மலர் உதிரும் ஒலி – சக்திவேல்
(சந்திரா தங்கராஜின் ”சோளம்” சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து)
கொன்னூர் துஞ்சினும் யாம்துஞ் சலமே
எம்இல் அயல எழில்உம்பர்
மயிலடி இலைய மாக்குரல் நொச்சி
அணிமிகு மென்கொம்பு ஊழ்த்த
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே
– கொல்லன் அழிசி (குறுந்தொகை 138)
இந்தப் பெரிய ஊர் தூங்கிய பிறகும்
நாங்கள் தூங்கவில்லை
எங்கள் வீட்டின் அருகே
ஏழிலைப் பாலை மரத்துக்கு அப்பாலுள்ள
மயிற்பாதம் போன்ற இலைகளும்
பெரிய பூங்கொத்துகளும் கொண்ட
நொச்சி மரத்தின்
அழகிய கொம்பில் இருந்து உதிர்ந்த
நீலமணி போன்ற மலர்களின்
ஒலியைக் கேட்டபடி
இரவெல்லாம் படுத்திருந்திருந்தோம்
-ஜெயமோகன் நவீன புதுக்கவிதை வடிவத்தில்
அவன் வரும் தடத்தை அறிய ஒலியைச் சார்ந்திருக்கத் தொடங்கினேன். அவன் கால்கள் விலங்கிடப்பட்டிருப்பதை அறியாமல். மனோரஞ்சிதம் மலர்களை உதிர்க்கும் அழகிய வாயில் கொண்ட என் வீட்டில், அவன் வெகுநேரமாய் சங்கிலியால் பிணைக்கப்பட்டபடி அமர்ந்திருந்தான். ஆனால் என் புலன்களால் பூக்கள் உதிரும் சத்தத்தைத் தவிர எதையும் உணர முடியவில்லை.
-காட்டின் பெருங்கனவு கதையிலிருந்து
வீட்டின் முன் முற்றத்தில் இருக்கும் மனோரஞ்சித மரத்தின் மலர் மணம் வீச, அந்தி வானத்தின் நிற வினோதங்களை காண்பது எனக்கு ஒரு வழக்கம். மனோரஞ்சித மலர்களுக்கு சில தனித்தன்மைகள் உண்டு. ஒன்று, அவை பிற மலர்கள் போல அடர்த்தியான வேறுபட்ட நிறங்களுக்கு மாறிய பின் நறுமணத்தை வாரியிறைப்பதில்லை. இளம்பச்சை நிறமாக இருக்கும் பூவே மிகுந்த மணம் கொள்வது. அந்த மணமும் நம் மன உணர்வுகளுக்கேற்ப தன்னை வேறு ஒரு பொருளின் மணமாக தன்னை உருமாற்றி கொள்வது. பூத்து கனிந்த மாம்பழ நிறத்தில் மனோரஞ்சித மலர்கள் மெல்லிய வாசம் மட்டுமே கொண்டவை.
இத்தகு பெருவாசம் வீசும் மனோரஞ்சிதத்தின் மணம் காட்டின் பெருங்கனவு நாயகிக்கு எட்டுவதில்லை. அவள் புலன்கள் உணர்வது அம்மலர் உதிரும் ஒலியை. காதலன் உன்னியை எண்ணிய முடிவற்ற காத்திருப்பின் ஓசையை. இந்த புள்ளியில் இருந்து சந்திராவின் கதைகளை தொகுக்கலாம் என்று நினைக்கிறேன். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உருவாகும் காதல் உறவின் மலர்வும் வாடுதலும் உதிர்வும், ஈற்றில் மணமாக மட்டுமே எஞ்சும் நினைவுகளுமே இவரது சிறுகதை உலகின் மைய இழையாக உள்ளது. அதன் நீட்சியாக குடும்ப அமைப்பில் பெற்றோர்க்கும் பிள்ளைகளுக்கும் இருக்கும் நெருக்கம் மெல்ல மங்கி மறைந்து போவதன் விசாரணையாக பூனைகள் இல்லாத வீடு அமைந்துள்ளது.
சோளம் என்ற இச்சிறுகதை தொகுப்பு கடந்த இருபதாண்டுகளில் சந்திரா எழுதியுள்ள இருபத்தொன்பது கதைகளின் முழு தொகுப்பாக அமைந்துள்ளது. மேலே சொல்லப்பட்டப்படி காதல் உறவின் உருவாக்கமும் நீடிப்பும் பிரிவும் விலகலு்ம் என அமைந்த அடிப்படை வினாவில் மிக சரியாக உச்சம் தொட்ட கதை என்று அறைக்குள் புகுந்த தனிமையை குறிப்பிடலாம். கதை நாயகி தனிமையின் வெம்மையில் இருப்பவள் என்பது வெறுமையில் உப்பை போல் என்ற வரியில் உணர்த்தப்படுகிறது. தன்னை தனித்துணரும் அவள் அசுவாரஸ்மான ஒருநாளை தோழியுடன் கழிக்கும்படி புறப்படுகிறாள். எங்கே போகிறாய் என்று கேட்கும் வரை எந்த திட்டமும் இல்லாமல் இருந்தவள், கடற்கரைக்கு என்று சொல்லி செல்கிறார்கள். அங்கே சென்று இருவரும் புகைப்படம் எடுத்து கொள்கிறார்கள். உத்வேகமும் இல்லாத மேலுமொரு நாளை அழகிய போஸ்களில் நின்று உற்சாகமூட்டி கொள்ள நினைக்கிறார்கள். எனினும் விரைவிலேயே அது இயல்பு நிலைக்கு திரும்பி சகஜ பாவம் வந்து விடுகிறது. தோழி சென்ற பிறகும் சிறிது நேரம் கடற்கரையில் இருப்பவள், தன்னை விட வயது குறைந்த ஆண் ஒருவன் அவளை பார்ப்பதை கவனிக்கிறாள். இவள் கிளம்பும் போது அவனும் பின்தொடர்கிறான் அந்த தற்செயல் நாம் காணும் ஆண் – பெண் உறவின் தொடக்கமனைத்தும் ஒரு தற்செயலே என்பதை நினைவூட்டி செல்கிறது. அந்த புள்ளியில் இருந்து இக்கதை எழுந்து பறக்கிறது.
அவளுள் சாகசத்திற்கான வேட்கை தொற்றி கொள்கிறது. ஒருவரையொருவர் வெல்ல துடிக்கும் ஆண் – பெண் உறவின் நடன நிலைகள் அரங்கேறுங்கின்றன. ஒரே நாளில் நடந்து முடிந்து விடும் இக்கதையை சிறந்த வாசிப்பனுபவம் உடையதாக்குவது உரையாடல்களில் வெளிப்படும் துல்லியமான மன போக்குகளே. அந்த காட்சிப்படுத்தல் ஒரு சாளரம் போல் நின்று வாழ்நாள் முழுக்க நீடிக்கும் திருமண உறவுகளை பிரதிபலித்து காட்டுகிறது. பெண் கண்டடைய முடியாத மெல்லுணர்வுகளின் மறைவிடங்களில் தன்னை மறைத்து கொள்கிறாள். ஆண் வென்றாக வேண்டும் என்று வெறி கொண்டு எழுகிறான். அது அடைதலின் வெறி. நயந்தும் மிரட்டியும் பணிந்தும் தோற்றும் வெளியேறுவது அதன் முகங்கள்.
தன்னிலும் இளையவனின் பின்தொடர்தல் அவளுக்கு தன் இளமையை வெல்வதற்கான உத்வேகத்தை கூட்டுகிறது. நீங்க கவிதா ப்ரெண்ட் தானே என கேட்பதற்கு பின்னுள்ளது நான் உன்னை நன்றாகவே அறிவேன் என்ற ஆணின் வெற்றி பிரகடனத்திற்கான முற்கோள் அல்லாமல் வேறென்ன. அதனை மறுத்து தன்னை அறிய முடியாதவளாக ஆக்கி கொள்கிறாள். இன்னும் ஒருபடி சென்று தன்னை எம்.ஏ. ஹிஸ்டரி படிப்பவள் என்று சொல்வதன் மூலம் நீ நினைப்பதை விட மேலானவள் தான் என்கிறாள். அதெல்லாம் உப்புசப்பில்லாத படிப்பு என அவளை மட்டம் தட்டுவதனூடாக வெல்ல துடிக்கிறான். தொடரும் உரையாடலில் அவனது ரசனை தகுதிகளின் தரமின்மையை ஊகித்தவுடன் சட்டென்று தன் அடையாளத்தை பாலியல் தொழிலாளி என மாற்றி கொள்கிறாள்.
இதுவரை காதலன் போல் நயந்தவன், அவளை இப்போது வெறும் உடலாக எண்ணி ஆதிக்கம் செலுத்துகிறான். அந்த அவமதிப்பை அறிந்த கணம், தன் வீட்டறையில் வைத்து பூட்டி வெற்றி கொள்கிறாள். அவனோ தன் பாவனைகளை இழந்து திறனற்றவனாக புலம்பி அழுது கெஞ்சுகிறான். பின்னர் திறந்து விடுகையில் பயந்து விலகி ஓடுகிறான். அவள் தன் தனிமையில் அமர்ந்து வெறுமையை சுவைக்கிறாள். இருவரும் ஒருவருக்கொருவர் கொள்ளும் முற்றிலும் பாவனையான அடையாளங்களின் ஆடலே அறைக்குள் புகுந்த தனிமையை வெற்றிகரமான கதையாக்குகிறது. பெரும்புணலின் இரு கரைகளில் எதிரெதிராக நின்று சைகை செய்யும் இணைகளே ஆணும் பெண்ணும் என தோன்றுகிறது. அவ்வுரையாடலின் தற்செயல் தன்மை மிக இயல்பாக வெளிப்பட்டு ஒளிர்ந்துள்ளது.
அறைக்குள் புகுந்த தனிமை கதையின் நாயகி முதல்புள்ளியில் கொள்ளும் விருப்பமான தன்னை புரிந்து கொண்ட ஆண் கிடைத்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என்ற நிகழ்தகவின் அடிப்படையில் அமைந்த கதைகளாக காட்டின் பெருங்கனவு, அழகேசனின் பாடல், மஞ்சனாத்தி மலை ஆகிய கதைகளை காணலாம். அப்படிப்பட்ட ஆண்களை பெண்களோ அல்லது பெண்களை ஆண்களோ சந்திப்பது எப்போதும் அரிதினும் அரிதே. சந்திராவின் மாந்தர்கள் யாருக்கும் அந்த அரியவை சித்திப்பதில்லை. எனவே தவிர்க்க முடியாத வாழ்க்கை சூழலில் சிக்கி இணையாமல் போகிறார்கள். மீஞ்சியுள்ளது கைநழுவி சென்ற ஆணின் உறவு பெண்ணின் அகத்தில் படிந்துள்ள விதம் என்ன என்ற வினா. அவ்வினாவை நோக்கிய கதைகளாக காட்டின் பெருங்கனவு, அழகேசனின் பாடல், மஞ்சனாத்தி மலை ஆகிய கதைகளை வகைப்படுத்தலாம்.
இந்த கதைகள் சொல்லப்படுவதன் மொழியை கவனித்து கொள்ளுதல் சிறந்த புரிதலை கொடுக்கும் என நினைக்கிறேன். சம்பவங்களை அடுக்கடுக்காக நாட்டார் கதைச்சொல்லியை போல சொல்வதன் மூலம் சந்திரா உருவாக்க நினைப்பது மிக இயல்பாக எந்த கணத்தில் மலர்ந்தது என அறிய முடியாத உறவின் மர்மத்தையே என எனக்கு தோன்றுகிறது. அவற்றில் காட்டின் பெருங்கனவு கதையே எனக்கு முதன்மையாக நிற்கிறது. அக்கதையில் காணாமல் போன தோடை கண்டெடுத்த அந்த கணத்தில் இருந்து உன்னிக்கும் அவளுக்குமான உறவை விரித்து கொள்ளலாம். தோடு வெறும் தோடு மட்டுமல்ல, அவளது அகமும் கூட. அதற்கும் முன்னமே அவனை பார்த்தவுடன் உள்ளே ஓடி வருகிறாள். அறியாத ஆடவன் என்பதனால் மட்டுமல்ல, தன்னை கன்னியாக உணர்வதன் வெட்கமும் கூட அது.
உன்னியை புறநகர் ரயில்நிலையத்தில் இருந்து நினைவுகூர்வது இக்கதைக்கு வேறொரு தளத்தையும் அளிக்கிறது. உன்னியுடன் கைக்கோர்த்து மலை காட்டில் கழித்த நாளின் இனிமையை தொடக்கத்துடன் இணைத்து கொண்டால் நகரத்தின் அழுத்தத்திலிருந்து விடுபட்டு கன்னிப்பருவத்தின் கள்ளமின்மையை, என்றுமுள்ள மலைகளின் தூய்மையை, அதன் அரவணைப்பை நாடும் அவளது ஏக்கமாக கொள்ளலாம். அதன் பருவடிவமாகவே உன்னி அவளில் நிலைக் கொள்கிறான்.
அழகேசனின் பாடலையும் இதே போன்றதொரு அமைவிலேயே காணலாம். அக்கதையில் அழகேசன் அவளை கட்டிப்பிடிக்கும் தருணம் முக்கியமானது. ஆட்கொள்ளப்படுதல் அல்ல, ஆட்படுதலையே பெண்ணுள்ளம் வேண்டுகிறது. காதல் மலர்ந்து வீட்டரால் தடுக்கப்பட்டு வேறொரு ஆணுக்கு திருமணம் செய்து கொடுக்கப்படும் சம்பவங்கள் நேர்த்தியாக சொல்லப்பட்ட கதையாக நிற்கிறது. பிரிவின் வலியை சொல்லி சமதளத்தில் அமைந்து விடுகிறது.
மஞ்சனாத்தி மலையில் வருபவள் சிறுமி, முன்னிரண்டு கதைகளில் வரும் கன்னிகள் எனில் இங்கே விதை வடிவமாக சிறுமியில் அதே ஈர்ப்பு எப்படி நிகழ்கிறது என்பது காட்டப்படுகிறது. கதைச்சொல்லல் என்ற பாணியின் ஓரே பலவீனம் ஆசிரியன் சொல்லும் போதே சொல்லப்படாதவையும் தன்னொழுக்கில் உருவாகி வந்து தொடர்புறுத்தலை நிகழ்த்த வேண்டும். சந்திராவின் கதைகளில் சில இடங்களில் அந்த இழை விளங்கி கொள்ள முடியாத அளவுக்கு சன்னமாகவும் அல்லது இல்லாமல் இருப்பது ஒரு குறையாக அமைகிறது. மஞ்சனாத்தி மலையில் ஜேம்ஸ் உடனான சண்டை முடிவுக்கு வருவது அவளது வளர்ப்பு நாய் ஜிம்மிக்கு வைத்தியம் செய்ய ஜேம்ஸ் உதவிய நிகழ்வில் இருந்து. இவர்கள் நட்பில் இருக்கையில் இருவரின் வளர்ப்பு நாய்களும் பகை பாராட்டியும் இவர்கள் பிரிந்த பிறகு அவைகள் நட்பாகவும் இருப்பது இணைந்திருக்கையில் பிரிவதற்கான சந்தர்ப்பத்தை நோக்கியும் பிரிந்திருக்கையில் இணைந்திருக்க எண்ணும் ஏக்கத்தையும் வெளிப்படுத்துவதாக கொள்ளலாம். ஏனெனில் நம் நாயில் வெளிப்படுவது நம் ஆழமும் கூட.
மீண்டும் அறைக்குள் புகுந்த தனிமையின் அதே ஆண் பின்பகுதியில் பெண்ணை உடல் மட்டுமாக, ஆளுமையற்றவளாக நடத்தினால் என்ற சாத்தியத்தில் முளைத்து வரும் கேள்வி, பெண் அதனை எப்படி ஏற்று கொள்கிறாள் என்பது. அதை நோக்கி போகும் மூன்று கதைகளாக துயரமெனும் சிறுபுள்ளி, நதியில் மிதக்கும் கானல், நிகிலா ஆகியவற்றை அணுகலாம்.
இவற்றில் முதன்மையானது துயமென்னும் சிறுபுள்ளி என்ற கதையே, அடுத்ததாக நதியில் மிதக்கும் கானல் கதையினை சொல்லலாம். ஒன்று சிக்கல் எத்தனை அற்பமும் சிறியதும் என்று காட்டுவது மட்டுமல்ல, அந்த உளநிலையை மிக தெளிவாக படம் பிடிக்கிறது. அது அத்தகைய முறிந்துபோன அத்தனை ஆண் – பெண் உறவுகளின் பிரிவு துக்கத்தையும் பிரதிபலிப்பதாக விளங்குகிறது. துயரமென்னும் சிறுபுள்ளி. தன்னை கைவிட்ட காதலனை எண்ணி தற்கொலை வரை சென்று நிற்கும் தன் எண்ண ஓட்டத்தை கூறுகிறாள். மனநல ஆலோசனை தரும் நவீனின் பார்வையில் இருந்தே கதை பிற்பகுதி நகர்கிறது. நீங்கள் சொன்ன எல்லாவற்றையும் பொருட்படுத்தி கேட்டதாலேயே அவரை உங்கள் அத்தனை விருப்பங்களோடும் இணைத்து கொண்டீர்கள், அதற்கப்பால் ஆழத்தில் உள்ளது உங்கள் சுயம் என்ற புரிதலை அளித்தவுடன் அவள் மீள்கிறாள். மறுநாள் இரவு வெகுநாட்களுக்கு பின்னாக தான் மழையை இனிமையாக ரசிக்கிறேன் என்று அவள் குறுஞ்செய்தி அனுப்பும் வரைக்கும் கார்த்தியை பற்றியே நினைவே நவீனுக்கு இல்லை. அது நாம் பெரிதென்று நினைக்கும் பிரிவின் துயர் உலகை பொறுத்தவரை எத்தனை சிறுபுள்ளி என காட்டி விடுகிறது.
நதியில் மிதக்கும் கானல் தலைப்பே சொல்வது போல கானலை எண்ணி தாகத்தில் தவிக்கும் ஒருத்தியின் கதையே தான். ரயில் நிலையத்தில் நடந்த பிரிவை எண்ணி வருந்தி, ரயிலில் தற்கொலைக்கு முயன்று காப்பற்றப்பட்டு இரவெல்லாம் உறங்காது விழித்து விழிநீர் சிந்தி ஊர் திரும்புகிறாள்.. மறுநாள் எழுந்தவுடன் உள்ளம் அமைந்து தெளிகிறது. காலையில் டீ குடித்து விட்டு பேருந்து ஏறி, அங்கே இளையராஜாவின் காதல் பாடல்கள் ஒலிக்கும் வரை சாவதானமாக மலைகளின் அழகில் நிரம்பி இருக்கிறாள். காதல் பாடல்கள் பிரிவினை எண்ணி பாலையில் இருப்பதாக தகிக்க செய்கிறது. எளிதாக புறந்தள்ளக்கூடிய ஒரு துயரத்தை ஊதி பெருக்கி கொள்ளும் நிலை, மன நிலை காட்டப்படுகிறது.
நிகிலாவின் கதை கைவிட்டு சென்ற கணவனை தேடி சென்னை மாநகரத்திற்கு வந்து துயரில் வாடும் ஒரு பெண்ணின் கதை. இக்கதையில் நிகிலாவில் செல்வம் ஏற்படுத்திய கனவுகளும் அதனூடான தந்திரங்களும் அவளது நினைவில் வெள்ளந்தியாக வருகின்றன.. இறுதியாக அவன் வருவான் என்பதற்கு அடையாளமாக நின்ற கொன்றை மரம் பள்ளிக்கூடத்தில் அகற்றப்படுவது வாசகனுக்கு ஒரு கதையை படித்த ஆயாசத்திற்கு மேல் எதுவும் தரவில்லை. தனித்திருக்கும் பெண்ணை சமூகம் நடத்தும் முறை கதை போக்கின் இயல்பில் ஒரு சமூக விமர்சனமாக திரண்டு வருகிறது.. ஆனால் கதையின் மையம் சரியாக தரிக்கவில்லை என்றே தோன்றுகிறது.
அறைக்குள் புகுந்த தனிமையில் வெளிப்படும் உணர்வு நிலைகளின் பாவனைகளில் காதல் என்ற ஒன்றை மட்டும் எடுத்து (டீக்கடைக்காரன் எங்களை காதலர்கள் என்று நினைத்திருப்பான் – அறைக்குள் புகுந்த தனிமை கதையில் நாயகியின் கூற்று.) கொண்டு அதனை உண்மையாக நினைத்து ஈடுபடும் இருவரின் காதலில் ஒருவரை நினைத்து மற்றொருவர் கொள்ளும் மன பிம்பங்களை நன்றாக சொன்ன கதை என்று கழிவறை காதல் பிரதியை சொல்ல வேண்டும். இக்கதை குறித்து சொல்ல வேண்டுமென்றால் வீரான்குட்டியின் இக்கவிதை வரிகள் பொருத்தமானவை.
காணும் முன்பு
எத்தனை பெரியவராய் இருந்தோம்
பரஸ்பரம் நாம்!
கண்டுகழித்ததும் சிறிதானோம்.
சித்ரா பேருந்து நிலையத்தில் பொது கழிப்பறைக்கு சில்லறையாக கட்டணம் வசூலிக்கும் வேலை செய்பவள். குமார் திரையரங்கில் கட்டண சீட்டு விநியோகிப்பவன். இருவரும் பேருந்து பயணத்தில் கண்களால் பார்த்து கைதீண்டி காதல் கொள்கிறார்கள். ஒருவர் வேலை இன்னொருவருக்கு தெரிந்தால் காதல் முறிந்துவிடுமோ என அஞ்சி கொண்டிருக்கிறார்கள். சித்ரா குமாரை கம்யூட்டர் வேலை செய்பவன் என்று கற்பனை பண்ணிக் கொள்கிறாள். குமார் சித்ராவை டீச்சர் வேலை செய்பவள் என்று நினைத்து கொள்கிறான். குமார் கணக்கு பார்க்கும் குமஸ்தாவாகவோ அல்லது மேனேஜராக ஆகிவிட்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறான். சித்ரா சம்பளத்தை குறைத்து கொண்டு பழைய ஜெராக்ஸ் கடைக்கே போய்விடலாம் என நினைக்கிறாள். இருவரும் தங்கள் நிலையை மாற்றி கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.
கழிப்பறைக்கு வருபவன் போகின்றவன் எல்லாம் கட்டணச் சில்லறையை கொடுக்கும் சாக்கில் கையை ஆபாசமாக வருடி செல்வதை எண்ணி சித்ரா அருவருப்பு கொள்கிறாள் குமாரும் ஒருநாள் அங்கே வந்துவிடுகிறான். கழிப்பறையில் அவன் கனவுகளும் கழிந்து எரிந்து சாம்பல் பூத்து நிற்கிறான். அவன் கையை வருடாமல் சில்லறையை கொடுக்கிறான். அவளுக்கு அது காதல் பிரதியாக மாறி விடுகிறது. என்றாவது ஒருநாள் அவள் உணரக்கூடும் அதன் எரிசாம்பலை. பின்னர் சந்தித்து கொள்ளவில்லை என கதை முடிகிறது.
இக்கதையை பொறுத்தவரை நாம் நேசிப்பவர்களை சந்திக்காத வரை அது எத்தனை மகத்துவமாக மிளிர்கிறது. நாம் நம்மை எத்தனை சிறியவர்களாக உணர்கிறோம் என்பதை வெளிப்படுத்துவதுடன் பிற உறவு நிலைகளுக்கும் விரிவடைந்து பொருந்தி போகிறது.
இதற்கு மறுபக்கமாக காதலில் வெல்ல முடியாத ஆணின் கதையாக பீத்தோவனும் கலைந்த காதலும், தன்னை நம்பி காதலித்த லாவண்யாவை கைவிட்ட கதையாக தொலைவதின் புனிதமும் அமைகின்றன. இவற்றில் பீத்தோவனும் கலைந்த காதலும் தன் தகுதிக்கு மீறிய பெண்ணை காதலிக்க முயல்வதில் ஆண் செய்யும் பாவனைகளை காட்டுகிறது. ஆனால் முடிவில் மேலோமொரு கதை என்ற உணர்வை தவிர வேறொன்றுமில்லை. சிறுகதைக்குரிய ஒருமையை அடைந்திருந்தாலும் ஆனந்த் பீத்தோவனின் இசையை உணரும் அந்த முடிவு வெறுமனே நிற்கிறது.
தொலைவதின் புனிதம் ஒரு வேலையில் ஈடுபட்டு அதன் மூலம் தன் ஆளுமை முழுமையாக மாறி வேறொருவனாக ஆகி தன்னை தொலைத்துவிட ஏங்குபவனின் கதையாக இருந்தாலும் ஒன்றுக்கொன்று ஒத்திசைவு பெறாத இரு களங்களின் கலவையாக நின்றுவிடுகிறது. ஒன்று சினிமாவில் வேலை தேடும் போது இவனுக்கு ஏற்பட்ட மாற்றங்கள் சொல்லப்படுகிறது. அப்போது தான் இலக்கியம் படிக்க கற்று புத்துயிர்ப்பு படிக்கிறான். அது அவனை ஏனென்று தெரியாமல் குற்ற உணர்ச்சி கொள்ள வைக்கிறது.
இரண்டு வெகுநாட்களுக்கு பின் தான் காதலை மறுத்த லாவண்யாவை நவநாகரீக பெண்ணாக பார்த்து அதிர்ச்சியடைகிறான். அங்கிருந்து லாவண்யாவுக்கும் அவனுக்குமான உறவின் கதை நினைவோடையாக சொல்லப்பட்டு அவள் தன் சொந்த ஊருக்கே செல்வதுவரை நிற்கிறது. பின்னர் அவளது நிலை என்ன என்ற குற்றவுணர்வில் தவிக்கிறான். அந்த குற்றவுணர்ச்சி நமக்கு புத்துயிர்ப்பு நாவலை நினைவூட்டுகிறது. ஆனால் சினிமாவில் வாய்ப்பு தேடல், கல்லூரி கால வாழ்க்கை இரண்டும் ஒன்றாக இணையாமல் சிதறிய வடிவில் உள்ளது. எனவே எட்டவேண்டிய உயரத்தை அடையாமல் தோல்வி அடைகிறது.
அறைக்குள் புகுந்த தனிமை கதையின் பெண்ணை போல தன்னை தனித்துணர்பவளே மருதாணியும். இவ்விரு கதைகளிலும் பெண்களே வெல்கிறார்கள். முன்னவள் நகரத்தில் வாழ்கையில் பின்னவள் கிராமத்தில் இருப்பவள். நகரமும் பொருளியல் தன்னிறைவும் முன்னவளுக்கு வன்முறையில் இருந்து தற்காத்து கொள்ள வழியமைக்கிறது. பின்னவளுக்கு அவை இல்லாததால் உடல்சார் வன்முறை நிகழ்கிறது. ஆனால் அந்த வன்முறை அவளை எதுவும் செய்வதில்லை. சொல்லப்போனால் அது மருதாணியின் தன்னம்பிக்கையை கூட்டி அவளை நிறைவடைய செய்கிறது. மருதாணி கதையில் சமூக சட்டகத்தை மீறும் அவளது வேட்கை நயமாக வெளிப்படும் அளவுக்கே, பெண்ணின் உணர்வுகளை கண்டுகொள்ளாத சமூக தன்மையும் தன்னை சுடாத வரைக்கும் பாலியல் மீறல்களை பெரிதாக எடுத்து கொள்ளாத சுற்றங்களின் தன்மையும் இயல்பாக வெளிப்படுகிறது. அங்கே தனியர்களான ஆண்களுக்கு தான் அம்மீறல் தொந்தரவாக இருக்கிறது. பெண்களுக்கு அது கிளர்ச்சியூட்டும் ரகசிய கனவாக இருக்கிறது.
இப்பெண்களுக்கு மாறாக தனிமையில் தன்னை யாருமில்லாதவர்களாக எண்ணும் பெண்களின் கதையாக பன்னீர் மரத்தெருவும் வெளிச்சக் கொடியும் இடம் பெறுகின்றன. வெளிச்சக் கொடி முக்கியத்துவம் வாய்ந்த கதையாக அமைகிறது. தன் தந்தைக்கு பிடித்தமான ஊரை தேடி சென்று அடைபவள். அவர்களின் தொல்கிணற்றின் ஊடாக அத்தனை மூதாதைகளின் கனவு வெளிச்சத்தையும் பெற்று கொள்கிறாள். பன்னீர மரத்தெரு அகிலா கதைச்சொல்லியாக பாவித்து குழந்தைகளின் உலகில் ஐக்கியமாக முயல்கிறாள். டீவி என்னும் நவீன பூதம் அதனை தடுக்கையில் தன்னிரக்கத்தில் மூழ்கி பைத்தியமாகும் சித்திரம் சொல்லப்பட்டு எஞ்சுகிறது.
இரக்கமற்ற ஆண்களால் தூக்கி எறியப்பட்டு அதிலிருந்து தங்களை மீட்டுக்கொள்ள முயலும் பெண்களான துயரமென்னும் சிறுபுள்ளியின் கார்த்தி, நதியில் மிதக்கும் கானல், நிகிலா ஆகியோர் ஒருபுறம் என்றால் அப்படிப்பட்ட ஆண்களுடனான மணவுறவு பெண்ணுக்கு எப்படி அமைந்திருக்கிறது என்பதை அழகம்மாவும் ரத்தத்தில் மிதக்கும் படுக்கையறையும் பேசுகின்றன. அழகம்மா முழுமையான நாட்டார் கதையாகவே அமைந்துள்ளது. மானுட உறவின் சிக்கலை, அதன் மையத்தி்ல் புதிரை பேசும் நாட்டார் கதைகளில் குறிப்பிட்ட புதிரான பகுதி தடயங்களே இல்லாது ஒரு தாவலில் கடக்கப்பட்டிருப்பதை காணலாம். அங்கே என்ன நடந்தது என்பதை வாசகன் தானே தன் வாழ்க்கை அனுபவத்திலிருந்து சென்றடைய வேண்டியது தான். அழகம்மா கதையும் அவ்வாறே அமைந்துள்ளது. நவீன சிறுகதைக்கு என்பதை விட நாட்டார் கதையாக இருக்கிறது. அக்கதை என்னில் எழுப்பும் கேள்வி, எதற்காக ஒரு பெண் அத்தனை கொடுமைகளையும் தாங்கி கொள்ள வேண்டும் ? அவ்வளவு நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் ? என்பதே. கதையோ ஆம் என்கிறது. வாழ்க்கையில் நாம் அத்தகைய பெண்களை காணவும் செய்கிறோம். தனக்கு துன்பத்தை கொடுக்கும் கணவனையே எந்த காரணமும் இல்லாமல் பெரும் பற்றுடன் பிடித்து கொள்பவர்கள். வதையை இன்பமாக கருதுவார்கள் போலும். மனதின் இந்த விசித்திரத்தை சரியாக தொடுகிறது அழகம்மா.
ரத்தத்தின் படுக்கையறை கதையை அழகம்மாவின் நவீன பெண் வாழ்க்கை என்றே சொல்லலாம். எனினும் இது ஆவணப்படுத்தல் போல அமைந்து விடுகிறது.
தனிமையை உணரும் பன்னீர மரத்தெரு அகிலாவை போலவே இருக்கும் ஆண்களின் உலகத்தை குறித்து வெகு நாட்களுக்கு பின்னான மழை, வன்மம், பூச்சி, அத்துவானக்காட்டு எருமைகளும் அசிஸ்டென்ட டைரக்டரும், சூது நகரம், கள்வன் ஆகிய கதைகள் பேசுகின்றன. இந்நான்கும் கதைகளும் நேர்த்தியாக சொல்லப்பட்டுள்ளன. ஆனால் ஒன்று, கலையாவதற்கு வெறும் நம்பகமான மானுட செயல்களை மட்டும் கூறுவது போதுமானதாக அமைவதில்லை. அதற்கு மேல் ஆசிரியனின் தனித்துவமான அவதானிப்புகள் வந்தமைய வேண்டி இருக்கிறது. சந்திரா பயன்படுத்தும் கதைக்கூறல் சில கதைகளின் கருவை திறம்பட கடத்தாமலும் இருக்கிறது. அதற்கு உதாரணமாக வன்மம் கதையை சொல்லலாம். சிறுவயதில் உள்ளத்தில் ஏற்படும் வன்மம் பல ஆண்டுகளுக்கு பிறகு வெளிப்பட்டு நிற்கும் முறையை தொட முயலும் கதை, படர்க்கையில் கதைச்சொல்லலாக இடம்பெறுவது ஊர் கதை கேட்கும் உணர்வை மட்டுமே அளிக்கிறது.
பிற கதைகள் சரளமான வாசிப்பை தந்தாலும் யாரோ ஒருவரின் மேலுமொரு கதை என்பதற்கப்பால் வாழ்க்கையின் புதிர்களையோ விசித்திரங்களையோ நோக்கி நகரவில்லை என்பது என் வாசிப்பு. எனினும் உயிர்ப்பான பதிவுகள் என்ற வகையில் கவனிக்கலாம்.
சந்திராவின் கதைக்களன்கள் இருவகைப்பட்டவை.. ஒன்று, நகரத்தில் தனியர்களான இருப்பவர்களின் உலகத்திலிருந்து தொடங்குவது.. மற்றொன்று மலைப்பகுதியில் தன் இளமையின் இனிமையின் கன்னியின் கள்ளமின்மையை தேடி செல்லும் மாந்தர்கள். இதற்கு நடுவில் அவர் பணியாற்றும் திரைப்பட சூழலில் இருந்து வந்த கட் சொன்ன பிறகும் கேமரா ஓடிக் கொண்டிருக்கிறது, அத்துவானக்காட்டு எருமைகளும் அசிஸ்டென்ட் டைரக்டரும் ஆகிய இரண்டு கதைகள்.
கட் சொன்ன பிறகும் கேமரா ஓடிக் கொண்டிருக்கிறது ஆழ்ந்த சமூக விமர்சனத்தையும் அவ்வுலகத்தில் வாழும் பெண்ணின் உள எண்ணங்களையும் வெற்றிகரமாக கடத்தி சிந்தனையை தூண்டுகிறது. உதவி இயக்குநராக பணியாற்றும் கதைச்சொல்லியும் ஒரு பெண். அவள் சொல்ல தொடங்குவது தனது வேலையின் நிச்சயமின்மை பற்றி. அதனை தக்க வைப்பதற்காக தன் உடல் மொழி முதற்கொண்டு ஆணை போல மாறிவிட்டமை குறித்து. நான்கு பெண்கள் வருகிறார்கள். பாலியல் தொழிலாளியை அத்தனை ஆண்களும் வேட்கையுடன் பார்ப்பது பெண்ணாக அவளுக்கு அசூயை உண்டாக்குகிறது. சினிமாவில் வேலை பார்க்கும் அந்த ஆண்கள் சினிமாவை பார்க்கும் கோடிக்கணக்கான ஆண்களின் பிரதிநிதிகளும் கூட. அடுத்து வரும் பெண் அக்காட்சியில் நடித்தால் ஏற்படும் தன் சமூக மதிப்பு இழப்பை அஞ்சி விலகுகிறாள். அதற்கடுத்தவள், நடிக்கும் போது ஏற்படும் இடரை தெரியப்படுத்துகிறாள். இந்த இரு சம்பவங்களிலுமே முதலில் இயக்குநராக அப்பெண்களை மறுதலிக்கிறாள். பின்னர் பெண்ணாக அவர்களை புரிந்து கொள்கிறாள். இறுதி திருப்பம் ஒரு அதிர்ச்சிக்கு அப்பால் நம்மை என்ன செய்கிறது ? பெண்ணுடல் குறித்து சமூக பொது மனம் காணும் கனவை கேள்வி கேட்கிறது என்று நினைக்கிறேன்.
மஞ்சனாத்தி மலையை தவிர்த்து சிறுமியர் பார்வையில் சொல்லப்படுவதாக கிழவி நாச்சி, ஏழு கன்னிமார், திறக்கப்படாத பள்ளிக்கூடத்தின் கதவுகள், ராஜா ராணி ஜோக்கர் என நான்கு கதைகள் அமைகின்றன. இவற்றில் கிழவி நாச்சி பயத்தை வென்று தன்னை நிருபித்து காட்ட விரும்பும் சிறுமியையும் பயத்தை உருவாக்கி தனக்கு வல்லமையை உண்டாக்கும் ஆசையை கொண்ட சிறுமியையும் அருகருகே காட்டுகின்றன. கிழவி நாச்சி ஒரு தேவதை கதையின் சாயலில் உள்ளது. அவள் கிழவி நாச்சியை சந்திக்கும் பகுதி பெண்களின் குழந்தையின்மை, அதனால் ஏற்படும் துயரம், பின்னரும் அவளுக்குள் இருக்கும் தாய்மை போன்றவற்றை கூறுகின்றன. அது ஒருவகையில் குழந்தையில்லாத பெண்களை பேயாக்கும் ஒரு காலக்கட்டத்து மனோநிலையை விமர்சிக்கவும் செய்கிறது. ஏழு கன்னிமார் தனக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை தெய்வமாக பாவனை செய்வது மூலம் கடக்க நினைப்பது குறித்தாக இருக்கிறது. இங்கு நம் மரபில் பேயாகவோ தெய்வமாகவோ இல்லாவிடில் பேய் தெய்வமாகவோ மாறாத வரை பெண் பிள்ளைக்கு சுதந்திரமேயில்லை. அவற்றை சிறுமியர் தங்கள் வாழ்க்கையில் உணரும் தருணத்தை பேசுபவையாக இருக்கின்றன.
திறக்கப்படாத பள்ளிக்கூடத்தின் கதவுகள் பள்ளி செல்வதற்கான சிறுமி ஒருத்தியின் ஆசையை அவளது பள்ளி படிப்பு நினைவுகளை தன்கதைக் கூறலாக சொல்லி வெளிப்படுத்துகிறது. அந்த ஏக்கத்தை நன்றாக சொல்லி பெற்றோரின் புரிந்து கொள்ளாமையை காட்டி நின்றுவிடுகிறது.
ராஜா ராணி ஜோக்கர் கதையில் கணவனின் தீ நடத்தையுடன் போராடும் மனைவிக்கும் கணவனுக்கும் நடுவில் வரும் அவர்களது சிறு பெண் வழியாக கதைச்சொல்லப்படுகிறது. கணவனுக்கும் மனைவிக்கும் நடுவில் இருக்கும் பெண் என்னவாக அவர்களுக்கு பொருள் படுகிறாள் என்ற கேள்வியை ஒட்டி நகர்கிறது. அந்த ராஜா ராணிக்கு இடையில் கதை முடிவில் அவள் ஜோக்கராக நிற்கிறாள். அதேசமயம் ஒரே நேரத்தில் நம் பெற்றோர் நமக்கு ராஜாவாகவும் ராணியாகவும் கோமாளித்தனங்களை நிகழ்த்தும் ஜோக்கராகவும் மாறிமாறி நிற்பதை சொல்லி காட்டுகிறது. அதனூடாக குழந்தையின் மனதில் பெற்றோரின் சாம்பல்நிற நிழல் பதிவாவதை உணர்த்துகிறது.
சோளம் தொகுப்பில் குடும்பத்தில் உள்ள பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான உறவின் தன்மையை குறித்த கதைகளாக பூனைகள் இல்லாத வீடு, புளியம் பூ இரண்டும் உள்ளன. பூனைகள் இல்லாத வீடு தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன்று நாம் சிறுவர்களாய் இருந்து வளருந்தோறும் காணும்போதே கண்விட்டு மறையும் அந்தி சூரியனை போல பெற்றோருக்கும் நமக்குமான இணக்கம் தேய்ந்து ஆதவன் அணைந்து எஞ்சும் மெல்லொளி படலமாக மாறுவதன் ரசவாதத்தை உணர்த்தி ஏன் என்று கேள்வியையும் விட்டுச் செல்கிறது.
கதைச்சொல்லி தன் அக்காவின் கல்யாணம் குறித்து காணும் கனவில் இருந்து கதை தொடங்குகிறது. அக்கனவில் மச்சனாக இருப்பதன் பெருமிதத்தை ருசிக்கிறான். அப்பா கல்யாணத்தை கலைப்பவராக வந்து அவனது மகிழ்ச்சியை பிடுங்கி கொள்கிறார். கனவு கலைகிறது. கனவின் அப்பாவுக்கும் நனவில் அவனது நினைவில் இருக்கும் அவரது செயல்களுக்கும் இருக்கும் இடைவெளியின் வழியாக அப்பாவிடமிருந்து விலகுவது உணர்த்தப்படுகிறது. கனவில் அக்காவின் கல்யாணத்தை நிறுத்துபவர், நேரில் உற்சாகமாக மகள் திருமணத்தை நிறைவேற்றுகிறார். கனவில் படிப்பதை கறாரான தண்டனை போல பிள்ளைகள் திணிப்பவர் நேரில் படிக்க வேண்டியதன் அவசியத்தை தன் தோல்வியின் வழியாக உணர்ந்தவராக பிள்ளைகளை வெற்றிகரமாக ஆளக்குபவராக, அதன் பொருட்டு தன் பிரியங்களில் சமரசம் செய்து கொள்பவராக இருக்கிறார். வீட்டின் ஒருபகுதியை வாடகைக்கு விடுவது அப்பாவுக்கு பிடிக்கவில்லை தான், இருந்தாலும் படிப்பு செலவிற்காக அதை செய்கிறார். அது நல்விளைவை தரவும் செய்கிறது. எல்லோரும் படித்து வேலையில் அமர்கிறார்கள்.
ஆனால் அம்மாவுடனான நெருக்கம் வீட்டின் தனித்த அந்தரங்க தன்மையை இழப்பதால் சரிகிறது. பெரியப்பா வீட்டிற்கு சிறுவயதில் அரிசியும் பின்னர் அக்காவிற்கு கல்லூரி விழாக்களுக்கு ஆடையை கடனாக வாங்க செல்வதின் அவமானத்தையும் சொல்கிறான். சாந்தி அக்கா கல்யாணத்திற்கு சீராக செய்ய வேண்டிய பத்து பவுன் தங்கத்தை அம்மா சென்று பெரியம்மாவிடம் இருந்து வாங்கி வருகிறாள். அந்த நகைகள் தன் அம்மாவுடையது தான் என்றும் அதற்கு ஈடாகவே அரிசி கொடுத்தார்கள் என்பதை அறியும் போது மனந்நொந்து தனிமையில் அழுகிறான்.. இப்படியாக விலக்கம் எனும் காற்று வீசுவது சொல்லப்பட்டு கொண்டே செல்கிறது. இறுதியாக பாதிரியார் வீட்டில் இருந்து துரத்தப்பட்ட தாய் பூனையின் வழியாக அம்மாவுடனான நெருக்கம் துளிர்க்கிறது.
பூனைகளை வளர்க்கையில் நாம் உணர்வது ஒன்றுண்டு. வளர்ந்த பூனையும் நம் மடியில் படுக்கையில் ஒரு குழந்தை என்று. பூனைகள் இறப்பதன் வழி முடியும் கதை, கள்ளமின்மை காணாமல் போவதன் சித்திரமாக என் வாசிப்பில் விரிந்தது.
புளியம் பூ வயல்காட்டின் தான் வளர்த்த புளிய மரத்தின் மீது தந்தைக்கு இருக்கும் தனி நேசத்தை நேர்த்தியாக சொன்ன வாழ்க்கை பதிவு என்று கொள்ள இயல்கிறது.
தரைதேடிப் பறத்தல் தனித்த ஒன்றாக உருவாக கதையாக அமைந்துள்ளது. சந்திராவின் படைப்புலகின் மையமான பெண்கள் உணரும் உறவும் பிரிவும் என்பதன் பின்னணியில் வைத்து வாசிக்கையில் அக்கதை பொருளேற்றம் அடைகிறது. தனித்து பார்க்கையில் உருவக கதைகளுக்கு வேண்டிய கவித்துவத்தை எட்டாமல் நின்றுவிட்டது என்றே சொல்ல முடியும்.
கட்டுரை தொடக்கத்தில் வந்த குறுந்தொகை பாடலில் வரும் ஏழிலை பாலை மரம் மிகுந்த வாசம் வீசும் மலர்களை கொடுப்பது எந்தளவுக்கு என்றால் உங்களுக்கு தலைவலி வரும்படிக்கு. வாழ்க்கையும் பலநேரம் பலருக்கும் நீங்கா வாசத்தை கொடுத்து தலைவலியை கொடுப்பதாகவே அமைகிறது. ஆனால் அதையும் தாண்டி சிலர் மிக மென்மையான நொச்சி மலர்கள் உதிரும் ஒசையில் விழித்திருக்கிறார்கள். அவர்களே சந்திராவின் படைப்புலகில் சிறப்பாக எழுந்து வரும் பெண்கள். அவை முழுமையான கலைத்தன்மையுடன் வெளிப்பட்ட கதைகளாக அறைக்குள் புகுந்த தனிமை, துயரமென்னும் சிறுபுள்ளி, காட்டின் பெருங்கனவு, கழிவறை காதல் பிரதி, அழகம்மா உடன் பூனைகள் இல்லாத வீடு ஆகியவற்றை சொல்வேன்.
அம்மனிதர்கள் உறங்காது விழித்திருந்து உணர்வது கேட்கப்படாத நெஞ்சங்களின் உள்ளோசையை.
***