விலா எலும்புகளின் விடுதலைப் பிரகடனம் – விக்னேஷ் ஹரிஹரன்

(சிமோன் தி பொவாவின் இரண்டாம் பாலினத்தை முன்வைத்து)

தனித்துவம் மிக்க சிந்தனையாளர்களை நாம் அறிவதில் உள்ள மிகப் பெரிய சிக்கல் அவர்களை தொகுத்துக்கொள்வதே. ஏனெனில் அவர்களை நாம் ஒருபோதும் முதல் பார்வையில் முழுமையாக ஏற்றுக்கொள்ளவோ கடந்து செல்லவோ முடியாது. அவர்கள் நமது சிந்தனைகளின் சில பகுதிகளை கட்டுடைக்கிறார்கள். அதன் வழியே நமது ஆணவத்தை சீண்டுகிறார்கள். அதே நேரத்தில் அவர்களது சிந்தனைகளின் வழியே நாம் அதுவரையில் அறியாத அல்லது அறிந்தும் அங்கீகரிக்காத புதிய சிந்தனைத் தளங்களை அவர்கள் நமக்கு அறிமுகம் செய்கிறார்கள். அதன் புதுமை நம்மை சீண்டுகிறது. எளிமையான ஏற்பு மறுப்புகளுக்கு அப்பால் அவர்கள் நம்மோடு உரையாடுகிறார்கள். விவாதிக்கிறார்கள். நாம் அவர்களை ஏற்றுக்கொண்டாலும் கடந்து சென்றாலும் அத்தகைய சிந்தனையாளர்களின் அறிமுகத்திற்கு பிறகு நம் சிந்தனை முறை மிக நிச்சயமாக மாறிவிடவே செய்கிறது. அத்தகைய தனித்துவம் மிக்க பெண்ணியச் சிந்தனையாளர்களுள் ஒருவர் சிமோன் தி பொவா (Simone de Beauvoir). எனவே அவரது சிந்தனைகளை பற்றிய கட்டுரை என்பது அவரது சிந்தனைகளை தொகுத்துக்கொள்வதற்கான ஒரு உரையாடலாக இருக்க முடியுமே தவிர அவரது சிந்தனைகளின் மீதான பாராட்டுப் பத்திரமாகவோ முழுமையான மதிப்பீடாகவோ இருக்க முடியாது.  

சிமோன் தி பொவா (Simone de Beauvoir)

கடலில் பிறந்தது முதல் அலை: பதினெட்டாம் நூற்றாண்டின் தொழிற்புரட்சி, பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின் உலகம் முழுவதும் மிகத் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்திய நவீன சிந்தனைகளுள் ஒன்று பெண்ணியம். அன்று வரையில் நிலப்பிரபுத்துவ சமூகத்தால் நிராகரிக்கப்பட்ட கல்வி, பொருளாதாரம், சுதந்திரம், ஜனநாயகம் போன்ற உரிமைகள் அச்சுத் தொழில்நுட்பத்தின் வருகையாலும் தொழிற்புரட்சியின் காரணமாகவும் மக்களிடையே பரவலாக்கப்பட்டன. உயர் குடிகளின் உடைமையாக கருதப்பட்ட கல்வியும் சிந்தனையும் பொதுவுடைமைகளாயின. இதன் விளைவாக சமூகத்தின் பல்வேறு ஒடுக்குமுறைகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டு நவீன இலக்கியங்களும், அரசியல் சிந்தனைகளும், சமூகச் சிந்தனைகளும் உருவாயின. அவற்றுள் பிரதானமாக வர்க்க ரீதியான நிலப்பிரபுத்துவ பொருளாதார அமைப்பிற்கு எதிரான மார்க்சிய சிந்தனைகளும் பாலின அடிப்படையிலான சமூக அமைப்பிற்கு எதிரான பெண்ணியச் சிந்தனைகளும் உருவாகி வந்தன. இத்தகைய சூழலிலேயே முதல் தலைமுறை பெண்ணிய சிந்தனையாளர்கள் உருவாகி வந்தனர். அன்று வரையில் சமூகத்திலிருந்தும் உற்பத்தி சார்ந்த பொருளாதாரத்திலிருந்தும் விளக்கப்பட்டிருந்த பெண்களின் பங்களிப்பு தொழிற்புரட்சியால் அளிக்கப்பட்ட நிலையில் பெண்கள் தங்களுக்கான சமூக உரிமைகளையும் அரசியல் உரிமைகளையும் கோரத் தொடங்கினர். ஆனால் அவ்வுரிமைகளைப் பெறுவதில் பெண்ணியச் சிந்தனையாளர்கள் பல சவால்களை எதிர்கொண்டனர். அவற்றுள் பிரதான சவாலாக பெண்கள் முதலில் தங்களை ஆண்களுக்கு நிகரான உயிர்களாக நிறுவ வேண்டியிருந்தது. வர்க்க ரீதியான போராட்டங்களில் முதலாளிகளும் தொழிலாளர்களும் ஒருவரை ஒருவர் எதிர்த்தபோதும் அவர்களது வேற்றுமைகள் பொருளாதார அடிப்படையில் அமைந்ததாக கருதப்பட்டதே தவிர இயற்கையில் அமைந்ததாக கருதப்படவில்லை. ஆனால் பெண்களோ ஆண்களுக்கு நிகரான உயிர்களாகவும் கருதப்படவில்லை. இந்த மனநிலையையே முதல் தலைமுறை பெண்ணியவாதிகள் எதிர்த்தனர். மேரி வோல்ஸ்டோன்கிராப்ட் (Mary Wolstonecraft), கேத்தரின் மெகாலே (Catherine Macaulay), மார்கரெட் பியூலர் (Margaret Fuller) போன்ற முதல் தலைமுறை பெண்ணியச் சிந்தனையாளர்கள் இவ்வாறான நிலையிலேயே அவர்களின் பெண்ணியச் சிந்தனைகளை முன்வைத்தனர். முதல் தலைமுறை பெண்ணியச் சிந்தனையாளர்கள் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை முழுவதுமாக புறவயமாக எதிர்கொள்ள முயற்சித்தனர். சமூக உரிமைகளையும், அரசியல் உரிமைகளையும் பெறுவதன் வழியே பெண்களுக்கான விடுதலையை சாத்தியப்படுத்த நினைத்தனர். நவீன ஜனநாயக ஆட்சியின் விளைவாக உருவான ஓட்டுரிமையையும் சொத்துரிமையையும் பெண்களின் சமத்துவத்திற்கான படிகளாகக் கருதினர். பெண்களை ஓர் தாழ்ந்த உயிரினமாகக் கருதும் சமூக சிந்தனைகளை விடுத்து பாலின சமத்துவத்தை நிறுவுவவே முதல் தலைமுறை சிந்தனையாளர்கள் முயன்றனர். இதற்கான போராட்ட முறைகளாக சட்ட நடவடிக்கைகளையும், அமைதியான ஒத்துழையாமை போராட்டங்களையும் முன்னெடுத்தனர். முதல் தலைமுறை பெண்ணியவாதிகளின் போராட்டங்களும் மோர்மோன் சமூகத்தின் போராட்டங்களுமே காந்தியின் அகிம்சை போராட்ட முறைகளில் பெரும் செல்வாக்கு செலுத்தின. முதல் தலைமுறை பெண்ணியவாதிகளின் சிந்தனைகளின் மீதான பிரதான விமர்சனங்களுள் ஒன்று அவர்கள் பெண்களின் மீதான ஒடுக்குமுறையை முழுக்க புறவயமானதாக கருதினர் என்பதே. கல்வி, சமூக உரிமைகள், அரசியல் உரிமைகள், போன்ற உரிமைகளை பெறுவதன் வழியே பெண்களுக்கான முழுமையான விடுதலையை அவர்கள் சாத்தியப்படுத்த நினைத்தனர். ஆனால் அவ்வுரிமைகளை பெறுவதற்கான முதல் தடையாக அமைந்த பாலின பாகுபாடு எனும் சமூக கட்டமைப்பையும் அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்த குடும்பம், தாய்மை, பெண்மை போன்ற கட்டமைப்புகளையும் அவர்கள் கேள்விக்குள்ளாக்கத் தவறினர். எனவே அவர்களின் செயல்பாடுகளின் வழியே பல்வேறு உரிமைகள் பெறப்பட்டபோதும் அவை பாலின சமத்துவத்தையும் பெண்களுக்கான விடுதலையையும் சாத்தியப்படுத்தவில்லை. 

கேத்தரின் மெகாலே , மேரி வோல்ஸ்டோன்கிராப்ட் , மார்கரெட் பியூலர்

பொவா என்றொரு சிந்தனையாளர்: இந்த நிலையில் இரண்டாம் உலகப் போரின் விளைவாக ஏற்பட்ட மானுடத்தின் மீதான அவநம்பிக்கைகளில் இருந்து உருவான இருத்தலியல் சிந்தனைகள் பிரதானமாயின. சாத்ராவும் (Jean-Paul Sartre) காம்யூவும் (Albert Camus) ஹைடெக்கரும் (Martin Heidegger) இருத்தலியல் சிந்தனையின் முகங்களாக அறியப்பட்டனர். அவர்களுக்கு நிகராக இருத்தலியல் சிந்தனைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் சிமோன் தி பொவா. சாத்ராவுக்கு நிகரான சிந்தனையாளரான பொவா இருத்தலியல் சிந்தனைகளை தனது பெண்ணிய சிந்தனைகளோடு இணைத்து இரண்டாம் தலைமுறை பெண்ணிய சிந்தனைகளை உருவாக்கினார். அவருடைய இரண்டாம் பாலினம் (The Second Sex), பொருள் மயக்கத்தின் நெறிகள் (Ethics of Ambiguity) போன்ற படைப்புகள் இருத்தலியல் சிந்தனையிலும் பெண்ணியச் சிந்தனையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இவற்றின் வழியே முதல் தலைமுறை பெண்ணியச் சிந்தனைகளை கடந்து பாலினப் பாகுபாடுகளின் அடிப்படைகளை கேள்விக்குள்ளாக்கும் இரண்டாம் தலைமுறை பெண்ணியச் சிந்தனைகளை பொவா முன்வைத்தார். அவரது இரண்டாம் பாலினம் இரண்டாம் தலைமுறை பெண்ணியச் சிந்தனைகளின் மூல நூலாகவே கருதப்படுகிறது. அதன் வழியே அவர் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கமும் முன்வைத்த சிந்தனைகளும் இன்றளவும் பெண்ணியத்தின் பெரும் சாதனைகளாகவே கருதப்படுகின்றன.

சாத்ரா (Jean-Paul Sartre)

சிமோன் தி பொவாவின் சிந்தனைகளை அவரது புகழ்பெற்ற வாசகமான “பெண் பிறப்பதில்லை உருவாகிறாள்” (One is not born, but rather becomes a woman) எனும் வாசகத்தில் இருந்தே தொடங்கலாம். ஆண்மையும் பெண்மையும் இயற்கையில் அமையும் இயல்புகளாகவும். எனவே பெண்கள் இயற்கையிலேயே ஆண்களுக்கு நிகரான உயிரினங்கள் அல்ல எனும் அடிப்படையிலான ஆணாதிக்க சிந்தனைகளை சிமோன் தி பொவா முழுவதுமாக நிராகரிக்கிறார். இயற்கையில் ஆனினங்களும் (male) பெண்ணினங்களும் (female) இருப்பினும் அப்பாலின வேறுபாடுகளின் காரணமாக இனப்பெருக்கத்தை தவிர்த்த எந்த தனிப்பட்ட குணநல வித்தியாசங்களும் உருவாவதில்லை. பெண்மையாகவும் பெண்களின் இயல்புகளாகவும் சமூகத்தால் சித்தரிக்கப்படுபவை அனைத்தும் ஆண்களால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளே தவிர வேறில்லை. அக்கட்டமைப்புகளின் வழியே சமூகம் பெண்களுக்கான சமத்துவத்தை மறுப்பதாகவும் பெண்களின் மீதான ஆதிக்கத்தை செலுத்துவதாகவும் சிமோன் தி பொவா கருதுகிறார். பெண்மை, காதல், கற்பு, தாய்மை போன்ற கட்டமைப்புகளை பெண்களுக்கு எதிரான சமூகத்தின் ஒடுக்குமுறைகளாகவே பொவா கருதுகிறார். அவரது பெண்ணியச் சிந்தனைகளின் அடிப்படையாக மூன்று கூறுகளைக் கருதலாம். முதலாவதாக மனிதர்கள் தங்கள் அன்றாட வாழ்வின் (immanence) பொருளின்மையாலும் வெறுமையாலும் அந்நியமாதலுக்கு (alienation) உட்படுத்தப்படுவதாகவும் அவ்வாழ்வை கடக்க அவர்கள் தங்களை கடந்து இவ்வுலகை அடைய வேண்டியிருப்பதாகவும் பொவா கருதுகிறார். கற்பனை, சிந்தனை, லட்சியவாதம் போன்ற அனைத்தையும் அன்றாட வாழ்வின் சலிப்புக்கு எதிரான தன்னிலை கடத்தலுக்கான (transcendance) செயல்பாடுகளாகவே பொவா கருதுகிறார். இவ்விரு நிலைகளுக்கு இடையிலான அலைக்கழிப்பே மனித வாழ்வாகிறது என்றார் பொவா. ஆண்கள் இவ்விரு நிலைகளையும் அடைவதற்கான உரிமை கொண்டவர்களாக இருக்க பெண்களோ சமூகத்தால் முழுமையாக அன்றாடத்தில் கட்டப்பட்டு அவர்களுக்கான தன்னிலை கடத்தல் மறுக்கப்பட்டவர்களாக இருப்பதாகவே பொவா கருதுகிறார். இரண்டாவதாக சமூகம் ஆண்களையே இயல்பான மனிதர்களாக (normal) கட்டமைப்பதாகவும் பெண்களை பிறழ்வுகளாகவே (abnormal) கருதுவதாகவும் பொவா கருதுகிறார். மனிதர்கள் எனும் சொல் ஆண்களையே குறிப்பது பெண்கள் அவ்வுயிரினத்தின் ஒரு பகுதியாக சமூகத்தால் கருதப்படுவதில்லை என்றார் பொவா. மூன்றாவதாக அனைத்து சமூகக் கட்டமைப்புகளிலும் ஆண்களே எழுவாய்களாக (subject) கட்டமைக்கப்படுவதாகவும் பெண்கள் வெறும் செயப்படுபொருள்களாக (object) மட்டுமே கருதப்படுவதாகவும் பொவா கருதினார். இம்மூன்று சிந்தனைகளின் அடிப்படையிலேயே பொவா தன் பெண்ணியத்தை கட்டமைக்கிறார். அதன் வழியே, உயிரியல், வரலாறு, உளவியல், தத்துவம், பண்பாடு போன்ற பல்வேறு துறைகளை அணுகுகிறார்.       

பெண் எனும் புதிய உயிரினம்: சிமோன் தி பொவாவின் பிரதான சிந்தனைகளுள் ஒன்று இயற்கையில் ஆண்மை பெண்மை எனும் பாகுபாடுகள் இல்லை என்பதே. பொவா இச்சிந்தனையை உயிரியல் தளத்தில் இருந்தே நிறுவத் தொடங்குகிறார். பெண்மையும் ஆண்மையும் இயற்கையில் அனைத்து உயிர்களிலும் இருப்பதாகவும் அவற்றிற்கான தனிக்குணங்களும் செயல்பாடுகளும் கொண்டு அவை இயற்கையால் வகுக்கப்பட்டிருப்பதாகவும் நம்பப்படும் பொதுச் சிந்தனையை பொவா நிராகரிக்கிறார். இயற்கையில் ஆண்மை-பெண்மை எனும் குணங்கள் இல்லை. ஆணினம்-பெண்ணினம் எனும் உயிரினங்கள் மட்டுமே உள்ளன. அவை இனப்பெருக்கத்திற்கான வெறும் உயிரியல் பாகுபாடுகளே தவிர அவை அவ்வுயிரினங்களில் எவ்விதமான குணநல வித்தியாசங்களையும் உருவாக்குவதில்லை என்றார் பொவா. பெண்மை எனும் சமூகக் கட்டமைப்பை இயற்கையானதாக உருவகிப்பது பெண்களின் மீதான ஒடுக்குமுறையை இயல்பானதாக நிறுவ முயல்வதேயாகும் என்றார். பாலின பிரிவுகளற்ற ஓரணு உயிரினங்களிலும் (unicellular organisms) இருபாலுயிரிகளிலும் (hermaphrodites) தொடங்கி மனிதர்கள் வரையிலான உயிரினங்கள் அனைத்திலும் பாலினம் என்பது இயற்கையில் இனப்பெருக்கத்திற்கான பாகுபாடு மட்டுமேயன்றி அதன் காரணமாக பிற இயற்கையான குணங்கள் ஏதும் உருவாகுவதில்லை என்றார். 

பாலின பாகுபாடுகளின் மீதான குணநல கட்டமைப்புகள் அனைத்தும் ஆண்களின் கட்டமைப்புகள் மட்டுமே என்றார் பொவா. இயற்கையில் இனப்பெருக்கத்திற்கான வேட்கையும் தாய்மையும் மட்டுமே வெளிப்படுகின்றன. அவற்றின் மேல் கட்டமைக்கப்படும் பெண்மை எனும் கட்டமைப்பு சமூகத்தால் உருவாக்கப்படுவதே என்றார் பொவா. குறிப்பாக தாய்மை எனும் குணத்தின் அடிப்படையிலேயே பெண்களின் மீதான அனைத்து ஒடுக்குமுறைகளும் கட்டமைக்கப்படுகின்றன என்று பொவா கருதினார். பெரும்பாலான உயிரினங்களில் இனப்பெருக்கத்திற்கான குறிப்பிட்ட காலம் ஒன்று இருப்பதால் அவ்வுயிரினங்களில் பெண்ணினம் அந்த குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே தன் இணையை அடைந்து கருத்தரித்து குட்டிகளை பெற்றெடுக்கிறது. எனவே இனப்பெருக்கத்திற்கான காலம் தவிர்த்து பிற காலங்களில் பெண்ணினம் சுதந்திரமாகச் செயல்பட முடிகிறது. ஆனால் மனிதர்களுக்கு அப்படியான இனப்பெருக்கத்திற்கான குறிப்பிட்ட காலம் இல்லாததால் பெண்கள் தொடர்ந்து அவர்களின் தாய்மையால் அடிமைப்படுத்தப்படுகிறார்கள். இத்தகைய ஒடுக்குமுறையை நியாயப்படுத்தவே தாய்மையின் புனிதமென்றும், பெண்மையென்றும் சமூகக் கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. உண்மையில் தாய்மையே பெண்களுக்கு இயற்கையால் இழைக்கப்பட்ட பெரும் அநீதி என்கிறார் பொவா. இத்தகைய ஒடுக்குமுறைகள் திட்டமிட்டு கட்டமைக்கப்படுவதாகவும் அவற்றின் விளைவாகவே மனித வரலாற்றில் பெண்கள் அடிமைகளாக்கப்பட்டதாகவும் பொவா கருதுகிறார்.

வரலாறு எனும் “Herstory”:  சிமோன் தி பொவாவின் பெண்ணிய சிந்தனைகள் வலிமையான வரலாற்று பின்புலத்திலேயே கட்டமைக்கப்படுகின்றன.  அவரது வரலாற்றுப் பார்வை மார்க்சிய வரலாற்றுப் பார்வையை ஒட்டியே அமைந்திருக்கிறது. எங்கல்ஸின் (Friedrich Engels) வரலாற்றுப் பார்வையையே பொவா தனது அடிப்படையாகக் கொள்கிறார். ஆனால் எங்கல்ஸின் வர்க்கப் பிரிவினைகளின் வரலாற்றுக்கு பதிலாக பாலின பாகுபாட்டின் வரலாற்றை பொவா முன்வைக்கிறார். இத்தகைய வரலாற்றாய்வின் மூலம் பெண்மை எனும் கட்டமைப்பு எவ்வாறு சமூக ஒடுக்குமுறையாகிறது எனும் தன் சிந்தனைகளை பொவா நிறுவ முயல்கிறார். இயற்கையில் பிற உயிர்களைப் போல் இல்லாமல் இயற்கையை கட்டுப்படுத்தத் தொடங்கிய மனிதர்கள் நாகரீகத்தின் தொடக்கத்தில் கடும் உடல் உழைப்பின் அடிப்படையிலேயே வாழ்ந்தனர். வேட்டைச் சமூகங்களில் தொடர்ந்து இயற்கையோடு போராடி தங்கள் இருப்பை நிறுவ வேண்டியிருந்தது. அதனால் இயற்கையாகவே உடல் வலிமை பொருந்திய ஆண்களே பிரதானமாயினர் எனும் பொதுக்கூற்றை பொவா நிராகரிக்கிறார். வேட்டைச் சமூகங்களில் பிற உயிர்களைப் போலவே இனப்பெருக்கம் மிக அவசியமான செயல்பாடாக இருந்திருக்க வேண்டும். எனவே தொடர்ந்து சமூகம் உயிர் வாழ்வதற்கான முக்கிய காரணியாக அமைந்த பெண்கள் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அதனாலேயே உலகமெங்கும் பழங்குடிச் சமூகங்கள் பெரும்பாலும் தாய்வழிச் சமூகங்களாக இருக்கின்றன. பிறப்பு ஒரு புதிராகவும் இயற்கையின் விந்தையாகவும் இருந்த காலகட்டத்தில் மனிதர்கள் தங்களை பிறப்பித்த அன்னையரை இயற்கையின் மறுவடிவமாகவே கருதினர். எனவே முதலில் உலகமெங்கும் அன்னை தெய்வங்கள் தோன்றினர். இந்நிலையில் பெண்களின் சமூக வீழ்ச்சியென்பது மனிதர்கள் வேளான் சமூகங்களாக மாறிய பிறகே தொடங்கியது. மனிதர்கள் நிலத்திலிருந்து பயிர்களை உருவாக்கத் தொடங்கியவுடன் பிறப்பு ஒரு விந்தையாக இன்றி ஒரு தொழில்நுட்பமாக மாறியது. ஆனால் அப்பொழுதும் பெண்கள் ஆண்களுக்கு நிகராகவே வேளாண்மையில் ஈடுபட்டு வந்தனர். அதே நேரத்தில் அவர்கள் குழந்தைகளையும் பெற்றெடுத்தனர். பெண்களின் சமூக நிலையில் ஏற்பட்ட அசலான வீழ்ச்சி ஏர் கண்டுபிடிக்கப்பட்ட பிறகே தொடங்குகிறது. மனிதர்கள் ஏர்களைக் கொண்டு நிலத்தை திருத்தி பயிரிடத் தொடங்கியபொழுது உடல் வலிமை மிகுந்த ஆண்களின் நிலை சமூகத்தில் உயர்ந்தது. பிறப்பின் தொடக்கமாகக் கருதப்பட்ட நிலம் ஏர் பிடிக்கும் ஆணின் ஆளுமைக்கு உட்பட்டதாக மாறியது. இதன் நீட்சியாகவே படைப்பின் பிரதிநிதியாக கருதப்பட்ட பெண் ஆணின் ஆளுமைக்கு உட்பட்டவளானாள். தொன்மையான சமூகங்களில் அன்னை தெய்வங்கள் அவர்களின் மகன்களாலும், கணவர்களாலும் புறந்தள்ளப்பட்டனர் என்கிறார் பொவா. இதற்கான சான்றாக கிரேக்க தொன்மத்தில் கையாவிற்கு பதிலாக ஜியூஸும் ரோமானிய தொன்மத்தில் டெர்ராவுக்கு பதிலாக ஜூபிடரும் பிரதான தெய்வங்களானதை பொவா சுட்டிக்காட்டுகிறார்.      

இதன் தொடர்ச்சியாகவே அறிவியலுக்கு முந்தைய மத நம்பிக்கைகளில் தொடங்கி சமகால அறிவியல் கோட்பாடுகள் வரையில் பெண்களின் மீதான பெண்மை எனும் கட்டமைப்பு உருவாகி வருவதாக பொவா கருதினார். பெண்மை எனும் சமூகக் கட்டமைப்பு பெண்களின் கருப்பை சார்ந்தே வரலாற்றில் உருவாகியிருக்கிறது. அறிவியலுக்கு முந்தைய காலங்களில் பெண்ணின் கருப்பை என்பது தன்னளவில் எவ்வித தனிக்குணங்களோ உயிரியல் செயல்பாடுகளோ அற்ற உடலின் ஓர் பாழ் உறுப்பாகவே கருதப்பட்டது. அவ்வுறுப்பே ஆணின் செயல்பாட்டால் உயிர் பெற்று கருவாகிறது என்று நம்பப்பட்டது. இந்த நம்பிக்கையின் தொடர்ச்சியாகவே பெண்கள் முழுமைபெறாத குறை உயிர்களாக கருதப்பட்டார்கள். அவர்கள் தன்னளவில் தனிச்சிந்தனைகளோ செயல்பாடுகளோ அற்றவர்களாகவும் ஆண்களே அவர்களை முழுமையுறச் செய்வதாகவும் நம்பப்பட்டது. பெண்கள் சக மனிதர்களாக இல்லாமல் ஆண்களால் பழக்கப்படுத்தப்பட்ட மிருகங்களாகவே கருதப்பட்டனர். ஆண்களின் துணையும் வழிகாட்டுதலும் இன்றி பெண்கள் தனியாகச் செயல்பட இயலாதவர்களாகவும் ஆண்களை சீரழிப்பவர்களாகவுமே சித்தரிக்கப்பட்டனர் என்று பொவா கூறுகிறார். இத்தகைய ஆணாதிக்க கருத்துக்களின் வெளிப்பாடாகவே இறைவன் தன் உருவத்தில் ஆதாமை படைத்து ஆதாமின் விலா எலும்பிலிருந்து ஏவாளை உருவாக்கியதாக கருதப்படும் கிருத்துவ தொன்மத்தை பொவா கருதுகிறார்.

ஒரு வகையில் பெண்களின் மீதான ஆண்களின் வெறுப்பு என்பது பெண்களின் கருப்பையின் மீதான ஆதிக்கத்தின் வெளிப்பாடே என்றார் பொவா. பண்டைச் சமூகங்களில் இத்தகைய கருப்பை சார்ந்த பெண்மையெனும் ஒடுக்குமுறையிலிருந்து விடுபட்டவர்கள் பாலியல் தொழிலாளர்களும், பெண் பூசாரிகளும், ஆட்சியாளர்களும் மட்டுமே. அவர்களே உடல் சார்ந்த சுதந்திரத்தையும், சமூகம் சார்ந்த சுதந்திரத்தையும் அனுபவித்தார்கள். அவர்களால் தங்கள் கருப்பைகளின் விலங்குகளிலிருந்து விடுபட்டு தங்களுக்கான தனி அடையாளங்களை உருவாக்க முடிந்தது. அதனாலேயே பண்டைச் சமூகங்களில் அவர்கள் இசை, நடனம், சிற்பம், ஓவியம், கவிதை போன்ற கலைகளில் தேர்ச்சி பெற்ற கலைஞர்களாகவும், கலைகளுக்கான புரவளர்களாகவும் திகழ்ந்தார்கள். அவர்களின் சுதந்திரத்திற்கான விலையாக அவர்கள் சமூகத்தின் பொதுவுடைமைகளாக தங்களை அர்பணிக்க வேண்டியிருந்தது. அதனால் அவர்கள் பல வன்முறைகளை சந்திக்க நேர்ந்தபோதும் அவர்கள் சமூகத்தால் புறக்கணிக்கப்படவில்லை. மாறாக அவர்கள் சமூகத்தால் ஒரே நேரத்தில் ஆச்சரியத்தோடும் அச்சத்தோடும் வணங்கப்பட்டார்கள். கிருத்துவத்தின் வருகைக்குப் பிறகே அவர்களை சமூகம் புறக்கணிக்கத் தொடங்கியது. தன் ஒட்டுமொத்த மதக் கட்டுமானத்தையும் ஆணாதிக்கத்தின் மீது கட்டமைத்த கிருத்தவத்தால் அவர்களின் சுதந்திரத்தை ஏற்க இயலவில்லை. அதன் விளைவாகவே பெண்களின் சுதந்திரமும் அவர்கள் பேணி வந்த மரபான கலைகளும் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டன என்கிறார் பொவா. இதற்கான எடுத்துக்காட்டாக பொவா கிரேக்க ரோமானிய சமூகங்களை எடுத்துக்கொள்கிறார். ஆனால் இவ்வரிகளை வாசிக்கையில் இந்திய தேவதாசிகளின் நினைவே முதலில் எழுகிறது.

இத்தகைய பெண்களின் மீதான வெறுப்பின் கூறுகளை புனிதர் ஆகஸ்டினின் எழுத்துகளில் தொடங்கி சமூகவியலாலர் ஆகஸ்ட் காம்டேவின் (August Comte) எழுத்துக்கள் வரை பல்வேறு தளங்களில் பொவா சுட்டிக்காட்டுகிறார். கருத்தடை சாதனங்களுக்கு எதிரான சிந்தனைகள், கருக்கலைப்பு சுதந்திரத்திற்கு எதிரான சிந்தனைகள், ஆடைகள் சார்ந்த சுதந்திரத்திற்கு எதிரான சிந்தனைகள் என சமூகத்தில் இன்றளவும் பெண்கள் சந்திக்கும் பல்வேறு சிக்கல்களுக்கான மூலக்காரணிகளாக பொவா இக்கட்டமைப்புகளையே கருதுகிறார். புனைவில் பால்சாக் (Balzac), ஹூகோ (Victor Hugo), டி.எச். லாரஸ் (D.H. Lawrence) போன்ற பல்வேறு எழுத்தாளர்களின் எழுத்துக்களில் பெண் ஒரு தாழ்ந்த உயிரினம், பழக்கப்படாத மிருகம் என்ற சிந்தனையின் வெளிப்பாடு இருப்பதாகவே சிமோன் தி பொவா கருதுகிறார். 

பெண்மையின் உளவியல்: பொவாவின் சிந்தனைகள் வரலாறு, மானுடவியல், சமூகவியல் என பல்வேறு தளங்களில் பெண்ணியச் சிந்தனைகளுக்கான வலுவான அடித்தளத்தை அமைத்தபோதும் அவரது பிரதான களமாக அமைந்தது உளவியலே. தன் காலத்து பாலியல் சார்ந்த உளவியல் சிந்தனைகளில் பெரும் செல்வாக்கு செலுத்திய ஃப்ராய்டிய கோட்பாடுகளை பொவா நிராகரித்தார். ஃப்ராய்டிய சிந்தனைகளின் அடிப்படையில் அமைந்த அனைத்து உளவியல் கோட்பாடுகளும் பாலியல் உணர்வுகளின் வெளிப்பாடுகளை மட்டுமே ஆராய்கின்றன. அவ்வுணர்வுகளின் அடிப்படைகளையும் அவற்றின் தோற்றுவாய்களையும் அவை விளக்குவதில்லை என்றார் பொவா. உடல் அளவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் எப்படி அவர்களின் மனதளவில் பாலியல் பாகுபாடுகளாக உருமாறுகின்றன என்பதை ஃப்ராய்டிய சிந்தனைகள் விளக்கத் தவறுகின்றன. ஃப்ராய்டிய பாலியல் சிந்தனைகளில் பிரதானமான Penis Envy, Castration Complex, Oedipus Complex போன்ற கோட்பாடுகள் சமூகத்தில் வெளிப்படும் பாலின அடிப்படையிலான பாகுபாடுகளை இயற்கையான பாலுணர்வுகளின் வெளிப்பாடுகளாக கட்டமைக்க முற்படுவதாக பொவா கருதினார். உதாரணமாக Penis Envy எனும் கோட்பாடு அடிப்படையில் ஆண்களின் பாலுறுப்புகள் பெண்களின் பாலுறுப்புகளைவிடவும் மேலானது எனும் அடிப்படையிலேயே அமைகிறது. ஆனால் அத்தகைய பாலுறுப்புகளுக்கான தரவரிசையை உருவாக்குவது யார்? குழந்தைகள் தானாக எதற்காக தங்கள் உடல்களை தரவரிசைப்படுத்த வேண்டும்? அவ்வாறு இருப்பின் ஆண்கள் ஏன் பெண்களின் உடல்களைக் கண்டு பொறாமை கொள்வதில்லை? போன்ற கேள்விகளுக்கு ஃப்ராய்டிய சிந்தனைகள் பதில் அளிப்பதில்லை. எனவே ஃப்ராய்ட் பாலுணர்வுகள் இயற்கையில் வேறுபட்டவை எனும் அடிப்படையிலேயே தனது சிந்தனைகளை அமைக்கிறார். சி. ஜி. யுங் போன்றவர்கள் கூட்டு நனவிலி போன்ற சிந்தனைகளை முன்வைத்தாலும் அவர்கள் பாலுணர்வுகளுக்கான அடிப்படைகளையும் பாலின பாகுபாடுகளின் அடிப்படைகளையும் ஆராய்வதில்லை என்றார் பொவா. எனவே பொவா தனது பாலினம் சார்ந்த சிந்தனைகளை சாத்ராவின் அந்நியமாதலின் அடிப்படையில் அமைத்தார். அதன் வழியே பாலியல் சார்ந்த உளவியல் சிந்தனைகளில் பொவா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். தனது உளவியல் சிந்தனைகளின் அடிப்படையிலேயே பொவா தனது புத்தகத்தின் இரண்டாம் பகுதியான வாழ்வனுபவங்களில் பெண்களின் ஒட்டுமொத்த வாழ்வையும் உளவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்துகிறார். 

பெண்ணாகுதல்: பெண் பிறப்பதில்லை உருவாகிறாள் என்ற பொவின் பிரகடனம் அவரது சிந்தனைகளில் தொடர்ந்து பிரதிபலித்துக்கொண்டே இருப்பதை இரண்டாம் பாலினத்தின் பல பகுதிகளில் காண முடிகிறது. அப்பிரகடனத்தின் பின்புலத்தில் செயல்பட்டிற்கும் அசாத்தியமான சிந்தனையும் உழைப்பும் இரண்டாம் பாலினத்தில் மிகத் தெளிவாக வெளிப்படுகின்றன. வாழ்வனுபவங்கள் (Lived experiences) என்ற தலைப்பில் அமைந்த இரண்டாம் பாலினத்தின் பிற்பகுதி பெண்களின் பிறப்பில் தொடங்கி அவர்களது மரணம் வரையிலான ஒட்டுமொத்த வாழ்க்கைச் சித்திரத்தையும் உளவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்துகிறது. அவர்கள் மீது செலுத்தப்படும் ஒடுக்குமுறைகள், பாகுபாடுகள், அதற்கான அவர்களது எதிர்வினைகள், பெண்மை எனும் கட்டமைப்பின் வெளிப்பாடுகள், அதன் விளைவாக பெண்கள் எதிர்கொள்ளும் அகச்சிக்கல்கள், பாலியல் சிக்கல்கள் என பல்வேறு தளங்களில் மிக நுட்பமான புரிதல்களை இப்பகுதி அளிக்கிறது. அவற்றின் அடிப்படையில் பொவா முன்வைக்கும் நுட்பமான கருத்துக்கள் அவரது தனித்துவமான சிந்தனைகளுக்கான சான்றாக விளங்குகிறது. 

இருத்தலியல் சிந்தனைகளின் முன்னோடிகளில் ஒருவரான பொவா தனது பெண்ணியச் சிந்தனைகளையும் இருத்தலியலின் அடிப்படையிலேயே அமைக்கிறார். வரலாற்றுப் பிரக்ஞையும் பெண்களின் எதிர் காலத்திற்கான கனவுகளும் அவரிடம் இருந்தாலும் அவர் தனது சிந்தனைகளை தன் சமகாலத்து பெண்களின் வாழ்வின் அடிப்படையிலேயே நிலைநிறுத்துகிறார். சமூகத்தின் உச்சங்களையும், உயர்குடிப் பெண்களையும் பெரும்பாலும் தவிர்த்து மத்தியதர பெண்களின் அன்றாட வாழ்வை பற்றிய தனது புரிதல்களையே அவர் இப்பகுதியில் முன்வைக்கிறார். அவருடைய சமகாலத்து பிரெஞ்சு சமூகத்தின் மீதான பொவாவின் பல புரிதல்கள் இன்றளவும் பெண்களுக்கு பொருந்தக்கூடியதாகவே இருக்கிறது.

குழந்தை முதல் பெண் குழந்தை வரை: எந்த குழந்தையையும் போல் பெண் குழந்தைகளிடமும் பிறப்பில் பாலினம் சார்ந்த எவ்வித குணநல வேறுபாடுகளும் இருப்பதில்லை. அவர்கள் பாலினம் சார்ந்த அடையாளங்களை உருவாக்கிக்கொள்வதும் தங்கள் தாயோடும் பிற பெண்களோடும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வதும் அவர்களது வளர்ப்புச் சூழலின் காரணமாகவே என்கிறார் பொவா. தொடர்ந்து ஆண்களால் கட்டுப்படுத்தப்படும் இவ்வுலகில் தொடக்கத்தில் தன்னை ஆணாக நிறுவிக்கொள்ள அனைத்து பெண் குழந்தைகளும் முயல்கின்றன. ஆனால் அத்தகைய வாய்ப்பு மறுக்கப்படுகையில் அவர்கள் அதற்கான காரணமாக தங்கள் உடல்களை கருதத் தொடங்குகிறார்கள். அதன் காரணமாகவே தங்களை ஒத்த உடல்களை உடைய பிற பெண்களை பிரதி செய்யத் தொடங்குகிறார்கள். அதன் வழியே அவர்கள் பெண்மையின் கட்டுக்குள் வரத் தொடங்குகிறார்கள். குழந்தைகள் தங்கள் உடல்களில் உள்ள வித்தியாசத்தை உணர்ந்த பிறகே அவர்களுக்குள் பாலினம் சார்ந்த பாகுபாடுகள் நிறுவப்படுகின்றன. அதுவரையில் பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளுக்கு நிகராகவே விளையாட்டுக்களில் ஆர்வம் கொள்கிறார்கள். ஆண் குழந்தைகளுடன் இணைந்து விளையாடவும் சண்டையிடவும் அவர்கள் தயங்குவதில்லை. தங்களுக்கான பாலின வரையறைகளை சமூகமே அவர்களின் மனதில் ஆழமாக பதிக்கிறது. ஆடைகள், விளையாட்டுக்களில் தொடங்கி ஒழுக்கங்கள், பழக்கங்கள் வரை சமூகமே குழந்தைகளின் மனதில் பாலின வேறுபாட்டை உருவாக்குகிறது. அவ்வேறுபாடு வேர்கொண்ட பின் அவர்களில் ஏற்படும் பாலின அடிப்படையிலான பிரிவினையே அவர்களை பெண்களாக அடையாளப்படுத்துகிறது. அவர்கள் ஆழ்மனதில் உள்ள ஆண்களுக்கு நிகராக வாழ்வதற்கான ஆசைக்கும் அதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படும் சூழலுக்கும் இடையிலான அலைக்கழிப்பின் காரணமாக பெண்கள் அந்நியமாதலுக்கு உள்ளாகிறார்கள். அவ்வந்நியமாதலை எதிர்கொள்ளவே தங்களுக்கான தனி அடையாளங்களை உருவாக்கிக்கொள்ள விரும்புகிறார்கள். அதற்காகவே அவர்கள் பெண்மை எனும் கட்டமைப்பிற்கு ஆட்படுகிறார்கள் என்கிறார் பொவா.

கன்னிமை: பெண்மை எனும் கட்டமைப்பை ஏற்றுக்கொண்ட பின் பெண்கள் தங்கள் இளமையின் பெரும் பகுதியை அக்கட்டமைப்பிற்குள் தங்களை பொருத்திக் கொள்ளவே செலவழிக்கிறார்கள். ஆடைகள், அணிகள், அழகுபடுத்தல், உடல்மொழி, சிந்தனைகள், குணங்கள் என அனைத்திலும் உலகம் இரண்டாக பிளவுண்டிருப்பதை அவர்கள் அறிகிறார்கள். இக்காலகட்டத்தில் பெண்கள் பெண்மையை ஏற்றுக்கொண்டாலும் ஆண்களின் ஆளுமைக்கு உட்பட மறுக்கிறார்கள். தங்களை ஆண்களுக்கு நிகரானவர்களாக நிரூபிக்க விரும்புகிறார்கள். தொடர்ந்து பெண்மையின் அன்றாடத் தன்மையை ஏற்றுக்கொண்டே ஆண்களுக்கு நிகரான தன்னிலை கடத்தலை சாத்தியப்படுத்த முயல்கிறார்கள். அதற்கான பெரும்பாலான வழிகள் தங்களுக்கு மறுக்கப்பட்டிருப்பதை உணர்கிறார்கள். அவ்வாறாக சமூகத்தால் தங்களுக்கு மறுக்கப்படாத வழிகளில் தங்கள் சமத்துவத்தை நிறுவ முயல்கிறார்கள். அசலான அறிவுச் செயல்பாடும் கற்பனையும் மறுக்கப்பட்ட சூழலில் பள்ளிப் பாடங்களில் முதல் மாணவிகளாக திகழ்கிறார்கள். சமூகம் தங்களுக்கு விதிக்கும் அனைத்து விதிகளையும் பின்பற்றுவதன் வழியே சமூகத்தை தங்களது சமத்துவத்தை அங்கீகரிக்க வைக்க முடியும் என்று நம்புகிறார்கள். தங்கள் பெண்மையாலேயே தாங்கள் கட்டுண்டிருப்பதை உணர்ந்தாலும் அதன் எல்லைகளை கடக்க இயலாதவர்களாக அதன் ஒடுக்குமுறைக்கு ஆட்படுகிறார்கள். தங்கள் தனிமையை கற்பனைகளால் நிறைத்துக்கொள்கிறார்கள். இளம்பெண்களின் இயல்பில் உருவாகும் கற்பனாவாதம் என்பது அவர்கள் மீது செலுத்தப்படும் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான அவர்களது அகத்தின் எதிர்வினைகளே என்கிறார் பொவா. இந்நிலையில் தங்களை பற்றிய கற்பனைகள் அனைத்தும் பொய்த்துப் போவதையும் சமூகத்தின் அனைத்து வழிகளும் தங்களுக்கு மறுக்கப்படுவதையும் உணரும் பெண்கள் தங்கள் பெண்மையை மேலும் பற்றிக்கொள்கிறார்கள். 

இந்த வயதிலேயே பெண்களின் பதின் பருவம் தொடங்குகிறது. தங்கள் உடல்களின் மாற்றத்தாலும் பாலுணர்வுகளின் எழுச்சியாலும் அவர்கள் தங்கள் பெண்மையை முழுமையாக ஏற்றுக்கொள்ளத் தொடங்குகிறார்கள். இதன் தொடக்கமாக தங்கள் உடல்களின் மீது கடுமையான அருவெறுப்பை அடைகிறார்கள். தங்கள் பாலுணர்வுகளின் மீதான குற்றவுணர்ச்சியே அவர்களை முதலில் ஆட்கொள்கிறது. அதன் வழியே அந்த பாலுணர்வுகளின் மீதான ஆர்வத்தை அடைகிறார்கள். அந்த ஆர்வத்தின் வழியே பாலுறவுகளை பற்றிய புரிதல்களை அடைகிறார்கள். பயம், அருவெறுப்பு, கிளர்ச்சி என பல படிநிலைகளை கடந்து பெண்கள் தங்களது காமத்தை முழுவதுமாக கண்டுகொள்கிறார்கள். தங்களுக்கு மறுக்கப்பட்ட உலகை வெல்வதற்கான ஒரே வழியாக தங்கள் காமத்தை காணத் தொடங்குகிறார்கள். சிறுவயது முதலே சமூகத்தால் ஆண்களை சார்ந்து இருக்க பணிக்கப்பட்ட வாழ்வில் தங்களுக்கான வெற்றி என்பது ஆண்களின் வழியே மட்டுமே நிகழ முடியும் என்று நம்பத் தொடங்குகிறார்கள். அதற்கான மிகச் சிறந்த வழியாக அவர்கள் முன் தோன்றும் சமூகத்தின் அற்புதக் கட்டமைப்பே காதல். தங்களின் கற்பனாவாதத்தாலும் பாலுணர்வுகளாலும் உந்தப்பட்டு காதல் எனும் கட்டமைப்பை தங்களுக்கான மீட்சியாக கருதத் தொடங்குகிறார்கள். காதல் ஆணின் வாழ்வில் ஒரு பகுதியாக மட்டுமே கருதப்படுகிறது. பெண்ணுக்கோ காதலே வாழ்வாகிவிடுகிறது. அது அவள் உலகோடு நேரடியாக விளையாட அனுமதிக்கப்படும் ஒரே விளையாட்டாக ஆகிவிடுகிறது. அதனாலேயே பெண்கள் காதலில் ஆண்களை விடவும் கடும் தீவிரத்தோடு செயல்படுகிறார்கள். தங்கள் காதலர்களை அதிமானுடர்களாக கற்பனை செய்கிறார்கள். அவர்கள் முன் தங்களை முழுமையாக அர்ப்பணிக்க விரும்புபவர்களாக நடிக்கத் தொடங்குகிறார்கள். சிறுமிகளின் உடல்மொழியை பிரதி செய்கிறார்கள். இவ்வாறு தங்கள் காதலர்களை அடைவதன் வழியே தங்களையும் அதிமானுடர்களாக கற்பனை செய்துகொள்கிறார்கள். தங்கள் காதலர்களை முழுமையாக ஆட்கொள்ளமால் அவர்களால் ஓயமுடியாது. காதலின் பெயரால் நிகழ்த்தப்படும் வன்முறைகளை அவர்கள் பொறுத்துக்கொள்வதும் அதற்காகவே என்கிறார் பொவா. முழுமையான சரணடைதலின் வழியே தங்கள் காதலர்களை முழுமையாக ஆட்கொள்ள முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அதே நேரத்தில் கடுமையான பொறாமை, சந்தேகம், வெறுமை போன்றவற்றால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். அவர்களுக்கான விடுதலையாகவும் மீட்சியாகவும் கற்பனை செய்த அனைத்தும் அவர்களை மேலும் சிறைபடுத்தத் தொடங்குகின்றன.         

திருமணம்: இளமையில் காதலாலும் கற்பனாவாதத்தாலும் நிறைந்திருக்கும் பெண்கள் அவற்றை முற்றாக உதறி உலகியல்வாதிகளாகும் மாயத்தருணம் ஆண்கள் ஒருபொழுதும் அறிய முடியாத மர்மமாகவே இருந்து வருகிறது. இவ்வரிகளை எழுதும்பொழுதே கி. ராவின் கன்னிமை சிறுகதையில் தொடங்கி வெண்முரசின் தருணங்கள் வரை பல உதாரணங்கள் நினைவில் எழுகின்றன. பதின் வயதுகளின் முடிவில் தங்கள் கற்பனையின் காதலும் காமமும் யதார்த்தத்தில் பொருளிழந்து போவதை உணரும் பெண்கள் திருமணத்தின் வழியே தங்கள் வாழ்விற்கு புதிய பொருள் அளிக்க முயல்கிறார்கள் என்கிறார் பொவா. ஆனால் அவர்கள் கற்பனையில் கண்ட காதலும் காமமும் திருமணத்தின் அன்றாடத்தில் முற்றிலுமாக பொருளிழக்கின்றன. ஒட்டுமொத்தமாகவே இளமையின் கனவுகள் அனைத்தும் அன்றாடத்தின் முன் அபத்தங்களாகின்றன. தான் கற்பனை செய்திருந்த அதிமானுட காதலனுக்கும் தான் அடைந்த சராசரியான கணவனுக்கும் இடையிலான இடைவெளியை மறைக்கவே பெண்கள் மணவுறவின் தொடக்கத்தில் போராடுகிறார்கள். தங்கள் கணவர்களை அதிமானுடர்களாக மாற்ற முயல்கிறார்கள். அதற்காக தங்கள் கணவர்களை பெரும் துன்பங்களுக்கும் ஆளாக்கத் தயாராக இருக்கிறார்கள். அவ்வாறு கணவர்கள் அனுபவிக்கும் துன்பங்களையே தங்கள் பெண்மைக்கான அங்கீகாகரமாக கருதத் தொடங்குகிறார்கள். தங்கள் கற்பனையின் காதலர்களைப் போல் தங்கள் கணவர்களும் தங்களை ஆராதிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவ்வாறு தங்கள் கணவர்களை ஆட்கொள்வதற்காக எத்தனை வன்முறையையும் ஏற்றுக்கொள்ளத் துணிகிறார்கள். தங்கள் கணவர்கள் பொருளியலில் தொடங்கி உடலுறவு வரை அனைத்திலும் அதிமானுடர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் இவை அனைத்தும் தோற்று பொருளிழந்து போகின்றன. ஆண்கள் மீதான அதிமானுட கற்பனைகள் சரிந்து அவர்கள் சராசரி மனிதர்களாகின்றனர். அவர்கள் உலகை ஆள்வதற்கான எந்த சிறப்புத் தகுதிகளும் இல்லாத சராசரிகளே என்ற புரிதல் உருவாகிறது. ஆனாலும் ஆண்களின் துணையின்றி வாழ்வதற்கான துணிவு பெண்களில் உருவாவதில்லை. இந்த நிலையிலேயே அவர்கள் அன்றாடத்தின் பெரும்பகுதி அவர்களின் கணவர்களின் துணை இல்லாத தனிமையில் கழியத் தொடங்குகிறது. இத்தகைய நிலையில் அவர்கள் மத்திய தர உழைக்கும் வர்க்கத்தின் ஆணுக்கு நிகரான அந்நியமாதலை எதிர்கொள்கிறார்கள். இந்த தனிமையின் காரணமாக அந்நியமாதலுக்கும், உளவியல் சிக்கல்களுக்கும் உள்ளாகும் பெண்கள் தங்கள் வாழ்வை பொருளுள்ளதாக்கவே தங்களை முழுவதுமாக அன்றாடத்தில் கரைத்துக்கொள்கிறார்கள். தீவிர உலகியலாளர்களாக மாறுகிறார்கள். இந்நிலையில் இயல்பில் மீறல் தன்மையுடைய பெண்கள் திருமணத்திற்கு அப்பால் தங்கள் கனவுக் காதலனை தேடத் தொடங்குகிறார்கள் மற்றவர்கள் வீட்டின் பராமரிப்புப் பணிகள், பிற பெண்களுடனான அரட்டைகள், மதச் சடங்குகள் என தங்களை முழுவதுமாக கரைத்துக் கொள்வதன் வழியே தங்களின் நிலையிலிருந்து தப்ப முயல்கிறார்கள். அவை பயனற்று போகையில் அவர்களின் மீட்சிக்கான கடைசி வழியாக சமூகம் அளிக்கும் தாய்மை எனும் கொடுஞ்சிறையை ஏற்கிறார்கள் என்கிறார் பொவா. இதற்கான எடுத்துக்காட்டாக அன்னா கரீனினா, லேடி சாட்டர்லி போன்ற கதாபாத்திரங்களை பொவா முன்வைக்கிறார். 

தாய்மை: உலகமெங்கும் விதந்தோதப்படும் கற்பனாவாதத்தின் செல்லக்குழந்தையான தாய்மை எனும் கட்டமைப்பே இயற்கை பெண்களுக்கு இழைத்த பெரும் அநீதி என்கிறார் பொவா. பெண்ணுடலையும் மனதையும் ஒட்டுமொத்தமாக அந்நியமாதலுக்கு உள்ளாக்கும் கொடுஞ்சிறை அது. திருமணத்தின் வெறுமையிலிருந்து தன்னை மீட்டுக்கொள்ளவும் தனக்கான சமூக அங்கீகாரத்தை பெறவும் பெண்களுக்குக் கிடைக்கும் கடைசி வாய்ப்பாக அமைகிறது தாய்மை. சமூகத்தால் வணங்கப்படும் அந்த நிலையே தங்களுக்கான விடுதலையை அளிக்க முடியும் என்று பெண்கள் நம்புகிறார்கள். பெண்மையை ஏற்றுக்கொண்டு தன் வாழ்வின் பெரும்பகுதியை அதன் மீதான நம்பிக்கையிலேயே கடத்திவிட்ட பெண்கள் பெண்மையின் உச்சமாக கருதப்படும் தாய்மையின் வழியே தங்களுக்கான தன்னிலை கடத்தலை சாத்தியப்படுத்த முடியும் என்று நம்புகிறார்கள். ஆனால் தாய்மையோ அவர்களை ஒட்டுமொத்தமாக தங்கள் உடல்களில் இருந்து அந்நியப்படுத்தும் கொடும் நோயாகிவிடுகிறது. தங்கள் உடலின் ஒரு பகுதியாக வளரப்போகும் ஓர் உயிரின் மீதான கற்பனைகளில் திளைக்கும் பெண்கள் கருவுற்ற பிறகே அதன் கொடுமைகளை அனுபவிக்கத் தொடங்குகிறார்கள். பெண்களின் உடலில் வளரும் குழந்தையெனும் ஒட்டுண்ணி அவர்களை ஒட்டுமொத்தமாக தங்கள் உடலில் இருந்து அந்நியமாக்குகிறது. கடுமையான உடல் உபாதைகளையும் உளவியல் சிக்கல்களையும் அளிக்கிறது. தாய்மையெனும் சமூகத்தின் கற்பிதம் இல்லாவிடில் ஒரு கொடும் நோயாகவே கருதத்தக்க அளவிலேயே பெண்களின் உடல் அவ்வொட்டுண்ணியால் சிதைக்கப்படுகிறது. இத்தகைய துன்பங்களை பெண்கள் தனிமையிலேயே அனுபவிக்கிறார்கள். தாய்மையே பெண்களின் மீதான ஆண்களின் ஆதிக்கத்தின் உச்சமாக மாறுகிறது. அந்த சிதைவுக்குப் பிறகு பெண்ணுடல் ஆணின் முழு உடைமையாகிவிடுகிறது. உலகின் அனைத்து உயிர்களுக்கும் அளிக்கப்பட்டிருக்கும் இனப்பெருக்கத்திற்கான குறிப்பிட்ட காலம் பெண்களுக்கு இயற்கையில் அமையாத காரணத்தால் பெண்கள் தொடர் கருவுறுதலுக்கும் மகப்பேற்றுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள். அதன் விளைவாக கடும் உளச்சிதைவுக்கும் உடல் சிதைவுக்கும் ஆளாகிறார்கள். குழந்தை வளர்ப்பும் அவர்களின் மீதான ஆதிக்கமுமே பெண்களின் வாழ்வாக மாறிவிடுகிறது. அதற்கு பிறகான வாழ்க்கையை வெறுமை, இயலாமை, கசப்பு, முதுமை, மதச் சடங்குகள், மூட நம்பிக்கைகள், கழிவிரக்கங்கள் என்றே பெண்கள் கழிக்கிறார்கள். தங்களின் உண்மையான விடுதலையை ஒரு போதும் உணராத அற்பமான அன்றாட வாழ்வில் உழன்று மடியும் பெண்களின் நிலை சமூகத்தில் இன்றளவும் வளர்ப்பு மிருகங்களின் நிலைக்கு நிகரானதாகவே இருக்கிறது என்கிறார் பொவா. இப்பகுதியை எழுதுகையில் எம். வி. வெங்கட்ராமின் நித்யகன்னி நாவல் நினைவில் எழுகிறது.

விடுதலை: பெண்களின் உடல், உளவியல், வாழ்வு, சமூகம் என பல்வேறு தளங்களை மிக நுட்பமாக அணுகும் பொவா அப்புரிதல்களின் வழியே பெண்களுக்கான விடுதலையை முன்வைக்கிறார். பெண்களுக்கான விடுதலை என்பது ஒரே நேரத்தில் அகவயமாகவும் புறவயமாகவும் இரண்டு தளங்களில் நிகழவேண்டும் என்று பொவா கருதுகிறார். தங்களின் மீதான சமூகத்தின் புறவயமான ஒடுக்குமுறைகளிலிருந்து விடுபட பெண்கள் பொருளாதாரச் சுதந்திரத்தை அடைவதே சிறந்த வழி என்று புவா கருதுகிறார். தொழிற்புரட்சிக்கு முந்தைய நிலப்பிரபுத்துவ சமூகங்களில் இணையான உயிர்களாகவே மதிக்கப்படாத பெண்கள் தொழிற்புரட்சியின் காரணமாக தங்களுக்கான அடிப்படை பொருளாதாரம், கல்வி முதலியவற்றை பெற்ற பிறகே பெண்ணியத்தின் முதல் அலை உருவாகி வந்தது. தொழிற்புரட்சி பெண்களை வேறு விதமான சுரண்டல்களுக்கு உள்ளாக்கினாலும் அது அளித்த பொருளாதாரச் சுதந்திரமே பெண்கள் பெண்மையின் ஒடுக்குமுறையிலிருந்து வெளியேறுவதற்கான முதல் வாய்ப்பை அளித்தது. எனவே பொருளாதாரச் சுதந்திரமே பெண்களின் மீதான சமூக ஒடுக்குமுறையிலிருந்து அவர்கள் விடுபடுவதற்கான முதல் படி என்று பொவா கருதுகிறார். கல்வி, அரசியல், சமூகம் என பல்வேறு தளங்களில் தங்கள் விடுதலைக்கான போராட்டங்களை பெண்கள் முன்னெடுக்க வேண்டும். தங்கள் வர்க்கம், குடும்பம், மதம் போன்ற பேதங்களை கடந்து பெண்கள் பெண்களாக ஒன்றிணைந்தால் மட்டுமே பெண்களுக்கான சமூக விடுதலை சாத்தியமாகும் என்று பொவா கருதினார். குறிப்பிட்ட சிறு சமூகங்களின் பெண்களும் உயர் வர்க்கங்களின் பெண்களும் அடையும் விடுதலை ஒரு நாளும் பெண்களின் ஒட்டுமொத்த சமூக விடுதலையாகாது. பெண்களின் சமூக விடுதலை அவர்களின் வேறுபாடுகள் அனைத்தையும் கடந்து ஒட்டுமொத்தமாக பெண்களுக்கானதாக நிகழவேண்டும் என்பதை பொவா வலியுறுத்தினார். 

ஆனால் பெண்களுக்கான முழுமையான விடுதலை என்பது புறவயமாக மட்டுமே நிகழ முடியாது. அவர்களுக்கான உண்மையான விடுதலை என்பது அவர்கள் தங்கள் பெண்மையை கடப்பதிலேயே இருக்கிறது என்றார் பொவா. பெண்மையை கடத்தல் என்பது ஆண்மையை ஏற்றுக்கொள்வதல்ல. பெண்மை எனும் சமூக ஒடுக்குமுறையை கடப்பதே. தன் இயல்பிலேயே அந்நியமாதலையும், ஒடுக்குமுறையையும் கொண்ட பெண்மை எனும் கட்டமைப்பிலிருந்து பெண்கள் விடுபட வேண்டும். ஆண்களை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்ட சிந்தனைகளையும் கட்டமைப்புகளையும் கடந்து அவர்கள் தங்களுக்கான தனித்துவமான சிந்தனைகளை உருவாக்க வேண்டும். அடிமைத்தனமற்ற சிந்தனை முறையையும் சமத்துவத்தையும் அவர்கள் முதலில் தங்கள் அகத்தில் உருவாக்க வேண்டும். ஆண்களின் வாழ்வில் ஒரு பகுதியாக இல்லாமல் தங்களுக்கான தனித்துவமான வாழ்வையும் அடையாளத்தையும் அவர்கள் உருவாக்கவேண்டும். தாய்மையின் மீதான கற்பனாவாதம் உருவாக்கும் ஒடுக்குமுறையிலிருந்தும் கருப்பை சார்ந்த விழுமியங்களிலிருந்தும் தங்கள் உடல்களை விடுவிக்க வேண்டும். சமூகத்தின் அங்கீகாரத்தை எதிர்பார்க்கும் விழுமியங்களை பற்றிக்கொண்டு பெண்கள் ஒரு நாளும் சமூகத்தை மாற்ற முடியாது என்றார் பொவா. பெண்கள் தங்களுக்கான அகத்தடைகளை கடந்து அறிவுச்செயல்பாட்டில் பங்காற்ற வேண்டும். அவர்களுக்கு சமூகத்தால் வகுத்தளிக்கப்படும் எல்லைகளை கடந்து மெய்யான அறிவுத் தளங்களில் அவர்கள் செயல்படத் தொடங்க வேண்டும். படைப்புகளில் உடல் சார்ந்த தனி அடையாளங்கள் வெளிப்பட வேண்டிய கலைகளான இசை, நடனம், நடிப்பு போன்றவற்றில் பங்காற்றும் பெண்களைத் தவிர்த்து கற்பனைத் திறனும் அசலான சிந்தனைகளும் தேவைப்படும் எழுத்து, ஓவியம், தத்துவம் போன்ற தளங்களில் செயல்படும் பெண்கள் தங்களது தனி அடையாளங்களின் எல்லைகளையும் பெண்மையின் கட்டமைப்புகளையும் கடந்து ஒட்டுமொத்த மானுடத்திற்கான படைப்புகளையும் சிந்தனைகளையும் உருவாக்க வேண்டும். இதற்கான உதாரணமாக ஜார்ஜ் எலியட்(George Eliot)  தனது பெண்மையை கடைக்காததால்தான் அவரது மிடில்மார்ச் (Middlemarch) டால்ஸ்டாயின் (Tolstoy)  போரும் அமைதியும் (War and Peace) அடைந்த உச்சங்களை எட்டத்தவறியது என்கிறார் பொவா. எனவே பெண்களின் பார்வையிலேயே அமைந்தாலும் அன்றாடத்தின் எல்லைகளை கடந்த மானுடத்திற்கான படைப்புகளை உருவாக்க பெண்கள் முயற்சிக்க வேண்டும் என்கிறார் பொவா. அவ்வகையில் விர்ஜினியா வுல்ப் (Virginia Woolf), கேத்தரின் மேன்ஸ்பீல்ட் (Catherine Mansfield), எமிலி பிரோன்டே (Emily Bronte) போன்ற படைப்பாளிகளை முன்னோடிகளாக கருதுகிறார் பொவா. பெண்கள் தங்களுக்கான முழுமையான விடுதலையை அடைந்த பிறகே சமத்துவமான ஓர் சமூக வாழ்வு மனிதர்களுக்கு சாத்தியமாகும் என்கிறார் பொவா.   

விமர்சனம்: சிமோன் தி பொவாவின் சிந்தனைகளின் மீதான என் விமர்சனங்களை முன்வைக்கும் முன் எனக்கான எல்லைகளை வகுத்துக்கொள்வது அவசியமாகிறது. முதலில் ஒரு ஆணாக பொவா முன்வைக்கும் பெண்களின் அகம் சார்ந்த அந்தரங்கமான தளங்களின் உண்மைத் தன்மையை என்னால் முழுமையாக விமர்சிக்க இயலாது. இரண்டாவதாக அவர் தனது சிந்தனைகளின் அடிப்படையாகக் கொண்ட உயிரியல் மற்றும் உளவியல் சார்ந்த பல கோட்பாடுகள் இன்று மரபணு ஆய்வுகளாலும் மூளை நரம்பியல் ஆய்வுகளாலும் நிராகரிக்கப்பட்டுவிட்டன. எனவே அவற்றின் மீதான விமர்சனங்களும் தேவையற்றதே. மூன்றாவதாக பொவா தனது கருத்துக்களை பெருமளவும் பிரெஞ்சு இலக்கியங்கள், தத்துவங்கள், சிந்தனைகள் சார்ந்தே உருவாக்குகிறார். அவ்வாறிருக்க ஒரு பண்பாட்டுப் பின்புலத்திலிருந்து அவர் முன்வைக்கும் சிந்தனைகளை அவற்றின் பண்பாட்டுப் பின்புலம் இன்றி விமர்சிப்பது முறையல்ல. எனவே அவர் முன்வைத்த பண்பாட்டுப் பின்புலமற்ற பொதுவான கருத்துக்களையும் அவரது சிந்தனைகளின் அடிப்படைகளையும் மட்டுமே இக்கட்டுரையில் விமர்சன அடிப்படையில் அணுக முயன்றிருக்கிறேன்.   

பொவாவின் கருத்துக்களில் விமர்சிக்கத்தக்க முதல் பண்பாக இருப்பது அவர் கட்டமைக்கும் இருமையே. பொவா ஆண்களையும் பெண்களையும் இரு எதிர் தரப்புகளாக கட்டமைக்கிறார். இந்த பார்வை அவரது மார்க்சிய சிந்தனையின் பின்புலத்தில் இருந்து எழுவதாகவே நான் கருதுகிறேன். அவர் முன்வைக்கும் வரலாறு சமூகவியல் போன்ற அனைத்து பார்வைகளிலும் ஆண்கள் இவ்வுலகை திட்டமிட்டு பெண்களுக்கு எதிரானதாக கட்டமைப்பதான பிம்பம் இருக்கிறது. இத்தகைய பார்வை இரு பாலினங்களுக்கு இடையிலான சிக்கலான உறவின் மீதான ஓர் எளிமைபடுத்தப்பட்ட புரிதலாகவே இருக்கிறது. ஆண்களை சார்ந்து வாழும் பெண்களின் உறவை மிக விரிவாக ஆராயும் பொவா பெண்களுடனான ஆண்களின் உறவை ஆண்களின் ஆதிக்கத்திற்கான வேட்கையாக மட்டுமே கருதுகிறார். இத்தகைய எளிமைபடுத்தல்கள் இரு பாலினங்களுக்கு இடையிலான உறவின் முழுமையான சித்திரத்தை அளிப்பதில்லை.                    

இரண்டாவதாக பொவா தன் சிந்தனைகளின் வழியே தன்னிச்சையாகவே ஆண் எனும் ஓர் எதிர் பிம்பத்தை உருவாக்குகிறார். அக்கட்டமைப்பின் வரையறைகளையும் அவரே நிர்ணயிக்கிறார். தன் சிந்தனைகளின் எதிர் நிலையாக அப்பிம்பத்தை பாவித்து அதன் மீதான தாக்குதலின் வழியே தன் சிந்தனைகளை நிறுவ முயல்கிறார். அவர் கட்டமைக்கும் ஆணின் பிம்பம் சமூகத்தின் பொதுப்புரிதலின் அளவில் சரியாகவே இருந்தாலும் அது ஓர் எளிமைபடுத்தப்பட்ட எதிர் நாயக பிம்பமாகவே உள்ளது. அவரது பிம்பத்தின் எல்லைகளை உணரும் சில பகுதிகளில் அப்பிம்பத்திற்கு வெளியே வாழ்பவர்கள் ஆண்களே அல்ல எனும் எளிமையான வாதத்தையும் அவர் முன்வைக்கிறார். இதனால் சில நேரங்களில் அடிப்படையான தர்க்கப் பிழைகளுள் ஒன்றான Strawman Fallacyயின் விளிம்புகள் வரை அவரது சிந்தனைகள் சென்று திரும்ப நேர்கிறது.

மூன்றாவதாக பெண்களின் மீதான ஒடுக்குமுறைகளின் காரணமாக அமைவதாலேயே அவர்களின் நற்குணங்களையும் பொவா சேர்த்தே மறுக்கிறார். உதாரணமாக பெண்களின் அதீத தன்முனைப்போ செயல் வெறியோ அற்ற நிலையை அவர்களின் பலவீனமாகவும் அவர்களின் மீதான ஒடுக்குமுறையின் ஓர் காரணியாகவும் இனங்காணும் பொவா அவ்வொடுக்குமுறையை அழிக்க அக்குணங்களையும் பெண்கள் களைய வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அக்குணங்கள் ஒடுக்குமுறைகளற்ற நிலையில் தன்னளவிலேயே நற்குணங்களாக இருப்பதை பொவா உணர மறுக்கிறார். அவ்வாறு கலையப்படுமெனில் அக்குணங்களின் எதிர்நிலைகளான அதீத செயல் வெறியும் தன்முனைப்புமே பெண்களில் எஞ்சுகிறது. அக்குணங்களோ இருபாலினத்தவரிடமும் எதிர்மறை குணங்களாகவே வெளிப்படுகின்றன.

நான்காவதாக பொவா பெண்களின் நிலையை தனித்துவமானதாகவே கருதுகிறார். அவரது சிந்தனைகளில் அவர் பெண்களின் மீதான ஒடுக்குமுறையை சில தருணங்களில் நிறவெறியோடு ஒப்பிட்டாலும் அவற்றை வேற்றுமை படுத்தவே முயல்கிறார். அவர் கருத்தில் கொள்ளும் ஒரே மாற்று ஒடுக்குமுறையாக அமைவது வர்க்க ரீதியான ஒடுக்குமுறை மட்டுமே. எனவே அவர் பாலின அடிப்படையிலான ஒடுக்குமுறைகளுக்கு நிகரான பிற ஒடுக்குமுறைகள் பெண்களின் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் பெண்களில் நிலவும் உட்பிரிவு சார்ந்த ஒடுக்குமுறைகளையும் கருத்தில் கொள்ள மறுக்கிறார். உதாரணமாக சாதிய கட்டமைப்புகளில் பெண்களுக்கு எதிரான ஒழுக்கமுறைகளும் ஆசாரங்களும் கடைபிடிக்கப்படுகின்றன. அவ்வாறான ஒழுக்கமுறையை எதிர்க்கும் பெண்கள் பாலின ஒடுக்குமுறையை எதிர்ப்பவர்களாக மட்டுமின்றி சாதிய ஒழுக்கங்களை எதிர்ப்பவர்களாகவே கருதப்படுகிறார்கள். அத்தகைய நிலையில் அவர்கள் ஒரு குறிப்பிட்ட சாதியின் ஆண்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சாதிய அமைப்பிற்குமான பொதுவான எதிரிகளாகவே பாவிக்கப்படுகிறார்கள். அதேபோல் ஓர்பாலின உறவில் இருக்கும் பெண்கள் சந்திக்கும் ஒடுக்குமுறை என்பது வெறும் பெண்கள் சார்ந்த ஒடுக்குமுறை அல்ல.

*

திருவிவிலியத்தின் தொடக்கநூல் அதிகாரம் இரண்டின் படி இறைவன் நிலத்தின் ஒரு பிடி மண்ணைக் கொண்டு தனது உருவத்திலேயே மனிதனை (ஆதாமை) படைத்து அவனுக்கு தன் ஒரு மூச்சில் உயிரூட்டி அவனை ஏதேன் தோட்டத்தில் அமர்த்தினார். அவனுக்கு துணையாக இருக்க பல்வேறு உயிர்களை உருவாக்கி அவனை அவற்றுக்கு பெயரிடும்படி பணித்தார். அவன் இட்ட பெயர்களே அனைத்து உயிர்களுக்குமான பெயர்களாயின. ஆனால் அவன் அவற்றுள் தனக்கான துணையை கண்டடையவில்லை. எனவே இறைவன் அவனுக்கு ஆழ்ந்த தூக்கத்தை வரச்செய்து அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து அதை ஓர் உயிராக படைத்து அவன் முன் நிறுத்தினார். அப்பொழுது மனிதன், “இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்; ஆணிடமிருந்து எடுக்கப்பட்டதால், இவள் பெண் என்று அழைக்கப்படுவாள்” என்றான்.

இறைவனின் கைப்பிடி மண்ணில் உருவானவன் ஆண். இறைவனின் பிரதி அவன். உலகத்தின் உடைமையாளன். முழுமையானவன். ஆனால் பெண்ணோ அவனது 24 விலா எலும்புகளில் ஒரு எலும்புக்கு மட்டுமே நிகரானவள். அவள் நிலத்தின் ஒரு பிடி மண்ணுக்கும் இறைவனின் ஒரு மூச்சுக்கும் தகுதியற்றவள். அவளது பெண் எனும் அடையாளமும் ஆண் அளிப்பதே. அவன் உடைமை அவள். அவளது படைப்பின் ஒட்டுமொத்த நோக்கமும் ஆணின் துணையாக இருப்பதுதான். இவை அனைத்திற்கும் மேலாக ஆண்தான் மனிதன். பெண் அவனிலிருந்து உருவாக்கப்பட்ட ஓர் உயிர் மட்டுமே. 

விக்னேஷ் ஹரிஹரன்

சிமோன் தி பொவாவின் ஒட்டுமொத்த பெண்ணியச் சிந்தனைகளையும் இந்த ஒரு அதிகாரத்திற்கான எதிர்வினையாகத் தொகுத்துவிட முடியும் என்றே நினைக்கிறேன். அவர் தன் ஒட்டுமொத்த வாழ்வையும் சமூகத்தில் இன்றளவும் வேரோடி இருக்கும் இந்த அதிகாரத்தின் சாரத்தை எதிர்க்கவே அர்பணித்தார். எவருடைய விலா எலும்பாகவும் இன்றி ஆணுக்கு நிகரான சகமனிதியாக பெண்ணை நிறுவவே பொவா முயன்றார். அவரது இரண்டாம் தலைமுறை பெண்ணியத்திற்கு பிறகு பெண்ணியச் சிந்தனையில் மேலும் இரண்டு தலைமுறைகள் உருவாகிவிட்டன. பெண்ணின் உடல் சார்ந்த விடுதலையும், சமூக விடுதலையும் பிரதானமாக இருந்த அவரது காலத்தை கடந்து இன்று Intersectional Feminism வரை பெண்ணியச் சிந்தனைகள் முன்னேறிவிட்டன. மேற்கத்திய நாடுகளில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் பொவாவின் சிந்தனைகள் பெண்ணியச் சிந்தனையாளர்களால் ஏற்கப்பட்டும் மறுக்கப்பட்டும் கடக்கப்பட்டும் மறக்கப்பட்டும்விட்டது. ஆனால் சமூகங்களின் மாற்றம் உலகம் முழுவதும் ஒன்றாக இருப்பதில்லை. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இருபத்தோராம் நூற்றாண்டின் அதே நேரத்தில்தான் சென்டினல் தீவின் பழங்குடிகள் புதுக் கற்காலத்தில் வாழ்கிறார்கள். எனவே எந்த அசலான சிந்தனையாளரும் முழுமையாக ஒரு காலத்திலும் கடக்கப்படுவதில்லை. அவ்வகையில் பொவா முன்வைத்த சிந்தனைகளை இன்று மேற்கத்திய சமூகங்கள் கடந்திருந்தாலும் அவை இன்றளவும் வளர்ந்து வரும் நாடுகளில் பொருந்தக்கூடியதாகவே இருக்கிறது. பெரும்பாலான பெண்கள் இன்றளவும் தங்கள் பொருளாதாரச் சுதந்திரத்திற்காகவும், உடல் சார்ந்த சுதந்திரத்திற்காகவும் போராடி வரும் நமது சூழலில் பொவாவின் சிந்தனைகள் இன்றளவும் எளிதில் கடக்க முடியாதவையே. தமிழ் இலக்கியமும் சிந்தனையாளர்களும் நைய்யப் புடைத்த சாத்ராவின் சிந்தனைகளுக்கு நிகரானவை அவை. இன்றைய சூழலில் மிக நிச்சயமாக விவாதிக்கப்பட வேண்டியவை. ஆனால் இன்றளவும் வெறும் மேற்கோள்களாகவே அவை கடக்கப்படுகின்றன.     

*                         

3 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *