பெருந்தேவியின் நட்பு

(பெருந்தேவி சிறப்பிதழ் என்று நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டபோதே மிகுந்த மகிழ்ச்சியுடன் கவிஞர்கள் இசை, சாம்ராஜ் இருவரும் இணைந்து நேர்காணல் செய்துதருவதாக ஒத்துக் கொண்டார்கள். உடன் சிங்கப்பூரைச் சேர்ந்த எழுத்தாளர், இதழாளர் லதாவும் இணைந்து கொள்வதாகச் சொன்னபோது மேலும் சிறப்பாக அமையும் என்று தோன்றியது. ஆனால் ஜூம் செயலியில் பெருந்தேவி நேர்காணல் செய்வதை விரும்பவில்லை. அவர் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா வரும்போது நண்பர்களை நேரில் சந்தித்து நேர்காணல் தருவதாக வாக்கு கொடுத்தார். நேரில் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனும் இணைந்து கொள்வதாகச் சொல்லியிருக்கிறார். நேர்காணல் வழியாகத் துலங்கி வருவது எழுத்தாளரின் ஆளுமை தான். அது அவரின் எழுத்துலகைப் புரிந்து கொள்வதற்கான ஒரு வாயிலும் கூட. அதனால் இந்த சிறப்பிதழில் பெருந்தேவியின் ஆளுமைச் சித்திரம் வெளிப்படும்படி அவரின் நட்புகளான பயணிதரன், தி. பரமேசுவரி, அரவிந்தன், சித்ரா பாலசுப்ரமணியன் ஆகியோருடைய பெருந்தேவியுடனான நட்பு குறித்த அனுபவக் கட்டுரைகள் புதிய முயற்சியாக வெளிவந்துள்ளன. பெருந்தேவியின் நேர்காணல் அடுத்த நீலி இதழில் வெளிவரும்)
-நீலிமின்னிதழ்
(1)
விளிம்பில்லா வட்டம்
-பயணி தரன்
அந்த நடிகை நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் என்றுதான் முதலில் நினைத்தேன். “அவங்க யாரு?” என்ற போது, “பெருந்தேவி” என்றார்கள்.

எண்பதுகளின் நடுவிலிருந்து நவீன நாடகத் துறையில் நான் இரண்டு வேலைகள் செய்தேன். எங்கள் ‘ஐக்யா நாடகக்குழு’ வழியாக நாடகங்களை உருவாக்குவது (இயக்கம், நடிப்பு, ஒளி இயக்கம்), பிற நாடகக் குழுக்களுக்கு ஒளி இயக்கம் செய்து தருவது.
இந்த இரண்டாவது வேலையில், பல நாடகக் குழுக்களின் நண்பர்களும் பரிச்சயம் ஆனார்கள். அப்படி இன்னொரு குழுவின் ஒரு நாடக நடிகையாகத் தான் எனக்குப் பெருந்தேவியைத் தெரியவந்தது. தெளிவான உச்சரிப்பு. வசனம் – நடிப்பு எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை. கூடவே, மேடையிலும் அதற்கு வெளியேயும் என்று தனித்தனியே இரண்டு பேர் இருப்பது போன்ற ஒரு தோற்றம்.
அப்போதெல்லாம், நாடகம் நடக்கும் நாளில் தான் ஒளி இயக்குநருக்கு விளக்குகளும் அவற்றை இயக்கும் கட்டுப்பாட்டு அமைவும் (lighting console) கிடைக்கும். அது வரை, மனதிலும் காகிதத்திலும் ஒளியமைப்பை உருவாக்குவதும், இயக்குநருக்கும் முக்கிய நடிகர்களுக்கும் ஒளியமைப்பு இப்படி இருக்கப்போகிறது என்று விளக்குவதும் நடக்கும்.
நடிகர்களுக்கும் முன்கூட்டியே விளக்குவது அவசியம். எடுத்துக்காட்டு: ஒரு நாடகத்தில் நீதிபதியாக வந்து அநீதி செய்யும் பாத்திரத்தை, அது நீதி அமைப்பின் ஒட்டுமொத்த – முகமற்ற – அநீதி என்கிற அளவில், முற்றிலும் இருட்டில் வைத்து அவருக்குப் பின்னால் பளிச்சென்று ஒளி பாய்ச்சி, அவருடைய நிழலுருவக் கோடு (silhouette) மட்டும் தெரியும்படி அமைத்தேன். எல்லோரும் பாராட்ட, அந்த நீதிபதியாக நடிப்பவர் மட்டும் உக்கிரமாக மறுத்து வாதாடினார். கடைசியில் என்னிடம் தனியாக வந்து, தான் வசனங்கள் எதையும் மனப்பாடம் செய்யவில்லை என்றும், வழக்குக் கட்டுகளாக இருக்கும் மேடைப் பொருளில் வசனங்களை எழுதிவைத்துப் படிக்க நினைத்திருந்த அவருடைய பிரகாசமான திட்டத்தை இருட்டடிப்புச் செய்யவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். ஆனால், பெருந்தேவிக்கோ ஒளிப் பிரச்சனை இருந்தது.
அவருடைய பாத்திரம் சந்தித்த ஒரு கோர நிகழ்ச்சியைத் தரையைப் பார்த்தபடி விவரிக்கும் கட்டத்தில், அவருடைய காலருகே அமைத்திருந்த விளக்கின் ஒளி ஒரு தீச்சுவாலை போல உக்கிரமாகும், ஆகவே, அவர் நேரடியாக விளக்கைப் பார்த்துப் பேசாமல், விளக்கின் பக்கவாட்டில் பார்வையைப் பதித்தால் கண் கூசாது என்று விளக்கினேன். “சரி, ஞாபகம் வெச்சிக்கிறேன்” என்றார். அந்தக் காட்சி, சிக்கல் இல்லாமல் நகர்ந்தது.
எங்களுடைய ஐக்யா நாடகக் குழுவில், சுரேந்திர வர்மா எழுதிய ‘சூரியனின் கடைசி கிரணத்திலிருந்து முதல் கிரணம் வரை’ நாடகத்தை நான் இயக்கினேன். அதில் மகத்தரிகா பாத்திரத்தில் நடிக்கப் பெருந்தேவியை அழைத்தோம். முதல் சில ஒத்திகைகள் நாடக மேடையின் பொம்மை வடிவில், கதாபாத்திரங்களாக இருக்கும் சதுரங்கக் காய்களை நகர்த்தியபடி நடிகர்கள் வசனங்களைப் படிப்பதாக இருந்தன. கூடவே, “நான் மேடையின் பின் பக்கத்திலிருந்து ராணியைக் கடந்து முன் பக்கம் வந்து…” என்று அவர்களுடைய நகர்வையும் சொல்ல வேண்டும். இந்தக் கட்டத்தில் பெருந்தேவியின் உரையாடல்களின் கூர்மையும் கூடவே வால்தனமும் தெரிய ஆரம்பித்தது. மேடையிலும் அதற்கு வெளியேயும் என்று தனித்தனியே இரண்டு பேர் இருப்பது போக, இதற்கு இடைப்பட்ட தளங்களிலும் இன்னும் சில பெருந்தேவிகள் இருப்பது போன்ற ஒரு தோற்றம்.
அந்த நாடகத்தில் பெருந்தேவியின் பாத்திரம் வரும் காட்சிகள் மிகத் தீவிரமான உணர்ச்சிகளை வெளிக்கொணர்பவை, நீண்டவை, பெரிய பெரிய வசனங்கள் கொண்டவை. சிக்கல் ஏதுமின்றி ரசித்துச் செய்தார். ராணியாக நடித்த உஷாவுடன் சேர்ந்து அந்த நாடகத்தின் முக்கிய விஷயங்களை உரக்க ஒலிக்க வழிகாட்டினார். கூடவே, இவர்கள் இருவரும் பேசி வைத்துக் கொண்டு ஒரு வால்தனம் செய்தார்கள். ஒத்திகையின்போது ராஜாவோடு ராணி கண்ணோடு கண் பார்த்து வாதிடும் முக்கியமான காட்சியில் ராணி ராஜாவைப் பார்த்துக் கிண்டலாகக் கண்ணடித்துச் சிரிக்க, அடுத்தடுத்த ஒத்திகைகளில் அந்தக் காட்சியில் எல்லோருமே அடக்கமுடியாமல் சிரிக்கும்படி ஆகிவிட, நிறையச் சிரமப்பட்டு அந்தக் காட்சியை மீட்டு வரவேண்டியிருந்தது.
நீண்ட நேர ஒத்திகைக்குப் பிறகு தெருமுனைக் கடையில் ஒரு டீயும், வசதி இருந்தால் இரண்டு பட்டர் பிஸ்கட்டுகளும் தின்று விடைபெற்ற நாட்கள் அவை.
அடுத்த ஐக்யா தயாரிப்பான விஜய் தெண்டுல்கரின் “அமைதி! அமைதி! கோர்ட் நடக்கிறது” நாடகத்தில், பெருந்தேவி முக்கியப் பாத்திரம். அந்த நாயகிக்கு ஒரு பெரிய monologue (ஒரு பாத்திரம் மற்ற பாத்திரங்களுடனோ, பார்வையாளர்களுடனோ நீண்ட வசனம் பேசுவது) உண்டு. அது அவளுடைய வாழ்க்கைக் கதையின் ஒரு பார்வை. நான் அதை soliloquy (ஒரு பாத்திரம் தனக்குத் தானே பேசிக்கொள்ளும் நீண்ட வசனம்) போல ஒளியமைப்பால் மாற்ற விரும்பினேன். ஒத்திகையில் அவர் மற்ற பாத்திரங்களைப் பார்த்துப் பேச முயன்ற போது, அது Spot Light காட்சி என்று விளக்கி, கூடவே, frensnel விளக்குக்கும் spot விளக்குக்கும் உள்ள வேறுபாட்டைச் சொன்னேன்:
Spot Light என்பது தெளிவான, கூர்மையான ஒளிக் கற்றையை உருவாக்கி கறாரான விளிம்பு கொண்ட வட்டத்துக்கு மட்டும் தீர்க்கமான ஒளியைத் தரும். ஆனால் Fresnel Light என்பது வட்டத்தின் விளிம்புகள் நிழலுடன் கரையும் இதமான ஒளியை உருவாக்கும். முக்கியமான விஷயத்தை நோக்கி கவனத்தைக் குவித்தாலும், அதை அந்த விளிம்புக்குள் நிறுத்தி தனிமைப் படுத்தாது. பல Fresnel விளக்குகளைக் கொண்டு, தொடர்ச்சி நீங்காத ஓர் ஒளிப் பகுதியை உருவாக்கிவிட முடியும். “ஆனால், இந்தக் காட்சியில் நாம் பயன்படுத்தப் போவது ஸ்பாட்லைட்,” என்றேன்.
அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, நான் மேடையில் ஒளியமைப்புக்காக நிற்கும் தருணங்களில் பெருந்தேவி கம்பீரமாக நடந்துவந்து எல்லோரும் பார்க்கும்படி தவறாமல் கேட்கும் கேள்வி, “தரன், இந்த சீன்ல எனக்கு Spot Lightஆ, Fresnelஆ?” நாங்கள் இரண்டு பேரும் சிரிப்போம்.
1993ஆம் ஆண்டு டிசம்பரில் ‘சூரியனின் கடைசி கிரணத்திலிருந்து முதல் கிரணம் வரை’ நாடகத்தை மதுரையில் நடத்த அழைப்பு வந்தது. எல்லோரும் ரயிலில் ஒன்றாக பாட்டுக்கள் பாடியபடி, Dumb Charades ஆடியபடிப் பயணித்ததும் வெளியூரில் வந்து நாடகம் போடும் அனுபவமும் நாடகம் நிகழ்ந்து முடிந்ததும் நள்ளிரவில் இட்லியும் தோசையும் பரோட்டாவும் சாப்பிட்டபடி நாடகத்துக்கு வந்த உற்சாகமூட்டும் பின்னூட்டங்களைப் பகிர்ந்துகொண்டதும் நினைவிருக்கிறது.
இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜூலையில் அந்த நாடகத்தைக் கோவையில் நடத்த அழைப்பு வந்தது. இன்னும் குதூகலத்துடன் தயாரானோம். மீண்டும் சில ஒத்திகைகள் பார்த்து நிகழ்வைச் செப்பனிட்டோம். நாடகத்துக்குச் சில வாரங்கள் இருக்கும்போது அந்தத் தொலைப்பேசிச் செய்தி வந்தது. பெருந்தேவி ஸ்கூட்டியில் போகும்போது கீழே விழுந்து கையை உடைத்துக்கொண்டு மருத்துவமனையில் கைக்கட்டுடன் படுத்துவிட்டார்.
ஐக்யா நண்பர்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து பழமெல்லாம் வாங்கிக்கொண்டு மருத்துவமனை சென்று அவரின் நலம் விசாரித்தோம். சூழலில் சோகம் கவிந்திருந்தது. விபத்து நடந்த நிகழ்ச்சியை எங்களுக்கு விளக்கத் தொடங்கினார் பெருந்தேவி. “அது நல்ல மாடு மாதிரி தான் ரோட்டோரத்தில் நின்னுக்கிட்டு இருந்தது” என்று அவர் சொன்னதும் நாங்கள் எல்லோரும் சிரித்த சிரிப்பில் நர்ஸ் வந்து வியப்புடன் எங்களைப் பார்த்தார். வலியில் இருந்த பெருந்தேவி தான் மிக உரக்கச் சிரித்துக்கொண்டிருந்தார். நாங்கள் மருத்துவமனையிலிருந்து துரத்தப்பட்டோம். (பிறகு நான் கம்பெனி கதாநாயகிக்குக் கை உடைந்த பிரச்சனையைத் தீர்ப்பதில் இறங்கினேன். நல்லகாலமாய் ஐக்யா நாடகக்குழுவின் வைதேகி, குறுகிய காலத்தில் அந்தப் பாத்திரத்தை நடித்துக்கொடுத்தார்.)
அடுத்த ஆண்டில் நான் குடிமைப்பணித் தேர்வில் மும்முரமானேன். 1996இல் தேர்ச்சி பெற்று, இந்திய அயலுறவுப் பணி (Indian Foreign Service) அதிகாரியாக சென்னையை விட்டு வெளியேற வேண்டிய நேரம். நிறைய விஷயங்களுக்கு, ’கடைசியாக ஒரு முறை,’ ‘இன்னும் ஒரு முறை’ என்று விடை கொடுக்கவேண்டிய நிலை. ஐக்யா நாடக நிகழ்வுகளும் நின்றன. (ஐக்யா நிகழ்வுகளாக ஹாங்காங் ஆண்டுகளின் போது அங்கிருந்த நண்பர்களுடன் பல நாடகங்களை நிகழ்த்தினாலும், சென்னை நண்பர்கள் குழுவுடன் படைப்பாக்கத்தில் ஈடுபட முடியவில்லை.)
ஆனால், இந்தக் காலகட்டத்தில் பெருந்தேவியை நாடகத்துறை என்னும் வட்டத்துக்கு வெளியிலும் எனக்குத் தெரிந்திருந்தது. வீட்டுக்கு வருவார். எல்லோருடனும் அரட்டை. அவர் வீட்டுக்கும் நான் போய் அவருடைய அப்பாவைப் பார்த்துப் பேசியிருக்கிறேன். பெருந்தேவியும் குடிமைப்பணித் தேர்வுக்குப் படித்தார் என்பதைத் தெரிந்துகொண்டேன். அவர் அண்ணாசாலையில் AG அலுவலகத்தில் வேலையில் இருந்தார் என்று நினைவு. நான் ஆனந்தவிகடன் அலுவலகம், அமெரிக்க, பிரிட்டிஷ் நூலகங்கள் என்று திரியவேண்டியிருக்கும். சமயங்களில் டீக்கடைகளில் சந்திப்போம். அவர் வெளிநாட்டுக்குச் சென்று படிக்கத் திட்டம் இருப்பதாகச் சொன்னது அப்போதுதான் என்று நினைக்கிறேன். தமிழ் இலக்கியம் பேசுவோம். நவீன இலக்கியமும். அப்போதும் பெருந்தேவி என்கிற கவிஞரை எனக்கு அவ்வளவாகத் தெரியாது. ஒரு சந்திப்பில், அவருடைய முதல் கவிதைத் தொகுப்புக்கு எழுதி வைத்திருந்த முன்னுரையைக் காட்டினார்.
அதற்குப் பிறகான பல பத்தாண்டுகள்—இன்று வரை—விளிம்பில்லா வட்டங்களைக் கொண்ட ஒளிப் பகுதியாகத்தான் நீளுகின்றன. என்னுடைய தொழில்முறை நாடோடி வாழ்க்கையும், அவருடைய வாழ்வின் பன்முக விரிவும், உலகின் எதிரெதிர் மூலைகளுக்குப் புவியியல் பிரித்துப்போட்ட பணிகளும் என்று பல காரணிகள். என்னுடைய பல நண்பர்களுடன் இருந்த உறவு மாற்றங்களிலும் இந்த விஷயங்கள் பங்களித்தாலும், பெருந்தேவியுடன் இருக்கும் நட்பில் ஒரு சுவாரஸ்யம்: இரண்டு பேரும் இது குறித்து அதிகம் அலட்டிக்கொள்வதில்லை.
எப்போதாவது—நிஜமாகவே எப்போதாவது தான். ஆண்டுக்கு ஒரு முறை கூட கிடையாது—பேசிக்கொள்வோம். “இன்னும் ஹாங்காங்கில் தான் இருக்கீங்களா?” என்பார். “அய்யே! அது முடிந்து தில்லி வந்து, அதுவும் முடிந்து, இப்போ பெய்ஜிங்கில் இருக்கேன்” என்பேன். “நான் ஃபிஜித் தீவுகள் முடித்துவிட்டு இப்போது அமெரிக்காவில் இருக்கேன். வாஷிங்டன் டிசி. நீங்களும் இங்கே தானே எங்கயோ வேலை செய்யறீங்க?” என்பேன். “போச்சுடா! எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்? நான் இருக்கிறது நியூயார்க் பக்கத்துல,” என்பார். ஒரு நண்பருடன் எங்களின் வாஷிங்டன் வீட்டுக்கும் வந்திருந்தார். புவியியல் தான் காலத்தின் பள்ளத்தில் விழுந்து தடுமாறும். பேச்சின் பொருள் என்னவோ நேற்று தான் ஒரு திண்ணையில் உட்கார்ந்து பேசிவிட்டுப் பிரிந்தமாதிரி இயல்பாக இழையோடும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை பேசும் போது, “நான் சென்னைக்குப் போகிறேன்,” என்று சொன்னேன். “நான் சென்னையில்தான் இருக்கிறேன்,” என்றார். “தனியே சந்தித்துப் பேச நேரம் இருக்காது, இது பல நண்பர்களும் சந்திக்கும் ஒரு நிகழ்ச்சி தான், ஆனாலும் வாருங்கள், சந்தித்துவிடுவோம். பின் வரும் நாட்களில் நேரம் கிடைத்தால் மீண்டும் தனியே சந்திப்போமே?” என்றேன். பல நண்பர்கள் கூடி பாட்டும் உணவும் நாட்டியமுமாய் இருந்த ஒரு மாலையில் தன்னுடைய கவிதைப் புத்தகங்கள் இரண்டைக் கொடுத்தார். “நீங்கள் உங்களுடைய முனைவர் பட்ட ஆராய்ச்சியை நூலாக எழுதிப் பதிப்பித்தால், கேரட் அல்வா செய்து தருகிறேன்,” என்றும் சொன்னேன். அது தான் நாங்கள் கடைசியாகச் சந்தித்தது என்று நினைக்கிறேன்.
அவருடைய ஆழமான கவிதைகளையும் நுணுக்கமான குறுங்கதைகளையும் ஒளிமிகு கட்டுரைகளையும் கிடைக்கும்போதெல்லாம் படித்து விடுவேன். என்னுடைய முதல் இரண்டு நூல்களுக்கும் அட்டையும் உள் வடிவமைப்பும் நானே செய்தேன் என்பதை அறிந்து, அவருடைய உலோகருசி கவிதைத்தொகுப்புக்கு அட்டை வடிவமைப்பு செய்ய முடியுமா என்று வினவினார். அப்போது மட்டும் ஒவ்வொரு கவிதையாகப் பேசினோம். உலோக ருசி என்று பிரித்து எழுதுங்கள் என்று நான் கேட்டுக்கொண்டதற்குத் தயக்கமே இல்லாமல் முடியாது என்று சொல்லிவிட்டார். அவர் விருப்பப்படியே செய்து தந்தேன். அவருடைய சில நூல்களைப் படித்ததும் பதிவு இடுவேன், பத்திரிகையில் நூல் அறிமுகமாவும் வந்தது உண்டு. மற்றபடி, அவருடன் எப்போதாவது பேசும்போது நிகழும் பொதுவான பின்னூட்டங்கள் தான். ஆனால், யாராவது தமிழில் எதிர்க் கவிதை என்று ஆரம்பித்தால், பெருந்தேவி என்று நான் ஆரம்பித்து விடுகிறேன்.

பெருந்தேவி ஃபேஸ்புக்கில் ஒரு ஷ்ரோடிங்கர் பூனை. அப்படியும் சில அரிய கணங்களில் ஓரிரு உரையாடல்கள் அதன் வழியாகவும் நடக்கும். சமீபத்தில் அவருடைய ஏதோ ஒரு பதிவுக்கு நான் பின்னூட்டம் எழுதி இருக்க, அதற்குக் கீழே அவர், “தரன், நீங்கள் அயலுறவுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் மீண்டும் நாடகங்களை இயக்குவீர்களா?” என்று கேட்டிருந்தார். அதற்கு நான், “எதிர்காலத்தை குறித்துச் சிந்திக்கும் கெட்ட பழக்கத்தை விட்டு விட, தீவிரமாக முயன்று வருகிறேன்,” என்று பதில் சொன்னேன். அதற்கு அவர் ஓர் எமோஜியை பதிலாகப் போட்டிருந்தார். அது ஆச்சரிய முகமா, சிரிக்கும் முகமா, கண்ணடிக்கும் முகமா என்று தெளிவாக நினைவில்லை. அடுத்த முறை எப்போதாவது பேசும்போது கேட்க வேண்டும்.
-பயணி தரன்
(பயணி தரன் (ஸ்ரீதரன் மதுசூதனன்): எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக ஆசிரியர். ஐக்யா நாடகக் குழுவின் வழியே நவீன நாடகங்களில் பங்கேற்றார். ‘வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை: கவித்தொகை – சீனாவின் சங்க இலக்கியம்,’ தொடங்கி, சமீபத்தில் வெளியான ‘அலியும் நினோவும்’ உள்ளிட்ட ஆறு நூல்களின் மொழிபெயர்ப்பாளர். சென்னையைச் சேர்ந்தவர். 1996-ஆம் ஆண்டில் இந்திய வெளியுறவுப் பணியில் சேர்ந்து தற்போது அஜர்பைஜானில் இந்தியத் தூதுவராகப் பணியாற்றுகிறார்.
(2)
பெருந்தேவியின் கன்னங்களில் பூக்கும் செவ்வரளி மலர்கள்
-தி. பரமேசுவரி
அடையாறிலிருக்கும் ‘ழ’ கபேவில் தான் பெருந்தேவியை முதலில் சந்தித்தேன். சில சந்திப்புகள் அப்படித்தான் மனத்தில் பசுமையாய் நின்றுவிடும். சிலர் அப்படித்தான் நம் வாழ்வில், மெல்லிய மழைத்தூறலென நுழைவர். அப்போதெல்லாம் நானொரு பேசா மடந்தை. எதற்கெடுத்தாலும் அச்சப்படுவேன் (இப்போதும்தானே என்று சிரிக்கிறது மனம்). கீதா சுகுமாரனின் கவிதை மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு; காலச்சுவடு நிகழ்வு. அந்தச் சிறிய அறையின் ஓரத்தில் நின்றபடி வேடிக்கை பார்த்திருந்தேன். சந்தித்திராத, தெரியாத, தெரிந்த முகங்கள். அவர்களில் பலரைப் படித்திருக்கிறேன். ஆனால் அருகில் சென்று பேச அச்சம். எனவே யார் கண்ணிலும் படாதவொரு இடத்தில் இருந்து பரவசமாகப் பார்த்தபடியிருக்கையில் ‘நான் பெருந்தேவி, நீங்கப்பா?’ என்று ஒரு குரல் என்னருகில் கேட்டது. திகைத்துத் திரும்பிப் பார்த்து, ஆச்சர்யத்துடனே பதில் சொன்னேன். ஏதோ சில கேள்விகள் கேட்டார், பதிலிறுத்தேன். பிறகு எப்படித் தொடர்ந்து பேசினோமென்று நினைவிலில்லை.

பெருந்தேவியை நினைக்கையில் சற்றே வளர்ந்த குழந்தையென்று தோன்றும். நல்ல குஷியான மனநிலையிலிருந்தால் ‘பரம்ஸு’ என்று கொஞ்சித் தள்ளுவார். தொடர்ந்து எழுதும்படி ஊக்கம் தருவார். செய்யாதபோது செல்லமாகத் திட்டவும் செய்வார். இப்போதுகூட, ஒரு வேலையை நான் ஒழுங்காகச் செய்து முடித்தால் ஒரு மாதத்துக்குத் தினமும் ட்ரீட் தருவதாக உறுதி சொல்லியிருக்கிறார். அவருடைய மூன்று கவிதைத் தொகுப்புகளை நான் வெளியிட்டிருக்கிறேன் என்பதை மிகப் பெருமையாகவும் மகிழ்வாகவும் நினைவுகூர்கிறேன்.
நான் ஸ்ரீவள்ளியின் ரசிகை. அது பெருந்தேவிக்கும் தெரியும். கவிஞர் பெருந்தேவி சற்று முன்னாலேயே வந்துவிட்டாரப்பா, அவருடைய அருமை பின்னால் வருபவர்கள் தான் உணர்வர் என்பார். அது உண்மையும்கூட. சிலர், பெருந்தேவியையும் ஸ்ரீவள்ளியையும் சேர்த்துக் குழப்புவதையும் கேலி செய்வதையும் பார்த்து வருத்தமாக இருக்கும். அவரிடமிருக்கும் இருவேறு ஆளுமைகளைத் தனித்தனியாகப் புரிந்து கொள்வதே சரி. ஸ்ரீவள்ளி வேறு, பெருந்தேவி வேறு. இருவரின் கவிதைகளுமே வேறு தளங்களில் இயங்குபவை. தவிர்க்க இயலாத ஓரிரு தருணங்களில் அவரே அதைச் சொல்லியிருக்கும்போதும் சிலர், தொடர்ந்து இருவரும் ஒருவரேயென்று வாதிடுவது சரியில்லை. அக்கமாதேவியின் கவிதைகளைப் பெருந்தேவி மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார். ஸ்ரீவள்ளி, அக்கமகாதேவி இருவரிலும் நான் காரைக்கால் அம்மையை, ஆண்டாளை, மீராவை உணர்வேன். தன்னை முழுமையாக ஒப்புக்கொடுக்கும் அன்பு அதனுள் வெளிப்படுவதாக எனக்குத் தோன்றும். ஸ்ரீவள்ளியின் ஒரு கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவிலும் நான் உணர்ந்ததை இவ்வாறே பேசினேன்.
சமீபத்தில் நான், சித்ரா பாலசுப்பிரமணியன், பெருந்தேவி மூவரும் ஓர் அற்புதமான மாலையில் சவேரா ஓட்டலில் சந்தித்துக் கொண்டோம். நாங்களே எதிர்பார்க்காத அளவு செம்மையான அந்திப்பொழுது அது. நேரம் விரைந்ததையே உணராமல் பேசி, சிரித்து, உணவுண்டு மகிழ்ந்த, என் மனத்தில் என்றும் நீங்காத சந்திப்பு. துளியும் மாசற்று அத்தனை அழகாய் அமைந்த அந்திப்பொழுது. மெல்லிய ஒளியூட்டப்பட்ட அந்த அறையின் ஓரத்து மேசையொன்றில் அமர்ந்து நாங்கள் பேசிய கதைகளை மறக்கலாம். அந்தப் பொழுது என்றும் என் நினைவிலிருந்து நீங்காது.
தொலைதூரத்து ஊரிலிருந்து தேவி அழைக்கும்போது, நேரம் நள்ளிரவை நோக்கிச் சென்றபடியிருக்கும். உரையாடல்கள் நட்புக்கு அழகு சேர்ப்பவை, அப்படி எத்தனையோ நீண்ட இரவுகள். பனியும் பனி சார்ந்த நிலமும் எப்போதும் என்னை ஈர்ப்பவை. என் மனத்துள் ரொமாண்டிசைஸ் செய்து வைத்திருந்த அதன் துயரத்தை, அது அளிக்கும் தனிமையை, தேவி சொன்ன பிறகே புரிந்துகொண்டேன். அச்சோ.. அந்த ஸீரோ டிகிரியும் அதற்குக் கீழே மைனஸிலும் செல்லும் பனிப்பொழிவு அவரைப் படுத்தும் பாட்டை அறிந்தபோது மனம் கரைந்து போனேன். தனியளாய் (அவருடைய புதுமைப்பித்தன் துணையிருப்பினும்) படுக்கையில் இருந்து எழுந்து கொள்ளவோ, சமைக்கவோ பிடிக்காத அந்தக் குளிர்ப்பிரதேசத்துக் கொடுமையை, அவர் சொல்லும்போது மிக வருத்தமாக இருக்கும்.
எங்கள் இருவரையும் பிணைத்திருப்பது பெருங்கண்ணி, மாரியம்மன் உள்ளிட்ட சக்தி ஸ்வரூபங்கள். அவர் மயிலாப்பூரிலிருந்த வரையிலும் கோலவிழி அம்மன் கோயிலில் சந்திப்பது வழக்கம். எந்த அம்மன் கோயிலுக்குச் சென்றாலும் அவருடைய நினைவின்றி நான் தொழுது வருவதுமில்லை. பெருந்தேவி என்னுடன் அப்போது இருப்பதாகவே உணர்வேன். அது சார்ந்த அவருடைய நம்பிக்கைகளை, கனவுகளைக் குறித்து நாங்கள் உரையாடுவதென்பது எனக்கு மிகப் பிடித்தமான விஷயம். இப்போதும் அவர் சக்கரை அம்மாவின் ஜீவ சமாதிக்கருகில் உள்ள வீட்டில் வாழ்வதென்பது அவருக்கு அருளப்பட்டது என்பது என் எண்ணம். இந்த முறை பெருந்தேவியுடன் கும்பகோணத்திலுள்ள ஏதேனுமொரு கோயிலுக்குச் செல்ல வேண்டும். அவருடன் கோயிலுக்குச் செல்வது ரொம்ப ஸ்பெஷல். சார்ந்த விஷயங்களை அவர் பேசும்போது கேட்டுக்கொண்டேயிருக்கலாம் போலத் தோன்றும்.
தேவியோடு பேசும்போது, அவர் படித்த புத்தகங்கள், பார்த்த திரைப்படங்கள், எழுத்தாளர்கள், இன்றைய அரசியல் என்று சகலமும் மழையெனப் பிரவகிக்கும். அவரோடு பேசியவர்களுக்குத் தெரியும், அந்தப் பேச்சின் வேகம். சொற்கள் பெருக, உணர்வுகள் அலைமோத படபடத்து அவர் பேசுவதை நான் ”ஊம்…” கொட்டிக் கேட்டுக்கொண்டிருப்பேன். புதிதாகத் தெரிந்து கொள்ளும் ஆர்வம். சில விஷயங்களைப் புதிய பார்வையில் அவர் விளக்கும்போது ஆச்சர்யமாக இருக்கும். பேசிக்கொண்டிருக்கும்போதே ஒரு சிறிய நகைச்சுவை; க்ளீஷேவானாலும் சொல்கிறேன், களுக்கென்ற சத்தத்துடன் ஒரு சிரிப்பு; எனக்கு மிகப் பிடிக்கும் அந்தச் சத்தம். (என்னப்பா, அநியாயமா இருக்கு, நான் அப்படியா சிரிக்கிறேன்; சொல்லுங்க பரம்ஸ் எனும் பெருந்தேவியின் குரல் காதில் கேட்கிறது).
ஏதாவது அவர் சொன்ன விஷயத்தை மறந்து போய் அல்லது சரியாகக் கவனிக்காது மீண்டும் கேட்டால், ‘என்னப்பா நீங்க.. இப்பத்தானே தொண்டைத்தண்ணி வறளச் சொன்னேன்’ என்று கோபித்தபடியே மீண்டுமொரு முறை சொல்வார். ‘பரம்ஸ், நீங்க ஏன்பா, சொன்ன வேலைகளைக்கூடச் செய்ய மாட்டேங்குறீங்க, செய்யுங்கப்பா’ என்று தொடர்ந்து உந்தித் தள்ளுவார். எதுவும் புரியவில்லையென்று கேட்டால் பொறுமையாக விளக்குவார்.
ஒவ்வொரு முறை அவர் சென்னைக்கு வரும்போதும், வீட்டைத் தூய்மை செய்வதில் தொடங்கி, பழுது பார்க்க வேண்டியது, வங்கி, மருத்துவம் என அலையும் அலைச்சல்; இதையெல்லாம் அவர் எழுதியதேயில்லை; எங்கும் பேசியதுமில்லை. தனித்த வாழ்வைத் தன் தேர்வாகக் கொண்ட ஒருவர் படும் பாட்டையும் அவர் எழுத வேண்டும். இந்தச் சம்சார சாகரத்தினூடே தொடர்ந்து எழுதும் சாகசத்தை, அவருடைய அபாரமான படைப்பூக்கத்தை நான் மெய் சிலிர்க்க வணங்குகிறேன்.
ஊரிலிருந்து என்றைக்கு வந்தாரென்று தெரியாது; அதுவொரு ரகசியம்! அதேபோலவே அவர் ஊருக்குக் கிளம்பும் நாளையும் சரியாகச் சொல்ல மாட்டார். ஆனால் இடையில் கட்டாயம் அவர் தங்கும் நாள்களைப் பொறுத்து ஓரிரு முறையேனும் சந்திப்போம். நண்பர்களுக்கு உதவி செய்வதை விரும்பிச் செய்வார்; பரிசுப் பொருள்களைக் கொடுத்து ஆச்சர்யப்படுத்துவார்.
கடலூர் சென்று, அவர் படித்த அரசு மேனிலைப் பள்ளிக்குச் சென்று ஒரு நாள் முழுவதும் அங்கிருந்து மாணவிகளுடன் உரையாடியதுடன் அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பரிசு வழங்கும் திட்டமொன்றை அளித்திருக்கிறார். அவருக்குக் கற்பித்த வசந்தகுமாரி டீச்சரைப் பள்ளிக்கு வரவழைத்து அவரோடு, பால்யத்துக்கே சென்று வகுப்பறைகளை உற்சாகமாகச் சுற்றிப் பார்த்து ஆசிரியருடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டு ஒரே அமர்க்களம். அதையெல்லாம் அவர் என்னிடம் பகிர்ந்தபோது அவர் குரலில் இருந்த குதூகலம் இன்றைக்கும் பெட்டியில் பொதிந்திருக்கும் பூவாசமென உள்ளத்தில் நிறைந்திருக்கிறது. ஓர் ஆசிரியராக எனக்குப் பெருமகிழ்ச்சியும் பெருமிதமும். அது குறித்த அவருடைய முகநூல் பதிவில் என்னைப் பற்றியும் எழுதியது அவர் எனக்குத் தந்த ஆசீர்வாதம்.
புதுமைப்பித்தனைக் குறித்த அவருடைய எழுத்துக்காதல், தினகரி புதுமைப்பித்தனுடன் அவருடைய மிக மரியாதையான உரையாடல், நிகனர் பர்ரா, அசோகமித்திரன் போன்றோர் அவருடன் துணையாக இருப்பது பற்றியெல்லாம் பேசுவதைக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். நெஞ்செல்லாம் இனித்துப் பரவசமாகும்.
முரண்களை விவாதிக்கையில் காது கொடுத்துக் கேட்பார். மீள விளக்குவார். நாம் சொல்வதில் முரண்பட்டால் சலிக்காமல் உரையாடலைத் தொடர்வார். ஆனால் நண்பர்களுடன் முரண்களைத் தொடர்ந்து விவாதிக்கக் கூடாது என்பது என் கொள்கை. அதனால் ஒரு கட்டத்தில் நிறுத்திக்கொண்டு அமைதி காப்பேன். பெருந்தேவிக்கும் அதுவே. நாங்களிருவரும் முரண்படுமிடங்கள் மிகக் குறைவு, என்றாலும் மெளனமாக இராது தொடர்ந்து அதனைப் பேசுவோம் என்பது நட்பு அளித்த பரிசு.
எழுத்தாளராக பெருந்தேவியின் தொடர்ந்த உழைப்பு எனக்கு பிரமிப்பைத் தரும். தீயுறைத் தூக்கம், உலோக ருசியின் மூலம் நானறிந்த அன்றைய பெருந்தேவி இன்றைக்குப் பயணப்பட்டிருக்கும் தூரம், அவருடைய இலக்கிய தாகம், குறுங்கதையோ, மொழிபெயர்ப்போ ஒவ்வொன்றையும் நேர்த்தியுடன் எழுதுவதற்கு அவர் படும் அவஸ்தை, அவருடைய மெனக்கெடல் எல்லாவற்றையும் ஓரளவேனும் அருகிருந்து பார்த்திருக்கிறேன், அவருடன் பேசியிருக்கிறேன். அவர் ஒருவகையில் என் வழிகாட்டி, குரு.
இருவருமே ஆசிரியர்களென்பதால் நான் என் பள்ளியில் சந்திக்கும் சிக்கல்களை அவரிடம் பகிர்வேன். அவர் கல்லூரியில் வகுப்பெடுப்பது, மாணவர்களின் குறுக்குக் கேள்விகள், அவர்கள் பல்வேறு நாடுகளில் இருந்தும் தரப்புகளில் இருந்தும் வருவது இப்படி எல்லாமும் பேசுவோம்.
அவருடைய பேராசிரியரைப் பற்றியும் மாரியம்மன் ஆய்வு பற்றியும் விரிவாகச் சொல்லியிருக்கிறார். பேராசிரியரின் மறைவு அவரைப் பெரிதும் வருத்தியது. அவருடைய அப்பாவைப் பற்றி, அவருக்கு ம.பொ.சி மேல் இருந்த மதிப்பு எல்லாமும் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் எங்கள் உரையாடலில் வரும். சமூக விஷயங்களில் பெரிதும் அக்கறையுடன் அவர் தன் கருத்துகளைத் தெரிவிப்பதோடு சமயங்களில் மிகவும் ஒன்றி, உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதைப் பார்க்க வேண்டும். உணர்வுமயமானவர். நண்பர்களின் துயரங்களைத் தன் துயரம் போல் வருந்துவார். அந்தச் சமயத்தில் அவர் ஏதாவது செய்ய முடியுமா என்று பரபரப்பார். உடனிருக்க வேண்டுமென்று நினைப்பார். நகைச்சுவை இழையோடச் சிரிக்கச்சிரிக்கப் பேசி, நம்மைச் சிரிக்க வைப்பார். சிரிக்கும்போது அவருடைய கன்னங்கள் சிவந்து போகும். தொடர்ந்த வேடிக்கைப் பேச்சுகளில் சிரித்துசிரித்து, அவர் முகமெல்லாம் செவ்வரளிப் பூக்கள் பூப்பதைப் பார்க்கணும். பெரிய குறும்புக்காரி. சாகசக்காரியும் கூட.
அவருடைய நட்பு, இறை எனக்கு அளித்த கொடை. அவருடைய பரந்த அனுபவமும் வாசிப்பும் அவருடனான உரையாடல்களும் என்னை வெகுவாக நகர்த்தியிருக்கின்றன. பெருந்தேவிக்குப் பெரிய பெரிய கனவுகள் உண்டு; அவையெல்லாம் நிறைவேற வேண்டுமெனும் என் பிரார்த்தனையை இந்தக் கருக்கற்பொழுதில் அம்பாளின் பாதத்தில் வைக்கிறேன். இன்னுமின்னும் அந்தப் படபடத்த பேச்சை, குரலைக் கேட்டபடியிருக்க வேண்டும், சவேராவின் மாலைப்பொழுதுகள் அவ்வப்பொழுது நிகழ்த்தணும். எப்போதும் வழிநடத்த வேணும் தேவீ!
-தி. பரமேசுவரி
(தி. பரமேசுவரி: கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், தமிழ் ஆசிரியர். எனக்கான வெளிச்சம், ஓசை புதையும் வெளி, தனியள் ஆகிய கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர். அரசியல், சங்க இலக்கியம், பெண்ணியம், நூல் மதிப்பீடுகள் ஆகிய வகைமைகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.)
(3)
பெருந்தேவி என்னும் பிரவாகம்
–அரவிந்தன்
புத்தாயிரம் பிறந்து ஐந்து ஆண்டுகள் ஆகியிருக்கலாம். அப்போதுதான் பெருந்தேவியை முதன் முதலில் சந்தித்தேன். காலச்சுவடு இதழின் நிர்வாக ஆசிரியராகப் பணிபுரிந்துகொண்டிருந்த காலம் அது. பெருந்தேவி காலச்சுவடுக்காக ஒரு கட்டுரை அனுப்பியிருந்தார். அதைப் பற்றிப் பேசுவதற்காகத்தான் அந்தச் சந்திப்பு. அதற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா டுடே அலுவலகத்தில் என்னைச் சந்தித்திருப்பதாகப் பெருந்தேவி கூறினார். மங்கிய நிழலாகக்கூட அந்தச் சந்திப்பு நினைவில்லாததால் 20 ஆண்டுகளுக்கு மேல் எங்கள் நட்பின் வயதைக் கூட்டிச் சொல்ல முடியவில்லை. எத்தனை காலம் என்பதைக் காட்டிலும் எவ்வளவு ஆழம் என்பதல்லவா நட்புக்கு முக்கியம். எனக்கு மிகவும் நெருக்கமான, இணக்கமான, ஆழமான நண்பர்களில் ஒருவர் பெருந்தேவி என்பதைக் கூறியபடி இந்தக் கட்டுரையைத் தொடங்குவது பொருத்தமாக இருக்கும்.

பளிச்சென்ற தோற்றம், அதைவிடப் பளிச்சென்ற சிரிப்பு. இதுதான் பெருந்தேவி என்றதும் மனதில் எழும் சித்திரம். எனக்கு நண்பர்களாக வாய்த்த எழுத்தாளர்கள் பலரும் படைப்பு சார்ந்த வலுவைக் கொண்டிருப்பவர்கள். படைப்பைப் பற்றிப் பேசுவதில் அவர்களிடம் கூர்மையும் ஆழமும் வெளிப்படும். ஆனால் படைப்பைத் தாண்டிப் படைப்புத் துறை சார்ந்த ஆழமான வாசிப்பும் அறிமுகமும் சற்று அரிதானவை. இலக்கியம் பற்றிய பேச்சிலும் பெரும்பாலும் ரசனை சார்ந்த அழகியல் பார்வைகளே வெளிப்படும். இலக்கியக் கருத்தாக்கங்கள், அவை சார்ந்த விவாதங்கள் காலப்போக்கில் அவை மாறிவரும் விதங்கள், அவற்றின் வரம்புகள் ஆகியவற்றைப் பற்றி ஆழமான புரிதலுடன் பேசும் எழுத்தளார்கள் மிகவும் குறைவு. இந்தப் பெரும்போக்கிற்கு விதிவிலக்கான மிகச் சிலரில் ஒருவர் பெருந்தேவி. இலக்கியக் கருத்தாக்கங்களையும் அவை குறித்த விவாதங்களையும் முதல்நிலைத் தரவுகள் வாயிலாக நன்கு அறிந்தவர். சாராம்சமாகக் கருத்தியல்களை அணுகும் நான்கைந்து கட்டுரைகளைப் படித்துவிட்டுக் கலைச்சொற்களை வைத்துக்கொண்டு மிரட்டும் ரகமல்ல. கருத்தியல் சார்ந்த கட்டுரையைத்தான் காலச்சுவடுக்கு அனுப்பியிருந்தார். அதைப் பற்றிய உரையாடல்தான் எங்கள் முதல் சந்திப்பாக அமைந்தது.
கட்டுரை மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் சிற்றிதழ் மரபுக்கே உரிய சிக்கலான கட்டமைப்பையும் மொழியையும் கொண்டிருந்தது. அவை பெரும்பாலான வாசகர்களை விலக்கிவிடக்கூடியவையாக இருந்தன. சிக்கலான விஷயங்களைத் தீவிரமாக அணுகினாலும் அதைப் பலருக்கும் புரியும் வகையில் சொல்லும் மரபு தமிழில் ஏற்கெனவே உருவாகியிருந்தது. கட்டுரையின் தீவிரம் குன்றாமலே அதைப் பலரும் அணுகும் விதத்தில் முன்வைக்க வேண்டும் என்பது காலச்சுவடின் அணுகுமுறை. அப்படி முன்வைக்க முடியும் என்பது காலச்சுவடின் நம்பிக்கை. அதன் அடிப்படையில் பெருந்தேவியிடம் பேசினேன்.
தீவிரமான எழுத்தாளர்கள் பலருக்கும் செம்மையாக்கம் தொடர்பாக இருக்கும் தயக்கமும் ஒவ்வாமையும் பெருந்தேவியிடமும் இருந்தன. தமிழில் பிரதி செம்மையாக்கங்கள் பலவும் ‘சிகிச்சை வெற்றி, ஆள் காலி’ என்ற லட்சணத்தில் இருப்பதால் இந்த ஒவ்வாமையைத் தவறென்று சொல்ல முடியாது. ஆனால் எல்லா மருத்துவர்களும் அப்படி இல்லையே. கட்டுரையின் தீவிரமும் கருத்துக்களின் இயல்பான சிக்கல்களும் துளியும் நீர்த்துப்போகாத வகையில் கட்டுரையை வாசிப்புக்கு இணக்கமாக மாற்ற முடியும் என்று சொன்னேன். பிரதியில் மேற்கொள்ளும் மாற்றங்களை அவருடைய ஒப்புதல் இல்லாமல் செயல்படுத்த மாட்டோம் என்று வாக்களித்தேன். பெருந்தேவிக்கு இந்த ஏற்பாடு பிடித்திருந்தது. செம்மையாக்கம் என்னும் செயல்பாட்டில் அவருக்கு ஐயம் இருந்ததே தவிர அது முற்றிலும் அவசியமற்றது என அவர் நினைக்கவில்லை என்பது எனக்குப் புரிந்தது.
அடுத்தடுத்த சந்திப்புகளில் அந்தக் கட்டுரையின் செம்மையாக்கம் தொடர்பாக உரையாடினோம். தான் எழுதிய ஒவ்வொரு சொல்லுடனும் பெருந்தேவிக்கு இருந்த அர்த்தப்பூர்வமான, ஆழமான உறவையும் அதற்குப் பின் இருந்த அறிவையும் அந்த உரையாடல்களின்போது உணர முடிந்தது. பெரும்பாலான மாற்றங்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். செம்மையாக்கம் குறித்த அவரது ஒவ்வாமை ஓரளவு நீங்கியதாக எனக்குத் தோன்றியது. அவர் மீதான என் மதிப்பு கணிசமாக உயர்ந்திருந்ததை அவரும் உணர்ந்திருக்கக் கூடும்.
இப்படித் தொடங்கிய நட்பு, இலக்கிய உரையாடல்கள், தனிப்பட்ட பரிமாற்றங்கள், அரசியல் விவாதங்கள், ஆளுமைச் சிக்கல்களின் புதிர்கள் பற்றிய விசாரணைகள், சூழலைப் பற்றிய கரிசனங்கள், விமர்சனங்கள் முதலானவற்றின் மூலம் தொடர்கிறது. இடையில் பெருந்தேவியின் கைமணத்தில் தயாரான சர்க்கரைப் பொங்கலும் வெவ்வேறு உணவகங்களில் உட்கொண்ட தோசை வகைகளும் சேர்ந்து இந்த நட்புக்குச் சுவைகூட்டிவருகின்றன.
கோட்பாடும் ரசனையும் இணையும் பார்வை
இலக்கியம் தொடர்பான கருத்தியல்களில் பெருந்தேவிக்கு ஆழமான ஈடுபாடும் அவற்றின் வெளிச்சத்தில் பிரதியை அணுகும் விருப்பமும் இருந்தாலும் படைப்பு சார்ந்த ருசியும் ரசனையும் அவரிடம் துல்லியமாக அமைந்திருக்கின்றன. இலக்கியக் கோட்பாடுகளைத் தூக்கிப் பிடித்து ரசனையைப் பின்னுக்குத் தள்ளும் போக்கு அவரிடம் இல்லை. இரண்டையும் ஒருங்கிணைத்துப் பிரதியை அணுகும் தனித்துவமான பார்வை அவரிடம் உள்ளது. புதுமைப்பித்தன் சில கதைகள், பெருமாள்முருகனின் ‘மாதொருபாகன்’, சுந்தர ராமசாமியின் ‘திரைகள் ஆயிரம்’ ஆகியவை குறித்த அவருடைய கட்டுரைகளில் இதைத் தெளிவாக காணலாம். ‘கவிதை பொருள்கொள்ளும் கலை’ என்னும் நூலில் உள்ள கட்டுரைகளையும் இதற்கு ஆதாரமாகச் சுட்டலாம்.
ரசனை-அழகியல் விமர்சனங்கள் மிகுதியும் அகவயமானவையாக அமைத்துவிடக்கூடும். விமர்சிப்பவரின் சொந்தக் கருத்தாக மட்டுமே கருதப்படும் அபாயம் அவற்றுக்கு உள்ளது. புறவயமான கோட்பாட்டு விமர்சனங்கள் வாசக உணர்வுகளைத் தொடாமல் விலகி நின்றுவிடக்கூடும். இரண்டையும் கச்சிதமாக இணைக்கும் பெருந்தேவியின் கட்டுரைகள் அகவயமான பார்வைகளுக்கும் புறவயமான தன்மையைக் கொடுத்து அந்தப் பனுவலின் மதிப்பை நிறுவுகின்றன. இது விமர்சனத் துறையில் பெருந்தேவியின் முக்கியமான பங்களிப்பு. எந்தப் பிரதியைப் பற்றிப் பேசும்போதும் கோட்பாடு, ரசனை ஆகிய இரண்டும் கலந்து வரும் பெருந்தேவியின் சிந்தனைகள் புதிய வாசல்களைத் திறக்கக்கூடியவை. அவருடனான நட்பில் எனக்குக் கிடைத்த பலன்களில் ஒன்று இது.
நல்ல ஆசிரியர், நல்ல மாணவர்
ஆசிரியராகப் பணிபுரியும் பெருந்தேவி தனிப்பட்ட நட்பில் ‘வாத்தியார்’ வேலையைக் காட்ட மாட்டார். அவர் குறிப்பிடும் கோட்பாடுகளோ, கருத்தியல்களோ எனக்கு அதிகம் தெரியாது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். என்றாலும் அவை பற்றிப் பேசும்போது அறிவின் அதிகாரம் அவரிடம் எட்டிப் பார்க்காது. அறிதலின் தன்னம்பிக்கை இருக்கும். சட்டாம்பிள்ளைத்தனம் இருக்காது. நான்கைந்து கட்டுரைகளைப் படித்துவிட்டுக் கோட்பாடுகள் பற்றிப் பேசுபவர்கள் அந்தக் கோட்பாடுகளை உருவாக்கியவர்களைப் போலவே பேசும் சூழலில் பெருந்தேவிக்கு இருக்கும் தன்னடக்கம் அபூர்வமானது. பின்நவீனத்துவம், அமைப்பியல், பெண்ணியம் ஆகியவை குறித்து ஏதேனும் கேள்வி எழுப்பும்போது மட்டுமே அவருக்குள்ளிருக்கும் ஆசிரியர் வெளிப்படுவார். உரையாடல்களின்போது, அன்றாட வாழ்வில் இருக்கும் பின்நவீனத்துவக் கூறுகளைப் பற்றி அவர் பேசும்போது அதுபற்றிக் கேள்வி எழுப்புவேன். தெளிவாகவும் துல்லியமாகவும் அவரது விளக்கம் இருக்கும். “நன்றாகப் புரிகிறது. எழுதும்போது மட்டும் ஏன் இதையெல்லாம் சிடுக்காக்கிவிடுகிறீர்கள்?” என்று அவர் காலை வாரிவிட நான் முயலும்போது கணீரென்ற சிரிப்புடன் அந்தப் பரிகாசத்தை அங்கீகரித்துவிட்டு “இப்போதெல்லாம் நான் அப்படி எழுதுவதில்லையே” என்பார் பணிவான மாணவரைப் போல.
பெருந்தேவி நல்ல ஆசிரியர் மட்டுமல்ல, நல்ல மாணவரும்கூட. செம்மையாக்கம் தொடர்பான ஒவ்வாமையை விரைவிலேயே ஒதுக்கிவைத்த அவர், தொடர்பாடல் பற்றிய யோசனைகளை மிகவும் கவனத்துடன் கேட்டுக்கொள்வார். இடையில் கேள்விகள் எழுப்புவார். நடையில் புரிதலுக்குச் சிக்கல் ஏற்படுத்தும் கூறுகள் பற்றி விவாதிப்போம். இத்தகைய உரையாடல்களின் வழியே தன் வெளிப்பாடுகளைத் தொடர்ந்து மறுபரிசீலனை செய்து மாற்றிக்கொண்டே வருகிறார். மொழி சார்ந்து அவர் எழுப்பும் கேள்விக்கு எனக்குத் தெரிந்த அளவில் விளக்கம் அளிக்கும்போது எனக்கு ஷொட்டு விழும். “நீங்கள் நல்ல ஆசிரியர்” என்பார். நல்ல ஆசிரியர் ஒருவரிடமிருந்து இத்தகைய பாராட்டைப் பெறும்போது கிடைக்கும் மகிழ்ச்சி அபரிமிதமானது.
செம்மையாக்கம் தொடர்பாகத் திறந்த மனதுடன் இருந்தாலும் வெளிப்பாட்டு முறை சார்ந்த தெளிவான நிலைப்பாடுகள் பெருந்தேவிக்கு உண்டு. அவற்றை அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுத்துவிட மாட்டார். நிறுத்தக்குறிகளின் பயன்பாடுகள் முதலான பலவற்றில் சர்வதேச அளவுகோல்களைப் பின்பற்ற வேண்டும் என்பதில் கறாராக இருப்பார்.
ஒரு விஷயத்தைப் புதிதாகக் கற்றுக்கொள்ளும்போது பெருந்தேவி காட்டும் கவனமும் அதை உள்வாங்கும் விதமும் சிறப்பானவை. ஆனால் ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்வது அல்லது புரிந்துகொள்வது ஒன்று. அதை அமல்படுத்துவது முற்றிலும் வேறொன்று. பலரும் தங்களுக்கு ஆகிவந்த செயல்முறையில் மாற்றம் ஏற்படுத்திக்கொள்ளத் திணறுவதைப் பார்த்திருக்கிறேன். பெருந்தேவி ஒரு யோசனையை ஏற்றுக்கொண்டதும் அதை அமல்படுத்தத் தயங்க மாட்டார். அதற்கு எதிரான மனத்தடை எதுவும் அவரிடம் இல்லை. செம்மையாக்கம், புரிதலுக்கான மாற்றங்கள் ஆகியவை குறித்த உரையாடல்களுக்குப் பிறகு தன்னுடைய கூறுமுறையைக் கணிசமாக மாற்றிக்கொண்டுவருகிறார். அவருடைய உரைநடை தீவிரம் குன்றாமலேயே குழப்பங்களும் சிடுக்குகளும் அற்றதாகியிருக்கிறது. மீடூ இயக்கம் தொடர்பாக அவர் எழுதிய கட்டுரைகளையும் ‘உடல்-பால்-பொருள்’ தொகுப்பில் உள்ள அவர் கட்டுரைகளையும் ‘கவிதை பொருள்கொள்ளும் கலை’ நூலையும் படித்தால் இதை உணரலாம்.
கோபமும் கரிசனமும்
பெருந்தேவி தன் அன்றாடப் பணிச் சுமைகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் அரை மணிநேரத்தற்கு நம்மால் வாயைத் திறக்க முடியாது. நமது நாட்டில் இருக்கும் நிர்வாகச் சிக்கல்கள், தொழில்முறை அணுகுமுறையற்ற போக்குகள், அரசியல் அவலங்கள் ஆகியவை குறித்து அவருக்குத் தீராத புகார்கள் உள்ளன. ஆண்டில் பாதி நாட்கள் அமெரிக்காவில் வசித்துவரும் அவர் இந்தக் குறைகளைப் பற்றிப் பேசும்போது அதில் கூடுதல் அழுத்தம் விழுந்துவிடுவது புரிந்துகொள்ளக்கூடியதுதான். இதற்கெல்லாம் என்னுடைய ஒரே பதில், “இதையெல்லாம் நீங்களும் நானும் மாற்ற முடியாது. ஆகவே அலட்டிக்கொள்ளாமல் இருங்கள்” என்பதுதான்.
பொது விஷயங்களைப் பற்றிப் பேசும்போதும் சூழலின் குறைபாடுகளை முன்வைத்து விவாதிக்கும்போதும் பெருந்தேவியின் அறச்சீற்றமும் ஆதங்கமும் வலுவாக வெளிப்படும். கிட்டத்தட்ட அதே விமர்சனங்கள் எனக்கும் இருந்தாலும் அவரளவிற்கு நான் பாதிக்கப்படுவதில்லை. ஒருவேளை எனக்குச் சுரணை குறைவாக இருக்கலாம். அல்லது ஓரளவேனும் விலகி நிற்கும் பார்க்கும் இயல்பு எனக்கு இருக்கலாம். இரண்டாவதுதான் என்று நம்பவே விரும்புகிறேன். சொல்லவந்தது அதுவல்ல. எங்கள் இருவரின் அணுகுமுறைகளில் இருக்கும் இந்த வேறுபாடு நாங்கள் முரண்படும் இடமாக அமைந்து புதிய விவாதத்திற்கு வழிவகுக்கும். புதிய சாளரங்களைத் திறக்கும்
பெருந்தேவியின் வாதமுறை அலாதியானது. எக்கச்சக்கமான தரவுகள், தர்க்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அலசும் அவர் தன்னுடைய முடிவுகளையும் கணிப்புகளையும் அடுக்கிக்கொண்டே போவார். மழைக்காலத்து வெள்ளம்போல வாதம் வேகமாகவும் வலுவாகவும் பிரவாகம் எடுக்கும். இடையில் குறுக்கிடவே முடியாது. கிட்டத்தட்ட அரை மணிநேரம் கழித்துப் பேச வாய்ப்புக் கிடைக்கும்போது நான் சோர்ந்துபோயிருப்பேன். ஆற்றலைத் திரட்டிக்கொண்டு பதில் சொல்ல வேண்டியிருக்கும். இந்த விளையாட்டு எங்கள் நட்பின் தவிர்க்க முடியாத பகுதியாகத் தொடர்ந்து இருந்துவருகிறது. இத்தனை ஆவேசம் தேவையா என்று பல சமயம் எனக்குத் தோன்றும். ஆனால் ஆழமான கரிசனம்தான் அதற்குப் பின்னணியில் இருக்கிறது என்ற உணர்வும் உடனடியாக ஏற்படும்.
இலக்கியம், அரசியல், திரைப்படங்கள் பற்றியெல்லாம் பேசும்போது அழுத்தமாக என் கருத்துக்களைச் சொல்வேன். பாலின அரசியல், பாலினம் சார்ந்து சுமத்தப்படும் அடையாளங்கள் பற்றியெல்லாம் அவர் பேசும்போது வாயை மூடிக்கொண்டு கேட்டுக்கொள்வேன்.
எங்களுக்குள் கருத்து வேற்றுமைகளுக்கும் காட்டமான சண்டைகளுக்கும் பஞ்சமே இல்லை. எழுத்தாளர்களின் தரம் சார்ந்த பார்வைகள் எனக்கும் அவருக்கும் பெருமளவில் ஒத்துப்போகும். முரண்படும் சிலவற்றைக் குறித்து அடிக்கடி சண்டையிட்டுக்கொள்வோம். தனக்குப் பிடிக்காத எழுத்தாளர்கள் பற்றி எழுத்தில் விவாதிக்கும்போது மிகவும் கவனமாக, சமநிலையுடன் வெளிப்படும் பெருந்தேவி தனிப்பட்ட முறையில் பேசும்போது தூக்கிப்போட்டு மிதித்துவிடுவார். பாராட்டும்போதும் தாராளமாகவே பாராட்டுவார். அப்படி அவர் பாராட்டும் ஓரிரு எழுத்தாளர்கள் அவ்வளவு பாராட்டுக்குத் தகுதியற்றவர்கள் என்பேன்.
குறிப்பிட்ட ஒரு எழுத்தாளரைப் பற்றிய அவர் கருத்தைக் கடுமையாக மறுத்தேன். மேற்படியார் அருமையான உரைநடைக்குச் சொந்தக்காரர். அபாரமான அங்கதச் சுவை நிரம்பிய எழுத்தாளர். ஆனால் படைப்பு என்ற பெயரில் அவர் கைக்கு வருவதையெல்லாமல் எழுதிச்செல்கிறார். அவற்றில் ஒன்றிரண்டு நன்றாக அமைவது தற்செயலானது என்று சொல்வேன். பெருந்தேவி அதை ஏற்க மாட்டார். இணக்கம் ஏற்படாமலேயே பேச்சு முடிவுக்கு வரும். அதுபோலவே புதிதாக முளைத்து வந்த அரசியல் தலைவர் (வினைச் சொல்லில் கடந்த காலம் தொழிற்படுவதைக் கவனித்துவிட்டு யூகங்களுக்குள் இறங்கலாம்) பின்னாளில் பெரிய தலைவராக உருவெடுப்பார் என அவர் கணித்தார். வெகுமக்கள் மனங்களைக் கவரும் திரைநாயக பிம்ப உருவாக்க உத்திகளை அவர் பயன்படுத்துவதை அதற்கான ஒரு காரணமாகச் சொன்னார். இவருடைய வளர்ச்சியெல்லாம் ஊடக உருவாக்கம் என்று சொல்லி அதை நிராகரிப்பேன். “உங்களுக்கு ஒண்ணுமே தெரியல” என்று திட்டுவார். “நீங்கள்தான் மிகையாக மதிப்பிடுகிறீர்கள்” என்று நான் சொல்வேன். இதுவும் இணக்கமில்லாத புள்ளியில் போய்தான் முடியும். எங்க இருவரில் யார் சொல்வது சரி என்ற தீர்ப்பைக் காலம் இன்னும் எழுதவில்லை. அதுவரை எங்கள் சண்டை தொடரும்.
இதையெல்லாம் படிக்கும் வாசகர் நாங்கள் இருவருமே பேச ஆரம்பித்தால் ஃபூக்கோ, பின்அமைப்பியல், தமிழ்க் கவிதைகளில் பின் நவீனத்துவக் கூறுகள், மொழிச் சிக்கல்கள், அரசியல் விவகாரங்கள், பாலினப் பிரச்சினைகள் என்று பேசி ரத்தக் கொதிப்புக்கு ஆளாவது வழக்கம் என்று நினைக்கலாம். பேச்சில் இவையெல்லாம் இருக்கும். ஆனால் இவற்றுக்கு இணையாக மற்ற சங்கதிகளும் இருக்கும். சக எழுத்தாளர்கள் பற்றிய வம்புகள், சர்க்கரைப் பொங்கலின் தெய்வீக ருசி, தோசை வார்க்கும் கலையை மறந்துவிட்ட உணவகங்கள், கடும் வெயில் அல்லது உறையவைக்கும் பனி, தமிழ் ஊடகங்களின் சில்லறைத்தனங்கள், மசாலாப் படங்களின் ரசிக்கத்தக்க அம்சங்கள், பரியேறும் பெருமாள் படத்தின் கதாநாயகரின் அப்பா, சமூக ஊடகங்களின் போக்குகள் என்று பல விஷயங்களையும் தொட்டுப் பேசிக்கொண்டிருப்போம்.
இதம் தரும் நட்பு
நண்பர்கள்மீதான பெருந்தேவியின் அன்பும் அக்கறையும் அலாதியானது. கிருஷ்ண பிரபு, ஸ்டாலின் ராஜாங்கம் போன்ற சிலரிடம் அவர் காட்டும் அன்பையும் அக்கறையையும் கண்டு பல சமயம் வியந்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் மிகக் கடுமையான பிரச்சினைகளில் சிக்கியிருந்தபோதெல்லாம் அவரைச் சந்தித்திருக்கிறேன் அல்லது தொலைபேசியில் பேசியிருக்கிறேன். பார்த்த மாத்திரத்தில் அல்லது குரலைக் கேட்ட மாத்திரத்தில் பெருந்தேவி என்னுடைய மனநிலையைப் புரிந்துகொள்வார். என்ன ஆயிற்று என்று அக்கறையோடு, மென்மையாக விசாரிப்பார். விசாரிப்பதோடு மட்டுமல்லாமல் பிரச்சினையைத் தீர்க்கத் தன்னால் இயன்றதைச் செய்வார். சிறிய வாய்ப்புகள் கிடைத்தாலும் அறிவுரைகளைக் கொட்டும் ரகமல்ல அவர். எல்லாம் சரியாகிவிடும் என்பது போன்ற தட்டையான நன்னம்பிக்கைக் கூற்று எதுவும் அவர் வாயிலிருந்து வராது. பிரச்சினையின் தீவிரத்தையும் அதை எதிர்கொள்வதில் எனக்கு இருக்கும் திறன்களையும் உணர்ந்த மனநிலை அவர் பேச்சில் இருக்கும். அந்தப் பேச்சிலிருந்து எனக்கான பற்றுக்கோடுகள் சில கிடைக்கும்.
அவரும் தன் தனிப்பட்ட பிரச்சினைகளையும், மனச் சிக்கல்களையும் விரிவாகப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். ஓரிரு வாக்கியங்களில் சொல்லக்கூடிய பிரச்சினை எப்போதுமே அவரிடம் இருந்ததில்லை. பிரச்சினையை அவர் விவரிக்கும்போது ஒரு கதைபோலச் சொல்லுவார். எதையும் ஒரு கதைபோல முன்வைக்கும் திறன் அவர் இயல்பிலேயே இருக்கிறது. கதை கேட்கும் சுவாரஸ்யத்தில் அவருக்கு ஆறுதல் அல்லது ஆலோசனை சொல்ல வேண்டும் என்பதே மறந்துபோய்விடும். தனிப்பட்ட பிரச்சினைகளைச் சொல்லும்போது கிட்டத்தட்டப் புனைகதை ஒன்றை விவரிக்கும் பாணியில் பிரச்சினையைச் சித்தரிப்பார். இது நிஜமாகவே இவருடைய பிரச்சினைதானா அல்லது இவர் எழுதிய அல்லது எழுதவிருக்கும் கதையா என்ற மயக்கம் ஏற்படும்.
இறை நம்பிக்கை கொண்ட பெருந்தேவி அற்புதங்களையும் ஆழமாக நம்புகிறார். எனக்கு இரண்டிலுமே நம்பிக்கை இல்லை என்றாலும் என்னிடம் அவை குறித்த தன் உணர்வுகளையும், அனுபவங்களையும் பகிர்ந்துகொள்வதில் அவருக்குத் தயக்கம் ஏற்பட்டதே இல்லை. என்னுடைய நம்பிக்கை அல்லது அவநம்பிக்கை சார்ந்த அளவுகோல்களால் மட்டும் நான் அனைத்தையும் அணுக மாட்டேன் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கக்கூடும். அவர் விவரிக்கும் அற்புதங்கள்மீது ஐயம் ஏற்படலாம். ஆனால் அவையெல்லாம் அற்புதமான படைப்புகளாக உருப்பெறக்கூடியவை என்பதில் ஐயமில்லை. இதையெல்லாம் ஏன் இன்னும் எழுதாமல் இருக்கிறார் என்று வருத்தப்படுவேன்.
பெருந்தேவி பாராட்டுவதே வித்தியாசமாக இருக்கும். அவர் கல்விப்புலம் சார்ந்தவர். மண்டையைப் பிளக்கும் கருத்தியல் நூல்களைப் படிப்பவர். மிகுந்த சிக்கல்களும் எண்ணற்ற ஊடுபாவுகளும் கொண்ட தமிழ் வழிபாட்டு மரபுகளைக் குறித்த ஆராய்ச்சியை அவர் மேற்கொண்டுவருகிறார். தொழில் சார்ந்தும், இயல்பு சார்ந்தும் அறிவார்ந்த அம்சங்களில் தீவிரமான பற்றுக் கொண்ட அசல் அறிவுஜீவி. ஆனால் அடிப்படையில் கவிஞரான அவர் மிகவும் உணர்ச்சிவசப்படும் இயல்பு கொண்டவர். தனிப்பட்ட பாராட்டுகளிலும் விமர்சனங்களிலும் இது வெளிப்படும்.
குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காக என்னுடைய சிறுகதையொன்றை அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். அவர் சொன்னதற்குப் பொருத்தமாக இருக்குமென நான் கருதிய ஒரு கதையை அனுப்பினேன். படித்துவிட்டுப் பாராட்டினார். கதைக்குப் பாராட்டுக் கிடைத்ததும் இன்னொரு கதையையும் அனுப்பிக் கருத்துக் கேட்கலாமே என்ற சபலம் தட்டியது. அனுப்பினேன். படித்துவிட்டு அழைத்தார். “இவ்வளவு அருமையான கதை இருக்கும்போது மொக்கயா ஒரு கதையை முதல்ல அனுப்பியிருக்கீங்களே?” என்றார். நீங்கள் அதை நல்ல கதை என்று சொன்னீர்களே என்றேன் பரிதாபமாக. “நல்ல கதைதான், ஆனா இது அதைவிட ரொம்ப நல்லா இருக்கு” என்றார்.
பெருந்தேவி பாராட்டும் விதம் அப்படித்தான் இருக்கும். இதைவிட நல்ல கதை ஒன்றை அனுப்பினால் இது ‘மொக்கை’ ஆகிவிடும்.
தனித்து நிற்கும் குரல்
பெருந்தேவியின் எழுத்தைப் பற்றிப் பேசாமல் அவரைப் பற்றிய ஆளுமைச் சித்திரம் நிறைவடைய முடியாது. ஒரு எழுத்தாளரின் எழுத்தைத் தவிர்த்து அவருடைய ஆளுமையை வரையறுக்க முடியாது. பெருந்தேவி முதன்மையாக ஒரு கவிஞர். தமிழ்க் கவிதைப் பரப்பில் தனித்துவமான மொழியும் பேசுபொருள்களும் கொண்ட மிகச் சிலரில் ஒருவர். அபாரமான கற்பனை வளமும் மொழிவீச்சும் வடிவங்களில் மேற்கொள்ளும் பரிசோதனைகளும் அவரைத் தமிழின் முக்கியமான கவிஞர்களில் ஒருவராக ஆக்குகின்றன. சமகால வாழ்வின் பன்முகச் சிக்கல்களைத் தீவிரமாகவும் ஆழமாகவும் தன் கவிதைகள்வழி பிரதிபலிப்பவர் பெருந்தேவி. குறிப்பாக அதிநவீனத் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நம் வாழ்வையும் சூழல்களையும் உறவுகளையும் பாதிக்கும் விதம் பற்றிய கூர்மையான அவதரிப்புகளை அவர் கவிதைகளில் காண்பதுபோல் பிறர் கவிதைகளில் காண முடிவதில்லை.
பெருந்தேவி எழுதும் குறுங்கதைகளிலும் இந்தக் கூறுகளைப் பார்க்கலாம். குறுங்கதைகள் பற்றிய வடிவப் பிரக்ஞையுடன் கூர்மையும் கச்சிதமும் கொண்ட கதைகளைப் பெருந்தேவி எழுதிவருகிறார். சிக்கலான, புதிரான விஷயங்களையும் சரளமான நடையில் அநாயசமாகக் கையாளுகிறார். அவருடைய எல்லாக் கதைகளுமே தளமாற்றம் பெறக்கூடிய எடுத்துரைப்பைக் கொண்டவை. வாசகருக்கான இடத்தைத் தருபவை.
புனைவல்லாத எழுத்துக்களில் கவிதைகள், பால் அரசியல், திரைப்படங்கள், புனைகதைகள் ஆகியவை பற்றிப் பெருந்தேவி தொடர்ந்து எழுதிவருகிறார். தமிழின் முக்கியமான விமர்சகர்களில் ஒருவர் என்று சொல்லத்தக்க விதத்தில் படைப்புகள் குறித்த இவருடைய அவதானிப்புகள் உள்ளன. பிரத்யேகமான பார்வையைக் கொண்டிருக்கும் பெருந்தேவி இலக்கியக் கோட்பாடுகளையும் அழகியல் ரசனையையும் இணைத்துப் படைப்புகளை மதிப்பிடுகிறார். ஒவ்வொரு கட்டுரையிலும் புதியதொரு கண்டுபிடிப்பைக் காண முடியும். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், பெருமாள்முருகன், இசை ஆகியோரின் படைப்புகள் பற்றிய கட்டுரைகளில் பெருந்தேவியின் தனிக்குரலைக் கேட்கலாம். முன்னோடிகளின் படைப்புகள் குறித்த ஆகிவந்த பார்வைகளை மாறுபட்ட மொழியில் முன்வைக்காமல் தனித்த பார்வையுடன் புதிய முடிவுகளைப் பெருந்தேவி கண்டடைகிறார்.
மீ டூ இயக்கம் பேசப்பட்டபோது அதை முகாந்திரமாகக் கொண்டு ‘மின்னம்பலம்’ இணைய இதழில் அவர் எழுதிய தொடர் கட்டுரைகள் ஒரு பிரச்சினை சார்ந்த அலசலில் பெரும் சாதனை என்று சொல்ல வேண்டும். மீடு இயக்கம் சார்ந்த சகல கேள்விகளுக்கும் கோட்பாடு ரீதியிலும் நடைமுறை சார்ந்தும் அவர் பதிலளிக்கிறார். தமிழ்ப் புனைகதைகளையும் தொட்டுக்காட்டிப் பாலியல் சுரண்டல்களின் மறைமுகங்களை அம்பலப்படுத்துகிறார். பால் அரசியல் தொடர்பான ஆகிவந்த நம்பிக்கைகளையும் கருத்துக்களையும் கட்டுடைக்கிறார் பாலியல் சார்ந்த பிரச்சினைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இவருடைய வாதங்களும் கருத்துக்களும் அமைந்திருக்கின்றன.
பெண்ணியம் குறித்த ஆழ்ந்த வாசிப்பில் உருவான புரிதலும் சுயமாகக் கண்டடைந்த பார்வைகளும் இவரது பெண்நிலை நோக்கைக் கூர்மைப்படுத்தியுள்ளன. ஆண், பெண் என்பவை குறித்த கற்பிதங்கள், பொதுக்கருத்துகள் ஆகியவற்றை இவர் தீவிரமான கேள்விக்கு உட்படுத்துகிறார். மானுட இயல்புகளையும் அவற்றின் பிறழ்வுகளையும் பாலினம் சார்ந்து வகைப்படுத்தும் பார்வையையும் கேள்விக்குட்படுத்துகிறார். பெண் உரிமை சார்ந்த பொதுப்புத்தியின் பார்வைகளையெல்லாம் தாண்டிய ஆழமான பெண்ணிய நோக்கைக் கொண்டிருக்கிறார். அதே சமயம் பெண் எழுத்தாளர்களுக்கெனத் தனிச்சலுகை எதையும் இவர் கொடுப்பதில்லை.
புதுமைப்பித்தனின் மாபெரும் ஆராதகரான இவருக்குப் (“புதுமைப்பித்தன் என் காதலன்”) புதுமைப்பித்தனின் படைப்பாற்றல் குறித்துப் பேசுவதற்குப் பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. புதுமைப்பித்தனைப் பற்றி உங்கள் பார்வைகளைத் தொகுத்து ஒரு நூலாக எழுதுங்கள் என்று தொடர்ந்து சொல்லிவருகிறேன். நேரமே இல்லை என்னும் வழக்கமான பதில்தான் இதற்கும் வரும். உங்கள் காதலன் புதுமைப்பித்தனுக்குக் கொடுப்பதற்குக்கூட நேரமில்லையா என்று கேட்டு அவர் குற்ற உணர்ச்சியை அவ்வப்போது தூண்டிவருகிறேன்.
பல்வேறு தளங்களிலும் காத்திரமாகவும் தனித்தன்மையுடனும் இயங்கிவரும் பெருந்தேவிக்குச் சூழலில் உரிய அங்கீகாரம் கிடைத்திருப்பதாகத் தெரியவில்லை. இது தொடர்பான மனக்குறை அவருக்கும் இருக்கலாம். எத்தனையோ சாதனையாளர்களை வாழும்போது அவ்வளவாகக் கண்டுகொள்ளாத தமிழ்ச் சமூகத்தின் இயல்பை அவரும் அறிவார் என்பதால் இந்த மனக்குறை அவருள் செயல் முடக்கத்தை ஏற்படுத்திவிடவில்லை என்று நினைக்கிறேன். கல்விப்புலம் சார்ந்த தன் ஆய்வு நூலை முடிப்பதில் தற்போது தீவிரமாக ஈடுபட்டுவரும் பெருந்தேவி விரைவில் அதை முடித்துவிட்டு, என்னிடம் பகிர்ந்துகொண்ட நாவல் திட்டத்தைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கிறேன். தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்றாக உருப்பெறும் அனைத்துத் தகுதிகளையும் கொண்டதாக அது இருக்கும் என்பதை அவர் பகிர்ந்துகொண்ட அம்சங்களிலிருந்து உணர முடிகிறது.

அமெரிக்காவிலும், தமிழ்நாட்டிலுமாக மாறிமாறி வசித்துவரும் பெருந்தேவியை அடிக்கடி சந்திக்க இயலாதது ஒரு குறையாகத் தோன்றினாலும் தொலைபேசி உரையாடல்கள் ஓரளவு அந்தக் குறையைப் போக்கிவிடுகின்றன. தொடர்ந்து வாரக்கணக்கில் பேச முடியாமல் போகும். அப்போது திடீரென்று ஒருநாள் அழைத்து “என்னை சுத்தமாக மறந்துவிட்டீர்களா?” என்று கேட்பார்.
இலக்கியமும் சர்க்கரைப் பொங்கலும் உள்ளவரை உங்களை எப்படி மறக்க முடியும் பெருந்தேவி!
–அரவிந்தன்
(அரவிந்தன்: எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர். சிறுகதைகள், நாவல்கள், விமர்சனங்கள் உள்ளிட்ட 27 நூல்களை இதுவரை எழுதியுள்ளார். காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாசிரியர். 34 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு ஊடகங்களில் பணியாற்றிவருகிறார். இலக்கியம், அரசியல், கிரிக்கெட், சமூகப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த எழுத்துக்களை எழுதிவருகிறார்.)
(4)
உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்
–சித்ரா பாலசுப்ரமணியன்
அம்மாவின் புடவையில் பொதிந்து வைத்த மகிழ மலர்களை, பல தசாப்தங்கள் கடந்தபின் எடுத்துப் பார்க்கும் போது, நம் மனதில் எழும் குதூகலமும் மகிழ்வும் சிறு மின்னற் சுவையும் போன்றது பெருந்தேவியுடனான என் நட்பு. தொண்ணூறுகளின் நடுவாந்திரத்தில் தான் அவர் எனக்கு அறிமுகம். அறிமுகம் மட்டும் தான். இன்னொரு தோழியோடு நானும் கூடச் செல்வேன். அவர்கள் இருவரும் பல தலைப்புகளில் பேசுவதை நான் கேட்டுக் கொண்டிருப்பேன். புதிதாக பெருநகரத்திற்குள் நுழைந்த கிராமத்தைச் சேர்ந்தவளின் மிரட்சி தான் அதிகமாய் எழும். எனினும் புதிதாக நிறைய தெரிந்து கொள்கிறோம் என்ற ஆர்வம் உந்தித் தள்ள நான் அவர்கள் இருவரையும் பின்தொடர்வேன். நான் அந்த சமயத்தில் ஜே.ஆர்.எஃப் தேர்வில் தேர்ச்சி பெற்று, அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவியாக இருந்தேன். அப்போது பல்கலைக்கழகம் கிண்டியில் ஒரு சிறிய அலுவலக வளாகத்தில் தற்காலிகமாக நடைபெற்று வந்தது. என்னுடைய ஆய்வுத் தலைப்பு ’சமூக சீர்திருத்த இயக்கங்களும் தமிழ்ப் புதினங்களில் அவற்றின் தாக்கமும்’ என்பதாக இருந்தது. வகுப்பு என்பது சில மணி நேரங்களே இருக்கும் என்பதால் நூலகம் செல்லவும் இப்படி பேசிக் களிக்கவும் நிறைய நேரம் இருந்தது. கவிதை, இலக்கியக் கோட்பாடுகள். சிறு பத்தரிக்கைகளின் உலகம், நவீன எழுத்துகள்,பெண்ணியம் எனப் பலப்பல தலைப்புகளில் நீளும் அவர்களது உரையாடலை செவிமடுத்தபடியே நீண்ட மாலைப் பொழுதுகளை அவ்வாறு செலவிட்டிருக்கிறேன். அப்போது பெருந்தேவி மாம்பலத்தில் குடியிருந்தார். ஆதம்பாக்கத்தில் எங்கள் வீடு. அவர்களோடு கடைவீதிகளில் பேசியபடியே நடந்துவிட்டு பின்மாலையில் இரயில் பிடித்து வீடு செல்ல சுலபமாகவேயிருக்கும். ரங்கநாதன் தெருவில் முன்றில் புத்தக்க் கடையும் இருந்தது. அடிக்கடி அங்கு சென்றிருக்கிறோம். நிறைய புத்தங்களின் அறிமுகம் கிடைத்தது என்பதைத் தவிர உணர்வுபூர்வமாக எந்த நினைவும் இப்போது இல்லை. காரணம் அப்போது நான் காதுடையவள் மட்டுமே. என் பங்கு பேச்சாக எந்த உரையாடலையும் நான் நிகழ்த்தியதாக எனக்கு நினைவில்லை.
காலத்தின் மாற்றத்தில், நான் கல்லூரிப் பணியில் சேர்ந்து திருமணமாகி குழந்தைகள் பெற்று கூட்டுக் குடும்ப வாழ்வின் அலைகளில் கரை ஒதுங்கிப் போனேன். கரையோரம் கட்டப்பட்டிருக்கும் படகின் அலைச்சசலனங்களாக மட்டுமே என் இருப்பு இருந்தது. வாசிப்பை நான் எப்போதும் கைவிட்டதில்லை என்பதால் புத்தக அட்டைகளிலும் இதழ்களின் கட்டுரைகளில் மட்டுமே அப்போது பெருந்தேவி என்ற பெயரை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். இடையில் ஏறக்குறைய இருபது ஆண்டுகள் நாங்கள் இருவரும் பேசிக்கொண்டதேயில்லை என்று சொன்னால் நீங்கள் நம்பித் தான் ஆகவேண்டும். பெருந்தேவி எங்கிருக்கிறார் என்ன செய்கிறார் எப்படி இருக்கிறார் என்பதெதுவும் எனக்குத் தெரியாது. அவர் என்னை நினைவில் வைத்திருப்பாரா என்பது கூட தெரியாது. தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பத்தையும் காலமும் வாழ்க்கையும் வழங்கவில்லை.
உண்மையில் கோவிட் காலம் புது ஏடுகளைத் திருப்ப உதவியது என்று தான் சொல்ல வேண்டும். நான் மிகுந்த தயக்கத்தோடு தான் முகநூலுக்கு வந்தேன். பின் இந்தத் தளம் காந்தி குறித்த தேடல்களைப் பதிவு செய்யுமஞ் விதமாக எனக்கு விரிந்தது. அதன் மூலம் தான் பெருந்தேவியுடனான என் நட்பு மீண்டும் அரும்பியது என்பதைத் தயக்கத்தோடு தான் சொல்ல வேண்டியிருக்கிறது. காந்திக்கு நன்றி. ஆனால் மீண்டும் தொடர்புறுவதற்கு எங்களுக்குள் எந்தச் சிரமமும் இருக்கவில்லை. விட்ட இடத்திலிருந்து தொடரும் இலகுவான தன்மை உடனே கை கூடிவிட்டது. அப்போதும் இப்போதும் நான் வியந்து பார்க்கும் ஆளுமை பெருந்தேவி. அவர் பார்வையில் நான் இன்னும் மாம்பலத்தில் சந்தித்த எளிய சித்ராவாக இருப்பதும் கூட எனக்கு மகிழ்ச்சியானது தான். பெருந்தேவி என்னை மறக்கவேயில்லை. பல நினைவுகளை அவர் நினைவுபடுத்திச் சொன்னபோது கூட நான் ’நடுவில் சில பக்கத்தைக் காணோம்’ என்பது போலத் தான் விழித்தேன். மூளையின் ஆச்சரியம். அவர் மாம்பலத்தில் குடியிருந்த சமயத்தில் அவருக்கு நேர்ந்த விபத்தினால் கையில் கட்டு போட்டிருந்தார் என்பது லேசாக நினைவில் உள்ளது. ஆனால் அந்த சமயத்தில் நான் அவர் வீட்டிற்குச் சென்று சாத்துகுடி ஜூஸ் பிழிந்து தந்து உதவியதாக அவர் சொன்னபோது கூட எதுவும் நினைவுக்கு வராத என் ஞாபக சக்தியின் அவலத்தை என்னவென்று சொல்வேன்?
ஆனால், நகுலன் கவிதை குறிப்பிடுவது போல, உன் உலகத்தில் நான் இருக்கிறேன் என்பதே குதூகலமாக இருக்கிறது என்பது தான் என் மகிழ்வு. பெருந்தேவியின் உலகத்தில் நான் இருக்கிறேன் என்பது எனக்கான வெகுமதி. நாங்கள் அடிக்கடி உரையாடிக் கொள்பவர்களும் இல்லை. தேசங்களுக்கான நேர வித்யாசங்கள் அதற்கு வசதியானதாகவும் இல்லை. எனினும் உரையாட நேர்கையில் நான் பழையபடியே அவரின் படபடத்த உரையாடல் வேகத்தை ரசித்தபடி கேட்டுக் கொண்டிருப்பேன். வேகமாக ஜன்னலிலிருந்து பறந்து செல்லும் புறாவின் சிறகுகளின் படபடப்பு என நினைத்துச் சிரித்துக் கொள்வேன். எதைஎதையோ குறித்துப் பேசுவோம்.
அவரின் பரந்துபட்ட அனுபவத்திலிருந்து பல புதிய கோணங்களை நான் உணர்ந்துகொண்டதுண்டு.

நட்பு உணரும் அளவிற்கு அதை எழுத்தில் வடிப்பது எளிதானதாக இல்லை. அவர் மேல் எனக்கும் என் மேல் அவருக்கும் மிகுந்த அக்கறையும் கரிசனமும் உண்டு என்பதும் நட்பின் பாற்பட்டது தானே. உண்மையில் என் குடும்பத்தில் ஒருவராகத் தான் நான் பெருந்தேவியை உணர்கிறேன். புணர்ச்சிப் பழகுதல் இன்றியும் உணர்ச்சி நட்பாங் கிழமையில் தான் எனக்கும் நம்பிகை.
பெருந்தேவிக்கு அவரது கல்விப் பணி சார்ந்தும் எழுத்துப் பணி சார்ந்தும் நிறைய கனவுகளும் சுமைகளும் உண்டு. அவை இனிதாக நிறைவேற வேண்டும் என்பது என் தினப்படி பிரார்த்தனையில் ஒரு குறிப்பு. பெருந்தேவி மீண்டும் முழுமையாக இந்தியா திரும்பியபின் அவரது கும்பகோண வீட்டின் தாழ்வாரத்தில் அமர்நது கொண்டு திவ்வியப் பிரபந்தம் குறித்தும் மாரியம்மன் கதைகள் குறித்தும் மனிதர்களின் விநோதமான பக்கங்கள் குறித்தும் ஆசுவாசமாகப் பேசிக் களிக்க வேண்டும் என்ற விருப்பம் உண்டு. நிறைவேறும்.
-சித்ரா பாலசுப்ரமணியன்
(சித்ரா பாலசுப்ரமணியன்: காந்திய ஆர்வலர். ‘மண்ணில் உப்பானவர்கள்’ என்ற புத்தகத்தின் ஆசிரியர். காந்தியின் தீண்டாமை யாத்திரை குறித்தும் காந்தி தொடர்பான பிற செய்திகள் குறித்தும் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருபவர். வானொலி, பொதிகைத் தொலைக்காட்சியில் பகுதிநேரப் பணியில் உள்ளவர். மேனாள் விரிவுரையாளர்.)
***
மிகச்சிறந்த ஆளுமைகளின் சிறப்பான பதிவுகள் நன்றி நீலி
அற்புதமான வாழ்வியல் பயணம் பேசும் அழகான பகிர்வுகள். ஒவ்வொருரின் பகிர்வும் உணர்வுப்பூர்வமான பகிர்வு. வாசிக்கும் போதே மிகுந்த சிலிர்ப்பாக உள்ளது. பெருந்தேவி அவர்களின் வாழ்வியல் சூழல் பயணம். பரணிதரன் பரமேசுவரி அரவிந்தன் என அனைவரும் மிகவும் சிறப்பான நினைவோடை நீந்தல்
நண்பர்களை விட யாரால் ஒருவரின் ஆளுமையை பற்றி பேசி விட முடியும்?
சிறப்பான நினைவுப் பகிர்வுகள்