இலையுதிர்கால நிலவு தங்கிச் சென்ற வீடு – ரா. செந்தில்குமார்

(ஒனோ நோ கொமாச்சி கவிதைகள் பற்றி)

ஒனோ நோ கொமாச்சி

ஒனோ நோ கொமாச்சி பொ.யு. ஒன்பதாம் நூற்றாண்டில் ஜப்பானில் வாழ்ந்த பேரழகி. கொமாச்சியின் வாகா கவிதைகள் ஜப்பானிய இலக்கியத்தில் அழியா இடம் பெற்றவை. கொமாச்சி, ஜப்பானியர்களின் வாழ்வில் ஒரு தொன்மமாக நீடித்திருப்பவள். அவளை பற்றிய செவிவழி கதைகள், இலக்கியமாக பதிவானவை என ஏராளமான தகவல்கள் உண்டு. ஆனால் ஆதாரபூர்வமான கொமாச்சியின் வரலாறு மர்மான ஒன்றுதான். தமிழிலக்கியத்தில் அவ்வையார் போல, ஜப்பானிய இலக்கியத்தில் கொமாச்சி என்னும் பெயரில் நான்கு நபர்கள் வரை இருந்திருக்கலாம் என்று கூட ஒரு ஊகம் உண்டு.  ஆனால் மறுக்க முடியாத நிஜம், அற்புதமான கவிதைகளை இந்த உலகிற்கு தந்தவள் கொமாச்சி. கி.பி 825 ஆம் ஆண்டு வாக்கில் பிறந்த கொமாச்சி, ஜப்பானிய பேரரசர் நின்மெய்யோவிடம் (810-850) பணிப்பெண்ணாக இருந்திருக்கிறாள். கி.பி 850 இல் அரசரின் மறைவுக்கு பின் அரண்மனையில் இருந்து விலகி பலரின் காதலியாக அவள் வாழ்ந்திருக்கிறாள். அவளுடைய முழு பெயரின் மூலம் ஒனோ என்னும் குடும்பத்தை சார்ந்தவள் என்று தெரிகிறது.

அரச குடும்பத்திற்க்கு உதவி செய்வதற்க்காக அனுப்பபடும் பெண்கள் பெரும்பாலும் அரசகுலங்கள், பிரபுக்களின் குடும்ப பெண்களாகவோ இருந்திருக்கிறார்கள். ஒருவேளை அரச குடும்பத்துடன் அந்த பெண்ணுக்கு மண உறவு ஏற்படுமென்றால், அந்த பெண்களின் குடும்பமும் அரச குடும்பமாக மாறும். எனவே கொமாச்சியும் ஒரு பெரிய பிரபுவின் மகளாகவே இருந்திருக்கவேண்டும். அன்றைய அரண்மனை பெண்களின் வாழ்வில், கலைகளில் தேர்ச்சி, கவிதை திறன், நடனம் போன்றவை கூடுதல் மதிப்பளிக்க கூடியதாக, ஆண்களை கவர்ந்திழுக்க கூடிய ஒன்றாக இருந்திருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது. நுண் கலைகளில் தேர்ச்சியும், கவிதையும் காலங்காலமாக ஜப்பானிய சூழலில் அழகை தீர்மானித்த விஷயங்கள். அந்த காலக்கட்டத்தை சேர்ந்த பல பிரபுக்கள் கொமாச்சியின் அன்பிற்க்காக ஏங்கி அவள் பின்னே அலைந்திருக்கிறார்கள். கொமாச்சி போன்ற பெண்கள் தங்களுடைய துணையை தேர்வு செய்யும், விருப்பம் போல் துண்டித்துக்கொள்ளும் சுதந்திரத்தை பெற்றிருந்தார்கள். அதற்குண்டான பொருளாதார தற்சார்பையும் அவர்கள் கொண்டிருக்ககூடும்.

கொமாச்சி, தனக்கு வந்த காதல் அழைப்புகளை குரூரமாக நிராகரித்தாள் என்று சொல்கிறார்கள். அதற்கு உதாரணமாக சொல்லப்படும் ஒரு கதை உண்டு. கொமாச்சியை மிகவும் காதலித்தவர்  ஃபுகாகுசா என்னும் பிரபு. அவருடைய காதலை ஏற்க மறுக்கிறாள் கொமாச்சி.  மீண்டும் மீண்டும் தொடரும் ஃபுகாகுசாவை புறக்கணிக்க,   ஃபுகாகுசா தன்னுடைய காதலை நிருபித்தால், அவரை தன்னுடைய காதலனாக ஏற்கிறேன் என்கிறாள். நூறு நாட்கள் தினமும் வந்து தன்னை சந்திக்கவேண்டும். அப்படி நூறு நாட்கள் இரவு தன்னை வந்து சந்தித்தால், உன்னை காதலிக்கிறேன் என்று சொல்கிறாள். ஃபுகாகுசா, தீராத காதலுடன் தொடர்ந்து அப்படி 99 இரவுகள் மழை, புயல், குளிர் எல்லாம் தாண்டி வந்து சந்திக்கிறார். நூறாவது இரவு, கொட்டும் பனியில் கொமாச்சியை சந்திப்பதற்க்காக வருகிறார். வரும் வழியிலேயே கடும் பனிப்பொழிவில்  சிக்கி இறக்கிறார் ஃபுகாகுசா.  

கொமாச்சி

நூறு நாட்கள் இரவில் வந்த சந்திக்க அழைப்பு கொடுக்கிறாள் கொமாச்சி. ஒவ்வொரு நாளும் ஒரு காதல் கவிதையுடனோ, அல்லது கடிதத்துடனோ ஃபுகாகுசா வந்து பார்த்திருப்பார். இப்படி காதலை சொல்லவோ, அந்த காதலை நிராகரிக்கவோ வாய்ப்புள்ள ஒரு சமூகமாகவே அன்றைய ஜப்பானிய அமைப்பு இருந்திருக்கிறது.

ஹெய்யான் காலக்கட்டத்தைச் சேர்ந்த ( 794-1185)  ஆறு மாபெரும் கவிஞர்களை கொக்கின்சு என்கிற கவிதை தொகுப்பில் தொகுக்கும்போது அதில் ஒருவராக கொமாச்சி இடம்பெறுகிறாள்.  அசுகா, நாரா, ஹெய்யான் என்று ஜப்பானிய காலக்கட்டத்தை ஆறாம் நூற்றாண்டில் இருந்து 12 ஆம் நூற்றாண்டு வரை பிரித்து, அதில் மிக முக்கிய 36 கவிஞர்கள் என்னும் பட்டியல் இட்டாலும் அதிலும் கொமாச்சி இடம்பெறுகிறாள். பிற்காலத்தில் கொமாச்சி எழுதியதாக நூறு கவிதைகள் வரை தொகுக்கப்பட்டிருந்தாலும், அதில் கொமாச்சி எழுதியதாக உறுதிசெய்யப்பட்டவை , முப்பது கவிதைகள் வரை இருக்கும் .

”முடிவுறா மழையில் அலைக்கழியும்
அந்த சகுரா மலரைபோல
எனது அழகும்,திறமையும்
உருக்குலைகிறது.
நான் தனித்திருக்கிறேன்.”

போன்ற அந்த கொமாச்சியின் வாகா கவிதைகள் மீண்டும் மீண்டும் தனிமையையும், ஏக்கத்தையும், காமத்தையும், வெறுமையையும் முன் வைக்கிறது. சங்க கால கவிதைகள் போல, காதலனின் வருகையை எண்ணி காத்திருக்கும் தவிப்பு, வராதால் ஏற்படும் ஏமாற்றம், தனிமை, சேர்ந்திருந்த நினைவுகள், விரகதாபம் இப்படி கொமாச்சியின் கவிதைகள் கருப்பொருளை கொண்டிருக்கின்றன. வாகா கவிதைகளில் நேரடியாக தன் உணர்ச்சிகளை பேசத் தொடங்கியது கொமாச்சிதான். பிறகு வந்த கவிஞர்கள் கொமாச்சியின் பாணியை கைக்கொள்கிறார்கள்.

எத்தனையோ பிரபுக்கள் கொமாச்சியின் கடைக்கண் பார்வைக்காக காத்திருக்க, அவளோ,

ஏக்க பெரு நெருப்பு
என்னை எரித்திருக்க
நிலவில்லாத இந்த இரவில்
உனக்காக காத்திருக்கிறேன்.

என்று தன்னுடைய காதலனை நினைத்து ஏங்குகிறாள். கொமாச்சியின் காதலன் யார் என்று உறுதியான தகவல்கள் இல்லை. அவள் வாழ்ந்த அதே காலக்கட்டத்தில் வாழ்ந்த மற்றொரு முக்கிய கவிஞனான அரிவரா நோ நரிஹிரா தான் அந்த காதலன் என்றொரு கருத்துமிருக்கிறது. நரிஹிராவும், ஹெய்யான் காலக்கட்டத்தை சேர்ந்த ஆறு முக்கிய கவிஞர்களில் ஒருவர்தான் (கொக்கின்சு) .

அவனை நினைத்தபடியே உறங்கிவிட்டதால்

அவன் தோன்றினானா!
கனவு என்று தெரிந்திருந்தால்
கண் விழித்திருக்க மாட்டேனே !

என்று தனது காதலனை நினைத்து உருகுகிறாள் கொமாச்சி.

கடல்பாசி சேகரிப்பவனின் சோர்வடைந்த கால்கள்
மீண்டும் மீண்டும் எனது கரையோரம்.
அவனறிய மாட்டானா
இந்த இடிந்த கரையில்
அவனுக்கு எதும் கிட்டாதென்று?

என்று அவள் சொல்வது தன்னை விடாது தொடரும் காதலர்களுக்குதான்.

தென்றலின் மென் தொடுகையை
தொடரும் அலைகள் என
உன்னை நான் தொடரவேண்டுமா?

என்ற கவிதையில்தான் எத்தனை அழகான படிமம்!

தூர சிகரங்களில் மிதக்கிறது என்றல்லவா நினைத்தேன்
சட்டென்று நம்மிடையே வந்துவிட்டனவே
அந்த வெள்ளை மேகங்கள் !

என்றவுடன் அந்த மேகங்களை உணரமுடிகிறதல்லவா?

மலையோர கிராமங்கள், கைவிடப்பட்ட வீடு, மலைகள், நிலவு போல் அடிக்கடி கொமாச்சியின் கவிதையில் வரும் விஷயம் நீர்பாசி.

முழு முதலான வெறுமையில்
ஒரு நீர்பாசியை போல் வீற்றிருக்கிறேன்.
வேரறுத்து நீர்க் கொண்டு செல்வது போல்
எனை கொண்டு போ!

என்று தனது காதலனிடம் வேண்டுகிறாள்.

ஜப்பான் முழுவதும் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் இரண்டாவது ஞாயிறு  அன்று கொமாச்சி பெருவிழா கொண்டாடப்படுகிறது. கொமாச்சி பிறந்த அகிதா மாநிலத்தில் உள்ள யுசாவா நகரத்தில் இந்த விழா மிக விமரிசையாக இன்றும் நிகழ்கிறது. ஏழு இளம்பெண்கள் கொமாச்சி போல் உடையணிந்து ஊர்வலமாக வருவார்கள். மேடையில் நடனமாடுவார்கள். பிறகு, கொமாச்சியின் வாகா கவிதைகளை, அழகான அபிநயங்களுடன் ஒவ்வொருவராக வாசிப்பார்கள். அழகான பெண்களை கொமாச்சி என்று வர்ணிக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. தோக்கியோவிலிருந்து கொமாச்சி பிறந்த அகிதா மாநிலத்துக்கு செல்லும் புல்லட் ரயிலுக்கு (ஷின்கான்சென்) கொமாச்சி என்றே பெயரிடப்பட்டுள்ளது. ஒரு வகை ஜப்பானிய அரிசிக்கு, கொமாச்சி என்று பெயரிடப்பட்டுள்ளார்கள்.

கொமாச்சியின் காதல் கடிதங்கள் சேமிக்கப்பட்டுள்ள கோயில்

கியோத்தா நகரத்தில் உள்ள யமாஷினா  என்னும் பகுதியில் சுயிஷின்-இன்  என்றழைக்கபடும் ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த புத்தமத கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவில் இருக்கும் இடத்துக்கு அருகேதான் கொமாச்சி வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. எனவே அந்த கோவிலும், கோவிலை சுற்றியுள்ள பகுதிகளும் கொமாச்சியின் நினைவகம் போல் அவளுடைய பல்வேறு நினைவு சின்னங்களை தாங்கி நிற்கிறது. கியோத்தா நகரத்தில் இருந்து சற்று தள்ளி, அமைதியான சூழலில் கோட்டை போன்ற சுவர்களுடன் இந்த கோவில் அமைந்துள்ளது.  

பேரழகியான கொமாச்சிக்கு நாள்தோறும் காதல் கடிதங்கள் வந்து குவிந்திருக்கிறது. அப்படி கொமாச்சிக்கு வந்த ஆயிரக்கணக்கான காதல் கடிதங்களை புதைத்து அதன் மேல் ஒரு நினைவு சின்னத்தை இந்த கோவிலுக்குள் நிறுவியுள்ளனர்.  ஃபுகாகுசா எழுதிய கடிதங்களும் இதனுள் புதைந்திருக்கிறது. ஏராளமான ஆசைகளுடனும், ஏக்கங்களுடனும், உருகி உருகி எழுதப்பட்ட கடிதங்கள் , நூற்றாண்டுகளாய் ஆண்களின் கனவுகளை மெளனமாய் பாடியபடி, மூங்கில மரங்கள் சூழ்ந்து ஆசிர்வதிக்க மண்ணுக்குள் வீற்றிருக்கிறது. இந்த காதல் கடிதங்கள் புதைக்கப்பட்டுள்ள இடத்திற்க்கு செல்லும் வழியெங்கும் கொமாச்சி எழுதிய வாகா கவிதைகள் பொறிக்கப்பட்டுள்ளது.

கொமாச்சியின் ஒப்பனை கிணறு

கொமாச்சியின் ஒப்பனை கிணறு இந்த கோவில் உள்ளே அமைந்திருக்கிறது. முற்றிலும் மூங்கில் குச்சிகளால் சூழப்பட்டு, நடுவே பளிங்கு போன்ற தூய்மையான தண்ணீருடன் இன்றும் அந்த கிணறு அங்கிருக்கிறது. இந்த கிணற்றின் நீரில்தான் கொமாச்சி குளித்து ஒப்பனை செய்துக்கொள்வாள் என்று எழுதப்பட்டிருக்கிறது. கியோத்தாவின் மலையோரத்தில் இந்த கோவில் உள்ளே நுழைந்தவுடன் கொமாச்சி வாழ்ந்த ஒன்பதாம் நூற்றாண்டுக்குள் வந்துவிட்ட உணர்வுதான்.

வாழ்நாள் முழுதும் கொமாச்சி தேடிய காதல் அவளுக்கு கிடைத்தாக தெரியவில்லை. தன்னை தேடி வந்த காதலை எல்லாம் புறக்கணித்து, தன்னுடைய முதுமை காலத்தில் கைவிடப்பட்டு, ஏழ்மையான சூழலில் தன்னந்தனியாக அவள் வாழ்ந்ததாக ஒரு சித்திரம் வரையப்படுகிறது. இறுதியில் அவள் புத்தமதத்தை தழுவி துறவியானாள் என்றும் சொல்லப்படுகிறது. வாழ்க்கை முழுதும் கொண்டாடப்பட்ட பேரழகியான கொமாச்சியின் முடிவை இப்படியாக முடிப்பதில் உள்ள காவியசோகம் புரிந்துக்கொள்ளக்கூடியதே.

மலையோர கிராமத்தில்
கைவிடப்பட்ட வீடு ஜொலிக்கிறது
இலையுதிர்கால நிலவு எத்தனை இரவுகள்
அங்கு தங்கி சென்றதோ!

என்ற கவிதையை அவளுடைய முதுமையிலேயே எழுதியிருக்க வேண்டும்.

இலையுதிர்கால காட்டில்
நூற்றுக்கணக்கான மலர்கள்
இப்படி இதழ்களை விரித்து நிற்குமென்றால்
குற்றமும், பயமுமின்றி
எனது நடனத்தில் நான் ஆழ்ந்திருக்கலாகாதா!

ரா. செந்தில்குமார்

என்று கேட்ட கொமாச்சியின் நினைவுகளை இன்றளவும் ஜப்பானிய இலக்கியம் ஏந்தியிருக்கிறது. கொமாச்சியை பற்றிய நாட்டுப்புற பாடல்கள், கவிதைகள் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது. பல நோ நாடங்கள் கொமாச்சியின் காதல் கதைகளை மையமாக கொண்டு எழுதப்பட்டுள்ளன.  அவள் வாழ்ந்த ஒன்பதாம் நுற்றாண்டிலிருந்து ஐந்து நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்ட ஒரு நோ நாடகம், கொமாச்சியின் இறுதிக் கட்டத்தை இப்படி சொல்கிறது. அடர்ந்த அத்துவான காட்டில், பேரழகி கொமாச்சியின் மண்டை ஓடு கிடக்கிறது. அதில் கண்கள் இருந்த ஓட்டை வழியே காற்றுச் செல்லும்போது, கொமாச்சியின் வாழ்வை அது பாடிச் செல்கிறது.

*

3 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *