மிஸஸ் கிருஷ்ணனும் ராஜம் கிருஷ்ணனும் (நேர்காணல்)

ராஜம் கிருஷ்ணனின் இந்தப் பேட்டியை எடுத்தவர் ஆதவனாக இருக்கலாம். கே. எஸ். சுந்தரம் என்ற இயற்பெயரிலும் கே.எஸ்.எஸ். என்ற சுருக்கப் பெயரிலும் அவர் ‘கணையாழி’யில் கட்டுரைகள், குறிப்புகள் எழுதிவந்தார். கே.எஸ். என்பதும் அவரது பெயர்தான் எனத் துணியலாம். அதே காலத்தில், ‘காவ்ய ராமாயணம்’ போன்ற நூல்களை எழுதிய அறிஞர் கே. எஸ். ஸ்ரீனிவாசனும் தில்லியில் வசித்தார். அவரும் ‘கணையாழி’யில் எழுதினார். ஆனால் இந்தப் பேட்டியில் உள்ள கேள்விகளையும் முன்குறிப்பையும் பார்க்கும்போது, நேர்கண்டவர் ஆதவனாகத்தான் இருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. ஆதவன் கதைகளைத் தொகுத்த ஆர். வெங்கடேஷும் இந்த அனுமானத்தை ஆமோதிக்கிறார்.

ராஜம் கிருஷ்ணனுக்கும் ஆதவனுக்கும் நேரடிப் பழக்கமும் இருந்தது. ஆதவன் பணிபுரிந்த நேஷனல் புக் டிரஸ்ட் 1977இல் சென்னையில் நடத்திய கருத்தரங்கில் ராஜம் கிருஷ்ணனும் பங்கேற்று உரையாற்றினார்.

‘வேருக்கு நீர்’ நாவலுக்காக ராஜம் கிருஷ்ணனுக்கு 1973ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டதை ஒட்டி வெளியான நேர்காணல் இது. சம்பல் பள்ளத்தாக்கில் தங்கியிருந்த அனுபவத்தின் அடிப்படையில் ராஜம் கிருஷ்ணன் எழுதிய நாவல் ‘முள்ளும் மலர்ந்தது’; 1974இல் வெளியானது.

ஸ்ரீநிவாச கோபாலன்

*

ராஜம் கிருஷ்ணன் என்ற பெயரில் எழுதும் மிஸஸ் கிருஷ்ணன் என்னும் பெண்மணி எப்படிப்பட்டவர்? இதை அறிந்து கொள்வது சிரமமாய்த்தான் இருக்கிறது. மிஸஸ் கிருஷ்ணனிடம் நம்மை நெருங்கவிடாமல் எப்போதும் குறுக்கே நிற்கிறார் ராஜம் கிருஷ்ணன்.

இல்லை, மண்டைக்கனம் உள்ளவரில்லை அல்லது ஒரு வகையில், உள்ளவரென்றும் சொல்லலாம். அடர்த்தியான தலைமயிர், அதை பாலன்ஸ் செய்யும் சில நரைகள். 49 வயதுக்கு, அவ்வளவு அதிகமில்லை. தீர்க்கமான மூக்கு, ஆனால் இந்திராவுடையதைப் போல் சரிந்து வளைந்ததில்லை. மூக்குத்தி, அதன் மரபுச் சுட்டுதலை பாலன்ஸ் செய்யும் மூக்குக்கண்ணாடி. fair, slim, tall. மிஸ் ராஜத்தை இளைஞர்கள் அசட்டை செய்திருக்க முடியாது.

ராஜம் கிருஷ்ணன் என்ற எழுத்தாளரும், பிறரால் அசட்டை செய்யப்படுவதை விரும்புகிறவரில்லை, இதை மன்னிக்கிறவரில்லை. இது தொடர்பான தம் அநுபவங்களை, அபிப்ராயங்களை, அழுத்தமான குரலில், திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார். பேசும்போது முகத்தில் ஒரு தாராளமான புன்னகை. ஆனால் மேலோட்டமான பார்வைக்குத் தென்படுவது போல, அந்தப் புன்னகை அவ்வளவு வெகுளித்தனமானதல்ல. மேடைப் பேச்சின்போது கசப்புணர்ச்சிகளைத் தவிர்க்கும் ஒரு இனிப்புச் சாதனமாக, தனி உரையாடல்களின்போது நிஜமான எதிரொலிகளை மறைத்துக்கொள்ளும் ஒரு கவசமாக, அது பயன்படுத்தப்படுகிறது; ஒரு எல்லைக் கோடாகவும்—மென்மேலும் கேள்விகளை, துழாவல்களை, ஊக்குவிக்காத எல்லைக்கோடு, அவர் என்னென்ன பேச வேண்டும், எப்படிப் பேசவேண்டும், என்பதையெல்லாம் முன்கூட்டியே தீர்மானித்துக் கொண்டுவிட்டிருக்கிறார். அதை—அதை மட்டும்தான்—அவர் பேசுகிறார்.

எப்படி, எழுதப்பட வேண்டிய ஒரு சமகால நிகழ்ச்சியையோ நிலைக்களனையோ முன்னதாக அறுதியிட்டுப் பின் அதை வைத்துக் கதையெழுதி விடுகிறாரோ, அதே போல; அணைக்கட்டு ஒன்று எழும்புவதை ஒட்டி, ‘அமுதமாகி வருக’; கோவா போராட்டத்தை ஒட்டி, ‘வளைக்கரம்’; சுதந்திர வெள்ளி விழா ஆண்டில் நாட்டின் நிலைமையை ஒட்டி, ‘வேருக்கு நீர்’. சம்பல் பள்ளத்தாக்கில் ஏழெட்டு மாதங்கள் தங்கியிருந்து, அந்த அனுபவத்தை வைத்து அவர் எழுதியுள்ள நாவலொன்று அண்மையில் வெளிவர இருக்கிறது.

தில்லி தமிழ் எழுத்தாளர் சங்கத்தினரின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமைந்ததைவிட, தில்லித் தமிழ்ச் சங்கத்தின் வரவேற்பு நிகழ்ச்சியில்தான் அவர் பேச்சு பொருத்தமாக அமைந்தது. முந்தைய நிகழ்ச்சி, பத்திரிகைகளின் அவல நிலை, வாசகர்களின் கீழ்த்தர ருசி, நல்ல புத்தகங்கள் விற்காதது, வெவ்வேறு நிலைக்களன்களில் தகவல் சேகரிப்பதற்காக அவர் செலவிடும் தொகையைக்கூடப் புத்தக விற்பனை ஈடு செய்யாதது, தகவல்கள் சேகரிப்பதில் சில நூலகங்கள் அவருக்கு ஒத்துழைப்புத் தராதது, என்பன போன்ற உண்மையான, ஆனால் அ-இலக்கிய விசாரங்களிலேயே கழிந்துவிட்டது. பிந்தைய கூட்டத்தில், ரா.கி. தன் எழுத்துக்களின் ஊற்றுக்களைப் பற்றிக் குறிப்பிட்டார். எலெக்ட்ரிகல் இஞ்சினியரின் மனைவியான அவர், பெரும்பாலும் நகரங்களுக்குத் தொலைவில் அமைந்துள்ள ‘ஸப்ஸ்டேஷன்’ காலனிகளில் வாழ்க்கையைக் கழித்தவர். ஜன சஞ்சாரமற்ற, செடி, கொடி, புதர்கள் மண்டிய, வெட்டவெளிகள், காடுகள், இப் பிரதேசங்களிலுள்ள நாகரிகப் பூச்சு அற்ற எளிய மக்கள், ஆகியவை அவருக்கு அதிகம் பரிச்சயமானவை, அவருடைய எழுத்துக்களுக்கு வித்திட்டவை. இது ஒரு சுவையான பாயிண்ட்தான். ஆனால் அதற்காக, பேச எழுந்தவுடனே, “எனக்கு இந்த நாகரிகமெல்லாம் புதிசு” என்று நகரத்துக்கு முதன்முதலாக வந்த ஒரு எளிய கிராமவாசியாகத் தன்னை உருவகப்படுத்திக் கொண்டிருக்க வேண்டாம்— அந்த விழா வெறும் ‘நாகரிகம்தான்’ என்று பொருள்படும்படி. சமீப காலமாகத் தம்முடைய ஊற்றுக்களை விட்டு இடம் பெயர்ந்து, வெவ்வேறு பிரதேசங்களுக்குச் சென்று வாழ்ந்து பின் அந்த நிலைக்களன்களை வைத்து எழுதுவதைத்தானே அவர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்? எனவே, எந்தச் சூழ்நிலையும்— தில்லி நகரம் உட்பட்ட அவருக்கு அந்நியமானதென்று எப்படிச் சொல்ல முடியும்?

மிஸ்டர் கிருஷ்ணன் ஒரு நல்ல மனிதர்; சாது. ராஜம் கிருஷ்ணன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில், அவரும் எல்லாருக்கும் கடைசியாக நுழைந்து, ஆடியன்ஸில் உட்கார்ந்தார். தன் மனைவியின் வெற்றியைத் தன் வெற்றியாகக் கருதி மகிழ்ந்தார். கலந்துரையாடலில் தானும் கொஞ்சம் கலந்துகொண்டு, வைர மோதிரக் கதையையும், ‘ராணிமுத்து’வையும் சேர்த்துக் குழப்பினார். “அவர் எதையும் படிக்க மாட்டார்; பாதி பாதி படிச்சுட்டு வச்சுடுவர்” என்றார் மிஸஸ் கிருஷ்ணன். ஆயினும்கூட, மனைவியின் ஈடுபாடுகளுக்கு குறுக்கே நின்றிருக்கவில்லை. இல்லாவிட்டால் மிஸஸ் கிருஷ்ணன் ராஜம் கிருஷ்ணனாகியிருக்க முடியாது.

– கே. எஸ்.

*

ராஜம் கிருஷ்ணன் நேர்காணல்

ராஜம் கிருஷ்ணன்

கேள்வி: பரிசுபெற்ற தங்கள் நாவலாகிய ‘வேருக்கு நீர்’ உருவாகக் காரணமாயிருந்த சூழ்நிலைகளைப்பற்றி, கலைமகளில் எழுதியிருந்தீர்கள். இன்றைய வெவ்வேறு போக்குகளின் குறியீடுகளாக அக்கதையின் பாத்திரங்களை அமைத்துள்ளதாக அதில் குறிப்பிட்டிருந்தீர்கள்— யமுனா இளந்தலைமுறையின் போராடும் நம்பிக்கைக்கு அடையாளமான பாத்திரம்; யமுனாவின் தந்தை உயரிய லட்சியங்கள் வலுவிழந்து பெயரளவில் கொண்டாடப்பெறும் நிலைக்கு ஓர் அடையாளமான பாத்திரம்; துரை சவாலை எதிர்நோக்கத் தேவையான வலுவில்லாமல் நிலைகுலையும் இன்றைய மனித வர்க்கத்தின் பிரதிநிதி—என்று சொல்லியிருந்தீர்கள். இப்படி, வெவ்வேறு பாத்திரங்களின் தன்மையை முன்பே வரையறுத்துக் கொள்ளும்போது, கதையின் யதார்த்தப் போக்கு பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறதல்லவா? அதே சமயத்தில், பாத்திரங்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுக்கும் ஆசிரியர், சொல்ல வந்த கருத்துக்களை நழுவ விட்டுவிடலாம். நாவலை எழுதும்போது இப்பிரச்னைகளை நீங்கள் எப்படிச் சமாளித்தீர்கள்? எந்த அளவுக்கு அதில் வெற்றியடைந்திருப்பதாக நினைக்கிறீர்கள்?

பதில்: நாவலின் கருத்துக்கேற்ப கதைமாந்தரே குறியீடுகளைப் போன்று விளங்க வேண்டுமென்ற உணர்வு எனக்கு இருந்தது என்று குறிப்பிட்டுள்ளேன். நாவலை எழுதத் துவங்கு முன் அப்படி ஓர் உணர்வு இருந்தது. ஆனால், என்னுடைய அநுபவத்தில், நான் திட்டமிட்டு, அந்தத் திட்டத்துக்கேற்ப எழுத இயலவில்லை என்பதே உண்மையாக இருந்திருக்கிறது. இதனாலேயே பத்திரிகைகளுக்கு முன்னதாகவே கதைச் சுருக்கத்தைக் கொடுத்துவிட்டுப் பிறகு வாரா வாரமோ மாதா மாதமோ என்னால் கதை எழுத இயலுவதில்லை. என்னுடைய முதல் நாவலிலிருந்தே இந்த அநுபவம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. கதையை எழுதுமுன் புகைப் படலச் சித்திரங்கள் போன்ற அமைப்புத்தான் என்னுள் தெளிவில்லாமலிருக்கும். பிறகு என் கதாபாத்திரங்கள்தாம் என்னை இழுத்துச் சென்றிருக்கின்றன. ஓர் சொல், ஓர் சிறு இலக்கம், என்னை நான் அமைத்து வைத்த சட்ட திட்டங்களுக்கப்பால் இழுத்து விடுவதுண்டு. எனவே, கதையை நடுவில் குறுக்கீடுகளின்றி ஒரே மூச்சில், எழுதி முடித்துவிடும் வழக்கம் கொண்ட எனக்கு, துவக்க கால உணர்வு நினைவுக்கே வந்ததில்லை. ஆனால் (வேருக்கு நீர்) கதையை முடித்த பிறகு, ஓரளவுக்கு அவ்வண்ணம் அமைந்திருந்ததைக் குறித்து நானே வியப்படைந்தேன். என்னுடைய பாத்திரங்களுக்கும் கதை நிகழ்ச்சிகளுக்கும் மாதிரிகள் அவசியம் என்று கருதுகிறேன். உண்மை வாழ்விலிருந்தே என் கதை மாந்தருக்கு வேண்டிய குணாதிசயங்களை நான் தேர்ந்தெடுக்கிறேன். தேவைக்கேற்ப சிற்சில மாற்றங்களை, செதுக்கு அமைப்புகளை, பூச்சு வேலைகளைச் செய்துகொள்கிறேன். எனவே, தாங்கள் எழுப்பிய ஐயங்களுக்கு இங்கே இடமில்லை. என்னுடைய வெற்றியையோ, தோல்வியையோ என்னால் எப்படிக் கணிக்க இயலும்? பொதுவாக எழுதி முடித்தவுடன் ஓர் நிறைவுணர்வு ஏற்படவேண்டும். கதைக் கருவை ஏற்றுத் தலையில் சுமந்துகொண்டு பல நாட்கள் ஓய்வு ஒழிச்சலின்றி இயங்கிய பிறகே, அதைக் காகிதத்தில் இறக்கிவிட ஒன்றுகிறேன். இந்த எழுதும் காலம் மிகவும் நெருக்கடியான (Tension) காலம். எழுதி முடித்தபின் நிறைவுணர்வு தோன்றினால் விடுதலை கூடிய மகிழ்ச்சிதான். நிறைவுணர்வு தோன்றாத வகையில் முடிவுகள் என்னை இழுத்துச் சென்றால், நான் அமைதியடைந்ததில்லை. திரும்பத் திரும்ப அந்த முடிவை மாற்றி மாற்றி எழுதியிருக்கிறேன்.

[‘வளைக்கரம்’ நவீனத்தில் இத்தகைய அநுபவம் ஏற்பட்டது.]

பிறகு அந்த நாவலை மறந்து, அடுத்த புத்தகத்தைப் பற்றிய சிந்தனையில் இலயிக்கிறது மனம். அது வெளியாகி, பிறர் அதைப் பாராட்டும்போது, ஏற்படும் மகிழ்ச்சிகூட, முன்பெற்ற மகிழ்ச்சிக்கு இணையாகாது. என்னுடைய வெற்றி-தோல்விகளை, வாசகரோ, திறனாய்வாளரோ தாம் சொல்ல முடியும்.

கேள்வி: ‘நூலகம்’ பத்திரிகையில், உங்கள் எழுத்து வாழ்வின் ஆரம்ப கட்டங்களைப் பற்றி நீங்கள் விவரித்திருந்தது சுவையாக இருந்தது. முதலில் ‘வெள்ளிமணி’, ‘கலைமகள்’, ஆகிய பத்திரிகைகளில் எழுதத் தொடங்கி, பிறகு ‘விகடன்’, ‘கல்கி’ ஆகிய பத்திரிகைகள் மூலம் அதிக அளவு வாசகர்களுக்கு நீங்கள் அறிமுகமானீர்கள். இப்பத்திரிகைகளுக்கு எழுதும்போது உங்களுக்கு ஏற்பட்ட அநுபவம் என்ன? நீங்கள் விரும்பியவாறெல்லாம் எழுதக்கூடிய சுதந்திரம் உங்களுக்கு இருந்ததா? உங்கள் கதைகள் வெட்டப்படாமல் பிரசுரிக்கப்பட்டனவா? அல்லது, நீங்களே இந்தப் பத்திரிகைகளுக்கு எழுதும்போது உங்கள் எழுத்தை அவற்றுக்கேற்ப வரையறுத்துக்கொண்டு எழுதினீர்களா? பிற்பாடு ‘தீபம்’ முதலிய ஏடுகளில் எழுதியபோது, பல்வேறு பிரச்னைகளைப் பற்றி— குறிப்பாக, பாலுணர்வு சம்பந்தப்பட்டவை பற்றி— உங்கள் முந்தைய எழுத்துக்களில் இருந்ததைவிட அதிகமான தீவிரத்தையும், தயக்கமின்மையையும் நீங்கள் காட்டியிருப்பதாகப் படுகிறது.

பதில்: முதலில் நான் ‘கலைமகள்’ வாயிலாக அறிமுகமானதாகச் சொல்வதற்கில்லை. ‘கல்கி’ அகில உலகச் சிறுகதைப் போட்டித் தேர்வுக்காக ஓர் போட்டியை அறிவித்ததும், அதில் என் சிறுகதை தேர்வு பெற்றதும் என் பெயர் எழுத்துலகில் அறிமுகமாயிற்று. தொடர்ந்து கலைமகள் நாராயணசாமி ஐயர் நாவல் போட்டியில் என் ‘பெண்குரல்’ பரிசு பெற்றதும் நான் ‘கலைமகளு’க்கு எழுதுவதை வழக்கமாகக் கொண்டேன். அந்நாட்களில் நான் ‘சுதேசமித்திரன்’ இதழுக்கு நிறையக் கதைகள் எழுதியிருக்கிறேன். ‘கலைமக’ளில் என் எழுத்து இடம்பெறுமுன் ‘குமுத’த்தின் ஆரம்ப ஆண்டுகளில் நான் எழுதியிருக்கிறேன். நான் அவர்களைக் கேட்டுக்கொண்டு, அவர்கள் விதித்த சுமார் இருபது நிபந்தனைகளுக்குட்பட்டு ஓர் நாவலை எழுதி அனுப்பியும், (அவர்கள் விரும்பிய கவர்ச்சி அதில் இல்லாததால்) அது பிரசுரமாகாமலும் திருப்பி அனுப்பப் பெறாமலும் இருந்தது. அந்த சம்பவத்துக்குப் பிறகு, குமுதத்துக்கு எழுதுவதனால் என் இலக்கியத் திறனும் தகுதியும் வளர்ச்சி பெற வாய்ப்பில்லை என்று உணர்ந்தேன். ‘கலைமக’ளில் என் எழுத்துக்கள் இடம்பெற வாய்ப்பிருக்கிறது என்று கண்டபிறகு நான் வேறு பத்திரிகைகளுக்கு என் கதைகளைப் பெரும்பாலும் அனுப்பவில்லை. விகடனின் தொடர்பே, நாவல் போட்டியில் என்னுடைய [மலர்கள்] தேர்ந்தெடுக்கப்பட்ட பின் ஏற்பட்டதுதான். அதைத் தொடர்ந்து எனக்கு ஒருபோதும் அந்தப் பத்திரிகையுடன் நல்லுறவு ஏற்படவில்லை. நாவல் போட்டியில் பல துறைகளில் ஈடுபட்ட தமிழறிஞர் பலர் நடுவர்களாக இருந்து தேர்ந்தெடுத்த நவீனத்தை, திடுமென்று வந்தபிறகு இன்னொரு பாதியை நான்கு வாரங்களுள் தாங்களே சுருக்கி முடித்துவிடுவதாக (இன்னும் நாலைந்து மாதங்களுக்கு வரக்கூடிய பகுதி) எனக்கு அறிவித்திருந்தனர். என்னிடம் அதற்கு அனுமதிகூட எதிர்பார்க்கவில்லை. நான் அச்சமயம் வெளியூரிலிருந்தேன். அங்கிருந்து விரைந்து வந்து அப்படி முடிக்கக் கூடாது என்று வாதாட வேண்டியிருந்தது. பிறகு என் விருப்பப்படி முழுதாகவே வெளிவந்தது. இதற்கு அவர்கள் கூறிய காரணம் அவர்கள் மீது எனக்கிருந்த நன்மதிப்பைக் குறைப்பதாக இருந்திருக்கிறது. ஒரு எழுத்தாளர் என்ற என்னுடைய சுய மதிப்பைக் காலடியில் தேய்த்துக் கொண்டு, அவர்கள் வழங்கும் விளம்பர கெளரவத்தை ஏற்க மனமில்லாத வகையில் அநுபவங்கள் எனக்கு ஏற்பட்டிருக்கின்றன. ‘கலைமகள்’ பத்திரிகைதான் என் எழுத்துத் திறனை வளர்த்து வந்திருக்கிறது என்று மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். பொதுவாக, இலக்கியப் படைப்பாளியின் சுதந்திரங்களைப் பற்றிக் கூறுமிடத்து, என்போன்று அடி நிலையிலிருந்து எழுத்துத் துறையில் வளர்ச்சி பெற்று வருபவர்கள், தனித்த முறையில் உருவாவதற்குச் சாதகமான சூழ்நிலை இல்லை என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், முதன் முதலில் பேனாவைப் பிடித்துத் தன் எண்ணங்களையும் கற்பனையையும் வடித்து விட்டு, அந்தப் படைப்பின்பம் ஒன்றுடன் நிறைவு பெற்று விடலாம் என்று யாரும் கூறமுடியாது. தன் எழுத்து, அச்சில் வெளியாகி, அதை மற்றவரும் படிக்கவேண்டும் என்றுதான் எந்த இளம் எழுத்தாளரும் விரும்புவார். ஏனெனில், அவனுடைய தன்னம்பிக்கையே பிறகுதான் நிலைபெறுகிறது. எனக்கு மிகவும் நிறைவு தந்ததோர் படைப்பை, தொடர்ந்து பல பத்திரிகைக்காரரும் திருப்பி அனுப்பிவிட்டால், அந்தப் படைப்பைப் பற்றிய என் மதிப்பு தவறாகிவிட்டதாக நானே மருண்டுவிட வாய்ப்பு ஏற்படுகிறது. என்னுடைய வளர்ச்சிக்கு நிச்சயமாக அது ஊறுதான். மாறாக, எப்படி எழுதினால் இந்தப் பத்திரிகையில் வெளிவிடுவார்கள் என்ற அளவுக்கு தனித்தன்மை ஒரு பக்கமாக வளைந்துவிட நேரிடுகிறது. என்னுடைய துவக்ககால அநுபவங்களில் ஒவ்வொரு மாசமும் நான் எழுதும் கதைகள் திரும்பி வந்துகொண்டே இருந்ததால் குழம்பிப் போயிருக்கிறேன். எனக்கு இப்போதும் நினைவு இருக்கிறது. உதகை நகரில், மேலே கம்பளி உடுப்பின்றி, வற்றிச் சுருங்கி, ஒற்றை வேட்டிக் கச்சையுடன் என் நண்பர் ஒருவர் வீட்டில் யாருக்கோ செய்தி கொண்டு வந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளி என் சிந்தனையை நிறைத்த சம்பவம். நான் அப்போதே வெறும் குடும்பக் கதைகள் மட்டும் எழுதுவதுடன் நின்றதில்லை. நாடெங்கும் பொது உடமை கட்சியினர் கிளர்ந்திருந்த காலம். நான் அந்தத் தேயிலைத் தோட்டத் தொழிலாளியையே கதைக்கு நாயகனாக வைத்து ஒரு சிறுகதை படைத்தேன். அப்போதைய என்னுடைய கணிப்பில் அது மிகவும் உயர்ந்த சிறுகதையாக எனக்குத் தோன்றியது. அது பல பத்திரிகைகளிலிருந்து திருப்பி அனுப்பப் பெற்றதும் எனக்கு அதன்மீதுள்ள மதிப்புக் குறையவில்லை. கடைசியில் இப்படி எல்லாம் எழுதினால் பத்திரிகைக்காரர்கள் போடமாட்டார்கள் என்ற அநுபவம் பெற வேண்டியதாயிற்று. இது ஒரு எழுத்தாளரின் சுதந்தர வளர்ச்சியைத் தடை செய்வதாக இல்லையா? கூடிய வரையிலும் என்னுடைய கற்பனைகளுக்கும், கருத்துக்களுக்கும் ‘கலைமகள்’ ஆதரவு தந்து என்னை ஊக்கியிருக்கிறது என்றே சொல்வேன்.

நான் ஓரளவுக்கு அநுபவம் பெற்று, சுதந்தரமாகச் சிந்தனைசெய்து எழுத முடியும் என்ற நிலையில், ‘தீப’த்துக்கு எழுதியிருக்கிறேன். ஆனால் அது வெகுநாட்கள் பொறுத்தபின் ஏற்பட்ட வாய்ப்பல்லவா? சிறுகதைத் துறையில் அடிமனத்தின் எண்ணங்களை அப்படி அப்படியே வைத்து ஓர் கருத்தை உருவாக்கும் வகையில் நான் 1957இல் இரண்டொரு கதைகளை எழுதினேன். அப்போதைய ‘உமா’ போன்ற இதழ் அவற்றை வெளியிட்டன. சில வாசகர்கள் என் மீது கோபம் கொண்டு “நீங்கள் நன்றாக உருவாகிவரும் எழுத்தாளர். இதுபோன்ற பிதற்றல்களை எழுதிப் பெயரைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம்,” என்று எழுதினார்கள். ‘உமா’ பிறகு நின்றுபோயிற்று. பாலுணர்வு சம்பந்தப்பட்ட கதைகள் என்று குறித்து இருப்பது தவறு. 58லேயே நான் ‘கலைமக’ளில் வெளியான ‘முரண்’ என்ற சிறுகதையில் நுட்பமாக குடும்பக் கட்டுப்பாட்டின் முரணைப் புலப்படுத்தி இருக்கிறேன். என்னுடைய ‘பெண்குரலே’ திருமண பந்தத்தின் நுட்பமான தொடர்பு வரையிலும் கொண்டு செல்லும் நாவல்தான். பச்சையாகவும், கொச்சையாகவும் அந்தரங்கங்களை அம்பலத்தில் கொண்டு வருவதுதான் யதார்த்த இலக்கியம் என்று என்றுமே நான் கருதியவளல்ல. அந்த வகையில், இன்றைய ஒழுக்கக் கேட்டுப் பிரச்னைகளைக்கூட, நாகரீகம் குறையாத வகையில் அணுகுவதுதான் கலை என்பது என் கருத்து. ‘தீப’த்தில் இவ்வகையில் நான் ஒரே ஒரு கதைதான் எழுதியுள்ளேன். கதைக்குத் தலைப்பே நான் ‘பிளஸன்டா பார்வியா’ என்றுதான் கொடுத்திருந்தேன். ஆசிரியர் ‘எப்படி விளக்குவது’ என்று மாற்றியிருந்தார். அது திருமணத்துக்கு முந்தைய உடலுறவைப்பற்றிய கருத்தைச் சொல்லுகிறது. சில சமயங்களில் நான் மிகவும் மறைவாக உணர்த்த முயலுவதால், அதன் உட்கருத்து விளங்காமலே போய்விட்ட நிலையும் ஏற்பட்டிருக்கிறது. நான் கலைமகளில் எழுதிய ‘கட்டுக்காவல்’ என்ற தலைப்பில் வெளிவந்த நெடுங்கதையில், செயற்கையான கட்டுப்பாட்டு முறைகளைத் தவிர்த்த மேல்நோக்கு முறையும் இருக்கிறது. ஒரு சிலரேனும் அம்முறைக்கு முயலலாம் என்ற குறிப்பை உணர்த்த வேண்டும், என்பது கருத்து. அதன் ஒவ்வொரு வரியிலும் நுட்பம் பொதிந்ததாக நான் கருதினேன். தலைப்பே ‘ஸ்ரீ’ என்று கொடுத்திருந்தேன். “முற்றும் துறந்தவர்களுக்கு ஸ்ரீலஸ்ரீ என்று லட்சம் ஸ்ரீகள் போடுவார்களாம். இப்போது ஸ்ரீ இல்லை— வெறும் மிஸ்டர் தானா?” என்றெல்லாம் நுட்பமாகப் புலப்படுத்தி இருந்தேன். கலைமகள் ஆசிரியர் சாதாரணமாக என் கதைத் தலைப்புகளையோ, கருத்துக்களையோ மாற்றியதோ, திருத்தியதோ இல்லை. ஆனால் இந்தக் கதையின் தலைப்பை ஸ்ரீ என்றிராமல் ‘கட்டுக்காவல்’ என்று மாற்றியமைத்துவிட்டார். புத்தகத் தொகுப்பிலும் நான் கொடுத்த தலைப்புத் திருத்தம் போய்ச் சேருமுன் அச்சாகி அப்படியே வெளியாகியிருக்கிறது.

கேள்வி: ஒரு பெண் என்பவள் இப்படித்தான் பேச வேண்டும், இப்படித்தான் நடந்து கொள்ளவேண்டும், என்று நம் சமூகத்தில்—குறிப்பாகத் தென்னிந்தியச் சமூகத்தில்—பல கட்டுப்பாடுகளும், வரையறைகளும் இருக்கின்றன. இவை அறிந்தோ அறியாமலோ உங்கள் எழுத்தைப் பாதித்துள்ளதாக நினைக்கிறீர்களா? சில விஷயங்களைப்பற்றி நீங்கள் எழுத விரும்பியிருந்தும், ஒரு பெண் என்ற காரணத்தால் எழுத முடியாமலிருக்கும் நிர்ப்பந்தம் உங்களுக்கு ஏற்படுவதுண்டா?

பதில்: வரையறைகள் இருப்பதை ஒத்துக்கொள்கிறேன். ஒரு பெண் எழுத்தாளர் என்பதால் என்னுடைய படைப்பில் தனிப்பட்ட உணர்ச்சி வசப்பட்ட கசிவு இருக்கக்கூடும். ஆனால், ‘சில விஷயங்களைப்பற்றி எழுத விரும்பியிருந்தும் ஒரு பெண் என்ற காரணத்தால் எழுத முடியாத நிர்ப்பந்தம்’ என்ற ஒன்று கிடையாது. நான் பேனாவைப் பிடித்து எழுதும்போது, ஒரு பெண் (ஆண்) என்ற தனிப்பட்ட சுய உணர்வுக்கு ஆளாவதில்லை. அப்போது இந்தப் பேதங்களுக்கு அப்பாற்பட்ட படைப்பாளி என்ற நிலையிலிருந்து எழுதுவதால் நீங்கள் குறிப்பிடும் நிர்ப்பந்தம் ஏதும் இருப்பதாகத் தோன்றவில்லை. தங்கள் கேள்விகள் என்னிடம் எதை எதிர் நோக்கித் தொடுக்கப்படுகிறது என்பதும் குழப்பத்தைத் தோற்றுவிக்கிறது.

கேள்வி: வடிவம், உள்ளடக்கம் இரண்டில் எதற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பீர்கள்? இலக்கியம் ஒரு போதனையை உள்ளடக்கியதாகவே இருக்க வேண்டுமென்று நினைக்கிறீர்களா?

பதில்: வடிவம், உள்ளடக்கம் இரண்டும் அலட்சியமாக விட்டுவிடக் கூடாதவை என்று கருதுகிறேன். ஒரு படைப்புக்கு வடிவமே நிறைவைக் கொடுக்கிறது. உள்ளடக்கம் செறிவைக் கொடுக்கிறது. இலக்கியம் போதனையை உள்ளடக்கியதாக இருந்தால் படிப்பதற்குச் சுவை இருக்காது என்பது என் கருத்து. இலக்கியத்தின் குறிக்கோள்களில் முக்கியமானது சுவை – இன்பம் அல்லவா. ஆனால், அதற்காக, படிப்பவரைக் கீழ்முகமாகக் கொண்டு செல்லும் ரசனை சிறந்ததல்ல என்பது என் கருத்து.

கேள்வி: நாவல், குறுநாவல், சிறுகதை, சரிதை முதலிய பல வடிவங்களை நீங்கள் கையாண்டிருக்கிறீர்கள். எந்த வடிவம் உங்களுக்கு மிகவும் திருப்தியளித்தது? ஏன் நீங்கள் எழுதியவற்றிலேயே மிகவும் சிறந்ததாக நீங்கள் கருதுவது எது?

பதில்: எந்த வடிவம் திருப்தியளித்தது என்பதை வரையறுத்துக் கூற இயலாது. அந்தந்தக் கருத்துக்கும் கற்பனைகளுக்கும் ஏற்ப, படைப்புக்கள் வடிவம் கொள்கின்றன. அந்தந்த முறையில் அப்போதைய நிலைகளில் ஏற்படும் திருப்தியே மகிழ்ச்சிதான். கூடுதலான கஷ்டங்களுடன் முயற்சிகள் செய்து ஒன்றைப் படைக்கும்போது, அந்தத் துன்பங்களுக்கு ஈடாக அது நிறைவேறும்போது, மனதில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. இதெல்லாம் படைப்பாளியைத் தனிப்பட்ட முறையில் பாதிக்கும் நிலைகள். நான் வெளியீடு, வாசகர் எண்ணிக்கை, பாராட்டு, பொருள் இவற்றை எல்லாம் குறிப்பிடவில்லை. நான் எழுதியவற்றில் மிகவும் சிறந்ததென்று எதையுமே கூற இயலாது, என்னால். இரண்டாண்டுகளுக்கு முந்தைய படைப்பை இன்று பார்க்கும்போது வேறுமாதிரி எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஏன்? அச்சுக்குக் கொடுத்துவிட்டு, அதைப் புத்தகமாகப் பார்க்கும்போதுகூட சில சமயங்களில் அத்தகைய எண்ணம் தோன்றுவதுண்டு. ஒருபோதும் ‘முழுமை’ என்ற ஒன்றை எட்டிவிடவில்லை என்ற உணர்வுதானே என்னவோ!

கேள்வி: நீங்கள் எழுத ஆரம்பித்த காலத்துக்கு இப்போது தமிழ்ப் பத்திரிகைகள் மிகவும் மாறிவிட்டன; எழுத்துப் போக்குகளும் மாறிவிட்டன. இவற்றைப்பற்றி, பொதுவாக உங்கள் அபிப்ராயமென்ன? குறிப்பாக, பெண் எழுத்தாளர்களின் படைப்புக்களில் ஏதாவது முன்னேற்றமோ, மாறுதலோ ஏற்பட்டிருக்கிறதா?

பதில்: கருத்துக்களை வெளியிடும் முறை மிகவும் சிறந்திருக்கிறது. சொற் செட்டும், பொருட் செறிவும் கூடிய நடைகள் தமிழிலக்கியத்துக்குப் புதுமை கூட்டியிருக்கின்றன. ஆனால் பத்திரிகைகள் முன்போல் இலக்கியத்துக்கு ஆக்கரீதியில் ஆதரவளிக்காமல் வணிகப்போக்கில், நல்ல திறமையுள்ளவரின் செயலாற்றலையும் பயன்படுத்திக்கொண்டு இலக்கிய வளர்ச்சிக்குப் பெருமளவில் ஊறு செய்கின்றன. இன்றைய நிலையில், தமிழ் இலக்கியப் படைப்பாளி, ஒரு பத்திரிகையைச் சாராமல் பிழைக்கமுடியாது. சார்ந்தால், தனித்து நின்று இலக்கியம் படைக்க இயலாது.

ஒருசில பத்திரிகைகளையே மக்களும் அவர்கள் என்ன விலை வைத்து விற்றாலும். எதை எழுதிப் பக்கங்களை நிரப்பினாலும், கண்களை மூடிக்கொண்டு வாங்குகின்றனர். அதே அளவில், தமிழ் மக்கள் பலர் எவ்வளவு பணவசதி பெற்றிருந்தாலும், விலை கொடுத்துத் தமிழ்ப் புத்தகம் வாங்கிப் படிப்பதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றனர். பெண் எழுத்தாளரின் படைப்புக்களில் குறிப்பிடும் வகையில் மாறுதல் இல்லை என்றே சொல்ல விரும்புகிறேன். பொதுவாகவே எல்லோருடைய படைப்புக்களிலும், பாலுணர்வு-உடலுறவு சம்பந்தப்பட்ட பிரச்னைகள், கருத்துக்களைப்பற்றிய மாறுதலான கதைகளை வைத்துத்தான் முன்னேற்றம் என்று கூறலாமானால் முன்னேற்றம் என்று கொள்ளலாம். வேறு வகையில் ஒருசிலரின் படைப்புக்கள்தாம் தனிப்பட்டு நிற்கின்றன. பெரும்பாலும் வெறும் பொழுதுபோக்குக்கான, ஆழமற்ற இலக்கியங்களே வெளியாகின்றன.

கேள்வி: ‘பெண்கள் விடுதலை இயக்கம்’ பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: இது மிகவும் முக்கியமான கேள்வி. ‘பெண் விடுதலை இயக்கம்’ என்று மேநாடுகளில் தோன்றியிருக்கும் கிளர்ச்சியையே குறிப்பிடுகிறீர்கள் என்று எண்ணுகிறேன். மேல்நாடுகளின் அடிப்படை இயல்பே வேறு. அங்கு பெண்களின் விடுதலை நோக்கும் நம்முடைய இயல்பும் இலட்சியங்களும் வேறானவை என்று கருதுகிறேன். ஆணுக்குப் பெண் சமமாக எல்லா வகைகளிலும் உரிமைகள் கோரிப் போராடுவதையே விடுதலை இயக்கம் குறிக்கிறது என்று கொள்ளலாம். நம் நாட்டில் ஒரு பெண்ணைத் தாயென்று போற்றி இருக்கிறார்கள். அவளுக்கு ஒரு சமுதாயத்தில் தாயென்ற பொறுப்பின் மரியாதையே கொடுக்கப்படுகிறது. சீதம்மா, கமலம்மா, என்றெல்லாம் பெயரோடு அந்தப் பொறுப்புக்கான தொடர்பையே இணைத்திருக்கின்றனர். மேல்நாடுகளில் ஒரு பெண் போகப் பொருள் என்ற அளவிலே மதிக்கப் பெறுகின்றனர். இன்னாருக்குரியவள் – யாருக்கும் உரிமையாகாதவள் – என்ற அந்தஸ்தைப் பெயரின் முன் இசைத்துக்கொள்கின்றனர். எனவே அவர்கள் நோக்கை விடுத்து, நம் நாட்டுப் பெண்களைப் பற்றிய பிரச்னையை நான் எடுத்துக் கொள்கிறேன். வேத காலத்தில் பெண்கள் மிகவும் உயர்ந்த நிலையில் இருந்ததாகத்தெரிய வருகிறது. உடலமைப்பில், இயல்பில் அவள் மேன்மை மிகுந்தவளாக, அவளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் பொறுப்புக்கு இயைந்தவளாக, சகிப்புத்தன்மை கூடியவளாகப் படைக்கப் பெற்றிருக்கிறாள். மாறாக, ஆண், அவனுக்கு விதிக்கப்பட்ட பொறுப்புக்கு ஏற்ற இயல்பினனாக இருக்கிறான். இரண்டும் ஒரு முழுமையின் சரிபாதிகளல்ல; ஆனால் தனித்தனியாகவும் முழுமை பெற்றவிட முடியாது இந்லையில் பெண்ணைப் போற்றிக்காக்கும் பொறுப்பு ஆணுக்கும், இல்லத் தலைவியாக, குழந்தைகளின் அன்னையாக இருந்து தன் பொறுப்பை நிறைவேற்றுவது பெண்ணுக்கு உரியதாகவும் கருதப்பட்டிருந்தது. பெண் தனக்குரிய இயல்பான கடமைகளை நிறைவேற்றுவதன் வாயிலாகவே, ஆணுக்குக் கிடைக்க இயலாத ஆன்மீக உயர்வைக்கூடப் பெற்றுவிட இயலும். இதனால் ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டாலும், ஒருவருக்கொருவர் உரிமைகளை சுயநலங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் நிலையிலுள்ள அடிமைகளல்ல. இந்த நோக்கின் அடிப்படையிலேயே பெண்ணுக்கு எந்த நிலையிலும் சுதந்தரமாக இருக்க உரிமை இல்லை என்று இந்துமதக் கோட்பாட்டுக்கு ஆறுதல் கொள்ளலாம். ஆனால் காலப் போக்கில் ஆண் சுயநலங்களுக்குப் பயன்படுத்திக்கொண்டு, பெண்ணை, இல்லத்தலைவியை, போகக்கருவியாகவும், பிள்ளை பெறும் இயந்திரமாகவும், அடுப்பங்கரைப் பணிச்சியாகவும் அடக்கி ஒடுக்க, சமுதாயம் சட்ட திட்டங்கள் வகுத்திருக்கின்றன. பின்தங்கிய ஆதிவாசி இனங்களில்கூட, பெண்ணுக்குத் தெய்விகச் சடங்குகளில் பங்குபெற உரிமை இல்லை. எனினும், வேறு வகையில், பெண்ணின் வாழ்க்கையில் சில சலுகைகள் இருக்கின்றன. இத்தகைய ஒரு இன சமுதாயத்தில், கைம்பெண்களே கிடையாது கணவன் இறந்தபிறகு, அவள் வலுக்கட்டாயமாக உலக வாழ்வைத் துறக்கும் தண்டனையை விதிப்பதில்லை நாங்கள். எனவே, உடனே வேறு தகுதியுள்ள ஆடவர் அவளை மணந்து கொள்வார்” என்று சொன்னார்கள். நாகரிக மடைந்த நம் சமுதாயங்களில் இன்னமும் ஒழுக்கச்சீரமைப்பு ஒத்துக் கொள்ளக் கூடியதாக இல்லை. ஏன்? இருபதாம் நூற்றாண்டில் பெண்களின் வாழ்வு மறுமலர்ச்சி கண்டது. பட்டங்கள் ஆளவும், சட்டங்கள் செய்யவும், பெண்கள் ஆண்களோடு சரிநிகர் சமானமாக வந்திருக்கின்றனர். ஆனால் இன்றைய நிலை என்ன? பெண் உண்மையில் விடுதலை பெற்றுவிட்டாளா? பெண் படித்துப் பட்டம் பெற்றுத் தன் வாழ்வுக்குத் தானே தேடிக் கொள்வதுடன் வரதட்சினைக்கும் பொருள் தேடுகிறாள். பிள்ளையும் பெற்று வளர்க்க வேண்டியிருக்கிறது; குடும்பக் கட்டுப்பாட்டுக்கான இயற்கை முரணான கொடுமைகளிலும் ஊமைத்துயரம் அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இன்று பண்டையப் பெருமைகளைப் பேசி முழங்கும் பாரத சமுதாயத்தில் பெண்மை விளம்பரச் சரக்காக, கடைவீதி மலிவுப் பொருளாகச் சீரழிகிறது. அன்று ஒரு துரௌபதியைத்தான் துகிலுரிந்தார்கள். இன்று சந்திக்குச் சந்தி, விளம்பரத்துக்கு விளம்பரம், திரைக்குத் திரை, அரங்குக்கு அரங்கு துகிலுரியும் காட்சியை மக்கள் கண்டுகளிக்கின்றனர் அல்லது பேசாமலிருக்கின்றனர். பெண்மை இன்று தன்மானம் இழந்து தூக்கில் தொங்குவது போன்று எனக்குத் தோன்றுகிறது. பெண் அடுக்களையிலிருந்து வெளியேறும் மீட்சி என்று நினைத்து அலுவலகங்களில் போட்டி போடப் போய் தனக்கென்று இருந்த இடத்தையும் பறிகொடுத்துவிட்டு அவலமாய் நிற்கும் காட்சியைத்தான் இன்று பல சமுதாயப் பிரச்னைகளிலும் காண இயலுகிறது. இந்நிலையில் பெண்விடுதலை இயக்கம் இங்கே பெருங் கிளர்ச்சியாகத் தோன்ற வேண்டும். ஒரு முதல்படி அதிகாரவர்க்கப் பதவியிலுள்ள பெண், தனக்கு ஏறக்குறையச் சமமான நிலையிலுள்ள ஆடவனைத் தேடிக் கைபிடிக்க, குறைந்தபட்சம் ஐம்பது அல்லது அறுபதாயிரம் ரூபாய்கள் செலவழிக்க வேண்டும் என்ற கொடுமைகளை எதிர்த்துக் கிளர்ச்சி தோன்றத்தான் வேண்டும். அது எப்படி என்பதுதான் கேள்வி.

காந்தியடிகளின் சில மொழிகள் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வருகின்றன. “பெண்ணே, ஒரு ஆடவனை மகிழ்விப்பதற்காக உன்னை நீ அலங்கரித்துக் கொள்ளாதே. உன் உள்ளத்திலிருந்து வரும் அன்பு உலகையே வசப்படுத்தக் கூடியது” என்ற வரிகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை.

பெண் இன்று பொருளீட்டக் கல்வி பயிலுகிறாள். பிறகு, தன்னைக் கவர்ச்சி மிகுந்தவளாக அலங்கரித்துக் கொள்வதையே எந்த நிலையிலும் குறிக்கோளாகக் கொள்கிறாள். நான் சிந்தனை செய்வதுண்டு. முரட்டு மாட்டுக்கு மூக்கில் கயிறு போடுகிறார்கள். பெண்ணுக்கு அறியாப் பருவத்திலேயே மூக்கைக் குத்துவானேன்? அணிபணிகள் என்று ஆசை காட்டுவானேன்? மங்கலப் பெண் என்று எண்ணற்ற முடக்கட்டுப்பாடுகளுள் அவள் சுதந்தர சிந்தனையை வளரவிடாமல் பிணிப்பானேன்? வழிவழியாகப் பலகாலமாகப் பெண்குலம் தனித்தியங்க வகையின்றியே மூளைச்சலவை செய்யப்பெற்று வந்திருப்பதாகத் தோன்றுவதுண்டு. இன்னும் பெண் என்ன படித்தாலும், எந்தத் தொழிலில் சிறந்தாலும், பின்னும் பின்னும் தான் ஒரு ஆடவனால் கவரப்பட வேண்டும் என்ற நோக்கிலேயே தன்னை அலங்கரித்துக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. கவர்ச்சி வலையில் அவள் விழுந்த பின் மீட்சி ஏது? இயற்கையில் பந்தங்கள் பிணிப்பதில்லை. பெண் சுதந்தரம் என்ற மாயையில் மீண்டும் மீண்டும் அளவு மீறித் தன்னைப் பிணித்துக் கொண்டு தடுமாறுகிறாள். சரி சமானமாகக் கால் சராய் அணிவதனாலோ, முடிவெட்டிக் கொள்வதனாலோ, ஒழுக்கமற்ற வாழ்வுக்கு உரிமைகள் கோருவதாலோ பெண் ஒரு நாளும் மீட்சி பெறப்போவதில்லை. படித்துப் பட்டம் பெற்றோ மறுமலர்ச்சி என்ற பெயரில் நாகரிக உடை அணிந்தோ உலவும் பெண்கள், உண்மையில் அன்று அடுக்களையில் உழன்று கொண்டு கட்டியவனின் கைப்பொகக் கருவியாக நலிந்து மடிந்த பேதையரைவிட, உயர்ந்த நிலையை எய்தச் சிந்தனை செய்வதாகத் தோன்றவில்லை. செய்திருந்தால் இன்றைய அவல நிலைக்கு வந்திருக்க மாட்டோமாக இருக்கும்.

(இந்தக் கேள்வி என்னை எங்கெங்கோ இழுத்துச் செல்கிறது. இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்)

கேள்வி: புத்தக வெளியீட்டையும், விற்பனையையும் பொறுத்தவரையில் தமிழ் எழுத்தாளர்கள் என்றும் மனத்தாங்கல் தெரிவித்தே வந்திருக்கிறார்கள். உங்கள் அனுபவம் எந்த விதமானது? இன்றைய நிலையைச் சீர்படுத்த வழி உண்டா?

பதில்: தமிழ் நாட்டில் எழுத்துத் துறையில் பொருளீட்டி வசதியில்லாததோர் வாழ்வைக்கூட வாழ இயலாது என்பதுதான் உண்மையாக இருக்கிறது. நான் முன்பே கூறியது போல் தமிழ்நாட்டில் புத்தகங்களை விலை கொடுத்து வாங்கிப் படிப்பவர் மிகக் குறைவு. முற்காலங்களில், வசதி படைத்தவர் வீடுகளில் படிக்காவிட்டாலும் முன்னறையில் காட்சிக்காகவேனும் ஒரு புத்தக அலமாரி இருப்பதுண்டு. இந்நாட்களில் அதுவும் போய், ஏற்றாத குத்துவிளக்கு வகைகள், கிளிஞ்சல், ஓலை, கொட்டாங்கச்சிக் கலைப்பொருள்கள் என்று கண்ணாடி அலமாரி (கலைப்பொருள்) அலமாரியாக மாறிவிட்டதுதான் உண்மை! என்னைப் பொறுத்தவரையில் எழுத்தை நான் தொழிலாகக் கொள்ளவேண்டிய தேவை இல்லை. எனினும், தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம் தோன்றி என் புத்தகங்களை வெளியிடும் வரையிலும், புத்தக வெளியீடே ஒரு சிக்கலான பிரச்னையாக இருந்திருக்கிறது. கசப்பான அநுபவங்களும் நேர்ந்திருக்கின்றன. பொதுவாக, புத்தக வெளியீட்டார், வேறு வகை வியாபாரிகளைப் போன்று, வாணிப ரீதியில் நூற்றுக்கு நூறு பொருளையே குறியாகக் கொண்டவர்களாக இல்லாமலிருத்தல் நலம். இது அறிவுத்துறை. ஒரு ஜனநாயக நாட்டின் நம்பிக்கை, பொறுப்பு வாய்ந்த பத்திரிகைத் துறையும் பொறுப்பை நழுவிவிட்டபின், எஞ்சியுள்ள புத்தக வெளியீட்டுத் துறையைத்தான் சார்ந்திருக்கிறது. என்னுடைய புத்தக விற்பனை வாயிலாகப் பெறும் பொருளை, மீண்டும் இன்னொரு புத்தகம் எழுதுவதற்கு வேண்டிய பணிகளிலேயே பெரும்பாலும் செலவிடுகிறேன். அந்த அளவுக்குப் புத்தகம் வருமானம் கொண்டு வருவதில்லை. எந்த வகையிலும் என் புத்தகம் வருமானம் கொண்டு வருவதில்லை. எந்த வகையிலும் என் வாழ்வில் எளிமை மீறிய ஆடம்பரம் கிடையாது. எனினும் சில தேவைகளைக்கூட நிறைவேற்றிக் கொள்ள அந்த வருமானம் வகை செய்வதில்லை. எனவே இந்நாட்களில் எழுத்தாளர் பெரும்பாலும் ஒரு பத்திரிகையைச் சார்ந்தோ, வேறு வகையில் பொருள் கொடுக்கக்கூடிய எழுத்துத் துறையைச் சார்ந்தோ தான் வாழ முடியும் என்பது வெளிப்படை.

கேள்வி: “புனைகதை எழுதுபவர்கள் புனைகதைகளையே படித்துக் கொண்டிராமல், அ-புனைகதை (non-fiction) எழுத்துக்களை அதிகம் படிப்பது அவர்களுக்குப் பயன் தரும்” என்று தாகூர் சொல்லியிருக்கிறார். இதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? நீங்கள் எந்தெந்த மாதிரி எழுத்துக்களை நிறையப் படிக்கிறீர்கள்? சமீபத்தில் என்ன படித்தீர்கள்?

பதில்: அவசியம் அத்தகைய எழுத்துக்களைப் படிக்கவேண்டும். நான் ஒரு நாவலை எழுது முன்பு, விஷய ஞானம் பெற அதற்கு வேண்டிய புத்தகங்களை நிறையப்படித்த பின்னரே முயற்சியைத் தொடங்குவேன். பல துறைகளில் சம்பந்தப்பட புத்தகங்களை எழுது முன் அதற்கென்று செய்தி திரட்டப் பலரையும் சந்தித்துப் பேச வேண்டிவரும். நான் ஒரு குறிப்பிட்ட துறையிலுள்ளவரைச் சந்திக்கப் போவதானால் என்னை நன்றாகத் தயார் செய்துகொண்டே அணுகுவேன். இவ்வகையில் நான் படித்திருக்கும் புத்தகங்கள் எத்தனையோ! அண்மையில் இரண்டொரு நாட்களுக்கு முன் படித்த நூல் “Indian Education at Crossroads” என்ற நூல்.

கேள்வி: எழுதுவதற்கென்று தினசரி குறிப்பிட்ட நேரம் ஒதுக்குகிறீர்களா? இப்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?

பதில்: இந்தக் கேள்விக்கு நான் மறுமொழி கூறவிரும்பவில்லை. எனக்கும் ஒரு இரகசியம் வைத்துக் கொள்ள உரிமை இருக்கிறதல்லவா?

-‘கணையாழி’, ஏப்ரல் 1974

***

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *