ரோஜாவின் நகல் (சிறுகதை) – கிளாரிஸ் லிஸ்பெக்டர்

(தமிழில் பா. ரேவதி)

clarice lispector

*

அர்மாண்டோ வேலை முடித்து வீட்டுக்கு வருவதற்குள் வீடு ஒழுங்காக இருப்பது நல்லது. அவளும்   ஏற்கனவே அரக்கு நிற  உடை அணிந்து தயாராக இருக்கும் அவள், அவளது கணவன்  உடை மாற்றும் போது அவனுக்கு உதவி செய்து முடித்ததும் முன்னாட்களைப் போல கைகளைக்  கோர்த்துக் கொண்டு அமைதியாக இருவரும் வெளியே செல்வார்கள்.  அவர்கள் அப்படிச் சென்று  எத்தனை நாட்கள் ஆகிவிட்டன? 

இப்போது மீண்டும் அவள் ‘நலமடைந்து’ விட்டதால், இருவரும் பேருந்தில் செல்வார்கள்.  அவளுடைய கரம் அவனது கரங்களுக்குள் இருக்க, ஒரு  சாராதரண மனைவியைப் போலவே ஜன்னலுக்கு வெளியே வெறித்துப் பார்ப்பாள். பின்னர் இருவரும் கார்லோட்டா மற்றும் ஜோவ்ன்னுடன் அவர்களது நாற்காலியில் ஓய்வாக அமர்ந்து இரவு உணவை உண்பார்கள்.  அர்மாண்டோ அப்படி வசதியாகச் சாய்ந்து ஓர் ஆணுடன் உரையாடுவதை அவள் எப்போது கடைசியாகப் பார்த்தாள்? ஓர் ஆணின் நிம்மதி, அவன் மனைவியை மறந்து விட்டு, அன்றைய தலைப்புச் செய்திகளை மற்றொரு ஆணுடன் விவாதிப்பதில் தான் இருக்கிறது.  . 

அந்த நேரத்தில் அவள் கார்லோட்டாவுடன் பெண்களுக்கான விஷயங்களைப் பேசி கொண்டிருக்கலாம். கார்லோட்டாவின் யதார்த்தமான அன்பிற்கும்  அதிகாரத்திற்கும் அவளை  ஒப்படைத்து விட்டு, மீண்டும் தனது தோழியின்  மெலிதான இகழ்ச்சியை  பாராமுகத்தை, எதையும் முகத்துக்கு நேராக சொல்லிவிடும் அவளது   இயல்பான பேச்சையும்  இவள் அனுபவிக்கலாம் .  அவளை குழப்பமடைய செய்யும் அளவுக்கு  அவள் காட்டும்  குறுகுறுப்பு கலந்த  அக்கறையை   இனி அவள் எதிர் கொள்ள தேவையில்லை. அது மட்டுமல்லாமல் ,  அர்மாண்டோ மனைவியை  சற்று நேரம் மறந்து  இருப்பதை அவள் பார்ப்பாள். கடைசியாக அவள், தனிக்கவனம் இல்லாத நிலைக்கு நன்றியுணர்வுடன் திரும்புவாள். இரவு முழுவதும் வெளியே அலைந்து விட்டு, எதுவும் நடக்காதது போல அமைதியாக  திரும்பி வந்து, ஒரு வார்த்தையும் சொல்லப்படாமல்   தனக்காக வைக்கப்பட்ட பால்கிண்ணத்தை காணும் ஒரு  பூனையைப்  போல. அதிர்ஷ்டவசமாக அவளைச் சுற்றியுள்ளவர்கள், அவள் இப்போது “நலமாக” இருப்பதாக  உணர உதவுகிறார்கள். அவளை  நேரடியாக பார்க்காமல், ஒரே மருந்து பாட்டிலின் மீதிருக்கும் ஒரே லேபிளைப் படிப்பவர்களாக   போல, தாங்களும் மறந்துவிட்டது போல பாவனை செய்யும் அவர்கள் அவளது முகத்தையே பார்க்காமல், அவளும் மறந்து போவதற்கு உதவுகிறார்கள்.  அல்லது அவர்கள் உண்மையிலேயே மறந்து விட்டார்களோ என்னவோ, யாருக்குத் தெரியும்?.  எந்தக் கவலையுமின்றி நிம்மதியாகச் சாய்ந்து அமர்ந்து, அர்மாண்டோ அவளை மறந்திருப்பதைப் பார்த்து எவ்வளவு காலம் ஆகிவிட்டது.  அவளும்  கூட? 

அலங்கார மேசையை ஒழுங்குபடுத்துவதை நிறுத்திவிட்டு, லோரா கண்ணாடியில் தன்னைப்  பார்த்தாள். எத்தனை நாளாகி விட்டது?

அவளது முகத்துக்கு குடும்ப பாங்குடன் கூடிய  வசீகரம் இருந்தது. அவளது பெரிய, வெளுத்த  காதுகளுக்குப் பின்னால் குழல் கற்றைகள் நேர்த்தியாக மடக்கி  பின் குத்தப்பட்டிருந்தன. பழுப்பு   கண்கள் பழுப்பு கூந்தல் மாநிறத்தில் மென்சருமம்,  எல்லாமும்   சேர்ந்து  இளமையை கடந்த  விட்ட அவளது முகத்திற்கு பெண்களுக்கே விட்ட உரிய   ஒர் அடக்கமான அழகைக் கொடுத்தன. அவளுடைய  கண்களின் ஆழத்தில்  பொதிந்து கிடக்கும்  சின்னஞ்சிறிய  ஆச்சரியப்புள்ளியை யாரும் பார்க்க நேரிடுமா?  உறைந்து கிடக்கும் அந்த வருத்தத்துகளில், அவளது குழந்தையின்மை ஏற்படுத்திய வெற்றிடத்தை  யாரும்  பார்க்க நேருமா?

ஒழுங்கின் மீது அவளுக்கிருக்கும் உன்னிப்பான ஈர்ப்பு,  மாணவியாக இருந்தபோது பாடத்தின் முக்கியப் பகுதிகளைப் புரிந்து கொள்ளாமலே அவற்றை அழகான கையெழுத்தில்  படியெடுக்கச் செய்தது ஈர்ப்பு அவளுக்குத்  திரும்ப வந்திருந்தது.  பணிப்பெண் மரியாவுடைய  விடுமுறை நாளுக்கு  முன்னரே  வீட்டை முழுவதும் சுத்தம் செய்வதைத்  திட்டமிட்டுக் கொண்டிருந்தாள். அப்போதுதான் மரியா இல்லாத போது அவள்  இவற்றை தவிர, வேறு எதையும் செய்ய வேண்டியிருக்காது, 1. ஆர்ப்பாட்டமில்லாமல் உடையணிவது 2.  அர்மாண்டோ புறப்படுவதற்குக் காத்திருப்பது 3.  மூன்றாவது என்ன? சரி மிகச்சரியாக இவற்றைத்தான் அவள் செய்வாள் ஆம், அதுதான், சந்தனநிற  காலர் வைத்த  அந்த அரக்குநிற உடையை அணிவாள்.  

அவள் ஏற்கனவே குளித்திருந்தாள். ‘தூய இருதயம்’ பள்ளியில் படித்த காலத்திலிருந்தே அவள் சுத்தமாகவும் ஒழுங்காகவும்  இருப்பாள். அவளுக்கு  தனிப்பட்ட சுகாதாரத்தில் மிகுந்த  ஈடுபாடும்  ஒழுங்கின்மையின் மீது ஒரு வித அச்சமும் இருந்தது. 

ஆனால் அப்போதே சற்று அசலானவளாக, தான் விரும்பியதை மட்டுமே செய்பவளாக இருந்த கார்லோட்டாவுக்கு லோராவுடைய  இந்த குணம்  எந்த வித வியப்பையும் ஏற்படுத்தவில்லை. அவர்கள் இருவரது நடத்தையும்  எப்போதுமே வெவ்வேறாகவே இருந்தன. கார்லோட்டா வேட்கை மிகுந்தவள்,    வாய்விட்டு சிரிப்பவள் . இவளோ, சற்று  மந்தமானவள், எப்போதும் மந்தத்தை கவனத்துடன் தக்கவைத்துகொள்பவள். கார்லோட்டா ஆபத்தைக்  குறித்து கவலைப்படாதவள். இவளோ எப்போதும் எச்சரிக்கையுடன் இருப்பவள் . அவர்கள் இருவரும்  ‘கிறிஸ்துவின் நகல்’ (Imitation of christ) என்ற  நூலை வாசிக்கப் பணிக்கப்பட்டபோது லோரா அதை  முட்டாள்களின்  தீவிரத்தோடு அதன் முழுப்பொருளையும் உணராமலேயே  வாசித்து முடித்தாள். இப்படி யோசிப்பதற்கு கர்த்தர் அவளை மன்னிப்பாராக, கிறிஸ்துவைப் நகலெடுக்க முனைந்தவர்கள் யாராயினும் அவர்கள்  தொலைந்து போவார்கள் . ஒளியில் தொலைந்து போவார்கள். அது மிகவும் ஆபத்தான தொலைந்து போதல்.  உள்ளதிலேயே கிறிஸ்துவாக முயல்வதுதான் மோசமான சபலம். ஆனால் கார்லோட்டா அதை வாசிக்கவே விரும்பவில்லை; வாசித்துவிட்டதாக கன்னியாஸ்திரியிடம்  பொய் சொன்னாள்.

சரி. அவள் அசல் லேஸ் காலர் கொண்ட அந்த அரக்கு  நிற உடையை அணிவாள்.

திடீரென்று கடிகாரத்தைப் பார்த்தவுடன், அவளது  கையை மார்புக்கு  உயரச் செய்த அதிர்ச்சியுடன்  தான் பால்  குடிக்க மறந்து விட்டதை  லோரா நினைவு கூர்ந்தாள்.  சமையலறைக்குச் சென்ற அவள்.  தனது கவனக்குறைவால் அர்மாண்டோவையும் தன்னிடம் அன்பு காட்டிய நண்பர்களையும் ஏமாற்றிவிட்ட குற்ற உணர்வுடன்,  குளிர்சாதனப் பெட்டியின் அருகிலேயே நின்று அவள் முதல் சில மிடறுகளை அக்கறையுடைய நிதானத்தோடு  அருந்தினாள்.   எல்லோரிடமும்  தன் தவறுக்காக மன்னிப்புக் கேட்டு பிராயச்சித்தம்  செய்பவளைப்போல  ஒவ்வொரு மிடறையும் முழு கவனத்துடன் விழுங்கினாள். ஏனெனில்  அவளுடைய மருத்துவர்,   ஒவ்வொரு வேளை உணவுக்கிடையிலும் பால் குடிக்க வேண்டும். வயிறை  காலியாக வைத்திருப்பது பதட்டத்தை உண்டாக்கும்  என்பதால்அதை தவிர்க்க வேண்டும்.” என்று சொல்லியிருக்கிறார்.

அதனால் மிகைப்பதட்டத்தின் அச்சுறுத்தல் இல்லாதபோதும் , அவள் ஒவ்வொரு நாளும் தவறாமல், குறை சொல்லாமல், கண்களை மூடியபடி கட்டளைக்குக் கீழ்படிகிறவளைப்  போல துளி துளியாக அந்தப் பாலை அருந்தினாள்.

அவளுள் தோன்றும்  சிறிய சந்தேகத்தை  ஆராயாமல் இருப்பதில் அவளுக்கு ஒரு தீவிரமான திருப்தி இருந்தது. புதிதாக மத மாறியவரின்  முனைப்போடு அவள் பின்பற்ற வேண்டிய துல்லியமான கட்டளையை மருத்துவர் அவளுக்கு  வழங்கிய பின்னர், அவர் சொன்னதற்கே முரண்படுபவராக ‘இதை கடைப்பிடிப்பதற்காக நீங்கள் உங்களை அதிகம் சிரமப்படுத்திக் கொள்ள வேண்டாம். சற்றே தளர்த்திக் கொள்ளுங்கள். நிதானமாக இருங்கள், நடந்தவை அனைத்தையும் மறந்துவிடுங்கள், எல்லாம் தானாகவே இயல்பு நிலைக்குத் திரும்பும்” என்றார். அதைச் சொல்லி முடித்ததும் அவர் அவளது முதுகை மென்மையாகத் தட்டி கொடுத்தார். அது அவளை பெருமிதமடையவும் அவளது கன்னங்களை  மகிழ்ச்சியால் சிவக்கவும் செய்தது. 

ஆனால் அவளது தாழ்மையான கருத்தின் படி, மாவை உண்ணும் அதே போதே சீட்டி  அடிக்க சொல்வதைப் போல  இரண்டு கட்டளைகளும்  ஒன்றுக்கொன்று முரணாக இருந்தன. ஒரே சமயத்தில் இரண்டையும்  நிறைவேற்ற அவள் சமீப காலமாக ஒரு தந்திரத்தைப்  கையாளத் தொடங்கியிருந்தாள். ரகசிய சக்தியை அடைந்திருந்த அந்த ஒரு கிளாஸ் பால், இப்போது   ஒவ்வொரு  மிடறிலும் கிட்டத்தட்ட ஒரு சொல்லின் சுவையை  கொண்டிருந்ததோடு மருத்துவருடைய அந்த முதுகு தட்டலையும் அழுத்தமாக உயிர்ப்பித்தது.

அந்த ஒரு கிளாஸ் பாலை அவள் வரவேற்பறைக்கு எடுத்துச் செல்வாள். அங்கே அவள்  ‘வெகு இயல்பாக’ அமர்ந்து,  எதற்கும்  கவலைப்படாத பாவனையோடு, ‘அவளை சிரமப்படுத்திக் கொள்ளாமல்  இரண்டாவது கட்டளையையும்  சாமர்த்தியமாக   நிறைவேற்றுவாள். அவளுக்கு வெளிப்புறத் தோற்றம் என்பது ஒருபோதும் முக்கியமானதாக இருந்ததில்லை என்னும் போது, ”நான் எடை கூடினாலும் அதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை.  

அவள் தன் சொந்த வீட்டிலேயே ஒரு விருந்தினரைப் போல சோபாவில் அமர்ந்திருந்தாள், சமீபத்தில் அவள் திரும்ப பெற்ற, சுத்தமாகவும் குளிர்ச்சியாகவும் இருந்த அவளது  வீடு, யாரோ ஒருவருடைய வீட்டின்  நிச்சலனத்தை அளித்தது. தன் வீட்டைத் தன்னுடைய நீட்சியாக மாற்றிய கார்லோட்டாவைப் போல அல்லாமல், லோரா அவளுடைய   வீட்டை  தனது சாயலற்ற  ஒன்றாக வைத்திருப்பதில் மகிழ்ந்தாள். தானற்ற ஒன்றாக இருப்பதை எப்படியோ பூரணமாக்கும் அவளது வீடு அவளுக்கு மனநிறைவளித்தது

“ஓ!  வீடு திரும்புதல் என்பது  எவ்வளவு நன்றாக இருக்கிறது… உண்மையிலேயே திரும்பி வந்திருக்கிறேன்,” என்று அவள் நிறைவுடன்  புன்னகைத்து கொண்டாள். 

கிட்டத்தட்ட காலியான  கிளாஸைக் கையில் பிடித்தபடி சுகமான சோர்வோடு.  கண்களை மூடி பெருமூச்சு விட்டாள். அவள் ஏற்கனவே  அர்மாண்டோவின் சட்டைகளை இஸ்திரி செய்திருந்தாள்; மறுநாள் செய்ய வேண்டியவைகளுக்கான பட்டியல்களை தயாரித்திருந்தாள்; அன்று  காலை சந்தையில் எவ்வளவு செலவழித்தாள் என்பதை கூட  துல்லியமாக  கணக்கெழுதி வைத்திருந்தாள் . உண்மையில் ஒரு நொடி கூட  அவள் சோம்பியிருக்கவில்லை. ஓ! மீண்டும் களைப்பாக உணர்வதில்தான்  எத்தனை  இனிமை!

செவ்வாய் கிரகத்திலிருந்து ஒரு முழுமையான நபர் பூமியில் இறங்கி , பூமிவாசிகள்  சோர்வடைவதையும், வயோதிகம் அடைவதையும் கண்டறிந்தால், அந்த நபர்  நம்  அனுதாபமும் வியப்பும் அடையக்கூடும். மனிதனாக இருப்பதில்,அன்றாடம்  சோர்வடைவதில், ஒவ்வொரு நாளும் உழைத்துத் தேய்வதில் எவ்வளவு  அழகு  இருக்கிறது என்பதை அவரால் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது.   அந்தக் குறைபாட்டின் சூட்சுமத்தை  வாழ்வின்   இந்த நுணுக்கத்தை  தீட்சை பெற்றவர்கள்  மட்டுமே  உற்றறிவார்கள். 

ஒருவழியாக செவ்வாய் கிரகத்தின்  கச்சிதத்தில் இருந்து  அவள் திரும்பி வந்திருந்தாள்.  ஒரு ஆணுடைய  மனைவியாக இருப்பதைத் தவிர வேறு எந்த இலட்சியத்தையும்  கொண்டிராத அவள்,   நாளும்  தேய்ந்து  மங்கும் அவளது  பகுதியை நன்றியுணர்வோடு மீண்டும்  சந்திக்கிறாள். கண்களை மூடியபடி அவளையே பாராட்டி கொள்ளும் வண்ணம் பெருமூச்செறிந்தாள். அவள் சோர்வடைந்து எவ்வளவு காலம் ஆகிவிட்டது?  இப்போதெல்லாம்  ஒவ்வொரு நாளும் அவள் ஏறக்குறைய களைப்படைந்து விடுகிறாள்; 

உதாரணமாக இன்று அவள் அர்மாண்டோவின் சட்டைகளை இஸ்திரி செய்தாள். அவளுக்கு எப்போதுமே இஸ்திரி செய்வது பிடிக்கும்; தன்னடக்கத்தை ஒதுக்கி விட்டுச் சொன்னால், அதில் அவளுக்கு  தனித் திறமையும் இருந்தது. பின்னர்  அதற்கான வெகுமதியாக  போல் ஒரு பெருங்களைப்புடன் வடிந்து போகிறாள் .

இனி எப்போதும் விழிப்புடன் இருக்கும் அந்த  களைப்பின்மை இனி எப்போதும் இல்லை.

இனி அவளுக்குள் அந்த வெறுமையான, எப்போதும்  விழித்தே கிடக்கும் அச்சுறுத்தும் அற்புதத்துகள்  இல்லை. 

அச்சமூட்டும் அந்த சுதந்திரம் இனி எப்போதும்  இல்லை.  இரவும்  பகலும்    உறக்கமற்ற அசாதாரணமான   அந்த   எளிய  நிலை இனி இல்லை .  சோர்வும் திகைப்புமுமாய் இருக்கும் அவளது  கணவனுடன் ஒப்பிடுகையில் , அந்த நிலை ஒரு நுட்பமான வழியில்,அவளைத் திடீரென்று ஒரு அதி மனுசியாக மாற்றியிருந்தது. 

துர்நாற்றம் வீசும் அவனது வாய் கவலையால் மௌனமாகிவிடும் போதெல்லாம் அவளுக்கு அவன் மீது  எரிச்சலூட்டும் இரக்கம் ஏற்படும்  ஆம், அவளுடைய  உறக்கமற்ற அந்தப் பரிபூரண நிலைக்குள்ளும், இரக்கமும் அன்பும் இருந்தது.  முன்பெல்லாம் அவன் அந்தச்  செவிலி   அலட்சியத்துடன்  தின்று தீர்க்கும் ஆப்பிள்களையும் திராட்சைகளையும் கூச்சத்தோடு ஒரு காதலனைப் போல கையில் ஏந்திக்கொண்டு   ஒரு சடங்காக அவளைப் பார்க்க வரும்போது ,அவள் சலனமற்ற அமைதியும் தெய்வீகமும் கொண்டவளாக தன் ஒளிரும் தனிமையில் இருப்பாள்.  

ஒரு தந்தையிடமிருந்தும் பாதிரியாரிடமிருந்தும் அவளைப் பெற்றுக் கொண்ட அவனுக்கு, திஜுகாவிலிருந்து வந்த இந்தப் பெண்ணை என்ன செய்வதென்றே தெரியவில்லை;  அமைதியான ஒரு படகு, திடீரென  தண்ணீரில் பாய்மரத்தை விரித்துப்  பாய்வது  போல, அவள் எதிர்பாராதவிதமாக அதிமனுசியாக மாறியிருந்தாள். அவனோ  அந்தத் துரதிர்ஷ்ட பிடித்த  வாய்நாற்றத்தோடும், விறைப்பான புன்னகையோடும், ஒரு வீரனைப் போல  அவளைப் புரிந்துகொள்ள போராடினான்.

இப்போது இது  எதுவும் இல்லை.மீண்டும் ஒருபோதும் இல்லை. ஓ, அது ஒரு தற்காலிக பலவீனம்தான்.  உள்ளதிலேயே மேதைமைதான்  மோசமான சபலம் .ஆனால் அதன் பிறகு  மாதிசிறு விவரங்களை மீண்டும் மீண்டும் சொல்லி மற்றவர்களை  சலிப்படையச் செய்யக்கூடாது என்பதில் கூட அவள் கவனம் உடையவளாக, அவள் முழுமையாக திரும்பி வந்திருந்தாள்.  ‘தூய இருதயம்’  பள்ளியில்  படித்த போது அவளது வகுப்பு தோழிகள் சொல்வதை  ஒரு   கூச்ச சிரிப்புடன்   அவள் துல்லியமாக  நினைவு கூர்ந்தாள். அவள் எதை சொன்னாலும் இதை நீ  ஒராயிரம் முறை  சொல்லிவிட்டாய் !” என்பார்கள் . 

ஆம், அவள் இப்போது முழுமையாக மீண்டு விட்டாள். 

இப்போது அன்றாடம் அவள் களைப்படைகிறாள்.

ஒவ்வொரு  அந்தியிலும் அவளது முகம் சோர்ந்து.   தொய்வடைகிறது. பின்னர் இரவு மீண்டும் தனது பழைய நோக்கத்தைப் அடைகிறது . அது இனி வெறும் விண்மீன்கள் ஓளியூட்டிய  பூரணமான இரவாக மட்டும் இல்லை. அனைத்தும் மீண்டும்  இணக்கமான ஒத்திசைவுடன் அமைந்து விட்டன.  

அவளை மற்ற எல்லோரையும் போல் மனுஷியாகவும் அழியக் கூடியவளாகவும், ஒவ்வொரு நாளும் மெதுவாக தேய்த்து மங்கச் செய்கிறது. அந்த இளமையும்  பூரணமும் இனி எப்போதும்   இல்லை.
இனி அந்த இளமை இல்லை.

ஒரு காலத்தில் அவளுடைய ஆன்மாவில் பிரகாசமாக ஒரு புற்றுநோயைப் போலப்  பரவியிருந்த  அந்த  ஒன்று இனி எப்போதும் இல்லை. 

உறக்கம் கனத்த  தன் கண்களை திறந்தாள். நேர்த்தியான தடித்த கண்ணாடிக் கிளாஸை கைகளில் உணர்ந்தாள்.  பிறகு  களைப்பின் இதமான சிரிப்புடன் மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள்; அவளது எல்லா துகள்களிலும் புது பணக்காரனைப் போல  உணர்ந்தவள் அவளுக்கு குமட்டலை உண்டாக்கும் பரிச்சயமான நீரில் மூழ்கினாள். 

ஆம் , சற்றே குமட்டுவதுதான் .அதனால்  என்ன?  தானும் சற்றே குமட்டலை அளிப்பவள்  என்பதை அவள் நன்றாகவே அறிந்திருந்தாள்.

ஆனால் அவளது கணவன் அப்படி நினைக்கவில்லை.  ஆகவே அதொன்றும் பெரிய விஷயமில்லை. கடவுளுக்கு நன்றி, அவள் இன்னும் புத்திசாலியாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்க வேண்டுமென்று கோரும் சூழலில் அவள் வாழவில்லை. எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சங்கடத்துடன்  வற்புறுத்திய பள்ளிக் காலத்தையும்   அவள் கடந்து விட்டாள். அதனால் என்ன ஆகி விட போகிறது. களைப்போடு அர்மாண்டோவின் சட்டைகளை  அவள் இஸ்திரி செய்திருந்ததை,  எல்லாவற்றையும் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையுடன் காலையில் உழவர் சந்தைக்குச் சென்று நீண்ட நேரம் அங்கே சுற்றித் திரிந்ததை குறிப்பிட வேண்டியதி்ல்லை. களைப்பில்தான்  அவளுக்கான   ஓர்  அழகிய  இடம் இருந்தது. . ஒருகாலத்தில் , அவளுக்கும் மற்றவர்களுக்கும் சங்கடம் கொடுத்த மங்கலான, இரகசியமான அந்த வெளியில் இருந்து     அவள்  மேலெழுந்து வந்துவிட்டாள். அவள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது போல, கடவுளுக்கு நன்றி,  அவள் மீண்டு விட்டாள்.

இன்னும் அதிக  நம்பிக்கையுடனும் நேசத்துடனும் தேடினால், தன் களைப்பின் ஆழத்தில், “தூக்கம்” என்று அழைக்கப்படும் அதைக்காட்டிலும்  மேலான அந்த இடத்தைக் கண்டடைவாள். அவள் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்;   உறக்கமயக்கத்தில் தான் வெளியேற்றிய  வெப்பமான மூச்சு காற்றின் போக்கில்  போய்,அப்படியே கண்ணயர்ந்து விடலாம்  என்றொரு குறும்புத்தனமான ஆசை ஒரு கணம் அவளுக்குள் எட்டிப்பார்த்தது,  ” ஒரு நொடி, ஒரே ஒரு சின்ன நொடி!” என்று, தனக்கு இத்தனை தூக்க கலக்கமாக இருக்கிறதே என்ற பெருமிதத்தோடு, அவள் அவளிடமே கெஞ்சிக்கொண்டாள். ஒரு ஆணிடம் கெஞ்சுவது போல மிகவும் பணிவாகக் யாசித்தாள் . அப்படி அவள் கெஞ்சுவது அர்மண்டோவுக்கு எப்போதும் பிடிக்கும்.

ஆனால், இப்போது அவளுக்குத் தூங்குவதற்கு, ஏன், ஒரு குட்டித் தூக்கம் போடுவதற்குக்கூட, உண்மையிலேயே நேரமில்லை. என்று அவள் வீண் பெருமையுடனும் போலி அடக்கத்துடனும் நினைத்துக் கொண்டாள். “எனக்கு நேரமே இல்லை” என்று சொல்பவர்களைப் பார்த்து அவள் எப்போதும் பொறாமைப்பட்டிருக்கிறாள்; இப்போது அவளும் மீண்டும் அப்படிப்பட்ட ஒரு பிஸியான  நேரமற்ற ஒருத்தியாக மாறிவிட்டாள். 

அவர்கள் கார்லோட்டாவின் வீட்டிற்கு இரவு உணவிற்குச் செல்லவிருக்கிறார்கள், அதற்குள் அனைத்தும் ஒழுங்காகவும் தயாராகவும் இருக்க வேண்டும். அவள் திரும்பி வந்த பிறகு நடக்கும் முதல் இரவு விருந்து இது என்பதால், அவள் தாமதமாகச் செல்வதை விரும்பவில்லை. 

அவர் வரும்போது இவள் தயாராக இருக்க வேண்டும்… சரிதான்,  ஏற்கனவே ஆயிரம் முறை  இதைச் சொல்லிவிட்டேன், என்று தனக்குள்ளேயே வெட்கத்தோடு நினைத்தாள்.

அதுவே ஏற்புடைய காரணமாக இருப்பதால் “நான் தாமதமாகச் செல்ல விரும்பவில்லை” என்று ஒருமுறை சொல்வதே போதுமானதாக இருந்தது.  யாருக்கும் ஒரு பாரமாகவோ அல்லது தொந்தரவாகவோ இருப்பதை மிகக் கடுமையான அவமானமாகக் கருதிய   அவளால் ஒருபோதும்  அதை சகித்துக்கொள்ள முடிந்ததில்லை . 

இப்போது, எப்போதும் இல்லாத அளவுக்கு, அவள் இன்னும் அதிகமாக கவனமாக இருக்க வேண்டும்.

இல்லை, அதில் எள்ளளவும் சந்தேகமில்லை: அவளுக்குத் தூங்குவதற்கு நேரமே இல்லை. 

அந்தப் பழகிப்போயிருந்த ,  வழமையின் அணுக்கத்துக்குள்  இயல்பாகத் தன்னை நுழைத்துக் கொண்டு அவள் செய்ய வேண்டியதெல்லாம், தன்னுடைய இந்த அன்றாட வழக்கத்தின் மீதான தீராத ஈடுபாட்டைக் கார்லோட்டா ஏளனம் செய்வது அவளுக்கு ஒரு வலியை அளித்தலும்  அவள் செய்ய வேண்டியதெல்லாம்:

  1. பணிப்பெண் தயாராகும் வரை காத்திருப்பது; 2. காலையில் இறைச்சி வாங்கி வருவதற்காக அவளிடம் பணம் கொடுப்பது;  வறுத்த மாட்டிறைச்சி ; தரமான இறைச்சியைக் கண்டடைவதில் உள்ள சிரமங்கள், உண்மையில் பேசுவதற்கு எவ்வளவு நல்ல தலைப்பு என்பதை அவளால் எப்படி விவரிக்க முடியும்? ஆனால், கார்லோட்டாவுக்கு இது தெரிந்தால் அவளைக் கண்டிப்பாக ஏளனம் செய்வாள்; 3. நேரத்தை முழுமையாகப் பயன்படுத்துவதன் இன்பத்திற்கு முற்றிலும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு, மிக நேர்த்தியாகக குளித்துவிட்டு உடை உடுத்தத் தொடங்குவது.

அந்த அரக்கு  நிற உடை அவளது கண்களுக்கு பொருத்தமாக இருக்கும், அதன் சிறிய சந்தன  நிற லேஸ் காலர்,  அவளுக்கு பழைய காலத்து சிறுவனை  போன்ற, ஒரு குழந்தைத்தனமான தோற்றத்தைக் கொடுத்தது. 

திஜூகாவின் அந்த அமைதியான நள்ளிரவுப் பொழுதுக்குத் திரும்பிய பிறகு, திக்கற்ற கோழியைப் போல அவளை இன்சுலின்  என்னும்  பாதாளத்திற்குள் தள்ளிவிட்டு, அலங்கரித்த  கூந்தலுடனும்  உற்சாகமான சிரிப்புடனும்  விடுமுறைக்குப் போகும் அந்த செவிலியர்களின் கண் கூசும் வெளிச்சம் இனி இல்லை. 

திஜூகாவின் அந்த அமைதியான நள்ளிரவுப் பொழுதுக்கு, அவளுடைய நிஜ வாழ்க்கைக்குத் திரும்பிய பின், அவள் அர்மண்டோவுடன்  கைகளைக் கோர்த்துக் கொண்டு, பேருந்து நிறுத்தத்தை நோக்கி மெதுவாக நடந்து போவாள். இறுக்கமான கச்சைக்குள் நெருக்கப்பட்டிருக்கும் பருமனான குறுகிய அவளது தொடைகள், அவளை “மரியாதைக்குரிய பெண்மணி”யாகக்  காட்டும். 

அவளது உடல் அமைப்பு குறித்து அவள் கவலைப்பட்ட பொழுதெல்லாம் “அது வெறும் கருப்பைச் சுரப்பி குறைபாடுதான்,” என்று லோரா அர்மாண்டோவிடம் சொல்வாள். ஆனால் தனது மனைவியின் பருமனான தொடைகளை பெருமையாக நினைத்த அர்மாண்டோ,  ஒரு பாலே நடனக் காரியைத்  திருமணம் செய்துகொள்வதால் எனக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது?’ என்றே  குறும்பாகப்  பதிலளிப்பான். 

ஒருவராலும் ஒருபோதும் கணிக்கவே முடியாத வகையில் அர்மாண்டோ சில நேரங்களில் மிகுந்த  குறும்புத்தனமாக நடந்து கொள்வான், உங்களால் ஒருபோதும் கணிக்க  முடியாது.

அவ்வப்போது  அவர்கள் இருவரும் ஒரே விஷயத்தையே பேசிக்கொண்டார்கள். கருப்பைச் சுரப்பி குறைபாடு காரணமாகத்தான் அது என்று அவள் விளக்கினாள். அதற்கு அவன்: ‘ஒரு பாலே நடனக் காரியை  திருமணம் செய்துகொள்வதால் எனக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது?’ என்பான். உண்மையில் அவன் சில நேரங்களில் வெட்கமே இல்லாதவனாக மாறிவிடுவான்.

உங்களால் ஒருபோதும் யூகிக்க முடியாது.

அவர்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை உண்டு, மற்றவர்களிடம் சொல்லாத விஷயங்கள் உண்டு என்பதை கார்லோட்டா அறிந்தால் அதிர்ச்சி அடையக்கூடும்.   சொல்ல முடியாதது குறித்து அவளுக்கு ஏமாற்றமே என்றாலும் லோரா ஒரு போதும் அவளிடம் அதைச் சொல்லமாட்டாள்..  

கார்லோட்டா நிச்சயமாக லோராவை  கட்டுப்பெட்டியான  சாதாரணமான சற்றே எரிச்சலூட்டும் நபராகத்தான் நினைத்திருப்பாள் . சின்ன சின்ன விவரங்களைக் கூறி மற்றவர்களைச்  சலிப்படையச் செய்யக்கூடாது என்று எப்போதும் கவனமாக இருக்கும் லோரா அர்மாண்டோவிடம் மட்டும் சில நேரங்களில் தளர்ந்து  விடுவாள். அந்நேரங்களில் எரிச்சலூட்டும் வகையில் அதிகம் பேசி விடுவாள். ஆனால் அதில்  பெரிய பிரச்சினை எதுவும் இல்லை. . ஏனெனில் அர்மாண்டோ, அவள் சொல்வதையெல்லாம் உண்மையில் கேட்காமல், கேட்கிறவன் போல நடிப்பான் . அது அவளுக்கு

எந்த  மனவருத்தத்தையும் அளிக்காது. தன் பேச்சு  மற்றவர்ளைச்  சற்றே சலிப்படையச்  செய்கின்றன என்பதை அவள் நன்றாகவே புரிந்திருந்தாள்.

இருப்பினும், அர்மாண்டோ தலையசைத்து, கவனிக்காமல் இருந்தாலும் கூட, சந்தையில் நல்ல இறைச்சி கிடைக்கவில்லை என்பதை , விளக்கிக் கூறுவதில் ஒரு சின்ன சந்தோஷம் இருந்தது.  அவளும் வேலைக்காரி மரியாவும் நிறைய பேசுவார்கள். உண்மையில், வேலைக்காரியை விட அதிகம் பேசுவது லோராதான். ஆனால் வேலைக்காரியை அதிகமாகத் தொந்தரவு செய்யக் கூடாது என்பதிலும் அவள் கவனத்துடன் இருப்பாள். 

சில சமயங்களில் மரியா தன் பொறுமையை இழந்து , கொஞ்சம் கோபமாக பேசி விடுவாள். அதுவும் லோராவின் பிழையே, ஏனெனில் அவள் எப்போதுமே மரியாதையைக் கோரிப் பெற்றதில்லை.

ஆனால், அவள் சொல்லிக்கொண்டிருந்ததுப்  போலவே, குள்ளமாக இருக்கும் அவளுடைய கரம் உயரமாகவும் ஒல்லியாகவும், கடவுள் புண்ணியத்தில் ஆரோக்கியமாகவும்  இருந்த அவனுடைய  கரத்தோடு பிணைந்திருக்கும்.  ஒரு மனைவி இப்படித்தான் இருக்க வேண்டுமென்று புரிபடாத வகையில் அவள் நம்பியவாறே அடர் காஃபிநிறக் கூந்தல் உடையவளாக அவள் இருந்தாள்.  கறுப்பு அல்லது பொன்னிறக் கூந்தல் கொண்டிருப்பது அதீதமானது   என்று அவளுக்குத் தோன்றியது; எல்லாவற்றையும் சரியாகச் செய்ய வேண்டும் என்ற அவளது விருப்பத்தினால் அவள் ஒருபோதும் அப்படிப்பட்ட கூந்தலை விரும்பியதில்லை. அதனால் தான், பச்சைக் கண்கள் பற்றியும் அவளுக்கு ஒரு விசித்திரமான எண்ணம் இருந்தது. பச்சைக் கண்கள் கொண்டிருப்பது , கணவனிடமிருந்து  சில விஷயங்களை  மறைத்து வைத்திருப்பது போன்றது என அவளுக்குத் தோன்றியது

கர்லோட்டா அவளைப் பற்றி புறம் பேசுவதற்கான எந்தக் காரணத்தையும் தரவில்லை என்றாலும், லாராவுக்கு வாய்ப்பு கிடைத்தால் அவளைத் தீவிரமாக ஆதரித்துப் பேசுவாள், ஆனால் அவளுக்கு அந்த  சந்தர்ப்பம் வாய்க்கவே இல்லை. 

இருந்தாலும்  லோரா தன்  தன் தோழி தன் கணவரை நடத்தும் விதம் சற்று விசித்திரமாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது என்பதை மனமில்லாத போதும் லாரா  ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது.  அவள் ஒன்றும் இக்காலப் பெண்களைப் போன்று அவர்கள் இருவரும் சமம் என்பதைப்போல நடந்துகொள்ளவில்லை எனினும், கிட்டதட்ட அதைப் போல் தான் நடந்துகொண்டாள். நான் என்ன சொல்கிறேன் என்று உங்களுக்குப் புரியும்.

மேலும் கார்லோட்டா சற்று அசலானவளாக இருப்பவள். அவள் இதை ஒருமுறை அர்மான்டோவிடமும் குறிப்பிட்டிருந்தாள், அர்மான்டோவும் அதை ஒப்புக்கொண்டான், ஆனால்  அவன் அதை  ஒரு விஷயமாகவே  பொருட்படுத்தவில்லை. ஆனால், அவள் சொல்லிக் கொண்டிருந்தது போல, தன் சிறிய காலர் கொண்ட அரக்கு நிற ஆடையை அணிந்து கொண்டு…

இந்த பகற்கனவு, அவளுக்கு  இழுப்பறைகளை ஒழுங்குபடுத்தும் போது கிடைக்கும் அதே மகிழ்ச்சியை அளித்தது, சில சமயங்களில் அவற்றை மீண்டும் ஒழுங்குபடுத்துவதற்காகவே அவள் அவற்றை கலைத்துப்போடுவாள். 

அவள் கண்களைத்  திறந்தாள்.  அவளுக்குப் பதிலாக இந்த அறையே தூங்கி விழுந்ததைப் போல இருந்தது.  தூசி துடைக்கப்பட்ட கை நாற்காலிகள், கடைசியாகத் துவைத்ததில் சுருங்கிப் போன திரைச்சீலைகள், கணுக்கால் வரை எட்டாத குட்டையான  கால்சட்டையை அணிந்தவன் தன் கால்களை குனிந்து நகைப்போடு பார்ப்பதைப் போல அந்த அறை புத்துணர்ச்சியுடனும் சோர்வற்ற அமைதியுடனும் தெரிந்தது.  அனைத்தும்  தூசி தட்டப்பட்டு மீண்டும் நேர்த்தியாக இருப்பது எவ்வளவு அழகாக இருக்கிறது?  அவளுடைய தேர்ச்சியடைந்த கைகளால் சுத்தம் செய்யப்பட்டு, ஒரு பூச்சாடி முழுக்க நிறைந்திருக்கும் மலர்களோடு ஆழ்ந்த அமைதியிலிருக்கும் ஒரு வரவேற்பறையைப் போல. 

தனியுணர்வுகள் இல்லாத காத்திருப்பு அறைகள் லோராவுக்கு எப்போதுமே பிடித்தமானவை.  வீண் ஆடம்பரத்திலிருந்து இறுதியாகத் திரும்பியிருந்த அவளுக்கு, இந்தச் சாதாரண வாழ்க்கை எவ்வளவு நிறைவாக இருந்தது. ஒரு பூச்சாடி கூட.  அவள் அதைப் பார்த்தாள். 

“ஓ, இவை எவ்வளவு அழகாக இருக்கின்றன,” அவளது இதயம் திடீரென்று ஒரு குழந்தையைப் போலத் துள்ளிக் குதித்துக் கூவியது. 

அன்று காலை விவசாயிகள் சந்தையில் அந்த வியாபாரி மிகவும் வற்புறுத்தியதாலும்  அவளும் சற்று  துணிந்ததாலும் அவள் வாங்கிய சிறிய காட்டு ரோஜாக்கள் அவை.   அன்று காலையில்தான், தனது வழக்கமான பத்து மணிப் பாலைக்  குடித்துக்கொண்டே, அவற்றை அந்தப் பூச்சாடியில் நேர்த்தியாக அடுக்கி வைத்திருந்தாள்.

இந்த அறையின் ஒளியில் நனைந்த ரோஜாக்கள் அவற்றின் முழுமையடைந்த சாந்தத்தின் அழகோடு மிளிர்ந்தன.

“நான் இதுவரை இவ்வளவு அழகான ரோஜாக்களைப் பார்த்ததே இல்லை,” என்று அவள் வியப்போடு நினைத்தாள். தனக்கு சற்று முன்னர்தான்  அதே எண்ணம்  தோன்றியது என்பதை அரைகுறையாக உணர்ந்தும், தான் சற்றே அலுப்பூட்டும் வகையில் மீண்டும் மீண்டும் யோசிக்கிறோம் என்ற சங்கடத்தை சட்டென்று கடந்துபோகும் முயற்சியிலும்  அவள்  கூடும்  ஆழமான ஆச்சரியத்துடன் தனக்குள் “உண்மையாகவே, நான் இவ்வளவு அழகான ரோஜாக்களைப் பார்த்ததே இல்லை.” என்று நினைத்தாள்.  அவள் அவற்றை கவனத்துடன்  உற்று நோக்கினாள். ஆனால், அவளது  கவனம்  வெற்று பார்வையாக மட்டும்  நீண்ட நேரத்திற்கு நீடிக்கவில்லை; அது விரைவில் ஒரு இனிய மகிழ்ச்சியாக  உருவெடுத்தது. அவளால் தொடர்ந்து   அந்த ரோஜாக்களைத் வெறுமனே  உற்றுப்பார்த்துக் கொண்டிருக்க முடியாமல்,  எத்தனை அழகாக இருக்கின்றன அவை என்று பணிவடையச் செய்யும் உற்சாகத்தின்   மெல்லிய  வியப்புடன்      தன்னையே அவள் இடையீடு செய்தாள்.

அவளுக்குள்   எழுந்த  மெல்லிய  ஆச்சரியத்தின்  உற்சாகக்குரல்  அவளது   கவனத்தை கலைத்தது.  

அவை ஒரே தண்டில் பூத்திருந்த பூரணமான  மலர்கள் . ஒரு கட்டத்தில் அவை ஒன்றின் மேல் ஒன்று உற்சாகமாக ஏறிக்கொண்டதுபோல் இருந்தன; அந்த விளையாட்டு முடிந்த பிறகு, அமைதியாக அவை அசைவதை நிறுத்தி விட்டன. முழுமையாக மலராத நிலையில், வெண்மையை நெருங்கித் தொட்டுவிடக் கூடிய இளஞ்சிவப்பு நிறத்திலிருந்த அந்த ரோஜாக்கள் அவற்றின் சிறிய உருவில் முழுமையை எட்டியிருந்தன.  அவை போலிப் பூக்களைப் போலத் தெரிகின்றன, என லோரா.   வியப்புடன் சொன்னாள் முழுவதும் மலர்ந்திருந்தால் அவை வெண்ணிறத்தில் தோன்றியிருக்கும். ஆனால் நடுப்பகுதியில் சுருண்டு நின்ற இதழ்கள் இன்னும் மொட்டாகவே  இருந்ததால், அவற்றின் நிறம் மையத்தில் அடர்த்தியாகக் குவிந்திருந்தது. காதின் மென்மையான உள்பகுதியைப் போல, அவற்றுள் ஓடும்  சிவப்பை உங்களால் உணர முடியும். அவை எவ்வளவு அழகாக இருக்கின்றன, வியப்புற்றவளாக நினைத்தாள் லோரா.

ஆனால்  எதனாலோ , அவள் சற்று கூச்சமாகவும்   சங்கடமாகவும் உணர்ந்தாள். அதிகமாக இல்லாவிடினும்  அவளுக்கு   லேசான  பதற்றமும் இருந்தது. அந்தப் பேரழகு அவளைச் அசெளகரியப்படுத்தியது

சமையலறையில் வேலைக்காரியின் காலடிச் சத்தம் கேட்டதும் அந்த உள்ளீடற்ற ஒலியிலிருந்து  அவள் ஹீல்ஸ் அணிந்திருக்கிறாள் என்பதை  லோராவால்  சொல்ல முடிந்தது. மரியா  வீட்டுக்குக் கிளம்பத் தயாராகிவிட்டாள்.அப்போது லோராவுக்கு  சற்றே “வித்தியாசமான”  ஒரு யோசனை தோன்றியது:  கார்லோட்டாவின் வீட்டுக்கு  மரியாவை அனுப்பி  இந்த ரோஜாக்களை  அவளுக்குப் பரிசாகக்  கொடுக்கச் சொல்லி மரியாவிடம் கொடுத்தனுப்பினால் என்ன என்று அவள் நினைத்தாள்.  

மேலும்… அந்த அதீத அழகு அவளுக்குள் ஏற்படுத்திய அசௌகரியத்திலிருந்தும் விடுபடலாம்.

அசௌகரியம்? அது  ஓர் இடர் .

ஆனால் … ஏன்  அது இடராக இருக்க  வேண்டும்?

அந்த ரோஜாக்கள்  எதனாலோ  அவளைச் சங்கடத்துக்கு  உள்ளாக்கின. ஒருவேளை அவை  ஒரு விதமான  எச்சரிக்கையாக இருக்குமோ? இல்லை,  அப்படி இருக்காது அவை ஏன்  ஓர் எச்சரிக்கையாக  இருக்க வேண்டும்? 

மரியாவிடம் மலர்களைக் கொடுத்தனுப்பினால் அவள்  அவற்றை கார்லோட்டாவிடம் கொடுத்து விடுவாள்.

“டோனா லோரா அனுப்பினார்கள்,” என்று மரியா கார்லோட்டாவிடம்  சொல்வாள்.

அதை நினைத்து  லோரா  தனக்குள் சிரித்துக் கொண்டாள். ரோஜாக்களை பரிசாகக் கொடுக்க விரும்பினால் லோரவே அவற்றை எடுத்து வருவதற்குப் பதிலாக, விருந்திற்கு முன்னரே பணிப்பெண்ணிடம் அவற்றைக் கொடுத்து அனுப்பவதை கார்லோட்டா விசித்திரமானதாகக் கருதுவாள். சொல்லவே வேண்டியதில்லை, ரோஜாக்களைப் பெறுவது அவளுக்கு வேடிக்கையாகத் தோன்றும், அதைச் சற்றே ‘நயமானதென்று’ நினைப்பள்.

“நமக்குள் இப்படிப்பட்ட  சம்பிரதாயங்கள் தேவையில்லை, லோரா!” என்று கார்லோட்டா  சற்று அழுத்தமாகவும் நேரடியாகவும்  சொல்வாள்.

அதற்கு லோரா மகிழ்ச்சியை  அடக்கிக்கொண்ட   மென்மையான குரலில்:

“ஓ இல்லையில்லை , இரவு விருந்திற்கு நீங்கள் அழைத்ததனால் அல்ல! இந்த அழகான ரோஜாக்களைப் பார்த்ததும் உங்களுக்குக் கொடுக்க வேண்டுமென்று தோன்றிவிட்டது” ஆம். அந்த நேரத்தில்  தைரியத்தை வரவழைத்துக்கொண்டு   அவள் அப்படித்தான் சொல்ல வேண்டும்.

“எப்படி சொல்வது?” என்று அவள் மனதில் மீண்டும் பயிற்சி செய்தாள். மறந்துவிடக் கூடாது.

“ஓ இல்லையில்லை“ என்று தொடங்க வேண்டும். கார்லோட்டா, லோராவின் உணர்வுகளின் மென்மையைக் கண்டு வியப்பாள். லோராவுக்கு  இவ்வளவு நுட்பமான உள்ளுணர்வுகள் இருப்பதை  யாரும் ஒருபோதும் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள்.  அந்த இனிமையான கற்பனைக் காட்சிக்குள் மூழ்கியவளாய், பேரின்பப் புன்னகையுடன் அவள் தன்னையே “லோரா” என்று  மூன்றாம் நபரைப் போல அழைத்துக் கொண்டாள். மென்மையும் சுறுசுறுப்பும் நன்றியுணர்வும் மற்றும் அமைதியான நம்பிக்கையையும்  முழுமையாகக் கொண்ட ஒரு மூன்றாம் நபர்; லாரா, உண்மையான  லேஸ் காலர் அணிந்தவள், கண்ணியமான ஆடை அணிந்தவள், அர்மண்டோவின் மனைவி; இறுதியாக, வேலைக்காரியைக் குறித்தும்  இறைச்சியைக் குறித்தும்  அவளது அரட்டைகள் அனைத்தையும் கவனிப்பதற்காகத் தன்னைத்தானே கட்டாயப்படுத்திக் கொள்ளும், மனைவியைப் பற்றி எப்போதும் யோசிக்கத் தேவையில்லாத, ஒரு பாலே நடனக்காரியை மணந்திராத, மகிழ்ச்சியான மனிதனைப் போன்ற ஓர் அர்மாண்டோ.

“இந்த ரோஜாக்களை உங்களுக்கு அனுப்பாமல் இருக்க  என்னால் முடியவில்லை,” என்று அந்த மூன்றாம் நபரான லோரா சொல்வாள். அவள் மிகவும்… மிகவும்…

அந்த ரோஜாக்களைக் கொடுப்பதில்  ரோஜாக்கள் அளிக்கும் மகிழ்ச்சிக்கு நிகரான ஒரு இனிமை இருந்தது. அதோடு, அவற்றிலிருந்து அவளும் விடுபடுவாள்.

அதன் பிறகு என்ன நடக்கும்? ஹா ஆம்,  அவள் சொன்னது போல், புத்திசாலியும் இல்லாத, நல்லவளும் இல்லாத, ஆனால் தனக்கென்று சில ரகசிய உணர்வுகளையும் வைத்திருந்த அந்த லோராவைக் கண்டு கார்லோட்டா ஆச்சரியப்படுவாள். அர்மண்டோ என்ன செய்வான்? 

அவன் அவளை அன்பான ஆச்சரியத்துடன் பார்ப்பான். ஏனெனில், அன்று மதியம் வேலைக்காரி அந்த ரோஜாக்களைக் கொண்டு கார்லோட்டாவிடம் கொடுத்ததை அவன் அறிந்திருக்கவே முடியாது அல்லவா! அவனுடைய குட்டிப் பெண்ணின் இந்த விசித்திரமான விருப்பத்தை அவன் வாஞ்சையோடு ரசிப்பான். அந்த இரவு, அவர்கள் இருவரும் ஒரே படுக்கையில் சேர்ந்து உறங்குவார்கள்..

பின்னர் அவள் ரோஜாக்களையும் அவற்றின் அழகையும் மறந்திருப்பாள்.

“வேண்டாம் ,” என்று அவள் திடீரென நினைத்தாள்.  காரணமற்ற  ஒரு முன்னெச்சரிக்கை உணர்வு அவளுள் எழுந்தது. மற்றவர்களின் பதற்றம் நிறைந்த பார்வைகளை குறித்து அவள் கவனமாக இருக்க வேண்டும். இனி எப்போதும் யாரையும் அச்சமடைய செய்யக் கூடாது. குறிப்பாக, அனைத்தும் சமீபத்தில் நடந்தவையாக இருக்கும் போது, மற்றவர்கள் எச்சரிக்கையடைவதற்குக் காரணமாக இருக்கக் கூடாது . எல்லாவற்றையும் விட முக்கியமானது, யாருடைய மனத்திலும் சிறிதளவு கூட சந்தேகம் முளைக்க இடமளிக்காமல் இருப்பது. இனி ஒருபோதும் மற்றவர்கள் அவளைச் சுற்றி  சுற்றி வந்து   கவனிக்க வேண்டிய நிலையை உருவாக்கக் கூடாது. எல்லோரும் மௌனமாக  அவளை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த, அத்தனை பார்வைகளுக்கு நடுவில் இவள் நின்று கொண்டிருந்த  அந்தப் பயங்கரமான தருணம், மற்றொருமுறை நிகழவே கூடாது. விசித்திர ஆசைகள் எதுவும் வேண்டாம்.

ஆனால் அதே நேரத்தில், கையில் இருந்த  கிளாஸ் காலியாக இருப்பதை அவள் கவனித்தாள். “ எதையும் வலிய செய்து நீங்கள் உங்களைச் சிரம்ப்படுத்திக் கொள்ள வேண்டாம்”  என்று ‘அவர்’ சொன்னது அவள் நினைவுக்கு வந்தது.  நான் ஏற்கனவே……தன்னையே அவளுக்கு நிரூபிப்பதற்காக அதைப் போன்ற செயல்களைச்செய்வதைக் குறித்து கவலைபடவும் தேவையில்லை.

மீண்டும் வேலைக்காரியின் காலடி சத்தம் கேட்கவும்  அவள் ““மரியா,” என்று அழைத்தாள்.

மரியா அருகில் வந்ததும், சற்றும் சிந்திக்காமல்  ஒரு பிடிவாதத்துடன்  அவள் சொன்னாள்: “நீ வீட்டுக்குப் போகும்போது இந்த ரோஜாக்களை டோனா கார்லோட்டாவின் வீட்டில் கொடுத்து விட முடியுமா? இப்படிச் சொல்லி கொடுக்க வேண்டும்  ‘டோனா கார்லோட்டா, டோனா லோரா இதை  உங்களுக்காக அனுப்பினார்கள்.’ இப்படியே சொல், டோனா கார்லோட்டா…”

“சரி சரி, புரிந்தது,” என்று மரியா பொறுமையாகச் சொன்னாள்.

லோரா ஒரு பழைய டிஷ்யூத்தாளை தேடிக் கொண்டுவந்தாள். பின்னர்  அவள் , குத்திவிடக்கூடிய மெல்லிய முட்களை கொண்டிருப்பினும் பேரழகோடும்  சாந்தத்தோடும்   இருந்த ரோஜாக்களை பூச்சாடியிலிருந்து  கவனமாக எடுத்தாள் .

அந்த மலர்க் கொத்துக்கு  கலைநயமான தோற்றம் கொடுக்க  விரும்பினாள்.  அதே சமயம் அவற்றிலிருந்து  விடுபடவும் விரும்பினாள்.  அவற்றை கொடுத்தனுப்பி விட்டால்  அவள் அலங்கரித்துக் கொண்டு அவளது நாளை அதன்போக்கில்  தொடரலாம். ஈரப்பதத்தோடு இருந்த சிறிய ரோஜாக்களை ஒன்றாகச் சேர்த்து  ஒரு பூங்கொத்தாக  கட்டினாள்.   அந்த மலர்கொத்தைக் ,  கைகளை நீட்டி  தள்ளி வைத்துச்,    சற்றே தலையை சாய்த்து, பாரபட்சமற்ற, கடுமையான மதிப்பீட்டை வழங்குபவளாக கண்களைச் சுருக்கி  பார்த்தாள்.  மேலும் அவள்  அவற்றை உற்றுப் பார்த்த அந்த நொடியில், அவள் “ரோஜாக்களை” பார்த்தாள்.

அதன்பிறகு, உறுதியாக, மென்னமையாக, நைச்சியதோடு அவளுக்குள் சொன்னாள்; இந்த ரோஜாக்களை  கொடுத்துவிடாதே , அவை அழகானவை.

ஒரு நொடி கழித்து, அதே மென்மையுடன், அவளைப் வசியப்படுத்துவதைப்  போல.   அந்த எண்ணம் சற்றே தீவிரமடைந்தது,  “அவற்றை கொடுக்காதே… அவை உன்னுடையவை.” லோரா மெதுவாக மூச்சை இழுத்து விட்டாள். ஏனெனில், இதுவரை  எந்த ஒரு  பொருளும் அவளுடையதாக இருந்ததில்லை.  

ஆனால் ரோஜாக்கள் அவளுடையவை.  சிறிய, முழுமையான, இளஞ்சிவப்பானவை : அவளுடையவை.  நம்ப முடியாதவளாக அவள் அவற்றைப் பார்த்தாள்: அவை அழகாக இருந்தன, அவை அவளுடையவை. மேலும் சிந்திக்கக் கூடியவளாக இருந்தால், இவ்வாறு சிந்திப்பாள்: எப்போதும் அவளுக்கென இருந்திராத ஒன்றைப் போல.

ரோஜாக்களை அளவுக்கதிமாக அவள் பார்ப்பதைக் காரணமின்றித் தவிர்க்கச் செய்த, அவளைச் சங்கடப்படுத்திய ஆரம்பகட்ட அசெளகர்யத்தைக் கைவிட்டதால் அவளால் இப்போது அவற்றை வைத்துக் கொள்ளவும் முடியும் . 

எனில்,  ஏன் அவற்றை கொடுக்க வேண்டும்? அழகான ஒன்றை நீ கொடுத்து விட நினைக்கிறாய்?ஒரு நல்ல விஷயம் தற்செயலாக கைக்கு வந்தால், அதை உடனே மற்றவர்களிடம் கொடுத்துவிட வேண்டுமா? அனைத்துக்கும் மேலாக, அவை அனைத்தும் அவளுடையதாக இருந்தால், வேறு எந்தக் காரணமும் தேவையில்லாததால், மீண்டும் மீண்டும் மனதில் சொல்லிக் கொண்ட அந்த ஒரே காரணம் மெதுவாக, எளிமையானதாகவும், நம்பத்தகுந்ததாகவும் மாறிவிட்டது. அவை நீண்ட நாள் நீடிக்கப் போவதில்லை. அப்படியிருக்க, இன்னும் உயிர்ப்புடன் இருக்கும் போதே அவற்றை ஏன் பிறருக்குக் கொடுக்க  வேண்டும்?

பாவஞ் செய்கிற ஒரு பெண்ணின்   பொருள்  விளங்காத தர்க்கத்தின் படி, அவை நிலைத்திருக்காதவை என்பதே அவற்றை அவளே வைத்துக் கொள்வதின்   குற்ற உணர்வை அகற்றிவிடுவது நிஜம். அனைத்திற்கும் மேலாக, அவை நீடிக்காது என்பதை நீங்களே பார்க்க முடியும் (விரைந்து முடிந்து விடும், எவ்வித ஆபத்துமில்லாமல்). அது போக, குற்றவுணர்வை முற்றிலுமாக நிராகரிக்கும் இறுதி வெற்றிகரமான வாதமாக, இந்த ரோஜாக்களை வாங்க வேண்டும் என்று  அவள் விரும்பவில்லையே, அந்தப் பூவியாபாரிதான் மீண்டும் மீண்டும் வற்புறுத்தினான். யாராவது தன்னை அப்படி தர்மசங்கடமான நிலையில் நிறுத்தினால் அவளுக்கு எப்போதுமே பதட்டமாகிவிடும். வாங்க வேண்டும் என்று விரும்பியது அவள் அல்ல. இதற்காக அவள்மீது எந்தக் குற்றமும் சுமத்த முடியாது. ஆழமாகவும், யோசனையுடனும், மயக்கத்தில்  இருப்பவளைப் போல அவள்  அந்த ரோஜாக்களை உற்றுநோக்கினாள்,

உண்மையாகவே… இதை போன்ற  முழுமையான  ஒன்றை  என் வாழ்வில் பார்த்ததில்லை. இருக்கட்டும், ஆனால் இப்போது மரியாவிடம் அவற்றை ஏற்கனவே  எடுத்துச் செல்லும்படி சொல்லிவிட்டதாள், இனி அம்முடிவை மாற்றிக்கொள்ள முடியாது. தாமதமாகிவிட்டதா?. அவள் கைகளில் அசைவின்றிக் காத்திருக்கும் அந்தச் சிறிய ரோஜாக்களைக் கண்டு அச்சமடைந்தாள்.  அவள் விரும்பினால், இன்னும் தாமதமாகிவிடவில்லை……மரியாவிடம் அவளால் சொல்ல முடியும்: “இதைக் கேள் மரியா, இரவு விருந்திற்குச் செல்லும் போது ரோஜாக்களை நானே எடுத்துச் செல்வதென்று என்னுடைய முடிவை மாற்றிக் கொண்டேன்”.  ஆனால் அவள் அவற்றை எடுத்துச் செல்ல மாட்டாள்…..மரியாவிற்கு அது ஏனென்று ஒருபோதும் தெரியவராது.  உடை மாற்றுவதற்கு முன்,  ஒரே ஒரு நொடி மட்டும் சோபாவில் அமர்ந்து  அவள்  அவற்றைப் பார்க்கலாம். அந்த ரோஜாக்களின்  நிச்சலனமான விலகலை இரசிக்கலாம்.  ஆம், இவ்வளவும் செய்து முடித்த பிறகு, நீ  அதனை உனக்குச் சாதகமானதாக ஆக்கிக்கொள்ள வேண்டும், வெகுமதியை அறுவடை செய்யாமல்  குற்றச்சாட்டை மட்டும் ஏற்பதென்பது மடத்தனமாக இருக்குதா.  அதைத்தான் அவள் செய்யப் போகிறாள்.

இன்னும் தாள்களால்  சுற்றப்படாத ரோஜாக்களைக் கையில் பிடித்தபடி அவள் அசையாமல் நின்றிருந்தாள். அவள் ரோஜாக்களை பூச்சாடியில் வைக்கப் போவதுமில்லை, மரியாவை அழைக்கப் போவதுமில்லை. ஓ, ஏனென்று அவளுக்குத் தெரியும்.

ஏனெனில் அவள் அவற்றை கொடுத்துவிட வேண்டும்.

ஏனெனில், அழகான  பொருட்கள்  கொடுக்கப்படுவதற்கோ பெறப்படுவதற்கோ உரியவை,  வெறுமனே வைத்திருப்பதற்கல்ல.   அனைத்திற்கும் மேலாக, அவை வெறுமனே “இருப்பதற்கான’ வை அல்ல. அனைத்திற்கும் மேலாக, ஒருவர் தாமே அந்த அழகான பொருளாக மாறக் கூடாது.  இதயத்தின் முழுமையான அமைதிக்குள் ஒளித்து வைத்திருப்பதைப் போல, ஓர் அழகான பொருளை வெறுமனே தனக்காக வைத்துக் கொள்ளக் கூடாது (ஆனால்… அவள் இந்த ரோஜாக்களை கொடுக்கவில்லை எனில், அவற்றை கொடுக்க நினைத்தது யாருக்குத் தெரியப் போகிறது? யார் கண்டுபிடிப்பார்கள்? அவற்றை வைத்துக்கொள்வது மிகவும் எளிது. அவை அவளுடையதாகவே இருந்து விடும். அதன் பிறகு யாரும் அதை மீண்டும் பேசவே மாட்டார்கள்….)

அதனால், வேண்டாம், இப்போது எதையும் அனுபவிக்காமல், அவற்றைத் தாளில் சுற்றி கொடுத்தனுப்புவதே அவள் செய்ய வேண்டியது; அவற்றைத் தாளில் சுற்று, ஏமாற்றத்தோடு அவற்றை அனுப்பிவிடு; அவற்றிலிருந்து விடுபட்டதை வியப்புடன் உணர்.  மேலும் ஒருவர் குறைந்த அளவிலேனும் மாறாதிருக்க வேண்டுமென்பதால், அவளுடைய சிந்தனைக்கும் ஒரு தொடர்ச்சி வேண்டும்.  கார்லோட்டோவிற்கு அவற்றைக் கொடுப்பதென்று சட்டென முடிவெடித்திருந்தால், அதில் உறுதியாக இருந்து அவற்றைக் கொடுத்து விட வேண்டும்.  ஒரு கணத்திலிருந்து மற்றொரு கணத்திற்குள் யாரும் அவர்கள் மனதை மாற்றிக் கொள்வதில்லை.

“ஆனால் யாருக்கு வேண்டுமானாலும் வருத்தம் இருக்கலாம் ,  அவள் சட்டென்று அவளையே  அவள் எதிர்த்தாள்.ரோஜாக்களை கையில் எடுத்த கணத்தில் அவை எத்தனை அழகாக இருக்கின்றனவென்றுநான் நினைத்தேன். முதன்முறையாக அவற்றைக் கையில் எடுத்து போதுதான் அவை எத்தனை அழகானவையென்று உணர்ந்தேன். 

அல்லது அதற்கு முன்பேவா ?

(மேலும்… அவை அவளுடையவை.)

அதோடு மருத்துவரே அவளது முதுகில் தட்டி, 

“நீங்கள் நலமாக இருப்பதை நிரூபிக்க உங்களை சிரமப்படுத்திக் கொள்ள வேண்டாம்,மேடம். ஏனெனில் நீங்கள்  நலமாகவே  இருக்கிறீர்கள்,” என்று சொல்லியிருக்கிறார். 

பிறகு அவளுடைய முதுகில் அந்த உறுதியான தட்டிக் கொடுத்தல்.  அதனால் தான், அவள் மாறாதிருக்கவும், யாருக்கும் எதையும் நிரூபிக்கவும் தேவையில்லை, ரோஜாக்களை அவளே வைத்துக் கொள்ளலாம்.  (அன்றியும் அவை அவளுடையவை (மேலும்… அவை அவளுடையவைதான்.)

“ ரோஜாக்கள் தயாராக இருக்கின்றனவா ?” என்று மரியா கேட்டாள்.

“ஆமாம்,”   என்று திடுக்கிட்டவளாக லாரா பதிலளித்தாள். 

தன் கைகளில் மௌனமாகக் கிடந்த ரோஜாக்களை அவள் பார்த்தாள். தங்களின் எல்லையற்ற அழகில்  முற்றிலும் தனித்திருப்பவையாக, யாருக்கும் சொந்தமில்லாதவையாக அவை இருந்தன. அவற்றின் உச்சத்தில், ரோஜாவுக்கே உரிய முழுமையான சாந்தம். மலர் எனும் கடைசி அடைக்கலம். சுடரொளி வீசும் சாந்தத்தின் இறுதி முழுமை. 

போதைக்கு  அடிமையானவளைப் போல, ஆவலைத் தூண்டி ஏமாற்றமளித்த ரோஜாக்களின் முழுமையை தளர்வுற்ற பேராசையுடன் வாய் வறளப் பார்த்தாள். 

பிறகு மெதுவாக வரவழைத்துக்கொண்ட  ஒழுங்கோடு அவள்  பூக்களின்  தண்டுகளையும் முட்களையும் மெல்லிய காகிதத்தால் சுற்றினாள். 

அவள் அந்த பணியில் முழுமையாக ஆழ்ந்திருந்ததால், சுற்றி முடிக்கப்பட்ட மலர்க்கொத்தைக் கொடுக்க கையை நீட்டியபோதுதான், மரியா அறையில் இல்லையென்பதை உணர்ந்தாள்.

கையில் தன் வீரத் தியாகத்தோடு அவள் மட்டும் தனியாக நின்றிருந்தாள்.

நீட்டிய கையின் முடிவில் , தொலைவில் இருப்பதைப் போல தோன்றிய அந்த மலர்க் கொத்தை இனம் புரியாத வேதனையுடன் அவள் நோக்கினாள்  அவளது வாய் இன்னும் வறண்டது. “ஆனால்… அவை என்னுடையவை…” என பெரும் பீதியுடன் அவள் சொன்னாள்.

மரியா திரும்பி வந்து மலர்க் கொத்தை எடுக்க முயன்றபோது,  எழுந்த  கணநேரப் பேராசையில், இன்னும் ஒரு நொடி ரோஜாக்களை தன்னிடமே வைத்திருக்க எண்ணிய லோரா கையைப் பின்னுக்கு இழுத்தாள். “அவை அழகானவை… அவை என்னுடையவை… அழகானதும் என்னுடையதுமான முதல் பொருள்  இதுதான்! கூடுதலாக, அந்த மனிதர்தான் என்னை வற்புறுத்தியது, அவற்றைத் தேடி வாங்கியது  நான்  அல்ல.

இதையே விதியும் விரும்புகிறது! ஓ, இந்த ஒருமுறை மட்டும்! ஒரேயொரு முறை மட்டும்! சத்தியமாக இனி எப்போதும் இல்லை. (குறைந்தபட்சம் ஒரு ரோஜாவையாவது அவள் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு மேல் வேண்டாம்: அவளுக்காக ஒரேயொரு ரோஜா. அவள் மட்டுமே அறிவாள், ஓ, இனி எப்போதுமில்லை, முழுமையைச் சபலமுறுவதற்கு அவளை அனுமதிப்பதில்லை என்று அவளுக்கே அவள் சத்தியம் செய்திருந்தாள், இனி எப்போதுமில்லை)

ஆனால் அடுத்த நொடியே ,  எந்த தடையோ  மாற்றமோ இன்றி அந்த ரோஜாக்கள் வேலைக்காரியின் கையில் இருந்தன. இனி அவை அவளுடையவை அல்ல.ஏற்கனவே தபால் பெட்டிக்குள் போடப்பட்ட கடிதத்தைப் போல. திரும்பப் பெற முடியாதது. அழித்து மாற்ற முடியாதது. இனி அழுது பயனில்லை.  ஆனால் நான் அதனை சொல்ல வரவில்லை. 

அவள் வெறுங்கையுடன் நின்றாள்.

ஆனால் அவளது வெறுப்புற்ற  அடம்பிடிக்கும்  இதயம்  விடாமல் சொன்னது,

“உனக்குத் தெரியும். வேகமாகச் சென்றால் மரியாவை படிக்கட்டில் பிடித்து  விடலாம் அவளது கையிலிருந்து ரோஜாக்களைப் பறித்துக்கொள்ளலாம். உன்னால் முடியும்”

ஏனெனில் இப்போது அவற்றை மீண்டும் எடுத்துக்கொள்வது  திருடுவதற்குச் சமமானது.

அவளுக்குச் சொந்தமாக இருந்த ஒன்றையே திருடுவதா?  மற்றவர்கள் மீது இரக்கமற்றவர்கள் அப்படிச் செய்யக் கூடியவர்களாக இருப்பதால் : அவளுக்கே உரிமையானதாக இருந்த ஒன்றைத் திருடு! ஓ, அன்புக் கடவுளே, தயவு காட்டுங்கள்.  நீ அனைத்தையும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம், சீற்றத்தோடு தன்னையே அவள் வற்புறுத்தினாள். அதன் பிறகு முன்வாசல் கதவு பலமாக  அடைக்கப்பட்டது.

அப்போது முன்வாசல்  கதவு பலமாக அடைக்கப்பட்டது.

அதன் பிறகு முன்  வாசல் கதவு  பலமாக அடைக்கப்பட்டு விட்டது. .

மெதுவாக அவள் சோபாவில்  அமைதியாக அமர்ந்தாள். சாய்ந்து அமராமல். வெறும் இளைப்பாறுவதற்காக,  இல்லை, அவளுக்கு கோபம் இல்லை, இல்லவே இல்லை.   

ஆனால் அவளது கண்களின் ஆழத்தில் இருந்த அந்தப் புண்பட்ட சிறு துகள் இப்போது பெரிதாகி, சிந்தனையில்  ஆழ்ந்திருந்தது.

அவள் பூச்சாடியை நோக்கினாள்.

“என் ரோஜாக்கள் எங்கே?” என தணிவாக கேட்டாள். அவள்  அந்த ரோஜாக்களுக்காக ஏங்கினாள் .

அவை அவளுக்குள் ஒரு பிரகாசமான வெற்றிடத்தை விட்டுச் சென்றிருந்தன.

சுத்தமான மேசையிலிருந்து ஒரு பொருளை எடுத்துவிட்டால், அதன் இடத்தில் அதைக்காட்டிலும்  சுத்தமான ஓர் அடையாளம் மிஞ்சும்; அப்போதுதான் அதைச் சுற்றி தூசி படிந்திருந்ததை பார்க்க முடியும், அந்த  ரோஜாக்கள் தூசியற்ற, உறக்கமற்ற ஒரு வெளியை அவளுள் விட்டுச் சென்றிருந்தன.

இவ்வுலகில் யாரையும் காயப்படுத்தாமல் அவள் தனக்கென எடுத்திருக்க முடிகிற அந்த ரோஜா, அவள் இதயத்திலிருந்து காணாமல் போயிருந்தது. பெருங்குறைபாடு ஒன்றைப் போல.

உண்மையில் குறைபாட்டைப் போலவே. வெளிச்சத்தைப் போல அவளுள் நுழைந்த  ஓர் இன்மையைப் போல.  ரோஜாக்கள் விட்டுச் சென்ற அடையாளத்தைச் சுற்றியிருந்த தூசியும் மறைந்து கொண்டிருந்தது.   

அவளது களைப்பின் மையம்  விரிவடையும்  ஒரு வட்டமாக புலப்படத் தொடங்கியது.

அர்மாண்டோவின் சட்டைகளில் ஒன்றைக்கூட அவள் இஸ்திரி செய்யாததைப் போல,அந்தத் தெளிவான வெற்றிடத்தில், ரோஜாக்களின் இன்மையே  நிறைந்திருந்தது.

“என் ரோஜாக்கள் எங்கே…” தனது உடையின் மடிப்புகளைச் சரிசெய்துக்கொண்டே அவள் துக்கமின்றி அழுதாள் 

கருப்பு தேநீரில் எலுமிச்சைச் சாறு பிழிந்தால்,  தேநீர் மொத்தமும்  மெதுவாக ஒளிரத் தொடங்குவது போல அவளுடைய களைப்பு மெதுவாக ஒளிரத் தொடங்கியது

உண்மையில் , இப்போது அவளுக்கு சோர்வாகவே இல்லை. அறவே  இல்லை. மின்மினிப் பூச்சி ஒன்று  ஒளிரும் வண்ணம்,  களைப்பற்றவளாக இருப்பதால், அவள் எழுந்து உடையணியலாம்.  கிளம்பவுதற்கான நேரம் அது.

ஆனால் வறண்ட உதடுகளுடன், ஒரு நொடி அந்த ரோஜாக்களை   போல அவள் தனக்குள்  நடித்துப்  பார்த்தாள்.  ரோஜாக்களை போலச்செய்வது  அத்தனை கடினமாக இல்லை.

அவள் களைப்படையாமல் இருந்தது   நல்லதுதான். அவளால் இரவு விருந்துக்கு இன்னும் புத்துணர்ச்சியுடன் செல்ல முடியும். இத்தாலியில் நடந்த போரிலிருந்து அந்த மேஜர் கொண்டு வந்த செதுக்குமணியை அவளுடைய அசலான சிறிய காலரில் ஏன் குத்திக் கொள்ளக் கூடாது?  அவளுடைய கழுத்து வளைவை அது இன்னும் அழகாகக் காட்டும்.

அவள்  விருந்துக்குத் தயாரானப்பிறகு , முன் கதவின் பூட்டில் அர்மாண்டோ சாவியை நுழைக்கும் சத்தம் கேட்கும். இப்போது அவள் அலங்கரித்துக் கொள்ள வேண்டும் .

ஆனால் இன்னும்  நேரம் இருக்கிறது  அவன் போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருக்கலாம் .

இன்னும் பிற்பகல்தான்.

கண்ணுக்கினிய ஒரு பிற்பகல்.

தற்செயலாக, பிற்பகல் முடிந்திருந்தது.

இரவாகியிருந்தது.

இருட்டின் முதல் ஒலிகளும் முதல் விளக்குகளும் தெருவிலிருந்து  எழுகின்றன.

யதேச்சையாக சாவி  பரிச்சயத்தோடு சாவித்துவாரத்திற்குள் நுழைந்தது.

அர்மாண்டோ கதவைத் திறப்பான். விளக்குகளை ஒளிர  விடுவான்.

அந்தக் கணமே, அவன் எப்போதும் மறைக்க முயன்று  தோற்கும் எதிர்பார்ப்பைத் தாங்கிய  முகம் நிலைப்படியில் தோன்றும்.

பிறகு, அவன் அடக்கி வைத்திருந்த மூச்சு, பாரம் நீங்கிய நிம்மதியின் ஆசுவாசமான புன்னகையாக மாறும்.அவள் கவனிக்க மாட்டாள்  என்று அவன் நினைத்திருந்த, சங்கடம் கலந்த அந்த விடுதலையின் புன்னகை.

“அதை வெளிக்காட்ட வேண்டாமென்று அவளது  பரிதாபத்துக்குரிய கணவனுடைய முதுகைத் தட்டி அவர்கள்   சொல்லியிருக்கக் கூடும்.  

ஆனால், குற்றவுணர்ச்சியால் நிறைந்த  அவனுடைய மனைவியின்  இதயத்திற்கு, அந்தப் புன்னகையே ஒவ்வொரு நாளும் ஒரு வெகுமதியாக இருந்தது.

ஏனெனில், இறுதியாக, அவனுக்கு  மீண்டும் மகிழ்ச்சியையும் அமைதியையும் அனுபவிக்கும் வாய்ப்பை அவள்  அளித்திருந்தாள். கிறிஸ்துவைப் போலச்செய்வதை அல்ல , சாதாரண மனிதர்களுக்குரிய சிறிய மகிழ்ச்சியை மட்டுமே அனுமதிக்கும் கடுமையான ஒரு பாதிரியாரின் கரங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட மகிழ்ச்சி அது.

பூட்டுக்குள் சாவி திரும்பிய சத்தம் கேட்டது . 

 ஒரு நிழலை  போல வேகமாக நகரும் உருவம் ஒன்று  வீட்டுக்குள் நுழைந்து, சட்டென அறை முழுவதையும் வெள்ளம்போல விளக்கின் ஒளியால் நிரப்பியது.

வீட்டிற்குச் செல்ல  தாமதமாகிவிடக் கூடாது என்று பல மைல்கள் ஓடி வந்தவனைப் போல, மூச்சு இரைக்க, வேறு அசைவற்றவனாய், அந்த வாசற்படியிலேயே அவன் உறைந்து நின்றான்

அப்போது அவள் புன்னகைப்பாள்.  அப்போதுதான் அவனது முகத்திலிருந்து அந்த பதட்டமான எதிர்பார்ப்பையும்,  சலிப்பூட்டும்,நல்ல,ஒழுங்கான அவனது மனைவியை சரியான நேரத்தில் வந்து, காணும் குழந்தைத்தனமான வெறி  கலந்திருந்த அந்த பதற்றத்தையும்  அழிக்க முடியும்.  .

இனி ஒருபோதும்  அவன் “தாமதமாக வருவதால்  எந்த  ஆபத்தும்  ஏற்பட போவது  இல்லை என்பதை அவன் மீண்டும் நம்புவதற்காக, அவள் புன்னகைக்க போகிறாள்.

அவளை நம்ப அவனுக்கு  கற்றுக்கொடுக்க, அவள் புன்னகைக்கப்பாள், 

அதைக் குறித்து பேச வேண்டாம் என்று எவ்வளவு சொல்லியும்  பயனில்லை. அவர்கள் அதைப் பற்றி பேசுவதில்லை. ஆனால் முகபாவனைகளில்  அவர்கள்  ஒரு  புதிய மொழியை உருவாக்கிவிட்டனர் . அந்த மொழியில்  பயமும் நம்பிக்கையும், கேள்வியும் பதிலும் அமைதியாக பரிமாறிக்கொள்ளப்பட்டன

அவள் புன்னகைக்கப் போகிறாள். சற்றே நேரம் எடுத்துக்கொண்டாலும், அவள் புன்னகைக்கப் போகிறாள்.

அமைதியாகவும் மென்மையாகவும் அவள் சொன்னாள்:

“அது திரும்பி வந்துவிட்டது, அர்மாண்டோ. மீண்டும் வந்துவிட்டது.”

அவனால்  புரிந்துகொள்ளவே  முடியாது என்பதுபோல, அவனது முகம் சந்தேகப்புன்னகையுடன்  சுருங்கியது.

அவனது முதல் பணி,  படிக்கட்டுகளில்  வேகமாக ஏறிவந்ததால் இரைத்த  மூச்சை சமநிலைப்படுத்துவது.  வீட்டிற்கு தாமதமாக வருவதை அவன் வெற்றிகரமாக தவிர்த்து விட்டான். . 

 அவனுக்கு எதுவும் புரியாதததைப் போல அவள் அவனைப் பார்த்து புன்னகைத்தாள். .

“எது திரும்பி விட்டது ?” என்று அவன்   கவனத்துடன் உணர்ச்சி துடைத்த குரலில் கேட்டான்.ஆனால் புரிந்துகொள்ளாமல் இருக்க முயன்றபோதும், அவனது முகம் ஏற்கனவே புரிந்துகொண்டுவிட்டது. அவனது  எந்த பாவனையும்  மாறவில்லை எனினும் அவனுக்குப் புரிந்து விட்டது. 

அவனது முதல் வேலை மூச்சை சமப்படுத்திக்கொள்வதில் கவனம் செலுத்துவதைப்போல் நேரத்தை கடத்துவது.  ஆனால்  ஏனோ சட்டென்று  அது கடினமாக இல்லை.

ஏனெனில், அவன் எதிர்பாராத வகையில் அவனது   வரவேற்பறையும் அவளும்  மிகவும் அமைதியாகவும் அவசரமற்றும் இருப்பதை அவன்  திடுக்கிடும் அச்சத்துடன்  உணர்ந்தான்:

 இன்னும் ஆழமான தயக்கத்துடன் , ஒரு நகைச்சுவையை தாமதமாகப் புரிந்துகொண்டவன் சட்டென  அடக்க முடியாமல் சிரித்துவிடுவதைப் போல அவன் முகத்தை சுளிப்புடன் வைத்திருக்க பிடிவாதமாக முயற்சி செய்தான். கிட்டத்தட்ட  ஒரு  எதிரியைப் பார்ப்பது  போல எச்சரிக்கையுடன் அவன்  அவளைப் பார்த்தான். கைகளை  தனது மடியின் மீது கோர்த்து , ஒளிரும் மின்மினிப்பூச்சியின் அமைதியுடன்  அவள் அமர்ந்திருப்பதை கவனிப்பதை தவிர்க்க இயலாமல்  அவன் அவளைப் பார்த்தான்.

பா. ரேவதி

அவளது பழுப்பு நிறக் கண்களில் ,அடக்க முயன்று தோற்ற  பெருமையின் வெட்கம்.

“எது திரும்பி வந்தது?” என்று அவன் திடீரென்று கடுமையாகக் கேட்டான்.

“என்னால் தடுக்க முடியவில்லை,” என்று அவள் சொன்னாள்

அவளது குரலில், அந்த மனிதனுக்கான இறுதி இரக்கமும் மன்னிப்பு கேட்கும் கடைசி வேண்டுகோளும் இருந்த    அதே நேரத்தில் முழுமையான தனிமையின் அகந்தையும் கலந்திருந்தது.

“என்னால் தடுக்க முடியவில்லை,” என்று மீண்டும் சொன்னாள். அவன் வீட்டிற்கு வரும்வரை பிடித்துக்கொண்டிருந்த அந்த இரக்கத்தை, இப்போது நிம்மதியுடன் அவனிடம் ஒப்படைத்தாள்.

“அது… எல்லாம்  அந்த ரோஜாக்களால்,” என்று மெதுவாகச் சொன்னாள். ஒரு புகைப்படத்திற்காக அந்தக் கணத்தை உறைய வைத்திருப்பதைப் போல, அதே உணர்வற்ற முகபாவனையுடன் அவன் நின்றிருந்தான், புகைப்படக்காரனுக்குத் தேவையானது அவனுடைய முகம்தான்; ஆன்மா அல்ல என்பதைப் போல.

ஒரு கணம் அவன் முகத்தில், சம்பள உயர்வு கேட்கும்போது தன் அவமானத்தை மறைக்க முயலும்  அந்த சிரிப்பூட்டும் அலட்சியப்பாவனை தோன்றியது.

அடுத்த கணம், மலர்ச்சியுடன் சலனமின்றி அங்கே அமர்ந்திருந்த தனது மனைவியின் “ஒழுங்கின்மையை” பார்த்த வெட்கத்தில் அவன் கண்களைத் திருப்பிக்கொண்டான்.

ஆனால் சட்டென அவனது பதட்டம்  விலகியது. அவனது தோள்கள் தளர்ந்தன. முகத்தின் இறுக்கம் உடைந்தது.   பெருங்கனம்  ஒன்று அவனை ஆட்கொண்டு  தளர்த்தியது.

இப்போது அவன் சட்டென வயது முற்றியவனாக  ஆர்வத்துடன் அவளைப் பார்த்தான் .

அவள் தனது சிறிய வீட்டு உடையில் அங்கே அமர்ந்திருந்தாள்.

ஒளிர்பவளாகவும்  ஒருவராலும்  அடையமுடியாதவளாகவும்   மாறாமல்  இருக்க அவள் தன்னால் இயன்றதை செய்திருப்பாள் என்பதை அவன் அறிந்திருந்தான் .

 அவன் பயத்துடனும் மரியாதையுடனும் அவளைப் பார்த்தான்.

அவன் மூப்படைந்தவனாகவும் களைப்புற்றவனாகவும் ஆர்வமிக்கவனாகவும் மாறியிருந்தான்   

ஆனால் அவனிடம் சொல்ல ஒரு வார்த்தையும் இல்லை.

திறந்த கதவின் வழியே, மீண்டும் விழிப்புடனும் அமைதியுடனும், பின்னால் சாயாமல் சோஃபாவில்  நேராக  அமர்ந்திருந்த தனது மனைவியை, ஏற்கனவே புறப்பட்டுச் சென்ற ஒரு ரயிலில் அமர்ந்திருப்பவளைப் போல அமர்ந்திருப்பவளை அவன் பார்த்துக்கொண்டே இருந்தான்.

*

க்லாரிஸ் லிஸ்பெக்டர் (Clarice Lispector): (1920–1977) ஒரு பிரேசிலிய எழுத்தாளர் ஆவார். இவர் இருபதாம் நூற்றாண்டின் போர்த்துகீசிய  இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராக  கருதப்படுபவர். தனது புதுமையான நாவல்கள் மற்றும் சிறுகதைகளுக்காக சர்வதேச அளவில் புகழ்பெற்ற இவர், ஒரு பத்திரிகையாளராகவும் இருந்தார். நனவோடை (Stream of Consciousness)  உத்தியை  தன் கதைகளில் பயன்படுத்தி அதை பிரேசிலில் பிரபலமாக்கியவர். இவரது கதைகள்  மனித அகத்தையும் ஆழ்மன உரையாடல்களையும்  விளக்கும் உளவியல் நுணுக்கம் நிறைந்தவை.  இவரது படைப்புகள் இருத்தலியல், அடையாளம் , சுயவிசாரணை, பெண்மைக்கான உளவியல் (Feminine Consciousness)  போன்றவற்றை மையமாகக் கொண்டவை. 

மேற்கு உக்ரைனில் உள்ள பொடோலியாவில் (Podolia) ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்த இவர், முதலாம் உலகப் போருக்குப் பிறகு தனது சொந்த நாட்டில் ஏற்பட்ட பேரழிவுகளுக்கு இடையே, குழந்தையாக இருந்தபோதே பிரேசிலுக்கு அழைத்து வரப்பட்டார்.

இவர் வடகிழக்கு பிரேசிலில் வளர்ந்தார்; அவருக்கு ஒன்பது வயதாக இருந்தபோது அவருடைய தாய் காலமானார். இவருடைய பதின்ம வயதில் இவர்களது குடும்பம் ரியோ டி ஜெனிரோவுக்கு (Rio de Janeiro) குடிபெயர்ந்தது. ரியோவில் சட்டக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே, இவர் பத்திரிகைகளில்  பணியாற்றத்  தொடங்கினார் .  சிறுகதைகளையும் வெளியிடத் தொடங்கினார். தனது 23 ஆம் வயதில், ‘நியர் டூ தி வைல்ட் ஹார்ட்’ (Perto do Coração Selvagem) என்ற தனது முதல் நாவலை வெளியிட்டதன் மூலம் புகழின் உச்சத்தை அடைந்தார். அகமன உரையாடலாக (interior monologue) எழுதப்பட்ட இந்த நாவலின் பாணியும் மொழியும் பிரேசில் இலக்கிய உலகத்தில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.

1944-இல் ஒரு உயர் அரசு அதிகாரி ஒருவரைத்   திருமணம் செய்து கொண்டதைத் தொடர்ந்து, இவர் பிரேசிலை விட்டு வெளியேறி,அடுத்தபதினைந்து ஆண்டுகளை ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கழித்தார். 1959-இல் ரியோ டி ஜெனிரோவிற்குத் திரும்பிய பிறகு அவர் எழுதிய படைப்புகள்  அனைத்தும் உலக புகழ்பெற்றவை . அவற்றில் ‘ஃபேமிலி டைஸ்’ (Laços de Família) சிறுகதைகள், ஆன்மீகச் சிறப்புமிக்க நாவலான ‘தி பேஷன் அக்கார்டிங் டூ ஜி.ஹெச்.’ (A Paixão Segundo G.H.), மற்றும் பலரால் அவரது முதன்மைப் படைப்பாகக் கருதப்படும் ‘ஆகுவா விவா’ (Água Viva) நாவல் ஆகியவை அடங்கும். 

1966-இல் ஏற்பட்ட ஒரு விபத்தில் காயமடைந்த இவர், தனது வாழ்வின் கடைசி பத்து ஆண்டுகளைக் கடுமையான வலியுடன் கழித்தார். இருப்பினும் 1977-இல்  அகால மரணம் அடையும்  வரை நாவல்களையும்  கதைகளையும் தொடர்ச்சியாக எழுதி வெளியிட்டு வந்தார்.

இவரது பல படைப்புகள் திரைப்படங்களாக உருவாக்கப்பட்டுள்ளன; அதில் ஒன்று ‘ஹவர் ஆஃப் தி ஸ்டார்’ (Hour of the Star). ர் கிளாரிஸ் லிஸ்பெக்டரது எழுத்து நடையை  ஜேம்ஸ் ஜாய்ஸ், விர்ஜினியா வூல்ஃப், காஃப்கா  போன்ற நவீன இலக்கிய மேதைகளின் பாணியோடு  ஒப்பிடலாம்.

 “ரோஜாவின் நகல்” (தி இமிடேஷன் ஆஃப் தி ரோஸ்) இவருடைய  புகழ்பெற்ற உளவியல் சிறுகதையாகும். இது மனநல மருத்துவமனையிலிருந்து வீடு  திரும்பும் லாரா என்ற  பெண்ணுடைய  மனநிலையை  விளக்குகிறது. மனநல விடுதியிலிருந்து திரும்பி சாதாரண வாழ்க்கைக்கு திரும்ப முயலும் லோரா தனது வரவேற்பறையின் பூச்சாடியில்  வைக்கப்பட்டுள்ள ரோஜாக்களால் தீவிரமாக  ஈர்க்கப்படுகிறாள். அழகு மற்றும் பூரணத்துவத்தின் குறியீடாக விளங்கும் இந்த ரோஜாக்கள், அவளுக்குள்  ஒரே நேரத்தில் ஈர்ப்பையும் ஒருவித அசௌகரியத்தையும் ஏற்படுத்துகின்றன, இந்த ரோஜாக்களை வேறு ஒருவருக்குக் கொடுக்க லோரா முடிவெடுக்கும் போது, அந்த அகமுரண்பாடு தீவிரமான உணர்ச்சிப் போராட்டமாக உருவெடுக்கிறது. இந்த கதையில் லிஸ்பெக்டர்  அடையாளம் இரட்டைத் தன்மை ஆகிய இரண்டையும் நுட்பமாக ஆராய்கிறார்.அவளுக்கும் அவளது  கணவன் அர்மாண்டோவுக்கும் இடையிலான உறவு சிக்கலையும்  பேசும் இக்கதை  . மூச்சு திணறச் செய்யும் குடும்ப அமைப்புகளில் உள்ள  கட்டுபாடுகளை,   தனது பாலினப் பாத்திரங்களின் எதிர்பார்ப்புகளிலிருந்து விடுபட விரும்பும் அவளது தவிப்பின் மூலம் நுட்பமாக சித்தரிக்கிறது.  

***

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *