பெண் தன்னை எழுதுதல் – ரம்யா

(முத்தம்மாள் பழனிச்சாமியின் நாடுவிட்டு நாடு, அழகிய நாயகி அம்மாளின் கவலை, பாரததேவியின் நிலாக்கள் தூரதூரமாக ஆகிய மூன்று தன் வரலாற்று நாவல்களை முன்வைத்து…)

தன்வரலாற்று நாவல்கள்

இளமை புனைவை விட “உண்மை”யை விரும்பத் தலைப்படுகிறது. அறுபதுகளுக்குப் பின் தமிழகத்தில் பிறந்த குழந்தைகள் அனைவரும் தன் இளமையில் இயல்பாக அறிவது திராவிடச் சிந்தனையைத் தான். இன்னும் சிலர் இடதுசாரிச் சிந்தனையை. மிக அரிதாக காந்தியச் சிந்தனையை. இளமை துடிப்பு மிக்கது. ஆண் தன்மையது. அது எப்போதும் தன்னை முன்னிறுத்துவது. தன்னைக் கண்டடையும் பயணத்தில் இந்தச் செயல்பாடு இயல்பானது தான். இன்று ஆண்-பெண் இருபாலருக்கும் இது பொருந்தும். பெண்கள் இந்தச் சிந்தனையை புத்தாயிரம் ஆண்டுகளுக்குள் பெரும்பான்மை அடைந்துவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். எழுபதுகளிலிருந்து தொண்ணூறுகளில் பிறந்த குழந்தைகளுக்கு ”பொருளாதாரச் சுதந்திரம்/தன்னிறைவு” என்பதே இளமையில் முதல் குறிக்கோளாக அமைந்தது. எனவே புனைவுகளை விட அபுனைவு நூல்களே அவர்களின் அலமாரிகளை (இருந்த பட்சத்தில்) ஆக்கிரமித்திருந்தன. சற்று அதிலிருந்து மேலெழுந்து தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் வாசிப்பது தன்வரலாற்று நூல்களையே. தமிழக பதின்பருவ புத்தகச் சந்தையை முதன்மையாக ஆக்கிரமிப்பவையும் அவையே. தன்வரலாற்று நூல்கள் பெரும்பாலும் ஓர் உச்சமான ஆளுமையை அறிந்து கொள்வதையே மைய நோக்காகக் கொண்டிருக்கும். அதனூடாக அக்காலகட்டத்தின் அரசியல், பொருளாதார, சமூகச் சூழலை அறிந்து கொள்ள ஏதுவாக வடிவமைக்கப்பட்டிருக்கும். உடன் வாழ்வில் முன்னேறுவதற்கான விழுமியங்களை பறைசாற்றுவனவாக அவை அமைந்திருக்கும்.

இயல்பாக நானும் அவ்வாறு தான் என் இளமையில் தன்வரலாற்று நூல்களுக்கு அறிமுகமாகியிருந்தேன். என் விருப்பத்திற்குரிய நூலாக “அக்னி சிறகுகள்” இருந்ததை இப்போது நினைவுகூர்கிறேன். கணிதப்பாடத்தில் தோல்வியுற்று சோர்ந்திருந்த வேளை “ஏறக்குறைய குப்பைத்தொட்டியில் எறியப்பட்ட மாணவனுடைய நிலைமை” என்ற இடத்திலிருந்து தான் கனவாகக் கண்ட வாழ்க்கை இலக்கு அமையாமல் இந்த வாழ்க்கை தன் கனவுகளை அவரில் ஏற்றி வைத்து அழகு பார்த்த அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறு என் இளமைக்கு பெரிய உந்துதலாக இருந்தது. நாம் எத்தனை பிரயத்தனப்பட்டாலும் வாழ்க்கை நம்மை வழி நடத்திக் கொண்டு போகும் என்ற சிந்தனையை அதன் வழியாகவே முதலில் அடைந்தேன். அப்படித்தான் தமிழக இளைஞர்களுக்கு பாரதியும், அம்பேத்காரும், பெரியாரும், விவேகானந்தரும் அறிமுகமாகின்றனர். அவர்களின் சித்தாந்தங்கள் உதிரி வரிகளாக நம்மைச் சூழ்ந்து கொள்கின்றன. பேராளுமைகள் நம் இளமையின் கனவுகளை நிறைப்பது இத்தகைய தன் வரலாற்று நூல்கள் வழியாகவும், இந்த உதிரி வரிகளின் தொடர் தாக்கங்களாலும் தான். பெரும்பாலும் இந்த வரலாற்று நாயகர்கள், தலைவர்கள் ஆண் தன்மை கொண்டவர்கள் என இன்று தோன்றுகிறது. விழைவை நோக்கி நம்மை முடுக்க, வாழ்வில் எதையேனும் பற்றிக் கொள்ள இவர்கள் அப்போது தேவைப்படுகிறார்கள். சற்று ஆன்மிகத் தேடல் கொண்டவர்கள் ஜிட்டுவையும், ஓஷோவயும் அறிந்து கொள்கின்றனர். ஆன்மிகம் நோக்கிய முதல் தேடல் ஆரம்பித்த கணம் தான் பெண் தன்மையை நோக்கிய நம் ஆன்மாவின் முதல் காலடிவைப்பு எனலாம்.

பெரும்பான்மையான தமிழக இளைஞர்களைப் போல நான் காந்தியைப் பற்றிய எதிர்மறைக் கருத்துக்களைக் கொண்டிருந்ததால் ”சத்திய சோதனை” நூலை இந்த தன் வரலாற்று நூல்பட்டியலில் முதலில் தவிர்த்திருந்தேன். ஆனால் அந்த நூலின் ஒரு பகுதி என் பத்தாம்வகுப்பு பாடத்திட்டமாக இருந்தது. அப்போது கூட “கெட்டில்” என்ற அந்தச் சொல்லை ஆசிரியர் சொல்லியும் பார்த்து எழுதாத காந்தி மீது சற்று எள்ளலே இருந்தது. காந்தியச் சிந்தனை பெரும்பான்மையான தமிழ்க் குழந்தைகளுக்கு எதிர்மறையாக அறிமுகப்படுத்தப்படுவதற்குக் காரணம் நம் சமூகத்தில் நிலவும் ஆண் தன்மைய நோக்கு தான் என இன்று தோன்றுகிறது. அவர் உருவிலும், செயலிலும் தென்படும் பெண் தன்மை தான் நம்மை இயல்பாக அங்கிருந்து தவிர்க்கச் செய்திருக்கிறது. ஆனால் முதிர்ச்சியில் நாம் காந்திக்கு அணுக்கமாகிறோம். பெண் தன்மையை நோக்கிய நகர்வில் ஓர் உலுக்கலுடன் அவரைப் பற்றிக் கொள்கிறோம். ஒரு கட்டத்திற்கு மேல் ஓர் சமன்வயத்தில் வந்து சேர்கிறோம். அதன்பிறகு முரணியக்கங்கள் வழியாகவே இந்த உலகம் உய்த்திருப்பதை கண்கலங்கியபடி நோக்கி அமைந்து வெறுமே கவனிக்க ஆரம்பிக்கிறோம்.

இலக்கியத்தைப் பொறுத்து இந்த அமைவை செவ்வியலை நோக்கிய பாதையாக உருவகிக்கலாம். திராவிடச் சிந்தனையும், இடதுசாரி சிந்தனையும் அறிமுகமாகி முடுக்கப்பட்ட இளைஞர்கள் இயல்பாக இலக்கியத்தில் அறிமுகப்படுத்திக் கொள்வது பாரதியையும், ஜெயகாந்தனையும். குடிமைப்பணித்தேர்வுக்காக தமிழ் இலக்கியத்தை பாடத்திட்டமாக எடுத்தவர்கள் நாவல் வகைமையில் வாசிக்க வேண்டிய ஞானபீட விருது பெற்ற அகிலனின் சித்திரப்பாவையை வாசித்தபோது நல்ல வேளையாக புனைவுகளை வாசித்து நேரத்தை வீணடிக்கவில்லை என்ற ஆசுவாசத்தையே அடைந்தேன். ஆனால் அதே பாடத்தில் இருந்த குருபீடம் சிறுகதைத்தொகுப்பு (ஜெயகாந்தன்) வாழ்வின் சில இழைகளைத் தொட்டுக் காண்பித்தபோது ஏதோ நான் அவரிடம் கற்றுக் கொள்ள சில இருப்பதாக நினைத்தேன். மெல்ல நண்பர்கள் வழியாக ஜெயமோகன் அறிமுகமானபோது அவரின் “அறம்” சிறுகதைகளை வாசிக்க ஆரம்பித்தேன். அது ”உண்மை மனிதர்களின்” கதைகள் என்பது மட்டுமே அதை வாசிக்கக் காரணம். அதனால் உந்தப்பட்டு அவரின் புனைவுகள் வழியாக நவீனத் தமிழ் இலக்கியத்தை அறிமுகம் செய்து கொண்டபோது தான் ஓர் பெரிய தமிழின் சிந்தனை மரபு மறைக்கப்பட்டிருந்ததாக உணர்ந்தேன். அவரின் சிந்தனைகள் வழியாக காந்தியை அறிமுகப்படுத்திக் கொண்ட போது எந்த தன்வரலாற்று நூல்களையும் விட அதை முக்கியமானதாகப் பார்த்தேன்.

எனில் இளமையிலேயே தீவிர இலக்கியத்தை சரியாக அறிமுகப்படுத்திக் கொண்டவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்றே நினைக்கிறேன். தேடல் கொண்ட இளைஞர்கள் அனைவரும் பாரதி தொடங்கி பாரதிதாசன், அகிலன், ந. காமராசன், ஜெயகாந்தன் என்ற வரிசியை அடையாமல், பாரதி தொடங்கி புதுமைப்பித்தன், க.நா.சு, சி.சு.செல்லப்பா, ஆர்.சூடாமணி, கி.ராஜநாராயணன், கு.அழகிரிசாமி, கிருத்திகா என்ற வரிசை வழியாக ஜெயகாந்தனை அடைந்து மேலெழும் பயணத்தை மேற்கொள்ளும் வகையை ஏற்படுத்த வேண்டியது தமிழ்ச்சூழலில் அவசியம் என்று நினைக்கிறேன்.

தீவிர இலக்கியப் புனைவுகளை அறிமுகப்படுத்திக் கொண்டபின் புதிய தன் வரலாறுகள் நமக்கு அறிமுகமாகின்றன. சாதரண வாழ்க்கை வாழ்ந்த மனிதர்கள் கூட தன் வரலாறு எழுதத் தகுதியானவர்கள் என்பதை அப்போது தான் உணர ஆரம்பிக்கிறோம். வரலாற்றில் இன்று சாமானியப் பார்வையில் சொல்லப்பட்ட வரலாறு அது அளிக்கும் இன்னொரு பரிமாணத்தின் வழி முக்கியத்துவம் பெற்றுள்ளது. நாட்டார் கதைப்பாடல்கள் போல, சொலவடைகள் போல அது அமரத்துவமான ஒன்றை சுட்டிக் காட்டுகையில் மேலும் அதன் முக்கியத்துவத்தை உணர ஆரம்பிக்கிறோம்.

சற்று நவீனத்துவ எழுத்தாளர்களை தொகுத்து நோக்கினால் அவர்களில் கனவும், கற்பனையும் மிகாத ஓர் யதார்த்தவாதம் சார்ந்த எழுத்து மிகுந்திருப்பதைப் பார்க்கலாம். அதனால் தான் கி.ராஜ நாராயணன் (கோவில்பட்டி), கு.அழகிரிசாமி (இடைச்செவல்), அ. மாதவன் (சாலைத்தெரு), தி. ஜானகிரானனின் (கும்பகோணம்) எழுத்துக்களை வாசிப்பவர்களால் அவர்களின் புனைவு நிகழ்ந்த கதைக்களம் சார்ந்த பயணத்தைச் செய்து பார்க்க முடிகிறது. தொண்ணூறுகளில் எழுதப்பட்ட யதார்த்தவாத எழுத்தாளர்களின் வரிசையையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். ஒப்புநோக்க ஆரம்பகட்ட பெண் எழுத்தாளர்களின் நாவல்கள் வெளியை விடவும் அகம் சார்ந்ததாக அமைந்திருந்ததைப் பார்க்க முடிகிறது. அங்கு நம்மால் செய்ய இயல்வது அகம் சார்ந்த பயணத்தை மட்டுமே. கமலா விருத்தாச்சலம், விந்தியா, சரோஜா ராம மூர்த்தி தொடங்கி உமா மகேஸ்வரி வரை அவர்களின் புனைவுகள் வழியாக நாம் சந்திப்பது பல்வேறு மனித அகங்களின் அடுக்குகளை மட்டும் தான். மிக விரிவாக பெண்ணின் மனங்களை. வெளி பெருமளவு நிதர்சனத்தில் அவர்களுக்கு மறுக்கப்பட்டதும், அக உலகத்தை உச்சமாக வெளிப்படுத்தச் சாத்தியமான கற்பனாவாத எழுத்துக்களை நவீனத்துவ விமர்சனப் போக்கு மறுதலித்ததும் வெளியை அவர்கள் கையாளமல் இருண்டஹ்தற்கான காரணமாகச் சொல்லலாம். மிகை யதார்த்தங்கள் பெருமளவு நவீனத்துவ எழுத்தாளர்களால் விரும்பப்படாமல் இருந்தததற்கு நம் அரசியலும், சூழலும் கூட பெரிய தாக்கத்தைச் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் முயற்சிகள் நடந்துள்ளது என்பதை புதுமைப்பித்தனின் சிறுகதை முயற்சிகள், க.நா.சு-வின் மொழியாகக் முயற்சிகள் (கில்கமெஷ்) மூலம் அறிந்து கொள்ளலாம்.

எவ்வகையிலேனும் ”யதார்த்தவாதம்” என்பது தமிழில் தவிர்க்க முடியாத ஒன்றாக ’இருந்தது’ என்பது நிதர்சனம். இந்தச் சூழலில் தன் வரலாறுகள் என்பவை சற்று வடிவப் பிரக்ஞையற்ற யதார்த்தவாத நாவல் என்று மட்டும் சொல்லிவிட இயலுமா? அவற்றில் பெண் தன்வரலாறுகளின் இடம் என்ன? ஆகிய கேள்விகளை இப்போது எழுப்பிக் கொள்ளலாம்.

*

தமிழின் முதல் தன் வரலாற்று நூலாக உ.வே.சாமிநாதய்யரின் “என் சரித்திரம்” நூலைச் சொல்லலாம். ஆனந்தரங்கம்பிள்ளையின் “தினப்படி செய்திக்குறிப்பு” (1736-61) அதற்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தது. இதில் முதலாவது ஓர் அறிஞரின் வாழ்வை, அவரின் தேடலைத் தெரிந்து கொள்வதை நோக்கமாகக் கொண்டது. இரண்டாவது வரலாற்றை அறிந்து கொள்வதை மையமாகக் கொண்டது. தவிரவும் நாடக ஆளுமைகளில் பம்மல் சம்பந்த முதலியாரின் ’நாடக மேடை’; டி.கே. ஷண்முகத்தின் ’எனது நாடக வாழ்க்கை’ போன்றவை அக்காலகட்டத்தின் (20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) நாடக உலகை அறிந்து கொள்ள உதவுகிறது. இது தவிரவும் அரசியல் தலைவர்கள் எழுதிய தன் வரலாற்று நூல்கள் (ரெட்டைமலை சீனிவாசனின் ஜீவித சரிதம்; எனது வாழ்க்கைப் பயணம் கோவை அய்யாமுத்து, முத்துலட்சுமி ரெட்டியின் சுயசரிதை) படிக்கக் கிடைக்கின்றன. இலக்கிய ஆளுமைகள் எழுதிய தன் வரலாற்றுப் புனைவு நாவல்களில் சுதந்திரதாகம் (சி.சு.செல்லப்பா); காதுகள் (எம்.வி.வெங்கட்ராம்); தேரோடும் வீதி (நீலபத்மநாபன்); உறவுகள் (நீல பத்மநாபன்), சிலுவை ராஜ் சரித்திரம் (ராஜ் கெளதமன்), கருக்கு (பாமா) ஆகியவை குறிப்பிடத்தகுந்தவையாக நிலை கொண்டுவிட்டன. பெண் எழுத்தாளர்கள் நவீனத்துவ காலகட்டம் தொடங்கி தன் வரலாற்றைப் புனைவாகவும், அபுனைவாகவும் எழுதி இருந்திருக்கிறார்கள். சமீபத்தில் எழுத்தாளர் அம்பை விசாலாட்சிஅம்மாள் ”ஒரு ஐக்கியக் குடும்பச் சரித்திரம்” என்ற தன் தன்வரலாற்று நூலைக் கொணர்ந்ததை உதாரணமாகச் சொல்லலாம்.

இந்தப் பெண் தன் வரலாற்று நூல்களில் ”முத்தம்மாள் பழனிச்சாமியின் நாடுவிட்டு நாடு, அழகிய நாயகி அம்மாளின் கவலை, பாரததேவியின் நிலாக்கள் தூரதூரமாக” ஆகிய நூல்களில் உள்ள ஒற்றுமை என்பது இந்த நூல்களை எழுதியவர்கள் தாங்கள் எழுதிய தன் வரலாற்று நூலினால் மட்டுமே முதன்மையாக அறியப்பட்டவர்கள். அவர்களின் ஆடையாளம் என்பது இந்த தன் வரலாற்று நூல் தான். பொதுச்சூழலைவிடவும் தீவிர இலக்கியச் சூழலில், சமூகவியல் ஆய்வாளர்கள் மத்தியில் இவை ஏன் முக்கியத்துவம் அடைந்துள்ளது? இவற்றைத் தன்வரலாற்று நூல்கள் என்பதை விடவும் தன்வரலாற்று நாவல்கள் என்ற வகைமைக்குள் ஏன் வைக்கிறோம்? இவை பெண் எழுத்து என்ற வகைமைக்கும் ஒட்டுமொத்தமாக தீவிர இலக்கியத்திற்கும் செய்யும் பங்களிப்பு என்ன? என்ற கேள்விகளை அடுத்ததாக எழுப்பிக் கொள்ளலாம்.

*

முத்தம்மாள் பழனிச்சாமியின் “நாடு விட்டு நாடு” புலம் பெயர் எழுத்தில் எழுதப்பட்ட பெண் தன்வரலாற்று நூல்களில் முக்கியமானது. அவ்வாறான இன்னொன்று தமிழினியின் ’கூர் வாளின் நிழலில்’. இதில் முத்தம்மாள் பழனிச்சாமி அவர் எழுதிய தன் வரலாற்று நாவலுக்காக மட்டுமே நினைவுகூரப்படுகிறார். தமிழினியின் நூல் விடுதலைப் புலிகள், வரலாற்றுத் தகவல்கள், அவருடைய சாதனையான வாழ்க்கைப் பயணத்தின் நிமித்தம் முக்கியமானதாக உள்ளது. தன் எழுபது வயதில் 2005-ல் முத்தம்மாள் எழுதிய இந்நூலில் கோயம்பத்தூரிலிருந்து சஞ்சிக்கூலியாக மலேயா வந்து முன்னேறிய குடும்பத்தின் கதையைப் பதிவு செய்துள்ளார். இதில் கெளண்டர் சாதி வரலாறும், சாதிக்குள் இருக்கும் பிரிவுகளும், வகைமைகளும், அதன் தொன்மக் கதைகளும், சொல்லப்பட்டுள்ளது. நாடு விட்டு நாடு செல்லும் போது அந்த மனிதர்களில் மாறாத மரபு, பண்பாடு, சாதிப்பாகுபாடு சார்ந்து பார்வையாளராக நின்று எழுதிய பார்வை பதியப்பட்டுள்ளது.

முத்தம்மாள் பழனிச்சாமி

இதே காலகட்டத்தில் 2005-ல் வெளியான தன் வரலாற்று நாவல் பாரததேவி எழுதிய ”நிலாக்கள் தூர தூரமாக”. கி.ராஜநாராயணனுக்கு வாசகராக அறிமுகமாகி அவரை ஆசிரியராக ஏற்றுக் கொண்டு அவரின் தூண்டுதலால் தன் ஐம்பது வயது கடந்த காலத்தில் அவர் இந்த தன் வரலாற்று நூலை எழுதியுள்ளார். கரிசல் நிலப்பகுதியில் பிறந்து வளர்ந்த பெண்ணின் வாழ்க்கைச் சூழல், உடல் உழைப்பு, பெண் மனம், அதில் தென்படும் வைராக்கியம் என ஒரு பெரிய சித்திரத்தை இது அளிக்கிறது. அவரின் சிறு பிராயத்திலிருந்து துவங்கி பதினேழு வயதில் திருமணம் ஆவதோடு நாவல் முடிகிறது. இந்த காலகட்டத்திற்குள் நிகழ்பவற்றை முந்நூறு பக்கங்களுக்கு மேல் எழுதி முடித்துவிட முடிந்திருக்கிறது. தான் சிறுவயது முதல் வாழ்ந்த உடல் உழைப்பு வாழ்க்கையின் வலிகள், அனுபவம் வழியாக தன் சொந்தமான மாமா வீட்டில் மாப்பிள்ளை வேண்டாம் என மறுத்து ஆசிரியரான தன் கணவரை மணமுடித்துக் கொள்ளும் பாரதாவின் வாழ்க்கை பற்றிய கதை இது.

1925-ல் பிறந்த அழகியநாயகி அம்மாள் தன் ஐம்பதாவது வயதில் (1976-77 காலகட்டம்) எழுதிய தன் வரலாற்று நாவல் ‘கவலை’. சமூகவியல் ஆய்வாளர்களால் முக்கியமானதாக கருதப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கிராமத்தை கதைக்களமாகக் கொண்டது. நாடார் சாதி பற்றிய நுண் வரலாற்றுத் தகவலுடன் அச்சமூகத்தின் வாழ்வும், பண்பாடும் முதன்முறையாக தமிழில் பதிவாகியுள்ளது. இதில் கையாளப்பட்ட மொழி, சொலவடைகள், கதைகள், கதைப்பாடல்கள் ஆகியவற்றால் வட்டார நுண்வரலாற்று ஆய்வாளர்களின் கவனத்தைக் கோருவது. குடும்ப வரலாற்று ஆவணமாகக் கருதும் பார்வையும் உள்ளது. ஒரு குடும்ப/வரலாற்று ஆவணமாக முன்னோடியான முயற்சி என ஆ. சிவசுப்ரமணியம் மதிப்பிடுவதிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.

இந்த மூன்று தன் வரலாற்று நூல்களிலும் பொதுவான அம்சங்கள் என சிலவற்றைப் பட்டியலிடலாம். முதலாவது நிலம்/கதைக்களம். எந்த நிலத்தில் இந்த நிகழ்வுகள் நிகழ்கிறது என்பது பற்றிய சித்திரம் விரிவாக சொல்லப்பட்டுள்ளது. ஒப்பு நோக்க பரந்த நிலப்பரப்பைக் கண்டவராக நாம் முத்தம்மாள் பழனிச்சாமியைச் சொல்லலாம். படித்தவர், ஆசிரியை, புலம்பெயர் வாழ்க்கையை வாழ்ந்தவர். எனவே அகச்சூழலுக்கு இணையாக புறச்சூழல் சித்தரிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், மலேசியா என இரு வேறு நாடுகள் கொண்டதும் கூட. ஒப்பு நோக்க அழகிய நாயகி அம்மாளும், பாரததேவியும் ஒரே நிலத்தை தன் நாவல் முழுவதும் எழுதியுள்ளார்கள். இதில் அழகியநாயகி அம்மாளின் பெரும்பாலான நினைவுகள் பொட்டலூர் என்ற புகுந்த வீடு இருக்கும் இடத்திலும், ஈத்தாமொழி என்ற தன் பிறந்த ஊர் இருக்கும் இடத்திலும் நடக்கிறது. ஆனால் மிக விரிவாக குடும்பத்திலுள்ள ஒவ்வொரு நபர்களின் பரம்பரைச் செய்தியையும் அளிக்கிறார். அதன் வழியாக சாதிக்கான குணம், சாதியிலுள்ள உட்பிரிவுகளுக்கான குணம், ஒரு ஊருக்கான குணம், நிலத்திற்கான குணம், வம்சத்திற்கான குணம், குடும்பத்திற்கான குணம், நபர்களுக்கான குணம் ஆகியவை துலங்கி வருவதைப் பார்க்கலாம். நிலத்தின் வழியாகவும் அவர் மனித அகத்தை நோக்கிச் செல்வதைப் பார்க்கலாம்.

இரண்டாவதாக சாதி. நவீனத்துவ ஆரம்ப கட்டத்தில் பெரும்பாலும் பிரமண சாதியைச் சேர்ந்த பெண் எழுத்துக்களே அதிகம். இதற்கு மாற்றாக இந்த மூன்று தன் வரலாறுகளும் இடைச்சாதியைச் சேர்ந்த பெண்கள் எழுதியிருப்பது முக்கியமானது. முத்தம்மாள் பழனிச்சாமி தன் சாதியை, அதன் பல்வேறு இழைகளை விரிவாகச் சொன்னாலும் சற்று விலகி நின்று பார்க்கும் பார்வையை முன் வைக்கிறார். தான் வாழ்ந்த நிலத்தைப் பற்றிய பார்வையை அளிக்க அதைக் கருவியாக மட்டும் முன் வைக்கிறார். அதன் வழியாக அந்த நாவலில் வரும் மனிதர்களின் மன நிலைகளை, அவர்களின் முடிவுகளைப் புரிந்து கொள்ள அது வாய்ப்பாக அமைகிறது. முத்தம்மாள் காதலித்து கணவராக ஏற்றுக் கொண்ட ஸ்பென்ஸ் கிராண்ட் ஆப்பிரிக்க- ஐரோப்ப பின் புலத்தைச் சேர்ந்தவர் என்பதிலிருந்து இதை அறியலாம்.

ஆனால் பாரததேவி, அழகிய நாயகி அம்மாள் ஆகிய இருவரின் தன் வரலாற்றிலும் சாதி ஒரு ஒன்றிணைந்த அம்சமாக இருந்தது. அது அவர்களால் மீற முடியாத வாழ்க்கைச் சூழலையும் கொண்டிருந்ததைக் கவனிக்கலாம். பாரததேவி தன் நாவலின் ஊடுபாவக சாதி பற்றிய செய்திகளை நெய்துள்ளார். அதன் வழியாக கோனார் சாதியின் நம்பிக்கைகள், சடங்குகள், திருவிழாக்கள், உணவு முறைகள் ஆகியவை புலப்படுகின்றன. அழகிய நாயகி அம்மாள் தன் நாவலின் ஆரம்பத்தில் நாடார் சாதியைப் பற்றிய கதைப்பாடல்கள், தொன்மம், நம்பிக்கைகள் ஆகியவற்றைச் சொல்வதோடு நாடார் வகைகளைச் சொல்கிறார்.

மூவரிலும் வெளிப்படும் இன்னொன்று நாட்டார் அம்சம். முத்தம்மாளின் நாவல்களில் நாட்டார் பாடல்கள் சரலமாக வந்து கொண்டே உள்ளது. பாரததேவியின் ஒட்டுமொத்த நாவலையும் நாட்டார் வகைமையில் வைக்குமளவு அவரின் மொழியும், வாழ்வும், சொலவடைகளும், உவமைகளும் அமைந்துள்ளன. அழகிய நாயகி அம்மாளின் பலம் பக்கத்திற்கு பக்கம் சொலவடைகள் எனலாம். பாரதாவின் வழக்கு மொழியும், அழகிய நாயகி அம்மாளின் வழக்கு மொழியும் இலக்கியத்திற்குப் புது வரவு எனலாம். பெண் மொழியாகவும், வட்டார வழக்கு மொழியாகவும் இரண்டும் தனித்துவமானது.

முத்தம்மாள் படித்த பெண்ணுக்குரிய பார்வையை முன் வைக்கிறார். நாவலின் வடிவத்திலுள்ள கச்சிதம் அவர் அடுக்கும் முறைமையில் வெளிப்படுகிறது. இந்த நாவலின் பகுதிகளைப் பார்த்தால் அவரின் சட்டகத்தை உணரலாம். இது 14 அத்தியாயங்களாகப் பிரிந்துள்ளது. இந்த நாவலை ஒட்டுமொத்தமாக மூன்றாகப் பகுக்க வாய்ப்புள்ளது. முதல் பகுதி முத்தம்மாளின் வம்சாவளியின் கதை, அவர்களின் புலம்பெயர்வு, பாடுகள், வாழ்க்கை இரண்டாவது கணவர் கிராண்ட்டின் வம்சாவளிக் கதை. மூன்றாவது அதை இணைக்கும் சரடுகள். அதை இணைக்கும் சரடுகள் தொன்மமாக, நம்பிக்கையாக உள்ளது. அது அவர் இந்த புலம்பெயர்வை நோக்கிக் கேட்டுக் கொண்ட கேள்விக்கு விடையாக அவர் பெற்றது என்றும் சொல்லலாம். இறுதி அத்தியாயமான “நரிப்பழனிக் கவுண்டர்” பற்றிய கதை இந்த நாவலுக்கு முழுமையை அளிக்கிறது. முத்தம்மாளிடம் இருக்கும் விசாலமான பார்வையும், நாவலில் தென்படும் விடுதலையுணர்வும் அவர் மேற்கொண்ட பயணம், சந்தித்த பலதரப்பட்ட மனிதர்கள், நிகழ்வுகள், வாழ்க்கைச் சூழல் ஆகியவற்றால் அடைந்திருக்கலாம். தன் குடும்பம் பட்ட பாடுகளை அவர் ஓலமிடுவதில்லை. மாறாக அதைப் பற்றியே அறியாமல் சிறுமியாக இருந்த தன் உலகம் எத்தனை மகிழ்வாக இருந்தது என்பதைக் குறிப்பிடுகிறார். அதே சமயம் முத்தம்மாள் எனும் முதிர்ந்த ஆள் பிற நிகழ்வுகளை விலகி நின்று விளக்கிக் கொண்டிருப்பதையும் இணையாக நாம் உணர இயலும்.

பாரததேவி மற்றும் அழகிய நாயகி அம்மாளின் நாவல்களில் அத்தகைய பிரிவினை இல்லை. இருவருமே படிக்கவில்லையானாலும் தீவிர இலக்கிய வாசக்ர்கள் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். பாரததேவியின் நாவலில் வெளிப்படுவது ஒரு கள்ளமற்ற உள்ளம். அது இந்த உலகத்தை எதிர்கொள்ளும் விதம். அத்தனை துடுக்காக அவர் தன் வாழ்க்கையை சொல்லிக் கொண்டுபோகும் போது அடி ஆழத்தில் அதன் பாடுகளை அவரின் உடல் உழைப்பால் அறிகிறோம். அத்தனை உழைப்புக்கு மத்தியிலும் அவரின் மகிழ்ச்சிகளையும் நம்மால் பகிர்ந்து கொள்ளவும் முடிகிறது. ஓடிக் கொண்டே இருக்கும் ஒரு துள்ளலான சிறுமியின் உள்ளம் என இந்த நாவலை வரையறுக்க முடிகிறது.

அழகிய நாயகி அம்மாள்

அழகிய நாயகி அம்மாளின் நாவல் ஒரு கதார்ஸிஸ் போல ஒரு கவலையை கரைக்கும் ஒன்றாக எழுத்தைக் கையாண்டதாகத் தோன்றியது. ஒரு கட்டத்தில் நமக்கே அவர்களை அந்த வளையத்திலிருந்து மீட்டு வெளியில் கொணர வேண்டும் போல இருக்குமளவு மிகுந்த மனச்சோர்வு அளிக்கக் கூடியது. பகுதி ஒன்றான “ஆதிகதை” ஆறு அத்தியாயங்களை மட்டுமே கொண்டது. அதிலேயே நாடார் சாதி, தன் குடும்பம் சார்ந்த தொன்மக் கதைகள், நம்பிக்கைகளைச் சொல்லிவிடுகிறார். இரண்டாவது பகுதியான கவலையில் கதை நாற்பத்தியாறு அத்தியாயங்களைக் கொண்டது. அதன்பின் நாம் மனித மனம் எனும் வெளிக்குள் பயணிக்கிறோம். அங்கு மகிழ்ச்சிகள், திருவிழாக்கள், கொண்டாட்டம் என எந்த நல்ல விஷயங்களிலும் கூட மனித மனித மனத்தின் இருளையே தரிசிக்க முடிகிறது. பூமத்திவிளைக்கார நாடாத்தி , கந்தசாமி மற்றும் முகிலன்விளைக்கார நாடாத்தி என அடுத்ததடுத்து வாழும் புகுந்த வீட்டிலுள்ள சகோரர்களின் வீடுகளில் நடக்கும் நுணுக்கமான பிரச்சனைகளையும், அது அழகிய நாயகி அம்மாளை கவலைக்குள்ளாக்குவதையும் சொல்கிறது. ஆனால் தன்னுடைய பார்வைக் கோணத்தைத் தவிர அவர் யாருடைய பார்வைக்கோணத்தை பதிவு செய்ய இயலாத அளவு தன்னுள் தான் மூழ்கி இருக்கிறார். அவருடைய “ நான்” அடைபட்டுக் கிடப்பதையே இந்த நாவலில் பார்க்க முடிகிறது. அவர் எழுதிய பின் கவலையைக் கடந்ததாக குறிப்பிட்டிருப்பது ஒரு வேளை அவர் அந்த நான்-ஐ எழுத்தாக்கி தனித்துப் பார்க்க உதவியிருக்கலாம். பூமத்தி விளைக்கார நாடாத்தி திருட்டுப் புத்தி உடையவள் என்பதை நாம் முதல் முறை அறியும்போது ’சரி’ என்று கேட்டுக் கொள்ளலாம். மேலும் மேலும் அவர் தன் வாழ் நாள் எல்லாம் அழகிய நாயகி அம்மாளுக்கு என்ன கொடுமைகள் செய்தாரோ அதை அனைத்தையும் பட்டியலிடும்போது ஒரு கட்டத்தில் சோர்வு வருகிறது. இது எல்லா குடும்பத்திலும் நடப்பது தான் என்ற எண்ணம் சற்றே எரிச்சல் படுத்துகிறது. ஆனால் அவர் பக்கத்திற்குப் பக்கம் பயன்படுத்து சொலவடைகள் அவர் அமைந்திருக்கும் இடம்/ நான் பற்றிய போதத்தை அளிக்கின்றன. ”விதி/தலைவிதி” என அடிக்கடி பயன்படுத்தும் சொல்லும் அவரின் வாழ்க்கைப் பார்வையை நமக்குச் சொல்கின்றன. அதன் வழியாக ஒட்டுமொத்த அவரின் நாவலும் நமக்கு மேலும் பொருள் படுகிறது.

இறுதியாக ’கிளைக்கதைகள்’. பாரததேவியின் கதைகளில் பல கிளைக்கதைகள் வருகின்றன. பெரும்பாலும் ஊரிலுள்ளவர்களின் கதைகள். அவை மனித மனங்களை ஆராயவும், அங்கிருந்து மேலும் வாசகர்கள் விரித்துச் செல்லவும் ஏதுவான ஆரம்ப நிலை கிளைக்கதைகள் எனலாம். அத்தகைய கதைகள், கதை கொண்ட மனிதர்கள் இந்த மூன்றூ நாவல்களிலும் விரவியுள்ளன. நிலாக்கள் தூரதூரமாக நாவலில் சற்று அதிக எண்ணிக்கையில் காணக்கிடக்கின்றன. உதாரணமாக ருக்குமணி என்ற பெண் பாரததேவியின் ஊரில் வாழ்க்கைப்படுகிறாள். அண்ணன் உடற்குறையுடன் இருந்ததால் தம்பிக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள். அவர்களின் பெற்றோர் அனைத்து சொத்துக்களையும் அண்ணனைக் கைவிடாமல் இருக்க அவர் பேரில் எழுதி வைத்துவிட்டு இறந்துவிடுகிறார்கள். தம்பி வேலைக்குச் சென்றவுடன் அண்ணன் சாப்பிட்டுவிட்டு உறங்குவதை வேலையாகக் கொள்கிறார். ருக்குமணியிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறார். எத்தனை சொல்லியும் அவர் கேட்காததால் ஊர்த்திருவிழாவின் போது சாமியாடியாகி அவரைத் தூக்கி கிணற்றில் போட்டுவிடுகிறாள். ஆனால் சுய நினைவு வந்ததும் “மச்சான்..” என்று அரற்றியபடி அவள் கிணற்றில் பாய்ந்து விடுகிறாள். அவளை ஊர்க்காரர்கள் காப்பாற்றிவிடுகிறாள். இது ஒரு சிறிய சம்பவமாக இந்த நாவலில் வந்து செல்கிறது. முன்பின் தொடர்ச்சியில்லாதது. ஆனால் இதையொட்டி பல்வேறு தரப்புகளை நம்மால் நெய்து கொள்ள முடியும். கேள்வி எழுப்பிக் கொள்ள முடியும். அம்மா, அப்பவின் கருணை, அண்ணனின் விழைவு, தம்பியின் சகிப்புத்தன்மை, ருக்குவின் இந்த அலைக்கழிதல், கிராம மக்கள் இதைக் கடந்து செல்லும் விதம் என பலவராக பரவி நாம் யோசிக்கலாம். கேல்வி எழுப்பிக் கொள்ளலாம். இப்படி எண்ணற்ற உண்மை மனிதர்கள், நிகழ்வுகள் இந்த நாவலில் விரவியுள்ளன. இந்த மனிதர்கள் வேறு எதற்காகவும் அல்ல இந்த மனித வாழ்வின் துண்டு வாழ்க்கையை நுணுகிப் பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதன் பொருட்டு மட்டுமே முக்கியத்துவம் அடைகிறது. இந்த சிறுகுறிப்பு வழியாக நாம் சிறிய புனைக்கதை ஒன்றை எழுதிக் கொள்ளுமளவு இத்தகைய நிகழ்வுகள் நாவலில் நடக்கின்றன.

அழகிய நாயகி அம்மாளின் நாவலில் இத்தகைய நிகழ்வுகளும் மனிதர்களும் ஒப்பு நோக்க எண்ணிக்கை குறைவு எனினும் ஒரு கிராமத்திலுள்ள மனிதர்கள் என்பதைத் தாண்டி புலம்பெயர்ந்த பல சமூகத்தை, இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது வேறுவகை அனுபவத்தைத் தருகின்றது. உதாரணமாக முத்தம்மாளின் மாமியாரான சரஸ்வதி பற்றிய கதை. அவர் நாடகத்தில் ஸ்திரீ பார்ட் நடிக்கும்போது அவரைப் பார்த்து ஆசைப்பட்ட கிராண்ட் துரை வழியாக அவரின் வாழ்க்கையில் நுழைந்த ஆடம்பரமும், உலகப்போரின் தாக்கத்தினால் மலேயாவில் நிகழ்ந்த மாற்றத்தில் கிராண்ட் அவளைக் கைவிட்டு ஒரே நாளில் மீண்டும் ஏழையானதும் ஓரு தனிப்புனைக் கதை. இன்னொரு சுவாரசியமான கதை ஒரு செட்டியார் மதிப்புமிக்க வைர நகையை முத்தம்மாளின் அம்மா மலேயாவிலிருந்து அணிந்து வந்து தமிழகத்தில் உள்ள அந்த செட்டியாரின் வீட்டில் கொடுக்கும் நிகழ்வு. இதற்கு இடையில் பயணத்தில் ஆயிரம் சிக்கல்கள் நிகழ்வுகள் நடக்கின்றன. ஆட்டு மந்தையைப் போல அடைத்து வைக்கப்பட்ட குறுகலான அறைகள் கொண்ட அந்தக் கப்பலில் பயணம் செய்து வரும் அவர்கள் அந்த வைர நகையை அணிந்து வரும் முரண், தமிழகத்தில் வந்ததும், அவர்களை தடபுடலாக உபசரித்து விருந்து வைக்கும் செட்டியார் குடும்பம், இறுதியாக அவருடைய அம்மா அந்த நகையைக் கழற்றிக் கொடுக்கும் இடம் வரை சிறிய கிளைக்கதையாக் கொள்ளலாம். செட்டியார் அந்த இடத்தில் வந்து போவதைத் தவிர நமக்கு அவரைப் பற்றி வேறு கதைகள் தெரிவதில்லை.

அழகிய நாயகி அம்மாளின் நாவலில் இத்தகைய கிளைக்கதைகள் பெருமளவு இல்லை. கிளைக்கதையாக விரியாதளவு சிறிய தீற்றல்களே தென்படுகின்றன. அவரைச் சுற்றி இருந்த மனிதர்கள் சிலர்களைப் பொறுத்து தன்னை பாதித்த அனைத்து நிகழ்வுகள் அனைத்தையும் அடுக்கிக் கொண்டே செல்வதிலிருந்து ஒரு மனித மனத்தின் ஆழத்தை சென்று தொட முடிகிறது. உதாரணமாக பூமத்திவிளைக்கார நாடாத்தியின் திருட்டுச் சம்பவங்கள் சுவாரசியமானவை. அவள் அழகிய நாயகி அம்மாளுக்கு வேண்டுமானால் கவலை கொடுப்பவளாக இருக்கலாம். அவள் திருடிச் சுரண்டி கொடுக்கும் தம்பி குடும்பம் எத்தனை மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்ற எண்ணமே அவளுடைய கிளைக்கதையை சுவாரசியமாக்குகிறது. இன்னொரு ஆள் அவர் கணவரின் இளைய சகோதரர் கந்தசாமியின் உப்பு பெறாத சண்டைகள். அழகிய நாயகி அம்மாளிலிருந்து நம்மால் இன்னொரு பார்வைக் கோணத்தின் வழியாக கதையை நிகழ்த்திக் கொள்வதன் வழியாக முற்றிலும் புதிய கதையை கற்பனை செய்து கொள்ள முடியும். குறிப்பாக அவர் எதிர்மறையாகக் காண்பித்திருக்கும் கதாப்பாத்திரங்கள் வழியாக. அது கவலையாக இல்லாமல் இருப்பது மேலும் ஆசுவாசம் அளிக்கிறது. பொதுவாக இந்த புறம் பேசுதல் பாதுகாப்பின்மையின் குறியீடாக உளவியலில் அர்த்தப்படுத்தப்படுகிறது. அழகிய நாயகி அம்மாளின் இந்த கவலைப் பட்டியல்கள் வழியாக நாம் ஒரு குடும்பத்தில், சாதியில், ஊரில் உள்ள பெண்களின் மனநிலையை, பிரச்சனைகளை மட்டும் அறியவில்லை. மாறாக ஒட்டுமொத்தமாக ஒரு காலகட்டத்தில், சமூகத்தில் நிலவிய போதாமைகளை, விடுபடல்களை அறிந்து கொள்கிறோம்.

இப்படியாக இந்தத் தன் வர்லாறுகள் தீவிர இலக்கியத்தில் வெறுமே தரவுத் தகவல்களுக்காக மட்டுமல்லாமல் முதல் நிலை புனைவுக்கதைகளுக்காகவும் வாசிக்கப்பட வேண்டியவை. குறிப்பாக ”பெண் பார்வையிலிருந்து” என்ற பிரக்ஞை வழியாக இன்னும் ஆழமான அவதானிப்புகளைச் செய்ய இயல்கிறது.

பெரும்பாலும் பெண்களின் அக உலகத்தை அறிந்து கொள்வதில் ஆண்களுக்கு ஆர்வம் அதிகம். அதிலும் குறிப்பாக அதன் இருள் பக்கங்களை, இச்சையின் பக்கங்களை. அதை எழுதுவதற்காக அல்லது சற்று அவதானித்துப் பார்க்கவும், விற்பனை சந்தையை கருத்தில் கொண்டும் பல ஆண் எழுத்தாளர்கள் பெண் பெயரை வைத்துக் கொண்டனர். நவீனத்துவ எழுத்தாளர்கள் கொண்டாடிய மனித இருள் பக்கங்களை பெண் தன்னிலையிலிருந்து எழுதிய சில எழுத்துக்கள் கொண்டாடப்பட்டன. உதாரணம் வாஸவேச்வரம். ஆனால் பெண் தன்னிலையின் உண்மையான எழுத்துக்கள் வெளிப்படுவது பாரததேவியிலும், அழகிய நாயகி அம்மாளிலும் தான்.

இந்த மூன்று பெண் எழுத்துக்களிலும் உள்ள இன்னொரு ஒற்றுமை பெண்களின் உடல் உழைப்பு சார்ந்த சித்திரம். ஆனால் அவர்களின் உடலின் இச்சைகள், காமம் சார்ந்த விஷயங்கள் பேசப்படவே இல்லை. முத்தம்மாளில் காதல் வாழ்க்கை சொல்லப்பட்டதே பெரிய விஷயமாக இருந்தது. தன் அப்பா-அம்மாக்கள், ஸ்டெயினின் அப்பா-அம்மாவின் உறவு சார்ந்த சிக்கல் விவரிக்கப்பட்ட அளவு காமம் எங்கும் பேசுபொருளாக இல்லை. அது அவசியமா என்ற கேள்வி எழலாம். இல்லை தான். அக வாழ்க்கையில் அது முக்கியமான ஒன்றாகிறது. ஒருவேளை தயக்கத்தின் பொருட்டு தவிர்க்கப்பட்டிருப்பின் அது முழுமையடையாமல் இருப்பதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மூன்று நாவலிலும் அகத்தை அதிகம் பேசிய அழகிய நாயகி அம்மாளின் நாவலில் தான் அதன் சுவடுகளைத் தேடினேன். அதிக நேரம் புகுந்த வீட்டினுள்ளேயே இருந்து பாடுகளை அனுபவித்தவர். கணவரின் இருப்பு என ஒன்று இல்லாதது போலேயே நாவல் முழுவதும் உள்ளது. அவரைப் பற்றிய குறைகளை அவர் பட்டியலிட்டாலும் தங்களுக்குள்ளான காதல் உறவைப் பற்றி அவர் அத்தனை ஆழமாகச் சொல்லவில்லை. தன் ஓரகத்திகளின் வஞ்சனைகளைப் பேசிய அளவுக்கு இல்லையானாலும் இன்னும் அது பற்றிய சித்திரத்தைக் கொடுத்திருக்கலாம். நாமே ஊகித்துக் கொள்ளுமளவு நம் தமிழ்ச்சூழலில் முந்தைய தலைமுறைகளில் வாழ்ந்தவர்களிடம் அந்தத் தன்மை மங்கியிருந்ததோ என்று எடுத்துக் கொள்ளத் தோன்றுகிறது. ஒரு சிறந்த காதல் கதை அல்லது கற்பனாவாத எழுத்து இல்லாமல் இலக்கியச் சூழலில் அமைந்ததற்கு இந்த வாழ்க்கைப் பாடுகள் ஒரு காரணமாக அமைந்திருக்கலாமோ என்றே ஊகிக்கத் தோன்றுகிறது.

எழுத்தாளர் பாரததேவி

இந்த நேரத்தில் அழகிய நாயகி அம்மாளின் நாவலை எழுத ஊக்குவித்த அவரின் மகனான பொன்னீலன், அவர் எழுத்தை வாசித்து அப்படியே பிரசுரிக்கலாம் என்று சொல்லிய சுந்தர ராமசாமி, அதை நாவலாக தொகுப்பதற்கான பணியைச் செய்த சி.மோகன், பாரத தேவியை எழுத ஊக்குவித்த கி.ராஜநாராயணன், அதை நாவலாக ஆக்கும் பணியைச் செய்த பதிப்பாளர் வசந்தகுமார் ஆகியோரை நன்றியுடன் நினைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

*

”நான் பிரக்ஞை” (I Consciousness) பற்றி நித்ய சைதன்ய யதி தன் நூல்களில் குறிப்பிட்டுக் கொண்டே இருப்பார். அவரின் தன் வரலாற்று நூலான “Love & Blessings”-ல் ஆரம்பம் முதலே அவரின் ”நான்” விலகி நின்று அவரின் வாழ்க்கையைப் பார்க்கும் பார்வையை அளித்திருப்பார். இன்னொருபடி மேலாக அந்த “நான்” என்பதை முழுமுதன்மை (absolute) இந்த இரண்டையும் பார்க்கும் பார்வை ஒன்றும் அந்த எழுத்தில் வந்து கொண்டேயிருக்கும். இந்தப்பார்வையை சிறந்த கலைஞர்களின் எழுத்துக்களில் காணலாம். நித்யாவின் தன்வரலாற்றிலுள்ள ஒவ்வொரு அத்தியாமும் புனைவின் நேர்த்தியைக் கொண்டது. ஒட்டுமொத்தமாகக் கோர்த்தாலும் அதேயளவு நேர்த்தியும், ஒருமையும் கொண்டது. அதற்கிணையான ஆழம் அதை மேலும் பொருள் கொள்ளச் செய்கிறது.

தன்னை அறிதல் என்பது தத்துவத்தின் அடிப்படை வினாக்களில் ஒன்றாக எப்போதுமே உள்ளது. மனிதர்கள் முதலில் மொழியைக் கைக் கொண்டது தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்ளத்தான். எழுத ஆரம்பித்தது தன்னைத் தொகுத்துக் கொள்வதற்காகத் தான் இருக்க முடியும். தனிமையும், தன்னைப் பற்றிய அசைபோடலும் அதற்கு அவசியமாகிறது. புனைவைக் கையாண்ட மனிதர்கள் இரு காரணங்களின் பொருட்டு அதைச் செய்திருக்கலாம். ஒன்று தான் வாழாத வாழ்க்கையை வாந்து பார்க்க. இன்னொன்று தன்னைத் தானாக வெளிப்படுத்தாமல் தன் கேள்விகளை வேறு நபரில் போட்டுப் பார்த்து அதை புரிந்து கொள்ளும் பொருட்டு எனலாம். இந்த இரு நிலையிலும் தன் பயணமும் விசாரணையும் நிகழ்கிறது. அந்தப் பயணத்தை சரியாக செய்வதன் வழியாக நான்-ஐ மீறிய பெரிய ஒன்றைத் தெரிந்து கொள்ளவும் செய்யலாம்.

”தன் வரலாறு” என்பது தன்னைத்தான் உற்று நோக்குவதிலிருந்து ஆரம்பிக்கிறது. ’நான்’ என ஓர் உயிர் தன்னை உணர, பார்க்க அது தன்னை இரண்டாகப் பகுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஒன்று தன்னை உணரவும், இன்னொன்று விலகி நின்று பார்க்கவுமான இரு பார்வைகள் அகமாகவும் புறமாகவும் தேவைப்படுகிறது. அதுவே முழுமையான பார்வையாக அமைய முடியும்.

அந்த வகையில் முத்தம்மாள் பழனிச்சாமியின் எழுத்துக்களில் வெளிப்படும் ’நான்’ அகமாகவும் புறமாகவும் விலகி நின்று பார்த்து எழுதியது இந்த நூலை பெண் தன் வரலாற்று நாவல் வகைமைகளில் முதன்மையாக வைக்க முடிகிறது. வடிவ ரீதியான் ஒருமையும் இதற்கு மேலும் வலு சேர்க்கிறது. கவலை, நிலாக்கள் தூரதூரமாக ஆகிய இரு நாவலிலும் ‘நான்’ தன்னை விலகி நின்று பார்க்கும் கணங்கள் குறைவு. உதாரணமாக இரு நாவலிலும் தங்கள் சாதிக்குக் கீழ் நிலையில் இருக்கும் மனிதர்களைப் பற்றிய பிறரின் எள்ளல்களை மரியாதைக் குறைவுகளை எந்த விமர்சனமும் இல்லாமல் சொல்லிச் செல்லும்போது வாசகர்களுக்கு ஏற்படும் நெருடல் இந்த விலகி நின்று பார்க்காத தருணங்களே. பாரததேவி தன் நாவலில் கள்ளமின்மை வழியாக இயற்கையில் ஆழ்ந்து அந்த ஆழ்நிலையில் தன்னையறியாது அடையும் நிலை வழியாக அதை சமன் செய்து விடுகிறார். ஆனால் அழகிய நாயகி அம்மாள் தன்னுள் தான் மூழ்கி “நான்” என்பதை ஒருபோதும் விலக்க முடியாத அகப்புறச் சூழலைக் கொண்டிலங்குவதைப் பார்க்க முடிகிறது. அந்த நிலை ஆன்மாவின் சிறை எனக் கொள்ளத்தக்கது. அக்காலகட்ட பெண்ணின் அகநிலையின் பறைசாற்றல் என்று வேண்டுமானால் இதை எடுத்துக் கொள்ளலாம்.

பெண் தன்வரலாற்று நூல்கள், பெண் வரலாறுகளின் தொகை ஒன்று சூழலில் தேவைப்படுகிறது. அதற்கு இந்த மூன்று நூல்களும் முன்னோடி நூல்களாக அமையும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் இதில் வெளிப்படுவது தனித்த பெண் மொழி. பெண் தன்னிலையிலிருந்து எழுதப்பட்ட அசலான படைப்புகள் இவை. பெண் புனைவு மொழியில் தாக்கத்தை ஏற்படுத்தவும், அதன் வழியாக இலக்கியத்தின் செவ்வியல் தன்மைக்கான வரையறைகளை அகலமாக்கவும் சாத்தியமுள்ளவையும் கூட. அமெரிக்க பெண் எழுத்தில் தவிர்க்க முடியாதவராக அமைந்த மாயா ஆஞ்சலோவின் ஏழு நாவல்கள் தன் வரலாற்றுப்புனைவு சார்ந்தவை. பரவலான கவனத்தைப் பெற்றவையும் கூட. அப்படியொன்று நம் இலக்கியச்சூழலில் பெண் எழுத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்தமாகவே நிகழவில்லை எனலாம். இம்மூன்று நூலிலிருந்தும் மேலெழுவதற்கான சாத்தியத்தை எதிர்வரும் பெண் தன்வரலாறுகளும், பெண் எழுத்துக்களும் கண்டுகொள்ள வேண்டும். அவ்வகையில் ஏற்கனவே சூழலில் உள்ள ஆண்மைய மதிப்பீடுகளிலிருந்து வேறுபட்டு பெண் படைப்புகளை மதிப்பிடுவதற்கான அளவுகோள்களுக்கான கருவிகளில் புதியனவற்றைக் கோர்த்துக் கொள்ளவும் முடியும்.

*

*

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *