செல்லாத ஊருக்கு போகாத வழியில் தனியாய் நிற்கும் நவீன மனிதன் – சக்திவேல்

(பெருந்தேவியின் கவிதைகளை முன்வைத்து…)

பெருந்தேவி

ஒரு கவிஞரின் கவியுலகத்தை நோக்கி செல்வதற்கான வாயிலாக அவர் கவிதை குறித்து எழுதிய கவிதைகளை காணலாம். கவிதையை பற்றின கவிதைகள், அக்கவிஞர் கவிதை என்னும் வெளிப்பாட்டை என்னவாக பொருள் கொள்கிறார் என்பதற்கான அகவய உருவகங்கள் அன்றி வேறல்ல. குறிப்பிட்ட இந்த வகைமை கவிதைகள், கவிதை என்னும் வெளிப்பாட்டின் ஒரு பரிணாமத்தை கடத்தும்போது, மறுபக்கம் அதை எழுதிய கவிஞரின் கவியுலகத்தை குறிப்புணர்த்துவதாகவும் அமைந்துவிடுகின்றன. அந்நோக்கில் பெருந்தேவி கவிதைகள் குறித்தும் கவிஞர்களை குறித்தும் கணிசமான அளவு கவிதைகள் எழுதியுள்ளார். இந்த புள்ளியில் இருந்து பெருந்தேவியின் கவியுலகிற்குள் நுழைவது பொருத்தமானதாக இருக்கும்.

பெருந்தேவியை பொறுத்தவரை கவிதை ஒருவனை சொர்க்கத்தின் அரியாசனத்தில் அமர வைக்கும் ஐராவதம் அல்ல. குறைந்தபட்சம் ஒரு மன இருளில் இருந்து இன்னொரு இருளுக்கு நகர்த்தி காட்டும் ஆசுவாசத்தை அளிப்பதாக இருக்கின்றன.

அறிந்ததுதான்
அதனால் எந்த வழக்கமான அற்புதத்தையும்
நிகழ்த்த முடியாது
தண்ணீரை ஒயின் ஆக்குவதோ
வானத்திலிருந்து வெட்டுக்கிளிகளைச் சொரிவதோ
இருக்கட்டும்
அதனால் கைக்கெட்டிய தூரத்தில்
ஒரு சாதாரணக் கதவைக்கூட
திறந்துவிட முடியாது
ஒருவருக்குப் பைத்தியம் பிடிப்பதை
நிறுத்த முடியாது
ஒரு பிடிவாத முகத்தில்
சின்ன புருவத் தூக்கலைக்கூட
உருவாக்க முடியாது
முக்கியமாக
அதனால் எந்த துரதிர்ஷ்டத்தையும்
தாமதிக்கச் செய்ய முடியாது
வாழ்க்கையின் பொருள்
ஒன்றும் செய்ய முடியாதது என்கிறபோது
இதில் வியப்படைய எதுவுமில்லை
ஆனால் கவிதை ஒன்றைச் செய்கிறது
ஒரு மன இருளிலிருந்து
இன்னொரு மன இருளுக்கு
இன்னொரு மன இருளுக்கு
சில சொற்களை
முத்தமிட்டுப் பறக்கவிடுகிறது

எதையும்
காப்பாற்றி வைக்க முடியாதபோது
கவிதை கைதூக்கி ஆசிர்வதிக்கிறது
புதிய செல்லாக் காசுகளால்

“கவிதையாலானது” என்னும் தலைப்பில் அமையும் இக்கவிதை ஈஸோவாஸ்ய உபநிடதத்தின், “அறியாமையை வழிபடுவன் இருளை அடைகிறான். அறிவை வழிபடுபவன் அதை விட பெரிய இருளை அடைகிறான்.” என்னும் வரியை நினைவில் எழ செய்தது. குறிப்பாக ஒரு மன இருளிலிருந்து இன்னொரு மன இருளுக்கு என்ற வரிகள் அந்நினைவை தூண்டின என்று சொல்ல வேண்டும். 

இக்கவிதையை வைத்து பெருந்தேவியின் கவியுலகின் முதன்மை கூறுகள் சிலவற்றை குறிப்பிடலாம். ”தண்ணீரை ஒயின் ஆக்குவதோ/ வெட்டுக்கிளிகளை சொரிவதோ/” வரிகளுக்கு அடுத்து ”இருக்கட்டும்/ அதனால் கைக்கெட்டிய தூரத்தில்” என வருகையில் புன்னகைப்பதை தவிர்க்க இயல்வதில்லை. கடவுளின் இருப்பில் தொடங்கி பொருண்மை உலகின் மாற்றம், மானுட அகம் என வாழ்வின் அத்தனை தளங்களிலும் கவிதையின் இடத்தை கூறும் தொனி அங்கதத்துடன் பயின்று வருகிறது. பொதுவாக பகடியின் கசப்பு தன்மை தென்பட்டாலும் அங்கதம் நோக்கி நகருமிடங்களில் உயர் கவித்துவம் வந்தமைகிறது.

கடவுள் முதற்கொண்டு தன் அகம் வரை யாவற்றாலும் கைவிடப்பட்ட நகரத்தில் வாழும் நவீன மனிதனின் அகத்தை பேசும் கவிதைகளாக பெருந்தேவியின் உலகம் உள்ளது. அங்கதம் தொழிற்படும் இடங்களில் ஒரு மெய்மையின் சொல்லியின் குரலின் சாந்தம் வந்து படிகிறது. அதன் மறுபக்கமாக நெகிழ்வும் கண்ணீருமான கவிதைகளையும் எழுதி இருக்கிறார். ஒரு அருளாளரின் இறைஞ்சுதலை செவி கூர முடிகிறது. உலோக ருசி தொகுப்பில் வரும் வேண்டுதல் என்ற இக்கவிதை,

விண்மீன்கள்
அல்லிகளாய்ப் போதவிழும்
இரவில்
எம் தேவமாதாவே
உன் ஒளிர்க்
கன்னமதாய்
அமைதி சிறிதே
காட்டித்தாரும்
விம்மி விம்மி நெஞ்சம்
உறைகிற
தன்னுணர்வை
மெழுகுவர்த்திக்கு
இணையாக்கி
உருக்கித்தாரும்
சுகங்களின் கிளிஞ்சல்கள்
கனவில்
எம் பாதங்களைக்
கிழிக்காதிருக்கட்டும்
துயரங்களை ஆண்டடக்கிய தாயே
மகனுக்கு உண்டானதை
மகளுக்குth தாராதேயும்
இதயமுனதில்
ஏந்திய அம்புகளை
வாரத்தின் நாட்களாக்கிக்கொண்டோம்
இரவுக்கு விசனத்தை ஊட்டாதேயும்
அல்லது
இப்போது
கதவெமதைத் தட்டுவது
ஊழ்வினையல்ல
என்ற உத்திரவாதத்தையாவது தாரும்

‘கவிதையாலானது’ கவிதையில் வரும் முழு ஏற்புக்கும் ‘வேண்டுதல்’ கவிதையில் வரும் சுய சமர்ப்பணத்திற்கும் இடைப்பட்ட நவீன மனிதரின் வாழ்க்கையின் விருப்பங்களின் விளைவான ஏக்கங்களும் அவற்றின் ஊடாக விளையும் கசப்பும் நிராசையும் நிம்மதி தருணங்களுமே பெருந்தேவியின் கவியுலகமாக இருக்கிறது. இவ்விரு கவிதைகளில் இருந்து பிற கவிதைகளின் உணர்வு நிலையை இறங்குவரிசையாக வரைந்து கொள்ளலாம்.

கவிதையாலானது கவிதையில் வரும் அங்கதம் அடுத்த நிலையில் பகடியாக மாற்றம் பெறும் போது இசையினுடையது போல தன்னிலை சுட்டலாக இல்லை. புதுமைப்பித்தனின் கதைகளை போல கூரிய சமூக விமர்சனத்தன்மையுடன் புறவுலகம் நோக்கி விரிகிறது. பெருந்தேவியின் தனித்தன்மையான இடங்களில் ஒன்றாக புறவுலகம் நோக்கியே சமூக விமர்சனத்தன்மையை குறிப்பிட முடியும். விமர்சனம் என்பது கவிதைக்குள் வருகையில் கவித்துவத்தை தகுதியை அடைவது எப்போது ? என்ற கேள்வியை பெருந்தேவியின் கவிதைகளை வைத்து எழுப்பி கொள்கிறேன்.

நல்ல கவிதை எந்நிலையிலும் மாறும் பரு உலகின் மேல் அகம் கொள்ளும் சலனத்தை கூறி, பிரபஞ்சத்தின் மாறா நெறிகளை உணர்த்துவதாகவே அமைய முடியும் என நம்புகிறேன். விமர்சனம் என்று வருகையில் எந்தளவுக்கு புறவுலகை கூறி சில அகவயமான அடிப்படை இயக்கங்களை நோக்கி செல்வதே கவிதை நிலையை எட்டுவதாக நினைக்கிறேன். கேள்வி பதில் என்றொரு கவிதை,

“இந்துமதம் ஆன்மாவைப் பற்றி என்ன சொல்கிறது ?”
என்னிடம் இதைக் கேட்டவன் படுஅம்சமான பையன்
(விவரணையைக் கத்தரித்துவிடு மனமே
ஆசிரியர்கள் மாணவர்களுக்குத் தாய்தந்தை மாதிரி
அல்ல

தாய்தந்தையாகவே இருக்க வேண்டும்
மாதா பிதா போல் குரு இருந்தால் தெய்வம்
இல்லாவிட்டால் தேவடியாள்/ன்
தலைக்குள் வலி நழுவியது)
“இந்துமதம் என்பது பல மதங்கள், அதாவது…”
“பலவா? மொத்தத்தில் என்ன சொல்கின்றன ?”
அடே பையா கற்பவர்களுக்குப் பொறுமை வேண்டும்
நாக்கு துடிக்கிறது
(வாராது வந்த மாமணி வாத்தியார் வேலை
கோபப்பட்டால் ஒழித்துக்கட்டி விடுவார்கள்
குண்டி துடைக்க டாய்லெட் பேப்பருக்குப்
பிச்சையெடுக்க வேண்டும்)
“மொத்தத்தில் என்று ஒன்றுமில்லை
வரலாற்றுரீதியாகக் கட்டமைக்கப்படுபவை கருத்துகள்
இந்துமதம் எனப்படுவதன் வரலாற்றைப் பார்த்தால்…”
“ஆன்மா அழிவற்றது என்று பகவத்கீதை சொல்வதை
இந்துக்கள் நம்புகிறார்களா ?”
அடுத்த கேள்விக்கு நகர்ந்துவிட்டான்
(நினைத்திருப்பான்
இந்த வாத்திச்சிக்குப் பொட்டிலறைந்தாற் போல
சொல்லத் தெரியவில்லை
அல்லது
நேற்று மொண்டு குடித்ததன் மிச்ச சுருதி
இவளிடம் கலையவில்லை)
நம்புகிறார்களா நம்பவில்லையா
என் தலைவலியை எதுதான் குறைக்கும்
“ஆன்மா அழிவற்றது என்று நான் நம்புகிறேன்”
தொடர்ந்தான்
“நானும்தான்”
அவன் நம்பியதை ஆமோதிப்பதுதான்
எத்தனை பிடித்தமாக இருந்தது?
அழிவதாகவே இருக்கட்டும்
அவனுக்காகவாவது
ஆன்மா என்ற ஒன்று இருக்கவேண்டும்
இந்நேரத்தின் நித்தியமான
இந்தத் தலைவலியைப்போல

தன் எதிரே இருக்கும் பையனை சுதந்திரமாக ரசிக்க முடியாமல் ஆக்கும் ஒரு வேலை, பணியிட நெருக்கடியை பாடுகிறார் என ஒரு மேம்போக்கான வாசிப்பில் சொல்ல வைக்கும் கவிதை தான் இது. மாறாக, நிறுவனங்கள் மனிதர்களை உணர்வுமிக்க ஆன்மாவாக அல்லாமல் கேள்வி – பதில் என்னும் பண்ட பாகங்களாக மாற்றுவதன் சித்திரமாக நோக்குகையில் மனிதர் இன்றுவரை உருவாக்கி உள்ள பல்லாயிரம் நிறுவனங்களோடு பொருந்தி கொள்ளும் தன்மையை அடைகிறது. அதற்குள் இருக்கும் மனிதர்களின் ஆன்மாவற்ற நிலையும் இடம்பெறுகையில் பல்வேறு உறவுகளுக்கும் நமக்குமான உறவை பரிசீலனை செய்து கொள்வதற்கான சன்னலொன்று திறக்கிறது. இந்த புள்ளிக்கு வந்து சேருகையில் நாகரீகம் தொடங்கிய காலம் முதல் ஆரம்பிக்கும் பிரச்சனையின் நிகழ்முனை கண்ணியாக உணரும் நிலையை அடைகிறோம்.

 இப்படி நடப்பது ஏன் ? விழுமியங்களின் சரிவை அல்லது தலைகீழாக்கத்தை சொல்வதன் மூலம் சிந்திக்க தூண்டுகிறது. இக்கேள்வியை ஒரு உரைநடையில் எழுப்பிவிட சாத்தியப்படுகையில் கவிதையில் சிறப்பாக என்ன நிகழ்கிறது என்று கேட்டுக்கொள்ள வேண்டி இருக்கிறது.  இவ்விடத்தில் பெருந்தேவியின் கணிசமான கவிதைகளில் பயின்று வரக்கூடிய கவிதையாக்க முறைமை குறித்து பேச வேண்டியிருக்கிறது. ஒரு தருணத்தில் இருந்து மொழிவழியாக எழுந்து செல்வதற்கு நிகராக ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை புனைவாக்குவதன் மூலம் கவிதையை அடைகிறார். அது குறும்புனைவு கவிதையாக மாறுகிறது. முடிவில் அத்தனை சொற்களும் குறியீட்டு அர்த்தத்தை அடைகின்றன. இத்தன்மையை பெருந்தேவியின் குறுங்கதைகளுடன் கவிதையை ஒப்பிடுகையில் துலக்கமாக காண முடிகிறது. 

விமர்சன தன்மை புற உலகை தொட்டு அகம் நோக்கி குவிவதற்கு பரவலாக அறியப்பட்ட பெருந்தேவியின் ஊரிழுக்கும் குறுங்கவிதையையும் எடுத்துக்கொள்ளலாம்.  இது பகடி இல்லாமலேயே அந்த இடத்தை நோக்கி நகர்கிறது.

ஒவ்வொரு முக்கிலும்
பலிகளைக்
கேட்டும் கொண்டும்
நகர்கிறது குடும்பத்தேர்
மயானத்தை நோக்கி.

முதல் வாசிப்பிற்கு குடும்ப வன்முறையை சொல்லும், விமர்சன தொனியில் குத்திக்காட்டுகிறது என்றும் கூறும்படிக்கு அமைகிறது. அப்படி வெறுமே ஒரு விமர்சனமாக மட்டும் இருந்தால் இன்றைக்கு நடக்கும் ஃபேஸ்புக் அரட்டையின் ஒரு பகுதி என சொல்லி நகர கூடிய ஒன்றாகியிருக்கும். ஊரிழுக்கும் என்ற தலைப்பும் குடும்பத்தேர் என்ற வார்த்தையும் எந்தவொரு அமைப்பின் அக இயக்கத்துடனும் பொருத்தி கொள்ளும் சுதந்திரத்தை வழங்குகிறது. அச்சுதந்திரம் விமர்சனம் என்ற தளத்தில் இருந்து கவிதையை பறக்க வைக்கிறது.

விமர்சனம் தன்மை வெளிப்படையாக பகடியாக அங்கதமாக பயின்று வரும் அரசியல் கவிதைகளையும் எழுதியுள்ளார். அவை பண்பாட்டு பிரச்சினைகளை சென்று தொடும் போது மேலெழுந்து விடுகின்றன. உதாரணமாக ஶ்ரீராமன் என்ன சொன்னான் ? கவிதை, ஆணின் இலட்சிய உருவமாக காட்டப்படும் இராமனின் உருவத்திற்கும் சராசரி ஆணின் ஒவ்வொரு பருவத்திலும் எவ்வளவு தூரம் விலகியுள்ளதை உணர்த்துவதாக வாசித்தேன்.

…ஒரெயோரு முறைமட்டும்
மிகநெருக்கத்தின் அவனைக் கண்டபோது
நீண்ட முத்தம் தந்தபடியென்
சின்னக் கேள்வியொன்றுப் பதில் சொன்னான்
“அயோத்தியா? நான் பார்த்தத்தில்லை அதை
என் பாட்டி கதை சொல்லிக் கேட்டிருக்கிறேன்
ராமன் பிறந்த இடம் என்று”

ஒழுக்க மதிப்பீடுகளின் கட்டுப்படுத்தும் சுமையை, உள்ளீடின்மையை சொல்வதாக அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து கோடிகளை குவித்த புஷ்பா படத்தை பேசுப்பொருளாக கொண்ட தெலுங்கு, தமிழ், கன்னட, மலையாள,  இந்தித் திரைப்படம் கவிதையை வாசிக்கலாம்.

…புஷ்பாவையை இன்னொருவன் சுட முடியாது
கால் மேல் கால் போட்டிருக்கும்
புஷ்பாவின் ஒரு மயிரை
இன்னொருவன் பிடுங்க முடியாது
ஆனால் புஷ்பா அழுவான் ஆத்திரப்படுவான்
சித்ரவதை செய்துகொள்வான்
ஒரு அப்பன் பெயருக்காக
ஒரு அப்பன் பெயரில் உள்ளது புஷ்பாவின் ஒரே உயிர்

புஷ்பா பிறக்க அப்பன் தேவையில்லை
புஷ்பா பிறக்க அம்மா தேவையில்லை
புஷ்பா ஒரு செடி
என்றிருந்தால் இன்னும் சிறப்பு
ஆனால்
ஒரு செடி தன் கால் மேல் காலைப் போட்டு
உட்கார்வதைக் காட்ட முடியுமா?
அது அவசியம் படத்துக்கு

இதே வரிசையில் தேச பற்றின் அபத்த எல்லையை சுட்டும் செய் இந்து,  தனிநபர் சுதந்திரத்தின் மேல் போடப்படும் நவீன கால தடையை விமர்சிக்கும் விதமான ஆதார் உதார், ஒவ்வொன்றையும் பயன்சார் அளவுகோலில் மட்டுமே பார்க்கும் மக்களாட்சி முறையின் பின்விளைவை சொல்லும் சித்தாள் பெண்மணியுடன் ஒரு செல்ஃபி கவிதை என கவிதைகளை சொல்ல முடிகிறது.

பெருந்தேவியின் கவிதைகளில் பயின்று வரும் விமர்சனத்தன்மை என்ற அம்சம், சம காலத்தின் மீதான மதிப்பீட்டுடன் என்றுள்ள காலத்தை நோக்கி பேசும் சிறப்பு தன்மையை வழங்கினாலும் எப்போதும் கவிதையாக மாறுவதில்லை. அதற்கான முயற்சியில் நின்றுவிட்ட அல்லது வெறுமனே உரைநடைகளாக எஞ்சிவிட்ட முயற்சிகளும் இருக்கவே செய்கின்றன.   

2

வேண்டுதல் கவிதையின் சுய சமர்ப்பணத் தன்மையை வளர்த்தெடுக்கும் கவிதைகளில் பெருந்தேவியின் கவிமொழி உள்ளார்ந்த லயம் கொண்ட ஒரு இசைத்தன்மையை அடைகிறது. சொற்கலவி, வராத செய்தி, ஏன் ஏன் கவிதை ஒரு உதாரணம்.

ஒன்றும் வேண்டாம்
ஊர் அடங்கிவிட்டது
கூண்டில் நின்றுகொண்டே
உறங்குகிறது கிளி.
திரும்பிப் படுக்காத அவளது
படுக்கையின்
இந்தப் பக்கம்
அவள் கடந்துவந்த
பாதை போலும்.
அறையெங்கும்
கடவுளின் கண்ணாய்க்
கணினியின் ஒளித்திரை
பச்சைச் சிறுதுளி
மின்னி அருளுகிறது
ஏன் ஏன் கைவிட்டீர்
ஒரு துளிக்
கண்ணீரை
நாளைக்கு அவளுக்கு தாரும்.

கடவுளின் இடத்தில் கணினியின் திரை வந்து
அமர்கிறது.


திரை பாதுகாவலர்
ஒரு செம்பருத்தியைத்தான்
திரைப் பாதுகாவலராக வைத்திருக்கிறேன்
என் அலைபேசிக்கு
அது இரவுபகல் பார்க்காது
பூத்துக்கிடக்கிறது
அது பெரிய விசேஷமில்லை
அதன் பின்னணி
நீல வானத்தின் ஒளியை
குறைக்க அதிகரிக்க முடிகிறது
விளையாட்டாய்
ஏன், வானத்தின் நிறத்தையே மாற்றமுடிகிறது
கொல்லையில் எறும்பூறும் சிவப்பு வெளிறிய
பழைய செம்பருத்தியைவிட
இந்த திரைப் பாதுகாவலர் செம்பருத்தி
கண்ணுக்கு வழவழப்பு
ரொம்ப அணுக்கம்
கையடக்கம்
அதன் வானம்

3

தொழில்நுட்பம் கடவுளின் இடத்தை பிடித்த ஒரு காலக்கட்டத்தில் உறவுகளின் பிரிவையும் தூக்கத்தையும் கசப்பையும் ஆறுதலையும் மையக் களமாக கொண்டவையே பெருந்தேவியின் பெரும்பகுதி கவிதைகள். கடவுளின் இடத்தை பிடித்த தொழில்நுட்பம் என்று சொல்லும் போது நவீன காலத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி என்ற சித்திரம் பொது மனதில் இருக்கிறது. மனிதர்களாகிய நாம் என்றைக்குமே தொழில்நுட்பத்திற்கு இறையின் இடத்தை கொடுத்து வந்தவர்கள் தான். நம் மரபில் ஆயுத பூஜை என்று அதற்கென ஒரு பண்டிகை இருக்கிறது. ஆயுத பூஜையன்று நியாயப்படி செல்போன், லேப்டாப் ஆகியவற்றை தான் வைக்க வேண்டும் என அம்மாவிடம் சொல்லி கொண்டிருந்தேன். இந்நோக்கில் ஏன் ஏன் கவிதையில் வரும் கணினி என் கடவுளே தான், அவரிடம் துளிக் கண்ணீருக்காக கோருவது நெருக்கத்தையே தருகிறது.  புதிய கடவுள் பழையவருக்கு உண்டான நெருக்கமெல்லாம் இல்லாமல் நம்மை கொன்று தின்னவும் பலி கேட்கவும் தயாராக இருக்கிறார். அவருக்கு சாந்தி செய்து அவியிட்டு குளிர்விக்க வேண்டியிருக்கிறது. வேதகாலத்து இந்திரனின் மறுபிறவி என்று சொல்லத்தக்கவர். இவ்விரட்டை நிலையை கவிதை புலத்திற்குள் அழைத்து வந்து காட்சியளிப்பது பெருந்தேவியின் தனி பங்களிப்பு என்று சொல்ல வேண்டும். இவ்விஷயத்தை நேரடியாக டெக்னாலஜி கடவுளான பின் என்று ஒரு கவிதையாகவும் எழுதி இருக்கிறார்.

அன்பு

அது எப்படி முதலில் நீ என்னை ப்ளாக் செய்யலாம்
அது எப்படி என்னிடம் சாட் பண்ணாதபோது
உன் பெயருக்கருகே பச்சை மின்னலாம்
அது எப்படி நீ அவளுக்கு உடனே ஹார்ட்டின் போடலாம்
அது எப்படி நீ நாலு நாள் கழித்து
எனக்கு மொக்கை லைக் போடலாம்
அது எப்படி அவளுக்கு மட்டும் எமோஜி எனக்கு வார்த்தை
அது எப்படி முதலில் அவளை டேக் செய்யலாம்
அது எப்படி என்னிடம் சொல்லாமல்
உன் ஃபேஸ்புக் கணக்கை முடக்கலாம்
அது எப்படி நீ எனக்கு முன்னால்
சுடுகாட்டுக்குப் போகலாம்
கடைசிக் கேள்வியைக் கேட்டவுடன்
தடக்கெனப் பிணம் எழுந்து
கைநீட்டி இழுத்தணைத்துச்
சிதைக்குள் சாய்ந்தது.

ஒரு சிறிய தொழில்நுட்பத்தின் பொருட்டா இந்த சண்டை என்றெழும் நினைப்பே இக்கவிதையை வாசிக்கையில் ஒரு புன்னகையை வரவழைக்கிறது. அன்பு என்ற தலைப்பும் வரிக்களின் அடுக்கும் முடிவில் அது எப்படி நீ எனக்கு முன்னால் சுடுகாட்டுக்குப் போகலாம் என்ற வரிக்கு வருகையில் கவிதை பறக்க தொடங்குகிறது. வீட்டு சண்டைகளில் தவறாமல் இடம்பெறும் வாசகமல்லவா அது, நம் அம்மாக்கள், அத்தைகள், பாட்டிகள் என எத்தனை வாய்களில் இருந்து, இந்த பாவிக்கு முன்னாடி நாம போய் சேந்துரணும் டீ என்றோ அவருக்கு முன்னாடியே பூவோட பொட்டோட போயிடணும் மா என்றோ கேட்ட அனுபவம் நம்மில் பெரும்பாலோருக்கு இருக்கும்.  இவற்றை நினைவூட்டியவுடன் அன்புக்கான நம் வரையறை தான் என்ன ? உடைமை கொள்ளல் மட்டுந்தானா ? அதற்கப்பால் ஒன்று சாத்தியம் தானா ? என்ற கேள்விகள் வந்தறைகின்றன. இக்கேள்வியை உறவுகள் குறித்து பேசும் கவிதைகளில் தொடர்ச்சியாக எதிர்கொள்கிறார் பெருந்தேவி.

அதே அன்பின் வெளிப்பாடுகள் இன்றைக்கு மென் செயலிகளின் தளத்தில் நிகழ்வதை காட்டும் கவிதை, அதிலிருக்கும் வெளிப்படைத்தன்மையை சொல்லி முன்னகர்கிறது. ஒருவகையில் நாம் அதீத வெளிச்சத்திற்கு கீழ் நிற்பவர்கள். மிகு வெளிச்சம் என்பது வேறு வகை இருள் தானே ? தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவதன் நெருக்கடியை பெரு நிறுவனங்கள் முதற்கொண்டு அந்தரங்க உறவுகள் வரை சந்திக்கிறோம். பாவம் செய்யாதீர்கள், கடவுள் நம்மை பார்த்து கொண்டிருக்கிறார் என சர்ச்சுகளில் போதனை கேட்டிருப்போம். நிச்சயமாக நம்மை பார்த்து கொண்டிருக்கிறார், வெட்கமேயில்லாமல்.

எனக்கு இருப்பதெல்லாம் ஒரே கேள்வி

எப்போது
நம் சாமிகள் வெகுளித்தனத்தை இழந்தன ?
ஏனெனில் அதிலிருந்து தொடங்கியது
நம்முடைய இந்தச் சீரழிவு
இனி தொடர்வதில் அர்த்தமில்லை
படையலை ஒளித்துவைத்துவிட
வேண்டியதுதான்

வெகுளித்தனத்திற்கு வாழ்க்கையில் ஓரிடம் அல்ல, மிகப்பெரிய இடமுண்டு. விழிப்புடன் இருக்குமளவுக்கே கொஞ்சம் கண்டு காணாமலும் இருக்கும் வெகுளித்தனத்தை வைத்திருப்பது நன்று. அது நம் மென்மைகளை, வசந்தத்தை பூக்க வைக்கிறது. தன்னிருப்பில் லயிக்க செய்கிறது. கடவுள் மனிதனை தன் வடிவில் படைத்தார் என்பது பைபிள் மொழி, மனிதன், கடவுளை தன் வார்ப்பில் கற்பித்து கொண்டான் என்ற புதிய மொழியை இங்கே நினைத்து கொள்ள வேண்டியிருக்கிறது. இழந்த மென்மையை, வசந்தத்தை நினைவூட்டும் கவிதைகளையும் எழுதி இருக்கிறார்.

4

பூவுடன் உரையாடல்

உன்னிலிருந்து நீ எப்போது வெளியேறப்போகிறாய் ?
நடைபாதையில் ஓர் அங்குல நீளச் செடியின்
வயலட் பூ என்னைக் கேட்டது
ஒவ்வொரு வசந்தத்திலும் இப்படி
எடக்குமடக்காகக் கேட்பது அதன் வழக்கம்தான்
எப்படி வெளியேறுவது என்றேன் சின்னப் பூவிடம்
எங்களைப் பார் என்றது தலையை ஆட்டி ஆட்டி
பக்கத்திலிருந்த இன்னும் குட்டிப் பூக்களெல்லாம்
என்னைப் பார்த்துச் சிரித்தன
ஒரே அவமானமாகிவிட்டது
இனிமேல்
தடுக்கிவிழுந்தாலும் சரி
அண்ணாந்து பார்த்து
நடக்கவேண்டியதுதான்

நடைப்பாதையில் ஓர் அங்குல நீளச் செடியின்/ வயலட் பூ என்ற வரிகளின் வழியாகவே இக்கவிதையுடன் தொடர்பு கொள்கிறேன். தோட்டங்களிலோ, வீடுகளிலோ அல்ல பூக்களை நாம் பார்க்க நேரிடுவது நடைபாதையின் ஓரங்களில் சக்கரம் கட்டி கொண்டு ஓடும் விரைவு வாழ்க்கையின் மீச்சிறு துளிக்காலத்தில் தான் பார்க்க நேரம் வாய்க்கிறது. இதை சொல்லும்போது பெருந்தேவியின் காலம் இக்காலம் என்ற கவிதை நினைவுக்கு வருகிறது. ஆயுளின் ஒரு கையால் ஆசிர்வதித்தபடி/ வாழ்க்கையின் மறுகையால் தரதரவென/ இழுத்துச் செல்கிறது நம்மை.… பெருங்காலமோ கண்ணிமைப்பதே இல்லை/ அது தூங்கிய கில்காமேஷின் காலடியில்/ நாளுக்கொன்றாய் வைக்கப்பட்ட ரொட்டித்/ துண்டுகளாக/ நம் அடி ஒவ்வொன்றையும் கணக்கிடுகிறது. நவீன காலத்தில் கில்காமேஷ் போல நாம் ஓடவே செய்கிறோம். ஒரே வித்தியாசம், மரணமின்மைக்கு பதிலாக நாளைக்கான ரொட்டி துண்டின் பொருட்டு. அது நம் ஆன்மாவை விலைக்கு விற்பதில் முடிகிறது. அதன் பின் மென்மைகளை காரணமில்லாத சந்தோஷங்களை, தன் மறப்புகளை நம்மால் அனுபவிக்க முடிவதில்லை.

குளிர் போய்விட்டது

வாஷிங்டன்னில் அடுத்தவாரம்
செர்ரி பூக்களின் வசந்தோத்சவம்
ஆனால்
நான் போகப்போவதில்லை
அவற்றைப் பார்க்க ஆன்மா
வேண்டும்
என்னிடம் ஸ்மார்ட் ஃபோன்தான்
இருக்கிறது

அப்படி ஆன்மா அதாவது சாரம் இல்லாது நிற்கும் ஒரு நிலையை சொல்வதாகவே குளிர் போய்விட்டது கவிதையை காண்கிறேன். ஸ்மார்ட் ஃபோன் என்பது ஒருவரின் உடலுறுப்பு போல மாறிவிட்ட காலத்தில் வாழ்கிறோம். ஒரு பயன்பாட்டு பொருளால் கட்டமைக்கப்படும் உலகத்தில் பயனுக்கு அப்பால் உள்ள சிலவற்றை பார்க்க தவறுகிறோமா? ஒவ்வொன்றையும் அதன் பயன் மதிப்பீட்டில் மட்டும் இட்டு நிரப்பி அளப்பதை தான் செய்கிறோம் இல்லையா ?

சரக்கொன்றையிடம் மன்னிப்பு

வெகுநாள் கழித்து சிநேகிநி வந்திருந்தாள்
வாடிய முகம்
இருவர் தட்டிலும் சோற்றைப் பரிமாறிவிட்டு
அவளிடம் கேட்டேன்
நீ அவனைக் காதலிக்கிறாயா என்ன ?
பல நூற்றாண்டுகளாக
பல உணவு வேளைகளில்
பல சிநேகிதிகள்
அச்சத்தோடு கேட்ட அதே கேள்வி

பிறகு அவளிடம் எடுத்து சொன்னேன்
அந்தக் காதலின் அரைக்கிறுக்கத்தனத்தை
சூனியக்கார வலையை
வானில் இல்லாத நட்சத்திரங்களா ?
ஒருவனுக்குப் பின்னால் ஏன் ஒருத்தி
தன்மேல் தானே தீப்பந்தம் சுமந்து
நடந்து போக வேண்டும் ?
ஒருவனுக்காக ஏன் ஒருத்தி
தன்னையே அரிந்து உப்பிட்டுத்
தின்னத் தரவேண்டும் ?

ஒரு பெண்ணியவாதிக்கு இதெல்லாம் என்ன புரியும்?
ஒரு புத்தகப் புழுவோடு யார்தான்
சிநேகமாக இருப்பார்கள் ?
வசந்தத்தின் முடிவில் பூக்குமே சரக்கொன்றைப் பூ
அதையாவது பார்த்திருக்கிறாயா நீ?
தட்டை விசிறிவிட்டு எழுந்து போனாள்

சரக்கொன்றை ஏன் பூக்கிறது ?
வசந்தம் ஏன் முடிந்துபோகிறது?
வசந்தம் முடியும்போது பூக்கும்
இதுவரை பார்த்திராத
சரக்கொன்றையிடம்
எதற்கென்று நான்
மன்னிப்பு கேட்பது?

பெருந்தேவியின் புகழ்பெற்ற காதல் கவிதையாக வாசிக்கப்பட்ட சரக்கொன்றையிடம் மன்னிப்பை முந்தைய பத்தியில் எழுப்பிய பயன்சார் மதிப்பீடுகளுக்கு அப்பாலான கேள்வியை, உணர்வாக வெளிப்படுத்தும் கவிதையாக வாசிக்க இடமிருக்கிறது. காதல் அது தோன்றிய நாளில் இருந்து அரை கிறுக்குதனம் மிக்க இலட்சியவாதிகளின் கனவு தான். அதை கேள்விக்குட்படுத்துவது எப்போதும் நடப்பது தான். அந்த குரலுடன் பெண்ணியவாதி, புத்தக புழு(பிறிதொரு பொருளில் அறிவுஜீவி) என்ற அடையாளங்கள் உள் நுழைகையில் அரசியல் மற்றும் சமூக தளத்தில் சுதந்திரம் பெற வழி செய்யும் இயக்கங்களுக்கிடையில் ஒருவர் தன்னுடைய இலட்சியங்களை, மேன்மையான மென்மைகளை தொலைத்துவிட வேண்டுமா என்ன? கவிதைச்சொல்லி அப்படியல்லவென்று மன்னிப்புடன் வந்து நிற்கிறாள்.

5

உறவுகளுக்கு இடையிலான நெருக்கத்தை, புரிதலின்மையின் தொலைவை தொடர்ந்து கவிதையில் பேசுகிறார். அங்கெல்லாம் கவிதைச்சொல்லி ஒரு பெண்ணாக வருகிறார். பெண் கவிஞரின் மொழி அப்படி தானே இருக்க முடியும் என எண்ணுவதை விமர்சிக்கும் தொனியில் குடிவிதி என்றொரு கவிதையும் உள்ளது. ஆயினும் பெண் என்ற தன்னிலையில் கவிதை ஒலிக்கையில் பெண்களின் பார்வையில் இருந்து உறவுகளின் சிக்கல் பேச தொடங்குகிறது. உச்ச நிலையில் பாலின அடையாளத்தை களைந்து கொள்கிறது. அல்லது அவரே ஒரு கவிதையில் சொல்வது போல பின் பால் உயிரியாக மாற்றம் காண்கிறார்.

இன்று உறவின் பொருளைத் தொடர்புறுத்தல்

அவன் அவளுக்குப் புத்தாண்டு வாழ்த்து அனுப்பினான்
அவள் அவனுக்குப்
புத்தாண்டு வாழ்த்து அனுப்பினாள்
ஒரு சாவுச்
செய்தியை அவள் அவனுக்கு அனுப்பினாள்
பதிலுக்கு அவள் ஒரு சோக எமோஜியை அனுப்பினான்
அதில் ஒரு சொட்டுக் கண்ணீர் வடிகிறது
அவள் அந்த எமோஜியை மின்திரையில் உருப்பெருக்குகிறாள்
அந்தக் கண்ணீரின் உப்பைச் சுவைக்கத் துடிக்கிறாள்
அவனுக்கு அந்த எமோஜி போல அத்தனை வட்டமான
முகமில்லை
என்றாலும்
அது கண்களைச் சுருக்கிக்கொள்ளும் விதம்
அவனைப் போன்றே இருக்கிறது
அவள் நெஞ்சம் விம்முகிறது
பதிலுக்கு வேறொரு கண்ணீர் எமோஜியை அவள்
அனுப்புகிறாள்
இரண்டு கண்களிலும் தாரை தாரையாகக் கண்ணீர்
அவனிடமிருந்து பதில் வரவில்லை
இங்கே பகல்
அங்கே இரவு
அவன் தூங்கப்
போயிருக்க வேண்டும்
இரண்டு கண்களிலும் நீரைக் கொட்டும் எமோஜி
சுமாராக இருக்கும் அவளைவிடப் படு சுமார்
ஆனால் வேறென்ன தேர்வு இருக்கிறது ?

தொலைவில் இருந்தாலும் நெருக்கத்தில் இருக்கும் மாயை வழங்கும் தொழில்நுட்ப உதவியுடன் உறவுகளின் தொடர்புறுத்தலை சொல்லும் கவிதை ஒவ்வொன்றும் சம்பிரதாயமான அர்த்தத்தை பெற்று உணர்விழந்து போவதை உணர்த்துகிறது. சூரிய மறைவு பிரதேசங்களில் வாழும் இருவர் கொள்ளும் தொடர்பாடலாக குறுகி நிற்கும் அவநம்பிக்கையின் சித்திரத்தை வழங்கும் கவிதைகளில் ஒன்றிது. ஆனால் அவநம்பிக்கை கொள்ளுதல் இக்காலக்கட்டத்தின் மைய பெரும்போக்கில் இருந்து உறவுகளின் அந்தரங்கம் வரை பரவி வளர்வதை காண்கிறோம். பறவை பாம்பான கதை கவிதையில் அவநம்பிக்கையின் ஒரு கல் பட்டு பறத்தல் ஊர்தலாக்கியது என்று எழுதுகிறார். அதன் விரிவான வடிவமாக, அவநம்பிக்கையில் தொடங்கி ஆற்றாமையில் முடிவதாக இக்கவிதையை  பார்க்கலாம். அவன், அவள் என்ற பதங்கள் ஆண் – பெண் இணையர் என்ற சித்திரத்தை கொடுப்பதாக இருந்தாலும் தலைப்பை நோக்கும்போது நவீன காலத்திய உறவுகள் பலவற்றுக்கும் பொருந்தும்படி இருக்கிறது. அதே சமயம் குறிப்பாக காதலர்களை குறித்த கவிதைகள் கணிசமாக உள்ளன. அதிலொன்று,

காவிய வரலாற்றில் இடம்பெறாத காதலர்களின் கதை

தனித் தனிப் படகில்
அவர்கள் சென்றார்கள்
மனத் துணையை
நட்டாற்றில் எறிந்தார்கள்
ஒருவேளை
தப்பிப் பிழைத்து
கரையேறப் பார்த்தால்
தத்தம் துப்பாக்கிகளால்
குறி தவறாமல் சுட்டுவிடத்
தயாராக இருக்கிறார்கள்
ஒருவேளை
ரத்தக் களரியாக
கரை சேர்ந்துவிட்டால்
தோண்டிப் புதைக்க
அவரவர் கோடாலிகளோடு
காத்திருக்கிறார்கள்

கொசு என்றொரு குறுங்கதை எழுதியிருக்கிறார். அக்கதையை நினைவுப்படுத்துவதாக உள்ளது இக்கவிதை. காவியங்கள் முடிந்து மதிப்பீடுகளை விசாரணைக்கு உள்ளாக்கும் நாவல்களின் காலம் என்றே இதனை சொல்கிறோம். அப்படிப்பட்டவர்களின் காதலின் கொலைவெறியை பாடுகிறது. அந்த கொலைவெறி – காதல் வெறி என்று நாகரீகமாக அழைக்கவும் செய்யலாம் – உருவகமாக சொல்லும் இக்கவிதையுடன் அதன் வேறு வண்ணங்களை சொல்லும் ஒரு நினைவூட்டலின் விலை, கடைசியாக, ஒரு ஆணுடன் கிடப்பது எப்போதாவது தேவையாக தான் இருக்கிறது, சொன்னால் வருத்தமாக இருக்கும், டூரிஸ்ட்டாக இருத்தல் என ஒரு நிறை கவிதைகளை வாசிக்க முடிகிறது. இவற்றில் பொதுவாக பயின்று வரும் உணர்வாக மனங்களின் புரிதலின்மையால் பிரிந்து தவிக்கும் ஆற்றாமையை குறிக்கலாம். டூரிஸ்ட்டாக அனுபவித்தல் போன்ற தலைப்புகளே அவ்வளவு லகுவான தன்மையின்மையை விமர்சிப்பதாக உள்ளன. அரிதாக இருவர் கண்ட ஓர் உறவு போன்றொரு கவிதையில் கசப்பின்றி ஒருமிக்கும் சில தருணங்களும் வருகின்றன. அப்போது கவிதை சொல்லி பெண்ணில் இருந்து வேறொன்றாக மாறி கொள்கிறாள்.

…பெண்ணை ஆண் இறுக்குவதுபோல
பெண்ணிடம் ஆண் முன்னேறிக் காட்டுவதுபோல
நிசத்தில் இங்கே
அவள் வலுவில்
அவனையும் முன்னேற்றினாள்
கண்மூடாக் கலை
வித்தற்ற ஒரு புள்ளி
சின்ன நிறுத்தம்
இன்னும் கூச்சப்பட்டான்
பெண்ணிடம் மட்டுமே கூச்சப்படுவேன்
என்று அவளில் குழைந்தான்
அவள் பெண்ணா
யாருக்குத் தெரியும்
அவளுக்கும் வெட்கம் வந்தது
அவள் பெண்ணென்று அது வரவில்லை.

ஒரு நெருக்கத்தில் பால் அடையாளங்கள் கரைந்து விடுதலை பெறும் கணம் என்று வாசித்தேன். கடைசி மேசையில் ஓர நாற்காலி என்ற கவிதை அருகருகே இருந்தும் அடையாளம் காண முடியாமல் தொலைந்து போய்விட்டவர்களை காட்டுகிறது.

…நானன்றி எவள் உனக்கு இன்பத்தைத் தர முடியும்
“தள்ளிப் போ இல்லையென்றால்
செக்யூரிட்டியைக் கூப்பிடுவேன்”
யாரையேனும் கூப்பிடு நான்தான் இவள்
இவள் இல்லை நான்தான் இவள்
நீ நீ என்றால் நான்தான் இவள்
ஒரு கணம் அவன் மறுப்பேதுமின்றி
என் கரங்களைத் தொடுகிறான்
என்னிடுப்பை வளைக்கிறான்
“என்னாயிற்று, ஏன் எங்கோ பார்க்கிறாய்”
கடைசி மேசையில் ஓர நாற்காலியில்
ஷூவைச் சரிசெய்தபடி நிமிர்கிறாள் ஒருத்தி
எங்களைப் பார்த்தும் பாராது பின்னர்
வெளியே நடக்கிறாள்.

இக்கவிதையை உடனடியாக பெருந்தேவியின் ஜானுவும் ராமுவும் குறுங்கதையை நினைவூட்டியது. விலகி செல்லும் உறவுகளின் கட்புலனாகா விரிசல்.

6

ஆண் – பெண் காதல் உறவுக்கு பக்கத்திலேயே பெற்றோரும் அத்தையரும் அண்டை அயலாரும் கவிதைகளில் இடம்பெறுகிறார்கள். உறவுகள் இன்பத்தை கொடுக்கின்றனவோ இல்லையோ, நெருடலை, துயரத்தை கையளித்து செல்வதை பெருந்தேவியின் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.

அப்பா
இறக்கும்போது பொட்டலமாய்ச்
சுருங்கிய உடலோடு
பரலோகம் என்று ஒன்றிருந்தது
அங்கே அவர் சென்றிருந்தால்
முடிந்தவரை தன் குச்சிக் கைகளால்
அங்கிருந்து அதிசயமாக நீளும் கைகளைத்
தடுத்துக் கொண்டிருப்பார்
அவளுக்கு எதையும் தராதிரும்
முட்டாள் பிழைத்துப் போகட்டும்

*

அம்மா நீ இருக்கிறாயா இல்லையா
இருக்கிறாய் என்றால் சொர்க்கத்திலா நரகத்திலா
சொர்க்கத்தில் இருந்தால் என்னை மறந்திருப்பாய்
நரகத்தில் என்றால் இந்த அரைகுறைக் கடிதத்தை
நானே தான் நேரில் வந்து தரவேண்டும்
அம்மா இப்போதெல்லாம்
உங்கள் மகளாக என் இருப்பு
காற்றாக மட்டுமே அலைகிறது
நம் வீட்டில்
தேயொலியோடு
இறக்கைகள் அசையாது அசையும்
மேற்கூரையின் மின்பறவையைப்
பார்த்தப்படியே ஆமோதிக்கிறேன்
என்ன வெக்கை

ஆச்சி

…வீட்டின் கடைசி முற்றத்தில்
இருக்கும் கிணற்றோடு
அவள் கண்களையும் சேர்த்து
மொத்தம் மூன்று கிணறுகள்
நம்மை உற்றுப் பார்ப்பவை
அவற்றின் அகாலத்திலிருந்து
ஒரு கொடி நீண்டு
என் காலத்தைக் கைப்பற்றுவதற்குள்
நகர்ந்துவிட்டேன்

அப்பா, அம்மா, ஆச்சி என மூவருமே நமக்கு மிக நெருக்கமான உறவுகள். இந்த உறவுகளை பற்றி பொது கற்பிதம் எப்போதும் உயர்வு நவிற்சி மிக்கதாக இருக்கிறது. அடிப்படை உயிர் வாழ்வின் ஆதாரங்களாக திகழ்வதால் அப்புனிதத்தை அடைவது இயல்பும் கூட. கற்பனவாத புனிதத்தன்மைகள் எப்போதும் யதார்த்தத்தில் இருந்து விலகியவை. அடைய வேண்டிய இலக்காக கனவு நிலையில் ஒரு சமூகத்தால் பேணப்படுபவை. நவீன இலக்கியம் யதார்த்தத்தின் சிடுக்குகளையும் எதிர்மறை தன்மைகளையும் உடன் சேர்த்தே பேசுகிறது. ஆனால் அப்படி நடைமுறையில் இவ்வுறவுகளில் உள்ள எதிர்மறை அம்சத்தை பேசும்போது கூட, உயர் அழுத்த சூழல் ஒன்று அதன் மின்புலமாக அமைவதை பெரும்பாலும் காணலாம். பெருந்தேவியின் கவிதைகள் முக்கியமாக வேறுபடுவது இந்த புள்ளியில் தான் என்று நினைக்கிறேன். அப்பா பொட்டலமாக, அம்மா மின்பறவையான மின்விசிறியாக, ஆச்சி அன்றாடம் நீர் சேந்தும் கிணறாக மிக சாமன்யமான புழக்க தளத்து அடிப்படை பொருள்களோடு தொடர்புறுத்தப்படுகிறார்கள். இத்தொடர்புறுத்தல் அன்றாடம் நடந்து வன்முறை என தோன்றாத அளவுக்கு சென்று விடும் நுண் வன்முறைகளை, வாழ்வின் பகுதியாகி விட்ட தினச் செயல்பாடுகளை நோக்கி கவனத்தை கோருகிறது.

சக்திவேல்

இம்முன்றும் கவிதைகளும் சரி, அத்தைகளும் பிற உறவுகளும் வரும் கவிதைகளிலும் அனைவருமே இறந்தவர்களாகவே இருக்கிறார்கள். உறவுகள் காணாமல் ஆகும் தனிமையின் திசை வழியென நினைத்து கொள்கிறேன். அண்டை அயலார் வரும் கவிதைகளிலும் அதே தனிமை உணர்வு பிரதிப்பலிப்பதை காண்கிறோம்.

7

இப்பாதையில் தனியாகச் செல்கிறேன்
இங்கே நிலவு வருவதில்லை
ஆனால் பாதை பொய்யில்லை
நான் நடந்துகொண்டிருப்பதும் நிஜம்தான்
இந்தக் கரடுமுரடான பாதை
மீன்களற்ற ஆற்றையோ
கைவிடப்பட்ட சினிமா தியேட்டரையோ
காலம்காலமாக ஓடும் சாக்கடையையோ
நிச்சயம் சென்றடையும்
எனக்கொரு இலக்கு இருக்கிறது
என்னை 98911 பேர் ஃபேஸ்புக்கிலும்
ஒரு லட்சத்தி ஆறு பேர் இன்ஸ்டாவிலும்
தொடர்கிறார்கள்
ஆனால்
இப்பாதையில் தனியாகச் செல்கிறேன்
கால்வலிக்கும்போது நிற்கிறேன் அப்போதெல்லாம்
ஒழுங்கற்ற புதர்களையும்
செல்ஃபோன் கோபுரங்களையும்
எப்போதாவது
பாதையைக் கடக்கும் ஓணான்களையும்
தலைக்கு மேல் பறக்கும் ட்ரோன்களையும்
நிழற்படம் எடுத்து பகிர்கிறேன்
ஆனால்
இப்பாதையில் தனியாகச் செல்கிறேன்
என்னை போல் கோடானுகோடி பேர்கள்
தனியாகச் செல்லும் பாதையில்
ஒரு சின்னக் குத்துக்கல்லோடு
செல்ஃபி எடுக்க
ஒரு அடி பின்னால் நகர்ந்த ஒருவன்
நான் வருவதைப் பார்க்காமல்
இடித்துக் கீழே தள்ளிவிட்டான்
தன்னந்தனியாக செல்லும் பாதையில்
தன்னந்தனியே சென்றாலும்
தன்னந்தனியேச் செல்பவர்களால்
ஆபத்து வந்துவிடுகிறது
ஆனால் வேறு பாதையில்லை

இருப்பின் நிகழ்தகவு, நினைவு பழக்கம், பாழ்பற்றி சலிக்கும் இந்நகரத்தில் என வேறு பல பெருந்தேவியின் கவிதைகளையும் நினைவுப்படுத்தும் கவிதை இது. இவற்றின் மைய உணர்வு தனிமை. கடவுளால், இயற்கையால், உறவுகளால் என யாவராலும் கைவிடப்பட்ட அவநம்பிக்கையின் சாயல் படிந்த நவீன மனிதனின் தன்னந்தனி பயணத்தையே பெருந்தேவியின் கவியுலகின் மைய ஓட்டமாக இருக்கிறது. அவன் முழு மறுப்புக்கும் முழு ஏற்புக்கும் இடையில் இருளில் ஊசலாடுகிறான். இரவுகளில் கணினி திரையின் மேல் பறந்தமரும் கொசுவை போல ஒளியை கண்டு அறியவோ அடையவோ முடியாது திணறும் தேடுதலின் தவிப்பை உணர்த்தும் கவிதைகள். அந்த உலகத்தில் கவிதை ஒரு ஆசிர்வாதமாக இருக்கிறது. ஏதும் செய்யாவிட்டாலும் ஒரு முத்தத்தை பறக்கவிடுகிறது. அந்த முத்தம் ஒரு உயிர்தெழலாக உலகளத்தலாக இருப்பதை காண்கிறோம். நொடி நேரத்திற்கு மட்டும்.

உலகளத்தல்

கவிதை
உலகை அளக்கிறது
நான்கு வரியில்
எவர் தலையிலும் அடி வைக்காமல்
எவரையும் பாதாளத்துக்குள் அழுத்தாமல்
கவிதை உலகை
(அதன் பொழுதுபோக்காக)
அளக்கும்போது
ஒவ்வொன்றுக்கும்
உயரம் தருகிறது
எவரும் காணாத
அதன் தலை
மேகக்கூட்டங்களுக்குள்
புதைய
அர்த்தம் மின்னிமின்னி
அந்தக் கிரணக்
கண்ணாமூச்சி
ஆட்டத்தில்
பொம்மைகள் நாம்
உயிர்வசப்பட்டோம்

**********

One Comment

Leave a Reply to கோ.புண்ணியவான் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *