அஷிதாவின் பொய்கள் – சுசித்ரா

[1]
மறைந்த மலையாள எழுத்தாளர் அஷிதாவின் சிறுகதைகளை ஒரு தலைப்பில் தொகுக்க வேண்டுமென்றால் அவற்றை ‘பொய்க்கதைகள்’ என்று சொல்லலாம். எல்லா கதைகளும் பொய் தானே, அது என்ன பொய்க்கதைகள் என்றால், அவரது சிறுகதைகள் பொய்களையே பேசுபொருளாகக் கொண்டவை. பல கதைகளின் தலைப்பே ‘நுணகள்’ – பொய்கள் என்று உள்ளன. கதைசொல்லி சொல்லும் பொய்கள், கதைசொல்லியிடம் சொல்லப்படும் பொய்கள், கதைசொல்லி தன்னைச் சுற்றி அவதானிக்கும் பொய்கள், கதைசொல்லி தன்னிடமே சொல்லிக்கொள்ளும் பொய்கள் என்று பலவிதமான பொய்கள் அவர் கதைகளில் காணப்படுகின்றன. பொய்களின் உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பார்வையாளரின் வெவ்வேறு அவதானங்களென முதற்பார்வைக்கு அஷிதாவின் கதைகளை வகுக்கலாம்.
வாழ்க்கையில் உண்மையை பொய் என்ற பாவனை மறைக்கிறது. ஆனால் கதையில் பொய் என்ற பாவனை வழியாக ஓர் உண்மை உணர்த்தப்படுகிறது. பொய்களை பற்றிய பொய்களைச் சொல்லி ஓர் உண்மையை உணர்த்தத்தான் அஷிதா தன் கதைகளில் முற்படுகிறாரோ என்ற உணர்வே அவர் கதைகளை வாசிக்கையில் ஒட்டுமொத்தமாக ஏற்படுகிறது. பொய்க்கும் உண்மைக்குமான ஒருவகையான கருப்புவெள்ளை நடனத்தை – அஷிதாவின் மொழியிலேயே சொல்லவேண்டுமென்றால் ‘சிவேன-சக-நர்த்தனத்தை’ – அஷிதா தன் கதைகளில் நிகழ்த்துகிறார்.
பொய்க்கும் உண்மைக்கும் நடுவிலான இந்த மயக்கம் குழந்தை கதைசொல்லியாக வரும் கதைகளில் – அஷிதாவின் கதையுலகில் அவை கணிசமானவை — குறிப்பாக இடம்பெறுவதைத் காணலாம். குழந்தையின் கண் அவளுடைய குறுக்கப்பட்ட உலகில் நிகழும் சாதாரணங்களையும் அசாதாரணங்களையும் காண்கிறது. எதேச்சையாக நடப்பதுபோல் தோன்றும் பல விஷயங்கள் உண்மையில் எதேச்சையாக நடப்பதில்லை என்ற புரிதல் ஏற்படுகிறது. மெல்ல மெல்ல தான் ஒரு விசித்திரமான பொய்யுலகில் வாழ்கிறோம் என்ற விடியல் அவளுக்குள் நிகழ்கிறது. அந்த உணர்வு அவளை மிரளவைக்கிறது.
இந்தச் சிறுமித்தனமான ‘மிரட்சி’ அஷிதாவின் கதைகளின் முதன்மையான பாவமாக உள்ளது. வாழ்க்கையைப் பற்றின அசலான ஒரு நோக்கும் விமர்சனமும் அவர் கதைகளில் இடம்பெறுவது இந்த அம்சத்தினால் தான். வாழ்க்கையின் இயல்பான பொய்கள், எங்கோ ஒரு சின்னஞ்சிறு சிறுமியை வாடி மிரள வைத்துக் கொண்டிருக்கிறது என்ற உணர்வு இக்கதைகளுக்கு உயிர் கொடுக்கின்றன.
‘அம்மா என்னிடம் சொன்ன பொய்கள்’ (அம்மா எந்நோடு பரஞ்ஞ நுணகள்) என்ற கதை உதாரணம். பள்ளிக்கூடம் செல்லும் வழியில் அகமது என்ற நல்ல இக்கா மிட்டாய் கொடுத்துப் பிரியமாகப் பேசுகிறார். அவன் வேற்றாள், அவனுடன் பேசாதே என்று அம்மா அதட்டுகிறாள். ‘ஆனால் எப்போதாவது தலைக்காட்டி வீடையே கதிகலங்கவைதுவிட்டுப் புறப்படும் மனிதரை அப்பா என்று அழைக்க வேண்டியிருந்தது’ என்று அடுத்த வரி செல்கிறது. இந்த முரண் சிறுமிக்குப் புரிபடவில்லை.
இப்படிப் பல முரண்கள். அம்மாவுக்கும் அப்பாவுக்குமான உறவு. அம்மாவுக்கும் அப்பாவின் சினேகிதி செல்லம்மாவுக்குமான உறவு. அவற்றைக்கண்டு அவள் திகைப்படைகிறாள். மிரள்கிறாள். ஆனால் அம்மாவோ அனைத்து முரண்களையும் ஓர் எளிய பொய் வழியாக, பாவனை வழியாக கடந்துபோவது அவளை மேலும் மிரளவைக்கிறது.
பிறகு அவளும் அம்மாவிடம் அப்படிப்பட்ட பொய்களை சாதாரணமாகச் சொல்லத் தொடங்கும் நாள் வருகிறது. அன்று அவள் ‘அம்மாவாக’ ஆகிவிட்டதாக உணர்கிறாள். அதன் பிறகு அவள் பொய்களைக்கண்டு மிரளவில்லை.
‘என் அம்மாவின் மொழியை, அம்மம்மாவின் மொழியை, அவளுக்கும் முன்னால் தோன்றிய மூதன்னையர் பேசிய மொழியை உரைக்க நானும் பழகிவிட்டேன். அது மௌனத்தின், திரிப்பின், முரணின், பொய்யின் மொழி. அந்த மொழி வழியாக நானே என்னை நிராகரிக்கிறேன், மறுக்கிறேன்,’ என்கிறாள். ‘அம்மாவாக அது தானே வழி?’
அஷிதாவின் கதைத்தலைப்புகளை மட்டும் அடுக்கிப்பார்த்தாலும் அவருடைய எழுத்துள்ளம் பற்றிய சில திறப்புகள் கிடைக்கின்றன. ‘பொய்கள்’ என்ற தலைப்புடனேயே பல கதைகள் எழுதியிருக்கிறார். ஸ்ரேஷ்டமாய சில நுணகள் (உன்னதமான சில பொய்கள்) என்பது ஒரு கதையின் தலைப்பு. கல்லுவெச்ச நுணகள் (கல்பதித்த பொய்கள்) என்பது மற்றொரு கதையின் தலைப்பு. வரிகளுக்கிடையில் (வரிகளுக்கு இடையில் – ஆங்கில மொழியாக்கத்தில், Between the Lines) என்ற தலைப்பில் ஒரு கதை உள்ளது. குழந்தைகள் சொல்லும் அதிபயங்கரமான பொய்களை எதிர்கொள்ளும் தாயைப் பற்றிய அக்கதைக்கு ‘நுணகளுக்கிடையில்’ (பொய்களுக்கு இடையில், Between the Lies) என்றும் தாராளமாக பெயரிட்டிருக்கலாம்.
அஷிதா தன் கதைகளில் ‘பொய்’ என்ற சொல்லையும் ‘இடைவெளி’ என்ற சொல்லையும் ஒரே அர்த்தத்தில் பயன்படுத்துகிறார் என்று நினைக்கிறேன். ‘லோகத்தினு சில விடவுகள்’ (உலகத்தில் சில இடைவெளிகள்) என்பது அவருடைய நல்ல தலைப்புகளில் ஒன்று. நல்ல கதையும் கூட – நம்மிடம் நாமே சொல்லிக்கொள்ளும் பொய்களின் வழியாக, நமக்குள் நாமே விட்டுக்கொள்ளும் இடைவெளிகள் வழியாக, உலகத்தில் வெகு இயல்பாக பிறப்பிக்கப்படும் குரூரத்தின சித்திரம்.
‘இடைவெளி’ என்பதை ‘முழுமையடையாத’ என்ற அர்த்தத்திலும் கையாள்கிறார். ‘முழுமிக்காத திருரூபங்ஙள்’ (முழுமையடையாத திருவுருவங்கள்) என்ற கதை ஒரு முன்னாள் நக்சலைட் போராளியின் வாழ்க்கையில் விழுந்த இடைவெளியைப் பற்றியது. அந்த வாழ்க்கையே பொய்யென்று ஆன பிறகு எஞ்சியிருப்பது என்ன என்ற கேள்வி தான் அந்தக் கதை. மற்றொரு புகழ்பெற்றக் கதையின் தலைப்பு ‘அபூர்ணவிராமங்கள்’ (முடிவற்ற அரைப்புள்ளிகள்). இந்தக்கதையின் தலைப்பை ஆங்கில மொழிபெயர்ப்பாளர் ஜே. தேவிகா Never-endings என்று கொடுத்திருக்கிறார் – அரைப்புள்ளிகள் போட்டுப்போட்டு நீளும் ஒரு வாக்கியம் போல முடிவடையாதது, முழுமையடையாதது, அர்த்தமற்றது என்ற பொருளில். அஷிதாவின் எல்லா கதைகளுமே ஒரு வகையில் வாழ்க்கையின், இலட்சிய பாவனைகளின் அர்த்தமின்மையை பேசுபவை.

‘பொய்’, ‘இடைவெளி’, ‘முழுமையடையாத’ – இம்மூன்று வார்த்தைகள் வழியாக அஷிதாவின் மொத்த வாழ்க்கைப்பார்வையையும் அடைந்துவிடலாம். வாழ்க்கையின் எண்ணற்ற பொய்களும் இடைவெளிகளும், அதன் முழுமையின்மையும், அஷிதாவை மிகவும் தொந்தரவு செய்கின்றன என்று தெரிகிறது. அவரை எழுத வைப்பதும் இந்த உணர்ச்சி தான். அவர் புனைவுலகில் உண்மை என்றும் தரிசனம் என்றும் ஒன்று உள்ளதென்றால் அது வாழ்க்கையில் அவர் காணும் இம்முழுமையின்மையை, சிறு தீண்டலென, மிகச்சன்னமாக தொட்டுக்காட்டுவதில் தான் உள்ளது. இந்த இடத்தில் தான் அவர் படைப்புகளில் கலைக்குறிய நுண்ணுணர்வு வெளிப்படுகிறது.
[2]
நான் அறிந்ததுவரை அஷிதாவின் கதைகள் தமிழில் தொகுப்பாக மொழிபெயர்க்கப்பட்டதில்லை. அவர் கதைகளை ஜெ. தேவிகாவின் மொழியாக்கத்தில் ஆங்கிலம் வழியாகவே வாசித்தேன் [Between the Lines, Under the Peepal Tree Press, 2020]. அவரை தமிழுக்கு அறிமுகம் செய்யும் நோக்குடன் இந்தக்கட்டுரை எழுதப்படுகிறது.
அஷிதாவின் மொத்தக்கதைகள் தொகுக்கப்பட்ட மலையாள நூலில் மொத்தம் 58 கதைகள் உள்ளன. அதிலிருந்து தேவிகா தேர்ந்தெடுத்து மொழியாக்கம் செய்த இருபது கதைகள் மட்டுமே என் வாசிப்புக்குக் கிடைத்தன. அவற்றின் வழியாகவே அவரைப்பற்றிய சித்திரத்தை உருவாக்கிக்கொண்டேன்.
இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில் பெரும்பாலானவை ஆண்-பெண் உறவை மையமாகக் கொண்டவை. சமூகக்கதைகளிலும் பெண் x சமூகம் என்ற எதிரீடை பரிசீலிப்பவை. தொகுப்பில் உள்ள கதைகளை அவற்றின் பேசுப்பொருளின் அடிப்படையில் நான்காக வகுக்கலாம். தலைப்புகளை புரிதலுக்காக தமிழ்ப்படுத்தி அளித்திருக்கிறேன்.
(அ) உலகத்தின் பொய்களை குழந்தைகள் எதிர்கொள்வதை சித்தரிக்கும் கதைகள் (அம்மா என்னிடம் சொன்ன பொய்கள், வரிகளுக்கிடையில்)
(ஆ) வளர்ந்தவர் தன்னுடைய பொய்களைத் தானே எதிர்கொள்ளும் கதைகள். ஒரு கதாபாத்திரம் தனக்குள் மண்டியிருக்கும் காமத்தையோ வன்முறையையோ கண்டுகொள்ளும் ஓர் ஊசிமுனைத்தருணத்தின் சித்தரிப்பு (யௌவனம், கண்ணாடிபிம்பங்கள், முகம் திருப்பிய பொம்மைகள், யதார்த்தமாக மிகவும் யதார்த்தமாக)
(இ) சமூகத்தின் பொய்களை, கபடங்களை உணர்த்தும் கதைகள் (உன்னதமான சில பொய்கள், உடைந்த பிம்பங்கள், முடிவற்ற அரைப்புள்ளிகள்)
(ஈ) சில ‘ஆன்மீக’க் கதைகள் – அஷிதாவின் கதைகளிலேயே வலுகுறைந்தவை இவை என்பது என் எண்ணம் (பொருள், சிவேனசகநர்த்தனம்)
அஷிதாவின் எழுத்தின் மிகப்பெரிய பலம் அவருடைய வடிவக்கச்சிதம். எல்லா கதைகளும் ஒரு நாடகத்தின் உச்சத் தருணம் போல அமைக்கப்பட்டுள்ளன. நான்குச் சுவர்களுக்குள் சன்னமான உரையாடல்கள் வழியாக நிகழும் கதைகள் வெடிகுண்டு அடக்கிவைக்கப்பட்ட சிறிய மாத்திரை காப்சியூல்களை நினைவுபடுத்துகின்றன. ஒவ்வொரு கதைக்குள்ளும் ஒரு மௌனமான குண்டுவெடிப்பு நிகழ்கிறது. நான் வாசித்தத் தொகுப்பில் எந்தச் சிறுகதையும் நான்கு பக்கத்துக்கு மிகுந்தவை அல்ல. இந்தச் சொற்சிக்கணம் காரணமாகவே கதை தன் மையத்தை அடைந்ததும் மிகப்பெரிய ஆற்றலுடன் தெறிக்கிறது. ஒரு பொய்யை, கபடத்தை வெளிப்படுத்துகிறது. கண்ணகி கால்ச்சிலம்பை உடைத்தபோது ‘மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே’ என்ற இளங்கோவின் கூற்றில் உள்ளத் துல்லியமான முனை அஷிதாவின் கதைகளில் காணக்கிடைக்கிறது.
ஆனால் அஷிதாவின் கதைகளில் திரண்டுவரும் உணர்ச்சி ஒரு கபடத்தை வெளிப்படுத்திவிட்ட வீரமோ விமர்சனத்தின் ஆரோக்கியமான அறச்சீற்றமோ அல்ல. அவற்றின் மைய ஃபாவம் பெண் உணரும் அழுத்தம், வாழ்க்கையைக் கண்டு பெண் கொள்ளும் கசப்பு என்று கூறலாம். அஷிதாவின் கதைகளை வாசிக்கையில் நாம் முதன்மையாக உணர்வது அக்கதை நிகழும் இல்லத்தின் நான்கு சுவர்களைத்தான். கதையின் அமைப்பே அதை உணர்த்துகிறது. பெரும்பாலான கதைகளில் இல்லத்தின் நான்கு சுவர்களுக்குள் இருக்கும் பெண்ணைக் காண ஒருவர் வருகிறார். அவர்களுக்குள் ஓர் உரையாடல் நிகழ்கிறது. அதன் வழியாக அப்பெண் தன் வாழ்க்கையில் ஒரு பொய்யை — ஓர் இடைவெளியை, ஒரு முழுமையின்மையைப் — பற்றிய பிரக்ஞையை அடைகிறாள். அடக்கப்பட்ட காமம், வன்முறை, பொறியில் சிக்கிக்கொண்டுவிட்ட எண்ணம்… இப்படி ஏதோ ஒன்று. அதைப் பெரும்பாலும் ‘மிரட்சி’யுடனேயே எதிர்கொள்கிறாள். அதிலிருந்து விடுதலை இல்லை என்ற உணர்வு அவளுக்கு ஏற்படுகிறது. அதுவே ஓர் அழுத்தமாகிறது. அந்த நான்குச் சுவர்களின் இருப்பை அப்போது நாம் துல்லியமாக உணர்கிறோம். அஷிதாவின் எல்லா கதைகளும் இந்த மூடப்பட்ட, அழுத்தமான உணர்வில் முடிபவை.
என்ன அழுத்தம்? பொய் என்று அறிந்துவிட்ட உலகில் வாழ்ந்தாகவேண்டிய நிர்பந்தம் தரும் அழுத்தம் என்று அதைச் சொல்லலாம். அஷிதாவின் கதைகள் வழியாக நமக்குத் தெரியக்கிடைக்கும் எழுத்தாளுமை வாழ்க்கையின் பொய்களை அருவருப்பவர். பொய்களால் ஆன வாழ்க்கையின் மீது ஒட்டுமொத்தமாகவே கசப்பு கொண்டவர். அவர் அத்தனைக் கதைகளிலும் இந்தக் கசப்பு மண்டிக்கிடக்கிறது.
ஒரு பக்கம் அவர் அந்தப் பொய்களை வெளிப்படுத்த நினைக்கிறார். இதில் அவர் மொழி மிகப்பெரிய பக்கபலமாக அமைகிறது. அஷிதாவின் மொழியில் ஒரு அறுவைசிகிழ்ச்சை நிபுணரின் குரூரமான கூர்மை உள்ளது. சவரக்கத்தி முனையால் புண்ணை மிக நேர்த்தியாக அறுத்து, இலாகவமாகத் திருப்பி, அடியில் துடித்துக்கொண்டிருக்கும் நிணத்தையும் ஜலத்தையும், அதில் நெளிந்துகொண்டிருக்கும் புழுக்களையும் நமக்குக் காட்டுகிறார். இந்தத் திறமையால் அவர் ஒரு மருத்துவராகச் செயல்படுகிறார் என்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது.
ஆனால் இந்தச் செயலில் ஒரு மௌனமான வன்முறையும் உள்ளது. இந்த வன்முறைச்சிகிழ்ச்சை நிகழ்த்தப்படுவது ஒரு ‘சாம்ஸ்காரிக’ நடுத்தரவர்க்க இல்லத்தின் நான்கு சுவர்களுக்குள் என்று அவர் நம்மை மறக்கவிடுவதேயில்லை. இல்லத்துப்பெண் தன் பாவனைகளை நிகழ்த்த கண்ணாடிக்குள் நோக்கி கண்ணுக்கடியில் மிகமெல்லிய இழையாக மை தீற்றிக்கொள்ளும் மென்மையோடு ஆசிரியர் ஒரு கடானா வாளின் முனையை அந்த வீட்டின் குறுக்காக இழுக்கிறார். ஓர் பழைய அநீதிக்கு வஞ்சம் தீர்க்க நீண்டகாலமாக பயிற்சியெடுத்து களத்திலிறங்கிய ரகசிய கொலையாளியைப் போல அவர் செயல்படுகிறார். ஒரு பக்கம் மருத்துவராகவும், மறுப்பக்கம் பாவனைக்காரியாகவும் கொலைகாரியாகவும் வஞ்சக்காரியாகவும் தோற்றமளிக்கிறார். இந்த முரண் எளிதாக புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று அல்ல.
மேலும் ஒரு கசப்புணர்வு கதை முழுவதும் நம்மை வந்தடைந்துகொண்டே இருக்கிறது. ஓரங்கநாடகத்தின் கச்சிதத்துடன் வடிவமைக்கப்பட்ட கதையரங்கின் ஓரத்தில் எழுத்தாளர் நின்று மூச்சுவிட்டுக்கொண்டிருப்பதை கதை முழுதும் ஓர் இருப்பாக உணரமுடிகிறது. இக்கதைகளில் ஒரு வினோதமான அறவுணர்ச்சி உள்ளது. கூடவே இந்த கசப்புணர்வும். இக்கதைகளின் அறவுணர்ச்சியுடன் இந்தக் கசப்பையும் இணைந்தே பருகவேண்டியுள்ளது.
[3]
அஷிதாவின் கதைகளில் உணரப்பெரும் அழுத்தமும் கசப்பும் அவருடைய வாழ்க்கையிலிருந்து வந்திருக்கலாம். அவருடைய ஆரம்பகால வாழ்க்கை சோகம் நிறைந்தது. திருமணமானபின் திருவனந்தப்புரத்தின் நடுத்தரவர்க்கத்து இல்லத்தரசியின் மிகக்குறுகிய வாழ்க்கைக்குள் சென்றார். வெளித்தோற்றத்துக்கு படிப்பும் பவிசுமாகத் தோன்றினாலும் உள்ளுக்குள் கீழ்மைகளும் வம்புகளும் சூழ்ச்சிகளும் நிறைந்த உலகம் அது. அவற்றிலிருந்து தப்பவே எழுதத்தொடங்கியதாக ஒரு நேர்காணலில் சொல்கிறார். தன்னை மிகவும் தனிமைப்படுத்திக்கொண்டு எழுத்தில் மட்டும் வெளிப்பட்டார். அவருடைய சமகால மலையாளப் பெண் எழுத்தாளர்கள் பலரது எழுத்திலும் இதே இலட்சியவாத நிராசையும் அழுத்தத்தையும் காண முடிகிறது. இந்த அழுத்தம் ஒரு காலகட்டத்தின் உணர்வாக இருக்கலாம்.
‘பெண்மலையாளம்’ என்று போற்றப்பட்ட மலையாள தேசத்தில் 18-ஆம் நூற்றாண்டு தொடங்கி பெண்ணெழுத்துக்கான வரலாறு உள்ளது. முதல் தலைமுறைகளில் கதகளி ஆட்டக்கதைகளும் கைக்கொட்டுக்களி பாடல்களையும் கீர்த்தனைகளையும் இயற்றிய அரசகுடும்பத்து விதூஷிகள் (மனோரமா தம்புராட்டி, தொட்டக்கட்டு இக்காவம்மா தம்புராட்டி, குட்டிக்குஞ்ஞு தங்கச்சி) அடுத்தத் தலைமுறையில் ‘விடுதலையடைந்து’, காந்தியம் மார்க்சியம் என்று இலட்சியவாத சிந்தனையில் தோய்ந்து அரசியல் கட்டுரைகளும் கதைகளும் கவிதைகளும் எழுதலானார்கள் (லலிதாம்பிகா அந்தர்ஜனம், பாலாமணி அம்மா, சுகதகுமாரி). ஆனால் அதற்கும் அடுத்தத் தலைமுறைப் பெண் எழுத்தாளர்கள் இலட்சியவாதம் மீது சந்தேகமும் கசப்பும் கொள்ளத் தொடங்கினார்கள். குடும்ப அமைப்பும் சமூக-அரசியல் அமைப்பும் ஆண் கைகளில் இறுகிக்கொண்டே செல்ல பெண்களுக்கு வாக்களிக்கப்பட்ட நவயுக பொன்னுலகம் பலிக்கவில்லை. இந்த ஏமாற்றத்தை, அதன் தொடர்ச்சியான உணர்வுபூர்வமான வேதனையை, லலிதாம்பிகா அந்தர்ஜனம், சரஸ்வதி அம்மா, ராஜலட்சுமி தொடங்கி எழுத்தாளர்கள் பதிவுசெய்திருக்கிறார்கள். விடுதலைக்குப்பின் உருவான சமூக அமைப்பு மலையாளப் பெண்களின் பெயர்போன சுதந்திரத்தின் மீது செலுத்திய ஆதிக்கத்தின் சித்திரத்தை மலையாள பெண் இலக்கியம் வளர்ந்து சென்ற போக்கைக் கண்டாலே புரிந்துகொள்ளலாம். அது அந்தத் தலைமுறையின் விதி.
இந்த அழுத்தங்களிலிருந்து தான் மாதவிக்குட்டி தோன்றினார். அவர் இலட்சியவாதிகளிடமும் உன்னதர்களிடமும் ஏன் தனக்கு பொன்னுலகம் மறுக்கப்பட்டது என்று மூக்கைப்பிழியவில்லை. தனக்கு பொன்னுலகை மறுக்கும் எந்த இலட்சியமும் இலட்சியமே அல்ல என்பது அவர் தரப்பு. மாதவிக்குட்டி ஒரு பெண் சாக்கியார். அவர் எல்லா இலட்சியங்களை உன்னதங்களை விமர்சித்தார். அவரும் பெண் வாழ்க்கையின் அழுத்தங்களையும் போலிகளையும் உணர்ந்தவர். ஆனால் அவருடைய பகடியும் உயர்தர நுண்ணுணர்வும் அவர் வெளிப்பாடுகளை கலையாக்கின. அதுவே அவரை அசலான எழுத்துள்ளமென்றும், ஓர் ஒளிரும் நட்சத்திரமென்றும் இன்று எடுத்து நிறுத்துகிறது.
இந்த அழுத்தத்தின் மேலும் குறுகலான ஒரு வடிவத்தைத் தான் அஷிதாவும் அவர் சமகால எழுத்தாளர்களும் (சாரா ஜோசஃப், கிரேசி, மானசி, கீதா ஹிரண்யன் உள்ளிட்டோர்) எழுதினார்கள். குடும்பமும் ஆண்மய சமூகமும் பெண்ணின் இயல்பான மலர்வை ஒடுக்கியதையும், சமூகத்தின் கபடங்கள் பெண்கள் மீது செலுத்திய அழுத்தங்களையும் ஆன்மீக சுரண்டலையும் அவர்கள் கதைகள் சித்தரித்தன. சமகால மலையாளப் பெண் எழுத்தாளர்களின் படைப்புகளில் களங்கள் மாறியிருந்தாலும் இந்தக் கசப்புணர்வு ஓர் அடிநாதமாகவே நீடிக்கின்றது.
ஒரு வகையில் இது சற்று அதிர்ச்சிகரமானது. இந்தக் கதைகளை எழுதியவர்கள் 100% கல்விகற்ற நவீன கேரளத்தின் குடிமக்கள். பட்டதாரிகள். வேலைக்குச் சென்றவர்கள், உலகத்தை அறிந்தவர்கள். சாதிய ஒடுக்கங்களிலிருந்து தோன்றிய முதல் தலைமுறை பெண் அறிவுஜீவிகளின் எழுத்தில் கூட இந்த அளவு கசப்பு இல்லை. இன்று தமிழில் இதே உணர்வுக்கொண்ட கதைகள் பெண் எழுத்தாளர்களால் எழுதப்படுகின்றன. இந்தக் கசப்புணர்வுக்கான காரணங்கள் விவாதிக்கப்படவேண்டியது.
அஷிதாவின் கதைகளை பொறுத்தவரை, அவற்றில் அழுத்தமும் கசப்புணர்வும் ஓங்கினாலும், வாழ்க்கையில் பொதிந்துள்ள முழுமையின்மையையும் நிறைவின்மையையும் கூர்மையாக சுட்டும்வகையில் அமைந்துள்ள காரணத்தினாலேயே, அவருடைய சமகால பெண் எழுத்தாளர்களின் கதைகளை விட ஒரு படி மேலே நிற்பதாக நினைக்கிறேன்.
அஷிதாவின் எழுத்தில் வெளிப்படும் கசப்புக்கு மற்றொரு பரிணாமமும் உள்ளது. படைப்பெழுத்தைத் தவிர அவர் ஈடுபட்ட இலக்கியப்பணிகளெல்லாமே மிக நேர்நிலையானவை. குழந்தைகளுக்கான கதைகள் எழுதினார். ரூமியையும் அக்கா மகாதேவியையும் மலையாளத்துக்கு மொழியாக்கம் செய்தார். அவர் ஆன்மீக சாதகர் என்றும், குரு நித்ய சைதன்ய யதியின் மாணவியென்றும் அறியப்பட்டார். யதியின் வழிகாட்டலில் தான் தான் எழுத்துப்பணியில் தொடர்ந்து ஈடுபடதாக ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

ஆனால் நித்ய சைதன்ய யதியின் சிந்தனை பாதிப்பு எதுவும் அஷிதாவின் கதைகளில் இல்லை. சொல்லப்போனால் அஷிதாவின் எந்த ஒரு கதையும் வாழ்க்கையின் பொய்யை, முழுமையின்மையைச் சுட்டுவதைத்தாண்டி மேலெழவில்லை. ஏன் வாழ்க்கையின் பொய்களை வெளிப்படுத்தும் ஊடகமாக அஷிதா படைப்பிலக்கியத்தைக் கண்டார், ஏன் கசப்பே அவர் முதன்மை வாழ்க்கை அறிதலாக வெளிப்பட்டது என்பவை சுவாரஸ்யமான கேள்விகள்.
[4]
1956-ல் திருச்சூர் மாவட்டம் பழையன்னூரில் ஒரு நடுத்தர வர்க்க நாயர் குடும்பத்தில் அஷிதா பிறந்தார். பம்பாயில் பள்ளிக்கல்வியும் எர்னாகுளத்தில் ஆங்கில இலக்கியமும் படித்தார். திருமணமாகி ஒரு மகள் இருந்தார். அஷிதா 2019-ல் தன்னுடைய அறுபத்து இரண்டாம் வயதில் புற்றுநோயால் மறைந்தார்.
பதினேழு வயது தொடங்கி அஷிதா கவிதைகள் எழுதி வந்தார். பிறகு கதைகளும் எழுதினார். வாழ்நாள் முழுவதுமே எழுத்துப்பணிகளில் இருந்தார். ஆனால் வாழ்வின் இறுதிகட்டம் வரை அவர் தன்னை வெளிக்காட்டிக்கவே இல்லை. மிகவும் தனித்தவராகவே வாழ்ந்தார். ஓர் எழுத்தாளராக யாரும் அவரை அண்டவிடவில்லை.
அஷிதா என்ற எழுத்தாளரின் இருப்பைப் பற்றி ஜெயமோகன் எழுதிய ஒரு கட்டுரை வழியாகத்தான் அறிந்துகொண்டேன். அந்தக் கட்டுரையில் தன் இளமைக்காலத்தில் அஷிதாவைத் தான் காண முயற்சித்ததை பற்றியும், அவர் இரண்டு நிமிடங்களுக்கு மேல் பேச விரும்பவில்லை என்றும் ஒரு நிகழ்ச்சியை குறிப்பிட்டிருந்தார். அத்தனைத் தனித்து வாழ்ந்த அஷிதா 2013-ல் அவருக்குப் புற்றுநோய் கண்டடையப்பட்டப்பிறகு தான் ஓரளவு பொதுவில் பேசத் தொடங்கினார்.
2019-ல், இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன், ஒரு பிரபல வாரப்பத்திரிக்கைக்குக் கொடுத்த நேர்காணலில் அவர் தன் ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றி முதன் முறையாக மனம் திறந்தார். அவர் சொன்ன செய்திகள் அவருடைய வாசகர் மத்தியில் அதிர்ச்சி அலைகளை எழுப்பின.
அந்த நேர்காணலில் அஷிதா தன்னுடைய பெற்றோர் சிறுவயது முதல் தனக்கு இழைத்த கொடுமைகளை பற்றிக் கூறினார். அவருடைய தந்தைக்கு அஷிதா அவருக்குப் பிறந்த மகள் அல்ல என்ற எண்ணம் இருந்தது. ஆகவே மிகச்சிறிய பிராயம் தொடங்கி அவரைக் கடுமையான துன்பங்களுக்கு ஆளாக்கினார் என்றார். தன்னை அப்பா என்று எப்போதும் கூப்பிடக்கூடாது என்று அவர் ஆணையிட்டார். ஒரு கட்டத்தில் தன்னை பம்பாயில் எங்கோ விட்டுவிட்டுச் செல்லத் திட்டம் போட்டார். அவர் மறைவு வரை தன்னை அவருடைய மகள் என்று அவர் அங்கீகரிக்கவில்லை என்றார்.
அஷிதாவை ஒரு மருத்துவர் ஆக்கிவிடவேண்டும் என்பது அவருடைய குடும்பத்தாரின் கனவு என்றார். ஆனால் அவருக்கு விருப்பமில்லை. மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும் போகாமல் வீட்டில் கவிதை எழுதிக்கொண்டிருந்தார். அதற்காக அவரை மனநோயாளி என்று பூட்டிவைத்துத் துன்புறுத்தினார்கள் என்று சொன்னார். மனநோய்க்கான மருந்துகளை புகுட்டித் தூங்க வைத்தார்கள். அதிர்ச்சி வைத்தியத்துக்கு உட்படுத்தினார்கள். பிறகு ஒரு கட்டத்தில் அவளை விடுவித்து ஆங்கில இலக்கியமே படிக்க வைத்தார்கள். ஆனால் அப்போதும் அவர் எழுதுவதை குத்திக்காட்டிக்கொண்டே இருந்தார்கள். அவளும் ஒரு மாதவிக்குட்டி ஆகிவிடுவாள் என்று தன்னுடைய குடும்பத்தார் பயந்ததாக என்று அஷிதா சொன்னார். அவருக்கு எழுத காகிதம் தர மறுத்தார்கள். கிடைத்தக் காகிதத்தில் எழுதிப் பழகியதால் தான் நான்கு பக்கத்துக்குள் ஒரு கதையைச் சொல்லும் கலையை கற்றுக்கொண்டேன் என்று அவர் சொன்னார்.
இந்த நேர்காணல் வெளிவந்து சில மாதங்களில் அஷிதா இறந்தார். அவர் இறப்புக்குப் பின் அவருடைய சகோதரர் ஒரு நேர்காணல் அளித்தார். அதில் அவர், அஷிதா சொன்னதெல்லாம் பொய் என்றார். சிறு வயது முதல் அவருக்கு ஸ்கீட்சோஃப்ரீனியா மனநோய் இருந்ததென்றும், அவர் சொன்ன தகவல்களெல்லாம் அவர் கற்பனை என்றும் கூறினார்.
அஷிதாவின் எழுத்தாளர் நண்பர்கள் அவர் சகோதரரின் கூற்றை மறுத்து எழுதினர். அஷிதாவை நன்கு அறிந்த கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு உள்ளிட்டவர்கள் அஷிதாவின் மனநலத்தில் எந்தக் குறையும் இல்லை என்றும் அவர் மிகுந்த நுண்ணுணர்வு கொண்டவர் என்றும் அஷிதாவின் சகோதரர் சொல்வது தான் பொய் என்றும் சொன்னார்கள்.
இந்த சங்கடமான சூழ்நிலையில் எது உண்மை எது பொய் என்று நம்மால் சொல்லிவிட முடியாது. நம்மிடம் அஷிதாவின் கதைகளே உள்ளன. ஆனால் இந்த வாழ்க்கைப் புலத்தை அறியும்போது அவருடைய கதைகளை முற்றிலும் புதிய கோணத்தில் திறந்துகொள்கின்றன. கதைகளில் மட்டும் அல்ல, நிஜ வாழ்க்கையிலும் பொய்க்கும் உண்மைக்குமான விளிம்பில் தான் அவர் வாழ்ந்தார் என்று தெரிகிறது. ஒருவேளை அதனால்தான் வாழ்நாள் முழுவதும் எங்கெல்லாம் பொய்களும் இடைவெளிகளும் தென்பட்டதோ அவற்றையெல்லாம் தன் கலைமனத்தால் தொட்டுக்காட்டினாரா?

‘என் அம்மாவின் மொழியை, அம்மம்மாவின் மொழியை, அவளுக்கும் முன்னால் தோன்றிய மூதன்னையர் பேசிய மொழியை உரைக்க நானும் பழகிவிட்டேன். அது மௌனத்தின், திரிப்பின், முரணின், பொய்யின் மொழி. அந்த மொழி வழியாக நானே என்னை நிராகரிக்கிறேன், மறுக்கிறேன்,’ என்ற அவருடைய கதையின் வரிகளை மீண்டும் எண்ணிக்கொள்கிறேன். ஒரு வேளை தன் படைப்புகள் அனைத்திலும் அவரே வரையறுத்த ‘அம்மாவின் மொழியில்’ அஷிதா பேசிக்கொண்டிருந்தாரோ என்று இப்போதுத் தோன்றுகிறது. தன் கசப்பான வெளிப்பாடுகள் வழியாக அஷிதாவுக்குள் வாழும் சிறுமி மேலும் ஒழுங்கான, மேலும் முழுமையான ஓர் இலட்சிய உலகத்தைப்பற்றிய கனவைத்தான் சொல்லிக்கொண்டிருந்தாளா?
***
அஷிதாவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. சுரபி இதழுக்கு சென்று அஷிதாவின் இரு கதைகளையும் வாசித்தேன். அம்மா என்னிடம் சொன்ன பொய்கள் Margaret Atwood இன் My evil mother கதையை நினைவு படுத்தியது. அஷிதாவின் எல்லாக் கதைகளையும் வாசிக்க ஆவலாக இருக்கிறது