சந்தியா என்.பி. கவிதைகள் – சுகுமாரன்

பெண்வழிகள் 

பெண்வழிகள் என்ற தலைப்பில் மலையாளப் பெண் கவிஞர்கள் பத்துப் பேரின் எண்பது கவிதைகள் அடங்கிய தொகுப்பை 2005 ஆம் ஆண்டு மொழிபெயர்த்துத் தொகுத்து வெளியிட்டேன். காலச்சுவடு வெளியீடாக வந்த  நூல் குறிப்பிடத் தகுந்த கவனத்தையும் பெற்றது. 1950 முதல் 2000 வரையிலான ஆண்டுகளில் கவிதையாக்கத்தில் ஈடுபட்டிருந்தவர்களில்   தனி அடையாளமும் வாசக ஏற்பும் பெற்றவர்கள் என்று நான் கருதியவர்களிலிருந்து அந்தக் கவிஞர்களைத் தேர்ந்தெடுத்திருந்தேன். பெண் வழிகள் (2005) தொகுப்புக்குக் கிடைத்த வரவேற்பு பின்னர் கவிதையுலகில் அறிமுகமானவர்களையும் உள்ளடக்கிய இன்னொரு தொகுப்பை உருவாக்கும் எண்ணத்தையும் உந்துதலையும் கொடுத்தது.

எனினும் அந்த எண்ணம் உடனடியாகச் செயல் வடிவம் பெறவில்லை. இருபது ஆண்டுகள் கடந்தன. இந்தக் காலப் பகுதியில் புதிதாக எழுதவந்தவர்களின் கவிதைகளை முடக்கமின்றி வாசிப்பில் பின் தொடர்ந்திருக்கிறேன். புத்தாயிரத்தின் தொடக்கம் முதல் இன்றுவரை கணிசமான அளவில் பெண்கள் எழுதுகிறார்கள். அவர்களது கவிதைப் பொருளும் மொழியும் புதிய திசையில் செல்கின்றன என்ற அவதானிப்புகள் மனதில் பதிந்தன. அதன் விளைவே இப்போது பெண்வழிகளுக்குத் தொடர்ச்சியை அளித்திருக்கிறது. தொடர்ச்சியை வலியுறுத்தவே இந்தப் புதிய முயற்சிக்கும் பழைய தலைப்பே வழங்கப்படுகிறது.

மனித நடமாட்டம் அதிகரிக்கும்போது புதிய வழிகளும் உருவாகின்றன. இந்த நியதி கவிதைக்கும் பொருந்தும். புதிய நூற்றாண்டில் தமக்கான வழிகளைச் சமைத்து வருபவர்களில் சிலரது கவிதைகளை இந்தப் பகுதியில் இடம் பெறும் மொழியாக்கத்தில் முன்வைக்க விரும்புகிறேன். இது பெண் வழிகளின் இரண்டாவது வரைபடம். முந்தைய தொகுப்பில் இடம்பெற்ற சில கவிஞர்களை இதிலும் காணக் கூடும். அவர்கள் கவிதையைத் தங்களது ஊடகமாகக் கருதுவதும் அயர்ச்சியின்றித் தொடர்ந்து இயங்கி வருவதுமே  காரணம்.

சுகுமாரன்

*

சந்தியா என்.பி. கவிதைகள்

(தேர்வும் தமிழாக்கமும்: சுகுமாரன்)

சந்தியா என்.பி.

*

1 அலமாரியில் கவிஞர்கள்

விசேஷ வேளைகளில்மட்டும்
உபயோகிக்கும்
சில சமையலறைப் பாத்திரங்கள்போலத்தான்
கவிஞர்கள்

விசேஷங்களின் முடிவில்
கழுவித் துடைத்து
அலமாரிகளில்
அடுக்கிவைப்போம் நாம்

இன்னொரு விசேஷம் வரும்வரை
தட்டாமல் முட்டாமல்
அசைந்து ஓசையெழுப்பாமல்
அடங்கியிருக்கும் அங்கே

தெரியாமல் யார் கையாவது
படுவதுபோதும்
எதிர்பாராமல் இதயம் திறந்துகொள்வதுபோல
எல்லாம் பட்பட்படாரென்று
உருண்டு தரையில் விழ.

*

2 இரட்டைக் கூர்மையுள்ள அம்பு

நீ என்னை
உனது தற்கொலைப் படையாளியாக
உபயோகிக்க வேண்டும்
நேரம் வாய்க்கும் போதெல்லாம்
உரைகல்லில் தீட்டி
முனையைக் கூராக்க வேண்டும்

பளீர்க் கூர்மையுடன்
உனது அம்பறாத்தூணியில்
நான்
மூச்சடக்கிக் கிடப்பேன்
உனது இலக்கை
மிக விழிப்புடன்
நானும்
நோக்குவேன்

நீ உறங்கும்போது
சுவரில் சாய்த்துவைத்த
மூலையிலிருந்து
காதல் மினுக்கத்துடன்
நான்
உன்னைப்
பார்ப்பேன்.

சித்திரவேலை செய்து
எழிலாக்கிய என்னைக்
கையிலேந்தி நீ
அமைதியாகப்
பார்த்துக்கொண்டிருக்கும்போது
நானும்
அவளைப்
பார்ப்பேன்

நீ பார்த்துக் கொண்டிருக்கும்
அவளுடைய
பொங்கித் ததும்பும்
மார்பை
ஊசிக் கூர்மையுடன்
நானும் பார்ப்பேன்

வாய்ப்புக் கிடைக்கும்போது
என் முனைக் கூர்மையால்
அங்கே ஒரு
உதிரப் பளபளப்பை
உனக்குத் தெரியாமல்
ஏற்படுத்த யோசிப்பேன்

உன்னால் ஒருபோதும்
எனது
இரட்டைக் கூர்மையைப்
பார்க்கவே முடியாது.

*

3 இரண்டு முத்தங்கள்

இரண்டு முத்தங்களை
நான் பத்திரமாக வைத்திருக்கிறேன்

ஒன்று
இனி ஒருபோதும்
வெளியில் எடுக்க முடியாதது

இரண்டாவது
இப்போதும்
உதட்டில் உட்கார்ந்திருப்பது

இரண்டும்
எனக்கு மிகவும் வேண்டியவர்களுக்கானவை
எனினும் கொடுக்க முடியாதவை

என் கூச்சம் தீரும்வரை
காத்திருக்க முடியாமல்
அப்பா போய்விட்டார்

மகன்
நான் வளர்ந்து விட்டேன் என்று
எப்போதும் என்னைப் பின்னுக்கு இழுக்கிறான்

இரண்டு முத்தங்களிருக்கின்றன இப்போதும் என்னிடம்

ஒருபோதும்
வெளியில் எடுக்க முடியாதவை
மரத்திலேயே தங்கிவிட்ட காய்களைப்போல.

*

4 உடையாத பெண்

ஆடுகளத்தில் ஒற்றையாக ஒரு பந்து

கொடும் அமைதி

கூச்சல் ஒரு நொடி
தடைபட்ட காலரித் தொண்டை
சட்டென்று
ஒரு கால் பறந்து வந்து
பந்தை ஓங்கி அடிக்கும்
எம்பிப் பறந்து
காற்றில் வட்டமிட்டு
எவர் தலையிலோ மோதி
மார்பில் முட்டி
மீண்டும் ஏதேதோ கால்களுக்கிடையில்
உருண்டு விழும் பந்து

ஒரே நேரத்தில்
இரு பக்கமும் இழுபடும்
தனித்த இரு கரங்கள் போலப் பந்து
பிளக்க முடியாத நொடி-
ஒரு புறமாக உருண்டோடுகிறது பந்து

மீண்டும் கால்களுக்கிடையில் சிக்கி
வலைக்குள் உருண்டோடுகிறது பந்து

காலால் உதைபட்டுக்
காற்றில் தெளிவற்ற சமிக்ஞைகள் காட்டி
ஏமாற்றத்துடன் தரையில் விழுகிறது பந்து

காலரியிலிருந்து பெண்கள்
ஆடுகளத்தைப் பார்க்கும்போதெல்லாம்
ஆடுகளத்தில்
ஒற்றையில் ஒரு பெண்
பிளக்க முடியாத ஒரு நொடி.

*

5 ஒருமுறை மட்டும்

வழியோரத்தில் இரு புறமாக
இரண்டு மரங்கள் நின்றிருந்தன
பிறவிப் பகைவர்களைப்போல.

ஒன்றில் பூப் பூக்கும்போது
மற்றதில் பூ உதிரும்

ஒன்றில் இலையுதிரும்போது
மற்றதில் துளிர்விடும்

ஒருபோதும் அவை
ஒன்றாகப் பூத்ததே இல்லை

ஒருமுறை
ஒருமுறை மட்டும்
ஒருநாள் மட்டும்
அவற்றில்
ஒன்றாகப் பூக்கள் பூத்தன

அதைப் பற்றி
நான்
சொல்லவே மாட்டேன்.

*

6 கேட்கவில்லையா?

காயப் போட்ட துணி
காற்றில் பறந்துபோய்
எங்கோ விழுவதுபோல
எங்கோ விழுந்திருக்கிறாள் பெண்

யார் என்னைக்
கண்டெடுப்பார்?
பழையபடி
கொடியில்
விரித்துப் போடுவார்?

எதற்கு விரிக்க வேண்டும்?
முழுதாகக் காய்ந்து
‘நறநற’வென்று ஒலிப்பது
கேட்கவில்லையா?

*

7 துக்கம்

மணமற்ற
நிறமற்ற
அளவு
எவ்வளவென்று
சொல்ல முடியாத
ஒரு பூ

ஒவ்வொரு இதழ்
கூடிக் கொண்டேயிருக்கும்
ஒவ்வொரு நொடியும்

இதழ்கள்
விரிந்து
கிளையில் தங்கமுடியாமற் போகும்

ஒரு பக்கமாக
வளையும் கிளை

மண்டியிட்டு
நிலத்தில் தலைபதித்துப்
பிரார்த்தனை செய்யும் மனிதனென்று
தோன்றும் செடி
நிலத்தில் முட்டி நிற்கும்

சூரியன்
எப்போது உதிக்கும்?

காற்றிலாடும் பூ
மணலில்
எழுதிக் கொண்டேயிருக்கிறது

சூரியன் மட்டுமே
வாசிப்பதற்கான
வாக்கியங்களை.

*

8 பாவம் தெய்வம்

தெய்வங்கள்மேல் முட்டிக்கொள்ளாமல்
நடக்க முடியாத வழியில்
அவசரமாக நடக்கும்போது
செருப்பின் வார் அறுந்தது

இன்னொரு தெய்வத்துடன்
சண்டையிடும் தெய்வத்தின் அருகில்
என் செருப்பைக் கழற்றிவிட்டு
இழுத்து நடக்கிறேன்

நீண்ட தூரம் போய்க்
கால் வலித்ததும்
மறு யோசனையில்
திரும்பச் சென்றேன்

செருப்பை விட்ட இடம் சூனியம்
என்று கண்டு
எரிச்சலுடன் நிற்கும்போது
அதோ தெய்வம்
என் அறுந்த செருப்பையணிந்து
நடந்து செல்கிறது.

*

9 பெண்புத்தன்

புத்தன் பெண்ணாக இருந்தா-

னெனில்
உச்சியில் கட்டும் முடியைச்
சற்றே இறக்கிப் பின் கழுத்தின் மேல்
முடிந்து சுருட்டி வைத்திருப்பானே
விரிந்த மார்பகம் திறந்து கிடக்காமல்
துணியால் மூடப்பட்டுத்
திரண்டிருக்குமே
தியானத்தின் இடையிடையே எழுந்துபோய்
மறைவான இடத்தில் அமர்ந்து
மூத்திரம் பெய்திருப்பானே

எல்லாவற்றுக்கும் மேலாக
இடைவெளியில்லாமல்
அடுப்படிக்கு ஓடி
சோற்றுச் சட்டியில்
கரண்டியால் துழாவி
‘சோறு வெந்ததா, சோறு வெந்ததா’ என்று
பதறிக் கொண்டிருப்பானே!

*

10 மலைச்சரிவில் புகைவண்டி

அடிவாரத்தில் கூக்குரலிட்டுப்
புகைவண்டிகள் பாயும்போது

மலைமுகட்டில் மயில்கள்
அ… தோ
அ…. தோ
அ…தோ என்று
அலறுகின்றன.

*

சந்தியா என்.பி. (1981): கண்ணூர் மாவட்டம் அஞ்சரைக் கண்டியில் பிறந்தவர். தலைசேரி பிரண்ணன் கல்லூரியில் மலையாள இலக்கியத்தில் இளங்கலை, முதுகலை பயின்று பட்டம் பெற்றவர். கேரள சாகித்ய அகாதெமியின் கவிதைக்கான கனகஸ்ரீ விருதை  (2014) பெற்றவர். ‘ஸ்வசிக்குன்ன சப்தம் மாத்ரம்’ ( மூச்சுவிடும் ஓசை மட்டும் ), ‘பெண்புத்தன்’, ‘மறுபடிக் காடு’ ஆகியவை இவரது கவிதைத் தொகுப்புகள். ‘நக்ன ஜலம்’ , ‘சேதி’  இவரது நாவல்கள்.  கணவர்  கவிஞர் பி.ராமன். பிள்ளைகள் ஹ்ருதய் கிருஷ்ணன், பார்வதி. பாலக்காடு மாவட்டம் பட்டாம்பியில் வசிக்கிறார்.

கவி சுகுமாரன்

One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *