எல்லைகள் தாண்டி விரிந்த பெருங்கனவு – வெங்கட் ரமணன்

(தாவர மரபியலாளர் ஜானகி அம்மாள்)

“வரலாறு நாம் மரணம் தழுவும் போர்க்களங்களைத் துதிபாடுகிறது,  ஆனால், மானுடம் தழைக்க உழப்படும் வயல்களைப் பேச மறுக்கிறது. முறை பிறழ்ந்து மன்னன் பெற்ற குழந்தைகளின் பெயர்களை அறியும் நமக்குக் கோதுமை எப்படித் தோன்றியது எனத் தெரியாது. இது மனித முட்டாள்தனத்தின் உச்சம்”

– ழான் -ஆன்றி ஃபாபர் (Jean-Henri Fabre), உயிரியலாளர்.

ஆறுகள் எப்படி உருக்கொள்கின்றன? எப்படி ஒழுகிச் செல்கின்றன? மேட்டுப்பூமியை எதிர்கொள்ளும் நதி இயல்பாகத் தன் பாதையை வளைத்துக் கொள்கிறது. புதிய ஒழுங்கில், தன் போக்கில் செல்கிறது. தடையற்ற சிந்தனை கொண்ட மனிதமனமும் ஆற்றைப் போலவே தனக்கான பாதையைத் தெரிந்தெடுக்கிறது; அப்பாதை தடைகளற்றது. அவர்கள் இடம்பெயரத் தயங்குவதில்லை, சேரிடத்தில் எளிதில் இயைந்துபோகிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கான வாழ்க்கைத் தேவைகள் மிகக் குறைவு, வகுத்துக்கொண்ட இலக்கே அவர்களுக்கு முக்கியம். 1897-ஆம் ஆண்டு இந்தியாவில் பிறந்து, அமெரிக்கா, ஐரோப்பியக் கண்டங்களில் பணியாற்றி, தன் எண்பத்தாறாவது வயதில் சென்னையில் மரித்த தாவரவியல் மேதை ஜானகி அம்மாளின் வாழ்வும் ஒரு பெருநதிதான்.

ஜானகி அம்மாள் (1934-ல் எடுத்த படம்)

பிரிட்டனின் ஆட்சியிலிருந்த இந்தியாவின் மலபார் பகுதியில் தலச்சேரியில் 1897-ஆம் ஆண்டு, நவம்பர் ஐந்தாம்நாள் எடவலத்து கக்காட்டு ஜானகி அம்மாள் பிறந்தார். இவருடைய குடும்ப வரலாறு சிக்கலானது. தந்தை திவான் பகதூர் கிருஷ்ணன் மலபார் பிராந்தியத்தின் உதவி ஆணையாளராகவும் திவானாகவும் பணியாற்றியவர். தாயார் தேவி குறுவாயி, ஜான் சைல்ட் ஹானிங்டன் (John Child Hannyngton) என்ற ஒரு ஐரிஷ் அதிகாரியின் முறையற்ற இந்திய உறவின் வழி பிறந்தவர். அந்தக் காலங்களில் தங்கள் குடும்பங்களை பிரிட்டனிலேயே விட்டுவிட்டுத் தனியே வரும் ஆங்கிலேயர்கள் இந்தியப் பெண்களைத் தங்கள் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள். இவர்களில் சிலர் தனியொருத்தியுடன், கிட்டத்தட்ட குடும்ப வாழ்க்கையையே நடத்தினார்கள். ஆங்கிலப் பாதிரிமார்களின் வருகைக்குப் பின் இது அரசாங்கத்தால் மட்டுப்படுத்தப்பட்டது. (இதுபோன்ற நடவடிக்கைகளைக் கேள்விப்பட்ட பிரிட்டிஷ் மனைவியர் தங்கள் கணவனை வேவுபார்க்க, கையும் களவுமாகப் பிடிக்க, மீட்டெடுக்க இரகசியமாக இந்தியா வந்ததும் உண்டு) ஹானிங்டனின் கீழ் வேலைபார்த்த கிருஷ்ணன் தன் முதல் மனைவியின் மறைவுக்குப் பிறகு அவர் மகள் குஞ்சிக் குறும்பி என்றழைக்கப்பட்ட தேவியை மணந்தார். ஜானகி இவர்களின் பத்தாவது குழந்தையாகப் பிறந்தவர். கிருஷ்ணன், திய்யா அல்லது ஈழவர் என்றழைக்கப்படும் சாதியில் பிறந்தவர். உயர் படிப்பினாலும் நல்ல வேலையாலும் கூடத் தப்ப முடியாத சாதி ஒடுக்குமுறைகளைக் கடந்து சமூக அந்தஸ்தில் முன்னேற தன் ஆங்கிலேய அதிகாரியின் வாழ்முறையை நகலெடுத்தார். வேட்டைக்குப் போவது, தேநீர் விருந்துகள் என. அவர்களைப் போலவே இயல்பாகத் தன் குழந்தைகளைக் கல்விகற்க ஊக்குவித்தார்.

ஜானகி பிறப்பதற்கு முன்பே ஹானிங்டன் தன் மகளைக் கைவிட்டு இங்கிலாந்து திரும்பச் சென்றுவிட்டார். செல்லுமுன் கிருஷ்ணனுக்கான கடிதத்தில் “குஞ்சிக் குறும்பியிடம் எனக்கு (கடிதம்) எழுதிப் பயனில்லை என்று சொல்லிவிடு, நான் பதில் போடமாட்டேன்” என்று தீர்மானமாக எழுதிவிட்டுச் சென்றார். ஈழவர்களில் சிலர் தங்கள் மீது சுமத்தப்படும் சாதி ஒடுக்குமுறைகளை மீற வெள்ளை கலப்பினப் பெண்களை மணந்துகொள்வது வழக்கமாக இருந்தது. ஆனால் அதென்னவோ அவ்வளவு எளிதாகத் தடைகளைத் தகர்க்க உதவவில்லை. வெள்ளையர்கள் ஒருபோதும் இவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பைக்கூடத் தந்ததில்லை. மறுபுறத்தில் ஈழவர்கள் இவர்களை அசுத்தமானவர்களாகப் பார்த்தார்கள், ‘வெள்ளத் திய்யன்’ என்று பழித்து இவர்களுடன் திருமண சம்பந்தங்களை மறுத்தார்கள். பின்னாட்களில் இவர்களின் சமூகவியலையும் வரலாற்றையும் ஆராய்ந்த ஈ.கே. சீதா என்பவர், “அப்போது ஐந்து வெள்ளத் திய்யன் குடும்பங்கள்தாம் இருந்தன. அவர்களில் பெரும்பாலோர் ஏற்கனவே சொந்தக்காரர்கள். இவர்களுள் மாத்திரமே திருமண உறவுகள் சாத்தியம். ஆனால் வெள்ளையர்களின் தோல்நிறத்தையோ உடற்கட்டையோ கொண்டிருந்த பெண்களை ஈழவர்கள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. மாபெரும் அழகி, சாமர்த்தியசாலி என்றாலும் வெள்ளையர்களுக்கும் அவர்கள் தேவைப்படவில்லை” என்று எழுதுகிறார். இந்தப் பின்புலங்களில் ஜானகி அம்மாளுக்கான குடும்பத் தெரிவுகள் என்று ஏதுமில்லை. அறிவியல் ஒன்றே அவருடைய வாழ்க்கை என்றாகிப்போனது.

ஜானகியின் தாத்தா ஹானிங்டனுக்குத் தாவரங்களில் ஆர்வம் இருந்திருக்கிறது. லண்டனின் புகழ்பெற்ற க்யூ தோட்டக் காப்பகத்துக்கு (Royal Botanic Conservatory, Kew) மலபார் பகுதியில் தான் கண்டுபிடித்த இரண்டு ஆர்க்கிட் செடிகளை அனுப்பிவைத்திருக்கிறார். ஜானகிக்கும் சிறுவயதிலிருந்தே தாவரவியல் ஆர்வம் இயல்பாக வந்திருக்கிறது. சென்னை இராணி மேரி கல்லூரியில் 1921-ல் தாவரவியல் இளங்கலைப் பட்டம் பெற்ற அவருக்கு உடனே மதராஸ் பெண்கள் கல்லூரியில் விரிவுரையாளர் வேலை கிடைத்தது. அந்த வேலையுடன் படிப்பைத் தொடர்ந்து 1923-ல் மதராஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம்பெற்றார். அந்தக் காலங்களில் பிரிட்டிஷ் இந்தியாவில் பெண்கள் கல்வி பெறுவது எளிதில்லை என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆனாலும், இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பம்பாய், பூனா, கல்கத்தா, சென்னை போன்ற பல்கலைக்கழகங்களில் கொஞ்சம் கொஞ்சமாகப் பெண்களை அனுமதிக்கத் தொடங்கினர். ஜானகி இளங்கலை சேரும்போது இந்தியாவில் ஒரு சதவீதத்துக்கும் குறைவான பெண்களுக்கே வாசிக்கத் தெரியும். இந்தப் பின்புலத்தில், சாதி, பாலியல், கலவை-இனத் தடைகளை மீறி முதுகலை பட்டம் பெற்றது ஜானகியின் பெரும் சாதனை.

மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் ஜானகி அம்மாளின் ஆய்வை மேற்பார்வை செய்த பேரா. ஹார்லே ஹாரிஸ் பார்ட்லெட்

ஜானகிக்கு வகுப்பறையில் கற்பிப்பதற்கு அதிக ஆர்வம் இருந்ததில்லை. அவர் ஆய்வகத்திலும் களங்களிலும் சோதனைகளைச் செய்யவே விரும்பினார். எனவே புகழ்பெற்ற மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் படிக்க பார்பௌர் உதவித்தொகை (Barbour Scholarship) கிடைக்க 1924-ல் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தார். அங்கே ஆய்வு-வழி முதுகலைப் பட்டம் பெற்றபின் 1926-ல் மதராஸ் திரும்பி பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் பணியைத் தொடர்ந்தார். மீன்டும் பார்பௌர் ஆராய்ச்சி மானியத்துடன் 1928-ல் மிச்சிகன் திரும்பிய ஜானகி, 1931-ஆம் ஆண்டு சொலனேஸி குடும்பத்தைச் சேர்ந்த Nicandra physalode என்ற தாவரத்தின் நிறப்புரி (Chromosome) ஆய்வுக்காக அறிவியல் முனைவர் பட்டம் (DSc) பெற்றார். அமெரிக்காவில் தாவரவியல் ஆய்வுக்காக முனைவர் பட்டத்தைப் பெற்ற முதல் பெண் ஜானகி அம்மாள். அதே வருடம் உலகின் முதன்மைத் தாவர ஆய்வுக் குழுமமான லின்னேயன் கழகத்தின் கௌரவ உறுப்பினராக அங்கீகரிக்கப்பட்டார். இரண்டாம் உலகப்போருக்கு முன் அறிவியல் மையங்களாகத் திகழ்ந்த ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பெண்கள் பல்கலைகழகங்களில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தன்னுடைய இனப் பின்புலத்தின் தடைகளைக் கடந்து ஜானகி அம்மாள் அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெற்றது மாபெரும் சாதனை என்று மிச்சிகன் பல்கலைக்கழக வரலாற்றுக் குறிப்புகள் புகழ்கின்றன.  

இங்கிலாந்தில் ஜானகி அம்மாளின் ஆய்வு மேற்பார்வையாளர் பேரா. சிரில் டீன் டார்லிங்டன்

கல்வி பெறுவதைவிட தொழில்முறையாக தனக்கான நற்பெயரை ஈட்டியெடுப்பது அக்காலங்களில் உலகம் முழுவதும் இன்னும் கடினமானது. ஆய்வுக்கூடங்கள் ஆண்களின் கோட்டைகளாகத்தான் இருந்தன. குறிப்பாக கணிதம், இயற்பியல், வேதியியல் போன்றவை. மாறாக உயிரியலின் நிலை சற்று வித்தியாசமானது. பெரும்பாலும் இரண்டு (அல்லது மேற்பட்ட) தாவரங்களை இணைத்துத் திறமிக்க புதிய செடியை உருவாக்குவது ஒரு கலை என்றே பார்க்கப்பட்டது. அந்நிலையில் தாவரவியலிலும் விலங்கியலிலும் பெண்கள் சற்று எளிதாக அனுமதிக்கப்பட்டார்கள். நுண்ணோக்கிகள், செல்களின் அமைப்பு, செயல்பாடு, மரபியல், பரிணாமம், நிறப்புரி, உயிர்வேதி வினைகள் போன்ற ஆய்வு நுட்பங்கள் வருவதற்குமுன் தாவரவியல் ஆய்வு முழுமையான அறிவியல் முறைகளைக் கைக்கொள்ளவில்லை. ஆனால் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அது செல்கள், நிறப்புரிகள் போன்ற சோதனைகளால் சிக்கலான, சவால்கள் நிறைந்த அறிவியலாக உருக்கொண்டது. அதில் சாதிக்க ஆண்கள் முனைந்து செயல்படத் தொடங்கினார்கள். எனவே பெண்கள் செல் உயிரியலில் மூர்க்கமாகப் புறக்கணிக்கப்பட்டார்கள். அது அணுக்கரு இயற்பியலைப் போன்று சிக்கலானது. எனவே பெண்களால் இயலாது என்று மறுக்கப்பட்டது. இந்த நிலையில் பெண்களுக்கு இருந்த ஒரே வழி, ஒரு முதல்தர ஆண் தாவரவியல் மேதையின் ஆளுகையின் கீழ் தன்னை இணைத்துக் கொள்வதுதான்.

மிச்சிகனில் ஜானகியின் முனைவர் ஆய்வை மேற்பார்வை செய்த ஹார்லே ஹாரிஸ் பார்ட்லெட் (Harley Harris Bartlett) அவரை இங்கிலாந்தின் சிரில் டீன் டார்லிங்டனுக்கு (Cyril Dean Darlington), “எங்கள் ஆய்வுக்குழுவிலிருந்து சமீபத்தில் முனைவர் பட்டத் தேர்வை முடித்த செல்வி. E. K. ஜானகி இந்தியா திரும்பும் முன் இந்தக் கோடைக்காலத்தில் கொஞ்சம் நாட்கள் இங்கிலாந்தில் இருக்கலாம் என்று நினைக்கிறார். அவரிடம் தேவையான பல்படிய கத்தரிக்காய்ச் செடிகள் (polyploid Eggplant) இருக்கின்றன.  அந்த ஆய்வு உங்களுக்கும் ஆர்வமூட்டுவதாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்ற சுருக்கமான கடிதத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.  மிச்சிகனிலிருந்து இந்தியா திரும்புமுன் ஒராண்டுக்கு ஜானகி டார்லிங்டனின் ஆய்வகத்தில் வேலை செய்தார். அப்போது அவர்களுக்கிடையே பின்னர் இறுதிவரை நீடிக்கப்போகும், மிகச் சிக்கலான உறவு உருக்கொண்டது. டார்லிங்டன் இங்கிலாந்தின் மிகப் புகழ்பெற்ற தாவரவியலாளர். சார்ல்ஸ் டார்வின், ஃப்ரான்ஸிஸ் கால்டன் (Francis Galton) போன்ற மாபெரும் பிரித்தானிய பரிணாமவியல், மரபியல் மேதைகளின் வாரிசாகக் கருதப்பட்டவர். கலவி இனப்பெருக்கத்தின்போது நிறப்புரிகளின் கலப்பு வழியேயான ஆண்-பெண் மரபியல்கூறுகளின் பரிமாற்றத்தைச் சோதனை வாயிலாக நிரூபித்தவர் அவர்தான். இந்தப் புரிதல் வீரிய கலப்பினத் தாவரங்களையும் விலங்குகளையும் உருவாக்கப் பெரிதும் உதவுகிறது. அவருக்குக் கீழே இருபத்தைந்து ஆய்வாளர்களைக் கொண்ட மாபெரும் ஆய்வுக்குழு பணியிலிருந்தது. டார்லிங்டன் அந்தக்கால ஐரோப்பிய அறிவியல் வழிகாட்டிகளைப் போலவே தன் கீழ் வேலை செய்யும் பெண்களை ‘அரவணைத்துக்கொள்பவர்’. பரிவுணர்வையும் நேசத்தையும் தாராளமாகக் காட்டி ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவிகளுடன் நெருக்கத்தை உருவாக்கிக் கொண்டவர்; ஜானகியும் இதற்கு விதிவிலக்கில்லை. பின்னாட்களில் ஜானகி அம்மாள் டார்லிங்டனுக்கு எழுதிய மூன்று தொடர் கடிதங்களில் உணர்ச்சிபூர்வமான வெளிப்பாட்டைக் காணமுடிகிறது. உதாரணமாக, 10 ஆகஸ்ட் 1934 தேதியிட்ட கடிதம் “dearest Cyril” என்று தொடங்கி “yours passionately” என்று முடிகிறது. ஒரு பிரிட்டிஷ் அறிவியல் மேதையை இந்தியப் பெண் இப்படி விளித்து எழுதியதை வேறெந்த வகையிலும் புரிந்துகொள்ள முடியாது. பின் பல ஆண்டுகள் கழித்தும் சிரில் ஜானகியை விளையாட்டாக ‘ஜான்தி’ என்று அழைப்பதுண்டு.  (அடுத்த சில வருடங்களில் டார்லிங்டன் கேட் பின்ஸ்டார்ஃப் (Kate Pinsdorf) என்ற வரலாற்று ஆய்வாளரை மணந்துகொண்டார். இதைச் சில வருஷங்கள் கழித்துதான் ஜானகியிடம் தெரிவித்திருக்கிறார்.) சிரில் டார்லிங்க்டன் 1940-களில் ட்ரோஃபிம் லைஸென்கோ (Trofim Lysenko) என்பவர் தலைமையில் சோவியத் அரசு மரபியல், பரிணாமவியல் ஆய்வுகளைக் கட்டுபடுத்தியும் ஆய்வாளர்களைச் சிறையிலிட்டு வதைசெய்தததையும் கடுமையாகக் கண்டித்து எழுதி மேற்குலகில் மிகவும் பிரபலமடைந்தார். பின்னாட்களில் (தவறான) மரபியல் அடிப்படையில் வெள்ளையினரின் இனமேன்மையையும் (eugenics), கலப்பு உறவுகளைத் தவிர்த்து இனத்தூய்மையைக் காக்கவேண்டியதன் அவசியத்தையும் வலுவாகப் பிரச்சாரம் செய்தார். அவர் தீவிர யூத எதிர்ப்பாளரும்கூட. இப்படிப்பட்ட சிக்கலான ஆளுமை கொண்ட டார்லிங்டனுடன் ஜானகிக்கு அரை நூற்றாண்டுக்கும் மேலாக இருந்த அறிவியல், உணர்வுசார் நெருக்கங்கள் எளிதில் புரிந்துகொள்ள முடியாதனவாக இருக்கின்றன.

சிரில் டார்லிங்டன் ஆய்வகத்திலிருந்து இந்தியா வந்த ஜானகி அம்மாள் சில மாதங்களுக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்தபின் திருவனந்தபுரம் மஹாராஜா அறிவியல் கல்லூரியில் இயற்கையறிவியல் பேராசிரியாக வேலை ஏற்றுக்கொண்டார். அங்கே அவருக்கு தாவரவியல் ஆய்வுக்கு அதிக வாய்ப்பிருக்கவில்லை. எனவே, 1934-ல் கோயம்புத்தூர் கரும்பு ஆராய்ச்சிக் கழகத்தில் ஆராய்ச்சியாளராகச் சேர்ந்தார். அடுத்த ஐந்து வருடங்கள் அவர் அங்கு மேற்கொண்ட ஆய்வுகள் மிக முக்கியமானவை. இந்தியாவில் இயற்கையில் விளையும் தாவரம் என்றபோதும், இந்தியக் கரும்பு வகைகள் இனிப்பானதாக இருக்கவில்லை. அந்த நாட்களில் பாப்பா நியூ கினியின் சாக்கரம் அஃபீஷியனாரம் (Saccharum officianarum) என்றவகைக் கரும்புதான் உலகிலேயே மிக இனிப்பானதாக அறியப்பட்டது. பொதுவில் சவ்வினால் மூடப்பட்ட செல் அமைப்பு கொண்ட உயர் உயிரினங்களில் நிறப்புரிகள் இரட்டையாகத்தான் இருக்கும், இதற்கு இருமடியம் (diploid) என்று பெயர். தாவரங்களில் மும்மடிய (triploid), நால்மடியச் (tetraploid) செல்களைக்கூடக் காணமுடியும். இப்படிப் பல்மடிய நிலையைப் பயன்படுத்தி கலப்பினத் தாவரங்களை எளிதில் உருவாக்கலாம். சர்க்கரை ஆய்வு நிலையத்தில் ஜானகி அம்மாள் பல்மடியக் கலப்பின கரும்பு வகைகளை உருவாக்கும் ஆய்வுகளில் பெரும் வெற்றி கண்டார். கரும்புத் தாவர வகைக்குள் மாத்திரமல்லாமல் வேற்றினத் தாவரக் கலப்பு (intergeneric hybrids) மூலமாகவும் பல புதிய, தரமான கரும்பு வகைகளை அவரால் உருவாக்க முடிந்தது. இவற்றில் மக்காச்சோளம் [Saccharum x Zea], உயரமாக வளரும் எரியாந்தஸ் புல்வகை [Saccharum x Erianthus], வேகமாக வளரும் கத்திப்புல் [Saccharum x Imperata], மற்றும் சோர்கம் என்ற சிறுதானியம் [Saccharum x Sorghum] போன்ற வேற்றினக் கலப்புகளால் உருவாக்கப்பட்ட கரும்புகள் நல்ல பலனைத் தந்தன. இன்றைக்கு உங்கள் காபியில் நீங்கள் கலக்கும் சர்க்கரை பெரும்பாலும் ஜானகி அம்மாள் உருவாக்கிய கலப்பினக் கரும்பு ஒன்றின் வழித்தோன்றலாகத்தான் இருக்கும். இதற்கான வர்த்தக ஆதாயம் எதையும் அவர் பெற்றதில்லை.

அறிவியல் ஆய்வுகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று அரசு அல்லது நிறுவனத்தின் இயக்கத்தில் நடத்தப்படும் ஆய்வுகள், இவற்றை மையநோக்கு ஆய்வுகள் என்று பொதுப்படுத்தலாம். இவற்றில் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய வேண்டும் என்று ஆய்வு இலக்கு விதிக்கும், பணமளிக்கும் அரசாங்கமோ, தனியார் நிறுவனங்களோ ஆய்வின் போக்கை முழுமையாகத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும். மேலிருந்து-கீழ் வகையான இந்த ஆய்வுகள் அறிவியலுக்குச் சற்றும் தொடர்பில்லாத அரசியல்வாதிகளாலோ வியாபாரிகளாலோ ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு அவற்றை விரைவாகச் செய்து முடிக்க அறிவியலாளர்களைப் பணிக்கும். மறுபுறத்தில் மையம்-தவிர்க்கும் ஆய்வுகள் நெகிழ்வான இலக்குகளைக் கொண்டவை. இயற்கையை, அதன் இயங்கு விதிகளை முழுமையாக ஆய்ந்து தெளிவதை நோக்கமாகக் கொண்டவை. அவற்றால் கிடைக்கும் நன்மைகளை உபரி ஆதாயம் என்றே விஞ்ஞானிகள் கொள்வார்கள். இன்னும் சில நேரங்களில் அவர்களுக்கு முடிவைவிடப் பயணங்களே ஆர்வமூட்டுவனவாக இருக்ககூடும். மையநோக்கு ஆய்வுகள் இடைநிலை நிர்வாகிகளால் வழிநடத்தப்படுகின்றன. முதன்மை அறிவியலாளராகத் தகுதியில்லாத பலர் அரசாங்கத்துடன் எளிதில் இயைந்துபோவதால் அவர்கள் கையில் ஆய்வக நிர்வாகம் சென்று சேருகிறது. தங்கள் திறமைமீது நம்பிக்கையற்ற இந்த இடைத்தரகர்கள் மேதைகளைத் தங்கள் கட்டுக்குள் இருத்தி ஆட்டுவிப்பதில் பேரானந்தம் அடையக்கூடும். மாறாக, மையம்-தவிர்க்கும் ஆய்வுகள் அறிவியலாளர்களின் முழுமையான ஆர்வங்களால் மாத்திரமே முற்செலுத்தப்படுகின்றன. இவற்றுக்குப் பணவுதவி செய்யும் நிறுவனங்கள் ஆய்வின் போக்கைக் கட்டுப்படுத்த பெரிதும் முயல்வதில்லை.

கோயம்புத்தூரில் ஜானகிக்கு வாய்த்த மேலாளர் T. S. வெங்கட்ராமன் மரபான வழிகளின் மூலம் புது ஒட்டுத்தாவரங்களை உருவாக்குவதில் தேர்ச்சி பெற்றவர். அவருக்கு அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் ஜானகி கற்ற செல்மரபியல் புதிராக இருந்தது. இணையாக விவாதிக்க சகாவோ அல்லது கற்றுக்கொடுக்கத் தன்னைவிட மேம்பட்ட மூத்த ஆராய்ச்சியாளரோ இல்லாத அந்த ஆய்வுச் சூழ்நிலை ஜானகிக்கு அவ்வளவு ஊக்கம் தருவதாக இல்லை. வேலையில் சேர்ந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சிரில் டார்லிங்டனுக்கு எழுதிய கடிதத்தில், “கோயம்புத்தூரில் ஒரு சராசரி நாளில் கேட்ஸ் (Reginald Ruggles Gates) செய்த தீங்கைச் சரிசெய்ய ஏழு நீண்ட மாதங்கள் தேவைப்படடன. பேராசிரியருக்கு (கேட்ஸ்) எங்கள் ஆய்வின் மீதிருந்த ஆர்வம், அவருடைய தகவல் ஞானம், கனிவான நடத்தை போன்றவை வெங்கட்ராமனை மிகவும் கவர்ந்தன. அதனால் என்னிடம் எதுவும் சொல்லாமல் வெங்கட்ராமனிடம் என் Saccharum-Zea கலப்பினத்தின் நம்பகத்தன்மை குறித்து எழுப்பிய சந்தேகம், அவருடைய மூளையில் ஆழப்பதிந்துவிட்டது. இதனால் நான் நேச்சர் சஞ்சிகைக்கு எழுதியிருந்த கட்டுரையை இந்தியாவுக்கு வெளியே பதிப்பிக்கத் தேவையான அனுமதியைப் பெற அது வேளாண் இயக்குநருக்கு அனுப்பப்படவில்லை. நான் கிட்டத்தட்ட இந்த இடத்தைவிட்டு வெளியேற முடிவு செய்துவிட்டேன். மொத்தத்தில் என் வாழ்க்கை சிக்கலானதாகிவிட்டது. இருந்தாலும் நான் தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்தேன். இறுதியாக, அந்தக் கலப்பினம் உண்மையானதுதான் என்று வெங்கட்ராமன் நம்புகிறார் என்று தெரிவிப்பதில் எனக்கு மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டார். ஜானகியின் சிக்கலான ஆய்வுகளை அவருடைய மேலாளரால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. பழமையான ஒட்டுத்தாவர முறைக்கு மட்டுமே பரிச்சயமான கோயம்புத்தூர் ஆய்வகத்தில் ஜானகி அம்மாளின் மரபணு மற்றும் நிறப்புரி பல்படியக் கலப்பு முறை ஒரு புதிராகவே இருந்தது. ஆய்வைப் புரிந்துகொள்ளக்கூடிய கேட்ஸ், தன் அதிகாரத் திமிராலும், இனவெறியினாலும் எந்தவித நியாயமும் இல்லாமல் ஜானகியின் ஆய்வைக் குறித்து அவரிடம் உரையாடாமல், நிர்வாகிகளிடம் குறைசொல்லிப் போனார்.  தங்களுக்குப் புரியவில்லை என்பதால் மரபணு வழிகள் நம் நிறுவன ஆய்வுக்குப் புறம்பானவை, தேவையற்றவை என்று நினைத்திருந்த ஆய்வக நிர்வாகிகளுக்கு கேட்ஸ் எழுப்பிய சந்தேகங்கள் உதவியாக இருக்க, ஜானகியின் நவீன ஆய்வை அவர்கள் தடுத்தார்கள். ஜானகியின் கரும்பு ஆய்வு வெறும் அதிக இனிப்பையும் விளைச்சலையும் மாத்திரம் இலக்காகக் கொள்ளவில்லை. (இவை இரண்டும் மாத்திரமே அப்போது அரசுக்குப் போதுமானவையாக இருந்தன.) அவர் நோய் தாங்குதிறன், சூழியல் பாதிப்புகள், பாரம்பரிய வேளாண் முறைகள், போன்றவற்றையும் முழுமையாக ஆராய முற்பட்டார். அந்த முழுமையான ஆராய்ச்சியின் மிதவேகத் தன்மை அரசுக்கு ஒவ்வாததாக இருந்தது. மறுபுறம் ஆங்கிலேயே உயர் அதிகாரி கேட்ஸ்க்கு இந்திய தாவரவியல் சமூகத்தில் பெருமதிப்பிருந்தது. அவர் சொல்வதே தேவவாக்கு என்ற நம்பினார்கள். இந்திய அரசுத்துறையில் கணிசமான உயர் (அறிவியல்) அதிகாரிகள் கேட்ஸின் மாணவர்கள். ஒருவகையில் அவரிடம் ஆய்வகத்தின் பணத்திற்கான சாவி இருக்கிறது, எனவே வெங்கட்ராமனின் தயக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும். காலந்தோறும் இடைநிலை அறிவியல் மேலாளர்களின் திறமையின்மையால் பல புத்திசாலி விஞ்ஞானிகள் வாழ்க்கையையே வெறுத்து ஒதுங்கியிருக்கிறார்கள்.

“நான் இலட்சம் காசுக்குக்கூட என் ஆராய்ச்சியையும் தாவரவியலையும் விட்டுக்கொடுக்க மாட்டேன். பிச்சைக்காரியாகக்கூட தயாராக இருக்கிறேன், ஆனால் சந்தோஷமான பிச்சைக்காரியாக இருப்பேன்” 
– ஜானகி அம்மாள், நவம்பர் 1933.

ஜானகியைப் போன்ற செல்மரபிய ஆய்வாளர்களுக்கு மிகக் குறைந்த முதலீடு போதுமானதாக இருந்தது. அவருக்குத் தேவையானவை ஒரு சிறிய ஆய்வகம், செல்களைப் பார்த்து வரைந்துகொள்ள நல்ல நுண்ணோக்கி, இயன்றால் அந்த நுண்ணோக்கியுடன் இணைக்க ஒரு காமெரா, சில வேதிப்பொருட்கள் மாத்திரமே. இதுபோன்ற சிறிய ஆய்வகங்கள் மாபெரும் அரசாங்க நிலையங்களின் தகுதியைக் குறைப்பதாகத் தோன்றின. அவர்கள் அதிக அளவில் பணத்தைச் செலவு செய்வதே உயர்தர ஆய்வு என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையில் உழன்றார்கள்.

1939-ஆம் ஆண்டு ஜானகிக்குத் தான் இனியும் கோயம்புத்தூர் சர்க்கரை ஆய்வு நிலையத்தில் இருக்க முடியாது என்று தீர்மானமாகத் தெரிந்தது. எடின்பரோ நகரில் நடைபெறப்போகும் உலக மரபியல் மாநாட்டில் கலந்துகொள்ளச் செல்லலாம், அங்கேயே வேறு வேலை தேடிக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தார். ஆனால் பயணத்திற்கான அனுமதி, தொழில் பொறாமையும் ஆணாதிக்க மனப்பான்மையையும் கொண்ட வெங்கட்ராமனிடமிருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கை கொஞ்சமும் இல்லை. எதிர்காலம் என்ன என்று தெரியாத நிலையில் சிரில் டார்லிங்டனுக்கு எழுதிய கடிதம் அவருடைய விரக்தி மனநிலையைப் பிரதிபலித்தது: “என் வாழ்நாள் முழுவதும் வெங்கட்ராமனின் கட்டுப்பாட்டில் உட்கார்ந்திருப்பதை விடுத்து, சுதந்திரமாகப் புற்களைப் (கரும்பைப்) பற்றிய ஆய்வைத் தொடர நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன்… நான் இங்கிலாந்து வந்தால், மெர்டனில் சிறிது காலம் செலவிட நீங்கள் என்னை அனுமதிப்பீர்கள் என்று நம்புகிறேன்… இது ஆகாயக் கோட்டைகளை எழுப்புவது போன்றது — ஆனால் ஏன் கூடாது? நான் ஒரு பிறவி நாடோடி, விரைவில் இந்தியாவில் என்னைக் கட்டிப்போட எதுவும் இருக்காது! நான் மிகவும் களைப்படைந்தால், ​​மூழ்கித் தொலையக் கடல்தான் எப்போதும் இருக்கிறதே.”   

அதிர்ஷ்டவசமாக எடின்பரோ செல்ல அனுமதி கிடைத்து. களங்களுக்குச் சென்று தாவரங்களைச் சேகரித்து வருவதற்காகவே வாங்கியிருந்த சொந்தக் காரை விற்று, அந்தப் பணத்தில் மாநாட்டுக்குச் சென்றார். அப்போது உலகப்போர் துவங்கவே அவர் அங்கேயே தங்கும் நிலை ஏற்பட்டது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இங்கிலாந்தின் ஜான் இண்ஸ் மையத்தில் (John Innes Centre) சிரில் டார்லிங்டனின் ஆய்வகத்தில் துணைச் செல்லியல் நிபுணராகப் பணியாற்றினார். அப்போது மக்னோலியா உள்ளிட்ட சில பூக்கும் தாவரங்களில் மரபியல் ஆய்வுரீதியான கலப்பினங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவர் உருவாக்கிய Magnolia kobus Janaki Ammal என்ற புதுவகை இன்றும் வைஸ்லி ராயல் தோட்டக்கலை கழகத்தின் முகப்பில் பிரகாசமான வெள்ளை நிறத்தில் பூத்துக் குலுங்குகிறது. டார்லிங்டனும் ஜானகி அம்மாளும் இணைந்து Chromosome Atlas of Cultivated Plants என்ற ஆய்வுத் தொகுதியை 1945-ல் வெளியிட்டார்கள். பிற தாவர அட்டவணைகள் பொதுவில் தாவரங்களைப் பட்டியலை மாத்திரமே தந்தன. இவர்களின் ஆய்வுத் தொகுதி ஒரு இலட்சம் தாவரங்களை அவற்றின் குரோமோசோம் எண்ணிக்கைகளுடன் விரிவாக விளக்கியது. இது கலப்பினத் தாவரங்களை உருவாக்குபவர்களுக்கு பெரும் உதவியாக அமைந்தது. போர்க்கால இங்கிலாந்தில் அவருக்கு ஜீவித்திருப்பதற்கான அற்ப உதவித்தொகை மாத்திரமே வழங்கப்பட்டது. ஆராய்ச்சிக்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், க்யூ தோட்டம், ஜான் இண்ஸ் ஆய்வகம், என்று மாறிமாறித் தொடர்ச்சியாகப் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அந்தக்காலங்களில் லண்டன் மாநகரைச் சுற்றிலும் தொடர்ச்சியாக குண்டுமழை பொழிந்துகொண்டிருந்த அபாயம் இருந்தது. அவருடைய அம்மா இறந்த சேதிகூட பல நாட்கள் கழித்துதான் அவருக்குத் தெரியவந்தது.  அந்த நாட்கள் அவர் அபாரமான மன அழுத்தத்தில் இருந்தார். ஆனால் இவற்றுக்கிடையேதான் ஜானகி தன் வாழ்நாளின் மிக முக்கியமான ஆய்வுகளைச் செய்து முடித்தார்.  

படம்: இங்கிலாந்தின் வைஸ்லி தோட்டத்திலிருக்கும் ஜானகி அம்மாள் உருவாக்கிய மக்னோலியா கலப்புத் தாவரம்,  Magnolia kobus Janaki Ammal என்று பெயரிடப்பட்டது. (பட உதவி – ராயல் தோட்டக்கலைக் கழகம், இலண்டன்)

ஒன்பது வருடங்களுக்குப் பிறகு இந்தியா திரும்பிய ஜானகி அம்மாள், உடனே புதுவகைத் தாவரங்களைத் தேடி சிம்லா, நேபாளம் பகுதிகளுக்குப் பயணம் மேற்கொண்டார். இமயமலைப் பகுதிகளில் தாவரத் தேடல்களில் ஈடுபட்ட முதல் பெண் ஜானகி அம்மாள்தான். 1949-ல் அவர் ஜவஹர்லால் நேருவைச் சந்தித்து தன் ஆய்வுகளைப்பற்றி உரையாடினார். 1951-ல் பிரான்ஸின் தேசிய வேளாண் நிறுவனத்தின் மரபியல் ஆய்வகத்தில் (Laboratoire de génétique, Institut National Agronomique) ஆறுமாதங்கள் வருகைதரு ஆய்வராகப் பணியாற்றினார். அடுத்த மூன்று வருடங்களுக்கு இந்தியாவின் தாவரவியல் துறையை மறுஉருவாக்கம் செய்யும் பணியை நேரு அரசாங்கம் அவருக்கு அளித்தது. அத்துடன் அவர் அலஹாபாத் நகரில் புதிதாக உருவாக்கப்பட்ட இந்திய தேசிய தாவரவியல் நிறுவனத்தின் முதல் இயக்குநராக நியமிக்கப்பட்டார். உணவுப் பற்றாக்குறையைப் போக்க அவசரமாக உயர் கலப்பினத் தாவரங்களை உருவக்கும் முயற்சி நாடுமுழுதும் மேற்கொள்ளப்பட்டது. அப்போது தொலைநோக்குடன் அந்த ஆய்வுகளில் சூழியல், மரபுசார் வேளாண் முறைகள், இயற்கைத் தாவரப் பாதுகாப்பு போன்றவற்றையும் இணைத்து ஆராய அவர் வற்புறுத்தினார்.

படம்: அமெரிக்காவின் ஓக்ரிட்ஜ் தேசிய ஆய்வுக்கூடத்தில் கதிரியக்கத்தைக் கொண்டு தாவரங்களில் மரபுப் பிறழ்வுகளை உருவாக்கும் முறையை ஜானகி அம்மாள் கற்றுக்கொண்டார். (ஏப்ரில் 1955)

1955-ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வகத்தில் கதிரியக்க அணுக்களைத் தாவரவியல் ஆய்வுகளுக்குப் பயன்படுத்தும் புதுச் செயல்முறைகளைப் பயின்றார். கதிரியக்கத்தினால் தூண்டப்படும் மரபுப் பிறழ்வுகள் (genetic mutations) குறித்து அங்கு கற்றுக்கொண்டவை சில வருடங்கள் கழித்து திருவனந்தபுரம் அருகிலிருக்கும் மோனசைட் (கதிரியக்கமுள்ள) மணற்பரப்புகளில் வளரும் தாவரங்கள் குறித்த சோதனைகளுக்குத் தூண்டுதலாக இருந்தன.  1955-ல் அவருக்குத் தாய்ப் பல்கலைக்கழகமான மிச்சிகனில் கௌரவ முனைவர் பட்டம் (Legum Doctor) வழங்கப்பட்டது. இந்த கௌரவப் பட்டத்தைப் பெறும் முதல் பெண் அவரே. அதற்கான மதிப்புரையில் “மிகவும் நுணுக்கமான மற்றும் துல்லியமான அவதானிப்புகளை மேற்கொள்ளும் திறன்கொண்ட அவர், தனது பொறுமையான முயற்சிகளின் மூலம், தீவிர மற்றும் அர்ப்பணிப்புள்ள அறிவியல் ஆய்வாளர்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறார்.” என்று பாராட்டப்பட்டார். அதன்பின் ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் நடந்த வென்னர் க்ரென் கருத்தரங்கில் உரையாற்றினார். ‘Man’s Role in Changing the Face of the Earth’ என்று தலைப்பிடப்பட்ட அந்த கருத்தரங்கில் பங்குபெற்ற ஒரே பெண் ஜானகி அம்மாள்தான்.

படம்: இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஜானகி அம்மாள் வேலை செய்த இலண்டனுக்கு அருகிலுள்ள ஜான் இண்ஸ் ஆய்வகத்தின் முகப்பு. அந்த ஆய்வுக்குழு செல்லியல், பூச்சியியல், தாவரவியல், பூஞ்சையியல் எனப் பலதுறை நிபுணர்களைக் கொண்டது. (பட உதவி: ஜான் இன்ஸ் நிறுவனம், கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தின் கீழ் வெளியிடப்படுகிறது) 

1957-ஆம் ஆண்டு இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் புலமைப் பரிசில் (fellowship) பெற்ற முதல் பெண் விஞ்ஞானி என்ற பெருமையைப் பெற்றார். தொடர்ந்து பல தேசிய, சர்வதேச விருதுகள் அவரைத் தேடி வந்தன. 1959-ஆம் ஆண்டு ஜம்மு நகரில் அமைக்கப்பட்ட செல்மரபியல் ஆய்வகத்தின் முதல் தலைவராகப் பணியேற்றார். 1962-ஆம் ஆண்டு கடினமான இமயமலைப் பகுதிகளில் இந்திய இராணுவத்தால் இரகசியமாக ஒழுங்கமைக்கப்பட்ட தாவரத் தேடல் பயணத்தை மேற்கொண்டார். இதன் நோக்கம் உயர் மலைப்பகுதிகளில் இராணுவத்தினருக்குத் தேவையான பயிர்களையும் அவற்றை வளர்க்கும் முறைகளையும் பற்றிய பரிந்துரைகளை வழங்குவது; அப்போது அவருக்கு வயது அறுபத்தைந்து. தன் எழுபத்திரண்டாவது வயதில் பம்பாயில் பாபா அணு ஆய்வுக் கழகத்தின் தாவரவியல் ஆலோசகராகப் பணியேற்றார். ஒரு வருடத்திற்குப் பிறகு தன் அறிவியல் வாழ்க்கையைத் துவங்கிய சென்னைக்கு மீண்டும் திரும்பினார்; இந்த முறை சென்னைப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் உயர் ஆய்வு மையத்தின் தகைசால் பேராசிரியராக (Professor Emeritus). சென்னை மதுரவயலில் தனக்கான ஒரு ஆய்வுப் பண்ணையை உருவாக்கிக் கொண்டு அங்கேயே குடியேறினார். அங்கே தென்னிந்தியப் பழங்குடியினரின் இனத்தாவரவியல் (ethonobotony) குறித்த ஆய்வுகளை மேற்கொண்டார். இதில் குறிப்பாக பாரம்பரிய மூலிகைத் தாவரங்களைப் பாதுகாத்தலும், கலப்பின முறையில் அவற்றின் திறன்களை மேம்படுத்துவதும் இலக்குகளாகக் கொள்ளப்பட்டன. இணையாக, கேரளாவின் ஷோரனூரில் இன்னொரு மூலிகை ஆய்வுத் தோட்டத்தையும் உருவாக்கினார்.

எண்பதாவது வயதை நெருங்கும்போது, 1977-ஆம் ஆண்டு அவருக்கு இந்திய அரசு பத்மஶ்ரீ கௌரவத்தை வழங்கியது. இது மிகவும் தாமதமாகத்தான் வழங்கப்பட்டிருக்கிறது. இவருக்கு முன், இவருடன் இணைந்து அல்லது இவருக்கு உதவியாளராகப் பணியாற்றிய பதினோறு தாவரவியலாளர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டிருந்தன. ஆறு பேருக்கு உயர் விருதான பத்மபூஷன் தரப்பட்டிருந்தது. இவர்களில் இந்திய தாவரவியல் துறையில் ஜானகி அம்மாளுக்கு இணையாகச் சொல்லச் கூடியவர் பசுமைப் புரட்சியை வழிநடத்திய எம்.எஸ். சுவாமிநாதன் ஒருவரே. பெண் என்ற ஒரே காரணத்தால் அவருக்கு இந்திய அரசின் பத்மஶ்ரீ தாமதமாகியிருக்கிறது, பத்மபூஷன் (அதற்கு முற்றிலும் தகுதியானவர் என்றபோதும்) ஒருபோதும் வழங்கப்படவில்லை. அவருக்கு முன்னர் அறிவியல் துறையில் அஸிமா சட்டர்ஜிக்கு 1975-ஆம் ஆண்டு பதமபூஷன் விருது அளிக்கப்பட்டது. 1969-ல் சாவித்ரி சாஹ்னி என்பவருக்கு பத்மஶ்ரீ வழங்கப்பட்டது, இவரை அறிவியலாளர் என்பதைவிட அறிவியல் மேலாளர் என்பதுதான் சரியாக இருக்கும். இத்தனைக்கும் இந்தியாவின் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி, நிதி அமைச்சர் கிருஷ்ணன் மேனன் போன்றவர்களுக்கு ஜானகி அம்மாளின் அறிவியல் சாதனைகளையும் பன்னாட்டு கௌரவங்களையும் பற்றி மிக நன்றாகத் தெரியும்.

படம் : சென்னை மதுரவயல் ஆய்வுப் பண்ணையில் தன்னுடைய ஆராய்ச்சி மாணவர்களுடன் ஜானகி அம்மாள் (1980), அப்போது அவருக்கு வயது 82. 

தன் வாழ்வின் இறுதி நாட்களில் ஜானகி அம்மாள் சூழியல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தன்னை இணைத்துக்கொண்டார். 1970-ஆம் ஆண்டு கேரள அரசு பாலக்காடு மாவட்டத்தின் அமைதிப் பள்ளத்தாக்குப் பகுதியில் ஒரு நீர்மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை முன்னெடுத்தது. இதற்காகக் காட்டுப் பகுதிகளை அழித்து மாபெரும் நீர்த்தேக்கம் ஒன்றை அமைக்கும் திட்டமிருந்தது. பல சூழியல் குழுக்கள் இதை எதிர்த்தன. இதனால் சிங்கவால் குரங்கு உள்ளிட்ட பல முக்கிய உயிரிகள் முற்றாக அழிந்துபோகும் அபாயம் இருப்பது சுட்டப்பட்டது. மேலும் அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினரின் வாழ்வாதாரமும் வெகுவாகப் பாதிக்கப்படும். ஆனால், கேரளா உறுதியாக காடழிப்புக்கான வரைவை உருவாக்கிக் கொண்டிருந்தது. இந்நிலையில் ஜானகி அம்மாள் அமைதிப் பள்ளத்தாக்கைக் காப்போம் (Save Silent Valley) என்ற அமைப்புடன் இணைந்து செயல்படத் தொடங்கினார். சென்னைப் பல்கலைகழகத்தின் தாவரவியல் துறை தகைசால் பேராசிரியர் என்ற உயர் தகுதியிலிருந்து ஜானகி அம்மாள் அமைதி பள்ளத்தாக்கின் உயிர்ப்பன்முகத்தைக் காக்க விடுத்த வேண்டுகோள் தவிர்க்கமுடியாத கவனத்தைப் பெற்றது. கூடவே, அவர் இதை ஒரு பன்னாட்டுச் செயல்பாடாகவும் முன்னெடுக்க முயன்றார். அதற்காக, தன் நெருங்கிய சகாவான சிரில் டார்லிங்டனுக்கு “நான் ஒரு துணிச்சலான செய்கையைத் துவக்கப்போகிறேன். குந்தி ஆற்றின் நீரால் விரைவில் மூழ்கப் போகும் அமைதிப் பள்ளத்தாக்கு மரங்கள் குறித்த குரோமோசோம் மதிப்பாய்வைத் துவக்கவிருக்கிறேன். நான் என்னால் இயன்றதைச் செய்துகொண்டிருக்கிறேன். ஆனால் கேரளாவின் அரசு எந்திரம் தன்வழியில்தான் போகும் என்று தோன்றுகிறது” என்று கடிதம் எழுதினார். உலகின் பழம்பெரும் பசுமைக்காடுகளை அழிவிலிருந்து காப்பாற்ற அவர் சர்வதேச அரங்குகளில் விவாதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஜானகி அம்மாளைப் போலவே பறவையிலாளர் சாலிம் அலி, பாம்பியலாளர் ரோமுலஸ் விட்டேக்கெர், வேளாண் நிபுணர் எம்.எஸ். சுவாமிநாதன், சூழியல் கணிதவியலாளர் மாதவ் காட்கில் போன்ற பேரறிஞர்களும் நீர்மின் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார்கள். கேரள, மத்திய அரசுகள் தங்கள் நிலையைத் தொடர்ச்சியாக மாற்றிக்கொண்டிருந்தன. இந்தச் சிக்கல்களுக்கு இடையே தன் 82-ஆவது வயதில் மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் மானியம் பெற்று ‘அமைதிப் பள்ளத்தாக்கின் தாவரப் பன்முகம் குறித்த செல்மரபியல் ஆய்வு’ என்ற களத் திட்டத்தைத் துவங்கினார்.

1978-ஆம் ஆண்டு கோயம்புத்தூரின் இந்திய தாவரவியல் அளவைக் கழகத்தின் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தாவரக் குடும்பத்துக்கு ‘ஜானகியா’ என்ற பெயரைச் சூட்டியது.  அந்தக் குடும்பத்தின் முதல் தாவரம் Janakia arayalpathra.  நேரு, அப்துல் கலாம் போன்றவர்களின் பெயர்கள் ஒரு தனிப்பட்ட தாவரத்துக்கு (பெரும்பாலும் கலப்பு முறையில் உருவாக்கப்படுவது) சூட்டப்பட்டிருக்கின்றன. உலகம் முழுவதும் இருக்கும் 728 தாவரக் குடும்பங்களில் 4%-க்கும் குறைவானவையே பெண்ணின் பெயரைக் கொண்டவை. இந்தியர் ஒருவரின் பெயர் கொண்ட தாவரக் குடும்பம் ஒன்றே ஒன்றுதான் – ஜானகியா.

1979-ஆம் ஆண்டு டார்லிங்டனுக்கு ஒரு கடிதம் எழுதினார். அவரிடமிருந்து ஜானகி அம்மாளுக்கு ஒரு ஆண்டுக்கும் முன்னர் எழுதிய கடிதத்துக்குப் பதில ஏதும் வந்திருக்கவில்லை, அது வழக்கத்துக்கு மாறானது. எனவே கவலை தொனிக்க, “நீங்கள் உடல் நலமாக இருக்கிறீர்கள், அடுத்த புத்தகத்தை எழுதிக் கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். உங்கள் முந்தைய புத்தகத்தை விரும்பிப் படித்தேன், அதிலிருந்த சில பகுதிகள் என்னைத் தொந்தரவு செய்தாலும்கூட” என்று எழுதினார். ஜானகி குறிப்பிட்டது The Evolution of Man and Society என்ற புத்தகத்தை; அதில் அவர் தீவிர இனவெறிக் கருத்துகளை முன்வைத்திருந்தார். அது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது. ஆனாலும் டார்லிங்டன் தன் இனவெறி கருத்துகளில் உறுதியாக இருந்தார். அந்தக் கடித்தில் ஜானகியின் உணர்ச்சிகள் ஐம்பதாண்டுகளுக்கு முன் எப்படி இருந்ததோ அதே தீவிரத்துடன் இருந்தன. “நான் உங்களை எப்போது காணப்போகிறேன்? – நீங்கள் இறப்பதற்கு முன் நான் இறந்துவிடுவேனோ – உங்களுடன் இருக்க ஏங்குகிறேன். என்றென்றும் உங்கள், ஜானகி” என்று முடித்திருந்தார். ஆனால் ஒரு வருடத்துக்குள், ஜானகிக்கு முன்னால் சிரில் டார்லிங்டன் இறந்துபோனார்.

1984-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கேரள அரசாங்கம் அமைதிப் பள்ளத்தாக்கை தேசியப் பூங்காவாக அறிவித்தது. இதன் மூலம் அங்கே காடுகளை அழிப்பதற்கும் மின்நிலையத்தை உருவாக்குவதற்கும் தொடங்கப்பட்ட, நீண்ட காலமாக சர்ச்சைகளில் இருந்த, திட்டங்களுக்கு ஒரு முடிவு வந்தது. ஆனால், துரதிருஷ்டவசமாக அந்த அறிவிப்புக்கு எட்டு மாதங்களுக்கு முன்னரே, பெஃப்ருவரி 7, 1984 அன்று சென்னையில், தன் எண்பத்தாறாவது வயதில், ஜானகி அம்மாள் இயற்கை எய்தினார். அவருடைய கடைசி சில ஆண்டுகளுக்கு அமைதிப் பள்ளத்தாக்கு முழுவதும் நீரால் மூழ்கிப்போய் அங்கிருக்கும் உன்னத உயிர்ப்பன்முகம் அழிக்கப்படுமோ என்ற அச்சத்துடனேயே வாழ்ந்தார். வாழ்வின் இறுதி நாட்களில் சென்னை மதுரவயலில் தான் எழுப்பிய ஆய்வுக்கள நிலையத்திலேயே தங்கினார். அவருடைய சொத்துக்கள் என்று இருந்தவை சேகரித்த புத்தகங்களும் ஆவலுடன் பாதுகாத்த அறிவியல், கடிதத் தொகுப்புகளும்தான். அங்கிருந்த கொட்டிலின் ஒரு ஓரத்தில் அவருக்கென்று ஒரு தனி அறை இருந்தது. அதில் தூங்க ஒரு கட்டிலும் கொசுவலையும் மாத்திரம்தான் இருந்தன.

படம் : கொடைக்கானலைச் சேர்ந்த கிரிஜா, வீரராகவன் இணையர் 2018-ஆம் ஆண்டு உருவாக்கிய கலப்பின ரோஜா. Rosa clinophyla என்றே ஒரே வெப்பமண்டல ரோஜாவின் கலப்பில் அவர்கள் உருவாக்கிய இதற்கு ஜானகி அம்மாளின் பெயரைச் சூட்டினார்கள். அது பன்னாட்டு ரோஜா கழகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பட உதவி – ஜான் இண்ஸ் நிறுவனம்.

முற்றிலும் புதுமையான குரோமோசோம் விளைவுகளைக் கண்டபோது ஜானகி அம்மாள் பரவசமடைந்தார். மறுபுறம் வழிதவறிய ஆடுகள் ஒரு விலைமதிப்பற்ற ஆராய்ச்சிச் செடியைத் தின்று பல மாத உழைப்பை வீணடித்தபோதும், அரைகுறைத் தகுதியுள்ள இடைநிலை மேலாளர்கள் தன் ஆய்வுக் கட்டுரைகளை வெளிய்ட அனுமதி வழங்க தாமத்தித்தபோதும் சொல்லமுடியாத துயரத்திலும் விரக்தியிலும் மூழ்கிப்போனார். எந்த ஒரு நிலத்திலும் தனக்கான வேரைப்பதிக்காமல் எதுவும் தனக்குச் சொந்தமில்லை, சொந்தமென ஏதும் தேவையில்லை, என்ற நாடோடி வாழ்க்கை வாழ்ந்தபோதும், முழுப்புவியையும் தன் வீடாக மாற்றிக்கொண்டவர் ஜானகி அம்மாள். “இவ்வளவு பரந்த உலகில் வீடில்லாமல் இருப்பது விசித்திரமாக இருக்கிறது, ஆனால் வீடே விரிந்து உலகத்தை நிரப்பியது போலிருக்கிறது. நான் எங்கு போனாலும் அங்கே அன்பைத்தான் பார்க்கிறேன் – என்னுடைய சொந்த நாட்டில் நான் பெறுவதற்கும் அதிகமாகவே!” என்று சொன்னார்.

வெங்கட் ரமணன்

அவர் ஒரு உயிரணு மரபியல் நிபுணராக, கள உயிரியலாளராக, தாவரப் புவியியலாளராக, தொல்லுயிர்த் தாவரவியலாளராக, பரிணாம வகைப்பாட்டியலாளராக, சோதனைமுறை தாவர வளர்ப்பாளராக, இனத்தாவரவியலாளராக, வரலாற்றாசிரியராக, இனவரைவியலாளராக, இயற்கை ஆர்வலராக, களஆய்வாளராக மற்றும் தாவரச் சூழலியலாளராக எனப் பலதரப்பட்ட வாழ்க்கைகளை மூன்று கண்டங்களுக்கிடையே அரை நூற்றாண்டுக்கும் மேல் வாழ்ந்தார். இந்தப் பெயரடைகள் மையம்-தவிர்க்கும் விளிம்புநிலை அறிவியல் பண்பாட்டுடன் எளிதில் அடையாளம் காணப்படக்கூடியவை. ஜானகி கைக்கொண்டது எண்ணற்ற அறிவுத் துறைகளுக்கு இடையேயான, ஆழமான மற்றும் அடர்த்தியான, பல் அடுக்கு அறிவியல் முறைமை; அது சிக்கலான, தனித்துவமான, தொடர்புகளையும் ஊடாட்டங்களையும் கவனமாக ஆராய்ந்ததன் விளைவாக உருத்திரண்டது. அவருக்கு இணையான சமகால இந்திய (ஆண்) மரபியல் வல்லுநர் ஒருவரைக்கூட அடையாளம் காணுவது சாத்தியமற்றது.

*

மேலதிக வாசிப்புக்கு:

  1. Chromosome Woman, Nomad Scientist: E. K. Janaki Ammal, A Life, Savithri Preetha Nair, Taylor & Francis (2022).
  2. Gender, Race and Science in Twentieth Century India: E. K. Janaki Ammal and the History of Science, Vinita Damodaran, History of Science. Vol. 51, Page 283 (2013).
  3. Janaki Ammal, C. D. Darlington and J. B. S. Haldane: scientific encounters at the end of empire. Vinita Damodaran. Journal of Genetics, Vol. 96, (2017) Page 827.
  4. The Man Who Invented the Chromosome: A Life of Cyril Darlington, Harman, O. S., Harvard Univ. Press, Cambridge, (2004).
  5. Negotiating in/visibility Women, science, engineering and medicine in the twentieth century, Edited by Amelia Bonea and Irina Nastasă- Matei, Manchester University Press 2025
  6. Joseph, Chandrasekaran (6 January 1978). “Janakia arayalpathra, A new genus and species of Periplocaceae from Kerala, South India”. Pascal and Francis Bibliographic Databases. ISSN 0971-751X.

***

கட்டுரையாசிரியர் குறிப்பு: கட்டுரையின் இறுதியில் நான் எழுதிய, “அவருக்கு இணையான சமகால (ஆண்) மரபியல் வல்லுநர் ஒருவரைக்கூட அடையாளம் காணுவது சாத்தியமற்றது.” என்ற வாக்கியத்திற்கு உலகளாவிய பிற ஆண் மரபியலாளர்களைச் சுட்டும் கருத்துகள் வந்திருப்பதாகத் தெரிகிறது. அந்த வாக்கியம் மிகச் சரியாக ‘அவருக்கு இணையான சமகால இந்திய (ஆண்) மரபியல் வல்லுநர் ஒருவரைக்கூட அடையாளம் காணுவது சாத்தியமற்றது.’ என்றிருந்திருக்க வேண்டும். கட்டுரையின் போக்கைக் கொண்டு நான் இந்தியர்களைத்தான் குறிப்பிடுகிறேன் (உலகெங்கிலும் நிறைய ஆண் மரபியல் மாமேதைகள் இருந்தார்கள் என்பது தெளிவு) என்பதை ஊகிக்க முடியும்.

***

4 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *