விழாப் பந்தல் – எலிஃப் ஷஃபாக்

(தமிழில் – விக்னேஷ் ஹரிஹரன்)

எலிஃப் ஷஃபாக்

சிமோன் தி பொவாவின் மரணத்திற்குப் பிறகு ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் இன்றளவும் அவர் பெண்ணிய இயக்கத்தின் வரலாற்று நாயகியாகவே போற்றப்படுகிறார். 1956இல் அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட ஆயிரக் கணக்கான அபிமானிகளின் நெஞ்சங்களில் ஒலித்துக் கொண்டிருந்த “இங்குள்ள அனைத்துமே பெண்களுக்கு கடன்பட்டவையே” எனும் அவரது வாக்கியமே அவரது ஆளுமையையும் அவர் முன்வைத்த பெரும் பாரம்பரியத்தையும் பரைசாற்றும். அவரது எல்லா கருத்துக்களோடும் நீங்கள் உடன்படாமல் போகலாம். அவரது ஆளுமை கூட உங்களுக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் அவர் அறிவுச் சூழலுக்கு ஆற்றிய பங்களிப்பையோ அவர் உருவாக்கிய சிந்தனை மரபையோ நீங்கள் புறக்கணிக்க முடியாது.

“பெண் பிறப்பதில்லை, உருவாகிறாள்” என்பது அவரது புகழ் பெற்ற வாக்கியம். நூற்றாண்டுகளாக பெண்களின் பணி என்பது உடலுறவும், மகப்பேறும், தாய்மையுமே என்று கற்பிக்கப்பட்டது. மனித குலத்தின் தொடர்ச்சியை பாதுகாக்க வேண்டிய ‘சிறு’ பொறுப்பை சுமந்தலைந்ததால், பெண்கள் அவர்களது கல்வியையோ தனித் திறமைகளையோ வளர்த்துக் கொள்வது ஊக்குவிக்கப்படவே இல்லை. 1940களின் ஃப்ரான்சில் தாய்மை என்பது மறுக்க முடியாத புனிதக் கடமையாகவே கருதப்பட்டது. எனவே தீவிரமான கத்தோலிக்க தாயால் வளர்க்கப்பட்ட சிமோன் தி பொவாவுக்கு, தான் எதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று நன்றாகவே தெரிந்திருந்தது. ஃப்ரான்சின் பூஷ்வா சமூக அமைப்புகளுக்கு எதிராக கடுமையான தாக்குதலை தொடுத்த சிமோன் தி பொவா, திருமணம், தாய்மை போன்ற நிறுவனங்களுக்கு எதிரான விரிவான கேள்விகளை முன்வைத்தார். பெண்களில் பலரும் தங்கள் குழந்தைகளின் வழியே தங்களையே மீண்டும் கண்டடைய முயல்வதாகவும், அத்தகைய உளவியல் தேவைகள் எதுவும் தனக்கு இல்லை என்றும் கூறினார். சாத்ராவும் பொவாவும் ஒரு தன்னிறைவு பெற்ற, சுதந்திரமான உறவில் இருந்தனர். பூஷ்வா திருமண அமைப்பென்பதே பொய்களாலும் போலித்தனங்களாலும் நடைமுறை சாத்தியமற்ற தாம்பத்திய வாக்குறுதிகளாலும் கட்டமைக்கப்பட்டது. எனவே தங்கள் பெற்றோர்கள் செய்த தவறுகளை தாங்களும் செய்யக்கூடாது என்று உறுதி பூண்டிருந்த அவர்கள் இருவரும் தங்களுக்குள் எந்த விதமான ஒளிவு மறைவுகளும் இருக்கக்கூடாது என ஒப்பந்தம் செய்து கொண்டனர். அவர்கள் தங்கள் உறவுக்கு அப்பால் “பிற தற்காலிகமான உறவுகளை அனுபவிக்கவும்” தயாராகவே இருந்தனர். மேலும், ஒரு அறிவுஜீவியாகவும் எழுத்தாளராகவும் வாழ முனைந்த பொவா, தாய்மை என்பது தன் வாழ்க்கை முறைக்கு ஏற்றதல்ல என்று நம்பினார். தான் ஏற்றுக் கொண்ட லட்சியங்களை பின்தொடர அவருக்கு நேரமும், கவனமும், சுதந்திரமும் தேவைப்பட்டது.

சிமோன் தி பொவா

‘இரண்டாம் பாலினம்’ எனும் தன் நூலில், “குழந்தைகள் பிறக்கும் தோறும் பெற்றோர்கள் இறக்கிறார்கள்” எனும் ஹெகெலின் புகழ்பெற்ற பிரகடனத்தை வழி மொழிந்தார் பொவா. ஆனால் திருமணத்தின் மீதும் தாய்மையின் மீதும் அவர் கொண்டிருந்த தர்க்கப்பூர்வமான விமர்சனங்களுக்கெல்லாம் அப்பால் அவர் எழுத்துக்களில் நமக்கு வேறொரு உண்மையும் தென்படுகிறது. ஒருவேளை சாத்ரா விரும்பியிருந்தால், பொவா தன் விருப்பத்தையும் மீறி, சாத்ராவை மகிழ்விப்பதற்காக மட்டுமே கூட, ஒரு குழந்தையை பெறத் தயாராக இருந்திருப்பார். பொவா சாத்ராவின் மீது பித்துற்றிருந்தார். அவரைப் பொருத்தவரை ஒரு புதிய சமுதாயத்திற்கான கதிரெழுகையே சாத்ராவின் கண்களின் ஆழத்திலிருந்துதான் தொடங்கியது. பொவா பல ஆண்களை விரும்பினாலும் சாத்ராவை மட்டுமே போற்றினார். ஆனால் அவர் சாத்ராவின் நேரத்தையும் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் பலரோடும் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தது. அவர்களில் சிலர் பொவாவை விட அழகும் ஆற்றளும் வாய்ந்த பெண்கள்தான். ஆனால் சாத்ராவின் பார்வையில் தனக்கிருந்த தனியிடத்தை பொவா அறிந்திருந்தார். ஈகோல் பல்கலைக்கழகத்தில் 1929இல் அவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்ட நாள் முதலாய் சாத்ரா பொவாவின் தோழனாகவும், காதலனாகவும், தந்தையாகவும், மகனாகவும், சகோதரனாகவும், உயிர் நண்பனாகவும், பொவாவால் ஒரு போதும் அடைய முடியாத கனவாகவும் இருந்து வந்தார்.

தன் கடிதங்களில் பொவா சாத்ராவை செல்லமாக “என் குட்டி மனிதா” என்றோ “எனதருமை செல்லக் குட்டியே” என்றோ அழைப்பதைக் கொண்டு பொவாவின் மனதில் சாத்ராவுக்கு இருந்த இடத்தை நாம் தவறாக புரிந்து கொள்ளக் கூடாது.  பொவாவின் மனதில் சாத்ரா ஒரு ராட்சத ஆளுமையாகவே இருந்தார். அதனால்தான் பொவா அவரை எப்போதும் பன்மை விகுதியிலேயே விளித்தார். சாத்ரா ஒரு குடும்பத்தை உருவாக்க விரும்பியிருந்தால், தன் விருப்பத்தையும், தான் தாய்மைக்கு ஏற்றவளல்ல எனும் சுயமதிப்பீட்டையும் மீறி, பொவா அவரது விருப்பத்திற்கு இசைந்திருப்பார். சாத்ராவின் முறை மீறிய உறவுகள் பொவாவை காயப்படுத்தியபோதும் அவர் தங்கள் உடன்படிக்கையை தொடர்ந்து காத்து வந்தார். சிமோன் தி பொவா அசைக்கமுடியாத அறிவுக் கூர்மையும் அசாத்தியமான முரண்களும் கொண்ட பெண்.

தாய்மை எனும் அமைப்பை விமர்சனப் பூர்வமாக அணுகுவதில் அன்றைய பொதுச் சமூகத்திற்கு மட்டுமல்லாமல் – தன்னை முற்போக்காகவும் பரந்த மனப்பான்மையுடையதாகவும் அறிவித்துக் கொண்ட; விகிதாசாரப்படி கிட்டத்தட்ட ஆண் மையமாகவே இருந்த – அறிவுச் சூழலுக்கும் பெரும் தயக்கம் இருந்தது. புத்தகங்களிலும் மாதவிடாய் முன்குறி (PMS), மகப்பேற்றுக்குப் பிறகான மன அழுத்தம் (postpartum depression), மாதவிடாய் நிறுத்தம் (Menopause) போன்ற தலைப்புகளை கையாள்வதில் பரவலான மௌனம் நிலவியது. அதேபோல் பெண்களின் தனித் திறன்களை மாயமாக மறையச் செய்த “லட்சிய மனைவி-பொருப்பான இல்லாள்-தன்னலமற்ற தாய்” எனும் பர்முடா முக்கோணத்தைப் பற்றியும் எழுதுவார் இல்லை. இத்தகைய சூழலில் பொவா சமூகத்தின் பரவலான முன்முடிவுகளையும் தேய்வழக்குச் சிந்தனைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பெண்கள் எவ்வாறு அறிவுக்கும் உடலுக்கும் இடையில் ஏதோவொன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகின்றனர் என்பதை குறித்து தீவிரமாக பேசினார் பொவா.

பெண்கள் ஆண்களுக்கு இளைத்தவர்களே எனும் பாலினச் சமத்துவமற்ற கட்டமைப்பை விரும்பி ஏற்று, அதை தங்களுக்குள் அகவயப்படுத்திக் கொண்ட பெண்களையும் பொவா கடுமையாக விமர்சித்தார். “இந்த உலகத்தின் கடைநிலை ஆணும் கூட ஒரு பெண்ணுக்கு முன் தன்னை ஒரு அதிமானுட அவதாரமாகவே கருதிக்கொள்கிறான்” என்றார் பொவா. அவரது அறிவு அரித்துப் பரவ வல்லது. அவரது பேனா கூர்மையானது. அவரது ஆளுமையோ பெரும் சர்ச்சைக்குரியது. ஒரு முறை, மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த பலரும் தன்னை வெறுப்பதை தன்னால் புரிந்துகொள்ள முடிகிறது என்று கூறிய பொவா; “அப்படி நிகழாமல் போயிருந்தால் எனக்கே என் மீது சந்தேகம் வந்திருக்கும்” என்றார்.

ஆனால் தாய்மையின் மீதான கற்பனாவாதங்களை கேள்விக்கு உள்ளாக்குவதை மேற்கத்திய பெண்ணியவாதிகள் மட்டும் தனியே செய்துவிடவில்லை. கீழைத்தேயங்களிலும் இது சார்ந்த கடுமையான விவாதங்கள் நிகழ்ந்தன.  ஜப்பானிய பெண்ணிய இயக்கம், பொசெய் என்றழைக்கப்பட்ட “இயல்பான தாய்மை உணர்வு” எனும் ஜப்பானிய கருத்துருவாக்கத்தை விவாதத்திற்கு உட்படுத்தியது. அவர்கள் தாய்மை என்பது ஒரு பண்பாட்டு கட்டமைப்புதானே தவிர அது இயற்கையானதோ உயிரியல் சார்ந்ததோ அல்ல என்று கூறினர்.

சிமோன் தி பொவா, சாத்ரா

தங்கள் புனைவுகளின் வழியே பாலின வார்ப்புகளை (Gender Stereotypes) கேள்விக்கு உட்படுத்திய ஜப்பானிய பெண் எழுத்தாளர்களே இத்தகைய விவாதங்களுக்கு புது ரத்தம் பாய்ச்சினர். 1983இல் பதிப்பிக்கப்பட்ட “விதியின் குழந்தை” (Child of Fortune) எனும் தன் நாவலில் தன் அபிலாஷைகளுக்கும் சமூகத்தால் கற்பிக்கப்படும் லட்சியப் பெண்மை சார்ந்த கற்பிதங்களுக்கும் இடையில் ஊசலாடும் மணமுறிவு பெற்ற அபாரமான பெண் கதாபாத்திரத்தை மையக் கதாபாத்திரமாகக் கொண்டார் யூகோ சுஷீமா. சுஷீமா தன்னை ஒரு பெண்ணிய எழுத்தாளராக அடையாளப்படுத்திக் கொள்ளாவிட்டாலும் அவர் தனது படைப்புகளின் வழியே பாலினம், பாலுறவு போன்ற கருப்பொருட்களை விமர்சனப்பூர்வமாக கையாளவே செய்தார். ஒருவேளை சுஷீமாவிடம் அவருக்கு முந்தைய நூற்றாண்டைச் சேர்ந்த வெளிப்படையான முதல் தலைமுறை பெண் எழுத்தாளரான டொஷிகோ டமுராவின் தாக்கம் இருந்திருக்கலாம். 1945இல் நேர்ந்த டமுராவின் அகால மரணத்திற்குப் பின் அவரது படைப்புகளின் உரிமைத் தொகை முழுவதும் பெண் எழுத்தாளர்களுக்கான இலக்கிய விருது ஒன்றை உருவாக்க பயன்படுத்தப்பட்டது. “ஒரு பெண் எழுத்தாளர்” எனும் அவரது சிறுகதையில் ஒரு காட்சி விவரிக்கப்படுகிறது: ஒரு பத்தியை எழுதுவதற்காக போராடிக் கொண்டிருக்கும் ஒரு பெண் எழுத்தாளரின் மீது அவள் கணவன் – அவனும் எழுத்தாளன்தான் – கோபப்படுகிறான். பெண்களில் நல்ல எழுத்தாளர்களே இல்லை என்று அவன் நம்புகிறான். அவர்களின் மனவுறுதியற்ற தன்மையாலும் தன்னம்பிக்கையற்ற குணத்தாலுமே அவர்கள் கச்சிதமான பத்து பக்கங்களை எழுதுவதற்காக நூறு பக்கங்களை வீணடிக்கின்றனர் என்கிறான். அவனது சொற்களின் வழியே, ஆண்களே தீவிரமான, உன்னதமான காரணங்களுக்காக எழுதும் அசலான எழுத்தாளர்கள் என்றும் பெண்களுக்கு எழுத்து என்பது வெறும் பொழுதுபோக்குதான் என்றும் சமூகத்தில் பரவலாக நிலவி வரும் முன்முடிவுகள் கவனப்படுத்தப்படுகின்றன.

இதேபோல் துருக்கிய இலக்கியத்திலும் அவரது மறைவுக்குப் பிறகும் அவரது தனித்துவமான குரலால் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு பெண் எழுத்தாளர் உண்டு. 1970களில் துருக்கி இடதுசாரிகளுக்கும் வலதுசாரிகளுக்கும் இடையில் பிளவுண்டு கிடந்த பிரிவினைவாத சூழலிலும் செவ்கி சொய்சால் தனது திறனும் ஆற்றொழுக்கும் மிகுந்த உரைநடையால் அன்றிருந்த எல்லா வகையான ஆணாதிக்க வழக்கங்களையும் கேள்விக்குள்ளாக்கினார்.

அவர் – தெளிவுக்கும் பித்துக்கும்; சமூகத்துக்கும் தனி வாழ்வுக்கும்; உணவு மேசையை ஒருங்கு செய்வதற்கும் தன் போக்கில் கடந்து செல்வதற்கும்; முடிவில்லா தியாகங்களுக்கும் தன்னிச்சையான சுயநலத்துக்கும் – இடையில் ஊசலாடும் பெண்களின் எழுத்தாளர். அவர் பிறருக்காக வாழ்வதற்கும் தன் மனதின் விருப்பங்களை பின்தொடர்வதற்கும் இடையே சிக்கிக்கொண்டு ஊசலாடிய பெண் கதாபாத்திரங்களையே உருவாக்கினார். அவர் உருவாக்கிய மறக்க முடியாத புனைவுக் கதாபாத்திரங்களுள் ஒருத்தி டான்டே ரோசா:

‘டான்டே ரோசா ஒரு கடிதத்தை விட்டுச் சென்றாள். அதோடு பால்புட்டியை நீங்காத கடைக்குட்டியோடு சேர்த்து மூன்று குழந்தைகளையும், வாத்து வறுவலும் ஆப்பில் பையும் செய்வதற்கான சமையல் குறிப்புகளையும், தன்னிடமிருந்தே அலமாரிகளை அடுக்கும் கலையை கற்றுக் கொண்ட வீட்டு பணிப்பெண்ணுக்கான மேஜை விரிப்புகளை சுத்தம் செய்வதைப் பற்றிய செய்முறை விளக்கங்களையும் விட்டுச் சென்றாள். மேரிகோல்ட் பூக்கள் நிறைந்த தோட்டத்தையும், மரப் படிக்கட்டுகள் கொண்ட வீட்டையும், உயரமான கூரையையும், தாத்தா காலத்து கடிகாரத்தையும்; ஞாயிற்றுக் கிழமை காலைகளில் தவறாமல் சர்ச்சுக்குச் சென்றுவிட்டு மதியங்களில் தன் படுக்கைக்குள் புகுந்துகொள்ளும் கணவனையும்; பெரிய வண்ண மயமான தொப்பிகள் அணிந்த அண்டை வீட்டுப் பெண்களையும், அவர்களது மூக்குச்சலி ஒழுகும் குழந்தைகளையும், அவர்களது கணவர்களையும், அவர்கள் வீட்டு வாத்து வறுவல்களையும் விட்டுச் சென்ற ரோசா, தனது இதயத்தை மறைத்த இடது மார்பையும் அங்கேயே விட்டுச் சென்றாள். அவற்றை விட்டு நீங்கிச் சென்றாள்.’  

சொய்சாலின் பெண் கதாபாத்திரங்கள் அனைத்துமே துருக்கிய சமூகத்தின் “லட்சியப் பெண்” சார்ந்த கற்பிதங்களுக்கு எதிராக படைக்கப்பட்டவையே. அவரது பெண்கள் தவறுகள் செய்யக்கூடியவர்கள், தங்கள் பாதைகளில் தடுமாறி முட்டிகளை பெயர்த்துக்கொள்ளக் கூடியவர்கள், ஆனாலும் ஒவ்வொரு முறையும் தங்களைத் தாங்களே மீட்டுக் கொள்ளக்கூடியவர்கள்.  

வேறு ஒரு நாவலில், தன் ஆசைகளிலும் கடமைகளிலுமாக சிதறுண்டு கிடக்கும் ஓயா எனும் பெண்ணைப் பற்றி எழுதுகிறார் சொய்சால்.

விக்னேஷ் ஹரிஹரன்

‘” நான் கடலுக்குச் செல்வேன். ஏதேனும் ஒரு கடற்கரைக்கு.” என்று ஓயா நினைத்த மாத்திரத்தில் அலான்யாவில் தொடங்கி ஏஜியன் கடல் வரை வளைந்து செல்லும் கடற்கரைச் சாலையின் அழகிய காட்சிகள் அவள் கண் முன் நிழலாடின. நீலம். விரிவு. கடல். பாறைகள். காடு. ஆனால் அவள் கணவனை என்ன செய்ய? வீடு? குழந்தைகள்? பிற கடமைகள்? அந்த நொடியில் நீலம் இல்லாமல் ஆனது. சுதந்திரம் இல்லை. காடு இல்லை. அவளை மேலும் மேலும் இறுக்கி அவள் மேல் படர்ந்துகொண்டிருந்த அவளது கடமைகள் மட்டுமே இருந்தன.’

*

என் மனதில் நான் ஒரு விருந்தை ஏற்பாடு செய்கிறேன். பனி போன்ற வெண்மையான மேசை விரிப்பு போர்த்தப்பட்ட ஒரு நீண்ட உணவு மேசை, அழகான மேசைக்கரண்டிகள், வெள்ளியாலான மெழுகுவர்த்தித் தாங்கி. மேசைக்கு மேல் ஒரு பெரிய, பலபலக்கும் சர விளக்கு தொங்குகிறது. வாத்து வருவலும், குங்குமப்பூ சாதமும், நாவூர வைக்கும் இனிப்பு வகைகளும் பெரிய தட்டுகளில் வைக்கப்பட்டிருக்கிறது. மேசையின் ஒரு மூலையில் உள்ள உயரமான நாற்காலியில் சிமோன் தி பொவா அமர்ந்திருக்கிறார். பார்ப்பதற்கு சோகமாக இருப்பதாகத் தோன்றினாலும் அவர் மகிழ்ச்சியாகவே இருக்கிறார். அவரது வலது பக்கத்தில் தன் நேர்த்தியான கண்ணாடியை அணிந்துகொண்டு, ஃப்ரைட் ரைசை சாப்ஸ்டிக்குகளால் குத்திக் குத்தி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் டொஷிகோ டமுரா.  பொவாவின் இடது பக்கத்தில், பசி இல்லை என்றாலும், மகிழ்ச்சியாகவே அமர்ந்திருக்கிறார் செவ்கி சொய்சால். ஒரு மெல்லிய இசையை முனுமுனுத்தபடி தன் வைனை பருகுகிறார். ஒரு ஃப்ரான்சுப் பெண், ஒரு ஜப்பானியப் பெண், ஒரு துருக்கியப் பெண் – வெவ்வேறு உலகங்களில் வாழ்ந்தாலும் ஒரே மொழியில் பேசிய மூன்று தீவிரமான எழுத்தாளர்கள், மூன்று சுதந்திரமான ஆளுமைகள். ஒரு வேளை இப்போது இவர்கள் மூவரும் சொர்க்கத்தில் ஒன்றாக அமர்ந்து உணவருந்திக்கொண்டிருப்பார்களோ? நான் அப்படித்தான் நினைக்கிறேன்.  

எலிஃப் ஷஃபாக்

(தமிழில் – விக்னேஷ் ஹரிஹரன்)

***                              

எலிஃப் ஷஃபாக்: துருக்கியின் “முதன்மையான பெண் நாவலாசிரியர்” (உபயம்: Financial Times) ஆக அறியப்படுபவர். சொற்பமான பெண் படைப்பாளிகளே உலகளவில் அடையாளம் காணப்பட்டிருக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வந்த தனித்துவமான குரல் அவர். மத்திய கிழக்கு நாடுகளில் துருக்கியே மிகவும் தாராளமயமானது என்றாலும் அங்கும் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மிகுந்தே இருக்கின்றன. ஓரான் பாமுக்கும், அகமத் ஹம்தி தன்பினாரும் உலகை ஆட்கொண்ட பிறகே ஷஃபாக் ஆங்கில இலக்கிய உலகத்தால் அடையாளம் காணப்பட்டார். அதற்குப் பிறகே அவரது படைப்புகள் துருக்கிய மொழியிலும் ஆங்கிலத்திலும் பரவலான கவனத்தைப் பெற்றன. துருக்கிய மொழியிலும் ஆங்கிலத்திலும் நேரடியாகவே எழுதக்கூடிய ஷஃபாக், நாவல்கள், கட்டுரைகள், விமர்சனங்கள், அரசியல் ஆய்வு, மேடைப் பேச்சு என பல்வேறு துறைகளில் செயல்படுகிறார். அவரது புகழ்பெற்ற நாவலான “காதலின் நாற்பது விதிகள்” தமிழில் ரமீஸ் பிலாலியின் மொழிபெயர்ப்பில் சீர்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. நாவலாசிரியராக பெரும் புகழை அடைந்த ஷஃபாக்கின் கட்டுரைகளும் தனித்துவமானவையாகவே இருக்கின்றன. பெண்ணியச் சமூகச் செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஷஃபாக் பல புகழ்பெற்ற ஆங்கில நாளேடுகளிலும், பத்திரிக்கைகளிலும் அசலான பெண்ணியக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

*

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *