ரத்தமும் சதையும் – விக்னேஷ் ஹரிஹரன்

(ஆனந்தாயி, பழையன கழிதல், உண்மைக்கு முன்னும் பின்னும் ஆகிய மூன்று நாவல்களை முன்வைத்து)

ப.சிவகாமி

நாகரீக சமூகத்தின் வரலாறு என்பது அதன் அதிகாரக் கட்டமைப்புகளின் வரலாறும்தான். அவ்வப்போதைய தேவைகளுக்கு ஏற்ப அதிகாரத்தின் கட்டமைப்புகளை கலைத்தும், அடுக்கியும், மாற்றியும், ஆடப்படும் விளையாட்டில் மனிதர்களை உயர்த்துவதும், தாழ்த்துவதும், நசுக்கி மாய்ப்பதும் நாகரீக சமூகங்களின் விருப்பத்துக்குரிய பொழுதுபோக்குகளில் ஒன்றாக இருக்க வேண்டும். அதிகாரத்தின் தோற்றம் அவ்வப்போது மாறலாம். ஆனால் அதிகாரம் நிலையானது. கலை, அத்தகைய நிலைத்த அதிகாரத்தை நோக்கியே பேச முயற்சிக்கிறது. அந்த முயற்சியில் கணிசமாக வெற்றி கண்ட தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர் ப. சிவகாமி.

ஆனால் சிவகாமியின் தனித்துவம் என்பது மாறி வரும் காலத்தில் உருவாகும் புதிய அதிகாரக் கட்டமைப்புகள் அவற்றுக்கு முந்தைய காலத்தின் கட்டமைப்புகளை சந்திக்கும் புள்ளிகளையும், அந்த சந்திப்புகளால் பாதிக்கப்படும் மனித வாழ்வுகளையும் அப்பட்டமான கலையாக்கியதிலேயே இருக்கிறது. குறிப்பாக ஜாதிய அதிகார அமைப்புக்கும் நவீன ஜனநாயக அதிகார அமைப்புகளுக்கும் இடையிலான உறவையே ப. சிவகாமி தன் நாவல்களில் கையாள்கிறார். அதிலும் அந்த சந்திப்புகளை ரத்தமும் சதையுமான மனிதர்களின் வாழ்வின் யதார்த்தத்திலிருந்து துளியும் விலகாமல் அவர் கையாண்டிருக்கும் விதம் அபாரமானது. குறிப்பாக ஆனந்தாயியும், பழையன கழிதலும் இதை மிகச் சிறப்பாகச் செய்கின்றன. ஜாதியும், அதிகாரமும், ஆணாதிக்கமும் ஒன்றுடன் ஒன்று கலந்து நவீன அதிகார அமைப்புகளில் வெளிப்படும் விதத்தை அப்பட்டமாக பிரதிபலிக்கின்றன.

இவற்றுள் ஆனந்தாயி தமிழின் செவ்வியல் நாவல் வரிசையில் வைக்கப்பட வேண்டிய படைப்பு. தமிழின் முதன்மையான யதார்த்தவாத படைப்புகளில் ஒன்று. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த, வசதியான, செல்வாக்கு மிக்க, பெரியண்ணன்-ஆனந்தாயி குடும்பத்தின் வாழ்வை சித்தரிக்கும் நாவல், பெண் எழுத்தாளர்களின் நாவல்களைப் பற்றி தமிழ்ச் சூழலில் நிலவும் அத்தனைப் பொதுப் புரிதல்களையும் பொய்ப்பிக்கிறது. பெண்களின் உலகம் அகம் சார்ந்தது, ஆண்களின் உலகம் புறம் சார்ந்தது என்ற புரிதலை நாம் சங்கப் பாடல்களிலிருந்து பேணி வருகிறோம். அதற்கு மாறாக பெண்களின் புற வாழ்வை எழுதிய நவீன பெண் எழுத்தாளர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த வகையில் அகமும் புறமும் சமமாக முயங்கும் அசலான செவ்வியல் படைப்பு ஆனந்தாயி. பெரியண்ணன், மணி, ஆனந்தாயி, லக்ஷ்மி, பூங்காவனம், கங்கானி என நாவலில் வரும் பெரிதும் சிறிதுமான அத்தனை கதாபாத்திரங்களுக்கும் அகமும் புறமும் முழுமையாக அளிக்கப்படுகிறது. மனிதர்களுக்கு இடையிலான உறவுகள், ஆணவங்கள், கனவுகள், பிறழ்வுகள் என ஒட்டுமொத்தமான வாழ்வை முழுமையாக கையாளும் நாவல் ஆனந்தாயி. ஒடுக்கப்பட்ட சமூகங்களை பாதிக்கப்பட்டவர்களாகவும், பரிதாபத்துக்குரியவர்களாகவும் இல்லாமல் முழுமையான முப்பரிமாண மனிதர்களாக சித்தரித்த வகையில் ஆனந்தாயி தனித்துவமானது. அந்த வகையில் பூமணியின் படைப்புகளுக்கு நிகரானது. அதனால்தான் செவ்வியல் படைப்புகள் மட்டுமே அளிக்கக்கூடிய நிறைவை, வெறுமையை, பெருமூச்சை ஆனந்தாயியை வாசிக்கும் எந்தவொரு வாசகரும் உணர முடியும்.

ஆனந்தாயியின் ஆழமும் தீவிரமும் அமையாவிட்டாலும் பழையன கழிதல் தமிழின் முன்னோடி படைப்புகளில் ஒன்று. ஆனந்தாயியில் முழுமையாக வெளிப்படும் சிவகாமியின் நுட்பமான கதாபாத்திரச் சித்தரிப்புகளும், அதிகார நிறுவனங்கள் சார்ந்த ஆழ்ந்த புரிதல்களும் அவரது முதல் நாவலான பழையன கழிதலிலும் கணிசமாக வெளிப்படுகின்றன. ஆனால் ஆனந்தாயிக்கும் பழையன கழிதலுக்கும் இடையிலான வேறுபாடு என்பது அவற்றின் விகிதாச்சார அளவிலேயே இருக்கிறது. பழையன கழிதல் ஜாதிய அதிகாரத்தின் அரசியலை பட்டவர்த்தனமாக முன்வைப்பதையே தனது பிரதான குறிக்கோளாகக் கொண்ட படைப்பு. சாதியப் படிநிலைகளையும், ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு இடையில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளையும், சமூகங்களுக்கு உள்ளேயே நிலவும் வர்க்க வேறுபாடுகளையும் கச்சிதமாகச் சித்தரிக்கும் நாவலில் மனித இயல்பின் நுட்பங்கள் முதன்மையாக இடம் பெறுவதில்லை. கதாபாத்திரங்கள் கதைக்குத் தோதாக வளைந்து கொடுக்கிறார்கள். கதையும் கருத்துக்கு ஏற்ப வளைந்துகொடுக்கிறது. ஆனால் இத்தனைக்கு இடையிலும் நாகமணிக்கும் கனகவல்லிக்கும் இடையிலான உறவு, கௌரிக்கும் காத்தமுத்துவுக்குமான உறவு போன்றவற்றில் சிவகாமியின் நுட்பம் வெளிப்படுகிறது. பெரும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக திரளும்போதும் தனி மனிதர்களுக்குள் இயங்கும் பொறாமைகளையும், அற்பத்தனங்களையும், காழ்ப்புகளையும் சித்தரிக்கும் இடங்களே இந்த நாவலின் உச்சங்கள்.

ஆனந்தாயிக்கும், பழையன கழிதலுக்கும் சில ஆதாரமான ஒற்றுமைகள் உண்டு. முதலில் இவை இரண்டுமே ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த, ஓரளவு வசதியான பொருளாதாரப் பின்னணி கொண்ட மனிதர்களையே முதன்மைக் கதாபாத்திரங்களாகக் கொண்டவை. அந்த சமூகங்களில் உள்ள மெய்யான ஒடுக்கப்பட்ட மனிதர்களும் நாவல்களில் நிறைந்திருந்தாலும் அவற்றின் பிரதான கதாபாத்திரங்களான காத்தமுத்துவும், பெரியண்ணனும், ஓரளவு வசதி வாய்ப்புகள் அமைந்தவர்களாகவே இருக்கிறார்கள். இது நாவல்களின் களத்தை விரிவுபடுத்துகிறது. ஒடுக்கப்பட்ட மனிதர்களை வினைபடு பொருட்களாக மட்டுமின்றி வினை ஆற்றுபவர்களாகவும் காட்டுகிறது. அதிகாரம் சார்ந்த அவர்களது புரிதல்களையும் அதில் வெளிப்படும் நுட்பத்தையும் நியாயப்படுத்துகிறது. இரண்டாவது, இவற்றில் வெளிப்படும் பெண்களின் மீதான ஒடுக்குமுறை சார்ந்த புரிதல்கள். ஒடுக்கப்பட்ட சமூகங்கள் தங்கள் அளவிலேயே ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டாலும் அவை அவற்றின் பெண்களை மேலும் ஒடுக்கவே முயல்கின்றன. அந்த ஒடுக்குமுறைக்கு பொருளியல் வேற்றுமையோ ஜாதி வேற்றுமையோ ஒரு பொருட்டல்ல. ஆனந்தாயியும் லக்ஷ்மியும் தங்கமும் பரஞ்சோதி உடையாரின் மனைவி கமலமும் பொருளியல் வேற்றுமைகளுக்கு அப்பால் அதிகாரத்தின் கடைசிப் படிநிலையிலேயே வைக்கப்படுகிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக வரும் மூன்றாவது ஒற்றுமை, கல்வி, பொருளியல் சுதந்திரத்தின் மீதான நம்பிக்கை. பெண்களின் மீதான ஒடுக்குமுறையின் நிலை மாற்றத்திற்கான தீர்வாக இந்த இரு நாவல்களும் முன்வைப்பது கல்வியையும் பொருளியல் சுதந்திரத்தையும்தான். சமூகங்களின் நிலை மாற்றத்திற்கு அரசியல் செயல்பாடுகளை தீர்வாக முன்வைக்கும்போதும் அது அந்த சமூகங்களில் உள்ள பெண்களின் நிலைக்கான தீர்வாகாது என்பது மிகத் தெளிவாகவே வரையறுக்கப்படுகிறது. ஆனந்தாயியின் பூங்காவனமும், பழையன கழிதலின் கௌரியும் இந்த நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகள். நான்காவது, யதார்த்தம் எத்தனை யதார்த்தமானதோ கனவுகளும் அத்தனை யதார்த்தமானதே எனும் புரிதல். தமிழ் யதார்த்தவாத அழகியலின் இலக்கணச் சுத்தமான எடுத்துக்காட்டுகளாக நாவல்கள் இருந்தபோதும் கதாபாத்திரங்களின் கனவுகளும் மனங்களும் மதிக்கப்படுகின்றன. யதார்த்தத்தின் குரூரத்திற்காக அவர்களது கனவு காணும் உரிமையை சிவகாமி பறிப்பதில்லை. அதனாலேயே அந்த கனவுகளை வாசகர்களுக்கும் அவரால் கடத்த முடிகிறது. சமத்துவமும், மரியாதையும், உரிமைகளும் அனைவருக்குமான பொதுவுடைமையாகும் அந்த கனவு மாண்புமிக்கது.   

முக்கால் பங்கு கட்டுரை வரை தலைப்பில் உள்ள மூன்றாவது நாவலான உண்மைக்கு முன்னும் பின்னும் குறித்த ஒரு சொல்லும் வாராதிருப்பதிலேயே என் கருத்துக்கள் ஓரளவு பிடிபட்டிருக்கும் என்று நினைக்கிறேன். எனக்குக் கிடைத்த சிவகாமியின் மூன்று நாவல்களில் மிக பலவீனமான நாவல் என்று இதைத்தான் சொல்வேன். ஆனால் இதுவே சிவகாமியின் வாழ்வுக்கும் அரசியல் பார்வைக்கும் மிக நெருக்கமான படைப்பு என்றும் அறிவேன். சிவகாமியின் பேசுபொருளான ஜாதிய அதிகாரத்துக்கும் நவீன ஜனநாயக அதிகார அமைப்புகளுக்கும் இடையிலான உறவை மிக நேரடியாகக் கையாளும் படைப்பு இது. ஆனால் அந்த நேரடித்தன்மையே இந்த நாவலின் பலவீனம். தன் மையத்தை விட்டு இம்மியும் விலகாமல் இருக்க முயற்சிக்கும் நாவலில் முந்தைய இரு நாவல்களிலும் அமைந்து வந்த வாழ்வு இல்லை. தன் பேசுபொருளை நேரடியாகக் கையாள்வதாலோ என்னவோ இந்த நாவலில் சிவகாமி “மிகச் சரியாக” இருக்க முயன்றுகொண்டே இருக்கிறார். அதனாலேயே அதிகாரத்தைப் பற்றிய நுட்பமான அவதானங்களையும் ஜாதிய அரசியல் பற்றிய நுட்பமான விமர்சனங்களையும் முன்வைத்தாலும் நீலா ஒரு சுயாதீனமான கதாபாத்திரமாக வெளிப்படுவதில்லை. மாறாக அவர் சிவகாமியின் குரலாகவே ஒலிக்கிறார். அதுவும் புனைவாசிரியர் சிவகாமியின் குரலாக அல்ல. சிந்தனையாளர்/செயற்பாட்டாளர் சிவகாமியின் குரலாகவே ஒலிக்கிறார். கைப்பாவை கூத்துகளின் (ventriloquism) ரசிகனாக இல்லாததாலோ என்னவோ எனக்கு இது உவக்கவில்லை. முந்தைய இரு நாவல்களிலும் நான் வியந்து பார்த்த சிவகாமியின் நுட்பமான அவதானங்களும், மனித வாழ்வின் யதார்த்தத்தின் மீதான பிடிப்பும், கதாபாத்திரங்களின் சுயாதீனத்தின் மீதான மதிப்பும், தன் அரசியல் பார்வைகளுக்கு ஒவ்வாதவற்றையும் சித்தரிக்கும் நேர்மையும் இந்த நாவலில் இல்லை. மையத்தை விட்டு விலகிச் செல்வதாக பாவனை காட்டிக்கொண்டே நம் கவனத்தை மையத்தை நோக்கி குவிக்கும் செவ்வியல் நாவல்களின் ஜால வித்தையை முதல் இரண்டு நாவல்களிலும் அத்தனை அபாரமாக வெளிப்படுத்திய சிவகாமி, இந்த நாவலில் அதை தெரிந்தே தவிர்க்கிறார். அதனால்தானோ என்னவோ அதிகாரத்தைப் பற்றிய யதார்த்த சித்திரமாகவும், அரசியல் விமர்சனமாகவும் வெற்றி பெறும் நாவல், ஒரு புனைவாக என்னை கவரவில்லை.

விக்னேஷ் ஹரிஹரன்

“நாவல்ல ஒரு லைஃப் இருக்கணும்” என்று மூத்த படைப்பாளிகள் சொல்வதன் உண்மையான பொருளை உணர வாய்க்கும் தருணங்கள் மகத்தானவை. என் வாசிப்பில் அப்படியான தருணங்களில் ஒன்று ஆனந்தாயியை வாசித்தது. நவீன இலக்கியத்தில் யதார்த்தவாதத்திற்கு பின் எத்தனையோ அழகியல்கள் வந்து, நிலைத்து, மறைந்தும்விட்டன. ஒவ்வொரு அழகியலும் அறிமுகமாகும்போது, “இதுவே யதார்த்தவாதத்தின் சவப்பெட்டியில் அறையப்படும் கடைசி ஆணி” என்று பிரகடனம் செய்யப்படுகிறது. ஆனால் “பூனைகளுக்கு ஏழு உயிர் உண்டு” எனும் ஆங்கிலச் சொலவடையைப் போல் யதார்த்தவாததிற்கும் பல உயிர்கள் உண்டு போலும். அத்தனை சவப்பெட்டிகளையும் ஆணிகளையும் மீறி அது உயிர்ப்போடுதான் இருக்கிறது. மனித வாழ்வை, அதன் நுட்பங்களை, மனத்தின் புதிர்களை மகத்தான கலையாக்கி, முழுமையாக நம் மனதில் நிகழ்த்திக்காட்டும் வேறொரு அழகியல் தரப்பு இங்கு உருவாகும்வரை, யதார்த்தவாதத்தின் சவப்பெட்டிகள் காலியாகத்தான் புதைக்கப்படும். அதற்கான சாட்சி ப. சிவகாமியின் ஆனந்தாயி.  

ப. சிவகாமி போன்ற படைப்பாளிகளை கண்டடைகையில் நீலி ஆற்றும் பணியின் மீதான நம்பிக்கை உறுதிபடுகிறது. ஆனால் தமிழின் முதன்மையான யதார்த்தவாத நாவல்களில் ஒன்றை எழுதிய ப. சிவகாமியின் பெரும்பாலான படைப்புகள் இன்று வாசகர்களுக்குக் கிடைப்பதில்லை. நான் மதிக்கும் முன்னோடிகள் பலரும் “குறுக்கு வெட்டு” எனும் அவரது மூன்றாவது நாவலை குறித்து உயர்வாகச் சொல்லக் கேட்கிறேன். ஆனால் புத்தகமோ நூலகங்களிலும் இல்லை. ப. சிவகாமியின் படைப்புகள் தமிழில் பரவலாக வாசிக்கப்பட வேண்டியவை. தொடர்ந்து விவாதிக்கப்பட வேண்டியவை. அவற்றை படிக்க நினைக்கும் வாசகர்களுக்கும் அவை கிடைக்காமல் இருப்பது வருந்தத்தக்கது. 

*

One Comment

Leave a Reply to கோ.புண்ணியவான் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *