பெண் என உணரும் தனிமை – ஜெயமோகன்

(கவிஞர் க்ருஷாங்கினியின் பறத்தல் அதனதன் சுதந்திரம் தொகுப்பு நூலை முன்வைத்து)

*

தொகுப்பு நூல்

பெண் கவிஞர்களின் குரல்கள் சீண்டப்பட்ட மென்மையான மனங்களின் குரலாக வெளிப்படுகிறது

ஜெயமோகன்

பறத்தல் அதன் சுதந்திரம் – தொகுப்பாசிரியர்: க்ருஷாங்கினி; வெளியீடு: காவ்யா, 16, 17வது இ கிராஸ் தெரு, இந்திரா நகர் 2வது ஸ்டேஜ், பெங்களூர்-38; பக்: 216, விலை: ரூ.100.

ஐம்பத்திரண்டு பெண் கவிஞர்கள் எழுதிய 100 கவிதைகளின் தொகுப்பு இது. சில பெண் கவிஞர்கள் இப்படி அடையாளப்படுத்தித் தொகுப்பதில் தங்களுக்கு உடன்பாடில்லை என்று கூறி மறுத்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. அது துரதிர்ஷ்டவசமானது. எந்தக் கவிதையும் ஒப்பிடப்படுவதற்கு சாத்தியமற்ற முறையில் தனித்துவம் உடையதே. அதே சமயம் தொடர்ந்து ஒப்பிடப்பட்டு தொகுத்துப் பகுக்கப்பட்டுத்தான் அவற்றை வாசிப்பது சாத்தியமாகும். கவிதை தோன்றிய நாள் முதல் இந்த முரணியக்கம் இருந்து வருகிறது.

பெண் கவிஞர் என்பது வாசிப்பின் மூலம் ஒரு வசதிக்காக சுமத்தப்படும் அடையாளம் மட்டுமே. இந்தத் தொகுப்பையே குடும்ப வாழ்வைப் பேசும் கவிதைகள், பாலுறவுக் கவிதைகள் என மேலும் பகுக்கலாம்.

எந்த நல்ல கவிதையும் அடையாளப்படுத்துதல் மூலம் முழுமையாக வகுப்பட்டு வருவதில்லை. பெண் கவிதை என்று பிரித்து வகுத்து ஆராயவேண்டிய தேவை, இன்றைய வாசிப்புச் சூழலில் உள்ளது. இந்தத் தொகுப்பு அவ்வகையில் முக்கியமானது; வரவேற்புக்குரியது. பெண்களின் உரிமைகளுக்கான குரல், இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் யாழ்ப்பாணம் மங்களத்தம்மாள் (தமிழ் மகள்), வை.மு. கோதைநாயகி அம்மாள் (ஜெகன்மோகினி) ஆகியோரினூடாக எழுந்து இன்று விரிவு பெற்றுள்ள ஒன்று. இந்தப் பெரும் சமூக இயக்கத்தில் ஒரு பகுதியே இந்தக் கவிதைகள் ஆற்றும் ஒட்டுமொத்தப் பணி. பெண்களின் உடல் மற்றும் உணர்வுரீதியான விடுதலைக்கான குரல் இவற்றின் பொதுச்சரடாக உள்ளது.

அதே சமயம், கவிதை என்ற இலக்கிய வடிவம் அதன் தனிப்பட்ட இலக்கியப் பணியை ஆற்றும்போதே இயக்கம் கொள்கிறது. மிகப் பொதுவாக அதை இப்படி வகுக்கலாம்: பிற கூறல் முறைகளின் மூலம் சாத்தியப்படாத நுட்பமான வெளிப்பாடு ஒன்றை நிகழ்த்துதல். மொழியின் தோற்ற மாறுபாடுகள் மூலம் அர்த்தங்களையும் உணர்வுகளையும் குறிப்புணர்த்த முயலுதல் என்று அதை மேலும் விளக்கலாம். அந்த வகையில் பார்த்தால் இந்தக் கவிதைகளில் பெரும்பாலானவை எளிதாகவும், உடனடியாகவும் கூறிவிடும் வசதிக்காக மட்டும் கவிதை வடிவை தெரிவு செய்தவை என்று படுகிறது. இவற்றிலுள்ள வாழ்க்கை விமர்சனம், அக அவதானிப்பு ஆகியவை மேலும் உக்கிரமாக வெளிப்படுவது இவை கவிதையாக ஆனதன் மூலம் தடைபடுகிறதோ என்றுகூட படுகிறது. ‘பிரிதலும் பிரிதல் நிமித்தமும்’, ‘கழுகு’, ‘படித்த கால இரவொன்றின்…’ முதலியவற்றை உதாரணமாகக் கூறலாம். மிகப் பெரும்பாலான கவிதைகளை அந்தரங்கமான டைரிக் குறிப்புகள் என்று மட்டுமே கூற முடியும். இருபத்தெட்டு வருடங்களுக்கு முன்பு எழுதியமைக்காக கணவனால் துரத்தப்பட்ட என் உறவுக்காரப் பெண்மணியின் கதையைப் பின்பு நான் எழுதியிருக்கிறேன் (தேவகி சித்தியின் டைரி). இன்று டைரிகள் பிரசுரமாகின்றன என்பது ஒரு புரட்சியே. ஆயினும் அவை டைரிகளே. டைரிக்கு அப்பால் ஒரேயொரு மனித முகம் மட்டுமே உள்ளது; கவிதைக்கு அப்பால் வாழ்க்கை வெளியாகத் ததும்பும் முகங்கள். சிறந்த கவிதை உக்கிரத்தை மிகையின்றி வெளிப்படுத்தும் சகஜத் தன்மையைக் கொண்டிருக்கும். கவிஞரின் அகமனம் ஆரற்றும் மொழிக்கு அதே கவிமொழி சென்று சேரும் நிலை அது. தொடர்ந்த பயிற்சியும் அதற்குத் தேவை. இந்தப் பெண் கவிஞர்களின் கவிமொழி பெரும்பாலும் பலவகை எதிரொலிகள் கலந்த, பயிற்சி பெற்ற தடுமாறும் மொழியாக உள்ளது. விதிவிலக்கு சுகந்தி சுப்பிரமணியனின் கவிதைகள். குறிப்பாக, ‘செடிகள்’ என்ற கவிதை, உக்கிரம் மிக்க கவிதைகளுக்கே உரிய அபூர்வமான எளிமையைக் கொண்டிருக்கிறது.

மாலதி மைத்ரி, சல்மா, குட்டி ரேவதி ஆகியோரின் கவிதைகளையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். வடிவக் கூர்மையும் தீவிரமும் உடைய இந்தக் கவிதைகள் பழைய உருவக மொழியைத் தெரிவு செய்திருப்பது வாசகப் பங்கேற்புக்குச் சற்று தடையாக அமைகிறது. தொகுப்பில் சற்று கவனம் செலுத்தப்பட்டிருக்கலாம். உதாரணம், பிரியம் என்ற பெயரில் எழுதுபவர் ஆண் என்று எண்ணுகிறேன். மாலதி மைத்ரியின் தொகுப்புரை மிக முக்கியமானது. அதே சமயம், கவிதையை ஒரு கருத்தியல் உற்பத்தியாக மட்டும் காணும் வ. கீதாவின் தட்டையான முன்னுரை சலிப்பைத் தருகிறது.

க்ருஷாங்கினி

இந்தத் தொகுப்பின் கவிதைகளைக் கூர்ந்து படிக்கும்போது சீண்டப்பட்ட மென்மையான மனங்கள் தெரிவது போல உள்ளது. பெரும் படைப்பாளிகள் பிறர்மீது படரும் ஆணவம் மிக்க ஆளுமை உடையவர்கள் – கேரளத்து கமலா தாஸ் போல. அத்தகைய படைப்பாளிகளுக்கு இத்தகைய வெளிப்பாட்டுச் சூழல் வழியமைத்துத் தர வேண்டும்.

‘இந்தியா டுடே’, ஜூலை 24, 2002

[‘இந்தியா டுடே’ இதழுக்கும் இந்த மதிப்புரையைத் தந்து உதவிய ஶ்ரீநிவாச கோபாலனுக்கும் நன்றி.]

*

ஜெயமோகன்

*

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *