நானை நானென்று நினையாது… – ஸ்வேதா மயூரி

அமெரிக்க பாடகர் பாப் டிலன் 1965 இல் எழுதிய பாடல் “Like a Rolling stone”. உருண்டோடும் கல்லை போல் எதன் மேலும் பற்றில்லாத வீடில்லாத ஒருவனிடம் ‘எப்படி உணர்கிறீர்கள்?’என்று வினவுகின்ற பாடல் அது.
எப்படி உணர்கிறீர்கள்?
.. எப்படி உணர்கிறீர்கள்?
தனிமையில் இருப்பதை
வீடு திரும்ப வழியில்லாமல்
அடையாளம் என ஒன்றும் இல்லாமல்
உருண்டோடும் ஒரு கல்லை போல்?
அடையாளம் இல்லாததை ஒருவித போதாமையாக முன்வைக்கும் வரிகள் டிலனுடையது. இவ்வரிகள் உரிமையுடன் கேள்வி கேட்கின்றன, செல்வமும் செல்வாக்கும் இழந்து மேலிருந்து கீழே உருண்ட பின்னர் “எப்படி உணர்கிறீர்கள்?” என்று. அதில் வெளிப்படுவது கனிவு அல்ல. மாறாக, “வலிக்கிறதா? தேவை தான்” என்று குத்திப்பார்க்கும் நேரடியான கரிசனமின்மை.
பெருந்தேவியின் ‘நான் யார் நான் யார் நீ யார்’ கவிதையிலும் “காலி கோகோகோலா டின்” ஒன்று உருண்டோடுகிறது. அதுவும் ஒரு வழிப்போக்கன் வீசியெறிந்த காலி டின். இவ்வரிகளிலும் கரிசனம் என ஏதும் இல்லை. ஆனால் முந்தைய வரிகளின் தீவிரமோ சுயபரிசோதனைக்கான அறைகூவலோ இதில் இல்லை. இங்கேயும் அடையாளமின்மையை தான் அந்த “காலி கோகோகோலா டின்” குறிக்கிறது, ஆனால் அந்த சுய-இழப்பை கர்வத்துடனும் எள்ளலுடனும் முன்வைக்கிறது. தொன்ம ஆச்சார மதிப்பு வந்துவிட கூடாதென்று சுரைக்காய்க் குடுவையிலிருந்து கீழிறங்கி கோகோகோலா டின்னாக இன்னும் சொச்சநாள் உருண்டோட விரும்புகிறது.
நான் யார் நான் யார் நீ யார்
என் கவிதையில் வருகிற
நானை நானென்று
நினைத்துவிட்டீர்கள் பாவம்
அது சும்மா
நான் ஒரு கவித்துவ வசதி
அல்லது உயர் சித்தப்பிரமை
உண்மையில்
நான்
காற்று தள்ளிவிட்ட
ஒரு சுரைக்காய்க் குடுவை
இல்லையில்லை
சுரைக்காய்க் குடுவையின்
தொன்ம ஆச்சார
மதிப்பெல்லாம் எனக்கில்லை
இப்போது சரியாகச் சொல்கிறேன்
கேளுங்கள்
நான்
ஒரு வழிப்போக்கன் விசிறியடித்த
காலி கோகோகோலா டின்
ஆமாம் டின்
இப்படியே உருண்டோடுவேன்
சொச்ச நாளும்
மிச்ச மீதியாய்
ஆமாம், நீங்கள்?
காலி பெப்சி டின் என்றால்
தள்ளிப் போங்கள்
முட்புதர் நோக்கிச் சரிந்து
மண்ணில் மட்காமல்
புதையுண்டு கிடப்பதிலும்
போட்டிக்கு வந்துவிடாதீர்கள்
இந்த “காலி கோகோகோலா டின்”பாப் ஆர்ட்டில் கையாளப்படும் ஓர் உபகரணம். தினசரி பயன்படுத்தப்படும் கருவிகளையும், பொருட்களையும் வைத்து, சமூகத்தின் நுகர்வுத்தன்மையை விமர்சிக்கும் அம்சம் பாப் ஆர்ட்டிற்கு (pop art/பரப்பு கலை) உள்ளது. அதே நேரம், நவீன காலக் கட்டத்தில் மனிதர்கள் சந்திக்கும் வெறுமையை மக்கள் உடனே தொடர்புப்படுத்தும் வகையில் பகடியுடன் காண்பிக்கவும் பாப் ஆர்ட்டினால் முடியும்.
அவ்வாறு, பெருந்தேவியின் பல கவிதைகள் அன்றாட பொருட்களை பகடி-காய்களாக மாற்றி, தாம் நுகரும் பொருட்களைப் போலவே தாமும் எவ்வாறு பொருளற்றவையாக ஆகிவிடுகிறோம் என்பதை, வாசகனை மட்டுமே நிந்திக்காமல், கவிதை படைத்தவனை(ளை)யும் சேர்த்தே எள்ளலுக்கு உட்படுத்திக் காட்டுகின்றன.
குளிர் போய்விட்டது
வாஷிங்டன்னில் அடுத்தவாரம்
செர்ரி பூக்களின் வசந்தோத்சவம்
ஆனால்
நான் போகப்போவதில்லை
அவற்றைப் பார்க்க ஆன்மா
வேண்டும்
என்னிடம் ஸ்மார்ட் ஃபோன்தான்
இருக்கிறது
திரைப் பாதுகாவலர்
ஒரு செம்பருத்தியைத்தான்
திரைப் பாதுகாவலராக வைத்திருக்கிறேன்
என் அலைபேசிக்கு
அது இரவுபகல் பார்க்காது
பூத்துக்கிடக்கிறது
அது பெரிய விசேஷமில்லை
அதன் பின்னணி
நீல வானத்தின் ஒளியை
குறைக்க அதிகரிக்க முடிகிறது
விளையாட்டாய்
ஏன், வானத்தின் நிறத்தையே மாற்றமுடிகிறது
கொல்லையில் எறும்பூறும் சிவப்பு வெளிறிய
பழைய செம்பருத்தியைவிட
இந்தத் திரைப் பாதுகாவலர் செம்பருத்தி
கண்ணுக்கு வழவழப்பு
ரொம்ப அணுக்கம்
கையடக்கம்
அதன் வானம்
“குளிர் போய்விட்டது” கவிதையை எழுதிய கவியுள்ளம் பின்னர் என்றோ (இல்லை முன்னதாகவா?) தன் ஆன்மாவை கண்டுகொண்டது. அப்போதும் அது ஸ்மார்ட் போனாகத் தான் இருந்தது. செர்ரி பூக்களை விடுத்து திரையில் முளைத்த செம்பருத்தியை அது கண்டுகொண்டது. நீலத்தை குறைத்தும் அதிகரித்தும் வானத்தை தன் கையடக்கத்தில் வைத்திருக்கவே அது விரும்பியது.
ஒரு x -யை அழுத்தினால்
நான் மறையும் திரை வருவது எக்காலம் (இப்படி பலரும்)
குளிர்க்கண்ணாடி அணிந்த பூனைக்குட்டிகள், திரைக்குள் நீந்தும் மீன்கள், காலமாகும் ‘கர்சர்’கள், ஏன், காலாவதியான சமூகவலைத்தளங்கள் கூட அவர் கவிதைகளில் இடம்பெறுகின்றன. சமகால குறிப்புகள் அதிகம் இருப்பின் ஒரு படைப்பின் அமரத்துவம் குறைப்பட்டு போகுமா? (பெருந்தேவிக்கு படைப்பு என்கிற சொல் பிடிக்கவில்லை. படைக்க தான் ஒன்றும் கடவுள் இல்லை எனக் கலந்துரையாடல் ஒன்றில் கூறுகிறார்) பெருந்தேவியின் கவிதைகளில் பல “எதிர்க்கவிதை” தன்மை உடையவை. அவர் விரிவாகவே அதன் அறிமுகத்தை நிக்கானோர் பர்ராவின் பொழிபெயர்ப்பு நூலில் அளித்துள்ளார். எதிர் எதிர் நிலைகளில் உள்ள உணர்வுகளையோ (அன்பு/வெறுப்பு, களிப்பு/திகைப்பு) ஆம் இல்லைகளையோ ஒரு சேர ஆராய்ந்து பார்க்க அக்கவிதை முறை அவருக்கு ஏதுவாக இருக்கிறது. ஒரு நவீன யுகத்திலிருந்து அடுத்த நவீன யுகத்திற்கு லாவகமாகத் தாவவும் அக்கவிதைகளால் முடிகிறது. வாசகன் புறத்தில் புழங்குபவைகளை வைத்து வாசகனிடமே கவிதையை கடத்துபவை. அவ்வகையில் ஊடல், ஆசை போன்ற காலாதீத உணர்வுகளைக் காட்டுவதற்காக பகடி நெடியுடன் களமிறக்கப்படும் சமகாலக் குறிப்புகள் அவரது கவிதைகளில் இயல்பாகத் தான் இடம்பெறுகின்றன.
*
“பெண்ணுக்கு அறிவுரை என்றால் திறக்கும் ஆண் வாய் அத்தனை பெரியது” கவிதை வரிசையில் மூன்றாவதாக வருகின்ற வாய் குழந்தை கண்ணனுடையது. யசோதை மண் உண்டாயா என்கிற கேள்விக்கு பதில் சொல்ல திறக்கும் வாயில் மற்றொரு வாய் தெரிகிறது. யசோதை திகைக்க ஆய்ச்சியர் விளக்கினார்களாம் “பெண்ணுக்கு அறிவுரை கூறத் திறந்த ஆண் வாய் இது.” Mansplaining செய்யும் வாய்!
பெருந்தேவியின் கவிதைகளில் பகடி இருக்கிறது. சுய எள்ளல் செய்துகொள்ளும் கவியுள்ளம் பல சமயம் பெண்ணாகவும், சில சமயம் ஆணாகவும், புகைமூட்டத்தில் யாரென ஊகிக்கமுடியத வகையிலும் உள்ளது. துயரம் வெளிப்படும் கவிதைகளோ ரத்த சர்க்கரை அளவை பார்க்க தேவைப்படும் நொடிப் பொழுது வலி போல அடுத்தக் கணம் அடங்கிவிடுகின்றன. அங்கேயே லயித்திருப்பதில்லை.
எனவே
இந்த முள்ளாடையைப்
பணிந்தேற்கிறேன்
காலத்தின்முன்
தோகைவிரித்தாடும் ஒரே மயில்
இழப்பு என்பதால்
கைவிடப்பட்ட நிலத்தின்மேல்
ஒரு துண்டு வானமுமற்று
நின்றிருப்பதால்
சரி இதைப் பார்க்க
இப்படி முண்டியடித்துக்கொண்டா
வருவீர்கள்?
*
நீங்கள் கைதூக்க அல்ல இக்கேள்வி
பொதுக் கழிவறைச் சுவர்களில்
கலை ஆர்வத்தோடு
கணவனைப்
படம்போட்டு பாகம் குறிக்க
எந்தக் கண்மணிதான்
நினைப்பதில்லை?
இளவரசிகள்
… ஆனால் எனக்கும்
இளவரசிகளைப் பிடித்திருக்கிறது
அவர்களுக்காகத்
தம் விரல்களை மயிலிறகுகளாக்கும்
இதயத் தோகைகளை விரிக்கும்
இளைஞர்களையும்தான்
இவர்களோடு நானும் புன்னகைக்கிறேன்
நளினத்தைக் கற்றுக்கொள்கிறேன்
முரட்டுத்தனத்தைக் கடாசுகிறேன்
நெகிழ் பதத்தில்
என் கன்னமும் சிவக்கிறது
சிலசமயம்
இந்த இளைஞர்களாக மாறுவது
புத்துணர்ச்சியைத் தருகிறது
இளவரசிகளைப் பிடிக்கும்
இவர்களை எனக்குப்
பிடித்திருப்பதால் மட்டுமே
தலைப்பே அறுதியிட்டுச் சொல்லும் கவிதைகளும் அவர் கவியுலகில் உண்டு. “நீங்கள் கைதூக்க அல்ல இக்கேள்வி” என்று சீண்டும் அம்மணியை, தனிப்பட்டமுறையில் நான் பரிச்சயமாக்கி வைத்திருக்கும் கவிமாந்தர்களில் கொஞ்சம் அரிதானவள் என்பேன். அவள் முந்தானை விலகியிருப்பதை பெரிதுபடுத்தாமல் அக்கடா என அமர்பவள். ஆண்களின் கன்னங்களை அவ்வப்போது செவ்வரளியாக்குபவள். தோன்றினால் செல்லமாக அக்கன்னங்களை தட்டிக்கொடுத்து செல்பவள். இறந்த கவிஞர்களை (படமாக அல்லாமல்) எந்நேரமும் உடன் வைத்திருப்பவள். பிடித்த இளைஞர்களின்இளவரசிகளை கன்னம் சிவக்க ரசிப்பவள். கலைஞனால் காதலிக்கப்படுபவள் என்றாவது வாய் திறந்து பேசியிருக்கிறாளா? இவள் அதன் வதையையும், மகத்துவத்தையும் ஒரு சேர உணர்பவளாக இருக்கிறாள். ஒரு பெண்ணென என் அகம் மகிழும் இக்கவிதைகளில் உளவுபவள்; என் பிரியத்திற்குரியவள்.
கலைஞனால் காதலிக்கப்படுதல்
ஒரு கலைஞனால் காதலிக்கப்படுதல் மகத்தானது
கலையில் நீடுழி வாழ்வதெல்லாம் விஷயமேயில்லை
உண்மையில்
தரமான ‘ஆசிட்’ அன்றி அந்தக் காதலுக்கு உவமானமில்லை
ஆயிரம் தட்டுகளில் என்னையிட்டு அது
மேகங்களுக் கிடையே பொதித்தும் வைப்பது
அங்கிருந்து பார்த்தால்
உலகமே சின்னக்குழந்தையாக
இடுப்பில் தூக்கிவைத்துக் கொள்ளலாம்
ஒரு கலைஞனால் காதலிக்கப்படும்போது
அவன் தீயை வரைந்தால்
என் நாக்குகள் அதில் அலைகின்றன
அவன் நாயை வரைந்தால்
உடனே விளையாடுகிறேன் ஒரு பந்துடன்
அவன் கால்களை வரைந்தால்
என் கால்களில் மயிர்க்கூச்சம்
அவன் கண்ணீரை வரைந்தால்
அதில் மினுங்கிக் கரைந்தேவிடுகிறேன்
உண்மையில்
ஒரு கலைஞனால் காதலிக்கப்படுவதென்பது
சித்தப்பிரமைக்குள் பல கைகளால் தள்ளப்படுவது
ஐம்பூதங்களில் ஒன்றாக
ஒரு மிருகத்தின் உறுப்பாக
ஒரு பொருந்தா உணர்வாக
யாருக்குமான உப்பாக
உருமாறியேவிடுவது
*
தமிழ் இலக்கியம் புதிதாக வாசிக்க தொடங்கும் இளையவளுக்கு ஒரு கேள்வி எழவே செய்யும். தமிழ் இலக்கியச் சூழலில் மெய்யாகவே நான்கு விடயம் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தாமாகவே விருப்பத்துடன் இணையத்தில் குழாயடி சண்டைகளில் ஈடுபடவும் செய்கிறார்கள். இதில் பெண் எழுத்தாளர் x ஆண் எழுத்தாளர் என்கிற உட்பிரிவு வேறு பலத்த வரவேற்பைப் பெறுகிறது.
இளம் எழுத்தாளர்கள் பலரும் இதனுள் மாட்டிக்கொள்ளாமல் இருக்கவே பார்க்கிறார்கள். ஒரு கை அவர்களுடைய தோள்களின் மேலமர்த்தி ‘ஆம், இது அபத்தமே’ என்கிறன பெருந்தேவியின் எழுத்தை குறித்த சில கவிதைகள்.
அவை சர்ச்சையின் மையத்தில் இருந்து கொண்டே அதன் மையமின்மையை நகையாடும் தன்மை உடையவை.
சர்ச்சை
வட்டமென்று வரையப்பட்ட ஒன்றைப் பார்க்கிறேன்
வடிவால் கவரப்பட்டு உள்ளே செல்கிறேன்
இங்கே நெளிந்திருக்கிறதே
சுற்றுவரைவு காமாசோமாவென்றிருக்கிறதே
அடடா கொஞ்சம் நீள்வட்டமாகிவிட்டதே
வட்டத்துக்குள் ஒரு புள்ளியாக நின்று
சுற்றிமுற்றிப் பார்க்கிறேன் ஆதங்கிக்கிறேன்
அதற்குள் அதிரடியாக யாரோ ஒரு சதுரத்தை
வரைந்துவிடுகிறார்கள் வட்டத்துக்குள்
இப்போது நான் சதுரத்துக்குள் வந்துவிட்டேன்
அதாவது நான் வராமலே
அதாவது என்னைக் கேட்காமலே
வட்டத்துக்குள் சதுரத்துக்குள்
விழிபிதுங்கி நிற்கிறேன்
சதுரத்துக்குள் நிற்கவா
வட்டத்தைப் பழித்தாய் என்றொரு சாரார்
எங்கள் சதுரத்துக்குள்
இது எங்கே வந்ததென இன்னொரு சாரார்
இப்போது நான் எப்படி வெளியேறுவது
சதுரத்திலிருந்து வட்டத்திலிருந்து
சரியாகச் சொன்னால்
வட்டத்துக்குள் சதுரத்திலிருந்து
சதுரந்தைச் சூழ்ந்த வட்டத்திலிருந்து
ஒரு புள்ளிக்கு
இந்தச் சாகசமெல்லாம் ரொம்ப அதிகம்
கலவரத்தில் அதன் சின்ன மண்டை
உடையச் சாத்தியம் அதிகம்
பெருந்தேவி சமீபத்தில் நிகழ்ந்த க.நா.சு நினைவு கலந்துரையாடலில் மாரியம்மன் கோவில் ஒன்றில் நேர்ந்த அனுபவத்தைப் பகிர்ந்தார். ஒரு தீபத்தின் பிழம்பு பாம்பு போல் வடிவெடுத்ததைப் பார்த்துத் திகைத்து நிற்கிறார். அவரது ஆசிரியர் ஓர் அயல்நாட்டுக்காரர், மகாபாரத அறிஞர். “அவர் அதைக் கண்டு தயங்காதே. உன் ஆய்வுநூலின் அட்டைப்படமாக அக்காட்சி இருக்கவேண்டும்” என்று அவருக்கு அறிவுரை கூறுகிறார். இது ஓர் ஆளுமையை அவர் எழுத்தைத் தாண்டி புரிந்துகொள்ள உதவும் நெகிழ்வான தருணங்களில் ஒன்று.

சில வாரங்களாக தொடர்ந்து பெருந்தேவி அவர்களின் கவிதைகளையும் கட்டுரைகளையும், காணொளிகளையும் கேட்டுவருகிறேன். “சென்னமல்லிகார்ச்சுனனே” என்று திருநீறு மணக்க ஆரம்பித்த தொடர் வாசிப்பு. ஒரு பதின்பருவ பெண்ணோ ஆணோ தனது “க்ரஷ்” இன் சமூகவலைத்தளங்களை எல்லாம் ஓரிரவில் நோட்டமிட்டது போல் மிதப்பில் இன்று இருக்கிறேன். எழுத்தாளர்கள், குறிப்பாக பெண்கள், “Don’t loaf and invite inspiration; light out after it with a club…” (ஊக்கத்திற்காக காத்திருக்காதீர்கள். தடியை ஏந்தி அதனை துரத்துங்கள்) என்கிற எழுத்தாளர் ஜாக் லண்டனின் வரிகளை அடிக்கடி மேற்கோள் காட்டுவார்கள். பெருந்தேவியும் அதை இப்படி சொல்கிறார்,
“பார்வை அக்கரையில் இருக்கட்டும்
கையில் தடி அவசியம்”
எதனால் என்ற கேள்வி அனாவசியம்
நான் மோவாய்க்கட்டையைத் தடவியபடி
கவிதை எழுதுவதில்லை
சீக்கிரமாகவே நீங்களும்
தவழுவதிலிருந்து நடக்கத் தொடங்க வேண்டும்
உங்கள் கண்முன்னே தெரிகிற பாலம்
எப்போது வேண்டுமானாலும் மறைந்துவிடலாம்
ஓடக் கற்றுக்கொண்டால் இன்னும் நல்லது
உங்கள் கால்களைப் பிடித்திழுப்பவர்களது தலையில்
இரண்டு போடுங்கள்
பார்வை அக்கரையில் இருக்கட்டும்
கையில் தடி அவசியம்
***
“வீடு திரும்ப வழியில்லாமல்,
அடையாளம் என ஒன்றும் இல்லாமல்,
உருண்டோடும் ஒரு கல்லைப் போல்.
இன்னும் உருண்டுக்கொண்டே இருக்கிறேன்.
எப்பொழுது நீர்பென் எனத் தெரியவில்லை.
படிப்பதற்கு,
புலி இல்லா இடத்தில் பயமில்லா மானின் நடைபோன்ற இந்த கட்டுரை,
என்னை இன்னும் தேடச்செய்கிறது.
‘என்ன எழுதிருப்பாள் இவள்?’ என எண்ணிக்கொண்டேன்.
கூகிளில் தேடினேன்,
நிறைய கட்டுரைகள் கிடைத்தன.
படித்துக் கொண்டிருந்த இமயம் எழுதிய நாவலை ஓரமாக வைத்தேன்.
இந்த உருண்டோடும் கால்
எங்கே நிற்கும் என்று தெரியவில்லை.”
-ந.பரதன்
barathan989@gmail.com
9344801608
மதுரை.
It’s so beautiful! The way you narrated and spread the thoughts!!
பெருந்தேவியின் கவிதைகளை காற்று வாக்கில் வாசித்து இருந்தாலும் இந்தக் கவிதைகள் நிஜமா தவற விட்ட பொக்கிஷம்… விமர்சனங்களுக்கு மத்தியில் இந்தப் பாராட்டும் நல்ல எழுத்தை கொண்டு சேர்க்கும் விதமும் பிரம்மாதம்!
Keep reaching out to people!!
Thanks to you