மஞ்சள் குதிரை (சிறுகதை) – மினி P.C.

மலையாளத்திலிருந்து தமிழில்: யூமா வாசுகி

எழுத்தாளர் மினி  பி சி

(எழுத்தாளர் மினி P.C மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டவர். கேரள மாநிலம் எர்ணாக்குளம் மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாவூரில் பிறந்தவர். மருந்தியல் துறையில் (Pharmaceutical sector) பணியாற்றி வருகிறார். ஆறு சிறுகதைத் தொகுப்புகளும், நான்கு நாவல்களும், ஐந்து சிறுவர் இலக்கியம் சார்ந்த தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. ”மஞ்சகுதிரா” என்ற சிறுகதைக்காக கமல சுரையா சிறப்பு ஜூரி விருதும், “ஃப்ரெஞ்ச் கிஸ்” கதைக்காக எம்.சுகுமாரன் விருதும் பெற்றுள்ளார். (தொடர்புக்கு: blogminipc@gmail.com)

எழுத்தாளர் பால்சக்காரியாவிடம் சமகாலத்தில் எழுதும் முக்கியமான பெண் எழுத்தாளர்களைப் பற்றிய கேள்வியை எழுப்பியபோது அவர் குறிப்பிட்ட இரு பெயர்கள் மினி P.C. மற்றும் சோனியா செரியன் ஆகியோர். மலையாளத்தில் இன்றைக்கு எழுதப்படும் சிறுகதைகளின் போக்கை அறியும் விதமாக சிலரின் கதைகளை நீலிக்கு மொழிபெயர்க்கலாம் என்ற எண்ணத்தில் இக்கதை பிரசுரிக்கப்படுகிறது.)

*

மஞ்சள் குதிரை – மினி P.C.

(தமிழில் – யூமா வாசுகி)

பங்காரம்மாவின் பார்வை படாத இடத்தில்தான் அந்தக் குருவி கூடு கட்டியது. தினமும் காலையில் நான் என் சன்னலைத் திறக்கும்போது, சன்னல் மூலையிலுள்ள நார் கூட்டினுள்ளிருந்து அவள் வெளியே பறந்து செல்லவும் அந்தியில் கூடடையவும் செய்துவருகிறாள். என் மோதிரத்தையும் கம்மல்களையும் பெரும்பாலும் அந்த சன்னல் படியில்தான் நான் கழற்றி வைப்பேன். அதனால்தான் பங்காரம்மா அந்தப் பக்கம் நெருங்குவதில்லைபோலிருக்கிறது.

வழக்கப்படி மாலையில் கூடடைந்த குருவி கூட்டின் உள்ளே தன் அலகால் தட்டி முட்டி தன் வரவை அறிவிக்க, இன்று அவள் சென்று பார்த்த நதிகள்… வழிகள்… பூமரங்கள்… ஆகாயச் சரிவுகள்… எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக நான் என் பச்சை விரிப்பிட்ட கட்டிலில் இருந்தவாறு கேட்டுத் தெரிந்துகொள்கிறேன். மயக்க மருந்துகளின், வலி நிவாரணிகளின் நெடி நிலவும் பாலியேட்டிவ் கேர் சென்டரின்1 பச்சை விரிப்பிட்ட கட்டிலை நினைவுபடுத்தும் என் அந்த அறையில் அப்போது நாங்கள் இருவர் மட்டும்தான் இருந்தோம்! என்னால் ஏதும் தொந்தரவு ஏற்படாது என்பதைத் தெரிந்துகொண்டாள்போலிருக்கிறது, அவள் அச்சமின்றி கட்டிலுக்குப் பக்கத்து மேசையில் வந்தமர்ந்து பாத்திரத்தில் மிச்சமிருந்த பிரெட் துகள்களைக் கொத்தியபடி என்னிடம் சலசலத்தாள். அவளது சலசலப்பு ஏறத்தாழ அடங்கியபோதுதான் தலையணைக்கு அருகில் இருந்த கைப்பேசி பாடத் தொடங்கியது. “யாராக இருக்கும்?” கை நீட்டி அதை எடுத்தேன். அறியாத எண்!

“ஹலோ… ஹலோ… ஹலோ…”

இரண்டு மூன்று ‘ஹலோ’ க்களுக்குப் பிறகும் மறுமுனையிலிருந்து பதில் எதுவும் வராததால் அந்த அழைப்பைத் துண்டித்து தலையணையை இறக்கி வைத்துப் படுத்தேன். உடல் முழுதும் ஊசி குத்துவதுபோன்ற வலி. அதனுடன், ‘கீமோ’2வின் சோர்வு! எல்லாம் சேர்ந்து எவ்வளவு சுவாரஸ்யம்! ஆமாம், சுவாரஸ்யமான வலிகள்… என்னுடையவை மட்டுமான அன்புக்குரிய வலிகள்… கண்களை இறுக மூடிக்கொண்டு மனதை வழக்கமான கனவுகளுக்கு வழி மாற்றிவிட முயன்றேன். ஆனால் கைப்பேசி மீண்டும் ஒலித்தது, என்ன செய்வது? அதே எண்ணிலிருந்துதான். மீண்டும் எடுத்துப் பேசினேன்:

“ஹலோ…”

அந்த ஒரு ஹலோவுக்கே மறுமுனையிலிருந்து பேச்சு தொடங்கியது:

“குட் ஈவ்னிங், மேடம்! என் பெயர் முரளீமோகன். உங்கள் போனுக்கு சற்று முன் ஐநூறு ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தது நான்தான்! தவறுதலாக நடந்துவிட்டது. நம் நம்பரைப் பாருங்களேன். லாஸ்ட் டிஜிட்டைத் தவிர பாக்கியெல்லாம் சேம்தான். அதனால் தயவுசெய்து அந்த ஐநூறு ரூபாய்க்கு என் போனுக்கு நீங்கள் ரீசார்ஜ் செய்து கொடுக்க வேண்டும். நான் ஒரு கஷ்டமான சிச்சுவேஷனில் இருக்கிறேன்! தெரியாத ஒரு இடத்தில் பலவற்றை இழந்தவனாக  நிற்க நேர்வது… நான் சொல்வதைக் கேட்கிறீர்களா? முடிந்தவரை விரைவாகக் கொஞ்சம் ரீசார்ஜ் செய்து கொடுங்கள்…”

அவனது விசித்திரமான  அந்த தேவையைக் கேட்ட திகைப்பில் என் நடுங்கும் விரல்கள் அந்த அழைப்பைத் துண்டித்தன… குழப்பத்துடன் நான் இன்பாக்ஸில் தேடினேன். ஆமாம், அவன் ரீசார்ஜ் செய்திருக்கிறான்… ஆனால் இந்த நிலையில் என்னால் என்ன செய்ய முடியும்? என் கைப்பேசிக்குக்கூட நான் இதுவரை ரீசார்ஜ் செய்தது இல்லை. நீண்ட நாட்களாக இது வெறுமொரு காட்சிப் பொருளாக மட்டும்தான் இருக்கிறது. தொடக்க காலங்களில் மாதவ் எல்லா மாதமும் சரியாக ரீசார்ஜ் செய்து தருவார். ஆனால், ஒன்றிரண்டு மாதங்களாக… இல்லை! யாரையும் குற்றம் சொல்லவில்லை. வருத்தப்படவும் இல்லை. மாதவுக்கு வேலை நெருக்கடி! இரண்டாவதாக ஒரு வாழ்க்கையையும் உருவாக்க வேண்டியிருப்பதன் கஷ்டமான வேலை! ஆனால் ஜீரோ பேலன்ஸில் மூழ்கும் நாட்களில், என்னை அழைத்துக் கிடைக்காதபோதான கண்ணனையும் உண்ணியையும் நினைக்கும்போதுதான் ரொம்பவும் சங்கடமாக இருக்கிறது. பிறகு அழைக்கும்போது நெஞ்சு வெடிக்கும் வேதனையுடன் அவர்கள் கேட்பார்கள்:

“சிங்கீ… எப்போதாவது அந்தச் சனியனைக் கொஞ்சம் சார்ஜ் பண்ணி வைக்கக் கூடாதா?” என்று. பிறகு துயரத்தின் வண்ணப் பென்சில்களால் மனம் நிறைய சித்திரங்கள் வரைவார்கள். கண்ணும் இதயமும் இல்லாத சித்திரங்கள்! அதைத் தவிர அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்? அவர்களுக்கு மட்டுமான அம்மாதானே நான்! பரிதாபத்திற்குரிய ஒரு அம்மா! மாதவ் என்னை ‘சிலங்கே’ என்று அழைப்பதைக் கேட்டுத்தான் கண்ணன் ‘சிங்கீ’ என்று அழைக்கத் தொடங்கினான். அவனைத் தொடர்ந்து அம்மா சிங்கியானாள். பெரியவர்களாகியும் அம்மா என்று அழைக்கவில்லை. அவர்களுக்கு இப்போதும் சிங்கி அம்மா அல்ல… ஒரு சிறு குழந்தை. அவர்களுடன் விளையாடவும் சிரிக்கவும் செய்யும் ஒரு பாவமான குழந்தை. அந்தக் குழந்தையை அப்பாவின் கையில் பத்திரமாக ஒப்படைத்துவிட்டு ஆய்வுக்காக கேம்பிரிட்ஜுக்குப் பறக்கும்போது அவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள்தானே, நுரையீரல் புற்றுநோய் வந்து இதுபோன்றதொரு இடத்தில் நான் சுருண்டு படுக்க நேரும் என்று!

“அப்பா இவ்வளவு இர்ரெஸ்பான்ஸிபிள் என்று நாங்கள் நினைக்கவில்லை, சிங்கீ… எப்படி இந்த சிச்சுவேஷனில் அவரால் இது முடிந்தது?” எப்போது அழைத்தாலும் அவர்கள் இப்படித்தான் பேசுவார்கள். மாதவ் மறுதிருமணம் செய்ததை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் வலுவான வேண்டுகோளை மதித்துதான் மாதவ் அதற்கு முற்பட்டார். வெறும் நாற்பதுகளின் முதற் பகுதிக்குக்கூட வந்திராத அவரை குறுகிப்போய்விடாமல் காப்பாற்ற வேண்டியது என் பொறுப்பு என்று தோன்றியதால்தான், நான் அதைச் செய்தேன். இல்லையென்றால் என்னால் நிம்மதியாக இங்கிருந்து போக முடியுமா? எந்த அறிவும் இல்லாதிருந்த, சிலங்க எனும் பதினேழு வயதுக்காரியை என்றென்றும் ஒரு பொம்மையைப்போலச் சுமந்தவர். விவரமும் பக்குவமும் வரும் முன்பே இரண்டு குழந்தைகளின் அப்பாவானார். அவர்களையும் என்னையும் எந்தக் குறையும் இல்லாமல் காப்பாற்றியவர். வாழ்க்கையில் பெரியதொரு காலம் அப்படி சிரத்தை கொண்டிருந்த ஒரு பாவப்பட்ட மனிதரை அலையவிட்டுவிட்டு என்னால் போக முடியாது.

ஆறு மாதங்களுக்கு முன்பு மாதவ் திருமணம் செய்தார். நான் இந்த வீட்டுக்கு வந்த இரண்டாம் மாதம்! மீண்டும் ஒரு அப்பா ஆவதற்கான அதிர்ஷ்டம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. ‘விசேஷம்’ இருக்கிறது என்று அவள்தான் சொன்னாள். அந்தப் பரவசத்தால்தான் என்று தோன்றுகிறது, இங்கே அழைப்பதும் வருவதுமெல்லாம் குறைந்துவிட்டது. வேண்டுமென்றே செய்ததாக இருக்காது. மாதவின் பழக்கம் அதுதான். வேலை முடிந்தால் வீட்டில் முடங்க வேண்டும். எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை, நட்புகளும் இல்லை. அந்தக் காலத்திலேயே, ‘நோயாளர் சந்திப்’ பில் ஒன்றும் பெரிய ஈடுபாடு இல்லை. நோயாளிகளை அவர்களது ஓய்வுக்குள் புகுந்து தொந்தரவு செய்பவர்கள் மீது ஆர்வமும் இல்லை. ஒவ்வொரு மனிதனும் தன் சூழ்நிலையுடன் ஒத்திசைய வேண்டும் என்று எனக்குக் கற்றுக்கொடுத்தது மாதவ்தான். இன்று என் நிலைமைகளுடன் இவ்வளவு அதிகம் இசைந்துபோக முடிவது அதனால்தான்போலிருக்கிறது.

நான் விரும்பி என் பிறப்பு நிகழவில்லை. இவ்வளவு நாள் வாழ்வதும் என் விருப்பத்தினால் அல்ல. கடவுள் தரும் எதையும் ஏற்றுக்கொள்ள… முணுமுணுப்பு இல்லாமல் ஏற்றுக்கொள்ள என் மனம் ஆயத்தமாகிவிட்டது. இப்போது வாழ்வைவிட மேலாக நான் நேசிப்பது… அல்ல, காதலிப்பது, தவிர்க்க முடியாத அந்த ஒன்றைத்தான்… மரணத்தை.

நோய் உறுதிப்பட்ட இரவில்தான் இந்தப் புரிதல்கள் எனக்கு ஏற்பட்டன. இரவு தன் அடர்ந்த முடிச் சுருள்களுக்குள் பூமியை ஒளித்த அந்த இரவில் கட்டிலில் மாதவை தனியே விட்டுவிட்டு நான் விருந்தினர் அறைக்குச் சென்றேன். தூங்குவதற்காக அல்ல, உரக்க உரக்க அழுது தீர்க்க. அன்றுதான் நான் முதன்முறையாக அந்த குதிரைக் குளம்படி ஓசையைக் கேட்டேன். நெருங்க நெருங்க வியப்பளித்தவாறு அது என் அருகில் வந்து நின்றது… அந்தக் குதிரை மீது அவன் இருந்தான். இருண்டு பாழடைந்த ஏதோ தொலைவான மூலைகளிலிருந்துதான் அவன் வந்தான்.

தூரம் சோர்வளிக்காத அகலக் கண்களால் அவன் என்னைப் பார்த்தான். ஆயிரமாயிரம் கண்கள் அவனுக்கு. அந்தக் கண்களில் என்னைக் கண்டு நான் களைத்துப்போனேன். அந்தக் கண்கள் என்னைப் பொதிந்தன. பிறகு அவன் என் நெற்றியில் முத்தமிட்டான். கண்ணீரின் உப்பு பரவிய என் கன்னங்களை அந்த மென்மையான விரல்கள் வருடின. நீண்ட நேர தேற்றுதலுக்குப் பிறகு என்னையறியாது அழுதுவிட்டேன். உண்மையில் எனக்கு அச்சமாக இருந்தது. கனைக்கும் அந்த மஞ்சள் குதிரையோடு என்னைச் சேர்த்து நிறுத்தினான். அவனிடம் மறைப்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லை. நடுக்கத்துடன் சொன்னேன்:

“எனக்கு அச்சமாக இருக்கிறது.”

“ஏன்?… ஏன்?… ஏன்?”

என் உள்ளங்கைகளை வருடியபடி அவன் கேட்டான்.

“நான் உன்னைக் காதலிக்கிறேனா?”

அதைக் கேட்டு அவன் சிரித்தான். பிறகு, சிதறிக் கிடக்கும் முடியிழைகளை என் காதுகளுக்குப் பின்னால் ஒதுக்கி என் இதயத்தோடு அவன் முணுமுணுத்தான்:

“கூடாது, பயப்படக் கூடாது… என்னைக் காதலிக்கும்போது உன் கனவுகளில் அத்திமரம் துளிர்க்கவும்  கற்பனைகளில் மேப்பிள் தோட்டங்கள் பூக்கவும் செய்கின்றன என்றால்… மகிழ்ச்சியுடன் பாடல்களை முனகவும் உறவுகளை சுயநலத்தின் லாப இச்சையற்றுப் பார்க்கவும் முடிகிறது என்றால் நீ என்னை அணைத்துக்கொள்…”

அதைக் கேட்டு நான் ஆயாசத்துடன் நெளிந்தேன்.

“ஆமாம். நான் உன்னைக் காதலிக்கிறேன்.”

நான் அவனைத் தழுவிக்கொண்டேன்… இறுக… இறுக… உடனே வருவேன் என்று சொல்லிப் பிரிந்து சென்ற அந்த இரவு முதல் நான் அவனுக்காகக் காத்திருக்கிறேன்…. அந்த நொடிக்காக… அந்த நொடிக்காக மட்டும்.

இன்று இங்கே நானே வரித்துக்கொண்ட தனிப்படலில்… கடந்து செல்லும் ஒவ்வொரு நொடிகளில்… என் காதல் நிறைந்து வழிகிறது… எந்தக் கீமோவாலும் தோற்கடிக்க முடியாதபடி என் கண்கள் ஒளிர்வதையும் உதடுகள் சிவப்பதையும் கன்னங்கள் பூரிப்பதையும் பார்த்து மருத்துவர் மனோஜ், மாதவிடம் சொன்னார்:

“பிரார்த்தியுங்கள், ஷி ஈஸ் ரெக்கவரிங்… என் பிராக்டிஸில் இவ்வளவு வில்பவர் உள்ள ஒருவரை இப்போதுதான் முதன்முறையாகப் பார்க்கிறேன்… ஊக்கமானவர்.”

எனக்குச் சிரிப்பு வந்தது. ஆனால் நான் சிரிக்கவில்லை. மனதில் நான் எப்போதும் சிரித்துக்கொண்டுதானே இருக்கிறேன்.

சற்று நேரம் அடங்கியிருந்த குறும்புக் குழந்தை சட்டென்று துள்ளியெழுந்து களேபரத்தைத் தொடங்குவதுபோல கைப்பேசி மீண்டும் பாடத் தொடங்கியது. முரளீமோகன். பாவம். அவன் பேசும் முன்பே நான் சொல்லத் தொடங்கினேன்.

“நண்பரே உங்கள் கஷ்டம் எனக்குப் புரிகிறது. ஆனால், என்னால் ஏதும் செய்ய முடியும் என்று தோன்றவில்லை.  பிகாஸ் ஐயம் எ கேன்சர் பேஷன்ட். உதவிக்கு ஒரு மூதாட்டி மட்டும்தான் இருக்கிறார். நான் இனி செய்யக்கூடியது, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று சொன்னால், பக்கத்தில் எங்காவது எனக்குத் தெரிந்தவர்கள் இருந்தால் உதவலாம் என்பது மட்டும்தான்.”

என் வார்த்தைகளின் உண்மையைப் புரிந்துகொண்டதுபோல அவன் பேசினான்.

“திருச்சூர்.”

எனக்கு மகிழ்ச்சி.

“அப்படியென்றால் ஒரு ஆட்டோ பிடித்து இங்கே வாருங்கள். நான் இங்கே பக்கத்தில்தான் இருக்கிறேன். என் முகவரி, சிலங்க. ஸ்வப்னம், நியர் சக்தன் நகர்.”

“நான் வருகிறேன்.”

அவனது ஆசுவாசக் குரல்.

“வாருங்கள்.”

நான் எதுவும் யோசிக்க வேண்டியிருக்கவில்லை. எதுவும்… எதுவுமெதுவும்.

என்னுடைய பேச்சைக் கேட்டு அவ்வளவு நேரமும் அறைக்குள் சுற்றித் திரிந்துகொண்டிருந்த குருவி அச்சத்துடன் கூட்டில் புகுந்தது. நான் கட்டிலில் எழுந்தமர்ந்தேன். பிறகு கை நீட்டி மேசையில் இருந்த  அழைப்பு மணியை அழுத்தினேன். அந்த ஓசை கேட்டதும் பங்காரம்மா, “என்னம்மா” என்று கேட்டபடி ஓடி வந்தார். என் உதவியாள்.  அறுபத்தைந்து வயதுடைய ஆரோக்கியமான கன்னட மூதாட்டி. மிகச் சிறு வயதிலேயே தன் கணவர் பொன்னுச்சாமி அண்ணாச்சியுடன் நெல்லியம்பதியில் ஆரஞ்சுத் தோட்டத்தில் வேலைக்கு வந்தவர். அண்ணாச்சி இறந்துவிட்டார். எனக்கு இவரை ஏற்பாடு செய்து கொடுத்தது, நல்மனதுடைய ஒரு நண்பர். நான் குடிப்பதற்கு மாதுளை ஜூஸ் தயார் செய்துகொண்டிருந்தார் பங்காரம்மா.

“நான் குளிக்க வேண்டும்.”

வழக்கமற்ற வகையில் நான் அவரிடம் சொன்னேன். தினமும் காலை ஒரு வேளைக் குளியல்தான். அவர் வியப்புடன் என்னைப் பார்த்தார்.

“என்ன கண்ணு? காலையில்தானே குளித்தாய். மறுபடியும் எதற்கு?”

ஆயினும் என் கட்டாயத்துக்கு ஆட்பட்டு நான் குளிக்க உதவினார். குளித்துவிட்டு, மஞ்சளில் கருநீலக் கோடுகள் உள்ள புடவை உடுத்தி, வெட்டிய முடியை அலட்சியமாகச் சீவி, சன்னல் படியில் கழற்றி வைத்த கம்மல்களையும் சங்கிலியையும் அணிந்துகொண்டு, பவுடர்போட்டு கண்ணுக்கு மையிட்டு நான் அழகியாகக் காத்திருந்தேன்.

அவன் வந்த ஆட்டோ விரைவிலேயே வாசலுக்கு வந்து நின்றது. அதைப் பார்த்து பங்காரம்மா அறைக்குள் ஓடி வந்தார்…

“யார் இவர்?”

நான் தலையசைத்தேன், “தெரியாது.”

“பிறகு எதற்கு? யாராக இருந்தாலும் குளிக்காமல் இந்த அறைக்குள் வரவிடாதே… இன்பெக்ஷன். நான் என்னவென்று கேட்டு வருகிறேன்…” அவர் வாசலுக்குச் சென்றார். நான் வெளியே பார்த்தேன்… வேறு ஏதோ வேலை இருப்பதுபோல ஆட்டோக்காரர் பதற்றத்துடன் நின்றுகொண்டிருந்தார். நான் பர்ஸிலிருந்து பணம் எடுத்தேன். மெதுவாக அங்கே சென்றேன். வாசலில்  இறங்காமல் வாயிற்படியில் சாய்ந்து நின்றேன்.

“கண்ணு… ஆட்டோகாரருக்கு…”

பங்காரம்மா நிறுத்தினார். அவருக்கு எதுவும் புரியவில்லை. நான் பணத்தை அவரிடம் கொடுத்தேன்… பிறகு வந்தவனைப் பார்த்தேன். குரலைக் கேட்டபோது, இதைவிட வயது குறைவாக எதிர்பார்த்தேன்.  மாநிறம், கண்ணாடி, அவ்வளவு அடர்த்தியற்ற மெல்லிய மீசை, புல்கான் பாணி தாடியின் மிச்சங்கள். சற்று நரை படர்ந்த வெட்டி ஒதுக்கிய தலைமுடி. அதிக உயரமோ, பருமனோ இல்லாத நடுத்தர உடல்வாகு. சாம்பல் நிற ஜீன்ஸும் இளமஞ்சள் ஜிப்பாவும். ஆட்டோக்காரர் வந்த வேகத்தில் திரும்பிச் சென்றார்.

“வாங்க…”

நான் அவனை அறைக்கு அழைத்தேன். பங்காரம்மாவுக்கு அது பிடிக்கவில்லை. தெரியாத ஒருவன் அந்தி நேரத்தில், அதுவும் இந்த அறைக்குள். அவர் தன் சிவப்புச் சேலையால் கழுத்தின் அட்டிகையை மறைக்க முயன்றவாறு சலிப்புடன் அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டிருந்தார்.

“உட்காருங்கள்.”

நான் என் கட்டிலில் அமர்ந்து ஒரு தலையணையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டேன். பலத்திற்காக.  அவன், நாற்காலிக்கு வலிக்கக் கூடாது என்று நினைத்தவனைப்போல அமர்ந்து திகைப்புடன் என்னைப் பார்த்தான்.

“நீங்கள்… நீங்கள்தானா என்னிடம் பேசியது?”

அவன் முகத்தைப் பார்க்காமல் சொன்னேன்.

“ஆமாம்.”

“உங்களுக்கு… உங்களுக்கு உடம்பு முடியவில்லை என்று சொன்னீர்கள்…”

அவன் சற்று அவநம்பிக்கையுடன் என்னைப் பார்த்தான்.  நான் ஒரு ஏமாற்றுக்காரியோ என்று அவன் சந்தேகிக்கிறான் என்பதும் எனக்கு சுவாரஸ்யமாக இருந்தது.

“என்ன, என் முகத்தைப் பார்த்தால் ஏமாற்றுக்காரிபோலவா இருக்கிறது? பாருங்கள், இந்த மருந்துகள் எல்லாம் என்னுடையவைதான்.” நான் சுவர் அலமாரியைத் திறந்து அவனது கவனத்தைக் கோரி உரக்கச் சிரித்தேன். அங்கே அடுக்கி வைத்திருந்த மருந்துகளிலும் ஸ்கேன் ரிசல்ட்டுகளிலும் ஒருநொடி கண்ணோட்டியதன் பிறகு என் சிரிப்பில் அதிர்ந்து கலக்கத்துடன் அவன் தலை குலுக்கினான்.

“அது அல்ல… இவ்வளவு கூலாக… எப்படி முடிகிறது?”

அப்போது அந்தக் கண்களில் வியப்பு.

“பிறகு நான் என்ன செய்ய வேண்டும், சொல்லுங்கள். எவரும் தவிர்க்க முடியாத ஒன்றுதானே இது? அப்புறம் நான் எதற்குப் பயப்பட வேண்டும்? எனக்கு மரணத்தின் மீது காதல். தீராத காதல்…”

அதைக் கேட்டு பங்காரம்மா சற்று பீதியுடன் அறைக்கு வெளியே சென்றார். என் குருவி மெல்ல சிறகுகளை அசைத்தது. அவன் என்னை பெருமதிப்புடன் பார்த்தான். ஒவ்வொரு நொடி செல்லுந்தோறும் அவன் கண்களில் பளபளப்பு அதிகரித்துக்கொண்டிருந்தது. வலிந்து என் பார்வையைப் பின்வாங்கிக்கொண்டு நான் அவனை நினைவுகூர்ந்தேன்.

“அந்தி மயங்குகிறது. எங்கே போக வேண்டும்? ரூபாய் ஆயிரமோ இரண்டாயிரமோ இருக்கும்; அது போதுமா?”

அதைக் கேட்டு எனக்கு எச்சரிக்கை செய்வதுபோன்று பங்காரம்மா வாயிலருகில் வந்து ஒன்றிரண்டுமுறை, ‘கொக் கொக்’ என்று இருமினார். அதைப் புரிந்துகொண்டு அவன் சொன்னான்.

“நன்றி… இந்த நல்ல மனசுக்கு. எனக்கு அந்த ஐநூறு ரூபாய் போதும்.”

நான் பணத்துக்காக பர்ஸில் தேடும்போது, அறைச் சுவர்களில் நான் ஒட்டி வைத்த ஓவியங்களை நுட்பமாகப் பார்த்து அவன் சிரித்தான்.

“யாராவது குழந்தைகள் வரைந்திருப்பார்கள், அப்படித்தானே? பெர்பெக்ஷன் குறைவு.” எனக்கு பெருஞ்சிரிப்பு வந்துவிட்டது. அந்த சிரிப்புக்கிடையில் நான் சொன்னேன்.

“ஆமாம்… ஒரு குழந்தை… சிங்கி எனும் செல்லப் பெயருடைய ஒரு குறும்புக் குழந்தை.”

அவனுக்கு இதில் உள்ள நகைச்சுவை புரியவில்லை.

“ம்… முறைப்படி படிக்காததால் ஏற்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. குழந்தைக்குக் கற்பிக்க வேண்டும். ஆனாலும்… ஆனாலும்… எல்லாவற்றிலும் ஒரு வெகுளித்தனம் இருக்கிறது.”

அந்த வார்த்தைகள்.

“ஆனாலும்… ஆனாலும்… எல்லாவற்றிலும் ஒரு வெகுளித்தனம் இருக்கிறது.”

இந்த வார்த்தைகளில் அவன் எனக்கு அந்நியமற்றவன் ஆனான்.

அவன் மீண்டும் அந்த வெளிறிய ஓவியங்களைக் கவனித்துப் பார்த்து நிற்கவும் அவற்றில் படிந்த தூசுப் படலங்களை தன் கூர்மையான விரல்களால் துடைத்துப் பளபளப்பாக்கவும் செய்யும்போது, என் இதயம் அந்தக் கைவிரல்களால் பரிசுத்தமாவதுபோலத்தான் எனக்குத் தோன்றியது.

“இங்கே பிரஷ்ஷும் கலரும் உண்டா?”

அவன் ஓவியங்களிலிருந்து கண்ணெடுத்து, சட்டென்று எதையோ நினைவுகூர்ந்தவன்போலக் கேட்டான்.

“ஆமாம். இந்த மேசை டிராயரில் எல்லாம் இருக்கிறது. வாங்கி ஏறத்தாழ ஐந்து மாதம்தான் இருக்கும்… உங்களுக்கு வேண்டுமா? எடுத்துக்கொள்ளுங்கள்.”

நான் திடீரென்று தயாள மனம் கொண்டேன். இல்லை, திடீரென்று அல்ல, நான் எப்போதுமே தயாள மனமுடையவள்தானே.

“தெரியுமா, சிலங்க. இந்த இரவு என்னைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமான இரவு. ஒரு அழகான ஓவியத்தைப் பூர்த்தி செய்ய வேண்டிய இரவு. இன்றைய பயணத்தில் பணத்துடன் நான் என் அன்புக்குரிய பிரஷ்களையும் வண்ணங்களையும் இழந்தேன்.”

அவன் குரலில் ஏமாற்றம் கலந்தது.

“இவை போதுமென்றால் எடுத்துக்கொள்ளுங்கள்… வேறு ஏதாவது? தேவைக்குப் பணம்? இதோ இந்த சங்கிலியை நான் தருகிறேன். அப்புறம் எதற்கு இந்த ஏமாற்றம்?”

அவன் ஏமாற்றமடைவதை நான் விரும்பவில்லை… அவன் மட்டுமல்ல, எவரும். அவன் அந்த மேசையின் இழுப்பறையைத் திறந்து வண்ணங்களைப் பார்த்து சில நொடிகள் நின்றான்.

“பணம், பிரஷ், வண்ணங்கள், நீங்கள் எனக்கு எல்லாம் தருவீர்கள் சிலங்க… ஆனால்… இனி, பொழுது சாய்ந்த இந்த வேளையில் இலக்கை அடைய முடியும் என்று தோன்றவில்லை. ஏதாவது ஒரு லாட்ஜ் அறையில் அந்த ஓவியத்தை வரைய முடியாது என்று என் மனம் சொல்கிறது. இந்த இரவு… இன்றைய இந்த இரவு இந்த வீட்டின் ஒரு அறையை எனக்குத் தருவீர்கள் என்றால்…”

அவன் கண்கள் என்னிடம் யாசிப்பதை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. நான் எதையும் யோசிக்கவில்லை. எதையும். இது ஒரு விதியாக இருக்கலாம்… இவனுடனான  இந்த இரவும்.

“இரவு தூங்காமல் வரையப்போகிறீர்கள் என்றால் இந்த அறை போதுமா? நான் அதை ரசிக்கலாமே. டிஸ்டர்பன்ஸ் ஆகுமென்றால் வேறு அறையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.”

என் மனது அப்படித்தான் என்னைச் சொல்ல வைத்தது.

நம்ப முடியாமல் அவன் ஒரு நொடி நின்றான். பிறகு தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள முற்பட்டான். நான் தடுக்கவில்லை. அவன் யார் என்று தெரிந்துகொள்ள வேண்டிய தேவை எனக்கு இல்லை. ஆனால், என்னை நம்பவைக்க வேண்டிய அவசியம் அவனுக்கு இருந்தது,

நான் இங்கே தங்க வைப்பது ஒரு அந்நியனை அல்ல என்று.

“என் பெயர் முரளீமோகன். ஆர்ட்டிஸ்ட். வீடு என்று ஒன்றில்லை. கொச்சியில் ஒரு பிளாட்டில் வசிக்கிறேன்; ஸ்டேட்டஸ், மணமாகாதவன்.”

“முரளீமோகன்… நான் கேள்விப்பட்டிருக்கிறேன்… அது நீங்கள்தானா?”

நான் வியந்தேன். அவன் எதுவும் பேசவில்லை. நான் எதிர்பார்க்கவும் இல்லை.

அந்தி என் சன்னல்களிலிருந்தும், வாயிலிலிருந்தும், வளாகத்திலிருந்தும் தொலைவே… தொலைவே போகத் தொடங்கியிருந்தது. என் குருவி வழக்கமற்ற வகையில் அமைதியடைந்திருந்தது; பங்காரம்மா இரவு உணவு சமைக்கச் சென்றார். அவன், குளித்துவிட்டு மாதவுக்காக அவரது கடந்த பிறந்தநாளுக்கு நான் வாங்கி வைத்திருந்த சரிகை வேட்டியும் சந்தன நிற ஜிப்பாவும் அணிந்து என் கட்டிலருகே நாற்காலியிட்டு அமர்ந்திருந்தான். அந்தப் பரிசை வாங்க மாதவுக்கு வர முடியவில்லை. ஏனென்று நான் கேட்கவும் இல்லை. ஆனால், இவனுக்கு எப்படி இவ்வளவு பொருத்தமாயிற்று! இதுவும் ஒரு நிமித்தமாக இருக்கலாம். அவன் வாய் திறந்தான். என்னமோ கேட்பதற்கான ஆயத்தம். அந்தக் கண்களைப் பார்த்தால் தெரியும்.

கேள்… கேள்… என்னவென்று தெரியாமல் இதயம் உருகியது. அப்போது மாதவை நினைவுபடுத்திக்கொண்டு கைப்பேசி பாடியது. வேண்டுமென்றுதான் இந்த பக்திப் பாட்டை வைத்தேன்.

“வடக்குநாதனு3க்கு சுப்ரபாதம் பாடும்

வண்ணாத்திக்குருவிகள் நாங்கள்…”

மாதவ் அழைக்கும்போது லௌகீகமாக எதுவும் தோன்றாமல் இருப்பதற்காக.

“கணவர்.” அழைப்பை ஏற்கும் முன்னரே அவனிடம் சொன்னேன். சட்டென்று அங்கிருந்து எழுந்து விலக முற்பட்ட அவனைத் தடுத்தேன்.

“வேண்டாம். இங்கேயே உட்காருங்கள்.” அவன் புன்னகையுடன் அங்கேயே அமர்ந்தான். நான் நிம்மதியாக கைப்பேசியின் ஸ்பீக்கரை அழுத்தினேன். நோய் வந்த பிறகு நான் இப்படித்தான் செய்வேன். இல்லையென்றால் காதில் பெரிய இரைச்சலாக இருக்கும். அது மெல்ல மெல்ல மூளைக்கும் பரவி குத்து வலியில் கொண்டுபோய் விட்டுவிடும்.

“ம்… என்ன செய்கிறாய்… படுத்துவிட்டாயா?”

மாதவின் முழக்கமான குரல்.

“இல்லை… எழுந்து உட்கார்ந்திருக்கிறேன்.”

நான் உற்சாகமாகச் சிரித்தேன்.

“ம்! இந்த சாட்டர்டேதானே செக்கப்புக்குப் போக வேண்டும்! அன்று காலையில் வருகிறேன். வேறு விசேஷமொன்றும் இல்லையே… அப்புறம் அழைக்கிறேன், சரியா.”

மாதவ் இப்படித்தான் போனில் மிதமாகப் பேசுவார்.

“சரி, குட்நைட்”

நானும் முடித்தேன். சமீபகாலமாக எனக்கு வியப்பாக இருக்கிறது, எவ்வளவு சுலபமாக என்னால் எல்லோருடனும் பேச முடிகிறது!  அவனை நான் காதலிக்கத் தொடங்கிய பிறகுதான் இந்த மாற்றங்கள்.  எனக்கு இப்போது யாரின் இரக்கமும் வேண்டாம், அன்பு வேண்டாம், ஆறுதல் வேண்டாம்…

“ஏன் என்னைப் பற்றி ஏதும் சொல்லவில்லை?”

முரளீமோகன் குறும்புச் சிரிப்புடன் கேட்டான். நானும் அதைப் பற்றி அப்போதுதான் நினைத்தேன்.

“ஐயோ… மறந்துவிட்டேன்.”

என் பதிலைக் கேட்டு அவன் சிரிக்கவே, என் குருவி சற்றுத் துடித்ததுவோ? அந்த  மெல்லிய  துடிப்பைக்கூட அவன் உணர்ந்துகொண்டான் என்பது மீண்டும் எனக்கு வியப்பளித்தது. அவன் மெல்ல திரைச்சீலையை விலக்கினான். என் குருவியைத் தொந்தரவு செய்யாமல் அதைக் கொஞ்சினான். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. என்றைக்கும்விட அதிகம்.

நாங்கள் ஒன்றாக இரவு உணவு சாப்பிட்டோம்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு என்னுடன் சேர்ந்து சாப்பிட ஒருவர். அதுவும் உணவு மேசையில். இடையில் பங்காரம்மாவை அழைத்தாலும் அவர் வருவதில்லை. கீமோ ஆரம்பித்த பிறகு சில வாசனைகளை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. பங்காரம்மாவுக்கோ கட்டாயம் கொஞ்சம் மாமிசம் வேண்டும். ஆயினும், நான் அட்ஜஸ்ட் செய்துகொள்வேன் என்றாலும் அவர் வருவதில்லை. சாப்பாட்டுக்கு சாம்பாரும் வாழைக்காய் வறுவலும் கரிநெல்லிக்காயும்சமைத்திருந்தார். நான் சாப்பிடுவதே போதுமென்று அவன் உறுதியாகச் சொன்னதால் பங்காரம்மா சமைத்த ஸ்பெஷல் வீணானது. உணவு மேசையில்,

“இதை இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்கள்…”

“இது தரட்டுமா?”

“இது வேண்டுமா?”

என்றெல்லாம் கேட்டு விருந்து உபசரிப்பைப்போல அவன் எனக்கு ஆசை காட்டிக்கொண்டிருந்தான்.

சாப்பாட்டுக்குப் பிறகு அவன் மீண்டும் என் பக்கத்தில் வந்து அமர்ந்தான். அறையின் ஒரு மூலையில் நாளைய அவியலுக்கான காய்கறி நறுக்கியபடி பங்காரம்மாவும்… நாங்கள் மூவரும் நீண்ட நேரம் எதுவும் பேசவில்லை. ஆயினும் மூவருக்குமிடையில் அந்நியத் தன்மை விலகியிருந்தது; பங்காரம்மாவின் அச்சமும். இடையில் குருவியின் தட்டலும் முட்டலும் கேட்டு கடைசியில் குருவிக்கூட்டைப் பார்த்த பங்காரம்மா வியப்புடன் வாய் திறந்தார்.

“கண்ணே… இந்த நார்க்கூடு… பறவைக் காய்ச்சல்… இன்பெக்ஷன்…”

என்றெல்லாம் முணுமுணுத்தார்.

“அது பரவாயில்லை, பங்காரம்மா… இன்பெக்ஷன் போகட்டும்… சிலங்கயின் சந்தோஷம் அது.”

அவன் சொன்னபோது அவர் அதை அங்கீகரிக்க முடியாமல் விருப்பமற்று சிரித்தார். பிறகு, சாப்பிடுவதற்கான மருந்து மாத்திரைகளை எடுத்து வைத்துவிட்டு படுக்கச் சென்றார்.

இரவுகூட மிகவும் அழகாக ஊர்ந்து வருவதையும் எங்களை மூடுவதையும் நான் மகிழ்ச்சியுடன் பார்த்தேன். நாங்கள் சுவாரஸ்யமாக வாழ்க்கைக் கதைகளைப் பகிர்ந்துகொண்டோம்; தோல்விகளையும் வலிகளையும் குழந்தைகளைப்போலக் கொண்டாடினோம். மற்றவர்களின் போட்டோ ஆல்பம் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்போதுதான் வாழ்க்கையில் மிகவும் வெறுப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால், இங்கே என் அலமாரியிலிருந்து அவன் அதைக் கண்டெடுத்து ரசிப்பது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அந்த நேரத்தில்தான் கண்ணன் அழைத்தான். அவன் ஆல்பத்தை மீண்டும் அலமாரியில் வைத்துவிட்டு, என் விசாலமான மேசையை வரைவதற்கு ஆயத்தமாக்கும்போது,

“என்னைப் பற்றி பிள்ளைகளிடம் சொல்லுங்கள்” என்று நினைவுபடுத்தினான்.

“சிங்கீ…” கண்ணனின் பரிதாபமான குரல்.

அதைக் கேட்டவுடன் நான் கைப்பேசியை நெஞ்சோடு சேர்த்து வைத்துக்கொண்டேன். அவன் என்னோடு சேர்ந்து இருக்கிறான். என் நெஞ்சோடு சேர்ந்து… அவன் அழைப்பில் நிராதரவான ஒருவனின் ஏமாற்றம் இருந்தது.

“சிங்கீ… நாங்கள் உன்னைப் பார்க்க வேண்டும்… போதும் இந்த ரிசர்ச்… சலித்துவிட்டது…”

முதிர்ச்சியற்ற சிறு குழந்தையைப்போல அவன் தேம்பினான். கடலளவு, இல்லை, வானளவு துயரமுண்டு… பிள்ளைகள் அல்லவா. ஆனால்… இந்த வெறுமையை அவர்கள் கடந்துதான் ஆக வேண்டும். நான் உரக்கச் சிரித்தேன். அவன் திடுக்கிட்டிருக்க வேண்டும். கலக்கத்துடன் கேட்டான்.

“சிங்கீ… என்ன ஆயிற்று?”

“அடேய், பையா… காமன்சென்ஸ் என்று சொல்லும் விஷயம் உனக்குக் கொஞ்சம்கூட இல்லை. இருக்கும்வரை நல்ல தமாஷ் எல்லாம் சொல்லி என்னை மகிழ்ச்சிப்படுத்த வேண்டியவர்கள்தான் சென்டிமென்டாகப் பேசி கொல்லாமல் கொல்கிறார்கள். உனக்குத் தெரியுமா, இன்று இங்கே முக்கியமானதொரு சம்பவம் நடந்தது. ஒரு விஐபி இங்கே வந்து சேர்ந்திருக்கிறார்.”

நடந்த விஷயங்களை நான் விளக்கமாகச் சொல்லவே அவனது துயரம் மெல்ல மெல்ல சிரிப்பாக மாறியது. கடைசியில் கேட்டான்:

“இது உன் இல்யூஷனா, அல்லது இன்ட்யூஷனா?”

“என்ன சொல்வது இந்த அம்மாவைப் பற்றி. நாளைக்கு கூப்பிடு தம்பி, என்ன, குட்நைட், ஸ்வீட் ட்ரீம்ஸ்”

அவன் சிரிப்புடன் பேச்சை முடிக்கும்போது நான் மனதில் சொல்லிக்கொண்டேன்.

“அவன் நம்பவில்லை… அப்போதும் நான் சொல்வதை அப்படியே அவன் நம்ப மாட்டான். ஏனென்றால் எதையும் இருப்பதைவிட மூன்று மடங்கு கற்பனை சேர்த்துதான் நான் சொல்வேனாம்.”

மொழிபெயர்ப்பாளர் யூமாவாசுகி

நான் அவனைப் பார்த்தேன். அவன் வரைந்துகொண்டிருந்தான். இரவு, ஒரு வானம்பாடியின் பாடலில் மூழ்கி நிலவுப் பெருக்குடன் எங்களைச் சுற்றி நிறைந்தது. அவனது விரல்கள், கூர்மையான நீள் விரல்கள் என்னையும்… பச்சை விரிப்பிட்ட கட்டிலையும் என் குருவியையும் கனவுகளையும் கரைத்துக்கொண்டிருக்கும்போது, தொலைதூரத்தில் எங்கிருந்தோ என்னை நோக்கி அந்த மஞ்சள் குதிரையின் குளம்படி ஓசைகள் எழுவதை நான் கேட்டேன். அப்போது, வரைந்து முடித்த ஓவியத்துடன் அவன் என் அருகில்… பச்சை விரிப்பிட்ட படுக்கையிலிருந்து… மின்னி  ஒளிரும் கண்களுடன் என்னை உற்றுப் பார்த்தான்… அவனுக்கு அப்போது நிறையக் கண்கள். ஆயிரமாயிரம் கண்கள்… இந்தக் கண்கள், இந்தக் கண்கள்? நான் கண்டுகொண்டேன், என் அன்பனின் கண்கள்! அவன், கூர்மையான நீள் விரல்களால் என் கன்னங்களை வருடினான்… கனிவுடன் நெற்றியில் முத்தமிட்டான். கடைசியில் காதலுடன் என்னை அள்ளியெடுத்து, கனைத்தபடி வந்து நின்ற மஞ்சள் குதிரை மீது தன்னுடன் சேர்த்து அமரவைத்தான். அப்போது அவனது வெப்பமான சுவாசங்கள் என்னிடம் கேட்டன.

“உனக்கு இப்போது பயமாக இருக்கிறதா?”

“எதற்கு?”

நான் அவன் நெஞ்சில் மேலும் மேலும் ஒட்டிக்கொண்டேன்… என்னை அவன் தன்னோடு சேர்த்தணைக்க, மயக்க மருந்துகளின், வலி நிவாரணிகளின் கடும் நெடியிலிருந்து… பச்சை விரிப்பு போர்த்திய அந்தக் கட்டிலிலிருந்து… எங்களைச் சுமந்துகொண்டு அந்த மஞ்சள் குதிரை பாய்ந்து செல்கிறது… அந்தக் குளம்படியோசைகளில் என் கனவுகளில் அத்திகள் தளிர்த்தன; கற்பனைகளில் மேப்பிள் தோட்டங்கள் பூத்தன.

***

(குறிப்பு: வடக்குநாதன்: கேரளத்தில் திருச்சூரில் உள்ள வடக்குநாதன் (சிவன்) கோயில்.)

(‘தேசாபிமானி’ வார இதழ், நவம்பர் 16, 2014-ல் வெளியானது)

தமிழில் யூமா வாசுகி

*

யூமா வாசுகி: தமிழ்விக்கி

2 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *