வானத்தை நோக்கியவள் – ரம்யா
(எழுத்தாளர் கிருத்திகாவின் வாஸவேச்வரம் நாவலை முன்வைத்து)

1
“நவீனத்துவ அழகியல் என்பது மார்க்ஸியம், ஃப்ராய்டியம் இரண்டும் சாராம்சவாத அடிப்படையில் தொகுக்கப்பட்டதன் தத்துவார்த்தமான விளக்கமாகும்” என எழுத்தாளர் ஜெயமோகன் தன் இலக்கியம் முன்னோடிகள்1 நூலில் அ.மாதவன் பற்றிய விமர்சனக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். பிற கட்டுரைகளில் குறிப்பிட்ட டார்வினிஸத்தையும் உடன் இணைத்துக் கொண்டால் திட்டவட்டமாக நவீனத்துவ எழுத்தாளர்களுக்கான வரையறை உருவாகிவிடுகிறது. நவீனத்துவ காலகட்டத்தின் புனித நூல்கள் எனவும், இலக்கிய முன்னோடிகள் எனவும் தீவிர இலக்கிய மரபைச் சார்ந்த விமர்சகர்கள் குறிப்பிடும் பட்டியல்களை நோக்கினால் இந்த வரையறை சரியென்றே சொல்ல முடிகிறது.
நவீனத்துவ எழுத்தாளர்களைப் பற்றிய இந்த பார்வைக்கோணத்தைக் கொண்டும் அவர்களின் படைப்புகளைக் கொண்டும் தூய அறிவுஜீவிகள் என அவர்களை மதிப்பிடலாம். அதனாலேயே புதுமைப்பித்தனை இந்தப் பட்டியலின் தலைமகனாக வைக்க வேண்டியது கட்டாயமாகிறது. ஒப்புநோக்க பாரதியை இந்தப் பட்டியலின் தலைமகனாக வைக்க இயலாததற்கு அவரின் அறிவு அம்சத்தைத் தாண்டிய உணர்ச்சிவேகம் விமர்சகர்களுக்குத் தடையாக அமைகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பெண்ணெழுத்தில் இந்த உணர்ச்சிவேகங்களுடன் மானுடத்தை நோக்கிய நேர்மறை அம்சம், காந்தியம், மரபு நோக்கிய சாய்வு ஆகியவையும் சேர்ந்து கொண்டதால் தான் அவர்களின் பெயர்கள் நவீனத்தமிழ் இலக்கிய விமர்சன மரபு தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட எழுத்தாளர் பட்டியலில் காலம் கடந்து நிற்கவில்லை என்ற எண்ணம் எழுந்தது. இந்த எண்ணம் கிருத்திகாவின் வஸவேச்சுரம் நாவலை வாசித்தபோது தகர்ந்தது.
வாஸவேச்வரம் நாவல் எழுத்தாளர்கள் ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோரின் சிறந்த நாவல்கள் பட்டியலில் உள்ளது. எழுத்தாளர் மகரம் கிருத்திகாவின் இந்த நாவலைப் பற்றி எழுதிய விமர்சனக் கட்டுரை எழுத்து இதழில் அக்டோபர் 6, 1968-ல் வெளியாகியுள்ளது. இக்கட்டுரையில், ”நாவலில் கதையம்சம், மையக்கருத்து என்றெல்லாம் அமையாதது புதுமை தான்” என்றும்; ”அர்த்தபுஷ்டியான கிண்டலும் கேலியும் பின்னிப் பிணையும் வசனங்கள், அழுத்தமான பாத்திரப்படைப்பு, மனக்கிலேசத்தையும், ஆசாபாசங்களையும் துல்லியமாக எடுத்துக் காட்டும் ஓர் அநாயாச லாவகம் எல்லாமே அவரை ஒரு முதல் தர எழுத்தாளராக நம்மை அறிமுகப்படுத்துகின்றன” என்றும் மகரம் மதிப்பிடுகிறார். ஆனால் ‘அநாவசியக் கொலை’ என கதையின் இறுதியைக் குறிப்பிடுகிறார். “வயது வந்தவர்களுக்கு மட்டும் என முத்திரை சூட்ட வேண்டிய நாவல்” என்று நேரடியாகவும், ”கிருத்திகாவின் நடை இந்தக் கொச்சைத் தமிழையும், பச்சைக் (மஞ்சள்) கதையையும் மட்டும் சொல்வதற்காக அமைந்ததாகப் படவில்லை. மேலும் உயர்வான சிருஷ்டிகளைப் படைக்கும் ஆற்றல் அவருக்கு இருப்பது…” என்று பூடகமாகவும் கதையில் தென்படும் காம அம்சங்களைச் சாடுகிறார். எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் இந்த நாவலைப் பற்றி நீலியில் எழுதிய கட்டுரைக்கு வைத்த தலைப்பு “காமத்தின் மீது கட்டப்பட்டிருக்கும் ஆலயம்”. இதில் நாவலைப் பற்றிய அவதானத்துடன் பலவீனங்கள் சிலவற்றையும் பட்டியலிடுகிறார். காலச்சுவடு பதிப்பகத்தின் கிளாசிக் நாவல் வரிசையில் பிரசுரமான வாஸவேச்வரம் நாவலுக்கு முன்னுரை எழுதிய பெருந்தேவி, ”பெண்பால்தன்னிலையின் முதல் புள்ளிகள்” என்ற தலைப்பை அதற்கு இட்டுள்ளார். இவையாவுமே நாவலைப் பற்றிய ஒரு பிம்பத்தை உருவாக்குவதைப் பார்க்கலாம்.
எனவே இந்த நாவலைப் பற்றிய என்னுடைய பார்வைக்கோணத்தை முன் வைப்பதற்கு முன்னர் இது எதுவல்லாம் ”இல்லை” என்று சொல்ல வேண்டியது அவசியமாகிறது. இது மஞ்சள்/பச்சைக் கதை இல்லை. காமத்தை அப்பட்டமாக பேசியதற்காக நினைவுகூரப்பட வேண்டியது இல்லை. கிராமத்துக்கதையை, கிராமத்துமக்களை முன்னிறுத்த எழுதப்பட்ட நாவல் இல்லை. மிக முக்கியமாக பெண்களின் அகப்புறப் பிரச்சனைகளைப் பேசவோ, பெண் நிலையிலிருந்து எழுதப்படவோ இல்லை. எனில் இந்த நாவல் எப்படி பார்க்கப்படலாம்?
முதன்மையாக இது நவீனத்துவ நாவல். இந்த வரிசையில் வைக்கப்பட்ட முன்னோடி எழுத்தாளர்கள் பட்டியலில் கிருத்திகாவும் தவறாமல் குறிப்பிடப்பட வேண்டியவர்.
ஜெர்மன்-அமெரிக்க சிந்தனையாளரான எரிக் ஃபிராம் ஃப்ராய்டின் உளவியல் மற்றும் மார்க்ஸிய கொள்கைகளை இணைத்து நவீன மனிதனை அணுகி, அது குறித்த பல நூல்களை எழுதியவர். மானிடரின் சமூக நடத்தைகளுக்கும், நம்பிக்கைகளுக்கும், தூண்டுதல்களுக்கும் காரணம் ஃபிராய்டியம் கூறிய ஓர்மையற்ற ஆழ்மனதின் தூண்டுதல்கள் இல்லை, மாறாக மனிதர்கள் தான் வாழும் சமுதாயம், கலாச்சாரங்களால் ஆழமாக வேரூன்றியிருப்பதே காரணம் என்னும் நிலைப்பாட்டை முன் வைத்தவர். ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் சமூகப் பொருளாதார கட்டமைப்பிலிருந்து வெளிப்படும் ஆளுமைப் பண்புகள், அணுகுமுறைகள் மற்றும் மதிப்புகளின் தொகுப்பு ஆகியவற்றை ஓர் சமூகப் பண்பாக உருவகித்தார். ஒரு தனிமனிதனின் குணம் என்பது குடும்ப இயக்கவியல், உள்ளுணர்வு உந்துதல்களின் விளைவாக மட்டுமல்லாமல் உற்பத்தி முறை, சமூக உறவுகள் மற்றும் பெரும் கலாச்சாரத்தின் மேலாதிக்க சித்தாந்தங்களால் ஆழமான வழிகளில் வடிவமைக்கப்படுகிறது என்றார். ஒரு ஆரோக்கியமான சமூகம் என்பது அதன் உறுப்பினர்களின் அடிப்படை இருத்தலியல் தேவைகளை பூர்த்திசெய்து, அவர்களின் முழு மனித ஆற்றலையும் வெளிப்படுத்த அனுமதிக்கிறது என்பதை எரிக் ஃபிராம் நம்பினார்.
வாஸவேச்வரம் என்ற ஊரை, அதன் மனிதர்களை நாம் இந்தப் பின்னணியில் வைத்து மதிப்பிடலாம். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பொதுப்பண்பைக் குறிப்பதைக் கிராமங்களில் பார்க்கலாம். இதை மாநிலம், நாடு என்று கூட விரித்துக் கொள்ளலாம். கீழை மனது, மேலை மனது என தத்துவார்த்தமாகச் சொல்வதையும் ஒப்பு நோக்கலாம். போலவே வாஸவேச்வரத்திலுள்ள ஒவ்வொருவரிலும் உள்ள தீமையின் அம்சம், எவ்வாறு ஊரை பாதிக்கிறது; அந்த ஊரின் பண்பு எப்படி தனிமனிதரில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்ற பரந்துபட்ட பார்வையை வாஸவேச்வரம் நாவல் வழியாக கிருத்திகா விசாரணை செய்துள்ளார். அவருக்கு கேள்விகள் முடுக்கியதைவிட திட்டவட்டமாகக் கிடைத்த பதில்களின் தொகையாக நாவல் அமைந்துள்ளது. ஆனாலும் இறுதியில் கதை வளரச் சாத்தியமான முரண்கள் எஞ்சியிருப்பது எழுத்தாளரையும் மீறி வெளிப்பட்டிருக்கிறது.
கிருத்திகா இந்த நாவல் பிறந்த தருணத்தை நினைவுகூரும்போது (எழுத்து இதழ் 6-10-1968, பக் 32)
“ஒரு தரம் 1966 தை மாதம் கன்னியாகுமரி அருகில் காரில் போகும் போதுதான் வாஸவேச்வரம் என்ற கிராமம் கருத்தில் உதித்தது. ரம்மியமான சூழ்நிலை, மாந்தோப்பு, நெற்கதிர்கள் பச்சை அலைகளை வீசின. பல நினைவுகள் வந்து மோதிக் கொண்டன. கிராமாந்திர வாழ்க்கையைப் பற்றி எனக்குள்ள அனுபவங்களை அரைத்துக் கரைத்துக் குழைத்துப் பக்குவமாக்கினேன். பாத்திரங்கள் உருக்கொண்டன.மனிதருடைய இயல்கள், ஆசாபாசங்கள், மனப்பேய்கள் இவை எங்கும் ஒரு போல்தான் விளையும் நகரமானாலும் சரி, கிராமமானாலும் சரி.
முதிர்ச்சியடைந்தவர்கள் சில சமயங்களில் புரிந்து கொள்ள முடியாத விதத்தில் நடந்து கொள்கிறார்கள். அதற்கெல்லாம் அவர்களுடைய குழந்தைப் பருவத்தின் அனுபவமே காரணம். இள மனதில் சில அழுத்தமான வடுக்கள் விழுந்துவிடுகின்றன, பிற்பாடு அவர்களுடைய செய்கைகளால் அப்பண்புகள் வெளியாகின்றன. இந்த உள நூல் தத்துவப்படி அமைந்தவை என்னுடைய காதாப்பாத்திரங்கள் ( அநேகமாக எல்லாமே) என்றூ சொல்லலாம்.
மனதிற்குள் பதிந்த ஆழ்ந்த காரணங்களைக் கொண்டு செயலாற்றுவதால் என் கதாப்பாத்திரங்கள் தாமாகவே உயிர்கொண்டு புத்தகங்களில் வளைய வருகின்றன. உளநூல் சாத்திரமும் நம் சமூகத்தில் தற்போது உண்டாகியிருக்கும் புரட்சிகளுமாகச் சேர்ந்து என் புத்தகங்களுக்கு ஒரு புது மாதிரியான உருவ அமைப்பைக் கொடுத்திருக்கின்றன”
-என்ற கிருத்திகாவின் வரிகள் வழியாக அவரின் நாவலுக்கான அறிவுப் பின்புலத்தை மேலும் தெளிவாகப் பார்க்கலாம். பழமை/மரபு/கிராமம் – புதுமை/புரட்சி/நகரம் என பல முரண்கள் நாவல் முழுவதுமாக ஊடாடுகிறது. நாவல் அந்த ஊரின் தொல் வரலாறைச் சொல்லும் உபந்நியாசத்திலிருந்து ஆரம்பிப்பது முக்கியமானது. வாஸவேச்வரம் என்ற கிராமத்தின் பண்புக்கான உளவியல் காரணமாக அந்த தொன்மக்கதையையே நாம் எடுத்துக் கொள்ளலாம். நாவல் முழுவதும் விரவியிருக்கும் அந்த கிராமத்தின் பொதுப்பண்புகள் தனிமனிதர்களில் ஆதிக்கம் செலுத்துவதை ஒட்டுமொத்தமாக தொகுத்து நோக்கினால் புலப்படும்.
வாஸவேச்வரம் கிராமத்தில் உள்ளவர்கள் பணத்திற்கு முதன்மை இடம் கொடுப்பவர்கள். அதை வைத்திருப்பவர்களையே வெற்றியாளர்களாகக் கருதும் எண்ணத்தைக் கொண்டவர்கள். அவர்களிடம் எல்லாவற்றிற்கும் ஒரு ’முறை’ உள்ளது. வீட்டு விசேஷத்திற்காக உணவுண்ண ஒருவரை எப்படி அழைப்பது என்பதற்கு அத்தனை முறைமை சொல்லப்பட்டுள்ளது. உணவின்மீது பெரும் பிரியம் கொண்டவர்கள். வேளாவேளைக்கு சரியாக உணவுண்பவர்கள். ஆனாலும் விசேஷங்களுக்கு வீட்டில் போய் முறையாகக் கூப்பிட்டால் தான் சாப்பிட வரும் அளவுக்கு ரோஷமானவர்கள். ஆண்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை பெண்கள் காத்திருக்க வேண்டும். அவர்கள் பந்தி முடித்துப் போன பின்னர் தான் பெண்களுக்கு இலை போட முடியும். அவர்கள் சாப்பிடும் நாஞ்சில் நாட்டு பாரம்பரிய உணவுமுறை விரிவாக உள்ளது. உதாரணமாக மட்டி வாழைப்பழத்தின் சுவையை ஆசிரியர் விவரிக்கும் இடம். நாவல் நெடுக தோசையின் ”சொர்ர்ர்ர்” சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. வரதட்சிணை அவரவர் தகுதிக்கென நிர்ணயிக்கப்பட்டு அந்த குடும்பத்துடனான உறவு மட்டுமே இன்னொரு குடும்பத்துக்கு ஏற்கப்பட்டுள்ளது. பாலின பேதமும், வகுப்பு பேதமும் மிகச்சரியாக பார்க்கப்படும் ஊர். உபந்நியாசம், கலை, கலாபம், கதை, விருத்தத் தொகை, விருத்தாந்தங்கள் என கலைகளை ரசிப்பவர்களாகவும்; வஸந்த பஞ்சமி உற்சவம், ஹரிதத்தர் முகதி என விஷேச தினங்களைக் கொண்டாடுவர்களாகவும் உள்ளனர். ’வாஸவேச்வரத்தில் ஆண்கள் கம்பீரமாக, எடுப்பாக, அழகாக இருப்பார்கள். பெண்கள் தன்னைத்தானே அலங்கோலம் செய்து கொண்டாற்போல மோசமாக இருப்பார்கள்’ என அங்குள்ள மனிதர்களின் ஒட்டுமொத்த அழகு, உருவக் கோலம் பற்றிய சித்திரம் வருகிறது. மதியத் தூக்கம் பற்றிய விவரிப்பும், பெண்கள் ஊர் வம்பு பேசக்கூடிய இடங்களும், ஆண்கள் மாலையில் சீட்டாடக்கூடிய இடமுமாக ஊருக்குள் வெவ்வேறு உலகங்கள் புழங்குகிறது.
1960களில் இருக்கும் ஒரு நாஞ்சில் நாட்டைச் சேர்ந்த பிராமணர்கள் வாழும் ஒரு கற்பனை கிராமம் என வாஸவேச்வரத்தைச் சொல்லலாம். வறுமை, பசி ஆகியவை ஏதும் இல்லாத அதனாலேயே உளம் சார்ந்த நுணுக்களுக்கு மிகவும் ஆழமாக செல்லக்கூடிய மனநிலையை வாய்த்தவர்களாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஊருக்குள்ளேயே ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும் அவை ஒட்டுமொத்த இந்திய அல்லது தமிழக சித்திரத்தை நமக்கு அளிப்பதில்லை. மாறாக கலை, பண்பாடு, மனித மனங்களை நுணுக்கமாக அவதானிப்பதற்குத் தேவையான கலக்கமற்ற சூழலைப் பிரதிபலிக்கிறது. பல வருடங்களாக ஊன்றி நிலை நின்ற மரபை, பண்பாட்டை கேள்வி கேட்கும் பிச்சாண்டி வருவதே அங்கு சலனமாக உள்ளது. அவன் இருப்பு இரு பெரும் சித்தாங்களின் மோதலாக கட்டமைக்கப்படுமளவு தீவிரமாக இல்லையெனினும் வாஸவேச்வரம் போன்ற மந்தகதியான ஊரில் அது பெரும் தாக்கமாகவே உணரப்படுகிறது. இந்த இளைஞர்களின் செயல்பாடுகள் முதிர்ச்சியற்றவையாக நின்று போவதும், இவர்கள் ஏற்படுத்தும் பிரச்சனை மையமாகத் திரண்டு வராததும் இந்தக் கதையின் பிரதான பிரச்சனை இதுவல்ல என்பதையே காட்டுகிறது. ஒருவேளை இத்தகைய புரட்சிகள் அனைத்தையுமே இளமையின் கொந்தளிப்பாக மட்டுமே கிருத்திகா மதிப்பிடுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
ஒட்டுமொத்தமாக அவர் மரபை வியந்தோதுவதுமில்லை. புதுமையை கண்மூடித்தனமாக ஏற்பதுமில்லை. ஆனால் மரபின்/புதுமையின் வேண்டாத பக்கங்களை நாவல் முழுவதுமாக சாடியிருக்கிறார்.
2
வேகமான அக, புற வர்ணனைகள் கிருத்திகாவின் எழுத்தில் சாத்தியமாகியுள்ளது. மனிதர்களின் அக வர்ணனைகள் வழியாக உளவியல் ரீதியான ஆழமான விசாரணை செய்திருக்கிறார். கதாப்பாத்திரங்கள் ஒவ்வொன்றுமே ஆழமான உளவியல் புலத்தைக் கொண்டிருப்பதை நாவலில் காண முடிகிறது. முற்றிலும் நல்லவர் என்றோ முற்றிலும் கெட்டவர் என்றோ இந்தக் கதையில் யாரும் இல்லை. எந்த நபரையும், எந்த நிகழ்வையும், எந்த சித்தாந்தத்தையும் ஒருசார்பாக கிருத்திகா மதிப்பிடவில்லை. ஆசிரியர்கூற்றாக வரும் இடங்களிலும் இந்த நடுநிலையை அவர் தவறவிடுவதில்லை. எல்லாக் கதைமாந்தர்களிலும் தீமையின் அம்சமே சற்று அதிகமாக வெளிப்படுகிறது.
எழுத்தாளர் மகரம் குறிப்பிடுவது போலவே மையம் எதுவும் இல்லாத நாவல். மையக் கதாப்பாத்திரம் என ஒன்றில்லை. மாறாக பல உள்ளது. மையப் பிரச்சனை என ஒன்று இல்லை. மாறாக பல்வேறு பிரச்சனைகள் உள்ளது.
ஓர் அரிச்சந்திர புராண உபந்நியாசத்திலிருந்து ஆரம்பிக்கும் நாவல் அது கடத்தும் அழகு, காமத்தூண்டல் வழியாக ஒவ்வொரு வீட்டின் படுக்கையறைக்குள்ளும், படுக்கையறையல்லாத தனி நபரின் கள்ள உறவுகளுக்குள்ளும் நுழைகிறது. இந்த நுட்பத்தை அவர் மனிதர்களின் மனவிசாரங்களுக்குள் இயல்பாக உள்நுழையும் வாயிலாகப் பயன்படுத்தியிருப்பதே புதுமையின் அம்சமாக உள்ளது. எரிக் ஃபிராம் அன்புடன்/காதலுடன் கூடிய காமம்; அன்பற்ற வெறும் உடல் சார்ந்த காமம் பற்றி குறிப்பிட்டு அதில் பின்னையது கசப்பிற்கு/வெறுமைக்கு இட்டுச் செல்வதைக் குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டு முனைகள் பற்றிய பல தளங்களிலான நுண்ணிய விசாரணை நாவலில் உள்ளது.
காமம்- காமத்துறப்பு/துறவு சார்ந்த போராட்டங்களில் உழன்ற ஆண் எழுத்தாளர்களின் (தி.ஜானகிராமன், ஆ.மாதவன்) கதைகளுக்கு மத்தியில் அதை ஒற்றை தொன்மக்கதையின் வழியாக ஆயாசமாகக் கடந்து அப்பால் செல்வது இந்நாவலின் பெரிய பலமாகவே உள்ளது. முதல் சில பக்கங்களிலேயே இந்தத்தாவல் நிகழ்ந்துவிடுகிறது. இப்போது மிக இயல்பாக ஒவ்வொரு வீட்டிலும் உள்ள கதைமாந்தர்களின் பிரச்சனையை மிக நெருக்கமாக அறிந்து கொள்ள முடிகிறது.

இரு திட்டமான பாத்திர வார்ப்புகள் என இந்த நாவலின் இறுதியில் கொலை செய்யும் சுப்பையா, கொலை செய்யப்படும் சந்திரசேகரய்யர் ஆகியோரைக் குறிப்பிடலாம். சகோதரர்களான இவர்கள் இருவரின் பாத்திரப்படைப்பும், பாத்திர வளர்ச்சியும், முடிவும் துள்ளியமான வளைவாக வந்துள்ளது. கொலை செய்யும் சுப்பையா சிறுவயதிலிருந்து தன் அண்ணனுடன் ஒப்பிடப்பட்டு காயமடைந்திருக்கும் ஆன்மா. ஆரம்பத்திலேயே அவன் மனைவியான விச்சு அவனுடனான உடலுறவு திருப்தியளிக்காததை பெண்கள் வம்பளக்கும் இடத்தில் வைத்து பாலுண்ணிப்பாட்டியிடம் சொல்வதும், அவனிடமே அதன் பொருட்டு அதிருப்தியை வெளிப்படுத்துபவளாகவும், ஒருகட்டத்தில் அவனைவிட்டு விலகுபவளாகவும் இருக்கிறாள். அவளும் தன்னைத் தன் சகோதரனுடன் ஒப்பிடுவது சுப்பையாவை உளச்சோர்வுக்கு உள்ளாக்குகிறது என்பதை கிருத்திகா அவனின் அன்றாடத்தை விவரிப்பதன் வழியாகச் சொல்கிறார். ”ஒரு சமயம் அவனைப் பார்த்தா (சுப்பையா) வெடிச்சிடுவானோன்னு பயம்” என அம்பிமாமா சொல்லும் இடத்தில் கூட அவன் கொலை செய்யும் அளவுக்குத் துணிபவன் என்ற எண்ணம் நமக்கு வருவதில்லை. உடலுறவும், உளச்சிக்கலும், மனிதரின் புறவளர்ச்சியும் தொடர்பு கொள்ளும் ஒரு நுண்ணிய இடத்தை கிருத்திகா இந்த உறவுகளில் காண்பித்துள்ளார்.
”புதுமையான அனுபவங்களை நாடி மனிதன் தான் எத்தனை ஏக்கமுறுகிறான்.”; “அழகொண்ணும் இல்ல. அதெல்லாம் புதுமையிலதானிருக்கு. ஆண்களுக்கு புதுமையைக் காணும் ஆசையில் புதிய பெண்கள்/ பிறர் மனைவியை நாடுகிறார்கள். புதுமையைத் தேடுவதாலேயே பிற ஆண்கள் தங்களைப் புகழ்கிறார்கள் என்ற எண்ணமில்லாமல் பெண்கள் கணவன்மார்களை நினைத்து புழுக்கம் அடைகிறார்கள்/ தங்களைப் புகழும் பிற ஆண்களின் பின்னால் செல்கிறார்கள்” என்று சுந்தா விளக்கும் இடம் உறவுச்சிக்கல் சார்ந்த உளவியல் பார்வையைக் கொண்டதாக உள்ளது
நாவலின் இறுதியில் கொல்லப்படும் சந்திரசேகரய்யா வெளி உலகுக்கு நல்லவர். வீட்டில் ரோகிணியை மனம் நோகப் பேசுபவர், ஏய்த்துக் காண்பிப்பவர். சதா வதைப்பவர். ஊரே போற்றும் அவள் அழகைப் புகழ மறுப்பவர். ரோகிணி முதல்முதலாக அவரின் பலவீனம் தென்படும் இடத்தைக் கண்டுகொள்வது நாவலின் பின்பகுதியில் வருகிறது. அதன்பிறகு அவள் விடுதலையாக உணர்வதும் அதற்கு முன்பு வரை அவரின் அங்கீகாரத்திற்காகவும் அன்புக்காகவும் ஏங்குவதும் இந்த உறவிலுள்ள சிக்கலைக் காண்பிக்கிறது. தனக்கு அதிகாரம் இருக்கும் இடத்தில் எதற்கு தழைய வேண்டும் என அவர் நினைத்து நடந்து கொள்ளும் ஒரு முனையும், அவளுக்குப் பணிந்து சரணடைவதே மனச்சாந்தி என்ற எதிர் நிலையும் அவரை வதைத்தது என்ற இடம் ஆழமானது.
ரோகிணி அழகி, குழந்தையில்லாதவள். ரோகிணியின் அழகை ஒப்பிடும்போதும் தொந்தியும், இரட்டைத்தாடையும் கொண்ட சந்திரசேகரய்யர் புறமாக அவளுக்கு இணை வைக்க இயலாதவர். ஆனால் அவரிடம் அவள் எதிர்பார்த்தது அன்பை, உணர்வுகளை, மரியாதையை. அது கிடைக்காத குறைபாட்டை அவள் நாவலில் வெளிப்படுத்தியவாறே இருக்கிறாள். அன்பைக் கொடுப்பதில் அவருக்கு இருக்கும் அசிரத்தையை, சிக்கனத்தை அவள், “உணர்ச்சிச் சோம்பல். இந்த ஊரிலேயே இரத்த ஓட்டம் குறைவு. முகங்களைப்பார்த்தால் தெரியவில்லை. உதிரம் உறிஞ்சிவிட்டாற் போல் வெளிறிக் கிடக்கின்றனவே” என்கிறாள். அவளின் அழகுக்கு இணையாக அந்த ஊரில் இருக்கும் பிச்சாண்டியின் அழகே சித்தரிக்கப்படுகிறது. அவள் உடலின் மேலான அவனின் தாபம் இந்த நாவலின் ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டுவிடுகிறது. மாண்டவ்யரின் மனைவியை இந்திரன் காமம் கொள்ளும் கதையை பிச்சாண்டி சந்திரசேகரய்யரின் மனைவியின் மேல் காதல் கொண்ட நிகழ்வை தொடர்பு படுத்திக் கொள்ள முடிகிறது. ”எப்போதும் பரப்பிரம்மத்தை நினைத்துத் தபஸிலிருந்து கொண்டு இகபரசுகங்கள் என்றால் இன்னதென்று அறியாத இந்த ஜடத்திற்கா இந்த அழகியை பிரம்மன் கொடுத்தான்” என பிச்சாண்டி மருகுவதாக உள்ளது. சந்திரசேகரய்யரிடம் இல்லாத, ரோகிணி எதிர்பார்க்கும் குணங்கள் பிச்சாண்டியிடன் இருப்பதை அவள் பல சந்தர்ப்பங்களில் உணர்கிறாள்.
இருவருக்கும் ஓர் காதல் மலரும் தருணமென அவள் மாலையில் கோயிலில் தனிமையில் உட்கார்ந்து இயற்கையை ரசிக்கும் இடத்தில் நிகழ்கிறது. ஆனால் இந்த இடம் இன்னொரு வகையிலும் முக்கியமானதாக உள்ளது. நாவலின் அத்தனை கதைமாந்தர்களையும் இணைக்கும் வேலையை உபந்நியாசம் செய்கிறதென்றால் இந்த இயற்கை அவர்கள் அனைவரையும் கைவிடும் இடமாக உள்ளது. யதார்த்த உலகில் மனிதர்களின் பிரச்சனைகளை, உறவுச்சிக்கலை அகழ்ந்து சென்ற எழுத்தாளர்களுக்கு மத்தியில் ஒட்டுமொத்தமாக அனைத்தையும் கைவிட்டு இயற்கையை நோக்கி நின்றவளாக ரோகிணி தென்படும் இடம் இந்த நாவலின் உச்ச தருணங்களில் ஒன்றாக உள்ளது. இதில் வரும் இயற்கை வர்ணிப்பு கலையம்சம் நிறைந்ததாகவும் உள்ளது.
“இயற்கையின் அழகுதான் என்ன! இருந்தும் இதில் பச்சாதாபமில்லாத கொடுமை இருந்தது. மனிதனுடைய அற்பச் சச்சரவுகளை அசட்டை செய்வதுப்போல் அந்த சந்தி வேளையின் நிறைவில் அப்படியொரு பற்றில்லாமை பொருந்தியிருந்தது. ஏன் மனிதன் கோபம் கொள்ளமாட்டான்? அவன் வெறுப்புக் கொண்டு கசப்புடன் உலகத்தைத் துண்டம் போட்டுக்கொண்டிருக்கும்போது, இயற்கையின் இந்தப் பற்றற்ற அழகுத்தன்மை அவனுக்குக் கோபத்தைத்தானே உண்டாக்கும்! தன் தாபங்களைப் பற்றி அன்னைக்குச் சிறிதும் அக்கறை கிடையாதென்றால் சீற்றல் அடையமாட்டானா?…”
வாஸவேச்வரம் என்ற ஊர் மொத்தமும் மரபு, ஒழுங்கு, முறை வாழ்க்கை என பிணைந்து கிடக்கும்போது அங்கு சுதந்திர வாழ்க்கை, கூட்டுறவு வாழ்க்கை, பொதுவுடைமை தத்துவம் என லட்சியங்களுக்காக உயிரைத் தியாகம் செய்யும் இளஞர் கும்பலுக்கு கதாநாயகனாக பிச்சாண்டி இருக்கிறான். பிச்சாண்டி பற்றி புறமாகவும், அகமாகவும் ஒரு நாயக பிம்பத்தைக் கிருத்திகா நாவலில் ஆங்காங்கே சொல்லிக் கொண்டே இருக்கிறார். மாற்றத்தை நோக்கி கிளர்ச்சியுடன் செயல்பட்டுக் கொண்டிருந்த பிச்சாண்டி கிராமமே மொத்தமாக சச்சரவில் இருக்கும் தருவாயில் அதன் அற்பத்தனத்தைக் கண்டுகொள்ளும் தருணம் அவன் அனைத்தையும் கைவிடத்துணியும் திருப்புமுனையாக அமைகிறது.
அம்பிமாமா, பாட்டா, சுந்தா, விச்சு, அம்மாளுப்பாட்டி, தங்கம், மீனாக்கா போன்ற பல சிறிய பாத்திரங்கள் வழியாகவும் மனித மனத்தின் ஆழம்; அதில் உறைந்திருக்கும் ஆணவம், சூது, வன்மம், குரூரம், விழைவு ஆகியவற்றையே வெளிப்படுத்தியிருக்கிறார்.
*
கிருத்திகா இதழ்களில் தொடர் கதையாக எழுதி அதன்பின் நாவலைப் பதிப்பித்தவர் இல்லை. எழுதியபின் நேரடியாக நாவல்களைப் பதிப்பித்தவர். இதுவே இந்த நாவலின் ஒருமைக்கு முக்கியமான காரணமாக அமைகிறது. வாஸவேச்வரம் நாவலின் வடிவத்தைப் பொருத்து ’பிரம்மதேவனின் விளையாட்டு’, ’இந்திரதேவனின் தாபம்’, ’மாண்டவர் சாபம்’ என மூன்று பகுதிகளாக பெயரிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு தனிப்பண்பு உள்ளது. இது ஒன்று, இரண்டு என அடுக்கிச் செல்லும் வழமையான எளிய யதார்த்தவாத நாவல்களிலிருந்து வேறுபட்டுள்ளது. பகுதியின் பெயர்களே அதை தொன்மக்கதையுடன் இன்னும் ஆழமாக தொடர்புறுத்துவதையும் பார்க்கலாம். வாஸவேச்வரத்தின் மொழியை எழுத்தாளர் மகரம் நாகர்கோயில் பக்கத்து மலையாளம் கலந்த கொச்சை பிராமண மொழி என்று குறிப்பிடுகிறார். ஆனால் இந்த மொழி இக்காலகட்டத்து வாசகர்களுக்கும் சரளமாகப் புரியும்படியான ஒரு தனி இலக்கிய மொழியைக் கொண்டிருக்கிறது. அதுவே நாவலுக்கு வேகத்தை அளிக்கிறது.
3
இந்திய தத்துவச்சிந்தனை மரபில் மையமான ஞானக்கொள்கைகளில் ஒன்றான வேதாந்த மரபுப்படி ‘பிரம்மம்’ என்னும் முழுமுதற்பொருள் ஒரே மெய்யாக முன்வைக்கப்படுகிறது. உயிர்களுக்குள் இருக்கும் ஆத்மா, பிரம்மத்தின் ஒரு வடிவமே என்றும் இது கூறுகிறது. பிரம்மத்தை முழுமை எனக் கொண்டால் ஆத்மாக்களை அதன் ஒரு கூறாகக் கொள்ளலாம். இலக்கியப் படைப்புகளில் செவ்வியல் அம்சம் உடையவற்றை நாம் வேதாந்த தத்துவத்தின் பிரம்மத்திற்கு இணை வைக்கலாம். முன்னொட்டுகள் கொண்ட எழுத்துக்களை (எ.கா. பெண்-எழுத்து) முழுமையின் ஒரு கூறாக முன் வைக்கலாம்.
நீலி மின்னிதழ் தொடங்கப்பட்டு (2022) பெண் எழுத்தாளர்களுக்கான ரசனை விமர்சனக் கட்டுரைகள் வெளிவர ஆரம்பித்தபின், விமர்சகர்கள் வகுத்த நவீனத்துவ அழகியலின்படி அக்காலகட்டத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர்கள் எழுதாத காரணத்தினால் தான் அவர்கள் இலக்கிய முன்னோடிகள் குறிப்பிடும் புனித நூல் தொகை/ எழுத்தாளர் பட்டியலில் இடபெறவில்லை என்ற எண்ணம் வந்தது. நவீனத்துவ எழுத்தாளர்களின் மதிப்பீட்டு வரையறையில் சிக்கல் இருந்ததால் தான் பெண் படைப்புகள் சரியாக மதிப்பிடப்படவில்லை என்றும் தோன்றியது. அதனால் தான் பெண் எழுத்தாளர்களின் படைப்புகளில் ’பெண் படைப்புகளை மதிப்பிடுவதற்கான தனிக் கூறுகளை’ ஆராய்ந்து அதன் தன்மைகளை பட்டியலிட முனைந்தோம். பெரும்பான்மையான பெண் எழுத்தாளர்கள் நவீனத்துவ அழகியலுக்கு எதிர்த்திசையில் அமைந்த மனிதர்களின் இயல்பான நன்மை, அறம், உணர்வுச்சிக்கல், மரபையும், பண்பாட்டையும் கைவிடாத தன்மை, காந்தியம், தனிமனிதர்/சுயநலம் என்பதை மறுத்து குடும்ப, சமுதாய நலன் சார்ந்த ஈடுபாடு ஆகியவற்றைக் கொண்டிருந்ததை இப்பயணத்தில் கண்டறிந்தோம். இத்தன்மையினால் தான் பெண் எழுத்தாளர்கள் அந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை என்ற முடிவுக்கும் வந்தோம்.
ஆனால் நவீனத்துவ எழுத்தாளர்களுக்கு இணையாக/சில எழுத்தாளர்களை விடவும் ஒரு படி கூடுதலாக எழுதிய கிருத்திகா கூட தொடர்ச்சியாக இலக்கிய முன்னோடிகள் வரிசையில், விமர்சன மரபால் தொடர்ந்து முன்வைக்கப்படாமல் இருந்து வந்ததை எப்படி எதிர்கொள்வது என்பது கேள்வியாக இக்கணம் எஞ்சுகிறது. எனில் இந்தத் தேர்வு நவீனத்துவ கருத்துவாதம் சார்ந்ததல்ல. மாறாக இது சமூக பொதுப்புத்தியின் ஒரு கூறுதான் எனலாமா? கிருத்திகாவை தங்கள் முன்னோடி எழுத்தாளராக வரித்துக் கொள்ளாத விமர்சகர்கள் அனைவர் முன்னும் இக்கேள்வியை முன்வைக்க விரும்புகிறேன். இத்தகைய விடுபடல்கள் இலக்கியத்தின் முழுமையைப் பார்ப்பதற்கான பார்வைக்கோணத்தை மழுங்கடிக்கச்செய்யும்.

இன்றைய சூழலில் பெண் எழுத்துக்களை நாம் ’பெண் எழுத்து’ என்று அடையாளப்படுத்துவது போலவே ஆண் எழுத்துக்களையும் அடையாளப்படுத்த வேண்டும் என்று தோன்றுகிறது. ஏனெனில் ஒரு காலகட்டத்தின் மாஸ்டர் என்று சொல்லத்தக்க படைப்பாளிகளுடன் இணைந்து கொள்வதாலும், உரையாடலில் இருப்பதாலும் மட்டுமே தொடர்ந்து முன்வைக்கப்படும் ஆண் எழுத்தாளர்கள் தங்களை அந்த உரையாடலின், காலகட்டத்தின் படைப்புகளை ஒட்டி தங்கள் படைப்புகளுக்கான மதிப்பீடுகளை அந்த உயரத்தை எட்டாமலேயே உருவாக்கிக் கொள்கிறார்கள் என்று தோன்றுகிறது. இதனால் தாங்கள் ஆண் எழுத்தின் ஒரு பகுதியாகவே இருக்கிறோம் அல்லது ஆண் என்ற தன்னிலையிலிருந்து தான் எழுதியிருக்கிறோம் என்ற பிரக்ஞையின்றி தங்களை தாங்கள் உத்தேசித்த செவ்வியல் படைப்பாளிகளுடன் இணைத்துக் கொள்ளும் போக்கு உள்ளது. தன்னிலை சார்ந்த பிரக்ஞை மற்றும் பிரகடனப்படுத்தல் அதற்கான தனி அழகியலை உருவாக்கவல்லது. அது நேர்மறையானதும் கூட. ஒருவேளை எந்தத் தன்னிலை சார்ந்தும் எழுதாதவராக இருக்கும் பட்சத்தில் அந்தப்படைப்பு எந்த அளவுக்கு முழுமை அம்சத்திலிருந்து குறைவுப்பட்டுள்ளது என்ற மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
உடன் ஒன்றைச் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்தத் தன்னிலை சார்ந்த எழுத்துக்கள் ஒரு போதும் கீழ்நிலை இல்லை. மாறாக இந்த எழுத்தின் வழியாகவும் முழுமை என்ற அம்சத்தை அடைய இயலும் என்ற புரிதல் வேண்டும். அதன் வழியாக உச்சம் தொட்ட படைப்புகள் அதன் பின்னர் வரும் படைப்புகளுக்கு அளவுகோலாக அமைய வேண்டும். இந்தப் பல்வேறு அம்சங்கள் இணைந்தே இலக்கியத்தை செழுமை/முழுமையடையச் செய்கின்றன என்று தோன்றுகிறது.
அந்தவகையில் வாஸவேச்வரம் நாவல் வழியாகவே கிருத்திகா தமிழ் இலக்கிய விமர்சன மரபில் நவீனத்துவ முன்னோடி எழுத்தாளர்களின் பட்டியலில் வைக்கப்பட வேண்டியவர். வாஸவேச்வரம் நாவல் கிருத்திகாவை மேலும் அறிந்து கொள்ளும் ஆவலை அளிக்கிறது. அவரின் பிற படைப்புகள் வாசிக்கப்பட்டு முழுமையாக மதிப்பிடப்பட வேண்டும். இந்த ஆண்டின் சிறப்பிதழ் (நவம்பர் 2026) எழுத்தாளர் கிருத்திகா சிறப்பிதழாக வரும்.
*
