கமலா சுரய்யா கவிதைகள் – சுகுமாரன்

தமிழில் கவி சுகுமாரன்

கமலா சுரய்யா

*

I want to be loved
And
If love is not to be had
I want to be dead; just dead

-Kamala Das
(Composition / Only the Soul knows How to Sing)

மாதவிக் குட்டி என்று அறியப்பட்ட கமலாதாஸ் 1999 டிசம்பர் 11 அன்று இஸ்லாத்துக்கு மதம் மாறினார். இந்தச் செய்தி மலையாள ஊடகங்களில் பரபரப்புக்குரியதாக இருந்தது. கேரளத்தின் கலை, பண்பாட்டுச் சூழலிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஏறத்தாழ ஓராண்டுக் காலம் இதைப் பற்றிய வாதங்களும் பிரதிவாதங்களும் நடந்தன. தாய் மதத்தினரும் தழுவிய மதத்தினரும் கமலாதாசைப் பெரும்பாலும் இகழ்ந்தே தத்தம் மத நம்பிக்கையை எடுத்துக் காட்டினார்கள். அந்த நாட்களைத் தனது வீழ்ச்சியின் காலமாகக் கவிதையில் பின்வருமாறு குறிப்பிட்டார் கமலாதாஸ்.

கடந்த பத்து மாதங்கள்
என்னுடைய வீழ்ச்சியின் காலமாக இருந்தன
நேசம் இழந்த காலம்
பேரவமானத்தின் காலம்

கமலாதாசின் மதமாற்றம் சில செய்திகளை எடுத்துக் காட்டின. மதம் என்பது பிறப்பிலேயே ஒருவருக்கு அமைவதல்ல. அவர் மேல் திணிக்கப் படுவது. மதப்பற்றாளர்கள் அனைவரும் உரிமை பாராட்டிக் கொள்வதுபோல மதம் வாழ்க்கை நிலையல்ல; அது ஒரு கருதுகோள். கருதுகோளையே மதங்கள் வாழ்க்கை என்று மக்களிடம் வலியுறுத்தி வந்திருக்கின்றன. இவற்றுக்கு நேர் எதிரானது கமலாதாசின் செயல். மனிதர்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று நம்பியவர். எனவே மதமாற்றத்தின் நேர், எதிர் விளைவுகளுக்கும் இலக்கானார். நடைமுறையில் இரண்டு மதங்களும் அவருக்குத் துயரத்தையே அளித்தன. பெண் என்பதால் துயரம் இரு மடங்காகவும் இருந்தது. அந்தத் துயரத்தில் விளைந்த கொந்தளிப்பை அடையாளம் காட்டுபவையே கமலா சுரய்யாவின் கவிதைகள்.

-சுகுமாரன்

*

கவிஞர் சுகுமாரன்

1

கூலிப்படை

அன்புதான்
நான் என்றோ தேர்ந்தெடுத்த மதம்
நீ என்னை நேசித்தபோது
அந்த மதத்துக்கு மதிப்புக் கூடியது
உன் பதற்றங்களையும்
பெருமூச்சின் தாளத்தையும்
காலடிகளின் நோவையும்
நான் ஏற்றுக் கொண்டேன்.
உன் மதத்தையும்.
ஆனால் உன் அடிவைப்புகள்
கூலிப் படையின்
அணிவகுப்பாக மட்டும் மாறின
உன்னுடைய மெய்யான எஜமானன்
அல்லாஹு அல்ல என்று
நான் புரிந்துகொண்டேன்
உன் படைத்தலைவர்களுக்குப் பயந்து
நீ என்னை விட்டு விலகினாய்
நான் உருவாக்கிய சிநேக சாம்ராஜ்ஜியத்தை
நீ முற்றிலும் மறந்தாய்
என் கைவளையத்தில் நீயில்லை
பிரிவின் முடிவற்ற துயர் மட்டுமே
என் உலகம் நொறுங்கும் ஓசை
காதுகளில் அலைமோதுகிறது
மரங்கள் பெயர்ந்து விழுகின்றன
பூக்களும் கனிகளும் மண்ணில் உதிர்கின்றன
வானம்பாடிக் கூடுகளும் உதிர்கின்றன
ஒவ்வொரு முட்டை நொறுங்கும்போதும்
சிதைக்கப்பட்ட கருவைப்போல
இன்னுமொரு நாள்
வாய்பிளந்து மடிகிறது.

*

2

என் காதலன்

என் மணமகனுக்குப்
பூமாலைகள் தேவையில்லை
அவனுக்குத்தான் கழுத்தில்லையே
என் மணமகனுக்குத்
தாம்பூலம் எடுத்து வைக்க வேண்டியதில்லை
மெல்லுவதற்குத்தான் வாயில்லையே
என் காதலன்
உடலில்லாத் தலைவன்
உடலும் உடலனும் மறைந்தாலும்
உண்மையாக நிற்பவன்

வழிப் போக்கர்களே, நீங்கள்
என் கொண்டாட்டத்தில் பங்கேற்பீர்களா?

*

3

வெட்டுக் கிளிகள்

வெட்டுக் கிளிகளின்
முற்றுகைத் தாக்குதலைப் பார்த்ததுண்டா?
பொற் கதிர்கள் நிறைந்த
நெல்வயல்கள் நோக்கிக்
கோரமான இரைச்சலுடன்
அவை வருகின்றன
சிறகுகளை வேகமாக அசைத்து
நரம்பைத் தளர்த்தும்
மேள வாத்தியம் இசைத்து
அவை வருகின்றன.
ஆயிரம் வெட்டுக் கிளிகள்
அநேகாயிரம் பசிகள்
என் தாகம்
அவற்றின் முழக்கமாக இருந்தது
என் தாகம்
அவற்றின் ஆக்கிரமிப்பாக இருந்தது

அமைதிக்கான வேட்கையுடன்
அன்பு வாய்க்கும் அடையாளங்கள் தேடிக்
காயம்பட்ட சிறகுகளுடன்
எத்தனைக் காதங்கள் பறந்தேன்
கடைசியில் உன் வயல்களில்
நான் விழுந்தேன்
கண்ணுக்குத் தெரியா உன் பாதங்களில்
முகம் தாழ்த்தினேன்

காருண்யவானான அல்லாஹ்
இனி எனக்கு எதுவும் வேண்டாம்
நீதான் பசியும்
பசியடக்கும் கனியும்
நீதான் தாகமும்
தாகம் தணிக்கும் நீரும்
யா, அல்லாஹ்
சுரய்யா இன்று பாதுகாக்கப்பட்டவள்.

*

4

காதல், காதல் மட்டும்

காதலிப்பவள்
கண்ணாடியில்
தன் முகத்தைப் பார்ப்பதில்லை
ஆனால் காதலனைப் பார்க்கிறாள்
அன்பனே
நான் உன்னை மட்டுமே பார்க்கிறேன்
மச்சமாக கூர்மமாக நரசிம்மமாக
உன்னையே நான் பார்க்கிறேன்
கண்ணாடியில்
நீ மட்டுமே பிரதிபலிக்கிறாய்
மதமில்லை அரசியல் இல்லை
கலாச்சாரத் தொங்கல்கள் இல்லை
காதலிக்கு காதல் மட்டுமே மதம்
ரத்தத் தமனிகளில்
நாதமாக ஓடுகிறது
கிருஷ்ணா உன் திருநாமம்
கண்ணாடியில்
காதலி காதலனைப் பார்க்கிறாள்
தன் முகத்தின் பிரதிபலிப்பை
அவள் இழந்துபோகிறாள்
மச்சமாகவும் கூர்மமாகவும் நரசிம்மமாகவும்
உன்னை நான் பார்க்கிறேன்
காதலர்களுக்குக் காதல் மட்டுமே மதம்
ரத்தத் தமனிகளினூடே
நாதமாக ஒழுகுகிறது
கிருஷ்ணா
கிருஷ்ணப் பிரபோ உன் திருநாமம்.

*

p.c:manisha raju

5

நிலத்தடி நீர்

காருண்யத்தின் புற ஓடுகள்
முரட்டுத்தனமானவை
வறண்ட கிழட்டு விழிகளுக்குப் பின்னிருக்கும் கண்ணீர்
நிலத்தடி நீர்போல
புலப்படாத மழைபோல
பிள்ளைகள் மறக்க முயலும்
கண்ணீர்
ஒரு நல்ல கணவன்
தாயை மறக்க வேண்டும்
முலைப்பாலைப்போல இனிமையான
கடந்த காலப் பாசத்தை மறக்க வேண்டும்
அதுதான் நாட்டு நடப்பு
அதுதான் வீட்டு நடப்பு.

*

6

கனவுகள்

ஓய்ந்த ஒட்டுண்ணிகள் போலாகிப் போன
கண்களால்
முன்பு ஒருமுறை
கனவு காண முடிந்தது.
எதார்த்தமற்றது எனினும்
நிறங்களும் சலனங்களும்
ஒவ்வொரு கனவையும் வாழ வைத்தன
மறதி
ஒவ்வொரு கனவையும் கடந்து வாழ
எனக்கு உதவியது
மறதி ஒவ்வொரு ஜென்மத்தையும் கடந்து வாழ
எனக்குக் கற்றுக் கொடுக்கும்.

*

7

வரும் இந்த வெள்ளிக்கிழமை

யா அல்லாஹ்
இனியாவது என்னைத் தண்டிப்பீராக
உன்னை விடவும்
அதிகம் நான் அவனை நேசித்து விட்டேன்
அவனுடைய வியர்வை மணத்தை நுகர்ந்து
நிறைவடைந்தேன் நான்
அவனுடைய வரிசை மாறாத பற்கள்
என் தஸ்பீக்காக மாறின
அவனுடைய உடலில்
புதையல் தேடித் துழாவிய
என் கைகளை வெட்டுவீராக

வரும் இந்த வெள்ளிக்கிழமை
நகர எல்லையில்
குன்றின்மேல்
என்னைக் கட்டிடுவீராக
அவனுடைய அழகை நுகர்ந்து
நிறைவடையாத கண்களைத்
தோண்டியெடுப்பீராக.

முறைபிசகித் துடிக்கும் இதயத்தைப்
பிடுங்கி எறிவீராக
அரண்மனைத் தோட்டத்தில்
நீரிறைக்கும் எந்திரம்போல்
என் நெஞ்சிலிருந்து
வெங்குருதி பெருகட்டும்
நான் நெறிகெட்டவள்
மனிதனை ஆராதித்தவள்
என் இணையின்
நாத ஆலாபனையைச்
சுகித்த என் காதுகள்
வானின் அசரீரிகளைக் கேட்டதுமில்லை
என் ஆனந்தக் களிப்பில்
சகல கட்டளைகளையும் நான் மறந்தேன்.

வரும் இந்த வெள்ளிக்கிழமை
அது நடப்பதாக
எனக்கான தண்டனை
அவனது திருவுடலில்
கொடிகளாகப் பற்றிப் படர்ந்த
என் கைகால்களை வெட்டி எறிக
அவனது தேன்மொழிகளை நுகர்ந்த
காதுகளை அறுத்தெறிக
அவனை முத்தமிட்ட அதரங்களைச்
சிதைத்து வீசுக
நேசித்துக் களைத்த என் இதயத்தையும்

பின்பு
எச்சங்களை
வாளின் எச்சங்களை
வெள்ளைப்பட்டில் பொதிந்து
கபரில் அடக்கம் செய்க

அல்லாஹு
காருண்யவானே
இனிமேலும் என்மேல்
கருணை காட்டாதீர்
தண்டனைக்காக இறைஞ்சும்
தாசி இந்த சுரய்யா.

*

*

8

வீழ்ச்சியா?

யா அல்லாஹ்
உன்னை நம்புவதாகச் சொல்கிறவர்கள்
என்னை முற்றிலும் நொறுக்கி விட்டார்கள்
ஆகாயப் பறவையை
அநாயாசமாகப்
புழுவாக மாற்றி விட்டார்கள்
ஒருபோது
என் வருகையைக் கொண்டாடியவர்கள்
இன்று என்னை ஏளனம் செய்கிறார்கள்
கொக்கரித்துச் சிரிக்கிறார்கள்
நோயாளிப் பிச்சைக்காரர்களைத்
திருமணக் கோரிக்கையுடன்
என் வாசலுக்கு அனுப்புகிறார்கள்
கடந்த பத்து மாதங்கள்
என் வீழ்ச்சியின் காலம்
நேசம் இழந்த காலம்
எனினும்
உன்னைச் சார்ந்தேயிருக்க
எப்படியோ நான் கற்றுக் கொண்டேன்
என் பிரார்த்தனை மொழிகள்
தவறாக உச்சரிக்கப்படுகின்றன என்றும்
என் கூந்தல் முடிப்பு ஆபாசமென்றும்
ஆயுளின் அந்திவரை
நான் உண்மையான முஸ்லிம் ஆகமாட்டேன் என்றும்
என் விருந்தாளிகள்
பெயர் அறியாதவர்கள்
முகம் அறியாதவர்கள்
சொல்லிச் சொல்லிச் சிரிக்கிறார்கள்
தம்பிரானே
நான் யார்?
நீ மட்டுமே
உறவாக மிஞ்சுகிறாய்
உன்னிடம் நான் எதிர்பார்ப்பது
உண்மையை
அழிவற்ற உண்மையை.

*

9

ஒரு காதல் கவிதை

நீ எனக்குக் காட்டுத் தேனைப் பரிசளித்தாய்
நான் உனக்கு நேசத்தை
என் நேசம்
காட்டுத் தேன் போன்றது
அதில் வசந்தங்கள் கரைந்திருக்கின்றன
இரவில் என் கைகள்
உன் சரீர பாரத்தால்
சோர்ந்து போகின்றன

ஆனால்
நீ தொலைவில் எங்கோ
இன்னொருத்தியின் உடல்மீது
சரிந்து கிடந்து உறங்குகிறாய்
எத்தனை காலமாக
ஒரு வட்டத்தின் விளிபில்
நானும் நீயும்
ஒருவரை ஒருவர் தேடியலைகிறோம்
இன்று
நான் உன்னைப் பின்தொடர்கிறேனா
இல்லை
நீ என்னைப் பின்தொடர்கிறாயா
என்றுகூட எனக்குத் தெரியவில்லை

விடியல்
அநேக காதங்கள்
தொலைவிலிருப்பதாகத் தோன்றுகிறது
இரவு
என்னை உறக்கமற்றவளாக்குகிறது
உன் மென்குரலை
வேறொரு பிறவியில்தான் கேட்டேனா?
என் வீட்டு வாசலில்
எதற்காக மௌனமாக நிற்கிறாய்?
உன் மௌனம் என் காதில்
பெரும் பறை முழக்குகிறது
என் காலடியில்
ஒரு தேவாலயத்தை எழுப்பியது யார்?
பிரார்த்தனை மணிகள்
என் காதில் ஓயாமல் முழன்குகின்றன

சொந்த எல்லைகளை மறந்து ஓடும்
நதி நான்
ஓர் அந்திப் பொழுதில்
நீ என்னைச் சந்தித்தபோது
அந்த நதி
அணையுடைத்துப் பாய்ந்தது.
இனி யாராலும்
அந்த ஓட்டத்தை அடக்க முடியாதோ?
என் பாழ் ஜீவிதம்
உன் விளையாடுப் பொம்மைகளில்
இன்னொன்றாக மாறியது
எந்த வேளையில்?

நீ பண்டிதனாக இருந்தாய்
அறிவின் நிலவொளிக் கதிர்களை
சுற்றிலும் சொரிந்துகொண்டு
சஞ்சரித்தாய்
இன்று நீ ஞானி
தகிக்கும் சூரியன்
அன்பின் இன்றியமையாமையை
கடைசியிலாவது நீ புரிந்துகொள்வாயா என்று
பயத்துடன் யோசிக்கிறேன்

சூரியனில்
நான் பொசுங்கிப் போவேனோ?

நம் வசம் ஆயுதங்களாக
நமது மதங்கள் மட்டுமே இருந்தன
அவற்றைக் கைவிட்டுத்
தரையில் வீழ்த்தித்தான நாம்
அன்னியோன்னியமாக
ஆலிங்கனம் செய்து கொண்டோம்

குற்றவாளிக் கூண்டில் நிற்பவனின்
முகபாவனையுடன்
நீ என் முன்னால் நில்லாதே
உன் காதலியின் முன்னால்
நீ பயப்படுவது எதனால்?
நீ நிரபராதி, களங்கமற்றவன் என்றுதானே
நான் உன்னை
என்னில் நுழைய அனுமதித்தேன்

தொலைந்துபோன
இளமையின் புதையல்களை
நீ
என்னில் தேடுகிறாய்
உன் கடன்
எனக்கு அந்திம நீர் வார்ப்பது மட்டுமே
என் இதயத்தின் நரம்புகளைக்
கொரித்துத் தேய்ந்த நகமுள்ள
விரல்களால் மீட்டி
நீ சதா பாடுகிறாய்

இனி நமக்கு முதலிரவுகள்
உறக்கமற்ற உடல்கள்

நான் தற்கொலைப் படையில் சேர்ந்தது
என்னைப் பலிகொடுக்கத்தான்
காதல்
சுயப் பலியல்ல என்றால்
வேறென்ன அதன் பொருள்?

*

*

One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *