சாகுந்தலம் காவியம் – தேவதேவன்
1
சித்திரமாய்ச் சமைந்துவிட்டார்
சகுந்தலா!
தேவகன்னிகைகள் நடனமிடும்
இந்திரசபையாய்
ஆசிரமவனத்தில் ஒரு காற்று
தூக்கிச் செல்லப்பட்டவராய்
உலகம் ஒற்றைப் பேருயிராய்ச்
சிலிர்த்து மின்னிக்கொண்டிருந்த இடத்தில்
தாம் வெகுநேரமாய்
உலவிக் கொண்டிருப்பதைக் கண்டார்
அந்த உலகில்
ஆண்கள் பெண்கள் ஆசைகள் துயர்கள் என்ற
குழப்பங்களே இல்லை
ஒரு பேரிசையின் இரகசியத்தைக்
கண்டுகொண்டவர்போல்
அந்த தீங்கனியின் அம்ருதத்தைப்
பருகிக் கொண்டிருப்பவர்போல்
அதில் திளைத்துக் கொண்டிருந்தார்
2
தந்தையுடன் ஒரு நடை
கண்வமுனிவரின் விரல்களைப் பிடித்தபடி
ஆசிரம வனத்தில் நடந்துகொண்டிருந்தார்
ஒரு சிறுமி
அப்பா
யார் இந்த ரிஷிகள்
இவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்
இங்கே?
லோக க்ஷேமத்துக்காக
எப்போதும் பிரார்த்தனை செய்து கொண்டிருப்பவர்கள்
இவர்கள் குழந்தாய்!
பிரார்த்தனை என்றால்?
மனதினால் வேண்டுவது
மனதினால் வேண்டுவது
போதுமா அப்பா?
உண்மைதான் மகளே…
ஆனால் ரிஷிகளின்
எளிமையான வாழ்க்கையே
அவர்கள் செயல்
நோக்கமற்றதாய் இயங்கிக்கொண்டே
வாழ்வின் பெருநோக்கத்தை
நிறைவேற்றக்கூடியது
……
விசுவாமித்திரரின் தவத்தை ஏன்
என் அன்னை கலைக்கவேண்டும் தந்தையே
தவம் என்பது
இவ்வுலக வாழ்விற்கு அப்பாலுள்ளது அல்ல
என்பதை அவருக்கு உணர்த்த வேண்டுமல்லவா?
……
அப்பா தேவலோகம் பற்றிச்
சொல்லுங்கள் அப்பா
அதை எத்தனை முறை கேட்டாலும்
அலுக்கிறதே இல்லை!
உருவங்களும் பெயர்களுமில்லா உலகம்
ஏதாவது ஒரு தேவையை முன்னிட்டே அவர்கள்
மனித உருவில் இவ்வுலகிற்கு வந்து
அப்புறம் மறைந்துவிடுகிறார்கள்
என் அம்மாவைப்போல?
ஆம்!
……
அப்பா,
அம்மா ஏன் என்னை
இங்கே விட்டுவிட்டுப் போய்விட்டார்கள்?
அதுதான் இரகசியம் என்பது குழந்தாய்.
ஒருவர் அதனைத்
தனக்குத்தானேதான் கண்டுகொள்ள வேண்டும்
……
ஆமாம்
காலம்தான் எவ்வளவு வேகமாய் ஓடுகிறது
ஆசிரமவனத்தின் பூந்தோட்ட எழிலில்
பீறிட்டு முழங்கிய ஒரு வசந்தம்
சகுந்தலையின் உடலிலும் புகுந்து வெடித்தது
சிறுமி சகுந்தலா பெரியவளானார்
3
சகுந்தலா தனியாய்
நடந்துகொண்டிருந்தார்
ஏதுமின்றி
யாருமின்றி
குறிப்பாக
ஆண் பெண் பேதங்களால் உருவாகும்
அழிமாட்டங்கள் ஏதுமின்றி…
எந்த ஒரு மரத்திலிருந்து
மலர்களும் கனிகளுமாய்
இறங்கி நடந்து வருகிறது
இந்தக்கொடி?
இவள் அறியாளோ?
ஓர் ஆணைப் பார்த்து
இவர் திகைத்து நின்றுவிட்டதென்ன?
4
யார் இது?
இவன்தான்
அனைத்துயிர்களையும்
ஆட்கொண்டவனும்
கண்டுகொள்ளாதார் பார்வையில்
ஆட்கொள்ளவிருப்பவனுமான
தேவனோ?
காண்பான் மனசுக்கு இசைந்தவாறே
காமனாகவோ காதலனாகவோ தந்தையாகவோ
ஒளிரும் பேரணங்கனோ?
ஆசைகளெல்லாம் விலகியது போலும்
ஆசை ஆசையாய்ச் சூடிய
அணிகளெல்லாம் கழன்றோடிவிட்டனபோலும்
உடலும் கூசி ஒடுங்கி
ஓடியே மறைந்து…
ஓர் அருவுருவானவளே போல்
நீ நின்றாய் சகுந்தலா
இது உனக்குள் இல்லாத ஒன்று
வெளியே இருந்தே ஈர்க்கும்
இயற்கையின் ஒருபெரும் பிழைதான் என்று
உனக்குத் தோன்றவில்லையா மகளே?
5
ஆடும் மரக்கிளையில்
பறவை அசையவில்லை
கிளைதான் அசைந்தது
கிளை அசைத்ததா இவ்வளவு?
பறவை அசைத்ததைத்தான்
கிளை நடித்துக்காட்டியது
கிளையும் அசையவில்லை
பறவையும் அசையவில்லை
காண்பானின் மனம் தான் அசைந்தது
காண்பானும் இன்றி
காணப்பட்டதும் இல்லாதபோது
போதுமின்றி இடமுமின்றி
தனக்குள்ளிருந்த
தன் பேராற்றல் கொண்டு
இன்மைதான் அசைந்தது!
6
பசுங்கிளை இலைகள்
தங்கள் நிழல்களால் வருட
பாகினி மரத்துவேர்மடியில்
ஆன்று அமர்ந்திருந்தார் சகுந்தலா
‘சகுந்தலா’ எனும்
ஒரு மானுடக்குரல் கேட்டு
உள்ளத்தினின்றும் எதிரே
திடீரென்று பூத்த வெளியில்
கடவுளோ கந்தர்வனோ என
நின்று கொண்டிருந்த துஷ்யந்தனைக் கண்டு
விழி விதிர்த்தாள்
’என்ன ஆழமான யோசனைகள்…!’
இப்பேரண்டமே ஓர் ஒற்றைப்பேருயிராய்
விரிந்திருந்த ஒரு பெருவெளியில்
சிந்தனைகளேயற்று
தான் நீந்திக்கொண்டிருந்ததை
அவள் எப்படிச் சொல்வாள்?
பார்த்தீர்களா
இந்த மான்களையும் மயில்களையும்
மகிழும் சோலைகளையும்
அணில்களையும் முயல்களையும்
அன்னங்களையும் கிளிகளையும் என
அப்போதுதான் முகிழ்த்தவை போன்றிருந்த
தன் தோழியர் அனைவரையும்
அவள் அவனுக்குச் சுட்டினாள்
“நீயோ இவற்றைப் படைத்தவளும் காப்பவளுமான
பேரிறைத்தேவி!” என்றான் அவன்
மெய்ம்மையறிந்த காதலன் தான் அவன் என்பதைக்
கண்டுகொண்ட நாணப்புன்னகை
ஆபரணமாய் ஒளிர்ந்தது அவள் முகத்தில்
முன்னொருநாள் இதே வேளைதானே
வெளித்தெரியும் இந்த மரத்தடிவேர் போலவே
மலர்விரிப்பை அணைந்தபடி
அவள் எழுதிக்கொண்டிருந்த காதல் கடிதம்
விரிந்ததொரு கற்பனையால்
அவள் கையினின்றும்
காற்றில் அடித்துச் செல்லப்பட்டு
வனமெங்கும் பறந்து திரிய
அட்சரங்களெல்லாம் உதிர்ந்து எங்கும் பரவி
நீந்தவும் நடக்கவும் சிறகடிக்கவுமாய்
திரிந்தன காண்பித்து
நான் உனக்காகத்தானே
எழுதியுள்ளேன் இவற்றையெல்லாம்
என்றாயே,
அவனையும் கூட
நீயேதான் படைத்துவிட்டாய் என்பதை
எப்படி அறியாது போனாய், சகுந்தலா?
7
கவிதை உலவும் பூமியின்
காவியத்தலைவியே
எத்தகைய கவிஞனின்
தூரிகையில் உதித்தவள் நீ?
பூவுலகத் துறவியை வீழ்த்தி
தேவலோகப் பெண்வயிற்றிப்பிறக்கவைத்த
கவியின் மகள் நீ!
அன்னையின் இலட்சியமாய்த் தொடர்ந்து
மகளின் இலட்சியமாய்த் தோன்றிய
தேவகர்ப்பமோ உன்மடியிலிருப்பது?
கொஞ்சும் குளிர்தருக்களோடும்
பிஞ்சுக் கொடிகளோடும்
அன்னப்பறவைகளோடும் ஆம்பல்களோடும்
குரூரங்கள் தாண்டிக் குதித்து
ஆன்றமைந்துவிட்ட பொன்விலங்குகளோடும்
பேசிக்களித்த இடங்களையெல்லாம் விட்டுப்பிரிய
எப்படி மனம் வந்ததோடி உனக்கு?
ஒரு களங்கமுமில்லாத
இந்த இயற்கைச் செல்லங்கள்
தங்களைத் தாங்களே காத்துக் கொள்வர்
என்ற தைரியத்தாலோ
மாநகர் வாழ்வுக்குச் சென்று
மானுட வாழ்வைக்காக்கப் போகும்
பெருங்கடமை ஒன்றால் உந்தப்பட்டோ
துயர் பொறுக்க கற்றுக்கொண்டு
உன்னைத் தேடிவர மறந்த
மனிதனைத் தேடிக் கிளம்பிவிட்டாய்?
துயர்நீக்கும் வழியினைக்
கண்டுகொண்டவள் போலல்லவா
ஒரு தேவகுமாரியை
ஒரு புதிய தேவப் பிறவியை
தன் வயிற்றிற் சுமந்தபடி செல்கிறாய்?
எந்த ஒரு ஆண்மகனிடமிருந்தும்
யான் இதைப் பெறவில்லை
என்று சொல்லமாட்டாயா என் தோழி?
8
வருந்தாதே சகுந்தலா
வாட்டும் எத்துயரும்
உன் மெய்யுருவைக்குலைத்துவிடும்
கைவளைகளைக் கழற்றிவிடும்
கணையாழியை உருவிவிடும்
வருந்தாதே
இந்த அழகுப் பொருட்கள் சின்னங்கள் எல்லாம்
காலம் நம்மைக் கவர்ந்து போயிருக்கும் வேளைகளில்
காதலை நாம் மறந்துவிடாதிருக்க
கண்ணுடையோர்க்குச் சுட்டும்
விழிப்பலகைகள் மட்டுமே
காதல்தான் எப்போதும் நம்மை
வழிநடத்தும்
நீர்வட்டமாய் விரிந்துவிட்ட
பெருந்துயரை மட்டும்
நான் குறை சொல்ல மாட்டேன்
அதுவே இந்த பூமியை
இத்துணை அழகுடையதாய் மாற்றியிருப்பதும்
சுட்டும் விழிச் சுடர்களாய் ஒளிர்வதும்
சுழலும் அறவாழியாய் உருள்வதும்
ஒரு புதிய உலகைப் படைக்கப்போவதும்
9
என்ன மறதி இது மன்னனே
மனிதனாகப் படைக்கப்பட்டுவிட்டாலே
தேவனும் இப்படி மாறிவிடக்கூடுமா?
இந்த முழுமொத்தப் பேரியற்கையும்
சாட்சியாய்ப் பார்த்துக்கொண்டிருக்க
காந்தர்வ மணம் புரிந்துகொண்ட
கன்னியை அன்னையை
பேரியற்கையின் மகளும்
தேவதையுமானவளை
எப்படி நீ மறந்தாய்?
வேதனைமிக்கதொரு வாழ்வை
இவ்வுலகுக்களித்துவிட்டு
இவ்வுலகைப் பேணுமொரு மனிதனாக
எப்படி இனி இருக்க முடியும்?
ஆராயப்படவேண்டிய நம் மறதியைத்தானே
தீராத் துயர்களுடன் நாம்
யோசிக்கவேண்டும்?
துயர்வலி உலகின் பெருவலி தரும்
ஆய்வுக்கருவிகொண்டு
அவள் தன் பணியினைத் தொடங்கிவிட்டாள்
அழிக்க வேண்டிய ஒன்று
நம் ஒற்றைக் கண்பார்க்கும் கணமே
அழிந்துவிடும் கண்டாய்
கொல்லும் தலம் என்றும் உயிர்த்திருக்கும் தலம் என்றும்
சிறகடிக்கும் அதற்குப் பெயர்
சாகுந்தலம்
ஆண்மை பெருமை அகந்தை என்றெல்லாம்
உள்ளும் புறமுமாய் மனிதனிடமிருக்கும்
பெருங்கேட்டைக்
கெல்லி எறிந்து
ஒற்றைப் பாலுயிரியாக
மனிதனைப் படைக்கவந்த
பெருந்தேவியல்லவா நீ? சகுந்தலா?
10
நிலவையும் விண்மீன்களையும்
நீலவெளியையும் சூடிய
பேரியற்கையின் மடியில்தானே
துஷ்யந்தனுடன் அவள்
காந்தர்வ மணமும் நடந்தது
காதலையும் கடமையையும் தானே
கணையாழியாய் கையளித்துச் சென்றான்
அவன் அவள் விரல்களில்?
மானுட விதிகளின் விளையாட்டைத்தானே
சோதித்துப் பார்க்கத் தொடங்கியது விதி?
ஆணும் அரசனுமான மனிதன்தான்
தன் மறதியையும் பொறுப்பின்மையையும்
எப்படி மீட்கப்போகிறான்?
இருவரும்தானா கணையாழியைத் தொலைத்தது?
குருடும் குருடும் சேர்ந்தாடும்
குருட்டாட்டம் தானா நடந்து கொண்டிருக்கிறது?
எங்கே கைநனைக்கையில்
காணாமற்போனது அந்தக் கணையாழி?
இப்போது எங்கே ஓடிக்கொண்டிருக்கிறது
அந்த நதி? எங்கே அந்த மீன்?
எங்கே அந்த மீனவன்?
எல்லாத் துயர்களுக்கும்
ஆண் என்று பிறந்த
மனிதப்பிறவிதான் காரணமா?
கலங்காதே சகுந்தலா
கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியத்தில்
இந்தத் துயரங்கள் தாம்
எத்தனை நாளைக்கு நீடிக்கப்போகின்றன?
11
நீங்களே யோசித்துப் பாருங்கள்
தான் எனும் அகந்தையைத்
தொலைக்கத் தெரியாதவனாகவா
இருப்பான் ஒரு முனிவன்?
நாங்கள் அப்படிச் சொல்வோமா?
தங்கள் காரியத்துக்காக வேண்டி
ஈவு இரக்கமற்ற
இந்தக் கவிஞர்கள் பண்ணுகிற காரியம் இது!
கருணையின்றிப் பிறிதொரு பண்பும்
இருக்கமுடியுமோ இந்தக்கவிஞர்களுக்கும் தான்
நீங்களே யோசித்துப்பாருங்கள்!
யார், யாரைநோக்கிப்
பேசுகிறார்கள் இதை
தெரிகிறதா உனக்கு?
சகுந்தலா, என் கண்மணியே
காதலின் நினைவுகளுக்கு
மிகக்குறைந்த அளவே
சலுகை அளிக்கப்பட்டுள்ளது
என்பதுதானே
துர்வாச முனிவரின் சாபம்?
தெரியாதா உனக்கும்?
காதலைக் காதலாலன்றி
நம் எண்ணங்களாலும்
சின்னங்களாலும்
எத்தனைதூரம் பிடித்து வைத்திருக்க முடியும்?
திருடர்களும் கொள்ளையர்களும் கொலைஞர்களும்
அடையாளங்களைச் சூடிக்கொண்டுதானே
வாதை மிகுந்ததொரு உலகைப்
படைத்துவிட்டிருக்கிறார்கள்?
அறிய முடியாதவளா நீ?
12
தன் காதற் கணவன் எனும் ஆணை நோக்கி
தன் குழந்தையின் தந்தை எனும் ஆணை நோக்கி
தன்னை அறியாதவளாய்
இயற்கையின் ஒரு பெருந்தவறினை
அறிந்தவளாய்? அறியாதவளாய்?
நிறைசூலியாய்
நகர் வந்தடைந்திருந்தாள் சகுந்தலா
காதலை மறந்துவிட்ட காதலனும் நகரும்
கள்ளி களவாணி என
கல்லெறிந்து விரட்டிச்
சிலுவையில் அறைகிறது அவளை
குழந்தை முதல் அவளை வளர்த்துவந்த
ஆசிரம வனமல்லவா
நகருக்குள்ளும் வந்து அவளைக் காக்கிறது
கருணையும் கருணையின்
செயல்முறைப்பாடமுமாகத்தான்
எத்துணை எத்தனை கவிதைகள்தாம்
வந்துவந்து
அவள் கண்ணீரைத் துடைக்கின்றன!
ஆண் துணையிலாத
ஓர் அன்னையின் கோலம்!
பேரியற்கையின்
ஒரு மாதிரிச் செயல்முறைப்
பாடம்போல் இல்லை?
ஆனால் இவ்வேளை
கண்ணீர் உகுக்கும்
ஓர் தாய் அல்லவா அவள்?
தாங்கள் செய்வது இன்னதென அறியாத
மனிதர்களை மன்னிக்கவும்
அன்னை இயற்கைக்கே அறிவுரை சொல்லவும்
புதிய உயிரைப் படைக்கவும்
தேடலும் பிறிதொன்றுமில்லாது
எங்கும் நிறைந்த பேரெழில் நடுவே
பார்வையில் மட்டுமே பிறக்கும் பாதையினால்
புதிய வாழ்வையும் புதிய உயிரையும்
படைக்கத் தொடங்கிவிட்ட
பெருந்தெய்வமல்லவா?
*