்கிறேன். பத்து பதினைந்து வருடங்கள் கழித்து சரி போனா போகுது என்ன தான் சொல்றாங்க கேட்போம்னு வந்தா கூட போதும். எங்குமே கேள்வி கேட்பவர்களை அருகில் வைத்துக் கொள்ள மாட்டார்கள். ஆமாம் சாமி போடுபவர்களைத்தான் அதிகாரத்தில் உள்ளவர்கள் வைத்துக் கொள்வார்கள். ஆனால் ஓரமாக நின்று என்னால் குழந்தைகளின் பார்வை, வகுப்பறைச் சிக்கல் ஆகியவற்றை கத்திக் கொண்டிருக்க மட்டும் முடியும். ஒரு மாடலை உருவாக்க வேண்டும். இன்னும் ஒரு ஐந்து வருடங்கள் உயிரோடு இருக்கிறேன் என வைத்துக் கொள்வோம். அதற்குள் என்ன செய்யலாம் என்றுதான் பார்ப்பேன். சிறார் இலக்கியத்தைப் பற்றிய பெரியவர்களுடனான ஒரு விவாதக் களம், ஒரு இணைய இதழ் உருவாக்கனும் இப்படி பல கனவுகள். குட்டையைக் குழப்பனும். இல்லைனா தேங்கி நாற்றம் அடிக்க ஆரம்பித்துவிடும்.

சிறார் இலக்கியம், வாசிப்பது, பாடநூல், கல்வி, தீவிர இலக்கியம், சினிமா, சமூகம் எல்லாமே ஒன்னுக்கொன்னு தொடர்புடையது தான். நல்லா வாசிக்க ஆரம்பிக்கும் குழந்தை பாடத்திட்டத்தைக் கேள்வி கேட்குமே. சினிமாக்கள் ஏன் தரமற்றதாக இருக்கு. ஏன் வன்முறை மட்டுமே கையில் எடுக்கிறார்கள்? மக்களுக்கு, இயக்குனர்களுக்கு வாசிப்பில்லை. நாலைந்து வெளி நாட்டுப் படங்களை பார்த்துட்டு வன்முறையை மட்டும் எடுத்து வச்சிட்டு இருப்பாங்க. ஒரு நூறு கேள்வி கேட்கும் குழந்தைகள் இருந்தால் கூட சமூகத்திற்கு போதுமே. எங்கேயோ இருக்கும் நோலன் தமிழ் நாட்டில் ஒடிஸியை பேசுபொருளா ஆக்கிட்டார்ல. ஒடிஸியை வாசித்து, அதை சினிமாவாகப் பார்த்து வளர்ந்த நோலன் போரைக் கேள்வி கேட்கிறார் இல்லயா? அது தானே வேணும். ஒரு நோலன் ஏன் தமிழ்நாட்டில் உருவாகவில்லை. குருஷேத்திரப்போர் முடித்து வெற்றியோடு வரும் பாண்டவர்களிடம் ஒரு பிராமணர் அந்த வெற்றியைக் கேள்வி கேட்பாரே. நமக்கும் இதிகாசங்கள், புராணங்கள் இருக்கிறதே. அதில் தத்துவக் கேள்விகள் இருக்கிறதே. இன்னைக்கு அதை எப்படிப் பார்க்கலாம் என்ற சிந்தனையை விவாதிக்கும் சினிமா ஏன் இல்லை.

ஒரு விவாதத்தின் போது ஒரு ஆசிரியர் என்னிடம் இலக்கியம் எல்லாருக்குமானது அல்ல என்கிறார். சினிமா எல்லாருக்குமானதா இருக்கிறதே. சினிமாவில் எங்கிருந்து ஆரம்பித்தாலும் நம்மால் கலைப்படத்தைப் போய் சென்றடைய முடியும். ஆர்வமுள்ளவர்கள் நோலனை, இரானியன் படங்களை சென்றடைய முடியும். இலக்கியத்தை ஆரம்பித்தால் தானே தேடல் விரிவடையும். முதலில் பிடிப்பதைக் கொடுப்போம் அதன் வழியாக அவர்களின் தேடல் விரிவடையட்டும். டைனோசர் பிடிக்கிறதா அது சார்ந்த புத்தகங்களை வாங்கிக் கொடுத்தால் போதும். அது சென்றடைய வேண்டியதை தேடல் வழியாக சென்றடையும்.

என் நண்பர் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை “இருப்பதில் சிறந்தது”. வேறு வழி இல்லையே இருப்பதில் சிறந்தது என்ற நிலைமை தான் சிறார் இலக்கியத்தின் நிலைமை. நாங்கள் சிறார் இலக்கியம் இல்லை என்று சொன்னால் கோபித்துக் கொள்வார்கள். ஆனால் புத்தக வெளியீட்டில் இந்தப் பேசுபொருள் சிறார் இலக்கியத்தில் இதுவரை எழுதப்படாதது என்பார்கள். என்ன முரண்பாடு. புத்தகத் திருவிழாவில் ஷ்ருதி டிவி குழந்தைகளிடம் நூல்கள் குறித்து பேட்டி எடுக்கிறார்கள். எல்லாமே எலைட் குழந்தைகள். அடித்தட்டு வர்க்க குழந்தைகளைப் பார்க்க முடியவில்லை. பெரும்பாலான எலைட் குழந்தைகள் இந்த வருடம் எடுத்துச் சென்ற நூல் டாக்மேன். அந்தக் குழந்தைகள் தமிழ் வாசிப்பதுமில்லை. தமிழ்க்குழந்தைகள் அப்படி வாசிப்பதற்கு ஏற்றபடி நம்மிடம் நூல்களும் இல்லை. டேவிட் வாலியம்ஸ் என்ற ஐரோப்பாவைச் சேர்ந்த சிறார் எழுத்தாளர் இந்தியாவிற்கு வந்திருந்தார். இந்தியாவில் ஐந்து இடங்களில் அவருக்கு சந்திப்பு நடக்கிறது. சென்னையில் நடந்த கூட்டத்தில் அத்தனை குழந்தைகள் பெற்றோருடன் சென்று கலந்து கொள்கிறார்கள். கேள்வி கேட்கிறார்கள். தமிழில் ஒரு சிறார் எழுத்தாளருக்கு இப்படி என்று நடக்கும்.

தமிழ் இலக்கியத்தில் இன்று உலக இலக்கியத்திற்கு இணையாக பெரிய மாஸ்டர்ஸ் இருக்காங்க.

அவங்க கிட்ட போறதுக்கு நாம சிறார்களைத் தயாரிக்கனுமே. நான் என் கல்லூரி முதலாமாண்டில் புதுமைப்பித்தனின் காஞ்சனை வாசித்தேன். அதற்கு முன் ஒரு ஐந்து வருடங்கள் வாசிப்பு இருந்தது. ஆனால் மாஸ்டர்ஸ் காலம்தோறும் வாசிக்க வாசிக்க வேற வேற பொருள்படுவாங்க. அதற்கு முதலில் அந்த வாசிப்பை நாம் கொண்டு சேர்க்கனும். விக்ரமாதித்யன், தெனாலி ராமனுக்குப் பிறகு நமக்குக் கிடைப்பது ராஜேஷ்குமார், பாலகுமாரன் தான். காமிக்ஸ் ஏன் இல்லை. முத்து காமிக்ஸ் உள்ளது தான். அதிலும் மொழிச்சிக்கல் உள்ளது. கொலை, குத்து, வெட்டு, வன்முறை. சாகசம். சரியாக வழிநடத்துகிறோமா? லே அவுட்டே நம்மிடம் நல்லா இல்லை. பால சாகித்ய அகாடமி  விருது புத்தகங்களை எடுத்துப் பார்த்தால் இதுவா விருது வாங்கியது என்று தோன்றும். இதே ரோல்டால், டாக்டர் சியூஸ் புத்தகங்களை எடுத்துப் பாருங்க. வித்தியாசம் தெரியும். Long என்பதை அவர்கள் பயன்படுத்தியிருக்கும் விதத்தைப் பார்த்தாலே புரியும். L என்ற எழுத்து மட்டும் ஒரு பக்கம் முழுவதுமாக இழுத்துவிட்டிருப்பார். அதை வாசிக்கும் குழந்தைகள் எப்படி இழுத்து வாசிக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். புத்தக வடிவமைப்பிலேயே இந்த சிக்கல் உள்ளது.

இந்த மாதிரியான தீவிர சிந்தனை, செயல்பாடு உங்களுக்கு உருவாகக் காரணமாக அமைந்த உங்கள் இளமைக்காலம் பற்றி சொல்லுங்க.

எட்டாவது படிக்கும்போது எனக்கு வெளி வாசிப்பு, இலக்கியம் அறிமுகமானது. பள்ளி நூல்கள் மேல் எனக்கு கோபம் வந்தது. அதில் ஒன்றுமில்லை என்று தோன்றியது. ஆசிரியர்கள் மேலும் கோபம். ஆசிரியர்களுக்கு பெரிய கடமை உள்ளது என்று தோன்றியது. என்னோடு உரையாட யாரும் இல்லை. என்னை மாதிரி நிறைய குழந்தைகளுக்கு அந்த வழிகாட்டுதல் இல்லை. நான் ஐ.ஏ.எஸ் ஆகனும்னு நினைச்சு கல்லூரிக்கு சென்னை சென்றேன். அப்போது ஜெயா என்ற கலெக்டரை சந்திக்கச் சென்றேன். அவரின் கணவரை சந்தித்தேன். டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர். அவர் சொன்னார் ஆட்சிப்பணியில் அரசியல் தலையீடு அதிகமாக இருக்கும். நீங்கள் நினைத்தது செய்ய முடியாது என்றார். ஆசிரியராக ஆகுங்கள். அப்போது அடிமட்டத்தில் மாணவர்களிடம் நீங்கள் விரும்பும் மாற்றத்தைச் செய்யலாம் என்றார். அந்த உரையாடல் பெரிய உந்து சக்தியாக இருந்தது. அது ஒரு தற்செயலான சந்திப்பு தான். ஆனால் என்னோட வாழ்க்கையையே மடைமாற்றிய வார்த்தைகள் அந்த சந்திப்புல கிடைச்சது. பி.ஏ முடிச்சதும் ஜே.என்.யு-ல் எம்.ஏ. பண்ணனும்னு நினைச்சேன். எனக்குக் கிடைக்கல. ஒரு வருடம் அதற்காக தயாரிக்கலாம் என்று நினைத்தேன். அப்போது பி.எட் போட்டேன். அது எளிதாகக் கிடைத்தது. ஆனால் படிக்க நேரம் கிடைக்கல. 21 வயதில் தனியார் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு எனக்கு ஏதோ பத்தல. கற்றுக் கொள்ள முடியல. அதனால செயிண்ட் ஜான்ஸ் பள்ளிக்குச் சென்றேன். இண்டர்னேஷனல் ரெசிடென்ஷியல் பள்ளி. அங்கு கற்றுக் கொள்ள வாய்ப்பமைந்தது. ஆனால் நான் இங்க என்ன பண்ணிட்டு இருக்கேன். இது என்னோட இடம் இல்லையே. நான் கிராமத்தில் தானே இருக்கனும்னு தோணுச்சு. டெட் எழுதி அரசுப்பள்ளி ஆசிரியராக ஆனேன். திருச்சி வந்தேன். திருமணத்திற்குப் பின் விருதுநகரில் விடத்தகுளத்தில் ஆசிரியராக ஆனேன். இப்போ வாசிப்பு இயக்கத்தில் இருக்கிறேன்.

உங்களுடைய கனவுகள் மற்றும் செயல்திட்டங்கள் நிறைவேற மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நன்றிங்க.

*

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *